திருக்குறள்
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 64
அமைச்சு
631. குடிமக்கள் படை
"அமைச்சரே! நம் எல்லைப்புறத்தில் நடக்கும் போராட்டத்தை ஒடுக்க, நீங்கள் ஒரு முயற்சியும் செய்யவில்லையே!" என்றார் அரசர்."அரசே! மக்கள் அரசாங்கத்தின் மீது கோபமாக இருக்கிறார்கள். அவர்கள் கோபத்தைப் போக்குவதற்கான வழிமுறையை யோசித்துக் கொண்டிருக்கிறேன். அங்குள்ள நம் நிர்வாகிகளுடன் தொடர்பில் இருக்கிறேன். விரைவிலேயே ஒரு தீர்வுக்கான திட்டம் தங்கள் அனுமதியுடன் செயல்படுத்தப்படும்" என்றார் அமைச்சர்.
"படைகளை அனுப்பிப் போராட்டக்கார்களை அடக்குவதை விட்டு, அவர்கள் கோபத்தைப் போக்கும் வழி பற்றி யோசிப்பதாகச் சொல்கிறீர்களே!"
"மன்னிக்க வேண்டும் அரசே! அது எல்லைப்பகுதி. அந்தப் பகுதியை ஆக்கிரமிக்க, நம் அண்டை நாடு சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருக்கிறது. மக்கள் மீது நாம் அடக்குமுறையை ஏவினால், அவர்கள் நம் மீது கோபம் கொண்டு, அண்டை நாட்டின் சூழ்ச்சிக்கு ஆளாகி விடக் கூடும். அவர்கள் பிரச்னையை அனுதாபத்துடன் அணுகுவதுதான் நல்லது."
"மக்கள் எதற்காகப் போராடுகிறார்கள்? அவர்களுக்கு நாம் வசதிகள் செய்து கொடுக்கவில்லையா?"
"அரசே! மக்கள் போராடுவது வசதிகளுக்காக அல்ல. அங்கே அண்டை நாட்டார் ஊடுருவல் அதிகம் இருப்பதால், நம் ராணுவத்தினரின் கெடுபிடி அதிகமாக இருக்கிறது. சந்தேகத்தின் பேரில் பலரை நம் படை வீரர்கள் பிடித்து, ராணுவ அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரிக்கிறார்கள். இதனால் சில அப்பாவி மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். அதனால்தான் சில இடங்களில் மக்கள் போராடுகிறார்கள்."
"அதற்கு என்ன செய்ய முடியும்? ராணுவம் கடுமையாக நடந்து கொள்ளாவிட்டால், ஊடுருவல்காரர்களை எப்படி அடையாளம் காண்பது?"
"அரசே! அங்கிருக்கும் நம் ராணுவ வீரர்களுடன் கலந்து பேசி, ஒரு திட்டத்தை உருவாக்கி இருக்கிறேன். திட்டத்தை இறுதியாக்கிய பின், உங்களிடம் விளக்கிக் கூறி, உங்கள் அனுமதி பெற்று, அதைச் செயல்பட நினைத்திருந்தேன். தாங்கள் கேட்பதால், இப்போதே விவரங்களைக் கூறுகிறேன்.
"உள்ளூர் மக்கள் சிலரைக் கொண்டு, குடிமக்கள் படை என்ற ஒரு படையை உருவாக்கப் போகிறோம். அவர்கள் ரகசியமாகச் செயல்பட்டு, ஊடுருவல்காரர்களை அடையாளம் கண்டு ராணுவத்திடம் தெரிவிப்பார்கள்.
"குடிமக்கள் படையால் அடையாளம் காட்டப்பட்டவர்களை மட்டும் ராணுவம் ரகசியமாகக் கைது செய்து விசாரிக்கும். குடிமக்கள் படை உள்ளூர் மக்களைக் கொண்டதால், அவர்களால் நம் நாட்டவர் யார், ஊடுருவல்காரர் யார் என்று சரியாக இனம் காண முடியும். இதனால் அப்பாவி மக்கள் கைது செய்யப்படுவது பெருமளவு தவிர்க்கப்படும். ஊடுருவல்காரர்களைக் கைது செய்து, அவர்களிடமிருந்து தகவல் பெற்று, அண்டை நாட்டின் திட்டங்களை அறிய முடியும். இதனால், அண்டை நாட்டின் திட்டங்களை முறியடித்து, நம் எல்லைப்புறத்தை நம்மால் பாதுகாக்கவும் முடியம்"
அமைச்சரின் விளக்கத்தைக் கேட்ட அரசர், "இது நல்ல திட்டம்தானே! உடனே இதைச் செயல்படுத்தலாமே! ஏன் தாமதம் செய்கிறீர்கள்?" என்றார்.
"அரசே! குடிமக்கள் படை என்பது பிரச்னையைத் தீர்ப்பதற்கான ஒரு கருவி. இதை எப்படிப் பயன்படுத்துவது, திட்டத்தை எப்போது செயல்படுத்துவது, எந்த வகையில் செயல்படுத்துவது, எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதைப் பற்றி எல்லாம் நம் படைத்தலைவருடன் கலந்தாலோசித்து, விவரமாகத் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறோம்.
"முதலில், மக்களின் கோபம் குறைய, நாம் சற்று அவகாசம் கொடுக்க வேண்டும். அதுவரை, நம் படைகளின் நடவடிக்கைகளைச் சற்றுக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
"குடிமக்கள் படையில் இடம் பெறப் போகும் முக்கியத் தலைவர்களை முதலில் அடையாளம் கண்டு, அவர்களிடம் இதை விளக்கி, அவர்களைப் படையில் சேர்த்த பின், அவர்கள் மூலம் இன்னும் பல உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும்.
"இந்தக் குடிமக்கள் படையில் அந்நியர்கள் ஊடுருவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கைகளை எடுக்க வேண்டும், படையில் சேர்ந்தவர்களையும், நம் ஒற்றர்களைக் கொண்டு கண்காணிக்க வேண்டும். இவற்றையெல்லாம் சரியாகச் செய்தால்தான், இந்தத் திட்டம் வெற்றி பெறும்."
"நல்லது அமைச்சரே! நன்கு யோசித்துத் திட்டமிட்டுச் சிறப்பாகச் செயல்படுத்துங்கள். இதற்காக நீங்கள் செய்ய வேண்டிய எந்த ஒரு செயலுக்கும், என் முழுமையான அனுமதியை இப்போதே வழங்குகிறேன்!" என்றார் அரசர்.
குறள் 631:
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.
அரசர் தன்னை ஏன் உடன் அழைக்கிறார் என்று புரியாமல், அமைச்சர் தலையாட்டினார்.
அன்று மாலை, அரசரும் அமைச்சரும் சாதாரண மனிதர்களைப் போல் உடையணிந்து, அரண்மனையிலிருந்து சுமார் 10 மைல் தொலைவிலிருந்த ஒரு ஊருக்குச் சென்றனர்.
அந்த ஊரை அவர்கள் அடைந்தபோது, பொழுது நன்கு இருட்டி இருந்தது.
தாங்கள் வந்த தேரிலிருந்து ஊரின் எல்லையிலேயே இறங்கிக் கொண்டு, தேரை அரண்மனைக்குத் திருப்பி அனுப்பி விட்டார் அரசர்.
மறுநாள் காலை சூரிய உதய நேரத்தில், தேரை மீண்டும் அதே இடத்துக்குக் கொண்டு வந்து, அரசரையும் அமைச்சரையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்பது ஏற்பாடு.
ஊருக்குள் நுழைந்ததும், எதிரில் வந்த ஒரு நபரை நிறுத்திய அரசர், "ஐயா! நாங்கள் தொலைதூரத்திலிருந்து வருகிறோம். அரசரை ஒரு தடவை நேரில் பாத்து விட வேண்டும் என்பதற்காக, அரண்மனைக்குப் போய்க் கொண்டிருக்கிறோம். இப்போது இருட்டி விட்டதால், இந்த ஊரில் இரவு தங்கி விட்டுக் காலையில கிளம்பலாம் என்று நினைக்கிறோம். எங்களுக்குப் படுத்து உறங்க இடம் கிடைக்குமா?" என்றார்.
