அதிகாரம் 53 - சுற்றந்தழால்

திருக்குறள்
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 53
சுற்றந்தழால்

521. வாடகைக்கு விடப்படும் 

"இன்னும் எவ்வளவு நாள் இருக்கு?" என்றாள் சுகன்யா

"இன்னும் ஒரு வாரம்தான். அதுக்குள்ள நாம வேற வீடு பாத்துக்கிட்டு, இந்த வீட்டை விட்டுட்டுப் போகணும்" என்றான் அழகேசன்.

"எப்படிங்க? என்ன செய்யப் போறோம்? பள்ளிக் கூடத்தில படிக்கிற ரெண்டு பிள்ளைங்க வேற இருக்காங்க!" என்றாள் சுகன்யா. அவளுக்கு அழுகை வந்து விடும் போல் இருந்தது.

சில மாதங்கள் முன்பு வரை, அவர்கள் வசதியான வாழ்க்கைதான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

சில வருடங்களாகவே தன் தொழில் சரிந்து கொண்டிருப்பதைப் பற்றி அழகேசன் சுகன்யாவிடம் சொல்லவில்லை. நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தாலும், எல்லாம் எப்படியோ சரியாகி விடும் என்று பொதுவாக எல்லா மனிதர்களுக்கும் இருக்கும் குருட்டு நம்பிக்கையில் அழகேசனும் இருந்தான்.

ஆனால், தவிர்க்க முடியாத நிகழ்வு நடந்தே விட்டது. இனியும் தொழிலை நஷ்டத்தில் நடத்த முடியாது என்ற நிலை வந்ததும், தொழிலை மூடுவது என்று முடிவு செய்த பிறகுதான், நிலைமை எந்த அளவுக்கு மோசமாகப் போய் விட்டது என்பது அவனுக்குப் புரிந்தது. 

எல்லாமே போய் விட்டது - குடியிருந்த சொந்த வீடு உட்பட. ஒரு வாரத்தில் வீட்டைக் காலி செய்து, கடன் கொடுத்த வங்கியிடம் ஒப்படைக்க வேண்டும்.

நகைகள் உட்பட அநேகமாக எல்லாப் பொருட்களையும் விற்றாகி விட்டது. வீட்டைக் காலி செய்யும்போது எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள் என்று எதுவுமே இல்லை என்ற நிலை!

"என்ன செய்யப் போறோம்?" என்றாள் சுகன்யா, கவலையுடன்.

'என்ன செய்யப் போறீங்க?' என்று கேட்காமல் "என்ன செய்யப் போறோம்?" என்று கேட்ட மனைவியின் அன்பையும், பொறுப்புப் பகிர்வையும் உணர்ந்து நெகிழ்ந்த அழகேசன், "கவலைப்படாதே! ஏதாவது வேலை பார்த்து குடும்பத்தைக் காப்பாத்திடுவேன்!" என்றான்.

"அது எனக்குத் தெரியும். வீட்டைக் காலி பண்ணிட்டு எங்கே போகப் போறோம்? வாடகைக்கு வீடு பாத்தா, அட்வான்ஸ் கொடுக்கக் கூட நம்மகிட்ட பணம் இல்லையே!" என்றாள் சுகன்யா.

"அதுதான் எனக்கும் புரியல. ஆனா ஒரு நல்ல விஷயம். நம்மகிட்ட சாமான்கள் எதுவும் இல்லை. நம் உடைகளை மட்டும் பெட்டியில வச்சுக்கிட்டுக் கிளம்ப வேண்டியதுதான்" என்று சொல்லிச் சிரித்தான் அழகேசன்.

மனம் உடைந்து விடும் சோகத்தில் இருக்கும் கணவன் தன் வருத்தத்தைக் குறைப்பதற்காகத்தான் இவ்வாறு  நகைச்சுவையாகப் பேசுவது போல் பேசுகிறான் என்ற உணர்வு சுகன்யாவின் துக்கத்தை இன்னும் அதிகரித்தது.

"ஏங்க? நீங்க சொன்ன வாடகையை விட ஆயிரம் ரூபா குறைச்சுக் கேட்டாரு. அதுக்கு ஒத்துக்கிட்டிருக்கலாம் இல்ல? மாட்டேன்னுட்டீங்களே!" என்றாள் சுமதி.

"எதுக்குக் குறைக்கணும்? இந்த ஏரியாவில இந்த மாதிரி வீட்டுக்கு நியாயமான வாடகை என்னவோ அதைத்தானே நான் கேட்டேன்? இவங்க இல்லாட்டா, வேற யாராவது வருவாங்க!" என்றான் அவள் கணவன்.

"என்னவோ போங்க! நல்லவங்களா இருந்தாங்க. ஆயிரம் ரூபாய் குறைக்கச் சொல்லிக் கேட்டதுக்கு, ஐநூறு ரூபாயாவது குறைச்சிருந்தா, அவங்க ஒத்துக்கிட்டிருப்பாங்க!"

"எதுக்குக் குறைக்கணும்?"

"சொல்லு அன்பு! எப்படி இருக்கே?" என்றான் அழகேசன், இயந்திரத்தனமாக.

"நான் நல்லாத்தான் இருக்கேன். நீ என் அத்தை பையன்னுதான் பேரு. ஆனா, நாம பாத்துக்கிட்டே பல மாசங்கள் ஆச்சு. நம்ம சொந்தக்காரங்க கல்யாணம், காது குத்தல் மாதிரி விழாக்கள்ள பாத்தாதான் உண்டு. உன் ஃபோன் நம்பர் கூட எங்கிட்ட இல்ல. முருகன்கிட்டதான் வாங்கினேன்" என்றான் தொலைபேசியின் மறுமுனையில் பேசிய அன்பு.

"ஆமாம் அன்பு. உன் ஃபோன் நம்பர் கூட எங்கிட்ட இல்ல."

"சரி. விஷயத்துக்கு வரேன். உனக்கு தொழில்ல ஏதோ பிரச்னை அதனால உன் வீட்டை வித்துட்டே, வாடகைக்கு வீடு பாத்துக்கிட்டிருக்கேன்னு கேள்விப்பட்டேன்."

"ஆமாம்..."

"நீ தப்பா நினைச்சுக்கலேன்னா, நான் ஒண்ணு சொல்லுவேன். என் வீடு ஒண்ணு காலியா இருக்கு. அதை நான் வாடகைக்கு விட வேண்டாம்னுதான் இருந்தேன். நீ இப்போதைக்கு அந்த வீட்டில இருந்துக்கலாம்."

"ரொம்ப நன்றி அன்பு. ஆனா...."

"எனக்குத் தெரியும் அழகேசா! நீ இப்போதைக்கு வாடகை எதுவும் கொடுக்க வேண்டாம். அஞ்சாறு மாசம் கழிச்சு உன் நிலைமை சரியானப்பறம்,  வாடகையைப் பத்திப் பேசலாம். இல்ல, அப்ப நீ வேற வீடு பாத்துக்கிட்டுப் போறதானாலும் சரிதான்!"

"அன்பு! எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. இது ஒரு பெரிய உதவி. நான் சீக்கிரமே ஏதாவது ஒரு வேலையில சேர்ந்துடுவேன். அப்புறம் உனக்கு மொத்த வாடகையையும் கொஞ்சம் கொஞ்சமாக் கொடுத்துடறேன்" என்றான் அழகேசன், தழுதழுத்த குரலில்.

"அதைப் பத்தி இப்ப என்ன? சும்மா போட்டு வச்சிருக்கிற வீட்டைத்தானே உனக்குக் கொடுக்கப் போறேன்! நீ இப்பவே என் வீட்டுக்கு வந்து சாவியை வாங்கிக்க!" என்று சொல்லித் தொலைபேசி அழைப்பை முடித்தான் அன்பு.

"ஏங்க, வீட்டை வாடகைக்குக் கேட்டவங்க, வாடகையில ஆயிரம் ரூபாய் குறைச்சுக்கச் சொல்லிக் கேட்டப்ப, முடியாதுன்னு சொல்லி அவங்களை அனுப்பிச்சுட்டீங்க. இப்ப, உங்க அத்தை பையனுக்கு வீட்டை சும்மாவே கொடுக்கறீங்க! வாடகைக்கு விடாம காலியா இருக்கிற வீடுன்னு வேற சொல்றீங்க!" என்றாள் சுமதி.

