Thursday, May 28, 2020

408. குப்பையிலிருந்து எரிவாயு

சின்ன ஊர்னுதான் பேரு, ஆனா ஊர்ல இவ்வளவு குப்பை. எங்கேந்துதான் இவ்வளவு குப்பை வருமோ!' என்று அலுத்துக் கொண்டார் சுப்பையா.

''நகரமா இருந்தா குப்பையை எங்கேயாவது கொண்டு கொட்டி ஊரை சுத்தமா வச்சுப்பாங்க. கிராமத்தில இதையெல்லாம் யார் செய்யறது? பஞ்சாயத்துக்கு வருமானமும் கிடையாது, வேலை செய்ய ஆளும் கிடையாது'' என்றார் தனபால்.

''நான் இதுக்கு முன்னே இருந்த ஊர்ல குப்பையிலேந்து கேஸ் தயாரிச்சு ஊர் ஜனங்களுக்கே விநியோகம் பண்றாங்க. நீங்களும் அப்படிச் செய்யலாமே?'' என்றார் பாலமுருகன். அவர் சமீபத்தில்தான் வேறு ஊரிலிருந்து அந்த ஊர் அரசுப் பள்ளிக்கு மாற்றலில் வந்திருந்தார்.

''அப்படியா? அரசாங்கத்தில செஞ்சு கொடுப்பாங்களா?'' என்றார் சுப்பையா.

''அரசாங்கத்தில கேட்டா பணம் இல்லைம்பாங்க. உங்க ஊர்க்காரங்களே பணம் போட்டு ஆரம்பிக்கலாமே!'' என்றார் பாலமுருகன்.

''இந்த ஊர்ல ஒத்தரைத் தவிர மத்த எல்லாருமே வசதி இல்லாதவங்கதான். அதனால ஊர்க்காரங்களால சின்னத் தொகை கூடக் கொடுக்க முடியாது.''

'வசதியானவர் ஒத்தர் இருக்கார்னு சொன்னீங்களே, அவர் முதலீடு செய்வாரா?'' என்றார் பாலமுருகன்.

சுப்பையாவும், தனபாலும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்.

''சரி, வாங்க. அவர் கிட்ட போய் கேட்டுப் பாக்கலாம். நீங்களும் வாங்க'' என்றார் சுப்பையா பாலமுருகனிடம்.

மூவரும் சக்திவேல் வீட்டுக்குச் சென்றனர்.

''ஐயா, நம்ம ஊர்ல நிறைய குப்பை சேருதுல்ல, குப்பையிலேந்து  கேஸ் தயாரிக்கலாம்னு சார் சொல்றாரு. அவரு முன்னே இருந்த ஊர்ல அப்படி செஞ்சிருக்காங்களாம்'' என்றார் சுப்பையா.

பாலமுருகன் திட்டத்தை விளக்கினார்.

''எவ்வளவு செலவாகும்? யார் பணம் போடப் போறாங்க?'' என்றார் சக்திவேல்.

''ரெண்டு லட்சம் ரூபா முதலீடு தேவைப்படும். அரசாங்கத்திலேந்து சப்ஸிடி கிடைக்கும். அது எவ்வளவுன்னு நான் கேட்டுச் சொல்றேன். ஆனா அது அப்புறம்தான் வரும். ஊல்ல நிறைய பேர் கேஸ் பயன்படுத்தறாங்க.நாம தயாரிக்கற கேஸ் விலை அவங்க இப்ப வாங்கற விலையில பாதி விலைதான் இருக்கும். அதனால நிறைய பேர் வாங்குவாங்க. நமக்கும் நல்ல லாபம் கிடைக்கும். போட்ட முதலை மூணு வருஷத்தில எடுத்துடலாம். உங்களை நான் அந்த ஊருக்கு அழைச்சுக்கிட்டுப் போய்க் காட்டறேன். நீங்களே அவங்க கிட்ட  விவதம் எல்லாம் கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்'' என்று பாலமுருகன் உற்சாகமாக விளக்கினார்.

''இருங்க. நான் எதுக்கு அங்கே வரணும்?'' என்றார் சக்திவேல்.

''ஐயா! நீங்க இதில முதலீடு பண்ணணும்னு கேக்கத்தான் வந்திருக்கோம்!' என்றார் சுப்பையா.

''அப்படியா? அதானே பாத்தேன், எதுக்கு இந்த விவரங்களையெல்லாம் வாத்தியார் நம்மகிட்ட சொல்றாருன்னு!'' என்றார் சக்திவேல், சிரித்துக் கொண்டே.

