அதிகாரம் 58 - கண்ணோட்டம்

திருக்குறள்
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 58
கண்ணோட்டம் (இரக்கம் காட்டுதல்)

571. கருணை மனுக்கள்

அதிபர் ராம்தயாளை உள்துறைச் செயலர் கிருஷ்ண பிரசாத் சந்திக்கச் சென்றபோது அதிபர் ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தார்.

கிருஷ்ண பிரசாத் உள்ளே நுழைந்ததும் தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்த ராம் தயாள், கிருஷ்ண பிரசாதை அமரச் சொல்லி விட்டு அவர் கூறப் போவதைக் கேட்கத் தயாரானார்.

மாதம் ஒருமுறை நாட்டின் சட்ட ஒழுங்கு நிலை பற்றி உள்துறைச் செயலர் அதிபருக்குத் தெரிவிக்கும் வழிமுறை இருந்தது.

தன் கையிலிருந்த அறிக்கையைப் பார்த்து அதன் முக்கியமான அம்சங்களை அதிபரிடம் விளக்கி விட்டு அறிக்கையை அவரிடம் கொடுத்தார் கிருஷ்ண பிரசாத்.

கிருஷ்ண பிரசாத் தன்னிடம் ஏதோ சொல்ல விரும்பி ஆனால் அதைச் சொல்லத் தயக்கத்துடன் இருப்பதை கவனித்த ராம்தயாள் "சொல்லுங்க கிருஷ்ண பிரசாத்!" என்றார்.

"சார்! தண்டனை பெற்ற குற்றவாளிகள் தங்களோட தண்டனையைக் குறைக்கச் சொல்லி, அல்லது தங்களை விடுதலை செய்யச் சொல்லி கேட்கிற கருணை மனுக்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கிட்டே இருக்கு!" என்றார் கிருஷ்ண பிரசாத்.

"ஆமாம். நானும் கவனிச்சேன்."

"இந்தக் கருணை மனுக்கள் விஷயத்தில நாம ரொம்ப தாராள மனப்பான்மையோட இருக்கோம்னு எனக்குத் தோணுது!"

"புரியுது. பெரும்பாலான மனுக்களை நிராகரிக்கணும்னு குறிப்பு எழுதித்தான் நீங்க எங்கிட்ட அனுப்பறீங்க. ஆனா நான் உங்க சிபாரிசை மீறி நிறைய மனுக்களை ஏத்துக்கறேன். அதுதானே?" என்றார் அதிபர் சிரித்துக்கொண்டே.

"சார்! என்னோட, அதாவது என் துறை அதிகாரிகளோட சிபாரிசை நீங்க ஏத்துக்கணும்னு நான் சொல்ல வரல. முடிவு எடுக்கற அதிகாரம் உங்களோடதுதான். ஆனா குற்றம் செஞ்சு தண்டனை கொடுக்கப்பட்டவங்கள்ள நிறைய பேருக்குக் கருணை காட்டினா அது குற்றம் செய்ய நினைக்கறவங்களுக்கு தைரியத்தைக் கொடுக்காதா? தண்டனை கொடுக்கறதோட ஒரு நோக்கம் குற்றம் செஞ்சவங்களை தண்டிக்கறதா இருந்தாலும், குற்றம் செய்ய நினைக்கிறவங்களுக்கு எச்சரிக்கையாகவும், பயமாகவும் இருக்கணுங்கற நோக்கமும் இருக்கே! அந்த நோக்கம் பலவீனப்படக் கூடாது இல்ல?" என்றார் கிருஷ்ண பிரசாத்.

"உண்மைதான்! அதனாலதான் மனுக்களைப் பரிசீலனை செஞ்சு முடிவெடுக்கறோம். நீங்க பாக்கறதை விட நான் கொஞ்சம் இன்னும் அதிகக் கருணையோட பாக்கறேன். அவ்வளவுதான் வித்தியாசம்! ஒத்தருக்கு பத்து வருஷம் சிறை தண்டனை கொடுக்கறோம். அஞ்சு வருஷம் ஆனதும் அவரு கருணை அடிப்படையில விடுதலை செய்யச் சொல்லி மனுக் கொடுக்கறாரு. குற்றம் கடுமையானது, அதானால அவருக்கு அஞ்சு வருஷம் தண்டனை போதாதுன்னு நீங்க நினைக்கலாம். அஞ்சு வருஷம் தண்டனை அனுபவிச்சுட்டாரே, அது போதாதான்னு நான் நினைக்கறேன். அவரை விடுதலை செய்யறதால அவரு மறுபடியும் குற்றம் செய்யணும்னு அவசியம் இல்லையே! அப்படி செஞ்சு மாட்டிக்கிட்டா தண்டனை இன்னும் கடுமையா இருக்கும்னு அவருக்குத் தெரியாதா? இதையெல்லாம் பார்த்து, தண்டனை பெற்றவரோட குடும்ப சூழ்நிலையையும் பார்த்து சில பேருக்கு நான் கருணை காட்டறேன்."

உள்துறைச் செயலர் மௌனமாக இருந்தார்.

"கிருஷ்ண பிரசாத்! உலகத்தில எவ்வளவு தப்புகள் நடந்தாலும் உலகம் ஏதோ ஒரு ஒழுங்குக்குக் கட்டுப்பட்டு நடந்துக்கிட்டிருக்குன்னா அதுக்கு என்ன காரணம்னு நினைக்கிறீங்க?" என்றார் ராம்தயாள்.

"என்னைக் கேட்டா, சட்டதிட்டங்கள் இருக்கறதாலதான் ஒழுங்கு இருக்குன்னு சொல்லுவேன், சட்டதிட்டங்கள் இல்லேன்னா குழப்பம்தான் இருக்கும்!" என்றார் கிருஷ்ண பிரசாத்.

"நீங்க சொல்றது சரிதான். ஆனா இது நாணயத்தோட ஒரு பக்கம்தான். இன்னொரு பக்கம் கருணை அல்லது அன்பு. நெருக்கமானவங்க கிட்ட காட்டறதை அன்புன்னு சொல்லலாம். ஆனா உலகத்தில பல பேருக்கு மத்தவங்க மேல ஒரு கருணை இருக்கு. அதனாலதான் மத்தவங்களோட துன்பம் நமக்கு வருத்தத்தைக் கொடுக்குது. அதனாலதான் முகம் தெரியாத அனாதைக் குழந்தைகளுக்கும், இன்னும் கஷ்டப்படற பலருக்கும் பல பேர் உதவி செய்யறாங்க. ஒரு நாட்டில தலைமைப் பொறுப்புல இருக்கறவங்களுக்கு கருணை கொஞ்சம் அதிகமாவே இருக்கணும்னு நான் நினைக்கிறேன்."

"சரி சார்!" என்றார் கிருஷ்ண பிரசாத்.

"நான் சொல்றதை நீங்க முழுசா ஏத்துக்கலேன்னு நினைக்கறேன். நீங்க கடவுள் நம்பிக்கை உள்ளவர்தானே?" 

"ஆமாம். கடவுள் கருணையானவர்தான். ஆனா..."

"கடவுள் கருணையானவர் இல்ல, கிருஷ்ண பிரசாத்!" என்றார் ராம்தயாள்.

"என்ன சார் சொல்றீங்க?" 

அதிபர் தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை எடுத்து கிருஷ்ண பிரசாதிடம் காட்டினார்.

"இது தயா சதகம் என்கிற புத்தகம், வேதாந்த தேசிகர்ங்கற வைஷ்ணவ குரு எழுதினது. இது திருப்பதி வெங்கடாசலபதியைப் பத்தி 108 சுலோகங்கள் கொண்டது. இதில வெங்கடாசலபதிக்கு தயைன்னு ஒரு மனைவி இருக்கறதா அவர் சொல்றாரு. மனிதர்கள் தப்பு செய்யும்போது வெங்கடாசலபதி அவங்களை தண்டிக்கறப்ப, இந்த தயாதேவி தன்னோட கருணையினால அவங்களைக் காப்பாத்தறாங்களாம். தயான்னா கருணைதானே!"

"நீங்க சொல்றது சுவாரசியமா இருக்கு சார்!"

"நல்ல வேளை எனக்கு இயல்பாகவே கருணை இருக்கு, இல்லேன்னா நான் கூட தயை உள்ள ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்க வேண்டி இருக்கும். நான் இப்படிச் சொன்னேன்னு என் மனைவி கிட்ட சொல்லிடாதீங்க. அப்புறம் அவங்க என் மேல கொஞ்சம் கூடக் கருணை காட்ட மாட்டாங்க!" என்றார் ராம்தயாள் சிரித்தபடியே.

குறள் 571:
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு.

பொருள்: 
கண்ணோட்டம் (கருணை) என்று சொல்லப்படும் மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால் தான், இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது..

572. அஞ்சலி!

சச்சிதானந்தம் இறந்து விட்டார். அவர் ஒரு பெரிய நிறுவனத்தில் நிர்வாகப் பொறுப்பில் இருந்தவர்.

சச்சிதானந்துக்கு அஞ்சலி செலுத்த பலர் வந்து போனார்கள். பெரும்பாலோர் வந்து அவர் உடல் அருகே சில விநாடிகள் நின்று விட்டு, அருகிலிருந்த அவர் உறவினர்களிடம் ஒன்றிரண்டு அனுதாப வார்த்தைகளைப் பேசி விட்டுப் போய் விட்டனர்.