"அதான் நீயே சொல்லிட்டியே, என் அத்தை பையனுக்குக் கொடுக்கிறேன்னு! ஒத்தருக்கு ஏதாவது கஷ்டம் வந்தா, அவங்க சொந்தக்காரங்கதானே உதவி செய்யணும்? அவனுக்கு உதவி செய்யறதுக்காக நாம வாடகையை இழக்கறோம்னு தெரிஞ்சா, அவன் இந்த உதவியை ஏத்துக்க மாட்டான். அதனாலதான், வாடகைக்கு விடறதா இல்லேன்னு சொன்னேன்!" என்றான் அன்பு.

குறள் 521:
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.

பொருள்:
ஒருவருக்கு வறுமை வந்த நேரத்திலும், அவரிடம் பழைய உறவைப் பாராட்டும் பண்பு, சுற்றத்தாரிடம் மட்டுமே உண்டு.

522. உறவுகள் வாழ்க!

ராஜு என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் வெள்ளிவிழா ஆண்டு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.

நிறுவனத்தின் மூத்த ஊழியர்கள், நிறுவனத்தின் நீண்டகால வாடிக்கையாளர்கள், இன்னும் நிறுவன வளர்ச்சிக்கு உதவிய பலர் ஆகியோருக்கு நிர்வாக இயக்குனர் ராஜு பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.

நிறுவனத்தைச் சிறிய அளவில் துவங்கி, தன் உழைப்பாலும் திறமையாலும் அதை ஒரு பெரிய நிறுவனமாக வளர்த்து நடத்திக் கொண்டிருக்கும் ராஜுவைப் பாராட்டிப் பலரும் பேசினர்.

கடைசியில் ராஜு பேசினார்.

"இந்த நிறுவனம் 25 வருடங்கள் வெற்றிகரமாகச் செயல்படவும், வளர்ச்சி பெறவும் உதவிய ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என்று சிலரை இந்த விழாவில் கௌரவிக்கும் வாய்ப்புக் கிடைத்தது பற்றி எனக்கு மகிழ்ச்சி. 

"ஆனால், இந்த நிறுவனத்தின் செயல்பாட்டுக்கும், வளர்ச்சிக்கும் பல விதங்களிலும் உதவிய வேறு பலரை என்னால் கௌரவிக்க முடியவில்லை. அவர்கள் இரண்டு வகை. ஒரு வகை, வங்கி, அரசுத்துறைகள் போன்றவை. இவை சார்பாகத் தனி மனிதர்களை கௌரவிப்பது பொருத்தமாக இருக்காது. இரண்டாவது வகை, என் உறவினர்கள்."

அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் சற்று வியப்புடன் அவனைப் பார்த்தனர். வெற்றி அடைந்த எல்லோருமே தங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைக் குறிப்பிட்டுப் பேசுவது இயல்புதான். ஆனால், இவர் உறவினர்கள் என்று யாரைச் சொல்கிறார் என்பதை அறிய ஆர்வமாக இருந்தனர்.

"உறவினர்கள் என்று நான் குறிப்பிடுவது என் குடும்ப உறுப்பினர்களை மட்டுமல்ல. என் வழியிலும், என் மனைவி வழியிலுமான பல சொந்தக்காரர்களையும்தான். 

"சொந்தத் தொழில் செய்யத் தீர்மானித்து, இந்த நிறுவனத்தைச் சிறிய அளவில் துவக்குவதற்கு முன், நான் ஒரு பெரிய நிறுவனத்தில் நல்ல வேலையில் இருந்தேன். வாழ்க்கையில் செட்டில் ஆவது என்று சொல்வார்களே, அது போன்ற ஒரு நிலைமை. எனக்குத் திருமணமாகி, ஐந்து வயதில் ஒரு மகன் இருந்தான். சொந்த வீடோ, வேறு சொத்துக்களோ இல்லை. 

"அந்த நல்ல வேலையை விட்டு விட்டுக் கையில் இருந்த சேமிப்பை முதலீடாகப் போட்டு, இந்த நிறுவனத்தைத் துவக்கினேன். என் மனைவி, அம்மா ஆகியோருக்கு என் முடிவில் உடன்பாடில்லை. கடுமையாக எதிர்த்தார்கள். இது இயல்புதான். 

"ஆனால், வேடிக்கை என்னவென்றால், என் முடிவு பற்றித் தெரிந்த வேறு பல உறவினர்கள் கூட இதை எதிர்த்தனர். அதற்கு முன்பு வரை என் வீட்டுக்கு அதிகம் வராத சில உறவினர்கள் அப்போது என் வீட்டுக்கு வந்து, என் முடிவை மாற்றிக் கொள்ளும்படி எனக்கு ஆலோசனை கூறினார்கள்.

"இது போல் நல்ல வேலையை விட்டு விட்டுத் தொழில் துவங்கிய சிலர், ஓரிரு வருடங்களிலேயே நடுத்தெருவுக்கு வந்த கதைகளைச் சிலர் கூறினார்கள். அவர்கள் மீதெல்லாம் எனக்குக் கோபம்தான் வந்தது. எனக்கு யோசனை சொல்ல இவர்கள் யார் என்று நினைத்தேன்.

"நான் தொழில் தொடங்கிய ஒரு சில வருடங்களில், தொழிலில் பல நெருக்கடிகள் ஏற்பட்டன. தொழிலை மூடி விட்டு ஏதாவது ஒரு வேலைக்குப் போக வேண்டியதுதான் என்று கூட நினைத்தேன். ஆனால், என் மனைவியும் அம்மாவும் என்னை ஊக்கப்படுத்தினார்கள். 'தன்னம்பிக்கையோடதானே இதை ஆரம்பிச்சீங்க? தைரியமா தொடர்ந்து நடத்துங்க. உங்களால எல்லா பிரச்னைகளையும் சமாளிக்க முடியும்' என்றாள் என் மனைவி. 

"என் மனைவியும், அம்மாவும் என்னை ஊக்கப்படுத்தியதில் வியப்பில்லை. ஆனால், நான் தொழில் துவங்கியபோது வேண்டாம் என்று எனக்கு யோசனை கூறிய என் உறவினர்கள் கூட, அந்த சந்தர்ப்பத்தில் எனக்கு தைரியம் கொடுத்தனர். 

"என் தொழிலில் பிரச்னைகள் இருப்பதாகக் கேள்விப்பட்டதும், 'நான் அப்பவே சொன்னேனே, கேட்டியா?' என்று சொல்லாமல், 'எல்லாம் சரியாயிடும்' என்று எனக்கு தைரியம் சொன்னார்கள். பிசினஸ்னா, ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும்' என்று சிலர் தத்துவம் கூறி என்னை ஊக்கப்படுத்தினார்கள்!

"சொந்தத் தொழில் ஆரம்பித்து நடுத்தெருவுக்கு வந்தவர்களின் கதைகளை முன்பு கூறியவர்கள், தொழிலில் பல சரிவுகளைச் சந்தித்து முன்னேறியவர்களின் கதைகளை இப்போது பகிர்ந்து கொண்டார்கள்! 

"துவக்கத்தில் அவர்கள் எனக்கு ஆலோசனை கூறியபோது, எனக்கு ஆலோசனை சொல்ல இவர்கள் யார் என்று கோபமடைந்த எனக்கு, அவர்கள் என் மீது இருந்த அக்கறையினால்தான் இப்படிக் கூறினார்கள் என்பது அப்போதுதான் புரிந்தது. என் மீது அன்பும் அக்கறையும் கொண்டுள்ள அந்த உறவினர்களுக்கும் என் நன்றியை இப்போது தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க உறவுகள்!"

குறள் 522:
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்.

பொருள்:
அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும்.

523. காப்பி குடிக்கலாமா?

"காப்பி குடிக்கிறீங்களா?" என்றாள் மாலா.

"கொஞ்ச நேரம் முன்னாலதானே குடிச்சேன்?" என்ற நாதன், "ஆமாம். முன்னே எல்லாம் நான் காப்பி கேட்டா, 'எத்தனை தடவை காப்பி போடறது உங்களுக்கு?' ன்னு அலுத்துப்ப. இப்ப, நீயே காப்பி வேணுமான்னு கேக்கற!" என்றான்.

"முன்னெல்லாம் வீட்டில குழந்தைங்க இருப்பாங்க. நிறைய வேலை இருக்கும். அதனால அலுப்பா இருக்கும்" என்றாள் மாலா. 

