Sunday, March 24, 2024

1056. உள்ளிருந்து வந்த உதவி!

"வாங்க. எங்கே இவ்வளவு நாள் கழிச்சு?" என்று வரவேற்றார்பரமசிவம்.

தயங்கிக் கொண்டே பரமசிவத்தின் வீட்டுக்குள் நுழைந்த பாலன் "சும்மாதான். பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன்" என்றார். 

பரமசிவம் பாலனுடன் ஒரே கிராமத்தில் வசித்தவர். பாலன் ஒரு விவசாயி. பரமசிவம் ஒரு நெல் வியாபாரி. 

கிராமத்தில் இருந்து கொண்டு நெல் வியாபாரம் செய்தது அவ்வளவு லாபகரமாக இல்லை என்பதால் பரமசிவம் அருகிலிருந்த நகரத்துக்குக் குடி பெயர்ந்து விட்டார். நகரத்துக்கு வந்த பிறகு தன் வியாபாரத்தை விரிவாக்கி ஓரளவு வருமானம் பெற்று வந்தார்.

பாலன் நகரத்துக்கு வரும்போதெல்லாம் பரமசிவத்தை வந்து பார்த்து விட்டுப் போவார்.

சிறிது நேர உரையாடலுக்குப் பிறகு, "ஆமாம். இது விதைக்கிற பருவமாச்சே! உங்க நிலத்தில விதை போட்டுட்டீங்களா?" என்றார் பரமசிவம்.

"இல்லை. போன வருஷம் விளைச்சல் குறைவா இருந்ததால விதை நெல்லைக் கூட சேமிச்சு வைக்க முடியல. இப்ப பணம் கொடுத்துத்தான் விதை நெல் வாங்கணும். எங்கிட்ட இப்ப பணம் இல்லை. நான் உங்களைப் பார்க்க வந்ததுக்கு அதுவும் ஒரு காரணம்" என்றார் பாலன் தயக்கத்துடன். 

"எவ்வளவு வேணும்?"

"முப்பதாயிரம் இருந்தா நல்லா இருக்கும்."

"இப்ப எங்கிட்ட அவ்வளவு பணம் இல்லையே!" என்றார் பரமசிவம் யோசித்தபடியே.

அதற்குள் உள்ளிருந்து பரமசிவத்தின் மனைவி தங்கம் அவரை உள்ளே வருமாறு அழைக்க, பரமசிவம் உள்ளே சென்றார்.

ஓரிரு நிமிடங்கள் கழித்துத் திரும்பி வந்த பரமசிவத்தின் கை நிறைய ரூபாய் நோட்டுகளும், முகம் நிறைய மகிழ்ச்சியும் இருந்தன.

"இந்தாங்க, முப்பதாயிரம் ரூபாய்!" என்றுபடியே நோட்டுகளை பாலனின் கையில் கொடுத்தார் பரமசிவம்.

'இப்போதுதானே பணம் இல்லையென்று சொன்னார்? அதற்குள் எப்படிப் பணம் வந்தது?' என்ற பாலனின் கேள்வியை அவருடைய முகக்குறிப்பிலிருந்து புரிந்து கொண்ட பரமசிவம், "எங்க பொண்ணு வயசுக்கு வந்தா அவளுக்கு சடங்கு செய்யணுங்கறதுக்காக எனக்கே தெரியாம என் மனைவி கொஞ்சம் பணம் சேர்த்து வச்சிருக்கா. நான் பணம் இல்லேன்னு சொன்னதும் என்னை உள்ளே கூப்பிட்டு இந்தப் பணத்தைக் கொடுத்தா!" என்றார் பெருமையுடன்.

திகைத்து நின்ற பாலன், "யாராவது உதவி கேட்டா, நிறைய பேர் கையில் பணம் இருந்தா கூட இல்லேன்னு சொல்லுவாங்க. உங்க மனைவி உங்களுக்கே தெரியாம தான் சேர்த்து வச்சிருக்கற பணத்தைக் கொடுத்து உதவி செய்யறாங்க. இந்தாங்க இந்தப் பணத்தை அவங்ககிட்ட கொடுத்துடுங்க. அவங்க அதை ஒரு நோக்கத்துக்காக வச்சிருக்காங்க. அதை நான் வாங்கிக்க் கூடாது!" என்று தான் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்தார். 

அதற்குள் உள்ளிருந்து வந்த தங்கம், "உங்களுக்கு விதைநெல்லு வாங்கப் பணம் வேணும்னு கேட்டீங்களே! அது முக்கியம் இல்லையா? பணத்தை வாங்கிக்கங்க!" என்றாள்.

"இல்லம்மா! உங்களை மாதிரி நல்ல மனசு உள்ளவங்க இருக்கறப்ப என்னோட பிரச்னை தானே சரியாயிடும்னு எனக்கு நம்பிக்கை வந்துடுச்சு. எனக்கு வேற விதத்தில பணம் கிடைக்கும். உங்க நல்ல மனசை நான் எப்பவுமே மறக்க மாட்டேன்!" என்று இருவரிடமும் கைகூப்பி விடைபெற்றார் பாலன்.

பொருட்பால் 
குடியியல்தான்
அதிகாரம் 106
இரவு (யாசித்தல்)

குறள் 1056:
கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்.

