அதிகாரம் 51 - தெரிந்து தெளிதல்

திருக்குறள்
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 51
தெரிந்து தெளிதல்

501. பொறியில் சிக்கிய எலிகள்!

"சார்! நான் ரிடயர் ஆக இன்னும் ஒரு மாசம்தான் இருக்கு. புது சி ஈ ஓ வைத் தேர்ந்தெடுக்க இன்டர்வியூவுக்கு நீங்க இன்னும் தேதி கொடுக்கலியே!" என்றார் வரதராஜன்.

"வர 16ஆம் தேதி அன்னிக்கு வச்சுக்கலாம்" என்றார் நிறுவனத் தலைவர் கோவிந்த்.

"நாம ஷார்ட்லிஸ்ட் பண்ணின ஆறு பேரையும் வரச்சொல்லி மெயில் அனுப்பிடட்டுமா?"

"அந்த ஆறு பேர்ல நாலு பேரை நான் எலிமினேட் பண்ணிட்டேன். சுந்தர், கனகசபை ரெண்டு பேரை மட்டும் வரச் சொல்லுங்க போதும். மீதி நாலு பேருக்கும் ரிக்ரட் லெட்டர் அடுப்பிடுங்க"

வரதராஜன் குழப்பத்துடன் கோவிந்தைப் பார்த்தார்.

"ஐ ஆம் சாரி, வரதராஜன். நீங்க ரிடயர் ஆகப் போறதால, உங்களை நான் இதில இன்வால்வ் பண்ண வேண்டாம்னு நினைச்சேன்" என்றார் கோவிந்த்.

"சார்! முடிவெடுக்கற உரிமை உங்களுக்குத்தான் இருக்கு. ஆனா, ஆறு பேரை ஷார்ட்லிஸ்ட் பண்ணினப்பறம், அவங்களைப் பத்தின எல்லா பின்னணித் தகவல்களையும் நாம சேகரிச்சுட்டமே!" 

"தகவல்களை எல்லாம் சேகரிச்சுட்டோம். ஆனா, நான் சில விஷயங்களை சோதனை செய்ய விரும்பினேன். அதனால, ஆறு பேருக்கும் என் நண்பர் ஒத்தர் மூலமா சில சோதனைகள் வச்சேன். டிராப்னு கூடச் சொல்லலாம்! பொறியில நாலு பேரு சிக்கிக்கிட்டாங்க. அதனால, அவங்களை எலிமினேட் பண்ணிட்டேன். உங்ககிட்ட இந்த விவரங்களை அப்புறம் பகிர்ந்துக்கலாம்னு நினைச்சுதான், உங்ககிட்ட முன்னால சொல்ல. இப்ப சொல்றேன்" என்ற கோவிந்த், தான் செய்தவற்றை வரதராஜனிடம் விவரித்தார்.

"நம்ம நிறுவனத்துக்கு இருக்கற ரெபுடேஷனால, இங்க சி ஈ ஓ பதவிக்கு வர பல பேர் ஆசைப்பட்டது உங்களுக்குத் தெரியும். நம்ம கம்பெனியிலேயே நிறைய திறமையான நிர்வாகிகள் இருந்தாலும், இந்தப் பதவிக்கு இருக்க வேண்டிய சில சிறப்பான திறமைகள் உள்ளவங்க நம்ம கம்பெனியில யாரும் இல்லைங்கறதாலதான், வெளியிலேந்து ஒத்தரைத் தேர்ந்தெடுக்க முடிவு செஞ்சோம். நீங்க நம்ம கம்பெனிக்குக் கிடைச்ச பெரிய சொத்து. உங்களை மாதிரி இன்னொருத்தர் கிடைக்க மாட்டார். 70 வயசுக்கு அப்புறம் இந்தப் பொறுப்புல நீங்க தொடர விரும்பாததாலதான், நாம இன்னொருத்தரைத் தேட வேண்டி இருக்கு."

நிறுவனத்தலைவர் தன்னைப் புகழ்வது உண்மையாகத்தான் என்றாலும், தன்னிடம் கூறாமல் சி ஈ ஓ தேர்வில் சில விஷயங்களைச் செய்து விட்டது பற்றித் தான் வருத்தப்படக் கூடாதே என்பதற்காகவும்தான் அந்தப் புகழ்ச்சி என்பதை உணர்ந்து கொண்டவராக, வரதராஜன் பேசாமல் இருந்தார்.

"நம்ம போட்டியாளர்கள், அரசாங்க அதிகாரிகள், நம் சப்ளையர்கள், ஒப்பந்ததாரர்கள் இவங்ககிட்டேருந்தெல்லாம் சி ஈ ஓவுக்கு எப்படிப்பட்ட அழுத்தங்கள்ளாம் வரும்கறது உங்களை விட அதிகமா யாருக்கும் தெரியாது. இதையெல்லாம் சமாளிக்க, சில அடிப்படையான குணங்கள் வேணும். இதெல்லாம் ஒத்தர்கிட்ட இருக்கான்னு அவங்க சர்வீஸ் ரிகார்டுலேந்து தெரியாது. அதுக்குத்தான், மூணு விஷயங்கள்ள அவங்களுக்கு சோதனைகள் வச்சேன்."

"என்ன அந்த 3 விஷயங்கள்?"

"நேர்மையான வழிகளைக் கடைப்பிடிக்கிறது, பணத்துக்கு ஆசைப்பட்டு தவறான காரியங்களைச் செய்யாம இருக்கறது, காம இச்சைக்காக நேர்மை தவறி நடந்துக்காம இருக்கறது. இந்த வகையான சோதனைகள் உங்களுக்குப் பலமுறை வந்திருக்கும்னு எனக்குத் தெரியும். ஆனா, இயல்பிலேயே உயர்ந்த பண்பாடுகளைக் கொண்ட உங்களுக்கு இதெல்லாம் ஒரு சவாலாவே இருந்திருக்காது. நீங்க ரொம்ப சுலபமா இந்த சவால்களை ஊதித் தள்ளி இருப்பீங்க!"

கோவிந்த் கூறியவற்றின் உண்மையை அறிந்தவராக, வரதராஜன் மௌனமாகத் தலையாட்டினார்.

"அதனால. இந்த நாலு பேருக்கும் சில பொறிகள் வச்சேன். முதலாவதா, எனக்கு நெருக்கமான ஒத்தர் மூலமா, இந்தப் பதவிக்கு அவங்க ஏற வழிகள்ள முயற்சி செஞ்சா, நிச்சயம் பலன் கிடைக்கும்னு அவங்களை நம்ப வச்சேன். ரெண்டாவதா, அவங்க நிறுவனத்திலேயே, யாரும் கண்டுபிடிக்க முடியாதபடி ஒரு முறைகேடான காரியத்தைச் செய்ய, அவங்களுக்கு ஒரு மிகப் பெரிய தொகை கிடைக்க ஏற்பாடு செஞ்சேன். மூணாவதா, ஒரு ஹை கிளாஸ் கார்ல் கேர்ளை அவங்களோட பழக வச்சு, அவங்க நிறுவனம் தொடர்பா ஒரு முக்கியத் தகவலைப் பெற முயற்சி செஞ்சேன். ரெண்டு பேர் ஒரு பொறியல சிக்கினாங்க. ஒத்தர் ரெண்டு பொறியல சிக்கினார். இன்னொருத்தர் மூணு பொறியிலேயும் சிக்கினாரு. எந்தப் பொறியிலுமே சிக்காதவங்க ரெண்டு பேர்தான்!" என்றார் கோவிந்த்.

வரதராஜன் மௌனமாக இருந்தார்.

"நான் பயன்படுத்தின முறைகளை நீங்க ஏத்துக்க மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும். உங்களை இதில இன்வால்வ் பண்ணாததற்கு அதுவும் ஒரு காரணம்!"

"சரி. இந்த ரெண்டு பேர்ல ஒத்தரை எப்படித் தேர்ந்தெடுக்கப் போறீங்க?" என்றார் வரதராஜன்.

"தேர்ந்தெடுக்கப் போறோம்னு சொல்லுங்க. அதுக்குத்தானே இனடர்வியூ? நீங்களும் நானும் சேர்ந்துதானே இனடர்வியூ பண்ணப் போறோம்? நீங்க தேர்ந்தெடுக்கற ஆள்தான் அடுத்த சி ஈ ஓ!" என்றார் கோவிந்த்.

இன்டர்வியூ முடிந்ததும், இருவருமே ஒருமனதாக கனகசபையைத் தேர்ந்தெடுத்தார்கள்.

"சார்! உங்க்கிட்ட கேக்கணும்? இன்டர்வியூவின்போது, இந்த வேலையில உயிருக்குக் கூட ஆபத்து ஏற்படலாம், அதுக்குத் தயாரா இருக்கீங்களான்னு கேட்டீங்க. உடனே சுந்தர் பயந்துட்டாரு. என்ன ஆபத்துன்னு பதட்டமாக் கேட்டாரு. ஆனா, கனகசபை, 'அதனால என்ன? எல்லாத்துக்கும் தயாராத்தான் இருக்கணும்'னு சொன்னாரு. அதனால அவர்தான் ஒரே சாய்ஸுன்னு ஆயிடுச்சு. ஆனா, இந்த வேலையில எனக்கு உயிருக்கு ஆபத்துக்கு ஏற்படற மாதிரி எதுவம் நடக்கலியே! ஏன் அப்படிச் சொன்னீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?" என்றார் வரதராஜன்.