நாதன் மௌனமாக இருந்தான். சற்று நேரம் கழித்து, "ஏதாவது சினிமாவுக்குப் போகலாமா?" என்றான்.

"போன வாரம்தானே போயிட்டு வந்தோம்? இப்பதான் டிவியிலேயே நிறைய சினிமா வருதே! தியேட்டருக்குப் போய்ப் பாக்கணுங்கற ஆசையே எனக்கு இல்லை. உங்களுக்குப் போகணும்னா சொல்லுங்க. போயிட்டு வரலாம்."

"இல்லை. எனக்கு ஆர்வம் இல்லை. உனக்காகத்தான் கேட்டேன்!"

சில நிமிடங்களுக்குப் பிறகு, மாலா கையில் காப்பியுடன் வந்தாள். "இந்தாங்க காப்பி!"

"அதான் வேணாம்னுசொன்னேனே! உனக்குக் குடிக்கணும் போல இருந்ததா?" என்றான் நாதன், காப்பியை வாங்கிக் கொண்டே.

"இல்ல. சும்மா உக்காந்துக்கிட்டிருக்கறது அலுப்பா இருந்தது. அதுதான் புதுசா டிகாக்‌ஷன் போட்டு காப்பி போட்டேன்."

"வேலை செய்யறதுதான் அலுப்பா இருக்கும். நீ என்னடான்னா, அலுப்பா இருந்ததுங்கறதுக்காக வேலை செஞ்சேன்னு சொல்றே!" என்றான் நாதன், சிரித்தபடி.

"என்ன செய்யறது? சில சமயம் மனசில அலுப்போட உக்காந்திருக்கறதை விட, உடல் அலுப்பே தேவலைன்னு தோணுது!"

நாதனின் முகத்தில் சிரிப்பு மறைந்து, ஒரு இறுக்கம் வந்து ஒட்டிக் கொண்டது.

"என்ன செய்யறது! பொண்ணு அமெரிக்கா, பையன் ஆஸ்திரேலியான்னு ஆளுக்கொரு மூலையில போய் உக்காந்துக்கிட்டாங்க. அவங்களுக்கு நேரம் இருக்கும்போது ஃபோன் பண்ணுவாங்க. அப்ப, கொஞ்ச நேரம் அவங்களோட பேசி சந்தோஷப்பட்டுக்கறோம். மத்த நேரத்தில எல்லாம் மோட்டுவளையைப் பாத்துக்கிட்டு உக்காந்திருக்கோம். அதனால மனசு அலுத்துப் போகுது" என்றான் நாதன்.

"இப்படி இருக்க வேண்டியதில்லையே! எனக்கு சொந்தம்னு யாரும் கிடையாது. உங்களுக்கு நிறைய சொந்தக்காரங்க இருக்காங்க. ஆனா, நீங்க அவங்க யாரையும் நெருங்க விடல. அதனால, எல்லோரோடயும் உறவு விட்டுப் போச்சு. நெருக்கம் இருந்திருந்தா, அவங்க நம்ம வீட்டுக்கு வரது. நாம அவங்க வீட்டுக்குப் போறது, ஃபோன்ல பேசறதுன்னு நம் வாழ்க்கையில கொஞ்சம் சுவாரசியம் இருந்திருக்கும்" என்றாள் மாலா, குற்றம் சாட்டும் குரலில்.

"என் சொந்தக்காரங்கள்ளாம் நம் அளவுக்கு வசதியானவங்க இல்ல. அதனால, அவங்ககிட்ட நெருக்கமா இருந்தா, நம்மை உதவி கேட்டுத் தொந்தரவு பண்ணுவாங்கன்னு நினைச்சு, எல்லார்கிட்டேயிருந்தும் ஒதுங்கி இருந்தேன். இப்ப நம்ம வாழ்க்கை வெறுமையா இருக்கறப்பதான், சொந்தக்காரங்களோட நெருக்கமா இருந்திருந்தா நல்லா இருந்திருக்குமேன்னு தோணுது. இப்ப நான் யார்கிட்டயாவது போய்ப் பேசினா, அவங்க ஆர்வம் காட்ட மாட்டேங்கறாங்க!" என்றான் நாதன், வருத்தத்துடன்.

"அடுத்த வாரம் உங்க சித்தப்பா பெண்ணோட பையனுக்குக் கல்யாணம்னு பத்திரிகை அனுப்பி இருக்காங்க. வெளியூர்னாலும், அதுக்குப் போயிட்டு வரலாம். அங்கே சில சொந்தக்காரங்களோட நெருக்கமா ஆகிற வாய்ப்பு கிடைக்கலாம்!" என்றாள் மாலா. 

குறள் 523:
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.

பொருள்:
சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை ஒரு குளப்பரப்பு கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது.

524. நேரம் இல்லை, ஆயினும்...

"ஃபிளைட்டுக்கு இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு?" என்றார் அருள்மொழி.

"இன்னும் ஒரு மணி நேரத்தில கிளம்பினா சரியா இருக்கும்" என்றார் அவருடைய தனிச் செயலர் முத்தையா.

"அப்படின்னா உடனே கிளம்பிடலாம்! அங்கே போயிட்டுப் போகணும் இல்ல?" என்றார் அருள்மொழி, 

"சார்! அவங்க வீடு ஏர்போர்ட்டுக்கு எதிர்ப் பக்கம், அங்கே போயிட்டு ஏர்போர்ட் போக லேட் ஆயிடும்!" என்றார் முத்தையா.

"அதான் ஒரு மணி நேரம் இருக்கே! போக இருபது நிமிஷம், வர இருபது நிமிஷம். அங்கே பத்து நிமிஷம் இருந்தாப் போதும்."

காரை அருகிலிருந்த தெருவில் நிறுத்தி விட்டு, அந்தச் சிறிய தெருவில் இருந்த அந்த வீட்டுக்கு இருவரும் நடந்து சென்றார்கள்.

அழைப்பு மணி அடித்ததும், கதவைத் திறந்த அந்தப் பெரியவர், "அட அருள்! வா! எப்ப வந்த கோயம்புத்தூருக்கு?" என்று அருள்மொழியை வரவேற்று விட்டு, முத்தையாவைப் பார்த்து, "எப்படி இருக்கீங்க முத்தையா!" என்றார்.

"நல்லா இருக்கேன் சார்!" என்று சொல்லும்போதே முத்தையாவின் கண்கள் அனிச்சையாகக் கைக்கடிகாரத்தைப் பார்த்தன.

"எப்ப வந்தேனா? திரும்பிப் போய்க்கிட்டிருக்கேன். அஞ்சு நிமிஷம்தான் இருக்க முடியும். காப்பி, டீ எதுவும் வேண்டாம். ஃபிளைட்டுக்கு நேரம் ஆச்சு. அடிச்சு புடிச்சுகிட்டு வந்திருக்கேன் - உங்க எல்லாரையும் பாத்துட்டுப் போகணும்னுதான்!" என்றபடியே உள்ளே நுழைந்த அருள்மொழி, முத்தையாவைப் பார்த்து, "சரியா அஞ்சு நிமிஷம்தான்!" என்றார். 

அருள்மொழி ஐந்து நிமிடம் அவர்களிடம் உரையாடி விட்டு, வெளியே வந்து, பரபரப்புடன் இருந்த முத்தையாவுடன் விரைவாக நடந்து வந்து காரில் ஏறிக் கொண்டார்.

காரில் ஏறி அமர்ந்ததும் கைக்கடிகாரத்தைப் பார்த்த அருள்மொழி, "போயிடலாம் இல்ல?" என்றார் முத்தையாவிடம்.

அரை நம்பிக்கையுடன் தலையாட்டிய முத்தையா, "சார்! எந்த ஊருக்குப் போனாலும் அங்கே இருக்கற உங்க சொந்தக்காரங்க வீட்டுக்குப் போய்ட்டுத்தான் வருவீங்க. ஆனா, இன்னிக்கு நேரம் ரொம்ப டைட்டா இருந்தது. அதான் கிளம்பும்போதே சொன்னேன்!" என்றார், தயக்கத்துடன்.

