Monday, July 25, 2022

803. மோகனுக்கு வந்த அழைப்பு

"சார்! வணக்கம். நான் மிக்மேக் மார்க்கெடிங்லேந்து பிரியா பேசறேன். எங்களோட நெட்வொர்க் மார்க்கெடிங் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீங்க..."

"சாரி..." என்று மோகன் அழைப்பைத் துண்டிக்கப் போனபோது, "சார்! ஒரு நிமிஷம். உங்க நண்பர் பரத் இந்த வாரம் மீட்டிங்குக்கு உங்களை ஸ்பான்ஸர் பண்ணி இருக்காரு" என்றாள் பிரியா.

"ஸ்பான்ஸர் பண்றதுன்னா?"

"மிஸ்டர் பரத் எங்க திட்டத்தில சேர்ந்திருக்காரு. அவர் தனக்குக் கீழே உறுப்பினர்களை சேர்க்கறதுக்காக சில ப்ராஸ்பெக்ட்ஸை இன்வைட் பண்ணணும். அதாவது வர சனிக் கிழமை  ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல நடக்கிற டின்னர் மீட்டிங்குக்கு வரச் சொல்லணும். அவர் பேர்களையும், ஃபோன் நம்பர்களையும் கொடுத்தா போதும் நாங்களே இன்வைட் பண்ணுவோம். மீட்டிங்குக்கு வந்து திட்டங்களோட விவரங்களைக் கேட்டுக்கிட்டு உங்களுக்கு விருப்பம் இருந்தா நீங்க சேர்ந்துக்கலாம்!"

"பரத் எங்கிட்ட எதுவும் சொல்லியே!"

"சார்! சில பேர் தங்களோட நண்பர்களை நேரடியாக் கூப்பிடத் தயங்குவாங்க. அதனாலதான் நாங்களே இன்வைட் பண்றோம்.. மீட்டிங்குக்கு வந்து விவரங்களைத் தெரிஞ்சுக்கிட்டா உங்களுக்கே இது எவ்வளவு நல்ல ஸ்கீம்னு தெரியும். மீட்டிங்குக்கு வந்தா எங்க திட்டத்தில சேரணும்னு அவசியம் இல்ல, ஆனா நிறைய பேர் திட்டம் எவ்வளவு நல்ல திட்டம்னு தெரிஞ்சுக்கிட்டப்பறம், உற்சாகமா முன்வந்து சேந்துப்பாங்க. ஒருவேளை நீங்க இந்தத் திட்டத்தில சேர்ந்தா அடுத்த வாரம் நீங்க கொடுக்கிற லிஸ்ட்படி உங்க நண்பர்களை நாங்க இன்வைட் பண்ணுவோம். வீ ஆர் மேக்கிங் ஸ்பான்ஸரிங் ஸோ ஈஸி ஃபார் அவர் மெம்பர்ஸ்" என்று முத்தாய்ப்பாகத் தன் ஆங்கிலப் புலமையை வெளிப்படுத்தினாள் பிரியா.

"யோசிச்சுச் சொல்றேன்!" என்றான் மோகன்.

வெள்ளிக்கிழமை இரவு மோகனுக்கு ஃபோன் செய்த பரத், "மிக்மேக்கிலேந்து ஃபோன் பண்ணினாங்களா?" என்றான் தயக்கத்துடன்.

"பண்ணினாங்க. ஆனா நீ எங்கிட்ட எதுவும் சொல்லலியே!" என்றான் மோகன்.

"உனக்கு இந்த நெட்வொர்க்கிங் மார்க்கெட் எல்லாம் பிடிக்குமான்னு எனக்குத் தெரியல. இந்த ஸ்கீம் எனக்கு ரொம்பப் பிடிச்சதால நான் சேர்ந்துட்டேன். அஞ்சு ப்ராஸ்பெக்ட்ஸ் பேரு கொடுக்கணும்னு கேட்டாங்க. அவங்களே ஃபோன் பண்ணி விவரம் சொல்லி இன்வைட் பண்றதாச் சொன்னாங்க. எனக்கு நண்பர்கள் அதிகம் பேர் கிடையாது. அதனால உன் பேரையும் இன்னும் நாலு பேரையும் கொடுத்தேன்."

பரத்தின் பேச்சில் தவறு செய்து விட்டு அதற்கு மன்னிப்புக் கேட்பது போன்ற தொனி ஒலித்தது.

"மீட்டிங்குக்கு வரேன். அங்கே பேசிக்கலாம்" என்றான் மோகன்.

ரு நட்சத்திர ஓட்டலில் கூட்டம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நடுத்தர வருமானம் உள்ள ஒரு நபர் கூட  எப்படி அந்தத் திட்டம் மூலம் ஒரு சில மாதங்களிலேயே ஆயிரக் கணக்கில் தொடர் வருமானம் பெற முடியும் என்று நிறுவனத்தின் சில அதிகாரிகள் விளக்கினார்கள். 

ஏற்கெனவே உறுப்பினர்களாக இருக்கும் சிலர் தங்களால் எப்படி விரைவிலேயே பெரும் தொகை ஈட்ட முடிந்தது என்று விளக்கினார்கள்.

கூட்டம் முடிந்ததும் உணவு அருந்திக் கொண்டே பலரும் குழுக் குழுக்களாக திட்டம் பற்றிப் பேசிக் கொண்டனர்.

"என்ன நினைக்கிறே?" என்றான் பரத்.

மோகன் பதில் சொல்வதற்குள், அவர்களுடைய நண்பர்கள் சரவணன், முத்து இருவரும அங்கே வந்தார்கள். "மோகன், நீ இந்த மீட்டிங்குக்கு  வர மாட்டேன்னு நான் முத்து கிட்ட அடிச்சுச் சொன்னேன்! ஆனா நீ வந்திருக்கே. ஆச்சரியம்தான்!" என்றான்.

"இதில் என்ன ஆச்சரியம்?" என்றான் மோகன்.

"உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா? நீ சிட்ஃபண்ட்ல கூட சேர மாட்டே! எம் எல் எம்ல சேருவியா என்ன?"

"முட்டாள்தனமா பேசாதே! பரத்துக்கு என்னை எத்தனையோ வருஷமா தெரியும். எனக்கு இதில ஆர்வம் இல்லேன்னா அவன் என்னை இந்த மீட்டிங்குக்குக் கூப்பிட்டிருக்கவே மாட்டானே?" என்றான் மோகன்.

"அப்படின்னா, நீ இதில சேரப் போறியா என்ன?" என்றான் சரவணன் வியப்புடன்.

"ஐயாயிரம் ரூபாதானே முதலீடு? ஐயாயிரம் ரூபாய்க்கு வேற ஏதாவது பிசினஸ் ஆரம்பிக்க முடியுமா என்ன? சேர்ந்து பாக்கறது. என்ன ஆயிடப் போகுது?" என்றான் மோகன்.

பரத் நம்ப முடியாத மகிழ்ச்சியுடன் மோகனைப் பார்த்தான்.

"உங்களுக்கு யார்கிட்டேயும் போய் எதையும் கேட்கப் பிடிக்காது. ஏதாவது ஒரு ஆஃபீஸ்ல இருக்கறப்ப, கையெழுத்துப் போடணும்னா பக்கத்தில இருக்கிறவர் கிட்ட ஒரு பேனா இரவல் கேட்கக் கூடத் தயங்குவீங்க. நீங்க எதுக்கு ஐயாயரம் ரூபா கொடுத்து இதில சேர்ந்திருக்கங்க? உங்களால யாரையாவது சேர்க்க முடியுமா? நீங்க யாரையும் கேக்கக் கூட மாட்டீங்களே?" என்றாள் மோகனின் மனைவி மல்லிகா.

"பரத் என்னைப் பத்தித் தெரியாம என்னை இந்த மீட்டிங்குக்குஃ கூப்பிட்டுட்டான்னு சரவணனும் மத்தவங்களும் சொன்னப்ப, பரத்துக்கு ஆதரவா இருக்கணும்னு தோணிச்சு. அதனால எனக்கும் இந்த பிசினஸ்ல ஆர்வம் இருக்கிறதாக் காட்டிக்கிட்டு இதில சேர்ந்தேன். ஆனா நான் இந்த பிசினஸைப் பண்ணப் போறதில்ல, யாரையும் இதில சேர்க்க முயற்சி செய்யப் போறதல்ல. கொஞ்ச நாள் கழிச்சு என் நண்பர்கள் கிட்ட முயற்சி செஞ்சேன், ஆனா என்னால முடியலேன்னு சொல்லிடப் போறேன்! கம்பெனியில கொடுத்த பொருட்களோட மதிப்பு ஆயரம் ரூபா இருக்கும். மீதித்தொகையை நஷ்டம்னு நினைச்சுக்க  வேண்டியதுதான்" என்றான் மோகன்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 81
பழைமை (நீண்டகால நட்பு) 

குறள் 803:
பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை.

பொருள்: 
தனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், நண்பர் உரிமையாகச் செய்து விட்டதைத் தானும் விரும்பிச் செய்தது போலவே காட்டவில்லை என்றால், நெடுங்காலமாகக் கொண்ட நட்பு என்ன பயனைத் தரும்?.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

631. குடிமக்கள்படை

"அமைச்சரே! நம் எல்லைப்புறத்தில் நடக்கும் போராட்டத்தை ஒடுக்க நீங்கள் ஒரு முயற்சியும் சொய்யவில்லையே!" என்றார் அரசர்.

"அரசே! மக்கள் அரசாங்கத்தின் மீது கோபமாக இருக்கிறார்கள். அவர்கள் கோபத்தைப் போக்குவதற்கான வழிமுறையை யோசித்துக் கொண்டிருக்கிறேன். அங்குள்ள நம் நிர்வாகிகளுடன் தொடர்பில் இருக்கிறேன். விரைவிலேயே ஒரு தீர்வுக்கான திட்டம்  தங்கள் அனுமதியுடன் செயல்படுத்தப்படும்" என்றார் அமைச்சர்.

"படைகளை அனுப்பிப் போராட்டக்கார்களை அடக்குவதை விட்டு அவர்கள் கோபத்தைப் போக்கும் வழி பற்றி யோசிப்பதாகச் சொல்கிறீர்களே!"

"மன்னிக்க வேண்டும் அரசே! அது எல்லைப்பகுதி. அந்தப் பகுதியை ஆக்கிரமிக்க நம் அண்டை நாடு சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருக்கிறது. மக்கள் மீது நாம் அடக்குமுறையை ஏவினால் அவர்கள் நம் மீது கோபம் கொண்டு அண்டை நாட்டின் சூழ்ச்சிக்கு ஆளாகி விடக் கூடும். அவர்கள் பிரச்னையை அனுதாபத்துடன் அணுகுவதுதான் நல்லது."

"மக்கள் எதறகுப் போராடுகிறார்கள்? அவர்களுக்கு நாம் வசதிகள் செய்து கொடுக்கவில்லையா?"

"அரசே! மக்கள் போராடுவது வசதிகளுக்காக அல்ல. அங்கே அண்டை நாட்டார் ஊடுருவல் அதிகம் இருப்பதால் நம் ராணுவத்தினரின் கெடுபிடி அதிகமாக இருக்கிறது. சந்தேகத்தின் பேரில் பலரை நம் படை வீரர்கள் பிடித்து ராணுவ அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரிக்கிறார்கள். இதனால் சில அப்பாவி மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். அதனால்தான் மக்கள் சில இடங்களில் போராடுகிறார்கள்."

"அதற்கு என்ன செய்ய முடியும்? ராணுவம் கடுமையாக நடந்து கொள்ளவிட்டால் ஊடுருவல்காரர்களை எப்படி அடையாளம் காண்பது?"

"அரசே! அங்கிருக்கும் நம் ராணுவ வீரர்களுடன் கலந்து பேசிஒரு திட்டத்தை உருவாக்கி இருக்கிறேன். திட்டத்தை இறுதியாக்கிய பின் உங்களிடம் விளக்கிக் கூறி உங்கள் அனுமதி பெற்று அதைச் செயல்பட நினைத்திருந்தேன். தாங்கள் கேட்பதால் இப்போதே விவரங்களைக் கூறுகிறேன்.

"உள்ளூர் மக்கள் சிலரைக் கொண்டு குடிமக்கள் படை என்ற ஒரு படையை உருவாக்கப் போகிறோம். அவர்கள் ரகசியமாகச் செயல்பட்டு ஊடுருவல்காரர்களை அடையாளம் கண்டு ராணுவத்திடம் தெரிவிப்பார்கள்.

" ராணுவம் அவர்களை மட்டும் ரகசியமாகக் கைது செய்து விசாரிக்கும். . குடிமக்கள் படை உள்ளூர் மக்களைக் கொண்டதால் அவர்களால் நம் நாட்டவர் யார், ஊடுருவல்காரர் யார் என்று பெருமளவில் சரியாக இனம் காண முடியும். இதனால் அப்பாவி மக்கள் கைது செய்யப்படுவது பெருமளவு தவிர்க்கப்படும். ஊடுருவல்கரார்களைக் கைது செய்து அவர்களிடமிருந்து தகவல் பெற்று அண்டை நாட்டின் திட்டங்களை அறிய முடியும். இதனால் அண்டை நாட்டின் திட்டத்தை முறியடித்து நம் எல்லைப்புறத்தை நம்மால் பாதுகாக்கவும் முடியம்"

அமைச்சரின் விளக்கத்தைக் கேட்ட அரசர், "இது நல்ல திட்டம்தானே! உடனேஇதைச் செயல்படுத்தலாமே! ஏன் தாமதம் செய்கிறீர்கள்?" என்றார்.

"அரசே! குடிமக்கள் படை என்பது பிரச்னையைத் தீர்ப்பதற்கான ஒரு கருவி. ஆனால்  இதை எப்படிப் பயன்படுத்துவது, திட்டத்தை எப்போது செயல்படுத்துவது, எந்த வகையில் செயல்படுத்துவது, எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதற்கெல்லாம் நம் படைத்தலைவருடன் சேர்ந்து விவரமாகத் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறோம். 

