அதிகாரம் 41 - கல்லாமை

திருக்குறள் 
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 41
கல்லாமை

 401. நல்லமுத்துவின் சங்கடம் 

பொது நிகழ்ச்சிக்காக அந்த ஊருக்கு வரும் எவருமே நல்லமுத்துவின் வீட்டில்தான் தங்க வேண்டும் என்பது அந்த ஊரில் பின்பற்றப்பட்டு  வந்த எழுதப்படாத விதி.

நல்லமுத்து அதிகம் படிக்காதவர் என்றாலும், ஊரிலேயே பெரிய செல்வந்தர், அதிக செல்வாக்கு நிறைந்தவர் என்பதுடன், எல்லோரிடமும் நன்கு பேசி அவர்களின் நன்மதிப்பைப் பெறும் திறமை பெற்றவர் என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷயம்.

எனவே அந்த ஊர்க் கோவிலில் ஆன்மிகச் சொற்பொழிவாற்ற வந்த புலவர் அருள்நம்பியும் நல்லமுத்துவின் வீட்டில்தான் தங்கினார். 

பத்து நாள் சொற்பொழிவு. பத்து நாளும் நல்லமுத்துவின் வீட்டில்தான் தங்கினார் அருள்நம்பி. நல்லமுத்துவின் வீட்டில் வாயிலுக்கருகே இருந்த ஒரு தனி அறையில்தான் அருள்நம்பி தங்கி இருந்தார். அவர் வீட்டிலேயே சாப்பாடு.

பொதுவாக எந்த விருந்தினர் தன் வீட்டில் தங்கினாலும் அவர்கள் ஓய்வெடுக்கும் நேரம் தவிர மற்ற சமயங்களில் அவர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார் நல்லமுத்து. 

பல சமயம் தன் வீட்டு வாசலில் நாற்காலிகளைப் போட்டுக் கொண்டு நல்லமுத்துவும் அவர் வீட்டில் தங்கும் விருந்தினரும் பேசிக் கொண்டிருப்பார்கள். இருவரும் மகிழ்ச்சியுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதைத் தெருவில் செல்பவர்கள் வியப்புடன் பார்த்துக் கொண்டு செல்வார்கள்.    

அருள்நம்பி வந்த முதல் நாள், நல்லமுத்து அடிக்கடி அவர் அறைக்குச் செல்வதும், மாலையில் வாசலில் அவருடன் அமர்ந்து பேசுவதுமாக இருந்தார்.

ஆனால் இரண்டாம் நாள் நல்லமுத்து அருள்நம்பியிடம் அதிகம் பேச முனையவில்லை. வாசலில் அமர்ந்து பேசவும் இல்லை. அத்துடன் அதிக நேரம் வீட்டில் தங்காமல் எங்காவது வெளியே போய் வந்தபடி இருந்தார்.

அதற்குப் பின் வந்த நாட்களிலும் அப்படித்தான்.

சில நாட்களுக்குப் பின் தன் நண்பர் கஜேந்திரன் வீட்டுக்குச் சென்று அவருடன் பேசிக் கொண்டிருந்தார் நல்லமுத்து.

"ஏம்ப்பா! உன் வீட்டில யாராவது தங்கினா நீ எப்பவும் அவங்களோடதான் பேசிக்கிட்டிருப்ப. இப்ப வந்திருக்கிற அருள்நம்பியோட அதிகம் பேசற மாதிரி தெரியலியே! வாசல்ல நீங்க உக்காந்து பேசறதைக் கூட நான் பாக்கல!" என்றார் கஜேந்திரன்.

நல்லமுத்து சிறிது நேரம் மௌனமாக இருந்து விட்டு அப்புறம் சொன்னார். 

"இத்தனை நாளா என் வீட்டில வந்து தங்கினவங்ககிட்ட எல்லாம் நிறையப் பேசி இருக்கேன். ஆனா இவர் கிட்ட என்னால எதுவுமே பேச முடியல!" 

"ஏன்? அவர் அதிகம் பேச மாட்டாரா?"

"அப்படி இல்ல. அவர் பேசற விஷயங்கள் எனக்குப் பிடிபடல. நான் பொதுவா கோவில், சாமி, பக்தின்னு பேசினாக் கூட அவர் எனக்குப் புரியாம ஏதாவது சொல்றாரு. எனக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியல. நிறையப் படிச்சிருக்காருல்ல? எனக்குத் தெரிஞ்ச விஷயங்களை வச்சு என்னால எல்லார்கிட்டயும் பேசிச் சமாளிக்க முடியும்னு இத்தனை நாளா நினைச்சுக்கிட்டிருந்தேன். ஆனா இவர் கிட்ட என்னால பேச முடியல. இவரை மாதிரி படிச்ச ஆளுங்ககிட்டல்லாம் பேசணும்னா நான் இனிமே போய்ப் படிச்சுட்டுத்தான் வரணும் போலருக்கு!" என்றார் நல்லமுத்து. 

குறள் 401:
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.

பொருள்:
நூல்களைப் படித்து நிறைவான அறிவைப் பெறாமல் ஒருவர் கற்றவரிடம் சென்று பேசுவது கட்டங்கள் இல்லாமல் தாயம் உருட்டி விளையாடுவது போல் ஆகும்.

402. நட்சத்திரப் பேச்சாளர்!

தொலைக்காட்சிகளில் வரும் பேச்சு நிகழ்ச்சிகளை அதிகம் பார்ப்பவர்களுக்கு முருகேஷ் என்ற பெயர் நன்கு பரிச்சயமாகி இருக்கும்.

பட்டிமன்றங்கள் உட்படப் பல பேச்சு நிகழ்ச்சிகளில் முருகேஷ் ஒரு நட்சத்திரப் பேச்சாளர் என்று கூறலாம்.

முருகேஷ் பேசுவதற்காக ஒலிபெருக்கியின் முன் வந்து நின்ற உடனேயே கைதட்டல் அரங்கைப் பிளக்கும். அவர் பேசும்போது ஒவ்வொரு வரிக்கும் ஒரு பெரிய சிரிப்பொலி அல்லது கைதட்டல் கிடைக்கும்.

சில சமயம் அவர் கைதட்டலை எதிர்பார்த்துச் சில வினாடிகள் மௌனம் காப்பார். அவருடைய சமிக்ஞையைப் புரிந்து கொண்டு பார்வையாளர்கள் கை தட்டுவார்கள்.

முருகேஷ் படித்தவர் இல்லை. சிறிய அளவில் ஒரு வியாபாரம் செய்து கொண்டிருந்தார். எப்படியோ தொலைக்காட்சி சானல்களின் பேச்சு நிகழ்ச்சிகளில் இடம் பிடித்து, பட்டிமன்றப் பேச்சாளராக வளர்ந்து, ஒரு  நட்சத்திரப் பேச்சாளர் என்ற அளவுக்கு உயர்ந்து விட்டார்.

அவரது தொலைக்காட்சிப் புகழின் விளைவாக அவர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் பேச அழைக்கப்பட்டார்.

'சிடி சிடிசன்ஸ் கிளப்' ஆண்டு விழாவுக்கு சிறப்புப் பேச்சாளராக முருகேஷை அழைப்பது என்று அந்த கிளப்பின் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது. செயற்குழுவின் ஒன்பது உறுப்பினர்களில் மூன்று பேர் மட்டும் இந்த யோசனையை எதிர்த்தார்கள்.

"நம் கிளப் உறுப்பினர்களில் பெரும்பாலோர் நன்கு படித்தவர்கள். பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இவர்களெல்லாம் முருகேஷின் பேச்சை ரசிப்பார்களா?" என்றார் ஒரு மூத்த உறுப்பினர்.

