Saturday, August 28, 2021

507. புதிய கிளை



சார்! மதுரையில நாம ஆரம்பிக்கப் போற பிராஞ்ச்சுக்கு யாரை மானேஜராப் போடறதுன்னு முடிவு பண்ணணும்" என்றார் சீனியர் மானேஜர் சுந்தரமூர்த்தி.

 "நீங்க யாரை சஜஸ்ட் பண்றீங்க?" என்றார் ரீஜனல் மானேஜர் அருணன்.

"ரமேஷ், சுதாகர் ரெண்டு பேர்ல ஒத்தரைப் போடலாம்னு நினைக்கிறேன்."

"குமாரை நிங்க கன்ஸிடர் பண்ணலியா?"

"சார்! குமாருக்கு அனுபவம் போதாது. பிராஞ்ச் திறக்கணும்னா, அதுக்கு முன்னால அந்த ஊருக்குப் போய் நிறைய பிரிபரேடரி வேலைகள் எல்லாம் செய்யணும், வாடகைக்கு இடம் பாக்கறதிலேந்து, இன்டீரியர் வரை. உள்ளூர் ஆட்கள் சில பேரை வேலைக்கு எடுக்கணும். பிராஞ்ச் ஆரம்பிச்சப்பறம் பிசினஸை டெவலப் பண்ணும். இதுக்கெல்லாம் ஃபீல்டில அனுபவம் இருந்தாதான் முடியும், குமார் பெரும்பாலும் ஆஃபீசுக்குள்ளேயேதான் வேலை செஞ்சிருக்காரு..."

சுந்தரமூர்த்தியை இடைமறித்த அருணன், "அதனால என்ன? அவருக்கு எப்பதான் எக்ஸ்போசர் கிடைக்கறது? ஆஃபீஸ்ல அதிகம் வேலை செஞ்சதால, அவருக்கு கம்பெனி பாலிசி நடைமுறைகள் எல்லாம் நல்லாத் தெரிஞ்சிருக்குமே! அது ஒரு அட்வான்டேஜ் இல்லையா?" என்றார்.

சுந்தரமூர்த்தி சற்றுத் தயக்கத்துடன், "சார்! உண்மையில, குமாருக்கு நம் கம்பனி பாலிசி, நடைமுறைகள் எல்லாம் கூட அவ்வளவாத் தெரியாது. பொதுவாகவே எதையும் தெரிஞ்சுக்கறதில அவர் ஆர்வம் காட்டறதில்ல.  ஒரு புது பிராஞ்ச்சைத் திறந்து அதை நல்லா நடத்தறதுக்குத் தேவையான திறமை அவர்கிட்ட இல்லேன்னுதான் நான் நினைக்கிறேன்" என்றார்.

"உங்களுக்கு எதனாலேயோ குமாரைப் பிடிக்கலேன்னு நினைக்கிறேன்!" என்றார் அருணன்.

'உங்களுக்கு எதனாலேயோ குமாரைப் பிடிச்சிருக்கு. அதனாலதான் அவரோட குறைகளை நீங்க பெரிசா நினைக்க மாட்டேங்கறிங்க!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார் சுந்தரமூர்த்தி.

"சார்! குமாரோட புரொஃபைலை வச்சுப் பாக்கறப்ப அவரை பிராஞ்ச் மானேஜராப் போட ஹெட் ஆஃபீஸ்ல அப்ரூவல் வாங்கறது கஷ்டம்!" என்றார் சுந்தரமூர்த்தி, தன் இறுதி முயற்சியாக,

"அதை நான் பாத்துக்கறேன்!" என்றார் அருணன்.

அருணன் தான் சொன்னபடியே, தலைமை அலுவலகத்தில் பேசி மதுரையில் அமைக்கப்படும் புதிய கிளைக்கு குமாரை மானேஜராக நியமிக்க அனுமதி வாங்கி விட்டார்.

குமார் மதுரைக் கிளைக்கு மானேஜராகப் பொறுப்பேற்று ஆறு மாதங்கள் ஓடி விட்டன. சுந்தரமூர்த்தி பயந்தபடியே, குமாரின் திறமையின்மை மற்றும் அனுபவக் குறைபாட்டின் காரணமாக, அந்தக் கிளையின் செயல்பாடுகள் சிறப்பாக இல்லை.

"புது பிராஞ்ச்தானே! ஆரம்பத்தில அப்படித்தான் இருக்கும். கொஞ்ச நாள்ள சரியாயிடும்" என்றார் அருணன்.

பிரச்னைகளுக்குக் காரணம் குமாரின் திறமையின்மைதான் என்பது அருணனுக்குப் புரியவில்லையா அல்லது அவர் அதை ஒப்புக் கொள்ள மறுக்கிறாரா என்பது சுந்தரமூர்த்திக்குப் புரியவில்லை.

புதிய கிளையின் செயல்பாடு பற்றிய மாதாந்தர அறிக்கைகளைப் பெற்று வந்த தலைமை அலுவலகம், கிளையின் திருப்தியற்ற செயல்பாடு பற்றி அடிக்கடி கடிதம் எழுதிக் கொண்டிருந்தது. ஓரிரு மாதங்களில் நிலைமை சரியாகி விடும் என்று அருணன் தலைமை அலுவலகத்துக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தார்.

ன்று அருணனுக்குத் தலைமை அலுவலகத்திலிருந்த ஜெனரல் மானேஜரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

"மிஸ்டர் அருணன்! நம்ம மதுரை கிளை துவங்கி ஒரு வருஷம் ஆகப் போகுது!" என்றார் ஜெனரல் மானேஜர். 

"ஆமாம் சார்! அதை இம்ப்ரூவ் பண்ண முயற்சி செஞ்சுக்கிட்டுத்தான் இருக்கோம்" என்றார் அருணன் மென்று விழுங்கியபடி.

"உங்களுக்குத் தெரியும் -  நாம புதுசா ஆரம்பிக்கிற எந்தக் கிளையும் ரெண்டு மூணு மாசத்திலேயே நல்லா செயல்பட ஆரம்பச்சுடும். அதுவும் மதுரை பெரிய ஊரு. நிறைய பிசினஸ் பொடென்ஷயல் உள்ள ஊரு. ஒரு வருஷம் முடியப் போற நிலையிலேயும் கொஞ்சம் கூட முன்னேற்றம் இல்லாதது ரொம்ப கவலை அளிக்கக் கூடியதா இருக்கு!"

"எஸ் சார்! ஐ ஹேவ் எ பிளான். கிளையோட முதல் ஆண்டுவிழாவுக்கு நான் போகப் போறேன். அங்கேயே ரெண்டு மூணு நாள் தங்கி, பிராஞ்ச் மானேரை நல்லா கயிட் பண்ணி, என்கரேஜ் பண்ணி சீக்கிரமே நல்ல ரிசல்ட் காட்டற மாதிரி செயல்படச் செஞ்சுட்டு வரேன்" என்றார் அருணன்.

"அதுக்குஅவசியம் இருக்காது. ஏன்னா, அந்த பிராஞ்ச்சை மூடறதுன்னு நாங்க முடிவு பண்ணி இருக்கோம். பிராஞ்சுக்கும், உங்களுக்கும் கடிதம் அனுப்பிட்டோம். உங்களுக்கு முன்னாலேயே தகவல் தெரியணுங்கறதுக்குத்தான் ஃபோன் பண்ணினேன்."

ஃபோனை வைத்து விட்டார் ஜெனரல் மானேஜர்.

'சுந்தரமூர்த்தி சொன்னதை அலட்சியப்படுத்தி விட்டு, என்னுடைய விருப்பத்தின்படி செயல்பட்டது எவ்வளவு பெரிய தவறாகி விட்டது!' என்று நினைத்தார் அருணன். 

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 51
 தெரிந்து தெளிதல்
குறள் 507
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்.

பொருள்:
அறிய வேண்டியவற்றை அறியாதவர்களை அவர்கள் மீதுள்ள அன்பு காரணமாகப் பொறுப்பில் அமர்த்துதல் அறியாமை பலவற்றையும் தரும்.
                                                                குறள் 508 
                                                                குறள் 506                                                                                      அறத்துப்பால்                                                     காமத்துப்பால்

Friday, August 27, 2021

506. சம்பந்தமா இப்படி?

சம்பந்தம் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து விட்டதால் அவனுடைய பெரியப்பாவால் வளர்க்கப்பட்டான். அவர் அவனை அதிகம் படிக்க வைக்கவில்லை. 

சம்பந்தத்துக்கு இருபத்திரண்டு வயதானபோது, சம்பந்தத்தின் பெரியப்பா தனக்குத் தெரிந்தவர் ஒருவர் மூலம் ஶ்ரீ ஏஜன்சீஸ் என்ற நிறுவனத்தில் அவனை வேலைக்குச் சேர்த்து விட்டார்.

ஶ்ரீ ஏஜன்சீஸ் நிறுவன உரிமையாளர் ஶ்ரீதர் அவனிடம் சம்பள விவரங்களைத் தெரிவித்ததும், "சார்! நீங்க சம்பளம் எவ்வளவு கொடுத்தாலும் சரி, நான் ஆஃபீஸ்லேயே தங்கிக்க  மட்டும் அனுமதிச்சீங்கன்னா போதும்!" என்றான்.

" பின்னால ஒரு அறை இருக்கு. ஆனா, அது வசதியா இருக்காதே! ஏன், நீ உன் பெரியப்பா வீட்டிலேயே இருந்துக்கலாமே!" என்றார் ஶ்ரீதர்.

"சார்! வேற வழியில்லாமதான் அங்கே இருந்தேன். எத்தனையோ தடவை எங்கேயாவது ஓடிப் போயிடலாம்னு நினைச்சிருக்கேன். ஆனா, எங்கே போய் என்ன செய்யறதுன்னு தெரியாததாலதான், பல்லைக் கடிச்சுக்கிட்டு அங்கேயே இருந்தேன். தெய்வம் மாதிரி நீங்க எனக்கு ஒரு வேலை கொடுத்திருக்கீங்க. இந்த உடம்பில உயிர் இருக்கற வரைக்கும் உங்களுக்கு நாய் மாதிரி உழைப்பேன்" என்றான் சம்பந்தம்.

