Saturday, May 29, 2021

488. காலம் வரும்!

பாஸ்கர் ஒரு வங்கியில் உதவி மானேஜராக இருந்தபோது நடந்த ஒரு சம்பவம் அவன் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு விட்டது.

மானேஜர் மூர்த்தி அன்று விடுப்பில் இருந்ததால், பாஸ்கர் அன்று பொறுப்பில் இருந்தான்.

ரோகிணி கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் என்ற ஒரு நிறுவனம் அந்த வங்கியில் நீண்ட நாட்களாகக் கணக்கு வைத்திருந்தது.

சமீபத்தில்தான் அவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய்க்கு பாங்க் காரன்ட்டி என்ற வசதி அந்த வங்கியின் மண்டல அலுவலகத்தால் அனுமதிக்கப்பட்டிருந்தது. அந்த காரன்ட்டியின் அடிப்படையில்தான் அவர்களால் அரசாங்கத்தின் டெண்டர்களில் பங்கேற்க முடியும்.

பாங்க் காரன்ட்டியை வழங்குவதற்கு ஈடாக அந்த நிறுவனம் இருபது லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்தைப் பிணையாக வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அந்த வசதி அனுமதிக்கப்பட்டிருந்தது.

அதற்கான அனுமதிக் கடிதம் மண்டல அலுவலகத்திலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்புதான் வந்திருந்தது. ரோகிணி கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் நிறுவனம் இன்னும் இதற்கான வங்கி ஆவணங்களில் கையெழுத்திடவில்லை. பிணைச் சொத்துக்கான பத்திரங்களை வங்கியில் ஒப்படைக்கவும் இல்லை.

அன்று ரோகிணி கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸின் பங்குதாரர்களில் ஒருவரான பார்த்திபன் வங்கிக்கு வந்து அரசாங்க டெண்டருக்கு அன்றுதான் கடைசி தினம் என்பதால் பத்து லட்ச ரூபாய்க்கான பாங்க் காரன்ட்டியை உடனே வழங்க வேண்டும் என்று கேட்டார்.

"நீங்க இன்னும் டாகுமென்ட்ல எல்லாம் கையெழுத்துப் போடல. சொத்துப் பத்திரங்களைக் கொடுக்கல. மானேஜர் வேற இன்னிக்கு லீவு.  நான் எப்படி உங்களுக்கு பாங்க் காரன்ட்டி கொடுக்க முடியும்?" என்றான் பாஸ்கர்.

"சார்! உங்க மானேஜர் லீவுங்கறதுக்காக எங்க தொழில் பாதிக்கப்படணுமா?" என்றார் பார்த்திபன்.

"சார்! அது பிரச்னை இல்லை. நீங்க டாகுமென்ட்ஸ்ல இன்னும் கையெழுத்துப் போடல. உங்க சொத்துப் பத்திரங்களைக் கொடுக்கல. சொத்துப் பத்திரங்களை எங்க பாங்க் வக்கீல்கிட்ட காட்டி அவர் எல்லாம் சரியா இருக்குன்னு சொன்னப்பறம்தான் நாங்க அந்த பாங்க் காரன்ட்டியைக் கொடுக்க முடியும்" என்றான் பாஸ்கர்.

"சார்! நாங்க உங்க நீண்ட நாள் வாடிக்கையாளர். என் அண்ணன் ஊர்ல இல்ல. அவர் வர ரெண்டுநாள் ஆகும். எல்லாப் பத்திரங்கள்ளேயும் நாங்க ரெண்டு பேரும்தான் கையெழுத்துப் போடணும். சொத்துப் பத்திரம் எல்லாம் எங்கே இருக்கும்னும் அவருக்குத்தான் தெரியும். இன்னிக்கு நாங்க இந்த டெண்டருக்கு அப்ளை பண்ணியே ஆகணும். கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க" என்றார் பார்த்திபன் கெஞ்சும் குரலில்.

"சரி. மானேஜருக்கு ஃபோன் பண்ணிக் கேக்கறேன்" என்று மானேஜர் மூர்த்தியின் வீட்டுக்கு ஃபோன் செய்தான் பாஸ்கர்.

"பாஸ்கர்! அவங்க ரொம்ப நல்ல பார்ட்டி. பல வருஷமா நம்மகிட்ட அக்கவுன்ட் வச்சிருக்காங்க. கையெழுத்தெல்லாம் அப்புறம் வாங்கிக்கலாம். நீங்க அவங்க கேக்கற பாங்க் காரன்ட்டியைக் கொடுத்துடுங்க. உங்களுக்குத்தான் கையெழுத்துப் போடற அதிகாரம் இருக்கே! நீங்க கையெழுத்துப் போட்டுக் கொடுத்துடுங்க. டாகுமென்ட் எல்லாம் நான் அப்புறம் வாங்கிக்கறேன்" என்றான் மூர்த்தி.

"சார்! இன்னும் சொத்துப் பத்திரங்களை அவங்க கொடுக்கலியே!" என்றான் பாஸ்கர்.

"அதான் பார்த்திபன் அவங்க அண்ணன் ரெண்டு நாள்ள வந்துடுவார்னு சொல்றாரே! அப்ப எல்லாத்தையும் வாங்கிடலாம். ரெண்டு நாள்ள எல்லாம் சரியாயிடும். நான் பாத்துக்கறேன், கவலைப்படாதீங்க!" என்றான் மூர்த்தி.

வங்கியின் பாங்க் காரன்ட்டியை பாஸ்கர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தான்.

திர்பாராமல், அடுத்த நாளே தலைமை அலுவலகத்திலிருந்து இன்ஸ்பெக்‌ஷனுக்கு அதிகாரிகள் வந்தார்கள். 

மானேஜரின் அறையில் அமர்ந்து இன்ஸ்பெக்டர்கள் கணக்குகளையும், ஆவணங்களையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

அன்று மதியம் மூர்த்தி, இன்டர்காமில் பாஸ்கரைத் தன் அறைக்கு அழைத்தான். 

பாஸ்கர் உள்ளே சென்றதும், "மிஸ்டர் பாஸ்கர்! நீங்கதான் இந்த காரன்ட்டியைக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தீங்களா?" என்றார் இன்ஸ்பெக்டர்களில் ஒருவர்.

"ஆமாம்" என்றபடியே மூர்த்தியைப் பார்த்தான் பாஸ்கர். "நேத்திக்கு மானேஜர் லீவு" என்றான் தொடர்ந்து.

"அது சரி. ஆனா, டாகுமென்ட்ஸ் வாங்காம, சொத்துப் பத்திரங்கள் வாங்காம, காரன்ட்டியைக் கொடுத்திருக்கீங்களே!"

பாஸ்கர் மூர்த்தியைப் பார்த்தான். 'நான்தான் கொடுக்கச் சொன்னேன்'என்று இவர் ஏன் சொல்லவில்லை?'

"மானேஜர் கொடுக்கச் சொன்னதாலதான் கொடுத்தேன்" என்றான் பாஸ்கர் மூர்த்தியைப் பார்த்தபடி.

"பாஸ்கர்! டாகுமென்ட்ஸ் எல்லாம் வாங்கிக்கிட்டுக் கொடுங்கன்னுதானே நான் சொன்னேன்?" என்றான் மூர்த்தி, பாஸ்கரைப் பார்த்து.

பாஸ்கரின் உடலில் குப்பென்று வியர்வை பரவியது. அதிர்ச்சி, திகைப்பு, பயம் என்று பலவித உணர்ச்சிகள் அவனை அழுத்தின.

'எப்படி இவனால் என் முகத்தை நேரே பார்த்துப் பொய் சொல்ல முடிகிறது?'

"சரி. நீங்க போங்க!" என்றார் இன்ஸ்பெக்டர்.

அடுத்த நாள் காலை பாஸ்கர் அதுவலகத்துக்கு வந்ததுமே, மூர்த்தி அவனைத் தன் அறைக்கு அழைத்தான்.

"ஒரு சின்ன விஷயத்தை அந்த இன்ஸ்பெகடர்கள் பெரிசு பண்ணிட்டாங்க. உடனேயே ஹெட் ஆஃபீசுக்கு ஃபோன் பண்ணிட்டாங்க, அவங்களும் இதைப் பெரிசா எடுத்துக்கிட்டு... சாரி! பாஸ்கர்! உங்களை சஸ்பெண்ட் பண்ணி ஹெட் ஆஃபீஸ்லேந்து ஃபேக்ஸ் வந்திருக்கு" என்றபடி ஃபேக்ஸை அவனிடம் நீட்டினான் மூர்த்தி.

அதிர்ச்சியுடன் ஃபேக்ஸை வாங்கிப் படித்துப் பார்த்த பாஸ்கர், "என்ன சார் இது? நீங்க சொன்னதாலதானே நான் செஞ்சேன்? முதல்ல முடியாதுன்னுதானே அவங்ககிட்ட சொன்னேன்..." 

பேசிக் கொண்டிருக்கும்போதே பாஸ்கரின் குரல் கம்மியது. அழுது விடுவோமோ என்று பயந்து தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.

"நான் சொல்லித்தான் நீங்க செஞ்சிருந்ததா நான் சொல்லி இருந்தாலும், விதி மீறலுக்கான பொறுப்பு உங்களுக்கு உண்டு. ரெண்டு பேரையும் சஸ்பெண்ட் பண்ணி இருப்பாங்க. ஒண்ணும் கவலைப்படாதீங்க. எப்படியும் நான் டாகுமென்ட்ஸ்ல கையெழுத்து வாங்கி, சொத்துப் பத்திரங்களையும் வாங்கிடுவேன். அதுக்கப்பறம் உங்களை மன்னிச்சு, சஸ்பென்ஷனை ரத்து பண்ணிருவாங்க. ரெண்டு மூணு வாரம்தான். அதுவரையிலேயும் வீட்டில ஜாலியா இருங்க" என்றான் மூர்த்தி.

'தப்பே செய்யாத எனக்கு தண்டனை, அப்புறம் மன்னிப்பு! தப்பு செய்த உனக்கு ஒரு பாதிப்புமில்லை!' என்று பாஸ்கர் மனதுக்குள் கொந்தளித்தான்.

பாஸ்கரின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டவன் போல் மூர்த்தி, "இந்த சஸ்பென்ஷனால உங்களுக்கு எந்த பாதிப்பும் வராது. சஸ்பென்ஷன் ரத்தானதும் நீங்க பழையபடியே உங்க வேலையைப் பாக்கலாம். ஆனா, நான் சஸ்பெண்ட் ஆனா, அப்புறம் என்னை மானேஜராத் தொடர அனுமதிக்க மாட்டாங்க. எங்கேயாவது தூக்கி அடிச்சுடுவாங்க. உயரத்திலேந்து கீழே விழுந்தா பாதிப்பு அதிகமா இருக்கும் இல்லையா?" என்று தன் செயலை நியாயப்படுத்திப் பேசினான்.

'இதை விட இன்னும் பெரிய உயரத்திலேந்து நீ விழுவடா! அப்ப உனக்குப் பெரிய அடி படும். அதை நான் பாக்கத்தானே போறேன்!' என்று மனத்துக்குள் கறுவிக்கொண்டே மூர்த்தியின் அறையை விட்டு வெளியேறினான் பாஸ்கர்.

மூர்த்தி தான் சொன்னபடியே, சில நாட்களில், ரோகிணி கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்க வேண்டிய பத்திரங்கள், ஆவணங்கள் எல்லாவற்றையும்  வாங்கி விட்டான். அதைத் தலைமை அலுவலகத்துக்குத் தெரிவித்து விட்டான்.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு பாஸ்கருக்கு ஒரு எச்சரிக்கை வழங்கப்பட்டு, அவன் சஸ்பென்ஷன் நீக்கப்பட்டது. 

ஆனால் இடையில் அவனுக்கு நேர்ந்த அவமானம், அவன் தவறு செய்திருப்பானோ என்று அவன் அலுவலகத்திலும், வெளியேயும் பலரும் நினைத்திருக்கக் கூடும் என்ற சிந்தனையால் அவனுக்கு ஏற்பட்ட வலி, அன்று மூர்த்திக்கு ஃபோன் செய்யாமல் தன் நிலையில் உறுதியாக இருந்திருக்கலாமே, அல்லது மூர்த்தி சொன்னபடி செய்ய மறுத்து உறுதியாக இருந்திருக்கலாமே போன்ற மனத்தை உளைத்தெடுத்த சிந்தனைகள் என்று எத்தனை மனவேதனைகள்!

வேலையில் மீண்டும் சேர்ந்ததும், பாஸ்கர் வேறு வேலைக்கு முயற்சி செய்ய ஆரம்பத்தான். 

சில மாதங்களுக்குப் பிறகு அவனுக்கு ஒரு நிதி நிறுவனத்தில் வேலை கிடைத்தது. வங்கியில் அவன் பார்த்துக் கொண்டிருந்த வேலைக்கு இணையானது இல்லைதான் அது. ஆயினும் அந்த அனுபவத்துக்குப் பிறகு வங்கியில் அவன் தொடர விரும்பவில்லை.

வங்கி வேலையை ராஜினாமா செய்து விட்டுப் புதிய வேலையில் சேர்ந்தான் பாஸ்கர். 

அது சிறிய நகரம் என்பதால் சில சமயம் மூர்த்தியை எங்காவது சந்திக்க நேரும். அவனைப் பார்த்ததுமே தன் மனதில் பொங்கி எழும் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு, அவனைப் பார்த்துப் புன்னகை செய்வான் பாஸ்கர். மூர்த்தியும் எதுவும் நடக்காதது போல், பாஸ்கரிடம் இயல்பாகப் பேசுவான்.

சில சமயம் மூர்த்தி தன் பெருமைகளையும், சாதனைகளையும் பற்றி பாஸ்கரிடம் பேசும்போது, பாஸ்கர் ஓரிரு நிமிடங்கள் அதைக் கேட்டு விட்டுத் தனக்கு வேலை இருப்பதாகச் சொல்லி, அங்கிருந்து அகன்று விடுவான்.