பொருள்: 
இருப்பதை மறைப்பதாகிய நோய் இல்லாதவரைக் கண்டால், இல்லாமையாகிய நோய் எல்லாம் மொத்தமாக அழியும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

1055. உதவி செய்ய ஒருவர்!

"உங்களுக்கு வர வருமானத்தில குடும்பம் நடத்தறதே கஷ்டமா இருக்கு. இதில அப்பப்ப கூடுதல் செலவு வேற வந்துடுது. பணத்துக்கு எங் போறது?" என்று அலுத்துக் கொண்டாள் பாக்யலட்சுமி.

மணிமாறன் பதில் சொல்லவில்லை. 

அவன் தங்கை கிருத்திகாவின் மாமனார் இறந்து விட்டார். அவருடைய இறப்புக்குப் பின்னான சடங்குகளுக்கு இவன் சீர் செய்ய வேண்டுமாம்! என்ன ஒரு பழக்கமோ தெரியவில்லை. ஒரு பெண்ணின் பிறந்த வீட்டை மொத்தமாகச் சுரண்டுகிற பழக்கங்கள்!

சாவுக்குப் போனபோதே கிருத்திகா சொல்லி விட்டாள். "அண்ணே! உன் நிலைமை எனக்குத் தெரியும். ஆனாலும், முறைப்படி செய்ய வேண்டியதை செஞ்சுடு. இல்லேன்னா என் மாமியாரும் மத்த சொந்தங்களும் ஆயுள் முழுக்க சொல்லிக் காட்டிக்கிட்டே இருப்பாங்க"

அவர்கள் எதிர்பார்க்கும் சீர்களைச் செய்ய குறைந்தபட்சம் ஐயாயிரம் ரூபாய் ஆகும். பணத்துக்கு எங்கே போவது?

"உங்க நண்பர் சுந்தர்கிட்ட கேட்டுப் பாருங்களேன். அவரு வசதியாத்தானே இருக்காரு!" என்றாள் பாக்யலட்சுமி.

"வசதியாத்தான் இருக்கான். ஆனா கேட்டா இப்ப கையில பணம் இல்லைன்னு சொல்லிடுவான். எப்பப் பார்த்தாலும் பஞ்சப்பாட்டுப் பாடுவான். அவன் புலம்பறதைக் கேட்டா நானே அவனுக்கு நூறு ரூபா கொடுத்துட்டு வரலாம் போல இருக்கும்!"

"நீங்க உரிமையாக் கேட்க் கூடியவர் அவர் ஒத்தர்தான், வேற யார்கிட்ட போய் நீங்க கேக்க முடியும்?"

சற்று நேரம் ஏதோ யோசித்த மணிமாறன் ஒரு முடிவுடன் சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பினான்.

"எங்கே கிளம்பிட்டீங்க?" என்றாள் பாக்யலட்சுமி.

"ராத்திரிக்குள்ள வந்துடுவேன்" என்று சொல்லி விட்டுக் கிளம்பினான் மணிமாறன்.

ரவு 9 மணிக்கு வீட்டுக்குத் திரும்பினான் மணிமாறன்.

"எங்கே போயிட்டு வரிங்க? போறப்ப கேட்டப்ப சொல்லவே இல்லையே!" என்றாள் பாக்யலட்சுமி.

"எங்க மாமா வீட்டுக்குத்தான்!" என்றபடியே தன் சட்டைப்பையிலிருந்த ஐநூறு ரூபாய் நோட்டுகளை எடுதுக் காட்டினான் மணிமாறன். 

"உங்க தங்கை வீட்டுக்கு சீர் செய்ய அவர்கிட்ட கடன் வாங்கிட்டு வந்திருக்கீங்களா? ஏற்கெனவே போன வருஷம் நம்ம பொண்ணு படிப்புக்காக அவர்கிட்டதான் கடன் வாங்கினீங்க."

"அதைத்தான் திருப்பிக் கொடுத்துட்டேனே!"

"அதுக்காகத் திரும்பத் திரும்ப அவர்கிட்ட போய்க் கடன் கேக்கறது உங்களுக்குக் கஷ்டமா இல்ல? உங்க நண்பர்கிட்டயே கேக்க மாட்டேன்னுட்டீங்க. அவர்கிட்ட போய் எப்படி மறுபடி கேட்டீங்க?"

"ஏன்னா அவரு இருந்தா கொடுப்பாரு. இல்லேன்னா இல்லேன்னு சொல்லிடுவாரு. வச்சுக்கிட்டு இல்லேன்னு சொல்ல மாட்டாரு. இப்படிப்பட்ட மனுஷங்க சில பேராவது உலகத்தில இருக்கறதாலதான் நம்மை மாதிரி ஆட்களுக்கு உதவி தேவைப்படும்போது அவங்ககிட்ட போய உதவி கேட்க முடியுது!" என்றான் மணிமாறன் பெருமூச்சுடன்.

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 106
இரவு (யாசித்தல்)

குறள் 1055:
கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது.

பொருள்: 
உள்ளதை இல்லையென்று மறைக்காமல் வழங்கிடும் பண்புடையோர் உலகில் இருப்பதால்தான் இல்லாதவர்கள்அவர்களிடம் சென்று இரத்தலை மேற்கொண்டுள்ளனர்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Saturday, March 16, 2024

1054. வள்ளலுக்கு ஒரு தண்டனை!

"யார் இந்த வள்ளல் சபாபதி? ஏன் அவருக்கு மக்களிடையே இவ்வளவு புகழ்?" என்றான் அரசன் கஜவர்மன்.

