Saturday, October 29, 2022

827. தலைவரே, வருக!

"ஐயா! குமரேசன் லைன்ல இருக்காரு!" என்றார் வையாபுரியின் உதவியாளர் சங்கர்.

"குமரேசனா?" என்று புருவத்தை நெரித்த வையாபுரி, "சரி. ஃபோனைக் கொடு" என்று வையாபுரியிடமிருந்து கைபேசியை வாங்கிக் கொண்டார்.

"எப்படி இருக்கீங்க குமரேசன்?" என்றார் வையாபுரி.

"உங்க ஆசியினால நல்லா இருக்கேன் ஐயா! நீங்க எங்கிட்ட ஃபோன்ல பேசுவீங்கன்னு நான் எதிர்பாக்கவே இல்லை!" என்றார் குமரேசன்.

"நான் பேசுவேன்னு எதிர்பாக்கலேன்னா அப்புறம் எதுக்கு ஃபோன் பண்ணினீங்க? ஏதோ நான் ஃபோன் பண்ணி உங்க்கிட்ட பேசின மாதிரி பேசறீங்க!"

"என்னையா இவ்வளவு கோபமாப் பேசறீங்க! நீங்க எங்கிட்ட பேசுவீங்களோ பேச மாட்டீங்களோன்னு பயந்துகிட்டேதான் ஃபோன் பண்ணினேன்னு சொல்ல வந்தேன்!"

"சரி. என்ன விஷயம் சொல்லுங்க?" என்றார் வையாபுரி.

"நீங்க என்மேல கோபமாத்தான் இருப்பீங்கன்னு எனக்குத் தெரியும். ஆனா கட்சியில உங்களுக்குன்னு ஒரு இடம் அப்படியேதான் இருக்கு. அது தலைமைப் பீடம்! நீங்க எப்ப வந்தாலும் அந்த இடம் உங்களுக்கு இருக்கும்!" என்றார் குமரேசன்.

வையாபுரி பெரிதாகச் சிரித்தார். 

"தலைமைக்கு நான் வரக் கூடாதுன்னுதானே கட்சியில தீர்மானம் போட்டு என்னை நீக்கினீங்க?  அதோட தலைமைக்கு நீங்க வந்துட்டீங்க. அப்புறம் எப்படி தலைமையிடம் காலியா இருக்கும்?" என்றார் வையாபுரி.

"ஐயா! கட்சியில சில பேரு தீர்மானம் கொண்டு வந்தாங்க. நான் அதை ஆதரிக்கல. ஆனா தீர்மானம் ஒருமனதா இருக்கணும்னு மூத்த தலைவர்கள் சொன்னதுக்காக நான் எதிர்த்து ஓட்டுப் போடாம நடுநிலையா இருந்தேன். அப்புறம் கட்சியில எல்லோரும் சேர்ந்து என்னைப் பொதுச் செயலாளர் ஆக்கினாங்க. வேற வழியில்லாம அதை ஏத்துக்கிட்டேன். நான் பொதுச் செயலாளர்தான். நீங்க வந்தா தலைவர்னு ஒரு பதவியை உருவாக்கி அதில உங்களை உட்கார வைப்பேன் .உங்க கட்டளைப்படி கட்சியை வழிநடத்துவேன்!"

"போதும் குமரேசன். வில்லை ரொம்ப வளைக்காதீங்க. ஒடிஞ்சுடப் போகுது!" என்று சொல்லி ஃபோனை வைத்தார் வையாபுரி.

ஃபோனை வைத்ததும் சங்கரைப் பார்த்துச் சிரித்த வையாபுரி, "கேட்ட இல்ல? உனக்குத் தெரியணும்னுதான் ஃபோனை ஸ்பீக்கர்ல போட்டேன். நீ என்ன நினைக்கற?" என்றார்.

"ஐயா! உங்களுக்கு யோசனை சொல்ற அளவுக்கு எனக்கு அறிவோ அனுபவமோ இல்லை. ஆனா கட்சியிலேந்து உங்களை நீக்கினப்பறம் நீங்க பலவீனமாகிட்டதா ஊடகங்கள்ள சொல்றாங்க. நாம புதுசா ஒரு கட்சி ஆரம்பிச்சு அதை வளர்க்கறது ரொம்ப கஷ்டம். குமரேசன் இவ்வளவு தூரம் இறங்கி வரப்ப, அவரோட யோசனையை நீங்க ப,ரிசீலிக்கலாமே!" என்றார் சங்கர் தயக்கத்துடன்.

"சங்கர்! தான் தலைமையிடத்துக்கு வரணுங்கறதுக்காக குமரேசன் எப்படி திட்டம் போட்டு என்னைக் கவிழ்த்தார்ங்கறது உங்களுக்குத் தெரியும், ஏன் உலகத்துக்கே தெரியும். ஆனா என்னை வெளியில தள்ளினதால கட்சியோட ஓட்டு வங்கி பிரிஞ்சுடுச்சுங்கறது இப்ப அவருக்குத் தெரிஞ்சு போச்சு. அதனாலதான் என்னை மறுபடி கட்சியில சேத்துக்கிட்டு, பெயரளவுக்குத் தலைவரா வச்சுக்கிட்டு, கட்சியில தான் அதிகாரம் செலுத்தலாம், ஓட்டு வங்கிக்கும் பாதிப்பு வராம இருக்குங்கறதுக்காக எங்கிட்ட ரொம்ப மதிப்பும் மரியாதையும் இருக்கற மாதிரி நடிக்கறாரு. ஒருவேளை அவர் அழைப்பை ஏத்துக்கிட்டு நான் மறுபடியும் கட்சியில சேர்ந்தா இதுக்கு முன்னாடி நடந்த அவமானத்தை விட மோசமான அவமானம் எனக்கு நடக்கும். எனக்கு அரசியல்ல எதிர்காலம் இல்லாம போனாலும் போகட்டும். ஆனா, குமரேசனோட போலிப்பணிவில நான் ஏமாறத் தயாராயில்ல!" என்றார் வையாபுரி உறுதியுடன்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 83
கூடா நட்பு

குறள் 827:
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.

பொருள்: 
வில் வளைவது தீமை செய்யவே, பகைவர் வணங்கிப் பேசும் சொற்களும் அத்தன்மையவே; அதனால் அவர்தம் சொற்களை ஏற்றுக் கொள்ள வேண்டா.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

637. பாராட்டு விழா!

ஆன்மீகச் சொற்பொழிவாளர் பாண்டுரங்கனுக்கு நடந்த பாராட்டு விழாவில் பலரும் அவரைப் பாராட்டிப் பேசினர். 

"புராணக் கதைகள் சொல்வதில் :வல்லமை பெற்ற பல சொற்பொழிவாளர்கள் இருக்கிறார்கள். எல்லோருமே அறிஞர்கள். பல நூல்களைப் படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள். ஆயினும் பாண்டுரங்கன் அவர்கள் தனக்கென்று ஒரு தனிப்பாணியை உருவாக்கித் தன் பணியைச் சிறப்பாகச் செய்து வருகிறார்."

"ஒருபுறம் பாண்டுரங்கன் அவர்களின் சொற்பொழிவை அறிஞர்களும், புலவர்களும் பாராட்டுகிறார்கள். அவருடைய கல்வியறிவு, சொல்வளம் ஆகியவற்றை வியக்கிறார்கள். மறுபுறம் சாதாரண மக்களும் அவர் பேச்சினால் ஈர்க்கப்படுகிறார்கள். இது மிகவும் அரிதான ஒரு விஷயம்."

"சௌத பௌராணிகர் என்பவர் புராணக் கதைகள் சொல்வதில் விற்பன்னர் என்றும் அவர் கூறும் கதைகளைக் கேட்பதில் பலரும் ஆர்வமாக இருப்பார்கள் என்றும் புராணங்களில் எழுதப்பட்டிருக்கின்றன. அந்த சௌத பௌராணிகருக்கு நிகரானவர் பண்டுரங்கன்."

இவையெல்லாம் பாண்டுரங்கனைப் புகழ்ந்து விழா மேடையில் பலரும் பேசியவை.

இறுதியாக, பாண்டுரங்கன் பாராட்டுகளுக்கு நன்றி தெரிவித்துப் பேசினார்.

"எந்த ஒரு  பாடம் குறித்தும் நூல்களைக் கற்று அந்தப் பாடத்தில் புலமை பெறுவது பலருக்கும் கைவரக் கூடியதுதான். கடினமாக உழைக்கும் எவராலும் அதைச் செய்ய முடியும். ஆனால் படித்தவற்றைக் கேட்பவர்கள் விரும்பும்படி கூறுவது என்பது ஒரு தனிக்கலை. இந்தக் கலையை எல்லோரும் அறிந்திருக்க மாட்டார்கள்."

தன்னைப் புகழ்து கொள்வது போல் பாண்டுரங்கன் பேசியது அனைவருக்கும் சற்று வியப்பாக இருந்தது. 'என்ன இவர் கொஞ்சம் கூட அடக்கம் இல்லாமல் தன்னைப் புகழ்ந்து கொள்கிறாரே!' என்று சிலர் நினைத்தனர்.

"ஆரம்பத்தில் அந்தக் கலையை நான் அறிந்திருக்கவில்லை!"

இப்போது அனைவரும் பாண்டுரங்கன் அடக்கம் இல்லாமல் பேசவில்லை என்பதை உணர்ந்து அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்க ஆவலுடன் இருந்தனர்.

"நான் பேசத் தொடங்கிய காலத்தில் என் பேச்சு பலரை ஈர்க்கவில்லை. ஒரு சிலர் மட்டுமே என் பேச்சில் இருந்த ஆழமான விஷயங்களைப் புரிந்து கொண்டு என்னைப் பாராட்டினர். பெரும்பாலோர் ஏதோ சொல்கிறர், ஆனால் சுவாரசியமாக எதுவும் இல்லை என்று நினைத்ததை என்னால் உணர முடிந்தது. 

"எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. எனக்கு நெருக்கமான ஒருவரிடம் இதைப் பற்றிக் கூறினேன். அவர் அதிகம் படித்தவர் இல்லை. ஆனால் புத்திசாலி.  அடுத்த முறை அவர் என் சொற்பொழிவுக்கு வந்தார். என் சொற்பொழிவைக் கேட்ட பிறகு, 'உங்கள் பேச்சில் விஷயம் இருக்கிறது, ஆனால் கேட்பவர்களுக்கு ஆர்வமூட்டும் விதத்தில் உங்கள் பேச்சு இல்லை!'  என்றார் அவர்.

"அதற்கு என்ன செய்வதென்று கேட்டேன். அவர் கொஞ்சம் யோசித்து விட்டு, "எப்போதோ ஒரு காலத்தில் எழுதப்பட்ட கதைகளை நீங்கள் சொல்கிறீர்கள். அவை தற்கால நிகழ்வுகளுக்குப் பொருத்தமாக இல்லையே! அதனால் நீங்கள் கதைகளைச் சொல்லும்போது அவற்றைத் தற்கால நிகழ்வுகளுடன் இணைத்துச் சொல்லுங்கள். உதாரணமாக ராமாயணக் கதையைச் சொல்லும்போது தற்காலத்தில் பெற்றோர் பேச்சை மதிக்காத பிள்ளைகள் பற்றிக் கூறி அதை ராமரின் பெற்றோர் பக்தியுடன் இணைத்துச் சொல்லுங்கள். லக்ஷ்மணர் தந்தையைக் கடுமையாகப் பேசியதைக் குறிப்பிட்டு, கோபத்தில் நல்ல பிள்ளைகள் கூடப் பெற்றோர்களை இகழ்ந்து பேசக் கூடும் என்று சுட்டிக் காட்டுங்கள். இப்படியெல்லாம் புராண நிகழ்வுகளைத் தற்கால உலக இயற்கையுடன் இணைத்துப் பேசினால் அது கேட்பவர்களுக்கு சவாரசியமாக இருக்கும்' என்றார்.

"என் அடுத்த சொற்பொழிவிலிருந்தே அவர் கூறிய யோசனைகளைச் செயல்படுத்தினேன். அதற்குப் பிறகு கதை கேட்ட மக்களிடம் ஏற்பட்ட உற்சாகத்தை என்னால் உணர முடிந்தது. எனவே நான் படித்து அறிந்தவற்றைப் போல அந்த அறிவுள்ள நபரிடம் நான் அறிந்து கொண்ட நடைமுறை அறிவும் என் பேச்சுக்கள் பலருக்கும் பிடித்தவையாக அமைந்ததறகுக் காரணம்."

ஒரு நிமிடம் தன் பேச்சை நிறுத்தி விட்டுத் தொடர்ந்தார் பாண்டுரங்கன் 

"இந்தப் பாராட்டு விழாவின்போது என் வெற்றிக்குக் காரணமான அந்த நபரை மேடைக்கு அழைத்து கௌரவிப்பதுதான் முறை. ஆனால் என்னால் அப்படிச் செய்ய முடியவில்லை."

பாண்டுரங்கன் மீண்டும் பேச்சை நிறுத்தினார். தன் மூக்குக் கண்ணாடியைக் கழற்றிக் கண்களைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டார்.

"உலக இயற்கையைப் புரிந்து கொண்டு செயல்பட  எனக்கு யோசனை கூறிய  அந்த நபர் இப்போது உயிருடன் இல்லை. என் மனைவி என்னை விட்டுப் பிரிந்து மூன்று ஆண்டுகள் ஆகி விட்டன!" என்றார் பாண்டுரங்கன் கம்மிய குரலில்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 64
அமைச்சு

குறள் 637:
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.

பொருள்:
நூலறிவால் செயலைச் செய்யும் வகைகளை அறிந்த போதிலும் உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செயல்பட வேண்டும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Tuesday, October 25, 2022

636. பொறுப்பு முதல்வர்

"முதலமைச்சர் வெளிநாடு போகறப்ப மூத்த அமைச்சர்களான நம்மை விட்டுட்டு அரசில் அனுபவம் இல்லாத சந்திரமூர்த்தியைப் பொறுப்பு முதல்வரா நியமிச்சிருக்காரே! அவரால சமாளிக்க முடியுமா?" என்றார் அமைச்சர் பாரிவள்ளல்.

"சந்திரமூர்த்தி படிச்சவர்தான். ஆனா அரசியலுக்குப் படிப்பா முக்கியம்? அரசியல் அறிவுங்கறது வேற, படிப்பறிவுங்கறது வேற. முதல்வருக்கு இது தெரியாம போயிடுச்சே!" என்றார் அமைச்சர் குழந்தைவேலு, வருத்தத்துடன்.

"முதலமைச்சர் திரும்பி வர மூணு வாரம் ஆகும். அதுக்குள்ள சந்திரமூர்த்திக்கு நம்மால முடிஞ்ச ஆளவுக்குக் குடைச்சல் கொடுத்து முதல்வர் திரும்பி வந்ததும் அவர் மேல கோபப்பட்டு அவர் சீட்டைக் கிழிக்க வைக்கறேன் பாருங்க!" என்று கறுவினார் பாரிவள்ளல்.