ஶ்ரீதர் நெகிழ்ந்து போய், "சரி. உனக்கு எங்கேயாவது நல்ல அறை கிடைக்கிறவரைக்கும், இப்போதைக்கு இங்கேயே இருந்துக்க!" என்றார்.

சில மாதங்களுக்குப் பிறகு சம்பந்தம் தங்குவதற்கு ஒரூ அறை பார்த்துக் கொண்டு போய் விட்டான். ஆனால் அவன் சொன்னபடியே அந்த நிறுவனத்துக்கு விஸ்வாசமாக இருப்பதைக் காட்டும் விதத்தில் கடுமையாக உழைத்து வந்தான்.

முதலாளியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவன் என்று கருதி மற்ற ஊழியர்கள் அவனிடம் சற்று அதிக மரியாதையும், பயமும் காட்டினார். அதனாலேயே அவன் ஒரு உதவியாளனாகவே இருந்த நிலையிலும், அதிகார அமைப்பில் அந்த நிறுவனத்தில் முதலாளிக்கு அடுத்த நிலையில் இருந்தவன் அவன்தான் என்று ஆகி விட்டது.

"சம்பந்தம் சாரா இப்படி?" என்றாள் டைப்பிஸ்ட் மீனா. 

"பெட்டியில லட்ச லட்சமா பணம் இருந்ததாம்! சாராலேயே நம்ப முடியலையாம்" என்றான் ராம்குமார் என்ற ஊழியன்.

"அவர்கிட்ட எப்பவும் ஆஃபீஸ் பணம் பத்தாயிரம் ரூபாய் இருக்கும் - பெட்டி கேஷ் மாதிரி. சார்தான் கொடுக்கச் சொல்லி இருக்கார். கம்பெனிக்காக சில செலவுகளை அவர் செய்வாரு. அப்பப்ப பில், வவுச்சர் கொடுத்துட்டுப் பணம் வாங்கிப்பாரு. டாக்சி, ஆட்டோ,  கஸ்டமர் என்டர்டெயின்மென்ட்னு நிறைய கணக்குக் காட்டுவாரு. சில சமயம் அதெல்லாம் போலி, இல்ல தொகை அதிகமா இருக்குன்னு எனக்குத் தோணும். சார்கிட்ட ஒண்ணு ரெண்டு தடவை சொல்லி இருக்கேன். 

" 'அவனுக்குக் குடும்பம் கிடையாது, சொந்தக்காரங்க கிடையாது. பொய்க்கணக்கு காட்டிப் பணம் சம்பாதிச்சு அவன் என்ன செய்யப் போறான்?' ன்னு சார் சொல்லிடுவாரு. அப்புறம் நான் என்ன சொல்ல முடியும்? பல வருஷமா சிறுகச் சிறுகக் கொள்ளையடிச்சிருக்காரு!" என்றான் அக்கவுன்டன்ட் குமரகுரு.

"அப்புறம் எப்படி மாட்டிக்கிட்டாரு?"

"சார் சில சமயம் வவுச்சர்களையெல்லாம் விவரமாப் பாப்பாரு. அப்ப ஏதோ சந்தேகம் வந்து, சம்பந்தத்தையே கூப்பிட்டுக் கேட்டிருக்காரு. அவரு பதில் சொல்ல முடியாம உளறி மாட்டிக்கிட்டாரு."

"எவ்வளவு நம்பினேன் அவனை! அவன் என்னைப் பல வருஷங்களா ஏமாத்தி இருக்கான்னு தெரிஞ்சதும் எனக்கு ரொம்ப வருத்தமும் கோபமும் வந்தது. அதான் உடனே போலீஸ்ல சொல்லிட்டேன். போலீஸ்ல அவன் வீட்டில சோதனை போட்டபோது, பெட்டியில, பையில, தலையணை உறையிலன்னு அங்கங்க பணத்தை ஒளிச்சு வச்சிருக்கான். இருபது லட்ச ரூபாய்க்கு மேல பணம்! எனக்குத் தெரிஞ்சு அவன் தாராளமா செலவழிக்கறவன்தான், ஒருவேளை அவன் ரொம்ப சிக்கனமா இருந்து சேமிச்சிருந்தா கூட, இந்த எட்டு வருஷத்தில அவனால அஞ்சாறு லட்ச ரூபாக்கு மேல சேமிச்சிருக்க முடியாது" என்று தன் மனைவியிடம் புலம்பினார் ஶ்ரீதர்.

"இரக்கப்பட்டு வேலை கொடுத்தீங்க. அவனை நம்பினீங்க. இப்படி செஞ்சிருக்கான். அவனுக்குக் குடும்பம், சொந்தம்னு கூட யாரும் இல்லையே! அவனுக்கு ஏன் இந்தப் பணத்தாசை?" என்றாள் அவர் மனைவி.

"தெரியலையே! குடும்பம், உறவுகள் இல்லாதவங்களுக்குப் பணத்தாசை இருக்காதுன்னு நாம நினைக்கிறோம்! ஆனா, குடும்பம் இருக்கறவங்களுக்கு, தாங்க தப்பு பண்ணி மாட்டிக்கிட்டா, குடும்ப உறுப்பினர்கள், சொந்தக்காரர்கள் இவங்க முகத்தில எல்லாம் எப்படி விழிக்கிறதுன்னு ஒரு பயம் இருக்கும். அந்த பயம் இல்லாததாலதான் சம்பந்தம் மாதிரி ஆட்கள்  இந்த மாதிரி தப்பையெல்லாம் கொஞ்சம் கூடக் கூச்சப்படாம செய்யறாங்களோ என்னவோ!" என்றார் ஶ்ரீதர்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 51
 தெரிந்து தெளிதல்

குறள் 506:
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.

பொருள்:
சுற்றத்தாறின் தொடர்பு அற்றவரை நம்பித் தெளியக்கூடாது, அவர் உலகத்தில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு நாண மாட்டார்.
 அறத்துப்பால்                                                                              காமத்துப்பால் 

Thursday, August 26, 2021

505. புதிய அதிகாரி

"இந்த ஆஃபீஸே அப்படித்தான். அதில நீயும் நானும் மட்டும் நேர்மையா இருந்து என்ன பயன்?" என்றான் செந்தில்.

"பயன் இல்லாம போகட்டும். நாம வேலை செய்யறதே இல்ல கஷ்டமா இருக்கு?" என்றான் பாலாஜி.

"ஆமாம், ஒரு பக்கம் பொதுமக்கள் அவங்க கிட்ட லஞ்சம் வாங்கிக்கிட்டு அவங்களுக்கு சாதகமா செயல்படச் சொல்லி நமக்கு அழுத்தம் கொடுக்கறாங்க. இன்னொரு பக்கம் நம் மேலதிகாரிகள் நாம அவங்களுக்கு இடைஞ்சலா இருக்கோமேன்னு நம்ம மேலே ஆத்திரமா இருக்காங்க. நம்மோட வேலை செய்யற மத்தவங்க நாம ஏதோ பைத்தியக்காரங்க மாதிரி நம்மை ஏளனமாப் பாக்கறாங்க!"

"ஏதோ, உனக்கு நானும் எனக்கு நீயும் ஆறுதலா இருக்கோம்!"

"இன்னிக்கு புது அதிகாரி வரப் போறாரு.அவரு எப்படி இருக்கப் போறாரோ!" என்றான் செந்தில்.

புதிய அதிகாரி தணிகாசலம் பொறுப்பேற்றுக் கொண்டதும், ஊழியர்கள் அனைவரையும் தன் அறைக்கு அழைத்தார்.

"இங்க பாருங்க. நான் வேலை விஷயத்தில ரொம்ப கடுமையா இருக்கறவன். ஒரு சின்ன தவறு நடந்தா கூடப் பொறுத்துக்க மாட்டேன். இதை மனசில வச்சுக்கிட்டு எல்லாரும் உங்க வேலையில கரெக்டா இருங்க" என்று ஆரம்பத்து நேர்மை, சேவை உணர்வு, அர்ப்பணிப்பு இவற்றுடன் பணி புரிய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி ஒரு சிறிய உரை நிகழ்த்தினார்.

தங்கள் இருக்கைகளுக்கு வந்ததும், "அப்பா! ஒருவழியா ஒரு நேர்மையான அதிகாரி வந்திருக்காரு. மத்தவங்களுக்கு எப்படியோ, உனக்கும், எனக்கும் இவர்கிட்ட வேலை செய்யறது ஒரு திருப்தியான அனுபவமா இருக்கும்னு நினைக்கிறேன்" என்றான் செந்தில், பாலாஜியிடம்.

"அவர் சொன்னதை வச்சு அவரை எப்படி எடை போட முடியும்? எப்படி நடந்துக்கறார்னு பாக்கலாம்!" என்றான் பாலாஜி சிரித்தபடி.

"மோசமான பல அதிகாரிகளைப் பாத்ததால, எந்த ஒரு அதிகாரியும் நேர்மையானவரா இருப்பார்னு நம்பறது உனக்குக் கஷ்டமா இருக்கு போலிருக்கு!" என்றான் செந்தில்.

பாலாஜி பதில் சொல்லாமல் சிரித்தான்.

சில நாட்களுக்குப் பிறகு, ஒருமுறை பாலாஜியிடம் தனிமையில் பேசும்போது, "நீ சந்தேகப்பட்டது சரிதான். நான் நினைச்ச மாதிரி இந்த அதிகாரி ஒண்ணும் நேர்மையானவர் இல்ல!" என்றான் செந்தில் தணிந்த குரலில்.

"எப்படிச் சொல்ற?"

"மாணிக்கம்னு ஒரு தொழிலதிபர் ஒரு அப்ரூவல் கேட்டிருந்தார். சட்டப்படி அப்படி ஒரு அப்ரூவல் கொடுக்க முடியாதுன்னு நான் அவர்கிட்ட சொன்னேன். 'நீங்க ஃபைலை உங்க ஆஃபீசருக்கு அனுப்புங்க, நான் பாத்துக்கறேன்'னு சொன்னாரு. 'இப்ப வந்திருக்கிற அதிகாரி நேர்மையானவர், அவர் இதுக்கு ஒத்துக்க மாட்டார்' னு சொன்னேன். 

