Monday, February 27, 2023

675. திருப்புமுனை!

 "உங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போறேங்கறீங்க!" என்றாள் சுமதி.

"அரசியல் கட்சிகள் நாட்டுக்குத் தேவைதானே? இத்தனை வருஷமா தொழில் செஞ்சு நிறைய சம்பாதிச்சுட்டேன். இன்னும் சம்பாதிச்சுக்கிட்டிருக்கேன்  நாம நல்லா வாழ்ந்துக்கிட்டிருக்கோம். இப்ப நான் ஆஃபீசுக்குப் போகாமலே தொழில் நல்லா நடந்துக்கிட்டிருக்கு. சமூகத்துக்கு ஏதாவது செய்யணும்னு நினைக்கிறேன். அரசியல் கட்சி ஆரம்பிச்சு நல்ல கொள்கைகளையும் திட்டங்களையும் வகுத்துச் செயல்படுத்தினா அது நாட்டுக்கு நல்லதுதானே?" என்றார் கௌரிசங்கர்.

"மேடையில பேசற மாதிரி பேசறீங்க! அரசியல்னாலே அது பதவிக்கும் பணத்துக்கும்தான்னு ஆயிடுச்சு. நீங்க போய் என்ன நல்லது செய்யப் போறீங்க?"

"நீ சொல்றது சரிதான்.அரரசியல்னா பதவி, பணம்னுதான் ஆயிடுச்சு. இதை மாத்தி நல்லது செய்யத்தான்  நான் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போறேன்!"

"என்னவோ செய்யுங்க. உங்களுக்குத் தெரியாததா?" என்றாள் சுமதி.

"என்னங்க, அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போறதாச் சொன்னீங்க! அஞ்சாறு மாசமா நிறைய பேரைக் கூப்பிட்டுப் பேசிக்கிட்டிருக்கீங்க. நிறைய பணம் செலவழிக்கறீங்க. எதுக்குன்னே தெரியல! இப்ப திடீர்னு டிவி சேனல் ஆரம்பிக்கப் போறேன்னு சொல்றீங்க. உங்க திட்டத்தை மாத்திக்கிட்டீங்களா?" என்றாள் சுமதி.

கௌரிசங்கர் பதில் சொல்லாமல் சிரித்தார்.

"நல்ல வேளை! முடிவை மாத்திக்கிட்டீங்களே! டிவி சேனல் நடத்தறது நல்ல தொழிலா இருக்கும். உங்களுக்குத்தான் தொழில் நடத்தற அனுபவம் இருக்கே! நல்ல விஷயம்தான்!" என்றாள் சுமதி..

கௌரிசங்கர் மௌனமாக இருந்தார்.

"வேதாளம் மறுபடி முருங்கை மரத்தில ஏறின மாதிரி மறுபடி ஆரசியல் கட்சி ஆரம்பிக்கற யோசனைக்குப் போயிட்டாங்களா?" என்றாள் சுமதி. 

"அரசியல் கட்சி ஆரம்பிக்கற யோசனையை நான் எப்ப கைவிட்டேன்?" என்றார் கௌரிசங்கள்.

"பின்னே ஏழெட்டு மாசமா வேற ஏதோ செஞ்சுக்கிட்டிருந்தீங்களே! டிவி சேனல் ஆரம்பிக்க அனுமதிக்கு விண்ணப்பிச்சிருக்கீங்க!"

"அனுமதி கிடைச்சாச்சு. மே மாசம் ஒண்ணாம் தேதி அன்னிக்கு டிவி சேனல் ஆரம்பிக்கப் போறேன். அன்னிக்கே அரசியல் கட்சியோட துவக்க விழாவையும் திருச்சியில நடத்தப் போறேன். அது நம்ம டிவி சேனல்ல லைவா ஒளிபரப்பாகும். அதனால என்னோட புதுக் கட்சிக்கும் பப்ளிசிடி கிடைக்கும், டிவி சேனலுக்கும் பப்ளிசிடி கிடைக்கும்!" என்றார் கௌரிசங்கர் உற்சாகமாக.

"எனக்கு நீங்க செய்யறது எதுவுமே புரியல!"

"சுமதி! ஒரு வேலையை செய்யறதுக்கு முன்னால அதைச் சிறப்பா செய்யறதுக்காக நிறைய முன்னேற்பாடுகளைச் செய்யணும். முதல்ல பணம் வேணும். இந்த எட்டு மாசத்தில என் தொழில்கள்ள வர லாபத்திலேந்து கொஞ்சம் கொஞ்சமா எடுத்து ஒரு பெரிய தொகையைச் சேர்த்து வச்சிருக்ககேன்.

"ரெண்டாவது, இது தவல் தொழில்நுட்ப யுகம். அதனால நம் கட்சிக்கு ஒரு டிவி சேனல் இருந்தா நல்லது. நம்ம கட்சி பத்தின விஷயங்களைப் போடலாம். மத்தவங்க செய்யற விமரிசனங்களுக்கு பதில் கொடுக்கலாம். 

"அதோட இப்பல்லாம் யூடியூப் சேனல்களும் முக்கியம். அதனாலதான் ஊடகத் துறையில இருக்கற சில திறமைசாலிகளை வச்சு சில யூடியுப் சேனல்களை ஆரம்பிச்சிருக்கேன். அந்த சேனல்கள் மூலமாகவும் நம்ம கட்சியை வளர்க்கலாம்.

"மூணாவதா, மே தினத்தன்னிக்கு கட்சியை ஆரம்பிச்சா, உடனே அரசியல் தலைவர்கள் பல பேர் 'இவன் ஒரு முதலாளி, இவனுக்கும் தொழிலாளர் தினத்துக்கும் என்ன சம்பந்தம்?'னு  பேசுவாங்க. அப்ப என்னோட தொழிற்சாலைகள்ள வேலை செய்யற தொழிலாளர்களுக்கு எவ்வளவு நன்மைகள் செஞ்சிருக்கேன்னு விவரமா எடுத்துச் சொல்லி, நமக்கு எதிராகச் சொல்லப்பட்ட விஷயத்தையே நமக்கு ஆதரவான விஷயமா மாத்தி நம்ம கட்சியைப் பத்தி ஒரு நல்ல இமேஜை உருவாக்க முடியும்! அதனாலதான் தொழிலாளர் தினத்தன்னிக்குக் கட்சியை ஆரம்பிக்கறேன்"

"அது சரி. கட்சித் துவக்க விழாவை ஏன் திருச்சியில நடத்தறீங்க? உங்க சொந்த ஊர் மதுரையாச்சே! அங்கே நடத்தலாம் இல்ல?"

"நடத்தலாம். ஆனா திருச்சிக்கு ஒரு சிறப்பு இருக்கு. பல கட்சிகளோட பல முக்கியமான மாநாடுகள் திருச்சியில நடந்திருக்கு. 'திருச்சி ஒரு திருப்பு முனை' ன்னு பல தலைவர்கள் இதுக்கு முன்னால சொல்லி இருக்காங்க. அந்த சென்டிமென்ட்டைப் பயன்படுத்தி, திருச்சியில் இந்தப் புதிய கட்சி துவக்கப்படறது தமிழ்நாட்டு அரசியலில் ஒரு திருப்பு முனைன்னு சொல்லி ஒரு வலுவான பிரசாரத்தை உருவாக்கலாமே! அதுக்குத்தான்!" என்றார் கௌரிசங்கர்.

"புதுசா ஒரு தொழிலை ஆரம்பிகறதுக்கு முன்னால எப்படி திட்டமிடுவீங்கன்னு நான் பாத்திருக்கேன். அரசியல் கட்சியை ஆரம்பிக்கவும் அதே மாதிரி திட்டமிட்டிருக்கீங்க!" என்றாள் சுமதி கணவனைப் பெருமையுடன் பார்த்து.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 68
வினை செயல்வகை

குறள் 675:
பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.