"தொலைக்காட்சி பார்ப்பவர்களில் படித்தவர்கள் இல்லையா? அவர்களெல்லாம் அவர் பேச்சை ரசிக்கிறார்களே! முருகேஷ் பேசப் போவது ஒரு பொதுவான தலைப்பில்தான். அதை எல்லோரும் ரசிப்பார்கள்" என்றார் செயலாளர்.

முருகேஷுக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு 'விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும்.'

"நீங்க வழக்கமா பேசற மாதிரி இயல்பாப் பேசுங்க!" என்றார் செயலாளர்.

முருகேஷ் அறிமுகப்படுத்தப்பட்டதும், பார்வையாளர்கள் அவரை மெலிதான கைத்தட்டலுடன் வரவேற்றனர்.

"எனக்கு விஞ்ஞானமும் தெரியாது, மெய்ஞ்ஞானமும் தெரியாது. அப்படீன்னா, நான் எப்படி இந்தத் தலைப்பைப் பத்திப் பேசப் போறேன்னு பாக்கறீங்களா?" என்று துவங்கிய முருகேஷ் சில வினாடிகள் மௌனமாக இருந்தார்.

பார்வையாளர்கள் கிணற்றில் கல் போட்டதுபோல் அமைதியாக இருந்தனர். இதுவே தொலைக்காட்சி நிகழ்ச்சியாக இருந்திருந்தால், பார்வையாளர்கள் பெரிதாகச் சிரித்துத் தங்கள் எதிர்பார்ப்பை வெளிக்காட்டி இருப்பார்கள்!

"ஆனால் எங்கிட்ட வேற ஒரு ஞானம் இருக்கு. அந்த ஞானத்தைப் பயன்படுத்தித்தான் நான் பேசப் போறேன். அது என்ன ஞானம் தெரியுமா?"

மீண்டும் ஒரு இடைவெளி விட்டார் முருகேஷ். பார்வையாளர்களிடம் எந்தச் சலனமும் இல்லை.

"அதுதான் அஞ்ஞானம்!" என்றார் முருகேஷ் அகலமாகப் புன்னகை செய்தபடி.

'வழக்கமாக இந்த இடத்தில் பலத்த சிரிப்பும், பெரிய கைதட்டலும் எழுந்திருக்க வேண்டும். இவர்கள் என்ன இப்படி இருக்கிறார்கள் கல்லுளி மங்கன்களாக!' என்று மனதுக்குள் நொந்து கொண்டார் முருகேஷ்.  .

தொடர்ந்து அவர் பேசிய அரை மணி நேரமும் இப்படித்தான் கழிந்தது. விஞ்ஞானம் பற்றியும் தெரியாமல்,மெய்ஞ்ஞானம் பற்றியும் அறியாமல், ஏதோ ஒரு வகையில் பேசிப் பார்வையாளர்களைக் கவர்ந்து விடலாம் என்று நினைத்த முருகேஷுக்குப் பெரும் ஏமாற்றம்தான் கிடைத்தது.

சில நிமிடங்களில் அவருடைய தன்னம்பிக்கை தேய்ந்து அவருக்குப் பதற்றம் ஏற்படத் தொடங்கியது. தட்டுத் தடுமாறியபடி ஒரு வழியாகப் பேசி முடித்தார்.

ஒரு மணி நேரம் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்தும், அரை மணி நேரம் பேசுவதே அவருக்குப் பெரும் பாடாக இருந்தது. ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே இருந்து விட்டு, அரை மணி நேரம் ஆனதும் பேச்சை முடித்துக் கொண்டார்.

அவர் பேச்சை முடித்ததும் மரியாதை நிமித்தமான கைதட்டல் மட்டும் ஒப்புக்கு எழுந்தது.

'இனிமே ஆடியன்ஸ் வகை தெரியாம இப்படி வந்து மாட்டிக்கக் கூடாது!" என்று மனதுக்குள் தீர்மானம் செய்து கொண்டார் முருகேஷ்.

'செயற்குழு உறுப்பினர்களின் காட்டமான விமர்சனத்தை எப்படிச் சமாளிக்கப் போகிறோம்?' என்று கவலைப்பட்டபடியே நன்றி சொல்ல எழுந்தார் கிளப்பின்  செயலாளர்.

குறள் 402:
கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.

பொருள்:
கற்றவர் அரங்கில் கல்லாதவர் பேச விரும்புவது மார்பகங்கள் வளராத பெண் காதலில் ஈடுபட விரும்புவது போன்றது.

403. என்னை விட்டு விடுங்கள்!

தான் படிக்காதவன் என்ற உணர்வு ராஜாங்கத்துக்கு எப்போதுமே உண்டு. 

நான்கைந்து  பேர் கூடிப் பேசிக் கொண்டிருக்கும்போது அதில் ஓரிருவர் படித்தவர்களாக இருந்தால் ராஜாங்கம் அந்தக் குழுவின் பேச்சில் கலந்து கொள்ள மாட்டான். 

அவர்களில் ராஜாங்கத்துக்குத் தெரிந்தவர்கள்  யாராவது இருந்து, அவர்கள் அவனைக் கூப்பிட்டால் கூட, "இல்ல. வேலை இருக்கு. ஒரு இடத்துக்குப் போகணும்!" என்று சொல்லி நழுவி விடுவான். 

அவனுடைய நண்பர்களில் விஸ்வநாதன் மட்டும்தான் படித்தவன். அவனிடம் மட்டும் ராஜாங்கம் இயல்பாகப் பேசுவான். அவனும் ராஜாங்கத்தின் மனநிலையைப் புரிந்து கொண்டு அவனிடம் இயல்பாகப் பேசுவான். 

அப்படியும், சில சமயங்களில் விஸ்வநாதன் பேசும் சில விஷயங்கள் அவனுக்குப் புரியாவிட்டால், "இதெல்லாம் எனக்கு எப்படிப்பா தெரியும்? நான் என்ன உன்னை மாதிரி படிச்சிருக்கேனா என்ன?" என்பான் ராஜாங்கம்.

ருநாள் ராஜாங்கம் விஸ்வநாதன் வீட்டுக்குச் சென்றபோது, அங்கே விஸ்வநாதனின் கல்லூரி நண்பர்கள் சிலர் வந்திருந்தனர்.

"சரி. நான் அப்புறம் வரேன்!" என்று கிளம்ப முயன்ற ராஜாங்கத்தை விஸ்வநாதன் தடுத்து நிறுத்தி அங்கேயே இருக்கச் செய்தான். வேறு வழியில்லாமல் ராஜாங்கம் அவர்களுடன் அமர்ந்து கொண்டான்.

விஸ்வநாதனும், அவனுடைய நண்பர்களும் பல விஷயங்களைப் பற்றிப் பேசினர். அவற்றில் பலவற்றைப் பற்றி ராஜாங்கத்துக்கும் ஓரளவு தெரியும் என்றாலும் அவன் எதுவும் பேசாமல் அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

சில சமயம் தலையாட்டியதையும், இலேசாகச் சிரித்ததையும் தவிர ராஜாங்கம் எதுவுமே சொல்லவில்லை. 

"நீங்க என்ன சொல்றீங்க?" என்று ஓரிரண்டு முறை அவனிடம் யாராவது கேட்டபோதும் மௌனமாகச் சிரித்ததோடு சரி. 

சற்று நேரம் கழித்து அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினான் ராஜாங்கம்.

றுநாள் ராஜாங்கம் விஸ்வநாதனைச் சந்தித்தபோது, "என்னடா நேத்திக்கு என்னை உன் நண்பர்கள் கிட்ட மாட்டி விட்டுட்ட? அவங்க என்னைப்  பத்தி ரொம்ப மட்டமா நினைச்சிருப்பாங்க!" என்றான் ராஜாங்கம்.