அவர் அலுவலக ஊழியர்கள் சிலர் மட்டும் வெளியே வராந்தாவில் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தனர். 

அவர்களில் சிலர் தங்களுக்குள் மெதுவான குரலில் பேசிக் கொண்டனர்.

"இருபது வருஷம் அவர்கிட்ட வேலை செஞ்சிருக்கேன். ஒரு தடவை கூட அவரு என் பிரச்னைகளைக் காது கொடுத்துக் கேட்டதில்ல. ஏதாவது சொல்ல ஆரம்பிச்சாலே, நான் சொன்னதைச் செய், எங்கிட்ட வேற பேச்சு எதுவும் வேண்டாம்னு கடுமையா சொல்லிடுவாரு. உயிர் போகப் போகிற நிலைமைன்னா கூட, நான் சொன்னதைச் செஞ்சுட்டு அப்புறம் செத்துப் போன்னு சொல்ற ஆளு! இப்படிப்பட்ட ஒரு கல்நெஞ்சக்காரரை நான் பார்த்ததே இல்லை."

"நான் அவர்கிட்ட டைப்பிஸ்டா இருந்தேன். நான் வேலையில ரொம்ப ஸ்லோன்னு சொல்லி என்னை வேற ஊருக்கு மாத்திட்டாரு. இந்த ஆஃபீஸ்லேயே வேற எங்கேயாவது போடுங்க சார்னு கெஞ்சினேன். கஷ்டப்பட்டாதான் நீ உன்னை இம்ப்ரூவ் பண்ணிப்பேன்னு இரக்கமில்லாம சொல்லிட்டாரு. ஒரு பெண் ஊழியரை வெளியூருக்கு மாத்த வேண்டாம்னு ஆஃபீஸ்ல சில பேர் சொல்லிப் பாத்தாங்க, மத்த விஷயங்களிலெல்லாம் சமத்துவம் கேக்கறாங்க இல்ல, இதில மட்டும் என்ன சலுகைன்னு கிண்டலா பதில் சொன்னாரு. ஆறு மாசம் என் குடும்பத்தை விட்டுட்டு வெளியூர்ல போய் வேலை செஞ்சுட்டு அப்புறம் ஹெட் ஆஃபீஸ்ல கேட்டுத் திரும்பவும் இங்கே மாத்திக்கிட்டு வந்தேன். எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன்! அப்ப என் குழந்தைங்க ரெண்டு பேரும் சின்னவங்க. வேலையை விடவும் முடியல. அப்பப்பா! இப்படியா ஒத்தர் இரக்கம் இல்லாம நடந்துப்பாரு!"

"நான் அவர்கிட்ட உதவியாளராவே இருந்திருக்கேன். எவ்வளவு பேருக்கு இன்கிரிமென்ட் கட் பண்ணி இருப்பாரு, எத்தனை பேரோட புரோமஷனைத் தடுத்திருப்பாரு. எத்தனை பேரை வேற ஊருக்கு மாத்தி இருப்பாரு! அத்தனை ஆர்டரையும் நான்தானே டைப் பண்ணி இருக்கேன்! எனக்கே பரிதாபமா இருக்கும். ஆனா அவரு ஈவு இரக்கமே பாக்க மாட்டாரு. எத்தனையோ பேரு அவர்கிட்ட வந்து கெஞ்சி இருக்காங்க. இந்த ஒரு தடவை மன்னிச்சுடுங்க சார், இன்கிரிமென்ட் கட் பண்ணினீங்கன்னா என் ஃபைல்ல ரிகார்ட் ஆகி என் எதிர்காலமே கெட்டுப் போயிடும்னு கெஞ்சுவாங்க. கொஞ்சமாவது இரக்கம் காட்டணுமே! மனுஷனோட இதயத்தைக் கடவுள் கல்லால செஞ்சிருப்பார் போலருக்கு."

இது போல் இன்னும் சிலர் அவருடனான தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

சற்றுத் தள்ளி அமர்ந்து அவற்றை கவனித்துக் கொண்டிருந்த ஒரு நபர், தன் அருகில் அமர்ந்திருந்தவரிடம், "என்ன இது? ஒத்தர் இறந்து போயிருக்காரு. இன்னும் அவர் உடலைக் கூட எடுக்கல. அவரைப் பத்தி நல்லதா நாலு வார்த்தை சொல்லாட்டாக் கூடப் பரவாயில்ல. இப்படியா மோசமாப் பேசறது?" என்றார் அவருக்கு மட்டும் கேட்கும் குரலில்

"அவங்கள்ளாம் அவர்கிட்ட வேலை செஞ்சவங்க. நான் அவரோட அலுவலகத்துக்குப் பல தடவை போயிருக்கேன். அவர் கொஞ்சம் கூட இரக்கமில்லாம நடந்துக்கறதைப் பாத்திருக்கேன். அதனால அவர் உயிரோட இருந்தப்பவே அவரை இவங்கள்ளாம் வேற வழியில்லாம சகிச்சுக்கிட்டுத்தான் இருந்திருக்காங்க. அவர் இறந்து போனதால ஒரு மரியாதைக்கு அவங்கள்ளாம் வந்திருக்காங்க. ஆனா அவங்களுக்கு அவர் மேல மதிப்பு எப்படி இருக்கும்?" என்றார் அவர்.

குறள் 572:
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.

பொருள்: 
கண்ணோட்டத்தினால் (கருணையினால்) உலகியல் நடைபெறுகின்றது, கண்ணோட்டம் இல்லாதவர் உயிரோடு இருத்தல் நிலத்திற்குச் சுமையே தவிர வேறு பயனில்லை.
573. புதிய இசையமைப்பாளர்

"என்னய்யா மியூசிக் போட்டிருக்க? பாடல் வரிகள் சோகமா இருக்கு. உன் மியூசிக் சந்தோஷத்தில துள்ளிக் குதிக்கிற மாதிரி இருக்கு!" என்றார் இயக்குனர் கன்னியப்பன் கோபத்துடன்.

"இல்ல சார்.வேற டியூன் போட்டுடறேன்!" என்றான் நாதன், பதட்டத்துடன். முதல்முறையாக அவனுக்குத் திரைப்படத்தில் இசையமைக்கும் வாய்ப்புக் கிடைத்து அவன் இசையமைத்த முதல் பாடல் அது.

"நீ என்னிக்கு வேற டியூன் போட்டு நான் எப்ப ஷூட் பண்றது?" என்று கோபமாகக் கத்திய கன்னியப்பன், தனக்கு அருகில் அமர்ந்திருந்த தயாரிப்பாளர் வேணுவிடம், "சார்! இவன் வேண்டாம். நீங்க சுந்தரையே போட்டுடுங்க!" என்றார்.

தயாரிப்பாளர் வேணு இயக்குநர் அருகில் குனிந்து, "பையன் புதுசு. அவங்கிட்ட நிறைய திறமை இருக்கு. ஆனா அனுபவம் இல்ல. இது அவனோட முதல் பாட்டு. வாய்ப்புக் கிடைச்ச உற்சாகத்தில நல்ல டியூன் போடணும்னு நினைச்சுப் போட்டிருக்கான். அதான் வேற டியூன் போடறேங்கறானே, இன்னொரு வாய்ப்புக் கொடுக்கலாம்!" என்றார் அவருக்கு மட்டும் கேட்கும் குரலில்.

"சார்! உங்களுக்கு இவன்தான் முக்கியம்னா வேற டைரக்டரை வச்சுப் படம் எடுத்துக்கங்க!" என்று கோபமாகக் கூறிய இயக்குனர் கன்னியப்பன் "பேக் அப்!" என்று இரைந்து கூறி விட்டு எழுந்து சென்று விட்டார்.

வெலவெலத்துப் போய் நின்றிருந்த இசையமைப்பாளர் நாதனைப் பார்த்து, "நீ கவலைப்படாதே தம்பி! அவரு பெரிய டைரக்டர். அப்படித்தான் பேசுவார். நான் அப்புறம் அவர்கிட்ட பேசறேன். அப்படி அவர் ஒத்துக்கலேன்னா உனக்கு என் அடுத்த படத்தில வாய்ப்புக் கொடுக்கறேன். உங்கிட்ட திறமை இருக்கு. அதனால நீ நிச்சயம் முன்னுக்கு வருவே. எதுக்கும் இந்த லிரிக்ஸை வாங்கிக்கிட்டுப் போய் வேற டியூன் யோசிச்சு வை. உனக்கு இந்தப் படத்தில வாய்ப்பு இல்லாட்டாலும் உனக்குக் கொடுத்த அட்வான்ஸை நான் திரும்பக் கேக்க மாட்டேன். போயிட்டு வா!" என்றார் வேணு ஆதரவான குலில்.

நாதன் அவரைக் கையெடுத்துக் கும்பிட்டு விட்டு அங்கிருந்து அகன்றான்.

"என்னங்க இந்த டைரக்டர் உங்களையே மதிக்காம பேசறாரு!" என்றான் வேணுவின் உதவியாளன் சக்திவேல்.

