Monday, October 30, 2023

1012. மனிதன் என்பவன்...

மணி அந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதம் ஆகி இருந்தது.

இந்த ஒரு மாதத்தில் அவன் அதிகம் நெருக்கமாக இருந்தது காஷியர் நடராஜனிடம்தான். அவர்தான் அவனிடம் இயல்பாகவும் நகைச்சுவையாகவும் பேசிக் கொண்டிருப்பார்.

அவர் நகைச்சுவையாகப் பேசி வந்ததால், ஒருமுறை மணி அவரிடம், "உங்களுக்கென்ன சார்? செலவுக்குப் பணம் வேணும்னா கேஷ்லேந்து எடுத்துக்கலாம்!" என்றான் விளையாட்டாக.

நடராஜன் உடனே பதறிப் போய், "விளையாட்டுக்குக் கூட அப்படிச் சொல்லாதே அப்பா! நீ வேலையில சேரறதுக்குக் கொஞ்ச நாள் முன்னாலதான் கேஷியரா இருந்தவர் அப்பப்ப தன் கைச் செலவுக்காக கேஷ்லேந்து பணம் எடுத்து மாட்டிக்கிட்டாரு. அவரு இடத்துக்குத்தான் நான் வந்திருக்கேன்! அதனால இதைப் பத்தி ஜோக் அடிச்சாக் கூடத் தப்பாப் போயிடும்!" என்றார் மெல்லிய குரலில்.

"சாரி சார்! எனக்குத் தெரியாது. பணம் கையாடல் பண்ணின கேஷியரை வேலையை விட்டு அனுப்பிட்ங்களா சார்?" 

"வேலையை விட்டு அனுப்பறதாவது! அதோ அந்த டேபிள் முன்னால நின்னு சிரிச்சுப் பேசிக்கிட்டிருக்கானே அவன்தான் அது!" என்றார் நடராஜன் அந்த நபரைத் தன் கண்ணால் காட்டி.

"மதுசூதனன் சாரா? அவரா அப்படிப் பண்ணினாரு? நம்பவே முடியலியே! அவர் மேல நடவடிக்கை எதுவும் எடுக்கலியா?"

"நம்ம முதலாளி ரொம்ப இரக்க குணம் உள்ளவரு. மதுசூதனன் அவர் கால்ல விழுந்து கெஞ்சினான். அவன் மொத்தமாக் கையா பணம் பத்தாயிரம் ரூபாதான் இருக்கும். 'அதை மாசா மாசம் சம்பளத்திலேந்து பிடிச்சுக்கங்க, வேலையை விட்டு அனுப்பிடாதீங்க'ன்னு கெஞ்சினான். அதனால முதலாளி அவனை கேஷியர் வேலையிலேந்து வேற சீட்டுக்கு மாத்திட்டு என்னை கேஷியரா போட்டிருக்காரு."

"ஆனா மதுசூதனன் சார் எல்லார்கிட்டேயும் சிரிச்சுப் பேசிக்கிட்டு ஜாலியா இருக்காரே! எங்கிட்ட கூட நல்லா பேசுவாரு. அவரு எப்படி இப்படி இருக்கானு எனக்கு ஆச்சரியமா இருக்கு!"

"கொஞ்சம் கூட அவமான உணர்ச்சி இல்லாம எப்படி சாதாரணமா இருக்கான்னு கேக்கறே, அப்படித்தானே? எல்லா மனுஷங்களுக்கும் ஒரே மாதிரி உடல் அமைப்புதான் இருக்கு. உடை, உணவுப் பழக்கம் எல்லாம் கூட ஒண்ணா இருக்கலாம். ஆனா தப்புப் பண்ணினா அதுக்காக வெட்கப்படறதுங்கற குணம் நல்ல மனுஷங்ககிட்டதான் இருக்கும்!" என்றார் நடராஜன்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 102
நாணுடைமை

குறள் 1012:
ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு.

பொருள்: 
உணவு, உடை இன்னும் பிற சிறப்புகள், எல்லா மனிதர்க்கும் ஒன்றே; நல்ல மனிதர்க்குச் சிறப்பாவது நாண் உடைமையே.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Sunday, October 29, 2023

1011. நிமிர்ந்து நில்!

வெங்கடாசலம் கோபமாகக் கத்திக் கொண்டிருக்க அவர் முன்னால் அவர் மகன் ராமு தலை குனிந்து நின்று கொண்டிருந்தான்.

அம்மாவின் புடவைத் தலைப்பைப் பிடித்தபடி சற்று சுவாரசியத்துடனும், சற்று பயத்துடனும் தன் அப்பா தன் அண்ணனைத் திட்டுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பத்து வயதுச் சிறுவன் முரளி, "எதுக்கும்மா அப்பா அண்ணனைத் திட்டறாரு?" என்றான் தன் அம்மாவிடம், சற்றே ரகசியமான குரலில்,

"அப்பா பீரோவில வச்சிருந்த பணத்தை அப்பாவுக்குத் தெரியாம எடுத்துக்கிட்டு உன் அண்ணன் சினிமாவுக்குப் போயிட்டு வந்திருக்கான். அதான் அப்பா அண்ணனைத் திட்டறாரு" என்றாள் அவன் தாய் அமுதா.

"சினிமாவுக்குப் போறது தப்பா அம்மா?"

"சினிமாவுக்குப் போறது தப்பு இல்லை. அப்பா வச்சிருந்த காசை அப்பாவுக்குத் தெரியாம எடுத்ததுதான் தப்பு. அது திருட்டு இல்லையா?"

"அண்ணன் ஏம்மா திருடணும்? அப்பாகிட்ட கேட்டிருக்கலாமே!"

"அப்பாகிட்ட கேட்டா அவரு கொடுக்க மாட்டாருன்னு நினைச்சு அவருக்குத் தெரியாம  எடுத்திருக்கான்."

"அது சரி. அண்ணன் ஏன் தலையைக் குனிஞ்சுக்கிட்டு நிக்கறான்?"

"திருடினது தப்புதானே? தப்பு பண்ணிட்டமேங்கற அவமானத்திலதான் தலைகுனிஞ்சு நிக்கறான்!" என்றாள் அமுதா.

சில விநாடிகள் கழித்து, முரளி ஏதோ நினைவு வந்தவனாக, "ஏம்மா, அன்னிக்கு அக்காவைப் பொண் பார்க்க வரப்ப அக்கா கூடத் தலையைக் குனிஞ்சுக்கிட்டு இருந்தாளே, அது ஏன்?" என்றான்.

அந்தச் சூழலிலும் அமுதாவுக்குச் சிரிப்பு வந்தது.

"புதுசா யாராவது ஆம்பளையைப் பார்த் ஒரு பொண்ணு வெட்கப்பட்டுத் தலையைக் குனிஞ்சுப்பா. அது பொம்பளைப் பிள்ளைங்களோட குணம். தப்பு செஞ்சுட்டு அதுக்காக வெட்கப்படறது வேற.  அது அவமானத்தால வர வெட்கம். நீ ஆம்பளையாப் பொறந்துட்ட. பொம்பளைங்கற மாதிரி வெட்கப்பட  அவசியம் உனக்கு இல்லை. தப்புப் பண்ணினாதான் நீ வெட்கப்படணும். எப்பவுமே எந்தத் தப்பும் பண்ணாம நடந்துக்க! நீ எப்பவுமே தலைகுனிய வேண்டி இருக்காது" என்றாள் அமுதா.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 102
நாணுடைமை

குறள் 1011:
கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.

பொருள்: 
இழிவான செயல்களுக்கு வெட்கப்படுவதே அனைவர்க்கும் பொதுவான நாணம்; அழகிய நெற்றி கொண்ட பெண்களின் இயல்பான வெட்கம் வேறு வகை ஆகும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Friday, October 27, 2023

1010. கார்மேகம் அன்று, வெண்மேகம் இன்று!

"வெண்மேகம் அன்று 
கார்மேகம் இன்று"

வானொலியில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலைக் கேட்ட சண்முகம், "வெண்மேகம் கார்மேகம் ஆகறதுன்னா என்ன அர்த்தம்?" என்றான்.

"ஆவியான நீர் வெண்மேகத்தில சேர்ந்தா அது கார்மேகம் ஆகும். அதுதான் மழை தரும் மேகம். தெரியாத மாதிரி கேக்கற! நீ தமிழ் படிச்சவன்தானே?" என்றான் அவன் நண்பன் சசி.

"தெரியும். ஆனா, கார்மேகம் வெண்மேகமா ஆனா எவ்வளவு கொடுமையா இருக்கும்னு நினைச்சுப் பார்த்தேன்!"

"என்னடா சொல்ற?"

"எங்க ஊர்ல தேவராஜன்னு ஒத்தர் இருந்தாரு - இப்பவும் இருக்காரு. எங்க ஊர்ல அவர் உதவி செய்யாத மனுஷங்களே இல்லைன்னு சொல்லலாம். யாருக்கு என்ன கஷ்டம்னாலும் அவர்கிட்டதான் போவாங்க. பசியோட இருக்கற ஒருத்தர் அவர் வீட்டுக்குப் போனா சாப்பாடு கிடைக்கும்.  ஒரு குடும்பம் கஷ்டப்பட்டா அவங்களுக்கு அரிசி, பணம்னு கொடுப்பாரு. படிப்புக்குப் பணம் கொடுத்து உதவறது, உடம்பு சரியில்லாதவங்களை மருத்துவமனைக்கு எடுத்துக்கிட்டுப் போகத் தன்னோட காரைக் கொடுத்து உதவறது, மருத்துவச் செலவுக்குப் பணம் கொடுத்து உதவறதுன்னு எல்லாருக்கும் எல்லாவிதத்திலேயும் உதவி செய்வாரு. அவரு ஒரு மழை மேகம் மாதிரிதான்" என்றான் சண்முகம்.

"சரி. இப்ப எப்படி இருக்காரு?"

"சமீபத்தில அவரைப் பார்த்தேன். சாலையில நடந்து போய்க்கிடிருந்தாரு. பார்த்துப் பேசினேன். கோர்ட் தீர்ப்பால அவரோட சொத்தெல்லாம் அவரோட சித்தப்பா பையன்களுக்குப் போயிடுச்சாம். ஹைகோர்ட்ல அப்பீல் பண்ணி இருக்காரு. அதுக்காக சென்னைக்கு வந்திருக்காரு. யாரோ சொந்தக்காரங்க வீட்டில தங்கி இருக்காரு. அவர் எங்கிட்ட வெளிப்படையா சொல்லாட்டாக் கூட, சொத்தும் இல்லாம, வருமானமும் இல்லாம கஷ்டப்படறாருன்னு தெரிஞ்சது. ஹைகோர்ட்ல நடக்கற வழக்குக்கு வேற பணம் செலவழிக்கணும். ஊர்ல இருந்தவங்கள்ளாம் மருத்துவமனைக்குப் போகத் தன்னோட காரைக் கொடுத்து உதவினவரு உடம்பு சரியில்லைன்னு அரசாங்க ஆஸ்பத்திரிக்கு நடந்து போய்க்கிட்டிருந்தாரு! நான் ஆட்டோல கொண்டு விட்டேன். அவரோட நிலையைப் பார்த்தா கார்மேகம் வெண்மேகமா ஆயிட்ட மாதிரிதான் இருந்தது!"

"கவலைப்படாதே! அவரு வழக்கில ஜெயிச்சு சொத்தெல்லாம் அவருக்குத் திரும்பக் கிடைச்சாப் பழையபடி ஆயிடுவாரு!" என்றான் சசி.

"அவருக்கும் அந்த நம்பிக்கை இருக்கு. ஹைகோர்ட்ல அவருக்கு சாதகமாத்தான் தீர்ப்பு வரும்னு வக்கீல் உறுதியாச் சொல்றாராம், ஆனாலும், எல்லாருக்கும் உதவி செஞ்சுக்கிட்டு நல்ல பேரோட இருந்த ஒரு சிறந்த மனுஷர் கஷ்டப்படறது தற்காலிகமானதா இருந்தாலும் அது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு" என்றான் சண்முகம். 

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 101
நன்றியில் செல்வம் 
(நன்மை இல்லாத/ பயன்படாத செல்வம்)

குறள் 1010:
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து.

பொருள்: 
பிறர்க்குக் கொடுத்துப் புகழ் மிக்கவர் ஆகிய செல்வர்கள் சிறிது காலம் வறுமைப்பட நேர்ந்தால், அது மழை தரும் மேகமே வறுமைப்பட்டது போலாம்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Tuesday, October 24, 2023

1009. தினகரனின் சொத்துக்கள்

தினகரன் வறுமை நிலையிலிருந்து முன்னேறி வந்து வாழ்க்கையில் உயர்ந்தவர்.

மிகச் சிறிய முதலீட்டில் பழைய பொருட்களை வாங்கி விற்பதில் தொடங்கிய அவருடைய தொழில் முயற்சி மேலும் மேலும் வெற்றி பெற்று ஒரு பெரிய வியாபாரியாக வளர்ந்து விட்டார்.

வியாபாரம் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருந்த நிலையில்தான் அவருடைய திடீர் மரணம் நிகழ்ந்தது.

 தினகரன் மறைந்து விட்டார் என்ற செய்தி அவர் குடும்பத்தினரையும், அவர் நிறுவனத்தின் ஊழியர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

"நாப்பத்தஞ்சு வயசுதான் ஆகுது. திடீர்னு போயிட்டாரு. மாரடைப்புன்னு சொல்றாங்க" என்றார் அவருடைய நிறுவனத்தின் மேலாளர் சாம்பசிவம்.

"கம்பெனி தொடர்ந்து நடக்குமா சார்?  அவர் பையனும் பொண்ணும் இன்னும் படிப்பையே முடிக்கலியே!" என்றான் செல்வராஜ் என்ற ஊழியன்.

"தெரியல. அவங்க கம்பெனியைத் தொடர்ந்து நடத்தறது சந்தேகம்தான். வேற வேலைக்கு இப்பவே முயற்சி பண்ணுங்க. இங்கே சம்பளம் ரொம்ப கம்மியாத்தானே கொடுக்கறாங்க? நான் கூட வேற வேலைக்கு முயற்சி செய்யப் போறேன்!" என்றார் சாம்பசிவம்.

தினகரன் மறைந்து சில நாட்களுக்குப் பிறகு அவருடைய ஆடிட்டர் கண்ணப்பன் சினகரனின் வீட்டுக்கு வந்து தினகரனின் மனைவி கலாவதியைச் சந்தித்துப் பேசினார்.

"உங்க கணவரைப் பத்தின சில உண்மைகளை உங்ககிட்ட சொல்லணும். அவர் என்னோட நண்பர்தான். ஆனா என் ஆலோசனைகளைக் கேக்காம அவர் சில காரியங்களை செஞ்சாரு. அதனால இப்ப உங்களுக்குத்தான் பிரச்னை!  " என்று ஆரம்பித்தார் கண்ணப்பன்.

"என்ன செஞ்சாரு? என்ன பிரச்னை?" என்றாள் கலாவதி.

