Saturday, April 13, 2024

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன்.

"யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம் கட்டலேன்னா நகைகள் ஏலத்துக்குப் போயிடுமே!" என்றாள் அவன் மனைவி மல்லிகா கவலையுடன்.

"நம்ம சொந்தக்காரங்க யாரும் நமக்கு உதவற நிலையில இல்ல. என் நண்பர்களும் அப்படித்தான்!"

சற்று நேரம் மௌனமாக இருந்த மல்லிகா, "உங்க மூர்த்தி சித்தப்பாகிட்ட கேட்டுப் பாக்கலாமா?" என்றாள் தயக்கத்துடன்.

"அவரு என்னோட சொந்த சித்தப்பா கூட இல்ல. ஒண்ணு விட்ட சித்தப்பாதான். அவர்கிட்ட எப்படிப் போக் கேக்கறது?"

"ஒண்ணுவிட்ட சித்தப்பாவா இருந்தா என்ன? உங்க அப்பாகிட்ட நெருக்கமா இருந்தவர்தானே?"

"அப்பா போயி மூணு வருஷம் ஆச்சு. அதுக்கப்பறம் மூர்த்தி சித்தபாவோட நமக்குத் தொடர்பே இல்லையே! போன வருஷம் ஒரு கல்யாணத்தில பாத்தப்ப எப்படி இருக்கேன்னு விசாரிச்சாரு. அதோட சரி!"

"இருந்தா என்ன? இப்ப நமக்கு உதவறதுக்கு வேற யாரும் இல்லேங்கறப்ப அவர்கிட்ட உதவி கேக்கறதில தப்பு இல்லையே!"

சற்று நேரம் யோசித்த பரந்தாமன், "சரி. நீ சொல்றதுக்காக அவரைப் போய்ப் பார்த்துட்டு வரேன்" என்று சொல்லி விட்டுக் கிளம்பினான்.

வீட்டுக்குத் திரும்பிய பரந்தாமனின் முகத்தைப் பார்த்தே அவன் முயற்சி பயனளிக்கவில்லை என்று புரிந்து கொண்ட மல்லிகா அவனிடம் எதுவும் கேட்காமல் மௌனமாக இருந்தாள்.

உள்ளே வந்து அமர்ந்து கொண்ட பரந்தாமன், "அவர்கிட்ட உதவி கேக்கக் கூடாதுன்னு நான் முதல்லேயே நினைச்சேன். நீ சொன்னதைக் கேட்டு அவரைப் போய்ப் பார்த்துட்டு வந்தேன். கையை விரிச்சுட்டாரு!" என்றான் ஏமாற்றத்துடன்.

"காரணம் ஏதாவது சொன்னாரா?"

"காரணம் என்ன காரணம்? இல்லேன்னு சொல்றவங்க 'உனக்கு உதவ எனக்கு இஷ்டமில்லை'ன்னா சொல்லுவாங்க? அவர்கிட்ட பணம் இல்லையாம். "

மல்லிகா ஏதும் கூறாமல் மௌனமாக இருந்தாள்.

" 'நகையை மீட்டு உங்ககிட்ட கொடுத்துடறேன். பணத்தைத் திருப்பிக் கொடுத்துட்டு நகையை வாங்கிக்கறேன்'னு கூட சொன்னேன். 'என்னப்பா இப்படி சொல்ற? எங்கிட்ட பணம் இருந்தா நான் கொடுத்திருக்க மாட்டேனா?'ன்னு வருத்தப்பட்டுப் பேசற மாதிரி பேசினாரு."

"ஒருவேளை, உண்மையாகவே அவர்கிட்ட பணம் இல்லையோ, என்னவோ!" என்றாள் மல்லிகா.

"என்ன பேசற நீ? ஒரு லட்சம் ருபாயெல்லாம் அவருக்கு ஒரு தொகையே இல்லை. அவருக்குக் கொடுக்க இஷ்டம் இல்லை. அவ்வளவுதான்!"

"அப்படி இல்லேங்க. நம்மையே எடுத்துக்கங்க. நாம எவ்வளவோ வசதியா இருந்தவங்கதான். உங்களுக்கு திடீர்னு தொழில்ல நெருக்கடி ஏற்பட்டு நமக்குப் பணத் தட்டுப்பாடு வந்துடுச்சு. நம்ம சொந்தக்காரங்க யாராவது இப்ப உங்ககிட்ட வந்து பத்தாயிரம் ரூபா கடன் கேட்டா உங்களால கொடுக்க முடியாது இல்ல? அது மாதிரி அவருக்கும் இப்ப ஏதாவது கஷ்டமான நிலைமை இருக்கலாம்.  அதனால அவரால உண்மையாகவே உதவ முடியாம இருக்கலாம் இல்ல?" என்றாள் மல்லிகா.