"இது மாதிரி உயர்ந்த பதவிக்கு தைரியம் ரொம்ப முக்கியம். உயிருக்குக் கூட பயப்படாம இருக்கறதை விடப் பெரிய தைரியம் வேற என்ன இருக்க முடியும்? அதனாலதான் அப்படிக் கேட்டேன்!" என்ற கோவிந்த், வரதராஜனை உற்றுப் பார்த்து, "நீங்க அப்படிப்பட்ட தைரியம் உள்ளவர்தான்! உங்களுக்கு அது தெரியாம இருக்கலாம். ஆனா, உங்ககிட்ட அந்த குணம் இருக்கறதை நான் பல முறை கவனிச்சிருக்கேன்!" என்றார்.

குறள் 501
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.

பொருள்:
அறம், பொருள், இன்பம், உயிர் பற்றிய அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே, ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.   

                   502.  ப்ராஜக்ட் மானேஜர்!

"நான் பல வருஷங்களாத் தொழில் பண்ணிக்கிட்டிருக்கேன். ஆனா, இது என் கனவு ப்ராஜக்ட். இந்த ப்ராஜக்ட் ரொம்ப நாளா என் மனசில இருந்துக்கிட்டிருக்கு. இப்பத்தான் இதை நிறைவேற்றுகிற நேரம் வந்திருக்கு. உங்களை மாதிரி ஒரு நல்ல எஞ்சினியரும் கிடைச்சிருக்கீங்க!" என்றார் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பரந்தாமன்.

"நல்லது சார்! நல்லா திட்டம் போட்டு, சிறப்பா செயல்படுத்திடலாம்" என்றான் ப்ராஜக்ட் எஞ்சினியராக அன்றுதான் பொறுப்பேற்றுக் கொண்ட கிரி.

"சங்கர்! ப்ராஜக்ட் ஃபைலை எடுத்துக்கிட்டு வந்து கிரிகிட்ட கொடு" என்றார் பரந்தாமன், அவர் அருகின் பணிவுடன் நின்றிருந்த இளைஞனிடம்.

சங்கர் அறைக்கு வெளியே சென்று, ஓரிரு நிமிடங்களில் ஒரு பெரிய ஃபைலுடன் வந்தான். அதை கிரியிடம் கொடுத்தான்.

"சரி சார்! இதை முழுசா படிச்சுட்டு, அப்புறம் எப்படி புரொஸீட் பண்றதுன்னு உங்ககிட்ட வந்து விவாதிக்கிறேன்" என்ற கிரி, சற்றுத் தயங்கி விட்டு, "இதில நிறைய டெக்னிகல் டீடெயில்ஸ் இருக்கு. முழுசாப் படிக்க ரெண்டு நாள் ஆகும்" என்றான்.

"டேக் யுவர் டைம்!" என்றார் பரந்தாமன்.

ரண்டு நாட்கள் கழித்து, ஃபைலை முழுவதையும் படித்து விட்டு, சில குறிப்புகள் எழுதிக் கொண்டு, கிரி பரந்தாமன் அறைக்கு  வந்தான்.

"வாங்க கிரி! ஃபைலை முழுசாப் படிச்சுட்டாங்களா?" என்றார் பரந்தாமன்.

"படிச்சுட்டேன் சார். எல்லா விவரங்களும் சேகரிச்சு, சுருக்கமான ப்ராஜக்ட் ரிபோர்ட் கூடத் தயார் பண்ணி வச்சுட்டீங்க. சில விஷயங்களை உங்ககிட்ட விரிவா  டிஸ்கஸ் பண்ணணும்!" என்றான் கிரி.

"நிச்சயமா! அதுக்குத்தான் சங்கரையும் வரச் சொல்லி இருக்கேன்" என்று பரந்தாமன் சொல்லிக் கொண்டிருந்தபோதே, அறைக்குள் நுழைந்தான் சங்கர்.

"இந்த டிஸ்கஷனுக்கு இவன் எதுக்கு?" என்று கிரி யோசித்துக் கொண்டிருக்கும்போதே, சங்கரைப் பார்த்து, "உட்காரு சங்கர்!" என்றார் பரந்தாமன்.

சங்கர் கிரியைப் பார்த்து இலேசாகச் சிரித்து விட்டு, அவன் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

"கிரி! இந்த ப்ராஜக்டைப் பொருத்த வரையில டெக்னிகல் ஹெட் நீங்கதான். ஆனா, சங்கர்தான் ஓவர் ஆல் இன்சார்ஜ். அவனுக்கு நான் டெஸிக்னேஷன் எதுவும் கொடுக்கல. ப்ராஜக்ட் மானேஜர்னு வேணும்னா வச்சுக்கலாம். பட் ஹீ வில் ரெப்ரஸன்ட் மீ. எல்லா முடிவுகளையும் எடுக்க அவனுக்கு அதிகாரம் கொடுத்திருக்கேன், வேணும்னா, எங்கிட்ட கன்ஸல்ட் பண்ணிப்பான். அது அவனோட டிஸ்க்ரீஷன்! ஆனா, நீங்க அவன்கிட்ட கிளியரன்ஸ் வாங்கிக்கிட்டு எல்லாத்தையும் செய்யுங்க. இஸ் இட் கிளியர்?" என்றார் பரந்தாமன்.

கிரி என்ன சொல்வதென்று தெரியாமல் மௌனமாகத் தலையாட்டினான்.

"உங்களுக்கு சங்கரைப் பத்தித் தெரியணும். சங்கரோட அப்பா எங்கிட்டதான் வேலை செஞ்சாரு. ரொம்ப நம்பிக்கையானவர். நேர்மையானவர். அவர் இறந்தப்பறம், நான்தான் சங்கரை இங்கே வேலை செய்யச் சொல்லிக் கூப்பிட்டேன். அவனும் ஒத்துக்கிட்டு வந்தான். பாக்கறதுக்கு அவன் ரொம்ப எளிமையானவனாத் தெரிவான். அவன் அதிகம் படிச்சவன் இல்லதான். ஆனா. அவனோட அர்ப்பணிப்பு, நேர்மை, தவறிப் போய்க் கூட எந்த தப்பான காரியத்தையும் செய்யக் கூடாது, தனக்கு எந்த ஒரு கெட்ட பேரும் வந்துடக் கூடாதுங்கறதுங்கறதில அவன் காட்டற கவனம் இதையெல்லாம் அஞ்சு வருஷமா பக்கத்தில இருந்து கவனிச்சதில, இந்த ப்ராஜக்டை செயல்படுத்தறதில என் இடத்தில இருந்து எல்லாத்தையும் செய்யக் கூடியவன் சங்கர்தான்னு தீர்மானிச்சு அவனுக்கு இந்தப் பொறுப்பைக் கொடுத்திருக்கேன். உங்களுக்கு அவனோட இணைஞ்சு செயல்படறது ஒரு இனிமையான அனுபவமா இருக்கும்! சரி. நீங்க விவாதிக்க வேண்டிய விஷயங்களைச் சொல்லுங்க!" என்றார் பரந்தாமன். 

சங்கரைப் பார்த்துப் புன்னகைத்து விட்டு, தான் குறித்து வைத்திருந்த விஷயங்கள் பற்றிப் பேசத் தொடங்கினான் கிரி.

குறள் 502:
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு.

பொருள்:
நல்லகுடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழி வரும் செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.

503. இலக்கியச் சொற்பொழிவு

அந்த ஊர் இலக்கிய மன்ற ஆண்டுவிழாவில், 'இலக்கியக் கடல்' சுந்தரலிங்கம் கலந்து கொண்டு, சிறப்புச் சொற்புழிவு ஆற்றப் போகிறார் என்ற செய்தி, இலக்கிய மன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமின்றி, அந்த ஊர்ப் பொதுமக்களுக்கும் பெரும் உற்சாகத்தை அளித்தது.

சுந்தரலிங்கம் என்ற பெயர் தமிழ் இலக்கிய உலகில் அதிகம் மதிக்கப்பட்ட பெயர்களில் ஒன்று. அவர் அளவுக்குத் தமிழ் இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தவர்கள் சமகாலத்தில் வேறு யாரும் இல்லை என்று சொல்வார்கள். 

அதிகம் அறியப்படாத நூல்கள் உட்படப் பல தமிழ் இலக்கியப் படைப்புகளைக் கற்று, அவற்றின் நுணுக்கமான பொருட்களை அறிந்திருந்தது மட்டுமின்றி, அவற்றிலிருந்து ஆயிரக்கணக்கான செய்யுட்களை மனப்பாடமாகவும் சொல்லக் கூடியவர் அவர். 

எதிர்பார்க்கப்பட்டபடியே, அந்தக் கூட்டத்துக்கு இலக்கிய மன்றத்தில் உறுப்பினர் அல்லாதவர்களும் அதிக அளவில் வந்திருந்தனர். பலர் உட்கார இடமின்றிப் பின்னால் நின்று கொண்டிருந்தனர்.