"என் வீட்டிலேயே படுத்துக் கொள்ளலாம். ஆனால் ஊரில் புதிதாக யாரும் வந்தால், இந்த ஊர்த் தலைவருக்குத் தெரிவிக்க வேண்டும் என்று ஒரு ஏற்பாடு இருக்கிறது. அதனால், தலைவரிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டு வந்து விடுகிறேன்!" என்றார் அவர்.
"ஊரில் புதிதாக யாரும் வந்தால், தலைவருக்கு ஏன் தெரிவிக்க வேண்டும்? உங்கள் தலைவர் என்ன சர்வாதிகாரியா?" என்றார் அரசர்.
"ஐயா! அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். அவர் மிகவும் நல்லவர். இந்த ஊர் மக்களுக்கு எந்த ஒரு தீங்கும் நேராமல் காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறையினால்தான், அவர் இப்படி ஒரு நடைமுறையை உருவாக்கி இருக்கிறார்!" என்றார் அந்த மனிதர்.
"அப்படி அவரிடம் சொல்லாவிட்டால்?"
"அவர் நல்லவர்தான், ஆனால் விதிகளை யாராவது மீறினால், கடுமையாக நடந்து கொள்வார். அதனால், ஊரில் எல்லோருக்கும் அவர் மேல் அன்பும் உண்டு, மரியாதையும் உண்டு. ஆனால், இதுவரைக்கும் யாரும் அப்படிச் சொல்லாமல் இருந்ததில்லை! வாருங்கள், நான் தலைவரிடம் போய் உங்களைப் பற்றிச் சொல்றேன். நீங்களும் என்னுடன் வாருங்கள். நீங்களும் அவரை நேரில பார்த்த மாதிரி இருக்கும்."
ஊர்த் தலைவர் வீட்டுக்கு அவர்கள் சென்றபோது, தலைவர் தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து சில ஓலைச்சுவடிகளைப் படித்துக் கொண்டிருந்தார்.
அவர்களை அழைத்து வந்த ஊர்க்காரர், தலைவரிடம் விஷயத்தைச் சொன்னதும், அவர்கள் இருவரையும் பார்த்த தலைவர், "சரி. நம் வீட்டிலேயே படுத்துக் கொள்ளட்டும். என் வீட்டில் எல்லாரும் ஊருக்குப் போயிருக்கிறார்கள். இருங்கள். யாரிடமாவது சொல்லி, இவர்களுக்குச் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்கிறேன்!" என்று எழுந்தார் தலைவர்.
"வேண்டாம் ஐயா! நாங்கள் பக்கத்து ஊரில் சத்திரத்தில் சாப்பிட்டு விட்டோம்" என்றார் அரசர்.
ஊர்க்காரர் விடைபெற்றுச் செல்ல, இருவரும் தலைவருக்குப் பக்கத்தில் திண்ணையில் அமர்ந்து கொண்டனர்.
"நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் நூல் எது என்று தெரிந்து கொள்ளலாமா?" என்றார் அமைச்சர்.
"இது மனித ஒழுக்கம் பற்றிய ஒரு நீதி நூல். தலைவனாக இருப்பவனுக்கு, நீதி, சரியான நடத்தை இதையெல்லாம் பற்றித் தெரிந்திருக்க வேண்டுமல்லவா? அதனால்தான், இந்த நூலைப் படித்துக் கொண்டிருக்கிறேன்!" என்றார் தலைவர்.
"உங்கள் ஊர் மக்களிடையே ஏதாவது தகராறு வந்தால், நீங்கள்தான் தீர்த்து வைப்பீர்களா?" என்றார் அரசர்.
"என்னிடம்தான் வருவார்கள். ஆனால், நான் இந்த ஊரில் இருக்கும் அறிஞர் ஒருவரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு விசாரித்து, அவரிடம் ஆலோசனை கேட்டுத்தான் முடிவு செய்வேன்!" என்றார் ஊர்த் தலைவர்.
அரசரும், அமைச்சரும் இரவு அங்கே படுத்து உறங்கி விட்டு, அடுத்த நாள் காலை கிளம்பி அரண்மனைக்கு வந்தனர்.
"அமைச்சரே! நேற்று நாம் பார்த்த ஊர்த் தலைவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்றார் அரசர், அமைச்சரிடம்.
"ஒரு சிறந்த மனிதர். இளம் வயதிலேயே நல்ல முதிர்ச்சி. தன் ஊர் மக்களைப் பாதுகாப்பதில் அக்கறை, அதனால் ஊருக்கு யாரும் புதிதாக வந்தால், அவர்களைப் பற்றித் தனக்குத் தெரிவிக்க வேண்டுமென்று ஒரு விதியை உருவாக்கி, அதைக் கடுமையாகப் பின்பற்றுகிறார், மக்களிடம் அன்பும் அக்கறையும், தேவைப்படும்போது கடுமை, நீதி நூல்களைப் படிக்க வேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சி, தேவைப்படும்போது அறிஞர்களின் ஆலோசனையைக் கேட்டு நடந்து கொள்வது என்று அறிவு, அன்பு, பண்பு, கல்வி, உறுதியான நிலைப்பாடு போன்ற பல நல்ல தன்மைகள் உள்ளவராக இருக்கிறார். ஆமாம், இவரைப் பற்றி உங்களுக்கு எப்படித் தெரிந்தது? இவரைப் பார்க்கப் போகும்போது, என்னையும் ஏன் அழைத்துச் சென்றீர்கள்?" என்றார் அமைச்சர்.
"நான் நகர்வலம் போகும்போது, அவரைத் தற்செயலாகப் பார்த்தேன். பிறகு, சில நாட்கள் கொஞ்சம் நெருக்கமாக கவனித்தேன். உங்களை அழைத்துப் போய் அவரிடம் காட்டியதற்குக் காரணம், ஒரு அமைச்சருக்குத் தேவையான குணங்கள் அவரிடம் இருக்கின்றனவா என்று உங்களிடம் கேட்டு அறிந்து கொள்ளத்தான்!"
"அரசே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்றார் அமைச்சர், அரசர் கூறியதன் பொருளை உணர்ந்தவராக.
"நீங்கள் ஓய்வு பெறப் போவதாக அறிவித்து விட்டீர்கள். புதிய அமைச்சரை நான் தேர்ந்தெடுக்க வேண்டாமா? எப்படி என் தேர்வு?" என்றார் அரசர்.
"உங்கள் தேர்வு அற்புதம், அரசே! ஆனால், நீங்கள் அமைச்சராக நியமிக்கப் போகும் நபரிடம் இருக்கும் குணங்கள் என்னிடம் இருந்திருக்கின்றனவா என்று நான் யோசிக்கிறேன்!" என்றார் அமைச்சர்.
குறள் 632:
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு.
"நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனால், இது அமைச்சருடைய ஏற்பாடு. அவருக்கு நான் சில அதிகாரங்கள் கொடுத்திருக்கிறேன். அதன்படிதான் அவர் செயல்படுகிறார். எனவே, அவரிடம் இது பற்றிக் கேள்வி கேட்பது முறையாக இருக்காது!" என்றார் அரசர்.
"இந்த நாட்டுக்கு நீங்கள் அரசரா, அமைச்சர் அரசரா?" என்றான் கோமகன், கோபத்துடன்.
"அரசே! குந்தள நாட்டின்மீது படையெடுக்க, மலைய நாடு ஆயத்தம் செய்து கொண்டிருப்பதாக ஒற்றர்கள் மூலம் செய்தி வந்திருக்கிறது. குந்தள நாடு எப்போதும் நம்முடன் நட்பாக இருந்து வந்திருக்கிறது. எனவே குந்தள நாட்டுக்கு ஆதரவாக, நம் படைகளை அனுப்ப வேண்டும்" என்றார் அமைச்சர் அருள்மொழி.