"முதலில் மக்களின் கோபம் குறைய நாம் சற்று அவகாசம் கொடுக்க வேண்டும். அது வரை நம் படைகளின் நடவடிக்கைகளைச் சற்றுக் குறைத்துக் கொள்ள வேண்டும். 

"குடிமக்கள் படையில் இடம் பெறப் போகும் முக்கியத் தலைவர்களை முதலில் அடையாளம் கண்டு அவர்களிடம் இதை விளக்கி, அவர்களைப் படையில் சேர்த்த பின் அவர்கள் மூலம் இன்னும் பல உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். 

"இந்தக் குடிமக்கள் படையிலேயே அந்நியர்கள் ஊடுருவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கைகளை எடுக்க வேண்டும், அவர்கள் படையில் சேர்ந்த பின்னும் நம் ஒற்றர்களைக் கொண்டு அவர்களைக் கண்காணிக்க வேண்டும். இவற்றையெல்லாம் சரியாகச் செய்தால்தான் இந்தத் திட்டம் வெற்றி பெறும்."

"நல்லது அமைச்சரே! நன்கு யோசித்துத் திடமிட்டு சிறப்பாகச் செயல் படுத்துங்கள். இதற்காக நீங்கள் செய்ய வேண்டிய எதற்கும் என் முழுமையான அனுமதியை இப்போதே வழங்குகிறேன்!" என்றார் அரசர்.

பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 64
அமைச்சு 

குறள் 631:
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.

பொருள்: 
ஒரு செயலுக்குரிய கருவி, ஏற்ற காலம், செய்யும், வகை, அறிந்து செய்யப்படும் செயல் ஆகிய அனைத்துமே சிறப்பாக இருக்கும்  வகையில் செய்ய வல்லவன் அமைச்சன்.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Sunday, July 24, 2022

613. சீட் கிடைக்குமா?

"என் பையன் வாங்கின மார்க்குக்கு அவனுக்கு ஏ கே காலேஜில மானேஜ்மென்ட் கோட்டால சீட் கிடைக்கும். ஆனா அங்கே டொனேஷன் நிறையக் கேப்பாங்க. என்னால அவ்வளவு கொடுக்க முடியாது. அதனால வேற காலேஜிலதான் முயற்சி பண்ணணும் " என்றான் சாந்தமூர்த்தி.

"வேற நல்ல காலேஜில கிடைக்கும் இ ல்ல?" என்றான் புஷ்பவனம்.

"கிடைக்கும். ஆனா ஏ கே காலேஜ் எல்லாருக்கும் ஒரு கனவுக் கல்லூரி. ரொம்ப நல்லா சொல்லிக் கொடுப்பாங்க. நிறைய மார்க் வாங்கினா அங்கே ஸ்காலர்ஷிப் கிடைக்கும். அதோட படிப்பு முடிஞ்சதும் வேலை உத்தரவாதம். காம்பஸ் இன்டர்வியூவுக்கு பெரிய பெரிய கம்பெனியிலேந்தெல்லாம் வந்து அள்ளிக்கிட்டுப் போயிடுவாங்க. இன்னும் ஒண்ணு ரெண்டு பர்சன்ட் அதிகம் வாங்கி இருந்தாஅரசாங்க கோட்டாவிலேயே அந்தக் கல்லூரியில கிடைச்சிருக்கும். என்ன செய்யறது, நாம கொடுத்து வச்சது அவ்வளவுதான்!" என்றார் சாந்தமூர்த்தி பெருமூச்சுடன்.

"வேற காலேஜில சேக்கறதுன்னா எப்ப சேக்கணும்?" என்றான் சாந்தமூர்த்தி.

"எந்த காலேஜில சேக்கறதா இருந்தாலும் கவுன்ஸலிங்குக்கு அப்புறம்தான். அதுக்கு இன்னும் தேதியே வரலியே! நான் கட் ஆஃப் மார்க்கை வச்சு சொல்றேன். எதுக்குக் கேக்கற? உனக்கு ஏதாவது யோசனை இருக்கா என்ன?"

"எனக்கு இதைப் பத்தி எல்லாம் எதுவுமே தெரியாதே! என் பொண்ணு இப்பதான் எட்டம் வகுப்புக்கு வந்திருக்கா. இதையெல்லாம் பத்தி நான் கவலைப்பட இன்னும் நாலு வருஷம் இருக்கு!" என்றான் புஷ்பவனம் சிரித்தபடி.

ரு வாரம் கழித்து சாந்தமூர்த்திக்கு புஷ்பவனத்திடமிருந்து தொலேபேசி அழைப்பு வந்தது.

"டேய் சாந்தமூர்த்தி! உன் பையனுக்கு ஏ கே காலேஜில சீட் கிடைச்சுடுச்சு. நீ ஒரு பைசா டொனேஷன் கொடுக்க வேண்டாம்!" என்றான் புஷ்பவனம்.

"என்ன சொல்றே? ஒண்ணுமே புரியலியே!" என்றான் சாந்தமூர்த்தி.

"விவரமா சொல்றேன். ஏ கே கல்லூரியில உன் பையனை சேக்கணுங்கற உன்னோட ஆசையை நீ சொன்னப்பறம்  அந்தக் கல்லுரியைப் பத்தி விசாரிச்சேன்.  அந்தக் கல்லூரியோட தலைவருக்கு ஒரு எம் பி நெருக்கமானவர்னும், ஒவ்வொரு வருஷமும் அந்த எம் பி அவரோட சிபாரிசில நாலஞ்சு பேருக்கு அந்தக் கல்லூரியில சீட் வாங்கிக் கொடுக்கிறார்னும் கேள்விப்பட்டேன். 

"அந்த எம் பியைப் பத்தி விசாரிச்சப்ப அவரோட சொந்த ஊர் எதுன்னு தெரிஞ்சது. அந்து ஊரைச் சேர்ந்த ஒத்தன் என்னோட கல்லூரியில படிச்சது நினைவு வந்தது. கல்லூரிப் படிப்பு முடிஞ்சப்பறம் அவனோட எனக்குத் தொடர்பு இல்ல. கல்லூரியில நாங்க நெருங்கின நண்பர்கள் இல்ல. சேர்ந்து படிச்சோம், அவ்வளவுதான். 

"என்னோட நெருங்கின நண்பன் ஒத்தன் கிட்ட சொல்லி அவனோட நண்பர்கள் சில பேர் மூலமா அந்த நண்பனோட ஃபோன் நம்பரை வாங்கி அவன்கிட்ட பேசினேன். 

"இவ்வளவு வருஷம் கழிச்சு நான் அவனைத் தொடர்பு கொண்டதில அவனுக்கு ஆச்சரியம். ஆனா ஒரு உதவிக்காகத்தான் அவனைத் தொடர்பு கொள்றதா வெளிப்படையாச் சொல்லி அவன்கிட்ட உதவி கேட்டேன். தனக்கு அந்த எம் பியை நல்லாத் தெரியும்னு அவன் சொன்னான். 

"ஆனா அவரு இப்ப டெல்லியில இருக்காரு, இது விஷயமா ஃபோன்ல பேச முடியாது, டெல்லிக்குப் போய் நேரில பாத்துத்தான் பேசணும்னு சொன்னான். பிளேன்ல போனா செலவு அதிகம் ஆகும்னு தத்கல்ல டிக்கட் வாங்கி ரெண்டு பேரும் ரயில்ல டெல்லிக்கு வந்து எம் பியைப் பாத்தோம். 

"அவரு உன் பையனுக்கு சீட் வாங்கிக் கொடுக்கறேன்னு சொல்லிட்டாரு. பொதுவா பணம் வாங்கிக்கிட்டுத்தான் செய்வாருன்னு நினைக்கிறேன். ஆனா தன்னோட நண்பனுக்கு வேண்டியவங்க என்பதால அவரு பணம் எதுவும் வாங்கல. நான் சொன்னதுக்காகத் தன் வேலையை விட்டுட்டு என்னோட டெல்லிக்கு வந்த என் நண்பனுக்குத்தான் நன்றி சொல்லணும். நான் இப்ப டெல்லிலேந்துதான் பேசறேன்."

சாந்தமூர்த்தி பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தான்.

"என்னடா பதிலையே காணோம்?" என்றான் புஷ்பவனம்.

"என்ன சொல்றதுன்னு தெரியல. எங்கிட்ட கூட சொல்லாமே, ஏதோ உன் பையனுக்கு சீன் வாங்கற மாதிரி முயற்சி செஞ்சு கல்லூரியில கூடப் படிச்சவரைத் தேடிப் பிடிச்சு அவரோட டெல்லிக்குப் போய் எம் பி யைப் பாத்து சீட் வாங்கி இருக்கே. ஆனா இதில ஒண்ணும் ஆச்சரியம் இல்ல.  ஏன்னா எவ்வளவு கஷ்மான வேலையா இருந்தாலும், அதைச் செய்ய முடியும்னு நினைச்சு முயற்சி செய்யறவன் நீ. நமக்காக முயற்சி செய்யறமா, மத்தவங்களுக்காகச் செய்யறமாங்கற வேறுபாடு கூடப் பாக்காம செயல்படற உனக்கு மத்தவங்களுக்கு உதவி செய்யறதுங்கறது ரொம்ப இயல்பான விஷயமாத்தானே இருக்கும்?" என்றான் சாந்தமூர்த்தி நெகிழ்ச்சியான குரலில்.

"இங்கே பாரு, மத்தவங்களுக்கு உதவி செய்யறது என்னோட இயல்புன்னெல்லாம் சொல்லி  நீ தப்பிக்க முடியாது. நாங்க ரெண்டு பேரு டெல்லிக்குப் போய்த் தங்கிட்டு வந்த செலவு, ரெண்டு பேருக்கும் டெய்லி பேட்டா எல்லாம் நீதான் கொடுக்கணும்!" என்றான் புஷ்பவனம் விளையாட்டாக.

பொருட்பால்
அரசியல் இயல்

அதிகாரம் 62
ஆள்வினையுடைமை (விடாமுயற்சி)

குறள் 613:
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு..

பொருள்:
முயற்சி எனப்படும் உயர்ந்த குணத்தில்தான் பிறர்க்கு உதவுதல் என்னும் மேன்மை நிலைபெற்றிருக்கிறது.

      அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

Saturday, July 23, 2022

612. நிதி உதவி கிடைக்குமா?

வெஞ்சர் காபிடல் நிறுவனத்திலிருந்து பேட்டி முடிந்து வெளியே வந்தபோது சதீஷ் மிகவும் உற்சாகமாக இருந்தான்.

"நிச்சயமா என்னோட ப்ராஜக்டுக்கு ஃபைனான்ஸ் பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன். உனக்கு என்ன தோணுது?" என்றான் சதீஷ், உடன் வந்த தன் நண்பன் குமாரிடம்.

"உன்னோட ப்ராஜக்ட் ஐடியா அவங்களுக்குப் பிடிச்சிருக்குன்னுதான் நினைக்கிறேன். பாக்கலாம். சீக்கிரமே நல்ல முடிவு வரும்னு நம்புவோம்!" என்றான் குமார்.

"உனக்குத்தான் நான் நன்றி சொல்லணும்."

"இவங்க கொஞ்சம் கன்ஸர்வேடிவ் டைப். ரெஃபரன்ஸ் இல்லாம எந்த அப்ளிகேஷனையும் எடுத்துக்க மாட்டாங்க. ஒரு டைரக்டர் எனக்குத் தெரிஞ்சதால நான் சிபாரிசு பண்ணினேன். உன்னை இன்டர்வியூவுக்குக் கூப்பிட்டாங்க. பொதுவா இது மாதிரி இன்டர்வியூவுக்குத் தொழில் செய்யப் போறவரை மட்டும்தான் கூப்பிடுவாங்க. என்னையும் ஏன் கூட இருக்கச் சொன்னாங்கன்னு தெரியல!" என்றான் குமார்.

ரண்டு வாரங்களுக்குப் பிறகு, சதீஷ் குமாருக்கு ஃபோன் செய்து விசாரித்தபோது, "எனக்குத் தகவல் எதுவும் வரல. கொஞ்சம் வெயிட் பண்ணு. எதுவா இருந்தாலும் உனக்குத்தான் நேரடியாத் தகவல் வரும்" என்றான் குமார்.

"உனக்குத் தெரிஞ்ச அந்த டைரக்டர் உங்கிட்ட எதுவும் சொல்லலியா?" என்றான் சதீஷ்.

"இல்ல. நான் அவரைக் கேட்டாலும் நல்லா இருக்காது!" என்றான் குமார்.

ரு மாதத்துக்குப் பிறகு சதீஷுக்கு அந்த வெஞ்சர் காபிடல் நிறுவனத்திலிருந்து , "உங்கள் தொழில் முயற்சிக்கு உதவ இயலாமல் இருப்பதற்கு வருந்துகிறோம்" என்று சுருக்கமாக ஒரு கடிதம் வந்தது.

குமாரை ஃபோனில் அழைத்த சதீஷ், "என்னடா இப்படிச் சொல்லிட்டாங்க? நான் ரொம்ப நம்பிக்கையோட இருந்தேனே!" என்றான் ஏமாற்றத்துடன்.

"இன்டர்வியூவில உன் வேலையில ரெண்டு வருஷம் பிரேக் இருந்ததைப் பத்திக் கேட்டாங்களே, நினைவிருக்கா?" என்றான் குமார்.

"ஆமாம், கேட்டாங்க. அப்ப ஒரு தொழில் முயற்சியில இறங்கினேன், அது வெற்றிகரமா அமையல, அதனால அதை மூடிட்டு மறுபடி வேலைக்குப் போயிட்டேன்னு உண்மையைச் சொன்னேனே!"

"அந்தத் தொழில் பற்றின விவரங்களைக் கேட்டாங்க இல்ல?"

"ஆமாம், கேட்டாங்க. அது என்ன தொழில், அதில என்ன பிரச்னை, அதை ஏன் கைவிட்டேன்னெல்லாம் விவரமா சொன்னேனே. நான் வெளிப்படையாப் பேசினது அவங்களுக்குப் பிடிச்ச மாதிரிதானே இருந்தது?"

