அதிகாரம் 52 - தெரிந்து வினையாடல்


திருக்குறள்
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 52
தெரிந்து வினையாடல்

511. முதல்வர் செல்லும் வழி

"இது வீட்டிலேந்து தலைமைச் செயலகத்துக்குப் போற வழி. இது கட்சி அலுவலகத்துக்குப் போற வழி. நீங்க அப்ரூவல் கொடுத்தப்பறம், அந்த வழிகளை கிளியர் பண்ணிடுவோம்" என்றார் பாதுகாப்பு அதிகாரி.

"கிளியர் பண்றதுன்னா?" என்றார் முதல்வர் தமிழ்மணி. அவர் அன்றுதான் முதல்வராகப் பதவி ஏற்றுக் கொண்டிருந்தார்.

"சாலையை ஒழுங்குபடுத்துவோம்."

"ஒழுங்குபடுத்தறதுன்னா, பழுது பார்க்கறதா?"

"சில இடங்களில பழுது பார்க்க வேண்டி இருக்கலாம். அதைத் தவிர, சில சாலைகளில் இருக்கிற நடைபாதைக் கடைகளை அப்புறப்படுத்திடுவோம்" என்றார் பாதுகாப்பு அதிகாரி, சற்றுத் தயக்கத்துடன்.

"சரி. இதில எங்கெங்கெல்லாம் நடைபாதைக் கடை வருதுன்னு காட்டுங்க!" என்றார் தமிழ்மணி.

பாதுகாப்பு அதிகாரி வரைபடத்தில் சில இடங்களைக் காட்டினார்.

"சரி. வேற வழியாப் போக முடியுமா, நடைபாதைக் கடைகள் இல்லாத சாலைகள் வழியா?"

"போகலாம் சார். ஆனா, மூணு கிலோமீட்டர் அதிகம் ஆகும்" என்றார் பாதுகாப்பு அதிகாரி.

தமிழ்மணி யோசனை செய்வது போல் சில விநாடிகள் மௌனம் காத்தார்.

அவர் அருகிலிருந்த முதல்வரின் தனிச் செயலர், "சார்! நடைபாதைக் கடைகளை அகற்றுவதற்காக திட்டம் போட்டு, ஒரு கமர்ஷியல் காம்ப்ளக்ஸ் கட்டி, அதில அந்தக் கடைகளுக்கு இடம் கொடுக்கிற திட்டம் இருக்கு" என்றார்.

"தெரியும். தலைவர் அமைச்சரவையில நகர்ப்புறத் துறை அமைச்சரா இருந்தப்ப, நான் போட்ட திட்டம்தான் அது. அப்புறம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, நம்ம திட்டங்கறதால, அவங்க அதைக் கிடப்பில போட்டுட்டாங்க!" என்றார் தமிழ்மணி.

"இப்ப, நாம அதை விரைவா நிறைவேற்றிடலாமே சார்!"

"நிறைவேற்றிடலாம். ஆனா, அதுக்கு ரெண்டு வருஷமாவது ஆகும். நடைபாதையில கடை வச்சிருக்கறவங்களை இப்ப அங்கேருந்து வெளியேற்றினா, அதுவரையிலும் அவங்க என்ன செய்வாங்க? வேண்டாம். அவங்களுக்கு எந்த பாதிப்பும் வேண்டாம்" என்று தனிச் செயலரிடம் கூறிய தமிழ்மணி, பாதுகாப்பு அதிகாரியைப் பார்த்து, "அந்த இன்னொரு வழியிலேயே போற மாதிரி ஏற்பாடு செஞ்சுடுங்க. ஆனா, அங்கேயும் ஒரு கடையைக் கூட அப்புறப்படுத்தக் கூடாது, யாருக்கும் எந்த பாதிப்பும் வரக் கூடாது!" என்றார்.

"செய்யலாம் சார்" என்றார் பாதுகாப்பு அதிகாரி 

"சார்! அரசாங்கத்தோட பொருளாதார நிலை மோசமா இருக்கறதால, செலவுகளைக் குறைச்சு, சிக்கனமா இருக்கறதா சொல்லி இருக்கீங்க..." என்றார் தனிச் செயலர் தயக்கத்துடன்.

"நான் போகும்போது, பாதுகாப்பு வாகனங்கள் வேற வரும். மூணு கிலோமீட்டர் அதிக தூரம் உள்ள வழியில போறதால, பெட்ரோல், டீசல் செலவு கணிசமா அதிகமாகும்னு சொல்றீங்க! அதுதானே?" என்றார் தமிழ்மணி.

"ஆமாம் சார்! அதோட ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும் இதைக் குற்றம் சொல்லிப் பேசுவாங்க."

"அவங்க பேசினாலும், பேசாட்டாலும், செலவு அதிகரிக்குங்கறது உண்மைதானே?" என்ற தமிழ்மணி, பாதுகாப்பு அதிகாரியைப் பார்த்து, "பாதுகாப்பு வாகனங்கள் எவ்வளவு வரும்?" என்றார்.

"ஒன்பது."

"ஒன்பதுங்கறது அதிர்ஷ்ட எண்ணா? அதை ஆறாக் குறைச்சுடுங்க. பெட்ரோல் செலவு முன்னை விட இன்னும் குறைவாகவே ஆகும்!" என்றார் தமிழ்மணி. சிரித்துக் கொண்டே.

"செய்யலாம் சார்! ஆனா..." என்று இழுத்தார் பாதுகாப்பு அதிகாரி.

"பாதுகாப்பு முக்கியம்தான். ஒன்பது வாகனங்களுக்கு பதிலா பன்னிரண்டு வாகனங்கள் இருந்தா, இன்னும் அதிகப் பாதுகாப்பு இருக்கும்தான்! ஒன்பது வாகனங்கள் கொடுக்கற பாதுகாப்பு போதும்னு நினைக்கிறோம் இல்ல? அதை இன்னும் கொஞ்சம் மாத்தி, ஆறு வாகனங்கள் கொடுக்கிற பாதுகாப்பு போதும்னு நினைப்போம். அவ்வளவுதான்!" என்றார் முதல்வர் தமிழ்மணி.

குறள் 511
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்.

பொருள்:
ஒரு செயலின் நன்மை தீமை இரண்டையும் ஆராய்ந்து, எது நன்மையோ அதையே செய்ய வேண்டும்.  

                                                      512. தேர்தல் அறிக்கை!

"தேர்தல்ல நீ யாருக்கு ஓட்டுப் போடப் போற, தமிழ் மக்கள் கட்சிக்கா, அனைத்துலக தமிழர் கட்சிக்கா?"

"அதைத் தீர்மானிக்கத்தான், ரெண்டு கட்சிகளோட தேர்தல் அறிக்கைகளையும் ஒப்பிட்டுப் பாத்துக்கிட்டிருக்கேன்."

"தேர்தல் அறிக்கைகளை மட்டும் பார்த்தா போதுமா, கட்சிகளோட கொள்கைகள், தலைவர்களோட தன்மை, இரண்டு கட்சிகளும் ஆட்சியில இருந்தப்ப செஞ்ச நன்மைகள், கெடுதல்கள் எல்லாத்தையும் பார்க்க வேண்டாமா?"

"பார்க்கணும்தான். முதல்ல, தேர்தல் அறிக்கைகளை ஒப்பிட்டுப் பார்ப்போம், ஏன்னா, தேர்தல் அறிக்கைதானே, ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தா என்ன செய்யப் போகுதுங்கறதுக்கான செயல் திட்டம்?"

"அது சரிதான். ஆனா, ரெண்டு கட்சிகளும் ஒரே மாதிரியான பல வாக்குறுதிகளைக் கொடுத்திருக்காங்க. யாரு அதிக எண்ணிக்கையில, அல்லது அதிக மதிப்பில வாக்குறுதிகள் கொடுத்திருக்காங்கன்னு பாக்கப் போறமா?"

"கடந்த காலத்தில மக்கள் அப்படிப் பார்த்து ஓட்டுப் போட்டுதான் ஏமாந்திருக்காங்க. அதனாலதான், கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில விரிவான செயல் திட்டத்தைக் கொடுக்கணும்னு புது நெறிமுறை வந்திருக்கு."

"ஆமாம். நிறைய விவரங்கள், கணக்குகள் எல்லாம் கொடுத்திருக்காங்க. பார்த்தேன். ஆனா, அதையெல்லாம் படிச்சுப் பார்க்க எனக்குப் பொறுமையில்ல!"