பொருள்:
ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு, அதற்குத் தேவையான பொருள், ஏற்ற கருவி, காலம், மேற்கொள்ளப் போகும் செயல்முறை, உகந்த இடம் ஆகிய ஐந்தையும் குறையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Friday, February 24, 2023

674. விட்ட குறை, தொட்ட குறை!

குமரன் இண்டஸ்டிரீஸ் நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களில் ஒருவரான சண்முகத்திடமிருந்து அந்தக் கோரிக்கை வந்தபோது அதைக் கண்டிப்பாக நிறைவேற்றுவதாக குமரன் இண்டஸ்டிரீஸின் உரிமையாளரான குமரன் கூறி இருந்தார்.

குமரன் இண்டஸ்டிரீஸ் ஒரு ரசாயனப் பொருளைத் தயாரித்து வந்தது. அது கமர்ஷயல் கிரேடு எனப்படும் வணிகத் தரத்தில் தயாரிக்கப்பட்டு வந்தது.

அந்த ரசாயனப் பொருளைப் பயன்படுத்தி வேறோரு ரசாயனப் பொருளைத் தயாரித்து வந்தார் சண்முகம்.

தான் இன்னொரு ரசாயனப் பொருளைத் தயாரிக்கப் போவதாகவும் அதற்கு குமரன் இண்டஸ்டிரீஸ் தற்போது தயாரித்து வரும் கமர்ஷியல் கிரேடை விட இன்னும் உயர்வான லேபரட்டரி கிரேட் என்னும் ஆய்வுக்கூடத் தரத்தில் அதே ரசாயனப் பொருளைத் தயாரித்து அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டிருந்தார்.

ஏற்கெனவே தங்களிடம் வாங்கும் வணிகத்தர ரசாயனப் பொருளைத் தவிர ஆய்வுக்கூடத் தரத்திலான புதிய தயாரிப்பையும் சண்முகம் கூடுதலாக வாங்குவார் என்பதால் அவருடைய கோரிக்கை குமரன் இண்டஸ்டிரீஸுக்கும் லாபகரமானதுதான். அத்துடன் இந்த ஆய்வுக்கூடத் தர ரசாயனப் பொருளை  தயாரிப்பை வேறு புதிய வாடிக்கையாளர்களுக்கும் விற்பனை செய்ய முடியும்.

ஆயினும் ஆய்வுக்கூடத் தரப் பொருளைத் தயாரிக்கக் கூடுதலாக சில தயாரிப்பு உபகரணங்கள் வாங்க வேண்டும் என்பதுடன் அரசாங்கத்திடம் அனுமதியும் பெற வேண்டும்.

தங்கள் வாடிக்கையாளரின் கோரிக்கையை ஏற்கும் விதத்திலும், தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் ஆய்வுக்கூடத் தரப் பொருளைத் தயாரிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதில் குமரன் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

தற்போது ஆய்வுக்கூடத் தரப் பொருளை வேறொரு நிறுவனத்திலிருந்து வாங்குவதாகவும், குமரன் இண்டஸ்டிரீஸ் தயாரிப்பைத் தொடங்கியவுடன் அவர்களிடம் வாங்கிக் கொள்வதாகவும் சண்முகம் கூறினார்.

சில காரணங்களால் அரசாங்கத்தின் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. குமரன் அரசின் உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினால் அனுமதி கிடைக்கும் என்று குமரன் இண்டஸ்டிரீஸ் நிர்வாகி அவரிடம் கூறினார்.

குமரன் அரசின் உயர் அதிகாரி ஒருவரைச் சந்தித்துப் பேசினார். ஆனால் அவரிடமிருந்து உறுதியான பதில் எதுவும் வரவில்லை.

அரசின் மேல்நிலையில் ஏதோ பிரச்னை இருக்கிறது என்று குமரன் புரிந்து கொண்டார். இன்னும் சில முறை சென்று இன்னும் சில அதிகாரிகளைப் பார்த்துப் பேசிச் சில விஷயங்களைச் செய்து முடித்தால் அனுமதி கிடைத்து விடும் என்று அவருக்குத் தோன்றியது. 

ஆனால் ஒருவிதத் தயக்கத்தினாலும், தள்ளிப் போடும் மனப்பான்மையாலும் குமரன் தொடர்ந்து முயற்சி செய்யவில்லை.

"என்ன சார் இப்படிச் சொல்றீங்க? எவ்வளவு வருஷமா நாங்க உங்களுக்கு சப்ளை பண்ணிக்கிட்டிருக்கோம். இனிமே எங்ககிட்ட வாங்க மாட்டேன்னு திடீர்னு சொல்றீங்களே!" என்றார் குமரன்.

"திடீர்னு சொல்லலியே! ஆறு மாசம் முன்னாலேயே சொன்னேன் எனக்கு லேபரட்டரி கிரேடு மெடீரியல் வேணும்னு. இப்போதைக்கு வேற ஒருத்தர்கிட்ட வாங்கிக்கிட்டிருக்கேன், நீங்க தயாரிக்க ஆரம்பச்சவுடனே உங்ககிட்ட வாங்கிக்கறேன்னும் சொன்னேன். ஆனா ஆறு மாசம் ஆகியும் நீங்க இன்னும் கவர்ன்மென்ட் அப்ரூவல் கூட வாங்கலியே!" என்றார் சண்முகம்.

"இல்லை சார்! முயற்சி செஞ்சுக்கிட்டுத்தான் இருக்கோம். அரசாங்கத்தில கொஞ்சம் டிலே பண்றாங்க!"

"இல்லை சார். நான் எனக்குத் தெரிஞ்ச அரசாங்க வட்டாத்தில விசாரிச்சேன். நீங்க அப்ரூவல் வாங்கறதில ஆர்வமே காட்டலேன்னு அவங்க சொல்றாங்க. நீங்க இந்த முயற்சியைக் கைவிட்டுட்டீங்கன்னுதான் எனக்குத் தோணுது."

"இல்லை சார்..."

"சாரி குமரன்! நான் பயன்படுத்தற ரெண்டு கிரேடு பொருட்களையும் ஒரே இடத்தில வாங்கறதுதான் எனக்கு நல்லது. இப்ப ஒருத்தர் ரெண்டு கிரேடையுமே தயாரிக்கறாரு. உங்ககிட்ட கெமிஸ்டா இருந்தவர்தானாமே, தாமோதரன்னு! அவர்கிட்டதான் வாங்கப் போறேன். சாரி. என் தொழிலுக்கு எது நல்லதுன்னு நான் பாக்கணும் இல்ல?" என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டார் சண்முகம்.

தாமோதரனா?

குமரனுக்கு உடலில் சூடு ஏறியது.

அவருடைய நிறுவனத்தில் கெமிஸ்டாகப் பணி செய்து கொண்டிருந்த தாமோதரன் அவர்கள் நிறுவனத் தயாரிப்பின் ஃபார்முலாவை வேறொரு நிறுவனத்துக்கு விற்க முயன்றபோது. அந்த நிறுவனமே அதைக் குமரனிடம் சொல்லி தாமோதரனைக் காட்டிக் கொடுத்தது. உடனே தாமோதரனை வேலையிலிருந்து நீக்கினார் குமரன்.

தாமோதரன் மீது காவல்துறையில் புகார் கொடுத்து அவனைச் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று அவர்கள் நிறுவனத்தின் நிர்வாகி உட்படப் பலர் கூறியபோது, வேலையை விட்டு நீக்குவதே அவனுக்குப் போதுமான தண்டனைதான் என்று விட்டு விட்டார் குமரன்.

தனக்கு துரோகம் செய்தவனை தண்டிக்காமல் விட்டது, தான் துவங்கிய செயலை முடிக்காமல் பாதியில் நிறுத்தியது இரண்டும் ஒன்று சேர்ந்து தன்னைத் தாக்கியிருப்பதை உணர்ந்தார் குமரன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 68
வினை செயல்வகை

குறள் 674:
வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்.