"தினகரன் கடுமையான உழைப்பாளி. ராத்திரி பகல்னு பாக்காம உழைச்சு வியாபாரத்தைப் பெருக்கினாரு."

"அது எனக்குத் தெரியுமே! குடும்பத்தை எங்கே அவர் கவனிச்சாரு? குழந்தைகள்கிட்ட அன்பா ரெண்டு வார்த்தை கூடப் பேசினதில்ல. இவ்வளவு கஷ்டப்பட்டு உழைச்சதுக்கு நிறைய சொத்து சேர்த்திருக்கணுமே! அப்படி ஒண்ணும் தெரியலியே!" என்றாள் கலாவதி விரக்தியுடன்.

"அதைத்தான் சொல்ல வந்தேன். அவரு நிறைய சம்பாதிச்சாரு. ஆனா வருமான வரி கட்டணுமேங்கறதுக்காக பாதி பிசினசை பிளாக்கில பண்ணினாரு. பணத்தைக் கையில வச்சுக்காம சில பேருக்கு வட்டிக்கு விட்டாரு. யாருக்கு எவ்வளவு கடன் கொடுத்திருக்காருன்னு அவருக்குத்தான் தெரியும். அவர் இப்ப போனப்புறம் கடன் வாங்கினவங்க பணத்தைத் திருப்பிக் கொடுப்பாங்களா?"

"அடப்பாவி! இப்படியா செஞ்சு வச்சிருக்காரு? எங்கிட்டயாவது சொல்லி இருக்கலாம், இல்ல?"

"சொல்லி இருந்தா மட்டும்? கடன் வாங்கினவங்ககிட்ட நீங்க போய்க் கேட்டா அவங்க கொடுத்துடுவாங்களா? அவரு புரோநோட்டு கூட எழுதி வாங்கலியே! அதோட இல்ல. மானேஜர் சாம்பசிவம் பேரில ஒரு கம்பெனி ஆரம்பிச்சு பாதி பிசினசை அந்த கம்பெனியில செஞ்சாரு. இப்ப சாம்பசிவத்துக்கிட்ட கேட்டா, அவன் 'அது என்னோட பிசினஸ்தான். தினகரன் சாரோட அனுமதியோட நான்தான் அந்த பிசினஸை நடத்திக்கிட்டு வரேன்'னு சொல்றான்!"

"இப்படியா ஏமாத்துவான்? கம்பெனியில வேலை செஞ்சவங்களுக்கு உண்மை தெரியும் இல்ல? அவங்க சொல்ல மாட்டாங்களா?"

"தப்பா நினைச்சுக்காதீங்கம்மா. திவாகர் சார் தன்கிட்ட வேலை செய்யறவங்களுக்கெல்லாம் ரொம்ப குறைச்சலாத்தான் சம்பளம் கொடுத்தாரு. 'நியாயமான சம்பளம் கொடுங்க சார், அப்பதான் வேலை செய்யறவங்க விசுவாசமா இருப்பாங்க' ன்னு நான் அவர்கிட்ட சொன்னேன். ஆனா அவர் கேக்கல. அதனால கம்பெனி  யாரும் உண்மையைச் சொல்ல மாட்டாங்க. அவங்களைத் தன்னோட கம்பெனியில வேலைக்கு வச்சுக்கறதாகவும், சம்பளம் அதிகமாக் கொடுக்கறதாகவும் சாம்பசிவம் அவங்ககிட்ட சொல்லி இருக்கான். அதனால அவங்க யாரும் சம்பசிவத்தைக் காட்டிக் கொடுக்க மாட்டாங்க. அப்படியே யாராவது உண்மையைச் சொன்னாலும், ரிகார்டுகள்படி அந்த கம்பெனி சாம்பசிவம் பேரில இருக்கறதால நம்மால எதுவும் செய்ய முடியாது. வருமான வரி கட்டாம தப்பிக்கறதுக்காக தினகரன் செஞ்ச காரியம் இப்ப உங்களுக்கே இழப்பை ஏற்படுத்தி இருக்கு" என்றார் கண்ணப்பன்.

'இவ்வளவு சொல்றீங்களே, உங்க பேரிலேயே அவரு ஏதாவது பினாமி சொத்து வாங்கி இருக்கலாம், அல்லது பணமாவது கொடுத்து ருக்கலாம். அப்படி இருந்தா நீங்க அதை எங்கிட்ட சொல்லவா போறீங்க?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட கலாவதி, "சரி சார். எங்க விதி அப்படி! எங்களுக்குன்னு என்ன விட்டு வச்சிருக்காரோ அதை மட்டும் வச்சுக்கிட்டு நாங்க திருப்திப்பட வேண்டியதுதான்" என்றாள் விரக்தியுடன்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 101
நன்றியில் செல்வம் 
(நன்மை இல்லாத/ பயன்படாத செல்வம்)

குறள் 1009:
அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.

பொருள்: 
அன்பெனும் பண்பை அறவே நீக்கி, தன்னையும் வருத்திக் கொண்டு, அறவழிக்குப் புறம்பாகச் சேர்த்துக் குவித்திடும் செல்வத்தை மற்றவர்கள் அனுபவிப்பார்கள்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Sunday, October 22, 2023

1008. ஊரை வலம் வந்தபோது...

அந்த ஊர்ப் பள்ளிக்கூடத்தை ஆய்வு செய்வதற்காக வந்திருந்தார் பள்ளிகளுக்கான ஆய்வாளர் சோமசுந்தரம்

ஆய்வு விரைவிலேயே முடிந்து விட்டது. ஊரிலிருந்து திரும்பிப் போக மாலையில்தான் பஸ்.

"என் வீட்டுக்கு வாங்க சார்! நீங்க அங்கேயே ஓய்வு எடுத்துக்கலாம்" என்று அழைத்தார் தலைமை ஆசிரியர் முகுந்தன்.

"வேண்டாம் சார்! வெய்யில் இல்லை. கிளைமேட் நல்லா இருக்கு. கொஞ்ச நேரம் ஊருக்குள்ள நடந்துட்டு வரேன்" என்று கிளம்பினார் சோமசுந்தரம்.

"நானும் உங்களோட வரேன்!" என்றார் முகுந்தன்.

ஊரில் இருந்த இரண்டு சிறிய கோவில்கள், பஞ்சாயத்து போர்டு அலுவலகம், பாசனக் கால்வாய் இவற்றையெல்லாம் பார்த்த பிறகு ஒரு தெருவுக்குள் நுழைந்தனர்.

தெருவில் நுழைந்ததுமே அந்தப் பெரிய வீடு சோமசுந்தரத்தின் கவனத்தைக் கவர்ந்தது.

"இந்த வீட்டில இருக்கறவர்தான் இந்த ஊரிலேயே பெரிய பணக்காரரா இருப்பாரோ?" என்றார் சோமசுந்தரம்.

"ஆமாம். அவர் பேரு விநாயகம். வீட்டுத் திண்ணையில உக்காந்திருக்காரு பாருங்க அவர்தான்" என்றார் முகுந்தன்.

அந்த வீட்டுக்கு அருகில் வந்ததும், தெருவில் நின்றபடியே விநாயகத்துக்கு வணக்கம் தெரிவித்த முகுந்தன், "ஸ்கூல் இன்ஸ்பெக்டர்" என்று சோமசுந்தரத்தை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

சோமசுந்தரம் விநாயகத்துக்கு வணக்கம் தெரிவித்தார். விநாயகம் பதிலுக்கு வணக்கம் கூடத் தெரிவிக்கவில்லை. தலையை மட்டும் ஆட்டினார்.

அவர் வீட்டைத் தாண்டி சற்றுத் தொலைவு வந்ததும், "ரொம்ப அமைதியானவரா இருப்பாரு போல இருக்கு" என்றார் சோமசுந்தரம்.

"ஊர்ல யாரும் அவர்கிட்ட பேச்சு வச்சுக்க மாட்டாங்க. அமைதியாத்தானே இருக்கணும்?"

"ஏன் அப்படி? ஊர்க்காரங்களோட சண்டையா?"

"அதெல்லாம் எதுவுமில்லை. அவரு யாருக்கும் ஒரு சின்ன உதவி கூடச் செய்ய மாட்டாரு. ஊரோட பொதுக் காரியங்களுக்கும் உதவி செய்ய மாட்டாரு. அதனால ஊர்ல யாரும் அவர்கிட்ட அதிகமா பேச்சு வச்சுக்கறதில்லை."

"ஊர்லேயே பெரிய பணக்காரரா இருந்துக்கிட்டு யாருக்கும் உதவாம இருந்தா எப்படி?"

"அவர் அப்படித்தான். இப்ப கூட பாருங்க. நீங்க வெளியூர்லேந்து வந்திருக்கீங்க. உங்களை அறிமுகப்படுத்தி வச்சேன். வேற ஒத்தரா இருந்தா ஒரு மரியாதைக்காகவாவது வீட்டுக்குள்ள வாங்கன்னு கூப்பிட்டிருப்பாங்க. இவரு உங்களுக்கு பதில் வணக்கம் கூடச் சொல்லலியே!"

"வீட்டுக்குள்ள கூப்பிட்டா தண்ணியாவது கொடுக்க வேண்டி இருக்குமேன்னு யோசிச்சிருப்பாரு!" என்றார் சோமசுந்தரம்  சிரித்தபடி.

"சரியாச் சொன்னீங்க!" என்றார் முகுந்தன்.

பள்ளிக்குத் திரும்பும்போது வழியில் ஒரு பெரிய மரம் இருந்தது. 

"இது என்ன மரம்? பெரிசா இருக்கே! காய்ச்சிருக்கே! என்ன காய் இது?" என்றார் சோமசுந்தரம்.

"இது ஒரு நச்சு மரம் சார்! இது காய்ச்சு என்ன பயன்? இதால ஊர்ல யாருக்கும் எந்தப் பயனும் இல்லை!" என்றார் முகுந்தன்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 101
நன்றியில் செல்வம் 
(நன்மை இல்லாத/ பயன்படாத செல்வம்)

குறள் 1008:
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.

பொருள்: 
பிறர்க்கு உதவாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவனுடைய செல்வம், ஊர் நடுவில் நச்சு மரம் பழுத்தாற் போன்றது.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Saturday, October 21, 2023

1007. பரமசிவத்தின் பாலிசி!

"சார் குளிச்சுக்கிட்டிருக்காரு. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க" என்றான் வேலைக்காரன்.

திவாகரும் அவனுடன் வந்த சோமு, கண்ணன் ஆகியோரும் அங்கே இருந்த சோஃபாவில் அமர்ந்தனர்.

புழுக்கமாக இருந்தது. வேலைக்காரன் மின்விசிறியைப் போடவில்லை. சுவிட்ச் போர்டு அருகில்தான் இருந்தது. தாங்களே போய் ஃபேன் சுவிட்ச்சை ஆன் செய்தால் நன்றாக இருக்காது என்பதால் வேலைக்காரன் மீண்டும் வந்தால் அவனிடம் சொல்லி ஃபேன் போடச் சொல்லலாம் என்று நினைத்து மூவரும் காத்திருந்தனர்.

பத்து நிமிடங்கள் ஆகி விட்டன, வேலைக்காரன் திரும்ப வரவில்லை.  அவர்கள் சந்திக்க வேண்டிய விட்டலும் வரவில்லை. இன்னும் குளித்து முடிக்கவில்லை போலிருக்கிறது.

அப்போது உள்ளிருந்து ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி அங்கே வந்தாள்.

"ஒரே புழுக்கமா இருக்கே! ஃபேன் வேண்டாமா உங்களுக்கு?" என்றாள் சோஃபாவில் உட்கார்ந்திருந்தவர்களைப் பார்த்து.

எங்கே அவளும் ஃபேன் போடாமல் உள்ளே போய் விடப் போகிறாளோ என்று பயந்து, "ஃபேன் சுவிட்ச் எங்கே இருக்குன்னு தெரியல. அதான்..." என்றான் கண்ணன் அவசரமாக.

"உங்களுக்குப் பக்கத்திலேயேதானே இருக்கு! உங்க கண்ணுக்குத் தெரியலையா?" என்று சிரித்துக் கொண்டே கூறிய அவள் ஃபேன் சுவிட்ச்சை ஆன் செய்தாள்.

"அண்ணனைப் பார்க்க வந்தீங்களா?" என்றாள் தொடர்ந்து.

"பரமசிவம் சாரைப் பார்க்க வந்தோம்" என்றான் திவாகர், 'உங்கள் அண்ணன் யார் என்பது எங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று மனதில் நினைத்தபடி.

"அண்ணன் இப்பதான் குளிச்சு முடிச்சாரு. அவரு பூஜையெல்லாம் பண்ணிட்டு வெளியில வர முக்கால் மணி நேரம் ஆகுமே! நீங்க வேணும்னா எங்கேயாவது போயிட்டு அப்புறம் வரீங்களா?" என்றாள் அவள்.

"பரவாயில்லை. வெயிட் பண்றோம்" என்றான் சோமு.

"என்ன விஷயமா வந்திருக்கீங்க?"

"நாங்க ஒரு அனாதை ஆசிரமம் நடத்தறோம். அது விஷயமா..." என்று இழுத்தான் திவாகர்.

"நன்கொடையா?" என்றவள் அவர்களைப் பரிதாபமாகப் பார்ப்பது போல் பார்த்து விட்டு உள்ளே சென்றாள்.

"நாம அனாதை ஆசரமம் நடத்தறோம். ஏதோ நாமே அனாதைகள்ங்கற மாதிரி நம்மைப் பார்த்துட்டுப் போறாங்களே!' என்று சோமு முணுமுணுத்தான். திவாகர் வாயில் விரலை வைத்து அவனை அடக்கினான்.

சுமார் ஒரு மணி நேரம் கழித்துத்தான் பரமசிவம் வெளியே வந்தார்.

திவாகர் தாங்கள் வந்த விஷயத்தைச் சொன்னதும், "நான் நன்கொடை எதுவும் கொடுக்கறதில்லை!" என்றார் பரமசிவம்.

"சார்! எங்க ஆசிரமத்தில முந்நூறு குழந்தைங்க இருக்காங்க. உங்களை மாதிரி பெரிய மனுஷங்க உதவினாதான் அவங்களுக்கு சாப்பாடு கிடைக்கும்" என்றான் திவாகர்.

"நன்கொடை எதுவும் கொடுக்கக் கூடாதுங்கறது என்னோட பாலிசி. எனக்கு வேற வேலை இருக்கு, கிளம்பறீங்களா?" என்று எழுந்தார் பரமசிவம்.

வெளியே வந்து சாலையில் நடந்து கொண்டிருந்தபோது, "ஒரு மணி நேரத்துக்கு மேல காத்திருந்தது வீணப் போச்சே! வந்திருக்காங்களே, ஒரு நூறு, இருநூறாவது கொடுக்கலாமேன்னு தோணலியே இந்தப் பெரிய மனுஷனுக்கு!" என்றான் கண்ணன் கோபத்துடன்.