முதல்வர் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்ததும் கட்சியின் உயர்மட்டக் குழுவைக் கூட்டினார்.

"நான் வெளிநாடு போயிருந்தப்ப நீங்க எல்லாரும் ஆட்சியையும், கட்சியையும் சிறப்பாப் பாத்துக்கிட்டீங்க. அதுக்காக உங்க எல்லாருக்கும் என் நன்றி!" என்று ஆரம்பித்தார் முதல்வர்.

"சந்திரமூர்த்தி அரசியல் அனுபவம் அதிகம் இல்லாதவர்தான். ஆனா அவர் படிச்சவர்ங்கறதோட, சிறப்பா சிந்தித்துச் செயல்படக் கூடியவர் எனபதற்காகத்தான் அவரைப் பொறுப்பு முதல்வரா நியமிச்சேன். நான் எதிர்பார்த்தபடியே அவர் சிறப்பா செயல்பட்டிருக்காரு. சில அமைச்சர்கள் உட்பட கட்சியில சில பேர் செஞ்ச சதிகளை முறியடிச்சதோட, மத்தியில ஆள்கிற கட்சி நமக்கு எதிரா செஞ்ச சதிகளையும் கவனிச்சு அவங்க விரிச்ச வலையில விழாம எச்சரிக்கையா செயல்பட்டு ஆட்சியை சிறப்பா நடத்தி இருக்காரு. அவருக்கு என் பாராட்டுக்கள்!"

பாரிவள்ளல், குழந்தைவேலு இருவரும் அதிர்ச்சியுடன் முதல்வரைப் பார்க்க, முதல்வர் சிரித்துக் கொண்டே சந்திரமூர்த்தியைப் பார்த்தார்.

"ஐயா! நான் எதுவுமே செய்யல. பிரச்னைகள் வந்தப்ப நீங்க எப்படிச் செயல்படுவீங்கன்னு நினைச்சு செயல்பட்டேன். அவ்வளவுதான்!" என்றார் சுந்தரமூர்த்தி சங்கடத்துடன்.

"அதுதான் அன்றன்றைக்கு நடந்த விவரங்களையெல்லாம் டயரி எழுதற மாதிரி எழுதி நான் வந்தவுடனேயே எங்கிட்ட கொடுத்தீங்களே! அதைப் பார்த்து எல்லாம் தெரிஞ்சுக்கிட்டேன்" என்ற முதல்வர் ஒரு நிமிட மௌனத்துக்குப் பின், "இன்னொரு விஷயம்!" என்று கூறி விட்டுப் பாரிவள்ளலையும், குழந்தைவேலுவையும், பார்த்தார்.

"பாரிவள்ளல், குழந்தைவேலு ரெண்டு பேரும் செஞ்ச அற்புதமான காரியங்களுக்காக அவங்களுக்கு சிறப்புப் பரிசு கொடுக்கணும்னு நினைக்கறேன். அதனால அவங்க ரெண்டு பேருக்கும் ஓய்வு கொடுத்து அவங்களை அமைச்சர் பொறுப்பிலேந்து நீக்கறேன்!" என்றார் தொடர்ந்து.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 64
அமைச்சு

குறள் 636:
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை.

பொருள்:
நூலறிவுடன் இயற்கையான மதி நுட்பமும் உள்ளவர்களுக்கு முன்னால் எந்த சூழ்ச்சிதான் எதிர்த்து நிற்க முடியும்? 

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

826. நல்ல வாய்ப்பு?

"திருச்சியில நமக்கு ஒரு சப்சிடியரி கம்பெனி இருக்கு இல்ல? அதுக்கு ஜெனரல் மானேஜராப் போறீங்களான்னு ஜி. எம். எங்கிட்ட கேட்டாரு" என்றான் முரளி, தன் நண்பனும் சக ஊழியனுமான தனபாலிடம்.

"கருணாகரனா அப்படிச் சொன்னாரு? ஆச்சரியமா இருக்கே! டெபுடி ஜெனரால் மானேஜரா இருக்கற மூணு பேர்ல நீதான் சீனியர். உனக்கு இந்த வாய்ப்பு கொடுத்தது சரிதான். ஆனா நீ அவருக்கு அவ்வளவு நெருக்கமானவர் இல்லேன்னு நினைச்சேன்!" என்றான் தனபால்.

"ஆமாம். அவர் எங்கிட்ட தனிப்பட்ட முறையில நெருக்கமா இருந்ததில்லதான். டி ஜி எம்கள்ள முத்துவும், மனோகரும்தான் அவருக்கு நெருக்கமானவங்கன்னு நம்ம ஆஃபீஸ்ல எல்லாருக்குமே தெரியும். ஆனா இன்னிக்கு என்னோட வேலையைப் பத்தி ரொம்பப் புகழ்ந்து பேசினாரு. அவர் சொன்னதைப் பார்த்தா அவருக்கு எப்பவுமே என் பேர்ல ஒரு நல்ல அபிப்பிராயம் இருக்கறதாத் தெரிஞ்சுது. ஆனா அதை வெளிக்காட்டிக்கல. அவ்வளவுதான்!"

"நல்ல விஷயம்தான். சப்சிடியரிக்கு நீ ஜி எம்னாலும் இந்த ஜி எம் கிட்டதான் நீ ரிப்போர்ட் பண்ணணும். அது ஒரு சின்ன கம்பெனிதான். பத்து பேர்தான் வேலை பாக்கறாங்க. ஆனாலும் எலி வளைன்னாலும் தனி வளைங்கற மாதிரி, அங்கே நீதான் ராஜா! எப்படியும் இவரு இன்னும் பத்து வருஷத்துக்கப்பறம்தான் ரிடயர் ஆவாரு. அதுக்கப்பறம்தான் நீ ஜி எம் ஆக முடியும். ஆனா இப்பவே ஜி எம் ஆக உனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. போயிட்டு வா."

"இப்படி ஒரு திட்டம் வச்சிருப்பார்னு நான் எதிர்பார்க்கலடா!" என்றான் முரளி தனபாலிடம் தொலைபேசியில்.

"ஆமாம். சி  ஈ ஓ ஏதோ பிரச்னையில மாட்டி இருக்காரு, அதனால அவர் பதவி விலக வேண்டி இருக்கும், அந்த இடத்துக்கு அநேகமா தான்தான் வருவோம்னு கருணாகரனுக்குத் தெரிஞ்சிருக்கு. அப்படி அவர் சி ஈ ஓ ஆனதும், நீதான் அவர் இடத்துக்கு வந்திருப்ப. அதைத் தடுத்து அவரோட ஆளு முத்துவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கணுங்கறதுக்காக உனக்கு நல்லது செய்யற மாதிரி உன்னை சப்சிடியரி கம்பெனிக்கு பேக் பண்ணி அனுப்பிட்டாரு. இப்ப நீ இங்கே இல்லாததால சீனியாரிடியில உனக்கு அடுத்தபடியா இருக்கற முத்துவுக்கு அந்த வாய்ப்பை வாங்கிக் கொடுத்துட்டாரு. சீனியாரிடிப்படிஉனக்குத்தான் கொடுக்கணும்னு சேர்மன் சொன்னப்ப, அவரு இப்பதான் போயிருக்காரு, சப்சிடியரியை நல்லா பாத்துக்கறாரு அவரை இப்ப டிஸ்டர்ப் பண்ணினா சப்சிடியரியோட செயல்பாடு பாதிக்கப்படும்னு சொல்லி சேர்மனை இவரு சமாதானப்படுத்திட்டாருன்னு பேசிக்கறாங்க!" என்றான் தனபால்.

"அடப்பாவி! எனக்கு நல்லது செய்யற மாதிரி நடிச்சு, எனக்கு வர வேண்டிய நல்ல வாய்ப்பைக் கெடுத்துட்டாரே! எவ்வளவு மோசமானவரு இந்த ஆளு!" என்றான் முரளி ஆற்றாமையுடன்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 83
கூடா நட்பு

குறள் 826:
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்.

பொருள்: 
நண்பர்போல் நன்மையானவற்றைச் சொன்னபோதிலும் பகைமை கொண்டவர் சொல்லும் சொற்களின் உண்மைத் தன்மை விரைவில் உணரப்படும்.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Friday, October 21, 2022

825. ராஜாமணியின் நண்பன்!

ஒரு  பழைய பெரிய வீட்டைப் பல அறைகளாகப் பிரித்து, ஒவ்வொரு அறையிலும் இரண்டு பேர் தங்கும்படி அமைக்கப்பட்டிருந்த அந்த விடுதியில் பல்வேறு வயதினரும் தங்கி இருந்தனர். 

கமலா என்ற பெண்மணியால் நடத்தப்பட்டு வந்த அந்த விடுதியில் தங்கும் வசதியும், உணவு வசதியும் இருந்தன

விடுதியில் தங்கி இருந்தவர்களில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த ராஜாமணியும் ஒருவர். 

ராஜாமணி அந்த ஊருக்கு மாற்றப்பட்டபோது குழந்தைகளின் படிப்பு போன்ற காரணங்களால் அவரால் தன் குடும்பத்தினரை அழைத்து வர முடியவில்லை. அதனால் தான் மட்டும் தங்க அந்த விடுதியைத் தேர்யதெடுத்திருந்தார் அவர்.

விடுதியில் தங்கி இருந்த மற்றவர்களிடம் அவர் அவ்வப்போது உணவின் அளவு மற்றும் தரம் பற்றி ஏதாவது குறை சொல்லிக் கொண்டிருப்பார்.

மற்றவர்களில் பெரும்பாலோருக்கு இந்தக் குறைகள் இல்லை, குறைகள் இருந்ததாக நினைத்தவர்களும் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. ஆயினும் ராஜாமணி தங்களிடம் பேசும்போது மௌனமாகக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

ஒரு சிலர், "இங்கெல்லாம் கொஞ்சம் முன்னே பின்னேதான் சார் இருக்கும். நம் வீடு போல இருக்கும்னு எதிர்பார்க்க முடியுமா? உங்களுக்கு இது புது அனுபவமா இருக்கலாம். ஆனா  நாங்க இது மாதிரி பல விடுதிகளைப் பார்த்திருக்கோம், மற்ற விடுதிகளை விட இது எவ்வளவோ மேல்!" என்று பதில் கூறினர்.

ஆயினும் ராஜாமணி குறை கூறுவதை நிறுத்தவில்லை.

மணி என்று ஒரு இளைஞன் புதிதாக  வந்து சேர்ந்தான். அவன் ஒரு அரசாங்க ஊழியன். வந்ததிலிருந்தே அவன் ராஜாமணியிடம் மிக நெருக்கமாகப் பழக ஆரம்பித்து விட்டான். 

மணி இருந்தது மாடியில் வேறொரு அறை என்றாலும், கீழே இருந்த ராஜாமணியின் அறைக்கு வந்து அவரிடம் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பான். அவரும் மாடியில் மணியின் அறைக்குச் சென்று அவனிடம் பேசிக் கொண்டிருப்பான்.

"ஏம்ப்பா உனக்கு வயசு இருபத்தைஞ்சு, அவருக்கு ஐம்பது, எப்படி ரெண்டு பேரும் நண்பர்களா இருக்கீங்க?" என்று ராஜாமணியின் அறையில் இருந்த சங்கர் மணியிடம் கேட்டபோது, "நான் மணி, அவர் ராஜாமணி! மணிக்கு ராஜா அவர்! என் நண்பர், குரு, வழிகாட்டி எல்லாம் அவர்தான்!" என்று மணி சொன்னபோது ராஜாமணி பெருமை பொங்கச் சிரித்தார்.

ராஜாமணி விடுதி பற்றிக் கூறிய குறைகளை மணி முழுவதும் ஆமோதித்தான்.

"ஆமாம் சார்!  நீங்க சொல்றது சரிதான். எல்லாரும் சேர்ந்து இதைத் தட்டிக் கேக்கணும். ஆனா மத்தவங்க முன்வர மாட்டாங்க. நாம ரெண்டு பேரும் மட்டும் கேட்டா நமக்குத்தான் கெட்ட பேர் வரும்!" என்றான் மணி.

"நீ சொல்றது சரிதான்!" என்றார் ராஜாமணி.

மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒருநாள், மணி ராஜாமணியிடம், "சார்! ஒரு குட் நியூஸ்! எனக்கு அரசாங்கத்தில குவார்ட்டர்ஸ்  கொடுத்திருக்காங்க. அடுத்த மாசம் அங்கே போயிடுவேன்!" என்றான்.

ராஜாமணி ஏமாற்றத்துடன், "நீ ஒத்தன்தான் எனக்கு நண்பனா இருக்கே! நீயும் போயிட்டேன்னா நான் ரொம்ப தனியாயிடுவேன்!" என்றார் வருத்தத்துடன்,

ஒரு நிமிடம் யோசித்த மணி, "சார்! ஒரு யோசனை. என் அப்பா அம்மா  அடுத்த வருஷம்தான் என்னோட வந்து இருப்பேன்னு சொல்லிட்டாங்க. அதனால இப்போதைக்கு வீட்டில நான் மட்டும்தான் இருப்பேன். நீங்களும் என்னோட வந்து தங்கிக்கலாம்!" என்றான்.

"உண்மையாவா சொல்ற? ஒரு வருஷத்தில எனக்கு மாற்றல் கிடைச்சுடும். அதனால உங்க அப்பா அம்மா வரதுக்குள்ள நான் போயிடுவேன். ஆனா, இதெல்லாம் சரியா வருமா?" என்றார் ராஜாமணி நம்பிக்கை இல்லாமல்.

"ஏன் சரியா வராது?  உங்களுக்குத் தெரியுமே, கவர்ன்மென்ட் குவார்ட்டர்ஸ் எல்லாம் பெரிசா வசதியா இருக்குமே! நான் மட்டும் தனியா இருக்கறதுக்கு பதிலா நீங்களும் வந்து என்னோட இருந்தீங்கன்னா எனக்கும் கம்பெனி கிடைச்ச மாதிரி இருக்கும். நாம சமையல் செஞ்சு சாப்பிட்டுக்கலாம்!"

"நான் ஜோரா சமைப்பேன். இந்த விடுதியில போடற  உப்புச் சப்பில்லாத சாப்பாட்டை சாப்பிடறதுக்கு பதிலா நாம வாய்க்கு ருசியா சமைச்சு சாப்பிடலாம்!" என்றார் ராஜாமணி உற்சாகத்துடன்.

"ஆனா ஒரு கண்டிஷன் சார்!  நீங்க வாடகை எதுவும் கொடுக்கறேன்னு சொல்லக் கூடாது!" என்றான் மணி.

ணி ஒரு தேதி குறிப்பிட்டு, அந்தத் தேதியில்  தன் குவாரட்டர்ஸுக்குப் போகலாம் என்று அறிவித்தான்.  அந்தத் தேதியில் தாங்கள் விடுதியைக் காலி செய்வதாக இருவருமே விடுதி உரிமையாளர் கமலாவிடம் தெரிவித்தனர்.

"சந்தோஷமாப் போயிட்டு வாங்க. நான் போடற உப்புச் சப்பில்லாத சாப்பாட்டை இனிமே நீங்க சாப்பிட வேண்டாம்!" என்றாள் கமலா சிரிப்புடன்.