பொருள்:
செய்யத் தொடங்கிய செயல், அழிக்கத் தொடங்கிய பகை இவை இரண்டிலும் மிச்சம் இருந்தால் அவை தீயின் மிச்சம் போல வளர்ந்து அழிக்கும் (ஆதலால் எதையும் முழுமையாகச் செய்க).

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Thursday, February 23, 2023

865. எதிரிகள் யாரும் இல்லை!

"கண்ணுக்கு எட்டியவரை நமக்கு எதிரிகளே இல்லை!" என்றார் முதலமைச்சர் ஜெயகுமார்.

"இப்படிச் சொன்னவங்க கதி எல்லாம் என்ன ஆயிருக்கு தெரியுமா?" என்று முணுமுணுத்தார் அமைச்சர் சின்னசாமி. மூத்த தலைவரான தன்னைப் பின்தள்ளி விட்டு ஜெயகுமார் முதலமைச்சர் ஆகி விட்ட கோபம் அவருக்கு.

அவர் அருகிலிருந்த மற்றொரு அமைச்சர் நல்லக்கண்ணு, "ஜெயகுமார் நல்லாத்தானே ஆட்சி நடத்திக்கிட்டிருக்காரு? மக்கள் ஆதரவு அவருக்கு நிறைய இருக்கு. அந்த நம்பிக்கையிலதான் இப்படிப் பேசறாரு!" என்றார் சின்னசாமியிடம்.

சின்னசாமி பதில் சொல்லவில்லை.

சில மாதங்கள் கழித்து இருவரும் தனிமையில் இருந்தபோது, "நிறைய இடங்கள்ள சட்டவிரோதமா சூதாட்டம் நடக்குது. முதல்வர் நடவடிக்கை எடுக்க மாட்டேங்கறாரே!" என்றார் சின்னசாமி.

"எப்படி எடுப்பாரு? அவருக்கு வருமானம் வந்துக்கிட்டிருக்கு இல்ல?" என்றார் நல்லக்கண்ணு சிரித்தபடி.

"நீங்கதானே அவரு நல்ல ஆட்சி நடத்தறாருன்னு சொன்னீங்க?"

"ஆமாம், சொன்னேன். ஆனா எதிர்க்கட்சி பலவீனமா இருக்கறதால, தன்னைத் தட்டிக் கேக்க யாரும் இல்லைங்கற தைரியத்தல இப்ப நிறைய தவறு செய்ய ஆரம்பிச்சுட்டாரு. சட்டவிரோத சூதாட்ட கிளப்கள் மேல நடவடிக்கை எடுக்காம இருக்காரு. மக்களுக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்றாம மெத்தனமா இருக்காரு. அவர் மேலேயே ஊழல் புகார்கள் வருது. அதையெல்லாம் பத்தியும் கவலைப்படாம இருக்காரு. எனக்குக் கொஞ்சம் கவலையாத்தான் இருக்கு!" என்றார் நல்லக்கண்ணு.

"எதிர்க்கட்சி பலவீனமா இருக்கறப்ப நாம ஏன் கவலைப்படணும்னு தெனாவெட்டா இருக்காரு போல இருக்கு!"

சில மாதங்களுக்குப் பிறகு நடந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஜெயகுமார் சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு சின்னசாமி புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

"சாதிச்சுட்டீங்களே! ஆம்பத்திலேயே நீங்கதான்முதல்வரா வந்திருக்கணும். ஆனா ஜெயகுமார் இளைஞர்ங்கறதால அவருக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்க நினைச்சு எல்லாரும் அவரைத் தேர்ந்தெடுத்தாங்க. எதிர்க்கட்சி பலவீனமா இருக்கறதால அவரு சமாளிச்சுடுவார்னு எல்லாரும் நினைச்சோம். ஆனா நீங்க அமைதியா இருந்து சந்தர்ப்பம் பார்த்து அவரை வீழ்த்திட்டீங்க!" என்றார் நல்லக்கண்ணு.

"என்ன செய்யறது? ஜெயகுமார் நல்லா செய்வார்னு நினைச்சு அவருக்கு வாய்ப்புக் கொடுத்தாங்க. ஆனா தன்னோட தவறான செயல்களால அவரு தன்னை பலவீமானவரா ஆக்கிக்கிட்டாரு. ஒருத்தர் பலவீனமா ஆயிட்டப்பறம் அவரை வீழ்த்தறது சுலபம்தானே! அவரு எதிர்க்கட்சி பலவீனமா இருக்குங்கற தைரியத்தில இருந்தாரு. அவரை எப்ப வீழ்த்தலாம்னு காத்துக்கிட்டு அவர் பக்கத்திலேயே நான் இருந்தது அவருக்குத் தெரியல!" என்றார் சின்னசாமி.

"வாழ்த்துக்கள் புதிய முதல்வரே!" என்றார் நல்லக்கண்ணு.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 87
பகைமாட்சி

குறள் 865:
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது.

பொருள்: 
ஒருவன் நல்வழியை நோக்காமல், பொருத்தமானவற்றைச் செய்யாமல், பழியையும் பார்க்காமல், நற்பண்பும் இல்லாமல் இருந்தால் அவன் பகைவர்க்கும் எளியனவான்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Wednesday, February 22, 2023

864. வெல்வது எளிது!

"டேய், ரகுபதி! பரஞ்சோதி இந்தத் தொழில்ல ஒரு சக்கரவர்த்தி மாதிரி கோலோச்சிக்கிட்டிருக்காரு. அவரை எதிர்த்து நம்மால போட்டி போட முடியுமா?" என்றான் கோவிந்தன்.

"ஒத்தரைப் போட்டி போட்டு ஜெயிக்கணும்னா அவரோட பலவீனம் என்னன்னு தெரிஞ்சுக்கணும். அதுக்குத்தான் அவரைப் பத்தின எல்லா விவரங்களையும் சேகரிச்சேன்."

"ஆமாம். நீ அலைஞ்சு திரிஞ்சு பலபேர்கிட்ட அவரைப் பத்தி விசாரிச்சே. ஆனா அவரைப் பத்தி எல்லாரும் நல்ல விதமாத்தானே சொல்றாங்க?"

"ஆமாம். வாடிக்கையாளர்கள்கிட்ட அவருக்கு நல்ல பேர் இருக்கு. பண விஷயங்கள்ள கரெக்டானவர்னு சொல்றாங்க. அவர் நிறுவனத்தில வேலை செய்யறவங்களுக்குக் கூட அவர் மேல பெரிசா குறை எதுவும் இருக்கற மாதிரி தெரியல!"

"அப்புறம்?"

"அவரு தனக்குப் போட்டியா யாரும் வர விடாம பாத்துக்கிட்டு இந்தத் தொழில்ல ஒரு தனிக்காட்டு ராஜாவா இருக்காரு. அவரோட வலுவான அடித்தளத்தை அசைச்சுப் பாக்கணும்னு நினைக்கறேன்!"

"நீ நினைச்சாப் போதுமா? நீயே சொல்ற, அவரு தனக்குப் போட்டியா யாரையும் வர விடலேன்னு! அப்படி இருக்கச்சே நம்மை மட்டும் அவர் விட்டு வைப்பாரா என்ன?"