"கொஞ்சம் கவனமாப் படிச்சா, நிறைய தெரிஞ்சுக்கலாம்!"

"சரி. நீ படிச்சுத் தெரிஞ்சுக்கிட்டதை சொல்லு."

"ஒரு கட்சி அதிகமா வாக்குறுதிகள் கொடுத்திருக்கு. ஆனா, அதுக்கெல்லாம் நிதி எங்கேயிருந்து வரும்கறதைப் பத்தித் தெளிவா விளக்காம, பொதுவாச் சொல்லி மழுப்பி இருக்கு. ஆனா, இன்னொரு கட்சி மாநிலத்தோட வளங்களை எப்படிப் பெருக்கப் போறாங்க, அதிலேருந்தெல்லாம் எவ்வளவு வருமானம் வரும்,  அந்தக் கூடுதல் வருமானத்தை வச்சு எப்படி அவங்க வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான செயல்திட்டங்களை உருவாக்கப் போறாங்க என்பதையெல்லாம் விளக்கமா, புள்ளி விவரங்களோட கொடுத்திருக்காங்க."

"அப்படியா?"

"அதோட இல்லாம, திட்டங்களை நிறைவேற்றும்போது என்னென்ன சுற்றுச் சூழல் பிரச்னைகள் வரும், அவற்றை எப்படி சமாளிக்கப் போறாங்க, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை அகற்றும்போது, அங்கே வசிக்கிற ஏழை மக்களை எங்கே குடியமர்த்தப் போறாங்க என்பதையெல்லாம் கூட விளக்கி இருக்காங்க!"

"ஆச்சரியமா இருக்கே! நிபுணர்களைக் கலந்தாலோசிச்சுத் தயாரிச்சிருக்கிற மாதிரி இல்ல இருக்கு? இன்னோரு கட்சியோட அறிக்கையில இதெல்லாம் இல்லையா?"

"இல்லை. சும்மா எதையோ எழுதிப் பக்கங்களை நிரப்பி இருக்காங்க."

"சரி. எந்தக் கட்சி இப்படி விரிவான அறிக்கை தயாரிச்சிருக்கு?"

"த.ம.க!"

"அப்ப உன் ஓட்டு த.ம.க.வுக்குத்தானா?"

"ஆமாம்."

"அப்ப, என் ஓட்டும் த.ம.க.வுக்குத்தான்!"

"நீ வேற சில விஷயங்களைப் பார்க்கணும்னு சொன்னியே!"

"அதன்படி பாத்தா, த ம க.வைத்தான் தேர்ந்தெடுக்க முடியும்னு எல்லோருக்குமே தெரியுமே! 

குறள் 512:
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.

பொருள்:
பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவனே செயல்களைச் செய்ய வேண்டும். (அத்தகையவனே செயல் புரியத் தகுதி உள்ளவன்)

513. மன்னரின் தேர்வு

"அமைச்சரே! நம் தனாதிகாரி வயது மூப்பு காரணமாக ஓய்வு பெற விரும்புகிறார். புதிதாக ஒருவரை அந்தப் பதவியில் நியமிக்க வேண்டும். நீங்கள் யாரைப் பரிந்துரை செய்கிறீர்கள்?" என்றார் மன்னர் கீர்த்திவர்மன்.

"அரசே! பொதுவாக, ஒரு பெரிய செல்வந்தரை இந்தப் பதவிக்கு நியமிப்பதுதான் வழக்கமாக இருந்திருக்கிறது. ஆனால், தகுதி அடிப்படையில் ஒருவரை நியமிப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். தாங்கள் இதை ஏற்றுக் கொண்டால், குறிப்பிட்ட சில தகுதிகளின் அடிப்படையில் ஒருவரை நியமிக்கலாம்" என்றார் அமைச்சர்.

"என்ன அந்தத் தகுதிகள்?"

"அரசே! தனாதிகாரியாக இருப்பவருக்கு சிறந்த அறிவுத்திறன் இருக்க வேண்டும். மக்களிடம் வரி வசூலிக்கும் பொறுப்பு அவருக்கு இருக்கிறது. கருணை அடிப்படையில் சிலருக்கு வரி விலக்கு அளிக்க அவருக்கு அதிகாரம் இருக்கிறது. எனவே, யாரிடம் கடுமையாக நடந்து கொள்வது, யாரிடம் கருணை காட்டுவது என்பது பற்றிய தெளிவு அவரிடம் இருக்க வேண்டும். அத்துடன், பெருமளவில் நிதியைக் கையாள்வதால், அவர் பொருளாசை அற்றவராகவும் இருக்க வேண்டும்."

"சரி. அத்தகைய தகுதி உள்ளவரை எப்படிக் கண்டறிவது?"

"நம் அரண்மனையில் பணி புரிவர்களில், இந்த இயல்புகள் உள்ள சிலரை நான் அடையாளம் கண்டு, அவர்களில் மூன்று பேரைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். அந்த மூன்று பேரில் ஒருவரை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்."

"சரி. நாம் இருவரும் சேர்ந்தே ஒருவரைத் தேர்ந்தெடுப்போம். அந்த மூவரையும் வரச் சொல்லுங்கள்" என்றார் அரசர்.

மூவரையும் அழைத்துப் பேசியபின், "அமைச்சரே! மூவருமே எளிமையான குடும்பத்திலிருந்து வந்தவர்களாக இருக்கிறார்களே!" என்றார் மன்னர்.

"அதுதான் துவக்கத்திலேயே சொன்னேன், அரசே! தனாதிகாரியாக ஒரு செல்வந்தரை நியமிப்பதுதான் நடைமுறை, ஆனால், தகுதி அடிப்படையில் நியமிப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று..." என்றார் அமைச்சர், தயக்கத்துடன்.

"உங்கள் யோசனையைத்தான் நான் ஏற்றுக் கொண்டு விட்டேனே, அமைச்சரே! எப்போதும் இருப்பது போல் இல்லாமல், இந்த முறை தனாதிகாரி ஒரு எளிய குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்கப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டேன். அவ்வளவுதான். மூன்றாவதாக வந்த நபர் சிறந்த தேர்வாக இருப்பார் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"

"என் தேர்வும் அவர்தான் மன்னரே!" என்றார் அமைச்சர், மகிழ்ச்சியுடன்.

"அப்படியானால், அவரையே நியமித்து விடலாம். இந்தப் பதவியை எதிர்பார்த்திருந்த சில செல்வந்தர்கள் ஏமாந்து போவார்கள்! அதற்கு என்ன செய்வது?" என்றார் மன்னர், சிரித்துக் கொண்டே.

குறள் 513 
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.

பொருள்:
அன்பு, அறிவு, தெளிவுடன் கூடிய செயல்திறன், அவா இல்லாமை ஆகிய நான்கு பண்புகளும் சிறப்பாக அமைந்தவரையே  தேர்வு செய்ய வேண்டும்.

514. முதல் மூவர்

அந்த நிறுவனத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்பு துவங்கியது.

நிறுவனத்தின் பொது மேலாளர் கண்ணன் அறிமுக உரை நிகழ்த்தினார்.

புதிய அதிகாரிகளை வரவேற்று, பயிற்சி பற்றி அவர்களுக்கு விளக்கி விட்டு, "பயிற்சியைத் துவக்கி வைக்குமாறு நம் நிறுவனத் தலைவர் மார்க்கபந்து அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்" என்றார் அவர். 

எளிய உடையணிந்து, அமைதியாக மேடையில் அமர்ந்திருந்த அந்த முதியவர் எழுந்து மைக் முன் நின்று பேசத் தொடங்கினார்.

"நீங்க உக்காந்துகிட்டே பேசலாம் சார்!" என்றார் கண்ணன்.

"இல்லை. நின்னுகிட்டே பேசறேன். என்னை மாதிரி வயசானவங்களுக்கு, இது மாதிரி நின்னுக்கிட்டே பேசறது கூட ஒரு உடற்பயிற்சி மாதிரிதானே? அதோட, நின்னுகிட்டே பேசினாதான், கால்வலி வந்து, பேச்சை சீக்கிரம் முடிக்க வைக்கும்!" என்று மார்க்கபந்து கூறியதும், அமர்ந்திருந்தவர்களிடையே மெல்லிய சிரிப்பு எழுந்தது.