"அவரோட தங்கை முன்னாடியே நமக்குக் கோடி காட்டிட்டாங்க. நம்மைப் பரிதாபமாப் பார்த்தாங்களே! நாமதான் புரிஞ்சுக்கல" என்றான் திவாகர்.

"அவங்களுக்கு நாற்பது வயசுக்கு மேல இருக்குமே, ஏனோ தெரியலை, கல்யாணம் செஞ்சுக்காம அண்ணன் வீட்டிலேயே இருக்காங்க!" என்றான் சோமு.

"அவங்களுக்குக் கல்யாணம் ஆகலேன்னு உனக்கு எப்படித் தெரியும்?" என்றான் திவாகர்.

"இங்கே வரதுக்கு முன்னே பரமசிவத்தைப் பத்தி சில பேர் கிட்ட விசாரிச்சேன். வீட்டில அவரும் அவர் தங்கையும் மட்டும்தான் இருக்கறதா சொன்னாங்க."

"நீ விசாரிச்சப்ப அவர் யாருக்கும் ஒரு பைசா கூடக் கொடுக்க மாட்டாருன்னு சொல்லி இருப்பாங்களே! அதை நீ ஏன் முன்னாடியே எங்ககிட்ட சொல்லல? இங்கே வந்து நம்ம நேரத்தை வீணாக்கி இருக்க வேண்டாம் இல்ல?" என்றான் திவாகர் கோபத்துடன்.

"அவரோட மனைவி, குடும்பம் எல்லாம்..?" என்றான் கண்ணன்.

"அவர் மனைவி அவரோட இருக்கப் பிடிக்காம குழந்தையை அழைச்சுக்கிட்டுத் தனியாப் போயிட்டாங்களாம்!"

"அவரோட தங்கை நல்ல அழகா இருந்தாங்க, இல்ல? ஏன் கல்யாணம் செஞ்சுக்கலையாம்?" என்றான் கண்ணன்.

"இது ரொம்ப முக்கியம்டா நமக்கு!" என்றான் திவாகர்.

"இல்லை. எனக்கு ஒண்ணு தோணிச்சு!" என்றான் கண்ணன்.

"என்ன தோணிச்சு?" என்றான் சோமு.

"அண்ணன் பணத்தை யாருக்கும் கொடுக்காம வீணாக்கிக்கிட்டிருக்காரு. தங்கை கல்யாணம் செஞ்சுக்காம தன்னோட அழகை வீணாக்கிக்கிட்டிருக்காங்க!"

"டேய்! நாம சமூக சேவை செய்யணுங்கறதுக்காகக் கல்யாணம் செஞ்சுக்காம இருக்கோம். இப்படிப்பட்ட பேச்செல்லாம் பேசாதே! இப்ப அடுத்தாப்பல யார்கிட்ட போய் நன்கொடை கேக்கறதுன்னு நாம யோசிக்கணும்" என்றான் திவாகர்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 101
நன்றியில் செல்வம் 
(நன்மை இல்லாத/ பயன்படாத செல்வம்)

குறள் 1007:
அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.

பொருள்: 
பொருள் இல்லாத வறியவர்க்கு ஏதாவது ஒன்றைக் கொடுத்து உதவாதவனின் செல்வம், மிகுந்த அழகு பெற்ற பெண், திருமணமாகாமலே முதுமை அடைந்தது போலாம்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

1006. சிரித்ததற்குக் காரணம்!

அருள்நிதிக்குத் தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் அவர் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.

பல மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து பார்த்தபின் அவருக்கு வைரல் காய்ச்சல் என்று கூறி மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தனர்.

அருள்நிதியின் நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டிருந்த சில ஊழியர்கள் அவரை வந்து பார்த்து விட்டுச் சென்றனர்.

மருத்துவமனையிலிருந்து திரும்பும் வழியில் ஊழியர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டு வந்தனர்.

"சாரைப் பார்க்க மருத்துவமனைக்கு நிறைய பேர் வந்திருப்பாங்கன்னு நினைச்சேன். ஆனா நம்மைத் தவிர வேறு யாருமே வரலியே!" என்றான் பார்த்திபன்.

"வேற நேரத்தில வந்துட்டுப் போயிருப்பாங்க" என்றான் கணேசன்.

"நேத்து நான் வந்திருந்தேனே! நேத்து கூட யாரையும் காணோம். மேடம் மட்டும்தான் இருந்தாங்க" என்றான் செல்வம்.

"ஒருவேளை வைரல் ஃபீவர்ங்கறதால யாரும் வரலியோ என்னவோ?"

"வைரல் ஃபீவர்னா கொரோனா மாதிரி இல்லை. அதனால வைரல் ஃபீவரால் பாதிக்கப்பட்டவங்களை யாரும் வந்து பார்க்கக் கூடாதுன்னு கட்டுப்பாடு எதுவும் இல்லை. அப்படி இருந்திருந்தா நம்மையே அனுமதிச்சிருக்க மாட்டாங்களே!"

"உண்மையைச் சொன்னா, சாருக்கு நண்பர்கள் அதிகம் கிடையாது."

"ஏன் அப்படி?"

"சாரைப் பத்திதான் நமக்குத் தெரியுமே. நன்கொடைன்னு கேட்டு யாராவது வந்தா உள்ளேயே விடாதேன்னு வாட்ச்மேன்கிட்டயே சொல்லி இருக்காரே! வீட்டிலேயும் அப்படித்தான். நண்பர்கள் உறவினர்கள் யாருக்குமே எந்த உதவியும் செய்ய மாட்டாரு. அதோட இல்ல. பணத்தைத் தானும் அனுபவிக்க மாட்டாரு. மேடமே ஏதாவது வாங்கணும்னு ஆசைப்பட்டா அதுக்கு சார்கிட்டப் பணம் கேட்டு வாங்கறது ரொம்ப கஷ்டமாம்!"

"இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?"

"நான்தான் சார் வீட்டுக்கு அடிக்கடி போவேனே. அங்கே பார்த்தது, கேட்டதை எல்லாம் வச்சுத்தான் சொல்றேன்.

"சாருக்கு பிசினஸ்ல நிறையப் பணம் வருதுல்ல?"

"வருதே! நாமதான் பாக்கறமே!"

"தானும் அனுபவிக்காம, மத்தவங்களுக்கும் உதவி செய்யாம அத்தனை பணத்தையும் வச்சுக்கிட்டு என்ன செயறாரு?"

பார்த்திபன் திடீரென்று சிரித்தான்.

"ஏண்டா சிரிக்கற?" என்றான் கணேசன்.

"ஒண்ணுமில்லை. வைரல் ஃபீவர்னா கொரோனா மாதிரி இல்லைன்னு சொன்னே இல்ல? கொரோனா சமயத்தில இருந்த கெடுபிடிகளை நினைச்சேன். சிரிப்பு வந்தது" என்றான் பார்த்திபன்.

'பின்னே, தான் சேர்த்து வைத்த பணத்துக்கே ஒரு வைரஸ் மாதிரி இருந்து கொண்டு பணத்துக்கு அருகில் யாரையும் வர விடாமல் செய்து வைத்திருக்கிறாரே அருள்நிதி என்று நினைத்துப் பார்த்துச் சிரித்ததை சக ஊழியர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியுமா என்ன?''

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 101
நன்றியில் செல்வம் 
(நன்மை இல்லாத/ பயன்படாத செல்வம்)

குறள் 1006:
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்.

பொருள்: 
தானும் நுகராமல் தக்கவர்க்கு ஒன்று கொடுத்து உதவும் இயல்பும் இல்லாமல் வாழ்கின்றவன், தன்னிடமுள்ள பெருஞ் செல்வத்திற்கு ஒரு நோய் ஆவான்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Friday, October 20, 2023

1005. குணாளன் குவித்த செல்வம்

ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த குணாளன் தான் பார்த்துக் கொண்டிருந்த சிறிய வேலையை விட்டு விட்டு சொந்தத் தொழில் ஆரம்பித்தபோது, அவன் விரைவிலேயே ஒரு பெரிய செல்வந்தனாகி விடுவான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

தன்னிடம் பொருள் சேர ஆரம்பித்ததும் குணாளன் செய்த முதல் வேலை தன் சகோதரர்கள் மூவர், சகோதரிகள் இருவர், தன்மனைவியின் சகோதரர்கள் மூன்று பேர் உள்ளிட்ட தன் உறவினர்களிடமிருந்து விலகி நிற்க ஆரம்பித்ததுதான்.

"எங்க வீட்டில நான் ஒரே பொண்ணு. அதுவும் கடைசியாப் பொறந்தவ. என் அண்ணன்கள் மூணு பேரும் என் மேல உயிரா இருக்காங்க. அவங்களை நம்ம வீட்டுக்கு வர விடாம பண்ணிட்டீங்க, என்னையும் அவங்களைப் பார்க்கப் போகக் கூடாதுன்னுட்டீங்க. ஏன் இப்படிப் பண்றீங்க?" என்றாள் அவன் மனைவி தேவயானி.

"நான் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவன். உறவுக்காரங்கன்னு சொல்லிக்கிட்டு வந்து யாரும் நான் சம்பாதிக்கிற பணத்தைப் பிடுங்கிட்டுப் போக நான் விரும்பல" என்றான் குணாளன்.

"யாராவது பணம் கேட்டா, இல்லைன்னு சொல்லுங்க. உறவுக்காரங்களோட சகவாசமே கூடாதுன்னு ஏன் நினைக்கறீங்க?"

"கிட்ட வர விட்டா, அப்புறம் உதவி கேட்டாங்கன்னு முடியாதுன்னு சொல்றது கஷ்டமா இருக்கும். கூடப் பொறந்தவங்க உறவெல்லாம் சின்ன வயசிலதான். கல்யாணத்துக்கப்புறம் ஒவ்வொத்தரும் தனித் தனிக் குடும்பமாப் போயிடறோம் இல்ல? அப்புறம் எதுக்கு அண்ணன் தம்பி, அக்கா தங்கைன்னெல்லாம் உறவாடிக்கிட்டு!" என்றான் குணாளன்.

"நான் அப்பவே சொன்னேன், என் அண்ணன் நாங்க யாரும் அவன் வீட்டுக்கு வரதைக் கூட விரும்பலை, அப்படி இருக்கறவன்கிட்ட போய் உதவி கேட்டா எப்படிச் செய்வான்னு. நீ சொன்னியேன்னுதான் அவனைப் போய்ப் பார்த்தேன். மூஞ்சியில அடிச்ச மாதிரி முடியாதுன்னு சொல்லிட்டான்!" என்றான் குணாளனின் தம்பி தனசேகரன், தன் மனைவி லட்சுமியிடம்.

"நம்ம பையனுக்கு நல்ல காலேஜில சீட் கிடைச்சிருக்கு. ஆனா ஃபீஸ் கட்ட நம்மகிட்ட பணம் இல்லை. ஒரு நல்ல காரியத்துக்காகப் பணம் கேட்டா கொடுப்பார்னுதான் உங்களைக் கேட்கச் சொன்னேன். அதுவும் கடனாத்தானே கேட்டோம்?" என்றாள் லட்சுமி.

"அவன் குணம் தெரிஞ்சும் உன் பேச்சைக் கேட்டு அவனைப் போய்ப் பார்த்தது என் தப்புதான். நான் போனப்ப அவன் வீட்டில இல்லை. கொஞ்ச நேரம் கழிச்சுத்தான் வந்தான். அதனால அண்ணி காப்பியாவது கொடுத்தாங்க. நான் போன நேரத்தில குணாளன் இருந்திருந்தான்னா, காப்பி கூடக் கிடைச்சிருக்காது! என்ன மனுஷனோ தெரியலை!"

"உங்க அண்ணி எப்படி இருக்காங்க?"

"இருக்காங்க. பாவம், அவங்களோட அண்ணன்களையும்தான் குணாளன் அண்ட விடறதில்லையே! அதோட இல்லை. அவன்கிட்ட இவ்வளவு பணம் இருந்தும் அவனுக்கு அதை அனுபவிக்கவும் தெரியலை. அவன் வீடு ரொம்பப் பழசு. அடிக்கடி ஏதாவது ரிப்பேர் வந்துடுதாம். புதுசா வேற வீடு வாங்கலாம்னு அண்ணி சொன்னா, அதெல்லாம் வேண்டாம், இந்த வீடே நல்லாத்தானே இருக்குன்னு சொல்றானாம் குணாளன். நம்ம வீட்டில கூட ஏசி இருக்கு. ஆனா அவன் வீட்டில இல்லை. வீட்டில ஒரே புழுக்கம். ஏசி எல்லாம் எதுக்கு, ஜன்னலைத் தொறந்து வச்சா காத்து வது, பணம் கொடுத்து ஏசி வாங்கி அதுக்கு மாசா மாசம் மின்சாரக் கட்டணம் வேற கட்டணுமான்னு கேக்கறானாம். இந்தக் காலத்தில எல்லார் வீட்டிலேயும் ஸ்மார்ட் டிவி இருக்கு. அவன் இன்னும் பழைய காலத்து டிவியைத்தான் வச்சிருக்கான். அதுவும் அடிக்கடி ரிப்பேர் ஆயிடுதுன்னு அவங்க டிவி பாக்கறதையே விட்டுட்டாங்களாம். இதையெல்லாம் அவன் வரதுக்கு முன்னே அண்ணி எங்கிட்ட சொல்லி வருத்தப்பட்டாங்க!" என்றான் தனசேகரன்.

இதைக் கூறியபோது அண்ணன் தனக்குப் பணம் கொடுக்கவில்லையே என்ற கோபத்தையும், வருத்தத்தையும் மீறி, தனசேகரனுக்குச் சிரிப்பு வந்தது.

"தானும் அனுபவிக்காம, மத்தவங்களுக்கும் உதவி செய்யாம கோடிக் கோடியாப் பணத்தை சம்பாதிச்சு என்ன செய்யப் போறாரு உங்க அண்ணன்?" என்றாள் லட்சுமி விரக்தியுடன்..

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 101
நன்றியில் செல்வம் 
(நன்மை இல்லாத/ பயன்படாத செல்வம்)

குறள் 1005:
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடிஉண் டாயினும் இல்.

பொருள்: 
பிறர்க்குக் கொடுத்து உதவுவதும், தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன்மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன் இல்லை.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Thursday, October 19, 2023

1004. அழைப்பு வரவில்லை!

"உங்க அத்தை பையன் மாதவனோட பொண்ணுக்குக் கல்யாணமாமே!" என்றாள் மீனாட்சி.

"யார் சொன்னாங்க?" என்றான் சுந்தரேசன்.

"நேத்து உங்க தங்கச்சிகிட்ட பேசிக்கிட்டிருந்தேன். அவதான் சொன்னா."

"பரவாயில்லை. என் தங்கச்சி எங்கிட்ட பேசாட்டாலும் உங்கிட்டயாவது பேசறாளே!"