"அதுதான் இல்லை. அவங்க உன்னைப் பத்தி ரொம்ப உயர்வா சொன்னாங்க. 'உன் நண்பர் ரொம்பப் பணிவாவும், அடக்கமாவும் இருக்காரே!' ன்னு பாராட்டினாங்க" என்றான் விஸ்வநாதன்.

"நான் படிக்காதவன்னு அவங்களுக்குத் தெரிஞ்சிருக்காது!"

"ஓரளவு தெரிஞ்சிருக்கும். உன் நண்பர் என்ன படிச்சிருக்கார்னு அவங்க கேட்டப்ப 'அவன்  நம்மை மாதிரி காலேஜில படிச்சவன் இல்ல. பள்ளிப்படிப்போட நிறுத்திட்டான்'னு சொன்னேன். அதுக்கு அவங்க, 'அதனால என்ன? ஒரு விஷயத்தைப் பத்திக் கொஞ்சம் தெரிஞ்சு வச்சுக்கிட்டு எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசறவங்கதான் அதிகம். இவரு எவ்வளவு அடக்கமா இருந்தாரு! நல்ல பண்புள்ளவரா இருக்காரு. அதை விட வேற என்ன வேணும்?'னு சொன்னாங்க. எனக்கே  ரொம்பப் பெருமையா இருந்ததுன்னா பாத்துக்கயேன்!" என்றான் விஸ்வநாதன்.

ராஜாங்கத்துக்கும் சற்றுப் பெருமையாகத்தான் இருந்தது. 

குறள் 403:
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.

பொருள்:
கற்றவர்கள் முன் ஏதும் பேசாமல் இருந்தால், கல்லாதவர்களும் நல்லவர்கள் (மதிக்கத் தக்கவர்கள்) என்றே கருதப்படுவர்.

404. கன்னையாவின் கவலை

சுகுமார் தன் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்வதற்கான ஒரு திட்டத்தை உருவாக்கி அதைத் தன் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளிடம் விவாதித்து அநேகமாகத் திட்டத்தை இறுதியாக்கி விட்டான். 

அவன் தன் அறையில் தனியாக இருந்தபோது, அவனைப் பார்க்க கன்னையா வந்தார்.

கன்னையா அவனுடைய நிறுவனத்தில் நீண்ட காலமாகப்  பணியாற்றுபவர். அதிகம் படிக்காதவர் என்றாலும், நிறுவனத்தின் ஒரு மூத்த அதிகாரிக்கு உள்ள மதிப்பும் மரியாதையும் அவருக்கு உண்டு. 

நிறுவனத்தின் பொது மேலாளர் உட்பட எல்லா மூத்த அதிகாரிகளும் அவரிடம் மரியாதையாகத்தான் நடந்து கொள்வார்கள்.

அவருக்கென்று ஒரு குறிப்பிட்ட வேலை கிடையாது. அவரே விருப்பப்பட்டு எந்த வேலையையும் செய்யலாம். யாரும் அவரிடம் எதுவும் கேட்க மாட்டார்கள்.

கன்னையாவும் மூத்த அதிகாரிகளின் வேலைகளில் தலையிடாமல் தொழிலாளர்களையும் கீழ்நிலை ஊழியர்களையும் வழி நடத்தும் வேலையை மட்டும் செய்து வந்தார். 

சில சமயம் மூத்த அதிகாரிகளிடம் சில யோசனைகளைப் பணிவுடன் சொல்லுவார். அவர்களும் அவர் சொல்வதைக் கேட்டுக் கொள்வார்கள். அவற்றை ஏற்பதா வேண்டாமா என்பதைப் பற்றி அவர்கள் முடிவு செய்து கொள்வார்கள்.

வாடிக்கையாளர்களையும், நிறுவனத்துக்குப் பொருட்கள் வழங்குபவர்களையும் கன்னையா அவ்வப்போது சென்று சந்திப்பார். அவர்கள் கூறும் நிறைகுறைகளைக் கேட்டறிந்து அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், சில சமயம் சுகுமாரிடமும் கூறுவார். 

கன்னையாவின் இந்தச் செயல்பாடு அவர்கள் நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்களிடமும், பொருட்கள் வழங்குபவர்களிடமும் இருந்த உறவை மேம்படுத்தியதால், சுகுமார் அதை ஊக்குவித்தான்.

"வாங்க கன்னையா!" என்று அவரை வரவேற்றான் சுகுமார்.

"சார்! கம்பெனியை விரிவுபடுத்தப் போறீங்கன்னு கேள்விப்பட்டேன்" என்றார் கன்னையா.

"ஆமாம் கன்னையா. அது விஷயமாத்தான் ஆலோசனை செஞ்சுக்கிட்டிருக்கேன். கிட்டத்தட்ட எல்லாம்  முடிவாயிடுச்சு!" என்றான் சுகுமார்.

"பாங்க் லோன் வாங்கித்தானே செய்வீங்க?" என்றார்  கன்னையா.

"ஆமாம். பெரிய ப்ராஜக்ட் ஆச்சே! நிச்சயம் பாங்க் லோன் வாங்கித்தான் செய்யணும். எதுக்குக் கேக்கறீங்க?" என்றான் சுகுமார்.

"இல்லை சார்!...சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. மார்க்கெட்ல பல பேர்கிட்ட பேசறதால நான் கேள்விப்பட்ட விஷயங்களைச் சொல்றேன். இப்ப நம்ப பொருளுக்கு போட்டி அதிகமாகிக்கிட்டிருக்காம். வெளிநாட்டிலேந்து வேற நம்ப பொருளை அதிகமா இறக்குமதி பண்ண ஆரம்பிச்சுருக்காங்களாம். கொஞ்ச நாள்ள விலை கூடக் குறைஞ்சுடும்னு சொல்றாங்க. இந்த சமயத்தில கடன் வாங்கித் தொழிலைப் பெரிசு பண்ணப் போறதா சொல்றீங்களே, அதுதான் உங்ககிட்ட சொல்லாலாம்னுட்டு..." என்று இழுத்தார் கன்னையா.

சுகுமார் கோபத்தை அடக்கிக் கொண்டு, "இங்க பாருங்க கன்னையா! வாடிக்கையாளர்களை நீங்க அடிக்கடி பாத்துப் பேசறதால அவங்க பிரச்னைகளை நம்மளால புரிஞ்சுக்கிட்டு அதுக்கு ஏத்த மாதிரி நம்பளால செயல்பட முடியுதுங்கறதுக்காகத்தான் நீங்க வாடிக்கையாளர்களைப் பாத்துப் பேசறதை நான் ஊக்குவிக்கறேன். ஆனா மார்க்கெட்ல யாராரோ பேசறதைக் கேட்டுக்கிட்டு வந்து எங்கிட்ட இப்படியெல்லாம் பேசாதீங்க. உங்க மேல நான் நிறைய மரியாதை வச்சிருக்கேன். அந்த மரியாதையைக் காப்பாத்திக்கங்க!" என்றான் கடுமையாக.

கன்னையா எதுவும் பேசாமல் அறையை விட்டு வெளியேறினார். 

ரண்டு மாதங்களுக்குப் பிறகு சுகுமாரின் விரிவாக்கத் திட்டம் கைவிடப்பட்டது. காரணம் சுகுமார் இரண்டு லட்ச ரூபாய் கட்டணம் கொடுத்து நியமித்திருந்த மார்க்கெட் சர்வே நிறுவனம் அவர்கள் தயாரிக்கும் பொருளுக்குச் சந்தையில் போட்டி அதிகரித்து விட்டதாகவும், அரசாங்கத்தின் இறக்குமதிக் கொள்கை மாற்றம் காரணமாக இறக்குமதிகள் அதிகமாகி விட்டதாகவும், அதனால் அவர்களுடைய தற்போதைய விற்பனையை நிலைநிறுத்திக் கொள்வதே கடினமாக இருக்குமென்றும், சப்ளை அதிகரித்து விட்டதால், விரைவில் விலையில் வீழ்ச்சி ஏற்படக்  கூடும் என்பதால், அவர்கள் லாபமும் பெரிதும் குறையும் என்றும் கணக்குகளுடன் கூடிய ஒரு விரிவான அறிக்கையை அளித்திருந்ததுதான்! 