சில வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் பாஸ்கர் மூர்த்தியைச் சந்திக்க நேர்ந்தபோது, "பாஸ்கர்! ஒரு நல்ல செய்தி. எனக்கு ப்ரமோஷன் கிடைச்சிருக்கு. நான் பம்பாய்க் கிளைக்கு சீஃப் மானஜராப் போறேன்!" என்றான் பெருமையுடன்.

"வாழ்த்துக்கள்" என்றான் பாஸ்கர் சுருக்கமாக.

'உனக்கு ஒரு கேடு வந்தால் அதுதான் எனக்கு நல்ல செய்தி. ஆயினும், இப்போதைக்கு நீ என் கண்ணில் படாமல் வேறு ஊருக்குப் போவதே எனக்கு நல்ல செய்திதான்' என்று நினைத்துக் கொண்டான் பாஸ்கர்.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மூர்த்தியைப் பற்றி எந்தச் செய்தியும் பாஸ்கரின் காதுகளுக்கு வரவில்லை. ஆனால் அவன் நினைவும், அதைத் தொடர்ந்து அவன் மீது ஒரு ஆத்திரமும் அடிக்கடி வந்து கொண்டிருந்தன.

ரு நாள் ஒரு செய்திப் பத்திரிகையின் உட்பக்கங்கள் ஒன்றில் 'வங்கி மோசடி' என்ற தலைப்பில் வந்திருந்த ஒரு சிறிய செய்தியை பாஸ்கர் அதிக ஆர்வம் இல்லாமல் பார்த்தபோது, அதில் இடம் பெற்றிருந்த ஒரு பெயர் அவன் கண்ணில் பட்டதும், அந்தச் செய்தியை ஒருவிதத் துடிப்புடன் படித்தான். 

ஒரு தொழிலதிபர் சில வங்கிகளில் கோடிக்கணக்கில் மோசடி செய்து விட்டதாகவும், அந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த சில வங்கி அதிகாரிகளை சி பி ஐ கைது செய்திருப்பதாகவும் அந்தச் செய்தி கூறியது. 

கைது செய்யப்பட்டவர்களின் பட்டியலில், அவன் பணி செய்த வங்கியின் பெயர் குறிப்படப்பட்டு அந்த வங்கியின் பம்பாய்க் கிளையின் சீஃப் மானேஜர் மூர்த்தியின் பெயரும் இருந்தது.

அரசியல் இயல்
அதிகாரம் 49 
 காலமறிதல்  
குறள் 488
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.

பொருள்:
பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்ல வேண்டும், அப் பகைவர்க்கு முடிவு காலம் வரும்போது அவர் வீழ்ச்சி அடைவார்.
அறத்துப்பால்                                                                              காமத்துப்பால்

Friday, May 28, 2021

487. கிடைக்காமல் போன பதவி உயர்வு

நாடு முழுவதும் கிளைகள் கொண்டிருந்த அந்தப் பெரிய பொதுத்துறை நிறுவனத்தில் ஒரு இளநிலை அதிகாரியாக நான் பணிக்குச் சேர்ந்தபோது, அங்கு அந்த அளவுக்குத் தொழிற்சங்க ஆதிக்கம் தாண்டவமாடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

வலுவான தொழிற்சங்கத்தைச் சமாளிக்க முடியாமல் திணறிய வலுவற்ற உயர்நிலை நிர்வாகத்தின் செயலற்ற தன்மையைப் பயன்படுத்தி, அலுவலக உதவியாளர்கள் என்று அழைக்கப்பட்ட வெள்ளைக் காலர் ஊழியர்கள், கிளை நிர்வாகிகளுக்கும், மற்ற அதிகாரிகளுக்கும் பெருமளவில் தொல்லை கொடுத்து வந்தனர்.

நான் வேலைக்குச் சேர்ந்த கிளையின் நிர்வாகியாக இருந்த சண்முகம் மிகவும் மென்மையானவர். அந்தக் கிளையில் பணி புரிந்த சந்துரு ஊழியர் சங்கத்தில் ஒரு சிறிய பொறுப்பில் இருந்தான். அதனால், எல்லா ஊழியர்களையும் கட்டுப்படுத்திக் கொண்டும், அதிகாரிகளிடம் அலட்சியமாகவும், எடுத்தெறியும் விதத்திலும் பேசியும் வந்தான்.

தினம் ஒருமுறையாவது கிளை நிர்வாகி சண்முகத்தின் அறைக்குள் சென்று அவரிடம் ஏதாவது ஒரு பிரச்னையை எழுப்பிச் சண்டை போட்டு விட்டு வருவான் சந்துரு. அவன் உள்ளே நுழைவதைப் பார்த்ததுமே அவர் முகம் மாறி விடும்!

சண்முகம் எதுவும் பேசாமல் அவன் பேசுவதைப் பொறுமையாகக் கேட்டு விட்டுக் கடைசியில் சரி என்று தலை அசைப்பார், அல்லது "ஹெட் ஆஃபீஸ்ல கேட்டுச் சொல்றேன்" என்பார்.

ஒருமுறை அவரிடம், "ஏன் சார் இந்த சந்துருவிடம் இப்படிப் பணிஞ்சு போறீங்க? முடியாதுன்னு உறுதியா இருந்தா அவனால என்ன செய்ய முடியும்?" என்றேன் நான்.

"உங்களுக்கு எதுவும் தெரியாது. நீங்க புதுசு. உங்க வேலையை மட்டும் பாருங்க!" என்றார் சண்முகம் என்னிடம் கோபத்துடன்.

'சந்துருவிடம் காட்ட முடியாத கோபத்தை என்னிடம் காட்டுகிறார், பாவம்!' என்று நினைத்துப் பேசாமல் வந்து விட்டேன்.

நான் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவன் என்பதாலோ என்னவோ, சந்துரு என்னிடம்  நட்பாகவே பழகினான். அலுவலக வேலைகளைச் சீர் குலைக்கும் விதத்தில் அவன் நடந்து கொள்வது பற்றி அவன் மீது எனக்குக் கோபம் இருந்தாலும், நான் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் அவனிடம் நட்பாகவே நடந்து கொண்டேன்.  

அலுவலக வேலை நேரம் ஐந்து மணி வரை என்பதால், அலுவலக உதவியாளர்கள் அனைவரும் சரியாக ஐந்து மணிக்கு அலுவலகத்தை விட்டுக் கிளம்பி விடுவார்கள். 

அதிகாரிகளான நாங்கள் மட்டும் எங்கள் வேலைகளை முடித்து விட்டுத்தான் கிளம்புவோம். பெரும்பாலும் நாங்கள் கிளம்ப எட்டு மணிக்கு மேல் ஆகி விடும்.

"இந்த அசிஸ்டன்ட்ஸ் எல்லாம் கொஞ்சமாவது வேலை செஞ்சா, நாம இவ்வளவு கஷ்டப்பட வேண்டாம். எல்லாருமே நல்லா வேலை செய்யக் கூடியவங்கதான். இந்தச் சந்துருதான் அவங்களைக் கெடுக்கறான்" என்று சண்முகம் அவ்வப்போது அலுத்துக் கொள்வார்.

ருநாள்  மாலை ஐந்து மணி. உதவியாளர்கள் அனைவரும் கிளம்பி விட்டனர். தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டிய ஒரு முக்கியமான கடிதத்தை டைப்பிஸ்ட் மீனாட்சி டைப் அடித்துக் கொண்டிருந்தாள்.

அப்போது அங்கே வந்த சந்துரு, "அஞ்சு மணிக்கு மேல ஏன் வேலை செய்யறே?" என்று மீனாட்சியிடம் கோபமாகக் கூறியபடி, டைப்ரைட்டரிலிருந்த கடிதத்தை உருவினான்.

அப்போது தன் அறையிலிருந்து விரைந்து வெளியே வந்த சண்முகம், "மிஸ்டர் சந்துரு. அது முக்கியமான கடிதம். இன்னிக்கு ராத்திரியே ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய் ஆர் எம் எஸ்ல போஸ்ட் பண்ணணும். அதை டைப் அடிச்சு முடிக்க அஞ்சு நிமிஷம்தான் ஆகும். தயவு செஞ்சு, கொஞ்சம் அவங்க அதை டைப் பண்ண அனுமதியுங்க" என்றார் கெஞ்சும் குரலில்.

"நீ ஏன் இன்னும் உக்காந்திருக்க? வீட்டுக்குக் கிளம்பு!" என்று மீனாட்சியிடம் அதிகாரமாகக் கூறிய சந்துரு, சண்முகத்தைப் பார்த்து, "மிஸ்டர் சண்முகம், மானேஜ்மென்ட்ல ஓவர்டைம் கொடுக்கறதை நிறுத்திட்டாங்க. அதனால அஞ்சு மணிக்கு மேல ஒரு நிமிஷம் கூட  யாரும் வேலை செய்ய மாட்டோம்" என்று உரத்த குரலில் கூறி விட்டுக் கிளம்பி விட்டான்.

அலுவலகத்தில் இருந்த அனைவரும் சண்முகத்தைப் பரிதாபமாகப் பார்க்க, அவர் மிகவும் அவமானப்பட்டவராகத் தன் அறைக்குத் திரும்பினார். 

தட்டச்சு தெரிந்த ஒரு அதிகாரி அந்தக் கடிதத்தை டைப் செய்து கொடுக்க, அது அனுப்பப்பட்டது.

ருடங்கள் ஓடி விட்டன. சண்முகம் ஓய்வு பெற்று விட்டார். நான் ஒரு கிளையின் நிர்வாகி ஆகி விட்டேன். 

தொழிற்சங்கத்தின் ஆதிக்கத்தைக் குறைக்கும் வகையில், நிர்வாகம் பல உதவியாளர்களுக்குப் பதவி உயர்வு கொடுத்து அதிகாரிகளாக்கி, உதவியாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டே வந்தது. 

தொழிற்சங்கத்தில் பொறுப்புகளில் இருந்த பலர் தங்கள் ஆதிக்கமும், அதிகாரமும் குறைந்து கொண்டே வருவதை உணர்ந்து, பதவி உயர்வை ஏற்றுக் கொண்டு அதிகாரிகள் ஆகி விட்டனர். அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றவர்களுள் சந்துருவும் ஒருவன்.

அதிகாரியாக ஆனதும், தொழிற்சங்கத்தின் பாதுகாப்பு இனி இருக்காது என்பதை உணர்ந்த பின் சந்துருவின் போக்கே மாறி விட்டது. கடுமையாக உழைத்துத் தன் வேலையைச் சிறப்பாகச் செய்வதில் கவனம் செலுத்த ஆரம்பித்தான் அவன்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, நான் நிர்வாகியாக இருந்த கிளையிலேயே அவன் ஒரு முதல் நிலை அதிகாரியாகப் பணி புரிந்து வந்தான். 

இரண்டாம் நிலை அதிகாரியாகப் பதவி உயர்வு அளிப்பதற்கான தேர்வு அப்போது நடைபெற்றது. சந்துரு நேர்முகத் தேர்வுக்குச் சென்று வந்தான். தனக்குப் பதவி உயர்வு நிச்சயம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையுடன் இருந்தான் அவன். 

 எந்த ஒரு ஊழியரைப் பற்றிய மதிப்பீடும் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு, அது அவரிடம் காட்டப்பட வேண்டும் என்ற வெளிப்படைத் தன்மை உள்ள நடைமுறையை எங்கள் நிறுவனம் பின்பற்றி வந்ததால், அவன் செயல்பாடு சிறப்பதாக இருப்பதாக நான் அவனைப் பற்றி மதிப்பீடு அளித்திருந்ததும் அவனுக்குத் தெரியும்.

ஆயினும் அவனுக்குப் பதவி உயர்வு கிடைக்கவில்லை. அவனுக்கு அதில் பெரும் ஏமாற்றம்தான்.

"கவலைப்படாதீங்க, சந்துரு. அடுத்த வருஷம் உங்களுக்குக் கண்டிப்பா ப்ரமோஷன் கிடைக்கும்" என்று நான் அவனுக்கு ஆறுதல் கூறினேன்.

சில வாரங்களுக்குப் பிறகு ஒரு திருமணத்தில் சண்முகத்தைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பல விஷயங்களைப் பற்றிப் பேசிய பின் சந்துருவைப் பற்றிப் பேச்சு வந்தது.

"அவன் உங்க பிராஞ்சிலதான் இருக்கானாமே!" என்றார் சண்முகம்.

"ஆமாம்,சார். ஆனா இப்ப ரொம்ப மாறிட்டாரு. நல்லா வேலை செய்யறாரு. இந்த ப்ரமோஷன் லிஸ்ட்ல அவர் பேரு இருக்கும்னு எல்லாருமே எதிர்பார்த்தோம். கிடைக்காததில அவருக்கு ரொம்ப ஏமாற்றம்தான்" என்றேன் நான்.

"இருக்காதா பின்னே?" என்றார் அவர், ஒரு மாதிரி சிரித்தபடி.

"என்ன சார்?" என்றேன் நான், ஒருவித சந்தேகத்துடன்.

"இப்ப இருக்கிற ஜி.எம். எனக்குக் கீழே வேலை செஞ்சவர்தான். அவர்தானே லிஸ்டை ஃபைனலைஸ் செஞ்சாரு?" என்றார் சண்முகம், ஒருவித விஷமச் சிரிப்புடன்.

அவர் பங்களிப்புதான் இது என்று புரிந்தவனாக, "என்ன இருந்தாலும் சந்துருவுக்கு ஒரு வாய்ப்பு போயிடுச்சே சார்!" என்றேன் நான், உண்மையான வருத்தத்துடன்.

"அடுத்த வருஷம் கிடைச்சுட்டுப் போகுது. ஒரு வருஷம் தள்ளிப்  போகப் போகுது. அவ்வளவுதானே?" என்றார் அவர் சிரித்துக் கொண்டே.