"அவ எனக்கு ஃபோன் பண்ணல, நான்தான் பண்ணினேன். உங்க தங்கச்சின்னு இல்ல, உங்களோட எந்த உறவுக்காரங்களுமே உங்ககிட்ட பேசறதில்லயே! நான்தான் உறவு விட்டுடக் கூடாதேங்கறதுக்காக அப்பப்ப எல்லார்கிட்டேயும் பேசிக்கிட்டிருக்கேன்."

"அது சரி. மாதவனோட பொண்ணுக்குக் கல்யாணம்னு அவளுக்கு எப்படித் தெரியும்?"

"மாதவன்தான் அவளுக்கு ஃபோன்பண்ணிச் சொன்னாராம். பத்திரிகை அனுப்பறேன், வந்துடுன்னு சொன்னாராம்!"

"மரியாதை தெரியாத பய. எனக்கு இல்ல முதல்ல சொல்லணும்? என் தங்கைக்கு முதல்ல சொல்லிட்டு அப்புறம் எனக்குச் சொல்றது என்ன மரியாதை?" என்றான் சுந்தரேசன் கோபத்துடன்.

"அவரு இன்னும் உங்ககிட்ட சொல்லவே இல்லையே!"

"அதைத்தானே நானும் சொல்றேன்?"

"உங்ககிட்ட முதல்ல சொல்லி இருக்கணும்னு நீங்க சொல்றீங்க. அவரு உங்ககிட்ட சொல்றதாவே இல்லையோ என்னவோ!"

"நீ என்ன சொல்ற?"

"உங்ககிட்ட ஃபோன்ல சொல்லாம பத்திரிகை மட்டும் அனுப்பலாம். அல்லது பத்திரிகை கூட அனுப்பாம இருக்கலாம்!"

"அது எப்படி? என் தங்கையைக் கூப்பிட்டுட்டு என்னைக் கூப்பிடாம இருப்பானா?"

"இது மாதிரி முன்னாலேயே நடந்திருக்கே! உங்க தங்கை கூட தான் வீடு கட்டறதைப் பத்தி உங்க தம்பி, தூரத்து சொந்தக்காரங்க எல்லார்கிட்டேயும் சொல்லி இருக்கா. உங்ககிட்ட கிரகப்பிரவேசத்துக்கு ஒரு வாரம் முன்னாலதானே சொன்னா! நீங்க கூட அதுக்காக அவளோட சண்டை போட்டீங்களே!"

"ஆமாம்!" என்றார் சுந்தரேசன் சற்று சோர்வுடன்.

"உங்க ஆ்பீஸ் நண்பர்கள் அடிக்கடி கூடிப் பேசிக்கறாங்க, சேர்ந்து டூர் போறாங்க. ஆனா, உங்களை யாரும் கூப்பிடறதில்ல, உங்களுக்குத் தகவல் கூடச் சொல்றதில்லைன்னு நீங்கதானே எங்கிட்ட சொல்லிக் குறைப்பட்டுக்கிட்டீங்க?"

சுந்தரேசன் பதில் சொல்லவில்லை.

தனக்கு வசதி இருந்தும், நண்பர்களோ, உறவினர்களோ உதவி கேட்டபோது தான் நிர்த்தாட்சண்யமாக அவர்களுக்கு உதவி செய்ய மறுத்து விட்டதால் தன் நண்பர்களும், உறவினர்களும் கடந்த சில ஆண்டுகளாகத் தன்னிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிப் போவதையும், தன்னை விலக்கி வைப்பதையும் அவர் உணர்ந்து கொண்டுதான் இருந்தார்.

நெருங்கிய உறவினர்கள் கூடத் தன்னைப் புறக்கணித்துத் தனிமைப்படுத்தி வந்தது அவருக்கு வேதனையை அளித்தது.

'நான் உயிருடன் இருக்கும்போதே எனக்கு நெருக்கமானவர்கள் கூட என்னைப் பொருட்படுத்தாமல் என்னிடமிருந்து விலகிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். நான் இறந்த பிறகு என்னைப் பற்றிய நினைவு கூட யாரிடமும் இருக்காது போலிருக்கிறதே!' என்ற எண்ணம் தோன்றியபோது எதையோ இழந்து விட்ட உணர்வு அவருக்கு ஏற்பட்டது.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 101
நன்றியில் செல்வம் 
(நன்மை இல்லாத/ பயன்படாத செல்வம்)

குறள் 1004:
எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.

பொருள்: 
பிறர்க்கு உதவியாக வாழாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன், தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவான்?.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

1003. நின்று போன ஸ்காலர்ஷிப்

நீண்ட நேரம் காத்திருந்த பின் பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தொழிலதிபர் குமணனின் அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

"எங்க பள்ளிக்கூடத்தில படிக்கிற மாணவர்கள்ள அதிக மார்க் வாங்கின அஞ்சு பேருக்கு அவங்க மேற்படிப்புக்காக சதாசிவம் நினைவு ஸ்காலர்ஷிப் கொடுத்துக்கிட்டு வந்தீங்க" என்றார் நிர்வாகக் குழுவின் தலைவர் சபேசன்.

"கொடுத்துக்கிட்டு வந்தாங்கன்னு சொல்லுங்க. நான் கொடுக்கலையே!" என்றான் குமணன் சிரித்தபடி.

"உங்கப்பாதான் அவரோட அப்பா பேர்ல இந்த ஸ்காலர்ஷிப் கொடுத்துக்கிட்டு வந்தாரு."

"அவரு போன வருஷம் இறந்துட்டாரு. அதுக்கப்புறம் ஸ்காலர்ஷிப்பும் நின்னு போச்சு!" என்று சொல்லிச் சிரித்தான் குமணன்.

"அதை நீங்க தொடரணும்னு கேட்டுக்கத்தான் நாங்க வந்திருக்கோம்."

"என்னோட அப்பாவுக்கு அவரோட அப்பா நினைவா இப்படி ஏதாவது செய்யணும்னு தோணி இருக்கு. எனக்கு அந்த மாதிரி எண்ணம் எதுவும் இல்லையே!" என்றான் குமணன்.

"இருபது வருஷமா இந்த ஸ்காலர்ஷிப்பை உங்க அப்பா கொடுத்துட்டு வந்திருக்காரு. நூறு ஏழை மாணவர்கள் இதனல பயன் அடைஞ்சிருக்காங்க. அவங்கள்ள பல பேரு உயர்ந்த பதவிகள்ள இருக்காங்க. அவங்க இப்பவும் தாங்க சதாசிவம் நினைவு ஸ்காலர்ஷிப்ல படிச்சதைப் பத்திரிகை பேட்டிகளிலும், தொலைக்காட்சிப் பேட்டிகளிலும் பெருமையாச் சொல்றாங்க. இதனால உங்க குடும்பத்துக்கு எப்படிப்பட்ட புகழ் கிடைச்சிருக்குன்னு பாருங்க."

"எனக்குப் புகழ் எல்லாம் வேண்டாம். உங்களால முடிஞ்சா எனக்குப் புதுசா சில வாடிக்கையாளர்கள் பிடிச்சுக் கொடுங்க. அதுக்கு நான் உங்களுக்கு கமிஷன் கொடுத்துடறேன். ஸ்காலர்ஷிப் மாதிரி விஷயங்களுக்கெல்லாம் நான் பணத்தை வீண்டிக்க விரும்பல!" என்றான் குமணன்.

"சரி சார். நாங்க வரோம்!" என்று எழுந்தார் நிர்வாகக் குழுத் தலைவர்.

அலுவலகத்துக்கு வெளியே வந்ததும், "இவரோட அப்பா எப்படிப்பட்ட மனுஷர்! இவர் இப்படிப் பேசறாரு. இவரைப் பார்க்க வந்தது நமக்கு டைம் வேஸ்ட்" என்றார் ஒரு உறுப்பினர்.

"இவரே இந்த உலகத்துக்க் ஒரு வேஸ்ட்தான்!" என்றார் நிர்வாகக் குழுத் தலைவர்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 101
நன்றியில் செல்வம் 
(நன்மை இல்லாத/ பயன்படாத செல்வம்)

குறள் 1003:
ஈட்டம் இவறி இசைவேண்டா வாடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.

பொருள்: 
புகழை விரும்பாமல் பொருள் சேர்ப்பது ஒன்றிலேயே குறியாக இருப்பவர்கள் பிறந்து வாழ்வதே இந்தப் பூமிக்குப் பெரும் சுமையாகும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Tuesday, October 17, 2023

1002. அருணாசலத்தின் 'கொள்கை'

"என் தம்பி பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்கு" என்றாள் விசாலாட்சி.

"சந்தோஷம்!" என்றான் அருணாசலம்.

"கல்யாணச் செலவுக்கு நாமதான் கொஞ்சம் பணம் கொடுத்து உதவணும்!"

"நான்தான் யாருக்கும் எந்த உதவியும் செய்யறதில்லைன்னு தெரியுமே!"

"ஏங்க நம்மகிட்டதான் நிறையப் பணம் இருக்கே! எப்பவாவது யாருக்காவது உதவி செஞ்சா குறைஞ்சா போயிடும்?"

"பணம் நம்மகிட்ட இருந்தாத்தான் அது நமக்கு உதவியா இருக்கும். கேக்கறவங்களுக்கெல்லாம் தூக்கிக் கொடுத்துக்கிட்டிருந்தா, நமக்குத் தேவைப்படும்போது அது நம்மகிட்ட இருக்காது!

"என் தம்பி கடனாத்தான் கேக்கறான்."

"சொந்தக்காரங்களுக்குக் கடன் கொடுத்தா, பாங்க்ல எல்லாம் வாராக் கடன்கள்னு சொல்லுவாங்களே, அது மாதிரிதான் ஆகும்!"

"உங்க தங்கை தன்னோட பொண்ணு கல்யாணத்துக்குக் கடன் கேட்டப்பவே நீங்க முடியாதுன்னுட்டீங்க. என் தம்பிக்கா கொடுக்கப் போறீங்க?"

"தெரியுது இல்ல? அப்புறம் ஏன் கேக்கறே?" என்று கூறி அந்தப் பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தான் அருணாசலம்.

ருணாசலத்துக்கு ஆன்மீகச் சொற்பொழிவுகள் கேட்பதில் ஆர்வம் உண்டு. அங்கே சொல்லப்படும் புராணக் கதைகளை அவன் மிகவும் விரும்பிக் கேட்பான். ஆனால் தானம் செய்ய வேண்டும், நல்ல காரியங்களுக்குப் பணம் கொடுத்து உதவ வேண்டும் என்றெல்லாம் ஆன்மீகச் சொற்பொழிவாளர்கள் உபதேசிப்பது அவனுக்குப் பிடிக்காது.

'என்ன செய்வது? சுவாரசியமான கதைகள் கேட்க வேண்டுமென்றால், இது போன்ற உபதேசங்களைச் சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்!' என்று நினைத்துக் கொள்வான் அருணாசலம்.

அன்று மகாபாரதக் கதை கேட்பதற்காகச் சற்றுத் தொலைவிலிருந்த ஒரு அரங்குக்குப் போயிருந்தான். சொற்பொழிவாளர் தன் இரண்டு மணி நேரச் சொற்பொழிவில் இருபது நிமிடம்தான் கதை சொல்லி இருப்பார். மற்ற நேரமெல்லாம் உபதேசம்தான்!

குறிப்பாக அவர் சொன்ன ஒரு விஷயம் அருணாசலத்துக்கு வேடிக்கையாக இருந்தது. பிறருக்கு உதவாமல் பணத்தைச் சேர்த்து வைத்திருப்பவர்கள் அடுத்த பிறவியில் ஒரு கீழான பிராணியாகப் பிறந்து கஷ்டப்படுவார்களாம்! அதைக் கேட்டதும் அருணாசலதுக்குச் சிரிப்புதான் வந்தது.

சொற்பொழிவு நடைபெற்ற அரங்கிலிருந்து வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தான் அருணாசலம். 

இருட்டான ஒரு பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தபோது, எங்கிருந்தோ குலைத்துக் கொண்டே ஓடி வந்த ஒரு நாய் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தவர் மேல் இடிப்பது போல் அருகில் வர, அவர் ஒரு கல்லை எடுத்து அதன் மீது வீசினார்.

கல் நாயின் மீது பட்டு விட, அந்த நாய் வலி தாங்காமல் ஓலமிட்டபடியே ஓடியது.

அந்தக் காட்சியைப் பார்த்தபோது அருணாசலத்துக்கு அவனை அறியாமலேயே மனதில் ஒரு எண்ணம் வந்து போயிற்று.

'ஒருவேளை நான் அடுத்த பிறவியில் ஒரு நாயாகப் பிறந்து இப்படி அடிபடுவேனோ?'

அந்த நினைப்பே அவன் உடலில் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 101
நன்றியில் செல்வம் 
(நன்மை இல்லாத/ பயன்படாத செல்வம்)

குறள் 1002:
பொருளானாம் எல்லாம்என்று ஈயாது இவறும்
மருளானா மாணாப் பிறப்பு.

பொருள்: 
பொருளால் எல்லாம் ஆகும் என்று நம்பி, பிறர்க்கு ஒன்றும் கொடுக்காமல் பொருளை இறுகப் பற்றியபடி மயக்கத்தால் ஆழ்ந்திருப்பவருக்கு சிறப்பில்லாத பிறவி உண்டாகும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

1001. சேர்த்து வைத்த பணம்!

"சுந்தரம் இறந்துட்டாராமே!"

"ஆமாம். சொன்னாங்க. நம்ம ஊரிலேயே பெரிய பணக்காரராச்சே!"

"ஆமாம். விவசாயம், வியாபாரம், வட்டித் தொழில்னு பல வகையிலும் பணம் சம்பாதிச்சாரு."

"அவருக்கு யாரு கொள்ளி போடப் போறாங்க?"

"அவர் பையன் அமெரிக்காவில இருக்கான். அவனால உடனே வர முடியாது. அவரோட அண்ணன் பையனுக்குத் தகவல் சொல்லி இருக்காங்களாம். அவன் வந்துதான் கொள்ளி போடுவான்."

"அவர் பையன் அமெரிக்காவில படிச்சு அங்கேயே வேலை தேடிக்கிட்டு அங்கேயே கல்யாணமும் செஞ்சுக்கிட்டானாமே! அவன் ஏன் அப்பாவைப் பார்க்க இங்கே வரதே இல்லை?"

"எப்படி வருவான்? அவன் அமெரிக்கா போய்ப் படிக்கப் பணம் கேட்டப்ப இவரு கொடுக்க மாட்டேன்னுட்டாரு இல்ல?"

"ஏன் கொடுக்க மாட்டேன்னுட்டாரு?"

"பணம் செலவழிஞ்சுடுமேன்னுட்டுதான்! அவன் அப்புறம் பாங்க்ல, தெரிஞ்சவங்ககிட்டல்லாம் கடன் வாங்கிட்டுப் போய்ப் படிச்சான். அதுதான் அப்பாவைப் பாக்க இங்க வரதே இல்லை. அம்மாகிட்ட மட்டும் ஃபோன்ல பேசுவான். அவங்களும் போய்ச் சேர்ந்துட்டாங்க."