"சட்டப்படி இந்த அப்ரூவல் கொடுக்க முடியாதுன்னு நோட் போட்டு ஃபைலை அதிகாரிக்கு அனுப்பிட்டேன், ஒரு வாரமாச்சு. ஃபைல் எனக்குத் திரும்பி வரல. இன்னிக்குக் காலையில மாணிக்கம் எனக்கு ஃபோன் பண்ணி, 'உங்க அதிகாரியை நான் கவனிச்சுட்டேன். நான் கேட்ட அப்ரூவலை அவர் கொடுத்துட்டார்'னு சொல்லிச் சிரிச்சாரு. 

"கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அதிகாரிகிட்டேந்து ஃபைல் திரும்பி வந்தது. என்னோட அப்ஜக்‌ஷனை ஓவர் ரூல் பண்ணி, ஏதோ ஒரு பலவீனமான காரணத்தைச் சொல்லி அப்ரூவல் கொடுத்திருக்காரு!"

பாலாஜி பதில் சொல்லாமல் சிரித்தான்.

"நீ எப்படி இவரை முதலிலேயே சந்தேகப்பட்ட? இவரைப் பத்தி உனக்கு முன்னமே தெரியுமா?" என்றான் செந்தில்.

"தெரியாது. பொதுவாகவே யாரையும் அவங்க சொல்றதை வச்சு மதிப்பிடக் கூடாது, அவங்க செய்யறதை வச்சுத்தான் மதிப்பிடணும்னு நினைக்கிறவன் நான். நேர்மை இல்லாத பல பேர் தங்களை நேர்மையானவங்கன்னு சொல்லிப்பாங்க. ரொம்ப அதிகமாவே சொல்லிப்பாங்க!

"இவரு நம்ம ஆஃபீஸ்ல சேருகிற அன்னிக்குக் காலையில இவரை நான் கோயில்ல பாத்தேன். அப்ப அவர் யார்னு எனக்குத் தெரியாது. கோவில் திறக்கறதுக்கு முன்னால வாசல்ல கொஞ்சம் பேரு வரிசையில நின்னுக்கிட்டிருந்தாங்க. 

"இவரு வரிசையில நடுவில போய் சேந்துக்கிட்டாரு. பின்னாலேந்து சில பேர் ஆட்சேபிச்சாங்க. தான் முன்னாடியே வந்துட்டதாகவும், ஸ்கூட்டர்லேந்து பர்சை எடுத்துக்கிட்டு வரப் போனதாகவும் சொன்னாரு. அது பொய்னு எனக்குத் தெரியும். வரிசை சின்னதாத்தான் இருந்தது. அதுக்கே பொய் சொல்லிட்டு முன்னால போய் நிக்கணுமான்னு நினைச்சேன். 

"சன்னதிக்குள்ள போனப்பறம், சில வயசானவங்களையெல்லாம் கூட நெட்டித் தள்ளிக்கிட்டுப் போய் முன்னால நின்னாரு. அப்புறம் ஆஃபீசில அவரைப் பாத்ததும் அவர் கோவில்ல நடந்துக்கிட்டதை வச்சுப் பாத்தப்ப அவரு நேர்மையானவரா இருக்க மாட்டார்னு நினைச்சேன். அவர் தன்னை ரொம்ப நேர்மையானவர்னு சொல்லிக்கிட்டது என் சந்தேகத்தை இன்னும் அதிகாமாக்கிச்சு!" என்றான் பாலாஜி.  

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 51
 தெரிந்து தெளிதல்
குறள் 505
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.

பொருள்:
ஒருவர் பெருமை உடையவரா அல்லது சிறுமை உடையவரா என்பதற்கு அவருடைய செயல்களே உரைகல்லாக அமையும்.
                                                                குறள் 506
                                                                குறள் 504                                                                                   அறத்துப்பால்                                                     காமத்துப்பால்

Wednesday, August 25, 2021

504. தேர்வுக் குழு

"இன்டர்வியூ முடிஞ்சு போச்சு. யாரைத் தேர்ந்தெடுக்கப் போறோம்?" என்றார் பர்சனல் மானேஜர் சுந்தரம்.

"இது டிபார்ட்மென்ட் மானேஜருக்கான புரொமோஷன் இன்டர்வியூ. அந்த மானேஜர் உங்க கீழதான் வேலை செய்யப் போறாரு. அதனால உங்க கருத்துதான் முக்கியம்" என்றார் ஜெனரல் மானேஜர் ராஜு, டிவிஷனல் மானேஜர் செல்வத்தைப் பார்த்து.

செல்வம் பதில் சொல்வதற்குள், "நாமதான் ரெண்டு பேரை ஷார்ட்லிஸ்ட் பண்ணிட்டோமே, அந்த ரெண்டு பேருக்குள்ள ஒத்தரைதானே தேர்ந்தெடுக்கணும்? உங்க சாய்ஸ் என்ன?" என்றார் சுந்தரம்.

'இதைத்தானே ஜி எம் எங்கிட்ட கேட்டாரு? நீ பர்சனல் மானேஜர்னு உன் கெத்தைக் காட்டிக்கறதுக்காக இதே கேள்வியைத் திருப்பிக் கேக்கணுமாக்கும்?' என்று மனதுக்குள் நினைத்து எரிச்சலடைந்த செல்வம், ராஜுவைப் பார்த்து, "சார்! ராம், நீலகண்டன் ரெண்டு பேர்ல, என்னோட சாய்ஸ் நீலகண்டன்தான்!" என்றார்.

"நீலகண்டனா? அவரோட புரொஃபைல் ஒண்ணும் அவ்வளவு இம்ப்ப்ரஸிவா இல்லையே?" என்றார் சுந்தரம்.

'அப்புறம் எப்படி அவரை ஷார்ட்லிஸ்ட் பண்ணினீங்க?' என்று மீண்டும் மனதுக்குள் கேட்டுக் கொண்ட சுந்தரம், "நீங்க புரொஃபைலைப் பாக்கறீங்க. நான் ஆளைப் பாக்கறேன்!" என்றார்.

"கரெக்ட். ரெண்டு பேர்கிட்டேயும் நீங்கதனே நேரடியாப் பழகறீங்க? அதனாலதான் உங்க கருத்து முக்கியம்னு நான் சொன்னேன்" என்ற ராஜு, "இதை ஃபைனலைஸ் பண்றதுக்கு முன்னால ரெண்டு பேரோட சிறப்புகள் என்ன, குறைகள் என்னங்கறதைப் பட்டியல் போட்டுடலாம்" என்றார்.

அடுத்த சில நிமிஷங்களுக்கு, மூன்று பேருமாகச் சேர்ந்து ராம், நீலகண்டன் இருவரின் சிறப்புகளையும், குறைகளையும் பட்டியலிட்டனர்.

"இரண்டு பேரோட சிறப்புகளையும் குறைகளையும் பட்டியல் போட்டுட்டோம். சிறப்புகளுக்கு பாசிடிவ் மார்க்கும், குறைகளுக்கு நெகடிவ் மார்க்கும் போட்டுப் பாத்தா, நிகர பாசிடிவ் மார்க் யாருக்கு அதிகமா இருக்கும்னு நினைக்கிறீங்க?" என்றார் ராஜு செல்வத்தைப் பார்த்து.

"நிச்சயமா ராம்தான் பெட்டர். ரெண்டு பேரோடயும் பழகின என் பொதுவான அனுபவத்தை வச்சு, முதல்ல நீலகண்டன்தான் பெட்டர் சாய்ஸ்னு நினைச்சேன். நீங்க சொன்ன இந்த அணுகுமுறைப்படி பாத்தா ராம்தான் பெட்டர்னு நிச்சயமாத் தெரியுது" என்றார் செல்வம்.

"வெரி குட்! ராமைத் தேர்ந்தெடுக்கறதுன்னு நாம மூணு பேரும் ஒருமனதா முடிவு செஞ்சுடலாமா?" என்றார் ராஜு.

மற்ற இருவரும் மௌனமாகத் தலையசைத்தனர்.

செல்வம் எழுந்து சென்ற பிறகு, சுந்தரம் ராஜுவிடம், "செல்வத்துக்கு பயஸ் இருக்கு சார்! நீலகண்டனைத்தான் தேர்ந்தெடுக்கணும்னு இன்டர்வியூவுக்கு முன்னாலேயே முடிவு செஞ்சுட்டாருன்னு நினைக்கிறேன். உங்க யோசனைப்படி, ரெண்டு பேரோட நிறை குறைகளைப் பட்டியல் போட்டப்பறம்தான் அவர் தன் மனசை மாத்திக்கிட்டாரு" என்றார்.

"பயஸ் இருக்கறது அவருடையு குறையா இருக்கலாம். ஆனா அவர்கிட்ட நிறைய நிறைகள் இருக்கு. நியாய உணர்வு இருக்கு. தான் ஒரு முடிவுக்கு வந்தப்பறம் கூட, மத்தவங்க சொல்றதைக் கேட்டு அதில இருக்கிற நியாயத்தை எடை போட்டுப் பாக்கற திறந்த மனப்பான்மை இருக்கு. அதனால, ஆன் பாலன்ஸ் அவர்கிட்ட பாசிடிவ் குணங்கள்தான் மேலோங்கி இருக்கு! கான்ட் யூ ஸீ திஸ்?" என்றார் ராஜு.

அவர் சொல்வதை ஏற்றுக் கொள்வது போல் தலையசைத்தார் சுந்தரம். 

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 51
 தெரிந்து தெளிதல்

குறள் 504:
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.

பொருள்:
ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வர வேண்டும்.
 அறத்துப்பால்                                                                              காமத்துப்பால் 

Tuesday, August 24, 2021

503. இலக்கியச் சொற்பொழிவு

அந்த ஊர் இலக்கிய மன்ற ஆண்டுவிழாவில் 'இலக்கியக் கடல்' சுந்தரலிங்கம் கலந்து கொண்டு சிறப்புச் சொற்புழிவு ஆற்றப் போகிறார் என்ற செய்தி இலக்கிய மன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமின்றி, அந்த ஊர்ப் பொதுமக்களுக்கும் பெரும் உற்சாகத்தை அளித்தது.