சட்டென்று சிரிப்பு மறைந்து அவர் முகம் இறுகியது. "அன்னிக்கு டைப்பிஸ்டை அந்த முக்கியமான லெட்டரை டைப் பண்ண விடாம பண்ணி, நான் கெஞ்சியும் கேக்காம அலட்சியமாப் போனானே, அப்ப நான் உணர்ந்த அவமானத்தை இப்ப நினைச்சாலும் என் நெஞ்சு கொதிக்குது. ஏன், நீங்களும்தான் பாத்தீங்களே அதை?" என்றார் அவர்.

சில விநாடிகளுக்கு முன் அவர் முகத்தில் இருந்த மலர்ச்சி இப்போது அடியோடு மறைந்திருந்தது.

அரசியல் இயல்
அதிகாரம் 49 
 காலமறிதல் 
குறள் 487
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

பொருள்:
ஒருவர் தனக்குத் தீங்கு செய்தால், அப்போதே அவர் மீது தன் கோபத்தை வெளிக்காட்டாமல், கோபத்தை மனதுக்குள் வைத்திருந்து சரியான நேரம் பார்த்துக் காத்திருப்பார் அறிவுடையவர்.
குறள் 488               
              குறள் 486                            
                                              
அறத்துப்பால்                                                                              காமத்துப்பால்

Wednesday, May 26, 2021

486. வேண்டாம் போர்!

"அரசே! பல தலைமுறைகளாக நாம் ஒரு சுதந்திர நாடாக இருக்கிறோம். இது வரை எந்த ஒரு நாடும் நம்மைப் போரில் வென்றதில்லை. தங்கள் தந்தையார் காலத்திலிருந்தே எந்த ஒரு நாடும் நம் மீது படை எடுக்கவும் துணிந்ததில்லை. ஆனால் இப்போது புதிதாக முடி சூட்டிக் கொண்டிருக்கும் மகர நாட்டு மன்னன் சுந்தரவர்மன் நம்மிடம் கப்பம் கேட்டு ஓலை அனுப்பி இருக்கிறான். நாம் கப்பம் கட்ட ஒப்புக் கொள்ளாவிட்டால் நம் மீது படை எடுப்பானாம்!" என்றார் அமைச்சர் பராந்தகர்.

"உங்கள் ஆலோசனை என்ன?" என்றான் அரசன் வீரசிம்மன், அமைச்சரைப் பார்த்து.

"அரசே! தங்கள் மூதாதையர்கள் எப்போதுமே தங்கள் தன்மானத்தை விட்டுக் கொடுத்ததில்லை. நாம் போருக்குத் தயாராக வேண்டியதுதான்."

சற்று நேரம் மௌனமாக இருந்த வீரசிம்மன், "அமைச்சரே! நாம் மகர நாட்டுடன் நட்பையே விரும்புவதாகவும், ஆனால் இப்போது நம் நாட்டின் பொருளாதார நிலை மோசமாக இருப்பதால் நாம் கப்பம் கட்ட இயலாத நிலையில் இருப்பதாகவும் பதில் ஓலை அனுப்பி விடுங்கள்" என்றான்.

"மன்னிக்க வேண்டும் மன்னரே! இது எதிரியிடம் நாம் இறைஞ்சுவது போல் அல்லவா இருக்கிறது?" என்றார் அமைச்சர் அதிர்ச்சியுடன்.

"எதிரியும் அவ்வாறு நினைத்து நம்மிடம் கப்பம் கேட்காமல் இருந்தால் அது நமக்கு நன்மைதானே!" என்றான் வீரசிம்மன் சிரித்தபடி.

அரசருக்குப் பெயரில் மட்டும்தான் வீரம் இருக்கிறது என்று மனதில் நினைத்துக் கொண்ட அமைச்சர் மௌனமாகத் தலையாட்டினார்.

வீரசிம்மனின் நட்பை ஏற்றுக் கொள்வதாகவும், கப்பம் கட்ட ஓராண்டு அவகாசம் கொடுப்பதாகவும், அடுத்த ஆண்டிலிருந்து கப்பம் கட்ட வேண்டும் என்றும் மகரநாட்டிலிருந்து பதில் ஓலை வந்தது.

எதிரியிடம் பிச்சை கேட்பது போல் கேட்டு இந்தச் சலுகையைப் பெற்றது அமைச்சர் பராந்தகருக்கு ஒரு குறையாக இருந்தது.

ராண்டுக்குப் பிறகு, ,தங்கள் நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டிருப்பதால் கப்பம் செலுத்துவதை இன்னும் ஓராண்டுக்குத் தள்ளி வைக்கும்படி மகர நாட்டுக்கு ஒரு ஓலை அனுப்பினான் வீரசிம்மன்.

"மகர நாட்டு மன்னர் இதற்கு ஒப்புக் கொள்வது ஐயம்தான்" என்றார் அமைச்சர் தயக்கத்துடன்.

"எனக்கு ஐயம் எதுவும் இல்லை. அவன் நிச்சயம் இதற்கு ஒப்புக் கொள்ள மாட்டான்!" என்றான் வீரசிம்மன் சிரித்தபடி.

"என்ன சொல்கிறீர்கள் மன்னரே!"

"நாம் போருக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று சொல்கிறேன்!"

"போரைத் தவிர்ப்பதற்காகத்தானே சென்ற ஆண்டு சமாதானமாகப் போக விரும்பனீர்கள?" என்றார் அமைச்சர் குழப்பத்துடன்.

"ஆமாம். அப்போது நாம் போர் செய்யும் நிலையில் இல்லையே!"

"அரசே!"

"நீங்களே சொன்னது போல், என் தந்தை காலத்தில் எந்த ஒரு நாடும் நம் மீது போர் தொடுக்கவில்லை. அதனால் நாமும் நம் படைபலத்தை வலிமையாக வைத்திருப்பதில் ஆர்வம் காட்டவில்லை. சென்ற ஆண்டு கூட நம் படை வலுவாக இல்லை. நாம் மகரநாட்டுடன் போர் செய்திருந்தால், போரில் நாம் தோற்று, நம் நாடும் அழிந்திருக்கும். நம் படைபலம், ஆயுதபலம் ஆகியவை பற்றி நான் படைத்தலைவரிடம் கேட்டறிந்த பின்தான், மகர நாட்டுடன் சமாதானமாகப் போவது போல் போக்குக் காட்டி சற்று அவகாசம் வாங்கிக் கொண்டேன். நீங்கள் கூட என்னை ஒரு கோழை என்று நினைத்திருக்கலாம்!"

"அப்படியெல்லாம் இல்லை, அரசே!" என்றார் அமைச்சர் சங்கடத்துடன்.

"உங்கள் முகத்தைப் பார்த்தே நான் அதை அறிந்து கொண்டேன், அமைச்சரே! நீங்கள் அவ்வாறு நினைத்திருந்தால்,அது இயல்பான ஒன்றுதான். வீரத்தில் நான் என் முன்னோர்களுக்குச் சளைத்தவன் இல்லை என்பதைச் சத்தமில்லாமல் நிரூபித்து உங்களை வியப்பில் ஆழ்த்த வேண்டும் என்று நினைத்தேன். ஒரு வருடத்துக்குள் நம் படைபலத்தையும், ஆயுதபலத்தையும் அதிகரிக்க வேண்டுமென்று நம் படைத்தளைபதிக்கு ரகசியமாக ஆணை பிறப்பித்தேன். உங்களை வியப்பில் ஆழ்த்த வேண்டும் என்பதால்தான் உங்களிடம் கூட இதைச் சொல்லவில்லை, இப்போது நம் படை வலுவாக இருக்கிறது. அத்துடன் உள்நாட்டுக் குழப்பங்களால் மகரநாடும் பலமிழந்து நிற்கிறது. இப்போது காலம் நமக்குச் சாதகமாக இருக்கிறது. இப்போது போர் நடந்தால் நமக்கு வெற்றி நிச்சயம்" என்றான் வீரசிம்மன் உற்சாகத்துடன்.

"மன்னிக்க வேண்டும் அரசே! புலி பதுங்குவது பாய்வதற்குத்தான் என்பதை நான் உணரத் தவறி விட்டேன்" என்றார் அமைச்சர்.

அரசியல் இயல்
அதிகாரம் 49 
 காலமறிதல்  
குறள் 486
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.

பொருள்:
ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல் போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்காகக் காலைப் பின்னே இழுத்துக் கொள்வது போன்றது.

அறத்துப்பால்                                                                              காமத்துப்பால்

Tuesday, May 25, 2021

485. நேரம் நல்ல நேரம்!

ரகுபதியின் தந்தை ஒரு சிறிய நிறுவனத்தில் ஒரு அலுவலக உதவியாளராக இருந்தார். குறைந்த சம்பளம், ஆனால் ஓய்வில்லாத வேலை. ஞாயிற்றுக்கிழமைகளில் கூடப் பல நாட்கள் அவர் அலுவலகத்துக்குப் போக வேண்டி இருக்கும்.

ஒருமுறை அவர் வேலைக்குப் போகும்போது டிஃபன் பாக்ஸை எடுத்துக் கொள்ளாமல் போய் விட்டார். அதைக் கொண்டு கொடுக்க ரகுபதி அவர் அலுவலத்துக்குப் போனபோது, அவர் முதலாளி அவரைக் கடுமையாகப் பேசிக் கொண்டிருந்ததை அவன் காண நேர்ந்தது.

தான் இன்னொருவரிடம் வேலை செய்யக் கூடாது, சொந்தமாகத் தொழில் செய்ய வேண்டும் என்ற சிந்தனை அப்போது ரகுபதிக்குத் தோன்றியது. 

தன்னால் அது முடியுமா என்ற கேள்வி எழுந்தாலும், அதை ஒரு இலக்காகக் கொண்டு உழைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் அவன். 

தான் சொந்தத் தொழில் செய்யும்போது தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு நல்ல சம்பளம் கொடுத்து அவர்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என்றும் அவன் நினைத்துக் கொண்டான்.

தான் பயந்தபடியே, தன் லட்சியத்தை நிறைவேற்றுவது சுலபம் இல்லை என்பது படிப்பை முடித்ததும் ரகுபதிக்குப் புரிந்தது. 

முதலில் ஏதாவது வேலைக்குப் போய்க் கொஞ்சம் பணம் சேர்த்துக் கொண்டு அப்புறம் சொந்தத் தொழில் ஆரம்பிக்கலாம் என்று அவன் முடிவு செய்தான்.

பி ஏ படித்திருந்த அவனுக்கு சுமாரான ஒரு வேலைதான் கிடைத்தது. அவன் வேலைக்குச் சென்ற சில மாதங்களில் அவன் தந்தை மறைந்து விட்டார். அவருடைய சேமிப்பு, பி எஃப் பணம் என்று ஒரு சிறு தொகை இருந்தது. 

தான் தொழில் துவங்க அது ஒரு முதலீடாக இருக்க வேண்டும் என்று நினைத்து அந்தப் பணத்தை வங்கியில் நிரந்தர வைப்பில் போட்டு வைத்தான் ரகுபதி.

குடும்பத்தில் அவனும், அவன் தாயும் மட்டும்தான் என்பதால், செலவு அதிகமில்லை. சிக்கனமாக இருந்து, முடிந்த அளவுக்குச் சேமித்து வந்தான்.

ரகுபதி தன் லட்சியம் பற்றித் தன் தாயிடம் கூறி இருந்தான். 

அவளும், "உன் ஆசை நிச்சயமா ஒரு நாள் நிறைவேறும்" என்று சொல்லி அவனை ஊக்குவித்தாள்.

ரகுபதிக்குத் திருமணம் செய்ய அவன் தாய் முயற்சிகள் எடுத்துக் கொண்டிருந்தபோது, ஒரு தொழிலதிபர் அவனுக்குப் பெண் கொடுக்க முன் வந்தார்.

"இந்தப் பொண்ணைப் பண்ணிக்கடா! உன் மாமனார் தொழிலை நீ பாத்துக்கலாம். உன் ஆசையும் நிறைவேறினதா இருக்கும்" என்றாள் அவன் தாய்.

ஆனால் ரகுபதி அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

"அம்மா! அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு அவ அப்பா தொழிலை நான் பாத்துக்கிட்டா, அந்தத் தொழிற்சாலைக்கு ஒரு மானேஜர் மாதிரிதான் நான் இருப்பேன். நானே சொந்தமா ஒரு தொழிலை ஆரம்பிச்சு நடத்தணுங்கறதுதான் என் லட்சியம். இன்னொத்தரை பார்ட்னரா சேத்துக்கிட்டு வேணும்னா ஆரம்பிக்கலாம். ஆனா இன்னொருத்தர் தொழிலைப் பாத்துக்கறதில என்ன இருக்கு?" என்றான் ரகு.

பிறகு, ஜானகி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான். ஜானகி ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தாள்.

"நீ கொஞ்ச நாள் வேலைக்குப் போனா போதும். நான் சொந்தத் தொழில் ஆரம்பிச்சப்பறம் நீ வேலைக்குப் போக வேண்டி இருக்காது" என்றான் அவன் ஜானகியிடம்.

ருமுறை ரகுவின் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த குமார், அவனிடம் ஒரு தொழிலுக்கான யோசனையைக் கூறினான். 

அது குறைந்த முதலீட்டில் செய்யக் கூடியதாக இருந்ததாலும், லாபகரமாகத் தோன்றியதாலும், ரகுபதி தன் வேலையை விட்டு விட்டுத் தன் சேமிப்பின் பெரும் பகுதியை முதலீடு செய்து அந்தத் தொழிலைத் தொடங்கினான்.

குமார் தன்னிடம் முதலீடு செய்யப் பணம் இல்லை என்று கூறியதால், அவன் ஒர்க்கிங் பார்ட்னராக இருப்பது என்றும், அவனுக்கு லாபத்தில் இருபது சதவீதம் கொடுப்பது என்றும் முடிவானது.

தொழில் துவங்கியதும்,"இன்னும் ஆறு மாசம்தான். அதுக்கப்பறம், நீ வேலையை விட்டுடலாம்" என்றான் ரகுபதி ஜானகியிடம்.

ஆனால் தொழில் தொடங்கி ஒரு வருடம் ஆகியும் தொழில் லாபகரமானதாக இல்லை. கணக்குப் பார்த்தால் இழப்புதான் ஏற்பட்டிருக்கும் என்று தோன்றியது.