சுந்தரலிங்கத்தின் பேச்சு அறிவுபூர்வமாகவும், சுவாரசியமாகவும் இருந்தது.

"'கடன் பெற்றார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்ற வரி எந்தக் காப்பியத்தில் இடம் பெற்றிருக்கிறது என்று கேட்டால், உங்களில் பலரும் சொல்லி விடுவீர்கள்" என்று சொல்லி விட்டு, அரங்கத்தைப் பார்த்தார் சுந்தரலிங்கம்.

"கம்பராமாயணம்" என்ற பதில் பலரிடமிருந்தும் வந்தது.

சுந்தலிங்கம் பெரிதாகச் சிரித்து விட்டு, "இது கம்பராமாயணத்தில் உள்ள வரி இல்லை. நன்கு படித்தவர்கள் பலர் கூட இவ்வாறு தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பலரும் இது கம்பன் எழுதியது என்று காலம் காலமாகக் கூறி வருவதால், இந்தத் தவறான கருத்து ஆழமாக வேறூன்றி விட்டது. சிலர் இதை அருணாசலக் கவிராயர் எழுதியதாகச் சொல்கிறார்கள். அதுவும் தவறு. தனிப்படல் திரட்டு என்ற நூலில் இடம் பெற்றுள்ள ஒரு கவிதை வரி இது. இதை எழுதியவரின் பெயர் தெரியவில்லை. 'கடன் கொண்ட நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்பதுதான் சரியான வரி. இப்படித்தான், பல விஷயங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு நிலைபெற்று விட்டன!" என்றார்.

தொடர்ந்து,"இங்கே கடவுளை வணங்குபவர்கள் பலர் இருப்பீர்கள். அவர்களுக்காக, கம்பராமாயணத்திலிருந்து அனுமனைப் பற்றிய ஒரு துதியைக் கூறி என் உரையை நிறைவு செய்கிறேன்.

"'அஞ்சிலே ஒன்று பெற்றான்
  அஞ்சிலே ஒன்றைத் தாவி, 
  அஞ்சிலே ஒன்று ஆறாக, ஆரியர்க்காக ஏகி
  அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
  அஞ்சிலே ஒன்றை வைத்தான்
  அவன் எம்மை அளித்துக் காப்பான்.

"இதன் பொருள் பஞ்சபூதங்களில் ஒன்றான வாயுவுக்குப் பிறந்தவனான அனுமன், பஞ்சபூதங்களில் ஒன்றான கடலைத் தாண்டுமுகமாக பஞ்சபூதங்களில் ஒன்றான ஆகாயத்தில் பறந்து, பஞ்சபூதங்களில் ஒன்றான பூமியின் புதல்வி சீதையைக் கண்டு, பஞ்சபூதங்களில் ஒன்றான தீயை இலங்கையில் வைத்தான். அவன் நம்மைக் காப்பான் என்பது. பஞ்சபூதங்களையும் வைத்து எழுதப்பட்ட கவிதை இது" என்று கூறி உரையை முடித்தார்.

கரவொலி அரங்கை அதிர வைத்தது.

நிகழ்ச்சிக்குப் பிறகு, அந்த இலக்கிய மன்ற உறுப்பினர்கள் ஒரு ஓட்டலில் சுந்தரலிங்கத்துக்கு விருந்தளித்தனர்.

பல உறுப்பினர்கள் சுந்தரலிங்கத்தின் அருகே வந்து, அவர் பேச்சைப் பாராட்டி விட்டுச் சென்றார்கள். 

விருந்து முடிந்து எல்லோரும் கிளம்பத் தொடங்கியபோது, ஒரு இளைஞன் சற்றுத் தயங்கியபடி சுந்தரலிங்கத்திடம் வந்தான். அப்போது அவர் அருகில் ஒன்றிரண்டு பேர்தான் இருந்தனர்.

"சார் உங்க பேச்சு ரொம்ப அருமை. ஆனா எனக்கு ஒரு சந்தேகம்..." என்றான் மெல்லிய குரலில்.

"சொல்லுங்க தம்பி!" என்றார் சந்தரலிங்கம், அவனை ஊக்குவிக்கும் விதமாக.

"அனுமனைப் பற்றி ஒரு செய்யுள் சொன்னீர்களே, அது கம்பரால் எழுதப்பட்டதாக அறிஞர்கள் ஏத்துக்கலேன்னு கேள்விப்பட்டிருக்கிறேன்..."

"உனக்கு எப்படித் தெரியும்?" என்றார் சுந்தரலிங்கம், சற்றே அதிர்ச்சியுடன்.

"நான் பள்ளிக்கூடத்தில படிக்கறப்ப, என் பள்ளி ஆசிரியர் சொல்லி இருக்காரு. இது பக்தர்களுக்குக் கேட்க நல்லா இருக்கும், ஆனா, இது கம்பன் கவிதை இல்லை, நல்ல கவிதை அமைப்பு கொண்டது கூட இல்லேன்னு சொல்லி இருக்காரு. மத்தபடி, எனக்கு இலக்கிய அறிவு எதுவும் கிடையாது" என்றான் இளைஞன், தவறாக ஏதாவது சொல்லிக் கொண்டிருக்கிறோமோ என்ற அச்சம் நீங்காதவனாக.

சுந்தரலிங்கம் பதில் சொல்லவில்லை. அதற்குள் மன்றச் செயலாளர் அங்கே வந்து, "கிளம்பலாமா?" என்றதும், இளைஞனை மௌனமாக ஒருமுறை பார்த்து விட்டு அவருடன் சென்று விட்டார்.

வீட்டுக்குப் போனதும், முதல் வேலையாகத் தன்னிடம் இருந்த கம்பராமாயணப் பதிப்பை எடுத்துப் பார்த்தார்.

இளைஞன் கூறியது உண்மை என்று உறுதியாயிற்று.

'இவ்வளவு ஆழமாகப் படித்தும், எப்படி இதை கவனிக்காமல் விட்டோம் என்று தன்னை நொந்து கொண்டார் சுந்தரலிங்கம்.

குறள் 503
அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.

பொருள்:
அரிய நூல்களைத் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும், ஆராய்ந்து பார்க்குமிடத்தில், அறியாமை இருக்கும். அவ்வாறு இல்லாமல் இருப்பது அரியது.                

504. தேர்வுக் குழு

"இன்டர்வியூ முடிஞ்சு போச்சு. யாரைத் தேர்ந்தெடுக்கப் போறோம்?" என்றார் பர்சனல் மானேஜர் சுந்தரம்.

"இது டிபார்ட்மென்ட் மானேஜருக்கான புரொமோஷன் இன்டர்வியூ. அந்த மானேஜர் உங்க கீழதான் வேலை செய்யப் போறாரு. அதனால, உங்க கருத்துதான் முக்கியம்" என்றார் ஜெனரல் மானேஜர் ராஜு, டிவிஷனல் மானேஜர் செல்வத்தைப் பார்த்து.

செல்வம் பதில் சொல்வதற்குள், "நாமதான் ரெண்டு பேரை ஷார்ட்லிஸ்ட் பண்ணிட்டோமே, அந்த ரெண்டு பேருக்குள்ள ஒத்தரைதானே தேர்ந்தெடுக்கணும்? உங்க சாய்ஸ் என்ன?" என்றார் சுந்தரம்.

'இதைத்தானே ஜி எம் எங்கிட்ட கேட்டாரு? நீ பர்சனல் மானேஜர்னு உன் கெத்தைக் காட்டிக்கறதுக்காக, இதே கேள்வியைத் திருப்பிக் கேக்கணுமாக்கும்?' என்று மனதுக்குள் நினைத்து எரிச்சலடைந்த செல்வம், ராஜுவைப் பார்த்து, "சார்! ராம், நீலகண்டன் ரெண்டு பேர்ல, என்னோட சாய்ஸ் நீலகண்டன்தான்!" என்றார்.

"நீலகண்டனா? அவரோட புரொஃபைல் ஒண்ணும் அவ்வளவு இம்ப்ப்ரஸிவா இல்லையே?" என்றார் சுந்தரம்.

'அப்புறம் எப்படி அவரை ஷார்ட்லிஸ்ட் பண்ணினீங்க?' என்று மீண்டும் மனதுக்குள் கேட்டுக் கொண்ட செல்வம், "நீங்க புரொஃபைலைப் பாக்கறீங்க. நான் ஆளைப் பாக்கறேன்!" என்றார்.

"கரெக்ட். ரெண்டு பேர்கிட்டேயும் நீங்கதானே நேரடியாப் பழகறீங்க? அதனாலதான், உங்க கருத்து முக்கியம்னு நான் சொன்னேன்" என்ற ராஜு, "இதை ஃபைனலைஸ் பண்றதுக்கு முன்னால ரெண்டு பேரோட சிறப்புகள் என்ன, குறைகள் என்னங்கறதைப் பட்டியல் போட்டுடலாம்" என்றார்.