மற்ற மூவரும் மௌனமாக இருந்தார்.

''இங்க பாருங்க வாத்தியாரே! எனக்கு எழுதப்படிக்கத் தெரியாது. எனக்குத் தெரிஞ்சது வட்டித் தொழில் மட்டும்தான். அதிலேயும் நீங்க கேக்கறது பெரியதொகை. சரி. நான் ரெண்டு லட்ச ரூபா கொடுத்துடறேன். நான் சொல்ற வட்டியை மாசாமாசம் கொடுத்துடுங்க. முதலை எப்ப முடியுதோ அப்ப திருப்பிக் கொடுங்க. அது வரையிலும் மாசா மாசம் வட்டி கொடுத்துக்கிட்டிருந்தீங்கன்னா ஒரு பிரச்னையும் இல்ல'' என்றார் சக்திவேல்.

'சார். அது அப்படி இல்ல. இதில வருமானம் வர அஞ்சாறு மாசம் ஆகலாம். நீங்க முதலீடு செஞ்சா இந்தத் தொழிற்சாலையே உங்களோடதுதான். எல்லா லாபமும் உங்களுக்குத்தான்...''

''அதெல்லாம் எதுக்கு வாத்தியரே?  மாசா மாசம் வட்டி கொடுக்க முடியுமா உங்களால? எனக்கு அது மட்டும்தான் தெரியணும்!'' என்றார் சக்திவேல்.

மூவரும் சக்திவேல் வீட்டை விட்டு வேறியே வந்ததும், ''கொஞ்சமாவது படிச்சிருந்தார்னா, நாம சொல்றதைக் கேட்டுப் புரிஞ்சக்கிட்டு நிச்சயம் இதுக்கு ஒத்துக்கிட்டிருப்பாரு. ஆனா, நாம சொல்றதைக் கேக்கவே மாட்டேங்கறாறே! இவரு மாதிரி ஆளுங்க கிட்ட கடவுள் பணத்தைக் கொடுத்து வச்சிருக்காரே, அதுதான் கொடுமை!'' என்றார் பாலமுருகன்.

பொருட்பால் 
அரசியல் இயல் 
அதிகாரம் 41
கல்லாமை 
குறள் 408:
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.

பொருள்:
கல்லாதவரிடம் இருக்கும் செல்வம் நல்லவரிடம் இருக்கும் வறுமையை விடக் கொடியதாகும்.

Tuesday, May 26, 2020

407. வழிகாட்டி

ரெண்டு ப்ரொஃபஸர்கள் நமக்கு கிளாஸ் எடுக்கறாங்களே, அதில யாரை உன்னைப் பிடிச்சிருக்கு?'' என்று கேட்டாள் கலா.

''இதில என்ன சந்தேகம்? பாஸ்கர்தான்னு நம்ம கிளஸ்ஸ்ல எல்லாரும் சொல்லுவாங்களேடி!'' என்றாள் அனு.

''நானும் முதல்ல அப்படித்தான் நினைச்சேன். ஆனா இப்ப எனக்கு வேற  மாதிரி தோணுது'' என்றாள் கலா.

''என்ன தோணுது?''

''வெளிப்படையா சொல்லணும்னா, பாஸ்கர் கிட்ட கவர்ச்சியான தோற்றம் இருக்கு. அவர் நல்லா உடை உடுத்திக்கறார். கண்ணாடி போட்டிருந்தா கூட அழகான ஃபிரேமை செலக்ட் பண்ணி கண்ணாடி அவருக்குக் கூடுதல் அழகு கொடுக்கற மாதிரி செஞ்சிக்கிட்டிருக்காரு. சுந்தர்  இதுக்கு நேர் மாறா இருக்காரு.''

'ஆமாம். பேருதான் சுந்தர். ஆனா சுண்டெலி மாதிரி மூஞ்சி'' என்றாள் அனு சிரிப்புடன்.

''அதைத்தான் நான் சொல்ல வரேன். நாம தோற்றத்தை வச்சு எடை போடறோம். எனக்கென்னவோ பாஸ்கர் கிட்ட அந்த அளவுக்கு விஷயம் இல்லேன்னு தோணுது'' என்றாள் கலா.