"எந்த ஒரு பிசினஸ்லேயும் லாபம் வர ரெண்டு மூணு வருஷம் ஆகும். இன்னும் ஒரு வருஷத்தில நாம லாபம் பார்க்கலாம்" என்றான் குமார்.

தொழிலுக்கான யோசனையைக் குமார் தன்னிடம் தெரிவித்தபோது "மூணு மாசத்தில லாபம் பார்க்கலாம்" என்று கூறியது ரகுபதிக்கு நினைவு வந்தது. 

ரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஒரு நாள் குமார் தன் சொந்த ஊருக்குச் சென்று விட்டு ஒரு வாரத்தில் திரும்பி வருவதாகச் சொல்லி விட்டுக் கிளம்பிச் சென்றான். ஆனால், ஒரு மாதம் ஆகியும் அவன் திரும்பி வரவில்லை.

ரகுபதிக்குச் சந்தேகம் வந்து, கணக்கு வழக்குகளை ஒரு ஆடிட்டரிடம் சொல்லிச் சரி பார்க்கச் சொன்னபோது, தொழிலில் கணிசமான அளவு லாபம் வந்திருந்ததையும், குமார் பெருமளவில் மோசடிகள் செய்து பெருமளவில் பணத்தைக் கையாடி இருப்பதும் தெரிந்தது.

அக்கவுன்ட்ஸ் எழுத ஒரு ஆள் கூட வைத்துக் கொள்ளாமல், கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பைக் குமாரிடம் விட்டு விட்ட தன் முட்டாள்தனத்தை நொந்து கொண்டான் ரகுபதி.  

"இப்ப என்ன செய்யப் போறீங்க?" என்றாள் ஜானகி.

"என்ன செய்யறது? சொந்தமாத் தொழில் செய்யணுங்கற ஒரு வெறியோட இத்தனை வருஷமா காத்துக்கிட்டிருந்தேன். டெஸ்க் டாப் பப்ளிஷிங், காளான் வளக்கறது, மல்டி லெவல் மார்க்கெடிங், பால் பாயின்ட் பேனா ரீஃபில் தயார் செய்யறதுன்னு எத்தனையோ தொழில்களைப் பத்திப் பல பேர் விளம்பரம் செஞ்சிருக்காங்க.

"அது மாதிரியான தொழில்கள் எல்லாத்தையும் பத்தித் தீர விசாரிச்சு, நல்லா ஆராய்ஞ்சு பாத்து, அது எதுவுமே எனக்கு சரியா வராதுன்னு முடிவு செஞ்சு, சரியான நேரம் வரும், அப்ப ஒரு நல்ல வாய்ப்பும் வரும்னு காத்துக்கிட்டிருந்தேன். 

"குமார் இந்த பிசினஸ் பத்தி சொன்னப்பறம், நமக்கான நேரம் வந்துடுச்சுன்னு நினைச்சு கையில இருந்த சேமிப்பை முதலீடு செஞ்சு, நம்பிக்கையோட இந்தத் தொழிலை ஆரம்பிச்சேன். அவன் இப்படி மோசம் பண்ணிட்டு ஓடிட்டான். இப்ப என்ன செய்யறதுன்னு தெரியல. பிசினஸைத் தொடர்ந்து நடத்தவும் முடியாது..."

"ஏன் முடியாது?" என்றாள் ஜானகி இடைமறித்து.

"எப்படி நடத்த முடியும்? சரக்கையெல்லாம் கடன்லதான் வாங்கறோம். சப்ளையர்களுக்கெல்லாம் பணம் கொடுத்துக்கிட்டிருக்கறதாதான் அவன் எங்கிட்ட சொன்னான். ஆனா இப்ப பாத்தா, நிறைய பாக்கி இருக்கு. அவங்களுக்குப் பணம் கொடுத்தாத்தான் சரக்கு கொடுப்பாங்க. அப்பதான் தொடர்ந்து தொழிலை நடத்த முடியும். ஆனா, கையில சுத்தமா பணமே இல்லை."

"அவ்வளவுதானே? என் நகைகளைக் கொடுக்கறேன். அதை வச்சோ வித்தோ பணம் புரட்டி, கொடுக்க வேண்டியவங்களுக்கு எவ்வளவு கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுத்துட்டு சரக்கு சப்ளை பண்ணச் சொல்லுங்க. கொஞ்சம் பணம் கொடுத்தா, அவங்களுக்கு நம்பிக்கை வந்து சரக்கு கொடுப்பாங்க இல்ல?"

ரகுபதி நம்பிக்கையுடன் தலையை ஆட்டினான்.

"குமாரை பார்ட்னர்ஷிப்லேந்து சட்டப்படி நீக்கிட்டு, சம்பந்தப்பட்டவங்க எல்லார்கிட்டயும் சொல்லிடுங்க. ஒரு வருஷத்தில நல்ல லாபம் வந்திருக்கறதா சொல்றீங்க இல்ல? இப்ப அடுத்த வருஷத்திலேயும் லாபம் வருமே! அப்புறம் என்ன? ரெண்டு வருஷத்துக்குள்ள எல்லாத்தையும் சரி செஞ்சுடமுடியாதா?" என்றாள் ஜானகி.

அவளை வியப்புடன் பார்த்த ரகுபதி, "இத்தனை வருஷமா சரியான காலம் வரணும்னு பாத்துக்கிட்டிருந்தேன். ஆனா காலம் வந்தப்ப, அது வந்ததையே கவனிக்கல!" என்றான்.

"எப்ப வந்தது அந்தக் காலம்?"

"உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேனே, அப்பதான்!" என்றான் ரகுபதி, புது நம்பிக்கை பெற்றவனாக.

அரசியல் இயல்
அதிகாரம் 49 
 காலமறிதல் 
குறள் 485
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்..

பொருள்:
உலகையே பெற வேண்டும் என்று நினைப்பவர் (உயர்ந்த லட்சியத்தைக் கொண்டிருப்பவர்), (இடையூறுகளைக் கண்டு) கலங்காமல், சரியான காலத்துக்காகக் காத்திருப்பார்.
                            
அறத்துப்பால்                                                                              காமத்துப்பால்

Saturday, May 22, 2021

484. மகாராஜன் உலகை ஆளலாம்!

கடந்த சில வருடங்களாக சென்னையில் 'குஞ்சம்மாள் பவன்' என்ற உணவகம் பிரபலமாகிக் கொண்டு வந்தது. 

நஷ்டத்தில் இயங்கிக் கொண்டு, மூடப்படும் நிலையில் இருந்த ஒரு பழைய ஹோட்டலை ஒருவர் வாங்கி 'குஞ்சம்மாள் பவன்' என்று பெயர் மாற்றி (அவர் அம்மாவின் பெயராக இருக்கலாம்!) இயக்க ஆரம்பித்ததும், வெகு விரைவில் அது பிரபலமாகிப் பெரிதாகி வளர்ந்து, புதிய கிளைகள் திறக்கப்பட்டு வந்தன.

நான் டெல்லியில் பணி செய்து வந்தாலும், டெல்லியிலிருந்த தமிழர்களுக்கிடையே 'குஞ்சம்மாள் பவனி'ன் வளர்ச்சி பற்றிய பேச்சு இருந்து கொண்டிருந்தது.

நான் ஒரு முறை சென்னைக்கு வந்தபோது, என் நண்பனுடன் 'குஞ்சம்மாள் பவனு'க்கு உணவருந்தச் சென்றேன். 

ஹோட்டலில் நுழையு முன்பே, முகப்பில் இருந்த ஹோட்டலின் பெயர்ப் பலகையில், மேலே பெரிய எழுத்துக்களில் 'சுவை, சுத்தம், சுகாதாரம்' என்று எழுதப்பட்டிருந்ததையும், அதற்குக் கீழே ஹோட்டலின் பெயர் அதை விடச் சிறிய எழுத்துக்களிலேயே எழுதப்பட்டிருந்ததையும் கவனித்தேன்.

உணவுக் கூடத்துக்கு வெளியே இருந்த காத்திருக்கும் அறையில் சுமார் இருபது பேர் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு டோக்கன் அளிக்கப்பட்டு வரிசைப்படி உள்ளே அனுப்பப்பட்டு வந்தனர்.

பதினைந்து நிமிடம் காத்திருந்த பின் நாங்கள் உள்ளே அனுப்பப்பட்டோம்.

உணவுக் கூடத்துக்குள் நுழைந்ததும், ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குள் நுழைந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. 

ஒரு தூசு கூட இல்லாத தரை விரிப்புக்கள், மெலிதான வண்ணம் பூசப்பட்ட சுவர்களில் ஆங்காங்கே தொங்க விடப்பட்டிருந்த ஓவியங்கள், சற்றே உயரமான கூரைக்குக் கீழ் அலங்காரமான செயற்கைக் கூரை என்று ரசனையுடனும், உள்ளே வருபவர்களை உடனே கவரும் வகையிலும் அமைக்கப்பட்டிருந்தன.

உணவு அருந்துவதற்கான மேஜைகள் அதிக இடைவெளி விட்டுப் போடப்பட்டிருந்தது ஹோட்டலுக்கு ஒரு உயர் ரகத் தன்மையை அளித்திருந்தது. 

"மேஜைகளை இவ்வளவு இடம் விட்டுப் போட்டிருக்கறதாலதான் வெளியில சில பேர் காத்துக்கிட்டு இருக்க வேண்டி இருக்கு!" என்றான் என் நண்பன்.

"இங்கே சூழ்நிலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கறதாலதான் கபாசிடி குறைஞ்சாலும் பரவாயில்லைன்னு நிறைய இடைவெளி விட்டு மேஜைகளைப் போட்டிருக்காங்கன்னு நினைக்கறேன்" என்றேன் நான்.

வெளியே போர்டில் போட்டிருந்ததற்கு ஏற்ப உணவு வகைகள் சுவையாக இருந்ததுடன், சுத்தம்,சுகாதரம் இரண்டும் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டிருந்தன.

சமையற்கட்டில் எந்த அளவுக்கு சுத்தமும், சுகாதாரமும் பாதுகாக்கப்படுகிறது என்பதை வாடிக்கையாளர்கள் பார்க்க வசதியாக, சமையற்கட்டின் கதவின் மேற்புறத்தில் கண்ணாடி பொருத்தப்பட்டு, வாடிக்கையாளர்கள் வெளியிலிருந்தே சமையலறைச் செயல்பாடுகளைப் பார்ப்பதற்கு வசதி செய்யப்பட்டிருந்தது. 

அது போல் பாத்திரங்கள் கழுவப்படும் இடத்தையும் வாடிக்கையாளர்கள் சென்று பார்க்கலாம் என்றான் என் நண்பன்.

சாப்பிட்டு விட்டு வெளியே வந்ததும், "இந்த ஹோட்டலைப் பத்தி நிறைய பேர் சொன்னப்ப மிகைப்படுத்திச் சொல்றாங்கன்னுதான் நினைச்சேன். ஆனா எல்லாரும் சொன்னதை விட இன்னும் சிறப்பாகவே இருக்கு" என்றேன் நான்.

"நீ குற்றம் சொல்றதில நிபுணன் ஆச்சே! நீயே பாராட்டறேன்னா அது பெரிய விஷயம்தான்!" என்றான் என் நண்பன்.

வெளியில் வரும்போது,,கண்ணாடிக் கதவு போட்ட அறையைக் காட்டிய நண்பன், அதில் அமர்ந்திருந்தவரைக் காட்டி, "அவர்தான் முதலாளி. இதுதான் இந்த ஹோட்டல் ஆரம்பிச்ச இடங்கறதால, பெரும்பாலும் அவர் இங்கேதான் இருப்பார்" என்றான்.

ஏதோ ஒரு உந்துதலில் முதலாளியின் அறை வாசலில் போய் உள்ளே வரலாமா என்று சைகையால் அனுமதி கேட்டேன். அவர் வரச் சொன்னதும், இருவரும் அவர் அறைக்குள் சென்று அமர்ந்தோம். 

"உங்க ஹோட்டல்ல எல்லாமே பிரமாதமா இருக்கு, உங்களைப் பாத்துப் பாராட்டணும்னு நினைச்சேன்" என்றேன்.

"நன்றி" என்றார் அவர் சிரித்தபடியே.

"நான் ஒரு பத்திரிகைக்காரன். அதனால, ஒரு ஆர்வத்தில கேக்கறேன், நஷ்டத்தில ஓடிக்கிட்டிருந்த, மூடற நிலைமையில இருந்த இந்த ஹோட்டலை நீங்க வாங்கி இவ்வளவு சிறப்பா நடத்துக்கிட்டு வரீங்களே, அது எப்படின்னு சொல்ல முடியுமா?" என்றேன்.

கேட்டவுடனேயே, முன்பின் தெரியாத ஒருவரிடம் அதிகப் பிரசங்கித்தனமாகக் கேட்கிறோமோ என்று நினைத்தேன். ஆனால் அவர் தயங்காமல் எனக்கு பதில் சொன்னார். 

"இந்த ஹோட்டல்ல நான் மானேஜரா இருந்தேன். கொஞ்ச காலமாவே ஹோட்டல் நஷ்டத்தில ஓடிக்கிட்டிருந்தது. என் முதலாளிகிட்ட சில யோசனைகள் சொன்னேன். ஆனா அவர் அதையெல்லாம் கேக்கல. நிலைமை ரொம்ப மோசமாப் போனப்பறம் ஹோட்டலை விக்க முடிவு செஞ்சாரு. அதிர்ஷ்டவசமா அவர் கடன் எதுவும் வாங்கல. அதனால கடன்காரர்கள் தொல்லை இல்லை. ஹோட்டலை வித்தா, அந்தப் பணம் முழுசா அவருக்குக் கிடைக்கும்.