அடுத்த சில நிமிஷங்களுக்கு, மூன்று பேருமாகச் சேர்ந்து, ராம், நீலகண்டன் இருவரின் சிறப்புகளையும், குறைகளையும் பட்டியலிட்டனர்.

"இரண்டு பேரோட சிறப்புகளையும், குறைகளையும் பட்டியல் போட்டுட்டோம். சிறப்புகளுக்கு பாசிடிவ் மார்க்கும், குறைகளுக்கு நெகடிவ் மார்க்கும் போட்டுப் பாத்தா, நிகர பாசிடிவ் மார்க் யாருக்கு அதிகமா இருக்கும்னு நினைக்கிறீங்க?" என்றார் ராஜு, செல்வத்தைப் பார்த்து.

"நிச்சயமா, ராம்தான் பெட்டர். ரெண்டு பேரோடயும் பழகின என் பொதுவான அனுபவத்தை வச்சு, முதல்ல நீலகண்டன்தான் பெட்டர் சாய்ஸ்னு நினைச்சேன். நீங்க சொன்ன இந்த அணுகுமுறைப்படி பாத்தா, ராம்தான் பெட்டர்னு நிச்சயமாத் தெரியுது" என்றார் செல்வம்.

"வெரி குட்! ராமைத் தேர்ந்தெடுக்கறதுன்னு, நாம மூணு பேரும் ஒருமனதா முடிவு செஞ்சுடலாமா?" என்றார் ராஜு.

மற்ற இருவரும் மௌனமாகத் தலையசைத்தனர்.

செல்வம் எழுந்து சென்ற பிறகு, சுந்தரம் ராஜுவிடம், "செல்வத்துக்கு பயஸ் இருக்கு சார்! நீலகண்டனைத்தான் தேர்ந்தெடுக்கணும்னு இன்டர்வியூவுக்கு முன்னாலேயே முடிவு செஞ்சுட்டாருன்னு நினைக்கிறேன். உங்க யோசனைப்படி, ரெண்டு பேரோட நிறை குறைகளைப் பட்டியல் போட்டப்பறம்தான் அவர் தன் மனசை மாத்திக்கிட்டாரு" என்றார்.

"பயஸ் இருக்கறது அவருடைய குறையா இருக்கலாம். ஆனா, அவர்கிட்ட நிறைய நிறைகள் இருக்கு. நியாய உணர்வு இருக்கு. தான் ஒரு முடிவுக்கு வந்தப்பறம் கூட, மத்தவங்க சொல்றதைக் கேட்டு, அதில இருக்கிற நியாயத்தை எடை போட்டுப் பாக்கற திறந்த மனப்பான்மை இருக்கு. அதனால, ஆன் பாலன்ஸ், அவர்கிட்ட பாசிடிவ் குணங்கள்தான் மேலோங்கி இருக்கு! கான்ட் யூ ஸீ திஸ்?" என்றார் ராஜு.

அவர் சொல்வதை ஏற்றுக் கொள்வது போல் தலையசைத்தார் சுந்தரம். 

குறள் 504:
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.

பொருள்:
ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து, அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து, அதன் பிறகு, அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வர வேண்டும்.

505. புதிய அதிகாரி

"இந்த ஆஃபீஸே அப்படித்தான். அதில, நீயும் நானும் மட்டும் நேர்மையா இருந்து என்ன பயன்?" என்றான் செந்தில்.

"பயன் இல்லாம போகட்டும். நாம வேலை செய்யறதே இல்ல கஷ்டமா இருக்கு?" என்றான் பாலாஜி.

"ஆமாம், ஒரு பக்கம் பொதுமக்கள் அவங்க கிட்ட லஞ்சம் வாங்கிக்கிட்டு அவங்களுக்கு சாதகமா செயல்படச் சொல்லி நமக்கு அழுத்தம் கொடுக்கறாங்க. இன்னொரு பக்கம் நம் மேலதிகாரிகள் நாம அவங்களுக்கு இடைஞ்சலா இருக்கோமேன்னு நம்ம மேலே ஆத்திரமா இருக்காங்க. நம்மோட வேலை செய்யற மத்தவங்க, நாம ஏதோ பைத்தியக்காரங்க மாதிரி, நம்மை ஏளனமாப் பாக்கறாங்க!"

"ஏதோ, உனக்கு நானும் எனக்கு நீயும் ஆறுதலா இருக்கோம்!"

"இன்னிக்கு, புது அதிகாரி வரப் போறாரு.அவரு எப்படி இருக்கப் போறாரோ!" என்றான் செந்தில்.

புதிய அதிகாரி தணிகாசலம் பொறுப்பேற்றுக் கொண்டதும், ஊழியர்கள் அனைவரையும் தன் அறைக்கு அழைத்தார்.

"இங்க பாருங்க. நான் வேலை விஷயத்தில ரொம்ப கடுமையா இருக்கறவன். ஒரு சின்ன தவறு நடந்தா கூடப் பொறுத்துக்க மாட்டேன். இதை மனசில வச்சுக்கிட்டு எல்லாரும் உங்க வேலையில கரெக்டா இருங்க" என்று ஆரம்பித்து, நேர்மை, சேவை உணர்வு, அர்ப்பணிப்பு இவற்றுடன் பணி புரிய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, ஒரு சிறிய உரை நிகழ்த்தினார்.

தங்கள் இருக்கைகளுக்கு வந்ததும், "அப்பா! ஒருவழியா, ஒரு நேர்மையான அதிகாரி வந்திருக்காரு. மத்தவங்களுக்கு எப்படியோ, உனக்கும், எனக்கும் இவர்கிட்ட வேலை செய்யறது ஒரு திருப்தியான அனுபவமா இருக்கும்னு நினைக்கிறேன்" என்றான் செந்தில், பாலாஜியிடம்.

"அவர் சொன்னதை வச்சு அவரை எப்படி எடை போட முடியும்? எப்படி நடந்துக்கறார்னு பாக்கலாம்!" என்றான் பாலாஜி, சிரித்தபடி.

"மோசமான பல அதிகாரிகளைப் பாத்ததால, எந்த ஒரு அதிகாரியும் நேர்மையானவரா இருப்பார்னு நம்பறது உனக்குக் கஷ்டமா இருக்கு போலிருக்கு!" என்றான் செந்தில்.

பாலாஜி பதில் சொல்லாமல் சிரித்தான்.

சில நாட்களுக்குப் பிறகு, ஒருமுறை பாலாஜியிடம் தனிமையில் பேசும்போது, "நீ சந்தேகப்பட்டது சரிதான். நான் நினைச்ச மாதிரி, இந்த அதிகாரி ஒண்ணும் நேர்மையானவர் இல்ல!" என்றான் செந்தில், தணிந்த குரலில்.

"எப்படிச் சொல்ற?"

"மாணிக்கம்னு ஒரு தொழிலதிபர் ஒரு அப்ரூவல் கேட்டிருந்தார். சட்டப்படி அப்படி ஒரு அப்ரூவல் கொடுக்க முடியாதுன்னு நான் அவர்கிட்ட சொன்னேன். 'நீங்க ஃபைலை உங்க ஆஃபீசருக்கு அனுப்புங்க, நான் பாத்துக்கறேன்'னு சொன்னாரு. 'இப்ப வந்திருக்கிற அதிகாரி நேர்மையானவர், அவர் இதுக்கு ஒத்துக்க மாட்டார்' னு சொன்னேன். 

"சட்டப்படி இந்த அப்ரூவல் கொடுக்க முடியாதுன்னு நோட் போட்டு ஃபைலை அதிகாரிக்கு அனுப்பிட்டேன், ஒரு வாரமாச்சு. ஃபைல் எனக்குத் திரும்பி வரல. இன்னிக்குக் காலையில, மாணிக்கம் எனக்கு ஃபோன் பண்ணி, 'உங்க அதிகாரியை நான் கவனிச்சுட்டேன். நான் கேட்ட அப்ரூவலை அவர் கொடுத்துட்டார்'னு சொல்லிச் சிரிச்சாரு. 

"கொஞ்ச நேரத்துக்கெல்லாம், அதிகாரிகிட்டேந்து ஃபைல் திரும்பி வந்தது. என்னோட அப்ஜக்‌ஷனை ஓவர்ரூல் பண்ணி, ஏதோ ஒரு பலவீனமான காரணத்தைச் சொல்லி, அப்ரூவல் கொடுத்திருக்காரு!"

பாலாஜி பதில் சொல்லாமல் சிரித்தான்.

"நீ எப்படி இவரை முதலிலேயே சந்தேகப்பட்ட? இவரைப் பத்தி உனக்கு முன்னமே தெரியுமா?" என்றான் செந்தில்.

"தெரியாது. பொதுவாகவே யாரையும் அவங்க சொல்றதை வச்சு மதிப்பிடக் கூடாது, அவங்க செய்யறதை வச்சுத்தான் மதிப்பிடணும்னு நினைக்கிறவன் நான். நேர்மை இல்லாத பல பேர் தங்களை நேர்மையானவங்கன்னு சொல்லிப்பாங்க. ரொம்ப அதிகமாவே சொல்லிப்பாங்க!