''போடி. தோற்றம், நடை, உடை, பாவனை, பேச்சு எல்லாம்தான் முக்கியம். பாஸ்கர் வகுப்பு கலகலப்பா இருக்கும், நிறைய ஜோக் எல்லாம் சொல்லுவாரு. சுந்தர் வகுப்பு போரா இருக்கும். மனுஷன் சப்ஜெக்டை விட்டு அந்தண்டை இந்தண்டை போக மாட்டாரு. நல்லா உடை உடுத்திக்கவும் மாட்டாரு. ஒத்தரோட தோற்றமும் போர், பேச்சும் போர்னா அவரை எப்படிப் பிடிக்கும்?' என்றாள் அனு.

''நான் சொல்றதும் நீ சொல்றதும் ஒண்ணுதான்!' என்றாள் கலா.

''அது சரி. எதுக்கு ஓந்த ஒப்பீடு இப்ப?'' என்றாள் அனு.

"நம்ம ப்ராஜக்டுக்கு கைட் யார்னு நாம தேர்ந்தெடுக்கணுமே, அதுக்காகத்தான் கேட்டேன்.''

''நல்ல வேளை! நம்ம கல்லுரியில நம் விருப்பத்தைக் கேக்கறாங்க. நான் பாஸ்கரைத்தான் தேர்ந்தெடுக்கப் போறேன். ஆன, நிறைய பேர் பாஸ்கரைத்தான் தேர்ந்தெடுப்பாங்க. அதனால அவர் எனக்கு கைடா கிடைப்பாரான்னு தெரியல!'' என்றாள் அனு.

''எனக்கு அந்த பிரச்னை இல்லை. நான் சுந்தரைத்தான் தேர்ந்தெடுக்கப் போறேன்'' என்றாள் கலா.

'நல்ல வேளை! நீ ப்ராஜக்டுக்கு வழிகாட்டியைத்தான் தேர்ந்தெடுக்கற, வாழ்க்கைத் துணைவரை இல்லை!' என்றாள் அனு குறும்பாகச் சிரித்தபடி.

''ப்ரிசைஸ்லி, தட்ஸ் மை பாயின்ட்!'' என்றாள் கலா சிரித்துக்கொண்டே. 

''என்னடி இது. ப்ராஜக்ட் கொஞ்சம் கூட நகர மாட்டேங்குது! அடுத்ததா என்ன செய்யணும்னே புரியல'' என்றாள் அனு.

''உன் ப்ராஜக்ட் கைட் பாஸ்கர் கிட்ட உதவி கேக்க வேண்டியதுதானே?'' என்றாள் கலா.

"எத்தனையோ தடவை கேட்டுட்டேன். ஏதோ சொல்லி மழுப்பறாரு. தெளிவா சொல்ல மாட்டேங்கறாரு. அவருக்கே நிறைய விஷயம் தெரியலேன்னு நினைக்கிறேன்'' என்ற அனு சற்றுத் தயங்கிவிட்டு, ''அவரைப் பத்தின உன்னோட மதிப்பீடு சரிதான்னு நினைக்கறேன், அவர் நுனிப்புல் மேயற ஆள்தான்!'' என்றாள்.  

பொருட்பால் 
அரசியல் இயல் 
அதிகாரம் 41
கல்லாமை 
குறள் 407:
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று.

பொருள்:
நுட்பமானதான, மாட்சி உடைய, ஆராயும் திறமை பெற்ற அறிவு இல்லாதவனுடைய அழகான தோற்றம் மண்ணால் அழகாகச் செய்யப்பட்ட பாவை போன்றது.


Wednesday, May 20, 2020

406. செல்வத்தின் வருத்தம்

ரங்கதுரையின் குடும்பம் அந்த ஊரிலேயே மிகவும் செல்வம் மிகுந்த குடும்பம். செழிப்பான நிலம், தோட்டம், தென்னந்தோப்பு, அரண்மனை போன்ற வீடு என்று ரங்கதுரை ஒரு ஜமீன்தாரைப் போல் வாழ்ந்தவர்.

அவருடைய செல்வம் அவருக்கு செல்வாக்கையும் பெற்றுத் தந்தது. அவரைக் கலந்து பேசாமல் ஊரில் எந்த ஒரு பொதுக் காரியமும் நடந்ததில்லை.  

ஆனால் அவர் காலத்துக்குப் பின் நிலைமை மாறி விட்டது. அவருடைய நான்கு பிள்ளைகளில் மூவர் படித்து வெளியூருக்கு வேலைக்குச் சென்று விட்டனர். 

அவருடைய இரண்டாவது மகன் செல்வம் மட்டும் பள்ளிப் படிப்பையே முடிக்காததால் அந்த ஊரிலேயே இருந்தான். 