"இருபது வருடங்களுக்கு முன்பு இந்த நிறுவனத்தை நான் துவங்கியபோது, மூன்று அதிகாரிகளைத்தான் வேலைக்கு எடுத்தேன். இன்று, ஒரே நேரத்தில் இருபது அதிகாரிகளை வேலைக்கு எடுக்கற அளவுக்கு நம் நிறுவனம் வளர்ந்திருப்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது.

"பொதுவாக, எந்த வேலையையும் முறையாகச் செய்ய வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருப்பவன். அதிகாரிகளை நியமிப்பதிலும் அப்படித்தான் செய்தேன். என் நண்பர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்கள் சிலரைப் பரிந்துரை செய்தார்கள். அவர்கள் நம்பிக்கையானவர்களாக இருப்பார்கள் என்று சொன்னார்கள்.

"நம்பிக்கையானவர்களாக இருந்தால் மட்டும் போதுமா? அறிவு, செயல்திறன், முடிவெடுக்கும் திறன், விரைவாகச் செயல்படுதல், முன்முயற்சி எடுத்துச் செயல்படுதல் போன்ற பல தன்மைகளை மதிப்பீடு செய்துதான் சிறந்த ஊழியர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைத்து, பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து, விண்ணப்பம் செய்தவர்களில் வடிகட்டி எடுத்த சிலரை நேரில் அழைத்துப் பேசி, அவர்கள் பின்னணியை ஆராய்ந்து, ஒரு நீண்ட விரிவான வழிமுறையைப் பின்பற்றி, மூன்று பேரைத் தேர்ந்தெடுத்தேன்.

"ஊழியர்களிடம் இருக்க வேண்டிய சில தன்மைகளின் அடிப்படையில் என் முதல் மூன்று அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்தாக நான் கூறினேன். நீங்கள் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால், உங்களிடம் அந்தத் தன்மைகள் இருப்பதாக நினைத்து நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்ளாலாம். வாழ்த்துக்கள்!"

கேட்டுக் கொண்டிருந்தவர்களின் முகங்களில் இயல்பான புன்னகை தெரிந்தது. ஒரு சிலர் கைதட்டத் துவங்கி விட்டு, மற்றவர்கள் கைதட்டாததால், தங்கள் கைதட்டலை நிறுத்திக் கொண்டனர்.

"என்ன தயக்கம்? கைதட்டுங்கள். நம்மை நாமே கொண்டாடிக் கொள்வது மிகவும் முக்கியம்!" என்று மார்க்கபந்து கூறியதும், அனைவரும் உற்சாகத்துடன் கைதட்டினர்.

"நான் பேசுவது கதை சொல்வது போல் உங்களுக்குத் தோன்றி இருக்கலாம், கதை என்றால் அதில் ஒரு திருப்பம், ஒரு ட்விஸ்ட் இருக்க வேண்டுமே!" என்று சொல்லி நிறுத்தினார் மார்க்கபந்து.

சில விநாடிகள் முன்பு ஆரவாரமாகக் கைதட்டியவர்கள், இப்போது முழு அமைதியுடன் தங்கள் நிறுவனத் தலைவர் சொல்லப் போவதைக் கேட்கக் காத்திருந்தனர்.

"நான் தேர்ந்தெடுத்த மூவரும் அறிவு, திறமை. ஆளுமை எல்லாவற்றிலும் நிறந்தவர்கள்தான். ஆனால், காலப்போக்கில் சில மாறுதல்கள் ஏற்பட்டன. இந்த மூவரில் ஒருவர் மோசடி செய்து கண்டுபிடிக்கப்பட்டு, நான் கொடுத்த புகாரினால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் தண்டனை கொடுக்கப்பட்டு, சிறைக்குச் சென்று விட்டார்.

"இன்னொருவர் வேலையில் அதிக ஆர்வம் காட்டாமல், சராசரியாகச் செயல்பட்டு வந்தார். சில வருடங்கள் கழித்து, தனக்குப் பதவி உயர்வு கிடைக்கவில்லை என்ற ஏமாற்றத்தால் வேலையை விட்டுப் போய் விட்டார். அவர் போய்ச் சேர்ந்த நிறுவனத்திலும் அவருக்கு அதிக முன்னேற்றம் ஏற்பட்டிருக்காது என்று நினைக்கிறேன்..

"அதற்குப் பிந்தைய காலத்தில் நான் தேர்ந்தெடுத்து நியமித்த சில அதிகாரிகளிடமும் இது போன்ற மாறுபாடுகளை நான் பார்த்தேன். முதலில் இது எனக்கு ஏமாற்றம் அளித்து, என் மீதே கோபத்தை ஏற்படுத்தியது.

"இது இயல்பானது என்று புரிந்து கொள்ள எனக்குப் பல வருடங்கள் பிடித்தன. என்னதான் விண்ணப்பம் செய்தவர்களை நாம் ஆய்வு செய்து, அவர்களில் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுத்தாலும், இயல்பாகவே மனிதர்கள் வேறுபட்ட சிந்தனைகளும், செயல்வகைகளும் உள்ளவர்கள். அதனால், இத்தகைய வேறுபட்ட செயல்பாடுகள் ஏற்படத்தான் செய்யும் என்று புரிந்து கொண்டேன்.

"ஒரு விதத்தில் இது என் ஈகோவுக்குக் கிடைத்த அடி என்று கொள்ளலாம். நம்மால் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முடியும் என்பது தவறான நம்பிக்கை என்று இந்த அனுபவங்கள் எனக்குப் புரிய வைத்தன.

"சமீப காலங்களில், ஊழியர்களைத் தேர்ந்தெடுப்பதில் நான் எந்தப் பங்கும் பெறுவதில்லை. உங்களைச் சிறந்த முறையில் ஆய்வு செய்துதான் தேர்ந்தெடுத்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியும், எனவே, நீங்கள் பல விதங்களிலும் சிறந்தவர்கள்தான் என்பதில் சந்தேகமில்லை. 

"ஆனால், உங்களை நிலைநிறுத்திக் கொள்வதும், உங்களை உயர்த்திக் கொள்வதும் உங்கள் கைகளில், உங்கள் செயல்பாடுகளில்தான் இருக்கிறது. இதை நீங்கள் புரிந்து கொண்டு செயல்பட்டால், இந்த நிறுவனத்தில் மட்டுமின்றி, உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் பெருமளவில் உயர முடியும்."

மார்க்கபந்து அமர்ந்ததும் பெரும் கைதட்டல் எழுந்தது.

கைதட்டல் அடங்கியதும், ஒருவர் தயக்கத்துடன் எழுந்து, "சார்! ஒரு சந்தேகம். கேட்கலாமா?" என்றார்.

"கேளுங்கள்."

"நீங்கள் துவக்கத்தில் பணியமர்த்திய மூன்று அதிகாரிகளில், இரண்டு பேரைப் பற்றிக் கூறினீர்கள். மூன்றாவது நபர் பற்றிக் கூறவில்லையே!" என்றார் அவர்.

"ஓ! மறந்து விட்டேன். அல்லது, வேண்டுமென்றேதான் கூறவில்லை என்றும் வைத்துக் கொள்ளலாம்!" என்று சிரித்துக் கொண்டே கூறிய மார்க்கபந்து, "அவர் தன் சிறப்பான செயல்பாட்டினால் முன்னேறி, இன்று இந்த நிறுவனத்தின் பொது மேலாளராகி விட்டார்" என்றபடியே, தன் அருகில் அமர்ந்திருந்த பொது மேலாளர் கண்ணனைப் பெருமையுடன் பார்த்து, அவர் தோளில் தட்டினார்.

குறள் 514:
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்.

பொருள்:
எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும் (செயலை மேற்கொண்டு செய்யும் போது), செயல்வகையால் வேறுபடும் மக்கள் உலகத்தில் பலர் உண்டு.

515. சிவானந்தத்தின் முடிவு

"நான் இந்த நிறுவனத்தை ஆரம்பிச்ச நாளிலேருந்து, என் வலது கையா இருந்து எனக்கு உதவுகிறவர் இந்த பாலுதான்!" என்றுதான் தொழிலதிபர் சிவானந்தம் பாலுவை எல்லோருக்குமே அறிமுகம் செய்து வைப்பார். 