"அவர் இதை விக்கப் போறதா சொன்னதும், எல்லாரும் ரொம்ப குறைச்ச விலைக்குத்தான் கேட்டாங்க. அப்ப இந்த ஏரியா வளர்ச்சி அடையாததால இங்கே இடம் வாங்க அதிகம் பேர் ஆர்வம் காட்டல. விலைக்குக் கேட்டவங்க எல்லாம் மார்க்கெட் விலையை விட ரொம்பக் குறைவாத்தான் கேட்டாங்க.முதல்ல அவர் தயங்கினாரு. அப்புறம் ஒரு கட்டத்தில, ஒரு விரக்தியில, ரொம்பக் குறைச்ச விலைக்கு இதை விக்க ஒத்துக்கிட்டாரு. 

"அப்பதான் நான் அவர் கிட்ட ஒரு யோசனை சொன்னேன். ஹோட்டலை மார்க்கெட் விலைக்கு  நான் வாங்கிக்கறதாச் சொன்னேன். ஆனா எங்கிட்ட அப்ப அதிகமா பணம் இல்ல. விற்பனை ஒப்பந்தம் போட்டுக்கிட்டு முன்பணமா கொஞ்சம் கொடுத்துட்டு,மீதிப் பணத்தை ஒரு வருஷத்துக்குள்ள கொடுத்துட்டு ரிஜிஸ்டர் பண்ணிக்கறேன்னு சொன்னேன். அதுவரையிலும் மீதிப் பணத்துக்கு வட்டி கொடுக்கறதாவும் சொன்னேன். என் மேல அவருக்கு நம்பிக்கை இருந்ததால,அவர் அதுக்கு ஒத்துக்கிட்டாரு.

"என்னோட சேமிப்பில ஒரு பகுதியை அவருக்கு முன்பணமாக் கொடுத்துட்டு, மீதிப் பணத்தில ஹோட்டல்ல சில மாறுதல்களைச் செஞ்சேன். நான் இருபது வருஷமா ஹோட்டல்கள்ள வேலை செஞ்சுக்கிட்டிருக்கறதால, அருமையா சமையல் பண்றவங்க சில பேரை எனக்குத் தெரியும். அவங்கள்ள ஒத்தரை அழைச்சுக்கிட்டு வந்து, இங்கே ஏற்கெனவே வேலை செஞ்சவங்களையும் வச்சுக்கிட்டு ஹோட்டலைப் புதுப் பொலிவோட ஆரம்பிச்சேன். பல வருஷங்களா பல விஷயங்களை அனுபவத்திலேந்து தெரிஞ்சுக்கிட்டிருந்தேன், எனக்குன்னு சில  யோசனைகளும் இருந்தது. அதையெல்லாம் பயன்படுத்தினதால, கடவுள் புண்ணியத்தில எல்லாம் நல்லாப் போய்க்கிட்டிருக்கு!" என்றார் அவர்.

"ஆமாம், இருபது வருஷத்துக்கு மேல ஹோட்டல்கள்ள வேலை செஞ்சதா சொன்னீங்களே, ஆரம்பத்துல என்னவா இருந்தீங்க?" என்றேன் நான், பத்திரிகைக்காரர்களுக்கே உரிய இயல்பான ஆர்வத்துடன்.

"ஒரு டீக்கடையில எல்லாருக்கும் டீ கொண்டு போய்க் கொடுக்கற பையானா  இருந்தேன். ஏன், உங்களுக்குக் கூட டீ கொண்டு வந்து கொடுத்திருக்கேனே, ஞாபகம் இல்லையா?" என்றார் அவர் என்னைப் பார்த்துச் சிரித்தபடி.

நான் அதிர்ச்சி அடைந்தவனாக, "எப்ப? எங்கே?" என்றேன்.

அவர் முகத்தை உற்றுப் பார்த்தபோது எப்போதோ பரிச்சயமான முகமாகத் தோன்றியது. ஆனால் எங்கே என்று நினைவுக்கு வரவில்லை.

"அடையாறுல ஒரு லாட்ஜில தங்கி இருந்தீங்களே! உங்க லாட்ஜுக்கு எதித்தாப்பல இருந்த டீக்கடையிலதானே நான் இருந்தேன்! யாருக்காவது டீ வேணும்னா, என் பெயரைச் சொல்லித்தானே கூப்பிடுவீங்க?" என்றார் அவர்.

அவர் புன்னகை இப்போது விரிந்திருந்தது. பழைய நாட்களின் நினைவுகளை அவர் ரசிக்கிறார் என்று தோன்றியது.

எனக்கு சட்டென்று நினைவுக்கு வந்து விட்டது. 

"நீ மகாராஜாவா?" என்று அவசரமாகக் கேட்ட நான், சட்டென்று பல்லைக் கடித்துக் கொண்டு,"சாரி" என்றேன்.

லாட்ஜின் வராந்தாவில் நின்றபடி,"டேய் மகாராஜா! ரெண்டு டீ கொண்டு வாடா!" என்று எத்தனை முறை கூவி இருப்பேன்!

ஒரு 'மகாராஜா' 'டேய் மகாராஜா!' என்று கூப்பிடப்பட்டு அதிகாரம் செய்யப்படும் அவலத்தை நாங்கள் ஒரு நகைச்சுவையாக நினைத்துச் சிரித்ததும், "இவனுக்கு இவன் அப்பா அம்மா வேற ஏதாவது பெயர் வச்சிருக்கலாம்!" என்று அவன் முகத்துக்கு நேராகவே சொல்லிச் சிரித்ததும் என் நினைவுக்கு வந்தது.

சில சமயம், அவன் ரோஷம் வந்தவனாக, "ஒரு நாளைக்கு நானே ஒரு பெரிய ஹோட்டல் ஆரம்பிக்கறேனா இல்லையா பாருங்க!" என்று எங்களிடம் கூறியதையும், அதை ஒரு நகைச்சுவையாகக் கருதி நாங்கள் சிரித்ததும் கூட என் நினைவுக்கு வந்தது. 

இப்போது மகாராஜா என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தார். 

அரசியல் இயல்
அதிகாரம் 49 
 காலமறிதல்
குறள் 484
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.

பொருள்:
ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், இந்த உலகம் முழுவதையும் வேண்டினாலும் அது கைவசப்படும்.
அறத்துப்பால்                                                                              காமத்துப்பால்

Monday, May 17, 2021

483. சூடு கண்ட பூனை

வெங்கட்டின் நண்பன் ரகு அந்த யோசனையைச் சொன்னபோது, முதலில் வெங்கட்டின் மனதில் ஏற்பட்டது பொங்கி எழுவது போல் எழுந்த உற்சாகம்தான். 

ஆனால் உயர எழும் நெருப்பை நீரை ஊற்றி அணைப்பது போல், அந்த உற்சாகத்தை அவன் உடனே அழித்து விட்டான்.

"எனக்கு இது சரியா வராதுடா!" என்றான் வெங்கட்.

"ஏன்?" என்றான் ரகு.

"உனக்குத்தான் என்னோட பின்னணி தெரியுமே!" என்றான் வெங்கட் பெருமூச்சுடன்.

த்து வருடங்களுக்கு முன் நடந்த விஷயம் அது.

வெங்கட் ஒரு நல்ல நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தான். திருமணமாகி ஒரு வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. வாழ்க்கை மகிழ்ச்சியாகப் போய்க் கொண்டிருந்தது.

கல்லூரியில் அவனுடன் படித்த ரமணியைத் தற்செயலாகச் சந்தித்தான்.

ரமணியின் அப்பா சேகர் ஒரு பெரிய தொழில் அதிபர். அவருடைய நிறுவனமான 'சேகர் இண்டஸ்ட்ரீஸ்' பற்றி அறியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.

ரமணி தான் ஒரு புதிய தொழில் ஆரம்பிக்கப் போவதாகச் சொன்னான்.

"ஏன், உன் அப்பாவோட தொழிற்சாலையையே நீயும் பாத்துக்கலாமே" என்று கேட்டான் வெங்கட்.

"என் அப்பாவோட தொழில் ரொம்பப் பெரிசு. அதைப் பல மூத்த அதிகாரிகள் நிர்வாகம் பண்றாங்க. அங்கே எனக்கு சுதந்திரம் இருக்காது. அவங்க பேச்சைக் கேட்டுத்தான் நடக்க வேண்டி இருக்கும். எங்கப்பாவே எல்லாத்தையும் அவங்க கிட்ட விட்டுட்டு அவங்க சொல்றபடியே தன் தொழிலை நடத்திக்கிட்டிருக்காரு. 

"என்னால அப்படிப்பட்ட சூழ்நிலையில வேலை செய்ய முடியாதுன்னு எங்கப்பா கிட்ட சொல்லிட்டேன். நான் தனியா தொழில் ஆரம்பக்கப்போறதா சொன்னப்ப, அவரும் அதுக்கு ஒத்துக்கிட்டு முதலீட்டுக்குத் தேவையான பணத்தைக் கொடுக்கறதா சொல்லி இருக்காரு. எல்லாம் என் பேர்ல, என் கட்டுப்பாட்டிலதான் நடக்கும். என் அப்பா தலையீடு இருக்காது."

"ஓ, ரொம்ப நல்ல விஷயம்" என்றான் வெங்கட், ஏதோ சொல்ல வேண்டுமே என்பதற்காக.

"ஆனா, எனக்கு பார்ட்னர்களா நல்ல ஆட்கள் வேணும். அப்பதான் தொழில் சிறப்பா நடக்கும். ஏற்கெனவே ஒரு நண்பன் என்னோட சேருவதா சொல்லி இருக்கான். இப்ப உன்னை சந்திச்சது நல்லாதாப் போச்சு. நீயும் ஒரு பார்ட்னரா சேந்துடு" என்றான் ரமணி.

"என்னை விட்டுடுப்பா! நான் ஏதோ ஒரு வேலையில இருந்துக்கிட்டிருக்கேன். என்னால முதலீடு எதுவும் செய்ய முடியாது. சொந்தத் தொழில் செய்யறதைப் பத்தியெல்லாம் என்னால நினைச்சுக் கூடப் பாக்க முடியாது" என்றான் வெங்கட்.

"உன்னை யாருடா முதலீடு செய்யச் சொன்னாங்க? உன்னை மாதிரி சில நல்லவங்க, படிச்சவங்க, அறிவுள்ளவங்க துணையோடதான் என் தொழிலை நடத்தணும்னு நினைக்கிறேன். நீ ஒர்க்கிங் பார்ட்னரா சேந்துக்க. நீ இப்ப வாங்கற சம்பளத்தைப் போல ரெண்டு மடங்கு வருமானமாவது உனக்கு வரும்படி நான் பாத்துக்கறேன். லாபத்தில பங்கு கொடுக்கறதைப் பத்தி அக்ரிமென்ட் போட்டுக்கலாம். பிராஜக்ட் ரிபோர்ட்டை நீ பாத்தாலே எவ்வளவு லாபம் வரும், உன் பங்குக்கு எவ்வளவு வரும்னெல்லாம் நீ தெரிஞ்சுக்கலாம்" என்றான் ரமணி விடாமல்.

ரமணி காட்டிய விவரங்களைப் பார்த்ததும், அது நிச்சயமாக லாபம் தரும் தொழில்தான் என்று தோன்றியதால், வெங்கட் அவனுடன் ஒர்க்கிங் பார்ட்னராகச் சேர ஒப்புக் கொண்டான்.

"நல்ல வேலையை விட்டுட்டு ஏன் இதில இறங்கறீங்க?" என்றாள் அவன் மனைவி கீதா. 

"சொந்தமா தொழில் செய்யணும்னு ரொம்ப நாளாவே எனக்கு ஒரு ஆசை உண்டு. இப்ப ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு .நாம முதல் எதுவும் போடப் போறதில்ல. இதில பெரிய  ரிஸ்க் எதுவும் இருக்காது" என்றான் வெங்கட்.

னால், ஏற்படாது என்று அவன் நினைத்த ஆபத்து ஏற்பட்டே விட்டது. ரமணி ஆரம்பித்த தொழில் துவக்கத்திலிருந்தே தள்ளாடியது. 

துவக்கத்தில் லாபப் பபங்கீட்டின்போது கழித்துக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் மாதா மாதம் வெங்கட்டுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் ஆறு மாதங்களுக்குப் பிறகு அது நின்று போயிற்று. 

ரமணியிடம் கேட்டபோது, கையில் பணம் இல்லையென்றும், தன் தந்தையிடம் பணம் கேட்டிருப்பதாகவும் ஓரிரு மாதங்களில் எல்லாம் சரியாகி விடும் என்றும் உறுதி கூறினான். 

ஆனால் தொடர்ந்து மூன்று மாதங்களுக்குப் பணம் வராத நிலையில், தொழிலிலும் எந்த முன்னேற்றம் ஏற்படாத நிலையில், வெங்கட் பார்ட்னர்ஷிப்பிலிருந்து விலகினான். 

நல்லவேளையாக, ஒப்பந்தத்தில் குறைந்தபட்சம் இத்தனை ஆண்டுகளுக்கு பார்ட்னர்ஷிப்பிலிருந்து விலகக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் இல்லை.

அதற்குப் பிறகு, வேறு வேலை தேடிக் கொள்ள, வெங்கட்டுக்குப் பல மாதங்கள் பிடித்தன. அந்தக் காலத்தில் அவன் எதிர்கொண்ட பொருளாதாரப் பிரச்னைகளும் மன உளைச்சலும் அவனை இனி எப்போதும் சொந்தத் தொழில் என்ற சிந்தனையே எழக் கூடாது என்று உறுதி கொள்ள வைத்தன.

"அப்ப நீ செஞ்சது ஒரு முதிர்ச்சி இல்லாத செயல். ஆங்கிலத்தில மிஸ்அட்வெஞ்சர்னு சொல்லலாம். ஒரு காரியம் செய்யும்போது அதற்கான நேரம், சூழ்நிலை எல்லாம் சரியா இருக்கணும். அந்த சமயத்தில, உனக்கும் தொழில் அனுபவம் கிடையாது, அந்த ரமணிக்கும் கிடையாது. உங்க ரெண்டு பேருக்குமே தொழில் செய்யறதுக்கான சரியான நேரம் அது இல்ல.