குறள் 404:
கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்.

பொருள்:
கல்லாதவனுடைய அறிவு ஒருவேளை நன்றாகவே இருந்தாலும், கற்றவர்கள் அதை அறிவு என்று ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

405. இயந்திரக் கோளாறு

"சார்! இந்த பிரச்னை திரும்பத் திரும்ப வருது. மெஷினை ரீசெட் பண்ணினாத்தான் சார் சரியா வரும்!" என்றான் ஜீவா.

"உனக்கு எத்தனை வாட்டிப்பா சொல்றது? மெஷின் செட்டிங் மாசம் ஒரு தடவைதான் பண்ணணும். செட்டிங் பண்ணி ஒரு வாரம்தானேப்பா ஆச்சு?" என்றான் சூப்பர்வைசர் கோவிந்தராஜ். 

'"ஃபினிஷ் சரியா வரலியே சார்!" 

"அதுக்குத்தான் ரீபிராசஸ் பண்ணுன்னு சொல்லி இருக்கேன் இல்ல?"

"சார்! ஒவ்வொரு பீசையும் ரீபிராஸஸ் பண்ணினா எவ்வளவு நேரமாகும்? அதுக்கு ஒரு தடவை மெஷின் செட்டிங் பண்ணினா, நேரம் மிச்சம் ஆகும் இல்ல சார்? ப்ரொடக்‌ஷன் வேற குறையுது." 

"ப்ரொடக்‌ஷன் குறையறதைப் பத்தி எல்லாம் நீ பேசாதே! உனக்கு என்ன பீஸ் ரேட்லயா சம்பளம் கொடுக்கறாங்க? மாசச் சம்பளம்தானே!" என்றான் கோவிந்தராஜ் எகத்தாளமாக. 

கோவிந்தராஜ் அங்கிருந்து அகன்றதும், "இந்த ஆளுக்கு எதுவுமே தெரியாது. ஆனா எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுவான். நாம சொன்னாலும் கேட்டுக்க மாட்டான்!" என்று தன் சக தொழிலாளியிடம் அலுத்துக் கொண்டான் ஜீவா.

"ஏன், படிச்சிருக்காரு இல்ல?" என்றான் சக தொழிலாளி. 

"படிக்கவும் இல்ல ஒண்ணும் இல்ல. எங்கேயோ ஒரு ஃபேக்டரில ரெண்டு மூணு வருஷம் தொழிலாளியா இருந்திருக்கான். நம்ப முதலாளிக்கு தூரத்து சொந்தம். அவரு இந்தத் தொழிற்சாலையை ஆரம்பிச்சதும் சூப்பர்வைசர்ன்னு ஒரு வேலையை வாங்கிக்கிட்டு இங்க வந்துட்டான். நமக்குத் தெரிஞ்சது கூட இவனுக்குத் தெரியாது. இவனுக்கு மேல இருக்கறவங்க யாராவது வந்து சொன்னாத்தான் கேப்பான் போலருக்கு. அப்படி யாராவது வர வரையிலும் நாம போராடிக்கிட்டுத்தான் இருக்கணும் போலருக்கு!" என்று அலுத்துக் கொண்டான் ஜீவா.

தொழிற்சாலை விஸ்தரிப்புத் திட்டத்துக்காக ஒரு எஞ்சினியர் நியமிக்கப்பட்டிருப்பதாக அறிந்து ஜீவா கோவிந்தராஜிடம், "புதுசா வந்திருக்கிற எஞ்சினியர் இங்கே வந்து பாப்பாரா சார்?" என்றான்.

"அவரு புது ப்ராஜக்டுக்குத்தான் வந்திருக்காரு. இங்கல்லாம் வர மாட்டாரு!" என்றான் கோவிந்தராஜ். ஜீவாவுக்கு ஏமாற்றமாக இருந்தது.

இன்னொரு நாள் கோவிந்தராஜிடம் இதே பிரச்னை பற்றி ஜீவா விவாதித்துக் கொண்டிருந்தபோது அங்கு புதிய மனிதர் ஒருவர் வந்தார்.

'குட்மார்னிங் சார்!" என்று அவருக்கு மரியாதை தெரிவித்தான் கோவிந்தராஜ். அவர்களுக்கு அருகே வந்ததும், "என்ன ஏதாவது பிரச்னையா?" என்றார் அவர்.

"ஒண்ணுமில்ல சார். பொதுவாத்தான் ப்ரொடக்‌ஷன் பத்திப் பேசிக்கிட்டிருக்கோம்!" என்றான் கோவிந்தராஜ்.

அவர்தான் என்ஜினியராக இருக்க வேண்டும் என்று ஊகித்த ஜீவா, "சார்! ஒரு பிரச்னை தொடர்ந்து வந்துக்கிட்டிருக்கு. ஃபினிஷ் சரியா வர மாட்டேங்குது. மெஷினை ரீசெட் பண்ணணும்னு நினைக்கறேன். 'அது வேண்டாம், ரீபிராஸஸ் பண்ணு' ன்னு சார் சொல்றாரு. ரீபிராஸஸ் பண்ணினா நிறைய நேரமாகுது. ப்ரொடக்‌ஷன் குறையுது" என்றான்.

ஜீவாவை முறைத்துப் பார்த்த கோவிந்தராஜ், எஞ்சினியரிடம் திரும்பி, "சார்! மெஷினை  மாசத்துக்கு ஒரு தடவைதான் ரீசெட் பண்ணணும்ங்கறது முறை. இவன் தெரியாம பேசிக்கிட்டிருக்கான். நான் பாத்துக்கறேன் சார். நீங்க போங்க!" என்றான்.  

கோவிந்தராஜ் பேசியதை கவனிக்காதவர் போல் எஞ்சினியர் ஜீவாவைப் பாத்து, "மெஷினைத் திறந்து டூலைக் காட்டு" என்றார்.

ஜீவா திறந்து காட்டியதும் அருகில் சென்று அந்தப் பகுதியைக் கையால் தொட்டும் நகர்த்தியும் பார்த்த எஞ்சினியர், கோவிந்தராஜைப் பார்த்து, "இந்த பார்ட் தேஞ்சு போயிருக்கு. அதனால டூல் சீக்கிரமே பொசிஷனிலேந்து நழுவிடுது. இந்த பார்ட்டை மாத்தணும். இந்த மெஷின் தயாரிப்பாளருக்கு ஃபோன் பண்ணி வரச் சொல்லுங்க. அவங்க வந்து பாத்து பார்ட்டை மாத்திக் கொடுப்பாங்க. ஆனா இந்த பார்ட் மும்பையில இருக்கற அவங்க டெப்போலேந்துதான் வரணும்னு நினைக்கறேன். அதுக்கு சில வாரங்கள் ஆகலாம். அது வரைக்கும் இவர் சொல்றபடி மெஷின் ரீசெட்டிங் பண்றதுதான் வழி!" என்று சொல்லி ஜீவாவைப் பார்த்துப் புன்னகைத்தார். 

கோவிந்தராஜ் முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டு, "சரி சார்!" என்றான். 

குறள் 405:
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.

பொருள்:
கல்லாதவன் ஒருவன் தன்னைத்தானே மதித்துப் பேசிக் கொள்ளும் பெருமை  கற்றவருடன் பேசும்போது அழிந்து விடும்.

406. செல்வத்தின் வருத்தம்

ரங்கதுரையின் குடும்பம் அந்த ஊரிலேயே மிகவும் செல்வம் மிகுந்த குடும்பம். செழிப்பான நிலம், தோட்டம், தென்னந்தோப்பு, அரண்மனை போன்ற வீடு என்று ரங்கதுரை ஒரு ஜமீன்தாரைப் போல் வாழ்ந்தவர்.