"நீ வெளிப்படையாப் பேசினது அவங்களுக்குப் பிடிச்சிருக்கலாம். ஆனா நீ ஆரம்பிச்ச தொழில் நிறைய பொடென்ஷியல் இருந்த ஒரு தொழில். உனக்கு மார்க்கெடிங் பிரச்னைகள் இருந்தது உண்மைதான். ஆனா நீ இன்னும் ஒரு வருஷமோ ரெண்டு வருஷமோ தாக்குப் பிடிச்சிருந்தா உன் தொழில் லாபம் கொடுக்க ஆரம்பிச்சிருக்கும். உங்கிட்டேந்து அதை வாங்கினவர் இன்னிக்கு சக்கை போடு போடறாரே!"

"நீ என்ன சொல்ல வரே?"

"நீ ஏற்கெனவே ஒரு தொழிலை ஆரம்பிச்சு அதைக் கைவிட்டது உனக்கு எதிரான நெகடிவ் பாயின்ட்டா ஆகி இருக்கும்னு நினைக்கிறேன். இதுக்கு மேல நஷ்டப்பட வேண்டாம்னு நினைச்சு நீ உன் தொழிலை விட்டுட்டு வந்திருக்கலாம். ஆனா வெஞ்சர் காபிடல் நிதி கொடுக்கறவங்க அதை ஒரு குறையாப் பாத்திருப்பாங்கன்னு நினைக்கிறேன்!" என்றான் குமார் சற்றுத் தயக்கத்துடன்.

சற்று நேரம் மௌனமாக இருந்த சதீஷ், "இது உனக்கு முன்னாலேயே தெரியுமா? நீ ஏன் எங்கிட்ட  சொல்லலே?" என்றான்.

"இன்டர்வியூவில அவங்க இதைப் பத்திக் கேட்டப்பவே, இது உனக்கு எதிரான ஒரு நெகடிவ் பாயின்ட்டா இருக்குமோங்கற சந்தேகம் எனக்கு வந்தது. ஆனா, நீ நம்பிக்கையா இருந்தப்ப அவசரப்பட்டு உன் நம்பிக்கையைக் குலைக்க வேண்டாம்னுதான் நானும் நம்பிக்கையாப் பேசினேன். ஆனா ரெண்டு வாரத்துக்கு மேல ஆனப்பறம், உன் பழைய தொழிலைப் பத்தி அவங்க விசாரிக்கிறாங்களோங்கற சந்தேகம் எனக்கு வந்தது. அப்படித்தான் செஞ்சிருக்காங்கன்னு இப்ப தோணுது. எனக்கு எந்தத் தகவலும் இல்லாதப்ப முடிவு தெரியறதுக்கு முன்னால என்னோட கருத்தைச் சொல்ல வேண்டாம்னுதான் நான் என் சந்தேகத்தை உங்கிட்ட சொல்லல. சாரி. கவலைப்படாதே! வேற எங்கேயாவது முயற்சி செய்யலாம்" என்றான் குமார்.

பொருட்பால்
அரசியல் இயல்

அதிகாரம் 62
ஆள்வினையுடைமை (விடாமுயற்சி)

குறள் 612:
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.

பொருள்:
ஒரு செயலைச் செய்யும்போதே, அதைத் தொடர்ந்து செய்வது கடினம் என எண்ணி அதைச் செய்து முடிக்காமல்  விட்டு விடக் கூடாது. அவ்வாறு விட்டு விடுபவரை இந்த உலகமும் விட்டு விடும்.

      அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

Thursday, July 21, 2022

802. நண்பன் செய்த ஏற்பாடு

ஶ்ரீகுமார் பேசி முடித்ததும் அந்த அரங்கில் பெரும் கரவொலி. எழுந்தது. பலரும் மேடைக்கு வந்து அவனைக் கைகுலுக்கிப் பாராட்டி சில வார்த்தைகள் கூறி விட்டுச் சென்றது கைதட்டல் வெறும் சம்பிரதாயமானதல்ல, உண்மையான பாராட்டின் வெளிப்பாடு என்பதை வெளிக்காட்டியது.

"எங்க உறுப்பினர் ராமச்சந்திரன் உங்க பேரை சஜஸ்ட் பண்ணினப்ப, பிரபலம் இல்லாத ஒரு நபரைப் பேசச் சொல்றோமே என்று எனக்குக் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. ஆனால் ஒரு பிரபலமான நிபுணரைக் கூப்பிட்டிருந்தா கூட அவர் இந்த அளவுக்கு சுவாரசியமா புது விஷயங்களையெல்லாம் சொல்லி ஆடியன்ஸை இந்த அளவுக்குக் கவர்ந்திருப்பாரான்னு தெரியல. உங்களுக்கு நன்றி சொல்றதோட, எங்க உறுப்பினர் ராமச்சந்திரனுக்கும் நாங்க நன்றி சொல்லணும்!" என்றார் நிகழ்ச்சியை நடத்திய அமைப்பின் தலைவர். 

அருகில் நின்ற ஶ்ரீகுமாரின் நண்பன் ராமச்சந்திரன் பெருமையுடன் தன் நண்பனைப் பார்த்துச் சிரித்தான்.

அரங்கத்தை விட்டு வெளியே வரும்போது ஶ்ரீகுமாருடன் நடந்து வந்த ராமச்சந்திரன், "ரொம்பப் பிரமாதமாப் பேசிட்டடா! நீ நல்லா பேசுவேன்னு நினைச்சுத்தான் உன் பேரை சஜஸ்ட் பண்ணினேன். நான் எதிர்பார்த்தது வீண் போகல!" என்றான்.

"அது சரி. மனோதத்துவம் பத்திப் பேசறதுக்கு என் பேரை ஏன் சஜஸ்ட் பண்ணினே? எனக்கும் மனோதத்துவத்துக்கும் என்ன சம்பந்தம்?" என்றான் ஶ்ரீகுமார்

"இதை நீ ஏன் இப்ப கேக்கற? 'எங்க சங்கத்தில இந்தத் தலைப்பில பேச உன் பேரைக் கொடுத்திருக்கேன், அவங்களும் ஒத்துக்கிடாங்க'ன்னு நான் உங்கிட்ட ஃபோன்ல சொன்னப்ப நீ ஏன் இந்தக் கேள்வியைக் கேக்கல?"

"நீ என்னோட நண்பன். ஏதோ ஒரு நம்பிக்கையில நீ இந்த ஏற்பாட்டைப் பண்ணிட்ட. உன்னோட கமிட்மென்ட்டை நான் காப்பாத்த வேண்டாமா? அதான் பதில் பேசாம சரின்னுட்டேன். நீ இன்னும் என் கேள்விக்கு பதில் சொல்லவே இல்லையே!"

"என்னடா மறந்துட்டியா? நீ பி ஏ சைகாலஜி படிச்சிருக்க! மனோதத்துவம் பத்திப் பேச உனக்கு வேற என்ன தகுதி வேணும்?"

'அட முட்டாளே! நீ கூடத்தான் பி ஏ லிடரேசர் படிச்சிருக்க. ஆங்கில இலக்கியத்தைப் பத்திப் பேசச் சொன்னா நீ பேசுவியா?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட ஶ்ரீகுமார், "உண்மையாவே மறந்துதான் போச்சு! பிளஸ் டூல குறைஞ்ச மார்க் வாங்கினதால, சயன்ஸ், காமர்ஸ் எதுவும் கிடைக்காம பி ஏ சைகாலஜி படிச்சேன். ஆனா இப்ப நான் செய்யற தொழில் கட்டிடம் கட்டறது. கட்டிடக் கலையைப் பத்திப் பேசச் சொன்னாலாவது அனுபவ அடிப்படையில ஏதாவது பேசி இருப்பேன், எப்பவோ படிச்ச சைகாலஜி பத்தி இப்ப என்னால பேச முடியும்னு நினைச்சு நீ என் பேரைக் கொடுத்ததுதான் எனக்கு ஆச்சரியமா இருக்கு!" என்றான் ஶ்ரீகுமார்.

"உன்னோட ஒரு ஸ்பெஷாலிடி எனக்குத் தெரியுமே! உனக்குக் கொஞ்சம் கூடத் தெரியாத ஒரு தலைப்பைக் கொடுத்தாக் கூட அதைப் பத்திப் படிச்சுத் தயார் பண்ணி ஒரு நிபுணர் பேசற அளவுக்கு உன்னால பேச முடியுமே! உன்னோட இந்தத் திறமையை நம்பித்தான் உங்கிட்ட கூட கேட்காம உரிமை எடுத்துக்கிட்டு உன் பெயரைக் கொடுத்தேன். நான் செஞ்சது தப்பா? ஆனா நீதான் நான் எதிர்பாத்தத்துக்கு மேலே பிரமாதமாப் பேசி எல்லாரையும் பிரமிக்க வச்சுட்டியே!" என்றான் ராமச்சந்திரன்.

"தப்பு இல்லை. நீ எங்கிட்ட உரிமை எடுத்துக்கிட்டது எப்படித் தப்பாகும்?" என்ற ஶ்ரீகுமார், 'ஆனா, நீ சொன்னதுக்காக இதை ஒத்துக்கிட்டு, பகல் முழுக்க வேலை செஞ்சுட்டு, பத்து நாள் ராத்திரி ரொம்ப நேரம் கண் விழிச்சு பல புத்தகங்களைப் படிச்சு என் பேச்சைத் தயார் பண்ண நான் பட்ட கஷ்டம் எனக்குத்தானே தெரியும்!' என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 81
பழைமை (நீண்டகால நட்பு) 

குறள் 802:
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்.

பொருள்: 
நட்பிற்கு உறுப்பாவது நண்பனுடைய உரிமைச் செயலாகும், அந்த உரிமைச் செயலுக்கு உடன்பட்டவராதல் சான்றோரின் கடமையாகும்.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

611. நடைப் பயிற்சி

"பிரபாகர்! நம்ம கம்பெனியில இருக்கிற டிபார்ட்மென்ட் மானேஜர்களிலேயே நீங்க ரொம்ப வித்தியாசமனவர்!" என்றார் பொது மேலாளர் சந்தரன்.

பிரபாகர் மௌனமாக இருந்தார்.

"நம் கம்பெனியில சில வேலைகள் ஒன்றுக்கு மேற்பட்ட டிபார்ட்மென்ட் சம்பந்தமா இருக்கு. அது மாதிரி வேலைகள்ள ஏதாவது பிரச்னை வரும்போது மத்த மானேஜர்கள்ளாம் வேற டிபார்ட்மென்ட்டைக் காட்டிட்டு ஒதுங்கிக்கறாங்க. 

"தனியார் நிறுவனத்தில இதெல்லாம் முடியாது. ஆனா இது ஒரு பொதுத்துறை நிறுவனங்கறாதால, அவங்களால பொறுப்பைத் தட்டிக் கழிச்சு ஒதுங்கிக்க முடியுது. ஆனா நீங்க மட்டும் எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் அதை உற்சாகமா ஏத்துக்கறீங்க.  

"சில சமயம் உங்க டிபார்ட்மென்ட்டுக்குத் தொடர்பில்லாத சில பிரச்னைகளைக் கூட உங்க கிட்ட கொடுத்திருக்கேன். 'இது என் டிபார்ட்மென்ட்டுக்கு சம்பந்தமில்லாததுன்னு நீங்க சொல்லிடுவீங்களோன்னு நினைச்சுக்கிட்டேதான் அந்த வேலைகளை உங்க கிட்ட கொடுத்தேன். ஆனா நீங்க எதுவுமே சொல்லாம அதையெல்லாம் எடுத்து செஞ்சிருக்கீங்க.."

"எந்த வேலையா இருந்தா என்ன சார், கம்பெனிக்குத் தொடர்பான வேலைதானே?" என்றார் பிரபாகர் சற்று சங்கடத்துடன்

"உங்களோட இந்த ஆட்டிடியூடைக் குறிப்பிட்டுப் பாராட்டணுங்கறதுக்காகத்தான் இதைச் சொல்றேன். இன்னொரு விஷயம் நான் கவனிச்சது, எந்த வேலையையுமே 'இது ரொம்ப கஷ்டம், இதைச் செய்ய முடியாது'ன்னு நீங்க ஒரு தடவை கூடச் சொன்னதில்ல! நான் கூட சில வேலைகள் வரும்போது, இதை நம்மால செய்ய முடியுமான்னு யோசிப்பேன்."

"அதுக்கு நான் கடவுளுக்குத்தான் சார் நன்றி சொல்லணும்!" என்றார் பிரபாகர் சிரித்தபடி.

"கடவுள் எங்கே வந்தார் இதில?"

"சின்ன வயசில நான் ரொம்ப பலவீனமா இருந்தேன். உள்ளூர்ல இருந்த ஆரம்பப் பாடசாலை என் வீட்டிலேந்து ரொம்பப் பக்கம்தான். அங்கே போயிட்டு வரதுக்குள்ளேயே ரொம்ப சோர்ந்து போயிடுவேன். பள்ளிக் கூடத்திலேந்து வந்ததும் ஒரு மணி நேரம் படுத்து ஓய்வு எடுத்தாத்தான் சோர்வு போகும்.

"ஆறாவது வகுப்பு படிக்க எங்க ஊர்லேந்து ரெண்டு மைல் தூரத்தில இருந்த உயர்நிலைப் பள்ளிக்குத்தான் போகணும். அப்ப பஸ் வசதி எல்லாம் கிடையாது. சைக்கிள் கத்துக்கிட்டு ஓட்ட கொஞ்சம் காலம் ஆகும். அதோட என்னால பாதுகாப்பா சைக்கிள் ஓட்ட முடியும்னு எங்கப்பாவுக்கு நம்பிக்கை இல்ல. எல்லாத்துக்கும் மேல சைக்கிள் வாங்கற அளவுக்கு எங்கப்பாவுக்கு வசதியும் இல்ல!