"அரசே! தாங்களே குறிப்பிட்டது போல் அவர் ஒரு வள்ளல். பலனை எதிர்பாராமல், தன் செல்வம் குறைந்து விடுமே என்று கவலைப்படாமல் வாரிக் கொடுப்பவரை மக்கள் மதிப்பது இயல்புதானே?" என்றார் அமைச்சர்.

"ஏது? நீங்களே அவரைப் புகழ்ந்து தள்ளி விடுவீர்கள் போலிருக்கிறதே!"

"உண்மையைச் சொன்னேன் அரசே!"

"எது உண்மை? நம் நாட்டு மக்களுக்கு நான் எவ்வளவு நன்மை செய்திருக்கிறேன்! மழை பெய்யாமல் பஞ்சம் ஏற்பட்டாலும் சரி,  வெள்ளம் வந்து மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து தவித்தாலும் சரி, அவர்களுக்கு எவ்வளவு உதவி இருக்கிறேன்! என்னை விட அதிகம் உதவி விட்டாரா அந்த சபாபதி?"

"அரசே! மக்களின் துயரைப் போக்குவது மன்னரின் கடமை. அத்துடன்..."

"அத்துடன்?"

"இல்லை மன்னரே! வேறொன்றும் கூற விரும்பவில்லை."

"பரவாயில்லை, சொல்லுங்கள்."

"ஒரு மன்னர் அரசுக் கருவூலத்திலிருந்து கொருளை எடுத்து மக்களுக்கு அளிக்கும்போது அவர் தன் சொந்தப் பணத்தை் கொடுக்கவில்லை. நாட்டுக்குச் சொந்தமான, சொல்லப் போனால் மக்களுக்குச் சொந்தமான பணத்தைத்தான் கொடுக்கிறார். இதையும், ஒரு தனி மனிதர் தனக்குச் சொந்தமான பொருளைப் பிறருக்கு வாரி வழங்குவதையும் எப்படி ஒப்பிட முடியும்?"

தான் சொன்னதை அரசர் எப்படி எடுத்துக் கொண்டிருக்கிறாரோ என்று நினைத்தபடியே தயக்கத்துடன் அரசரை ஏறிட்டுப் பார்த்தார் அமைச்சர்.

"அமைச்சரே! மனதில் உள்ளதை மறைக்காமல் கூறும் உங்கள குணத்தை நான் போற்றுகிறேன். நீங்கள் கூறியது சரிதான். ஆயினும் சபாபதியைக் கொஞ்சம் சோதித்துப் பார்க்க விரும்புகிறேன!" என்றான் கஜவர்மன்.

"இறைவன் பக்தர்களைச் சோதிப்பது போலவா?" என்றார் அமைச்சர் சிரித்துக் கொண்டே.

"அப்படித்தான் வைத்துக் கொள்ளுங்களேன்!" என்ற அரசன் சற்று யோசித்து விட்டு, "ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி சபாபதியைக் கைது செய்து அழைத்து வாருங்கள்" என்றான்.

"அரசே! அவரை ஏன் கைது செய்ய வேண்டும்? ஒரு தவறும் செய்யாத ஒருவரை என்ன காரணத்துக்காகக் கைது செய்ய முடியும்?" என்றார் அமைச்சர் சற்று அதிர்ச்சியுடன்.

"உங்களால் முடியாதுதான். தளபதியிடம் சொல்லி அவரைக் கைது செய்து அழைத்து வரச் சொல்கிறேன். ஆனால் அவரை அரசவையில் நான் விசாரிக்கும்போது நீங்களும் அரவையில் இருக்க வேண்டும்" என்றான் அரசன்.

ரசவையில் கைதியாக நிறுத்தப்பட்டிருந்த சபாபதியைப் பார்த்து, "சபாபதி! உங்களை எல்லோரும் வள்ளல் என்று புகழ வேண்டும் என்பதற்காக நீங்கள் பலருக்கும் பொருள் கொடுது உதவி வருகிறீர்கள். அதனால் உங்களிடம் உதவி பெறுபவர்கள் சோம்பேறிகளாகி விட்டார்கள். வேலையே செய்வதில்லை.  தங்கள் தேவைகளுக்கு உங்கள் முன் வந்து நிற்கிறீர்கள். நீங்களும் அவர்களுக்குப் பிச்சை போடுவது போல் எதையோ விட்டெறிந்து அவர்களைச் சிறுமைப் படுத்கிறீர்கள். அதனால் அவர்கள் தொடர்ந்து சோம்பேறிகளாகவே இருக்கிறார்கள். இதன் மூலம் மக்களிடையே சோம்பேறித்தனத்தை வளர்க்கிறீர்கள், மக்களைப் பிச்சைக்காரர்களாக்கி அவர்களை அவமானப்படுத்துகிறீர்கள் என்ற இரண்டு குற்றச்சாட்டுக்கள் உங்கள் மீது வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுக்கு உங்கள் பதில் என்ன?" என்றான் அரசன்.

"அரசே! துன்பத்தில் வாடுபவர்களுக்கு என்னால் இயன்ற அளவில் நான் உதவுகிறேன். வேலை செய்ய முடியாதவர்கள், அல்லது வேலை கிடைக்காதவர்களுக்குத்தான் நான் உதவுகிறேன். யாரையும் சோம்பேறிக இருக்க நான் ஊக்குவிப்பதில்லை. மேலும் மற்றவர்களுக்கு உதவும்போது நான் பணிவாகத்தான் நடந்து கொள்கிறேன். யாரையும் சிறுமைப்படுத்தவில்லை" என்றார் சபாபதி.