தான் கூறியது எப்படியோ கமலாவின் காதுக்கு எட்டி விட்டது என்பதைப் புரிந்து கொண்ட ராஜாமணி, தான் விடுதியை விட்டுப் போக்ப் போகிறோமே என்ற எண்ணத்தில் கமலாவின் பேச்சைப் பொருட்படுத்தவில்லை.

மணி குறிப்பிட்ட தேதிக்கு முதல் நாளே விடுதியைக் காலி செய்து விட்டான். குவார்ட்டர்ஸின் சாவியை வாஙுகிக் கொண்டு வருதல், வீட்டைச் சுத்தம் செய்தல் போன்ற வேலைகளை முடித்து விட்டு  அடுத்த நாள் பிற்பகல் 2 மணிக்கு டாக்ஸியுடன் வருவதாக ராஜாமணியிடம் சொல்லி விட்டுப் போனான்.

அடுத்த நாள் பிற்பகல் 1 மணிக்கே ராஜாமணி பெட்டி, படுக்கையுடன் தயாராக விடுதியின் முகப்பில் வந்து அமர்ந்து விட்டார்.

ஆனால் மணி வரவில்லை. 

அன்று விடுமுறை என்பதால் மணியின் அலுவலகத்துக்கு ஃபோன் செய்ய முடியாது. அத்துடன் அவன் அலுவலகத் தொலைபேசி எண்ணை ராஜாமணி வாங்கி வைத்துக் கொள்ளவும் இல்லை. அவன் அலுவலகத்தின் பெயர்தான் தெரியுமே தவிர, அதன் முகவரி கூட அவருக்குத் தெரியாது.

ஐந்து மணி வரை காத்திருந்தவர், அதற்குப் பிறகு கமலாவிடம் சென்று, "என்னை மன்னிச்சுடுங்க. மணி பேச்சை நம்பி நான் ஏமாந்துட்டேன். நான் தொடர்ந்து இங்கேயே தங்கிக்கறேன்!" என்றார் அழாக்குறையாக.

கமலா மௌனமாகத் தலையாட்டியதும் அவர் தன் அறைக்குச் சென்றார்.

"நான் நாளைக்கு அவன் ஆஃபீசுக்குப் போய் விசாரிச்சுட்டு வரேன் சார்!" என்றான் ராஜாமணியின் அறையில் தங்கி இருந்த சங்கர்.

அடுத்த நாள் மாலை அலுலகம் முடிந்து விடுதிக்கு வந்த சங்கர், "சார்! நான் மணியை அவன் ஆஃபீஸ்ல போய்ப் பார்த்தேன். அவனுக்குக் கிடைச்சிருக்கறது பேச்சிலர் அகாமடேஷன். அதுவும் அவன் இன்னொத்தரோட ஒரே அறையில தங்கணும். கிச்சன் எல்லாம் கிடையாது. முதல்ல பெருமைக்காக உங்க்கிட்ட தனி வீடுன்னு சொல்லி இருக்கான். நீங்களும் அங்கே தங்கலாம்னு விளையாட்டா சொல்லி இருக்கான். ஆனா அதை நீங்க அதை நம்பிட்டீங்கன்னு தெரிஞ்சப்பறமும் அவன் உங்ககிட்ட உண்மையைச் சொல்லல. உங்களை ஏமாத்தினதைப் பத்தி அவன் வருத்தம் கூடப் படல. ஏதோ விளையாட்டு மாதிரி சொல்லிச் சிரிக்கிறான்!" என்றான் சங்கர்.

"ஏதோ ஒப்புக்குப் பழகினவனை எங்க வயசு வித்தியாசத்தைப் பத்தி எல்லாம் கூட யோசிக்காம உண்மையான நண்பனா நினைச்சு அவன் சொன்னதை நம்பினேனே என் முட்டாள்தனத்தைச் சொல்லணும்!" என்றார் ராஜாமணி..

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 83
கூடா நட்பு

குறள் 825:
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று.

பொருள்: 
மனத்தால் தம்மோடு பொருந்தாமல் பழகுகின்றவரை அவர் கூறுகின்ற சொல்லைக் கொண்டு எத்தகைய ஒரு செயலிலும் நம்பித் தெளியக் கூடாது.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

635. அந்தரங்க உதவியாளர்

"அண்ணன் மத்திய அமைச்சர் ஆயிட்டாரு. இது அவருக்குப் புதுப் பொறுப்பு. எப்படிச் சமாளிக்கப் போறாரோ தெரியல!"

"ஆமாம். மாநில அமைச்சரா இருக்கறது  அங்கே என்ன வேலை செய்யறதுன்னு புரிஞ்சுக்கறதே கஷ்டம். அங்கே உள்ள அதிகாரிகள் வேற மாதிரி இருப்பாங்க. அவங்களை சமாளிக்கணும். அண்ணனுக்கு ஆங்கிலம் தெரியும்னாலும் டில்லியில அமைச்சரா இருக்கறது அவருக்குப் பெரிய சவாலா இருக்கும்." 

"அதனாலதான் ஒரு நல்ல உதவியாளரை வச்சுக்கப் போறாராம்?"

"'யாரை வச்சுக்கப் போறாரு?"

"தன் அந்தரங்க உதவியாளர் மூலமாதான் மத்திய அரசு அதிகாரிகள், மற்ற அமைச்சர்களோட  இணைந்து அவரால இணைஞ்சு பணியாற்ற முடியும்.  நம்ம கட்சியில இருக்கற ஒரு படிச்ச அறிவுள்ள ஆளை வச்சுப்பாருன்னு நினைக்கிறேன்!"

"அப்ப உனக்கோ, எனக்கோ வாய்ப்பில்லேன்னு சொல்லு!" 

கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் இருவர் இவ்வாறு பேசிக் கொண்டனர்.

"என்ன ஆறுமுகம், மத்திய அமைச்சரா ஆயிட்டீங்க. உங்களுக்கு உதவியாளரா வரதுக்குக் கட்சிக்குள்ள நிறையப் போட்டி இருக்கு போலருக்கே!" என்றார் கட்சித் தலைவர் சபாபதி.

"ஆமாங்க. அது விஷயமாத்தான் உங்ககிட்ட பேச வந்தேன். நான் ஒத்தரைத் தேர்ந்தெடுத்திருக்கேன். அதுக்கு நீங்க ஒப்ப்தல்  கொடுக்கணும்!" என்றார் ஆறுமுகம்.

"சொல்லுங்க!" என்றார் சபாபதி.

ஆறுமுகம் சொன்ன பெயரைக் கேட்டதும் "குணசீலனா? சின்னப் பையனாச்சே அவன்! மேடையில நல்லா பேசறாங்கறதால அவனை செய்தித் தொடர்பாளராப் போட்டேன். அவனும் தொலைக்காட்சி விவாதங்கள்ள நல்லாவே பேசறான். ஆனா அந்தரங்கச் செயலர் பதவிக்கு அவன் சரியா இருப்பானா? மூத்த தலைவர்கள் எல்லாம் இந்த வாய்ப்பு தனக்குக் கிடைக்காதான்னு காத்துக்கிட்டிருக்காங்க. எங்கிட்ட சில பேரு சிபாரிசுக்குக் கூட வந்தாங்க. ஆனா நான் ஆறுமுகம்தான் முடிவு செய்வாரு, நான் யாரையும் பரிந்துரைக்க மாட்டேன்னு சொல்லிட்டேன். ஆனா இப்படி அனுபவம் இல்லாத ஒரு சின்னப் பையனைப் போடறீங்கறீங்களே!"

"ஐயா! முதல் தடவையா நம்ம கட்சிக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைச்சிருக்கு. என் மேல நம்பிக்கை வச்சு அதை நீங்க எனக்குக் கொடுத்திருக்கீங்க. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சிறப்பா செயல்பட்டு நம்ம கட்சிக்கு இந்திய அளவில ஒரு நல்ல பேர் வாங்கிக் கொடுக்கணும்னு நினைக்கிறேன்.

"குணசீலன் படிச்சவர்.நேர்மையானவர். தொலைக்காட்சி விவாதங்கள்ள அவர் நியாமாப் பேசறதை எல்லாரும் பாராட்டறாங்க. நம் கட்சியை ஆதரிச்சுப் பேசறப்ப, அவர் உண்மைகளையும், நியாயங்களையும் மட்டும்தான் எடுத்து வைப்பாரு. மற்றவர்களை வசை பாட மாட்டாரு. சிந்திச்சு, அளவா, பொருத்தமாப் பேசுவாரு. 

"அதோட இல்லாம கட்சியில அவருக்கு அவ்வப்போது நீங்க கொடுத்த சின்னப் பொறுப்புகளை ரொம்பத் திறமையா நிறைவேற்றி இருக்காரு. அவரை உதவியாளரா வச்சுக்கிட்டா, அவர் ஒரு நல்ல ஆலோசகராவும் இருப்பாரு. அதனாலதான் அவரைத் தேர்ந்தெடுத்தேன்."

ஆறுமுகம் சபாபதியைப் பார்த்தார்.

"கட்சியில இது கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தும். மூத்த தலைவர்கள் எல்லாம் கொஞ்சம் அதிருப்தி அடைவாங்க. ஆனா நீங்க யோசிச்சு சரியான முடிவு எடுத்திருக்கும்போது, உங்க முடிவை ஆதரிக்க வேண்டியது என் கடமை. வாழ்த்துக்கள்!" என்றார் கட்சித் தலைவர் சபாபதி.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 64
அமைச்சு

குறள் 635:
அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை.

பொருள்:
அறத்தை அறிந்து, கல்வியால் நிறைந்து, அடக்கமான சொல்லை உடையவராய், எப்போதும் செயலாற்றும் முறைகளைத் தெரிந்தவரே கலந்து முடிவு எடுப்பதற்கு ஏற்ற துணையாவார்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Sunday, October 16, 2022

824. தீபாவளிப் பரிசு!

அழைப்பு மணி அடித்தது. 

சாமிநாதன் வாயிற்கதவைத் திறந்தபோது, சோமு கையில் ஒரு பெரிய பார்சலுடன் நின்று கொண்டிருந்தான்.

"அடேடே! வாங்க சோமு!" என்று வரவேற்றான் சாமிநாதன்.

"தீபாவளி வாழ்த்துக்கள்!" என்றுபடியே கையில் இருந்த பார்சலை சாமிநாதனிடம் நீட்டினான் சோமு.

"என்ன இது?" என்றான் சாமிநாதன் பார்சலை வாங்காமல்.

":என் நண்பர்களுக்கு சின்னதா தீபாவளிப் பரிசு கொடுக்கறது என்னோட வழக்கம் - இனிப்புகள், குழந்தைகளுக்கு பட்டாஸ் இது மாதிரி" என்ற சோமு, சாமிநாதனின் மனைவி தேவியைப் பார்த்து, "நீங்க வாங்கிக்கங்க. உங்க கையில கொடுத்தா மகாலட்சுமிக்கு நைவேத்தியம் செய்யற மாதிரி!" என்றான்.

தேவி சாமிநாதனைப் பார்த்து விட்டு, தயக்கத்துடன் பார்சலை வாங்கிக் கொண்டாள்.

சோமு சென்ற பிறகு பார்சலைத் திறந்து பார்த்த தேவி, "என்னங்க இது? இனிப்பு, பட்டாசுன்னு சொன்னாரு. ஆனா உங்களுக்கு பேண்ட், சட்டை, எனக்குப் புடவை...ஐயோ பட்டுப்புடவை மாதிரியில்ல இருக்கு!" என்றாள்.

சாமிநாதன் பதட்டத்துடன் பார்சலை அவள் கையிலிருந்து அவசரமாக வாங்கியபோது, அதிலிருந்து ஒரு கவர் விழுந்தது. பிரித்துப் பார்த்தான். 2000  ரூபாய் நோட்டுக்கள்! மொத்தம் ஐம்பந்தாயிரம் ரூபாய் இருந்தது.

"எதுக்குங்க இவ்வளவு பணம்?" என்றாள் தேவி குழப்பத்துடன்.

"தெரியலியே!" என்றான் சாமிநாதன் யோசித்தபடி.

சோமு சாமிநாதனுக்கு அறிமுகமானது சமீபத்தில்தான். ஆயினும், அவன் வீட்டுக்கு அடிக்கடி வருவது, அவனிடம் பல விஷயங்கள் பற்றி நீண்ட நேரம் பேசுவது என்று  சாமிநாதனிடம் மிக நெருக்கமாகப் பழகினான் அவன். 

சாமிநாதனுக்கே சில சமயம் இந்த நெருக்கம் சற்று அதிகமாகத் தோன்றி இருக்கிறது. ஆனால் சோமுவின் இனிமையான குணமும், பழகும் தன்மையும் அவனுக்குப் பிடித்திருந்தன.

ஆனால் இப்போது தீபாவளிப் பரிசு என்று பேண்ட், சட்டை,  பட்டுப் புடவை, பணம் என்றெல்லாம் கொடுத்திருப்பது...

"இப்பவே அவன் வீட்டுக்குப் போய் இதைத் திருப்பிக் கொடுத்துட்டு வரேன்!" என்ற சாமிநாதன், பணம் இருந்த கவர் உட்பட எல்லாவற்றையும் பார்சலுக்குள் வைத்து மூடி, டேப் வைத்து ஒட்டி எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

சாமிநாதன் திரும்பி வந்ததும், "என்ன சொன்னார் உங்க நண்பர்?" என்றாள் தேவி.

"என்ன சொல்லுவான்? முதல்ல மழுப்பினான். அப்புறம் உண்மையைச் சொல்லிட்டான். மசாலாதான் காரணம்!" என்றான் சாமிநாதன் 

"என்னது மசாலாவா?"

"மசாலாப் பொடி தயாரிக்கிற நிறுவனத்தில நான் வேலை செய்யறதுதான் சோமு என்கிட்ட நட்பு பாராட்டினதுக்குக் காரணம்! அவனோட உறவினர் ஒத்தர் மசாலாப் பொடி தயாரிக்கிற தொழில் ஆரம்பிக்கப் போறாராம். அதுக்கு நான் என் கம்பெனி மசாலாப் பொடியோட ஃபார்முலாவைக் கொடுக்கணுமாம். அதுக்கு அட்வான்ஸ்தான் அம்பதாயிரம் ரூபா, பேண்ட் சட்டை, பட்டுப் புடவை எல்லாம்!" என்றான் சாமிநாதன் ஆத்திரத்துடன்.

"அடப்பாவி! இப்படியெல்லாம் திட்டம் போட்டு நட்பு வச்சுப்பாங்களா என்ன?" என்றாள் தேவி திகைப்புடன். 

அப்போது தொலைக்காட்சியில் ஒலித்த பாடலை கவனித்தான் சாமிநாதன்.

"கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்

வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்."

அருமையான பாட்டு!" என்றான் சாமிநாதன்.