சுந்தரலிங்கம் என்ற பெயர் தமிழ் இலக்கிய உலகில் அதிகம் மதிக்கப்பட்ட பெயர்களில் ஒன்று. அவர் அளவுக்குத் தமிழ் இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தவர்கள் சமகாலத்தில் வேறு யாரும் இல்லை என்று சொல்வார்கள். 

அதிகம் அறியப்படாத நூல்கள் உட்படப் பல தமிழ் இலக்கியப் படைப்புகளைக் கற்று அவற்றின் நுணுக்கமான பொருட்களை அறிந்திருந்தது மட்டுமின்றி, அவற்றிலிருந்து ஆயிரக் கணக்கான செய்யுட்களை மனப்பாடமாகவும் சொல்லக் கூடியவர் அவர். 

எதிர்பார்க்கப்படியே அந்தக் கூட்டத்துக்கு இலக்கிய மன்றத்தில் உறுப்பினர் அல்லாதவர்களும் அதிக அளவில் வந்திருந்தனர். பலர் உட்கார இடமின்றி பின்னால் நின்று கொண்டிருந்தனர்.

சுந்தரலிங்கத்தின் பேச்சு ஆறிவுபூர்வமாகவும், சுவாரசியமாகவும் இருந்தது.

" 'கடன் பெற்றார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்ற வரி எந்தக் காப்பியத்தில் இடம் பெற்றிருக்கிறது என்று கேட்டால் உங்களில் பலரும் சொல்லி விடுவீர்கள்" என்று சொல்லி விட்டு அரங்கத்தைப் பார்த்தார் சுந்தரலிங்கம்.

"கம்பராமாயணம்" என்ற பதில் பலரிடமிருந்தும் வந்தது.

சுந்தலிங்கம் பெரிதாகச் சிரித்து விட்டு, "இது கம்பராமாயணத்தில் உள்ள வரி இல்லை. நன்கு படித்தவர்கள் பலர் கூட இவ்வாறு தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பலரும் இது கம்பன் எழுதியது என்று காலம் காலமாக்க் கூறி வருவதால், இந்தத் தவறான கருத்து ஆழமாக வேறூன்றி விட்டது. சிலர் இதை அருணாசலக் கவிராயர் எழுதியதாகச் சொல்கிறார்கள். அதுவும் தவறு. தனிப்படல் திரட்டு என்ற நூலில் இடம் பெற்றுள்ள ஒரு கவிதை வரி இது. இதை எழுதியவரின் பெயர் தெரியவில்லை. 'கடன் கொண்ட நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்பதுதான் சரியான வரி. இப்படித்தான் பல விஷயங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு நிலைபெற்று விட்டன!" என்றார்.

தொடர்ந்து,"இங்கே கடவுளை வணங்குபவர்கள் பலர் இருப்பீர்கள். அவர்களுக்காக, கம்பராமாயணத்திலிருந்து அனுமனைப் பற்றிய ஒரு துதியைக் கூறி என் உரையை நிறைவு செய்கிறேன்.

" ' அஞ்சிலே ஒன்று பெற்றான்
    அஞ்சிலே ஒன்றைத் தாவி, 
    அஞ்சிலே ஒன்று ஆறாக, ஆரியர்க்காக ஏகி
    அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
    அஞ்சிலே ஒன்றை வைத்தான்
    அவன் எம்மை அளித்துக் காப்பான்.

"இதன் பொருள் பஞ்சபூதங்களில் ஒன்றான வாயுவுக்குப் பிறந்தவனான அனுமன், பஞ்சபூதங்களில் ஒன்றான கடலைத் தாண்டுமுகமாக பஞ்சபூதங்களில் ஒன்றான ஆகாயத்தில் பறந்து, பஞ்சபூதங்களில் ஒன்றான பூமியின் புதல்வி சீதையைக் கண்டு, பஞ்சபூதங்களில் ஒன்றான தீயை இலங்கையில் வைத்தான். அவன் நம்மைக் காப்பான என்பது. பஞ்சபூதங்களையும் வைத்து எழுதப்பட்ட கவிதை இது" என்று கூறி உரையை முடித்தார்.

கரவோலி அரங்கை அதிர வைத்தது.

நிகழ்ச்சிக்குப் பிறகு, அந்த இலக்கிய மன்ற உறுப்பினர்கள் ஒரு ஓட்டலில் சுந்தரலிங்கத்துக்கு விருந்தளித்தனர்.

பல உறுப்பினர்கள் சுந்தரலிங்கத்தின் அருகே வந்து அவர் பேச்சைப் பாராட்டி விட்டுச் சென்றார்கள். 

விருந்து முடிந்து எல்லோரும் கிளம்பத் தொடங்கியபோது, ஒரு இளைஞன் சற்றுத் தயங்கியபடி சுந்தரலிங்கத்திடம் வந்தான். அப்போது அவர் அருகில் ஒன்றிரண்டு பேர்தான் இருந்தனர்.

"சார் உங்க பேச்சு ரொம்ப அருமை. ஆனா எனக்கு ஒரு சந்தேகம்..." என்றான் மெல்லிய குரலில்.

"சொல்லுங்க தம்பி!" என்றார் சந்தரலிங்கம், அவனை ஊக்குவிக்கும் விதமாக.

"அனுமனைப் பற்றி ஒரு செய்யுள் சொன்னீர்களே, அது கம்பரால் எழுதப்பட்டதாக அறிஞர்கள் ஏத்துக்கலேன்னு கேள்விப்பட்டிருக்கிறேன்..."

"உனக்கு எப்படித் தெரியும்?" என்றார் சுந்தரலிங்கம் சற்றே அதிர்ச்சியுடன்.

"நான் பள்ளிக்கூடத்தில படிக்கறப்ப என் பள்ளி ஆசிரியர் சொல்லி இருக்காரு. இது பக்தர்களுக்குக் கேட்க நல்லா இருக்கும், ஆனா இது கம்பன் கவிதை இல்லை, நல்ல கவிதை அமைப்பு கொண்டது கூட இல்லேன்னு சொல்லி இருக்காரு. மத்தபடி எனக்கு இலக்கிய அறிவு எதுவும் கிடையாது" என்றான் இளைஞன், தவறாக ஏதாவது சொல்லிக் கொண்டிருக்கிறோமோ என்ற அச்சம் நீங்காதவனாக.

சுந்தரலிங்கம் பதில் சொல்லவில்லை. அதற்குள் மன்றச் செயலாளர் அங்கே வந்து, "கிளம்பலாமா?" என்றதும் இளைஞனை மௌனமாக ஒருமுறை பார்த்து விட்டு அவருடன் சென்று விட்டார்.

வீட்டுக்குப் போனதும், முதல் வேலையாகத் தன்னிடம் இருந்த கம்பராமாயணப் பதிப்பை எடுத்துப் பார்த்தார்.

இளைஞன் கூறியது உண்மை என்று உறுதியாயிற்று.

'இவ்வளவு ஆழமாகப் படித்தும் எப்படி இதை கவனிக்காமல் விட்டோம் என்று தன்னை நொந்து கொண்டார் சுந்தரலிங்கம்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 51
 தெரிந்து தெளிதல்
குறள் 503
அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.

பொருள்:
அரிய நூல்களைத் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்து பார்க்குமிடத்தில் அறியாமை இருக்கும். அவ்வாறு இல்லாமல் இருப்பது அரியது.                
                                                                குறள் 504 
                                                                குறள் 502                                                                                                                                                                                                 
     அறத்துப்பால்                                                                                காமத்துப்பால்

Monday, August 23, 2021

502. ப்ராஜக்ட் மானேஜர்!

"நான் பல வருஷங்களாத் தொழில் பண்ணிக்கிட்டிருக்கேன். ஆனா இது என் கனவு ப்ராஜக்ட். இந்த ப்ராஜக்ட் ரொம்ப நாளா என் மனசில இருந்துக்கிட்டிருக்கு. இப்பத்தான் இதை நிறைவேற்றுகிற நேரம் வந்திருக்கு. உங்களை மாதிரி ஒரு நல்ல எஞ்சினியரும் கிடைச்சிருக்கீங்க!" என்றார் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பரந்தாமன்.

"நல்லது சார்! நல்லா திட்டம் போட்டு, சிறப்பா செயல்படுத்திடலாம்" என்றான் ப்ராஜக்ட் எஞ்சினியராக அன்றுதான் பொறுப்பேற்றுக் கொண்ட கிரி.

"சங்கர்! ப்ராஜக்ட் ஃபைலை எடுத்துக்கிட்டு வந்து கிரிகிட்ட கொடு" என்றார் பரந்தாமன் அவர் அருகின் பணிவுடன் நின்றிருந்த இளைஞனிடம்.

சங்கர் அறைக்கு வெளியே சென்று ஓரிரு நிமிடங்களில் ஒரு பெரிய ஃபைலுடன் வந்தான். அதை கிரியிடம் கொடுத்தான்.

"சரி சார்! இதை முழுசா படிச்சுட்டு அப்புறம் எப்படி புரொஸீட் பண்றதுன்னு உங்ககிட்ட வந்து விவாதிக்கிறேன்" என்ற கிரி சற்றுத் தயங்கி விட்டு, "இதில நிறைய டெக்னிகல் டீடெயில்ஸ் இருக்கு. முழுசாப் படிக்க ரெண்டு நாள் ஆகும்" என்றான்.

"டேக் யுவர் டைம்!" என்றார் பரந்தாமன்.

ரண்டு நாட்கள் கழித்து, ஃபைலை முழுவதையும் படித்து விட்டு, சில குறிப்புகள் எழுதிக் கொண்டு பரந்தாமன் அறைக்கு கிரி வந்தான்.

"வாங்க கிரி! ஃபைலை முழுசாப் படிச்சுட்டாங்களா?" என்றார் பரந்தாமன்.

"படிச்சுட்டேன் சார். எல்லா விவரங்களும் சேகரிச்சு, சுருக்கமான ப்ராஜக்ட் ரிபோர்ட் கூடத் தயார் பண்ணி வச்சுட்டீங்க. சில விஷயங்களை உங்ககிட்ட விரிவா  டிஸ்கஸ் பண்ணணும்!" என்றான் கிரி.