ரங்கதுரையின் மறைவுக்குப்பிறகு நான்கு சகோதரர்களும் பங்கு பிரித்துக் கொண்டனர். நிலங்கப் பங்கு பிரித்துக் கொண்ட பின், வீட்டை விற்று வந்த பணத்தை நால்வரும் பிரித்துக்கொள்ள, செல்வம் தன் பங்குக்குக் கிடைத்த பணத்தில் ஒரு சிறிய வீட்டை  வாங்கிக்கொண்டு அதில் இருந்தான். தன் பங்குக்குக் கிடைத்த நிலத்தில் கிடைக்கும் வருமானத்தில் சுமாரான வசதியுடன் வாழ்க்கையை ஒட்டி வந்தான்.

அந்த ஊரில் செல்வத்துக்கு நெருக்கமானவன் அவன் நண்பன் முத்து மட்டும்தான். 

செல்வம் முத்துவின் வீட்டுக்குப் போனபோது முத்து வெளியே கிளம்பிக் கொண்டிருந்தான்.

"எங்கேயோ கிளம்பிக்கிட்டிருக்கே போலருக்கே!" என்றான் செல்வம் .

"வேற எங்கே போவேன்? வயக்காட்டுக்குத்தான். நடவு வேலை நடக்குது இல்ல. நான் அங்க போய் நின்னாத்தான் வேலை நடக்கும்" என்றான் முத்து. 

"எனக்கு இந்த வேலை இல்ல. எங்கப்பா காலத்திலேந்தே குத்தகைக்காரங்கதான் பாத்துக்கறாங்க!"

"உன் வழி வேறப்பா.நீ பணக்கார வீட்டுப் பிள்ளை!" என்றான் முத்து சிரித்தபடி.

"இந்தக் கிண்டல்தானே வேணாங்கறது. என் நிலைமை என்னன்னு உனக்குத் தெரியாதா?" என்ற செல்வம், "சரி வா. நானும் உன் கூட வரேன். பேசிக்கிட்டே போகலாம்" என்று அவனுடன் நடந்தான்.

"முத்து. நீ என் நண்பன். உன்கிட்டத்தான் நான் மனம் விட்டுப் பேச முடியும். எங்கப்பா காலத்தில எங்க குடும்பத்துக்கு எவ்வளவு மதிப்பு இருந்தது! இப்ப ஊர்ல ஒரு பய என்னை மதிக்கறதில்ல. ஒருபொதுக் காரியத்துக்கும் என்னைக் கூப்பிடறதில்ல. ஊர்ப் பொதுக் கூட்டத்தில நான் ஏதாவது யோசனை  சொன்னா கூட அதை யாரும் காதுல போட்டுக்கறதில்ல."

"என்ன செய்யறது? உலகம் பணம் இருந்தாத்தான் மதிக்குது. உன் அப்பா காலத்தில உன் குடும்பம் ஊரிலேயே ரொம்ப பணக்காரக் குடும்பம்.  இப்ப உங்க குடும்பத்தில எல்லாரும் பங்கு பிரிச்சுக்கிட்டப் பறம் உன் நிலைமை கொஞ்சம் இறங்கிடுச்சே! அதான் அப்பனு நடந்துக்கறாங்க்கோலருக்கு, விடு!" என்றான் முத்து.

"அது இல்லடா காரணம். நானும் முதல்ல அப்படித்தான் நினைச்சேன். ஆனா ஊர்லேந்து என் அண்ணன் தம்பிங்கல்லாம் அப்பப்ப இங்கே வராங்க இல்ல, அவங்களுக்கு ஊர்ல எல்லாரும் மதிப்புக் கொடுத்துப் பேசறாங்களே!"

"வெளியூர்லேந்து வந்திருக்காங்களேங்கற மரியாதைக்காக இருக்கும்."

"இல்ல. அவங்க படிச்சிருக்காங்க. அதனாலதான் அவங்களை மதிக்கிறாங்க. நான் படிக்காதவங்கறதால நான் எதுக்கும் லாயக்கு இல்லாதவன்னு நினைக்கறாங்க போலருக்கு!" என்றான் செல்வம். 

"நான் அப்படி நினைக்கலேடா!" என்றான் முத்து செல்வத்தின் தோளில் கை  வைத்து அழுத்தி. 

"நீ அப்படி நினைக்காட்டாலும், உண்மை அதுதானே!" 