"உங்களுக்கு இந்தப் பாட்டு பிடிக்காதே! இந்திப் பாட்டோட காப்பின்னு திட்டுவீங்களே!" என்றாள் தேவி,

"பாட்டோட வரிகள்ள எவ்வளவுள உண்மை இருக்குன்னு இப்பத்தான் புரியுது!"

தொலைக்காட்சியின் ஒலி அளவை அதிகமாக்கினான் சாமிநாதன்.

"நஞ்சை நெஞ்சிலே மறைத்திருக்கும்

நம்பும் நல்லவர் குடி கெடுக்கும்!"

பாடல் தொடர்ந்துஒ லித்துக் கொண்டிருந்தது.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 83
கூடா நட்பு

குறள் 824:
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.

பொருள்: 
முகத்தளவில் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்பு கொள்வதற்கு அஞ்ச வேண்டும்.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

634. நிதி அமைச்சர்

மக்கள் நல்வாழ்வுக் கட்சி (ம..ந.க.) ஆட்சிக்கு வந்ததும், நிதி அமைச்சராக நியமிக்கப்படப் போவது யார் என்பதில் ஊடகங்கள், அரசியல விமரிசகர்கள், பொருளாதார நிபுணர்கள், பொதுமக்கள் என்று அனைவருமே ஆர்வம் காட்டினர். ஆளும் கட்சியில் மூத்த தலைவர்கள் சிலரின் பெயர்கள் ஊகித்துச் சொல்லப்பட்டன.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் பராங்குசம் என்ற ஒரு ஓய்வு பெற்ற பேராசிரியரை நிதி அமைச்சராக நியமித்தார் முதலமைச்சர் மாணிக்கம்..

கட்சியின் மூத்த தலைவர்களிடையே இது அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், முதல்வரிடம் இது பற்றிப் பேச அஞ்சி அவர்கள் மௌனமாக இருந்தனர்.

ம.ந.க. ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகி விட்டன. 

ம.ந.க வின் செயற்குழு கூட்டத்தைக் கூட்டினார் கட்சியின் தலைவரும் முதல்வருமான மாணிக்கம். கூட்டத்துக்கு நிதி அமைச்சர் பராங்குசம் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார்.

முதலமைச்சர் பேசினார்:

"நம்ம கட்சியில உறுப்பினரா இல்லாத ஒரு பொருளாதார நிபுணரை நிதி அமைச்சரா நியமிச்சது உங்களுக்கெல்லாம் வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் இருந்திருக்கும். 

"இதுக்கு முன்னால ஆட்சியில இருந்தவங்க பொருளாதாரத்தை எந்த அளவுக்கு சீரழிச்சிருக்காங்கன்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். அதனால நிலைமையைச் சரி செய்ய ஒரு நிபுணர் தேவை, அதோட எதையும் அரசியல் கண்ணோட்டத்தில பாக்காம, பொருளாதாரக் கண்ணோட்டத்தில பாத்தாதான் நிலைமையைச் சீர் செய்ய முடியும். 

"நம் கட்சியைச் சேர்ந்த யார் நிதி அமைச்சரா இருந்தாலும் அவங்களால அரசியல் கண்ணோட்டம் இல்லாம நிதி சம்பந்தமான முடிவுகளை எடுக்க முடியாது. அதனாலதான் அரசியலில் இல்லாத பொருளாதார நிபுணர் பராங்குசம் அவர்களை நிதி அமைச்சராத் தேர்வு செஞ்சேன். 

"இந்த ஆறு மாசத்தில அவர் பல முடிவுகளை எடுத்துச் செயல்படுத்தி இருக்கார். அதில சில விஷயங்கள் உங்களுக்குப் பிடிக்காம இருக்கலாம். உங்க சந்தேகங்களை நீங்களே அவர்கிட்ட கேக்கலாம்!" 

"ஐயா! நாம பதவிக்கு வந்தவுடனேயே பல வரிகளை உயர்த்தி இருக்கோம். இதனால மக்களுக்கு நம்ம மேல அதிருப்தி இருக்கு!" என்றார் ஒரு மூத்த தலைவர்.

"அதோட நாம அறிவிச்ச பல திட்டங்களை இன்னும் நிறைவேத்தல. தொலைக்காட்சி விவாதங்கள்ள நம்ம கட்சி செய்தித் தொடர்பாளர்கள் இதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாம தவிக்கறாங்க. ஏன் நாங்களே தொகுதிக்குப் போகறப்ப, மக்கள் எங்ககிட்ட கேக்கற கேள்விக்கு எங்களால பதில் சொல்ல முடியல!" என்றார் இன்னொரு மூத்த தலைவர்.

"உங்க கேள்விகளுக்கெல்லாம் இப்ப நிதி அமைச்சர் பதில் சொல்வார்!" என்றார் முதல்வர் சிரித்தபடி.

பராங்குசம் சற்றுத் தயங்கி விட்டு, "எனக்கு இந்தப் பொறுப்பைக் கொடுக்கறப்ப, உங்க குடும்பத்துக்கு இப்படி ஒரு நிலைமை இருந்தா அதை எப்படிச் சரி செய்வீங்களோ, அது மாதிரி இந்த மாநிலத்தோட நிலைமையையும் சரி செய்யணும்னு முதல்வர் எங்கிட்ட சொன்னாரு. நிலைமையை ஆராய்ந்து பாத்துட்டு, 'ஐயா! வருவாய்ப் பற்றாக்குறை ரொம்ப அதிகமா இருக்கு. அதனால கடன் அதிகமாகி, அதுக்கான வட்டியால வருவாய்ப் பற்றாக்குறை இன்னும் அதிகமாகிக்கிட்டிருக்கு. இதைச் சரி செய்யணும்னா ஒரு பக்கம் வருமானத்தைப் பெருக்கணும், இன்னொரு பக்கம் சில செலவுகளைக் குறைக்கணும். வருவாய்ப் பற்றாக்குறையை பூஜ்யத்துக்குக் கொண்டு வந்தப்பறம்தான் புதிய திட்டங்களை எடுத்துக்க முடியும்னு சொன்னேன். நான் சொன்னதை முதல்வர் ஏத்துக்கிட்டாரு. அதன்படி சில நடவடிக்கைகளை எடுத்திருக்கேன். அவ்வளவுதான்!" என்றார்.

"நீங்க சுலபமா சொல்லிட்டீங்க. மக்களுக்கு இதெல்லாம் புரியுமா? இதை எப்படி அவங்களுக்குப் புரிய வைக்க முடியும்?" என்றார் ஒரு அமைச்சர்.

பராங்குசம் பதில் சொல்ல யத்தனித்தபோது, முதல்வர் அவரைக் கையமர்த்தி விட்டு, நமக்கு  மக்கள் அஞ்சு வருஷம்  ஆட்சிக்காலத்தைக் கொடுத்திருக்காங்க. முதல் ரெண்டு வருஷம் மக்களுக்கு அதிருப்தி ஏற்படலாம். இடைத்தேர்தல்கள்ள நாம தோல்விகளைச் சந்திக்கலாம். நாம அடுத்த தேர்தல்ல தோத்துடுவோம்னு ஊடகங்கள் பேசலாம். ஆனா இரண்டு வருஷம் நாம் கடுமையாச் செயல்பட்டா, அதன் பலன் கடைசி ரெண்டு மூணு வருஷங்கள்ள தெரிய வரும். அதற்கப்புறம் நாம செய்யறதாச் சொன்ன நலத்திட்டங்களைச செயல்படுத்தலாம், முன்னேற்றங்களைப் பாத்துட்டு மக்கள் நாம செய்யறதைப் புரிஞ்சுக்கிட்டு நமக்கு ஆதரவு கொடுப்பாங்க. நம்ம நிதி அமைச்சர் சொன்ன விஷயங்கள் நம் எல்லாருக்கும் தெரிஞ்சதுதுதான். ஆனா அவருக்கு அரசியல் கண்ணோட்டம் இல்லாததால, பொருளாதார நிலையை மட்டுமே பாத்து, என்ன செய்யணும், அதை எப்படிச் செய்யணும்னு சிந்திச்சு, தன்னோட கருத்துக்களை துணிவா எங்கிட்ட சொன்னாரு. நானும் அவற்றை ஏற்றுக்கிட்டு அவரை சுதந்திரமாச் செயல்பட விட்டேன்" என்றார்.

அனைவரும் மௌனமாக இருந்தனர்.

"நிதி நிலைமை மோசமா இருக்குங்கறதை மக்களுக்குப் புரிய வைக்க நாம இன்னொரு காரியம் செய்யணும். நம் சம்பளத்தைப் பாதியாக் குறைச்சுக்கணும். இதனால பெரிய சேமிப்பு ஒண்ணும் கிடைச்சுடாது. ஆனா மக்களுக்கு இது ஒரு நல்ல சிக்னலா இருக்கும்" என்ற முதல்வர், "இந்த யோசனையையும் சொன்னவர் நிதி அமைச்சர்தான்!" என்று பராங்குசத்தைப் பார்த்துச் சிரித்தார்.   

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 64
அமைச்சு

குறள் 634:
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு.

பொருள்:
(செய்யத்தக்க செயலை) ஆராய்தல், அதற்குரிய வழிகளை ஆராய்ந்து செய்தல், துணிவாகக் கருத்தைச் சொல்லுதல் இவற்றில் வல்லவன் அமைச்சன்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Friday, October 14, 2022

823. கற்றறிந்த நண்பர்

ஒரு இலக்கியக் கூட்டத்தில் அருகருகில் அமர்ந்திருந்தபோதுதான் தேவராஜன் எனக்கு அறிமுகமானார்.

அந்தக் கூட்டத்தில் பேசிய ஒருவர் ஒரு தவறான விஷயத்தைக் குறிப்பிட்டதை கவனித்தேன். எனக்கு அறிமுகமில்லாத தேவராஜன் என்னைப் பார்த்துச் சிரித்தபடி, "தப்பா சொல்றாரு சார்!" என்றார்.

"ஆமாம். நானும் கவனிச்சேன்!" என்று நான் சொன்னதும் என்னைச் சற்று மதிப்புடனும், வியப்புடனும் பார்த்தார்  அவர்.

கூட்டம் முடிந்ததும் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக் கொண்டோம்.

அதற்குப் பிறகு சில நிகழ்ச்சிகளில் சந்திக்க வாய்ப்புக் கிடைத்ததும் எங்களுக்குள் ஒரு நெருக்கம் ஏற்பட்டது. 

தேவராஜன் நிறையப் புத்தகங்கள் படித்திருக்கிறார் என்றும், நல்ல சிந்தனையாளர் என்றும் அறிந்து கொண்டதும் அவர் மீது எனக்கு அதிக மதிப்பு ஏற்பட்டது.

ஆயினும் பொது நிகழ்ச்சிகளில் சந்திப்பதைத் தாண்டி எங்கள் நெருக்கம் வளரவில்லை. 

எங்கள் இருவர் வீட்டிலும் தொலைபேசி இல்லை என்பதால் தொலைபேசியில் பேசிக் கொள்ளும் வாய்ப்பும் இல்லை.

சில வருடங்களில் தேவராஜனே ஒரு பிரபல பேச்சாளராகி விட்டார். துவக்கத்தில் ஓரிரு நிகழ்ச்சிகளில் பேச அழைக்கப்பட்டவர் விரைவிலேயே அதிகம் அழைக்கப்பட்டும் ஒரு பேச்சாளராக ஆகி விட்டார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேச வாய்ப்புக் கிடைத்ததும் அவர் மிகவும் பிரபலமாகி விட்டார்.

நிகழ்ச்சிகளில் என்னைப் பார்த்தால் ஓரிரு நிமிடங்களாவது என்னிடம் பேசாமல் இருக்க மாட்டார். பிரபலமான பிறகும் பழைய நட்பை மறக்காமல் இருக்கிறாரே என்று நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன்.

ருமுறை என்னை ஒரு நிகழ்ச்சியில் பார்த்தபோது, என்னிடம் வந்து. "நல்லவேளை. உங்களைப் பார்த்தேன். உங்க தொலைபேசி எண் கூட என்னிடம் இல்லை!" என்றார்.

"என்ன சார் விஷயம்?" என்றேன்.

"அடுத்த வாரம் ஒரு பட்டிமன்றம் இருக்கு. அதில புதுசா சில பேருக்கு வாய்ப்புக் கொடுக்க விரும்பறாங்க. நீங்க பேசறீங்களா?" என்றார்.

"சார்! எனக்கு இது மாதிரியெல்லாம் பேசிப் பழக்கமில்லையே!" என்றேன்.

"பரவாயில்லை. முயற்சி செஞ்சு பாருங்க. நீங்கதான் நிறையப் படிக்கறவராச்சே! நல்லா பேசினீங்கன்னா தொடர்ந்து வாய்ப்புக் கிடைக்கும்" என்றார் தேவராஜன்.

அவர் தலைப்பைக் கூறியதும், முயன்று பார்க்கலாம் என்று தோன்றியது அதனால் ஒப்புக் கொண்டேன்..

"நீங்கதான் நடுவரா?" என்றேன்.

"இல்லை. நானும் பேச்சாளன்தான். உங்க எதிரணியில பேசப் போறேன்!" என்றார் தேவராஜன் சிரித்துக் கொண்டே.

ட்டிமன்றத்துக்குப் பேச நான் தயார் செய்து கொண்டு போனேன். ஆனால் என் முறை வந்தபோது, நான் தயார் செய்ததைப் பேசாமல், எனக்கு முன்னால் எதிரணியில் பேசியவர்களின் கருத்தை மறுத்துப்  பேசினேன்.

தயார் செய்ததைப் பேசாமல் இயல்பாகப் பேசியதாலோ என்னவோ, என் பேச்சு நன்றாக அமைந்து விட்டது. துவக்கத்திலிருந்தே என் கருத்துக்களுக்குப் பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்ததால் இன்னும் அதிக உற்சாகத்துடன பேசினேன்.

நான்தான் கடைசிப் பேச்சாளன் என்பதால்  எதிரணியில் பேசிய அனைவரின் கருத்துக்களையும் மறுத்துப் பேசும் வாய்ப்பு எனக்கு இயல்பாகவே அமைந்து விட்டது. 

குறிப்பாக, தேவராஜனின் கருத்துக்களுக்கு நான் பதிலளித்தபோது, பார்வையாளர்களிடம் அதிக வரவேற்பும் கைதட்டல்களும் கிடைத்தன. தேவராஜன் போன்ற பெரிய பேச்சாளரின் பேச்சையே மறுதளித்துப் பேசினேன் என்பதால் இருக்கலாம்!

நிகழ்ச்சி முடிந்ததும் பட்டிமன்றத் தலைவரும் மற்ற பேச்சாளர்களும் என்னைப் பாராட்டினர். பார்வையாளர்களிலும் பலர் மேடைக்கு வந்து என்னைப் பாராட்டினர்.

தேவராஜன் எதுவும் சொல்லவில்லையே என்று அப்போதுதான் நினைவு வந்தது. அவரிடம் போய், "என் கன்னிப்பேச்சு எப்படி சார் இருந்தது?" என்றேன்.