"அடப்பாவமே! இவ்வளவு பணம் இருந்தும் பையன் படிப்புக்கே கொடுக்க மாட்டேன்னா எப்படி?" 

"அவரு அப்படித்தான். மனுஷனுக்குப் பணம் வந்துக்கிட்டே இருக்கணும், ஆனா வெளியில போகக் கூடாது! அதனலதான் ஒருவசதியும் செஞ்சுக்காம, சாப்பாட்டுக்குக் கூட அதிகம் செலவழிக்கக் கூடாதுன்னு அவரோட சம்சாரத்தை கெடுபிடி பண்ணிக்கிட்டு வாழ்ந்தாரு. சொந்தக்காரங்களை அண்ட விட மாட்டாரு. ஆனா இன்னிக்குக் கொள்ளி போட அண்ணன் மகன்தான் வர வேண்டி இருக்கு. அவன் கடனுக்குக் கொள்ளி போட்டுட்டுப் போவான்!"

"அது சரி. அவருக்கு ஈமச் சடங்கெல்லாம் செய்யப் பணம் வேணுமே!"

"அவர் வீட்டிலேயே ஏகப்பட்ட பணம் பெட்டியில இருக்கும். அதையெல்லாம் அவர் பையன் வந்துதானே திறந்து பார்க்க முடியும்? பையனை ஃபோன் பண்ணிக் கேட்டதுக்கு, 'என் பெரியப்பா பையனைக் கொள்ளி போட வரச் சொல்றேன். ஆனா அவங்கிட்ட பணம் காசு கிடையாது. ஊர்ல யாராவது பணம் போட்டு காரியங்களைச் செய்யுங்க. நான் வந்ததும் கொடுத்துடறேன்' னு சொன்னானாம்!"

"அடப்பாவி! இவ்வளவு பணத்தைச் சேர்த்து வச்சாரு. தானும் அனுபவிக்கல. மத்தவங்களுக்கும் கொடுக்கல. அவருக்குக் கொள்ளி போடக் கூட வேற யாராவதுதான் பணம் போட வேண்டி இருக்கு. இவ்வளவு காலமா அவரு இவ்வளவு பணம் சம்பாதிச்சு என்ன பயன்?"

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 101
நன்றியில் செல்வம் (நன்மை இல்லாத/ பயன்படாத செல்வம்)

குறள் 1001:
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்.

பொருள்: 
ஒருவன் தன் வீடு நிறையப் பெரும் பொருளைச் சேர்த்து வைத்து அதை அனுபவிக்காமல் இறந்து போனால் அந்தப் பொருளால் அவன் செய்ய முடிந்தது ஒன்றுமில்லை.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Monday, October 16, 2023

1000. முதியவரின் கோபம்!

ஒவ்வொருத்தரரும் பணம் சம்பதிக்கறதுக்கு எவ்வளவோ கஷ்டப்படறாங்க. ஆனா நம்ம எம் டி தொட்டதெல்லாம் பொன்னா மாறுது!" என்றான் கரண்.

"புது ப்ராஜக்ட்டைப் பத்தித்தானே சொல்ற? ப்ராஜக்ட் கன்சல்டன்ட் கூட அவ்வளவு நம்பிக்கையா இல்ல. ஆனா யாரும் எதிர்பார்க்காத அளவுக்குப் பிரமாதமான வெற்றி!" என்றான் அவன் சக ஊழியன் சக்தி. 

எம் டி கோபாலின் கார் வரும் சத்தம் கேட்கவே இருவரும் பேச்சை நிறுத்திக் கொண்டனர்.

கரண் பியூனை அழைத்து,"சார் வந்துட்டாரு. அவரைப் பார்க்க வந்த ஒரு பெரியவர் விசிட்டர்ஸ் அறையில உட்கார்ந்திருக்காரு. சார்கிட்ட சொல்லிட்டு அவரை உள்ளே அனுப்பு!" என்றான்.

கோபாலின் அறைக்குள் போய் விட்டுச் சற்று நேரத்தில் வெளியே வந்த அந்தப் பெரியவர் அலுவலகத்தின் மையத்தில் நின்று கோபத்துடன் உரத்த குலில் பேசத் தொடங்கினார்.

"இவனைப் படிக்க வைக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன்! என்னை விடுங்க. இவனை வளர்க்க இவன் அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பா! இப்ப அவ உடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரியில கிடக்கறா. பையனைப் பார்க்கணும்னு ஆசைப்படறா. ஃபோன் பண்ணினா எடுக்க மாட்டான்னுதான் ஆஃபீசுக்கு வந்து நேர்ல கூப்பிட்டேன். இப்ப பிசியா இருக்கேன், நேரம் கிடைக்கிறப்ப வந்து பாக்கறேங்கறான். 

"எப்ப வந்து பாக்கறது? அவ உயிரை விட்ட அப்புறமா? பணம் வேணும்னா கொடுக்கறானாம். இவன் பணம் யாருக்கு வேணும்? அப்பா அம்மாவை மதிக்காத இவன் பணத்தில ஒரு பைசா கூட வேண்டாம்னுதானே நாங்க பத்து வருஷமா வைராக்கியமா இருக்கோம்? 

"இவ்வளவு பெரிய ஆஃபீஸ் இருக்கு. இவ்வளவு பேர் வேலை செய்யறீங்க. பிசினஸ்ல பணம் கொட்டுது. ஏகப்பட்ட சொத்து சேர்த்து வச்சிருக்கான். என்ன பிரயோசனம். பாலைக் காய்ச்சித் துருப்பிடிச்ச பாத்திரத்தில கொட்டின மாதிரி அத்தனையும் வேஸ்ட்!"

பெரியவரின் உரத்த குரலைக் கேட்டு அறையிலிருந்து வெளியே வந்த கோபால், "என்னையா எல்லாரும் வேடிக்கை பார்த்துக்கிட்டிருக்கீங்க? செக்யூரிடியைக் கூப்பிட்டு இந்தக் கிழவனை வெளியில பிடிச்சுத் தள்ளச் சொல்லுங்க!" என்று இரைந்து கத்தினான்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 100
பண்புடைமை

குறள் 1000:
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யாற்றிரிந் தற்று.

பொருள்: 
நல்ல பண்பு இல்லாதவன் அடைந்த பெரும் செல்வம், பாத்திரக் கேட்டால் அதிலுள்ள நல்ல பால் கெட்டுப் போவது போலாம்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Sunday, October 15, 2023

999. மனைவியின் அறிவுரையைக் கேட்டிருந்தால்...

"ஏங்க நாளைக்கு உங்க சக ஊழியர் ராமனோட பையனுக்குக் கல்யாணம். நாம நாளைக்கு முகூர்த்தத்துக்குப் போகப் போறோமா, இன்னிக்கு சாயந்திரம் ரிசப்ஷனுக்குப் போகப் போறோமா?" என்றாள் மாலா.

"ரெண்டுக்குமே போகப் போறதில்ல!" என்றான் கீர்த்திவாசன்.

"ஏன்?"

"ராமன் எனக்கு நெருக்கமான நண்பர் இல்ல. அவரு ஒரு மரியாதைக்காக ஆஃபீஸ்ல வேலை செய்யறவங்க எல்லாருக்கும் பத்திரிகை கொடுத்திருக்காரு. நாம போகணும்னு அவசியமில்லை."

ரண்டு நாட்கள் கழித்து, "உங்க ஆஃபீஸ் நண்பர் முரளியோட மனைவியைத் தற்செயலா மார்க்கெட்ல பார்த்தேன். ராமனோட பையன் கல்யாணத்துக்கு உங்க ஆஃபீஸ்லேந்து எல்லாருமே வந்திருந்தாங்களாமே! நாம மட்டும்தான் போகலை போல இருக்கு. நீங்க ஏன் வரலேன்னு எங்கிட்ட கேட்டாங்க. உங்களுக்கு ஏதோ வேலை இருந்ததுன்னு சொல்லிச் சமாளிச்சுட்டேன்!" என்றாள் மாலா.

"ஆமாம் . ஆஃபீஸ்ல கூட சில பேர் என்னைக் கேட்டாங்க" என்றான் கீர்த்திவாசன் சுருக்கமாக.

"நீங்க பொதுவாகவே யார்கிட்டேயும் அதிகமாப் பழகறதில்ல. எங்க வீட்டில கூட இதைச் சொல்லிக் குறைப்பட்டுக்கறாங்க. ஏன், உங்க தங்கைகள் கூட 'அண்ணன் எங்க வீட்டுக்கெல்லாம் வரதில்ல, ஃபோன் பண்ணிப் பேசறது கூட இல்லைன்னு எங்கிட்ட சொல்லி  வருத்தப்பட்டிருக்காங்க. நீங்க மத்தவங்களோட இன்னும் கொஞ்சம் அதிகமாப் பழகணும்" என்றாள் மாலா.

"என்னால இப்படித்தான் இருக்க முடியும். என்னோட இயல்பு அதுதான்."

"ஆனா மத்தவங்க நீங்க அவங்களை மதிக்கறதில்லேன்னு நினைக்கறாங்களே!"

"அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?"

"மத்தவங்களோட நாம பழகினாத்தான் நாம அவங்களை மதிக்கிறதா அவங்க நினைப்பாங்க. அதனால உங்களுக்கு விருப்பம் இல்லாட்டாலும் ஒரு கர்ட்டிஸியா நினைச்சு நாம மத்தவங்களோட பழகணும்."

"அதுதான் நீ எல்லோரோடயும் நல்லாப் பழகறியே! அதனாலதானே என் தங்கைகள் கூட உங்கிட்ட வந்து என்னைப் பத்திப் புகார் செய்யறாங்க!"

"நான் சொன்னதை நீங்க தப்பாப் புரிஞ்சுக்கிட்டீங்கன்னு நினைக்கிறேன்" என்றாள் மாலா.

"விடு. நான் எப்படி இருக்கேனோ அப்படியே இருக்கேன். நீ எப்படி இருக்கியோ அப்படியே இருந்துக்கோ!" என்று சொல்லி அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் கீர்த்திவாசன்.

கீர்த்திவாசன் வீட்டின் முன்னறையில் அமர்ந்திருந்தான்.

வேலையிலிருந்து ஓய்வு பெற்றாகி விட்டது. ஒரே மகனுக்குத் திருமணமாகி அமெரிக்காவில் இருக்கிறான்.

மதியச் சாப்பாட்டை அருகிலிருந்த ஒரு மெஸ்ஸிலிருந்து கொண்டு வைத்து விடுவார்கள். அதைச் சாப்பிட்டாகி விட்டது.

வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி இருக்கிறது. அலமாரியில் புத்தகங்கள் இருக்கின்றன. அவை ஓரளவுக்கு நேரம் போக உதவும்.

கையில் செல்ஃபோன் இருக்கிறது. ஆனால் யாரிடம் பேசுவது என்று தெரியவில்லை. தங்கைகளிடம் பேசினால், எடுத்த உடனேயே, "என்ன அண்ணா, என்ன விஷயம்?" என்பார்கள். விஷயம் இல்லாமல் அண்ணன் ஃபோன் செய்ய மாட்டான் என்று அவ்வளவு நம்பிக்கை!

ஆஃபீஸ் நண்பர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்களுடன் தொடர்பு இல்லை. அந்த ஓரிரு நண்பர்களுடன் எப்போதாவதுதான் பேச முடியும்.

நீண்ட நேரம் சோஃபாவில் உட்கார்ந்திருந்த கீர்த்திவாசன் திடீரென்று இப்போது நேரம் என்ன இருக்கும் என்று யோசித்தான். அருகிலிருந்த செல்ஃபோனை எடுத்துப் பார்த்தான். செல்போன் பெரும்பாலும் நேரம் பார்க்கத்தான் பயன்படுகிறது!

மணி மூன்று. 

'அவ்வளவுதானா? ஐந்து மணிக்கு மேல் ஆகி இருக்கும் என்று நினைத்தேனே!'.

வீட்டுக்குள் பார்த்தான். அங்கே இல்லாத மனைவியின் நினைவு வந்தது. மற்றவர்களிடம் பழக வேண்டும் என்று எத்தனையோ முறை கூறியவள். அவள் சொன்னபடி கேட்டிருந்தால் சிலரிடமாவது சற்று நெருக்கமான தொடர்பு இருந்திருக்கும்.

'நான் சொன்னதைக் கேட்டிருந்தால், இப்படித் தனியே உட்கார்ந்து கொண்டு நேரம் என்ன இருக்கும் என்பதைக் கூட உணராமல் வெறுமையில் வாடிக் கொண்டிருக்க வேண்டாமே!' என்று எங்கேயோ இருந்து கொண்டு சொல்லிக் கொண்டிருக்கிறாளோ என்னவோ!  

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 100
பண்புடைமை

குறள் 999:
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.

பொருள்: 
பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு, மிகப் பெரிய இந்த உலகம் ஒளியுள்ள பகல் காலத்திலும் இருளில் கிடப்பதாம்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Saturday, October 14, 2023

998. பழி வாங்க ஒரு சந்தர்ப்பம்!

தனஞ்சயன் தன் நண்பர் முருகேசனின் பெண் சுகன்யாவை தன் மகன் பாலுவுக்குத் திருமணம் செய்து கொடுக்கச் சொல்லிக் கேட்டபோது, முருகேசன் மறுத்து விட்டார்.

நண்பர்களுக்குள் சம்பந்தம் செய்து கொள்வது சரியாக இருக்காது என்று முருகேசன் காரணம் கூறினாலும், பொருளாதார நிலையில் தான் முருகேசனை விடத் தாழ்ந்தவன் என்பதுதான் உண்மையான காரணம் என்பது தனஞ்சயனுக்குப் புரிந்தது.

"காசுதான் பெரிசு! நண்பன்னு கூட பாக்காம முடியாதுன்னு சொல்லிட்டானே!" என்று தன் மனைவியிடம் புலம்பினார் தனஞ்சயன்.

"பெண் கொடுக்கறது அவங்க விருப்பத்தைப் பொருத்தது. நண்பர்ங்கறதுக்காக நீங்க கேட்டவுடனே அவர் தன் பெண்ணை நம்ம பிள்ளைக்குக் கல்யாணம் செஞ்சு கொடுக்கணும்னு எதிர்பாக்கறது என்ன நியாயம்?" என்றாள் அவர் மனைவி.

ஆயினும் அன்று முதல் தனஞ்சயன் முருகேசனைத் தன் விரோதியாகவே பார்க்க ஆரம்பித்தார்.

முருகேசனின் பெண் சுகன்யாவுக்கு நிச்சயமான திருமணம் திடீரென்று நின்று போயிற்று.

பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்தியதற்குச் சரியான காரணம் கூறவில்லை. வேறொரு ஜோதிடரிடம் ஜாதகப் பொருத்தம் பார்க்கச் சொன்னபோது அவர் ஜாதகம் பொருந்தாது என்று சொல்லி விட்டதாகச் சொன்னார்கள்.