"இல்லை சபாபதி. மற்றவர்கள் முன் கையேந்தி உதவி கேட்பது எவ்வளவு அவமானகரமானது என்பது உங்களுக்குப் புரியவில்லை. நீங்களே இதை உணர்ந்து பார்த்தால்தான் உங்களுக்குப் புரியும். அதனால் உங்களுக்கு நான் ஒரு தண்டனை கொடுக்கிறேன். நீங்கள் கைது செய்யப்பட்டு இரண்டு நாட்களாக உணவில்லாமல் இருக்கிறீர்கள். இந்த அவையில் உள்ள யாராவது ஒருவரிடம் சென்று, 'ஐயா! நான் இரண்டு நாட்களாகச் சாப்பிடவில்லை. பசி என் உயிரை வாட்டுகிறது. ஏதாவது கொடுத்து உதவுங்கள்' என்று பிச்சை கேட்க வேண்டும். அப்படி நீங்கள் கேட்டால் அதற்குப் பிறகு உங்களை விடுதலை செய்து விடுவேன். உங்களிடம் உதவி பெறுபவர்கள் எப்படிக் கூனிக் குறுகி அவமானப்படுகிறார்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும் என்பதுதான் என் நோக்கம்!" என்றான் அரசன்.

சற்று நேரம் மௌனமாக இருந்த சபாபதி, அவையிலிருந்த அனைவரையும் பார்த்து விட்டு அமைச்சரை நோக்கிச் சென்றார்.

"அமைச்சரே! நான் சாப்பிட்டு இரண்டு நாட்களாகி விட்டன. பசியின் கொடுமை தாங்கவில்லை. எனக்கு ஏதாவது கொடுத்து உதவுங்கள்" என்றார் சபாபதி, அமைச்சரைப் பார்த்துக் கைகூப்பியபடியே. 

அமைச்சர் திகைத்துப் போய் என்ன சொல்வதென்று யோசித்துக் கொண்டிருந்தபோதே, அரசர் சைகை காட்ட, ஒரு சேவகன் தன் கையிலிருந்த பழத்தட்டை அமைச்சரிடம் கொடுக்க, அமைச்சர் அந்தத் தட்டை சபாபதியிடம் கொடுத்தார்.

தட்டை வாங்கிக் கொண்ட சபாபதி அரசனைப் பார்க்க "அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து பழங்களை அருந்திப் பசியாறுங்கள் வள்ளலே!" என்றான் அரசன்.

சபாபதி இருக்கையில் அமர்ந்து ஓரிரு பழங்களை அருந்திப் பசி தீர்த்துக் கொண்டதும், "நன்றி அரசே!" என்றார்.

"இப்போது சொல்லுங்கள் வள்ளலே! நீங்கள் அமைச்சரிடம் யாசிக்கும்போது எப்படி உணர்ந்தீர்கள்? இரண்டாவதாக, யாசிப்பதற்கு அமைச்சரை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?" என்றான் அரசன்.

"அரசே! நீங்கள் கேட்ட இரண்டு கேள்விகளுக்குமான பதில்கள் ஒன்றுடன் ன்று தொடர்புடையவை. அமைச்சரிடம் இரந்தபோது நான் பிறருக்குக் கொடுக்கும்போது என் மனதில் தோன்றும் பெருமித உணர்வுதான் தோன்றியது. அதற்குக் காரணம் நான் யாசித்தது தன் மனதில் இருப்பதை மறைத்துப் பேசாத இயல்புடையவர் என்று அறியப்பட்டுள்ள அமைச்சர்பிரானிடம்!" என்றார் சபாபதி அமைச்சரைப் பார்த்து வணங்கியபடியே. 

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 106
இரவு (யாசித்தல்)

குறள் 1054:
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு.

பொருள்: 
உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும் அறியாதவரிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்கு கொடுப்பதைப் போன்ற சிறப்புடையது.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Friday, March 15, 2024

1053. உதவி கேட்க மாட்டேன்!

"நான் யார்கிட்டயும் எப்பவும் எந்த உதவியும் கேக்க மாட்டேன். இது என்னோட கொள்கை" என்றான் மனோகர்.

"அப்படி இருக்க முடிஞ்சா அது பெரிய விஷயம்தான்!" என்றான் அவன் நண்பன் அசோக்.

மனோகரின் கொள்கைக்குச் சோதனையாக அமையும் ஒரு காலம் வந்தது.

மனோகரின் அம்மா உடல்நிலை சரி இல்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அவளுக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றும் அதற்கு இரண்டு லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் சொன்னார்கள்.

மனோகரிடம்  அவ்வளவு பெரிய தொகை இல்லை. புரட்டுவதற்கான வழியும் இல்லை.

"இப்ப என்ன செய்யப் போற? இது மாதிரி சமயத்தில யார்கிட்டேயாவது உதவி கேட்டுத்தானே ஆகணும்? யார்கிட்ட கேட்கப் போற?" என்றான் அசோக்.

மனோகர் சற்று யோசித்து விட்டு "கனகராஜ் சார்கிட்ட!" என்றான்.

சில வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் அது.