பட்டப்படிப்பை முடித்ததும், சிவானந்தத்தின் சிறிய நிறுவனத்தில் வேலை கிடைத்தபோது, அதை ஒரு தற்காலிக வேலையாக நினைத்துத்தான் அங்கே வேலைக்குச் சேர்ந்தான் பாலு.

ஆனால் சிவானந்தம் அவனிடம் காட்டிய அன்பும், அவனுக்குக் கொடுத்த முக்கியத்துவமும், அவனை அந்த நிறுவனத்திலேயே தொடர்ந்து பணி செய்ய வைத்தன. வேறு வேலைக்கு முயற்சி செய்யாமல், தன் எதிர்காலத்தை அந்த நிறுவனத்துடனேயே இணைத்துக் கொண்டான் பாலு.

பாலுவை விட அதிகம் படித்தவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கணினி நிபுணர்கள், மார்க்கெடிங் நிபுணர்கள் என்று சிலர் அந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தாலும், அவர்கள் அனைவரும் பாலுவுக்குக் கீழ்தான் பணியாற்ற வேண்டும் என்ற நிலையை உருவாக்கினார் சிவானந்தம்.

"நம்ம கம்பெனிக்கு ஒரு பெரிய விரிவாக்கத் திட்டம் வச்சிருக்கேன். அது நிறைவேறும்போது, உனக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கிடைக்கும்" என்று பாலுவிடம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார் சிவானந்தம். 

"பாலு! நான் ரொம்ப நாளா திட்டம் போட்டுக்கிட்டிருந்த விரிவாக்கத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துடுச்சு!" என்றார் சிவானந்தம்.

"ரொம்ப சந்தோஷமா இருக்கு சார்!" என்றான் பாலு, 

"சரியா சொல்லணும்னா, இது விரிவாக்கம் இல்ல, ஒரு புது ப்ராஜக்ட். வேற ஒரு கம்பெனியை ஆரம்பிச்சு, அதிலதான் இதை செயல்படுத்தப் போறோம்" என்ற சிவானந்தம்,"இந்த ப்ராஜக்டை நிர்வகிக்க, புது கம்பெனியோட சீ ஈ ஓ-வா ரமணனைப் போடலாம்னு இருக்கேன்" என்றபடி, பாலுவின் முகத்தைப் பார்த்தார்.

பாலு எதுவும் சொல்லவில்லை. ஆனால், அதிர்ச்சியும், ஏமாற்றமும் அவன் முகத்தில் பிரதிபலித்தன.

"இந்த ப்ராஜக்டை செயல்படுத்தறப்ப, உன்னைத்தான் புது கம்பெனிக்கு சீ ஈ ஓ-வாப் போடறதா இருந்தேன். ஆனா இந்த ப்ராஜக்ட் ரொம்ப காம்ப்ளிகேடட். ஒவ்வொரு ஸ்டேஜிலேயும் நிறைய அப்ரூவல்கள் வாங்கணும். தொழிற்சாலைக்குக் கட்டிடம் கட்டறதிலேருந்து, இயந்திரங்கள் நிறுவற வரை, கான்ட்ராக்டுகள் கொடுத்து, கான்டிராக்டர்களோட மல்லுக்கு நின்னு, வேலைகளை சரியான விதத்தில, குறிப்பிட்ட காலத்துக்குள்ள முடிக்கிறவரை, எல்லாமே சவாலான வேலைகள்தான்..

"நீ திறமையானவன்தான். ஆனா, இந்த ப்ராஜக்டை நிர்வகிக்க, கொஞ்சம் கடினத்தன்மை வேணும். குறிப்பிட்ட சில வகை அனுபவங்கள் வேணும். அதனால, ரமணன்தான் இதுக்குத் தகுந்தவனா இருப்பான்.

"ஆனா, உன்னோட முக்கியத்துவம் குறையாது. உன்னை நான் எக்சிக்யூடிவ் செகரட்டரி டு சேர்மனா நியமிக்கப் போறேன். அதனால, ரமணன் கூட என் அனுமதிகளைப் பெற உன் மூலமாத்தான் வரணும். இப்ப இருக்கிற கம்பெனி, புது கம்பெனி ரெண்டிலேயுமே, எனக்கு அடுத்த நிலையில நீ இருப்ப. சரிதானே?" என்றார் சிவானந்தம்

தான் ஏமாற்றம் அடையக் கூடாது என்பதற்காகத்தான் சிவானந்தம் இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறார் என்பது பாலுவுக்குப் புரிந்தது.

தான் எதிர்பார்த்திருந்த பொறுப்பு கிடைக்காவிட்டாலும், சிவானந்த்தின் முடிவில் இருந்த நியாயத்தையும், தான் ஏமாற்றம் அடையக் கூடாது என்பதற்காக, அவர் தனக்கு இன்னொரு உயர் பொறுப்பைக் கொடுத்திருப்பதையும் புரிந்து கொண்டவனாக, பாலு மௌனமாகத் தலையாட்டினான்.

குறள் 515:
அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.

பொருள்:
(செய்யும் வழிகளை) அறிந்து இடையூறுகளைத் தாங்கிச் செய்து முடிக்க வல்லவனை அல்லாமல், மற்றவனைச் சிறந்தவன் என்று கருதி ஒரு செயலைச் செய்யுமாறு ஏவக் கூடாது.

516. தலைவரிடமிருந்து அழைப்பு!

த.மு.க. கட்சித் தலைவர் செல்வேந்திரன் பொதுக்கூட்ட மேடைக்குக் காரில் வந்து கொண்டிருந்தபோது, சற்றுத் தொலைவிலிருந்தே, மேடையில் பேசிக் கொண்டிருந்தவரின் பேச்சு அவர் காதில் விழுந்தது.

"காரைக் கொஞ்சம் ஓரமா நிறுத்தச் சொல்லு" என்றார் செல்வேந்திரன், முன் இருக்கையில் ஓட்டுருக்கு அருகே அமர்ந்திருந்த மாவட்டச் செயலாளர் பழனியிடம்.

கார் ஓரமாக நிறுத்தப்பட்டது. காரில் அமர்ந்தபடியே, ஒலிபெருக்கியின் மூலம் வந்து கொண்டிருந்த பேச்சை ஆர்வத்துடன் கவனித்துக் கேட்ட செல்வேந்திரன், ஐந்து நிமிடங்கள் கழித்து, "இப்ப போகலாம்!" என்றார்.

"எதுக்கையா காரை நிறுத்தச் சொன்னீங்க?" என்றான் பழனி.

"பேசிக்கிட்டிருக்கறது யாரு?" என்றார் செல்வேந்திரன்.

"பூமணின்னு ஒரு இளைஞன். ரொம்ப ஆர்வம் உள்ள தொண்டன். படிச்ச பையன்" என்ற பழனி, "அவன் பேச்சைக் கேக்கறதுக்கா காரை நிறுத்தச் சொன்னீங்க?" என்றான் சற்று வியப்புடன்.

"ஆமாம். அவன் பேச்சு நல்லா இருந்தது. நாம அங்கே போனதும், அவன் பேச்சை நிறுத்திடுவான் இல்ல? அதான் கொஞ்ச நேரம் நின்னு அவன் பேச்சைக் கேட்டேன்."

பொதுக்கூட்டம் முடிந்ததும், செல்வேந்திரனிடம் பூமணியை அறிமுகப்படுத்தி வைத்தான் பழனி.

"நல்லா பேசற தம்பி!" என்றார் செல்வேந்திரன், சுருக்கமாக.

சில மாதங்களுக்குப் பிறகு வந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் பரிந்துரை செய்யப்பட்ட வேட்பாளர்கள் பட்டியல் செல்வேந்திரனிடம் வந்தபோது, பூமணியை ஒரு வேட்பாளராக மாவட்டச் செயலாளர் பழனி பரிந்துரைத்திருந்ததைப் பார்த்து விட்டு, "யார் இந்தப் பூமணி?" என்றார் செல்வேந்திரன்.

"ஐயா! நம் மாவட்டத்தில நடந்த பொதுக்கூட்டத்தில அவன் பேச்சை நீங்க கேட்டுட்டு நல்லா இருக்குன்னு சொன்னீங்களே! புதுமுகங்களுக்கு வாய்ப்புக் கொடுக்கணும்னு நீங்க சொன்னதால, இந்தத் தொகுதியில அவனை நிக்க வச்சா நல்லா இருக்கும்னு நினைச்சேன்" என்றான் பழனி.