அவர் தலையை நிமிர்த்தி என்னைப் பார்த்தபோது பார்வையாலேயே எரித்து விடுவது போல் இருந்தது.

"என்ன, கிண்டல் பண்றீங்களா? பழகினவராச்சேன்னு வாய்ப்புக் கொடுத்தா, தீட்டின மரத்திலேயே கூர் பாத்துட்டீங்களே!" என்றர் கோபத்துடன்.

"பட்டிமன்றத்தில பேசறதெல்லாம் ஒரு விளையாட்டு மாதிரிதானே சார்?" என்றேன் நான் அதிர்ச்சியுடன்.

"எந்த நிகழ்ச்சியிலும், எத்தனை பேர் பேசினாலும் என் பேச்சைத்தான் அதிகம் பாராட்டுவாங்க. இன்னிக்கு ஒத்தன் கூட எங்கிட்ட வந்து நீங்க நல்லாப் பேசினாங்கன்னு சொல்லலே!" என்று சொல்லி விட்டு அங்கிருந்து எழுந்து சென்றார்.

அதற்குப் பிறகு அவரை நான் சந்தித்தபோதெல்லாம் அவர் முகத்தைத் திருப்பிக் கொண்டு என்னுடன் பேசுவதையே தவிர்த்தார்.

ஒருவர் எவ்வளவுதான் நூல்களைப் படித்திருந்தலும், அவரிடம் நற்பண்புகள் நிலவுவது அவருடைய மன இயல்பைப் பொருத்துத்தான் என்று எனக்குத் தோன்றியது.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 83
கூடா நட்பு

குறள் 823:
பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது.

பொருள்: 
பல நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்த போதிலும், அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராகப் பழகுதல், மேன்மையான உள்ளம் இல்லாதவர்க்கு அரிதான செயல்..
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

633. இளவரசனின் கோபம்

"தந்தையே! வல்லிய நாட்டு அரசனை நாம் எதற்கு நம் நாட்டுக்கு அழைக்க வேண்டும்? அது ஒரு சிறிய நாடு. அவர்களுக்கு நாம் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா?" என்றான் இளவரசன் கோமகன்.

"நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனால், இது அமைச்சருடைய ஏற்பாடு. அவருக்கு நான் சில அதிகாரங்கள் கொடுத்திருக்கிறேன். அதன்படிதான் அவர் செயல்படுகிறார். எனவே அவரிடம் இது பற்றிக் கேள்வி கேட்பது முறையாக இருக்காது!" என்றார் அரசர்.

"இந்த நாட்டுக்கு நீங்கள் அரசரா, அமைச்சர் அரசரா?" என்றான் கோமகன் கோபத்துடன்.

"அரசே! குந்தள நாட்டின்மீது படையெடுக்க மலைய நாடு ஆயத்தம் செய்து கொண்டிருப்பதாக ஒற்றர்கள் மூலம் செய்தி வந்திருக்கிறது. குந்தள நாடு எப்போதும் நம்முடன் நட்பாக இருந்து வந்திருக்கிறது. எனவே குந்தள நாட்டுக்கு ஆதரவாக நம் படைகளை அனுப்ப வேண்டும்" என்றார் அமைச்சர் அருள்மொழி.

"அமைச்சரே! மற்ற நாட்டு மன்னர்களிடம் நீங்கள் அதிகம் அக்கறை காட்டுவது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. ஒரு சிறு நாடான வல்லிய நாட்டின் அரசனை வரவழைத்து நம் விருந்தாளியாகச் சில நாட்கள் தங்க வைத்தீர்கள். இப்போது குந்தள நாட்டுக்கு ஆதரவாக நம் படைகளை அனுப்ப வேண்டும் என்கிறீர்கள்! மற்ற நாடுகளுக்காகப் போரிடுவதற்காகவா நாம் படைகளை வைத்திருக்கிறோம்?" என்றான் இளவரசன் கோபத்துடன்.

"கோமகா!.நாட்டு நிலவரங்கள் உனக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் உன்னை இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைத்தேன். உன்னிடம் யோசனை கேட்டால் பதில் சொல். இல்லாவிட்டால் நாங்கள் பேசுவதை கவனித்துக் கொண்டு மட்டும் இரு! அமைச்சரிடம் இது போல் பேசுவது முறையல்ல!" என்றார் அரசர் கோபத்துடன்.

அமைச்சர் அருள்மொழி சிரித்துக் கொண்டே, "இளவரசரின் ஐயங்களைத் தீர்க்க வேண்டியது என் கடமை. நமக்கு பக்கபலமாக நின்றவர்களுக்கு ஆபத்து ஏற்படும்போது அவர்களைக் காப்பாற்ற வேண்டியது அரச தர்மம், இளவரசே!" என்றார்.

"அப்படியே செய்யுங்கள் அமைச்சரே!" என்றார் அரசர். 

"அமைச்சரே! நாம் நீண்ட நாட்களாக எதிர்நோக்கி இருந்த அபாயம் நிகழ்ந்தே விட்டது!" என்றார் அரசர்

"காரி நாட்டுப் படைகள் நம் எல்லையில் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். அதை நாம் எப்படி முறியடிக்கப் போகிறோம்?" என்றான் இளவரசன்.

"நமக்கு மும்முனைப் பாதுகாப்பு இருக்கிறது. அதனால் எதிரிகளின் தாக்குதலை நாம் முறியடித்து விடலாம்!" என்றார் அமைச்சர்.

"அதென்ன மும்முனைப் பாதுகாப்பு?" என்றான் இளவரசன்.

"வல்லிய நாடு காரி நாட்டின் நட்பு நாடாக இருந்தது. வல்லிய நாட்டு அரசனை நம் நாட்டுக்கு அழைத்து வந்து  அவரை நம் நண்பராக ஆக்கிக் கொண்டு விட்டோம். அதனால் வல்லிய நாடு காரி நாட்டுக்கு ஆதரவாகப் போரில் இறங்காது..."

அமைச்சர் பேசி முடிக்கும் முன்பே, அரசர் இளவரசனைப் பார்த்து, "ஒரு சிறிய நாடான வல்லிய நாட்டின் மன்னருக்கு மதிப்புக் கொடுத்து நாம் ஏன் அவரை நம் நாட்டுக்கு அழைத்து உபசரிக்க வேண்டும் என்று கேட்டாயே! நாம் அவருக்கு நட்புக்கரம் நீட்டி அவரைக் காரி நாட்டு மன்னிடமிருந்து  பிரித்திருக்காவிட்டால் காரி நாட்டுப் படைகளுக்கு ஆதரவாக வல்லிய நாட்டுப் படைகளும் நமக்கு எதிராகப் போரில் இறங்கி இருக்கும். புரிந்ததா?" என்றார்.

இளவரசன் மௌனமாகத் தலையாட்டினான்.

"இரண்டாவதாக, குந்தள நாட்டுப்படை நமக்கு ஆதரவாகக் களம் இறங்கும். காரி நாட்டின் இன்னொரு எல்லையில் மலைப்பாங்கான பகுதியிலிருந்து குந்தள நாட்டுப் படைகள் தாக்கினால் அந்தத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் காரி நாட்டுப் படைகள் சிதறி விடும்."

"மும்முனைப் பாதுகாப்பு என்றீர்களே, மூன்றாவது முனை எது?" என்றான் இளவரசன் ஆர்வத்துடன்.

அமைச்சர் சற்றுத் தயக்கத்துடன் அரசரைப் பார்த்து, "அரசே! தங்கள் அனுமதி இன்றி ஒன்றைச் செய்து விட்டேன்!" என்றார்.

"சொல்லுங்கள்!" என்றார் அரசர் சற்றுக் கவலையுடன்.

"உங்களிடம் கோபித்துக் கொண்டு அரண்மனையை விட்டுச் சென்ற உங்கள் ஒன்று விட்ட சகோதரர் உங்களை எதிர்ப்பதற்காக எல்லைப் புறத்தில் படை சேர்த்துக் கொண்டிருக்கிறார் அல்லவா?"

"ஆமாம். ஆனால் எல்லைப்புறத்தில் சிலர் அவனுக்குப் பாதுகாப்பாக இருப்பதால் தலைமறைவாக இருக்கும் அவனைக் கைது செய்ய  முடியவில்லை என்று சொன்னீர்களே?" என்றார் அரசர்.

"மன்னிக்க வேண்டும் அரசே! சில நாட்களுக்கு முன் ஒற்றர்கள் மூலம் அவர் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து அவரைச் சந்தித்தேன். அவர் தன் தவற்றை உணர்ந்து தங்களிடம் மன்னிப்புக் கோர விரும்புகிறார். சில மாதங்களாகவே காரி நாடு நம் மீது போர் தொடுக்கக் கூடும் என்ற பதட்டச் சூழல் இருந்ததால், போர்ச் சூழல் அகன்றதும் ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் அவரை உங்களிடம் அழைத்து வரலாம் என்று நினைத்தேன்."

"அதை அப்புறம் பார்க்கலாம். அதற்கும் இந்தப் போருக்கும் என்ன தொடர்பு?"

"இருக்கிறது அரசே! அவரிடம் சில நூறு வீரர்களே இருந்தாலும், அவர்கள் மறைந்திருந்து தாக்குவதில் வல்லவர்கள். அவர்களை நாம் பயன்படுத்திக் கொண்டு எதிரிப்  படைகளைத் திணறடிக்க முடியும்!" என்றார் அமைச்சர்.

"அமைச்சரே! முன்பு உங்களைப் பற்றித் தவறாகப் பேசியதற்கு என்னை மன்னித்து விடுங்கள்!" என்றான் இளவரசன், அமைச்சரைப் பார்த்துக் கைகூப்பியபடி.

"என்ன இது இளவரசே?" என்று அமைச்சர் இளவரசனின் கைகளை விலக்க, அரசர் புன்னகையுடன் அதை ரசித்தார். 

அரசியல் இயல்
அதிகாரம் 64
அமைச்சு

குறள் 633:
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு.

பொருள்:
பகைவர்ககு துணையானவரைப் பிரித்தல், தம்மிடம் உள்ளவரைக் காத்தல், பிரிந்து கொண்டவரை மீண்டும் சேர்த்துக் கொள்ளுதல் இவற்றில் வல்லவன் அமைச்சன்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Thursday, October 13, 2022

822. மண்டபத்தில் கிடைத்த நண்பர்!

ஒரு திருமணத்தில்தான் சேதுமாதவனை ரகு சந்தித்தான்.

மணமகளுக்கு தூரத்து உறவு என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் சேதுமாதவன்.

"சொந்தக்காரங்கங்கறதால இந்தக் கல்யாணத்துக்கு வந்தேன். இங்கே வந்து பாத்தா எனக்குத் தெரிஞ்சவங்க யாருமே இல்ல. உங்களைப் பாத்தா பேசணும் போல தோணிச்சு!" என்று சேதுமாதவன் கூறியதை ரகு இயல்பாக எடுத்துக் கொண்டான்.

நெருங்கிய உறவினர் திருமணம் என்பதால் ரகு இரண்டு நாட்கள் நடந்த திருமண நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டான்.

சேதுமாதவன் வெளியூரிலிருந்து வந்தவன் என்பதால் அவனும் இரண்டு நாட்களும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டான்.

அந்த இரண்டு நாட்களிலும் பல நாட்கள் பழகியவன் போல் தன்னிடம் அவன் மிகவும் நெருக்கமாகப் பழகியது ரகுவுக்கு வியப்பாக இருந்தது. இயல்பாகவே எல்லோரிடமும் அன்பாகப் பழகுபவன் போலிருக்கிறது என்று ரகு நினைத்துக் கொண்டான்.

இரண்டாம் நாள் மாலை திருமண வரவேற்பு முடிந்து கிளம்பும்போது, "வரேன் சார்! உங்களை சந்திச்சதில ரொம்ப சந்தோஷம்" என்றான் ரகு, சேதுமாதவனிடம்.

சேதுமாதவன் அவன் சொன்னதை ஏற்றுக் கொண்டது போல் தலையாட்டினான்.

"எனக்கும்தான்!" என்று கூட அவன் சொல்லாதது ரகுவுக்குச் சற்று ஏமாற்றமாக இருந்தது.

"உங்க ஃபோன் நம்பர் சொல்லுங்க!" என்ற ரகு சேதுமாதவனின் நம்பரைக் கேட்டு அதை அழைத்து அவன் ஃபோன் அடிப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, "என் நம்பரை சேவ் பண்ணிக்கங்க. நேரம் கிடைக்கும்போது பேசலாம்!" என்று சொல்லி விடைபெற்றான்.

சேதுமாதவன் மௌனமாகத் தலையாட்டினான்.

ருக்குச் சென்றதும் சேதுமாதவனைச் சந்தித்தது பற்றித் தன் மனைவி லதாவிடம் கூறினான் ரகு.

"ஆனா என்னவோ தெரியல. முதல்ல எல்லாம் ரொம்ப நெருக்கமாப் பேசினவரு நான் கிளம்பறப்ப  ரொம்ப அலட்சியமா நடந்துக்கிட்டாரு. உங்களைச் சந்திச்சதில ரொம்ப சந்தோஷம்னு சொன்னேன். ஒப்புக்குக் கூட எனக்கும் சந்தோஷம்தான்னு சொல்லல. நான்தான் அவர் ஃபோன் நம்பரைக் கேட்டு வாங்கினேன். அவரு என் நம்பரை சேவ் பண்ணினாரான்னு கூடத் தெரியல!" என்றான் ரகு.

"விடுங்க. அவர் உங்க நெருங்கின நண்பரா என்ன?" என்றாள் லதா.

"எதுக்கு அவ்வளவு நெருக்கமாப் பழகணும்? அப்புறம் அலட்சியமா நடந்துக்கணும்?"

"விட்டுத் தள்ளுங்க!" என்றாள் லதா.

ஓரிரு நிமிடங்கள் ஏதோ சோசனையில் இருந்த ரகு, திடீரென்று ஏதோ தோன்றயவனாக, "இப்ப நினைச்சுப் பாக்கறப்ப அதுக்கு ஒரு காரணம் இருக்கும்னு தோணுது!" என்றான்.

"என்ன காரணம்?"

"மாப்பிள்ளை வீட்டுக்கரங்களுக்கெல்லாம் மண்டபத்துக்குப் பக்கத்தில ஒரு விடுதியில ஏ சி ரூம் போட்டிருந்தாங்க. நானும் மாப்பிள்ளை வீட்டுக்காரன்தானே, அதனால எனக்கும் ஒரு ஏ சி அறை கொடுத்திருந்தாங்க.

"முதல் நாளை மதியம் சாப்பாட்டுக்கப்பறம் நான் என் அறைக்குக் கிளம்பறப்ப, சேதுமாதவன் எங்கிட்ட வந்து, 'எனக்கு எப்பவுமே மத்தியானம் கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கணும். இந்த மண்டபத்திலேயேதான் எங்கேயாவது படுத்துக்கணும். ஆனா இங்கே ஒரே புழுக்கமா இருக்கு!' ன்னு சொன்னாரு. 'நான் தனியாதான் இருக்கேன். என் ரூமில இடம் இருக்கு. நீங்க அங்கே வந்து படுத்துக்கங்க'ன்னு சொன்னேன். 