"நிச்சயமா! அதுக்குத்தான் சங்கரையும் வரச் சொல்லி இருக்கேன்" என்று பரந்தாமன் சொல்லிக் கொண்டிருந்தபோதே அறைக்குள் நுழைந்தான் சங்கர்.

"இந்த டிஸ்கஷனுக்கு இவன் எதுக்கு?" என்று கிரி யோசித்துக் கொண்டிருக்கும்போதே, சங்கரைப் பார்த்து, "உட்காரு சங்கர்!" என்றார் பரந்தாமன்.

சங்கர் கிரியைப் பார்த்து இலேசாகச் சிரித்து விட்டு, அவன் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

"கிரி! இந்த ப்ராஜக்டைப் பொருத்த வரையில டெக்னிகல் ஹெட் நீங்கதான். ஆனா, சங்கர்தான் ஓவர் ஆல் இன்சார்ஜ். அவனுக்கு நான் டெஸிக்னேஷன் எதுவும் கொடுக்கல. ப்ராஜக்ட் மானேஜர்னு வேணும்னா வச்சுக்கலாம். பட் ஹீ வில் ரெப்ரஸன்ட் மீ. எல்லா முடிவுகளையும் எடுக்க அவனுக்கு அதிகாரம் கொடுத்திருக்கேன், வேணும்னா எங்கிட்ட கன்ஸல்ட் பண்ணிப்பான். அது அவனோட டிஸ்க்ரீஷன்! ஆனா நீங்க அவன்கிட்ட கிளியரன்ஸ் வாங்கிக்கிட்டு எல்லாத்தையும் செய்யுங்க. இஸ் இட் கிளியர்?" என்றார் பரந்தாமன்.

கிரி என்ன சொல்வதென்று தெரியாமல் மௌனமாகத் தலையாட்டினான்.

"உங்களுக்கு சங்கரைப் பத்தித் தெரியணும். சங்கரோட அப்பா எங்கிட்டதான் வேலை செஞ்சாரு. ரொம்ப நம்பிக்கையானவர். நேர்மையானவர். அவர் இறந்தப்பறம் நான்தான் சங்கரை இங்கே வேலை செய்யச் சொல்லிக் கூப்பிட்டேன். அவனும் ஒத்துக்கிட்டு வந்தான். பாக்கறதுக்கு அவன் ரொம்ப எளிமையானவனாத் தெரிவான். அவன் அதிகம் படிச்சவன் இல்லதான். ஆனா அவனோட அர்ப்பணிப்பு, நேர்மை, தவறிப் போய்க் கூட எந்த தப்பான காரியத்தையும் செய்யக் கூடாது, தனக்கு எந்த ஒரு கெட்ட பேரும் வந்துடக் கூடாதுங்கறதுங்கறதில அவன் காட்டற கவனம் இதையெல்லாம் அஞ்சு வருஷமா பக்கத்தில இருந்து கவனிச்சதில, இந்த ப்ராஜக்டை செயல்படுத்தறதில என் இடத்தில இருந்து எல்லாத்தையும் செய்யக் கூடியவன் சங்கர்தான்னு தீர்மானிச்சு அவனுக்கு இந்தப் பொறுப்பைக் கொடுத்திருக்கேன். உங்களுக்கு அவனோட இணைஞ்சு செயல்படறது ஒரு இனிமையான அனுபவமா இருக்கும்! சரி. நீங்க விவாதிக்க வேண்டிய விஷயங்களைச் சொல்லுங்க!" என்றார் பரந்தாமன். 

சங்கரைப் பார்த்துப் புன்னகைத்து விட்டு, தான் குறித்து வைத்திருந்த விஷயங்கள் பற்றிப் பேசத் தொடங்கினான் கிரி.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 51
 தெரிந்து தெளிதல்

குறள் 502:
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு.

பொருள்:
நல்லகுடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழி வரும் செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.
 அறத்துப்பால்                                                                              காமத்துப்பால் 

Sunday, August 22, 2021

501. பொறியில் சிக்கிய எலிகள்!

"சார்! நான் ரிடயர் ஆக இன்னும் ஒரு மாசம்தான் இருக்கு. புது சி ஈ ஓ வைத் தேர்ந்தெடுக்க இன்டர்வியூவுக்கு நீங்க இன்னும் தேதி கொடுக்கலியே!" என்றார் வரதராஜன்.

"வர 16-ஆம் தேதி அன்னிக்கு வச்சுக்கலாம்" என்றார் நிறுவனத் தலைவர் கோவிந்த்.

"நாம ஷார்ட்லிஸ்ட் பண்ணின ஆறு பேரையும் வரச்சொல்லி மெயில் அனுப்பிடட்டுமா?"

"அந்த ஆறு பேர்ல நாலு பேரை நான் எலிமினேட் பண்ணிட்டேன். சுந்தர், கனகசபை ரெண்டு பேரை மட்டும் வரச் சொல்லுங்க போதும். மீதி நாலு பேருக்கும் ரிக்ரட் லெட்டர் அடுப்பிடுங்க"

வரதராஜன் குழப்பத்துடன் கோவிந்தைப் பார்த்தார்.

"ஐ ஆம் சாரி, வரதராஜன். நீங்க ரிடயர் ஆகப் போறதால உங்களை நான் இதில இன்வால்வ் பண்ண வேண்டாம்னு நினைச்சேன்" என்றார் கோவிந்த்.

"சார்! முடிவெடுக்கற உரிமை உங்களுக்குத்தான் இருக்கு. ஆனா, ஆறு பேரை ஷார்ட்லிஸ்ட் பண்ணினப்பறம் அவங்களைப் பத்தின எல்லா பின்னணித் தகவல்களையும் நாம சேகரிச்சுட்டமே!" 

"தகவல்களை எல்லாம் சேகரிச்சுட்டோம். ஆனா நான் சில விஷயங்களை சோதனை செய்ய விரும்பினேன். அதனால ஆறு பேருக்கும் என் நண்பர் ஒத்தர் மூலமா சில சோதனைகள் வச்சேன். டிராப்னு கூடச் சொல்லலாம்! பொறியில நாலு  பேரு சிக்கிக்கிட்டாங்க. அதனால அவங்களை எலிமினேட் பண்ணிட்டேன். உங்ககிட்ட இந்த விவரங்களை அப்புறம் பகிர்ந்துக்கலாம்னு நினைச்சுதான் உங்ககிட்ட முன்னால சொல்ல. இப்ப சொல்றேன்" என்ற கோவிந்த், தான் செய்தவற்றை வரதராஜனிடம் விவரித்தார்.

"நம்ம நிறுவனத்துக்கு இருக்கற ரெபுடேஷனால, இங்க சி ஈ ஓ பதவிக்கு வர பல பேர் ஆசைப்பட்டது உங்களுக்குத் தெரியும். நம்ம கம்பெனியிலேயே நிறைய திறமையான நிர்வாகிகள் இருந்தாலும், இந்தப் பதவிக்கு இருக்க வேண்டிய சில சிறப்பான திறமைகள் உள்ளவங்க நம்ம கம்பெனியில யாரும் இல்லைங்கறதாலதான் வெளியிலேந்து ஒத்தரைத் தேர்ந்தெடுக்க முடிவு செஞ்சோம். நீங்க நம்ம கம்பெனிக்குக் கிடைச்ச பெரிய சொத்து. உங்களை மாதிரி இன்னொருத்தர் கிடைக்க மாட்டார். 70 வயசுக்கு அப்புறம் இந்தப் பொறுப்புல நீங்க தொடர விரும்பாததாலதான் நாம இன்னொருத்தரைத் தேட வேண்டி இருக்கு."

நிறுவனத்தலைவர் தன்னைப் புகழ்வது உண்மையாகத்தான் என்றாலும், தன்னிடம் கூறாமல் சி ஈ ஓ தேர்வில் சில விஷயங்களைச் செய்து விட்டது பற்றித் தான் வருத்தபடக் கூடாதே என்பதற்காகவும்தான் அந்தப் புகழ்ச்சி என்பதை உணர்ந்து கொண்டவராக வரதராஜன் பேசாமல் இருந்தார்.

"நம்ம போட்டியாளர்கள், அரசாங்க அதிகாரிகள், நம் சப்ளையர்கள், ஒப்பந்ததாரர்கள் கிட்டேருந்தெல்லாம் சி ஈ ஓவுக்கு எப்படிப்பட்ட அழுத்தங்கள்ளாம் வரும்கறது உங்களை விட அதிகமா யாருக்கும் தெரியாது. இதையெல்லாம் சமாளிக்க சில அடிப்படையான குணங்கள் வேணும். இதெல்லாம் ஒத்தர்கிட்ட இருக்கான்னு அவங்க சர்வீஸ் ரிகார்டுலேந்து தெரியாது. அதுக்குத்தான் மூணு விஷயங்கள்ள அவங்களுக்கு சோதனைகள் வச்சேன்."

"என்ன அந்த 3 விஷயங்கள்?"

"நேர்மையான வழிகளைக் கடைப்பிடிக்கிறது, பணத்துக்கு ஆசைப்பட்டு தவறான காரியங்களைச் செய்யாம இருக்கறது, காம இச்சைக்காக நேர்மை தவறி நடந்துக்காம இருக்கறது. இந்த வகையான சோதனைகள் உங்களுக்குப் பலமுறை வந்திருக்கும்னு எனக்குத் தெரியும். ஆனா இயல்பிலேயே உயர்ந்த பண்பாடுகளைக் கொண்ட உங்களுக்கு இதெல்லாம் ஒரு சவாலாவே இருந்திருக்காது. நீங்க ரொம்ப சுலபமா இந்த சவால்களை ஊதித் தள்ளி இருப்பீங்க!"

கோவிந்த் கூறியவற்றின் உண்மையை அறிந்தவராக வரதராஜன் மௌனமாகத் தலையாட்டினார்.