"எங்க குடும்பத்தில நான் ஒரு தொழிலதிபரா ஆகி வசதியா இருக்கேன். ஆனா, என் சொந்தக்காரங்க எல்லாரும் சாதாரண நிலைமையிலதான் இருக்காங்க. ஆனாலும், அவங்க எல்லாரோடயும் எப்பவுமே நெருக்கமா இருக்கணும்னு நான் நினைக்கிறேன். அவங்க என்னோட பழகத் தயங்கலாம். அந்தத் தயக்கத்தைப் போக்கத்தான், நான் அவங்க வீட்டுக்கெல்லாம் அடிக்கடி போய், எங்க உறவை வலுவா வச்சுக்கிட்டிருக்கேன்!" என்றார் அருள்மொழி. 

குறள் 524:
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.

பொருள்:
தன் சுற்றத்தார் அன்புடன் தன்னைச் சூழ்ந்து நிற்க வாழும் வாழ்க்கையே ஒருவன் பெற்ற செல்வத்தினால் கிடைத்திடும் பயனாகும்.

525. பணக்கார உறவினர்கள்

கல்யாண மண்டப வாசலில் கார் வந்து நின்றதும், உள்ளிருந்து பலரும் ஓடி வந்து காரிலிருந்து இறங்கிய மூர்த்தியையும், அவர் மனைவி மீனாட்சியையும் மரியாதையுடன் வரவேற்று, உள்ளே அழைத்துச் சென்று, மண்டபத்தில் அமர வைத்தனர்.

"வாங்க டிஃபன் சாப்பிட்டுட்டு வந்துடலாம்" என்று பணிவுடன் அவர்கள் இருவரையும் சாப்பாட்டு அறைக்கு அழைத்துச் சென்றார் ஒருவர். 

யாரும் உட்காராத ஒரு வரிசையில் அவர்களை உட்கார வைத்து, பரிமாறுபவர்களை அழைத்து, "இங்கே டிஃபன் போடுங்க" என்றார்.

தனியாக உட்கார வைக்கப்பட்டிருப்பவர்கள் முக்கியமானவர்கள் என்று உணர்ந்தது போல் பரிமாறுபவர்கள், சிற்றுண்டி வாளிகளை எடுத்துக் கொண்டு விரைந்து வந்தனர்.

அவர்களை அழைத்து வந்தவர் அங்கேயே நின்று, அவர்களுக்கு எல்லாம் முறையாகப் பரிமாறப்படச் செய்து கொண்டிருந்தார்.

"நீங்க போய் வேலையைப் பாருங்க. நாங்க சாப்பிட்டுக்கறோம்" என்று மூர்த்தி சொன்னபோதும், "பரவாயில்லை. இருக்கட்டும்" என்றார் அவர்.

அவர்கள் சிற்றுண்டி அருந்தி கொண்டிருந்தபோதே, ஒவ்வொருவராக ஐந்தாறு பேர் அங்கே வந்து, மூர்த்தியை விசாரித்து விட்டுப் போனார்கள்.

மணப்பெண்ணின் தந்தை வேலுவும் வந்தார்.

"வாப்பா மூர்த்தி! ரொம்ப சந்தோஷம்!" என்றார் வேலு.

"நீ பெண்ணோட அப்பா. நீ ஏன் கல்யாண வேலையை விட்டுட்டு இங்க வரே?" என்று மூர்த்தி கேட்டாலும், தனக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் பற்றி அவர் மகிழ்ச்சியடைந்தது அவர் முகத்தில் தெரிந்தது.

"இருக்கட்டும்!" என்றார் வேலு.

"சிவராமன் வந்துட்டானா?" என்றார் மூர்த்தி.

"வந்துட்டான். டிஃபன் சாப்பிட்டுட்டு மண்டபத்தில உக்காந்திருக்கான்" என்றார் வேலு.

"சரி, நீ போய் உன் வேலையைப் பாரு" என்று மூர்த்தி மீண்டும் சொன்னதும், "நீ வந்ததில ரொம்ப சந்தோஷம். முகூர்த்தம் முடிஞ்சதும் பாக்கறேன்" என்று சொல்லி விட்டு அகன்றார் வேலு.

அவர் சென்றதும், "ஏன் சிவராமன் வந்துட்டாரான்னு கேட்டீங்க?" என்றார் மீனாட்சி, மூர்த்திக்கு மட்டும் கேட்கும் குரலில்.

"உனக்குத் தெரியாதா என்ன? வேலுவோட சொந்தக்காரங்கள்ள, நானும் சிவராமனும் மட்டும்தான் வசதியானவங்க. மத்தவங்கள்ளாம் சாதாரண நிலையிலதான் இருக்காங்க. நாங்க ரெண்டு பேருமே, எங்க சொந்தக்காரங்களை மதிச்சு, அவங்க வீட்டு விசேஷங்களுக்குத் தவறாம ஆஜராயிடுவோம். அதனால, சிவராமனும் வருவான்னு தெரியும். வந்துட்டானான்னு தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன்" என்றார் மூர்த்தி.

திருமண நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு வந்ததும்,"ஒரு விஷயம் கவனிச்சேன். உங்க சொந்தக்காரங்க எல்லாரும் உங்ககிட்ட ரொம்ப மரியாதையாத்தான் நடந்துக்கிட்டாங்க. ஆனா, சிவராமன்கிட்டதான் அவங்க ரொம்ப நெருக்கமா இருக்கற மாதிரி தெரிஞ்சுது. இதை நீங்க கவனிச்சிருக்கீங்களா?" என்றாள் மீனாட்சி.

"ஆமாம். நான் கூட கவனிச்சிருக்கேன். என் சொந்தக்காரங்க வசதிக் குறைவானவங்களா இருந்தாலும், அவங்க வீட்டு நிகழ்ச்சிகளுக்கெல்லாம் தவறாம போறேன். அவங்களுக்கு உதவியா இருக்கட்டுமேன்னு, ஏதாவது ஒரு பொருளைப் பரிசாக் கொடுக்காம, ஒரு கணிசமான தொகைக்கு கிஃப்ட் செக் கொடுப்பேன். நம் வீட்டு நிகழ்ச்சிகளுக்கும் எல்லாரையும் கூப்பிட்டு, நல்லபடியா உபசரிச்சு அனுப்பறேன். 

"அதைத் தவிர, யாராவது எங்கிட்ட ஏதாவது உதவி கேட்டா, இல்லேன்னு சொல்லாம செய்வேன். சிவராமனும் அப்படித்தான்னு நினைக்கறேன். ஆனாலும், சிவராமன்கிட்ட அவங்க கொஞ்சம் கூடுதலாவே நெருக்கமா இருக்கறதாத்தான் தோணுது. ஒரு தேர்தல்ல நாங்க ரெண்டு பேரும் போட்டி போட்டா, என் சொந்தக்காரங்ள்ளாம் சிவராமனுக்குத்தான் ஓட்டுப் போடுவாங்கன்னு நினைக்கறேன்! ஆனா, இந்தக் கூடுதல் நெருக்கத்துக்குக் காரணம் என்னன்னு எனக்குப் புரியல. ஒருவேளை, சிவராமன்கிட்ட ஏதாவது கவர்ச்சி இருக்கோ என்னவோ!" என்றார் மூர்த்தி சிரித்துக் கொண்டே.

'அவர் எல்லார்கிட்டேயும் இனிமையாப் பேசறாரு. நீங்க எங்கிட்டயும், நம்ம புள்ளைகள்கிட்டேயுமே இனிமையாப் பேசறதில்லையே! சொந்தக்காரங்ககிட்ட எப்படிப் பேசுவீங்க? இது உங்களுக்குப் புரியப் போறதும் இல்லை!' என்று நினைத்துக் கொண்டாள் மீனாட்சி. 

குறள் 525:
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.

பொருள்:
ஒருவன் தன் சுற்றத்தார்க்கு வேண்டியதைக் கொடுத்தும், அவர்களிடம் இனிய சொற்களைச் சொல்லியும் வருவான் என்றால், பல்வகைச் சுற்றத்தாராலும் அவன் சூழப்படுவான்.

526. பிரபுவின் கோபம்!

"பிரபு அவர் பெயருக்கு ஏற்றபடி ஒரு தர்மப் பிரபுதான். எல்லாருக்கும் நிறைய உதவி செய்வாரு - குறிப்பா, அவரோட சொந்தக்காரங்களுக்கு. அதனாலதான், அவர் சொந்தக்காரங்க எல்லாம் அவரைத் தங்கள் குடும்ப உறுப்பினர்கள்ள ஒத்தராகவே நினைக்கிறாங்க."