"அன்னிக்கு மத்தியானம், அன்னி ராத்திரி, அடுத்த நாள் மத்தியானம் எல்லாம் அவர் என் அறையிலதான் படுத்துத் தூங்கினாரு. இப்பத்தான் எனக்கு ஞாபகம் வருது. ரெண்டாவது நாள் மத்தியானம் என் அறையில தூங்கிட்டுப் போனதுக்கப்பறமே அவரு எங்கிட்ட சரியா பேசல. நான் ஊருக்குக் கிளம்பற சிந்தனையில இருந்ததால அதை அப்ப கவனிக்கல!"

"ஏ சி ரூம்ல படுத்துக்கணுங்கறதுக்காகத்தான் உங்க கிட்ட நெருங்கிப் பழகி இருக்காரு. சரியான காரியவாதிதான்!" என்றாள் லதா.

"ஒரு பலனை எதிர்பாத்து எங்கிட்ட நட்பா இருந்ததைக் கூட நான் தப்பா நினைக்கல. ஆனா தனக்கு ஆக வேண்டிய காரியம் முடிஞ்சப்பறம் எங்கிட்ட அலட்சியமா நடந்துக்கிட்டதை நினைச்சாதான் எனக்கு வெறுப்பா இருக்கு. இவங்கள்ளாம் காசுக்காக..." 

மனைவியின் முன்பு தான் நினைத்த உதாரணத்தைக் கூற வேண்டாமென்று நினைத்து சொல்ல வந்ததைப் பாதியில் நிறுத்திக் கொண்டான் ரகு.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 83
கூடா நட்பு

குறள் 822:
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.

பொருள்: 
வேண்டியவர் போலத் தோன்றி, மனத்தால் வேண்டாதவராக இருப்பவரோடு உண்டான நட்பு விலைமகள் மனம் போல் வேறுபடும்.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Tuesday, October 11, 2022

632. அமைச்சருடன் ஒரு நகர்வலம்

"அமைச்சரே! இன்று இரவு நான் நகர்வலம் செல்லும்போது நீங்களும் என்னுடன் வர வேண்டும்!" என்றார் அரசர்.

அரசர் தன்னை ஏன் உடன் அழைக்கிறார் என்று புரியாமல் அமைச்சர் தலையாட்டினார்.

அன்று மாலை அரசரும் அமைச்சரும் சாதாரண மனிதர்களைப் போல் உடையணிந்து அரண்மனையிலிருந்து சுமார் 10 மைல் தொலைவிலிருந்த ஒரு ஊருக்குச் சென்றனர். 

அந்த ஊரை அவர்கள் அடைந்தபோது, பொழுது நன்கு இருட்டி இருந்தது. 

தாங்கள் வந்த தேரிலிருந்து  ஊரின் எல்லையிலேயே இறங்கிக் கொண்டு தேரை அரண்மனைக்குத் திருப்பி அனுப்பி விட்டார் அரசர்.

மறுநாள் காலை சூரிய உதய நேரத்தில் தேரை மீண்டும் அதே இடத்துக்குக் கொண்டு வந்து அரசரையும் அமைச்சரையம் அழைத்துச் செல்ல வேண்டும் என்பது ஏற்பாடு.

ஊருக்குள் நுழைந்ததும், எதிரில் வந்த ஒரு நபரை நிறுத்திய அரசர், "ஐயா! நாங்கள் தொலைதூரத்திலிருந்து வருகிறோம். அரசரை ஒரு தடவை நேரில் பாத்து விட வேண்டும் என்பதற்காக அரண்மனைக்குப் போய்க் கொண்டிருக்கிறோம். இப்போது இருட்டி விட்டதால், இந்த ஊரில் இரவு தங்கி விட்டுக் காலையில கிளம்பலாம் என்று நினைக்கிறோம். எங்களுக்குப் படுத்து உறங்க இடம் கிடைக்குமா?" என்றார்.

"என் வீட்டிலேயே படுத்துக் கொள்ளலாம். ஆனால் ஊரில் புதிதாக யாரும் வந்தால் இந்த ஊர்த்தலைவருக்குத் தெரிவிக்க வேண்டும் என்று ஒரு ஏற்பாடு இருக்கிறது. அதனால் தலைவரிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டு வந்து விடுகிறேன்!" என்றார் அவர்.

"ஊரில் புதிதாக யாரும் வந்தால் தலைவருக்கு ஏன் தெரிவிக்க வேண்டும்? உங்கள் தலைவர் என்ன சர்வாதிகாரியா?" என்றார் அரசர்.

"ஐயா! அப்படியெல்லாம் சொல்லாதீர்கள்..அவர் மிகவும் நல்லவர். இந்த ஊர் மக்களுக்கு எந்த ஒரு தீங்கும் நேராமல் காப்பாற்ற வேண்டும் என்ற  அக்கறையினால்தான் அவர் இப்படி ஒரு நடைமுறையை உருவாக்கி இருக்கிறார்!" என்றார் அந்த மனிதர்.

"அப்படி அவரிடம் சொல்லாவிட்டால்?"

"அவர் நல்லவர்தான், ஆனால் விதிகளை யாராவது மீறினால் கடுமையாக நடந்து கொள்வார். அதனால் ஊரில் எல்லோருக்கும் அவர் மேல் அன்பும் உண்டு, மரியாதையும் உண்டு.  ஆனால் இதுவரைக்கும் யாரும் அப்படிச் சொல்லாமல் இருந்ததில்லை! வாருங்கள், நான் தலைவரிடம் போய் உங்களைப் பற்றிச் சொல்றேன். நீங்களும் என்னுடன் வாருங்கள். நீங்களும் அவரை நேரில பார்த்த மாதிரி இருக்கும்."

ஊர்த்தலைவர் வீட்டுக்கு அவர்கள் சென்றபோது தலைவர் தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து சில ஓலைச்சுவடிகளைப் படித்துக் கொண்டிருந்தார்.

அவர்களை அழைத்து வந்த ஊர்க்காரர் தலைவரிடம் விஷயத்தைச் சொன்னதும், அவர்கள் இருவரையும் பார்த்த தலைவர், "சரி. நம் வீட்டிலேயே படுத்துக் கொள்ளட்டும். என் வீட்டில் எல்லாரும் ஊருக்குப் போயிருக்கிறார்கள். இருங்கள். யாரிடமாவது சொல்லி இவர்களுக்குச்  சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்கிறேன்!" என்று எழுந்தார் தலைவர்.

"வேண்டாம் ஐயா! நாங்கள் பக்கத்து ஊரில் சத்திரத்தில் சாப்பிட்டு விட்டோம்" என்றார் அரசர்.

ஊர்க்காரர் விடைபெற்றுச் செல்ல, இருவரும் தலைவருக்குப் பக்கத்தில் திண்ணையில் அமர்ந்து  கொண்டனர்.

"நீங்கள் என்ன படிக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?" என்றார் அமைச்சர்.

"இது மனித ஒழுக்கம் பற்றிய ஒரு நீதி நூல். தலைவனாக இருப்பவனுக்கு நீதி, சரியான நடத்தை இதையெல்லாம் பற்றித்தெரிய வேண்டுமல்லவா? அதுதான் படித்துக் கொண்டிருக்கிறேன்!" என்றார் தலைவர்.

"உங்கள் ஊர் மக்களிடையே ஏதாவது தகராறு வந்தால் நீங்கள்தான் தீர்த்து வைப்பீர்களா?" என்றார் அரசர்.

"என்னிடம்தான் வருவார்கள். ஆனால் நான் இந்த ஊரில் இருக்கும் அறிஞர் ஒருவரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு, விசாரித்து, அவரிடம் ஆலோசனை கேட்டுத்தான் முடிவு செய்வேன்!" என்றார் ஊர்த்தலைவர்.

அரசரும், அமைச்சரும் இரவு அங்கே படுத்து உறங்கி விட்டு அடுத்த நாள் காலை கிளம்பி அரண்மனைக்கு வந்தனர்.

"அமைச்சரே! நேற்று நாம் பார்த்த ஊர்த்தலைவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்றார் அரசர் அமைச்சரிடம்.

"ஒரு சிறந்த மனிதர். இளம் வயதிலேயே நல்ல முதிர்ச்சி. தன் ஊர் மக்களைப் பாதுக்காப்பதில் அக்கறை, அதனால் ஊருக்கு யாரும் புதிதாக வந்தால் அவர்களைப் பற்றித் தனக்குத் தெரிவிக்க வேண்டுமென்று ஒரு விதியை உருவாக்கி, அதைக் கடுமையாகப் பின்பற்றுகிறார், மக்களிடம் அன்பும் அக்கறையும், தேவைப்படும்போது கடுமை, நீதி நூல்களைப் படிக்க வேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சி, தேவைப்படும்போது அறிஞர்களின் ஆலோசனையைக் கேட்டு நடந்து கொள்வது என்று அறிவு, அன்பு, பண்பு, கல்வி, உறுதியான நிலைப்பாடு போன்ற பல நல்ல தன்மைகள் உள்ளவராக இருக்கிறார். ஆமாம், இவரைப் பற்றி  உங்களுக்கு எப்படித் தெரிந்தது? என்னை ஏன் அவரைப் பார்க்க அழைத்துப் போனீர்கள்?" என்றர் அமைச்சர்.

"நான் நகர்வலம் போகும்போது அவரைத் தற்செயலாகப் பார்த்தேன். பிறகு சில நாட்கள் கொஞ்சம் நெருக்கமாக கவனித்தேன். உங்களை அழைத்துப் போய் அவரிடம் காட்டியதற்குக் காரணம்  ஒரு அமைச்சருக்குத் தேவையான குணங்கள் அவரிடம் இருக்கின்றனவா என்று உங்களிடம் கேட்டு அறிந்து கொள்ளத்தான்!"

"அரசே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்றார் அமைச்சர், அரசர் கூறியதன் பொருளை உணர்ந்தவராக.

"நீங்கள் ஓய்வு பெறப் போவதாக அறிவித்து விட்டீர்கள். புதிய அமைச்சரை நான் தேர்ந்தெடுக்க வேண்டாமா? எப்படி என் தேர்வு?" என்றார் அரசர்.

"உங்கள் தேர்வு அற்புதம் அரசே! ஆனால் நீங்கள் அமைச்சராக்கப் போகும் நபரிடம் இருக்கும் குணங்கள் என்னிடம் இருந்திருக்கின்றனவா என்று நான் யோசிக்கிறேன்!" என்றார் அமைச்சர்.

பொருட்பால் 
அமைச்சியல்
அதிகாரம் 64
அமைச்சு 

குறள் 632:
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு.

பொருள்: 
செயலுக்கு ஏற்ற மன உறுதி, மக்களைக் காத்தல், உரிய நீதி நூல்களைக் கற்றல், கற்றாரிடம் கேட்டு அறிதல், முயற்சி ஆகிய ஐந்தையும் உடையவரே அமைச்சர்.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Monday, October 10, 2022

821. நகுலன் கொடுத்த விலை!

நகுலனைத் தன் நிறுவனத்தில் ஒர்க்கிங் பார்ட்னராகச் சேரும்படி சுகுமார் அழைத்தபோது நகுலன் முதலில் தயங்கினான்.

இருவரும் கல்லுரியில் இணைந்து படித்திருந்தாலும், படித்த காலத்தில் இருவருக்குமிடையே அவ்வளவு நெருக்கம் இருந்ததில்லை. 

பல வருடங்களுக்குப் பிறகு தற்செயலாகச் சந்தித்த பிறகு இருவருக்கும் சற்று நெருக்கம் ஏற்பட்டது.

"நீ மார்க்கெடிங்ல நல்ல அனுபவம் உள்ளவன். எங்கிட்ட தொழிற்சாலை இருக்கு. ஒரு மர்க்கெடிங் மானேஜர் இருந்தா என் கம்பெனியை என்னால இன்னும் மேலே கொண்டு வர முடியும்" என்றான் சுகுமார்.

"அதுக்கு ஒரு நல்ல மார்க்கெடிங் மானேஜரைப் போட வேண்டியதுதானே? எதுக்கு என்னை ஒர்க்கிங் பார்ட்னரா வரச் சொல்ற?" என்றான் நகுலன்

"நான் நிறைய பேரை இன்டர்வியூ பண்ணிட்டேன். யாரும் எனக்குத் திருப்தியா இல்ல. அதனால உனக்கு இந்த வேலையை ஆஃபர் பண்ண நினைச்சேன். என் நண்பனான உன்னை எங்கிட்ட வேலை செய்யச் சொல்றது சரியா இருக்காது. அதனாலதான் உன்னை ஒர்க்கிங் பார்ட்னரா சேரச் சொல்றேன். நீ மார்க்கெடிங்கைப் பாத்துக்க. நான் ப்ரொடக்‌ஷனைப் பாத்துக்கறேன்!"

சில நாட்கள் யோசித்து விட்டு சுகுமாரின் நிறுவனத்தில் ஒர்க்கிங் பார்ட்னராகச் சேர்ந்தான் நகுலன்.

சுகுமார் கூறியபடியே மார்க்கெடிங் துறையைக் கையாள நகுலனுக்கு முழு சுதந்திரம் கொடுத்து தான் ப்ரொடக்‌ஷனை மட்டும் பார்த்துக் கொண்டான் சுகுமார்.

"மும்பையிலிருந்து ஒரு என்கொயரி வந்திருக்கு. அவங்களுக்கு ராணுவத்திலேந்து சில உபகரணங்களுக்கு ஆர்டர் வந்திருக்காம். அதுக்கான சில பாகங்களை நாம தயாரிச்சுக் கொடுக்க முடியுமான்னு கேக்கறாங்க" என்றான் நகுலன் சுகுமாரிடம்.

"அதுக்கு ஏன் என்னைக் கேக்கற? நீதானே முடிவு செய்யணும்?" என்றான் நகுலன்.

"இதுக்கு முன்னால உங்கிட்ட கேட்டப்ப நீ முடியாதுன்னு சொல்லிட்டியாமே!"

"ஓ, அவங்களா? அப்ப மார்க்கெடிங்குக்கு சரியான ஆள் இல்லாததால, அதை நான் எடுத்துக்க விரும்பல. ஏன்னா அது ரெகுலர் ஆர்டர். அவங்களோட தேவைகளைப் புரிஞ்சுக்கிட்டு அவங்களுக்கு சர்வீஸ் பண்றது கஷ்டம். இப்பதான் நீ இருக்கியே!" என்றான் சுகுமார்.