ஒரு நிமிடம் யோசனை செய்த செல்வேந்திரன், "இப்ப வேண்டாம், பழனி. வேற சந்தர்ப்பத்தில பார்க்கலாம்" என்றார்.

அன்று பூமணியின் பேச்சைக் கேட்டுப் பாராட்டிய தலைவர், அதற்குள் அவனை மறந்து விட்டாரே என்று நினைத்துக் கொண்டார் பழனி.

"உனக்கு சீட்டு கொடுக்கணும்னுதான் நான் சொன்னேன். ஆனா, தலைவர் ஒத்துக்கல" என்று பழனி பூமணியிடம் சொன்னபோது, பூமணிக்கு ஏமாற்றமாக இருந்தது.

சட்டமன்றத் தேர்தலில் த.மு.க. வெற்றி பெறவில்லை. ஆனால் கணிசமான இடங்களைப் பிடித்து, வலுவான எதிர்க்கட்சியாக வந்தது.

சில மாதங்கள் கழித்து, பூமணியைத் தலைவர் பார்க்க விரும்புவதாகக் கட்சியின் தலைமையகத்திலிருந்து பழனி மூலம் செய்தி அனுப்பப்பட்டது.

"தலைவர் என்னை எதுக்கு வரச் சொல்லி இருக்காரு?" என்றான் பூமணி, வியப்புடன்.

"தலைவருக்கு உன் பேச்சு புடிச்சிருந்தது. கட்சியோட பேச்சாளர்கள்ள ஒத்தரா உன்னை நியமிச்சு, மாநிலம் முழுக்க கட்சிக் கூட்டங்கள்ள பேச உனக்கு வாய்ப்பு கொடுக்கப் போறாருன்னு நினைக்கிறேன். அது ஒரு நல்ல வாய்ப்பு. இதை மனசில வச்சுக்கிட்டுத்தான் உனக்கு சட்டமன்றத்தில சீட்டு கொடுக்கலேன்னு நினைக்கிறேன். தலைவர் எப்பவுமே வித்தியாசமா யோசிப்பாரு. அவரு எப்ப எந்த முடிவு எடுப்பாருன்னு யாராலயும் ஊகிக்க முடியாது. ஆனா, ஒத்தர்கிட்ட இருக்கற திறமையை அடையாளம் கண்டு அவருக்குச் சரியான வாய்ப்பு கொடுக்கறதில அவருக்கு நிகர் அவர்தான்!" என்றான் பழனி.

"வா, பூமணி. அன்னிக்கு உன் பேச்சைக் கேட்டேன். ரொம்ப அருமையாப் பேசின. ஆனா நீ பொருளாதாரம் பத்தியும், தேசத்தோட பாதுகாப்பு பத்தியும் பேசின. அது சாதாரண மக்கள்கிட்ட எடுபடாது. சட்டமன்றத் தேர்தல்ல உனக்கு சீட் கொடுக்கச் சொல்லி பழனி சிபாரிசு செஞ்சாரு. ஆனா, தேர்தல்ல மக்கள்கிட்ட பிரசாரம் பண்ணி வெற்றி பெறுவது கடினமான விஷயம். உனக்கு அது சரியா வராதுன்னுதான் உனக்கு சீட் கொடுக்கல. தேசிய அளவிலான பிரச்னைகளைப் பேச, நம்ம கட்சியில சரியான நபர் இல்லேங்கற குறை எனக்கு ரொம்ப நாளா உண்டு. இப்ப வரப் போற மாநிலங்களவைத் தேர்தல்ல, நம்ம கட்சிக்கு ஒரு இடம் உறுதியாக் கிடைக்கும். அதுக்குப் பல மூத்த தலைவர்கள் போட்டி போடறாங்க. ஆனா, அந்த சீட்டை உனக்குக் கொடுக்க முடிவு செஞ்சிருக்கேன். உன்னுடைய சிறப்பான பேச்சு மாநிலங்களவையில் ஓங்கி ஒலித்து நம் கட்சிக்குப் பெருமை சேர்க்கட்டும்!" என்றார் செல்வேந்திரன்.  

குறள் 516:
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்.

பொருள்:
செயலாற்ற வல்லவனைத் தேர்ந்து, செய்யப்பட வேண்டிய செயலையும் ஆராய்ந்து, காலம் உணர்ந்து அதைச் செயல்படுத்த வேண்டும்.

517. நல்லெண்ணத் தூதர்

"அரசே! கங்கவர்மரிடமிருந்து ஓலை வந்திருக்கிறது" என்றார் அமைச்சர்.

"என்ன எழுதி இருக்கிறார்?"

"நம் படை வீரர்கள் அவ்வப்போது எல்லை தாண்டி, அவர் நாட்டுக்குள் நுழைகிறார்களாம். நாம் அவர் நாட்டின் மீது போர் தொடுக்க ஆயத்தமாவதாக அவர் நினைக்கிறாராம். அவர்கள் நாடு சிறிய நாடு என்று நினைத்து நாம் அவர்கள் மீது படையெடுத்தால், அவர்களுக்கு உதவ ஒரு வலிய நாடு தயாராக இருப்பதாக நம்மை எச்சரித்திருக்கிறார்." 

"வியப்பாக இருக்கிறதே! நாம் அவர்களுடன் நட்பாகத்தானே இருக்கிறோம்? ஆமாம், நம் படை விரர்கள் எல்லை தாண்டி அவர்கள் நாட்டுக்குள் நுழைவது உண்மைதானா?"

"ஓரிரு வீரர்கள் எல்லை எது என்று அறியாமல் எல்லையைத் தாண்டிச் சென்றிருக்கலாம். வேண்டுமென்று அத்துமீறல்கள் எதுவும் நடந்திருக்காது."

"சமீப காலமாக,  கங்கவர்மர் சல்வ நாட்டுடன் அதிக நெருக்கம் காட்டி வருகிறார். சல்வ நாட்டு மன்னன்தான் கங்கவர்மர் மனதில் நம்மைப் பற்றிய தவறான எண்ணங்களை விதைத்து, நம்முடன் போரை ஏற்படுத்தி, அதில் அவர்களுக்கு உதவுவதாகச் சொல்லி நுழைந்து, நம் நாட்டின் சில பகுதிகளைப் பிடிக்கத் திட்டமிடுகிறான் என்று நினைக்கிறேன். நாம் என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?" என்றார் அரசர்.

"கங்கவர்மரிடம் ஒரு தூதுவரை அனுப்பி, நம் நல்லெண்ணத்தை அவருக்குத் தெரியப்படுத்துவோம். அப்போதும் அவர் நம் நட்பைப் புரிந்து கொள்ளாவிட்டால், அவருடன் போர் புரிய நாம் தயாராக வேண்டியதுதான்!" என்றார் அமைச்சர்.

"நல்ல யோசனை. தூதுவராக யாரை அனுப்பலாம்?"

"நம் படைத்தலைவரை அனுப்பலாம், மன்னா. அவர் தெளிவாகவும், உறுதியாகவும் பேசக் கூடியவர். அவர் மூலம் நம் நல்லெண்ணத்தைத் தெரிவிப்பதுடன், கங்கவர்மருக்கு நம் எச்சரிக்கையையும் தெரிவிக்கலாம்!"

அரசர் சற்று யோசித்து விட்டு, "நம் அரசவைப் புலவரை அனுப்பினால் என்ன?" என்றார்.

"அரசே! புலவருக்கு அரசாங்க விஷயங்கள் பற்றி அதிகம் தெரியாது. அவரால் நம் கருத்தைத் தெளிவாக கங்கவர்மனிடம் எடுத்துரைக்க முடியுமா என்பது சந்தேகம்தான்!" என்றார் அமைச்சர், தயக்கத்துடன்.

"அவர் என்ன பேச வேண்டும் என்பதை நீங்கள் அவருக்கு விளக்கிச் சொல்லுங்கள். கங்கவர்மர் ஏற்கெனவே நம் மீது தவறான எண்ணம் கொண்டிருக்கையில், படைத்தளபதியை அனுப்புவது, நாம் போரை விரும்புகிறோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தக் கூடும். புலவரை அனுப்புவது ஒரு நட்புச் செய்தியாக இருக்கும். 