"அதனால அஞ்சாவதோட என் படிப்பை நிறுத்திடலாம்னு என் வீட்டில முடிவு பண்ணிட்டாங்க. ஆனா படிக்கணுங்கற ஆர்வம் எனக்கு அதிகமா இருந்தது. அதனால பிடிவாதம் பிடிச்சு, 2 மைல் தொலைவில இருந்த அந்த உயர்நிலைப் பள்ளியில சேர்ந்துட்டேன்.

" 'ரெண்டு நாள் போய்ப் பாத்தப்பறம் முடியலேன்னு சொல்லி நீயே படிப்பை நிறுத்திடப் போறே' ன்னு எங்கப்பா சொன்னாரு. ஆனா எப்படியாவது கஷ்டப்பட்டு நடந்து போய்ப் படிக்கணுங்கற உறுதி என் மனசில இருந்தது.

"முதல்ல கொஞ்ச நாளைக்குக் கஷ்டமாத்தான் இருந்தது. ஆனா என் மன உறுதியால என் சோர்வைத் தாங்கிக்கிட்டேன். அதுக்கப்பறம் கொஞ்சம் கொஞ்சமா சோர்வு போயிடுச்சு. நாளடைவில என் உடல் பலவீனம் கூட சரியாப் போய் நான் நார்மலா ஆயிட்டேன்!

"அந்த அனுபவத்திலேந்து நான் கத்துக்கிட்ட பாடம் , எந்த வேலையையுமே முடியாதுன்னு நினைக்காம முயற்சி செஞ்சா அந்த வேலையை செய்யக் கூடிய சக்தி நமக்கு தன்னால வந்துடுங்கறதுதான்."

"உடல் பலவீனத்தின் அடிப்படையில உங்ளுக்கு ஏற்பட்ட அனுபவத்தையே ஒரு பலமா மாத்திக்கிட்டீங்க. கிரேட்!  உங்களோட ஃபிலாசபியை நானும் பின்பற்ற முயற்சி செய்யறேன்!" என்ற சந்திரன், "ஆமாம், கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும்னு சொன்னீங்களே, அது ஏன்?" என்றார் தொடர்ந்து.

"கடவுள்தானே எனக்கு ஒரு பலவீனமான உடல் அமைப்பைக் கொடுத்து அதை எதிர்கொள்ள வேண்டிய சவாலையும் கொடுத்தார்?" என்றார் பிரபாகர்.

பொருட்பால்
அரசியல் இயல்

அதிகாரம் 62
ஆள்வினையுடைமை (விடாமுயற்சி)

குறள் 611:
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்

பொருள்:
இது செய்வதற்கு அரியது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும், அதைச் செய்வதற்கான ஆற்றலை முயற்சி உண்டாக்கும்.

      அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

Sunday, July 17, 2022

801. பரணிதரனின் கோபம்!

"பரணிதரன் வீடு இதுதானே?"

"வாங்க, உக்காருங்க!" என்று வந்தவரை வரவேற்ற பாகிரதி, அவர் அமர்ந்ததும், "நீங்க?" என்றாள்.

"என் பேரு ஈஸ்வரமூர்த்தி" என்ற அவர், "என் பெண்ணோட கல்யாண விஷயமாப் பேச வந்தேன். நீங்க பரணிதரனோட அம்மாதானே?" என்றார்.

"ஆமாம். எங்களைப் பத்தி உங்களுக்கு யார் தகவல் சொன்னாங்க?" என்றாள் பாகிரதி சற்று வியப்புடன்.

"என்னோட நண்பர் ஒத்தர் சொன்னாரு. அவருக்கு யார் சொன்னாங்கன்னு எனக்குத் தெரியல. உங்க பையனுக்கு பெண் பாத்துக்கிட்டிருக்கீங்க இல்ல?"

"ம்..." என்றாள் பாகிரதி தயக்கத்துடன்.

ஈஸ்வரமூர்த்தி தன் குடும்பம் பற்றிய விவரங்களையும், தன் பெண்ணைப் பற்றிய விவரங்களையும் தெரிவித்தார்.

"சரி. ஜாதகம் கொடுத்துட்டுப் போங்க. பாத்துட்டு சொல்றேன்" என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தாள் பாகிரதி.

ரணிதரன் வீட்டுக்கு வந்ததும் அவனிடம் விஷயத்தைச் சொன்ன பாகிரதி, "ஏண்டா, நான் கல்யாணத்தைப் பத்திப் பேசினப்ப எல்லாம் பதில் சொல்லாம தட்டிக் கழிச்சே! இப்ப யாரோ சொல்லி ஒத்தர் வந்து ஜாதகம் கொடுத்துட்டுப் போறாரு. யார்கிட்டயாவது சொல்லி உனக்குப் பெண் பார்க்கச் சொன்னியா என்ன?" என்றாள்.

"நான் யார்கிட்டேயும் சொல்லல. ஆனா இதை யார் செஞ்சிருப்பாங்கன்னு எனக்குத் தெரியும். அந்த அதிகப் பரசங்கி பாலுவாத்தான் இருக்கும். அவன் வரட்டும் பேசிக்கிறேன்!" என்று கோபத்துடன் கூறிய பரணிதரன், "அவர் ஜாதகம் கொடுத்ததும் நல்லதாப் போச்சு. ஜாதகம் பொருந்தலேன்னு இன்னிக்கே அவருக்கு ஒரு கார்டு எழுதிப் போட்டுடு" என்றான் தொடர்ந்து.

"உன் நண்பன் உன் மேல ரொம்பக் கோபமா இருக்காண்டா! அவங்கிட்ட கேக்காம நீ ஏன் பெண் வீட்டுக்காரங்களை இங்கே வரச் சொன்னே?" என்றாள் பாகிரதி, வீட்டுக்கு வந்த பாலுவிடம். பரணிதரன் அப்போது வீட்டில் இல்லை. வெளியே எங்கோ சென்றிருந்தான்.

"எனக்குப் பெண் பாக்கறதிலேந்து கல்யாண ஏற்பாடுகள் வரை என் கல்யாணத்தில அவன் எனக்கு நிறைய உதவி செஞ்சான். அதனாலதான் அவனுக்குப் பொருத்தமா ஒரு பெண் இருக்கறது தெரிஞ்சதும் உங்களை வந்து பாக்கச் சொன்னேன். இது தப்பா?" என்றான் பாலு.

"அப்படித்தான் பரணி நினைக்கிறான். கல்யாணத்தைப் பத்தி அவன் என்ன நினைக்கிறான்னு எனக்கே தெரியல. எப்ப கேட்டாலும் கொஞ்ச நாள் ஆகட்டும்னு சொல்லிக்கிட்டிருக்கான். அவன் மனசில என்ன இருக்குன்னு நானே குழம்பிக்கிட்டிருக்கேன். நீ அவனைக் கேக்காம ஒத்தரை வீட்டுக்கு அனுப்பினா?"

"அவன் ரொம்ப இண்டிபெண்டன்ட் டைப்தான். அவன் விஷயத்தில அவனைக் கேக்காம நான் செஞ்சிருக்கக் கூடாது. கோவிச்சுக்கிட்டு கத்தினான்னா பொறுமையா கேட்டுக்கறேன். ஆனா நீங்க சொல்றதைப் பாத்தா அவன் என் மேல ரொம்பக் கோபமா இருக்கற மாதிரி தெரியுது. என் முகத்திலேயே முழிக்காதேன்னு சொல்லிடப் போறானோன்னு பயமா இருக்கு!" என்றான் பாலு சற்றுக் கவலையுடன்.

அதற்குள் உள்ளே வந்த பரணிதரன், நண்பனைப் பார்த்து உள்ளே வா என்று சைகை செய்து விட்டு அறைக்குள் போனான்.

அடுத்த சில நிமிடங்களுக்கு பரணிதரன் பாலுவிடம் வழக்கமாகப் பேசுவதைப் போல் பல விஷயங்களைப் பற்றி இயல்பாகப் பேசிக் கொண்டிருந்தான்.

காப்பியுடன் அறைக்குள் வந்த பாகிரதி, அவர்கள் பேசுவதைக் கேட்காமலேயே, "ஏதோ தெரியாம செஞ்சுட்டான் விடு!" என்றாள் மகனிடம்.

"தெரியாம செஞ்சுட்டானா? எதை?"என்ற பரணிதரன், உடனேயே, "ஓ, எனக்குப் பெண் பார்க்கிற முயற்சியிலே இறங்கினானே, அதைச் சொல்றியா? அம்மா! பாலுவும் நானும் சின்ன வயசிலேந்தே நண்பர்களா இருக்கோம். அதனால அவன் உரிமை எடுத்துக்கிட்டு எங்கிட்ட சொல்லாமயே எனக்குப் பெண் பாக்கற வேலையில இறங்கி இருக்கான். முதல்ல எனக்குக் கொஞ்சம் கோபம் வந்தது உண்மைதான். ஆனா ஒரு நண்பனா உரிமை எடுத்துக்கிட்டு அவன் எனக்கு ஒரு நல்லது செய்ய நினைச்சதுக்காக அவனை நான் எப்படிக் கோபிச்சுக்க முடியும்? அந்தக் கோபம் அன்னிக்கே போயிடுச்சு. அந்த விஷயத்தை நான் மறந்து கூடப் போயிட்டேன்!" என்றான் சிரித்தபடி.

பிறகு, "அம்மா! நான் வேலை பாக்கற கம்பெனியோட நிலைமை சரியில்ல. அதனால வேற வேலைக்கு முயற்சி செஞ்சுக்கிட்டிருக்கேன். எனக்கு வேற வேலை கிடைச்சப்பறம், நீயும் பாலுவும் சேர்ந்தே எனக்குப் பெண் தேடலாம்!" என்றான் பரணிதரன்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 81
பழைமை (நீண்டகால நட்பு) 

குறள் 801:
பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.

பொருள்: 
பழைமை என்று சொல்லப்படுவது எதுவென்றால், பழகியவர் உரிமை எடுத்துக் கொண்டு செய்யும் செயலை இகழாமல் ஏற்கும் நட்பாகும்.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Thursday, July 14, 2022

800. பெற்றதும், விட்டதும்

"உங்களுக்குத்தான் நாகராஜனைப் பிடிக்கலியே, பின்னே ஏன் அவரோட நட்பை விட மாட்டேங்கறீங்க?" என்றாள் சாரதா.

"எனக்கு நாகராஜனைப் பிடிக்கலேங்கறது சரியில்ல. அவன் குணத்துக்கும் என் குணத்துக்கும் ஒத்து வராது. அவ்வளவுதான். நான் எல்லா விஷயத்திலேயும் நேர்மையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கணும்னு நினைக்கிறவன். அவன் சின்ன விஷங்களுக்குக் கூடக் குறுக்கு வழியைத் தேடறவன். எலக்டிரிக் டிரெயினுக்கு டிக்கட் வாங்க கியூவில நாலு பேர் நிப்பாங்க. கியூவில நின்னு டிக்கட் வாங்க ரெண்டு மூணு நிமிஷம் ஆகும். ஆனா அவன் கியூவில முதல்ல நிக்கறவர்கிட்ட பணத்தைக் கொடுத்து தனக்கும் சேரர்த்து டிக்கட் வாங்கச் சொல்லுவான். ஏண்டா இப்படிப் பண்றேன்னு கேட்டா, 'கியூ எல்லாம் முட்டாள்களுக்குத்தான். புத்திசாலிகள்வேற வழியை யோசிக்கணும்'னு பெரிய வியூக வகுப்பாளர் மாதிரி பேசுவான். அவன் கூட நான் எங்கேயாவது போகறப்ப இப்படியெல்லாம் அவன் செய்யறதை என்னால ஏத்துக்க முடியறது இல்ல!" என்று விளக்கினான் சங்கர்.

"அப்ப அவரோட நட்பை விட்டொழிக்க வேண்டியதுதானே?"

"அதுக்கு சந்தர்ப்பம் பாத்துக்கிட்டிருக்கேன். அது அநேகமா கிடைச்சுடுச்சுன்னு நினைக்கறேன்" என்ற சங்கர், "எனக்கு ஒரு வேலை இருக்கு. கொஞ்சம் வெளியில போயிட்டு வந்துடறேன்" என்று மனைவியிடம் சொல்லி விட்டுக் கிளம்பினான்.

இரண்டு மணி நேரம் கழித்து வீட்டுக்குத் திரும்பிய சங்கரைப் பார்த்து, "எங்கே போயிட்டு வந்தீங்க?" என்றாள் சாரதா.

"மாசிலாமணின்னு ஒரு தொழிலதிபர் இருக்காரு. அவரு ஒரு பண்புள்ள மனிதர். என் நண்பன் தண்டபாணிக்கு அவர் தூரத்து உறவு. அவர்கிட்ட நட்பு ஏற்படுத்திக்கணும்னு நினைச்சேன். அதுக்கான வாய்ப்பு கிடைக்கல" என்றான் சங்கர்.

"ஏன், தண்டபாணி மூலமா அவரை சந்திச்சிருக்கலாமே!" என்றாள் சாரதா.

"தண்டபாணிக்கு அவர் தூரத்து உறவுதாங்கறதால அவனே அவரை சாதாரணமாப் போய்ப் பாக்கத் தயங்குவான். அப்படியே அவனோட போய் அவரை ஒரு தடவை நான் பார்த்தாலும் அவர்கிட்ட நெருக்கமா ஆக முடியாதே?"

"அதனால?"

"தற்செயலா ஒரு சந்தர்ப்பம் கிடைச்சது. அவரு ராஜாஜிகிட்ட ரொம்ப மதிப்பு வச்சிருக்கறவர். ராஜாஜி எழுதின கட்டுரைகளைத் தொகுத்து 'சத்யமேவ ஜயதே'ன்னு புத்தகமாப் போட்டிருக்காங்க."

"ஆமாம், உங்ககிட்ட கூட  அந்தப் புத்தகங்கள் ரெண்டு மூணு பகுதியா இருக்கு போலருக்கே!"