அவருடைய செல்வம் அவருக்கு செல்வாக்கையும் பெற்றுத் தந்தது. அவரைக் கலந்து பேசாமல் ஊரில் எந்த ஒரு பொதுக் காரியமும் நடந்ததில்லை.  

ஆனால் அவர் காலத்துக்குப் பின் நிலைமை மாறி விட்டது. அவருடைய நான்கு பிள்ளைகளில் மூவர் படித்து வெளியூருக்கு வேலைக்குச் சென்று விட்டனர். 

அவருடைய இரண்டாவது மகன் செல்வம் மட்டும் பள்ளிப் படிப்பையே முடிக்காததால் அந்த ஊரிலேயே இருந்தான். 

ரங்கதுரையின் மறைவுக்குப்பிறகு நான்கு சகோதரர்களும் பங்கு பிரித்துக் கொண்டனர். நிலங்களைப் பங்கு பிரித்துக் கொண்ட பின், வீட்டை விற்று வந்த பணத்தை நால்வரும் பிரித்துக் கொள்ள, செல்வம் தன் பங்குக்குக் கிடைத்த பணத்தில் ஒரு சிறிய வீட்டை வாங்கிக் கொண்டு அதில் இருந்தான். தன் பங்குக்குக் கிடைத்த நிலத்தில் கிடைத்த வருமானத்தில் சுமாரான வசதியுடன் வாழ்க்கையை ஓட்டி வந்தான்.

அந்த ஊரில் செல்வத்துக்கு நெருக்கமானவன் அவன் நண்பன் முத்து மட்டும்தான். 

செல்வம் முத்துவின் வீட்டுக்குப் போனபோது முத்து வெளியே கிளம்பிக் கொண்டிருந்தான்.

"எங்கேயோ கிளம்பிக்கிட்டிருக்கே போலருக்கே!" என்றான் செல்வம் .

"வேற எங்கே போவேன்? வயக்காட்டுக்குத்தான். நடவு வேலை நடக்குது இல்ல? நான் அங்க போய் நின்னாத்தான் வேலை நடக்கும்!" என்றான் முத்து. 

"எனக்கு இந்த வேலை இல்ல. எங்கப்பா காலத்திலேந்தே குத்தகைக்காரங்கதான் பாத்துக்கறாங்க!"

"உன் வழி வேறப்பா. நீ பணக்கார வீட்டுப் பிள்ளை!" என்றான் முத்து சிரித்தபடி.

"இந்தக் கிண்டல்தானே வேணாங்கறது. என் நிலைமை என்னன்னு உனக்குத் தெரியாதா?" என்ற செல்வம், "சரி வா. நானும் உன் கூட வரேன். பேசிக்கிட்டே போகலாம்" என்று அவனுடன் நடந்தான்.

"முத்து. நீ என் நண்பன். உன்கிட்டத்தான் நான் மனம் விட்டுப் பேச முடியும். எங்கப்பா காலத்தில எங்க குடும்பத்துக்கு எவ்வளவு மதிப்பு இருந்தது! இப்ப ஊர்ல ஒரு பய என்னை மதிக்கறதில்ல. ஒரு பொதுக் காரியத்துக்கும் என்னைக் கூப்பிடறதில்ல. ஊர்ப் பொதுக் கூட்டத்தில நான் ஏதாவது யோசனை சொன்னா கூட அதை யாரும் காதுல போட்டுக்கறதில்ல."

"என்ன செய்யறது? உலகம் பணம் இருந்தாத்தான் மதிக்குது. உன் அப்பா காலத்தில உன் குடும்பம் ஊரிலேயே ரொம்ப பணக்காரக் குடும்பம். இப்ப உங்க குடும்பத்தில எல்லாரும் பங்கு பிரிச்சுக்கிட்டப் பறம் உன் நிலைமை கொஞ்சம் இறங்கிடுச்சே! அதான் அப்படி நடந்துக்கறாங்க போலருக்கு, விடு!" என்றான் முத்து.

"அது இல்லடா காரணம். நானும் முதல்ல அப்படித்தான் நினைச்சேன். ஆனா ஊர்லேந்து என் அண்ணன் தம்பிங்கல்லாம் அப்பப்ப இங்கே வராங்க இல்ல, அவங்களுக்கு ஊர்ல எல்லாரும் மதிப்புக் கொடுத்துப் பேசறாங்களே!"

"வெளியூர்லேந்து வந்திருக்காங்களேங்கற மரியாதைக்காக இருக்கும்."

"இல்ல. அவங்க படிச்சிருக்காங்க. அதனாலதான் அவங்களை மதிக்கிறாங்க. நான் படிக்காதவங்கறதால நான் எதுக்கும் லாயக்கு இல்லாதவன்னு நினைக்கறாங்க போலருக்கு!" என்றான் செல்வம். 

"நான் அப்படி நினைக்கலேடா!" என்றான் முத்து செல்வத்தின் தோளில் தன் கையை வைத்து அழுத்தி. 

"நீ அப்படி நினைக்காட்டாலும், உண்மை அதுதானே!" 

முத்து தன் வயலில் நடக்கும் வேலைகளை கவனித்து வேலை செய்பபவர்களுக்கு அவர்கள் செய்ய வேண்டிய வேலை விவரங்களைச்  சொல்லிக் கொண்டிருந்தபோது, செல்வம் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தான்.

சிறிது நேரம் கழித்து செல்வம் இருக்குமிடத்துக்கு வந்த முத்து, "வா, போகலாம்!" என்றான்.

"ஆமாம் அந்தப் பக்கமா ஒரு நிலம் இருக்கே, அதுவும் உன்னோடதுதானே? ஏன் அது மட்டும் காய்ஞ்சு கிடக்கு?" என்றான் முத்து.

"அதில எதுவும் வளராது. நான் முயற்சி பண்ணிப் பாத்துட்டு விட்டுட்டேன். அது களர் நிலம்" என்றான் முத்து.

"என்னை மாதிரி போலருக்கு!" என்றான் செல்வம் சிரித்தபடி.

குறள் 406:
உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.

பொருள்:
கல்லாதவர் உயிரோடு இருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரேயன்றி, அவர் எதுவும் விளையாத களர் நிலத்துக்கு ஒப்பானவ.

407. வழிகாட்டி

ரெண்டு ப்ரொஃபஸர்கள் நமக்கு கிளாஸ் எடுக்கறாங்களே, அதில யாரை உனக்குப் பிடிச்சிருக்கு?'' என்று கேட்டாள் கலா.

''இதில என்ன சந்தேகம்? பாஸ்கர்தான்னு நம்ம கிளஸ்ஸ்ல எல்லாரும் சொல்லுவாங்களேடி!'' என்றாள் அனு.

''நானும் முதல்ல அப்படித்தான் நினைச்சேன். ஆனா இப்ப எனக்கு வேற  மாதிரி தோணுது'' என்றாள் கலா.

''என்ன தோணுது?''

''வெளிப்படையா சொல்லணும்னா, பாஸ்கர்கிட்ட கவர்ச்சியான தோற்றம் இருக்கு. அவர் நல்லா உடை உடுத்திக்கறார். கண்ணாடி போட்டிருந்தா கூட அழகான ஃபிரேமை செலக்ட் பண்ணி கண்ணாடி அவருக்குக் கூடுதல் அழகு கொடுக்கற மாதிரி செஞ்சிக்கிட்டிருக்காரு. சுந்தர் இதுக்கு நேர்மாறா இருக்காரு.''

'ஆமாம். பேருதான் சுந்தர். ஆனா சுண்டெலி மாதிரி மூஞ்சி!'' என்றாள் அனு சிரிப்புடன்.