"ஆமாம். நானும் பாத்திருக்கேன். அவர் வீட்டுக்கு சொந்தக்காரங்க அடிக்கடி வரதும், இவர் அவங்க வீட்டுக்குப் போறதும்...ம்... பணம் இருந்தா, எல்லாரும் கால்ல வந்து விழத்தான் விழுவாங்க!"

"சேச்சே! அப்படி இல்ல. பணக்காரங்களுக்குப் பொதுவா கிடைக்கிற மரியாதை வேற. எனக்குக் கூடப் பணக்கார சொந்தங்கள் இருக்காங்க. அவங்களை எப்பவாவது பாத்தா. சிரிச்சுட்டு 'எப்படி இருக்கீங்க?'ன்னு ஒப்புக்குக் கேப்பேன். ஆனா, அவங்க மேல அன்போ மதிப்போ வராது."

"நீ சொல்றது சரிதான். பிரபு எல்லோருக்கும் உதவி செய்யறார்ங்கறதை நான் ஒத்துக்கறேன். ஆனா அவர் ரொம்ப கோபக்காரர்னு கேள்விப்பட்டிருக்கேன். அவர் சொந்தக்காரங்க அவர் கோபத்தை சகிச்சுக்கிட்டிருக்காங்கன்னா, அதுக்குக் காரணம் அவர்கிட்ட இருக்கற பணம்தானே?"

"நீ சொல்றது சரியில்ல. ஒத்தரை சகிச்சுக்கிட்டு இருக்கறது வேற, ஒத்தர்கிட்ட அன்பா இருக்கறது வேற. ஆஃபீஸ்ல நம் மேலதிகாரி எப்படி இருந்தாலும், நாம அவரை சகிச்சுக்கிட்டுத்தான் இருக்கணும். ஆனா, அவர் தன் அதிகாரத்தைக் காட்டாம, நம்மை மதிச்சு நடந்துக்கிட்டா, நமக்கு அவர்கிட்ட அன்பும் மதிப்பும் உண்டாகும் இல்ல? பிரபுவோட சொந்தக்காரங்க அவர்கிட்ட வச்சுருக்கறது அப்படிப்பட்ட அன்புதான்."

"நீ சொன்ன உதாரணத்துக்கே வரேன். நம்ம மேலதிகாரி கோபக்காரரா இருந்தா, அவர் மேல நமக்கு அன்போ மதிப்போ இருக்குமா? வேற வழியில்லாமதானே, அவரை சகிச்சுக்கிட்டு இருப்போம்? பிரபுவோட சொந்தக்காங்க அவரை சகிச்சுக்கிட்டிருக்கறதும் அப்படித்தான்னு நினைக்கறேன்."

"பிரபு கோபக்காரர்னு எப்படி சொல்ற? நான் பார்த்த வரையில, அவர் எல்லார்கிட்டேயும் சிரிச்சுப் பேசிக்கிட்டுத்தானே இருக்காரு?"

"நான் கேள்விப்பட்ட ஒரு விஷயத்தைச் சொல்றேன். ஒரு தடவை, ஒரு அரசு அலுவலகத்தில, அவருக்கு ஏதோ ஒரு அப்ருவல் கிடைக்கறதில தாமதமாச்சுங்கறதுக்காக, அந்த அலுவலகத்துக்குப் போய், எல்லார் முன்னாலேயும், ஒரு அரசு அதிகாரியைக் கோபமாக் கத்தி இருக்காரு. அவர் போட்ட கூச்சல்ல, அலுவலகத்தில இருந்த எல்லாரும் அங்கே வந்துட்டாங்களாம். அதுவலகத்துக்கு வேலையா வந்திருந்த பொதுமக்களும் கூடிட்டாங்களாம். அவர் போட்ட கூச்சலுக்கு பயந்தே, அந்த அதிகாரி அந்த அப்ரூவலை உடனே கொடுக்கறதா சொல்லி, அவரைச் சமாதானப்படுத்தி அனுப்பிட்டு, சொன்னபடியே ரெண்டு மூணு நாள்ள அப்ருவல் கொடுத்துட்டாராம். அவர் கோபம் அவ்வளவு புகழ் பெற்றது!"

"நீ சொல்ற சம்பவத்தைப் பத்தி நானும் கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, அதோட முழு உண்மை உனக்குத் தெரியல. அந்த அப்ரூவலைக் கொடுக்க, அந்த அதிகாரி லஞ்சம் கேட்டிருக்காரு. அதுக்காகத்தான் பிரபு கோபப்பட்டு கத்தி இருக்காரு. சொல்லப் போனா, அந்த அதிகாரி லஞ்சம் கேட்டதை எல்லாருக்கும் வெளிப்படுத்தி, அவரை முறையா நடக்க வைக்கத்தான், பிரபு அப்படி ஒரு சீனை உருவாக்கினார்னு கூட சில பேர் சொன்னாங்க. அதனால, பிரபு கோபக்காரர் இல்ல. தாராளமா உதவி செய்யறவராகவும், கோபம் இல்லாதவராகவும், எல்லார்கிட்டேயும் அன்பானவராகவும் இருக்கறதாலதான், அவரோட உறவுக்காரர்கள் அவர்கிட்ட அன்பா இருக்காங்களே தவிர, அவரோட பணத்துக்காக இல்ல!" 

குறள் 526:
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல்.

பொருள்:
பெரிய கொடையாளியாகவும், சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால், அவனைப் போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை.. 

                         527. கோவில் பிரசாதம்

பெருமாள் வீட்டுக்கு வந்தபோது, அவன் மனைவி சீதா அவன் வரவை எதிர்பார்த்து வாசலிலேயே அமர்ந்திருந்தாள்.

பெருமாளின் சோர்வான முகத்தைப் பார்த்ததுமே, அவளுக்கு விஷயம் தெரிந்து விட்டது.

'பெருமாளுக்கு இன்று வருமானம் எதுவும் கிடைக்கவில்லை.'

வீட்டுக்குள் வந்து சோர்வுடன் அமர்ந்த பெருமாளைப் பார்த்து, "காப்பி, டீ ஏதாவது குடிச்சீங்களா?" என்றாள் சீதா.

நாள் முழுவதும் பட்டினியாக இருந்து விட்டு, இரவு உணவுக்கும் வழியில்லை என்றபோதும். தன் மீது அக்கறை காட்டும் மனைவியைப் பார்த்ததும், பெருமாளுக்கு அழுகை வந்து விடும் போல் இருந்தது.

"கீதா தூங்கிட்டாளா?" என்ற பெருமாள், சீதா தலையை ஆட்டியதும், "பட்டினியாவே தூங்கிட்டாளா?" என்றாள்.

"அழகம்மை வீட்டுக்கு விளையாடப் போனப்ப, அழகம்மை அவளுக்கு ரெண்டு தோசை கொடுத்தாங்களாம்!" என்ற சீதா, "அவங்களுக்கு நம்ம நிலைமை தெரியுமே! நாம வாங்கிக்க மாட்டோம்னு தெரியும். இல்லேன்னா, நமக்கும் ஏதாவது சாப்பாடு கொடுத்தனுப்பி இருப்பாங்க!" என்றாள், பெருமூச்சுடன்.

சட்டென்று எழுந்த பெருமாள், "ஒரு பாத்திரம் இருந்தா கொடு" என்றான்.

ரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து அவன் பெருமாள் கோவிலை அடைந்தபோது, அர்ச்சகர் சடகோபன் சன்னிதியை மூடும் தருவாயில் இருந்தார்.

பெருமாளைப் பார்த்ததும், "அட! பெருமாளே கோவிலுக்கு வந்துட்டாரே!" என்றார் சடகோபன், தன் சிலேடையைத் தானே ரசித்தபடி.

"எங்கே சடகோபா! நான் தினமும் வீட்டுக்க வரப்ப, ராத்திரி ஒன்பது மணி ஆயிடும். எங்கே கோவிலுக்கு வரது, அதுவும் ரெண்டு கிலோமீட்டர் நடந்து!" என்றான் பெருமாள்.

பெருமாளும், சடகோபனும் அந்த ஊர் ஆரம்பப் பள்ளியில் இணைந்து படித்தவர்கள். அதற்கு மேல் படிக்காமல், இருவருமே அதே ஊரில் நிலைபெற்று விட்டார்கள்.

"உன் தொழில் எப்படிப் போய்க்கிட்டிருக்கு?" என்றார் சடகோபன்.