"ஆமாம். அதோட நாலு பகுதியும் எங்கிட்ட இருக்கு. ஆனா மாசிலாமணிக்கு ஒரு வால்யூம் கிடைக்கலையாம். ஒரு திருமணத்தில அவரு இதை யார்கிட்டயோ சொல்லிக்கிட்டிருந்ததை தண்டபாணி கேட்டிருக்கான். அதை அவன் எங்கிட்ட சொன்னான். அந்த வால்யூம் எங்கிட்ட இருக்குன்னு சொல்லி அதை அவங்கிட்ட கொடுத்து மாசிலாமணி கிட்ட கொடுக்கச் சொன்னேன். அவன் அதைக் கொடுத்ததும் அவரு என்னைப் பாக்கணும்னு சொல்லி இருக்காரு. இப்ப அவரைத்தான் பாத்துப் பேசிட்டு வந்தேன். 'நம்ம ரெண்டு பேருக்கும் ஒத்த கருத்துக்கள் நிறைய இருக்கு. அதனால நாம அடிக்கடி சந்திச்சுப் பேசலாம்னு' அவரு சொன்னாரு. அதனால அவரோட நட்பு கிடைக்கணுங்கற என்னோட விருப்பம் நிறைவேறிடுச்சு!"

"பரவாயில்லையே!"

"அதோட இன்னொரு விஷயம். நாகராஜனோட நட்பை விட்டொழிக்கணும்னு நீ சொல்லிக்கிட்டிருப்ப இல்ல?"

"ஆமாம். அதுக்கு ஏதோ சந்தர்ப்பம் கிடைச்சிருக்குன்னு சொன்னீங்களே!"

"ஆமாம். அவன் எங்கிட்ட பத்தாயிரம் ரூபாய் கடன் கேட்டான். அதை அவனுக்கு கூகுள் பே-ல அனுப்பிட்டேன்"

"என்னங்க இது? அவரு குறுக்கு வழியில போறவருன்னு நீங்கதானே சொன்னீங்க? அவரு பணத்தை ஒழுங்கா திருப்பித் தருவாரா?"

"கண்டிப்பாத் திருப்பித் தர மட்டான்! ஏன்னா, அவன் வேற சில நண்பர்கள் கிட்ட ஆயிரம், ரெண்டாயிரம்னு வாங்கினதையே திருப்பித் தரல. அவங்க ஃபோன் பண்ணினா ஃபோனைக் கூட எடுக்கறதில்லையாம்!" என்றன் சங்கர் சிரித்தபடி.

"பின்னே ஏன் அவருக்குப் பணம் கொடுத்தீங்க?" என்றாள் சரதா சற்றுக் கோபத்துடன்.

"இனிமே அவன் என்னைப் பாக்க வர மாட்டான். ஃபோன் கூடப் பண்ண மாட்டான். அவன் நட்பை விட்டொழிக்க இதை விட சிறந்த வழி வேற என்ன இருக்க முடியும்?"

"அதுக்காக பத்தாயிரம் ரூபா நஷ்டப்படணுமா?"

"நான் என்னோட புத்தகங்களை யாருக்கும் இரவல் கொடுக்க மாட்டேன்னு உனக்குத் தெரியும். ஆனா மாசிலாமணியோட நட்பைப் பெறணுங்கறதுக்காக, நானே வலுவில ஒரு புத்தகத்தைக் கொடுத்து அதன் மூலமா அவர் நட்பைத் தேடிக்கிட்டேன். அதே மாதிரி நாகராஜனோட நட்பை விட்டொழிக்க பத்தாயிரம் ரூபா போனாலும் பரவாயில்லேன்னு அவனுக்குக் கடன் கொடுத்தேன். ஒண்ணு நமக்குக் கிடைக்கறதுக்கு நாம ஒரு விலை கொடுக்கிற மாதிரி, ஒண்ணை விட்டொழிக்கவும் சில சமயம் நாம ஒரு விலை கொடுக்க வேண்டி இருக்கு" என்றான் நாகராஜன்

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 80
நட்பாராய்தல் 

குறள் 800:
மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.

பொருள்: 
குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ள வேண்டும், ஒத்த பண்பு இல்லாதவருடைய நட்பை ஒன்றைக் கொடுத்தாவது கைவிட வேண்டும்.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Wednesday, July 13, 2022

610. "ராஜேந்திர சோழன்"

"அரசே! உங்கள் தந்தை பல சிறிய நாடுகளை வென்று தன் சாம்ராஜ்யத்தைப் பெருக்கி உங்களிடம் ஒப்படைத்திருக்கிறார். இந்தப் பரந்த சாம்ராஜ்யத்தைப் பராமரிப்பது உங்கள் பொறுப்பு!" என்றார் அமைச்சர்.

"என் தந்தை பல சிறிய நாடுகளை வென்றார் என்று கூறினீர்கள். பெரிய நாடு எதையும் அவர் வெல்ல முயற்சி செய்யவில்லையா?" என்றான் அப்போதுதான் முடிசூட்டிக் கொண்ட அரசன் இளவழகன்.

அமைச்சர் சற்று வியப்புடன் அரசனைப் பார்த்தார்.

"அரசே! பெரிய நாடுகளுடன் போரிட்டு வெல்வது கடினம். போரில் தோற்றால், இருக்கும் நாட்டையும் இழக்க நேரிடும். அதனால்தான் புத்திசாலியான உங்கள் தந்தை பல சிறிய நாடுகளை வென்று அவற்றை நம் நாட்டுடன் இணைத்து நம் நாட்டைப் பெரிய நாடாக ஆக்கினார். சில அரசர்கள் சிறு நாடுகளை வென்ற பிறகு, அந்த நாடுகளின் அரசர்களிடம் கப்பம் வாங்கிக் கொடு அவற்றை த் தனிநாடுகளாக இருக்க அனுமதிப்பார்கள். ஆனால் உங்கள் தந்தை அவ்வாறு செய்யாமல் அவற்றை நம் நாட்டின் ஒரு பகுதியாக ஆக்கி விட்டார்" என்று விளக்கினார் அமைச்சர்.

"அப்படியானால் இனி நாம் பெரிய நாடுகளை வென்று அவற்றை நம்முடன் இணைத்துக் கொண்டால் உலகிலேயே மிகப் பெரிய நாடாக விளங்கலாமே!" என்றான் அரசன் உற்சாகத்துடன்.

"அரசே! பெரிய நாடுகளைப் போரில் வெல்வது எளிதல்ல. நீங்கள் இப்போதுதான் முடிசூட்டிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு இளம் வயது. சில ஆண்டுகள் அரச சுகத்தை அனுபவித்து விட்டு அதற்குப் பிறகு நாட்டை மேலும் விரிவாக்குவதைப் பற்றிச் சிந்திக்கலாம் என்பது என் கருத்து!" என்றார் அமைச்சர்.

"அமைச்சரே! நாளைக்கே போருக்குக் கிளம்ப வேண்டும் என்று நான் கூறவில்லை. பெரிய நாடுகளுடன் போரிட நாம் விரிவாகத் திட்டமிட வேண்டும், நம் படைகளை இன்னும் வலுவாக்கிக் கொள்ள வேண்டும், ஒற்றர்கள் மூலம் முக்கியத் தகவல்களைப் பெற வேண்டும். இவற்றுக்கெல்லாம் சில ஆண்டுகள் பிடிக்கும் என்பதை நான் அறிவேன். ஆனால் அவற்றுக்கான முயற்சிகளை இப்போதே துவங்க வேண்டாமா? முதலில் பல ஆலோசனைக் கூட்டங்களை நடத்த வேண்டும். அவற்றுக்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள். ஓய்வெடுப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை. அதனால் முயற்சிகளை உடனே தொடங்கலாம்!" என்றான் அரசன்.

"அரசே! நாட்டை விரிவாக்குவதில் நீங்கள் உங்கள் தந்தையையே மிஞ்சி விட்டீர்கள். மிகக் குறைந்த காலத்திலேயே சில பெரிய நாடுகளை வென்று  பல பகுதிகளிலும் நம் கொடியைப் பறக்க விட்டு விட்டீர்கள். அபாரமான சாதனை உங்களுடையது!" என்றார் அமைச்சர்.

"என் தந்தையுடன் இணைந்து பணியாற்றிய தங்களைப் போன்ற அறிவும், அனுபவமும் கொண்ட பலரது ஆலோசனை, படைத்தலைவரின் வியூகங்கள், படைவீரர்களின் வீரம், தியாக உணர்வுடன் நம் மக்கள் நம் முயற்சிகளுக்கு அளித்த ஆதரவு ஆகியவைதான் இந்த வெற்றிக்கு முக்கியமான காரணம்!" என்றான் அரசன்.

"அரசே! உங்கள் அயராத உழைப்பு, விடாமுயற்சி, மன உறுதி, வீரம் இவற்றைப் போல் உங்கள் அடக்கமும் மிக உயர்ந்தது. மூன்று அடிகளால் உலகை அளந்த வாமனர் போல் நீங்களும் பெரிய நிலப்பரப்பை வென்று விட்டீர்கள். இதற்கான உத்வேகம் உங்களுக்கு எப்படி வந்தது என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது."

"அந்த உத்வேகத்தை அளித்தவர் தாங்கள்தான் அமைச்சரே!" என்றான் அரசன் சிரித்தபடி.

"நானா? நான் என்ன செய்தேன்?" என்றார் அமைச்சர் வியப்புடன்.

"என் முடிசூட்டு விழாவின்போது ராஜராஜ சோழருக்கு நிகரான புகழுடன் விளங்கிய அவரது புதல்வர் ராஜேந்திர சோழரைப் போல புகழ் பெற்று விளங்க வேண்டும் என்று தாங்கள் என்னை வாழ்த்தினீர்கள். அதற்குப் பிறகு ராஜேந்திர சோழரின் வரலாற்றைப் படித்துப் பார்த்தேன். ராஜராஜர் அருகிலுள்ள இலங்கையை வென்றார் என்றால், ராஜேந்திரர் கடல் கடந்து தொலைவில் இருந்த கடாரத்தை வென்றதுடன், வடக்கிலும் கங்கைக்கரையிலிருந்த நாடுகள் வரை வென்று தன் சாம்ராஜ்யத்தைப் பெருக்கினார் என்று அறிந்து கொண்டேன். அதற்குப் பிறகுதான் சாம்ராஜ்யத்தை விரிவாக்க வேண்டும் என்ற உத்வேகம் எனக்கு ஏற்பட்டது!" என்றான் இளவழகன்.

"உத்வேகம் வேண்டுமானால் என்னிடமிருந்து வந்திருக்கலாம். ஆனால் உங்கள் ஓய்வில்லாத உழைப்புதான் உங்கள் வெற்றிக்குக் காரணம்" என்றார் அமைச்சர்.

பொருட்பால்
அரசியல் இயல்

அதிகாரம் 61
மடியின்மை (சோம்பலின்மை)

குறள் 610:
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.

பொருள்:
அடியால் உலகத்தை அளந்த கடவுள் கடந்த பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒருசேர அடைவான்.

      அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

609. மகன் கேட்ட கேள்வி!

"ஏம்ப்பா என்னோட படிக்கிற எல்லாப் பையங்களோட அப்பாவும் வேலைக்குப் போறாங்க. நீ மட்டும் ஏன் போகல?"

ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகன் கேட்ட கேள்வி தங்கப்பனுக்கு ஆச்சரியமளிக்கவில்லை, ஆனால் எரிச்சலூட்டியது.

"முதல்ல என்னோட அம்மா கேட்டாங்க. அப்புறம் உன்னோட அம்மா கேட்டா. இப்ப நீ கேக்கறியா?" என்றான் தங்கப்பன் எரிச்சலுடன்.

"பையன்கிட்ட ஏன் எரிஞ்ச விழறீங்க? நீங்க வேலைக்குப் போகாம இருக்கறதைப் பத்தி ஊர்ல எல்லாரும்தான் பேசறாங்க!" என்றாள் அவன் மனைவி சுமங்கலி.

"எனக்குப் பரம்பரை சொத்து இருக்கு. நான் எதுக்கு வேலைக்குப் போகணும்?"

"பரம்பரை சொத்து உங்கப்பாவுக்கும் தானே இருந்தது? ஆனா அவரு வீட்டில உக்காந்துக்கிட்டு இருக்கலியே! வயல் தோட்டம்னு அலைஞ்சு எல்லாத்தையும் பாத்துக்கிட்டு சொத்தைப் பெருக்கி உங்களுக்கு விட்டுட்டுப் போனாரே!"

"அவருக்கு அது பிடிச்சிருந்தது. வேலை செய்யறது எனக்குப் பிடிக்கல. வீட்டில உக்காந்துக்கிட்டிருக்கறதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு!"

"நான் கூட வசதியான குடும்பத்திலேந்து வந்தவதான். அதுக்காக சமையல் வேலை செய்ய மாட்டேன்னு நான் சும்மா இருந்தா எப்படி இருக்கும்?" என்றாள் சுமங்கலி கோபத்துடன்.

"இருந்துட்டுப் போயேன். சமையலுக்கு ஆள் வச்சுக்க முடியாதா நம்மால?" என்றான் தங்கப்பன் சிரித்தபடி.

"பள்ளிக்கூடத்தில எல்லாரும் உன் அப்பா என்ன வேலை பாக்கறாருன்னு கேக்கறாங்க. நான் என்ன சொல்றது?" என்றான் சிறுவன் விடாமல்.

"என் அப்பாதான் எல்லாருக்கும் வேலை கொடுக்கறாருன்னு சொல்லு!" என்றான் தங்கப்பன்.

"என்னவோ போங்க! எல்லாரும் உங்கப்பாவைப் பத்திப் பெருமையாப் பேசிட்டு அவரோட பையன் இப்படி இருக்காரேன்னு என் காது படவே பேசிக்கறப்ப எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு!" என்றபடியே உள்ளே சென்றாள் சுமங்கலி, யார் என்ன சொன்னாலும் தன் கணவன் மாறப் போவதில்லை என்ற விரக்தியுடன்.

"ரெண்டு மூணு நாளா எங்கேயோ வெளியில போயிட்டு வரீங்களே என்ன விஷயம்?" என்றாள் சுமங்கலி.

"ஒரு வியாபாரம் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்!" என்றான் தங்கப்பன் புன்சிரிப்புடன்.