"அமைச்சரே! மற்ற நாட்டு மன்னர்களிடம் நீங்கள் அதிகம் அக்கறை காட்டுவது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. ஒரு சிறு நாடான வல்லிய நாட்டின் அரசனை வரவழைத்து, நம் விருந்தாளியாகச் சில நாட்கள் தங்க வைத்தீர்கள். இப்போது, குந்தள நாட்டுக்கு ஆதரவாக, நம் படைகளை அனுப்ப வேண்டும் என்கிறீர்கள்! மற்ற நாடுகளுக்காகப் போரிடுவதற்காகவா நாம் படைகளை வைத்திருக்கிறோம்?" என்றான் இளவரசன், கோபத்துடன்.
"கோமகா! நாட்டு நிலவரங்கள் உனக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் உன்னை இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைத்தேன். உன்னிடம் யோசனை கேட்டால், பதில் சொல். இல்லாவிட்டால், நாங்கள் பேசுவதை கவனித்துக் கொண்டு மட்டும் இரு! அமைச்சரிடம் இது போல் பேசுவது முறையல்ல!" என்றார் அரசர், கோபத்துடன்.
அமைச்சர் அருள்மொழி சிரித்துக் கொண்டே, "இளவரசரின் ஐயங்களைத் தீர்க்க வேண்டியது என் கடமை. நமக்கு பக்கபலமாக நின்றவர்களுக்கு ஆபத்து ஏற்படும்போது, அவர்களைக் காப்பாற்ற வேண்டியது அரச தர்மம், இளவரசே!" என்றார்.
"அப்படியே செய்யுங்கள் அமைச்சரே!" என்றார், அரசர்.
"அமைச்சரே! நாம் நீண்ட நாட்களாக எதிர்நோக்கி இருந்த அபாயம் நிகழ்ந்தே விட்டது!" என்றார் அரசர்
"காரி நாட்டுப் படைகள் நம் எல்லையில் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். அதை நாம் எப்படி முறியடிக்கப் போகிறோம்?" என்றான் இளவரசன்.
"நமக்கு மும்முனைப் பாதுகாப்பு இருக்கிறது. அதனால், எதிரிகளின் தாக்குதலை நாம் முறியடித்து விடலாம்!" என்றார் அமைச்சர்.
"அதென்ன மும்முனைப் பாதுகாப்பு?" என்றான் இளவரசன்.
"வல்லிய நாடு, காரி நாட்டின் நட்பு நாடாக இருந்தது. வல்லிய நாட்டு அரசனை நம் நாட்டுக்கு அழைத்து வந்து, அவரை நம் நண்பராக ஆக்கிக் கொண்டு விட்டோம். அதனால், வல்லிய நாடு, காரி நாட்டுக்கு ஆதரவாகப் போரில் இறங்காது..."
அமைச்சர் பேசி முடிக்கும் முன்பே, அரசர் இளவரசனைப் பார்த்து, "ஒரு சிறிய நாடான வல்லிய நாட்டின் மன்னருக்கு மதிப்புக் கொடுத்து, நாம் ஏன் அவரை நம் நாட்டுக்கு அழைத்து உபசரிக்க வேண்டும் என்று கேட்டாயே! நாம் அவருக்கு நட்புக்கரம் நீட்டி, அவரைக் காரி நாட்டு மன்னிடமிருந்து பிரித்திருக்காவிட்டால், காரி நாட்டுப் படைகளுக்கு ஆதரவாக, வல்லிய நாட்டுப் படைகளும் நமக்கு எதிராகப் போரில் இறங்கி இருக்கும். புரிந்ததா?" என்றார்.
இளவரசன் மௌனமாகத் தலையாட்டினான்.
"இரண்டாவதாக, குந்தள நாட்டுப்படை நமக்கு ஆதரவாகக் களம் இறங்கும். காரி நாட்டின் இன்னொரு எல்லையில், மலைப்பாங்கான பகுதியிலிருந்து குந்தள நாட்டுப் படைகள் தாக்கினால், அந்தத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல், காரி நாட்டுப் படைகள் சிதறி விடும்."
"மும்முனைப் பாதுகாப்பு என்றீர்களே, மூன்றாவது முனை எது?" என்றான் இளவரசன், ஆர்வத்துடன்.
அமைச்சர் சற்றுத் தயக்கத்துடன், அரசரைப் பார்த்து, "அரசே! தங்கள் அனுமதி இன்றி ஒன்றைச் செய்து விட்டேன்!" என்றார்.
"சொல்லுங்கள்!" என்றார் அரசர், சற்றுக் கவலையுடன்.
"உங்களிடம் கோபித்துக் கொண்டு அரண்மனையை விட்டுச் சென்ற உங்கள் ஒன்று விட்ட சகோதரர், உங்களை எதிர்ப்பதற்காக எல்லைப் புறத்தில் படை சேர்த்துக் கொண்டிருக்கிறார் அல்லவா?"
"ஆமாம். ஆனால், எல்லைப்புறத்தில் சிலர் அவனுக்குப் பாதுகாப்பாக இருப்பதால், தலைமறைவாக இருக்கும் அவனைக் கைது செய்ய முடியவில்லை என்று சொன்னீர்களே?" என்றார் அரசர்.
"மன்னிக்க வேண்டும், அரசே! சில நாட்களுக்கு முன், ஒற்றர்கள் மூலம் அவர் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து, அவரைச் சந்தித்தேன். அவர் தன் தவறை உணர்ந்து, தங்களிடம் மன்னிப்புக் கோர விரும்புகிறார். சில மாதங்களாகவே, காரி நாடு நம் மீது போர் தொடுக்கக் கூடும் என்ற பதட்டச் சூழல் இருந்ததால், போர்ச் சூழல் அகன்றதும், ஒரு நல்ல சந்தர்ப்பத்தில், அவரை உங்களிடம் அழைத்து வரலாம் என்று நினைத்தேன்."
"அதை அப்புறம் பார்க்கலாம். அதற்கும் இந்தப் போருக்கும் என்ன தொடர்பு?"
"இருக்கிறது அரசே! அவரிடம் சில நூறு வீரர்களே இருந்தாலும், அவர்கள் மறைந்திருந்து தாக்குவதில் வல்லவர்கள். அவர்களை நாம் பயன்படுத்திக் கொண்டு, எதிரிப் படைகளைத் திணறடிக்க முடியும்!" என்றார் அமைச்சர்.
"அமைச்சரே! முன்பு உங்களைப் பற்றித் தவறாகப் பேசியதற்கு என்னை மன்னித்து விடுங்கள்!" என்றான் இளவரசன், அமைச்சரைப் பார்த்துக் கைகூப்பியபடி.
"என்ன இது இளவரசே?" என்று அமைச்சர் இளவரசனின் கைகளை விலக்க, அரசர் புன்னகையுடன் அதை ரசித்தார்.
குறள் 633:
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு.
பொருள்:
பகைவர்க்குத் துணையானவரைப் பிரித்தல், தம்மிடம் உள்ளவரைக் காத்தல், பிரிந்து கொண்டவரை மீண்டும் சேர்த்துக் கொள்ளுதல் இவற்றில் வல்லவன் அமைச்சன்.
634. நிதி அமைச்சர்
மக்கள் நல்வாழ்வுக் கட்சி (ம..ந.க.) ஆட்சிக்கு வந்ததும், நிதி அமைச்சராக நியமிக்கப்படப் போவது யார் என்பது பற்றி, ஊடகங்கள், அரசிய விமரிசகர்கள், பொருளாதார நிபுணர்கள், பொதுமக்கள் என்று அனைவருமே ஆர்வம் காட்டினர். ஆளும் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரின் பெயர்கள் ஊகித்துச் சொல்லப்பட்டன.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், பராங்குசம் என்ற ஒரு ஓய்வு பெற்ற பொருளாதாரப் பேராசிரியரை, நிதி அமைச்சராக நியமித்தார் முதலமைச்சர் மாணிக்கம்.