"நான் எல்லாத்தையும் ஆழமாத் தோண்டிப் பாத்துட்டேன். அவருக்குப் போட்டியா வந்தவங்க எல்லாருமே ஏற்கெனவே வேற தொழில்ல ஈடுபட்டு இருந்தவங்கதான். இது நல்ல லாபகரமான தொழிலா இருக்கே, இதில பரஞ்சோதி ஒத்த ஆளா ஆட்டம் போட்டுக்கிட்டிருக்காரேன்னு நினைச்சு இதில இறங்கிப் பாத்திருக்காங்க. ஆனா பரஞ்சோதி அவங்க ஏற்கெனவே செஞ்சுக்கிட்டிருந்த தொழில்ல அவங்களுக்குச் சில பிரச்னைகளை ஏற்படுத்தி அவங்களைப் பின்வாங்க வச்சுட்டாரு. நாம அப்படி இல்ல. நாம வேற தொழில் செய்யல. இந்தத் தொழில்லதான் முழுமூச்சா இறங்கப் போறோம். அதனால பரஞ்சோதியால நமக்கு எந்தப் பிரச்னையும் கொடுக்க முடியாது!" என்றான் ரகுபதி உறுதியாக.

"இந்தத் தொழிலிலேயே நமக்கு அவர் பிரச்னை கொடுக்கலாம் இல்ல?" என்றான் கோவிந்தன்.

"கொடுப்பாரு! அதை நாம சமாளிப்போம். ஆனா அவருக்கு ரெண்டு முக்கியமான பலவீனங்கள் இருக்கு. இந்த பலவீனங்கள் உள்ள மனுஷங்களை நிச்சயமா வீழ்த்த முடியும்!"

"என்ன பலவீனங்கள்? அதான் அவரைப் பத்தி யாரும் தப்பா எதுவும் சொல்லலையே!"

"யாரும் தப்பா எதுவும் சொல்லலதான். ஆனா அவருக்கு நெருக்கமானவங்க மூலமா நான் தெரிஞ்சுக்கிட்ட ரெண்டு விஷயங்கள் அவருக்குப் பெரிய பலவீனமா இருக்குங்கறதில எனக்கு சந்தேகம் இல்லை!"

"அது என்ன ரெண்டு விஷயங்கள்?"

"ஒண்ணு, அவர் ஏதோ குடும்ப விஷயமா அவரோட அப்பாவோட சண்டை போட்டுக்கிட்டு அஞ்சாறு வருஷத்துக்கு மேல அவரோட பேசாம இருக்காரு!"

கோவிந்தன் பெரிதாகச் சிரித்தான். "என்னடா, சீரியசாத்தான் பேசறியா? அது எப்படி பலவீனமா இருக்கும்? அது நமக்கு எப்படி பயன்பட முடியும்?"

"ஒரு மனுஷன் கோபத்தை ரொம்ப நாளா மனசில வச்சுக்கிட்டிருக்கான்னா, அது அவனுக்கு எவ்வளவு பெரிய கெடுலா இருக்கும் தெரியுமா? பரஞ்சோதியோட அப்பா இவர்கிட்ட பேச முயற்சி செஞ்சிருக்காரு, அவர் குடும்பத்தினரும் அவரை சமாதானப்படுத்த முயற்சி செஞ்சிருக்காங்க. ஆனா இவரு பிடிவாதமா தன் கோபத்தைக் கைவிடாம இருக்காரு. இப்படிப்பட்ட பலவீனம் உள்ளவரோட கோபத்தைத் தூண்டி விட்டு அவருக்கு நெருக்கமா இருக்கறவங்களையே அவருக்கு எதிரியா ஆக்கிடலாம்!"

"என்னவோ சொல்ற! சரி. ரெண்டாவது விஷயம்?"

"அவருக்கு ரத்ததில சர்க்கரை கட்டுப்படுத்த முடியாத அளவில இருக்கு!"

"இதுக்கு மொதல்ல சொன்னதே பரவாயில்ல போலருக்கு! ரத்தத்தில சக்கரை இருந்தா? அதனால சீக்கிரமே செத்துடுவாரு, அப்புறம் நமக்குப் போட்டி இருக்காதுன்னு சொல்றியா?"

"சேச்சே! அவர் நீண்ட நாள் நல்லா வாழட்டும். அவரோட சக்கரை அளவை அவரால கட்டுப்படுத்த முடியாததுக்குக் காரணம் அவர் உணவுக் கட்டுப்பாடு இல்லாம இருக்கறதுதானாம். மனவிக்குத் தெரியாம ஓட்டல்களுக்குப் போய் நிறைய ஸ்வீட் சாப்பிடுவாராம்."

"அதனால?"

"புரியலையா? அவரால தன்னோட மனசைக் கட்டுப்படுத்த முடியல. கோபம் ஆறாம மனசில வச்சுக்கறது, தன் மனசைக் கட்டுப்படுத்த முடியாதது - இந்த ரெண்டு பலவீனங்கள் உள்ள ஒத்தரைப் போட்டியில ஜெயிக்கறது கஷ்டம் இல்ல!" என்றான் ரகுபதி.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 87
பகைமாட்சி

குறள் 864:
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.

பொருள்: 
ஒருவன் சினம் நீங்காதவனாய், மனத்தை அடக்கியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால் அவன் எக்காலத்திலும் எவ்விடத்திலும் எவர்க்கும் (வீழ்த்துவதற்கு) எளியவன்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Tuesday, February 21, 2023

863. பட்டத்து இளவரசர்!

"அமைச்சரே! மூத்த மகனுக்குத்தான் பட்டம் கட்ட வேண்டும் என்பது மரபு. ஆனால் என் மூத்த மகன் பரகாலனுக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், இளைய மகன் அநிருத்தனுக்குப் பட்டம் கட்டலாமா என்று யோசிக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்றார் அரசர். 

"நாடு இருக்கும் நிலையில் நீங்கள் ஒரு சங்கடமான முடிவை எடுக்க வேண்டி இருக்கிறது அரசே! நம் அண்டை நாட்டு மன்னன் மகுடபதி நமக்கு அவ்வப்போது தொந்தரவு  கொடுத்து வருகிறான். எதிரியைச் சமாளிக்க நாம் வலுவாக இருக்க வேண்டும். பரகாலரின் உடல்நிலை சரியில்லாத நிலையில் அவர் மன்னரானால், எதிரி நம்மை பலவீனமாக நினைப்பான். அநிருத்தருக்கு முடிசூட்ட வேண்டும் என்று நீங்கள் நினைப்பது சரியான முடிவு!" என்றார் அமைச்சர்.

"சரி. அப்படியே செய்து விடுகிறேன். பரகாலன் ஓய்வெடுத்துக் கொண்டு தன் உடல்நிலையை மேம்படுத்திக் கொள்வதுதான் முக்கியம் என்பதை அவனிடம் சொல்லிப் புரிய வைக்கிறேன்!" என்றார் மன்னர்.

"நம் அரண்மனை வைத்தியர் இளவரசரை குணப்படுத்தி விடுவார். பரகாலர் ஓய்வெடுத்துக் கொண்டு வைத்தியர் கொடுக்கும் மருந்துகளை அருந்தி வந்தால் போதும். அநிருத்தர் மன்னர் பொறுப்பேற்று  எதிரிகளை முறியடிப்பார்!" என்றார் அமைச்சர்.

"என்ன அமைச்சரே! என்னை இப்படி ஒருதர்மசங்கடத்தில் மாட்டி விட்டு விட்டீர்களே! பரகாலருக்கு வந்த சாதாரண மயக்கத்தைப் பெரிய நோய் என்றும், அவர் ஓய்வில் இருந்து பல ஆண்டுகள் மருந்து உட்கொண்டால்தான் அவருக்கு நோய் குணமாகும் என்றும் சொல்ல வைத்து விட்டீர்களே!" என்றார் அரண்மனை வைத்தியர்.

"பரகாலருக்கு நோய் இருப்பது உண்மைதானே!" என்றார் அமைச்சர்.

"என்ன நோய்! அதிகமாக மது அருந்தி, கேளிக்கைகளில் ஈடுபட்டதால் மயங்கி விழுந்து விட்டார்  அவர் உடலில் வேறு எந்த நோயையும் நான் காணவில்லையே!"

