"நிச்சயமா, சார்!" என்றான் ரத்னகுமார்.
"மூத்த அதிகாரி தனசேகர் உன்னோட வேலைகளைப் பத்தி விளக்கி, உனக்குப் பயிற்சி கொடுப்பார். அவர் சொல்றபடி நடந்துக்க."
"என்னப்பா, எல்லாரும் பதவி உயர்வு வேணும்னு ஆசைப்படுவாங்க. நீ என்னன்னா, பதவி உயர்வு கிடைச்ச ஒரு மாசத்துக்குள்ள, இந்தப் பதவி உயர்வு வேண்டாம், பழையபடி கிளார்க்காவே இருக்கேன்னு சொல்றியே!" என்றார் சோமசுந்தரம்.
"இல்லை, சார்! என்னால இந்தப் பொறுப்பை சரியா நிறைவேற்ற முடியும்னு எனக்குத் தோணல. கிளார்க்கா இருக்கறதே எனக்குத் திருப்தியா இருக்கு" என்றான் ரத்னகுமார்.
"உன் இஷ்டம்!"
"முட்டாளாடா நீ? கிடைச்ச புரொமோஷனை வேண்டாம்னுட்டு வந்திருக்க. பதவி உயர்வோட, அதிக சம்பளம், அதிகாரம், கௌரவம் எல்லாம் வருமே!" என்றான் ரத்னகுமாரின் நண்பன் சதானந்த்.
"எல்லாம் வரும். அதோட, தப்பான காரியங்களை செய்யறமேங்கற அவமான உணர்வும் வரும். அதோட என்னால வாழ முடியாது!"
"அவமான உணர்வு ஏன் வரணும்?"
"இத்தனை நாளா, ஒரு கிளார்க்கா, ஆஃபீஸ்ல உக்காந்து வேலை செஞ்சுக்கிட்டிருந்தேன். ஒரு அதிகாரியா என்னென்ன வேலைகள் செய்யணும்னு என்னோட சீனியர் எனக்குப் பயிற்சி கொடுத்தப்பத்தான் தெரிஞ்சுது."
"அப்படி என்ன வேலைகள்? ரொம்பக் கஷ்டமான வேலைகளா?"
"அரசாங்க அதிகாரிகளைப் பல விஷயங்களுக்காக அடிக்கடி பார்க்கணும், அவங்களுக்கு லஞ்சம் கொடுத்து, எங்க கம்பெனிக்கு வேண்டியதைச் செய்ய வைக்கணும். எங்ககிட்ட பொருட்கள் வாங்கற கம்பெனிகள்ள இருக்கற மூத்த அதிகாரிகளுக்கு, அவங்க ஆர்டர் கொடுத்ததுக்காக, கமிஷன்ங்கற பேரில, ரகசியமா லஞ்சம் கொடுக்கணும்!"
"லஞ்சம் வாங்கறவங்கதானேடா அவமானப்படணும்? உனக்கு என்ன அவமானம் வந்தது?"
"என்னடா இப்படிச் சொல்ற? சட்டத்துக்கும், நியாயத்துக்கும் விரோதமான எந்தச் செயலைச் செய்யறதுக்கும் வெட்கப்பட வேண்டாமா? வெட்கமோ, கூச்சமோ இல்லாம, என்னால அப்படிப்பட்ட காரியங்களைச் செய்ய முடியாது."
"சரி. என்ன செய்யப் போற? ஆயுசு முழுக்க கிளார்க்காவே இருக்கப் போறியா?" என்றான் சதானந்த்.
"இல்லை. சீக்கிரமே வேற ஒரு வேலையைத் தேடிக்கப் போறேன் - இது மாதிரி சங்கடங்கள் இல்லாத வேலையை" என்றான் ரத்னகுமார்.
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 102
நாணுடைமை
குறள் 1016:
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்
No comments:
Post a Comment