கட்சியின் மூத்த தலைவர்களிடையே இது அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், முதல்வரிடம் இது பற்றிப் பேச அஞ்சி, அவர்கள் மௌனமாக இருந்தனர்.
ம.ந.க. ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகி விட்டன.
ம.ந.க வின் செயற்குழு கூட்டத்தைக் கூட்டினார் கட்சியின் தலைவரும் முதல்வருமான மாணிக்கம். கூட்டத்துக்கு, நிதி அமைச்சர் பராங்குசம் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார்.
முதலமைச்சர் பேசினார்:
"நம்ம கட்சியில உறுப்பினரா இல்லாத ஒரு பொருளாதார நிபுணரை நிதி அமைச்சரா நியமிச்சது, உங்களுக்கெல்லாம் வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் இருந்திருக்கும்.
"இதுக்கு முன்னால ஆட்சியில இருந்தவங்க, பொருளாதாரத்தை எந்த அளவுக்கு சீரழிச்சிருக்காங்கன்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். அதனால, நிலைமையைச் சரி செய்ய, ஒரு நிபுணர் தேவை, அதோட, எதையும் அரசியல் கண்ணோட்டத்தில பாக்காம, பொருளாதாரக் கண்ணோட்டத்தில பாத்தாதான், நிலைமையைச் சீர் செய்ய முடியும்.
"நம் கட்சியைச் சேர்ந்த யார் நிதி அமைச்சரா இருந்தாலும், நிதி சம்பந்தமான முடிவுகளை, அரசியல் கண்ணோட்டம் இல்லாம அவங்களால எடுக்க முடியாது. அதனாலதான், அரசியலில் இல்லாத பொருளாதார நிபுணர் பராங்குசம் அவர்களை, நிதி அமைச்சராத் தேர்வு செஞ்சேன்.
"இந்த ஆறு மாசத்தில, அவர் பல முடிவுகளை எடுத்துச் செயல்படுத்தி இருக்கார். அதில சில விஷயங்கள், உங்களுக்குப் பிடிக்காம இருக்கலாம். உங்க சந்தேகங்களை நீங்களே அவர்கிட்ட கேக்கலாம்!"
"ஐயா! நாம பதவிக்கு வந்தவுடனேயே, பல வரிகளை உயர்த்தி இருக்கோம். இதனால, மக்களுக்கு நம்ம மேல அதிருப்தி இருக்கு!" என்றார் ஒரு மூத்த தலைவர்.
"அதோட, நாம அறிவிச்ச பல திட்டங்களை இன்னும் நிறைவேத்தல. தொலைக்காட்சி விவாதங்கள்ள, நம்ம கட்சியோட செய்தித் தொடர்பாளர்கள், இதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாம தவிக்கறாங்க. ஏன், நாங்களே தொகுதிக்குப் போகறப்ப, மக்கள் எங்ககிட்ட கேக்கற கேள்விகளுக்கு எங்களால பதில் சொல்ல முடியல!" என்றார் இன்னொரு மூத்த தலைவர்.
"உங்க கேள்விகளுக்கெல்லாம் இப்ப நிதி அமைச்சர் பதில் சொல்வார்!" என்றார் முதல்வர், சிரித்தபடி.
பராங்குசம் சற்றுத் தயங்கி விட்டு, "எனக்கு இந்தப் பொறுப்பைக் கொடுக்கறப்ப, உங்க குடும்பத்துக்கு இப்படி ஒரு நிலைமை இருந்தா, அதை எப்படிச் சரி செய்வீங்களோ, அது மாதிரி இந்த மாநிலத்தோட நிலைமையையும் சரி செய்யணும்னு முதல்வர் எங்கிட்ட சொன்னாரு. நிலைமையை ஆராய்ந்து பாத்துட்டு, 'ஐயா! வருவாய்ப் பற்றாக்குறை ரொம்ப அதிகமா இருக்கு. அதனால கடன் அதிகமாகி, அதுக்கான வட்டியால, வருவாய்ப் பற்றாக்குறை இன்னும் அதிகமாகிக்கிட்டிருக்கு. இதைச் சரி செய்யணும்னா, ஒரு பக்கம் வருமானத்தைப் பெருக்கணும், இன்னொரு பக்கம் செலவுகளைக் குறைக்கணும். வருவாய்ப் பற்றாக்குறையை பூஜ்யத்துக்குக் கொண்டு வந்தப்பறம்தான், புதிய திட்டங்களை எடுத்துக்க முடியும்னு சொன்னேன். நான் சொன்னதை முதல்வர் ஏத்துக்கிட்டாரு. அதன்படி சில நடவடிக்கைகளை எடுத்திருக்கேன். அவ்வளவுதான்!" என்றார்.
"நீங்க சுலபமா சொல்லிட்டீங்க. மக்களுக்கு இதெல்லாம் புரியுமா? இதை எப்படி அவங்களுக்குப் புரிய வைக்க முடியும்?" என்றார் ஒரு அமைச்சர்.
பராங்குசம் பதில் சொல்ல யத்தனித்தபோது, முதல்வர் அவரைக் கையமர்த்தி விட்டு, "நமக்கு மக்கள் அஞ்சு வருஷம் ஆட்சிக்காலத்தைக் கொடுத்திருக்காங்க. முதல் ரெண்டு வருஷம், மக்களுக்கு அதிருப்தி ஏற்படலாம். இடைத்தேர்தல்கள்ள, நாம தோல்விகளைச் சந்திக்கலாம். நாம அடுத்த தேர்தல்ல தோத்துடுவோம்னு ஊடகங்கள் பேசலாம். ஆனா, இரண்டு வருஷம் நாம் கடுமையாச் செயல்பட்டா, அதன் பலன் கடைசி ரெண்டு மூணு வருஷங்கள்ள தெரிய வரும். அதற்கப்புறம், நாம செய்யறதாச் சொன்ன நலத்திட்டங்களைச செயல்படுத்தலாம், முன்னேற்றங்களைப் பாத்துட்டு, நாம செய்யறதைப் புரிஞ்சுக்கிட்டு, மக்கள் நமக்கு ஆதரவு கொடுப்பாங்க. நம்ம நிதி அமைச்சர் சொன்ன விஷயங்கள் நம் எல்லாருக்கும் தெரிஞ்சதுதுதான். ஆனா அவருக்கு அரசியல் கண்ணோட்டம் இல்லாததால, பொருளாதார நிலையை மட்டுமே பாத்து, என்ன செய்யணும், அதை எப்படிச் செய்யணும்னு சிந்திச்சு, தன்னோட கருத்துக்களைத் துணிவா எங்கிட்ட சொன்னாரு. நானும் அவற்றை ஏத்துக்கிட்டு, அவரை சுதந்திரமாச் செயல்பட விட்டேன்" என்றார்.
அனைவரும் மௌனமாக இருந்தனர்.
"நிதி நிலைமை மோசமா இருக்குங்கறதை மக்களுக்குப் புரிய வைக்க, நாம இன்னொரு காரியம் செய்யணும். நம் சம்பளத்தைப் பாதியாக் குறைச்சுக்கணும். இதனால பெரிய சேமிப்பு ஒண்ணும் கிடைச்சுடாது. ஆனா, மக்களுக்கு இது ஒரு நல்ல சிக்னலா இருக்கும்" என்ற முதல்வர், "இந்த யோசனையையும் சொன்னவர் நிதி அமைச்சர்தான்!" என்று பராங்குசத்தைப் பார்த்துச் சிரித்தார்.
குறள் 634:
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு.
பொருள்:
(செய்யத்தக்க செயலை) ஆராய்தல், அதற்குரிய வழிகளை ஆராய்ந்து செய்தல், துணிவாகக் கருத்தைச் சொல்லுதல் இவற்றில் வல்லவன் அமைச்சன்.