"என்ன செய்யறது? அவருக்கு மார்க்கெட் இருக்கு. அந்தத் திமிர்ல பேசறாரு. என்னையே மதிக்காதவரு நாதன் மாதிரி புது ஆளுங்களையா மதிக்கப் போறாரு? பாவம் அந்தப் பையன் இவர் போட்ட கூச்சல வெலவெலத்துப் போயிட்டான். பாடல் வரிகளுக்கு இசை பொருத்தமா இல்லேன்னு சொல்றாரே, இது மாதிரி மத்தவங்க கிட்ட இரக்கமோ, கருணையோ, புரிதலோ இல்லாம நடந்துக்கிறது மனிதத் தன்மைக்குப் பொருத்தமா இருக்கான்னு இவர் ஒரு நிமிஷம் கூட யோசிக்க மாட்டேங்கறாரே!" என்றார் வேணு வருத்தத்துடன்.

குறள் 573:
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்..

பொருள்: 
பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும்? அதுபோல் கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்?

574. மீனாட்சியின் எஜமானி!

"என்னத்தைப் பெருக்கற? அந்த மூலையில அழுக்கு அப்படியே இருக்கு பாரு!" என்றாள் கயல்விழி.

வேலைக்காரி மீனாட்சி எஜமானி காட்டிய இடத்தைப் பார்த்தாள். அங்கே அழுக்கு எதுவும் இருப்பதாக அவளுக்குத் தெரியவில்லை. ஆயினும் எஜமானி சொன்னதற்காக அந்த இடத்தை இன்னொரு முறை பெருக்கி விட்டு வந்தாள்.

பெருக்கி முடித்ததும், "அம்மா! எனக்கு முதுகுவலி ரொம்ப அதிகமா இருக்கு. அதனால நாளைக்குத் துடைச்சுடறேனே!" என்றாள்.

"பெருக்கிட்டுத் துடைக்காம இருந்தா எப்படி? தினமும் துடைச்சாதான் தரை பளபளப்பா இருக்கும்? உனக்கு முதுகுவலி எப்பவும்தான் இருக்கு. நாளைக்கு மட்டும் இருக்காதுன்னு என்ன நிச்சயம்?"

ஏன் கேட்டோம் என்று நினைத்துக் கொண்டே துடைப்பதற்காகத் தண்ணீரையும் மாப்பையும் எடுக்க ஆயத்தமானாள் மீனாட்சி.

"நான் அஞ்சாறு வீட்டில வேலை செய்யறேன். இதுக்கு முன்னாலேயும் பல வீடுகள்ள வேலை செஞ்சிருக்கேன். ஆனா இந்தக் கயல்விழி மாதிரி இரக்கம் இல்லாத ஒரு மனுஷியை நான் பார்த்தில்ல!" என்றாள் மீனாட்சி தன் தோழி ராணியுடம்.

மீனாட்சியும், ராணியும் ஒன்றாக வளர்ந்தவர்கள்தான். சிறுமியாக இருந்தபோதே தன் அம்மாவுக்குத் துணையாக வீட்டு வேலையில் இறங்கிய மீனாட்சி அம்மாவுக்கு உடம்பு முடியாமல் போனதும், படிப்பை நிறுத்தி விட்டு வீட்டு வேலை செய்வதையே தன் முழு நேர வேலையாக ஆக்கிக் கொண்டு விட்டாள். 

ஆனால் ராணி பட்டப்படிப்பு முடித்து விட்டு ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தாள். இருவரும் அருகாமையில் வசிப்பதால் அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொள்வார்கள்.

"கயல்விழியா? பேரு வித்தியாசமா இருக்கே! அவங்க அப்பா ஒரு தமிழ்ப் பிரியரா இருந்திருப்பார் போலருக்கு!" என்றாள் ராணி.

"அதெல்லாம் ஒண்ணும் இல்ல. அவங்க பேரு சிவகாமி. அவங்க கண் அழகில மயங்கிதான் அவங்க கணவர் அவங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாராம்! அவங்க கண்ணு மீன் மாதிரி இருக்குன்னுட்டு அவங்க கணவர் அவங்களை செல்லமா கயல்விழின்னு கூப்பிடுவாராம். அதை யாரோ கேட்டுட்டு கலாட்டா பண்றதுக்காக அவங்களை கயல்விழின்னு கூப்பிட, அந்தப் பேரு பரவி எல்லாரும் அவங்களைக் கயல்விழின்னே கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்களாம். அதனால அந்தப் பேரே அவங்களுக்கு நிலைச்சுட்டுதாம். இதை அவங்க அவங்களோட சிநேகிதிகிட்ட ஒருநாள் சொல்லிக்கிட்டிருந்தாங்க. என் காதில விழுந்தது" என்றாள் மீனாட்சி.

"ஒத்தரோட அன்பு, இரக்கம் எல்லாம் அவங்க கண்லேயே தெரியும்னு சொல்லுவாங்க. கண்ணதாசன் கூட 'கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்'னு ஒரு பாட்டு எழுதி இருக்காரு. கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லாத இவங்களுக்குக் கண் அழகா இருந்தா என்ன, வேற எப்படி இருந்தா என்ன?" 

"அது என்னவோ சரிதான். அவங்க கண்ணு அழகாத்தான் இருக்கும். ஆனா அவங்க இரக்கம் இல்லாம நடந்துக்கும்போது அவங்க கண்ணைப் பாத்தா, 'இவ்வளவு அழகா இருக்கற கண்ல துளி கூட ஈவு இரக்கம் இல்லையேன்னு எனக்குத் தோணும்!" என்றாள் மீனாட்சி,

"ஒண்ணு தெரியுமா மீனாட்சி! நீயும்  ஒரு கயல்விழிதான்!" என்றாள் ராணி.

"என்னடி? நானும் ஈவு இரக்கம் இல்லாதவன்னு சொல்றியா?" 

"அப்படிச் சொல்லலடி. மீனாட்சிங்கறது வடமொழிப் பேரு, அதைத் தமிழ்ல சொன்னா அதுதான் கயல்விழி!" என்று சொல்லிச் சிரித்தாள் ராணி.

"என்னவோ, எனக்கென்ன தெரியும்? நான் உன்னை மாதிரி படிச்சிருக்கேனா என்ன? படிச்சிருந்தா ஏன் இது மாதிரி ஈவு இரக்கம் இல்லாத ஜன்மங்ககிட்ட மாட்டிக்கிட்டுக் கஷ்டப்படப் போறேன்!" என்றாள் மீனாட்சி பெருமூச்சுடன்.                               

குறள் 574:
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்.

பொருள்: 
தக்க அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளவை போல் தோற்றமளிப்பதைத் தவிர வேறு என்ன பயன் உள்ளவை?

575. 'கல்வி வள்ளல்'

'கல்வி வள்ளல்' துரைசாமியின் மணிவிழாவில் அவரை எல்லோரும் பாராட்டிப் பேசிக் கொண்டிருந்தனர்.

"கல்வியைத் தன் கண்ணாகக் கருதிப் போற்றுபவர் துரைசாமி."

"ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால் அவருக்குக் கல்விக்கான வாய்ப்புக் கிடைக்கவில்லை. தனக்குக் கிடைக்காத வாய்ப்பு மற்ற ஏழைக் குழந்தைக்கும் கிடைக்காமல் போகக் கூடாது என்பதற்காகவே பல்வேறு கல்வி நிறுவனங்களைத் தொடங்கினார் அவர்!"

கூட்டத்தில் பின்வரிசையில் அமர்ந்திருந்த கருணாகரன்,"பொய் சொல்றத்துக்கும் ஒரு அளவு இல்ல?" என்று முணுமுணுத்தது அவர் அருகில் அமர்ந்திருந்த ரமணனுக்குக் கேட்டிருக்க வேண்டும். அவர் மெதுவாகச் சிரித்தார். பிறகு கருணாகரனிடம் திரும்பி, "சார்! வரீங்களா? கொஞ்சம் வெளியில போய் நின்னுட்டு வரலாம்" என்றார்.

கருணாகரன் தலையாட்டி விட்டு அவருடன் எழுந்து வெளியில் வந்தார்.

"என்னதான் உள்ளே ஏசி இருந்தாலும் திறந்த வெளியில வர காற்றோட சுகமே தனிதான்!" என்றார் ரமணன். 

"என்ன சார் இப்படிப் புளுகறாங்க? அவரு கேக்கற நன்கொடையில ஒரு ரூபா குறைஞ்சா கூட அட்மிஷன் கொடுக்க மாட்டாரு. அவரு ஏழைகளுக்குக் கல்வி கிடைக்கணுங்கறதுக்காக கல்வி நிறுவனங்கள் தொடங்கி நடத்தறாராம்! என் பையனுக்கே டொனேஷன், கல்விக் கட்டணம் தவிர, இந்தக் கட்டணம், அந்தக் கட்டணம்னு ஏகப்பட்ட பணம் கொடுத்திருக்கேன். இந்த விழா நடத்தறதுக்குக் கூட மாணவர்களோட பெற்றோர்கள்கிட்ட பணம் வசூலிச்சதோட கூட்டம் வரணுங்கறதுக்காக பெற்றோர்கள் விழாவில கலந்துக்கணும்னு கண்டிப்பா சொல்லி இருக்காங்க!"