"இவரு நம்ம ஆஃபீஸ்ல சேருகிற அன்னிக்குக் காலையில இவரை நான் கோயில்ல பாத்தேன். அப்ப அவர் யார்னு எனக்குத் தெரியாது. கோவில் திறக்கறதுக்கு முன்னால வாசல்ல கொஞ்சம் பேரு வரிசையில நின்னுக்கிட்டிருந்தாங்க. 

"இவரு வரிசையில நடுவில போய் சேந்துக்கிட்டாரு. பின்னாலேந்து சில பேர் ஆட்சேபிச்சாங்க. தான் முன்னாடியே வந்துட்டதாகவும், ஸ்கூட்டர்லேந்து பர்சை எடுத்துக்கிட்டு வரப் போனதாகவும் சொன்னாரு. அது பொய்னு எனக்குத் தெரியும். வரிசை சின்னதாத்தான் இருந்தது. அதுக்கே பொய் சொல்லிட்டு முன்னால போய் நிக்கணுமான்னு நினைச்சேன். 

"சன்னதிக்குள்ள போனப்பறம், சில வயசானவங்களையெல்லாம் கூட நெட்டித் தள்ளிக்கிட்டுப் போய் முன்னால நின்னாரு. அப்புறம், ஆஃபீஸ்ல அவரைப் பாத்ததும், அவர் கோவில்ல நடந்துக்கிட்டதை வச்சுப் பாத்தப்ப, அவரு நேர்மையானவரா இருக்க மாட்டார்னு நினைச்சேன். அவர் தன்னை ரொம்ப நேர்மையானவர்னு சொல்லிக்கிட்டது என் சந்தேகத்தை இன்னும் அதிகாமாக்கிச்சு!" என்றான் பாலாஜி.  

குறள் 505
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.

பொருள்:
ஒருவர் பெருமை உடையவரா அல்லது சிறுமை உடையவரா என்பதற்கு அவருடைய செயல்களே உரைகல்லாக அமையும்.

                           506. சம்பந்தமா இப்படி?

சம்பந்தம் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து விட்டதால் அவனுடைய பெரியப்பாவால் வளர்க்கப்பட்டான். அவர் அவனை அதிகம் படிக்க வைக்கவில்லை. 

சம்பந்தத்துக்கு இருபத்திரண்டு வயதானபோது, சம்பந்தத்தின் பெரியப்பா தனக்குத் தெரிந்தவர் ஒருவர் மூலம் ஶ்ரீ ஏஜன்சீஸ் என்ற நிறுவனத்தில் அவனை வேலைக்குச் சேர்த்து விட்டார்.

ஶ்ரீ ஏஜன்சீஸ் நிறுவன உரிமையாளர் ஶ்ரீதர் அவனிடம் சம்பள விவரங்களைத் தெரிவித்ததும், "சார்! நீங்க சம்பளம் எவ்வளவு கொடுத்தாலும் சரி, நான் ஆஃபீஸ்லேயே தங்கிக்க  மட்டும் அனுமதிச்சீங்கன்னா போதும்!" என்றான்.

"பின்னால ஒரு அறை இருக்கு. ஆனா, அது வசதியா இருக்காதே! ஏன், நீ உன் பெரியப்பா வீட்டிலேயே இருந்துக்கலாமே!" என்றார் ஶ்ரீதர்.

"சார்! வேற வழியில்லாமதான் அங்கே இருந்தேன். எத்தனையோ தடவை, எங்கேயாவது ஓடிப் போயிடலாம்னு நினைச்சிருக்கேன். ஆனா, எங்கே போய் என்ன செய்யறதுன்னு தெரியாததாலதான், பல்லைக் கடிச்சுக்கிட்டு அங்கேயே இருந்தேன். தெய்வம் மாதிரி நீங்க எனக்கு ஒரு வேலை கொடுத்திருக்கீங்க. இந்த உடம்பில உயிர் இருக்கற வரைக்கும், உங்களுக்கு நாய் மாதிரி உழைப்பேன்" என்றான் சம்பந்தம்.

ஶ்ரீதர் நெகிழ்ந்து போய், "சரி. உனக்கு எங்கேயாவது நல்ல அறை கிடைக்கிறவரைக்கும், இப்போதைக்கு இங்கேயே இருந்துக்க!" என்றார்.

சில மாதங்களுக்குப் பிறகு, சம்பந்தம் தங்குவதற்கு ஒரு அறை பார்த்துக் கொண்டு போய் விட்டான். ஆனால் அவன் சொன்னபடியே, அந்த நிறுவனத்துக்கு விஸ்வாசமாக இருப்பதைக் காட்டும் விதத்தில் கடுமையாக உழைத்து வந்தான்.

முதலாளியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவன் என்று கருதி மற்ற ஊழியர்கள் அவனிடம் சற்று அதிக மரியாதையும், பயமும் காட்டினார். அதனாலேயே அவன் ஒரு உதவியாளனாகவே இருந்த நிலையிலும், அதிகார அமைப்பில், அந்த நிறுவனத்தில் முதலாளிக்கு அடுத்த நிலையில் இருந்தவன் அவன்தான் என்று ஆகி விட்டது.

"சம்பந்தம் சாரா இப்படி?" என்றாள் டைப்பிஸ்ட் மீனா. 

"பெட்டியில லட்ச லட்சமா பணம் இருந்ததாம்! சாராலேயே நம்ப முடியலையாம்" என்றான் ராம்குமார் என்ற ஊழியன்.

"அவர்கிட்ட எப்பவும் ஆஃபீஸ் பணம் பத்தாயிரம் ரூபாய் இருக்கும் - பெட்டி கேஷ் மாதிரி. சார்தான் கொடுக்கச் சொல்லி இருக்கார். கம்பெனிக்காக சில செலவுகளை அவர் செய்வாரு. அப்பப்ப பில், வவுச்சர் கொடுத்துட்டுப் பணம் வாங்கிப்பாரு. டாக்சி, ஆட்டோ, கஸ்டமர் என்டர்டெயின்மென்ட்னு நிறைய கணக்குக் காட்டுவாரு. சில சமயம், அதெல்லாம் போலி, இல்ல, தொகை அதிகமா இருக்குன்னு எனக்குத் தோணும். சார்கிட்ட ஒண்ணு ரெண்டு தடவை சொல்லி இருக்கேன். 

"'அவனுக்குக் குடும்பம் கிடையாது, சொந்தக்காரங்க கிடையாது. பொய்க்கணக்கு காட்டிப் பணம் சம்பாதிச்சு, அவன் என்ன செய்யப் போறான்?'ன்னு சார் சொல்லிடுவாரு. அப்புறம் நான் என்ன சொல்ல முடியும்? பல வருஷமா, சிறுகச் சிறுகக் கொள்ளையடிச்சிருக்காரு!" என்றான் அக்கவுன்டன்ட் குமரகுரு.

"அப்புறம் எப்படி மாட்டிக்கிட்டாரு?"

"சார் சில சமயம் வவுச்சர்களையெல்லாம் விவரமாப் பாப்பாரு. அப்ப ஏதோ சந்தேகம் வந்து, சம்பந்தத்தையே கூப்பிட்டுக் கேட்டிருக்காரு. அவர் பதில் சொல்ல முடியாம உளறி மாட்டிக்கிட்டாரு."

"எவ்வளவு நம்பினேன் அவனை! அவன் என்னைப் பல வருஷங்களா ஏமாத்தி இருக்கான்னு தெரிஞ்சதும், எனக்கு ரொம்ப வருத்தமும் கோபமும் வந்தது. அதான் உடனே போலீஸ்ல சொல்லிட்டேன். போலீஸ்காரங்க அவன் வீட்டில சோதனை போட்டபோது, பெட்டியில, பையில, தலையணை உறையிலன்னு அங்கங்க பணத்தை ஒளிச்சு வச்சிருக்கான். இருபது லட்ச ரூபாய்க்கு மேல பணம்! எனக்குத் தெரிஞ்சு, அவன் தாராளமா செலவழிக்கறவன்தான், ஒருவேளை, அவன் ரொம்ப சிக்கனமா இருந்து சேமிச்சிருந்தா கூட, இந்த எட்டு வருஷத்தில, அவனால அஞ்சாறு லட்ச ரூபாய்க்கு மேல சேமிச்சிருக்க முடியாது" என்று தன் மனைவியிடம் புலம்பினார் ஶ்ரீதர்.

"இரக்கப்பட்டு வேலை கொடுத்தீங்க. அவனை நம்பினீங்க. இப்படி செஞ்சிருக்கான். அவனுக்குக் குடும்பம், சொந்தம்னு கூட யாரும் இல்லையே! அவனுக்கு ஏன் இந்தப் பணத்தாசை?" என்றாள் அவர் மனைவி.

"தெரியலையே! குடும்பம், உறவுகள் இல்லாதவங்களுக்குப் பணத்தாசை இருக்காதுன்னு நாம நினைக்கிறோம்! ஆனா, குடும்பம் இருக்கறவங்களுக்கு, தாங்க தப்பு பண்ணி மாட்டிக்கிட்டா, குடும்ப உறுப்பினர்கள், சொந்தக்காரர்கள் இவங்க முகத்தில எல்லாம் எப்படி விழிக்கிறதுன்னு ஒரு பயம் இருக்கும். அந்த பயம் இல்லாததாலதான், சம்பந்தம் மாதிரி ஆட்கள்  இந்த மாதிரித் தப்பையெல்லாம் கொஞ்சம் கூடக் கூச்சப்படாம செய்யறாங்களோ என்னவோ!" என்றார் ஶ்ரீதர்.