635. அந்தரங்க உதவியாளர்
"அண்ணன் மத்திய அமைச்சர் ஆயிட்டாரு. இது அவருக்குப் புதுப் பொறுப்பு. எப்படிச் சமாளிக்கப் போறாரோ தெரியல!"
"ஆமாம். மாநில அமைச்சரா இருந்தாலே, அங்கே செய்ய வேண்டிய வேலை என்னன்னு புரிஞ்சுக்கறதே கஷ்டம். மத்தியில் உள்ள அதிகாரிகள் வேற மாதிரி இருப்பாங்க. அவங்களை சமாளிக்கணும். அண்ணனுக்கு ஆங்கிலம் தெரியும்னாலும், டில்லியில அமைச்சரா இருக்கறது அவருக்குப் பெரிய சவாலா இருக்கும்."
"அதனாலதான், ஒரு நல்ல உதவியாளரை வச்சுக்கப் போறாராம்!"
"'யாரை வச்சுக்கப் போறாரு?"
"தன் அந்தரங்க உதவியாளர் மூலமாதான், மத்திய அரசு அதிகாரிகள், மற்ற அமைச்சர்களோட, அவரால இணைஞ்சு பணியாற்ற முடியும். நம்ம கட்சியில இருக்கற ஒரு படிச்ச, அறிவுள்ள ஆளை வச்சுப்பாருன்னு நினைக்கிறேன்!"
"அப்ப உனக்கோ, எனக்கோ வாய்ப்பில்லேன்னு சொல்லு!"
கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் இருவர் இவ்வாறு பேசிக் கொண்டனர்.
"என்ன ஆறுமுகம், மத்திய அமைச்சரா ஆயிட்டீங்க. உங்களுக்கு உதவியாளரா வரதுக்குக் கட்சிக்குள்ள நிறையப் போட்டி இருக்கு போலருக்கே!" என்றார் கட்சித் தலைவர் சபாபதி.
"ஆமாங்க. அது விஷயமாத்தான் உங்ககிட்ட பேச வந்தேன். நான் ஒத்தரைத் தேர்ந்தெடுத்திருக்கேன். அதுக்கு நீங்க ஒப்புதல் கொடுக்கணும்!" என்றார் ஆறுமுகம்.
"சொல்லுங்க!" என்றார் சபாபதி.
ஆறுமுகம் சொன்ன பெயரைக் கேட்டதும் "குணசீலனா? சின்னப் பையனாச்சே அவன்! மேடையில நல்லா பேசறாங்கறதால, அவனை செய்தித் தொடர்பாளராப் போட்டேன். அவனும் தொலைக்காட்சி விவாதங்கள்ள நல்லாவே பேசறான். ஆனா, அந்தரங்கச் செயலர் பதவிக்கு அவன் சரியா இருப்பானா? மூத்த தலைவர்கள் எல்லாம் இந்த வாய்ப்பு தனக்குக் கிடைக்காதான்னு காத்துக்கிட்டிருக்காங்க. எங்கிட்ட சில பேரு சிபாரிசுக்குக் கூட வந்தாங்க. 'ஆறுமுகம்தான் முடிவு செய்வாரு, நான் யாரையும் பரிந்துரைக்க மாட்டேன்'னு சொல்லிட்டேன். ஆனா, இப்படி அனுபவம் இல்லாத ஒரு சின்னப் பையனைப் போடறீங்கறீங்களே!" என்றார் .
"ஐயா! முதல் தடவையா நம்ம கட்சிக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைச்சிருக்கு. என் மேல நம்பிக்கை வச்சு, அதை நீங்க எனக்குக் கொடுத்திருக்கீங்க. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சிறப்பா செயல்பட்டு, நம்ம கட்சிக்கு இந்திய அளவில ஒரு நல்ல பேர் வாங்கிக் கொடுக்கணும்னு நினைக்கிறேன்.
"குணசீலன் படிச்சவர், நேர்மையானவர். தொலைக்காட்சி விவாதங்கள்ள அவர் நியாமாப் பேசறதை எல்லாரும் பாராட்டறாங்க. நம் கட்சியை ஆதரிச்சுப் பேசறப்ப, அவர் உண்மைகளையும், நியாயங்களையும் மட்டும்தான் எடுத்து வைப்பாரு. மற்றவர்களை வசை பாட மாட்டாரு. சிந்திச்சு, அளவா, பொருத்தமாப் பேசுவாரு.
"அதோட இல்லாம, கட்சியில அவருக்கு அவ்வப்போது நீங்க கொடுத்த சின்னப் பொறுப்புகளை ரொம்பத் திறமையா நிறைவேற்றி இருக்காரு. அவரை உதவியாளரா வச்சுக்கிட்டா, அவர் ஒரு நல்ல ஆலோசகராவும் இருப்பாரு. அதனாலதான் அவரைத் தேர்ந்தெடுத்தேன்."
ஆறுமுகம் சபாபதியைப் பார்த்தார்.
"கட்சியில இது கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தும். மூத்த தலைவர்கள் எல்லாம் கொஞ்சம் அதிருப்தி அடைவாங்க. ஆனா நீங்க யோசிச்சு சரியான முடிவு எடுத்திருக்கும்போது, உங்க முடிவை ஆதரிக்க வேண்டியது என் கடமை. வாழ்த்துக்கள்!" என்றார் கட்சித் தலைவர் சபாபதி.
குறள் 635:
அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை.
பொருள்:
அறத்தை அறிந்து, கல்வியால் நிறைந்து, அடக்கமான சொல்லை உடையவராய், எப்போதும் செயலாற்றும் முறைகளைத் தெரிந்தவரே கலந்து முடிவு எடுப்பதற்கு ஏற்ற துணையாவார்.
636. பொறுப்பு முதல்வர்
"சந்திரமூர்த்தி படிச்சவர். ஆனா, அரசியலுக்குப் படிப்பா முக்கியம்? அரசியல் அறிவுங்கறது வேற, படிப்பறிவுங்கறது வேற. முதல்வருக்கு இது தெரியாம போயிடுச்சே!" என்றார் அமைச்சர் குழந்தைவேலு, வருத்தத்துடன்.
"முதலமைச்சர் திரும்பி வர மூணு வாரம் ஆகும். அதுக்குள்ள, சந்திரமூர்த்திக்கு அதிகபட்சக் குடைச்சல் கொடுத்து, முதல்வர் திரும்பி வந்ததும், அவர் மேல கோபப்பட்டு, அவர் சீட்டைக் கிழிக்கற நிலையை உருவாக்கறேன் பாருங்க!" என்று கறுவினார் பாரிவள்ளல்.
முதல்வர் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்ததும், கட்சியின் உயர்மட்டக் குழுவைக் கூட்டினார்.
"நான் வெளிநாடு போயிருந்தப்ப, நீங்க எல்லாரும் ஆட்சியையும், கட்சியையும் சிறப்பாப் பாத்துக்கிட்டீங்க. அதுக்காக, உங்க எல்லாருக்கும் என் நன்றி!" என்று ஆரம்பித்தார் முதல்வர்.
"சந்திரமூர்த்தி அரசியல் அனுபவம் அதிகம் இல்லாதவர்தான். ஆனா, அவர் படிச்சவர்ங்கறதோட, சிறப்பா சிந்தித்துச் செயல்படக் கூடியவர் எனபதற்காகத்தான், அவரைப் பொறுப்பு முதல்வரா நியமிச்சேன். நான் எதிர்பார்த்தபடியே, அவர் சிறப்பா செயல்பட்டிருக்காரு. சில மூத்த அமைச்சர்கள் உட்பட, கட்சியில சில பேர் செஞ்ச சதிகளை முறியடிச்சதோட, மத்தியில ஆள்கிற கட்சி நமக்கு எதிரா செஞ்ச சதிகளையும் கவனிச்சு, அவங்க விரிச்ச வலையில விழாம எச்சரிக்கையா செயல்பட்டு, ஆட்சியை சிறப்பா நடத்தி இருக்காரு. அவருக்கு என் பாராட்டுக்கள்!"