"உங்க பையனும், என் பையனும் நல்ல மார்க் வாங்கி இருக்காங்க. மார்க் குறைவா இருந்தா இன்னும் நிறையப் புடுங்குவாங்க. எத்தனையோ ஏழைப் பெற்றோர்கள் தங்களோட சக்திக்கு மேல கடன் வாங்கி பணம் கட்டி இருக்காங்க. மாணவர்கள்தான்னு இல்ல. ஆசிரியர்களுக்கும் இங்க கஷ்டம்தான்!" 

"அப்படியா? ஏன் சம்பளம் ஒழுங்காக் கொடுக்க மாட்டாங்களா?"

"கொடுப்பாங்க. ஆனா இவங்க பணம் வாங்கிக்கிட்டு சேத்துக்கற பையன்களை ஆசிரியர்கள் எப்படியாவது கஷ்டப்பட்டு பாஸ் பண்ண வைக்கணும். இல்லேன்னா அவங்களுக்கு வேலை போயிடும். அதுக்கு பயந்துகிட்டு ஆசிரியர்கள் எல்லாம் குறைஞ்ச மார்க் வாங்கற பையன்களுக்கு மாலை வேளையிலேயும் சனி ஞாயிறுகளிலேயும் தனியா வகுப்பு எடுத்து பரீட்சையில எப்படியோ பாஸ் மார்க் வாங்கற அளவுக்கு கோச் பண்ணணும். ஆண்டு விடுமுறையின்போதெல்லாம் கூட ஆசிரியர்களை கல்லுரிக்கு வரவழைச்சு வேலை வாங்குவாங்க. கல்லூரி வேலை மட்டும் இல்லாம இவங்களோட மத்த கம்பெனி வேலைகளையெல்லாம் கூட செய்யச் சொல்லுவாங்களாம்!"

"அட கடவுளே! நமக்குக் கொடுமை நடக்குதுன்னு நான் நினைச்சா ஆசிரியர்களுக்கு அதுக்கு மேல கொடுமை நடக்குதே! இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?"

"இங்கே வேலை செய்யற ஒரு பேராசிரியர் எனக்குத் தெரிஞ்சவர். அவர் எங்கிட்ட அடிக்கடி இதையெல்லாம் சொல்லிப் புலம்புவாரு."

"ஈவு இரக்கம் இல்லாத இந்த மனுஷனைக் கல்வி வள்ளல், ஏழைகளுக்குக் கல்வி கொடுக்கறதுக்குன்னே அவதரிச்சவர்னுல்லாம் அநியாயமாப் புளுகறாங்களே, இது அடுக்குமா?" என்றார் கருணாகரன் ஆற்றாமையுடன்.

"...கல்வியைத் தன் கண்களாக மதித்துப் போற்றி வருவதால்தான் நம் கல்வி வள்ளலுக்கு அவருடைய 70 வயதிலும் கண்ணாடி போட்டுக் கொள்ளத் தேவை இல்லாத அளவுக்குக் கண்பார்வை கூர்மையாக இருக்கிறது..."

'கல்வி வள்ளலைப்' புகழ்ந்து பேசப்பட்ட பேச்சுக்கள் ஒலிபெருக்கியில் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தன. 

குறள் 575:
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்.

பொருள்: 
ஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாக இருப்பது கண்ணோட்டம் (இரக்கம், கருணை) என்னும் பண்பே, அது இல்லையானால் அது கண் என்று கருதப்படாமல் புண் என்றே கருதப்படும்.

576. ஒரு வாரம் அவகாசம்

சபாபதியைச் சந்திக்க குருசாமி சென்றபோது தன் வியாபாரத்தில் புதிதாக பார்ட்னராகச் சேர்ந்திருந்த கண்ணனையும் அழைத்துச் சென்றிருந்தார்.

"அதான் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கேனே, அப்புறம் எதுக்கு என்னைப் பாக்க வந்தீங்க?" என்று கடுமையான குரலில் கேட்ட சபாபதி, கண்ணனைப் பார்த்து, "இவரு யாரு?" என்றார், எச்சரிக்கை உணர்வுடன்.

"இவரு கண்ணன். என்னோட பார்ட்னர்" என்றார் குருசாமி.

கண்ணன் தனக்கு வணக்கம் தெரிவித்ததைக் கண்டுகொள்ளாத சபாபதி, "புதுசா இவரை பார்ட்னரா எடுத்துக்கிட்டிருக்கீங்களா? அப்ப இவர் போடற முதலை வச்சு என் கடனை அடைக்கிறேன்னு சொல்லத்தான் வந்திருக்கீங்களா? சந்தோஷம். எப்ப பணம் கிடைக்கும்?" என்றார் குருசாமியிடம்.

"இல்ல. இவர் முதல் போடல. ஒர்க்கிங் பார்ட்னராத்தான் சேந்திருக்காரு. நிறைய அனுபவம் உள்ளவர். நிறைய யோசனைகள் வச்சிருக்காரு. அவர் யோசனைகளைப் பயன்படுத்தி சீக்கிரமே தொழிலை இன்னும் நல்ல நிலைக்குக் கொண்டு வரப் போறோம்."

"சந்தோஷம். என் கடனை அடைக்க ஏதாவது யோசனை இருக்கா இவர்கிட்ட?" என்றார் சபாபதி கேலியாக.

அவர் கேலியை அலட்சியம் செய்த குருசாமி, "சார்! உங்ககிட்ட நான் எவ்வளவோ வருஷமா வியாபாரத் தொடர்பு வச்சுக்கிட்டிருக்கேன்!" என்றார் .

"வியாபாரத் தொடர்பு இல்ல குருசாமி! நீங்க வியாபாரம் செய்யறீங்க. நான் கடன் கொடுக்கறேன். அவ்வளவுதான்!" என்றார் சபாபதி கடுமையான குரலில்.

";நான் சொல்ல வந்தது உங்ககிட்ட நான் எத்தனையோ தடவை கடன் வாங்கி தவறாம வட்டி கொடுத்துக்கிட்டு வந்திருக்கேன். அதை நேரத்தில திருப்பிக் கொடுத்திருக்கேன்..."

"இல்லை. ஒரு தடவை கூட நேரத்தில திருப்பிக் கொடுத்ததில்ல" என்று இடைமறித்தார் சபாபதி.

"தாமதமானப்ப அதுக்கு அதிக வட்டி கொடுத்திருக்கேன்."

"கடன் பத்திரத்தில அப்படித்தானே சொல்லி இருக்கு. அதன்படி நீங்க அதிக வட்டி கொடுத்துத்தானே ஆகணும். என்னவோ நீங்களா விருப்பப்பட்டுக் கொடுத்த மாதிரி பேசறீங்க!"

"சார்! நான் சொல்ல வந்தது, இத்தனை வருஷமா நமக்குள்ள இந்த வியாபாரம், அதாவது இந்தக் கொடுக்கல் வாங்கல் சரியாத்தான் நடந்திருக்கு. உங்க பணம் பாதுகாப்பாத்தான் இருந்திருக்கு. ஆனா இந்த தடவை கொஞ்சம் தாமதமானதுக்கு நான் செக்யூரிட்டியாக் கொடுத்த என்னோட வீட்டை அட்டாச் பண்றதுக்கு கோர்ட்ல கேஸ் போடப் போறதா வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கீங்க. தயவு செஞ்சு அப்படி எதுவும் செஞ்சுடாதீங்க. இன்னும் ரெண்டு மாசத்தில உங்க பணத்தை நான் முழுசா செட்டில் பண்ணிடறேன்" என்றார் குருசாமி கெஞ்சும் குரலில்.

"ரெண்டு மாசத்துக்குள்ள கோர்ட்ல அட்டாச்மென்ட் ஆர்டர் வாங்கிடலாம்னு என் வக்கீல் சொல்லி இருக்கார். உங்களுக்கு ஒரு வாரம் டைம் கொடுக்கறேன். அதுக்குள்ள பணத்தை அன்னிவரைக்கும் வட்டியோட செட்டில் பண்ணிடுங்க. இல்லேன்னா கோர்ட்ல கேஸ் போட்டுடுவேன். உங்ககிட்ட மேற்கொண்டு பேசறதுக்கு எதுவும் இல்ல. நீங்க கிளம்பலாம்!" என்றார் சபாபதி உறுதியான குரலில்.

வெளியே வந்ததும், "நீங்க இவ்வளவு நேரம் இவர்கிட்ட பேசினதுக்கு ஒரு மரத்துக்கு முன்னால நின்னு பேசி இருந்தா அது கூட கொஞ்சம் அஞைஞ்சு கொடுத்திருக்கும்!" என்றார் கண்ணன், குருசாமியிடம்.

"அது சரி. ஆனா, நீங்க என் கூட வந்தீங்க, அவர் முகத்தையே பாத்துக்கிட்டிருந்தீங்க! ஆனா எதுவுமே பேசலையே?" என்றார் குருசாமி.