குறள் 506:
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.

பொருள்:
சுற்றத்தாறின் தொடர்பு அற்றவரை நம்பித் தெளியக்கூடாது, அவர் உலகத்தில் பற்று இல்லாதவராகையால், பழிக்கு நாண மாட்டார்.

507. புதிய கிளை

சார்! மதுரையில நாம ஆரம்பிக்கப் போற பிராஞ்ச்சுக்கு, யாரை மானேஜராப் போடறதுன்னு முடிவு பண்ணணும்" என்றார் சீனியர் மானேஜர் சுந்தரமூர்த்தி.

 "நீங்க யாரை சஜஸ்ட் பண்றீங்க?" என்றார் ரீஜனல் மானேஜர் அருணன்.

"ரமேஷ், சுதாகர் ரெண்டு பேர்ல ஒத்தரைப் போடலாம்னு நினைக்கிறேன்."

"குமாரை நீங்க கன்ஸிடர் பண்ணலியா?"

"சார்! குமாருக்கு அனுபவம் போதாது. பிராஞ்ச் திறக்கணும்னா, அதுக்கு முன்னால, அந்த ஊருக்குப் போய் நிறைய பிரிபரேடரி வேலைகள் எல்லாம் செய்யணும், வாடகைக்கு இடம் பாக்கறதிலேந்து, இன்டீரியர் வரை. உள்ளூர் ஆட்கள் சில பேரை வேலைக்கு எடுக்கணும். பிராஞ்ச் ஆரம்பிச்சப்பறம், பிசினஸை டெவலப் பண்ணணும். இதையெல்லாம் ஃபீல்டில அனுபவம் உள்ளவங்களாலதான் செய்ய முடியும், குமார் பெரும்பாலும் ஆஃபீசுக்குள்ளேயேதான் வேலை செஞ்சிருக்காரு..."

சுந்தரமூர்த்தியை இடைமறித்த அருணன், "அதனால என்ன? அவருக்கு எப்பதான் எக்ஸ்போசர் கிடைக்கறது? ஆஃபீஸ்ல அதிகம் வேலை செஞ்சதால, அவருக்கு கம்பெனி பாலிசி நடைமுறைகள் எல்லாம் நல்லாத் தெரிஞ்சிருக்குமே! அது ஒரு அட்வான்டேஜ் இல்லையா?" என்றார்.

சுந்தரமூர்த்தி சற்றுத் தயக்கத்துடன், "சார்! உண்மையில, குமாருக்கு நம் கம்பனி பாலிசி, நடைமுறைகள் எல்லாம் கூட அவ்வளவாத் தெரியாது. பொதுவாகவே எதையும் தெரிஞ்சுக்கறதில அவர் ஆர்வம் காட்டறதில்ல. ஒரு புது பிராஞ்ச்சைத் திறந்து, அதை நல்லா நடத்தறதுக்குத் தேவையான திறமை அவர்கிட்ட இல்லேன்னுதான் நான் நினைக்கிறேன்" என்றார்.

"உங்களுக்கு எதனாலேயோ குமாரைப் பிடிக்கலேன்னு நினைக்கிறேன்!" என்றார் அருணன்.

'உங்களுக்கு எதனாலேயோ குமாரைப் பிடிச்சிருக்கு. அதனாலதான் அவரோட குறைகளை நீங்க பெரிசா நினைக்க மாட்டேங்கறீங்க!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார் சுந்தரமூர்த்தி.

"சார்! குமாரோட புரொஃபைலை வச்சுப் பாக்கறப்ப, அவரை பிராஞ்ச் மானேஜராப் போட ஹெட் ஆஃபீஸ்ல அப்ரூவல் வாங்கறது கஷ்டம்!" என்றார் சுந்தரமூர்த்தி, தன் இறுதி முயற்சியாக,

"அதை நான் பாத்துக்கறேன்!" என்றார் அருணன்.

அருணன் தான் சொன்னபடியே, தலைமை அலுவலகத்தில் பேசி, மதுரையில் அமைக்கப்பட வேண்டிய புதிய கிளைக்கு, குமாரை மானேஜராக நியமிக்க அனுமதி வாங்கி விட்டார்.

குமார் மதுரைக் கிளைக்கு மானேஜராகப் பொறுப்பேற்று ஆறு மாதங்கள் ஓடி விட்டன. சுந்தரமூர்த்தி பயந்தபடியே, குமாரின் திறமையின்மை மற்றும் அனுபவக் குறைபாட்டின் காரணமாக, அந்தக் கிளையின் செயல்பாடுகள் சிறப்பாக இல்லை.

"புது பிராஞ்ச்தானே! ஆரம்பத்தில அப்படித்தான் இருக்கும். கொஞ்ச நாள்ள சரியாயிடும்" என்றார் அருணன்.

பிரச்னைகளுக்குக் காரணம் குமாரின் திறமையின்மைதான் என்பது அருணனுக்குப் புரியவில்லையா, அல்லது அவர் அதை ஒப்புக் கொள்ள மறுக்கிறாரா என்பது சுந்தரமூர்த்திக்குப் புரியவில்லை.

புதிய கிளையின் செயல்பாடு பற்றிய மாதாந்தர அறிக்கைகளைப் பெற்று வந்த தலைமை அலுவலகம், கிளையின் திருப்தியற்ற செயல்பாடு பற்றி அடிக்கடி கடிதம் எழுதிக் கொண்டிருந்தது. ஓரிரு மாதங்களில் நிலைமை சரியாகி விடும் என்று அருணன் தலைமை அலுவலகத்துக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தார்.

ன்று அருணனுக்குத் தலைமை அலுவலகத்திலிருந்த ஜெனரல் மானேஜரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

"மிஸ்டர் அருணன்! நம்ம மதுரை கிளை துவங்கி ஒரு வருஷம் ஆகப் போகுது!" என்றார் ஜெனரல் மானேஜர். 

"ஆமாம் சார்! அதை இம்ப்ரூவ் பண்ண முயற்சி செஞ்சுக்கிட்டுத்தான் இருக்கோம்" என்றார் அருணன், மென்று விழுங்கியபடி.

"உங்களுக்குத் தெரியும் -  நாம புதுசா ஆரம்பிக்கிற எந்தக் கிளையும் ரெண்டு மூணு மாசத்திலேயே நல்லா செயல்பட ஆரம்பச்சுடும். அதுவும், மதுரை பெரிய ஊரு. நிறைய பிசினஸ் பொடென்ஷயல் உள்ள ஊரு. ஒரு வருஷம் முடியப் போற நிலையிலேயும், கொஞ்சம் கூட முன்னேற்றம் இல்லாதது ரொம்ப கவலை அளிக்கக் கூடியதா இருக்கு!"

"எஸ் சார்! ஐ ஹேவ் எ பிளான். கிளையோட முதல் ஆண்டுவிழாவுக்கு நான் போகப் போறேன். அங்கேயே ரெண்டு மூணு நாள் தங்கி, பிராஞ்ச் மானேரை நல்லா கயிட் பண்ணி, என்கரேஜ் பண்ணி, சீக்கிரமே நல்ல ரிசல்ட் காட்டற மாதிரி செயல்படச் செஞ்சுட்டு வரேன்" என்றார் அருணன்.

"அதுக்கு அவசியம் இருக்காது. ஏன்னா, அந்த பிராஞ்ச்சை மூடறதுன்னு நாங்க முடிவு பண்ணி இருக்கோம். பிராஞ்சுக்கும், உங்களுக்கும் கடிதம் அனுப்பிட்டோம். உங்களுக்கு முன்னாலேயே தகவல் தெரியணுங்கறதுக்குத்தான் ஃபோன் பண்ணினேன்."

ஃபோனை வைத்து விட்டார் ஜெனரல் மானேஜர்.

'சுந்தரமூர்த்தி சொன்னதை அலட்சியப்படுத்தி விட்டு, என்னுடைய விருப்பத்தின்படி செயல்பட்டது எவ்வளவு பெரிய தவறாகி விட்டது!' என்று நினைத்து வருந்தினார் அருணன். 

குறள் 507
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்.

பொருள்:
அறிய வேண்டியவற்றை அறியாதவர்களை, அவர்கள் மீதுள்ள அன்பு காரணமாகப் பொறுப்பில் அமர்த்துதல், அறியாமை பலவற்றையும் தரும்.

508. தந்தையின் அடிச்சுவட்டில்...

"நீங்க ஓய்வு பெறப் போறது எங்களுக்கெல்லாம் ரொம்ப வருத்தமா இருக்கு சார்!" என்றாள் பொன்மொழி.

"அம்மா! பொதுவா, அறுபது வயசில ஓய்வு பெறணும். எனக்கு எழுபது வயசாகுது. இப்ப கூட நான் ஓய்வு பெறாட்டா எப்படி?" என்றார் ஆதிகேசவன், சிரித்தபடியே.