அலுவலகத்தில் மனோகருக்குக் கீழே பணியாற்றிய ஒரு உதவியாளன் ஒரு மோசடி செய்து விட்டான். மோசடி கண்டறியப்பட்டு அவன் வேலையிலிருந்து நீக்கப்பட்டான்.

நிறுவனத்தின் பொதுமேலாளர் கனகராஜ் மனோகரைத் தன் அறைக்கு அழைத்தார்.

"மிஸ்டர் மனோகர்! உங்க அசிஸ்டன்ட் பண்ணின தப்புக்கு நீங்களும் பொறுப்பு ஏற்கணும். உங்க கண் முன்னால இந்த மோசடி நடந்திருக்கு. நீங்க அதை கவனிக்காம விட்டிருக்கீங்க. கொஞ்சம் கவனமா இருந்திருந்தா இந்த மோசடியை நீங்க ஆரம்பத்திலேயே தடுத்திருக்கலாம், அல்லது அவனை முன்னாலேயே பிடிச்சிருக்கலாம். ஆடிட்டர்கள் வந்து கண்டுபிடிச்சப்புறம்தான் இந்த மோசடி வெளியில வந்திருக்கு. அதனால உங்களுக்கு தண்டனையா ஒரு இன்க்ரிமென்ட் கட் பண்ணி இருக்கேன்!" என்றார் கனகராஜ்.

"சார்! எனக்கு இதில பொறுப்பு இருக்குன்னு ஒத்துக்கறேன். ஆனா இதுக்காக எனக்கு இன்க்ரிமென்ட் கட் பண்றது நியாயம் இல்லை நான் எந்தத் தப்பும் பண்ணலையே!" என்றான் மனோகர் பணிவுடன்.

"தப்பு பண்ணாட்டாலும் நடந்த தப்புக்குப் பொறுப்பு நீங்கதானே? அதை எப்படி தண்டிக்காம விட முடியும்?"

"சார்! அப்படிப் பார்த்தா..." என்று ஆரம்பித்த மனோகர், "சரி சார். உங்க இஷ்டம்" என்று கூறி அவர் அறையிலிருந்து வெளியேற எத்தனித்தான்.

"ஒரு நிமிஷம்!" என்று அவனை அழைத்த கனகராஜ், "'அப்படிப் பாத்தான்னு' நீங்க என்ன கேக்க வந்தீங்கன்னு எனக்குத் தெரியும்!" என்றார்.

"இல்லை சார்..."

"அப்படிப் பார்த்தா உங்களையெல்லாம் நிர்வகிக்கிற எனக்கும்தானே இதில பொறுப்பு இருக்கணும்? இதுதானே நீங்க கேட்க நினைச்சது?"

மனோகர் மௌனமாக இருந்தான்.

"நீங்க கேட்க நினைச்ச கேள்வி நியாயமானதுதான். அதனாலதான் எனக்கும் ஒரு இன்க்ரிமென்ட் கட் பண்ணனும்னு ஹெட் ஆஃபீசுக்கு ரெகமெண்ட் பண்ணி இருக்கேன்!" என்றார் கனகராஜ்.

மனோகர் அவரை வியப்புடன் பார்த்தான்.

"ஏண்டா, யார்கிட்டேயும் உதவி கேட்க மாட்டேன், அதுதான் என் கொள்கைன்னு சொன்ன. இப்ப உன்னோட பாஸ்கிட்ட உதவி கேக்கறேன்னு சொல்றியே, அதுல உனக்கு அவமானம், வருத்தம் எதுவுமே இல்லையா?" என்றான் அசோக்.

"இல்லை. கனகராஜ் மாதிரி ஒரு உயர்ந்த மனிதர்கிட்ட உதவி கேக்கறதுல எனக்கு சங்கடம் எதுவும் இல்ல. அவர் உதவி செய்யாட்டாலோ, இல்ல எங்கிட்ட எப்படி நீ உதவி கேக்கலாம்னு கோவிச்சுகிட்டாலோ கூட நான் வருத்தப்பட மாட்டேன்!" என்றான் மனோகர். 

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 106
இரவு (யாசித்தல்)

குறள் 1053:
கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோ ரேஎர் உடைத்து.

பொருள்: 
ஒளிப்பு இல்லாத நெஞ்சும், கடைமையுணர்ச்சியும், உள்ளவரின் முன்னே நின்று இரந்து பொருள் கேட்பதும் ஓர் அழகு உடையதாகும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Sunday, March 10, 2024

1052. 'செகண்ட் கசின்'

கதிரேசனின் வீட்டுக்கு தனஞ்சயன் தயங்கிக் கொண்டேதான் சென்றான். அழைப்புமணியை அழுத்தியதும் கதிரேசனின் மனைவி மீனா வந்து கதவைத் திறந்தது தனஞ்சயனின் சங்கடத்தை இன்னும் அதிகப்படுத்தியது.

"வாங்க" என்ற மீனா, "உள்ள வந்து உக்காருங்க. அவரு குளிச்சுக்கிட்டிருக்காரு. வந்துடுவாரு" என்று கூறிவிட்டு உள்ளே சென்றாள். சில நிமிடங்கள் கழித்துக் கையில் காப்பி தம்ளருடன் வந்தாள்.

"எதுக்குங்க இதெல்லாம்?" என்று சங்கடத்துடன் காப்பி தம்ளரைப் பெற்றுக் கொண்டான் தனஞ்சயன்.