"திருமணம் நிச்சயம் செய்த பிறகு எதற்கு ஜாதகம் பார்த்தீர்கள்?" என்ற கேள்விக்கு அவர்களால் சரியான பதில் கூற முடியவில்லை.

சில நாட்களுக்குப் பிறகுதான் உண்மையான காரணம் தெரிந்தது.

சுகன்யா தனஞ்சயனின் மகன் பாலுவைக் காதலித்ததாகவும், பொருளாதார ஏற்றத் தாழ்வினால் முருகேசன் திருமணத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றும் ஒரு செய்தி பிள்ளை வீட்டாருக்குத் தெரிவிக்கப்பட்டதுதான் அவர்கள் திருமணத்தை நிறுத்தியதற்குக் காரணம் என்று தெரிந்தது.

இந்த விஷயம் தெரிந்ததும் முருகேசனின் மகனும் சுகன்யாவின் அண்ணனுமான மூர்த்தி கொதித்துப் போய் விட்டான்.

"சுகன்யாவும், பாலுவம் சந்திச்சுக்கிட்டது கூட இல்லை. அப்படி இருக்கறப்ப இப்படி ஒரு பொய்ச் செய்தியை தனஞ்சயன் மாமாதான் பரப்பி இருக்கணும். இத்தனை நாள் உங்களோட நட்பா இருந்துட்டு அவர் பையனுக்கு சுகன்யாவைக் கல்யாணம் செஞ்சு வைக்க நீங்க ஒத்துகலைன்னதும் இப்படிப்பட்ட கீழ்த்தரமான காரியத்தில இறங்கி இருக்காரே!" என்றான் மூர்த்தி கோபத்துடன்.

முருகேசன் எதுவும் பேசவில்லை.

அந்த ஊரில் இருந்தால் சுகன்'யாவின் திருமணம் தடைப்படும் என்று நினைத்து அவர்கள் பக்கத்தில் இருந்த ஒரு நகரத்துக்குச் சென்று குடியேறினார்கள்.

"அப்பா! இன்னிக்கு ஒரு விஷயம் நடந்தது" என்றான் மூர்த்தி.

"என்ன?" என்றார் முருகேசன்.

"உங்க பழைய நண்பர் தனஞ்சயனோட முதியோர் பென்ஷன் விண்ணப்பம் என் மேஜைக்கு வந்தது."

"அவன் ஏன் முதியோர் பென்ஷனுக்கு விண்ணப்பிக்கணும்?அவனுக்கு வேற வருமானம் இல்லையா என்ன?"

"நாம அவரைப் பாத்து இருபது வருஷம் ஆச்சு. இந்த இருபது வருஷத்தில என்ன நடந்ததோ!"

"சரி. சாங்ஷன் பண்ணிட்ட இல்ல?"

"இல்லை. ரிஜக்ட் பண்ணப் போறேன். ஃபைல் இன்னும் என் மேஜை மேலதான் இருக்கு."

"ஏன்? அவனுக்கு எலிஜிபிலிடி இல்லையா?"

"இருக்கு. ஆனா நான் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி அவர் விண்ணப்பத்தை நிராகரிக்கப் போறேன். உங்ககிட்ட சொன்னா நீங்க சந்தோஷப்படுவீங்கன்னுதான்சொல்றேன்!"

"விண்ணப்பத்தை நிராகரிக்கறதுக்கு முன்னால எங்கிட்ட சொன்னதில சந்தோஷம்தான். ஆனா நீ செய்ய நினைச்சது ரொம்ப இழிவான செயல்!"

"என்னப்பா இப்படிச் சொல்றீங்க? அவரு நம்ம சுகன்யா கல்யாணத்தையே நிறுத்தினவரு. அதனால நாம அந்த ஊரை விட்டே வரும்படி ஆச்சு. அப்புறம் சுகன்யாவுக்கு நல்ல இடத்தில கல்யாணம் ஆயிடுச்சுன்னாலும் அவர் செஞ்ச துரோகத்துக்கு அவரைப் பழி வாங்கறதில என்ன தப்பு?"

"பழி வாங்கறதே தப்பு. அதிலேயும் நீ உன் அதிகாரத்தைத் தவறாப் பயன்படுத்தி அவரைப் பழி வாங்க நினைக்கிறது ஒழுக்கம், பண்பாடு இதையெல்லாம் மீறின செயல். முறைப்படி அவனுக்குக் கிடைக்க வேண்டியதைத் தடுக்காதே!" என்றார் முருகேசன். 

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 100
பண்புடைமை

குறள் 998:
நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை.

பொருள்: 
தம்முடன் நட்புச் செய்யாமல் பகைமை கொண்டு தீமையே செய்பவரிடம் பண்பற்றவராய் நடந்து கொள்வது கூட இழிவானதே ஆகும்..
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

997. அரவிந்த் பண்டிட்டின் ஆன்மீகச் சொற்பொழிவு!

அரவிந்தன் எட்டாம் வகுப்பு படிக்கும்போதே அவனுடைய வகுப்பாசிரியர் அவனைப் பற்றி வகுப்பில் இவ்வாறு கூறி இருந்தார்:

"இந்த வகுப்பிலேயே அதிக புத்திசாலி அரவிந்தன்தான். அவன் பரீட்சையில வாங்கற மார்க்கை மட்டும் வச்சு இதைச் சொல்லல. பொதுவாகவே விஷயங்களைப் புரிஞ்சுக்கறது, பிரச்னைகளை அலசிப் பாக்கறது இதுலெல்லாம் அவன் காட்டற அறிவுக் கூர்மையை வச்சுத்தான் சொல்றேன்!" 

அரவிந்தன் பட்டப்படிப்பை முடித்ததும் ஒரு ஆன்மீக குருவின் சார்பில் சிலர் அவனைப் பார்க்க வந்தனர். ஒரு வித்தியாசமான வேலை வாய்ப்பைப் பற்றி அவனிடம் பேசினர்.

"உனக்கு நிறைய வேலை வாய்ப்புகள் வரும். ஆனா நாங்க உனக்குக் கொடுக்கற வாய்ப்பு வித்தியாசமானது. ஒரு ஆன்மீகச் சொற்பொழிவாளரா உருவாக மும்பையில இருக்கிற எங்க கல்லூரியில ஆறு மாசம் பயிற்சி கொடுப்போம். பயிற்சியின்போது தங்கும் அறை, சாப்பாடு எல்லாம் இலவசமாக் கொடுக்கறதோட ஒரு கணிசமான தொகையை ஸ்டைபெண்டாகவும் கொடுப்போம். 

"பயிற்சி முடிஞ்சப்புறம் நாடு முழுவதும் பல இடங்கள்ள நாங்க ஏற்பாடு செய்யற நிகழ்ச்சிகள்ள நீ சொற்பொழிவு ஆற்றணும். மாசச் சம்பளமா உனக்கு ஒரு பெரிய தொகை கிடைக்கும். நாடு முழுக்க சுற்றிப் பார்க்கற வாய்ப்புக் கிடைக்கும். வெளிநாடுகளுக்குப் போற வாய்ப்புக் கூடக் கிடைக்கும். 

"எங்க குரு சந்நியாசிதான். எங்க அமைப்பில நிறைய சந்நியாசிகள் இருக்காங்க. ஆனா உன்னைப் போன்ற ஆன்மீகச் சொற்பொழிவாளர்களுக்கு இது ஒரு கேரியர்தான். உன்னை மாதிரி அறிவுக் கூர்மை உள்ளவங்களோட சேவை எங்க இயக்கத்துக்குத் தேவைன்னு எங்க குரு நினைக்கறதால, உன்னை மாதிரி அறிவுக் கூர்மை உள்ளவங்களை நாங்க நாடு முழுக்க சல்லடை போட்டுத் தேடிக் கண்டுபிடிக்கிறோம்.

"உன்னோடதனிப்பட்ட வாழ்க்கையில எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. நீ திருமணம் செஞ்சுக்கறதுக்கு எந்தத் தடையும் இல்ல. மூணு வருஷம் கட்டாயமா எங்க அமைப்பில வேலை செய்யணும். அதுக்கப்புறம் நீ வேற வேலைக்குப் போக விரும்பினா போகலாம். என்ன சொல்ற?" 

அவர்கள் விவரித்த வாய்ப்பு அரவிந்தனுக்குப் பிடித்திருந்ததால் அவன் அதற்கு ஒப்புக் கொண்டான்.

று மாதப் பயிற்சிக்குப் பிறகு அரவிந்தனைப் பற்றி குரு மற்றவர்களிடம் கருத்துக் கேட்டபோது, அனைவருமே சொன்னது இதுதான்: 

"அரவிந்தன் மிகுந்த அறிவுக் கூர்மை உள்ளவன்தான், சந்தேகமில்லை. ஆனால் மற்றவர்களை மதிக்காமல் நடந்து கொள்வது, பண்பாடு இல்லாமல் நடந்து கொள்வது ஆகிய விரும்பத்தகாத குணங்கள் அவனிடம் இருக்கின்றன."

ஒரு நிமிடம் கண்ணை மூடி யோசித்த குரு, "அவன் நம்மோட தத்துவங்களைப் பேசி விளக்கப் போறான் அவ்வளவுதானே! அவனோட நடத்தையில பண்பாடு இல்லாட்டா நமக்கென்ன?" என்று கூறி அரவிந்தன் சொற்பொழிவாளராகத் தேர்ந்தெடுக்கப்பட சம்மதம் அளித்தார்.

அரவிந்தன் அரவிந்த் பண்டிட் என்று பட்டம் அளிக்கப்பட்டு அந்த அமைப்பின் ஆன்மீகத் தத்துவங்களை மக்களிடையே பரப்பும் பணியில் ஈடுபடுத்தப்பட்டான்.

"ஒவ்வொரு வகை உயிரினத்துக்கும் உள்ள அறிவுநிலை வெவ்வேறானது. ஓரறிவிலிருந்து துவங்கி ஆறறிவு வரை அறிவுநிலை வேறுபடுகிறது. திரைப்படம் தயாரிப்பவர்கள் ஏழாம் அறிவு பற்றிக் கூடப் பேசுகிறார்கள்...."

இந்த இடத்தில் அரவிந்த் பண்டிட் நிறுத்தியதும், முன் வரிசையில் இருந்த சிலர் சிரித்தனர். அதே சமயம், பின் வரிசைகளிலிருந்து சிலர் கைகளை மேலே உயர்த்தி ஆட்டி, "மைக், மைக்!" என்று கூவி, ஒலிபெருக்கி வேலை செய்யவில்லை என்பதைத் தெரிவித்தனர்.

கையைச் சொடுக்கி நிகழ்ச்சி அமைப்பாளரை அருகே அழைத்த அரவிந்த் பண்டிட் அவரிடம் ஏதோ கோபமாகப் பேசினார். அவர் பேசிக் கொண்டிருந்தபோதே மைக்கை ஏற்பாடு செய்தவர் ஓடி வந்து மைக்கைச் சரி செய்தார்.

மைக் சரியாகி அரவிந்த் பண்டிட் கூட்டத்தை ஏற்பாடு செய்தவரைக் கடிந்து பேசியது ஒலிபெருக்கி வழியே அனைவரின் காதுகளிலும் விழுந்தது. மைக் சரியானது தெரியாமல் தொடர்ந்து அமைப்பாளரைக் கடிந்து பேசிக் கொண்டிருந்தார் அரவிந்த் பண்டிட். அவர் பேச்சில் வெளிவந்த சில வசைச் சொற்களைக் கேட்டுச் சிலர் காதுகளைப் பொத்திக் கொண்டனர்.

"என்ன இது? குடிச்சுட்டுத் தெருவில சண்டை போட்டுக்கறவங்க பேசற மாதிரி பேசறாரு? இவரெல்லாம் ஆன்மீகச் சொற்பொழிவாளரா?" என்றார் ஒருவர்  கோபத்துடன்.

"அறிவாளி, விஷயம் தெரிஞ்சவர். நல்லாப் பேசுவார்னு சொன்னாங்க. ஆனா இவர் நடந்துக்கறதைப் பார்த்தா இவர் சொன்ன ஓரறிவு ஜீவராசிகளை விடக் கீழானவரா இருப்பார் போலிருக்கே!" என்றார் மற்றொருவர்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 100
பண்புடைமை

குறள் 997:
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்.

பொருள்: 
மனிதர்களுக்கு உரிய பண்பு இல்லாதவர் அரம் போல் கூர்மையான அறிவுடையவரானாலும், ஓரறிவுயிராகிய மரத்தைப் போன்றவரே ஆவர்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Friday, October 13, 2023

996. கஜேந்திரனின் வாக்குறுதி!

"சார்! நீங்க அனுப்பின சரக்கு தரக்குறைவா இருக்குன்னு உங்க சேல்ஸ் எக்சிக்யூடிவ்கிட்ட சொன்னேன். அவரு அதைத் திருப்பி எடுத்துக்கிட்டு வேற சரக்கு அனுப்பறதா சொன்னாரு. ஆனா ரெண்டு வாரம் ஆகியும் இன்னும் எதுவும் நடக்கல. அதனாலதான் உங்களைப் பார்த்துப் பேசிட்டுப் போகலாம்னு வந்தோம்!" என்றார் நித்யானந்தம்.

"சேல்ஸ் எக்சிக்யூடிவ் பேரு?" என்றார் நிர்வாக இயக்குனர் தெய்வசிகாமணி.

நித்யானந்தம் தன்னுடன் வந்திருந்த தன் சக ஊழியர் சிதம்பரத்தைப் பார்க்க, "தனபால் சார்!" என்றார் சிதம்பரம்.

"தனபால் வேலையை விட்டுப் போயாச்சே!"

"அவர் வேலையை விட்டுப் போனா என்ன சார்? அவர் உங்க கம்பெனி ஊழியராத்தானே எங்ககிட்ட பேசினாரு? அவர் சொன்னதை நீங்க நிறைவேற்ற வேண்டாமா?" 

"இப்படியெல்லாம் அதிகப்பிரசங்கித்தனமா நடந்துக்கிட்டதாலதான் அவரை வேலையை விட்டு அனுப்பிச்சுட்டேன்!"

"சரி சார்! அவர் சொன்னதை விடுங்க. உங்க சரக்கு தரக்குறைவா இருந்ததுன்னு இப்ப நாங்க உங்ககிட்ட சொல்றோம், இல்ல? அதுக்கு என்ன சொல்றீங்க?" என்றார் நித்யானந்தம் சற்றுக் கோபத்துடன்.

"நான் இந்த கம்பெனியோட எம் டி. நீங்க உங்க கம்பெனியில மானேஜராவோ என்னவோ இருக்கீங்க. உங்களுக்கு நான் எதுக்கு பதில் சொல்லணும்?" என்றார் தெய்வசிகாமணி.