"எழுபத்தஞ்சு வயசாகியும் ஒத்தர் இன்னும் ஒட்டிக்கிட்டிருக்காரே! அவரு போனா, நாங்க சந்தோஷப்படுவோம்!" என்றான் நாதன்.

"அவர் போறேன்னாலும், நம்ம முதலாளி போக விட மாட்டாரே!" என்றான் வேலு.

ஆதிகேசவன் மௌனமாக இருந்தார்.

"சார்! உங்களுக்குத் தெரியாதது இல்ல. இன்னிக்கு சாந்தகுமார் சார் லீவுங்கறதால நாங்க தைரியமாப் பேசலாம். முதலாளியும் இன்னும் ஆஃபீசுக்கு வரல. சாந்தகுமார் சார் மானேஜர்னுதான் பேரு. ஒரு சினிமாவில நாகேஷ் மானேஜர்ங்கறதை வாய் தவறி டேமேஜர்னு சொல்லுவாரு. அது இவருக்கு ரொம்பப் பொருத்தம்! அவரு கம்பெனியையும் நாசம் பண்ணிக்கிட்டு எங்க எல்லோரையும் கஷ்டப்படுத்திக்கிட்டும் இருக்காரு. 

"அவரோட செயல்பாடுகளால நம்ம கம்பெனிக்கு எத்தனையோ பிரச்னை வந்திருக்கு. ஆனா, முதலாளி அவர் சொல்றதைத்தான் வேதவாக்கா நினைச்சுச் செயல்படறாரு. அவரோட முடிவுகளால வர பிரச்னைகளையெல்லாம் நாங்க எதிர்கொள்ள வேண்டி இருக்கு. முதலாளிக்கு இது ஏன் புரியலேன்னு தெரியல" என்றான் மூர்த்தி என்ற இன்னொரு ஊழியன்.

"சார்! நீங்கதான் எங்களுக்குப் பெரிய ஆதரவா இருந்தீங்க. சாந்தகுமார் சாரோட தான்தோன்றித்தனமான செயல்களிலேருந்து, எங்களைப் பெரிய அளவில காப்பாத்திக்கிட்டிருந்தீங்க. முதலாளியும் உங்க பேச்சுக்கு மதிப்புக் கொடுப்பாரு" என்றாள் பொன்மொழி.

"இல்லம்மா. நான் சொன்னா, முதலாளி பொறுமையாக் கேட்டுப்பாரு. ஆனா, சாந்தகுமார் சொன்னபடிதான் நடந்துப்பாரு. என் வயசுக்கு மரியாதை கொடுத்தாரு, என் பேச்சுக்கு இல்லை!" என்றார் ஆதிகேசவன்.

"அது ஏன் சார் அப்படி? சாந்தகுமார் சாருக்கு முதலாளி ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கறாரு? அவருக்கு அதிகமா விஷயமும் தெரியாது, அனுபவமும் கிடையாது" என்றான் நாதன்.

"அவர் அனுபவம் முழுக்க நம்ம கம்பெனியிலதான். ஆனா, இங்கேயும் அவர் எதுவும் கத்துக்கிட்டதாத் தெரியல!" என்றான் வேலு.

"சொல்லுங்க சார்! அவருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? உங்களுக்கு இருக்கிற அறிவு, அனுபவத்தில கால் பங்கு கூட அவருக்குக் கிடையாது!" என்றாள் பொன்மொழி, விடாமல்.

"அப்படியெல்லாம் சொல்லக் கூடாது அம்மா!" என்ற ஆதிகேசவன், சற்றுத் தயங்கி விட்டு, தொடர்ந்தார்.

"இந்த கம்பெனியை ஆரம்பிச்சவர் நம்ம முதலாளியோட தாத்தா. அவர் ரொம்பத் திறமையானவர்னு சொல்லுவாங்க. குறுகிய காலத்திலேயே, அவர் கம்பெனியை நல்லா வளத்துட்டாரு. 

"அவர் காலமானப்பறம், அவரோட பிள்ளை - நம் முதலாளியோட அப்பா - பொறுப்பேத்துக்கிட்டாரு. அப்ப அவர் இளைஞர். சாந்தகுமார் அவரோட நண்பர். அவரை கம்பெனியில சேத்துக்கிட்டாரு. கொஞ்ச வருஷம் கழிச்சு, நானும் இங்கே வந்து சேர்ந்தேன். 

"சாந்தகுமாருக்கு தொழிலைப் பத்தின அறிவோ, அனுபவமோ, கத்துக்கற திறமையோ இல்லை. ஆனா, அவர் முதலாளியோட நண்பர்ங்கறதால, அவர் வச்சதுதான் சட்டமா இருந்தது. அதனால ஏற்பட்ட பிரச்னைகளைப் பத்தி, என்னை மாதிரி சில பேர் முதலாளிகிட்ட பேசினோம். ஆனா, அவர் அதையெல்லாம் காதுல போட்டுக்கல.

"அவர் சீக்கிரமே காலமாயிட்டாரு. அவர் பையனான நம்ம முதலாளியும் சாந்தகுமாரை தன் அப்பாவோட நண்பர், வழிகாட்டின்னு நம்பிக்கிட்டு, அவர் சொல்றபடியே நடந்துக்கறாரு. இதனால, இந்த கம்பெனி எத்தனை காலத்துக்கு, எந்தவிதமான பாதிப்புக்கெல்லாம் ஆளாகப் போகுதோ!"  

"குட்டி குலைச்சு தாய் தலையில வச்ச மாதிரின்னு சொல்லுவாங்க. இங்க, தலைகீழா நடந்திருக்கே!" என்றான் வேலு.

"ஒத்தர் செஞ்ச தவறு அவரோட அடுத்த தலைமுறையையும் பாதிக்குதே!" என்றான் நாதன்.

குறள் 508:
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.

பொருள்:
ஆராய்ந்து பார்க்காமல், ஒருவரைத் துணையாகத் தேர்வு செய்து அமர்த்திக் கொண்டால், அவரால் தனக்கு மட்டுமின்றித் தன் வருங்காலச் சந்ததியினருக்கும் நீங்காத துன்பம் விளையும்.

509. விற்பதா, வாங்குவதா?

"சார்! இந்த கம்பெனி ஷேரை நாம வாங்கி மூணு வருஷம் ஆச்சு. நாம 65 ரூபாய்க்கு வாங்கினோம். இப்ப விலை 52 ரூபாய்க்கு வந்துடுச்சு. விலை இன்னும் கீழே போகுமாம். இந்த ஷேரை இப்பவே வித்துடறதுதான் நல்லதுன்னு எல்லாரும் சொல்றாங்க" என்றான் தொழிலதிபர் ராமநாதனின் அந்தரங்க உதவியாளன் விவேக்.

"எல்லாரும்னா?" என்றார் ராமநாதன்.

"டிவி சானல்கள்ள வர ஆலோசகர்கள் அநேகமா எல்லாருமே!" 

"சரி. நான் யோசிச்சுச் சொல்றேன்."

ரு வாரம் கழித்து, விவேக் ராமநாதனிடம், "சார்! அந்த ஷேர் விக்கறதைப் பத்திப் போன வாரமே சொன்னேன். இப்ப விலை இன்னும் கொஞ்சம் இறங்கிடுச்சு. இன்னிக்கு 48 ரூபாயில ஓபன் ஆகியிருக்கு" என்றான்.

"நல்லவேளை ஞாபகப்படுத்தினீங்க! 45 ரூபாய்க்கு இன்னும் ஆயிரம் ஷேர் வாங்கிடுங்க" என்றார் ராமநாதன்.

"சார். அது ரிஸ்க் ஆயிடும். விலை இன்னும் கீழே போகும்னு சொல்றாங்க."

"யார் சொல்றாங்க? டிவி சானல்ல வர ஆலோசகர்களா?"

"நம்ம ஃபைனான்ஸ் மானேஜர் கூட சொல்றாரு."

ராமநாதன் சிரித்து விட்டு, "நம் கம்பெனி சம்பந்தமான விஷயங்களா இருந்தா, நம்ம ஃபைனான்ஸ் மானேஜரோட ஆலோசனையைக் கேட்டுப்பேன். ஆனா, என்னோட தனிப்பட்ட முதலீடுகளுக்காக, நான் வேற ஒரு ஆலோசகரை வச்சிருக்கேன். அவர் சொல்றபடிதான் என்னால செய்ய முடியும்."

"சொல்லி இருக்கீங்க சார்! ஆனா, பல பேரோட கருத்தும் எதிர்மறையா இருக்கறப்ப, அவர் ஒத்தரோட கருத்துப்படி செயல்படறது சரியா இருக்குமா?"

"விவேக், உங்க கவலை எனக்குப் புரியுது. எல்லாரும் ஒரு மாதிரி கருத்து சொல்றப்ப, என்னோட ஆலோசகர் வேற விதமா சொன்னா, அது சரியா இருக்குமாங்கற உங்க சந்தேகம் இயல்பானதுதான். உங்களுக்கு என்னைப் பத்தித் தெரியும். நான் யாரையும் செலக்ட் பண்றதுக்கு முன்னால, அவங்களைப் பத்தி நல்லா ஸ்டடி பண்ணுவேன். உங்களைக் கூட அப்படித்தானே செலக்ட் பண்ணினேன்? 