"கங்கவர்மனுக்கு இலக்கிய ஆர்வம் உண்டு. எனவே, நம் புலவர் அவரிடம் பல விஷயங்கள் பற்றிப் பேசி, ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். அத்துடன், நம் புலவர் அவர்கள் நாட்டுப் புலவர்களிடம் கலந்து உரையாடுவதும் இரு நாடுகளிடையே நட்பை வளர்க்கும்.

"நம் புலவர் இனிமையாகப் பேசும் இயல்புடையவர். அவரிடம் மிகுந்த நகைச்சுவை உணர்வு உண்டு. இந்த குணங்களே அவர் செல்லும் நோக்கத்துக்கு வெற்றியைத் தேடித் தரும் என்று நினைக்கிறேன். என்ன சொல்கிறீர்கள்?"

அரசர் சொல்வதை ஏற்றுக் கொள்வதாக அமைச்சர் தலையசைத்தார்.

குறள் 517:
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.

பொருள்:
இந்தச் செயலை இக்கருவியால் (இந்த வழியில்) இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்து அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.


518. நண்பனுக்கு ஒரு யோசனை!

என் கல்லூரிப் படிப்புக்குப் பிறகு, நான் ஒரு மத்திய அரசு வேலையில் சேர்ந்து, டில்லியில் குடியேறி விட்டேன்.

கல்லூரி நண்பர்களுடன் ஒரு சில ஆண்டுகளுக்குக் கடிதத் தொடர்பு இருந்தது. ஊருக்கு வரும்போது, சிலரை நேரில் சந்தித்துப் பேசுவேன். 

ஆனால், காலப்போக்கில் கடிதத் தொடர்புகள் குறைந்து, பிறகு நின்றும் போய் விட்டன. நான் ஊர்ப்பக்கம் வருவதும் குறைந்து விட்டதால், பல நண்பர்களுடனான தொடர்பு அற்றுப் போய் விட்டது. 

வீட்டில் தொலைபேசி வசதி என்பது ஒரு சிலருக்கே சாத்தியம் என்று இருந்த அந்தக் காலத்தில், கடிதப் போக்குவரத்து மூலம் தொடர்புகளை நிலைநிறுத்திக் கொள்வது என்பது பலருக்கும் ஒரு சவாலாகவே இருந்தது - குறிப்பாக, என் போன்று சோம்பேறித்தனம் மிகுந்தவர்களுக்கு!

அவ்வாறு தொடர்பு விட்டுப் போனவர்களில் ஒருவன்தான் சசிகுமார்.

வேலையிலிருந்து ஓய்வு பெற்று நான் சென்னையில் வந்து குடியேறிய பிறகு, இன்னொரு நண்பன் மூலம் சசிகுமாருடன் எனக்கு மீண்டும் தொடர்பு ஏற்பட்டது.

முதலில் தொலைபேசியில்தான் பேசினோம். ஒரு தனியார் நிறுவனத்தில் இருபது ஆண்டுகள் வேலை செய்து விட்டு, இப்போது ஒரு தொழிற்சாலையைத் தொடங்கி நடத்தி வருவதாகச் சொன்ன சசிகுமார், தன் தொழிற்சாலைக்கு வரும்படி என்னை அழைத்தான்.

சசிகுமாரின் தொழிற்சாலைக்கு நான் சென்றதும், என்னை வரவேற்று உபசரித்து, அவன் அறையில் அமர வைத்தான் அவன். 

எங்கள் கடந்த கால வாழ்க்கை பற்றிய பல விஷயங்களை நாங்கள் விரிவாகப் பேசிக் கொண்டிருந்தோம். 

சில நிமிடங்களுக்கு ஒருமுறை, சில ஊழியர்கள் அவன் அறைக்கு வந்து அவனிடம் ஏதோ கேட்க, அவனும் அவர்களுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தான்.

பொதுவான பல விஷயங்களைப் பற்றிப் பேசியதும், "சரி! உன் தொழிற்சாலை பற்றிச் சொல்லு" என்றேன் நான்.

அவன் தொழிற்சாலை செயல்பாடுகள் பற்றி விளக்கி விட்டு, "ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில வேலை செஞ்சதில நிறையக் கத்துக்கிட்டேன், குறிப்பா, வேலைகளை எப்படிப் பிரிச்சுக் கொடுக்கறது, யாருக்கு எந்த வேலையைக் கொடுக்கறதுங்கறதை. திறமையும், அனுபவமும் உள்ளவர்களை, வேலைக்கு எடுத்து, அவங்க அவங்களுக்கு எதில அதிகத் திறமை இருக்கோ, அந்த வேலையைக் கொடுத்திருக்கேன். எல்லாரும் பொறுப்போட, சிறப்பா செயல்படறாங்க!" என்றான் சசிகுமார், பெருமையுடன். 

"நல்ல காரியம் செஞ்சிருக்கே!" என்றேன் நான்.

அப்போது, ஒரு ஊழியர் வந்து அவனிடம் ஏதோ கேட்டு விட்டுப் போனார்.

அவர் சென்றதும், "இவர் என்னோட பர்சேஸ் மானேஜர். ஒரு பர்சேஸை ஃபைனலைஸ் பண்றதுக்கு முன்னே, எங்கிட்ட அப்ரூவல் வாங்கிட்டுப் போறாரு" என்றான் சசிகுமார், பெருமையுடன்.

"இதுக்கு முன்னால சில பேர் வந்து உங்கிட்ட ஏதோ கேட்டுட்டுப் போனாங்களே, அவங்கள்ளாம்?"

"எல்லாருமே வெவ்வேற டிபார்ட்மென்ட்களுக்கு மானேஜர்கள்தான்!"

"உங்கிட்ட அப்ரூவல் வாங்கிட்டுத்தான் உன் மானேஜர்கள் எதையுமே செய்வாங்களா?"

"பின்னே? அப்ரூவல் மட்டும் இல்ல, ஒவ்வொரு ஸ்டேஜிலேயும் எங்கிட்ட கேட்டுட்டுத்தான் மேற்கொண்டு செயல்படுவாங்க" என்றான் சசிகுமார்.

"நான் வேலை செஞ்சது அரசாங்கத்தில. எனக்குக் கீழே வேலை செய்யறவங்களை நான் தேர்ந்தெடுக்க முடியாது. அரசாங்கத்தில யாரை நியமிச்சிருக்காங்களோ, அவங்களை வச்சுக்கிட்டுத்தான் நான் சமாளிக்கணும். சில ஊழியர்கள் சராசரியானவங்களாத்தான் இருப்பாங்க. ஆனா அவங்களுக்குக் கூட ஓரளவு சுதந்திரம் கொடுத்து செயல்பட வச்சப்ப, அவங்க நல்லாவே செயல்பட்டாங்க" என்றேன் நான்.

"நீ என்ன சொல்ல வர?" என்றான் சசிகுமார் புரியாமல்.

"நீ ஒவ்வொரு வேலைக்கும் பொருத்தமான திறமைசாலிகளைத் தேர்ந்தெடுத்திருக்க. ஆனா அவங்களுக்கு எந்த அதிகாரமும் கொடுக்காம, எல்லாத்தையும் உங்கிட்ட கேட்டுத்தான் செய்யணுங்கற மாதிரி அமைப்பை உருவாக்கி இருக்கே. ஒத்தருக்கு பொறுப்பு கொடுத்து, அதை நிறைவேத்தறதுக்கான அதிகாரத்தையும் அவங்களுக்குக் கொடுத்தா, அவங்க இன்னும் சிறப்பா செயல்படுவாங்க, உனக்கும் சுமை குறையும். நீ வேணும்னா, ஒண்ணு ரெண்டு சின்ன விஷயங்களில் இதை முயற்சி செஞ்சு பாரு. உனக்கே தெரியும்" என்றேன் நான்.

நான் சொல்வதை யோசித்துப் பார்ப்பது போல் சசிகுமார் சற்று மௌனமாக இருந்தான்.