"அதனால இந்த நாலு பேருக்கும் சில பொறிகள் வச்சேன். முதலாவதா, எனக்கு நெருக்கமான ஒத்தர் மூலமா இந்தப் பதவிக்கு அவங்க முயற்சி செஞ்சா நிச்சயம் பலன் கிடைக்கும்னு அவங்களை நம்ப வச்சேன். ரெண்டாவதா அவங்க நிறுவனத்திலேயே யாரும் கண்டுபிடிக்க முடியாதபடி ஒரு முறைகேடான காரியத்தைச் செய்ய அவங்களுக்கு ஒரு மிகப் பெரிய தொகை கிடைக்க ஏற்பாடு செஞ்சேன். மூணாவதா ஒரு ஹை கிளாஸ் கார்ல் கேர்ளை அவங்களோட பழக வச்சு, அவங்க நிறுவனம் தொடர்பா ஒரு முக்கியத் தகவலைப் பெற முயற்சி செஞ்சேன். ரெண்டு பேர் ஒரு பொறியல சிக்கினாங்க. ஒத்தர் ரெண்டு பொறியல சிக்கினார். இன்னொருத்தர் மூணு பொறியிலேயும் சிக்கினாரு. எந்தப் பொறியிலுமே சிக்காதவங்க ரெண்டு பேர்தான்!" என்றார் கோவிந்த்.

வரதராஜன் மௌனமாக இருந்தார்.

"நான் பயன்படுத்தின முறைகளை நீங்க ஏத்துக்க மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும். உங்களை இதில இன்வால்வ் பண்ணாததற்கு அதுவும் ஒரு காரணம்!"

"சரி. இந்த ரெண்டு பேர்ல ஒத்தரை எப்படித் தேர்ந்தெடுக்கப் போறீங்க?" என்றார் வரதராஜன்.

"தேர்ந்தெடுக்கப் போறோம்னு சொல்லுங்க. அதுக்குத்தானே இனடர்வியூ? நீங்களும் நானும் சேர்ந்துதானே இனடர்வியூ பண்ணப் போறோம்? நீங்க தேர்ந்தெடுக்கற ஆள்தான் அடுத்த சி ஈ ஓ!" என்றார் கோவிந்த்.

இன்டர்வியூ முடிந்ததும், இருவருமே ஒருமனதாக கனகசபையைத் தேர்ந்தெடுத்தார்கள்.

"சார்! உங்க்கிட்ட கேக்கணும்? இன்டர்வியூவின்போது, இந்த வேலையில உயிருக்குக் கூட ஆபத்து ஏற்படலாம், அதுக்குத் தயாரா இருக்கீங்களான்னு கேட்டீங்க. உடனே சுந்தர் பயந்துட்டாரு. என்ன ஆபத்துன்னு பதட்டமாக் கேட்டாரு. ஆனா கனகசபை, 'அதனால என்ன? எல்லாத்துக்கும் தயாராத்தான் இருக்கணும்'னு சொன்னாரு. அதனால அவர்தான் ஒரே சாய்ஸுன்னு ஆயிடுச்சு. ஆனா இந்த வேலையில எனக்கு உயிருக்கு ஆபத்துக்கு ஏற்படற மாதிரி எதுவம் நடக்கலியே! ஏன் அப்படிச் சொன்னீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?" என்றார் வரதராஜன்.

"இது மாதிரி உயர்ந்த பதவிக்கு தைரியம் ரொம்ப முக்கியம். உயிருக்குக் கூட பயப்படாம இருக்கறதை விடப் பெரிய தைரியம் வேற என்ன இருக்க முடியும்? அதனாலதான் அப்படிக் கேட்டேன்!" என்ற கோவிந்த், வரதராஜனை உற்றுப் பார்த்து, "நீங்க அப்படிப்பட்ட தைரியம் உள்ளவர்தான்! உங்களுக்கு அது தெரியாம இருக்கலாம். ஆனா உங்ககிட்ட அந்த குணம் இருக்கறதை நான் பல முறை கவனிச்சிருக்கேன்!" என்றார்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 51
 தெரிந்து தெளிதல்
குறள் 501
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.

பொருள்:
அறம், பொருள், இன்பம், உயிர் பற்றிய அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.                                                                   .
                                                        குறள் 502 
                                                        குறள் 500                                                                                                                                            
     அறத்துப்பால்                                                                                காமத்துப்பால்

Sunday, August 8, 2021

500. பராந்தகனின் முடிவு

அண்டை நாட்டுடனான போருக்குத் தலைமை தாங்கி நடத்தி வெற்றி கண்ட இளவரசன் பராந்தகனை நாடு முழுவதும் கொண்டாடியது.

"மன்னருக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் இளவரசரே படைகளுக்குத் தலைமையேற்றுச் சென்று போரை நடத்தி இருக்கிறார். போரில் அவருடைய வீரச் செயல்கள் பற்றிப் படைவீரர்கள் பலரும் அலுக்காமல் திரும்பத் திரும்ப்ப் பேசிக் கொண்டிருக்கிறார்களாம்."

"அவருடைய குதிரை மீது அம்பு பாய்ந்து அது கீழே விழ்ந்ததும் இளவரசர் இன்னொரு குதிரைக்குக் கடக் காத்திருக்காமல் தரையில் நின்றபடியே  குதிரை மீது அமர்ந்திருந்த எதிரி நாட்டு மன்னனுடன் போரிட்டு அவனை வெட்டி வீ.ழ்த்தினாராம். எதிரி நாட்டு மன்னன் வீழ்ந்ததும் எதிரிப்படைகள் சரணடைந்து விட்டனராம். எத்தனையோ போர்களைக் கண்ட நம் மன்னரின் சாதனையையே நம் இளவரசர் மிஞ்சி விட்டதாகப் படைத் தளபதிகள் வெளிப்படையாகவே கூறுகிறார்களாம்!"

"மன்னர் கோபித்துக் கொள்ளப் போகிறார்!"

"தன் மகன் தன்னை மிஞ்சும் வகையில் பெருமை அடைவது  ஒரு தந்தைக்குப் பெருமை அளிக்க் கூடிய விஷயம் என்று வள்ளுவப் பெருந்தகை கூறி இருக்கிறரே!"

"அது சரிதான். மன்னர் நோய்வாய்ப்பட்டிருக்கிற நிலையில், அவருக்குப் பிறகு நம் நாட்டைக் காப்பாற்ற பொருத்தமும், தகுதியும் உள்ளவராக நம் இளவரசர் இருப்பது பற்றி மக்களாகிய நாமும் பெருமை கொள்ளலாமே!"

"நம் நாட்டின் கிழக்கு எல்லைப் பகுதியில் புரட்சிக்காரர்களின் அட்டூழியங்கள் எல்லை மீறி விட்டன. அவர்களுக்கு மக்கள் ஆதரவு இல்லாவிட்டாலும், வன்முறை மூலம் மக்களை மிரட்டி அந்தப் பகுதியைத் தனி நாடு போல் அவர்கள் ஆட்சி செய்கிறார்கள். படைகளை அனுப்பி ஓரிரு நாட்களில் அவர்களை அழித்து விடலாம்தான். ஆனால் அப்பாவி மக்கள் பலரும் கொல்லப்படுவார்களே என்பதால் மன்னர் பொறுமையாக இருக்கிறார்" என்றார் அமைச்சர்.

"இதை எப்படிச் சகித்துக் கொண்டிருக்கிறீர்கள் அமைச்சரே? புரட்சிக்காரர்களை உடனே அடக்காவிட்டால் அவர்கள் அதிக வலுப்பெற்று விடுவார்கள். அங்கிருக்கும் மக்களுக்கும் நம் மீது நம்பிக்கை போய் விடும்" என்றான் இளவரசன் பராந்தகன்.

"நீங்கள் கூறுவது சரிதான். புரட்சிக்காரர்களை அடக்க ஒரு சரியான உத்தியைத்தான் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம். ஐம்பது பேர் கொண்ட ஒரு  ரகசியப் படையை உருவாக்கி இருக்கிறோம். அவர்களுக்குப் பயிற்சியளித்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் சாதாரண மனிதர்கள் போல் அந்தப் பகுதிக்குள் ஊடுருவி புரட்சிப்படையின் தலைவர்களைத் தந்திரமாகக் கொன்று விடுவார்கள். தலைவர்கள் கொல்லப்பட்டதும், மற்றவர்கள் பயந்து அடங்கி விடுவார்கள்" என்றார் அமைச்சர்.

"நல்ல யோசனைதான். அந்த ரகசியப்படைக்கு நானே தலைமை தாங்கிச் செல்கிறேன்" என்றான் இளவரசன்.

"வேண்டாம் இளவரசே! இது மிகவும் ஆபத்தான செயல். அந்த ஐம்பது பேரும் தங்கள் உயிரைப் பணயம் வைத்துத்தான் இந்தப் பணியில் இறங்குகிறார்கள். நீங்கள் இந்த நாட்டின் இளவரசர். அடுத்த மன்னராகப் போகிறவர். போர்க்களத்தில் நீங்கள் காட்டிய வீரத்தால் உங்கள் புகழ் அண்டை நாடுகளில் கூடப் பரவி இருக்கிறது. ஆனால் இது வழக்கமான போர் அல்ல. ஆபத்து நிறைந்த இந்தச் செயலில் தாங்கள் ஈடுபடக் கூடாது. மன்னர் இதற்கு ஒப்புக் கொள்ள மாட்டார். நானும் இதில் ஈடுபட வேண்டாமென்று உங்களை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்றார் அமைச்சர் கெஞ்சும் குரலில்.

ஆனால் பராந்தகன் அமைச்சரின் பேச்சைக் கேட்கவில்லை. அவன் தந்தை முதலில் ஆட்சேபித்தபோதும், அவரிடம் வற்புறுத்தி அனுமதி வாங்கி ஐம்பது பேருடன் ரகசியமாகக் கிளம்பி விட்டான்.

ராந்தகன் தலைமையிலான சிறிய படை புரட்சிக்காரர்களின் ஆதிக்கம் மிகுந்திருந்த பகுதிக்குள் ஊடுருவிப் பத்து நாட்கள் ஆகி விட்டன. இந்தப் பத்து நாட்களில் புரட்சிப்படையின் முக்கியத் தலைவர்கள் இருவரை அவர்கள் கொன்று விட்டனர். 

தங்கள் தலைவர்கள் இருவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டது புரட்சிப் படையினரிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருந்தாலும், எல்லோருக்கும் தலைவராக இருந்த தண்டபாணி இரண்டாம் நிலைத் தலைவர்களை ஊக்கப்படுத்தி வைத்திருந்தார்.