முத்து தன் வயலில் நடக்கும் வேலைகளை கவனித்து வேலை செய்பபவர்களுக்கு அவர்கள் செய்ய வேண்டிய வேலை விவரங்களைச்  சொல்லிக் கொண்டிருந்தபோது  செல்வம் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தான்.

சிறிது நேரம் கழித்து செல்வம் இருக்குமிடத்துக்கு வந்த முத்து, "வா, போகலாம்!" என்றான்.

"ஆமாம் அந்தப் பக்கமா ஒரு நிலம் இருக்கே, அதுவும் உன்னோடதுதானே? ஏன் அது மட்டும் காய்ஞ்சு கிடக்கு?" என்றான் முத்து.

"அதில எதுவும் வளராது. நான் முயற்சி பண்ணிப் பாத்துட்டு விட்டுட்டேன். அது களர் நிலம்" என்றான் முத்து.

"என்னை மாதிரி போலருக்கு!" என்றான் செல்வம் சிரித்தபடி.

பொருட்பால் 
அரசியல் இயல் 
அதிகாரம் 41
கல்லாமை 
குறள் 406:
உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.

பொருள்:
கல்லாதவர் உயிரோடு இருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரேயன்றி, அவர் எதுவும் விளையாத களர் நிலத்துக்கு ஒப்பானவர்.


Thursday, May 7, 2020

405. இயந்திரக் கோளாறு

"சார்! இந்த பிரச்னை திரும்பத் திரும்ப வருது. மெஷினை ரீசெட் பண்ணினாத்தான் சார் சரியா வரும்!" என்றான் ஜீவா.

"உனக்கு எத்தனை வாட்டிப்பா சொல்றது? மெஷின் செட்டிங் மாசம் ஒரு தடவைதான் பண்ணணும். செட்டிங் பண்ணி ஒரு வாரம்தானேப்பா ஆச்சு?" என்றான் சூப்பர்வைசர் கோவிந்தராஜ். 

'"ஃபினிஷ் சரியா வரலியே சார்!" 

"அதுக்குத்தான் ரீபிராசஸ் பண்ணுன்னு சொல்லி இருக்கேன் இல்ல?"

"சார்!ஒவ்வொரு பீசையும் ரீபிராஸஸ் பண்ணினா எவ்வளவு நேரமாகும்? அதுக்கு ஒரு தடவை மெஷின் செட்டிங் பண்ணினா, நேரம் மிச்சம் ஆகும் இல்ல சார்? ப்ரொடக்‌ஷன் வேற குறையுது." 

"ப்ரொடக்‌ஷன் குறையறதைப் பத்தி எல்லாம் நீ பேசாதே! உனக்கு என்ன பீஸ் ரேட்லயா சம்பளம் கொடுக்கறாங்க? மாசச் சம்பளம்தானே!" என்றான் கோவிந்தராஜ் எகத்தாளமாக. 

கோவிந்தராஜ் அங்கிருந்து அகன்றதும், "இந்த ஆளுக்கு எதுவுமே தெரியாது. ஆனா எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுவான். நாம சொன்னாலும் கேட்டுக்க மாட்டான்!" என்று தன் சக தொழிலாளியிடம் அலுத்துக் கொண்டான் ஜீவா.

"ஏன், படிச்சிருக்காரு இல்ல?" என்றான் சக தொழிலாளி. 

"படிக்கவும் இல்ல ஒண்ணும் இல்ல. எங்கியோ ஒரு ஃபேக்டரில ரெண்டு மூணு வருஷம் தொழிலாளியா இருந்திருக்கான். நம்ப முதலாளிக்கு தூரத்து சொந்தம். அவரு இந்தத் தொழிற்சாலையை ஆரம்பிச்சதும் சூப்பர்வைசர்ன்னு ஒரு வேலையை வாங்கிக்கிட்டு இங்க வந்துட்டான். நமக்குத் தெரிஞ்சது கூட இவனுக்குத் தெரியாது. இவனுக்கு மேல இருக்கறவங்க யாராவது வந்து சொன்னாத்தான் கேப்பான் போலருக்கு. அப்படி யாராவது வர வரையிலும் நாம போராடிக்கிட்டுத்தான் இருக்கணும் போலருக்கு!" என்று அலுத்துக் கொண்டான் ஜீவா.