''அதைத்தான் நான் சொல்ல வரேன். நாம தோற்றத்தை வச்சு எடை போடறோம். எனக்கென்னவோ பாஸ்கர்கிட்ட அந்த அளவுக்கு விஷயம் இல்லேன்னு தோணுது'' என்றாள் கலா.

''போடி. தோற்றம், நடை, உடை, பாவனை, பேச்சு எல்லாம்தான் முக்கியம். பாஸ்கரோட வகுப்பு கலகலப்பா இருக்கும், நிறைய ஜோக் எல்லாம் சொல்லுவாரு. சுந்தரோட வகுப்பு போரா இருக்கும். மனுஷன் சப்ஜெக்டை விட்டு அந்தண்டை இந்தண்டை போக மாட்டாரு. நல்லா உடை உடுத்திக்கவும் மாட்டாரு. ஒத்தரோட தோற்றமும் போர், பேச்சும் போர்னா, அவரை நமக்கு எப்படிப் பிடிக்கும்?' என்றாள் அனு.

''நான் சொல்றதும் நீ சொல்றதும் ஒண்ணுதான்!" என்றாள் கலா.

''அது சரி. எதுக்கு இந்த ஒப்பீடு இப்ப?'' என்றாள் அனு.

"நம்ம ப்ராஜக்டுக்கு கைட் யார்னு நாம தேர்ந்தெடுக்கணுமே, அதுக்காகத்தான் கேட்டேன்.''

''நல்ல வேளை! நம்ம கல்லுரியில நம் விருப்பத்தைக் கேக்கறாங்க. நான் பாஸ்கரைத்தான் தேர்ந்தெடுக்கப் போறேன். நிறைய பேர் பாஸ்கரைத்தான் தேர்ந்தெடுப்பாங்க. அதனால அவர் எனக்கு கைடா கிடைப்பாரான்னு தெரியல!'' என்றாள் அனு.

''எனக்கு அந்த பிரச்னை இல்லை. நான் சுந்தரைத்தான் தேர்ந்தெடுக்கப் போறேன்!'' என்றாள் கலா.

'நல்ல வேளை! நீ ப்ராஜக்டுக்கு வழிகாட்டியைத்தான் தேர்ந்தெடுக்கற, வாழ்க்கைத் துணைவரை இல்லை!" என்றாள் அனு, குறும்பாகச் சிரித்தபடி.

''ப்ரிசைஸ்லி, தட்ஸ் மை பாயின்ட்!'' என்றாள் கலா சிரித்துக்கொண்டே. 

''என்னடி இது. ப்ராஜக்ட் கொஞ்சம் கூட நகர மாட்டேங்குது! அடுத்ததா என்ன செய்யணும்னே புரியல'' என்றாள் அனு.

''உன் ப்ராஜக்ட் கைட் பாஸ்கர் கிட்ட உதவி கேக்க வேண்டியதுதானே?'' என்றாள் கலா.

"எத்தனையோ தடவை கேட்டுட்டேன். ஏதோ சொல்லி மழுப்பறாரு. தெளிவா சொல்ல மாட்டேங்கறாரு. அவருக்கே நிறைய விஷயம் தெரியலேன்னு நினைக்கிறேன்'' என்ற அனு, சற்றுத் தயங்கிவிட்டு, ''அவரைப் பத்தின உன்னோட மதிப்பீடு சரிதான்னு நினைக்கறேன், அவர் நுனிப்புல் மேயற ஆள்தான்!'' என்றாள்.  

குறள் 407:
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று.

பொருள்:
நுட்பமானதான, மாட்சி உடைய, ஆராயும் திறமை பெற்ற அறிவு இல்லாதவனுடைய அழகான தோற்றம் மண்ணால் அழகாகச் செய்யப்பட்ட பாவை போன்றது.

408. குப்பையிலிருந்து எரிவாயு

"இது ஒரு சின்ன ஊரு, ஆனா ஊர்ல இவ்வளவு குப்பை. எங்கேந்துதான் இவ்வளவு குப்பை வருமோ!" என்று அலுத்துக் கொண்டார் சுப்பையா.

''நகரமா இருந்தா குப்பையை எங்கேயாவது கொண்டு கொட்டி ஊரை சுத்தமா வச்சுப்பாங்க. கிராமத்தில இதையெல்லாம் யார் செய்யறது? பஞ்சாயத்துக்கு வருமானமும் கிடையாது, வேலை செய்ய ஆளும் கிடையாது'' என்றார் தனபால்.

''நான் இதுக்கு முன்னே இருந்த ஊர்ல குப்பையிலேந்து கேஸ் தயாரிச்சு ஊர் ஜனங்களுக்கே விநியோகம் பண்றாங்க. நீங்களும் அப்படிச் செய்யலாமே?'' என்றார் பாலமுருகன். அவர் சமீபத்தில்தான் வேறு ஊரிலிருந்து அந்த ஊர் அரசுப் பள்ளிக்கு மாற்றலில் வந்திருந்தார்.

''அப்படியா? அரசாங்கத்தில செஞ்சு கொடுப்பாங்களா?'' என்றார் சுப்பையா.

''அரசாங்கத்தில கேட்டா பணம் இல்லைம்பாங்க. உங்க ஊர்க்காரங்களே பணம் போட்டு ஆரம்பிக்கலாமே!'' என்றார் பாலமுருகன்.

''இந்த ஊர்ல ஒத்தரைத் தவிர மத்த எல்லாருமே வசதி இல்லாதவங்கதான். அதனால ஊர்க்காரங்களால சின்னத் தொகை கூடக் கொடுக்க முடியாது.''

'வசதியானவர் ஒத்தர் இருக்கார்னு சொன்னீங்களே, அவர் முதலீடு செய்வாரா?'' என்றார் பாலமுருகன்.

சுப்பையாவும், தனபாலும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்.

''சரி, வாங்க. அவர்கிட்ட போய் கேட்டுப் பாக்கலாம். நீங்களும் வாங்க'' என்றார் சுப்பையா பாலமுருகனிடம்.

மூவரும் சக்திவேல் வீட்டுக்குச் சென்றனர்.

''ஐயா, நம்ம ஊர்ல நிறைய குப்பை சேருதுல்ல? குப்பையிலேந்து  கேஸ் தயாரிக்கலாம்னு சார் சொல்றாரு. அவரு முன்னே இருந்த ஊர்ல அப்படி செஞ்சிருக்காங்களாம்'' என்றார் சுப்பையா.

பாலமுருகன் திட்டத்தை விளக்கினார்.

''எவ்வளவு செலவாகும்? யார் பணம் போடப் போறாங்க?'' என்றார் சக்திவேல்.

''ரெண்டு லட்சம் ரூபா முதலீடு தேவைப்படும். அரசாங்கத்திலேந்து மானியம் கிடைக்கும். அது எவ்வளவுன்னு நான் கேட்டுச் சொல்றேன். ஆனா அது அப்புறம்தான் வரும். ஊல்ல நிறைய பேர் கேஸ் பயன்படுத்தறாங்க. நாம தயாரிக்கற கேஸ் விலை அவங்க இப்ப வாங்கற விலையில பாதி விலைதான் இருக்கும். அதனால நிறைய பேர் வாங்குவாங்க. நமக்கும் நல்ல லாபம் கிடைக்கும். போட்ட முதலை மூணு வருஷத்தில எடுத்துடலாம். உங்களை நான் அந்த ஊருக்கு அழைச்சுக்கிட்டுப் போய்க் காட்டறேன். நீங்களே அவங்ககிட்ட  விவரம் எல்லாம் கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்'' என்று பாலமுருகன் உற்சாகமாக விளக்கினார்.

''இருங்க. நான் எதுக்கு அங்கே வரணும்?'' என்றார் சக்திவேல்.