பாரிவள்ளல், குழந்தைவேலு இருவரும் அதிர்ச்சியுடன் முதல்வரைப் பார்க்க, முதல்வர் சிரித்துக் கொண்டே சந்திரமூர்த்தியைப் பார்த்தார்.
"ஐயா! நான் எதுவுமே செய்யல. பிரச்னைகள் வந்தப்ப நீங்க எப்படிச் செயல்படுவீங்கன்னு நினைச்சு செயல்பட்டேன். அவ்வளவுதான்!" என்றார் சந்திரமூர்த்தி, சங்கடத்துடன்.
"அதுதான் அன்றன்றைக்கு நடந்த விவரங்களையெல்லாம் டயரி எழுதற மாதிரி எழுதி, நான் வந்தவுடனேயே எங்கிட்ட கொடுத்தீங்களே! அதைப் பார்த்து எல்லாம் தெரிஞ்சுக்கிட்டேன்" என்ற முதல்வர், ஒரு நிமிட மௌனத்துக்குப் பின், "இன்னொரு விஷயம்!" என்று கூறி விட்டுப் பாரிவள்ளலையும், குழந்தைவேலுவையும், பார்த்தார்.
"பாரிவள்ளல், குழந்தைவேலு ரெண்டு பேரும் செஞ்ச அற்புதமான காரியங்களுக்காக அவங்களுக்கு சிறப்புப் பரிசு கொடுக்கணும்னு நினைக்கறேன். அதனால, அவங்க ரெண்டு பேருக்கும் ஓய்வு கொடுத்து, அவங்களை அமைச்சர் பொறுப்பிலேந்து விடுவிக்கறேன்!" என்றார், தொடர்ந்து.
குறள் 636:
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை.
பொருள்:
நூலறிவுடன், இயற்கையான மதி நுட்பமும் உள்ளவர்களுக்கு முன்னால், எந்த சூழ்ச்சிதான் எதிர்த்து நிற்க முடியும்?
637. பாராட்டு விழா!
ஆன்மீகச் சொற்பொழிவாளர் பாண்டுரங்கனுக்கு நடந்த பாராட்டு விழாவில், பலரும் அவரைப் பாராட்டிப் பேசினர்."புராணக் கதைகள் சொல்வதில் வல்லமை பெற்ற பல சொற்பொழிவாளர்கள் இருக்கிறார்கள். எல்லோருமே அறிஞர்கள். பல நூல்களைப் படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள். ஆயினும், பாண்டுரங்கன் அவர்கள் தனக்கென்று ஒரு தனிப்பாணியை உருவாக்கித் தன் பணியைச் சிறப்பாகச் செய்து வருகிறார்."
"ஒருபுறம், பாண்டுரங்கன் அவர்களின் சொற்பொழிவை அறிஞர்களும், புலவர்களும் பாராட்டுகிறார்கள். அவருடைய கல்வியறிவு, சொல்வளம் ஆகியவற்றை வியக்கிறார்கள். மறுபுறம், சாதாரண மக்களும் அவர் பேச்சினால் ஈர்க்கப்படுகிறார்கள். இது மிகவும் அரிதான ஒரு விஷயம்."
"சௌத பௌராணிகர் என்பவர் புராணக் கதைகள் சொல்வதில் விற்பன்னர் என்றும், அவர் கூறும் கதைகளைக் கேட்பதில் பலரும் ஆர்வமாக இருப்பார்கள் என்றும் புராணங்களில் எழுதப்பட்டிருக்கின்றன. அந்த சௌத பௌராணிகருக்கு நிகரானவர் பண்டுரங்கன்."
இவையெல்லாம் பாண்டுரங்கனைப் புகழ்ந்து, விழா மேடையில் பலரும் பேசியவை.
இறுதியாக, பாண்டுரங்கன் பாராட்டுகளுக்கு நன்றி தெரிவித்துப் பேசினார்.
"எந்த ஒரு பாடம் குறித்தும் நூல்களைக் கற்று, அந்தப் பாடத்தில் புலமை பெறுவது பலருக்கும் கைவரக் கூடியதுதான். கடினமாக உழைக்கும் எவராலும் அதைச் செய்ய முடியும். ஆனால், ஒருவர் தான் கற்றவற்றை, கேட்பவர்கள் விரும்பும்படி கூறுவது என்பது ஒரு தனிக்கலை. இந்தக் கலையை எல்லோரும் அறிந்திருக்க மாட்டார்கள்."
தன்னைப் புகழ்து கொள்வது போல் பாண்டுரங்கன் பேசியது அனைவருக்கும் சற்று வியப்பாக இருந்தது. 'என்ன இவர், கொஞ்சம் கூட அடக்கம் இல்லாமல், தன்னைப் புகழ்ந்து கொள்கிறாரே!' என்று சிலர் நினைத்தனர்.
"ஆரம்பத்தில், அந்தக் கலையை நான் அறிந்திருக்கவில்லை!"
இப்போது அனைவரும் பாண்டுரங்கன் அடக்கம் இல்லாமல் பேசவில்லை என்பதை உணர்ந்து, அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்க ஆவலுடன் இருந்தனர்.
"நான் பேசத் தொடங்கிய காலத்தில், என் பேச்சு பலரை ஈர்க்கவில்லை. ஒரு சிலர் மட்டுமே என் பேச்சில் இருந்த ஆழமான விஷயங்களைப் புரிந்து கொண்டு என்னைப் பாராட்டினர். பெரும்பாலானோர் 'ஏதோ சொல்கிறார், ஆனால் அதில் சுவாரசியமாக எதுவும் இல்லை' என்று நினைத்ததை என்னால் உணர முடிந்தது.
"எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. எனக்கு நெருக்கமான ஒருவரிடம் இதைப் பற்றிக் கூறினேன். அவர் அதிகம் படித்தவர் இல்லை, ஆனால் புத்திசாலி. அடுத்த முறை, அவர் என் சொற்பொழிவுக்கு வந்தார். என் சொற்பொழிவைக் கேட்ட பிறகு, 'உங்கள் பேச்சில் விஷயம் இருக்கிறது, ஆனால், கேட்பவர்களுக்கு ஆர்வமூட்டும் விதத்தில் உங்கள் பேச்சு இல்லை!' என்றார் அவர்.
"அதற்கு என்ன செய்வதென்று கேட்டேன். அவர் கொஞ்சம் யோசித்து விட்டு, "எப்போதோ ஒரு காலத்தில் எழுதப்பட்ட கதைகளை நீங்கள் சொல்கிறீர்கள். அவை தற்கால நிகழ்வுகளுக்குப் பொருத்தமாக இல்லையே! அதனால், நீங்கள் கதைகளைச் சொல்லும்போது, அவற்றைத் தற்கால நிகழ்வுகளுடன் இணைத்துச் சொல்லுங்கள். உதாரணமாக, ராமாயணக் கதையைச் சொல்லும்போது, தற்காலத்தில் பெற்றோர் பேச்சை மதிக்காத பிள்ளைகள் பற்றிக் கூறி, அதை ராமரின் பெற்றோர் பக்தியுடன் இணைத்துச் சொல்லுங்கள். லக்ஷ்மணர் தந்தையைக் கடுமையாகப் பேசியதைக் குறிப்பிட்டு, கோபத்தின் வசப்பட்டால், நல்ல பிள்ளைகள் கூடப் பெற்றோர்களை இகழ்ந்து பேசக் கூடும் என்று சுட்டிக் காட்டுங்கள். இப்படியெல்லாம் புராண நிகழ்வுகளைத் தற்கால உலக இயற்கையுடன் இணைத்துப் பேசினால், அது கேட்பவர்களுக்கு சுவாரசியமாக இருக்கும்' என்றார்.