"அவரு என்னை ஒரு பொருட்டாவே மதிக்கல. அவர்கிட்ட நான் என்னத்தைப் பேசறது?  இவ்வளவு நாள் பழகி இருக்கீங்க, வாங்கின கடனையெல்லாம் வட்டியோட திருப்பிக் கொடுத்திருக்கீங்க. உங்க வீட்டை வேற செப்யூரிட்டியா கொடுத்திருக்கீங்க. உங்களுக்கு ரெண்டு மாசம் அவகாசம் கூடக் கொடுக்க மாட்டேன்னுட்டாரு. ஏன், ரெண்டு மாசம் பொறுத்துக்கறேன், அதுக்குள்ள நீங்க கடனைத் திருப்பிக் கொடுக்கலேன்னா கோர்ட்டுக்குப் போவேன்னு சொல்லி இருக்கலாமே!" என்றார் கண்ணன்.

"என்னைப் பத்தி அவருக்கு நல்லாத் தெரியும். கொஞ்சமாவது இரக்கம் காட்டுவாருன்னு நினைச்சேன்."

"அவரால அது முடியாது!" என்றார் கண்ணன்.

"முடியாதா? ஏன் அப்படிச் சொல்றீங்க?" என்றார் குருசாமி சற்று வியப்புடன்.

"ஏன்னா அவர்கிட்ட இரக்கம் என்கிற குணமே அடியோட இல்ல. அவர் முகத்தையே பாத்துக்கிட்டிருந்தேன்னு சொன்னீங்களே, அவர் கண்ணைத்தான் பாத்துக்கிட்டிருந்தேன். அவர் கண்ல இரக்கத்தோட சாயை கொஞ்சம் கூட இல்லை. அதனால அவர்கிட்ட பேசிப் பயன் இருக்காதுன்னுதான் நான் பேசாம இருந்தேன். கவலைப்படாதீங்க. ஏதாவது ஏற்பாடு செய்யலாம்" என்றார் கண்ணன். 

குறள் 576:
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர்.

பொருள்: 
ஒருவர்க்குக் கண் இருந்தும்கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும் இரக்கமும் இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு ஒப்பானவரே ஆவார்.

577. புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே!

"என்ன புலவரே! நீண்ட காலமாக உங்களைக் காணமுடியவில்லையே" என்றார் அமைச்சர்.

"உங்களுக்குக் கண் இருக்கிறது. அதனால் என்னைக் காணமுடியவில்லை என்று உணர்கிறீர்கள். கண் இல்லாவிட்டால் இந்தப் பிரச்னையே இருக்காதே!" என்றார் புலவர்..

"உங்களின் பூடகப் பேச்சைப் புரிந்து கொள்ளும் புலமை எனக்கு இல்லை. ஆனால் பழைய மன்னர் மறைந்து அவர் புதல்வர் பதவியேற்றபிறகு உங்களைக் காணவில்லை என்பது மட்டும் உண்மைதானே!"

ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொண்ட புலவர், "உண்மைதான். மறைந்து போன மன்னரை நீங்கள் குறிப்பிட்டதும் என் கண்கள் தானாக மூடிக் கொள்கின்றன. கண்ணுக்குள் நீர் பெருகுகிறது. எப்படிப்பட்ட மனிதர் அவர்! கண்பார்வை இல்லாதவராக இருந்தும் கண்ணோட்டம் என்ற பண்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவராயிற்றே அவர்!" என்றார் புலவர் 

"ஆனால் இப்போது அரசராக இருக்கும் அவருடைய புதல்வர் கண்ணோட்டம் என்ற குணம் அறவே இன்றி இரக்கமில்லாதவராக நடந்து கொள்கிறார் என்கிறீர்களா?" என்றார் அமைச்சர் சிரித்தபடியே.

"ஐயோ! நான் எங்கே அப்படிச் சொன்னேன்?" என்றார் புலவர் பதட்டத்துடன்.

"பயப்படாதீர்கள். இங்கே நம் இருவரைத் தவிர வேறு யாரும் இல்லை. நாம் இருவரும் நண்பர்கள். நமக்குள் நெருக்கமாக, வெளிப்படையாகப் பேசிக் கொள்வதில் என்ன தவறு?

"அது சரிதான். ஆயினும் நீங்கள் அதிகாரம் உள்ள அமைச்சர். நான் ஒரு ஏழைப் புலவன். என்னால் எப்படி சுதந்திரமாகப் பேச முடியும்?"

"புலவர்களால் பூடகமாகப் பாடலில் பல கருத்துக்களைச் சொல்ல முடியுமே! பல புலவர்கள் அப்படிச் சொல்லி இருக்கிறார்களே!"

"அப்படிச் சொல்லி என்ன பயன்? மன்னர் தன் இயல்பை மாற்றிக் கொண்டு கருணை உள்ளம் கொண்டவராக மாறி விடப் போகிறாரா என்ன? தந்தையின் நல்ல குணம் தனயனுக்கு இல்லாமல் போவது ஒன்றும் புதிதல்லவே? திருதராஷ்டிரர் கண்ணோட்டம் உள்ளவராகத்தான் இருந்தார். ஆனால் அவர் மகன் துரியோதனனிடம் கண்ணோட்டம் என்ற குணம் அறவே இல்லையே?"

"திருதராஷ்டிரர் கண்ணோட்டம் உள்ளவராக இருந்தார் என்றா சொல்கிறீர்கள்? துரியோதனன் பாண்டவர்களை அரக்கு மாளிகைக்குள் வைத்து எரித்துக் கொல்லத் திட்டமிட்டிருக்கிறான் என்று தெரிந்தும் பாண்டவர்களை ஏமாற்றி அங்கே அனுப்பியவர் அவர். கண்ணோட்டம் இருந்திருந்தால் அப்படிச் செய்திருப்பாரா அவர்?"

"அப்படியானால் துரியோதனனனை விட திருதராஷ்டரன் அதிகக் கண்ணோட்டம் கொண்டிருந்தார் என்று சொல்லலாமா?"

"அப்படி வேண்டுமானால் சொல்லலாம்!" என்றார் அமைச்சர்.

"அமைச்சரே! உங்களுடன் பேசிக் கொண்டிருந்ததில் ஒரு பாடல் எழுத எனக்கு ஒரு யோசனை தோன்றி இருக்கிறது!" என்றார் புலவர் உற்சாகத்துடன்.

"மகிழ்ச்சி! ஆனால் நீங்கள் எழுதிய பாடலுக்கு மன்னர் பரிசளித்ததும் அதில் பாதியை எனக்குக் கொடுத்து விடுங்கள்!"

"பரிசு கொடுத்தால் சரி. கசையடிகள் கொடுத்தால்..?"

"அவற்றை நீங்களே முழுவதாகப் பெற்றுக் கொள்ளலாம். எனக்கு எந்த மறுப்பும் இல்லை! வேடிக்கை இருக்கட்டும். என்ன பாடல் எழுதப் போகிறீர்கள்? என்னிடம் சொல்லலாம் அல்லவா?"

"நிச்சயம். உங்கள் ஒப்புதலைப் பெற்ற பிறகுதானே பாடலை அரசவையில் படிக்கப் போகிறேன்!"

"சரி. சொல்லுங்கள்!" என்றார் அமைச்சர்.

"நாம் திருதராஷ்டிரர், துரியோதனனைப் பற்றிப் பேசியதும் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. கண்ணோட்டம் என்பது கண்ணின் இயல்பு. ஒருவரின் துயரத்தைக் கண் பார்க்கும்போது  கண் இரக்க உணர்வை வெளிப்படுத்தும். இதுதான் இயல்பு. அதானல்தான் இரக்க குணத்துக்குக் கண்ணோட்டம் என்ற பெயரே வந்தது என்று நினைக்கிறேன். சரி. ஒருவருக்குக் கண் இருந்தால் கண்ணோட்டம் இருக்க வேண்டும். இரக்கம் இல்லாவிட்டால் அவரைக் கண் இல்லாதவர் என்று சொல்வோம். துன்பப்படும் ஒருவர் கடவுளைப் பார்த்து, 'கடவுளே! உனக்குக் கண் இல்லையா?' என்று கேட்பதில்லையா?

"ஆனால் நடைமுறை வாழ்க்கையில் இப்படியா இருக்கிறது? கண் பார்வை பெற்றிருந்த துரியோதனனை விடக் கண்பார்வை இல்லாத அவன் தந்தை திருதராஷ்டிரனிடம் கண்ணோட்டம் அதிகமாக இருந்தது. இது மகாபாரதக் கதை. ராமாயணத்தில் சிரவணகுமாரனின் கதை வருகிறது, கண் பார்வை இல்லாத தன் தாய் தந்தை இருவரையும் தன் தோளில் சுமந்து சென்று காப்பாற்றியவன் அவன். அவன் ஒருமுறை ஒரு குளத்திலிருந்து குடத்தில் தண்ணீர் மொள்ளும் சத்தத்தைத் தொலைவிலிருந்து கேட்ட தசரத சக்கரவர்த்தி அந்தச் சத்தத்தை ஒரு யானை துதிக்கையால் நீரை அள்ளும் சத்தம் என்று நினைத்து அம்பு விட்டு அவனைக் கொன்று விட்டார். 

"தன் தவறை உணர்ந்த தசரதர் சிரவணகுமாரனின் பெற்றோரிடம் தான் செய்த தவறைக் கூறி மன்னிப்பு கேட்டபோது முனிவரான அவன் தந்தை சந்தனு கண்ணோட்டம் எனும் தன் குணத்தை ஒரு கணம் இழந்து தசரதரும் தன்னைப் போல் மகனை இழந்த துயரத்தைப் பெற்று மாள வேண்டும் என்று சாபம் கொடுத்து விட்டார்.