வியப்புடன் மல்லிகாவைப் பார்த்த பரந்தாமன், "நீ சொல்றது உண்மையா இருக்கலாம். நீ இப்படி சொன்னப்பறம்தான் நான் கவனிச்ச ஒரு விஷயம் புரியுது. அவரு எப்பவும் ரொம்ப உற்சாகமா இருப்பாரு. நான் போனப்ப அவர்கிட்ட அந்த உற்சாகம் இல்லை. அதைப்பத்தி அப்ப நான் யோசிக்கல. பாவம் அவருக்கும் ஏதோ பணக் கஷ்டம் போல இருக்கு!" என்றான் பரந்தாமன்.

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 106
இரவு (யாசித்தல்)

குறள் 1060:
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி.

பொருள்: 
இல்லை என்பவரிடம், இரப்பவன் கோபம் கொள்ளக்கூடாது. தன்னைப் போலவே பிறர் நிலைமையும் இருக்கலாம் என்பதற்குத் தன் வறுமையே சான்றாக இருக்கிறதே!
குறள் 1061 (விரைவில்)
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Sunday, April 7, 2024

1059. உதவி கிடைத்தது!

"நம்ம பையனை காலேஜில சேக்கணுமே, என்ன செய்யப் போறீங்க?" என்றாள் நிர்மலா.

"அதான் நல்ல மார்க் வாங்கி இருக்கானே, நல்ல காலேஜ் எதிலேயாவது அவனுக்கு சீட் கிடைச்சுடும்" என்றான் பார்த்திபன்.

"நான் சீட் கிடைக்கறதைப் பத்திக் கேக்கல. அட்மிஷன் கிடைச்சா ஃபீஸ் கட்டணுமே, அதுக்கு என்ன செய்யப் போறீங்க?"

"அதைப் பத்தித்தான் விசாரிச்சுக்கிட்டிருக்கேன்!"

"விசாரிக்கிறீங்களா? என்ன விசாரிக்கறீங்க? "

"கொஞ்ச நாள் வெயிட் பண்ணு.சொல்றேன்!" என்று பேச்சை முடித்தான் பார்த்திபன்.

"குமாரோட காலேஜ் ஃபீசைப் பத்திக் கவலைப்பட்டியே, ஏற்பாடு பண்ணிட்டேன்" என்றான் பார்த்திபன்.

"என்ன ஏற்பாடு? பாங்க்ல எஜுகேஷன் லோன் தரேன்னுட்டாங்களா என்ன?" என்றாள் நிர்மலா.

"நமக்கு அது மாதிரி லோன் எல்லாம் கிடைக்காது. நம்மை மாதிரி வசதி இல்லாதவங்களுக்கு உதவறதுக்குன்னே சில நல்ல மனுஷங்க டிரஸ்ட் வச்சு அதன் மூலமா உதவி செய்யறாங்க. அது மாதிரி டிரஸ்ட்களைப் பத்தித்தான் விசாரிச்சுக்கிட்டிருந்தேன். அப்படி ஒரு டிரஸ்டில அப்ளிகேஷன் போட்டேன். அவங்க உதவி செய்யறதா சொல்லிட்டாங்க. குமார் காலேஜ்ல படிக்கற நாலு வருஷமும் காலேஜ் ஃபீஸ், புத்தகச் செலவு எல்லாத்துக்கும் அவங்க பணம் கொடுத்துடுவாங்க!"

"ஆச்சரியமா இருக்கே! இப்படி எல்லாம் உதவி செய்யறவங்க உலகத்தில இருக்காங்களா என்ன?" என்றாள் நிர்மலா வியப்புடன்.

"இருக்காங்களே!"

"நல்ல வேளை! இப்படி சில பேர் இருக்கறதாலதான் நம்மளை மாதிரி இருக்கறவங்களால சமாளிக்க முடியுது!"

சற்று யோசித்த பார்த்திபன், "நீ சொல்றது சரிதான். ஆனா இதை இப்படியும் பாக்கலாம். நம்மளை மாதிரி உதவி கேக்கறவங்க இருக்கறதாலதான் இது மாதிரி பெரிய மனுஷங்களால நமக்கு உதவி செஞ்சு நல்ல பேர் வாங்க முடியுது! அவங்க நமக்குப் பணம் கொடுத்து உதவறாங்க. நாம அவங்களுக்குப் பெருமை வாங்கிக் கொடுக்கிறோம்! நாம இல்லேன்னா அவங்களுக்கு இந்தப் பெருமை எப்படிக் கிடைக்கும்?" என்றான் சிரித்துக் கொண்டே.