''ஐயா! நீங்க இதில முதலீடு பண்ணணும்னு கேக்கத்தான் வந்திருக்கோம்!' என்றார் சுப்பையா.

''அப்படியா? அதானே பாத்தேன், எதுக்கு இந்த விவரங்களையெல்லாம் வாத்தியார் நம்மகிட்ட சொல்றாருன்னு!'' என்றார் சக்திவேல், சிரித்துக் கொண்டே.

மற்ற மூவரும் மௌனமாக இருந்தார்.

''இங்க பாருங்க வாத்தியாரே! எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது. எனக்குத் தெரிஞ்சது வட்டித் தொழில் மட்டும்தான். அதிலேயும் நீங்க கேக்கறது பெரிய தொகை. சரி. நான் ரெண்டு லட்ச ரூபா கொடுத்துடறேன். நான் சொல்ற வட்டியை மாசாமாசம் கொடுத்துடுங்க. முதலை எப்ப முடியுதோ அப்ப திருப்பிக் கொடுங்க. அது வரையிலும் மாசா மாசம் வட்டி கொடுத்துக்கிட்டிருந்தீங்கன்னா ஒரு பிரச்னையும் இல்ல'' என்றார் சக்திவேல்.

'சார். அது அப்படி இல்ல. இதில வருமானம் வர அஞ்சாறு மாசம் ஆகலாம். நீங்க முதலீடு செஞ்சா இந்தத் தொழிற்சாலையே உங்களோடதுதான். எல்லா லாபமும் உங்களுக்குத்தான்...''

''அதெல்லாம் எதுக்கு வாத்தியாரே? மாசா மாசம் வட்டி கொடுக்க முடியுமா உங்களால? எனக்கு அது மட்டும்தான் தெரியணும்!'' என்றார் சக்திவேல்.

மூவரும் சக்திவேல் வீட்டை விட்டு வெளியே வந்ததும், ''கொஞ்சமாவது படிச்சிருந்தார்னா, நாம சொல்றதைக் கேட்டுப் புரிஞ்சக்கிட்டு நிச்சயம் இதுக்கு ஒத்துக்கிட்டிருப்பாரு. ஆனா, நாம சொல்றதைக் கேக்கவே மாட்டேங்கறாறே! இவரு மாதிரி ஆளுங்ககிட்ட கடவுள் பணத்தைக் கொடுத்து வச்சிருக்காரே, அதுதான் கொடுமை!'' என்றார் பாலமுருகன்.

குறள் 408:
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.

பொருள்:
கல்லாதவரிடம் இருக்கும் செல்வம் நல்லவரிடம் இருக்கும் வறுமையை விடக் கொடியதாகும்.

409. மாற்று ஏற்பாடு!

"உன் அப்பா இந்த ஊருக்கு ஒரு நல்லது செய்யணுங்கறதுக்காக இந்தச் சின்ன ஊர்ல இப்படி ஒரு தொழிற்சாலையை ஆரம்பிச்சாரு. நீ அதை மூடப் பாக்கறியே!" என்றார் சிவசாமி.

ஊரில் செல்வாக்குள்ளவர் என்பதால் அவரைக் கலந்தாலோசிக்காமல் ஊரில் யாரும் எதுவும் செய்வதில்லை.

"என் அப்பா பாலிடெக்னிக்கில படிச்சாரு. அவருக்கு எஞ்சினியரிங்கில ஆர்வம் இருந்தது. அதனால தன் சொத்தையெல்லாம் வித்து இந்த ஸ்டீல் ரோலிங் மில்லை ஆரம்பிச்சாரு. அது ஓரளவுக்கு வளர்ந்து இன்னிக்கு முப்பது பேர் அதில வேலை செய்யறாங்க. ஓரளவுக்கு வருமானமும் வருதுதான். 

"ஆனா நான் படிக்கல. எனக்கு இந்தத் தொழிற்சாலை விஷயம் எதுவும் புரியறதில்ல. மானேஜரை நம்பி நான் எல்லாம் செய்ய வேண்டி இருக்கு. அவர் சொல்றது சரியா தப்பான்னு கூட எனக்குப் புரியறதில்ல. இந்தக் கணக்கு வழக்கும் எனக்குப் புரியல. 

"ஒரு மாசம் நிறையப் பணம் வருது, ஒரு மாசம் குறைச்சலா வருது. கேட்டா மார்க்கெட்ல இரும்பு விலை குறைஞ்சுடுச்சுங்கறாங்க, இல்லேன்னா கலெக்‌ஷன் குறைச்சல்ங்கறாங்க. என்னை ஏமாத்தறாங்களான்னு கூட என்னால கண்டு பிடிக்க முடியல. 

"மெஷினெல்லாம் பழசாயிடுச்சு. ஆனா ஜெர்மன் மெஷின்கறதால அதையெல்லாம் ஓரளவுக்கு நல்ல விலைக்கு வாங்கிக்கறேன்னு வெளியூர்ல ஃபாக்டரி வச்சுருக்கறவரு ஒத்தரு சொல்லி இருக்காரு. நான் தொடர்ந்து ஓட்டினா ரெண்டு மூணு வருஷத்தில புது மெஷின் வாங்க வேண்டி இருக்கலாம். அதிலல்லாம் நான் முதலீடு செய்ய விரும்பல. 

"மெஷின்களை அவர்கிட்ட வித்துட்டு, நிலத்தையும் வித்தா 25 லட்ச ரூபா வரும். பணத்தை பாங்க்ல போட்டுட்டு மாசா மாசம் வட்டியை வாங்கிக்கிட்டு வீட்டில உக்காந்திருக்கலாம்" என்றான் குமார்.

"தொழிற்சாலையை நடத்தினா, அதை விட அதிக வருமானம் வருமேப்பா!"

"அதான் சொன்னேனே! என்னால அதையெல்லாம் பாத்துக்க முடியாது. எனக்கு வீடு இருக்கு, நிலம் இருக்கு. பாங்க்ல வர வட்டி எனக்குப் போதும்."

"30 பேர் வேலை செய்யறாங்களே, அவங்க கதி?"

"அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?" என்றான் குமார்.

குமாரின் தொழிற்சாலையில் வேலை செய்யும் கோவிந்தன், சிவசாமியைச் சந்தித்து, "என்னங்க, குமார் இப்படிப் பண்றேங்கறாரு?" என்றான்.

"நான் சொல்லிப் பாத்துட்டேன். கேக்கல. என்ன செய்ய முடியும்? உன் பையன் படிச்சுட்டு சென்னையில வேலை செய்யறானே, நீ அவனோட போய் இருந்துக்க வேண்டியதுதான்!" என்றார் சிவசாமி.

"அப்படி இல்லீங்க. மத்தவங்களும் பாதிக்கப்படறாங்களே! சரி. என் பையன்கிட்ட ஃபோன் பண்ணி அவன் யோசனையைக் கேக்கறேன்."

டுத்த நாளே கோவிந்தனின் மகன் கார்த்திக் சென்னையிலிருந்து கிளம்பி வந்து விட்டான். 

அடுத்த சில நாட்களில் ஊரில் பலரிடமும் கார்த்திக் பேசினான். 

முன்று நாட்களுக்குப் பிறகு சிவசாமியுடன் சென்று குமாரைச் சந்தித்தான் கார்த்திக்.

"குமார்! நீ உன் மெஷின்களையும், தொழிற்சாலை நிலத்தையும்  யார்கிட்டயும் விற்க வேண்டாம். 25 லட்ச ரூபாய் கொடுத்து இவனே உன் தொழிற்சாலையை வாங்கிப்பான். ஒரு மாசம் அவகாசம் மட்டும் கொடு!" என்றார் சிவசாமி.

"எப்படி? உன்கிட்ட அவ்வளவு பணம் இருக்கா என்ன?" என்றான் குமார் கார்த்திக்கிடம் வியப்புடன்.