"என் அடுத்த சொற்பொழிவிலிருந்தே, அவர் கூறிய யோசனைகளைச் செயல்படுத்தினேன். அதற்குப் பிறகு, கதை கேட்ட மக்களிடம் ஏற்பட்ட உற்சாகத்தை என்னால் உணர முடிந்தது. எனவே, நான் படித்து அறிந்தவை மட்டுமின்றி, அந்த அறிவுள்ள நபரிடம் நான் அறிந்து கொண்ட நடைமுறை அறிவும், என் பேச்சுக்கள் பலருக்கும் பிடித்தவையாக அமைந்ததகுக் காரணம்."
ஒரு நிமிடம் தன் பேச்சை நிறுத்தி விட்டுத் தொடர்ந்தார் பாண்டுரங்கன்
"இந்தப் பாராட்டு விழாவின்போது, என் வெற்றிக்குக் காரணமான அந்த நபரை மேடைக்கு அழைத்து கௌரவிப்பதுதான் முறை. ஆனால், என்னால் அப்படிச் செய்ய முடியவில்லை."
பாண்டுரங்கன் மீண்டும் பேச்சை நிறுத்தினார். தன் மூக்குக் கண்ணாடியைக் கழற்றிக் கண்களைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டார்.
"உலக இயற்கையைப் புரிந்து கொண்டு செயல்பட எனக்கு யோசனை கூறிய அந்த நபர், இப்போது உயிருடன் இல்லை. என் மனைவி என்னை விட்டுப் பிரிந்து மூன்று ஆண்டுகள் ஆகி விட்டன!" என்றார் பாண்டுரங்கன், கம்மிய குரலில்.
குறள் 637:
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.
பொருள்:
நூலறிவால் செயலைச் செய்யும் வகைகளை அறிந்த போதிலும், உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செயல்பட வேண்டும்.
638. அமைச்சரின் பிடிவாதம்!
நிதி அமைச்சர் சர்மாவின் அறைக்குள் நுழைந்த நிதிச் செயலர் சுரேஷ், "சார்! அட்வைஸரி கமிட்டி மீட்டிங் இருக்கு!" என்றார்.
"ம்..." என்று அலுப்புடன் கூறிய சர்மா, "இது என்னை சார் சிஸ்டம்? நிதி அமைச்சர்னு என்னைப் போட்டுட்டு, எனக்கு ஒரு ஆலோசனைக் குழு! ஆலோசனைக் குழுவே இந்த அமைச்சரகத்தை இயக்கலாமே! அப்புறம் அமைச்சர்னு நான் எதுக்கு, செகரட்டரினு நீங்க எதுக்கு?" என்றார்.
"உங்களுக்குத் தெரியுமே! பல வருஷங்களுக்கு முன்னால நிதி அமைச்சரா இருந்த ஒத்தர்தான் இந்த சிஸ்டத்தை ஏற்படுத்தினாரு. அது தொடர்ந்துக்கிட்டிருக்கு!" என்ற சுரேஷ், சற்றுத் தயங்கி விட்டு, "வெவ்வேறு நிபுணத்துவமும், சிந்தனையும் உள்ள அஞ்சாறு பேரோட ஆலோசனைகளைக் கேட்டுக்கறது பயனுள்ளதுதானே!" என்றார்.
"எனக்குத் தெரியாததை, அவங்க என்ன புதுசா சொல்லிடப் போறாங்க?" என்றார் அமைச்சர்.
ஆலோசனைக் குழுவின் கூட்டம் முடிந்த ஓரிரண்டு நாட்களுக்குப் பிறகு, ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் வீர்சிங்கை, ஒரு விழாவில் சுரேஷ் தற்செயலாகச் சந்தித்தார். வீர்சிங், சுரேஷுடன் சற்று நெருக்கமாகப் பழகக் கூடியவர்.
"அமைச்சர் என்ன முடிவு செஞ்சிருக்காரு?" என்று கேட்டார் வீர் சிங்.
"அவர் தன்னோட ஐடியாவின்படிதான் முடிவெடுப்பார்னு நினைக்கிறேன்!" என்றார் சுரேஷ்.
"அதுக்கு அவர்கிட்ட ஐடியா இருக்கணும். ஐடியா கிடைக்கறதுக்கு, சிந்திக்கணும். அது அவரால முடியாத விஷயமாச்சே!" என்றார் வீர்சிங், சிரித்தபடி.
சுரேஷ் மௌனமாக இருந்தார். வீர்சிங் கூறியது சரிதான். ஆனால் துறைச் செயலாளரான அவரால், தன் துறை அமைச்சரைப் பற்றி என்ன கூற முடியும்?
"சரி. அமைச்சரோட ஐடியா என்ன?" என்றார் வீர்சிங்.
சுரேஷ் சொன்னார்.
"இது பைத்தியக்காரத்தனம்! பொருளாதாரம் மொத்தமா அழிஞ்சு போயிடும்!" என்றார் வீர்சிங்.
"அவர் இன்னும் முடிவு எடுக்கல. நீங்க கேட்டதால, அவரோட சிந்தனையைப் பத்திச் சொன்னேன். இதை நீங்க உங்களுக்குள்ள வச்சுக்கங்க. நான் இன்னும் அமைச்சருக்குச் சொல்லிப் புரிய வைக்க முயற்சி செஞ்சுக்கிட்டிருக்கேன்!"
"அவரை மாதிரி சொந்த புத்தியும் இல்லாத, மத்தவங்க சொன்னலும் புரிஞ்சுக்காத ஆட்கள்கிட்ட, நீங்க ஏன் மாரடிக்கிறீங்க? அவர் சொன்னதை செஞ்சுட்டுப் போங்க. அவரோட முட்டாள்தனமான யோசனையைச் செயல்படுத்தினப்பறம், அதோட விளைவுகளை அனுபவிக்கறப்ப, அவர் புரிஞ்சுப்பாரு. ஆனா, அப்ப அவரைப் பதவியிலிருந்தே தூக்கிடுவாங்க!" என்றார் வீர்சிங், சற்றுக் கோபத்துடன்.
"இல்லை சார்! அவருக்கு சொல்லிப் புரிய வைக்க வேண்டியது என் கடமை. அவரோட யோசனையை ஆதரிக்கிற மாதிரி பேசி, அதைக் கொஞ்சம் மாத்தி, சரியான முடிவை அவரை எடுக்க வைக்க முடியுங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு. இதுக்கு முன்னால சில தடவை இப்படி செஞ்சிருக்கேனே!" என்றார் சுரேஷ், சிரித்தபடி.
குறள் 638:
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.
பொருள்:
அறிந்து சொல்பவர் அறிவையும் மதியாமல், செய்ய வேண்டிய வழிகளைத் தாமும் அறியாமல் ஆட்சியாளர் இருந்தால், அக்குற்றத்தைப் பொருட்படுத்தாமல், அவருக்கு நன்மை தருவதைக் கூற வேண்டியது அமைச்சரின் கடமையாகும்.
639. பத்திரிகையாளர் சந்திப்பு
ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்ததை ஒட்டி, முதலமைச்சர் ஆதவன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.இரண்டாண்டு கால ஆட்சியில் தான் செய்த நற்பணிகளை விவரித்த பிறகு, அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
எதிர்க்கட்சிகளைப் பற்றிக் கேள்வி வந்தது.
"எதிர்க்கட்சிகளின் பணி அரசை எதிர்ப்பதுதான். அதை அவர்கள் செகிறார்கள். அதனால், அவர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை!" என்றார் ஆதவன்.
"உங்கள் சாதனைகளை நீங்க சொல்றீங்க. ஆனா, எதிர்க்கட்சிகள் உங்க ஆட்சியோட குறைபாடுகளைப் பத்திப் பேசறாங்க. அது உங்களோட நற்பெயரை பாதிக்காதா?"
"எங்களுடைய நற்பெயரை பாதிக்கிற விஷயங்களைப் பத்தி நான் நிச்சயமா கவலைப்படணும். ஆனா எதிர்க்கட்சிகளோட விமரிசனத்தினால எங்க நற்பெயர் பாதிக்கப்படும்னு நான் நினைக்கல. வேற சில விஷயங்களால, அது பாதிக்கப்படலாம்!" என்றார் முதல்வர், சிரித்தபடியே.