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 106
இரவு (யாசித்தல்)

குறள் 1059:
ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை.

பொருள்: 
இரந்து பொருள் பெறுபவர் இல்லாத நிலையில், பொருள் கொடுத்துப் புகழ் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமற் போய்விடும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

1058. மகேஷின் விளக்கம்!

"இந்த மாசம் கிரடிட் கார்ட் பில் தொகை அதிகமா வந்திருக்கு போல இருக்கே!" என்றாள் கிரிஜா.

"பாக்கலாம். டியூ டேட்டுக்கு இன்னும் 10 நாள் இருக்குல்ல, கட்டிடலாம்!" என்றான் மகேஷ்.

"எங்கேந்து கட்டுவீங்க? சம்பளப் பணம் முழுக்க செலவழிஞ்சு போயிடுச்சு. மாசம் முடியற வரைக்கும் மீதிச் செலவுக்கே பணம் இல்ல. இதில கிரடிட் கார்ட் பில் கட்டப் பணம் எங்கேந்து வரும்?"

மகேஷ் மௌனமாக இருந்தான்.

"இந்தா. ஐயாயிரம் ரூபா. வீட்டுச் செலவுக்கு வச்சுக்க!" என்றான் மகேஷ்.

பணத்தை வாங்கிக் கொண்ட கிரிஜா, "கிரடிட் கார்ட் பில் கட்டணுமே!" என்றாள்.

"கட்டியாச்சு!"

ஒரு நிமிடம் மௌனமாக இருந்த கிரிஜா, "யார்கிட்ட கடன் வாங்கினீங்க?" என்றாள்.

"யார்கிட்டேந்து வாங்கினா என்ன? கடன் கிடைச்சது. கிரடிட் கார்ட் பில் கட்டியாச்சு. வீட்டுச் செலவுக்கும் கொஞ்சம் பணம் கொடுத்துட்டேன். அவ்வளவுதான்!" 

"கேக்கறேனேன்னு தப்பா நினைக்காதீங்க. இப்படி அடிக்கடி யார்கிட்டேயாவது கடன் வாங்கிக்கிட்டே இருக்கீங்களே, உங்களுக்கு இது அவமானமாத் தெரியலையா?" என்றாள் கிரிஜா, சற்றுத் தயக்கத்துடன்.

"அவமானமோ, இல்லையோ, உலகத்தில சில பேர் மத்தவங்ககிட்ட உதவி கேக்கத்தான் வேண்டி இருக்கு. உதவி செய்யறவங்களுக்கும் அதனால திருப்தியும், சந்தோஷமும் கிடைக்குது. உதவி கேக்கறவங்க இல்லைன்னா, உதவி செய்யறவங்களுக்கு வாழ்க்கையில சுவாரசியம் இருக்காது. உதவி கேக்கறவங்களுக்கும்தான்! வாழ்க்கையில சுவாரசியம் இல்லேன்னா மனுஷங்க பொம்மைகள் மாதிரிதான் வாழ வேண்டி இருக்கும்!" என்றான் மகேஷ்.

"நல்லா இருக்கு, மத்தவங்ககிட்ட உதவி கேட்டுக்கிட்டே இருக்கறதை  நீங்க நியாயப்படுத்தறது!" என்றாள் கிரிஜா

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 106
இரவு (யாசித்தல்)

குறள் 1058:
இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று.

பொருள்: 
இரப்பவர் இல்லையானால், இப்பெரிய உலகின் இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

1057. இருவரின் அனுபவங்கள்

"நம்ம ரெண்டு பேரோட நிலைமையுமே இப்படி மோசமா ஆயிடுச்சே!" என்றார் கதிரேசன்.

"ஆமாம். ஒண்ணா சேர்ந்து தொழில் ஆரம்பிச்சோம். இப்ப ஒரே நேரத்தில பிரச்னையை சந்திச்சுக்கிட்டிருக்கும். இந்த ஒற்றுமையை நினைச்சா ஆச்சரியமாத்தான் இருக்கு. ஆமாம். உன்னோட திட்டம் என்ன?" என்றார் மணிவண்ணன்.