"உங்க நண்பர் உங்களை திட்டம் போட்டு ஏமாத்தி இருக்காரு. சட்ட விரோதமா ஆயுதங்கள் தயாரிச்சு அதையெல்லாம் இயந்திரப் பகுதிகள்ங்கற பெயரில  வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யற ஒரு நிறுவனம் பாகங்கள் சப்ளை பண்ணச் சொல்லி  அவருக்குத் தெரிஞ்சவங்க மூலமா மூணு மாசங்களுக்கு முன்னால அவரை அப்ரோச் பண்ணி இருக்காங்க. அவர் தான் மாட்டிக்காம இருக்க உங்களை ஒர்க்கிங் பார்ட்னரா எடுத்துக்கிட்டு அவங்க கிட்ட உங்களைத் தொடர்பு கொள்ளச் சொல்லிச் சொல்லி இருக்காரு. ஒருவேளை இந்த ஆர்டரை எடுத்துக்கிட்டு நீங்க சப்ளை பண்ணி போலீஸ்ல மாட்டிக்கிட்டிருந்தா உங்களைக் கை காட்டிட்டு அவர் ஒதுங்கி இருப்பாரு. உங்களுக்கு எதனால சந்தேகம் வந்தது?" என்றார் பிரைவேட் டிடெக்டிவ் சந்தர்.

"இதுக்கு முன்னால ஒரு நிறுவனத்தில நான் வேலை செஞ்சுக்கிட்டிருந்தபோது, இண்டஸ்ட்ரி அசோசியேஷன்லேந்து வந்த ஒரு சர்க்குலரைப் பார்த்தேன். ஆயுதங்களுக்கான பாகங்கள் கேட்டு ஏதாவது ஆர்டர் வந்தா,  அவங்ககிட்ட அரசாங்கத்துக்கிட்டேந்து வந்த ஆர்டர் காப்பியை வாங்கி வச்சுக்கிட்டு அப்புறம்தான் ஆர்டரே எடுத்துக்கணும்னு அதில சொல்லி இருந்தாங்க. அ ந்த சர்க்குலர் சுகுமாருக்கும் வந்திருக்கணும். ஆனா அவன் அது பத்தி எதுவுமே தெரியாத மாதிரி என்னை அந்த ஆர்டரை எடுத்துக்கச் சொன்னதாலதான் உங்களை அந்த மும்பை நிறுவனம் பற்றி ரகசியமா விசாரிக்கச் சொன்னேன். நீங்களும் உடனே விசாரிச்சு அவங்க போலீஸ் வாட்ச் லிஸ்ட்ல இருக்கறதா சொல்லிட்டீங்க. ரொம்ப நன்றி!" என்றான் நகுலன்.

"இப்ப என்ன செய்யப் போறீங்க?"

"சுகுமாரைப் பார்த்து நீங்க கண்டுபிடிச்சுச் சொன்ன விஷயங்களை அவங்கிட்ட சொல்லி, உடனே என்னைப் பொறுப்பிலேந்து விடுவிக்கச் சொல்லப் போறேன். ஏதாவது தகராறு பண்ணினான்னா போலீசுக்குப் போவேன்னு சொல்லுவேன். அப்புறம் வேற வேலை தேடணும்! என்ன செய்யறது? அவசரப்பட்டு நம்பக் கூடாத ஒத்தனை நண்பனா நினைச்சு ஏமாந்ததுக்கு ஏதாவது விலை கொடுத்துத்தானே ஆகணும்?" என்றான் நகுலன்.

நட்பியல்
அதிகாரம் 83
கூடா நட்பு

குறள் 821:
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.

பொருள்: 
மனதார இல்லாமல் வெளியுலகிற்கு நண்பரைப்போல் நடிப்பவரின் நட்பானது, அடிக்கப்படும் இரும்பைத் தாங்கி நிற்கும் பட்டடைக் கல்லுக்கு (இரும்புப் பட்டறையில் உள்ள கல்) ஒப்பாகும்.
குறள் 822 (விரைவில்)
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Sunday, October 9, 2022

820. யூனியன் மீட்டிங்

"நாளைக்கு யூனியன் மீட்டிங் இருக்கே, வரே இல்ல?" என்றான் சுபாஷ்.

"இல்லை. நாளைக்கு  வீட்டுக்கு  விருந்தாளிங்க வராங்க. அதனால என்னால வர முடியாது. நீ போகப் போறியா?" என்றான் கிரி.

"ஆமாம்."

"என்ன நடந்ததுன்னு திங்கட்கிழமை சொல்லு."

திங்கட்கிழமை அலுவலகத்துக்குச் சென்றதும் யூனியன் மீட்டிங்கில் நடந்தது பற்றி சுபாஷிடம்  கேட்டான் கிரி.

"முக்கியமா ஒண்ணும் இல்ல. வெவ்வேறு விஷயங்கள்ள தனக்கு உதவறதுக்காக ஒரு குழுவை அமைக்கறது பத்தித் தலைவர் பேசினாரு. அவ்வளவுதான்!" என்றான் சுபாஷ்.

"ஓ! குழு அமைச்சாச்சா? குழுவில யார் யாரு இருக்காங்க?"

"யார் யார்ங்கறதை அவர் இன்னும் முடிவு செய்யல. சில பெயர்களைக் குறிப்பிட்டாரு.  அவங்களைப் பத்தி சில பேர் சில ஆட்சேபணைகளை எழுப்பினாங்க. யார் யார்ங்கறதை முடிவு செஞ்சு ரெண்டு மூணு நாள்ள சர்க்குலர் அனுப்பறேன்னு சொல்லிட்டாரு!" என்றான் சுபாஷ்.

ன்று மாலை கிரி அலுவலகத்தை விட்டுக் கிளம்புவதற்கு முன் யூனியன் தலைவர்  கிருஷ்ணன் அவனை இன்டர்காமில் அழைத்தார்.

"என்ன கிரி, வீட்டுக்குக் கிளம்பிட்டீங்களா?" என்றார் கிருஷ்ணன்

"ஆமாம் கிருஷ்ணன். சாரி. நேத்திக்கு மீட்டிங்குக்கு வர முடியல!" என்றான் கிரி.

"உங்களுக்கு வீட்டுக்குப் போக அவசரம் இல்லேன்னா என்னோட காப்பி சாப்பிட வரீங்களா?"

"சந்தோஷமா!" என்றான் கிரி.

இருவரும் அருகிலிருந்த, அவர்கள் எப்போதும் போகும் ஓட்டலுக்குச் சென்றனர்.

"உங்களுக்கு உதவ ஒரு குழு அமைக்கப் போறீங்களாமே?" என்றான் கிரி.

"ஆமாம். அது விஷயமாத்தான் உங்க கிட்ட பேசணும்னு நினைச்சேன். குழுவில உறுப்பினரா இருக்க உங்களுக்கு விருப்பமா?" என்றார் கிருஷ்ணன்.

"நிச்சயமா! நீங்க எந்தப் பொறுப்பு கொடுத்தாலும் அதைச் செய்யத் தயாரா இருக்கேன்னு உங்களுக்குத்தெரியுமே! ஆனா நீங்க நேத்திக்கு சில பெயர்களைச் சொன்னப்ப சில பேர் ஆட்சேபிச்சாங்களாமே! எனக்கு ஏதாவது ஆட்சேபம் வருமான்னு பாத்துக்கங்க!" என்றான் கிரி சிரித்துக் கொண்டே.

ஒரு நிமிடம் மௌனமாக இருந்த கிருஷ்ணன், "நேத்திக்கு மீட்டிங்க்ல உங்க பேரையும் நான் சொன்னேன். அதுக்கு ஒத்தர்கிட்டேயிருந்துதான் ஆட்சேபம் வந்தது!" என்றார்.

"'யார்கிட்டேருந்து?"

"உங்க நண்பர் சுபாஷ்கிட்டே இருந்துதான்!"

"என்ன சொல்றீங்க? அவன் என்னோட நெருங்கின நண்பனாச்சே!"

"நேத்திக்கு அவர் மீட்டிங்கில உங்களைப் பத்திப் பேசின விஷயங்களைக் கேட்ட யாரும் அவரை உங்க நண்பர்னு சொல்ல மாட்டாங்க! பொறுப்பு இல்லாதவன், தனக்கு எது நல்லதுன்னு மட்டும் பாக்கறவன் இப்படியெல்லாம் உங்களைப் பத்தி அவர் அவதூறா சொன்ன பல விஷயங்களைக் கேக்க எனக்கே அதிர்ச்சியா இருந்தது. நீங்க நெருங்கின நண்பரா நினைக்கிற  ஒத்தரைப் பத்தி நீங்க சரியாப் புரிஞ்சுக்கணுங்கறதுக்காகத்தான் உங்களைத் தனியாப் பார்த்து அவர் உங்களைப் பத்திப் பேசினதை உங்ககிட்ட சொல்ல விரும்பினேன்!" என்றார் கிருஷ்ணன்.

நட்பியல்
அதிகாரம் 82
தீ நட்பு

குறள் 820:
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு.

பொருள்: 
தனியே இருக்கும்போது நட்புடன் பழகி, பலர் கூடிய மன்றத்தில் பழித்துப் பேசுவோரின் தொடர்பைச் சிறிதளவும் சேர விட வேண்டா.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Saturday, October 8, 2022

630. அனுபவம் இனிமை?

"எனக்கு மாதவன் மட்டும்தான் போட்டி. மத்தவங்களைப் பத்தி எனக்குக் கவலையில்லை!" என்றான் விவேக்.

"ஏண்டா நாம இருபது பேரு ஒரே நேரத்தில இந்த கம்பெனியில மனேஜ்மென்ட் டிரெய்னியா சேர்ந்திருக்கோம். மாதவனை  மட்டும் ஏன் போட்டின்னு நினைக்கற?" என்றான் அவன் நண்பன் மூர்த்தி.

"போட்டியாளன் என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில ரைவல்னு சொல்லுவாங்க. ரைவல்னா எதிரின்னும் ஒரு பொருள் இருக்கு. விவேக் மாதவனைத் தன்னோட ரைவலா நினைக்கறான் - போட்டியாளனாகவும், எதிரியாகவும்! " என்றான் மது என்ற இன்னொரு நண்பன்.

"ஆனா உனக்கு ஏன் அவன் மேல இவ்வளவு வெறுப்புன்னு எனக்குப் புரியல!" என்றான் மோகன்.

நண்பர்கள் பேசுவதை விவேக் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.

வசதியான குடும்பத்தில் பிறந்து, சிறந்த கல்வி நிறுவனங்களில் படித்து, கோச்சிங் போன்ற கூடுதல் உதவிகளையும் பெற்றுச் சிறந்த மாணவனாக உருவாகிப் படிப்பை முடித்தவன் விவேக். 

அந்த நிறுவனத்தில் மனேஜ்மென்ட் டிரெயினியாகச் சேர நூற்றுக் கணக்கானோர் விண்ணப்பித்திருந்த நிலையில், வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இருபது பேரில் விவேக்கும் ஒருவன்.

தேர்ந்தெடுக்கப்பட்ட இருபது பேரில் தானே சிறந்தவன் என்ற எண்ணம் விவேக்குக்கு உண்டு. அவனுடைய பொருளாதார வசதி, கல்வி வசதியால் வளர்ந்திருந்த அறிவுத் திறன் ஆகியவற்றால் அந்த இருபது பேரில் பலர் அவனால் ஈர்க்கப்பட்டு அவனைத் தங்களுக்குள் சிறந்தவனாக ஏற்றுக் கொண்டது போல் நடந்து கொண்டனர்.

ஆயினும் அந்த இருபது பேரில் ஒருவனாகத் தேர்வு செய்யப்பட்ட மாதவனிடம் துவக்கத்திலிருந்தே விவேக்குக்கு ஒரு விரோத மனப்பான்மை உருவாயிற்று. 

மாதவன் ஏழ்மையான, சமூகத்தில் கீழ்நிலையிலிருந்த ஒரு குடும்பத்திலிருந்து வந்தவன்.அரசுப் பள்ளியில் படித்த அவன் தன் கடுமையான உழைப்பால் சிறப்பாகப் படித்து, கல்லூரிப் படிப்பையும் சிறப்பாக முடித்து, அந்தப் புகழ் பெற்ற நிறுவனத்தில் ஒரு மானேஜ்மென்ட் டிரெயினியாகவும் தேர்வு பெற்று விட்டான்.

பயிற்சியின்போது, இருபது பேரும்  நிறுவனதின் விடுதியில் தங்கி இருந்ததால் தங்களுக்குள் நன்கு அறிமுகமாகினர்.

சாதாரணக் குடும்பத்திலிருந்து வந்தவன் என்பதால் மாதவனைச் சற்று இளக்காரமாகவே பார்த்தான் விவேக்.

விடுதியில் இருந்த காலத்தில், ஒருநாள் இரவு உணவுக்குப் பிறகு, தங்கள் பள்ளிப் பருவம் பற்றியும், சிறுவயது வாழ்க்கை பற்றியும் அனைவரும் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர்.

அனைவர் கூறியதையும் புன்சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான் மாதவன்.

மாதவனின் முறை வந்தது.

"இப்போது திரு மாதவன் அவர்கள் தங்கள் சிறுவயது வாழ்க்கை பற்றிப் பகிர்ந்து கொள்வார்கள்!" என்றான் விவேக் கேலியாக.

மாதவன் புன்னகை மாறாமல்  தன் அனுபவங்கள் பற்றிப் பேச ஆரம்பித்தான்.

கெட்ட நெடி வீசும் ஒரு கழிவுநீர்க் கால்வாயின் அருகே, சுகாதாரமற்ற சூழலில்  ஒரு குடிசையில் தன் பெற்றோர் மற்றும் நான்கு சகோதர சகோதரிகளுடன் தான் வாழ்ந்த வாழ்க்கை, பல நாட்கள் சரியான உணவில்லாமல் இருந்தது, மதிய உணவுக்காகவே பள்ளியில் சேர்ந்தது, தாய்க்கு அவ்வப்போது உடல்நிலை சரியில்லாமல் போய் அரசு மருத்துவமனையில் சேர்க்க நேர்ந்தது, தன் சமூகப் பின்னணி மற்றும் வறுமை காரணமாகப் பள்ளியிலும், கல்லூரியிலும், மற்ற இடங்களிலும் தான் சந்தித்த அவமானங்கள் என்று பல விஷயங்களையும் பற்றி ஏதோ கதை செல்வது போல் சொல்லி முடித்தான் மாதவன்.

"எப்படிடா உன்னோட துன்பமான அனுபவங்களை இப்படி சிரிச்சுக்கிட்டே சொல்ற?" என்றான் மது.

"தெரியல. எங்க அப்பா, அம்மா, சகோதர சகோதரிகளோட சந்தோஷமா இருக்கறதாத்தான் எப்பவுமே நினைச்சுக்கிட்டிருந்தேன். சரியான சாப்பாடு இல்லாம பசியோட இருக்கும்போது வருத்தமாத்தான் இருக்கும். ஆனா அப்புறம் சாப்பாடு கிடைச்சு சாப்பிடறப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும். எங்க அப்பா அம்மா தங்களோட வறுமையைப் பத்திக் கவலைப்படல. சிரிச்சுப் பேசிக்கிட்டு சந்தோஷமாத்தான் இருந்தாங்க. அவங்க சந்தோஷமா இருந்ததால நானும் கஷ்டங்களைப் பத்தி நினைக்காம சந்தோஷமா இருந்தேன்னு நினைக்கிறேன்!" என்றான் மாதவன்.