"என்கிட்ட இல்லை ஐயா. ஆனா நான் ஒரு ஏற்பாடு செஞ்சிருக்கேன். இந்தத் தொழிற்சாலையை நடத்த ஒரு கூட்டுறவு சங்கம் ஆரம்பிக்கப் போறோம். இந்த ஊர்ல இருக்கற ஆயிரம் குடும்பங்களும் ஆளுக்கு 1000 ரூபா முதல் போடுவாங்க. அதில ஒரு 10 லட்சம் ருபா வரும். அதைத் தவிர இந்தத் தொழிற்சாலையில வேலை செய்யற 30 பேரும் ஆளுக்கு 10,000 ரூபா போடுவாங்க. அவங்கள்ள சில பேர் கிட்ட பணம் இல்லாட்டாலும் கடனோ ஏதோ வாங்கி முதலீடு செய்ய ஒத்துக்கிட்டிருக்காங்க. ஏன்ன அது அவங்க வாழ்க்கைப் பிரச்னை ஆச்சே! அதில ஒரு 3 லட்ச ருபா வரும். மீதி 12 லட்ச ரூபாயை நான் முதலீடு செய்யப் போறேன்" என்றான் கார்த்திக்.

"நீ வேலைக்குப் போய் ஒரு வருஷம்தானே ஆகியிருக்கும்? உங்கிட்ட அவ்வளவு பணம் இருக்கா?" என்றான் குமார்.

"இல்லதான். ஆனா நான் ஒரு நல்ல வேலையில இருக்கறதால பாங்க்ல எனக்கு 10 லட்ச ரூபா பர்சனல் லோன் கொடுப்பாங்க. கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் அடைக்கணும். சமாளிக்க முடியும்னு நினைக்கறேன். இன்னும் ரெண்டு லட்ச ரூபா குறையுது. அதை ஐயாவே முதலீடு செய்யறேன்னு சொல்லி இருக்காரு!" என்று சொல்லி சிவசாமியைப் பார்த்தான் கார்த்திக்.

"ஆமாம் குமார். இவன் பம்பரையில இதுவரை யாரும் படிச்சதில்ல. படிச்ச முதல் ஆளு இவன் தான். இவனை அவன் அப்பன் படிக்க வச்சது வீண் போகல!" என்றார் சிவசாமி. 

அவர் குமாரைப் பார்த்த பார்வையில், 'ஆனா படிச்ச பரம்பரையில வந்த நீ, படிக்காததால இப்படி ஒரு முடிவை எடுத்திருக்க பாரு!' என்று சொல்வது போல் இருந்தது.

குறள் 409:
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.

பொருள்:
உயர்ந்த குடியில் பிறந்தவராக இருந்தாலும் ஒருவர் கல்லாதவராக இருந்தால், தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்வி கற்றவரை விடப்  பெருமையில் குறைந்தவர்தான்.

410. புலன் விசாரணை!

குரு தொலைக்காட்சியில் ஏதோ திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தான். 

அவன் அப்பா தேவராஜனுக்குத் திரைப்படங்கள் பார்ப்பதில் அதிக ஆர்வம் இல்லை. 

"என்னடா படம் அது?" என்றான் தேவராஜன்.

"ஏழாம் அறிவு. நல்ல படம்ப்பா இது" என்றான் குரு, தான் அந்தப் படத்தைப் பார்ப்பதை நியாயப்படுத்தும் விதமாக. 

"ஏழாம் அறிவா? அறிவுங்கறது ஒண்ணுதானே? அதில ஏது ஏழாம் அறிவு , எட்டாம் அறிவெல்லாம்?"

"இல்லப்பா. நமக்கெல்லாம் ஆறறிவு இருக்குல்ல?"

"ஆறு அறிவா? எல்லாருக்கும் மண்டைக்குள்ள மூளைன்னு ஒண்ணுதானே இருக்கு?"

"கொஞ்சம் இருப்பா. படம் ஓடிக்கிட்டிருக்கு. நடுவில விளம்பரம் வரும் இல்ல, அப்ப சொல்றேன்" என்று குரு சொல்லிக் கொண்டிருக்கும்போதே விளம்பர இடைவேளை வந்து விட்டது.

"சொல்லு. தெரிஞ்சுக்கறேன். நான்தான் படிக்கலியே!" என்றான் தேவராஜன்.

"அப்பா! மூளைங்கறது ஒரு உறுப்பு. அறிவுன்னு சொல்றது நமக்கு இருக்கற... சக்திகளை, அதாவது... இப்ப ஐம்புலன்கள்னு சொல்றோம் இல்ல?"

"ஐம்புலன்னா?"

"கண், காது, மூக்கு, நாக்கு, தோல் இதைத்தான் புலன்கள்னு சொல்றோம்."

"அதுதான் எல்லோருக்கும் இருக்கே. ஆடுமாடு, பூச்சி, புழுக்கெல்லாம் கூட இருக்கே?"

"இல்லப்பா. புழு பூச்சிக்கெல்லாம் ஐம்புலன்கள் இருக்கறதா சொல்ல முடியாது."

"ஏன், அதுங்களும்தான் பாக்குது, சாப்பிடுது."

"அப்படி இல்லப்பா. சில உயிரினங்களுக்கு ஒரு அறிவு அதாவது தொடு உணர்ச்சி மட்டும்தான் இருக்கும் - உதாரணமா மரம், செடி, கொடி, புல், பூண்டு மாதிரி உயிர்கள்."

"சரி."

"மீன், நத்தை, சங்கு மாதிரி உயிர்களுக்குத் தொடு உணர்ச்சி, சுவை உணர்ச்சின்னு ரெண்டு அறிவுகள்தான் இருக்கு."

"அட, ஆச்சரியமா இருக்கே!" என்றான் தேவராஜன்.

தந்தையின் ஆர்வத்தால் உந்தப்பட்டு குரு உற்சாகமாகத் தொடர்ந்தான்.

"அப்புறம், எறும்பு, கரையான், அட்டை மாதிரி உயிர்களுக்கு சுவை, மணம், தொடு உணர்ச்சிங்கற மூணு புலனைறிவுகள் உண்டு. அடுத்த நிலையில, நண்டு, தும்பி, வண்டு மாதிரி உயிர்களுக்குப் பார்வையையும் சேர்த்து நான்கு புலனறிவுகள். மிருகங்கள், பறவைகளுக்கு கேட்கும் சக்தியையும் சேர்த்து ஐம்புலன்கள்."

"சரி. ஆறாவது அறிவுங்கறது?"

"அதுதான் சிந்திக்கிற சக்தி. அது மனுஷங்களுக்கு மட்டும்தான் இருக்கு."

"ஓ, அறிவுங்கறதில இவ்வளவு விதம் இருக்கா? எனக்குத் தெரியலியே!"

"ஆமாம்ப்பா. அப்புறம் ஏழாவது அறிவுன்னா.."

"வேண்டாம். நான் படிக்காததவன். எனக்கு ஆறாவது அறிவு இருக்கான்னே எனக்குத் தெரியல. மிருகங்களுக்கு இருக்கற அஞ்சு அறிவுதான் எனக்கும் இருக்கும் போலருக்கு. இப்ப ஏழாவது அறிவு எதுக்கு? விளம்பரங்கள் முடிஞ்சு படம் ஆரம்பிச்சுடுச்சு. நீ பாரு!" என்று சொல்லி எழுந்து சென்றான் தேவராஜன். 

குறள் 410:
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.

பொருள்:
அறிவு விளங்குவதற்குக் காரணமான நூல்களைக் கற்றவர்களுக்கும், கல்லாதவர்களுக்கும் உள்ள ஒப்புமை மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் உள்ள ஒப்புமையைப் போன்றது.

அறத்துப்பால்                                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...