"இது மாதிரி நிலைமைகள்ள வங்கிகள்தான் உதவணும். ஆனா அவங்க ஏற்கெனவே கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டு கெடுபிடிதான் பண்றாங்க. எனக்குத் தெரிஞ்ச ஒரு பெரிய மனுஷன் இருக்காரு. அவர்கிட்ட ஐம்பது லட்சம் ரூபாய் கேக்கப் போறேன். அவர் கொடுத்து உதவினா நிலைமையை சமாளிச்சு அஞ்சாறு மாசத்துக்குள்ள இயல்புநிலைக்கு வந்துடலாம்னு நினைக்கிறேன்."

"நீ சொல்றது சரிதான். இந்த மாதிரி சமயத்தில உதவி கிடைச்சா நம்மால மீண்டு வர முடியும். ஆனா உதவி கிடைக்கிறது கஷ்டம்தான். நான் உதவி கேக்கறதுக்குக் கூட ஒத்தர் இருக்காரு. ஆனா அவர்கிட்ட உதவி கேட்க எனக்குத் தயக்கமா இருக்கு" என்றார் மணிவண்ணன்.

"நம்ம நிலைமை மோசமா இருக்கறப்ப தயக்கத்தை எல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டுக் கேக்க வேண்டியதுதான். இது நமக்கு வாழ்வா சாவாங்கற பிரச்னையாச்சே!" என்றார் கதிரேசன்.

ரு வாரம் கழித்து கதிரேசன் மணிவண்ணனுக்கு ஃபோன் செய்தார். "என்ன கதிரேசா, ஏதேனும் செய்தி உண்டா?" என்றார்.

"நான் சொன்னேனே, எனகுத் தெரிஞ்ச ஒத்தர் இருக்காருன்னு, அவர் எனக்கு உதவி செய்யறதா சொல்லிட்டாரு. இன்னும் ரெண்டு நாள்ள பணம் கிடைச்சுடும்!" என்றார் மணிவண்ணன் உற்சாகமாக.

"அவர்கிட்ட உதவி கேக்கறதுக்குத் தயக்கமா இருக்குன், இப்ப இவ்வளவு உற்சாகமாப் பேசற!"

"தயக்கமாத்தான் இருந்தது. அவர் என்னோட தூரத்து உறவினர். அவர்கிட்ட கடன் கேட்டா என்னை இளப்பமா நினைப்பாரோன்னு தயங்கினேன். ஆனா அவர் ரொம்பப் பெருந்தன்மையா நடந்துக்கிட்டாரு. வியாபாரத்தில இது மாதிரி நிலைமைகள் வரது இயல்புதான்னு சொல்லி உடனே கடன் கொடுக்க ஒதுக்கிட்டாரு. நீ இப்படி இருக்கணும், அப்படி இருக்கணுங்கற உபதேசம் எதுவும் செய்யல. என்னை நம்பி நான் கேட்ட உதவியைச் செய்யறதாதான் காட்டிக்கிட்டாரு. போகும்போது தயக்கத்தோட போனவன், வரும்போது சந்தோஷமா வந்தேன். ஆமாம். உன் விஷயம் என்ன? உனக்குத் தெரிஞ்சவர் ஒத்தர் இருக்கார்னு சொன்னியே! அவர்கிட்ட கேட்டியா?"

"கேட்டேன், கொடுத்துட்டாரு!"

"கொடுத்துட்டாரா? ரொம்ப நல்லது. ஆனா இதை ஏன் இவ்வளவு உற்சாகம் இல்லாம சொல்ற?"

"என்ன செய்யறது? உனக்குக் கடன் கொடுத்தவர் நடந்துக்கிட்ட மாதிரி எனக்குக் கொடுத்தவர் நடந்துக்கலையே! முதல்ல என்னோட அலட்சியத்தாலதான் இந்த நிலைமை வந்துச்சுங்கற மாதிரி பேசினாரு. அப்புறம் பணம் கொடுக்கறேன்னு சொல்லிட்டு சின்னக் குழந்தைக்கு செய்யற மாதிரி ஏகப்பட்ட உபதேசம்! வெளியில வரப்ப, கடன் கிடைச்சதேங்கற சந்தோஷத்தை விட  அவர் பேசின பேச்சினால ஏற்பட்ட எரிச்சலும் அவமானமும்தான் அதிகமா இருந்தது" என்றார் கதிரேசன்.

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 106
இரவு (யாசித்தல்)

குறள் 1057:
இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து.

பொருள்: 
இழித்துப் பேசாமலும், ஏளனம் புரியாமலும் வழங்கிடும் வள்ளல் தன்மை உடையவர்களைக் காணும்போது, இரப்போர் உள்ளம் மகிழ்ச்சியால் இன்பமுறும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...