அதற்குள் தலையைத் துண்டால் துவட்டியபடியே வந்த கதிரேசன், "வாடா! எங்கே ரொம்ப நாளா ஆளையே காணோம்!" என்று சொல்லி விட்டு, "ஒரு நிமிஷம். இதோ வந்துடறேன்!" என்றபடியே உடையை மாற்றிக் கொள்ள உள்ளே சென்றான்.

தனஞ்சயன் காப்பி குடித்து முடித்தும், "நீங்க பேசிக்கிட்டிருங்க. எனக்கு உள்ளே கொஞ்சம் வேலை இருக்கு" என்று அவனிடம் கூறி விட்டு காப்பி தம்ளரை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள் மீனா.

உடை மாற்றிக் கொண்டு வந்த கதிரேசன் தனஞ்சயனுக்கு எதிரே உட்கார்ந்தான். "அப்புறம் எப்படி இருக்கே?" 

கதிரேசன் தனஞ்சயனின் ஒன்று விட்ட சகோதரன் - இரண்டு விட்ட சகோதரன் என்றும் கூறலாம், ஏனெனில் தனஞ்சயனின் தந்தையும், கதிரேசனின் தந்தையுமே ஒன்று விட்ட சகோதர்ர்கள்தான்! கதிரேசனே பலமுறை தனஞ்சயனை 'செண்ட் கசின்' என்றுதான் குறிப்பிடுவான். 

ஆயினும் இருவருக்குமிடையே உறவைத் தாண்டிய ஒரு நட்பு இருந்தது. அதனால் தன் மற்ற உறவினர்களுடன் நெருக்கமாக இல்லாத தனஞ்சயன் கதிரேசனிடம் மட்டும் நெருக்கமாக இருந்து வந்தான். இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்துக் கொள்வதில்லை என்றாலும் தொலைபேசியில் உரையாடிக் கொள்வார்கள்.

"உன் பிசினஸ் எப்படிப் போய்க்கிட்டிருக்கு?" என்றான் கதிரேசன்.

"உனக்குத்தான் தெரியுமே, கொஞ்ச நாளா எதுவும் சரியா இல்ல. வேலையை விட்டுட்டு ஏன் பிசினஸ் ஆரம்பிச்சேன்னு அம்மா தினமும் புலம்பிக்கிட்டிருக்காங்க."

"கவலைப்படாதே! எல்லாம் சரியாயிடும். எங்கியோ போயிடுவ பார்!" என்றான் கதிரேசன் ஆறுதலாக.

சற்று நேரம் மௌனமாக இருந்த தனஞ்சயன், "கதிரேசா! என்னைத் தப்பா நினைச்சுக்காதே! உங்கிட்ட ஒரு உதவி கேட்டு வந்திருக்கேன்" என்றான்.

"என்ன உதவி?"

"பிசினஸ் சரியா இல்லாததால நிறைய காஷ்ஃப்ளோ ப்ராப்ளம்... இன்னும் ரெண்டு நாளைக்குள்ள என் பையனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டணும். எவ்வளவோ முயற்சி பண்ணியும் என்னால பணம் புரட்ட முடியல!"

 தனஞ்சயன் பேசிக் கொண்டிருக்கும்போதே அவன் கையைப் பிடித்த கதிரேசன், "எவ்வளவு வேணும்னு மட்டும் சொல்லு!" என்றான்.

"முப்பதாயிரம்" என்றான் தனஞ்சயன் பலவீனமான குரலில்.

அதற்குள்ளேயே கைபேசியை எடுத்து இயக்க ஆரம்பித்து விட்ட கதிரேசன், சில விநாடிகளில், "ஜீபே பண்ணிட்டேன். இதுக்காகவா இவ்வளவு தயங்கின? எங்கிட்ட கேக்கறதில உனக்கு ஏன் இவ்வளவு தயக்கம்?" என்றான்.

"இல்லை. நாம நெருக்கமாப் பழகினாலும் உங்கிட்ட இதுவரையிலும் நான் எந்த உதவியும் கேட்டதில்லை!"

"அதனால என்ன? எல்லாத்துக்கும் முதல் தடவைன்னு ஒண்ணு இருக்கு இல்ல?  உனக்கு வேற  எந்த உதவி வேணும்னாலும் தயங்காம எங்கிட்ட கேளு!"

கதிரேசனின் வீட்டை விட்டு வெளியே வந்தபோது, சில நிமிடங்களுக்கு முன் தயக்கத்துடனும், அவமான உணர்வுடனும் உள்ளே வந்த தான் இப்போது மகிழ்ச்சியுடனும், மன நிறைவுடனும், ஒருவகைப் பெருமையுடனும் கூட வெளியேறுவதை நினைத்தபோது தனஞ்சயனுக்கு வியப்பாக இருந்தது.

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 106
இரவு (யாசித்தல்)

குறள் 1052:
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.

பொருள்: 
நாம் கேட்டதைப் பிறர் மனவருத்தம் இல்லாமல் தந்தால், பிச்சை எடுப்பது கூட ஒருவனுக்கு இன்பமே.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Tuesday, March 5, 2024

1051. மாலதியின் யோசனை

 "இந்த மாசம் உங்களுக்கு வருமானமே இல்ல. செலவு நிறைய இருக்கு. என்ன செய்யப் போறோம்?" என்றாள் மாலதி.