"வியாபாரமா, என்ன வியாபாரம்?" என்றாள் சுமங்கலி வியப்புடன்.

"நெல் வியாபாரம்தான். சுத்தி இருக்கிற ஊர்ல உள்ள சின்னச் சின்ன விவசாயிகள் கிட்டல்லாம் நெல்லை வாங்கி டவுன்ல இருக்கற பெரிய வியாபாரிங்ககிட்ட விக்கறது. அதுக்காக மாட்டு வண்டிகள், கூலி ஆட்கள் எல்லாம் ஏற்பாடு பண்ணத்தான் வெளியில போயிட்டு வந்தேன். வர வெள்ளிக்கிழமை அன்னிக்கு பூஜை போட்டுட்டு வியாபாரத்தை ஆரம்பிக்க வேண்டியதுதான்!" என்றான் தங்கப்பன் உற்சாகத்துடன்.

"உண்மையாவா? எப்படிங்க, திடீர்னு இப்படி ஒரு முடிவை எடுத்தீங்க?" என்றாள் சுமங்கலி வாய் நிறைய சிரிப்புடன்.

"இத்தனை வருஷமா என்னோட அம்மாவும், நீயும், இன்னும் பல பேரும் சொல்லி இருக்கீங்க. அப்பல்லாம் எனக்கு அது உறைக்கல. ஆனா உன்னோட அப்பா என்ன செய்யறார்னு கூடப் படிக்கிற பையன்கள்ளாம் கேட்டா என்ன சொல்றதுன்னு நம்ம பையன் கேட்டது என் மனசை உறுத்திக்கிட்டே இருந்தது. என் அப்பா எல்லாருக்கும் வேலை கொடுக்கறார்னு சொல்லுன்னு அன்னிக்கு அவங்கிட்ட ஒப்புக்கு ஒரு பதிலைச் சொன்னேன். அப்படியே செஞ்சா என்னன்னு தோணிச்சு. அப்புறம் யோசிச்சு இந்தத் தொழில்தான் எனக்கு ஒத்து வரும்னு இதைத் தேர்ந்தெடுத்தேன். தொழிலை ஆரம்பிக்கறதுக்கான எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு உங்கிட்ட சொல்லலாம்னு நினைச்சேன்."

"ரொம்பப் பெருமையா இருக்குங்க!"

"ஆனா ஒரு பிரச்னைதான்" என்றான் தங்கப்பன்.

"என்ன பிரச்னை?" என்றாள் சுமங்கலி கவலையுடன்.

"இந்த வியாபாரம் வருஷத்தில நாலஞ்சு மாசம்தான் நடக்கும். மத்த நாட்கள்ள என்ன செய்யறதுன்னு தெரியல!"

"அவ்வளவுதானா? எப்ப ஒரு தொழில் செய்யறதுன்னு இறங்கிட்டீங்களோ, அப்புறம் உங்களால சும்மா இருக்க முடியாது. வேற ஏதாவது செய்வீங்க. இனிமே உங்களை சோம்பேறின்னோ, நல்ல குடும்பத்தில பிறந்துட்டு இப்படி இருக்காரேன்னோ யாரும் பழிச்சுப் பேச மாட்டாங்க. எனக்கு அது போதும்!" என்றாள் சுமங்கலி மனத்திருப்தியுடன்.

பொருட்பால்
அரசியல் இயல்

அதிகாரம் 61
மடியின்மை (சோம்பலின்மை)

குறள் 609:
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.

பொருள்:
ஒருவன் தான் சோம்பலால் ஆளப்படும் தன்மையை மாற்றிவிட்டால் அவனுடைய குடியிலும் ஆண்மையிலும் வந்த குற்றம் தீர்ந்து விடும்.

      அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

Tuesday, July 12, 2022

799. கண் மூடும் வேளையிலும்!

புருஷோத்தமன் படுத்த படுக்கையாகி இரண்டு மாதங்கள் ஆகி விட்டன. 

ஒரு மாதம் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பிறகு, "இனிமே எந்த முன்னேற்றமும் ஏற்படாது. வீட்டுக்கு அழைச்சுக்கிட்டுப் போயிடுங்க. எவ்வளவு நாள்இருப்பார்னு சொல்ல முடியாது" என்று மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர்.

பருஷோத்தமனை வீட்டுக்கு அழைத்து வந்த பிறகு அவர் மனைவி சரஸ்வதி அவர் படுக்க வைக்கப்பட்டிருந்த கட்டிலுக்கு அருகிலேயே அமர்ந்திருந்தாள்.

புருஷோத்தமன் பெரும்பாலும் நினைவில்லாமல்தான் இருப்பார். அவ்வப்போது கண் விழிப்பார். கண் விழித்த பின் சில மணி நேரம் நல்ல நினைவுடன் மனைவியிடம் பேசிக் கொண்டிருப்பார். 

அவர்கள் திருமண வாழ்க்கை, குடும்ப நிகழ்வுகள் என்று பலவற்றைப் பற்றி நினைவு கூர்ந்து பேசுவார். அப்போதெல்லாம் அவர் முகத்தில் ஒரு மலர்ச்சி தெரியும்.

புருஷோத்தமன் திருமணமான புதிதில் தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு சொந்தத் தொழில் துவக்கினார். 

புருஷோத்தமனின் தாய், அவருடைய நண்பர்கள் சிலர், சரஸ்வதி உட்படப் பலர் எச்சரித்தும் புருஷோத்தமன் துணிச்சலாக சொந்தத் தொழில் முயற்சியில் இறங்கினார்.

அனைவரும் எச்சரிதபடியே, இரண்டு மூன்று வருடங்களுக்கு புருஷோத்தமன் பல சோதனைகளைச் சந்தித்தார். சேமிப்பு அத்தனையும் கரைந்து விட்டது. 

குடும்பச் செலவுக்கே பணம் போதாத நிலை ஏற்பட்டது. ஆனால் யாரிடமும் கடன் கேட்பதில்லை என்று புருஷோத்தமன் உறுதியாக இருந்தார்.

கணவனும் மனைவியும் எப்படியோ பல்லைக் கடித்துக் கொணடு நிலைமையைச் சமாளித்தார்கள்.

பிறகு சிறிது சிறிதாக நிலை மாறி அவர் தொழிலில் முன்னேற்றம் ஏற்பட்டு ஓரிரு வருடங்களில் தொழில் பெரிதாக வளர்ந்து விட்டது, வசதியான வாழ்க்கையும் அமைந்தது.

அந்த நாட்களைப் பற்றிப் பேசும்போது கூட புருஷோத்தமனிடம் வருத்தம் இருக்காது, பெருமிதம்தான் இருக்கும். பெரும் சவால்களைச் சமாளித்து வெற்றி அடைந்து விட்ட பெருமிதம்!

சில சமயம் அவர்கள் மகன் முகுந்தனும் அருகில் அமர்ந்து தன் தந்தை கூறுவற்றைக் கேட்டுக் கொண்டிருப்பான். 

புருஷோத்தமன் ஒரு விஷயத்தைப் பற்றி நினைவு கூரும்போது, நடந்த விஷயங்களை சரஸ்வதி விவரமாக மகனிடம் கூறுவாள். புருஷோத்தமன் அவள் கூறுவதை ரசித்துக் கேட்டுத் தலையாட்டி மகிழ்வார்.

ருநாள் புருஷோத்தமன் தன் தொழில் முயற்சியின்போது ஏற்பட்ட சவால்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென்று அவர் முகத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. 

முகத்தில் இருந்த மகிழ்ச்சியும், பெருமிதமும் மறைந்து சோகமும், ஏமாற்றமும் குடிகொண்டன. "ரமணி, ரமணி" என்று முணுமுணுத்து விட்டுப் பிறகு கண்களை மூடிக் கொண்டார்.

"யாரும்மா ரமணி?" என்றான் அருகில் அமர்ந்து தந்தை பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த முகுந்தன்.

"ரமணின்னு உன் அப்பாவுக்கு ஒரு நண்பர் இருந்தார். அவரைத் தன்னோட நெருங்கன்ன நண்பன்னு உன் அப்பா நினைச்சாரு. ரமணி அடிக்கடி நம் வீட்டுக்கு வருவாரு. அப்பாவும் அவரும் ரொம்ப நேரம் பேசிக்கிட்டிருப்பாங்க. ஆனா உன் அப்பா கஷ்டமான நிலையில இருந்தப்ப அவர் நம்ம வீட்டுப் பக்கமே வரல. அப்ப ஃபோன் எல்லாம் கிடையாது.

"ஒருநாள் உன் அப்பா ரமணியைப் பாக்க அவர் வீட்டுக்குப் போயிருந்தாரு. தன்னோட கஷ்டங்களைப் பத்தி நண்பன்கிட்ட பேசினா ஆறுதலா இருக்கும்னு நினைச்சுத்தான்போனாரு. 

"அப்பா அவர் வீட்டுக்குப் போனப்ப, ரமணி வீட்டில இல்லேன்னு அவர் மனைவி அப்பாகிட்ட சொன்னாங்க. ஆனா உங்கப்பா வந்ததைப் பாத்ததும் முன் அறையிலிருந்த ரமணி அவசரமா எழுந்து உள்ளே போனதை உன் அப்பா பாத்துட்டாரு. 

"தான் ஏதோ கடன் கேக்கப் போறோம்னு நினைச்சுத்தான் ரமணி அப்படிப் பண்ணி இருப்பார்னு உன் அப்பாவுக்குப் புரிஞ்சுடுச்சு. 

"தனக்கு நெருக்கமா இருந்த நண்பன்கிட்ட, தன்னோட கவலைகளைச் சொல்லி ஆறுதல் தேடலாம்னு வந்தப்ப அந்த நண்பன் அப்படி நடந்துக்கிட்டது உன் அப்பாவுக்கு பெரிய அதிர்ச்சியா அமைஞ்சுடுச்சு. 

"இத்தனை வருஷமா எங்கிட்ட எத்தனையோ தடவை உங்கப்பா எங்கிட்ட இதைச் சொல்லி மாய்ஞ்சு போயிருக்காரு. அதை மறந்துடுங்கன்னு நான் எத்தனையோ தடவை சொல்லி இருக்கேன். 

"இப்ப திடீர்னு அது அவருக்கு ஞாபகம் வந்து தொலைச்சிருக்கு! பாரேன், சந்தோஷமாப் பேசிக்கிட்டிருந்தவரோட முகம் ஒரு நொடியில எப்படி மாறிப் போயிடுச்சுன்னு!"

மகனிடம் விவரங்களைக் கூறி விட்டு, சரஸ்வதி கணவனின் முகத்தைப் பார்த்தாள். சற்றுமுன் மலர்ந்திருந்த முகத்தில் ஒரு வாட்டம் வந்து குடிபுகுந்திருந்தது. 

புருஷோத்தமனின் கண்கள் மூடி இருந்ததால் ரமணியைப் பற்றி சரஸ்வதி மகனிடம் கூறியதை அவர் கேட்டாரா அல்லது நினைவு இழந்து விட்டாரா என்று தெரியவில்லை.

ஆனால் அதற்குப் பிறகு புருஷோத்தமன் கண்களைத் திறக்கவே இல்லை. 

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 80
நட்பாராய்தல் 

குறள் 799:
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்.

பொருள்: 
கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பைப் பற்றி, எமன் உயிரை எடுத்துச் செல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை அது வருத்தும்
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Monday, July 11, 2022

798. வீட்டுக்கு வந்த நண்பன்

நீண்ட நாட்களுக்குப் பிறகு எதிர்பாராமல் தன் வீட்டுக்கு வந்த தன் நண்பன் ஆனந்தைப் பார்த்ததும்  ரகுவுக்கு வியப்பையும் மீறி ஒருவித சோர்வு ஏற்பட்டது.

"வா!" என்றான் உற்சாகமில்லாமல்.

 இதுவே ஆறு மாதங்களுக்கு முன்னால் என்றால் "வாடா!" என்று கையைப் பிடித்து உள்ளே அழைத்து வந்திருப்பான்.

"உட்கார்!" என்று சொல்லக் கூட ரகுவுக்கு மனமில்லை. ஆனந்த் தானே உட்கார்ந்தான்.

"நடக்கக் கூடாததெல்லாம் நடந்துடுச்சு. நல்ல வேளையா எல்லாம் நல்லபடியா முடிஞ்சுடுச்சு!" என்றான் ஆனந்த்.

நல்லபடியாக முடிந்து விட்டதா? 

அலுவலகத்தில் யாரோ செய்த மோசடிக்கான பழி தன் மேல் விழுந்து கைது செய்யப்பட்டு ஜாமீன் கிடைக்காமல் மூன்று மாதம் சிறையில் இருந்து விட்டு, ஆறு மாதங்கள் பணி இடைநீக்கத்துக்குப் பின் போலீஸ் விசாரணையில் உண்மைக் குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்ட பின் தன் மீது சமத்தப்பட்ட குற்றச்சாட்டு விலக்கிக் கொள்ளப்பட்டு தான் மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்ளப்பட்டதை நல்லபடியாக முடிந்து விட்டது என்று கடந்து போக முடியுமா?

சற்று நேரம் ஏதோ பேசிக் கொண்டிருந்து விட்டு ஆனந்த் கிளம்பினான்.

கிளம்பும் சமயத்தில், "உன் மனைவி எங்கே? எங்கேயாவது வெளியில போயிருக்காங்களா என்ன?" என்றான் ஆனந்த்.

"உள்ளே ஏதாவது வேலையா இருப்பா" என்றான் ராமு சுருக்கமாக.