விவேக் தன் இருக்கையிலிருந்து எழுந்து வந்து மாதவனை அணைத்துக் கொண்டு. "நீதாண்டா கிரேட்!" என்றான் உண்மையான உணர்வுடன்.

அரசியல் இயல்
அதிகாரம் 63
இடுக்கண் அழியாமை  (துன்பத்தால் அழிந்து போகாமல் இருத்தல்)

குறள் 630:
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.

பொருள்:
ஒருவன் துன்பத்தையே தனக்கு இன்பமாகக் கருதிக் கொள்வானானால் அவனுடைய பகைவரும் விரும்பத் தக்க சிறப்பு அவனுக்கு ஏற்படும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Thursday, October 6, 2022

819. வேண்டாம் வெள்ள நிவாரணம்1

"போன வருஷம் வெள்ளம் வந்தப்ப அரசாங்கத்தில இந்த ஏரியாவில ஒவ்வொரு வீட்டுக்கும் ஐயாயிரம் ரூபா நிவாரணம் கொடுத்தாங்க. ஆனா நான் அதை வாங்கிக்கல!" என்றான் சங்கர்

"ஏன்?" என்றான் முத்துவேல்.

"அரசாங்கம் நிவாரணம் கொடுக்க வேண்டியது ஏழைகளுக்குத்தான். என்னை மாதிரி வசதியானவங்கள்ளாம் அதை வாங்கிக்கக் கூடாதுங்கறது என்னோட கொள்கை. அரசாங்கத்துக்கிடேந்து நிவாரணம் வாங்கிக்காதது மட்டும் இல்ல. நான் வெள்ள நிவாரண நிதிக்கு ரெண்டாயிரம் ரூபா நன்கொடை கொடுத்தேன்!"

"பெரிய விஷயம் சார்!"

"என்னோட இயல்பு அப்படி. நான் இதைப் பெரிசா நினைக்கல. நீங்க இந்த ஏரியாவுக்குப் புதுசா வந்திருக்கீங்க. ஏதாவது உதவி வேணும்னா எங்கிட்ட தயங்காம கேளுங்க!" என்று சொல்லி விட்டுக் கிளம்பினான் சங்கர்.

"இந்தக் காலத்தில இப்படி ஒரு மனுஷனா ஆச்சரியமா இருக்கு!" என்றான் முத்துவேல் தன் மனைவி திரௌபதியிடம்..

"ஆச்சரியமாத்தான் இருக்கு. இந்த ஏரியாவுக்கு நாம புதுசா வந்திருக்கறப்ப இப்படி ஒருத்தரோட நட்பு உங்களுக்குக் கிடைச்சிருக்கிறது நம்ம அதிர்ஷ்டம்தான்!" என்றாள் திரௌபதி.

"என்னங்க, உங்களைத் தேடி போலீஸ்காரர் வந்திருக்காரு!" என்றாள் திரௌபதி பதட்டத்துடன்.

அதே பதட்டத்துடன் முத்துவேல்  அறையிலிருந்து விரைவாக வாசலுக்கு வந்தான்.

"சார்! நீங்கதானே முத்துவேல்?" என்றார் போலீஸ்காரர்.

"ஆமாம்."

"நீங்க கவர்ன்மென்ட் ஆஃபீசரா?"

"ஆமாம். அதுக்கென்ன?"

"சங்கர் உங்கள் நண்பரா?"

முத்துவேல் சற்றுத் தயங்கி விட்டு, "எனக்குத் தெரிஞ்சவர்தான்!" என்றான் எச்சரிக்கை உணர்வுடன்.

"விசாரிக்கறதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு அழைச்சுக்கிட்டுப் போனோம். அவரு உங்க பேரைச் சொல்லி, நீங்க அரசங்கத்தில பெரிய அதிகாரி, அவருக்கு நண்பர்னு சொன்னாரு. . உங்களை ஸ்டேஷனுக்கு வரச் சொல்றது மரியாதையா இருக்காது இல்ல? அதான் இன்ஸ்பெக்டர் என்னை அனுப்பி  விசாரிச்சுட்டு வரச் சொன்னாரு!" என்றார் போலீஸ்காரர்.

"அவரைக் கைது பண்ணி இருக்கீங்களா? எதுக்கு?"

"இன்னும் கைது பண்ணல. போன வருஷம் வெள்ளம் வந்தப்ப அரசாங்கத்தில நிவாரணம் கொடுத்தாங்க இல்ல, அதை வாங்கிக் கொடுக்கறதா சொல்லி அவர் சில பேர் கிட்ட ஐநூறு ஆயிரம்னு பணம் வாங்கி இருக்காரு..."

"நிவாரணம் கொடுத்தது மாநில அரசு. நான் சென்ட்ரல் கவர்ன்மென்ட்" என்று அவசரமாகக் குறுக்கிட்டுச் சொன்னான் முத்துவேல்.

"அய்யய்யோ! நீங்க சம்பந்தப்பட்டிருக்கறதா சொல்லல சார். நீங்க அவரோட நண்பர்னு சொன்னதால உங்களை விசாரிக்கிறோம். நீங்க ஸ்டேஷனுக்கு வந்து ஒரு கையெழுத்துப் போட்டீங்கன்னா அவரைக் கைது பண்ணாம கேஸ் மட்டும் புக் பண்ணுவோம். அவ்வளவுதான்."

"கொஞ்சம் உள்ளே வாங்க!" என்றாள் திரௌபதி முத்துவேலின் காதுக்குள்.

"ஒரு நிமிஷம்!" என்று போலீஸ்காரரிடம் சொல்லி விட்டு மனைவியுடன் உள் அறைக்குச் சென்றான் முத்துவேல்.

"இங்க பாருங்க. நீங்க கையெழுத்து எதுவும் போடாதீங்க!" என்றாள் தமயந்தி உத்தரவு போடுவது போல்.

"நான் என்ன முட்டாளா? பொதுவாகவே ஒரு அரசு ஊழியர் இது மாதிரி ஜாமீன் கையெழுத்தெல்லாம் போடக் கூடாது. அதுவும் இவனை மாதிரி ஃபிராடுக்கெல்லாம் கையெழுத்துப் போட்டா, அது என் வேலைக்கே ஆபத்தா முடியும். ஏதோ பெரிய கொள்கையோட நடக்கறவன் மாதிரி வெள்ள நிவாரணம் வேண்டாம்னு சொன்னதா சொன்னான். இப்ப பாத்தா, வெள்ள நிவாரணம் வாங்கிக் கொடுக்கறதா சொல்லி நிறைய பேர் கிட்ட கமிஷன் வாங்கி இருக்கான். போலீஸ் ஸ்டேஷன்ல போய் என் பேரைச் சொல்லி இருக்கான். இவனை மாதிரி ஆளையெல்லாம் நம் வீட்டு வாசலுக்குக் கூட வர விடக் கூடாது!" என்றான் முத்துவேல் கோபத்துடன்.

பிறகு, முத்துவேல் வாசலுக்குச் சென்று போலீஸ்காரரிடம், "சார்! சங்கர் இந்த ஏரியாவில இருக்காரு. அவரைப் பாத்திருக்கேன், மத்தபடி அவரைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது. நான் அவருக்காகக் கையெழுத்து போட முடியாது. இன்ஸ்பெக்டர் கிட்ட சொல்லிடுங்க!" என்றான் உறுதியான குரலில்.

"சரி சார்!" என்ற போலீஸ்காரர், 'இவரு கையெழுத்துப் போட்டிருப்பாரு. அந்த அம்மாதான் போடக் கூடாதுன்னு தடுத்துட்டாங்க. பாவம் அந்த சங்கர்! இன்ஸ்பெக்டர் அவனை உள்ள போட்டுடுவாரு' என்று நினைத்துக் கொண்டே அங்கிருந்து சென்றார்..

நட்பியல்
அதிகாரம் 82
தீ நட்பு

குறள் 819:
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.

பொருள்: 
செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவருக்குக் கனவிலும் துன்பம் தருவதாகும்.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Wednesday, October 5, 2022

629. துளசிப் பிரசாதம்!

"'கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினும் கொடிது இளமையில் வறுமை' ன்னு ஔவையார் சொன்னது எவ்வளவு உண்மை!" என்றேன் நான்.

"அப்படியா?" என்றான் அழகேசன்.

"உனக்கென்ன தெரியும் வறுமையைப் பத்தி? நீ பணக்கார வீட்டுப் பிள்ளை. பன்னீர்ல குளிச்சுட்டு பால்சோறு சாப்பிடறவன்!"

"இல்லையே! நான் பச்சைத் தண்ணியிலதான் குளிக்கிறேன். உன்னை மாதிரியே சோறும் குழம்பும்தான் சாப்பிடறேன். உன் டிஃபன் பாக்ஸ்ல இருக்கற மாதிரி மிளகாப்பொடி தடவின இட்லிதான் என் டிஃபன் பாக்ஸ்லயும் இருக்கு!" என்றான் அழகேசன் சிரித்தபடி.

"நீ பேசுவடா! என்னை மாதிரி காசுக்குக் கஷ்டப்படற குடும்பத்தில பொறந்திருந்தாத்தானே உனக்கு வறுமையைப் பத்தித் தெரியும்?  காலணா, அரையணாவுக்குக் கூட என் அம்மாவும் அப்பாவும் சண்டை போட்டுப்பாங்க தெரியுமா?"

"எங்கப்பா அம்மா கூட  எத்தனையோ விஷயங்களுக்காகச் சண்டை போட்டுப்பாங்க!"

"எதுக்கு? காரை எடுத்துக்கிட்டு பீச்சுக்குப் போகறதா, இல்லை சினிமா டிராமாவுக்குப் போகறதாங்கறதுக்காகவா?" என்றேன் நான் ஆத்திரத்துடன்.

அழகேசன் கோபப்படவில்லை. என் நகைச்சுவையை ரசிப்பது போல் சிரித்து விட்டுப் போய் விட்டான்.

வாதத்தில் வென்று விட்டதாக நான் பெருமையாக உணர்ந்தாலும், அழகேசனிடம் நான் வீம்புக்காகப் பேசுவதாக எனக்குள் தோன்றிய எண்ணத்தை என்னால் உணர முடிந்தது.

அப்போது நாங்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தோம். பணம் என்பது வாழ்க்கையில் எப்போதுமே ஒரு பிரச்னையாக இருக்காது என்ற நிலையிலிருந்த குடும்பத்தில் பிறந்த அழகேசனுக்கும், தினசரி வாழ்க்கைக்காகப் போராடும் குடும்பத்தில் பிறந்த எனக்கும் எதனாலோ ஒரு நட்பு ஏற்பட்டு விட்டது.

ஆயினும் அழகேசனின் செல்வநிலையையும், என் வறிய நிலையையும் ஒப்பிட்டுப் பொறாமை கொண்டு அவனிடம்  என் பொறாமையை வெளிப்படுத்தும் விதத்தில் அவ்வப்போது பேசி என் ஆற்றாமையைத் தீர்த்துக் கொள்வேன் நான்.

அழகேசன் வசதிகளை அனுபவிக்கும் நிலையில் இருந்தாலும் அவன் அவற்றை அனுபவிப்பதில் அதிக ஈடுபாடில்லாமல் என் போன்ற நண்பர்களுடன் பழகுவதையே அதிகம் விரும்பினான் என்பது அப்போதே என் உள்மனதுக்குப் புரிந்திருக்க வேண்டும். ஆயினும் மேலோங்கி நின்ற என் பொறாமை அவ்வப்போது வெளிப்பட்டு வந்தது. 

ஆனால் அவன் என் பேச்சால் காயப்படாமல் என்னிடம் தொடர்ந்து காட்டிய அன்பு காலப்போக்கில் என் மனதையும் மாற்றி அவனிடம் இயல்பாகப் பழக வைத்து விட்டது.

காலம் என்பது ஒரு சமன் செய்யும் கருவி என்று சொல்வார்கள். எங்கள் இருவர் விஷயத்திலும் காலம் அதைத்தான் செய்தது.

படித்து, நல்ல வேலையில் சேர்ந்து, பணம் சம்பாதித்து நான் ஒரு வசதியான நிலைக்கு வந்து விட்டேன்.

ஆனால் அழகேசன் நிலை தலைகீழாக மாறி விட்டது. அவன் படிப்பை முடிக்குமுன்பே அவன் தந்தையின் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் அவர் எல்லாவற்றையும் இழந்து சாதாரண நிலைக்கு வந்து விட்டார்.

அழகேசனுக்கு நல்ல வேலை கிடைக்கவில்லை. குறைந்த சம்பளித்தில்  வேலை பார்த்துக் கொண்டு ஏதோ ஒரு வகையில் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தான்.

எனக்கும் அழகேசனுக்கும் இடையிலான நட்பு அப்படியேதான்இருந்தது.

அவன் வசதியாக இருந்தபோது அவனிடம் பொறாமையுடன் இருந்த குற்ற உணர்வு எனக்கு இருந்தாலும், எங்கள் நிலை மாறியபோதும், அவனுடன் தொடர்ந்து நட்புடன் இருப்பதில் எனக்கு ஒரு பெருமையும், திருப்தியும் இருந்தது.

வசதியாக வாழ்ந்து விட்டு இப்போது ஒரு சாதாரண நிலைக்கு வந்து விட்டது பற்றி வருத்தம் இல்லையா என்று ஒருமுறை அழகேசனிடம் நான் கேட்டேன்.

"எனக்கு அப்படி ஒண்ணும் தெரியல. நமக்கு எது கிடைக்குதோ அதை அப்படியே ஏத்துக்கறதுதான் என்னோட பழக்கம். தினமும் கோவிலுக்குப் போவேன்னு உனக்குத் தெரியுமே. கோவில்ல துளசி கொடுப்பாங்க. சில சமயம் துளசி புதுசா, பச்சையா இருக்கும், வாயில போட்டாலே விறுவிறுன்னு இருக்கும். சில நாள் துளசி  வாடி இருக்கும். கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் சாப்பிடணும். ஆனா பிரசாதம்னு நினைச்சு அதை அப்படியே ஏத்துக்கறோம் இல்ல, அது மாதிரிதான் வாழ்க்கையில நமக்கு நடக்கற விஷயங்களும். சின்ன வயசிலேயே என் அம்மா எனக்கு இதைச் சொல்லிப் புரிய வச்சிருக்காங்க. அதனாலதான் என்னால எல்லாத்தையும் இயல்பா எடுத்துக்க முடியுதுன்னு நினைக்கிறேன்!" என்றான் அழகேசன்.

இப்படிப்பட்ட மனப்பான்மை கொண்டவனிடம் ஒரு காலத்தில் பொறாமை கொண்டு இருந்திருக்கிறேனே என்பதை நினைத்து அவமானமாக உணர்ந்தேன்.

அரசியல் இயல்
அதிகாரம் 63
இடுக்கண் அழியாமை  (துன்பத்தால் அழிந்து போகாமல் இருத்தல்)

குறள் 629:
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.

பொருள்:
இன்பம் வந்த காலத்தில் அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவர் துன்பம் வந்த காலத்தில் அந்தத் துன்பத்தால் வருந்த மாட்டார்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...