(குறிப்பு: திருவள்ளுவர் இந்தக் குறளில் delegation என்னும் 'பொறுப்பு மற்றும் அதிகாரப் பகிர்வு' பற்றிக் குறிப்பிடுகிறார் என்று கூறுவது சற்று மிகையாக இருக்கக் கூடும். ஆயினும், 'ஒரு செயலுக்கு உரிய (பொருத்த) நபரைத் தேர்ந்தெடுத்து, அவரை அந்தச் செயலுக்கு உரியவராக ஆக்க வேண்டும்' என்று பொருள்படும் இந்தக் குறளில் வரும் 'உரியனாகச் செயல்' என்ற சொற்றொடருக்கு ஏற்ப, ஒருவரை ஒரு  செயலுக்கு உரியவர் என்று தீர்மானித்த பிறகு, அந்தச் செயல் புரியத் தேவையான உரிமை, சுதந்திரம் அல்லது அதிகாரம் அவருக்கு அளிக்கப்பட வேண்டும் என்று சற்றே நீட்சியான பொருளை எடுத்துக் கொண்டு இந்தக் கதை எழுதப்பட்டுள்ளது.) 

குறள் 518:
வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்.

பொருள்:
ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக (தகுந்தவனாக) இருப்பதை ஆராய்ந்த பிறகு, அவனை அத்தொழிலுக்கு உரியவனாகும்படிச் செய்ய வேண்டும்.

519. கண்ணன் என் சேவகன்!

"ரெண்டு வருஷம் முன்னால நான் இங்கே வந்திருக்கேன். ஞாபகம் இருக்கா?" என்றார் தொழிற்சாலை ஆய்வாளர்.

"மன்னிக்கணும். எனக்கு நினைவில்லை" என்றார் நிர்வாக இயக்குனர் பரமசிவம்.

"அப்ப நீங்க என்னை கவனிச்சிருக்க மாட்டீங்க. உங்க மானேஜர் ஒத்தர் இருந்தாரு. அவர்தான் எனக்கு எல்லா விவரங்களும் கொடுத்து, ஃபேக்டரியை இன்ஸ்பெக்ட் பண்ணவும் உதவினாரு. எல்லாம் பர்ஃபெக்டா இருந்தது" என்றார் ஆய்வாளர்.

"அப்படித்தானே இருக்க முடியும்?"

பரமசிவம் என்ன சொல்கிறார் என்று புரியாமல், ஆய்வாளர் அவர் முகத்தைப் பார்த்தார்.

"எல்லாம் பர்ஃபெக்டா இருக்கணும்னுதானே நீங்க எதிர்பார்ப்பீங்க?" என்றார் பரமசிவம்.

"ஓ, நீங்க அப்படிச் சொன்னீங்களா? பர்ஃபெக்டா இருக்கறதை விடுங்க. ஒரு சில இடங்களைத் தவிர, எங்கேயும் எதுவுமே சரியா இருக்கறதில்ல. அரசாங்கத்தோட விதிமுறைகளை யாருமே கடைப்பிடிக்கறதில்ல. ஓரளவுக்குக் கடைப்பிடிக்கறவங்க கூட, ரிகார்டுகளை சரியாப் பராமரிக்க மாட்டாங்க. ஒரு சில தொழிற்சாலைகள்ளதான் எல்லாம் சரியா இருக்கும். அதுல உங்களோடதும் ஒண்ணு!" என்றார் ஆய்வாளர்.

"தாங்க்ஸ்!"

"நான் சொன்னது நான் போன தடவை வந்தப்ப இருந்த நிலைமை பத்தி! அதுக்கப்பறம் ரெண்டு மூணு தடவை வேற இன்ஸ்பெக்டர்கள் வந்திருக்காங்க. அவங்க சில குறைபாடுகளைக் குறிப்பிட்டிருக்காங்க. இப்ப, குறைபாடுகள் நிறையவே இருக்கு. குறிப்பா, ரிகார்டுகள் எதுவுமே சரியா இல்ல."

பரமசிவம் மௌனமாக இருந்தார்.

"போன தடவை நான் வந்தப்ப, ஒரு மானேஜர் இருந்தாரே, அவர் எல்லாத்தையும் சரியா வச்சிருந்தாரு. ரொம்ப நல்ல மனுஷன். அவர் பேர் என்ன, மறந்துட்டேன்!" என்றார் ஆய்வாளர்.

"கண்ணன்."

"ஆங்... கண்ணன். இப்ப ஞாபகம் வருது. அருமையான மனுஷன். இப்ப அவர் இல்லையா?"

'இல்லை. வேலையை விட்டுப் போயிட்டார்" என்றார் பரமசிவம். 'அவன் போனதும், எல்லாமே என்னை விட்டுப் போய் விட்டன' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டார்.

திகம் படிக்காத கண்ணன் பரமசிவத்தின் தொழிற்சாலையில் ஒரு அலுவலக உதவியாளனாகச் சேர்ந்து, தன் ஆர்வத்தாலும், உழைப்பாலும், முன்னெடுப்பாலும், ஒரு சில வருடங்களில் அவருடைய நம்பிக்கையை முழுவதுமாகப் பெற்று விட்டான். 

ஒரு கட்டத்தில், கண்ணனுக்கு மானேஜர் என்ற பதவியை அளித்து, தொழிற்சாலையை நிர்வகிக்கும் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்து விட்டு, தொழிற்சாலையை விரிவாக்கம் செய்வதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார் பரமசிவம்.

விரிவாக்கத் திட்டத்தை உருவாக்கிய பிறகு, அதைச் செயலாக்க, வேலாயுதம் என்ற பொறியியல் பட்டதாரியை நியமித்து, அவனுக்கு ஜெனரல் மானேஜர் என்ற பதவியைக் கொடுத்தார். 

வேலாயுதம் விரிவாக்கத்துக்காக நியமிக்கப்பட்டாலும், ஜெனரல் மானேஜர் என்ற தன் பதவியின் அதிகாரத்தில், மானேஜர் கண்ணன் மீது அதிகாரம் செலுத்தத் தொடங்கினான். 

ஆயினும், கண்ணன் இதைப் பற்றிப் பரமசிவத்திடம் எதுவும் சொல்லவில்லை.

ஒருமுறை வேலாயுதம் பரமசிவத்திடம் கண்ணன் மீது சில புகார்களைக் கூறினான். தொழிற்சாலைக்காக மூலப் பொருட்கள் வாங்குவதில் கண்ணன் கமிஷன் வாங்குவதாகவும், செலவுகளை  அதிகமாகக் காட்டி, மாதாமாதம் ஒரு கணிசமான தொகையைச் சுருட்டுவதாகவும் கூறினான்.

பரமசிவம் இது பற்றிக் கண்ணனிடம் எதுவும் கேட்கவில்லை. தன் தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்கள் சப்ளை செய்பவர்கள் சிலரிடம் விசாரித்தார். 

அவர்களில் சிலர் கண்ணனிடம் இதைச் சொல்லி, "நீங்கள் எவ்வளவு நேர்மையானவர்! உங்களைப் போய் உங்கள் முதலாளி சந்தேகப்படுகிறாரே!" என்றனர்.

சில மாதங்களுக்குப் பிறகு, கண்ணன் பரமசிவத்திடம் தன் ராஜினாமாக் கடிதத்தைக் கொடுத்தான். முதலில், பரமசிவம் அவனைச் சமாதானப்படுத்த முயன்றார். தன் முடிவில் கண்ணன் உறுதியாக இருந்ததால், அவனை வற்புறுத்தாமல், வேலையிலிருந்து விடுவித்தார். 

'எப்படியும் ஜெனரல் மானேஜராக இருக்கும் வேலாயுதத்துக்கும், கண்ணனுக்கும் ஒத்துப் போகவில்லை. விரிவாக்கம்தான் முக்கியம். எனவே, வேலாயுதம் தொடர வேண்டியது முக்கியம். ஒரு விதத்தில், கண்ணன் வேலையை விட்டுப் போவது நல்லது' என்று அப்போது அவர் சிந்தனை ஓடியது.

எதிர்பாராதவிதமாக, சந்தையில் ஏற்பட்ட சில மாற்றங்களால், அவருடைய விரிவாக்கத் திட்டதைச் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதற்காகச் செலவிட்ட தொகை ஒரு பெரிய இழப்பாக ஆகி, அவர் நிறுவனத்துக்கும் அவருக்கும் ஒரு பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்தியது.

விரிவாக்கத் திட்டம் நிறைவற்றப்பட முடியாது என்ற நிலை வந்ததும், வேலாயுதம் வேலையை ராஜினாமா செய்து விட்டு ,வேறொரு நிறுவனத்தில் சேர்ந்து விட்டான்.

பரமசிவம் ஏற்கெனவே செய்து கொண்டிருந்த தொழிலும் நலியத் தொடங்கியது.