ஆனந்த் கிளம்பிச் சென்றதும்,உள்ளிருந்து வந்த ரகுவின் மனைவி சாந்தா, "எங்கே அவரு? போயிட்டாரா? உங்களுக்கு சோதனையான காலத்தில நமக்கு அதிகம் பழக்கமில்லாத சில பேர் கூட வந்து நமக்கு ஆறுதல் சொன்னாங்க? நண்பன்னு சொல்லிட்டு இத்தனை வருஷமா பழகின இவரு எட்டிக் கூடப் பாக்கல. ஒரு ஃபோன் பண்ணி கூட  ஆறுதல் சொல்லல. இப்ப எல்லாம் சரியானப்பறம் மறுபடி வந்து ஒட்டிக்கப் பாக்கறாரு. அதனாலதான் வீட்டுக்கு வந்தவருக்கு ஒரு காப்பி கூடக் கொடுக்காம நான் உள்ளேயே இருந்துட்டேன். அவர் மூஞ்சியைப் பாக்கவே எனக்குப் பிடிக்கல?" என்றாள் கோபம் கொப்பளிக்கும் குரலில்.

"நான் மட்டும் அவன் மூஞ்சியை இனிமே ஏன் பாக்கப் போறேன்? நான் அவங்கிட்ட அலட்சியமா நடந்துக்கிட்டது, நீ உள்ளேயிருந்து வெளியே வராமல் இருந்தது இதையெல்லாம் வச்சே அவனுக்குப் புரிஞ்சிருக்கும் அவன் கூட இனிமே நான் நட்பு வச்சுக்க மாட்டேன்னு. அவனை விடு. நடந்ததையெல்லாம் நினைச்சா எனக்கு மனசு ஆறல, எனக்கு இப்படி ஒரு அநியாயம் நடந்துடுச்சேன்னு" என்றான் ரகு.

"இதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மறக்கப் பாக்கணுங்க. முயற்சி செஞ்சா கொஞ்ச நாள்ள இந்த அனுபவத்தோட நினைவெல்லாம் தேஞ்சு போயிடும்.  ஆனந்த் மாதிரி ஆட்களோட நட்பை உதறின மாதிரி இது மாதிரி அனுபவங்களோட நினைவையும் விட்டொழிச்சாத்தான் நம்மால சந்தோஷமா இருக்க முடியும்" என்றாள் சாந்தா.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 80
நட்பாராய்தல் 

குறள் 798:
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.

பொருள்: 
ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமலிருக்க வேண்டும், அதுபோல் துன்பம் வந்த போது கைவிடுகின்றவரின் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும்.
குறள் 799 (விரைவில்)
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

608. ஏன் இந்த நிலை?

"ஏண்டா, செல்வம் என்டர்பிரைசஸ் கொடுக்க வேண்டிய பணத்தை வசூல் பண்ணச் சொன்னேனே,வசூல் பண்ணினியா இல்லையா?" என்றான் கோபாலசாமி.

"இல்லீங்க! தினம் போய் கேட்டுக்கிட்டுத்தான் இருக்கேன். அவரு நாளைக்கு நாளைக்குன்னு இழுத்தடிச்சுக்கிட்டே இருக்காரு!" என்றான் வேல்முருகன்.

"நீ ஒரு சோம்பேறியாச்சே! அவங்க சொன்ன நேரத்துக்குப் போயிருக்க மாட்டே! சம்பளம் கொடுக்க இன்னும் நாலு நாள்தான் இருக்கு. அதுக்குள்ள நீ அந்தப் பணத்தை வசூலிக்கலேன்னா உனக்கு இந்த மாசம் சம்பளம் கிடையாது!"

முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டு முதலாளியின் அறையிலிருந்து வெளியே வந்த வேல்முருகனைப் பச்சாதாபத்துடன் பார்த்தார் அக்கவுன்டன்ட் குணசீலன்.

சற்று நேரத்தில் வேல்முருகன் வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் வசூலிக்க வெளியே கிளம்பி விட்டான்.

வேல்முருகன் வெளியே சென்றதும், "பாவம்! பெரிய இடத்துப் பிள்ளை! இவன்கிட்ட அடிமைப் பொழைப்பு பொழைக்கணும்னு அவனுக்குத் தலையெழுத்து!" என்றார் குணசீலன் தன் அருகிலிருந்த ஊழியன் சபாபதியிடம்.

"பெரிய இடத்துப் பிள்ளையா?" என்றான் சபாபதி வியப்புடன்.

"ஆமாம். வேல்முருகனோட அப்பா அவங்க ஊர்ல ஒரு பெரிய மனுஷர். ஊர்ல அவருக்கு ரொம்ப மரியாதை உண்டு. வேல்முருகன் அவருக்கு ஒரே பையன். அவர் போனப்பறம் வேல்முருகன் வேலைக்குப் போகாம வெட்டியா வீட்டில உக்காந்து பொழுதைக் கழிச்சுக்கிட்டிருந்தான். அவன் அம்மாவும் இறந்தப்பறம் அவனுக்கு புத்தி சொல்ல யாரும் இல்ல. அப்பா விட்டுட்டுப் போன சொத்து கரைஞ்சுக்கிட்டே இருந்தது அவனுக்குத் தெரியல. "கல்யாணம் ஆகிக் குடும்பமும் ஏற்பட்டப்பறம்தான் குடும்பம் நடத்தவே பணம் இல்லேங்கற நிலைமை வந்தது அவனுக்குப் புரிஞ்சுது"

"நிறைய சொத்து இருந்த்துன்னு சொன்னீங்களே!"

"எவ்வளவு சொத்து இருந்தா என்ன? சம்பாதிக்காம சொத்தை வித்துத் தின்னுக்கிட்டிருந்தா  சொத்து எவ்வளவு வேகமாக் கரையுங்கறது அந்த நிலைமையை அனுபவிச்சங்களுக்குத்தான் தெரியும். நீங்க அனுபவிச்சிருக்கீங்களான்னு கேக்காதே! இந்த அனுபவம் பல பேருக்கு ஏற்பட்டதை நான் பாத்திருக்கேன்!" என்றார் குணசீலன்.

"அப்புறம்?" என்றான் சபாபதி கதை கேட்கும் ஆர்வத்துடன்.

"அப்புறம் என்ன? வேல்முருகன் வேலை தேட ஆரம்பிச்சான். எதுவும் கிடைக்கல. கடைசியில நம்ம ஆள்கிட்ட வந்து மாட்டினான். இதில சோகம் என்னன்னா நம் முதலாளியோட அப்பாவுக்கும் வேல்முருகனோட அப்பாவுக்கும் ஆகாது. இப்ப அவர் பையன் வேல்முருகன் மேல இரக்கப்பட்டு அவனுக்கு வேலை கொடுக்கற மாதிரி கொடுத்துட்டு அவனை ஒரு அடிமை மாதிரி. நடத்தறான். தன்னை விட வயசில பெரியவன்னு கூட பாக்காம வேல்முருகனை வாடா போடான்னு பேசறதும், விரட்டறதும், கடுமையாப் பேசறதும், எனக்கு பாக்கறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு!" என்றார் குணசீலன்.

பொருட்பால்
அரசியல் இயல்

அதிகாரம் 61
மடியின்மை (சோம்பலின்மை)

குறள் 608:
மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்.

பொருள்:
நல்ல குடியில் பிறந்தவனிடம் 
சோம்பல் வந்து பொருந்தினால், அது அவனை அவனுடைய பகைவர்க்கு அடிமையாகுமாறு செய்துவிடும்.

      அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

Thursday, July 7, 2022

797. நண்பனின் கோபம்!

"உங்கிட்ட எவ்வளவோ நல்ல விஷயம் இருக்கு. ஆனா ஒரே ஒரு வேண்டாத விஷயமும் இருக்கு!" என்று நாகராஜனுக்கு நெருங்கியவர்கள் சிலர் அவனிடம் பலமுறை கூறி இருக்கிறார்கள்.

அவர்கள் குறிப்பிட்டது முரளியிடம் அவனுக்கு இருந்த நட்பைப் பற்றி.

அவன் மனைவி கமலா கூடக் கேட்டாள். "உங்களுக்கு இப்படிப்பட்ட சிநேகம் தேவைதானா?"

"ஏன் எல்லாரும் இப்படிச் சொல்றீங்கன்னே தெரியல! அவனுக்கு நான் ஏதோ ஒரு உதவி செஞ்சேன். அதுலேந்து அவன் எங்கிட்ட நட்பா இருக்கான். நானும் பதிலுக்குஅவனோட நட்பா இருக்கேன். இதில என்ன தப்பு?" என்றான் நாகராஜன் சற்று கோபத்துடன்.

"அவர் தன்னை ஒரு பெரிய புத்திசாலின்னு நினைச்சுக்கிட்டு உங்களுக்கு நிறைய யோசனை சொல்றாரு. நீங்களும் அவர் பேச்சைக் கேட்டு சில காரியங்கள்ள இறங்கறீங்க. அதெல்லாம் தோல்வியிலதானே முடியுது?"

"முரளிக்கு சொந்தத் தொழில் செய்யணும்னு ஆர்வம் உண்டு. அவன் வேலையில இருந்தாலும் சைடில ஏதாவது சின்னதா தொழில் செஞ்சுக்கிட்டிருப்பான். சில முயற்சிகள்ள என்னையும் சேந்துக்க சொல்வான்.  அவன் சொன்னதுக்காக சில தொழில்கள்ள ஈடுபட்டு கொஞ்சம் நஷ்டம் ஏற்பட்டிருக்குங்கறது உண்மைதான். அதுக்காக அவனை எப்படிக் குத்தம் சொல்ல முடியும்?"

"சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க! காளான் வளக்கறதிலேந்து, ஈமுக் கோழிப் பண்ணையில முதலீடு செய்யற வரைக்கும் என்ன விளம்பரம் வந்தாலும் அத்தனையிலேயும் முதலீடு பண்ணலாம்னு உங்களுக்கு அவரு யோசனை சொல்லி இருக்காரு. எத்தனையோ வியாபார விளம்பரம் வரும். அத்தனையையும் நம்பறாருன்னா, அவரு யோசிக்கிறதே இல்லேன்னுதானே அர்த்தம்? நல்ல வேளை எல்லாத்திலேய்ம் முதலீடு பண்ண அவர்கிட்ட பணம் இல்ல. நீங்களும் சிலதிலதான் முதலீடு பண்ணினீங்க. எல்லாமே நஷ்டம்தான். எத்தனை பணம் போயிருக்கும்னு நினைச்சுப் பாத்தீங்களா? ஏதோ நீங்க நிறைய சம்பாதிக்கிறீங்க. அதனால அந்த இழப்பெல்லாம் உங்களுக்குப் பெரிசாத் தோணல" என்றாள் கமலா.

நாகராஜன் பதில் சொல்லவில்லை.

முரளியின் ஆலோசனைகளைக் கேட்பது தனக்கு இழப்புகளைத்தான் ஏற்படுத்தும் என்பதை நாகராஜனே காலப்போக்கில் உணர ஆரம்பித்து அவன் ஆலோசனைகளைப் புறக்கணிக்க ஆரம்பித்தான்.

"பெரிய பண்ணை வச்சிருக்காங்க. ஒரு லட்சம் முதலீடு செஞ்சா மாசா மாசம் பத்தாயிரம் ரூபா வருமானம் வரும்னு உத்தரவாதம் கொடுக்கறாங்க. சின்ன முதலீடு, பெரிய லாபம்!" என்றான் முரளி.

"அவ்வளவு பெரிய பண்ணை வச்சிருக்கறவங்க எதுக்கு மத்தவங்களை முதலீடு செய்யச் சொல்றாங்க? அவங்களுக்கு அத்தனை வருமானம் வருமா, சொன்னபடி பத்தாயிரம் ரூபா கொடுக்க முடியுமா இதெல்லாம் எப்படித் தெரியும்?" என்றான் நாகராஜன்.

"வீடியோ போட்டிருக்காங்க பாரு. 100 ஏக்கர் பண்ணை. தென்னை, வாழை, காய்கறிகள், பழங்கள்னு நிறைய பயிர்கள் இருக்கு. தினமும் வியாபாரம் நடக்கும், லட்சக்கணக்கில ரொக்கமாவே வருமானம் வரும். சொன்னபடி நிச்சயமாக் கொடுத்துடுவாங்க. எங்கிட்ட ஒரு லட்ச ரூபா இல்ல. இருந்தா நானே முதலீடு பண்ணிடுவேன். நீ அம்பதாயிரம் கொடுத்தா ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு லட்சம் முதலீடு பண்ணலாம்!" என்றான் முரளி.

"என்னை விடுப்பா! நான் இனிமேயும் நஷ்டப்படத் தயாராயில்ல!" என்றான் நாகராஜன்.

"இனிமேயும்னா? என்னால ஏற்கெனவே உனக்கு நிறைய நஷ்டம் ஆயிட்ட மாதிரி பேசற!" என்றான் முரளி சற்றுக் கோபத்துடன்.

"இல்லையா பின்னே?"

"உன்னோட நன்மைக்காக சில பிசினஸ் ஐடியாக்களை அப்பப்பு உங்கிட்ட சொல்லி இருக்கேன். பிசினஸ்னா ரிஸ்க் இருக்கத்தான் செய்யும். நான் ஏதோ உனக்குக் கெடுதல் செஞ்சுட்ட மாதிரி பேசற! உன்னோட நட்பு வச்சுக்கிட்டதே தப்பு!" என்று சொன்னபடியே கோபமாக எழுந்து வெளியேறினான் முரளி.

உள்ளிருந்து அவர்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த கமலா வெளியே வந்து, "கோவிச்சுக்கிட்டுப் போறாரே! மறுபடி வருவாரா, இல்ல, ஒரேயடியா நட்பை முறிச்சுப்பாரா?" என்றாள்.

"ஒருவேளை அவன் அப்படி செஞ்சா, அவன் மூலமா முதல் தடவையா லாபம் வந்ததா நினைச்சுக்க வேண்டியதுதான்!" என்றான் நாகராஜன் சிரித்தபடியே.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 80
நட்பாராய்தல் 

குறள் 797:

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.

பொருள்: 
ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவருடன் செய்து கொண்ட நட்பைக் கைவிடுதலாகும்.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Tuesday, July 5, 2022

607. நாற்பது வயதில் ஒரு வேலை!

"நாப்பது வயசு ஆகுதுங்கறீங்க. இதுவரையிலும் எந்த வேலைக்கும் போகலியா?"

நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்த அந்த நடுத்தர வயது மனிதரைப் பார்த்து அந்த நிறுவனத்தின் மேலாளர் சண்முகம் வியப்புடன் கேட்டார்.

"இல்லை" என்றான் கேசவன் சுருக்கமாக.

"ஏன்?"

"குடும்பச் சூழ்நிலை..." 

"அப்படின்னா?"

"அப்பா படுத்த படுக்கையா இருந்தாரு. அம்மாவால எதுவும் முடியாது. அவங்களும் பலவீனமா இருந்தாங்க. நான்தான் வீட்டில எல்லாத்தையும் பாத்துக்கிட்டேன்."

"உங்க சகோதர சகோதரிகள்?"

"அண்ணன் வெளியூருக்கு வேலைக்குப் போயிட்டான். தங்கச்சி கல்யாணம் ஆகிப் புகுந்த வீட்டுக்குப் போயிட்டா."

"நீங்க தனியா மாட்டிக்கிட்டீங்களாக்கும்!" என்று சற்று இரக்கப்படுவது போல் கூறிய சண்முகம், "ஆனா நீங்க ஏன் பத்தாது வகுப்பு வரைக்கும் கூடப் படிக்கல?" என்றார் தொடர்ந்து.

"அதான் சொன்னேனே சார்! நான் சின்னப் பையனா இருந்ததிலேந்தே அப்பா அம்மாவை கவனிக்கிறதுதான் என் முழுநேர வேலையா இருந்தது!"

"சாரை உங்களுக்கு எப்படித் தெரியும்?"

"எங்கப்பாவோட நண்பர் ஒத்தர்தான் சார்கிட்ட என்னைப் பத்தி சொல்லி எனக்கு அவரோட கம்பனியில வேலை போட்டுத் தரச் சொன்னாரு. சாரை வீட்டில போய்ப் பாத்தேன். அவர்தான் ஆஃபீசுக்குப் போய் மானேஜரைப் பாருன்னு சொன்னாரு!" என்றான் கேசவன்.

"இங்க பாருங்க கேசவன்! இது ஒரு சின்ன கம்பெனி. இங்க பியூன் வேலைதான் காலி இருக்கு. சம்பளம் குறைச்சலாத்தான் இருக்கும்" என்றார் சண்முகம் சற்றுத் தயக்கத்துடன்.

"எந்த வேலையா இருந்தாலும் பரவாயில்ல சார்!"

"பியூன்னா, எல்லா வேலையையும் செய்யணும். ஆஃபீஸல எல்லாருக்கும் டீ, காப்பி வாங்கிக்கிட்டு வரதிலேந்து, வெளியே பல இடங்களுக்குப் போறது வரை நிறைய வேலை இருக்கும். எடுபிடி வேலை மாதிரிதான் இருக்கும். பொதுவா நாங்க  இந்த வேலைக்கு சின்னப் பையங்களைத்தான் எடுப்போம். அவங்கதான் கௌரவம் பாக்காம எல்லா வேலையும் செய்வாங்க. நீங்க வயசில கொஞ்சம் பெரியவரா வேற இருக்கீங்க..."

"அதனால பரவாயில்ல, சார்."

"சரி" என்ற சண்முகம் பக்கத்து அறையில் ஏதோ அரவம் கேட்டதும், "முதலாளி வந்துட்டாரு போலருக்கு. நான் அவர்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்துடறேன்" என்று எழுந்து பக்கத்து அறைக்குப் போனார்.

பக்கத்து அறைக்குள் அவர்கள் பேசிக் கொண்டது கேசவனுக்கு நன்றாகக் காதில் விழுந்தது. 

அவன் காதில் விழுந்து விடக் கூடாதே என்பது போல் மானேஜர் சண்முகம் சற்று மெல்லிய குரலில் பேசியதாகத் தோன்றியது. ஆனால் இயல்பிலேயே உரத்த குரல் கொண்ட முதலாளி மெதுவாகப் பேச முயற்சி செய்யவில்லை.

முதலாளியிடமிருந்து பெரிய சிரிப்புச் சத்தம் கேட்டது.

"அப்படியா சொன்னான்? அவங்க அப்பா அம்மா போய்ப் பல வருஷங்கள் ஆயிடுச்சு. இத்தனை வருஷமா சோம்பேறியா சுத்திக்கிட்டு அவங்க சம்பாதிச்சு வச்ச சொத்தையெல்லாம் அழிச்சுட்டு இப்ப வேற வழியில்லாம நாப்பது வயசில வேலைக்கு வரான். 

"கல்யாணம் ஆகிக் குழந்தை கூட இருக்கே! குடும்பத்தைக் காப்பாத்தணுமே! எவ்வளவோ வருஷமா பெண்டாட்டி சொல்லியும் வேலைக்கு முயற்சி பண்ணல. சின்ன வயசில ஒழுங்காப் படிக்கவும் இல்ல. இப்ப அப்பா அம்மா மேல பழி போடறான்!

"என் நண்பர் அவன் அப்பாவோட குடும்ப நண்பர். அவர் எல்லாத்தையும் எங்கிட்ட விவரமா சொன்னாரு. அவர் கூட எவ்வளவோ சொல்லியும் அவன் இத்தனை வருஷமா வேலைக்குப் போகல. அவன் மனைவி, குழந்தை மேல இரக்கப்பட்டுத்தான் அவனுக்கு வேலை கொடுக்கச் சொல்லி அவர் எங்கிட்ட சொன்னாரு. அடிப்படையில அவன் ஒரு சோம்பேறி. வேலையிலேயும் சோம்பேறித்தனமாத்தான் இருப்பான். ஸ்டிரிக்டா இருங்க!"

முதலாளியின் பேச்சு கேசவனின் காதுகள் வழியே உள்ளே புகுந்து அவன் இதயத்தைத் துளைத்தது.முன்பின் தெரியாதவர்களிடமிருந்து இப்படிப்பட்ட சொற்களைக் கேட்க வேண்டிய நிலைமையை நினைத்து அவமானத்தால் அவன் உடல் குறுகியது

பொருட்பால்
அரசியல் இயல்

அதிகாரம் 61
மடியின்மை (சோம்பலின்மை)

குறள் 607:
இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.

பொருள்:
சோம்பலை விரும்பி மேற்கொண்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர் பிறர் இடித்துக் கூறி இகழ்கின்ற சொல்லைக் கேட்கும் நிலையை அடைவர்.

      அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

Saturday, July 2, 2022

796. முத்துசாமியின் 'டைம்லைன்'

"என்னடா இது? கம்பெனியிலே சீ ஈ ஓவா இருந்தப்ப இது மாதிரி சார்ட் எல்லாம் பயன்படுத்தி இருப்பே. இப்ப ரிடயர் ஆனப்பறமும் ஏதோ சார்ட் எல்லாம் போட்டுக்கிட்டிருக்கே!" என்றார் சாம்பசிவம்,

ஒரு தாளில் பென்சிலால் ஏதோ மும்முரமாக வரைந்து கொண்டிருந்த முத்துசாமி, சந்தடி இல்லாமல் பின்னால் வந்து நின்ற தன் நண்பனை அப்போதுதான் கவனித்தவராக பேப்பரைக் கீழே வைத்து விட்டு, "வாடா! இப்படித்தான் பூனை மாதிரி சத்தமில்லாம பின்னால வந்து நின்னு என்னை பயமுறுத்தறதா?" என்றார் சிரித்துக் கொண்டே.

"எவ்வளவோ பெரிய சவால்களையெல்லாம் கொஞ்சம் கூட பயப்படாம சமாளிச்ச உன்னை யாராவது பயமுறுத்த முடியுமா என்ன? ஆனாலும், அறைக்கதவைத் திறந்து வச்சுக்கிட்டு, வாசலுக்கு முதுகைக் காட்டிக்கிட்டு உக்காந்துக்கிட்டிருந்தா, என்னை மாதிரி அப்பாவிக்கெல்லாம் கூட கொஞ்சம் பயமுறுத்திப் பாக்கலாமேன்னுதான் தோணும்!"

"நீயா அப்பாவி? உன்னைப் பாத்து எத்தனை பேரு 'அடப்பாவி!'ன்னு அலறி இருக்காங்கன்னு எனக்குத்தானே தெரியும்? காத்து வரதுக்காக் கதவைத் திறந்து வச்சிருக்கேன். கதவுப் பக்கம் பாத்து உக்காந்தா கிளேர் அடிக்கும். அதனாலதான் முதுகைக் காட்டிக்கிட்டு உக்காந்திருக்கேன். போதுமா?"

"கம்பெனி மீட்டிங்ல எல்லாம் பேசற மாதிரி முக்கியமான கேள்வியை விட்டுட்டு மற்றதுக்கெல்லாம் பதில் சொல்ற! என்னவோ வரைஞ்சிக்கிட்டிருக்கியே என்னனு கேட்டேன்."

"அதுவா? என் வாழ்க்கையோட டைம்லைனைப் போட்டுக்கிட்டிருக்கேன்!"

"பிசினஸ்ல பயன்படுத்தற டூலையெல்லாம் சொந்த வாழ்க்கையில பயன்படுத்தற! எங்கே காட்டு" என்று முத்துசாமியின் கையிலிருந்த தாளை வாங்கிப் பார்த்தார் சாம்பசிவம்.

சற்று நேரம் அதை உற்றுப் பார்த்தபின், "உன் வாழ்க்கையைப் பல கட்டங்களாப் பிரிச்சு ஒவ்வொண்ணுக்கும் ஒரு லேபில் கொடுத்திருக்கே, 'ஆரம்ப அனுபவம்,' 'இயல்பான முன்னேற்றம்,' 'சவால்கள் நிறைந்த முன்னேற்றம்,' 'சோதனை மேல் சோதனை,' இன்னும் சில லேபில்கள். எதுக்கு இது?" என்றார்.

"சும்மாதான்! கம்பெனியில முந்தின வருஷ செயல்பாடுகளை ரிவியூ பண்ற மாதிரி, இதுவரையிலுமான என் வாழ்க்கையைப் பத்தி ஒரு ரிவியூ. ஆனா கம்பெனியில ரிவியூ அடிப்படையில எதிர்காலத்தில நம் செயல்பாடுகளை மாத்திக்கலாம். ஆனா என் வாழ்க்கையில அப்படிச் செய்ய முடியாது. மீதி இருக்கிறது செயல்பாடுகள் இல்லாத வாழ்க்கைதானே? இது ஒரு போஸ்ட்மார்ட்டம்னு சொல்லலாம், அவ்வளவுதான்!" என்றார் முத்துசாமி.

முத்துசாமி பேசுவதைக் கேட்டுக் கொண்டே, சார்ட்டைப் பார்த்துக் கொண்டிருந்த சாம்பசிவம், "இது என்ன? ஒவ்வொரு கட்டத்துக்கும் மார்க் போடற மாதிரி ஏதோ போட்டிருக்கியே!" என்றார்.

"ஆமாம். அது மதிப்பெண் மாதிரி ஒரு குறியீடுதான். டைம்லைன்ல இருக்கிற ஒவ்வொரு கட்டமும் எனக்கு எந்த விதத்தில வாழ்க்கையில எந்த அளவுக்குப் பயனுள்ளதா இருந்ததுங்கறதுக்கான மதிப்பெண் அது."

"சோதனை மேல் சோதனைங்கற கால கட்டத்துக்குத்தான் அதிகமா மார்க் கொடுத்திருக்கே! அது எப்படி உன் வாழ்க்கையில அதிகப் பயனுள்ள காலமா இருந்திருக்கும்?" என்றார் சாம்பசிவம் வியப்புடன்.

"நான் பல சவால்களையும், தோல்விகளையும், துன்பங்களையும் அனுபவிச்ச காலம் அது. அப்ப எனக்கு ஏராளமான நண்பர்கள் இருந்தாங்க. அவங்க எல்லாருமே எங்கிட்ட அன்பும், அக்கறையும் கொண்டவங்கன்னு நான் நம்பின காலம் அது. 

"ஆனா என்னோட சோதனைக் காலத்தின்போதுதான், எந்தெந்த நண்பர்கள் எங்கிட்ட உண்மையான அக்கறை கொண்டிருந்தாங்க, எந்தெந்த நண்பர்கள் போலியா நட்பு பாராட்டிட்டு எனக்கு கஷ்டம் வந்தப்ப எங்கிட்டேந்து ஒதுங்க ஆரம்பிச்சாங்கன்னு எனக்குப் புரிஞ்சது. 

"என்னோட ரொம்ப நெருக்கமா இருந்ததா நான் நினைச்ச சில நண்பர்கள் எங்கிட்டேந்து விலகிப் போனாங்க. நான் அதிகம் நெருக்கம் இல்லைன்னு நினைச்ச சில நண்பர்கள் எனக்கு ஆரதவா என் பக்கத்தில நின்னபோது, அவங்க எங்கிட்ட எவ்வளவு அன்போடயும் அக்கறையோடயும் இருந்தாங்கங்கறதை அத்தனை காலமா புரிஞ்சுக்காம இருந்தது எனக்கு வெட்கமாகக் கூட இருந்தது.

 "என் உண்மையான நண்பர்கள் யாருங்கறதை எனக்குப் புரிய வச்சதை விட எனக்கு அதிகப் பயனுள்ள விஷயம் வேற எதுவா இருக்க முடியும்? அதனாலதான் அந்தக் காலத்தை அதிகப் பயனுள்ளதா நினைச்சு அதுக்கு அதிக மார்க் கொடுத்திருக்கேன். உன்னைமாதிரி உண்மையான நண்பர்களை அன்னிக்குத்தான் என்னால அடையாளம் காண முடிஞ்சது. அதைக் கண்டுபிடிக்க எனக்கு உதவினதே அந்த சோதனைக் காலம்தானே!"

உணர்ச்சிப் பெருக்கில் முத்துசாமி தன் நண்பனின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 80
நட்பாராய்தல் 

குறள் 796:
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.

பொருள்: 
தீமை வந்தால் அதிலும் ஒரு நன்மை உண்டு. அந்தத் தீமைதான் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அளந்து காட்டும் கருவியாகிறது.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...