"என்ன சார் நீங்க பேசறது? உங்க சேல்ஸ் எக்சிக்யூடிவ்கிட்ட சொன்னோம்னு சொன்னா, அவரு வேலையை விட்டுப் போயிட்டாருன்னு சொல்றீங்க. உங்ககிட்ட சொன்னா, நாங்க சொல்றதுக்கு பதில் சொல்ல மாட்டேங்கறீங்எ. எங்க எம் டியை விட்டே உங்களுக்கு ஃபோன் பண்ணச் சொல்லட்டுமா?"

"நான் இப்ப பிசியா இருக்கேன். நீங்க போயிட்டு அப்புறம் வாங்க!" என்ற தெய்வசிகாமணி தொலைபேசியை எடுத்து யாரிடமோ பேசத் தொடங்கினார்.

நித்யானந்தமும், சிதம்பரமும் கோபத்துடன் வெளியே வந்தனர்.

அவர்கள் இருவரும் வெளியே வந்து அவர்கள் வந்த காரில் ஏற  முயன்றபோது, உள்ளிருந்து ஒருவர் வேகமாக ஓடி வந்து, "சார்! கொஞ்சம் நில்லுங்க!" என்றார்.

இருவரும் நின்றனர்.

"சார் பேசினதை மனசில வச்சுக்காதீங்க. நான் உங்களுக்கு வேற சரக்கு அனுப்ப ஏற்பாடு செய்யறேன். இதுக்காகக் கோவிச்சுக்கிட்டு இனிமே ஆர்டர் கொடுக்காம இருந்துடாதீங்க. நீங்க அப்படிப் பண்ணினா எங்க பிழைப்பில மண் விழுந்துடும்! இங்கே இருபது பேர் வேலை செய்யறோம்!" என்றார் அவர்.

"உங்க எம் டி எங்ளை மதிச்சுப் பேசக் கூட மாட்டேங்கறாரு. நீங்க யாரு? நீங்க சொல்றதை நாங்க எப்படி ஏத்துக்க முடியும்?" என்றார் நித்யானந்தம்.

"சார்! நான் அவரோட அப்பா காலத்திலேந்து இங்கே வேலை செய்யறேன். நான் அவர்கிட்ட சொல்லிப் புரிய வைக்கிறேன். நான் சொன்னா அவர் கேப்பாரு. ரெண்டு நாள் வெயிட் பண்ணுங்க. உங்களுக்கு நல்ல சரக்கு வந்துடும். நல்ல சரக்கைக் கொடுத்துட்டு முன்னே கொடுத்த சரக்கைத் திருப்பி எடுத்துக்கறோம். எதிர்காலத்தில ஏதாவது பிரச்னைன்னா, எனக்கு ஃபோன் பண்ணுங்க. நான் அதை சரி செஞ்சு கொடுக்கறேன். என் பேரு கஜேந்திரன்" என்றார் அவர்.

"சரி. நீங்க சொல்றதுக்காக ரெண்டு நாள் வெயிட் பண்றோம்!" என்று சொல்லி விட்டுக் காரில் ஏறினார் நித்யானந்தம்.

காரில் போகும்போது, "இவரை மாதிரி ஒத்தர் இங்கே இருக்கறதாலதான் இந்த கம்பெனி இன்னும் ஓடிக்கிட்டிருக்கு. இல்லேன்னா தெய்வசிகாமணி நடந்துக்கற லட்சணத்துக்கு இந்த கம்பெனி இருந்த இடமே தெரியாம அழிஞ்சு போயிருக்கும்!" என்றார் சிதம்பரம்.

"இந்த கம்பெனி மட்டும் இல்ல, சிதம்பரம்! இந்த உலகதில சில பேராவது பண்புள்ளவங்களா இருக்கறதாலதான் இந்த உலகமே இயங்கிக்கிட்டிருக்கு. இல்லேன்னா இந்த உலகமே அழிஞ்சு போயிடும்!" என்றார் நித்யானந்தம்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 100
பண்புடைமை

குறள் 996:
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்

பொருள்: 
பண்பு உடையவரிடத்தில் பொருந்தியிருப்பதால்தான் உலகம் அது உள்ள நிலையில் இயங்கிக் கொண்டிருக்கிறது, அவ்வாறு இல்லலாமல் போனால், அது மண்ணில் புகுந்து அழிந்து போகும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

995. நட்பும் பகையாகும்!

தொழில்துறைக் கூட்டமைப்பின் கூட்டத்துக்கு நிர்வாக இயக்குனர் மணிகண்டன் சென்றபோது தன் சுருக்கெழுத்தாளன் சபாபதியையும் அழைத்துக் கொண்டு சென்றார்.

கூட்டம் முடிந்ததும் சிற்றுண்டி அருந்த பக்கத்தில் இருந்த அறைக்கு அனைவரும் அழைக்கப்பட்டனர். 

ஒவ்வொருவரும் சிற்றுண்டித் தட்டை  எடுத்துக் கொண்டு அங்கே போடப்பட்டிருந்த மேசைகள் ஒன்றின் அருகில் சென்று அமர்ந்தனர்

மணிகண்டன் இன்னொரு தொழிலதிபருக்கு அருகே அமரர்ந்து அவருடன் பேசத் தொடங்கினார்.

சபாபதி சற்றுத் தள்ளிப் போய் ஒரு இருக்கையில் அமர்ந்தான். அப்போதுதான் சற்றுத் தொலைவில் அமர்ந்திருந்த கலிவரதனை கவனித்தான். கலிவரதன் அவன் ஊர்க்காரன். இருவரும் சந்தித்துப் பல நாட்கள் ஆகி விட்டன. சபாபதி கலிவரதன் அருகில் போய் அமர்ந்து கொண்டு "ஹாய்!" என்றான்.

சிற்றுண்டிக்குப் பிறகு மணிகண்டனும், சபாபதியும் காரில் அலுவலகத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். 

தான் நிர்வாக இயக்குனர், சபாபதி தனக்குக் கீழ் பணி புரியும் ஒரு சுருக்கெழுத்தாளன் என்ற உணர்வு இல்லாமல் சபாபதியிடம் ஒரு நண்பனைப் போல் பேசும் இயல்புடையவர் மணிகண்டன்.

"என்ன சபாபதி, ஏன் ஒரு மாதிரி இருக்கே?" என்றார் மணிகண்டன்.

"ஒண்ணுமில்லை சார்!" என்றான் சபாபதி.

"நீ உக்காந்திருந்த இடத்தை விட்டு இன்னொத்தர் பக்கத்தில போய் உட்காருவதைப் பார்த்தேன். அவர் உனக்குத் தெரிஞ்சவரா?" 

"ஆமாம் சார். எங்க ஊர்க்காரன்."

"நீ ஏதோ சொன்னதும் அவரு ஏன் கோவிச்சுக்கிட்ட மாதிரி வேற இடத்தில போய் உக்காந்துக்கிட்டாரு?"

சபாபதி திடுக்கிட்டு, "நீங்க பார்த்தீங்களா சார்?" என்றான். பிறகு சற்றுத் தயங்கி விட்டு, "நான் அவன்கிட்ட பழையபடி பேசினது அவனுக்குப் பிடிக்கல போல இருக்கு!" என்றான்.

"பழையபடி பேசினதுன்னா?"

"அவன் பேரு கலிவரதன். ஊர்ல நாங்க அவனை 'காலிப்பயலே'ன்னுதான் கூப்பிடுவோம். அது மாதிரி அவன்கிட்ட போய், 'என்னடா காலிப்பயலே, எப்படி இருக்கே?' ன்னு கேட்டேன். அது அவனுக்குப் பிடிக்கல போல இருக்கு. கோவிச்சுக்கிட்டுப் போயிட்டான். நான் சாரின்னு சொன்னேன். ஆனா அதை அவன் காதில போட்டுக்கல!"

"சின்ன வயசில விளையாட்டாப் பேசறது வேற. இங்கே  பக்கத்தில இவ்வளவு பேர் இருக்கச்சே அவரை நீ அப்படிக் கூப்பிட்டது அவருக்குப் பிடிக்காம இருந்திருக்கலாம். ரொம்ப நெருங்கின நண்பர்களா இருந்தாலொழிய தனியே இருக்கும்போது கூட விளையாட்டுக்குக் கூட யாரையும் கேலியாப் பேசக் கூடாது. அதை அவங்க தப்பா எடுத்துக்கலாம் இல்லையா?"

"ஆமாம் சார். எனக்கு அப்புறம்தான் புரிஞ்சுது. அவன் 'சந்திரா டெக்ஸ்டைல்ஸ்'னு பேட்ஜ் போட்டிருந்தான். அவனை அவன் ஆஃபீஸ்ல போய்ப் பார்த்து அவங்கிட்ட மன்னிப்புக் கேட்டுக்கலாம்னு இருக்கேன்" என்றான் சபாபதி.

"தட் இஸ் தி ஸ்பிரிட்!" என்றார் மணிகண்டன்.

"நீங்க யாரோடயோ பேசிக்கிட்டிருந்தீங்களே, அவரு யாருசார்? உங்க நண்பரா?" என்றான் சபாபதி.

"நண்பர் இல்ல. எதிரி!" என்றார் மணிகண்டன் சிரித்தபடி.

"என்ன சார் சொல்றீங்க?"

"அவரு ரோகிணி இண்டஸ்டிரீஸோட எம் டி. நம்மோட முக்கியப் போட்டியாளர் அ வங்கதானே?"

"அப்புறம் ஏன் சார் அவர்கிட்ட போய்ப் பேசினீங்க?"

"எதிரியா இருந்தாலும் சௌக்கியமான்னு கேக்கலாம் இல்ல? கேக்கணும். அதுதான் பண்பாடு. அதனாலதான் அவர்கிட்ட போய்ப் பேசினேன்."

"அவரு உங்ககிட்ட எப்படி சார் பேசினாரு?"

"அவரு ரொம்ப இறுக்கமாத்தான் இருந்தாரு. உங்கிட்ட எனக்கென்ன பேச்சுங்கற மாதிரி முறைப்பாத்தான் இருந்தாரு. அதைப் பத்தி எனக்கென்ன கவலை? நான் அவர்கிட்ட பேசினது ஒரு கர்டிஸிக்காக. அவரு எங்கிட்ட பதில் பேசினாலும், பேசாட்டாலும் எனக்கு எதுவும் இல்லை!" என்றார் மணிகண்டன் சிரித்தபடி.

'நான் ஒரு நண்பனிடம் தவறாகப் பேசி அவனைக் கோபமூட்டி விட்டேன், இவரோ ஒரு எதிரியிடம் கூட நலம் விசாரித்து விட்டு , அவர் சரியாக பதில் பேசாததைக் கூடப் பொருட்படுத்தாமல் இருக்கிறாரே! இவரிடம் நான் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது!' என்று நினைத்துக் கொண்டான் சபாபதி.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 100
பண்புடைமை

குறள் 995:
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.

பொருள்: 
விளையாட்டாகக் கூட ஒருவரை இகழ்ந்து பேசுவதால் கேடு உண்டாகும். அறிவு முதிர்ந்தவர்கள், பகைவரிடமும் பண்பு கெடாமல் நடந்து கொள்வார்கள்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Thursday, October 12, 2023

994. 'நோபிள்' பரிசு!

'நலம் நாடுவோர் சங்க'த்தின் ஆண்டுவிழாக் கூட்டம் துவங்கியது. 

செயலாளர் வரவேற்புரை ஆற்றியபின் சங்கத்தலைவர் குவளைக்கண்ணன் பேசத் தொடங்கினார்.

"பொதுவா பிரபலமானவங்களுக்குத்தான் பாராட்டு விழாக்கள் நடத்துவாங்க. ஆனா நம்ம சங்கத்தில சாதாரண மனிதர்களுக்கும் பாராட்டு விழா நடத்தி அவங்களுக்கு 'நோபிள் பர்ஸன்' அதாவது'உயர்ந்த மனிதர்'ங்கற விருது வழங்கற பழக்கத்தை வச்சிருக்கோம். இதை நாம சுருக்கமா நோபிள் பரிசுன்னும் 

"பரிசுக்குரிய நபரைத் தேர்ந்தெடுக்க நாம அமைச்சிருக்கிற தேர்வுக்குழுவுக்கு நம் உறுப்பினர்கள் தங்களுக்குத் தெரிஞ்ச சிறந்த மனிதர்களோட பெயர்களைப் பரிந்துரை செய்வாங்க. தேர்வுக்குழு பரிந்துரை செய்யப்பட்ட மனிதர்களைப் பத்தி ஆராய்ந்து யாருக்குப் பரிசுன்னு முடிவு செய்யும். 

"தேர்ந்தெடுக்கப்பட்டவர் யாருன்னு தேர்வுக்குழு உறுப்பினர்களைத் தவிர வேற யாருக்கும் தெரியாது. இந்த சங்கத்தோட தலைவரான எனக்கோ, துணைத் தலைவருக்கோ, செயலாளருக்கோ கூடத் தெரியாது. 

"தேர்வுக்குழுத் தலைவர் வெங்கடேசன் அவர்கள் இப்போது இந்த ஆண்டு 'நோபிள்' பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர் யார் என்பதை அறிவிப்பார்!" 

தேர்வுக்குழுத் தலைவர் வெங்கடேசன் ஒலிபெருக்கி முன் வந்து பேசத் தொடங்கினார்.

"இந்த முறை நாங்க தேர்ந்தெடுத்திருக்கிற நபரைப் பத்தி பல பேர்கிட்ட நாங்க விசாரிச்சப்ப, எல்லாரும் ஒரே மாதிரிதான் சொன்னாங்க. 'அவர் ரொம்ப நேர்மையானவர், நியாயமா நடந்துப்பாரு, அதோட எப்பவுமே தன்னால மற்றவங்களுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமானு பார்த்துக்கிட்டிருப்பார்.'

"அவர் ஒரு அலுவலகத்தில அதிகாரியா இருந்து ஓய்வு பெற்றவர். அவர் தன்னோட வேலைகளைச் சரியாச் செஞ்சதோட மத்தவங்களுக்கு உதவி செய்யறதையும் பழக்கமா வச்சுக்கிட்டிருந்தவர்னு அவரோட மேலதிகாரிகளா இருந்தவங்களும், அவரோட வேலை செஞ்சவங்களும் சொன்னாங்க.

"அவருக்குக் கீழே வேலை செஞ்சவங்க அவர் எப்பவுமே நியாயமா நடந்துப்பாரு, வேலை விஷயத்தில ஸ்டிரிக்டா இருந்தாலும், எல்லார்கிட்டேயும் அன்பாகவும், கனிவாகவும், கருணையோடயும் நடந்துப்பார்னு சொன்னாங்க.

"அவர் ஓய்வு பெற்ற பிறகு கூட, அவரோட நிறுவனத்திலேந்து சில பேர் அவரை அப்பப்ப சந்திச்சு ஆலோசனே கேக்கறாங்க. அவரும் கொஞ்சம் கூட சலிச்சுக்காம அவங்களுக்கு ஆலோசனைகளைச் சொல்றாரு. 