"தரகுத் தொழில் அன்றாடங்காய்ச்சித் தொழில்தானே! ஒருநாள் வருமனம் வந்தா, நாலு நாள் எதுவும் வராது. இன்னிக்குக் கூட நிலைமை மோசம்தான். உனக்கு தட்டுல காசு விழுந்துக்கிட்டிருக்கா?"

"எங்கே? பெரும்பாலான சமயங்கள்ள, கோவில்ல நானும் பெருமாளும் மட்டும்தான் இருக்கோம். அதுவும், இந்தக் கோவில் ஊரை விட்டுத் தள்ளி இருக்கா? இங்கே யாருமே வரதில்ல. சரி. பெருமாளை சேவிச்சுக்கோ!" என்றபடி கருவறைக்குள் சென்று, பெருமாளுக்குக் கற்பூர ஆரத்தி காட்டினார் சடகோபன்.

பெருமாள் தான் கேட்க வந்ததைக் கேட்காமல் கிளம்ப யத்தனித்தபோது, "இன்னிக்குக் கூட பாரு. யாரோ ஒரு மகானுபாவன் கோவில்ல மண்டகப்படி பண்ணினாரு. ஆனா மழை பெஞ்சதால, கோவில்ல கூட்டமே இல்லை. அவரும் பிரசாதத்தை வாங்கிக்காம, 'என் வீட்டில யாரும் இல்ல. கோவிலுக்கு வரவங்களுக்குக் கொடுத்துடுங்க'ன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு. வேற யாரும் கோவிலுக்கு வராததால, பிரசாதம் அப்படியே இருக்கு. என் வீட்டில நாங்க ரெண்டு பேருதான். என்ன பண்றதுன்னு யோசிச்சுக்கிட்டிருந்தேன். நல்ல வேளையா நீ வந்தே! அது என்ன பாத்திரம்? கடையில எண்ணெய் ஏதாவது வாங்கவா? அதைக் கொடு. அதில பிரசாதத்தைப் போட்டுக் கொடுக்கறேன்" என்று சொல்லி அவன் கையிலிருந்த பாத்திரத்தை வாங்கி அதை உள்ளே எடுத்துப் போய், அதில் பாதிக்கு மேல் பொங்கல் பிரசாதத்தை நிரப்பி எடுத்துக் கொண்டு வந்து, பெருமாளிடம் கொடுத்தார் சடகோபன்.

பெருமாளுக்குத் தொண்டை அடைத்தது - மகிழ்ச்சியினாலா, நன்றி உணர்வினாலா என்று தெரியவில்லை.

முதலில் இயந்திரத்தனமாகப் பெருமாளை வணங்கியவன், இப்போது உணர்ச்சி பொங்க மீண்டும் வணங்கினான்.

"வரேன், சடகோபா!" என்று கிளம்பினான் பெருமாள்.

"நேரம் கிடைக்கறப்ப வா! எனக்குப் பேச்சுத் துணையாகவாவது இருக்கும்!" என்றார் சடகோபன்.

ணவனிடமிருந்து பாத்திரத்தை வாங்கிப் பார்த்த சீதா, "நிறையவே கொடுத்திருக்காரு" என்றாள்.

"ஆமாம். நம்ம ரெண்டு பேருக்குப் போதும், கீதா முழிச்சுக்கிட்டிருந்தா, அவளுக்கும் கொஞ்சம் கொடுக்கலாம்" என்றான் பெருமாள்.

"அவதான் தூங்கிட்டாளே! அவளை எழுப்ப வேண்டாம். தோசை சாப்பிட்டதில அவளுக்கு வயிறு நிறைஞ்சிருக்கும்" என்ற சீதா, பாத்திரத்திலிருந்து பாதியளவு பொங்கலை எடுத்து இன்னொரு பாத்திரத்தில் போட்டாள்.

"எதுக்கு இது? நாளைக்குக் கொஞ்சம் எடுத்து வைக்கறியா?" என்றான் பெருமாள், புரியாமல்.

"நம்ம வீட்டில ஃபிரிட்ஜா இருக்கு?" என்ற சீதா, "சாயந்திரம் உங்க அக்கா வந்திருந்தாங்க. அவங்க வீட்டிலேயும் எதுவும் இல்லையாம். கொஞ்சம் அரிசி இருக்குமான்னு கேட்டுக்கிட்டு வந்தாங்க. நம்ம வீட்டிலதான் அரிசிப்பானை காலியாச்சே! அதனால, அவங்களுக்கு எதுவும் கொடுத்து உதவ முடியலை. அவங்களும் பட்டினியாத்தான் இருப்பாங்க. அதனால, அவங்களுக்குக் கொஞ்சம் கொடுத்துட்டு வரேன். நீங்க சாப்பிடுங்க. பக்கத்துத் தெருதானே? இதோ வந்துடுவேன்" என்றபடியே, பாத்திரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு கிளம்பினாள் சீதா. 

குறள் 527:
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.

பொருள்:
காக்கை (தனக்குக் கிடைத்ததை) மறைத்து வைக்காமல், சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும். ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.(அத்தகைய இயல்பு உள்ளவர்களுக்கே பொருள் கிடைக்கும்.)

528. புதிய மன்னர்கள்!

"புதுசா கட்சி ஆரம்பிச்சு, தேர்தல்ல ஜெயிச்சு, ஆட்சியைப் பிடிக்கறதுங்கறது சாதாரண விஷயம் இல்ல. சாதிச்சுட்டடா!" என்றான் தாமு.

"டேய்! நாமெல்லாம் நண்பர்கள்தான்னாலும், பரணி இப்ப முதல்வரா ஆகப் போறான். இனிமே, அவனை வாடா போடான்னு பேசறது சரியா இருக்காது. முதல்வருக்குரிய மரியாதையோடதான் பேசணும். நான் பரணியை விடவும், உங்க எல்லாரையும் விட வயசில பெரியவன்னாலும், நானே இனிமே பரணிகிட்ட மரியாதையாதான் பேசுவேன்" என்றான் சக்ரபாணி.

"என்ன மாமா! துணை முதல்வர் பதவிக்காக, பரணியைக் காக்கா புடிக்கறீங்களா?" என்றான் நடராஜன், விளையாட்டாக.

"சக்ரபாணி அண்ணன் சொல்றது சரிதான். சின்னப் பசங்க விளையாட்டா கட்சி ஆரம்பிச்சு, மக்கள் ஒரு மாற்றம் வேணும்னு ஓட்டுப் போட்டதால, ஆட்சிக்கு வந்துட்டாங்கன்னு ஏற்கெனவே பல பேர் வெளிப்படையாவே பேசறாங்க. அதனால, நாம சின்னப் பசங்க மாதிரி நடந்துக்காம, பொறுப்பா நடந்துக்கணும். அதோட, நாம ஆறு பேர் சேர்ந்து இந்தக் கட்சியை ஆரம்பிச்சாலும், பல பிரபலங்களும், மற்ற கட்சிகளிலிருந்து வந்த சில தலைவர்களும் நம்ம கட்சியில சேந்திருக்காங்க. அதனால, இந்தக் கட்சி நமக்கு சொந்தம்னு நினைக்காம, நாம கொஞ்சம் அடக்கியே வாசிக்கணும்" என்றான் அரவிந்தன்.

"அப்ப, மாமாவுக்கு துணை முதல்வர் பதவி இல்லையா?" என்று சுரேஷ் கேட்க, மாமா என்று அழைக்கப்பட்ட சக்ரபாணி உட்பட அனைவரும் சிரித்தனர்.

"உங்களோட உழைப்பாலதான் நம் கட்சி சீக்கிரமே இவ்வளவு பெரிசா வளர்ந்து, நாம தேர்தல்ல ஜெயிச்சு, ஆட்சிக்கு வந்திருக்கோம். உங்களோட முயற்சியாலேயும், ஆதரவாலேயும்தான், கட்சி என்னை முதல்வராத் தேர்ந்தெடுத்திருக்கு. நம் நட்பு எப்பவுமே வலுவாத்தான் இருக்கும். ஆனா நீங்க எல்லாரும் சொன்ன மாதிரி, கட்சியில இருக்கற மத்தவங்ககிட்டேயும், மக்கள்கிட்டேயும் நாம நல்ல பேர் வாங்கணும். அப்பதான், நாம நினைச்சபடி சிறப்பா செயல்பட முடியும். அதனால, நீங்க எல்லாரும் நான் செய்யற விஷயங்களைப் புரிஞ்சுக்கிட்டு, எனக்கு ஆதரவா இருக்கணும்" என்றான் பரணி.