"அவருக்குப் பல நோய்கள் இருக்கின்றன. நீங்கள் நாடியைப் பிடித்துப் பார்த்தால் அவை புலப்பட மாட்டா! அவரை அருகில் இருந்து பார்த்ததால் அவை என் புலன்களுக்குத் தென்பட்டன!"

"அப்படி என்ன நோய்கள் அவை?"

"நாட்டை ஆளும் மன்னனுக்கு இருக்கக் கூடாத நோய்கள்! பரகாலர் அச்சம் மிகுந்தவர். எந்த ஒரு விஷயத்திலும் துணிவாக முடிவெடுக்க மாட்டார். சிந்திக்கும் திறனும் குறைவு. நீங்களே சொன்னீர்கள். அவர் அதிகம் மது அருந்தி, கேளிக்கைகளில் ஈடுபட்டதாக. ஒரு அரசனுக்கு இருக்கக் கூடாத பண்புகள் இவை. மற்றவர்களுக்கு ஈயும் பழக்கமும் அவரிடம் இல்லை. இவற்றைத்தான் நான் நோய்கள் என்று சொன்னேன். இந்த நோய்கள் உள்ள ஒருவரை எதிரியால் எளிதாக வென்று விட முடியும். அப்படிப்பட்டவர் அரசரானால் இந்த நாட்டுக்கு எத்தகைய பேராபத்து விளையும்! அதனால்தான் அவருக்கு வந்திருப்பது பெரிய நோய் என்று சொல்லும்படி உங்களிடம் கேட்டுக் கொண்டேன். இனி பரகாலர் அரண்மனையில் ஓய்வாக இருந்து கொண்டு நீங்கள் கொடுக்கப் போகும் தாது புஷ்டி லேகியங்களை அருந்தி வருவார்! அநிருத்தர் மன்னராகி எதிரிகளை வீழ்த்தி நம் நாட்டை உயர்த்துவார். நீங்கள் நாட்டுக்கு எத்தகைய நன்மை செய்திருக்கிறீர்கள் என்று புரிகிறதா?"

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 87
பகைமாட்சி

குறள் 863:
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.

பொருள்: 
ஒருவன் அஞ்சுகின்றவனாய், அறிவு இல்லாதவனாய், பொருந்தும் பண்பு இல்லாதவனாய், பிறர்க்கு ஒன்று ஈயாதவனாய் இருந்தால், அவன் பகைவர்க்கு மிக எளியவன்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Monday, February 13, 2023

673. "நிறைவேற்றப்படாத" வாக்குறுதி

"நம்ம தேர்தல் வாக்குறுதிகள் எல்லாத்தையுமே நிறைவேற்றிட்டோம்!" என்றார் 'மக்கள் நலன் கட்சி'யின் தலைவர் முத்தையன் பெருமையுடன்.

"ஒண்ணைத் தவிர!" என்றார் முதலமைச்சர் அறிவொளி.

"என்னங்க நீங்க? எதிர்க்கட்சித் தலைவர் மாதிரி பேசறீங்க! நாம கொடுத்த 237  வாக்குறுதிகள்ள 236-ஐ நிறைவேற்றிட்டோம். இதுவரையில யாருமே செய்யாத சாதனை இது. எதிர்க்கட்சிக்காரங்க பேசறதுக்கு எதுவும் இல்லாம வாயடைச்சுப் போய் நிக்கறாங்க. ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்ற நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டீங்கங்கறதை நாங்க எல்லாரும் பக்கத்தில இருந்து பார்த்திருக்கோம். நிறைவேற்றக் கடினமான வாக்குறுதிகளைக் கூட எப்படியோ கஷ்டப்பட்டு நிறைவேற்றிட்டீங்க. இதுக்காக உங்களுக்குப் பாராட்டு விழா நடத்த அரசியல் சார்பு இல்லாத சில அமைப்புகள்  முயற்சி எடுத்துக்கிட்டிருக்காங்க. நீங்க என்னன்னா ஒரு கோரிக்கையை மட்டும் நிறைவேற்றலையேன்னு வருத்தப்பட்டுக்கிட்டிருக்கீங்க!"

"இல்லை தலைவரே! பதவிக்கு வந்தா இந்த 237 வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்னு தேர்தல் பிரசாரத்தில சொன்னோம் இல்ல? அதன்படி நடந்துக்க வேண்டாமா?"

"எல்லா வாக்குறுதிகளையுமே நிறைவேற்ற முடியுங்கற நம்பிக்கையிலதான் கொடுக்கறோம். சிலதை நிறைவேற்ற முடியாம போறது  நடக்கறதுதான். ஆனா ஒரு வாக்குறுதியைத் தவிர மற்ற எல்லாவற்றையும் நிறைவேற்றின முதலமைச்சர் உங்களைத் தவிர வேறு யாரும் இல்லை. ஒன்றிய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் மாநில அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கணும்னு நாம சட்டசபையில தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பிட்டோம். அவங்க அரசியல் காரணங்களுக்காக அந்தத் தீர்மானத்துக்கு அங்கீகாரம் கொடுக்காம அதைக் கிடப்பில போட்டிருக்காங்க. மக்களுக்கு இது நல்லாவே தெரியும். அதனால உங்க மேல தப்பு இல்லைன்னு அவங்க புரிஞ்சுப்பாங்க."

"ஆனா எனக்கு மனசு சமாதானம் ஆகல. அதை நிறைவேற்ற ஏதாவது வழி கண்டுபிடிக்கணும். அதான் யோசிச்சுக்கிட்டிருக்கேன்!" என்றார் முதல்வர்.

சில மாதங்களுக்குப் பிறகு, ஒரு புலனாய்வுப் பத்திரிகையில் 'நான் சொல்லும் ரகசியம்' என்ற பகுதியில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.

"மத்தியில் ஆளும் கட்சியான 'ஒரே தேசம் கட்சி'க்கு மாநில சட்டப் பேரவையில் ஒரு உறுப்பினர் கூட இல்லை. அப்படி இருக்க சமீபத்தில் நடைபெற்ற மாநிலங்கள் அவைக்கான தேர்தலில் அந்தக் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றது எப்படி? நம் நிருபர்கள் சேகரித்த ரகசியத் தகவல்கள் இவை.

"சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய ஐந்து  மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில், சட்ட மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆளும் கட்சியான 'மக்கள் நலன் கட்சி'க்கு மூன்று இடங்களும், எதிர்க்கட்சிகளுக்கு இரண்டு உறுப்பினர்களும் கிடைத்திருக்க வேண்டும். 

"ஆனால் இரண்டு எதிர்பாராத விஷயங்கள் நடந்தன. 'மக்கள் நலன் கட்சி'யின் கூட்டணிக் கட்சியான 'மக்கள் உரிமைக் கட்சி' தங்களுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் சீட் வேண்டும் என்று கேட்டு, 'மக்கள் நலன் கட்சி' அதற்கு ஒப்புக் கொள்ளாததால் தங்கள் கட்சியைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் வாக்களிக்க மாட்டார்கள் என்று அறிவித்தது.

"இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் சார்பாக மூன்றாவது வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடிவு செய்யப்பட்டு அந்த இடம் 'ஒரே தேசம் கட்சி'க்கு ஒதுக்கப்பட்டது. 'மக்கள் உரிமைக் கட்சி' உறுப்பினர்கள் நான்கு பேர் வாக்களிக்காததால் 'ஒரே தேசம் கட்சி' வேட்பாளர் ஒரு வாக்கு அதிகம் பெற்று வெற்றி பெற்று விட்டார், எதிர்பாராத இந்தத் தோல்வியால் 'மக்கள் நலன் கட்சி' பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது. 