'என்ன செய்யப் போறீங்க?' என்று கேட்காமல் 'என்ன செய்யப் போறோம்?' என்று கேட்ட மனைவியின் பொறுப்புணர்ச்சியை மனதுக்குள் வியந்த பாலு, "அதான் யோசிச்சுக்கிட்டிருக்கேன்" என்றான்.

"சுப்பிரமணிகிட்ட கேட்டுப் பாருங்களேன்!"

"சுப்பிரமணிகிட்டயா?"

"நீங்கதானே சொல்லி இருக்கீங்க, உங்க அப்பாதான் அவரைப் படிக்க வச்சாருன்னு? அவரும் இதை ரெண்டு மூணு சொல்லி இருக்காரு. அவரு இப்ப வசதியா இருக்காரு. உங்க அப்பா மேல இருக்கற நன்றிக்காக அவரு உங்களுக்கு உதவி செய்யலாம் இல்ல?"

"அவன் எனக்கு உதவி செய்வான்னு எனக்குத் தோணல. நீ சொல்றதுக்காக வேணும்னா கேட்டுப் பாக்கறேன்" என்று மனைவியிடம் கூறி விட்டுக் கிளம்பினான் பாலு.

வீட்டுக்குத் திரும்பிய பாலுவின் முகத்திலிருந்த சோர்வைப் பார்த்தே என்ன நடந்திருக்கும் என்று புரிந்து கொண்ட மாலதி உள்ளே சென்று ஒரு தம்ளரில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்தாள்.

தண்ணீரை மடமடவென்று குடித்து முடித்த பாலு, "கேட்டேன். கொஞ்சம் கூட தாட்சண்யம் இல்லாம முடியாதுன்னுட்டான்!" என்றான் கோபத்துடன்.

"பரவாயில்ல. வேற எங்கேயாவது கிடைக்கும் கவலைப்படாதீங்க!" என்றாள் மாலதி.

"இப்ப இப்படிச் சொல்ற! அப்புறம் எதுக்கு அவன்கிட்ட போய் உதவி கேக்கச் சொன்ன? எனக்கு எவ்வளவு அவமானமா இருந்தது தெரியுமா?" என்றான் பாலு கோபம் குறையாமல்.

"இதில அவமானப்படறதுக்கு எதுவும் இல்லீங்க. நமக்கு உதவி தேவைப்பட்டது. அவரு உதவி செய்யற நிலைமையில இருக்காரு. அவருக்கு உங்க அப்பா உதவி இருக்கறதால அவர்கிட்ட உதவி கேக்கறது தப்பு இல்லேன்னு நினைச்சோம். அதுவும் கடனாத்தான். உங்க நிலைமை சரியானப்பறம் ரெண்டு மூணு மாசத்தில திருப்பிக் கொடுக்கப் போறீங்க! இந்த நிலைமையில உங்களுக்கு அவர் உதவ மறுத்துட்டாருன்னு அது அவருக்குத்தான் இழுக்கு. உங்களுக்கு இதில எந்த அவமானமும் இல்ல!" என்றாள் மாலதி உறுதியான குரலில்.  

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 106
இரவு (யாசித்தல்)

குறள் 1051:
இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று.

பொருள்: 
ஏதும்‌ இல்லா நிலையில், எவரிடம் ஏற்பது இழிவாகாது என்று தோன்றுகிறதோ அவரிடம் பிச்சை ஏற்கலாம்; அவர் தர மறுத்து, மறைத்தால் பழி அவர்க்கே; இரப்பவர்க்கு அன்று.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Sunday, March 3, 2024

1050. 'குழந்தைக்காக'

 வீட்டுக் கதவு தட்டப்பட்டது.

"சியாமளா வாத்தான் இருக்கும்" என்று தன் கணவன் குமரேசனிடம் கூறியபடியே கதவைத் திறந்தாள் சிந்து.

சியாமளாதான்! பக்கத்து வீட்டில் வசிப்பவள். கையில் ஒரு மூடப்பட்ட பாத்திரத்துடன் நின்று கொண்டிருந்தாள்.

"கேழ்வரகு தோசை செஞ்சேன். உன் குழந்தைக்காக ரெண்டு எடுத்துக்கிட்டு வந்தேன்!" என்றாள் சியாமளா, பாத்திரத்தை சிந்துவிடம் நீட்டியபடியே.

"எதுக்கு அக்கா இதெல்லாம்?" என்றாள் சிந்து சங்கடத்துடன்.

சியாமளா பதில் சொல்லாமல் சிரித்து விட்டுப் பாத்திரத்தை சிந்நுவிடம் கொடுத்து விட்டுக் கிளம்பினாள்.

"எவ்வளவு தோசை வச்சிருக்காங்க?" என்றான் குமரேசன்.

சிந்து பாத்திரத்துக்குள் விரலை விட்டு எண்ணிப் பார்த்து விட்டு, "ஆறு தோசை இருக்கு" என்றாள்.

"குழந்தை ஆறு தோசை சாப்பிடுமா?" என்றான் குமரேசன், இலேசாகச் சிரித்தபடி.

"நம்ம மூணு பேருக்கும் சேர்த்துத்தான் கொடுத்திருக்காங்க. நம்ம நிலைமை தெரிஞ்சு அடிக்கடி இப்படி ஏதாவது கொடுத்துக்கிட்டுத்தான் இருக்காங்க!"