று மாதங்கள் கழித்து, சக்ரபாணியைத் தனியாகச் சந்தித்த  பரணி, "என்ன அண்ணே! எல்லாம் எப்படிப் போய்க்கிட்டிருக்கு?" என்றான்.

"ரொம்ப நல்லா போய்க்கிட்டிருக்கு பரணி. உன் அணுகுமுறையும், திட்டங்களும் மக்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. நம் மாநிலம் எல்லாத் துறைகளிலேயும் நல்ல முன்னேற்றங்களை அடைஞ்சுக்கிட்டிருக்கு. எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு!" என்றான் சக்ரபாணி.

"அண்ணே! நம் நண்பர்கள்ள, அரவிந்தனைத் தவிர, வேற யாருக்கும் நான் மந்திரி பதவி கொடுக்கல. உங்களைத் துணை முதல்வர் ஆக்குவேன்னு பலரும் எதிர்பார்த்தாங்க."

"ஆனா, நான் எதிர்பாக்கலியே!" என்றான் சக்ரபாணி, இடைமறித்து.

"உங்களுக்கு வருத்தம் ஏதும் இல்லையே?" என்றான் பரணி, தயக்கத்துடன்.

"நிச்சயமா இல்ல. நான்தான் அதை எதிர்பாக்கவே இல்லேன்னு சொன்னேனே!"

"கோபத்திலேயோ, வருத்தத்திலேயோ சொல்றீங்களா?"

"இல்லவே இல்லே. உண்மையாத்தான் சொல்றேன். உன்னோட சிந்தனை எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியும். நாம எல்லோருமே அரசியல்ல அனுபவம் இல்லாதவங்க. நீ முதல்வரானது இயல்பான விஷயம். ஏன்னா, நீ தலைவன். ஆனா, மத்த அமைச்சர்களா விஷயம் தெரிஞ்சவங்களையும், அனுபவம் உள்ளவங்களையும்தானே நியமிக்கணும்? அப்படித்தான் நீ செய்வேன்னு எதிர்பார்த்தேன். நம்ம குழுவில, அரவிந்தன் ஒரு ஜீனியஸ்னு எல்லாருக்கும் தெரியும். அதனால, அவனை மட்டும் அமைச்சர் ஆக்கினது சரிதான்."

"நீங்க என்னைப் புரிஞ்சுக்கிட்டிருக்கீங்க. ஆனா, மத்த நண்பர்கள் எல்லாம் தப்பா நினைப்பாங்களோன்னு எனக்கு ஒரு பயம் இருக்கு. நீங்க எதையும் சரியாப் புரிஞ்சுக்கறவர்ங்கறதால, உங்ககிட்ட வெளிப்படையாப் பேசினேன். ஆனா, மத்தவங்ககிட்ட பேசி, அவங்களுக்குப் புரிய வைக்க முடியுமான்னு தெரியல."

"உனக்கு அந்தக் கவலையே வேண்டாம், பரணி. எல்லாரும் உன்னை சரியாத்தான் புரிஞ்சக்கிட்டிருக்காங்க. அதோட, நீ எங்க எல்லாருக்கும் கட்சியில பொறுப்புக்கள் கொடுத்திருக்க. அதுவும், யாருக்கு என்ன திறமை இருக்குன்னு பாத்து, அதுக்கேத்த பொறுப்பைக் கொடுத்திருக்க. நீ விருப்பு வெறுப்பு இல்லாம செயல்பட்டு, எது சரின்னு யோசிச்சு செய்யறதைப் பாத்து, நாங்க எல்லாருமே உன் நண்பர்களா இருக்கறதில பெருமை உள்ளவங்களா இருக்கோம். நீ தயங்காம யாரை வேணும்னாலும் கூப்பிட்டுப் பேசு. அவங்க எல்லாரும் இதையேதான் சொல்லுவாங்க" என்றான் சக்ரபாணி, பெருமை ததும்பம் குரலில்.

குறள் 528:
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.

பொருள்:
அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பி சுற்றமாக வாழ்கின்றவர் பலர்.

529. என் அண்ணன்

சுதாகர் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய உடனேயே, "உங்க அண்ணன் கிட்டேருந்து கடிதம் வந்திருக்கு" என்றாள் அவன் மனைவி மீனா.

"மணி ஆர்டர் வரும்னு பாத்தா, கடிதம் வந்திருக்கு! என்ன, விளைச்சல் இல்லாதனால பணம் அனுப்ப முடியாதுன்னு எழுதி இருக்காரா?" என்றான் சுதாகர், மனைவியிடமிருந்து கடித உறையைக் கையில் வாங்கியபடியே.

"ஏங்க, நீங்க படிச்சிருக்கீங்க. டவுன்ல இருந்துகிட்டு வேலை பாக்கறீங்க. உங்க அண்ணன் படிக்கல, கிராமத்தில இருந்துகிட்டு நிலங்களைப் பாத்துக்கறாரு. விளைச்சலைப் பொருத்து, வர வருமானத்தில உங்களுக்கும் ஒரு பங்கை அனுப்பறாரு. நமக்கு இது கூடுதல் வருமானம்தான். அவரை ஏன் குத்தம் சொல்லிக்கிட்டே இருக்கீங்க?"

"நிலத்தில எவ்வளவு விளையுதுன்னு யாருக்குத் தெரியும்? அவர் சொல்றதுதான் கணக்கு! ஏதோ செலவுக் கணக்கு காட்டிட்டு, தனக்குன்னு ஒரு பங்கை எடுத்துக்கிட்டு. மீதியை எனக்கு அனுப்பறாரு. அவர் என்னை ஏமாத்தறாறோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு. அவர் கொடுக்கற கணக்கில ஏதாவது சந்தேகம் கேட்டா, அண்ணன் மேலயே சந்தேகப்படறியான்னு கோவிச்சுக்கறாரு. அவர் மேல எனக்கு நம்பிக்கை இல்லை."

"உங்க ஊர்லேந்து இங்கே வரவங்க, உங்ககிட்ட எதையோ சொல்லிட்டுப் போறாங்க. நீங்க அதை நம்பி, உங்க அண்ணன் மேலேயே சந்தேகப்படறீங்க. முன்னெல்லாம்  நாம ஊருக்குப் போனா, உங்க அண்ணனும் அண்ணியும் நம்மகிட்ட எவ்வளவு அன்பா நடந்துப்பாங்க! இப்ப சில வருஷமா, உங்க அண்ணன் மேல கோவிச்சுக்கிட்டு, நீங்க ஊருக்கே போறதில்ல!" என்றாள் மீனா.

மீனா பேசிக் கொண்டிருந்தபோதே கடிதத்தைப் பிரித்து, அதைப் படித்து முடித்து விட்ட சுதாகர், "நிலத்தில விளைச்சல் எல்லாம் குறைஞ்சுக்கிட்டே வருதாம். விவசாயத் தொழில் இனிமே லாபமா இருக்காது, அதனால, நிலத்தையெல்லாம் வித்துடலாம்னு சொல்றாரு. விலை பேசி முடிக்க, என்னை ஊருக்கு வரச் சொல்லி இருக்காரு" என்றான்.

"நல்லதாப் போச்சு. மொத்தமா ஏதாவது பணம் வந்தா, பாங்க்ல போட்டு வச்சுக்கலாம். இனிமே, உங்க அண்ணன் உங்களை ஏமாத்தறார்னு நீங்க நினைக்க வேண்டி இருக்காது" என்ற மீனா, "நாம, குழந்தைங்க எல்லாரும்தானே போகப் போறோம்?" என்றாள்.

"நீங்கள்ளாம் எதுக்கு? நான்தான் என் அண்ணன் உறவே வேண்டாம்னு பாக்கறேனே! நான் மட்டும் போய், நிலம் விக்கறதைப் பேசி முடிச்சு, பத்திரத்தைப் பதிவு பண்ணி, ரிஜிஸ்தர் ஆஃபீஸ்ல அண்ணனோட சேர்ந்து கையெழுத்துப் போட்டுட்டு வந்துடறேன். நிலத்தை வித்தப்பறம், அவர் யாரோ நான் யாரோ!" என்றான் சுதாகர்.