"'மக்கள் உரிமைக் கட்சி' ஆளும் கட்சிக் கூட்டணியிலிருந்து எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு மாறுமா, இதனால் மாநிலத்தில் பெரும் அரசியல் மாற்றங்கள் நிகழுமா போன்ற கேள்விகள் அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்துள்ளன."

"என்னங்க இப்படி ஆயிடுச்சு? ஏன் 'மக்கள் உரிமைக் கட்சி'க்காரங்க திடீர்னு இப்படி நடந்துக்கறாங்க?" என்றார் முத்தையன் கவலையுடன்.

"கொஞ்சம் பொறுமையா இருங்க. கிளைமாக்ஸ் இனிமேதான் இருக்கு!" என்றார் அறிவொளி சிரித்தபடி.

ரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஒன்றிய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் மாநில அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 10 சதவீத இடங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற மாநில அரசின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதாக ஒன்றிய அரசு அறிவித்தது.

'முதல்வர் 237-ஆவது தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றிச் சாதனை படைத்து விட்டார். மாநிலங்களவைத் தேர்தலில் நாங்கள் கேட்டுக் கொண்டபடி எங்களுக்கு ஒரு இடம் வழங்கவில்லை என்பதால் நாங்கள் தேர்தலில் வாக்களிக்காமல் இருந்தது எங்கள் எதிர்ப்பைக் காட்டத்தான். அது முடிந்து போன விஷயம். முதல்வரை நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம். 'மக்கள் நலன் கட்சி'யுடனான எங்கள் கூட்டணி என்றும் தொடரும் கூட்டணி!" என்று 'மக்கள் உரிமைக் கட்சி' அறிக்கை வெளியிட்டது.

"இதெல்லாம் உங்க ஏற்பாடுதானா?" என்றார் முத்தையன் வியப்புடன்.

"என்ன செய்யறது?  ஒரு செயலை நிறைவேற்ற இயல்பான வழிகள் பயன் தரலேன்னா புதுசா ஒரு வழியைக் கண்டறியத்தான் வேணும். நமக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் கிடைக்காம போனாலும் 'ஒரே தேசம் கட்சி'க்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் கிடைக்க வகை செஞ்சு நமக்கு வேண்டியதை அவங்ககிட்ட கேட்டுப் பெற்று நாம் செய்ய வேண்டியதைச் செஞ்சு முடிச்சுட்டோம் இல்ல?" என்றார் அறிவொளி திருப்தியுடன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 68
வினை செயல்வகை

குறள் 673:
ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்.

பொருள்:
இயலும் இடங்களில் எல்லாம் செயல் முடிப்பது நலம் தரும். இயலாத இடமாயின் அதற்கேற்ற வழியை அறிந்து அந்தச் செயலை முடிக்க வேண்டும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Sunday, February 12, 2023

862. படை உதவி

"அரசே! காளிங்க நாட்டு மன்னர் ஓலை அனுப்பி இருக்கிறார். நந்தி நாடு அவர்கள் மேல் படையெடுத்து வரத் தயாராகிக் கொண்டிருக்கிறதாம். நம் படையை உடனே அனுப்பி உதவ வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறார்."

"காளிங்க நாட்டு மன்னர் என் உற்ற நண்பர். அவர் உதவி கேட்டால் செய்யாமல் இருக்க முடியுமா? நம் படைகளில் ஒரு பகுதியை உடனே அனுப்புங்கள்!"

"அரசே! மன்னிக்க வேண்டும். தற்போதைய சூழலில் காளிங்க நாட்டுக்கு உதவியாக நம் படைகளை அனுப்புவது உசிதம் அல்ல என்பது என் பணிவான கருத்து!"

"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் அமைச்சரே? நந்தி நாட்டின் படை வலிமை வாய்ந்தது என்று அஞ்சுகிறீர்களா? நம் இரு நாட்டுப் படைகளும் சேர்ந்து போரிட்டால் நந்தி நாட்டுப் படைகளை முறியடிக்க முடியாதா?"

"நந்தி நாட்டின் படை வலிமை வாய்ந்தது என்பதால் மட்டும் நான் அப்படிச் சொல்லவில்லை. காளிங்க நாடு மிகவும் வலுவற்ற நிலையில் இருக்கிறது. அவர்களால் போரில் வெல்ல முடியாது. அவர்களுக்கு உதவியாகப் போனால் நம் படைகளுக்கும் சேதம்தான் ஏற்படும்."

"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? காளிங்க நாட்டின் படை வலிமை வாய்ந்ததுதானே! போரில் அவர்களால் வெல்ல முடியாது என்று எப்படிச் சொல்கிறீர்கள்?"

"காளிங்க நாட்டின் படை வலிமையை நான் குறைத்து மதிப்பிடவில்லை அரசே. அந்த நாட்டின் நிலையை வைத்துச் சொல்கிறேன்!"

"நீங்கள் சொல்வது புரியவில்லை அமைச்சரே!"

"அரசே! தங்கள் நண்பரைப் பற்றி நான் தவறாகக் கூறுவதாக நினைக்கக் கூடாது. உண்மை நிலையைக் கூறுகிறேன். தாங்கள் நம் நாட்டு மக்கள் மீது எவ்வளவு அன்பு செலுத்துகிறீர்கள்! மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்தி அவற்றைத் தீர்க்கும் வகை பற்றிச் சிந்திக்கிறீர்கள். ஆனால் காளிங்க நாட்டு மன்னர் மக்கள் மீது சிறிதும் அக்கறை இல்லாமல் இருக்கிறார். மக்கள் பிரச்னைகளைப் பற்றிக் கவலைப்படாமல் தான் இன்னும் அதிக உல்லாசமாக வாழ்வதற்கான செயல்களை மட்டுமே செய்து கொண்டிருக்கிறார். அதனால் மக்கள் அரசரின் மீது கோபமும் வெறுப்பும் கொண்டிருக்கிறார்கள். நம் ஒற்றர்கள் அளிக்கும் தகவல் இது!"

"நானும் இது பற்றிக் கேள்வியுற்றேன். ஆனால் இதனால் மட்டும் அவர்கள் போரில் தோற்று விடுவார்கள் என்ன்று சொல்ல முடியுமா?"

"வேறு காரணங்களும் இருக்கின்றன அரசே. காளிங்க நாட்டு மன்னர் தங்ளைப் போல் ஆற்றல் மிகுந்தவர் அல்ல என்பது மற்றொரு காரணம்."

"என்னைப்  புகழ வேண்டாம் அமைச்சரே!"

"நான் கூறியது தவறுதான் அரசே! அவர் தங்களுடன் ஒப்பிடத் தக்கவரே அல்ல! அவர் ஆற்றலில் மிகவும் குறைந்தவர் என்பதுதான் எனக்குக் கிடைத்த தகவல்!"

"இன்னொரு காரணமும் இருக்கிறது அமைச்சரே! தன்னடக்கத்தால் நீங்கள் அதைச் சொல்லவில்லை என்று நினைக்கிறேன்!"

"அரசே! தாங்கள் சொல்ல வருவது..."

"அரசனுக்குச் சரியான ஆலோசனை கூறி அவனை முறையாக வழி நடத்தக் கூடிய உங்களைப் போன்ற அறிவார்ந்த துணை காளிங்க நாட்டு மன்னருக்கு இல்லை. சரிதானே?"

"அவரிடம் இருந்த நல்ல அமைச்சர்கள் அவரை விட்டு விலகி விட்டார்கள். தவறாக வழிநடத்துபவர்களையே அவர் தன்னுடன் வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது உண்மைதான்!"

"தற்போதைய நிலையில் நம்மால் படைகளை அனுப்பி உதவ முடியாது என்று மென்மையாகத் தெரிவித்துக் காளிங்க நாட்டு மன்னருக்கு ஓலை அனுப்பி விடுங்கள். நந்தி நாட்டின் படையெடுப்பிலிருந்து காளிங்க நாட்டைக் காபாற்றும்படி இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன், படை உதவி செய்ய முடியவில்லை. இந்த அடிப்படை உதவியையாவது செய்கிறேன்!""