"எனவே தந்தை-மகன் என்று எடுத்துக் கொண்டால் கண்பார்வை இல்லாத தந்தை திருதராஷ்டிரன் கண்பார்வை உள்ள மகன் துரியோதனனை விட அதிகக் கண்ணோட்டம் உள்ளவர். கண்பார்வை உள்ள சிரவணகுமாரன் கண்பார்வை இல்லாத தந்தை சந்தனுவை விட அதிகக் கண்ணோட்டம் உள்ளவன். நம் நாட்டிலோ கண்பார்வை உள்ள இன்றைய மன்னரை விட கண்பார்வை இல்லாத அவருடைய தந்தை அதிகக் கண்ணோட்டம் உள்ளவர். ஆயினும் கண்ணோட்டம் என்பது கண்வழி வருவது என்றுதான் கூறப்படுகிறது. இதுதான் என் கவிதை. எப்படி இருக்கிறது?" 

"கவிதை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இதை மன்னர் முன்னால் துணிவாகச் சொல்லப் போகிறீர்களா?" என்றார் அமைச்சர் வியப்புடன்.

"ஏன், உண்மையைத்தானே சொல்லப் போகிறேன்? அதுவும் மன்னரைப் பற்றி நான் எதுவும் குறைவாகச் சொல்லவில்லையே! அவரை விட அவர் தந்தை அதிகக் கண்ணோட்டம் உள்ளவர் என்றுதானே சொல்லப் போகிறேன்?" என்றார் புலவர். 

அமைச்சர் மௌனமாக இருந்தார்.

"புலவரே! கடைசியில் பொய் சொல்லிப் பரிசு வாங்கி விட்டீர்களே!"என்றார் அமைச்சர் புலவரிடம், சற்றே கோபத்துடன்.

"என்ன பொய் சொன்னேன்?"

"நீங்கள் என்னிடம் சொன்ன கவிதை வேறு, மன்னர் முன்னிலையில் படித்த கவிதை வேறு. நீங்கள் படித்த கவிதையில் மன்னர் அவர் தந்தை இருவரில் தந்தையை விட மகன் அதிகக் கண்ணோட்டம் உள்ளவர் என்று மாற்றிச் சொல்லி விட்டீர்களே!"

"அது மற்றவர்கள் புரிந்து கொண்ட பொருள். நான் சொன்ன பொருள் மகனை விடத் தந்தை அதிகக் கண்ணோடம் உள்ளவர் என்பதுதான்?" என்றார் புலவர் சிரித்தபடியே!

"அது எப்படி?" என்றார் அமைச்சர் வியப்புடன்.

"அமைச்சரே! நான் ஏன் தமிழில் கவிதை பாடாமல் சம்ஸ்கிருதத்தில் பாடினேன் என்று யோசித்தீர்களா?"

"எனக்கு அது சற்று வியப்பாகத்தான் இருந்தது. ஆனால் நீங்கள் தமிழ், வடமொழி இரண்டிலும் புலமை பெற்றவர் என்பதால் அதைப் பற்றி நான் பெரிதாக நினைக்கவில்லை."

"அமைச்சரே! சம்ஸ்கிருதத்தில் தாத என்ற சொல்லுக்கு தந்தை என்றும் பொருள் உண்டு, மகன் என்றும் பொருள் உண்டு. நான் 'தாத' என்று தந்தையைத்தான் குறிப்பிட்டேன். ஆனால் அவையில் இருந்த வடமொழி அறிந்தவர்கள் மன்னருக்கு பயந்து 'தாத' என்பதற்கு மகன் என்று பொருள் கூறி மகன் அதிகக் கண்ணோட்டம் உள்ளவர் என்று நான் கூறி இருப்பதாகப் பொருள் கூறி விட்டார்கள்!" என்றார் புலவர்  புன்சிரிப்புடன்.

"நீங்கள் உண்மையாகவே இரட்டைமொழிப் புலவர்தான்!" என்றார் அமைச்சர்.

குறள் 577:
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்..

பொருள்: 
கண்ணோட்டம் (இரக்கம்) இல்லாதவர் கண் இல்லாதவரே; கண் இருப்பவர் கண்ணோட்டம் இல்லாதவராக இருப்பதும் இல்லை.

578. மாற்று இடம்
"சார்! அங்கே இருநூறு குடிசைகள் இருக்கு. இருபது வருஷமா அவங்க அங்கேதான் இருக்காங்க. இப்ப அவங்களைக் காலி பண்ணச் சொன்னா அவங்க எங்கே போவாங்க?"  என்றார் புருஷோத்தமன். அவர் அந்தப் பகுதியில் வசிக்கும் ஒரு குட்டித் தலைவர்.

"நீர்நிலைகள் மேல இருக்கிற எல்லா கட்டிடங்களையும், குடியிருப்புகளையும் உடனே அகற்றணுங்கறது அரசாங்கத்தோட உத்தரவு. நான் அரசாங்கத்தோட உத்தரவை நிறைவேற்ற வேண்டிய ஒரு அதிகாரி அவ்வளவுதான்!" என்றார் செல்வநாதன்.

"சரி சார். அவங்களுக்கு பக்கத்திலேயே வேற இடம் கொடுக்கணும் இல்ல? இங்கேந்து 30, 40 கிலோமீட்டர் தள்ளி இடம்  கொடுத்திருக்கீங்க. அவங்க அங்கே இருந்துக்கிட்டு பிழைப்புக்காக தினம் அவ்வளவு தூரம் பயணம் செஞ்சு நகரத்துக்கு வர முடியுமா?" 

"அரசாங்கத்துக்கு சொந்தமான நிலம் எங்கே இருக்கோ அங்கேதானே கொடுக்க முடியும்? உங்க கோரிக்கையை நான் அரசாங்கத்துக்கு அனுப்பி இருக்கேன். வேற இடம் இருக்கான்னு பாக்கறதா செகரட்டரி சொல்லி இருக்காரு. இன்னும் ஒரு வாரம் வெயிட் பண்ணுங்க. நல்ல முடிவு வரலாம்!"

"சார்! இருநூறு குடிசைகள்தானே? அவங்களை இங்கேயே இருக்க அனுமதிக்கச் சொல்லி நீங்க அரசாங்கத்துக்கிட்ட  சிபாரிசு பண்ண முடியாதா சார்?" என்றார் புருஷோத்தமன் கெஞ்சும் குரலில்.

"சாரி! ஒரு தப்பான விஷயத்தை என்னால பரிந்துரை செய்ய முடியாது. அப்படி நான் நான் செஞ்சாலும் அரசாங்கத்தில ஒத்துக்க மாட்டாங்க!" என்றார் செல்வநாதன் உறுதியான குரலில்.

புருஷோத்தமன் வெளியே சென்றதும், அறையில் இருந்த துணை அதிகாரி, "ஏன் சார், வேற இடம் கொடுக்க முடியுமான்னு பாக்கறதா செகரட்டரி சொல்லி இருக்காரா என்ன?" என்றார் சந்தேகத்துடன்.

"இல்லை. ஆனா எனக்கு வேற ஒரு யோசனை இருக்கு!" என்றார் செல்வநாதன் சிரித்துக் கொண்டே.

"சார்! எங்க கட்டிட அனுமதி விஷயம் இன்னும் முடியலியே!" என்றார் குபேர் இண்டஸ்டிரீஸின் தொடர்பு அதிகாரி.

"நீங்க முதல்ல கட்டிடத்தைக் கட்டிட்டு அப்புறம் அனுமதி கேக்கறீங்க. அது எப்படி நடக்கும்?" என்றார் செல்வநாதன்.

"சார்! ஒரு அவசரத் தேவைக்காகக் கட்டிட்டோம். கட்டிட பிளான் எல்லாம் விதிப்படிதான் இருக்கு. இது மாதிரி எவ்வளவோ கேஸ்ல போஸ்ட்-கன்ஸ்ட்ரக்‌ஷன் அப்ரூவல் அரசாங்கத்தில கொடுத்திருக்காங்களே!"

"அப்படியா? அது மாதிரி அப்ரூவல் கேட்டு வாங்க உங்களுக்கு உரிமை இருந்தா நீதிமன்றத்துக்குப் போய் உத்தரவு வாங்கிக்கிட்டு வாங்க!" என்றார் செல்வநாதன்.

"இல்ல சார்! உரிமைன்னெல்லாம் நான் சொல்லல.  இது ஒரு ரிக்வெஸ்ட்தான்" என்றார் தொடர்பு அதிகாரி பதட்டத்துடன்.

"அப்ருவல் கொடுக்கறது அரசாங்கத்தோட விருப்பம். உங்களோடது தொழிற்சாலைக் கட்டிடம், கட்டிட பிளான் எல்லாம் விதிப்படிதான் இருக்குன்னா அப்ருவல் கொடுக்கச் சொல்லி நான் அரசாங்கத்துக்குப் பரிந்துரை செய்யலாம். ஆனா அரசாங்கம்தான் முடிவெடுக்கணும்."

"நீங்க தயவு செஞ்சு பரந்துரை பண்ணி அனுப்புங்க சார்! நாங்க செகரேடரியட்ல ஃபாலோ அப் பண்ணிக்கறோம்!" என்றார் தொடர்பு அதிகாரி.