தொழிற்சாலை  விஸ்தரிப்புத் திட்டத்துக்காக ஒரு எஞ்சினியர் நியமிக்கப்பட்டிருப்பதாக அறிந்து ஜீவா கோவிந்தராஜிடம், "புதுசா வந்திருக்கிற எஞ்சினியர் இங்கே வந்து பாப்பாரா சார்?" என்றான்.

"அவரு புது ப்ராஜக்டுக்குத்தான் வந்திருக்காரு. இங்கல்லாம் வர மாட்டாரு!" என்றான் கோவிந்தராஜ். ஜீவாவுக்கு ஏமாற்றமாக இருந்தது.

இன்னொரு நாள் கோவிந்தராஜிடம் இதே பிரச்னை பற்றி  ஜீவா விவாதித்துக் கொண்டிருக்கும்போது அங்கு புதிய மனிதர் ஒருவர் வந்தார்.

'குட்மார்னிங் சார்!" என்று அவருக்கு மரியாதை தெரிவித்தான் கோவிந்தராஜ்.. அவர்களுக்கு அருகே வந்ததும், "என்ன ஏதாவது பிரச்னையா?" என்றார் அவர்.

"ஒண்ணுமில்ல சார். பொதுவாத்தான் ப்ரொடக்‌ஷன் பத்திப் பேசிக்கிட்டிருக்கோம்!" என்றான் கோவிந்தராஜ்.

அவர்தான் என்ஜினியராக இருக்க வேண்டும் என்று ஊகித்த ஜீவா, "சார்! ஒரு பிரச்னை தொடர்ந்து வந்துக்கிட்டிருக்கு. ஃபினிஷ் சரியா வர மாட்டேங்குது. மெஷினை ரீசெட் பண்ணணும்னு நினைக்கறேன். சார் அது வேண்டாம், ரீபிராஸஸ் பண்ணுன்னு சொல்றாரு. ரீபிராஸஸ் பண்ணினா நிறைய நேரமாகுது. ப்ரொடக்‌ஷன் குறையுது" என்றான்.

ஜீவாவை முறைத்துப் பார்த்த கோவிந்தராஜ், எஞ்சினியரிடம் திரும்பி, "சார்! மெஷினை  மாசத்துக்கு ஒரு தடவைதான் ரீசெட் பண்ணணும்ங்கறது முறை. இவன் தெரியாம பேசிக்கிட்டிருக்கான். நான் பாத்துக்கறேன் சார். நீங்க போங்க!" என்றான்.  

எஞ்சினியர்  கோவிந்தராஜ் பேசியதை கவனிக்காதவர்  போல் ஜீவாவைப் பாத்து, "மெஷினைத் திறந்து டூலைக் காட்டு" என்றார்.

ஜீவா திறந்து காட்டியதும் அருகில் சென்று அந்தப் பகுதியைக்  கையால் தொட்டும் நகர்த்தியும் பார்த்த எஞ்சினியர், கோவிந்தராஜைப் பார்த்து, "இந்தபார்ட் தேஞ்சு போயிருக்கு. அதனால டூல் சீக்கிரமே பொசிஷனிலேந்து நழுவிடுது. இந்த பார்ட்டை மாத்தணும். இந்த மெஷின் தயாரிப்பாளருக்கு ஃபோன் பண்ணி வரச் சொல்லுங்க. அவங்க வந்து பாத்து பார்ட்டை மாத்திக் கொடுப்பாங்க. ஆனா இந்த பார்ட் பாம்பேல இருக்கற அவங்க டெப்போலேந்துதான் வரணும்னு நினைக்கறேன். அதுக்கு சில வாரங்கள் ஆகலாம். அது வரைக்கும் இவர் சொல்றபடி மெஷின் ரீசெட்டிங் பண்றதுதான் வழி!" என்று சொல்லி ஜீவாவைப் பார்த்துப் புன்னகைத்தார். 

கோவிந்தராஜ் முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டு, "சரி சார்!"என்றான். 

பொருட்பால் 
அரசியல் இயல் 
அதிகாரம் 41
கல்லாமை 
குறள் 405:
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.

பொருள்:
கல்லாதவன் ஒருவன் தன்னைத்தானே மதித்துப் பேசிக் கொள்ளும் பெருமை  கற்றவருடன் பேசும்போது அழிந்து விடும் .


459. தந்தையின் அறிவுரை.

முகுந்தன் அலுவலகத்துக்குக் கிளம்பும் முன் வழக்கம் போல் தன் தந்தையின் அறைக்குச் சென்று படுக்கையில் படுத்திருந்த அவரைப் பார்த்து, "ராத்தி...