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 87
பகை மாட்சி

குறள் 862:
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு.

பொருள்: 
மக்களிடத்தில் அன்பு இல்லாத, வலுவான துணையும் இல்லாத, ஆற்றலும் அற்ற அரசின் மீது ஆற்றல் மிக்க பகை வந்தால், அப்பகையின் வலி‌மையை அந்த அரசால் எப்படி அழிக்க முடியும்?
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

672. அமைச்சரின் துணிவு!

"அமைச்சரே! இளவரசனுக்காகத் தனி மாளிகை கட்டும் பணி எந்த அளவில் இருக்கிறது?"

"இன்னும் அதற்கான பணி துவங்கவில்லை அரசே!"

"ஏன்?"

"அதற்குத் தேவையான நிதி தற்போது இல்லை .நிதி நிலை மேம்பட்டதும் அந்தப் பணி துவங்கப்பட்டு விடும்!"

"அமைச்சரே! மாளிகை கட்டுவதற்காக  தனாதிகாரி நிதி ஒதுக்கி இருந்தும், நீங்கள் அதை அதற்காகப் பயன்படுத்தவில்லை என்று கூறுகிறாரே!"

"ஆம் அரசே! அந்த நிதியை வேறொரு நோக்கத்துக்காகப் பயன்படுத்தச் சொல்லி விட்டேன்!"

"எந்த நோக்கத்துக்காக?"

"அரசே! ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் வருணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதன் கரையில் வசிக்கும் மக்களுக்கு உயிர்ச்சேதமும், உடமைச் சேதமும் ஏற்படுகிறது. ஒரு தடுப்பணை கட்டினால் மழை நீரைத் தேக்கி வெள்ளம் வராமல் தடுப்பதுடன் விவசாய உற்பத்தியையும் அதிகரிக்க முடியும்!"

"ஆமாம். இந்தத் திட்டம் கடந்த சில ஆண்டுகளாகவே நம் கவனத்தில் இருக்கிறது. ஆனால் அதற்கான போதுமான நிதி ஆதாரம் இல்லை என்பதால் அந்தத் திட்டம் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. நீங்கள் சொல்வதைப் பார்த்தால்..."

"நீங்கள் நினைப்பது சரிதான் அரசே! இப்போது நம் நிதி ஆதாரம் மேம்பட்டிருக்கிறது. ஆனால் இப்போது இளவரசருக்கான மாளிகை கட்டப் பணம் ஒதுக்கினால் இந்தத் தடுப்பணைக்குத் தேவையான நிதி இருக்காது. அதனால்தான் மாளிகை கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியைத் தடுப்பணை கட்டுவதற்காகப் பயன்படுத்திக் கொண்டேன் - அது அவசரமானதும், முக்கியமானதும் என்பதால்."

"அமைச்சரே! இளவரசனுக்குத் திருமணம் நடக்கப் போகிறது. அவனுக்குத் தனி மாளிகை இருக்க வேண்டியது அவசிம் அல்லவா?"

"அவசியம்தான் அரசே. ஆனால் அவசரம் இல்லை என்பதைத் தாங்கள் ஒப்புக் கோள்வீர்கள் என்று நினைக்கிறேன்! தனி மாளிகை கட்டப்படும் வரையில் அரண்மனையில் தான் தற்போது வசிக்கும் பகுதியிலேயே திருமணத்துக்குப் பிறகும் சிறிது காலம் வசிப்பதை இளவரசர் வசதிக் குறைவாக நினைக்க மாட்டார் என்று கருதுகிறேன்! நான் அவரிடம் இது பற்றிப் பேசியபோது, தடுப்பணை கட்ட வேண்டியதுதான் முக்கியம் என்று இளவரசரே என்னிடம் கூறினார்!"

"அமைச்சரே! உங்களுக்குத் துணிவு அதிகம்தான், மன்னர் குடும்பத்தின் வசதியை விட மக்கள் நலன் முக்கியம் என்று நினைத்துச் செயல்பட்டிருக்கறீர்களே! இந்தத் துணிவு எங்கிருந்து வந்தது?"

"மக்கள் நலனே முக்கியம் என்று கருதி அரசாட்சி செய்யும் மன்னரிடம் அமைச்சராக இருக்கும் பேறு கிடைத்ததன் விளைவாக வந்தது அரசே!". 

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 68
வினை செயல்வகை

குறள் 672:
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.

பொருள்:
காலம் தாழ்த்தி செய்யத் தக்கவற்றைக் காலம் தாழ்ந்தே செய்ய வேண்டும், காலம் தாழ்த்தாமல் விரைந்து செய்யவேண்டிய செயல்களைச் செய்யக் காலம் தாழ்த்தக் கூடாது

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

671. துணை நகரம்

முதல்வர் தலைமையில் கூடிய அமைச்சரவையில் தலைநகருக்கு அருகில் உள்ள ஒரு ஊரில் ஒரு துணைநகரம் அமைப்பது பற்றி விவாதிக்கப்பட்டது.

"நமக்கு முன்னால எவ்வளவோ பிரச்னைகள் இருக்கு. துணைநகரம் பற்றி இப்ப எதுக்கு சிந்திக்கணும்?" என்றார் மூத்த அமைச்சர் கார்வண்ணன்.

"நல்ல கேள்வி. ஒரு செயல்ல இறங்கறதுக்கு முன்னால அந்தச் செயல் அவசியம்தானான்னு தீர்மானிக்க வேண்டியது முக்கியம். அதனாலதான் துணைநகரம் அமைக்கறது பற்றி ஆராய ஒரு வல்லுனர் குழுவை அமைச்சோம். வல்லுனர் குழு துணைநகரம் அவசியமா, அது ஏன் அவசியம், அதை அமைக்கறதால என்ன நன்மைகள் கிடைக்கும், அமைக்கலேன்னா என்ன பிரச்னைகள் வரும் என்கிற கேள்விகள்ள ஆரம்பிச்சு, எந்த இடத்தில அமைக்கறது, எப்படி அமைக்கறது, அதற்கான படிகள் என்ன, ஒவ்வொரு படியிலும் என்ன சவால்கள் இருக்குங்கற மாதிரி பல கேள்விகளை ஆராய்ஞ்சு ஒரு விரிவான அறிக்கை கொடுத்திருக்கு. அந்த அறிக்கையோட முக்கிய அம்சங்களைத் திட்ட அமைச்சர் சுருக்கமா ஒரு அறிக்கையாத் தயாரிச்சு உங்க எல்லாருக்கும் கொடுத்திருக்காரு. நீங்க எல்லாரும் அதைப் படிச்சுப் பாத்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்!" என்ற முதல்வர் தன் பேச்சை நிறுத்தி விட்டு அனைவர் முகத்தையும் பார்த்தார்.

கார்வண்ணன் அப்போதுதான் அந்த அறிக்கை தன் கோப்பில் இருக்கிறதா என்று தேடத் துவங்கினார்.

"சரி. சில பேரு படிச்சிருக்க மாட்டீங்க. இப்ப திட்ட அமைச்சர் அதைச் சுருக்கமா உங்களுக்கு எடுத்துச் சொல்லுவார்" என்றார் முதல்வர்

துணைநகரம் பற்றிய அறிக்கையின் சாராம்சத்தைத் திட்ட அமைச்சர் விளக்கிக் கூறிய பிறகு, அது பற்றி நீண்ட நேரம் விவாதம் நடந்தது. பிறகு, துணைநகரம் அமைப்பது என்பதை அமைச்சரவை கொள்கை அளவில் ஏற்றுக் கொள்வதாக முடிவு செய்யப்பட்டது.

"சரி. அப்ப இந்த அமைச்சரவைக் கூட்டத்தை நிறைவு செய்யலாம்னு நினைக்கிறேன்!" என்றார் முதல்வர்.