"அனுப்பலாம். ஆனா வேற சில விஷயங்கள் இருக்கு. அது பத்தியும் நாங்க எங்க பரிந்துரையில குறிப்பிடணுமே!"

"வேற என்ன சார் விஷயங்கள்?" 

"உங்க தொழிலாளர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கறதுக்காக  போரூர்ல உங்களுக்கு ஒரு இடம் அலாட் பண்ணினோம். ஆனா நீங்க அந்த இடத்தைப் பயன்படுத்தல. அது இன்னும் காலியாத்தான் இருக்கு."

"கட்டுவோம் சார்! கொஞ்ச நாள் ஆகும்."

"இல்ல. உங்க தொழிலாளர்கள் வெவ்வேற இடங்கள்ளேந்து வராங்க. அவங்க போருர்ல குடியிருக்க விரும்பல. தொழிலளர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டாம், அதற்கு பதிலா அவங்களுக்கு வீட்டு வாடகை அலவன்சும், வீட்டிலேந்து தொழிற்சாலைக்கு வந்து போக போக்குவரத்து அலவன்சும் கொடுக்கணும்னு உங்க யூனியன்ல கேட்டு, நிர்வாகமும்  அதுக்கு ஒத்துக்கிட்டு ஒப்பந்தம் கையெழுத்து ஆகி இருக்கு இல்ல?"

"ஆமாம் சார். ஆனா இது எப்படி..."

"அரசாங்கத்துக்கு எல்லாமே தெரியும் சார்! தொழிலாளர் இலாகாவுக்கு அந்த ஒப்பந்தத்தை நீங்க அனுப்பி இருக்கீங்களே!"

தொடர்பு அதிகாரி மௌனமாக இருந்தார்.

"அதனால அந்த இடத்தை அரசாங்கத்துக்கு சரண்டர் பண்ணிடுங்க. உங்களுக்கு அதை ரொம்ப குறைஞ்ச விலைக்குதான் கொடுத்தோம். அதே விலை கொடுத்து உங்ககிட்டேந்து வாங்கிப்போம். இப்ப நீங்க சரண்டர் பண்ணாட்டாலும், கொடுக்கப்பட்ட நோக்கத்துக்காக அதைப் பயன்படுத்தலைன்னு சொல்லி அரசாங்கத்திலேந்து ஒரு உத்தரவு போட்டு அதை நாங்க திரும்ப எடுத்துக்க முடியும். ஆனா அதை இப்ப நீங்க சரண்டர் பண்ணினீங்கன்னா உங்க அப்ரூவலுக்கு அது வலுவா இருக்கும்!" என்றார் செல்வநாதன்.

"எங்க எம் டி கிட்ட கேட்டு சொல்றேன் சார்!" என்று சொல்லி விட்டுக் கிளம்பினார் தொடர்பு அதிகாரி.

அவர் சென்றதும், "அந்த இடத்தைப் பத்தி அரசாங்கத்திலேந்து யாரும் கேக்கலியே சார்!" என்றார் உதவி அதிகாரி.

"வேற யாரும் அதைப்பத்தி யோசிச்சிருக்க மாட்டாங்க. நாமதானே அரசாங்கம்? நமக்கும் கடமை இருக்கே! நமக்கு மேல இருக்கறவங்க சொல்றதை செஞ்சா போதும்னு  இருக்கறது சரியா? போரூர்ல இருக்கற குடிசைகளை அகற்றணும்னு மேலேருந்து சொன்னாங்க. நாம செய்யறோம். ஆனா குடிசைவாசிகளோட கஷ்டத்தைப் புரிஞ்சுக்கிட்டு அவங்களுக்கு எப்படி உதவலாம்னு யோசிச்சப்ப, இந்த இடம் காலியா இருக்கறது கவனத்துக்கு வந்தது. குபேர் இண்டஸ்ட்ரிஸ் அதைப் பயன்படுத்தாம வச்சுக்கிட்டிருக்கிறதும் நியாயம் இல்லையே! அவங்களை அந்த இடத்தை சரண்டர் பண்ணச் சொல்லி வாங்கிட்டு, அந்த இடத்தை அந்தக் குடிசைவாசிகளுக்குக் கொடுக்கலான்னு நாம சொன்னா, அரசாங்கத்தில அதைக் கண்டிப்பா ஓத்துப்பாங்க. குடிசைவாசிகளுக்கு ஆதரவா செயல்படறதா சொல்லி நல்ல பேரும் வாங்கிப்பாங்க! நம்மைப் பொருத்தவரை நம்ம கடமையைச் சரியா செஞ்சோம், அதோட மனிதாபிமானத்தோடயும் நடந்துக்கிட்டோங்கற திருப்தி நமக்கு இருக்குமே!" என்றார் செல்வநாதன்.

"உங்ககிட்ட நான் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு சார்" என்றார் துணை அதிகாரி.

குறள் 578:
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு.

பொருள்: 
தம் கடமையாகிய தொழில் கெடாமல் கண்ணோட்டம் உடையவராக இருக்க வல்லவர்க்கு இவ்வுலகம் உரிமை உடையது.

579. போதுமா இந்த தண்டனை?

தற்காலிகப் பதவி நீக்கம் செய்யப்பட்ட பொது மேலாளர் மாசிலாமணியின் மீதான உயர்மட்டக் குழு விசாரணை நடந்து விசாரணை அறிக்கை நிர்வாக இயக்குனர் ராகவனிடம் சமர்ப்பிக்கப்பட்டது. 

மாசிலாமணியின் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ராகவன் தன் பரிந்துரையை நிறுவனத் தலைவருக்கு அனுப்ப வேண்டும், அவர் இறுதி முடிவு எடுப்பார்.

"பதவியில இருக்கச்சே என்ன ஆட்டம் போட்டாரு! இப்ப அவரே மாட்டிக்கிட்டிருக்காரு. அவரைத் தூக்கி ஜெயில்ல போடணும்!" என்றான் முகுந்தன். அவன் அந்த நிறுவனத்தில் ஒரு மூத்த அதிகாரி.

"அவர் நேரடியா எந்தத் தப்பும் செய்யல! அவருக்குக் கீழே இருந்தவங்க செஞ்ச மோசடியை அவர் கவனிக்காம விட்டிருக்காரு. அது கவனக் குறைவுதானே?" என்றான் அவன் நண்பன் துரை. அவனும் ஒரு மூத்த அதிகாரிதான்.

"மத்தவங்க இது மாதிரி கவனக் குறைவால ஏதாவது தப்பு செஞ்சா அவரு என்ன சொல்லுவாரு? 'கவனக் குறைவோ, இல்ல வேணும்னே செஞ்சியோ யாருக்குத் தெரியும்? செஞ்ச தப்புக்கு தண்டனை அனுபவிச்சுத்தானே ஆகணும்?' அப்படின்னு சொல்லி தண்டனை கொடுப்பாரு இல்ல? ஏன், உனக்கும், எனக்கும் கூட இது நடந்திருக்கே! டைப் பண்ணின கடிதத்தில இருக்கிற எழுத்துப் பிழையைத் திருத்தாம விட்டாக் கூட நாம ஏதோ பெரிய குற்றம் செஞ்சுட்ட மாதிரி கண்டபடி பேசி அவமானப்படுத்துவாரே!"

"உண்மைதான! சின்ன தப்புன்னா கூட வேற டிபார்ட்மென்ட்டுக்கு மாத்தறது, நம்ம பர்சனல் ஃபைல்ல நம்மைப் பற்றி திறமைக் குறைவானவர்னு எழுதறதுன்னு ஆரம்பிச்சு, இன்கிரிமென்ட்டோ, பதவி உயர்வோ கிடைக்காம போற அளவுக்கு எவ்வளவோ செஞ்சிருக்காரு. கொஞ்சம் பெரிய தப்பா இருந்தா, அவங்க தெரியாம செஞ்சிருந்தா கூட, அவங்க மேல கொஞ்சம் கூட இரக்கம் காட்டாம அவங்களை வேற ஊருக்கு மாத்தறது, சஸ்பெண்ட் பண்றது, பதவி இறக்கம் செய்யறதுன்னு கடுமையான தண்டனையெல்லாம் கொடுத்திருக்காரு. இப்ப அவருக்கு என்ன தண்டனை கிடைக்குதுன்னு பாக்கலாம்!"

"என்ன மிஸ்டர் ராகவன்! இவ்வளவு பெரிய தப்பு நடந்திருக்கு. மாசிலாமணியை மறுபடியும் வேலையில எடுத்துக்கலாம்னு ரெகமண்ட் பண்ணி இருக்கீங்க?" என்றார் நிறுவனத்தின் தலைவர் கனகலிங்கம்.