"ரெண்டாவது, எந்த ஒரு செயலையும் செய்யறதுக்கு சில கருவிகள் வேணும். ஒரு தொழில் செய்ய, போதுமான முதலீடு இருக்கணும், தொழில் பத்தி அறிவும், அனுபவமும் இருக்கணும், ஃபைனான்ஸ், மார்க்கெடிங்குக்கெல்லாம் சில சப்போர்ட்களும் இருக்கணும்.

"ரமணியோட அப்பா ஒரு தொழிலதிபர்ங்கறதால இந்தக் கருவிகள் எல்லாம் அவங்கிட்ட இருக்குன்னு நீ நினைச்சுக்கிட்டே. ஆனா ஆரம்பத்தில முதலீடுக்குப் பணம் கொடுத்ததைத் தவிர அவன் அப்பா கிட்டேந்து வேற எந்த சப்போர்ட்டும் அவனுக்குக் கிடைக்கலேன்னு தெரியுது.

"நாம ஆரம்பிக்கப் போற தொழில் அப்படி இல்ல. உன்னையும், என்னையும் சேர்த்து நாலு பார்ட்னர்கள் இருக்காங்க. எல்லாருமே அனுபவம் உள்ளவங்க. அதில நீயும் நானும் டெக்னிகல் விஷயங்கள்ள, ஒத்தர் நிதி நிர்வாகத்தில, ஒத்தர் மார்க்கெட்டிங்ல படிப்பும் அனுபவமும் உள்ளவங்களா இருக்கோம். "ஒரு பெரிய நிறுவனத்தோட மார்க்கெட்டிங் டை-அப்பும் செஞ்சுக்கிட்டிருக்கோம்.

"அதை விட சிறப்பா, ஒரு வெஞ்ச்சர் கேபிடல் நிறுவனம் நமக்கு முதலீட்டுக்கான நிதியைக் கொடுக்கறாங்க. நிதி கொடுக்கறதுக்கு முன்னால, அவங்க நம்ம பிராஜக்டை முழுமையா ஆய்வு செஞ்சு அதை ஏத்துக்கிட்டிருக்காங்க. அதனால நாம சரியான நேரத்தில, வலுவான கருவிகளோட இதில இறங்கறோம். அதனால இதில நாம் நிச்சயமா வெற்றி பெறுவோம்" என்றான் ரகு உறுதியுடன்.

"யோசிச்சுப் பாக்கறேன்" என்றான் வெங்கட்.

அரசியல் இயல்
அதிகாரம் 49 
 காலமறிதல் 
குறள் 483
அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.

பொருள்:
ஒரு செயலைச் செய்து முடிப்பதற்கு வேண்டிய கருவிகளுடன் ஏற்ற காலத்தையும் அறிந்து செய்தால், அரிய செயல் என்பது உண்டோ?
                            
அறத்துப்பால்                                                                              காமத்துப்பால்

Sunday, May 16, 2021

482. காய் நகர்த்திய கார்த்திகேயன்

கார்த்திகேயன் பொறியியல் பட்டப் படிப்பு முடித்து வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தபோது, அவனுக்கு அந்த சொந்தத் தொழில் வாய்ப்புக் கிடைத்தது.

சில வகை இயந்திரங்களைத் தயாரித்து வந்த ஒரு பெரிய தொழில் நிறுவனம் தனக்குத் தேவையான உதிரி பாகங்களைத் தயாரித்துக் கொடுக்க சில சிறு தொழில்களுக்கு உதவும் திட்டம் ஒன்றை அறிவித்தது.

அந்தப் பெரிய நிறுவனம் ஒரு தொழிற்பேட்டை அமைத்து அதில் 30 தொழிற்சாலைகளைக் கட்டி அவற்றில் தொழிற்கூடங்களை நிறுவித் தங்களுக்குத் தேவையான உதிரி பாகங்களைத் தயாரித்துக் கொடுக்க புதிதாகப் பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கு வாய்ப்பளிக்க முன் வந்தது. 

இயந்திரங்கள் வாங்குவதற்கு மட்டும் ஐந்து லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் போதும். தொழிற்கூடத்துக்கு வாடகை மட்டும் கொடுக்க வேண்டும். குறிப்பட்ட உதிரி பாகங்களைத் தயாரித்து அந்தப் பெரிய நிறுவனத்துக்கு வழங்க வேண்டும். 

மாதத்துக்கு எத்தனை பாகங்கள் தயாரித்து வழங்க வேண்டும், அவை என்ன விலைக்கு வாங்கப் படும் என்பதெல்லாம் ஒப்பந்த அடிப்படையில் முடிவு செய்யப்படும். 

ஆண்டுக்கு ஒருமுறை ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு, வழங்க வேண்டிய பொருட்களின் எண்ணிக்கை, விலை போன்றவை தேவைக்கும், சந்தை நிலவரத்துக்கும் ஏற்ப ஒப்பந்தத்தில் மாற்றி அமைக்கப்படும்.

பலரும் இதற்கு விண்ணப்பித்த நிலையில், கார்த்திகேயன் உட்பட 30 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

ஒரு பெரிய நிறுவனத்தில் பணி செய்து ஓய்வு பெற்ற அவன் தந்தை, "உனக்கு லைஃப் செட்டில் ஆயிடுச்சுடா. அது வளர்ந்து கொண்டே இருக்கிற கம்பெனி. மார்க்கெடிங், ஃபைனான்ஸ் பிரச்னைகள் இல்லாம, தயாரிப்பில மட்டும் கவனம் செலுத்திக்கிட்டு லாபகரமா இயங்கிக்கிட்டே இருக்கலாம்" என்றார்.

மூன்று வருடங்களுக்குப் பிறகு, கார்த்திகேயன் தொழில் நிறுவனத்தின் அனுமதி பெற்றுத் தன் தொழிற்சாலையை அந்தத் தொழிற்பேட்டைக்கு வெளியே தான் வாடகைக்கு எடுத்திருந்த இடத்துக்கு மாற்றினான். 

அவர்கள் காரணம் கேட்டபோது, தன் நண்பன் ஒருவன் அவனுக்குச் சொந்தமான ஒரு இடத்தைத் தனக்குக் குறைந்த வாடகைக்குக் கொடுப்பதாகவும், அது பெரிய இடம் என்பதால் எதிர்காலத்தில் அதிக இயந்திரங்களை நிறுவி, உற்பத்தியை அதிகரிக்க உதவும் என்றும் கூறினான். 

வெளியில் தொழிற்சாலைகளை அமைத்து அந்த நிறுவனத்துக்கு உதிரி பாகங்களைத் தயாரித்து வழங்கி வந்த சில நிறுவனங்கள் தங்களுக்குத் தொழிற்பேட்டையில் இடம் வேண்டுமென்று கேட்டு வந்ததால், தொழில் நிறுவனம் கார்த்திகேயனின் கோரிக்கையை ஏற்றது.

"ஏண்டா, அவங்க இண்டஸ்டிரியல் எஸ்டேட்டை விட்டுட்டு வெளியே போற? அதிக வாடகை கொடுத்து ஒரு இடத்தை எடுத்திருக்க!" என்றார் கார்த்திகேயனின் தந்தை.

"அவங்க தொழிற்பேட்டையில இருந்தா அவங்களுக்கு மட்டும்தான் பொருட்களைத் தயாரிச்சுக் கொடுக்க முடியும். வெளியில இருந்தா இந்தக் கட்டுப்பாடு இருக்காது. இப்ப கையில கொஞ்சம் பணம் சேர்ந்திருக்கறதால, புதுசா ரெண்டு மூணு இயந்திரங்கள் வாங்கி வேற சில கம்பெனிகளுக்கும் பொருட்கள் தயாரிச்சுக் கொடுக்க முடியும். ஏற்கெனவே ஒரு கம்பெனியில பேசி இருக்கேன். அவங்க ஆர்டர் கொடுக்கறதாச் சொல்லி இருக்காங்க" என்றான் கார்த்திகேயன்.

"எதுக்கு இந்த வேண்டாத வேலை? உனக்கு ஒத்தன் வாழைப்பழத்தை உரிச்சுக் கையில கொடுக்கறான். அதோட அருமை தெரியலியே உனக்கு! ரிஸ்க் எடுக்கறேன்னு நினைக்கிறேன்" என்றார் அவன் தந்தை.

கார்த்திகேயன் பதில் கூறவில்லை.

அடுத்த சில ஆண்டுகளில் கார்த்திகேயன் அந்தப் பெரிய நிறுவனத்துக்குப் பொருட்கள் தயாரித்து வழங்கியதுடன், வேறு சில நிறுவனங்களுக்கும் சிறிய அளவில் பொருட்கள் தயாரித்து வழங்கி வந்தான்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தப் பெரிய நிறுவனம் நலிவடையத் தொடங்கியது. தொழில் நுட்ப மாற்றங்களால் அவர்கள் தயாரித்து வந்த இயந்திரங்களுக்கான தேவை குறைந்து கொண்டே வந்ததாகக் கூறினார்கள்.

உதிரி பாகங்கள் வழங்கியதற்கான பில்களுக்குப் பெரிய நிறுவனத்திலிருந்து பணம் வருவது தாமதமாகிக் கொண்டு வந்தது. 

துவக்கத்தில் ஒரு மாதத்தில் பில்களுக்குப் பணம் கொடுத்து  வந்தவர்கள், இரண்டு மாதம், மூன்று மாதம் என்று காலத்தை நீட்டித்து, ஆறு மாதங்களுக்குப் பிறகும் பணம் கொடுக்க முடியாத நிலை வந்தது.

உதிரி பாகங்கள் தயாரித்து வந்த சிறு தொழிற்சாலைகளில் பல, தங்கள் பில்களுக்குப் பணம் வராததால் தொடர்ந்து செயல்பட முடியாத  நிலைக்கு வந்தன. 

இனி அந்த நிறுவனத்துக்குப் பொருட்கள் தயாரித்து வழங்கினாலும், தங்கள் பில்களுக்கான பணம் வருமா என்ற ஐயம் ஏற்பட்டதால் பல சிறு தொழில் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியையே நிறுத்தி விட்டன. சில நிறுவனங்கள் முழுமையாக மூடப்பட்டன.  ஊழியர்களுக்கான சம்பளத் தொகை பல மாதங்களுக்கு வழங்கப்படவில்லை.

கார்த்திகேயன் தான் ஏற்கெனவே வேறு சில நிறுவனங்களுக்குப் பொருட்கள் தயாரித்து வழங்கி வந்ததால் அவனால் நிலைமையைச் சமாளிக்க முடிந்தது. அந்த நிறுவனங்களிடமிருந்து அதிக ஆர்டர்கள் கோரிப் பெற்றான். புதிய வாடிக்கையாளர்களைப் பெறும் முயற்சியில் அவன் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால், புதிய ஆர்டர்களைப் பெறுவது அவனுக்குக் கடினமாக இல்லை.

"எப்படிடா? இதையெல்லாம் முன்னாலேயே எதிர்பாத்தியா?" என்றார் அவன் தந்தை.

"இல்லப்பா. ஒரு கம்பெனியை மட்டும் நம்பி இருக்கறது ரிஸ்க்னு நினைச்சேன். வாழ்க்கையில மேல இருந்தவங்க கீழே போறது நம்மைச் சுத்தி நடக்கறதைப் பாக்கறமே! அது மாதிரி நிறுவனங்களுக்கும் நடக்கலாமே! அதனாலதான் ஒரு கம்பெனியை மட்டும் நம்பி இருக்க வேண்டாம்னு திட்டம் போட்டு நடந்துக்கிட்டேன். இப்ப கூட என்னென்ன மாறுதல்கள் வருமோ, வந்தா அதுக்கு நாம எப்படித் தயாரா இருக்க முடியும்னு யோசிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன்" என்றான் கார்த்திகேயன்.

மகனைப் பெருமையுடன் பார்த்தார் அவன் தந்தை.

அரசியல் இயல்
அதிகாரம் 49 
 காலமறிதல்  
குறள் 482
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.

பொருள்:
காலத்தோடு பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.

அறத்துப்பால்                                                                              காமத்துப்பால்

Saturday, May 15, 2021

481. காலம் வரும்!

"இது எப்படிக் கிடைச்சது உங்களுக்கு?" என்றார் கட்சித் தலைவர் சத்தியமூர்த்தி.

"எனக்கு நெருக்கமான ஒரு அரசாங்க அதிகாரி மூலமா!" என்றார் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நவநீதம்.

"ரொம்ப வலுவான ஆதாரமா இருக்கே இது!  தகவல் உரிமைச் சட்டத்தில அதிகாரபூர்வமாவே விவரங்கள் வாங்கி வழக்குப் போட்டா முதல்வருக்கு தண்டனை நிச்சயம்."

"நானும் அப்படித்தான் நினைச்சேன். அப்ப அதுக்கான வேலைகளைத் தொடங்கிடலாமா?" என்றார் நவநீதம் உற்சாகத்துடன்.

"இருங்க.விவரங்களை சேகரிச்சுடலாம். ஆனா முதல்வர் மீது வழக்குப் போடணும்னா, அதுக்கு ஆளுனர்கிட்ட அனுமதி வாங்கணும். ஆளுனர் அனுமதி கொடுப்பாரா?"

நவநீதம் சுரத்து இறங்கியவராக மௌனமாக இருந்தார்.

"மாநிலங்களவையில பெரும்பான்மை இல்லாத மத்திய அரசு இவங்க கட்சியோட பத்து மாநிலங்கள் அவை உறுப்பினர்கள் ஆதரவை நம்பித்தானே இருக்காங்க? அதனால இந்த அரசுக்கு எதிரா மத்திய அரசு எதையும் செய்யாது. மத்திய அரசு விருப்பப்படிதானே இந்த ஆளுனர் நடந்துப்பாரு?" என்றார் சத்தியமூர்த்தி.

"அப்படின்னா ஒண்ணு செய்யலாம். நமக்கு இருக்கிற தொடர்புகள் மூலமா இந்த ஆதாரத்தை, நம்பகத்தன்மை உள்ள ஒரு பெரிய பத்திரிகையில பிரசுரிக்கச் செய்யலாம்." 