"இது நிச்சயமா நம் மன்னரோட சதி வேலைதான். நம்மைக் கொல்ல ரகசியமா யாரையோ அனுப்பி இருக்காங்க. நாம ஜாக்கிரதையா இருக்கணும். நம்ம பகுதிக்குப் புதுசா வந்திருக்கறவங்க யாருன்னு பாத்து அவங்களைக் கண்காணிக்கணும். உங்களுக்கு யார் மேலேயாவது சந்தேகம் வந்தா, எங்கிட்ட சொல்லுங்க. அவங்களை எப்படி விசாரிக்கணுமோ அப்படி விசாரிப்போம்" என்று இரண்டாம் நிலைத் தலைவர்களிடம் ரகசியமாகக் கூறினார் தண்டபாணி.

ரவு நேரத்தில் மரங்கள் அடர்ந்திருந்த அந்தச் சாலை வழியே நடந்து சென்று கொண்டிருந்தான் பராந்தகன். அவனுக்குப் பாதுகாப்பாக சற்றுப் பின்னால் இரண்டு வீரர்கள் வந்து கொண்டிருந்தனர்.

ஒரு மரத்துக்குக் கீழே பராந்தகன் நடந்து கொண்டிருந்தபோது, இருட்டில் மறைந்தபடி மரத்தின் மேல் அமர்ந்திருந்த ஒரு சிறுவன் பராந்தகனின் கழுத்தில் குதித்தான். இருவரும் கீழே விழுந்தனர்.

என்ன நடந்தது என்று உணர்ந்து இளவரசன் சமாளித்துக் கொள்வதற்குள், "நீதானேடா எங்கப்பாவைக் கொன்றது?" என்றபடியே இளவரசனின் கழுத்தில் தன் கையிலிருந்த கத்தியை ஆழமாகப் பாய்ச்சினான் அந்தச் சிறுவன்.

இளவரசனுக்குப் பாதுகாவலாக வந்து கொண்டிருந்த இரண்டு வீரர்களும் அருகே வந்து பார்ப்பதற்குள் இளவரசனின் உயிர் பிரிந்திருந்தது. சிறுவன் விரைந்து ஓடி மறைந்து விட்டான்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 50 
 இடனறிதல்  
குறள் 500
காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.

பொருள்:
பாகனுக்கு அடங்காததும், தன்னை எதிர்த்துப் பிடித்த வீரனைத் தன் தந்தத்தால் தாக்கித் தூக்கியதுமான ஆண்யானை, கால் புதையும் சேற்றில் சிக்கிக் கொண்டால், நரிகூட அதைக் கொன்றுவிடும்.
 அறத்துப்பால்                                                                              காமத்துப்பால் 

Tuesday, August 3, 2021

499. பீட்டரின் தோல்வி

"தலைவர் கூப்பிட்டிருந்தாரே, என்ன விஷயம்?" என்றான் பீட்டர்.

"வழக்கமான வேலைதான். அவருக்குத் தொந்தரவு கொடுக்கற ஒரு ஆளை ரெண்டு தட்டு தட்டணும். அவ்வளவுதான்!" என்றான் மாசிலாமணி.

"ஆளு யாரு?"

விவரங்களை மாசிலாமணி கூறியதும், "யாரோ ஊர் பேர் தெரியாத ஆளா இருப்பான் போலருக்கு. அவனைத் தட்ட நம்மளை மாதிரி ஆளுங்க வேணுமா என்ன?" என்றான் பீட்டர்.

"ஆளு யாரா இருந்தா நமக்கு என்ன? நம்ம தொழிலை நாம செய்யப் போறோம்!"

"சொல்லுங்க. என்ன செய்யணும், எப்படிச் செய்யணும்?"

திட்டத்தை விளக்கினான் மாசிலாமணி.

"எவ்வளவோ பெரிய ஆளையெல்லாம் போட்டிருக்கோம்? இவன் ஒரு சாதரணமான ஆளு. இவனை ஒண்ணும் செய்ய முடியலேன்னு வந்து நிக்கறியே?" என்றான் மாசிலாமணி கோபத்துடன்.

"நானும் அப்படித்தான் நினைச்சேன். எதுக்கு இவ்வளவு பேரை அழைச்சுக்கிட்டு போகச் சொல்றீங்கன்னு கூட நினைச்சேன். ஆனா என்ன செய்யறது? அவனை நெருங்கக் கூட முடியலையே!"

"என்ன பேச்சுடா இது? அதிரடியாப் போய்த் தாக்கிட்டு அவன் கதையை முடிச்சுட்டு வர வேண்டியதுதானே? அவன் என்ன கோட்டையில இருக்கானா, இல்லை, அவனைப் பாதுகாக்க அடியாளுங்க இருக்காங்களா?" என்றான் மாசிலாமணி.

அதெல்லாம் இருந்தா அடிச்சுத் தள்ளிக்கிட்டுப் போயிருப்பமே! தனக்குன்னு தனி பாதுகாப்புப் படையே வச்சிருந்தானே பால்ராஜ், அவன் படையை அடிச்சு விரட்டிட்டு அவனைப் போடலியா? 

"இவன் அப்படி இல்லீங்க. ஒரு சின்ன வீட்டிலதான் இருக்கான். நாங்க அந்தத் தெருவுக்குள்ள நுழைஞ்சதுமே, எதையோ மோப்பம் பிடிச்ச மாதிரி ஊர்க்கரங்க பல பேரு அவன் வீட்டு முன்னால வந்து நின்னுட்டாங்க. 

"அவங்க கையில ஆயுதம் எதுவும் இல்லைதான். அவங்க சண்டை போடற ஆளுங்களும் இல்ல. ஒரு தட்டு தட்டினா கீழே விழுந்துடக் கூடியவங்கதான். ஆனா அவங்க நின்ன உறுதியைப் பாத்தா, ஒவ்வொத்தரும் 'என் பொணத்தை மிதிச்சிக்கிட்டுத்தான் இந்த வீட்டுக்குள்ள போக முடியும்'னு சவால் விட்டுட்டு நிக்கற மாதிரி இருந்தது. 

"அத்தனை பேரையும் கொன்னு போட்டுட்டா வீட்டுக்குள்ள போய் அவனைப் போட முடியும்? 'நிலம் வாங்கற விஷயமா ஒத்தரைப் பாக்க வந்தோம், தப்பான ஊருக்கு வந்துட்டோம் போலருக்கு'ன்னு சொல்லிச் சமாளிச்சுட்டுத் திரும்பி வந்துட்டோம்" என்றான் பீட்டர்.

"எனக்கு அவமானமா இருக்கு பீட்டர். சரி விடு. நானே போயி முடிச்சுட்டு வரேன்" என்றான் மாசிலாமணி, கோபம் குறையாமல்.

'நீங்க போனாலும் இதேதான் நடக்கப் போகுது! போயிட்டு வாங்க. அப்பதான் நான் சொன்னதோட உண்மை உங்களுக்குப் புரியும்!' என்று பீட்டர் முணுமுணுத்தது மாசிலாமணியின் காதில் விழவில்லை.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 50 
 இடனறிதல்
குறள் 499 
சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.

பொருள்:
ஒருவருக்குப் பாதுகாப்புக்கான கோட்டையும், மற்றும் பல படைச் சிறப்புகளும் இல்லாதிருப்பினும், அவர் வாழும் நிலையான இடத்திற்குப் படையெடுத்துச் சென்று தாக்குவது எளிதான செயல் அல்ல.
                                                                    குறள் 500
                                                                    குறள் 498                                                                             
   அறத்துப்பால்                                                                                       காமத்துப்பால்
                                                                             

Sunday, August 1, 2021

498. பாம்பு வேட்டை!

"பாம்பை அடித்தால் அதை அடித்துக் கொல்ல வேண்டும். தப்ப விட்டால் நமக்கு என்றுமே ஆபத்துதான்!" என்றான் அரசன் விக்ரம சிங்கன்.

"பிங்கள நாட்டை நாம் போரில் வெற்றி பெற்றாலும், பிங்கள நாட்டு மன்னர் வீரவர்மர் தன் சிறிய படையுடன் நாட்டை விட்டே ஓடி விட்டதைத்தான் தாங்கள் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். அவர் எதிர்ப்புக் காட்டாமல் நாட்டை விட்டு விட்டு, தன் படைதான் முக்கியம் என்று ஓடுவார் என்று நாம் எதிர்பார்க்கவில்லையே!"

"அதைத்தான் பாம்பை உயிரோடு தப்ப விடுவது என்று நான் குறிப்பிட்டேன். இப்போது அவன் எங்கே இருக்கிறான் என்று தகவல் கிடைத்ததா?"

"இப்போதுதான் நம் ஒற்றர்படைத் தலைவர் புதுத் தகவலுடன் வந்திருக்கிறார். அதைத் தங்களிடம் சொல்லத்தான் நான் தங்களைக் காண வந்தேன்" என்றார் அமைச்சர்.

"சொல்லுங்கள்!" என்றான் மன்னன் ஆர்வத்துடன்.

"பரகால நாட்டுக்குச் சொந்தமான பனிமலர்த் தீவு என்ற சிறிய தீவில்தான் பிங்கள நாட்டு அரசரும் அவருடைய படைகளும் தஞ்சமடைந்திருக்கிறார்கள்."

"அப்படியா?" என்று சற்று யோசித்த மன்னன் விக்ரம சிங்கன், "பனிமலர்த்தீவில் பரகால நாட்டுப் படைகள் இருக்கின்றனவா?" என்றான்.

"இல்லை மன்னா! அங்கு குறைந்த எண்ணிக்கையில்தான் மக்கள் வசிக்கிறார்கள். பாதுகாப்புக்காக ஒரு சில படை விரர்கள்தான் இருக்கிறார்கள். அதனால்தான் பிங்கள நாட்டு மன்னரையும் அவர் படைகளையும் அங்கே தங்கி இருக்க பரகால நாட்டு மன்னர் அனுமதித்திருக்கிறார் என்று நினைக்கிறேன்" என்றார் அமைச்சர்.

"அப்படியானால் நாம் பனிமலர்த்தீவைத் தாக்கினால் வீரவர்மனையும் அவன் படைகளையும் எளிதாகச் சிறைப்படுத்தி விடலாமே!" என்றான் விக்ரம சிங்கன்.