ருக்குப் போய் விட்டு வந்த சுதாகர், "நிலத்தை எல்லாம் வித்தாச்சு. இப்ப இருக்கிற நிலைமையில, நமக்கு நல்ல விலை கிடைச்சிருக்கறதா, ஊர்ல எல்லாரும் சொன்னாங்க. இதோட, சொந்த ஊருக்கு குட்பை, அண்ணன்கற சொந்தத்துக்கும் குட்பை!" என்றான் சுதாகர்.

ழெட்டு மாதங்களுக்குப் பிறகு, சுதாகரின் அண்ணனிடமிருந்து சுதாகருக்கு இன்னொரு கடிதம் வந்தது. அது அவன் அண்ணன் மகளின் திருமணப் பத்திரிகை!

பத்திரிகையைப் பார்த்த சுதாகர், "கல்யாணத்துக்கு நாம எல்லாருமே போகலாம். அண்ணன் வீட்டில பத்து நாள் இருந்துட்டு வரலாம். ஆஃபீசுக்கு லீவ் போட்டுடறேன்" என்றான், உற்சாகத்துடன்.

அவனை வியப்புடன் பார்த்த மீனா, "என்ன, திடீர்னு அண்ணனோட உறவு கொண்டாடறீங்க?" என்றாள்.

"நிலத்தினாலதானே என் அண்ணன் மேல சந்தேகம் வந்து, உறவில விரிசல் வந்தது? இப்பதான் நிலத்தை வித்தாச்சே! இனிமே, என் அண்ணனோட எனக்கென்ன பிரச்னை? கடந்த காலத்தில ஒருவேளை என் அண்ணன் என்னை ஏமாத்தி இருந்தாலும், இனிமே நான் அதைப் பத்தி நினைக்கப் போறதில்ல" என்றான் சுதாகர்.

குறள் 529:
தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்..

பொருள்:
முன் சுற்றத்தாராக இருந்து, பின் ஒரு காரணத்தால் பிரிந்தவரின் உறவு, அவ்வாறு அவர் பொருந்தாமலிருந்த காரணம் நீங்கிய பின், தானே வந்து சேரும்.

530. மீண்டும் துளிர்த்த நட்பு

"அரசே! வருண தேசத்து அரசரிடமிருந்து ஓலை வந்திருக்கிறது" என்றார் அமைச்சர்.

"என்ன? நம் நாட்டின் மீது படை எடுக்கப் போகிறானாமா?" என்றான் அரசன் மகிழ்வாணன்.

"இல்லை மன்னா! நம் நட்பை நாடித்தான் ஓலை அனுப்பி இருக்கிறார் அசோகவர்மர். கடந்த காலத்தில் நம்முடன் நட்பாக இருந்தது போல், மீண்டும் இருக்க விரும்புகிறாராம். இடையில், நம்மை எதிர்த்துச் செயல்பட்டதற்காக வருத்தம் தெரிவித்திருக்கிறார்."

"நம்மிடம் நட்புடன் இருந்தவர்கள், காரணமில்லாமல் நம்மிடம் பகை பாராட்டும்போது, நமக்கு ஏற்படும் வலி மிகக் கொடியது. அசோகவர்மரால் அந்த வலியை நான் அனுபவித்தேன். இப்போது அவர் மனம் மாறி இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது" என்றான் மகிழ்வாணன்.

முதலில் அசோகவர்மன், அவன் இவன் என்று மரியாதையற்ற விளிப்புகளைப் பயன்படுத்திய அரசர் இப்போது அவர் இவர் என்று மரியாதையாகக் குறிப்பிட்டதை அமைச்சர் கவனித்தார்.

"அப்படியானால்...?" என்றார் அமைச்சர்.

"வருண நாட்டை எப்போதுமே நாம் நட்பு நாடாகத்தான் கருதி வந்திருக்கிறோம் என்றும், அசோகவர்மரின் மனமாற்றத்தை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் என்றும் பதில் ஓலை அனுப்பி விடுங்கள்" என்றான் அரசன்.

சில நாட்களுக்குப் பிறகு அரசனிடம் வந்த அமைச்சர், "மன்னா! தவறாக நினைக்க வேண்டாம். அசோகவர்மரின் மனமாற்றத்துக்கான காரணத்தைக் கண்டறியாமல், அவருடைய நட்பை நாம் ஏற்றுக் கொண்டு விட்டோமோ என்ற ஐயம் எனக்கு உண்டு. ஆனால், இப்போது அவர் நாட்டுக்குப் படைகளை அனுப்ப முடிவு செய்திருக்கிறீர்களே, இது முரணாக இல்லையா? இது அசோகவர்மரை நம் மீது மீண்டும் பகை கொள்ள வைக்குமே!" என்றார் அமைச்சர்.

"அமைச்சரே! நம்முடன் நட்பாக இருந்த அசோகவர்மர், நமக்கு எதிராகத் திரும்பியதற்குக் காரணம், நம் இருவருக்கும் அண்டைநாடாக இருக்கும் சென்னி நாடுதான் என்பதைத் தாங்கள் அறிவீர்கள். நரிக்குணம் கொண்ட சென்னி நாட்டு மன்னன் சூதவர்மன்தான், அசோகவர்மரின் மனதில் நம்மைப் பற்றிய தவறான அச்சங்களை விதைத்து, அவரை நமக்கு எதிராகச் செயல்பட வைத்தான் என்பதையும் நாம் அறிவோம்.

"அசோகவர்மர் நீட்டிய நட்புக்கரத்தை நான் நல்லெண்ண அடிப்படையில் உடனே ஏற்றுக் கொண்டாலும், அவர் மனமாற்றத்துக்குக் காரணத்தை அறியுமாறு, நம் ஒற்றர் படைத்தலைவரிடம் கூறினேன். 

"நம்மிடமிருந்து அசோகவர்மரைப் பிரித்த பின், அவருடைய வருண நாட்டைக் கபளீகரம் செய்ய சென்னி நாட்டு மன்னன் சூதவர்மன் திட்டமிட்டிருப்பதை அறிந்துதான், அசோகவர்மர் தான் செய்த தவறை உணர்ந்து நம்மிடம் திரும்பி வந்திருக்கிறார் என்ற உண்மையை ஒற்றர்கள் மூலம் அறிந்து, என்னிடம் தெரிவித்தார் ஒற்றர்படைத் தலைவர்.

"நம்முடன் நட்பாக இருந்தால், சென்னி நாடு அவர்கள் மீது படையெடுத்தால், நாம் அவர்களுக்கு உதவுவோம் என்பதுதான் அசோகவர்மரின் எதிர்பார்ப்பு. எனவே, அவருடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதத்தில்தான் வருண நாட்டுக்கு நம் படைகளை அனுப்பி இருக்கிறேன்."

பேச்சை நிறுத்திய அரசன், அமைச்சரின் முகத்திலிருந்த குழப்பத்தைப் பார்த்து, "நம் படைகள் வருண நாட்டுக்குச் சென்றிருப்பது உண்மைதான். ஆனால், அவை வருண நாட்டின் மீது படையெடுத்துச் செல்லவில்லை. வருண நாட்டுக்கு உதவத்தான் சென்றிருக்கின்றன. வருண நாட்டுக்குள், சென்னி நாட்டின் எல்லைப்பகுதிக்கு அருகில்தான் அவை நிறுத்தப்பட்டிருக்கின்றன. இது பற்றி அசோகவர்மருக்கு முன்பே தகவல் அனுப்பி விட்டேன். 

"எல்லைப் பகுதியில் நம் படைகள் இருப்பதால், சென்னி நாட்டு மன்னன் சூதவர்மன் வருண நாட்டின் மீது படையெடுக்கத் துணிய மாட்டான். அசோகவர்மர் எதற்காக நம்மிடம் திரும்பி வந்தாரோ, அந்த நோக்கத்தை நாம் நிறைவேற்றிக் கொடுத்து விட்டதால், அவர் இனி எப்போதுமே நம்மிடம் நட்பாக இருப்பார்" என்றான் அரசன், சிரித்துக் கொண்டே.

குறள் 530:
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கொளல்.

பொருள்:
தன்னிடமிருந்து பிரிந்து சென்று பின், ஒரு காரணத்தினால் திரும்பி வந்தவனை, அரசன் அவன் வந்த காரணம் குறித்த உதவியை அவனுக்குச் செய்து, ஆராய்ந்து உறவு கொள்ள வேண்டும்.     

அறத்துப்பால்                                                                              காமத்துப்பால்     

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...