"முன்னெல்லாம் வயசான காலத்தில எல்லாத்தையும் துறந்துட்டு காட்டுக்குப் போயிடுவாங்களாம். அங்கே கிடைக்கிற பழத்தையோ, காயையோ சாப்பிட்டுட்டுக் காலத்தைக் கழிச்சுடுவாங்களாம். அது மாதிரி நம்மால போக முடியல. அதனால சியாமளா மாதிரி நல்லவங்க அவங்க குடிக்கற கஞ்சியையோ, கூழையோ கூட நம்மகிட்ட பகிர்ந்துக்க வேண்டி இருக்கு. நாமளும் வேண்டாம்னு சொல்ற நிலையில இல்ல!" என்றான் குமரேசன், இயலாமையுடன்.

"அப்படியே காட்டுக்குப் போக முடிஞ்சாலும் நம்ம குழந்தையை விட்டுட்டு எப்படிப் போறது?"

"ஒரு பேச்சுக்குச் சொன்னேன். வறுமையை விட்டு அவ்வளவு சுலபமா விலகிட முடியுமா? நாம கஷ்டப்படறதோட மத்தவங்களையும் கஷ்டப்படுத்திக்கிட்டு வாழறதுதான் நம்ம வாழ்க்கைன்னு ஆகிப் போச்சு!" என்றான் குமரேசன், ஒரு தோசையை விண்டு வாயில் போட்டுக் கொண்டபடியே.

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 105
நல்குரவு (வறுமை)

குறள் 1050:
துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.

பொருள்: 
உண்ண, உடுத்த ஏதும் இல்லாதவர் இல்லறத்தை முழுமையாகத் துறந்து விடாதிருப்பது, பிறர் வீட்டில் இருக்கும் உப்புக்கும் கஞ்சித் தண்ணீருக்கும் எமனாம்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Saturday, March 2, 2024

1049. சிரித்தது ஏன்?

யோகி நாதப்பிம்மரின் சொற்பொழிவைக் கேட்டு விட்டுக் கலைந்து சென்று கொண்டிருந்தவர்களில் சிலர் சிறு குழுக்களாகத் தங்களுக்குள் பேசிக் கொண்டு சென்றனர்.

"அருமையாப் பேசினாரு. பெரிய யோகியாச்சே!"

"ஆமாம்.யோகின்னா யாரு, யோகா பண்றவரா? எத்தனையோ பேரு யோகா பண்றாங்களே!"

"யோகாசனம் பண்றவங்கல்லாம் யோகி இல்லை. யோகின்னா விசேஷமான சக்தி உள்ளவங்க."

"விசேஷ சக்தின்னா?"

"விசேஷ சக்தின்னா...தண்ணிக்குள்ள ரொம்ப நேரம் இருக்கறது, ஆணிப்படுக்கையில படுத்துக்கிட்டு இருக்கறது, நெருப்புக்கு நடுவில நின்னு தவம் பண்றது இது மாதிரி எல்லாம்

"நெருப்புக்கு நடுவில நின்னு தவம் பண்ண முடியுமா என்ன?"

"நீ கேள்விப்பட்டதில்ல, அந்தக் காலத்தில முனிவர்கள் எல்லாம் நாலு பக்கமும் நெருப்பு, மேலே சூரியன்னு அஞ்சு நெருப்புகளுக்கு நடுவில நின்னு தவம் பண்ணுவாங்கன்னு?"

"ராஜஸ்தான்ல ஒரு யோகி இருக்காராம். அவரு நெருப்பு மேலேயே படுத்துத் தூங்குவாராம்!"

"உடன்கட்டை ஏறுவது மாதிரியா?"

"உடன்கட்டை ஏறுவதுன்னா நெருப்பில விழுந்து சாகறது. இவரு நெருப்பு மேல படுத்துத் தூங்கிட்டு உடம்பில ஒரு தீக்காயம் கூடப் படாம எழுந்து வந்துடுவாரு."

இதைக் கேட்டதும் கூட்டத்தில் நடந்து வந்து கொண்டிருந்த சந்திரன் தன்னை அறியாமல் களுக்கென்று சிரித்து விட்டான்.

பேசிக் கொண்டு சென்றவர்களில் ஒருவர் சந்திரனைத் திரும்பிப் பார்த்து முறைத்து, "எதுக்கு சிரிக்கிறீங்க? நான் சொல்றது உண்மை!" என்றார்.

"இருக்கலாம்.ஆனா நெருப்பு மேல படுத்துத் தூங்கற அந்த யோகியால பட்டினியோட தூங்க முடியுமான்னு நினைச்சுப் பார்த்தேன். சிரிப்பு வந்தது" என்றான் சந்திரன்.

காலையிலிருந்து எதுவும் சாப்பிடாமல் உடலும் மனமும் சோர்ந்திருந்ததால், மனதைத் திசை திருப்புவதற்காக அந்தச் சொற்பொழிவுக்கு வந்து விட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த சந்திரனுக்குப் பட்டினியால் உடல் சோர்ந்திருந்த நிலையிலும் தன்னால் எப்படிச் சிரிக்க முடிந்தது என்று நினைத்தபோது வியப்பாக இருந்தது.

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 105
நல்குரவு (வறுமை)

குறள் 1049:
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.

பொருள்: 
நெருப்பிற்குள் படுத்து உறங்கவும் முடியும்; ஆனால், பசிக் கொடுமைக்குள் சிறிது கூடக் கண் மூட முடியாது.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...