"மன்னிக்க வேண்டும் அரசே! அந்தத் தீவு பரகால நாட்டுக்குச் சொந்தமானது. நாம் அங்கு சென்று தாக்கினால் பரகால நாட்டின் மீது போர் தொடுத்ததாக ஆகாதா?" என்றார் அமைச்சர் தயக்கத்துடன்.

"நாம் என்ன பனிமலர்த்தீவை ஆக்கிரமிக்கவா போகிறோம்? வீரவர்மனையும், அவன் படைகளையும் தாக்கி, சிலரைக் கொன்று மற்றவர்களைச் சிறைப்படுத்தி நம் நாட்டுக்கு அழைத்து வரப் போகிறோம். அவ்வளவுதானே?"

"என்ன இருந்தாலும் அந்த இடம் பரகால நாட்டைச் சேர்ந்ததாயிற்றே!"

"நான் சொல்வதைக் கேளுங்கள். நம் நாட்டின் கிழக்குக் கடற்கரையிலிருந்து  பனிமலர்த்தீவு சிறிது தூரத்தில்தான் இருக்கிறது. அருகில் மலைகளும், காடுகளும் நிறைந்த சிறு தீவுகள் இருப்பதால், நாம் சில படகுகளில் நம் வீரர்களை  அனுப்பினால் அதை யாரும் கவனிக்க மாட்டார்கள். சில மணி நேரங்களில் நம் வேலையை முடித்து விடலாம். தேவைப்பட்டால், பின்னர் பரகால நாட்டுக்கு நம் தூதரை அனுப்பி நிலைமையை விளக்கலாம். என்ன சொல்கிறீர்கள்?"

அமைச்சர் அரை மனத்துடன் தலையசைத்தார்.

"அரசே! நமக்குப் பெரிய ஆபத்து நிகழ்ந்து விட்டது" என்றார் அமைச்சர்.

"என்ன ஆயிற்று. அதுதான் நம் வீரர்கள் வீரவர்மனைச் சிறைப்பிடித்து அழைத்து வருவதாக நமக்குத் தகவல் வந்ததே!" என்றான் விக்ரம சிங்கன் படபடப்புடன்.

"திட்டமிட்டபடி நம் விரர்கள் படகுகளில் சென்று பனிமலர்த்தீவை அடைந்து வீரவர்மரையும் அவர் படைவீரர்கள் பலரையும் சுலபமாகச் சிறைப்பிடித்து விட்டனர். அவர்களைப் படகுகளில் அழைத்து வந்தபோது, எதிர்பாராத வகையில் பரகால நாட்டுப் படைகள்  நம்மைத் தாக்கி விரவர்மனை மீட்டு அழைத்துச் சென்று விட்டனர். அத்துடன் பரகால நாடு நம் மீது போர் தொடுக்கும் விதமாக நம் எல்லையில் தாக்குதலைத் துவக்கி இருக்கிறது!" என்றார் அமைச்சர் கவலையுடன்.

அமைச்சரின் பேச்சைக் கேட்காமல், யோசிக்காமல்  அவசரமாகச் செயல்பட்டு விட்டோமே என்று வருந்தினான் விக்ரம சிங்கன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 50 
 இடனறிதல்  
குறள் 498
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.

பொருள்:
பெரிய படையை உடையவன், சிறிய படையை உடையவன் இருக்கும் இடந்தேடிப் போனால், போனவனின் பெருமை அழியும்..
 அறத்துப்பால்                                                                              காமத்துப்பால் 

497. பொதுநல வழக்கு!

"நீங்க இது மட்டும் எத்தனையோ பொதுநல வழக்குகள் போட்டிருக்கீங்க. எத்தனையோ ஊழல்களை வெளியில கொண்டு வந்திருக்கீங்க. ஆனா இப்ப நீங்க இறங்கி இருக்கிறது ஒரு ஆபத்தான வேலை" என்றார் சகாயம்.

"எந்த விதத்தில?" என்றார் ராமசாமி.

"என்னங்க இப்படிக் கேக்கறீங்க? தொழிலதிபர் வேலுச்சாமியைப் பத்தி உங்களுக்குத் தெரியாதா? அவருக்கு அரசியல் செல்வாக்கு நிறைய இருக்கு. அதனாலதான் நேர்மையான அதிகாரிகள் கூட அவர் அவர் மேல நடவடிக்கை எடுக்காம இருக்காங்க. வேலுச்சாமி கொலை செய்யக் கூடத் தயங்க மாட்டார்ங்கறது உங்களுக்குத் தெரியாதா? அவர் தொடங்கப்போற தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்கக் கூடாதுன்னு பொதுநல வழக்குப் போடப் போறேன்னு சொல்றீங்களே! உங்களை அவர் சும்மா விட்டுடுவாரா?"

"எதிர்க்கட்சிக்காரங்க அவர் மேல பல குற்றச்சாட்டுக்களைச் சொல்லி இருக்காங்களே! அவங்களை அவர் எதுவும் செய்யலியே?"

"எதிர்க்கட்சிக்காரங்க பொதுப்படையாப் பேசுவாங்க. உங்களை மாதிரி ஆதாரங்களையெல்லாம் சேகரிச்சு வச்சுக்கிட்டு அவங்க பேசறது இல்ல. அதனால பெரும்பாலும் அதை யாருமே பெரிசு படுத்த மாட்டாங்க. வேலுச்சாமியும், இதெல்லாம் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்கள், எனக்குக் கெட்ட பெயர் உண்டாக்கணுங்கறதுக்காக சில பேர் பரப்புகிற பொய்னு சொல்லிட்டு அதோட விட்டுடுவாரு. அந்த அரசியல்வாதிகளும் அந்தக் குற்றச்சாட்டைப் பத்தி அப்புறம் பேச மாட்டாங்க. ஆனா உங்க விஷயம் வேற. நீங்க ஒரு வழக்குப் போட்டீங்கன்னா, அதுக்கு எல்லாருமே பயப்படுவாங்க. அதனால உங்க விஷயத்தில வேலுச்சாமி  சும்மா இருக்க மாட்டாரு. இன்னொரு விஷயத்தையும் நீங்க ஞாபகம் வச்சுக்கணும்." 

"என்ன அது?" என்றார் ராமசாமி.

சகாயம் கூறிய பதிலைக் கேட்டு சற்று நேரம் யோசனை செய்த ராமசாமி, "சரி. நீங்க சொல்றதை நான் சோசிச்சுப் பாக்கறேன். வழக்குப் போடறதை இப்போதைக்குத் தள்ளிப் போடறேன்" என்றார்.

தான் சொன்னதை ராமசாமி ஏற்றுக் கொண்டதில் மகிழ்ச்சி அடைந்த சகாயம், 'சில விஷயங்களுக்கு எல்லாருமே பயந்துதானே ஆகணும்!" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.

சில மாதங்களுக்குப் பிறகு, ராமசாமியைச் சந்தித்த சகாயம், "என்ன இப்படிப் பண்ணிட்டீங்க?" என்றார்.

"இவ்வளவு வலுவான ஆதாரம் இருக்கும்போது, வழக்குப் போடாம இருக்கறது தப்புன்னு தோணிச்சு. அதனால வழக்கு போட்டுட்டேன். எப்படியும் இந்த வழக்குல வேலுச்சாமிக்கு எதிராத்தான் தீர்ப்பு வருங்கறதில எனக்கு எந்த சந்தேகமும் இல்ல!" என்றார் ராமசாமி.

"அதில்ல. திடீர்னு எதிர்க் கட்சியா இருக்கற த ந க வில போய்ச் சேர்ந்திருக்கீங்களே, அதைக் கேட்டேன்" என்றார் சகாயம்.

"நீங்கதானே அன்னிக்கு சொன்னீங்க? அரசியல் கட்சியில இருக்கறவங்களுக்கு ஒருவிதப் பாதுகாப்பு உண்டு, அவங்களைத் தாக்கறதுக்கு வேலுச்சாமி மாதிரி ஆட்கள் கூடத் தயங்குவாங்க, அதனாலதான் அரசியல் கட்சிக்காரங்க தைரியமா அவர் மேல குற்றச்சாட்டுக்களைச் சொல்லுவாங்கன்னு? அதனாலதான் ஒரு கட்சியில சேர்ந்துட்டு அப்புறம் அவர் மேல வழக்குப் போட்டிருக்கேன். அரசியல் கட்சியில இருக்கற பாதுகாப்பை என் நோக்கத்தை நிறைவேத்திக்கப் பயன்படுத்திக்கறேன் அவ்வளவுதான்!" என்றார்  ராமசாமி.

"ஆனா எல்லாக் கட்சிகளுமே மோசம்னுதானே நீங்க எங்கிட்ட அடிக்கடி சொல்லுவீங்க?"

"உண்மைதான். ஆனா இப்ப பதவியில இருக்கறவங்க ரொம்ப மோசமா இருக்காங்க. ஆனா த ந க அந்த அளவுக்கு மோசமா இருந்ததில்ல. அதனால என் நோக்கத்தை நிறைவேத்திக்கறதுக்காக என் கருத்துக்களைக் கொஞ்சம் சமரசம் செஞ்சுக்கிட்டிருக்கேங்கறது உண்மைதான். ஒருவேளை இவங்க பதவிக்கு வந்தப்பறம் ஏதாவது முறைகேடுகள்ள ஈடுபட்டா, அப்ப இந்தக் கட்சியிலேந்து விலகிட வேண்டியதுதான்" என்றார் ராமசாமி.

தன் உயர்ந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதில் தனக்குப் பாதுகாப்பு தேடிக் கொள்ள ராமசாமி செய்து கொண்ட சமரசம் சரிதானா என்று சகாயத்தால் தீர்மானிக்க முடியவில்லை.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 50 
 இடனறிதல்
குறள் 497 
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்.

பொருள்:
(செய்யும் வழிவகைகளைக்) குறைவில்லாமல் சிந்தித்துத் தக்க இடத்தில் பொருந்திச் செய்தால், ஒருவருக்கு அஞ்சாமை தவிர வேறு துணை வேண்டியதில்லை.
                                                                  குறள் 498 
                                                                  குறள் 496                                                                                       அறத்துப்பால்                                                                                  காமத்துப்பால்

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...