"செய்யலாம். இது உண்மையான ஆதாரம்கறதால அரசாங்கம் ஒப்புக்கு இதை மறுக்குமே தவிர, பத்திரிகைக்கு எதிரா வழக்குப் போடாது.  அதனால, இது உண்மையானதுன்னு நாம உறுதி கொடுத்தா, சில பெரிய பத்திரிகைகள் இதை வெளியிட ஒத்துப்பாங்க."

"அப்புறம் என்ன?" என்றார் நவநீதம் உற்சாகம் திரும்பியவராக.

"அப்புறம் என்னங்கறதுதான் கேள்வி!" என்றார் சத்தியமூர்த்தி சிரித்துக் கொண்டே.

"நீங்க என்ன சொல்றீங்க?"

"இது பத்திரிகையில வெளி வந்தப்பறம் என்ன நடக்கும்? இது ரொம்பப் பரபரப்பாகும். எல்லாரும் இது பத்திப் பேசுவாங்க. அது பத்தி முழுசா விசாரணை நடத்தணும்னு நாம போராட்டம் பண்ணலாம். அதுக்கு மக்கள்கிட்டேயும், ஊடகங்களிலேயும் ஆதரவு கூட இருக்கும். ஆனா ஆறு மாசத்துக்குள்ள எல்லாம் அடங்கிடும். தேர்தலுக்கு இன்னும் ரெண்டு வருஷம் இருக்கு. தேர்தல் சமயத்தில நாம இதைப் பத்திப் பேசினா, அப்ப மக்கள் கிட்ட அதில அதிக ஆர்வம் இருக்காது."

"அப்ப, நம்பளால எதுவுமே செய்யமுடியாதா?"

"நல்ல காலத்துக்காகக் காத்திருப்போம்."

"என்னங்க நீங்க? ஜோசியத்தை நம்பறவங்க மாதிரி நல்ல காலம் வரவரையில காத்திருக்கணுங்கறீங்க?"

"நான் காலம்னு சொன்னது வேற அர்த்தத்தில. இப்ப சூழ்நிலை நம் எதிரிகளுக்கு சாதகமா இருக்கு. அது நமக்கு சாதகமா ஆகற வரையிலும் நாம காத்திருக்கணும்."

"அது எப்ப வருமோ?" என்றார் நவநீதம் சலிப்புடன்.

"கவலைப் படாதீங்க. அது இன்னும் ரெண்டு மூணு மாசத்தில வரும்" என்றார் சத்தியமூர்த்தி சிரித்தபடி.

"அது எப்படி அவ்வளவு உறுதியாச் சொல்றீங்க?"

தன் கைக்கடிகாரத்தைப் பார்த்த சத்தியமூர்த்தி, "இப்ப மணி நாலு. இன்னும் மூணு மணி நேரத்தில இருட்டிடும்னு சொல்ல முடியாதா? அது மாதிரிதான்!" என்றார்.

நவநீதம் புரியாமல் தலைவரைப் பார்த்தார்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு, சத்தியமூர்த்தி நவநீதத்திடம்,"நீங்க கொடுத்த ஊழல் விவரங்கள் அடிப்படையில முதல்வர் மேல வழக்குப் போட அனுமதி கேட்டு ஆளுனர் கிட்ட மனு கொடுக்கலாம். அடுத்த வாரம் ஆளுனரைச் சந்திக்க நேரம் கேட்டிருக்கேன். நீங்களும் என்னோட வரீங்க!" என்றார்.

"இப்ப மட்டும் ஆளுனர் அனுமதி கொடுப்பாரா?" என்றார் நவநீதம் வியப்புடன்.

"நிச்சயமா கொடுப்பாரு."

"எப்படிச் சொல்றீங்க?"

"இப்ப நாடு முழுக்க ராஜ்யசபா தேர்தல் நடந்துக்கிட்டிருக்கு. நான் கணக்குப் போட்டு வச்சிருந்தபடியே, மத்தியில இருக்கற ஆளுங்கட்சிக்கு 15 இடங்கள் அதிகம் கிடைக்கப் போகுது. அதனால நம் எதிரிகளோட ஆதரவு அவங்களுக்கு இனிமே தேவையில்லை. அதோட தங்களோட பத்து எம் பிக்கள் ஆதரவு மத்திய அரசுக்குத் தேவைங்கறதைப் பயன்படுத்தி முதல்வர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து சில காரியங்களை சாதிச்சுக்கிட்டிருக்காரு. அதனால அவங்க முதல்வர் மேல ஆத்திரத்தில இருக்காங்க. அதனால அவருக்குக் குடைச்சல் கொடுக்க ஒரு சந்தர்ப்பம் கிடைச்சா, அவங்க அதை நழுவ விடமாட்டாங்க. அதனால காலம் இப்ப நமக்கு சாதகமா இருக்கு. இந்தக் காலத்துக்குக் காத்திருக்கணும்னுதான் நான் சொன்னேன்" என்றார் சத்தியமூர்த்தி சிரித்தபடி. 

அரசியல் இயல்
அதிகாரம் 49 
 காலமறிதல் 
குறள் 481
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

பொருள்:
தன்னைவிட வலிய கோட்டானை, காக்கை பகலில் வென்று விடும், அதுபோல் பகையை வெல்லக் கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும்.

                                     
அறத்துப்பால்                                                                              காமத்துப்பால்

Friday, May 14, 2021

480. கேட்டதும் கொடுப்பவரே!

"சார் இல்லியே!" என்றாள் சியாமளா.

"தெரியும். உங்களைத்தான் பார்க்க வந்தேன்" என்றார் கணேசன், சற்றுத் தயக்கத்துடன்.

கணவனின் அலுவலக மானேஜரான கணேசன் தன்னை ஏன் பார்க்க வந்திருக்கிறார் என்று யோசித்தபடியே அவரை உள்ளே அழைத்து உட்கார வைத்தாள் சியாமளா.

"சொல்லுங்க!" என்றாள் சியாமளா அவர் தயக்கத்தை கவனித்து.

"கம்பெனி நிலைமை முன்ன இருந்த மாதிரி இப்ப இல்லை. பெரியவர் காலத்தில நமக்குப் போட்டியே இல்லை. நாம ராஜா மாதிரி இருந்தோம். சார் வந்தப்பறமும் வியாபாரம் நல்லாத்தான் போய்க்கிட்டிருந்தது. ஆனா இப்ப ரெண்டு மூணு வருஷமா எங்கெங்கேந்தோ நிறைய போட்டி கம்பெனிகள் கிளம்பிட்டாங்க. போட்டியினால நம்ம வியாபாரம் குறைஞ்சதோட இல்லாம, நாம விலையையும் குறைக்க வேண்டி ஆயிட்டதால, ரெண்டு வருஷமா லாபம் ரொம்பக் குறைஞ்சு போயிடுச்சு. இந்த வருஷம் நஷ்டமே வரும் போல இருக்கு..." என்று சொல்லி நிறுத்தினார் கணேசன்.

"இதையெல்லாம் அவர் எங்கிட்ட சொல்லி இருக்காரே!" என்றாள் சியாமளா.

"பெரியவர் காலத்திலேந்தே தர்ம காரியங்களுக்கு நிறைய உதவி செய்யற பழக்கம் உண்டு. சாரும் அப்பா மாதிரியே நிறைய உதவிகள் செய்யறாரு. லாபம் நிறைய வந்தப்ப அப்படியெல்லாம் செய்யறது சரிதான். ஆனா இப்ப வருமானம் குறைஞ்சு, பாங்க்ல வாங்கின கடனுக்கு வட்டி கட்டறதே கஷ்டமா இருக்கற இந்த சமயத்தில இதையெல்லாம் குறைச்சுக்கணும்னு நான் சார் கிட்ட நிறைய தடவை சொல்லிப் பாத்துட்டேன். ஆனா அவரு உதவி கேக்கறவங்களுக்கெல்லாம் கொடுத்துக்கிட்டே இருக்காரு. நீங்கதான் அவர்கிட்ட சொல்லணும்!" என்றார் கணேசன்.

சியாமளா சிரித்தாள்.

கணேசன் ஒன்றும் புரியாமல் சியாமளாவைப் பாத்தார்.

"இன்னிக்கு காலையில கிரடிட் கார்டு கம்பெனிக்கு ஃபோன் பண்ணி 50,000 ரூபா கடன் வேணும்னு கேட்டாரு. அவங்க உடனே சாங்ஷன் பண்ணிட்டாங்க. நாளைக்கு பாங்க் அக்கவுன்ட்ல கிரடிட் ஆயிடுமாம்!"

கணேசன் குழப்பத்துடன், "சாருக்கு இவ்வளவு பண நெருக்கடி இருக்கறது எனக்குத் தெரியாது. வீட்டுச் செலவுக்காகவா கிரடிட் கார்டுல கடன் வாங்கறாரு?" என்றார், தான் இது பற்றி எந்த அளவுக்குப் பேச முடியும் என்று யோசித்தபடியே.

"வீட்டுச் செலவுக்கு இல்ல, சார்! அவர் நண்பர் ஒத்தரோட பையனுக்கு காலேஜ் ஃபீஸ் கட்ட உதவி செய்யறதா சொல்லி இருக்காறாம். அதுக்கு கையில பணம் இல்லேன்னு கடன் வாங்கறாராம்! எதுக்கு இப்படிக கடன் வாங்கி உதவி செய்யறீங்கன்னு நான் கேட்டதுக்கு, உதவி செய்யறதா நான் முன்னாடியே சொல்லிட்டேன், இப்ப கையில பணம் இல்லேங்கறதால என்னால உதவி செய்ய முடியாதுன்னு சொல்ல முடியுமாங்கறாரு. அவர் கிட்ட எடுத்துச் சொல்லச் சொல்லி நீங்க எங்கிட்ட சொன்னதும் எனக்கு சிரிப்புதான் வந்தது அதான் சிரிச்சுட்டேன்" என்றபோது சியாமளாவின் தொண்டை அடைத்தது.

தெரியாமல் இவரிடம் வந்து முதலாளியின் பிரச்னை பற்றிப் பேசி விட்டோமே என்று சங்கடமாக உணர்ந்தார் கணேசன்.

"எங்க பையன் இப்ப பத்தாவது படிக்கறான். இன்னும் ரெண்டு மூணு வருஷத்தில அவனை காலேஜ்ல சேக்கணும். அப்ப அதுக்குப் பணம் இல்லாம யார் கிட்ட போய் உதவி கேக்கலாம்னு யோசிக்கிற அளவுக்கு எங்க நிலைமை வந்துடும் போலருக்கு!" என்றாள் சியாமளா விரக்தியுடன்.

"அப்படியெல்லாம் நடக்காதும்மா!" என்றார் கணேசன் அவசரமாக. சியாமளாவுக்கு ஆறுதல் சொல்வதற்காக அவர் இப்படிச் சொன்னாலும் ஒருவேளை அப்படிப்பட்ட நிலைமை வந்து விடுமோ என்ற எண்ணம் அவர் அடி மனதில் எழுந்தது.

அரசியல் இயல்
அதிகாரம் 48 
 வலியறிதல்  
குறள் 480
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.

பொருள்:
தன் பொருளாதார நிலையை எண்ணாது பிறர்க்குச் செய்யும் உபகாரத்தால் ஒருவனது செல்வத்தின் அளவு, விரைவில் கெடும்.

அறத்துப்பால்                                                                              காமத்துப்பால்

Thursday, May 6, 2021

479. தந்தையின் நண்பர்

என் அப்பா இருந்தவரை மருதாசலம் மாமாவுடன் எங்களுக்குக் கடிதத் தொடர்பு இருந்தது. அப்பா மறைந்தபோது மருதாசலம் மாமாவிடமிருந்து இரங்கல் கடிதம் வந்தது. தன் நீண்ட நாள் நண்பரின் மறைவினால் தான் மிகவும் அதிர்ச்சி அடைந்திருப்பதாகத் தெரிவித்திருந்தார் அவர்.

ஆனால் அதற்குப் பிறகு அவருடனான எங்கள் தொடர்பு அடியோடு நின்று போய் விட்டது.

அப்பா  மறைந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகி விட்டன. ஆனால் அம்மா மட்டும் மருதாசலம் மாமாவைப் பற்றி அடிக்கடி பேசிக் கொண்டிருப்பாள்.

"அந்தஸ்தில அவருக்கும் நமக்கும் ஏணி வச்சா கூட எட்டாது. ஆனா உங்கப்பாவோட அவர் ரொம்ப நெருக்கமா இருந்தாரு. குசேலரும் கிருஷ்ணரும் மாதிரின்னு உங்கப்பா அடிக்கடி சொல்வாரு. உனக்கு ஹைதராபாத்தில வேலை கிடைச்சதும் நாம ஒரே அடியா ஊரை விட்டு ஹைதராபாத்துக்கு வர வேண்டியதாயிடுச்சு. அப்புறம் ஒரு தடவை அவர் பொண்ணு கல்யாணத்துக்கு ஊருக்குப் போயிட்டு வந்ததைத் தவிர, அப்புறம் உங்கப்பாவுக்கு ஊருக்குப் போக சந்தர்ப்பம் கிடைக்கல. ஆனா மூச்சுக்கு மூச்சு உங்கப்பா அவரைப் பத்தித்தான் பேசிக்கிட்டிருப்பாரு. வாரத்துக்கு ஒரு கடிதம் எழுதுவாரு உங்கப்பா. ஆரம்பத்தில அவரும் பதில் போட்டுக்கிட்டிருந்தாரு. ஆனா என்னவோ தெரியல. கொஞ்ச நாளைக்கப்பறம் அவர்கிட்டேருந்து கடிதம் வரது குறைஞ்சுடுச்சு. உங்கப்பாவுக்கு அதில வருத்தம்தான். நான் கூடச் சொன்னேன் ஊரை விட்டு வந்தப்பறம் அவருக்கு உங்ககிட்ட இருந்த நெருக்கம் குறைஞ்சு போயிருக்கும்னு. ஆனா உங்கப்பா அதை ஒத்துக்கல. அவனுக்கு நேரம் கிடைக்காம இருந்திருக்கும் அப்படிம்பாரு."