"அவர் கவனக் குறைவா மட்டும்தான் இருந்திருக்காரு. இன்ஸ்பெக்‌ஷன்போதுதான் மோசடியைக் கண்டுபிடிச்சிருக்காங்க. மோசடியில ஈடுபட்டவங்களை போலீஸ்ல ஒப்படைச்சாச்சு. பதவி நீக்கம் செஞ்சு அவங்ககிட்டேந்து பணத்தையும் ரெகவர் பண்ணிட்டோம். மாசிலாமணி தெரிஞ்சே எந்தத் தப்பும் செய்யல. அவர் இன்னும் ரெண்டு வருஷத்தில ஓய்வு பெறப் போறாரு. அவரோட அதிகாரங்களைக் குறைச்சு அவருக்கு மறுபடி அந்தப் பதவியைக் கொடுத்துடலாம். இன்னொரு ஜெனரால் மானேஜரைப் போட்டு அவருக்கு எல்லா அதிகாரங்களையும் கொடுத்துடலாம். அதிகாரம் எல்லாம் போய் ஒரு டம்மியா இருக்கறதே மாசிலாமணிக்குப் போதுமான தண்டனைதான்!" என்றார் ராகவன்.

"மாசிலாமணி மத்தவங்க விஷயத்தில ஈவு இரக்கம் இல்லாம நடந்துக்கிட்டிருக்காரு. சின்ன தப்புக்கெல்லாம் பெரிய தண்டனை கொடுத்திருக்காரு. சில பேர் விஷயத்தில நீங்களே தலையிட்டு அவர் கொடுத்த தண்டனையை ரத்து செஞ்சிருக்கீங்க, இல்லேன்னா குறைச்சிருக்கீங்க. அப்படிப்பட்டவருக்கு இவ்வளவு இரக்கம் காட்டறீங்களே!" என்றார் கனகலிங்கம்.

"சார்! என்னைப் பொருத்தவரை மத்தவங்க விஷயத்தில எப்படி நடந்துக்கிட்டிருக்கேனோ, அதே மாதிரிதான். மாசிலாமணி விஷயத்தில நடந்துக்கறேன். ஒத்தர் தெரியாம தப்பு செஞ்சிருந்தா அவங்களுக்கு இரக்கம் காட்டணுங்கறதுதான் என்னோட அணுகுமுறை. மாசிலாமணி மத்தவங்களுக்கு இரக்கம் காட்டலைங்கறதுக்காக நான் அவருக்கு இரக்கம் காட்டலேன்னா நான் எப்படி நடந்துக்கணுங்கறதை அவர்  தீர்மானிக்கறார்னு அர்த்தம்! அதை நான் எப்படி அனுமதிக்க முடியும்?" என்றார் ராகவன்.

குறள் 579:
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.

பொருள்: 
பிறரை தண்டிக்கும் இயல்பு உடையவரிடத்திலும் கண்ணோட்டம் செய்து (அவர் செய்த குற்றத்தைப்) பொறுத்துக் காக்கும் பண்பே சிறந்தது.

580. பறி போன வாய்ப்பு!

தன் காலில் விழ முயன்ற முகிலனைத் தடுத்து நிறுத்தினார் முத்துசாமி.

"இதெல்லாம் அந்தக் கட்சியிலதான்ப்பா! இங்கே கிடையாது" என்று அவர் சிரித்துக் கொண்டே கூறியபோது, தான் 'அந்தக்' கட்சியிலிருந்து வந்தவன் என்பதை முத்துசாமி சொல்லிக் காட்டுகிறாரோ என்று ஒரு கணம் முகிலனுக்குத் தோன்றியது. 

ஆனால், அவர் அப்படிப்பட்ட மனிதர் அல்ல என்ற எண்ணம் உடனே மனதில் எழுந்து, அவர் யதேச்சையாகத்தான் அப்படிச் சொல்லி இருப்பார் என்று நினைத்து சமாதானமடைந்தான்.

"தலைவர் கட்டளைப்படி நான் இந்தத் தொகுதியில நிக்கறேன். முதல்ல உங்ககிட்ட வாழ்த்துப் பெறணும்னுதான் வந்தேன்" என்றான் முகிலன் கைகூப்பியபடியே.

"என் வாழ்த்து உனக்கு எப்பவுமே உண்டு. நான் உனக்காக பிரசாரம் செஞ்சு உன் வெற்றிக்கு உதவுவேன். தேர்தல் வேலைகளை ஆரம்பி!" என்றார் முத்துசாமி.

மீண்டும் ஒருமுறை அவரைப் பணிவுடன் வணங்கி விட்டு விடைபெற்றான் முகிலன்.

அருகிலிருந்து இதையெல்லாம் மௌனமாக கவனித்துக் கொண்டிருந்த முத்துசாமியின் நீண்டகால ஆதரவாளனான நாதன் முகிலன் சென்றதும், "என்னங்க இது? அக்கிரமமா இருக்கு! நீங்கதான் இந்தத் தொகுதியில நிக்கப் போறீங்க, தேர்தல்ல வெற்றி பெற்றப்பறம் அமைச்சர் ஆகப் போறீங்கன்னு எல்லாரும் நினைச்சுக்கிட்டிருக்கோம். பத்திரிகைகள்ள கூட இப்படித்தான் எழுதிக்கிட்டிருக்காங்க. தலைவர் திடீர்னு கட்சிக்குப் புதுசா வந்த இந்தப் பச்சோந்திக்கு சீட் கொடுத்திருக்காரே!" என்றான் கோபத்துடன்.

"கட்சிக்கு எது நல்லதுன்னு தலைவருக்குத் தெரியும். நான் எந்தப் பதவிக்கும் ஆசைப்பட மாட்டேன்னும் தலைவருக்கும் தெரியும்" என்றார் முத்துசாமி.

"அந்த முகிலனுக்கு ஆதரவா நீங்க பிரசாரத்துக்குப் போகாதீங்க!" என்றான் நாதன்.

"ஏன்?" என்றார் முத்துசாமி.

"இப்பதான் ஒரு விஷயம் தெரிஞ்சது. தலைவர் உங்களுக்குத்தான் சீட் கொடுக்கறதா இருந்தாராம். முகிலன்தான் நீங்க நின்னா சில ஜாதி ஓட்டுக்கள் உங்களுக்குக் கிடைக்காதுன்னு சொல்லி தலைவர் மனசைக் கலைச்சு தனக்கு சீட் கொடுக்க வச்சிருக்கான்!"

"ஆமாம்!"

"அப்படின்னா உங்களுக்கு இது முன்னாலேயே தெரியுமா?" என்றான் நாதன் அதிர்ச்சியுடன்.

"பத்திரிகைகள்ள இருக்கற சில நண்பர்கள் எனக்கு இந்தத் தகவலை முன்னாலேயே சொல்லிட்டாங்க. தலைவர் அவனுக்கு சீட் கொடுக்கறதுக்கு முன்னாலேயே இப்படித்தான் நடக்கும்னு எனக்குத் தெரியும்!"

"பின்னே ஏன் நீங்க தலைவர்கிட்ட பேசி அவர் மனசை மாத்த முயற்சி செய்யல?"

"நான் எனக்குன்னு எதையும் கேக்கறதில்லேன்னு உனக்குத் தெரியுமே! கட்சியோ. தலைவரோ எனக்கு ஏதாவது பொறுப்போ, பதவியோ கொடுத்தா ஏத்துப்பேன். அவ்வளவுதான்!"

"இது ரொம்ப அக்கிரமம் ஐயா! அவன் உங்களோட வாய்ப்பைத் தட்டிப் பறிச்சுட்டு உங்ககிட்டயே வந்து வாழ்த்துக் கேக்கறான். நீங்களும் அவனுக்காக பிரசாரம் பண்ணப் போறதா சொல்றீங்க! நான் சொல்றதைக் கேளுங்க. உங்களுக்கு இந்தத் தொகுதியில எல்லா ஜாதிக்காங்ககிட்டேயும் செல்வாக்கு இருக்கு. ஆனா உங்களுக்கு சில ஜாதிக்காரங்களோட ஆதரவு இல்லேன்னு அவன் தலைவர்கிட்ட பொய்யான தகவலைச் சொல்லி, உங்க வாய்ப்பை அவன் வாங்கிக்கிட்டிருக்கான்! நீங்க அவனுக்கு பிரசாரம் பண்ணப் போகாதீங்க. நீங்க ஒதுங்கி இருந்தீங்கன்னா, உங்க ஆதரவு அவனுக்கு இல்லேன்னு புரிஞ்சுகிட்டு தொகுதி மக்கள் நிறைய பேரு அவனுக்கு ஓட்டுப் போட மாட்டாங்க. அவன் தோத்தாதான் அவனுக்கு புத்தி வரும். தலைவருக்கும் அப்பதான் தான் செஞ்சது தப்புன்னு புரியும்!" என்றான் நாதன்.

"வேண்டாம் நாதன். அவன் எனக்கு எதிரா செயல்பட்டிருக்கான்னு தெரிஞ்சுதானே அவனுக்கு ஆதரவா பிரசாரம் பண்றேன்னு நான் சொன்னேன்? அவன் இயல்புப்படி அவன் நடந்துக்கிட்டிருக்கான். என் இயல்புப்படி நான் நடந்துக்கறேன். அவ்வளவுதான்!" என்றார் முத்துசாமி மௌனமாக.

குறள் 580:
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.

பொருள்: 
எவராலும் விரும்பத்தக்க நாகரிகமான கண்ணோட்டத்தை விரும்புகின்றவர், பழகியவர் தமக்கு நஞ்சு இடக்கண்டும் அதை உண்டு அமைவர்.
                                            அதிகாரம் 57 - வெருவந்த செய்யாமை                                                              அறத்துப்பால்                                               காமத்துப்பால்   

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...