கண்ணனைப் போன்ற ஒரு சிறந்த நிர்வாகியை, ஒரு நல்ல மனிதனை இழந்தது, தன் தொழிலையே எப்படி பாதித்து விட்டது என்பதைப் பரமசிவம் உணர்ந்தார்.

கண்ணனைத் திரும்ப அழைத்துக் கொள்ள அவர் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

"போன தடவை எல்லாம் பர்ஃபெக்டா இருந்ததால, உங்க விஷயத்தில நான் கடுமையா இருக்க விரும்பல. என்னென்ன குறைபாடுகள்னு விளக்கி, உங்களுக்கு ஒரு நோட்டீஸ் வரும். அதையெல்லாம் சரி பண்ணிடுங்க. ரெண்டு மாசம் கழிச்சு, மறுபடி இன்ஸ்பெக்‌ஷனுக்கு வருவோம். அப்பவும் குறைபாடுகள் தொடர்ந்தா, சட்டப்படி நடவடிக்கை எடுக்கறதைத் தவிர வேறு வழியில்லை" என்றார் ஆய்வாளர்.

'நீங்கள் அடுத்த முறை வரும்போது இந்தத் தொழிற்சாலை இருக்குமோ என்னவோ!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட பரமசிவம், மௌனமாகத் தலையாட்டினார்.

குறள் 519:
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் திரு.

பொருள்:
தான் மேற்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும்.

520. செங்கல்வராயனின் செல்லப்பிள்ளை


"முதல்வர் ஒவ்வொரு அமைச்ச கூப்பிட்டு, அவங்க செயல்பாடு பற்றி பரிசீலனை பண்ணிக்கிட்டிருக்காரே, உங்க செயல்பாடு பற்றிப் பரிசீலனை பண்ணிட்டாரா?" என்றார் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்தன்.

"என் செயல்பாடு பற்றிப் பரிசீலிக்கறதா? நான் கட்சியில ஒரு மூத்த தலைவர். அமைச்சரவையில, முதல்வருக்கு அடுத்த ஆளா இருக்கிறவன். இப்ப முதல்வரா இருக்கிற இளங்குமரனை கட்சியில முன்னுக்குக் கொண்டு வந்தவனே நான்தான். பாலகுமார்ங்கற அவரோட பேரை இளங்குமரன்னு மாத்தி வச்சுக்கச் சொன்னதிலேந்து, மறைந்த நம் தலைவர்கிட்ட அவரை அறிமுகப்படுத்தி, அவருக்குத் தேர்தல்ல சீட் வாங்கிக் கொடுத்து அமைச்சரவையில இடம் வாங்கிக் கொடுத்து அவருக்கு எவ்வளவு செஞ்சிருக்கேன்! பல பேர் அவரை செங்கல்வராயனோட செல்லப்பிள்ளைன்னே சொல்லுவாங்க. என் செயல்பாடு பற்றி அவர் பரிசீலிப்பாரா?" என்றார் செங்கல்வராயன், சிரித்தபடியே.

"ஆனாலும், அவர் முதல்வர், நீங்க அவர் அமைச்சரவையில இருக்கிற ஒரு அமைச்சர்ங்கறதுதானே யதார்த்தம்? எதுக்குக் கேட்டேன்னா, பல மூத்த அமைச்சர்களிட செயல்பாடுகளை முதல்வர் பரிசீலனை பண்ணி, அவங்ககிட்ட ரொம்பக் கடுமையாப் பேசினாராம். சின்ன முறைகேடு இருந்தாக் கூட பதவியைப் பறிச்சுடுவேன்னு எச்சரிச்சிருக்காராம். அதனாலதான் கேட்டேன்."

செங்கல்வராயன் பெரிதாகச் சிரித்து, "பரவாயில்லையே! தலைவர் இறந்த பிறகு, பேச்சாற்றல் உள்ள ஒரு இளம் தலைவரை முதல்வராக்கினா, மக்கள்கிட்ட நம்ம கட்சிக்கு நல்ல பேர் கிடைக்கும்னு நினைச்சுதான் நம்மை மாதிரி மூத்த தலைவர்கள்ளாம் சேர்ந்து இளங்குமரனை முதல்வராக்கினோம். அவரும் சீக்கிரமே தன் செயல்பாடுகளினால மக்கள்கிட்ட நல்ல பேரு வாங்கிட்டாரு. இப்ப, முதல்வராத் தன் அதிகாரத்தைக் காட்டணும்னு நினைக்கிறார் போலருக்கு. ஆனா, இதெல்லாம் மத்தவங்ககிட்டதான். எங்கிட்ட அதெல்லாம் வச்சுக்க மாட்டாரு!" என்றார்.

செங்கல்வராயனின் கைபேசி அடித்தது.

பேசும்போதே, செங்கல்வராயன் முகம் மாறுவதை ஆனந்தன் கவனித்தார்.

பேசி முடித்ததும், கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்ட செங்கல்வராயன், "என் பி ஏ தான் பேசினாரு. எனக்கும் ரிவியூ மீட்டிங் இருக்காம் - நாளைக்கு!" என்றார்.

முதல்வரின் அறைக்குள் செங்கல்வராயன் நுழைந்ததும், தன் இருக்கையிலிருந்து எழுந்து, "வாங்கண்ணே!" என்று அவரைக் கைகூப்பி வரவேற்றான் இளங்குமரன்.

முதல்வரின் இருக்கைக்கு எதிர் இருக்கையில் அமர்ந்த செங்கல்வராயன்,"என்ன தம்பி, இது மாதிரி ரிவியூ எல்லாம்? எல்லாம் நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு?" என்றார், குறை கூறும் தொனியில்.

"சரியாப் போகணுங்கறதுக்காகத்தானே அண்ணே இந்த ரிவியூ! உங்களுக்குத் தெரியாதது இல்ல. நீங்க எவ்வளவு அனுபவம் உள்ளவரு! அமைச்சர்கள் செயல்பாடு சரியா இருந்தாதான், அதிகாரிகளை அவங்க சரியா வழி நடத்தி, மக்களுக்கு நன்மை செய்ய முடியும். எந்த மட்டத்திலேயும் ஊழல்களோ, முறைகேடுகளோ நடக்காம, அரசாங்கத்தின் திட்டங்களோட பலன்கள் மக்களுக்குப் போய்ச் சேர வகை செய்ய முடியும். நீங்க ஒரு மூத்த அமைச்சர், அதோட என்னோட வழிகாட்டிங்கறதாலதான், பக்கத்தில தலைமைச் செயலர் கூட இல்லாம உங்ககிட்ட தனியாப் பேசறேன்" என்ற இளங்குமரன், ஒரு கோப்பை செங்கல்வராயனிடம் கொடுத்தான்.

"உங்க துறையில நடக்கிற சில முறைகேடுகள் பற்றி உளவுத்துறை கொடுத்த அறிக்கை இது. இதெல்லாம் உங்க கவனத்துக்கு வந்திருக்குமான்னு தெரியல. தயவு செஞ்சு இதைப்பத்தியெல்லாம் விசாரிச்சு, எல்லாத்தையும் சரி செஞ்சுடுங்க.எதிர்காலத்தில இது மாதிரி நடக்காம பாத்துக்கங்க. சரி. ஒரு திறப்பு விழாவுக்காக நான் கிளம்பணும். அப்புறம் பாக்கலாம்" என்று இருக்கையிலிருந்து எழுந்தான் இளங்குமரன்.

செங்கல்வராயன் என்ன சொல்வதென்று யோசித்துக் கொண்டிருந்தபோதே, "எல்லாத்தையும் ஒரு வாரத்தில சரி செஞ்சுடுங்க. ஏன்னா, இந்த மாசக் கடைசியில நான் அமைச்சரவையை மாத்தி அமைக்கப் போறேன்!" என்றான் இளங்குமரன், சிரித்தபடியே.

குறள் 520:
நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.

பொருள்:
ஒரு வேலையைச் செய்பவன் தவறானபாதையில் செல்லாமல், வேலையை முறையாகச் செய்து வரும் வரை உலகம் கெடாது. ஆகையால், மன்னன் நாள்தோறும் அவனுடைய (வேலை செய்பவனின்) நிலைமையை ஆராய வேண்டும்.
                                       அதிகாரம் 51 -  தெரிந்து தெளிதல்   

அறத்துப்பால்                                                                              காமத்துப்பால்                             

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...