"அவர் குடி இருக்கிற பகுதியில அவரைப் பத்தி விசாரிச்சோம். அவரோட குடியிருப்பு சங்கத்தில அவர் எந்த ஒரு பொறுப்பில இல்லாட்டாலும், ஏதாவது பிரச்னைன்னா முதல் ஆளா வந்து அதைத் தீர்க்க உதவி செய்யறாருன்னு சொன்னாங்க.

"ஆனா அவர் மனைவி மட்டும் அவரைப் பத்திக் குறை சொன்னாங்க, 'ரிடயர் ஆயிட்டார்னுதான் பேரு. ஆனா எங்கேயாவது யாருக்காவது உதவி செய்யறேன்னு வெளியிலதான் சுத்திக்கிட்டிருப்பாரு, வேளாவேளைக்கு வீட்டுக்கு வந்து சாப்பிட்டுட்டுப் போங்கன்னு சொல்றேன், அதைக் கூடச் செய்யறதில்லை' ன்னு!

"ரிடயர் ஆனப்புறம் அவர் ஒரு சங்கம் ஆரம்பிச்சு நடத்திக்கிட்டு வராரு. ஆரம்பத்தில, அதோட தலைவர் பதவியைக் கூட அவர் ஏத்துக்கல. சமீபத்திலதான் அவரை வற்புறுத்தி சம்மதிக்க வச்சு அந்தச் சங்கத்தோட தலைவரா ஆக்கி இருக்காங்க - ஆக்கி இருக்கோம்."

வெங்கடேசன் பேச்சை நிறுத்தி விட்டு அவையில் இருந்தவர்களப் பார்க்க, அவையில் இருந்தவர்கள் அவரையும் தலைவரையும் மாறி மாறிப் பார்த்தனர்.

"இந்த ஆண்டு 'நோபிள் பர்ஸன்' அவார்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர் நம் அன்புக்குரிய தலைவர், பண்பாளர் குவளைக்கண்ணன் அவர்கள்தான்!" என்று வெங்கடேசன் சொல்லி முடித்ததும் கரவொலி அரங்கை அதிர வைத்தது. 

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 100
பண்புடைமை

குறள் 994:
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.

பொருள்: 
நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறர்க்குப் பயன்படும் வகையில் வாழும் பெரியோரின் நல்ல பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Wednesday, October 11, 2023

993. அதே முகம், அதே குணம் யாரிடம்?

முதுநிலைப் படிப்புக்காக கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்குத் தங்கும் விடுதியில் அறைகள் ஒதுக்கும் பணி நடந்து கொண்டிருந்தது.

"ஒரு அறையில ரெண்டு பேர் இருக்கணும். நீங்களே ரெண்டு பேரா சேர்ந்து வந்தீங்கன்னா ஒரே அறையை அலாட் பண்ணுவோம். இல்லேன்னா நாங்களா யாராவது ரெண்டு பேருக்கு ஒரே அறையை அலாட் பண்ணுவோம்" என்றார் அறைகள் ஒதுக்கிக் கொடுத்துக் கொண்டிருந்த ஊழியர்.

பிரசாத் தன் அருகில் நின்றிருந்த ராஜேந்திரனிடம் திரும்பி, "என் பேர் பிரசாத். என்னோட ரூம்மேட்டா இருக்கீங்களா?" என்றான்.

ராஜேந்திரன் சற்றுத் தயங்கி விட்டு, "கொஞ்சம் இருங்க. சொல்றேன்!" என்று பிரசாத்திடம் கூறி விட்டு அங்கிருந்து அகன்றான்.

சில நிமிடங்கள் கழித்துத் திரும்பி வந்த ராஜேந்திரன், "சாரி. நானும் இன்னொருத்தரும் சேர்ந்து ஒரு அறையை எடுத்துக்கிட்டோம்!" என்றான்.

"பரவாயில்லை!" என்றான் பிரசாத் சிரித்தபடி..

வகுப்புகள் துவங்கிய சில வாரங்களில் பிரசாத்துக்கும், ராஜேந்திரனுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு இருவரும் நண்பர்களாகி விட்டனர்.

ஒருநாள் ராஜேந்திரன் பிரசாத்திடம், "நமக்கு ஹாஸ்டல்ல அறை ஒதுக்கறப்ப நாம ரெண்டு பேரும் ஒரு அறையை எடுத்துக்கலாமான்னு நீ கேட்டே! அப்ப நான் வேண்டாம்னுட்டேன். சாரி" என்றான்.

"அதனால என்ன? அப்ப, உனக்கு என்னை அறிமுகம் இல்லையே! நான் கேட்டதும் நீ ஒத்துக்கணும்னு அவசியம் இல்லையே! உனக்குத் தெரிஞ்ச ஒத்தனோட சேர்ந்து இருக்கலாம்னு நீ முடிவு செஞ்சிருக்கலாம்!" என்றான் பிரசாத்.

"இல்லை. என் ரூம்மேட்டா இருக்கற சேகரை எனக்கு முன்னால தெரியாது!"

"பின்னே எப்படி அவனைத் தேர்ந்தெடுத்தே?"

"பள்ளிக்கூடத்தில சந்திரன்னு எனக்கு ஒரு நெருங்கின நண்பன் இருந்தான். அவன் ரொம்ப கண்ணியமாவும், பண்போடயும் நடந்துப்பான். சேகருக்கு சந்திரனோட முக ஜாடை இருந்தது. அதனால அவன் சந்திரன் மாதிரியே இருப்பான்னு நினைச்சுத்தான் அவனைத் தேர்ந்தெடுத்தேன்."

"நீ எதிர்பார்த்த மாதிரிதானே அவன் இருக்கான்?"

"இல்லை. அதுக்கு எதிர்மறையா இருக்கான். முக ஜாடைதான் சந்திரன் மாதிரி இருக்கு. குணங்கள் எல்லாம் நேர்மாறா இருக்கு. கொஞ்சம் கூட கண்ணியமோ, பண்பாடோ இல்லாம நடந்துக்கறான். சேகருக்கு சந்திரனோட முக ஜாடை இருந்ததால, குணத்திலேயும் சேகர் சந்திரனோட ஒத்திருப்பான்னு நான் நினைச்சது தப்புன்னு இப்பப் புரியுது!" என்றான் ராஜேந்திரன்.

"முக ஜாடையை வச்சு மனுஷங்களை ஒப்பிடறதே தப்பு!" என்றான் பிரசாத்.

"ஏன் அப்படிச் சொல்ற?"

"இந்த முக ஜாடை, சாயல் இதெல்லாம் ஒவ்வொத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி தோணும். இது சப்ஜெக்டிவ். உனக்கு மகாத்மா காந்தியோட முக ஜாடை இருக்கறதா எனக்குத் தோணுது! ஆனா மத்தவங்களுக்கு அப்படித் தோணாம இருக்கலாம். ஆனா எல்லா மனுஷங்ளுமே ஒரே மாதிரி உறுப்புகள் உள்ளவங்கதானே - கை, கால், கண், காது, மூக்குன்னு?"

"ஆமாம்."

"அந்த விதத்தில பார்த்தா எல்லா மனுஷங்களும் தோற்றத்தில ஒத்தவங்கதான். இப்ப உன்னையும், என்னையும் எடுத்துக்கிட்டா நாம ரெண்டு பேரும் ஒரே மாதிரி உறுப்புகளைத்தான் கொண்டிருக்கோம். அதோட நம்ம ரெண்டு பேரோட குணங்களிலேயும் நிறைய ஒற்றுமை இருக்கு. அதனால நீயும் நானும் ஒத்த மனிதர்கள்னு சொல்லலாம். ஆனா உன் நண்பன் சந்திரனுக்கும், உன் ரூம்மேட் சேகருக்கும் ஒரே மாதிரி தோற்றம் இருந்தாலும், குணங்களில் ஒற்றுமை இல்லையே! அதனால, அவங்க ரெண்டு பேரும் ஒத்த மனிதர்கள் இல்லை! சரியா?"

"சரிதான். ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி குணங்கள் இருந்தால்தான் அவங்க ஒத்த மனிதர்கள்னு நீ சொல்றதை நான் ஏத்துக்கறேன். ஒத்த குணங்கள் இருக்கறவங்கதான் நண்பர்களாகவோ, நெருக்கமானவங்களாவோ இருக்காங்க. முக ஜாடையை வச்சு குணத்தைக் கணிக்க முயற்சி செஞ்சது என் தப்புதான்!" என்றான் ராஜேந்திரன்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 100
பண்புடைமை

குறள் 993:
உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.

பொருள்: 
உறுப்புக்களின் தோற்றத்தால் பிறருடன் ஒத்திருப்பது ஒப்பு ஆகாது; உள்ளத்துடன் இணையும் பண்பால் பிறருடன் ஒத்திருப்பதே ஒப்பு ஆகும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Monday, October 9, 2023

992. எம் டி இல்லாத நேரத்தில்...

"சார் எம் டி உங்களைக் கூப்பிடறாரு" என்று பியூன் யாரையாவது வந்து அழைத்தாலே அவ்வாறு அழைக்கப்பட்டவருக்கு ஒரு பெரிய மனச்சோர்வு ஏற்பட்டு விடும். 

மற்றவர்களில் சிலருக்கு, 'பாவம்! இன்னிக்கு இவன் மாட்டிக்கிட்டானா!' என்ற பரிதாபமும், வேறு சிலருக்கு 'நல்லா மாட்டிக்கிட்டான். திரும்பி வரப்ப செத்துச் சுண்ணாம்பாத்தான் வருவான்' என்ற குரூரமான மகிழ்ச்சியும் ஏற்படும்.

எம் டி செல்வமூர்த்தி கோபத்துக்கும்,கடுமையான சொற்களுக்கும் பெயர் போனவர். கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும்' என்ற பழமொழி அவருக்கு அடியோடு பொருந்தாது. தன்நிறுவனத்தில் வேலை செய்பவர்களிடம் மட்டுமின்றி, வாடிக்கையாளர்கள், அரசு அதிகாரிகள், மற்றவர்கள் என்று எல்லோரிடமுமே பண்பாடற்ற முறையில் நடந்து கொள்ளும் இயல்பு கொண்டவர் அவர்.

செல்வமூர்த்தி அலுவலகத்தில் இல்லாதபோது, சில ஊழியர்கள் ஒன்று கூடி அவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.

"சார் ஏன்தான் இப்படி இருக்காரோ தெரியல. சின்ன விஷயங்களுக்கெல்லாம் தப்பு கண்டுபிடிச்சு கண்டபடி திட்டறாரு. ஆனா ஒரு தடவை கூட யாரையும் பாராட்டினதாத் தெரியல!"

"நீ வேற! வாடிக்கையாளர்கள்கிட்ட பேசறப்ப கூட கனிவாப் பேச மாட்டாரு. நீ காசு கொடுக்கற, நான் பொருள் கொடுக்கறேங்கற மாதிரிதான் பேசறாரு. இப்படி நடந்துக்கறவர்கிட்ட வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பொருள் வாங்கறதே ஆச்சரியம்தான்!"

"என்னை மாதிரி சேல்ஸ் ரெப்ரசனடேடிவ்கள் வாடிக்கையாளர்களைப் பார்க்கப் போகச்சே, 'என்னையா உங்க எம் டி கொஞ்சம் கூட பண்பாடு இல்லாம நடந்துக்கறாரு! உங்களை மாதிரி சேல்ஸ் ரெப்ரசன்டேடிவ்கள் எல்லாம் பணிவாப் பேசறீங்க. உங்களுக்காகத்தான் உங்க கம்பெனியில இன்னும் நாங்க இன்னும் சரக்கு வாங்கிக்கிட்டிருக்கோம்' னு அவங்க சொல்லுவாங்க!"

"வீட்டில எப்படி நடந்துப்பாரு?"

"ஒரு தடவை அவர் வீட்டுக்குப் போயிருந்தேன். அவர் மனைவி, குழந்தைகள் கூட அவர்கிட்ட பயந்துக்கிட்டு இருக்கற மாதிரிதான் தெரியுது. வீட்டில ஒரு கலகலப்பான சூழ்நிலையே இல்லை!"

"எப்படி இருக்கும்? இவர்தான் யார்கிட்டேயும் அன்பு காட்ட மாட்டாரே! குற்றம் கண்டுபிடிக்கறதும், கோபம் காட்டறதும்தானே அவரோட  இயல்பு!"

"இவரோட அப்பாதானே இந்தத் தொழிலை ஆரம்பிச்சவரு? அவரு தங்கமானவரு, எல்லார்கிட்டேயும் அன்பா நடந்துப்பாருன்னு நான் வேலைக்குச் சேர்ந்த புதுசில அப்ப இருந்த சில சீனியர்கள் எங்கிட்ட சொல்லி இருக்காங்க."

"அவங்கள்ளாம் இப்ப எங்கே? ரிடயர் ஆயிட்டாங்களா?"

"ஒத்தர்தான் ரிடயர் ஆனாரு. மத்த மூணு பேரும் வேலையை விட்டுட்டுப் போயிட்டாங்க. போகும்போது, 'ஒரு பண்பான மனுஷனுக்கு மகனாப் பொறந்துட்டு இப்படிப் பண்பாடு இல்லாதவனா இருக்கானே! இவங்கிட்ட மனுஷன் வேலை பாப்பானா?' ன்னு எங்ககிட்டல்லாம் சொல்லிட்டுப் போனாங்க!"

"நல்ல குடும்பத்தில பொறந்தும் இவர் ஏன் இப்படிப் பண்பாடு இல்லாம இருக்காரு?"

"நல்ல குடும்பத்தில பொறந்திருந்தா போதுமா? அடுத்தவங்க மேல கொஞ்சம் கூட அன்பு இல்லாத மனுஷன்கிட்ட எப்படிப் பண்பாட்டை எதிர்பார்க்க முடியும்?"

"இவர் இப்படி நடந்துக்கிறதால இங்கே மானேஜரா வரவங்க யாரும் நிலைச்சு நிக்க மாட்டேங்கறாங்க. நமக்கும் அவருக்கும் நடுப்பற மானேஜர்னு ஒத்தர் இருந்தார்னா நமக்குக் கொஞ்சம் குஷன் மாதிரி இருக்கும்!"

"மானேஜர் இருந்திருந்தா எம் டி இல்லாத நேரத்தில நம்மால இப்படி சுதந்திரமாப் பேசிக்கிட்டிருக்க முடியாதே!"

அதற்குள் எம் டியின் கார் வரும் சத்தம் கேட்கவே, அனைவரும் தங்கள் இருக்கையில் அமர்ந்து தங்கள் வேலைகளில் கவனம் செலுத்த, அங்கே மயான அமைதி மீண்டும் திரும்பியது.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 100
பண்புடைமை

குறள் 992:
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.

பொருள்: 
அன்புடையவராக இருத்தல், உயர்ந்த குடியில் பிறந்த தன்மை அமைந்திருத்தல் ஆகிய இவ்விரண்டும் பண்பு உடையவராக வாழும் நல்வழியாகும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...