"அதான் அப்பாவே போயிட்டாரே! அப்புறம் என்ன?" என்றான் நான் ஒருமுறை.

ஆயினும் அம்மா மருதாசலம் மாமாவைப் பற்றி அவ்வப்போது பேசிக்கொண்டுதான் இருந்தார்.

ரு அலுவலுக்காக நான் கும்பகோணத்துக்குச் செல்ல வேண்டி இருந்தது, "அப்படியே ஊருக்குப் போய் மருதாசலம் மாமாவைப் பாத்துட்டு வாடா!" என்றார் அம்மா. எங்கள் ஊர் கும்பகோணத்துக்கு அருகில்தான் இருந்தது.

மருதாசலம் மாமாவைப் பார்ப்பதற்காக ஊருக்குப் போவது எனக்குச் சங்கடமாகத்தான் இருந்தது. ஆயினும் அம்மா சொன்னதற்காகப் போனேன்.

ஊர் நிறைய மாறி இருந்தது. ஆனால் மருதாசலம் மாமாவின் வீடு அதே போல்தான் இருந்தது. அந்தக் காலத்தில் ஊரிலேயே பெரிய வீடு அவருடையதுதான். ஆனால் இப்போது பல வீடுகள் இடிக்கப்பட்டுப் பெரிதாகவும் நவீனமாகவும் கட்டப்பட்டிருந்ததாலோ என்னவோ, மருதாசலம் மாமாவின் வீடு சற்றே களையிழந்து காணப்பட்டது.

என்னிடம் மிகவும் அன்புடனும்,கனிவுடனும் பேசினார் அவர். எனக்குக் காப்பி போட்டு எடுத்து வருவதாகச் சொல்லி அவர் உள்ளே போக யத்தனித்தபோது, "ஏன் மாமா, நீங்க போறீங்க?" என்றேன் நான் சங்கடத்துடன்.

"வேற யாரு இருக்காங்க. தங்கம் சின்னப் பொண்ணா இருக்கறப்பவே அவ அம்மா போய்ச் சேந்துட்டா. தங்கமும் கல்யாணம் ஆகிப் போயிட்டா. எனக்கு வேண்டியதை நான்தான் பாத்துக்கறேன்" என்றார் மருதாசலம் மாமா.

முன்பெல்லாம் விடு நிறைய வேலையாட்கள் இருந்தது என் நினைவுக்கு வந்தது. ஆனால் நான் எதுவும் கேட்கவில்லை.

நான் சொல்லியும் கேட்காமல் மாமா உள்ளே போய் காப்பி போட்டு எடுத்து வந்தார்.

அவரிடமிருந்து காப்பி தம்ளரை வாங்கிக் கொண்டு,"சமையலுக்கு ஆள் வச்சுக்கலியா மாமா?" என்றேன் நான் சற்றுத் தயக்கத்துடன்.

"ஆளு வச்சுக்கிட்டா சம்பளம் கொடுக்க வேண்டாமா?" என்றார் மாமா சிரித்துக் கொண்டே.

"என்ன மாமா சொல்றீங்க?" என்றேன் நான் அதிர்ச்சியுடன்.

"என்னத்தைச் சொல்றது? ஒரு காலத்தில எனக்கு ஏகப்பட்ட சொத்து இருந்தது. அதனால கணக்குப் பாக்காம ஏகமா செலவழிச்சேன். மீனாட்சி கூட சொல்லுவா, கொஞ்சம் பாத்து செலவழிங்க, அப்புறம் பின்னால நமக்கு ஒண்ணும் இல்லாம போயிடப் போகுதுன்னு. அப்ப அவ சொன்னதை நான் காதில போட்டுக்கல. அவ போனப்பறம் என்னைக் கேக்கறத்துக்கு யாரும் இல்ல. உன் அப்பா கூடச் சொல்லுவான். கல்யாணத்துக்குப் பொண்ணு இருக்கா, பாத்து செலவழிடான்னு!

"தங்கத்துக்குக் கல்யாணம் நிச்சயம் ஆனப்பறம், பணத்துக்கு ஏற்பாடு பண்றப்பதான் தெரிஞ்சுது என் பொருளாதார நிலைமை அப்படி ஒண்ணும் வலுவா இல்லேன்னு. கல்யாணச் செலவுக்கே நிலத்தையெல்லாம் விற்க வேண்டி இருந்தது. 

"அதுக்கு முன்னாடியே வேற செலவுகளுக்காகக் கொஞ்சம் நிலத்தை வித்திருந்தேன். எவ்வளவு வருமானம் வருது, எவ்வளவு செலவாகுதுன்னு கணக்குப் பாக்காமயே வாழ்ந்துக்கிட்டிருந்தேன். நிலங்களையெல்லாம் வித்தப்பறமும் கல்யாணச் செலவுக்குக் கடன் வாங்க வேண்டி இருந்தது. 

"என் நிலைமை அவ்வளவு மோசமாயிடுச்சுன்னு என்னால நம்பவே முடியல. கல்யாணத்துக்கு வந்த உன் அப்பாகிட்ட கூட என் நிலைமையைப் பத்தி நான் எதுவும் சொல்லல. உங்கப்பாவோட கடிதங்களுக்கு பதில் போடறதையும் குறைச்சுட்டேன். என் வாழ்க்கை இப்ப ரொம்ப எளிமையா மாறிடுச்சு."

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒரு பெருங்காய டப்பாவில் இருந்த பெருங்காயம் அத்தனையும் தீர்ந்து போன பின், பெருங்காய வாசனையுடன் பெருங்காய டப்பா மட்டும் மீதமிருப்பது போல், அந்தப் பெரிய வீடு இருப்பதாக எனக்குத் தோன்றியது.

"நல்ல வேளை நீ இன்னிக்கு வந்தே. அடுத்த வாரம் வந்திருந்தா நான் இந்த வீட்டிலே இருந்திருக்க மாட்டேன்" என்றார் மாமா.

"ஏன் மாமா?"

"இன்னும் கொஞ்சம் கடன் பாக்கி இருக்கு. எனக்கு எதுக்கு இவ்வளவு பெரிய வீடு? அதானல இதை வித்துட்டேன். அந்தப் பணத்தில கடனை அடைச்சுட்டு மீதமிருக்கற பணத்தை பாங்க்ல போட்டுட்டு அதிலேந்து வர வட்டியை வச்சுக்கிட்டு என் செலவுகளைப் பாத்துக்கலாம்னு இருக்கேன். சின்ன வீடு ஒண்ணை வாடகைக்கு எடுத்திருக்கேன். அடுத்த வாரம் அங்கே போயிடுவேன்."

எனக்குத் தொண்டையை அடைத்தது. நல்லவேளை தன் நண்பர் இந்த நிலைமைக்கு வந்து விட்டதைப் பார்க்க என் அப்பா உயிரோடு இல்லை!

அரசியல் இயல்
அதிகாரம் 48 
 வலியறிதல் 
குறள் 479
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.

பொருள்:
பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை பல வளங்களும் கொண்டதாக  இருப்பது போல் தோன்றி, இல்லாமல் மறைந்து கெட்டு விடும்.
                                     
அறத்துப்பால்                                                                              காமத்துப்பால்

Saturday, May 1, 2021

478. வசதியான வாழ்க்கை

திருமணமான புதிதில் அர்ஜுனன் தன் மனைவி லட்சுமியுடன் தன் நண்பன் கதிரவன் வீட்டுக்கு விருந்துண்ணச் சென்று விட்டுத் திரும்பியதும், லட்சுமி அவனிடம் கேட்டாள்;

"உங்க நண்பர் வீடு பெரிசா நல்லா இருக்கே, அது அவரோட சொந்த வீடா?"

"இல்லை, வாடகை வீடுதான்" என்றான் அர்ஜுனன்.

"வாடகை நிறைய இருக்கும் போலருக்கே1 அவங்க ரெண்டு பேருக்கு எதுக்கு இவ்வளவு பெரிய வீட்டை எடுத்துக்கிட்டிருக்காங்க?"

"அவனுக்கு நல்ல வேலை, சம்பளம். அதனால அவனால நிறைய வாடகை கொடுக்க முடியும்."

"நீங்க ரெண்டு பேரும் ஒரே படிப்புத்தானே படிச்சீங்க?" என்றாள் லட்சுமி.

"ஆமாம். அவனுக்கு நல்ல சம்பளத்தில நல்ல வேலை கிடைச்சது. எனக்கு சுமாரான சம்பளத்திலதான் வேலை கிடைச்சது! ஏன், உனக்கு இதில வருத்தமா?" என்றான் அர்ஜுனன்.

"சேச்சே! சும்மாதான் கேட்டேன். நமக்கு வர வருமானத்தில அளாவா செலவு செஞ்சு சேமிச்சுக் குடும்பம் நடத்தறதுதான் புத்திசாலித்தனம்னு எங்கம்மா சொல்லுவாங்க. எனக்கு ஒப்பிடற பழக்கம்லாம் கிடையாது. அவங்க அவங்க வாழ்க்கை அவங்க அவங்களுக்கு!" என்றாள் லட்சுமி சிரித்தபடியே.

'உண்மையிலேயே தன் மனைவி இப்படி நினைக்கிறாளா, அல்லது ஒப்புக்காக இப்படிச் சொல்கிறாளா?' என்று மனதுக்குள் நினைத்த அர்ஜுனன், "அதான் என் வாழ்க்கையில லட்சுமி நீ வந்துட்டியே, இனிமே எனக்கும் எல்லா அதிர்ஷ்டமும் வரும்" என்றான் அவளை உற்சாகப்படுத்தும் விதமாக.

முப்பது ஆண்டுகள் ஓடி விட்டன. அர்ஜுனன் வேலையில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. வேறு வேலைகளுக்கு முயன்றதில் அவனுக்கு வெற்றி கிட்டவில்லை. 

அவன் வேலை பார்த்த நிறுவனம் ஒரு பெரிய நிறுவனம் அல்ல. அவன் சம்பளம் பெரிதாக உயரவில்லை. வருடாந்தர ஊதிய உயர்வுகள், பணவீக்கத்தை ஒட்டி அவ்வபோது நிகழ்ந்த ஊதிய மாற்றங்கள், பதவி உயர்வுகளின்போது கிடைத்த ஊதிய உயர்வுகள் போன்றவை ஓரளவுக்கே அவன் பொருளாதார நிலையை உயர்த்தின.

ன்று அவன் வீட்டுக்கு அவன் நண்பன் கதிரவனும் அவன் மனைவி தாராவும் வந்திருந்தனர்.

உணவு அருந்திய பிறகு, அர்ஜுனன் கதிரவனை அழைத்துக் கொண்டு மாடியறைக்குச் சென்றான். பெண்கள் இருவரும் கீழே இருந்த படுக்கை அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றனர்.

"மாடி எப்ப கட்டின? போன தடவை வந்தப்ப இல்லையே!" என்றான் கதிரவன்.

"இப்பதான் ஆறு மாசம் முன்னால. நான் இந்த வீட்டைக் கட்டினதே குழந்தைங்க பில்டிங் செட் வச்சு வீடு கட்டற மாதிரி கொஞ்சம் கொஞ்சமாத்தானே! ரொம்ப நாள் முன்னால இந்த மனையை வாங்கினேன். அப்ப இந்த ஏரியா டெவலப் ஆகவே இல்லை. பஸ் கூடக் கிடையாது. ஆனா இப்ப எப்படி இருக்குன்னு பாக்கறியே! அப்புறம் சின்னதா ஒரு வீடு கட்டிக் குடி வந்தோம். அஞ்சாறு வருஷம் கழிச்சு கீழே இன்னொரு ரூம் கட்டினேன். இப்பதான் மாடி கட்ட முடிஞ்சது. பையனுக்கும் பெண்ணுக்கும் கல்யாணம் ஆகி வெவ்வேற ஊர்ல இருந்தாலும், அவங்க எப்பவாவது இங்க வந்தா தங்க வசதியா இருக்கும்னுதான் கட்டினேன். உன்னை மாதிரி நண்பர்கள் வரப்பவும் உக்காந்து பேச வசதியா இருக்கு" என்றான் அர்ஜுனன்.

"நீ புத்திசாலித்தனமா செயல்பட்டிருக்கே! என்னைப் பாரு. வேலை, ப்ரமோஷன்னு ஊர் ஊராப் போனேன். அங்கங்கே வாடகைக்கு வீடு எடுத்து வாழ்ந்துக்கிட்டிருந்தேன். ஏதாவது ஒரு ஊர்ல ஒரு வீடு வாங்கி இருக்கலாம். வேலையில இருந்தவரையிலும் வசதியா வாழ்ந்தாச்சு. இப்ப ரிடயர் ஆனப்பறம் பாத்தா, சொந்த வீடு இல்ல. இப்ப வீடு விக்கற விலையில வீடு வாங்கவும் முடியாது. ஒரே பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணினதைத் தவிர உருப்படியா எதுவும் செய்யல. பெரிய பதவி, நல்ல சம்பளம் எல்லாம் இருந்தும், சொந்த வீடு இல்ல. நிறைய சம்பாதிச்சேன். பணமெல்லாம் எங்கே போச்சுன்னே தெரியல. தாராளமா செலவழிச்சு வசதியா வாழ்ந்ததில, பணம் எங்கே போச்சு, எப்படிப் போச்சுன்னே கவனிக்காம விட்டுட்டேன். இப்ப, இருக்கற சேமிப்பில, வீட்டு வாடகை கொடுத்து, மத்த செலவுகளையும் பாத்துக்கிட்டு மீதி நாளை ஓட்டறது பெரிய சவாலா இருக்கும் போலருக்கு!" என்றான் கதிரவன் பெருமூச்சுடன்.

அரசியல் இயல்
அதிகாரம் 48 
 வலியறிதல்  
குறள் 478
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.

பொருள்:
பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) அகலமாக ஆகாமல் இருந்தால், அதனால் தீங்கு இல்லை
அறத்துப்பால்                                                                              காமத்துப்பால்

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...