"வேற சில விஷயங்கள்னா? கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா?"
"இல்ல. பொதுவாத்தான் சொன்னேன். இதோட இந்த பத்திரிகையாளர் சந்திப்பை முடிச்சுக்கலாம்!" என்று சொல்லி எழுந்து விட்டார் ஆதவன்.
"என்ன தலைவரே! பத்திரிகையாளர் சந்திப்பில, இப்படி ஒரு வெடியைக் கொளுத்திப் போட்டுட்டீங்க? இதைப் பத்தி எல்லாரும் பேச ஆரம்பிச்சுட்டாங்களே! முதல்வர் இதைக் குறிப்பிட்டுச் சொல்லி இருப்பாரா, அதைக் குறிப்பிட்டுச் சொல்லி இருப்பாரான்னு ஊடகங்கள்ள விவாதம் நடத்தறாங்க!" என்றார் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அறவாணன்.
"பேசட்டும். விவாதம் வரட்டும். அப்பதான் கட்சியில இருக்கறவங்களுக்கு ஒரு புரிதல் வரும்!" என்றார் ஆதவன், சற்றுக் கோபத்துடன்.
"நீங்க சொல்ல வரது.."
"என்னன்னு உங்களுக்குத் தெரியும்! மூத்த அமைச்சரா இருக்கற ஒத்தர், தவறுகளை செஞ்சுக்கிட்டே இருக்காரு. அதனால, நம் ஆட்சிக்குக் கெட்ட பேரு வருது. நம்ம கட்சிக்காரங்களே அவர் மேலே கோபமா இருக்காங்க. ஆனா, அவர் ஒரு மூத்த தலைவர். அவரை என்னால பதவி நீக்கம் செய்ய முடியாது. நான் அவர்கிட்ட மறைமுகமாகவும், நேரடியாகவும் பலமுறை சொல்லிட்டேன். அவர் தன்னோட வழிகளை மாத்திக்க மாட்டேங்கறாரு. அதனாலதான், பத்திரிகையாளர் சந்திப்பில இதை மறைமுகமாச் சொன்னேன். நான் சொன்னது அவருக்குப் புரிஞ்சிருக்கும், அவர் தன்னோட வழிகளை மாத்திப்பாருன்னு நினைக்கிறேன். அப்படி மாத்திக்கலேன்னா, அவரைப் பதவி நீக்கம் செய்யறதைத் தவிர எனக்கு வேற வழி இல்ல. ஏன்னா, நான் பத்திரிகையாளர் சந்திப்பில சொன்ன மாதிரி, எதிர்க்கட்சிகளால நம் ஆட்சிக்கு பிரச்னை இல்லை. இவரை மாதிரி ஆட்களாலதான் பிரச்னை. நீங்களும் அவர்கிட்ட பேசி அவருக்குப் புரிய வையுங்க!" என்றார் ஆதவன்.
குறள் 639:
பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்.
பொருள்:
தவறான வழிமுறைகளையே சிந்தித்துச் செயல்படுகிற அமைச்சர் ஒருவர் அருகிலிருப்பதை விட, எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பது எவ்வளவோ மேலாகும்.
640. முதல்வரை மாற்ற வேண்டும்!
தேர்தல் முடிவுகள் வெளியாகி, மக்கள் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பெற்று, ஆட்சி அமைக்கத் தகுதி பெற்றது.
கட்சியின் மூத்த தலைவரான திருநாவுக்கரசுதான் சட்டமன்ற உறுப்பினர்களால் தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், மணிவாசகம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
திருநாவுக்கரசைத் துணை முதல்வராக இருக்கும்படி மணிவாசகம் கேட்டுக் கொண்டபோது, திருநாவுக்கரசு மறுத்து விட்டார்.
"உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. நீங்க அதைப் பயன்படுத்தி, நல்ல ஆட்சியைக் கொடுங்க. நான் துணை முதல்வரா இருந்தா, என் நிழல் எப்பவும் உங்க மேல விழுந்துக்கிட்டிருக்கற மாதிரி நீங்க உணர்வீங்க. அது ஆட்சிக்கு நல்லதில்ல" என்றார் திருநாவுக்கரசு.
மணிவாசகம் முதல்வராகப் பதவி ஏற்று மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, சில சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று, சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் கூட்டப்பட்டது.
"மணிவாசகம் முதல்வராகப் பதவி ஏற்று மூன்று வருடங்களாகச் செயல்பட்டுக்கிட்டிருக்காரு. அவர் தலைமையை மாத்தணும்னு சில உறுப்பினர்கள் எனக்கு எழுத்து மூலமா கோரிக்கை வச்சிருக்காங்க. கோரிக்கை எழுப்பியவர்களில் ஒருவரான தண்டபாணி அவர்களைப் பேச அழைக்கிறேன்!" என்றார் கட்சியின் தலைவர் அழகேசன்.
தண்டபாணி பேசினார்;
"நம்ம கட்சி தேர்தல்ல வெற்றி பெற்றதுக்கு முக்கியமான காரணம் நம்மோட விரிவான தேர்தல் அறிக்கைதான். இதுவரையிலும் எந்தக் கட்சியும் செய்யாத அளவுக்குப் பல திட்டங்களை வகுத்து, அவற்றை எப்படி செயல்படுத்தப் போறோம்னு ரொம்ப விவரமா ஒரு புளூபிரின்ட் மாதிரி ஒரு தேர்தல் அறிக்கையைத் தயார் செஞ்சிருந்தாரு நம் மணிவாசகம் அவர்கள். அந்த அறிக்கையைப் பாராட்டாதவர்களே இல்லை. ஊடகங்கள் பாராட்டின. எதிர்க்கட்சிக்காரங்க வாயடைச்சுப் போயிட்டாங்க. கருத்துக் கணிப்புகள் எல்லாம் நாம வெற்றி பெற மாட்டோம்னு சொன்னப்ப, நிலைமையை நமக்கு சாதகமா மாத்தினது அந்தத் தேர்தல் அறிக்கைதான்.
"அதனாலதான், நம் வெற்றிக்குக் காரணமா அமைந்த தேர்தல் அறிக்கையை உருவாக்கின மணிவாசகமே முதல்வரா வரணும்னு பெரும்பாலான உறுப்பினர்கள் நினைச்சு, அவரை முதல்வராத் தேர்ந்தெடுத்தாங்க. ஆனா, இந்த மூணு வருஷமா, அவரோட செயல்பாட்டில மக்களுக்கு ரொம்ப அதிருப்தி ஏற்பட்டிருக்கு. மக்கள் நம் கட்சி மேல ஒரு வெறுப்போடயே இருக்காங்க.
"மணிவாசகம் அவர்கள் ஒரு நல்ல தலைவர்தான். ஆற்றலும், அனுபவமும் உள்ளவர்தான். ஆனா, சிறப்பா திட்டங்களை வகுக்கத் தெரிஞ்ச அவர், திட்டங்களை நிறைவேற்றறதில ரொம்பத் தடுமாறுகிறார். திட்டம் வகுக்கறதுக்கான திறமை வேற, அவற்றைச் செயல்படுத்தறதுக்கான திறமை வேறங்கறது இப்ப எங்களுக்குப் புரியுது. அதனால, மணிவாசகம் அவர்கள் பதவி விலகிக்கிட்டு, திட்டங்களை நிறைவேறறுவதற்கான திறமை உள்ள வேற ஒரு தலைவர் முதல்வரா வரதுக்கு வழி விடணும்னு நான் கேட்டுக்கறேன்."
குறள் 640:
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்.
பொருள்:
செயல்திறம் இல்லாத அமைச்சர், செய்ய வேண்டியவற்றை முறையாக எண்ணி வைத்திருந்தாலும், அவற்றைச் செய்யும்போது, அரைகுறையாகவே செய்வார்.
No comments:
Post a Comment