"முதலீடு ஆலோசனைங்கறது ஒரு பெரிய கலை. அது எல்லாருக்கும் கைவராது. நிறைய ஆலோசகர்கள் மார்க்கெட் நிலவரங்களுக்கு ஏத்தபடிதான் தங்களோட ஆலோசனைகளைச் சொல்வாங்க. அப்படிப்பட்டவங்களோட ஆலோசனை பல சமயங்கள்ள தப்பாப் போயிடும்.

"ஆனா, என்னோட ஆலோசகர் உணர்ச்சி வசப்படாம, மார்க்கெட் நிலவரங்களைப் பார்த்து பயந்து தன் கருத்தை மாத்திக்காம, கம்பெனியோட செயல்பாடுகள், பொருளாதரம், மார்க்கெட் இவற்றோட நீண்ட காலப்போக்குகள் இதையெல்லாம் நல்லா ஆராய்ஞ்சுதான் ஆலோசனை சொல்லுவாரு.

"அவரோட அணுகுமுறை, அவரோட டிராக் ரிகார்ட் எல்லாத்தையும் நல்லா ஆராய்ஞ்சு பாத்துட்டுத்தான், நான் அவரைத் தேர்ந்தெடுத்தேன். கடந்த காலத்தில கூட, சில சமயங்கள்ள, அவர் ஆலோசனை மற்றவங்க சொல்றதுக்கு முரணா இருந்திருக்கு. ஆனா, அப்பல்லாம் அவர் சொன்னதுதான் சரியா இருந்திருக்கு. 

"ஒரு ஆலோசகரை நல்லா ஆராய்ஞ்சு பார்த்துத் தேர்ந்தெடுத்தப்பறம், அவர் ஆலோசனைப்படி செயல்படறதுதான் முறை. ஒருவேளை, இந்த முறை அவரோட ஆலோசனை தப்பாக் கூடப் போகலாம். அது எல்லாருக்கும் நடக்கறதுதான். அதனால, அவரோட ஆலோசனைப்படிதான் நான் செயல்படப் போறேன். நீங்க நான் சொன்னபடி, விலை 45 ரூபாய்க்கு வந்ததும், ஆயிரம் ஷேர் வாங்கிடுங்க" என்றார் ராமநாதன்.

குறள் 509
தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்..

பொருள்:
யாரையும் ஆராயாமல் தெளியக் கூடாது, நன்றாக ஆராய்ந்த பின்னர், அவரிடம் தெளிவாகக் கொள்ளத் தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும்.

510. புதிய நிர்வாகி

அந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து, நீண்ட காலம் அந்த நிறுவனத்தின் வட மாநில அலுவலகங்களிலேயே பணியாற்றி வந்த தங்கப்பன், சென்னை மண்டலத்தின் பொது மேலாளராக இருந்த நம்பி ஓய்வு பெற்றதால், பதவி உயர்வு அளிக்கப்பட்டு, சென்னை மண்டலத்தின் பொது மேலாளராக நியமிக்கப்பட்டார்.

ஓய்வு பெறும் பொது மேலாளர் நம்பி, தங்கப்பனுக்கு அலுவலக ஊழியர்களை அறிமுகம் செய்து வைத்தார். 

"இவர் என் பர்சனல் செகரெட்டரி ரமேஷ். பத்து வருஷமா இந்த நிறுவனத்தில வேலை செய்யறாரு. எனக்கு வலது கையா இருந்தாரு. என் வேலையை அவரே முழுமையாப் பாக்கற அளவுக்குத் திறமையானவர். அதை விட ரொம்ப முக்கியம். ரொம்ப நம்பிக்கையானவர். இவர் உங்களுக்கும் உதவியா இருப்பாருன்னு நம்பறேன்" என்றார் நம்பி.

ரமேஷின் வணக்கத்தை ஏற்று, அவருடன் கைகுலுக்கிய தங்கப்பன், 'ஒத்தரை அவர் முகத்துக்கு நேராகவே இந்த அளவுக்கா புகழறது? அவருக்குத் தலை கனம் வந்துடாதா?' என்று நினைத்துக் கொண்டார்.

"நீங்க நார்த்லேயே இருந்துட்டீங்க. அங்கே சூழ்நிலை வேற மாதிரி இருந்திருக்கும். மார்க்கெட், வாடிக்கையாளர்கள், அலுவலக சூழ்நிலை, ஒர்க் கல்சர் எல்லாத்திலேயுமே அங்கே இருக்கறதுக்கும். இங்கே இருக்கறதுக்கும் நிறைய மாறுபடும்" என்றார் நம்பி.

"நானும் தமிழ்நாட்டில பிறந்தவன்தான்!" என்றார் தங்கப்பன்.

"உங்களுக்குத் தமிழ்நாட்டைப் பத்தித் தெரியாதுங்கற அர்த்தத்தில நான் சொல்லல. இந்த மாறுபாடுகளுக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்க, உங்களுக்குக் கொஞ்ச காலம் ஆகும். அதுவரையிலும், ரமேஷ் மாதிரியானவர்களோட உதவி உங்களுக்குப் பயனுள்ளதா இருக்கும்" என்றார் நம்பி. 

"புரியுது" என்றார் நம்பி. ஆனால், இந்த ரமேஷை அதிகம் நம்பியிருக்கக் கூடாது என்ற எண்ணம் அந்தக் கணத்திலேயே அவர் மனதில் தோன்றி விட்டது.

"வாங்க ரமேஷ்!" என்று தன் வீட்டுக்கு வந்த ரமேஷை வரவேற்ற நம்பி, "கம்பெனி எப்படிப் போயிக்கிட்டிருக்கு?" என்றார்.

"அது விஷயமாத்தான் சார் உங்களைப் பாத்துப் பேச வந்தேன். புது ஜி எம் வந்ததுக்கப்புறம்,  இந்த ஆறு மாசத்தில, கம்பெனியில நிறைய பிரச்னைகள். ஆஃபீசுக்குள்ளேயும் பிரச்னைகள், வாடிக்கையாளர்கள்கிட்டேயும் பிரச்னைகள். ஒண்ணு ரெண்டு முக்கியமான வாடிக்கையாளர்கள் நம்மை விட்டுப் போயிடுவாங்க போலருக்கு!"

"ஏன் அப்படி? தங்கப்பன் அனுபவம் உள்ளவர். அவர் இந்த ஆஃபீசுக்குப் புதுசுன்னாலும், உதவி செய்ய நீங்க இருக்கீங்க. அப்புறம் என்ன பிரச்னை?"

"இல்லை சார். பொதுவா, நான் சொல்ற எதையும் அவர் ஏத்துக்கறதில்ல. பல சமயங்களிலே, என்னைக் கேக்கறதும் இல்ல. அது அவர் விருப்பம். ஆனா நம்ம ஆஃபீஸ்ல விநாயகம்னு ஒத்தர் இருக்காரே..."

"ஆமாம், அக்கவுன்ட்ஸ் அசிஸ்டன்ட். அதிகப் பிரசிங்கி. அவனுக்கு எதுவும் தெரியாது. ஆனா, எல்லாத்திலேயும் தலையிட்டுக்கிட்டிருப்பான். நான் கூட அவனை ரெண்டு மூணு தடவை கண்டிச்சிருக்கேன். அவனுக்கு என்ன?"

"அவர்தான் ஜி எம்முக்கு முக்கிய ஆலோசகர்! பல விஷயங்கள்ள, அவரைக் கேட்டுக்கிட்டுத்தான் ஜி எம் முடிவெடுக்கிறாரு. அதனாலதான், பல விஷயங்கள் தப்பாப் போய்ப் பிரச்னைகள் வருது. ஆனா, இது ஜி எம்முக்குப் புரியல" என்றான் ரமேஷ்.

"ஒரு பொறுப்பான பதவியில இருக்கறவர், விஷயம் தெரிஞ்சவங்க யாரு, பொறுப்புள்ளவங்க யாரு, நல்லவங்க யாரு, யார் பேச்சைக் கேக்கலாம், யார் பேச்சைக் கேக்கக் கூடாதுங்கறதையெல்லாம் ஆராய்ஞ்சு செயல்படணும். அப்படிச் செய்யாம, அரைகுறைகள் பேச்சைக் கேட்டுக்கிட்டுச் செயல்பட்டா, அதனால அவருக்கும் கேடு வரும், நிறுவனத்துக்கும் கேடு வரும். நாம என்ன செய்ய முடியும்? அவரா இதை உணர்ந்துக்கிட்டு, சரியா செயல்பட்டாத்தான் உண்டு!" என்றார் நம்பி. 

குறள் 510:
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.

பொருள்:
ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிவடைந்த ஒருவனிடம் ஐயப்படுதலும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.         
                 அதிகாரம் 52 -  தெரிந்து வினையாடல்                            

அறத்துப்பால்                                                                              காமத்துப்பால்     

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...