"சார்! ஒரு நிமிஷம்!" என்றார் திட்ட அமைச்சர்.

"சொல்லுங்க!" என்றார் முதல்வர்.

"ஒரு முடிவை எடுத்தப்பறம் அந்த முடிவைச் செயல்படுத்தறதுக்கான செயல்பாட்டை உடனே துவங்கணும்னு நினைக்கிறேன்!" என்றார் திட்ட அமைச்சர் தயக்கத்துடன்.

கார்வண்ணன் பெரிதாகச் சிரித்து விட்டு, "தம்பி! நீங்க படிச்சவர், இளைஞர்ங்றதுக்காக முதல்வர் உங்களுக்கு இந்த முக்கியமான துறையைக் கொடுத்திருக்காரு. அரசாங்கம் எப்படிச் செயல்படும்னு உங்களுக்குத் தெரியல. ஒரு முடிவை அறிவிச்சவுடனேயே அதைச் செயல்படுத்தற வேலைகளை ஆரம்பிச்சுட முடியாது. நாம இந்தக் கொள்கை முடிவை அறிச்சவுடனேயே பல முனைகளிலேந்து எதிர்ப்பெல்லாம் கிளம்பும். அதையெல்லாம் சரி பண்ணிட்டு அப்புறம்தான் வேலைகளை ஆரம்பிக்க முடியும்!" என்றார்.

"இல்லை அண்ணே! தம்பி சொல்றதுதான் சரி. நாம எவ்வளவோ விஷயங்களை அறிவிச்சுட்டு அதை உடனே செயல்படுத்தாததால, நாளடைவில பல பிரச்னைகள் ஏற்பட்டு, அதுக்கப்பறம் அறிவிச்ச சில விஷயங்களைக் கைவிட வேண்டி நேர்ந்திருக்கு. ஒரு விஷயத்தை நல்லா ஆராய்ஞ்சு, அதைச் செய்யறதுன்னு முடிவு செஞ்சப்பறம் உடனே செயல்பாட்டைத் தொடங்கறதுதான் சரி. நாம தேர்ந்தெடுத்திருக்கற ஊரைத் துணை நகரம்னு அறிவிச்சு உடனே அரசாணை பிறப்பிக்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டதுன்னு தீர்மானத்தில சேர்த்து நாளைக்கே அரசாணை வெளியிட்டுடுங்க. அந்த ஆணை வெளி வந்துடுச்சுன்னா அப்பறம் மற்ற பணிகளைத் திட்ட அமைச்சகம் உடனே துவங்கிடும்!" என்றார் முதல்வர் திட்ட அமைச்சரைப் பார்த்துப் புன்னகை செய்தபடியே.  

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 68
வினை செயல்வகை

குறள் 671:
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.

பொருள்:
ஓர் ஆலோசனையின் முடிவு, செயலைச் செய்யும் துணிவைப் பெறுவதே, பெற்ற அத்துணிவைச் செயலாக்கக் காலம் தாழ்த்தினால் அது தீமையாகும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Saturday, February 11, 2023

861. இப்போது மட்டும் ஏன் இப்படி?

"சூப்பர்வைசரை எதிர்த்துப் பேசறது ஒழுங்கு மீறல். அதனால சங்கரை ஒரு வாரம் சஸ்பெண்ட் பண்ணிடுங்க!" என்றார் பொது மேலாளர் சிவகுரு.

பர்சனல் மானேஜர் தனஞ்சயன் சற்றுத் தயக்கத்துடன், "சார்! இது கொஞ்சம் கடுமையான தண்டனையா இருக்கு. இந்தத் தப்புக்காக சஸ்பெண்ட் பண்ணணுமா? வார்னிங் கொடுத்து விட்டுடலாமே!" என்றார்.

"இல்லை மிஸ்டர் தனஞ்சயன். சங்கர் ஒரு யூனியன் லீடர். அவருக்குக் கொஞ்சம் கடுமையான தண்டனை கொடுத்தாத்தான் மத்த தொழிலாளிகளுக்கு பயம் இருக்கும். சஸ்பென்ஷங்கறது அவ்வளவு பெரிய தண்டனை இல்லை. ஆனா ஒரு யூனியன் லீடரை நாம சஸ்பெண்ட் பண்ணினா அது அவருக்குப் பெரிய அவமானம். அதனால மற்ற தொழிலாளர்களுக்கு பயம் வரும். அவங்க இன்னும் கொஞ்சம் கட்டுப்பாடோட இருப்பாங்க. சங்கரைப் பொருத்தவரை அவருக்கு இது ஒரு பலவீனமா இருக்கும். அதனால எதிர்காலத்தில அவர் நம்மோட மோதறதுக்கு பயப்படுவாரு!" என்று விளக்கினார் சிவகுரு.

"சார்! நீங்க தப்பா நினைக்கலேனா ஒண்ணு கேக்கலாமா?"

"கேளுங்க!"

"இதுக்கு முன்னால யூனியன் தலைவரா இருந்த தனபால் பல சமயங்கள்ள இதை விட மோசமா நடந்துக்கிட்டிருக்காரு. சூப்பர்வைசர்களெல்லாம் அவரைப் பார்த்து பயப்படுவாங்க. அவர் பிரச்னை பண்ணினப்பல்லாம் அவரைக் கூப்பிட்டுப் பேசி சமாதானமாப் போயிருக்கமே தவிர, ஒரு தடவை கூட அவர் மேல நடவடிக்கை எடுக்கலையே! இப்ப மட்டும் ஏன் கடுமையான நடவடிக்கை எடுக்கணும்னு சொல்றீங்க?" என்றார் தனஞ்சயன்.

"தனபால் முரட்டுத்தனமா செயல்படறவரு. தைரியசாலி. அவர் ஒரு வலுவான தலைவரா இருந்தாரு. அவர் என்ன சொன்னாலும் தொழிலாளர்கள் கேட்பாங்க. அவர் மேல கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தா, அவர் தொழிலாளர்களை வேலைநிறுத்தம் செய்யச் சொல்லி இருப்பாரு .அவங்களும் அவர் சொன்னதைக் கேட்டு வேலைநிறுத்தத்தில ஈடுபட்டிருப்பாங்க. நமக்குப் பெரிய பிரச்னை வந்திருக்கும். புரொடக்‌ஷன் நின்னு போய் கம்பெனிக்கு இழப்பு ஏற்பட்டிருக்கும். அதைத் தவிர்க்கத்தான் அவரோட ஒத்துப் போக வேண்டி இருந்தது. இப்ப அவர் ரிடயர் ஆயிட்டாரு. அவர் இடத்துக்கு சங்கர் வந்திருக்காரு. ஆனா சங்கர் அவ்வளவு வலுவானவர் இல்ல. வேலைநிறுத்தம் மாதிரி செயல்கள்ள இறங்க மாட்டாரு. அவர் ஸ்டிரைக் பண்ணச் சொன்னாலும் எல்லாத் தொழிலாளர்களும் அவர் சொல்றதைக் கேட்டு ஸ்டிரைக் பண்ண மாட்டாங்க. எதிரி பலசாலியா இருக்கறப்ப நாம அவனோட மோதறதைத் தவிர்க்கத்தான் செய்யணும். எதிரி பலவீனமானவனா இருந்தா இறங்கி அடிக்கலாம் இல்ல?"

தன் விளக்கத்தைத் தானே ரசிப்பது போல் சிரித்தார் சிவகுரு

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 87
பகைமாட்சி

குறள் 861:
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.

பொருள்: 
பகைவர் நம்மிலும் வலியர் என்றால் அவரை எதிர்ப்தைத் தவிர்க்க வேண்டும்; மெலியர் என்றால் உடனே எதிர்த்துச் செயல்பட வேண்டும்.

அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

860. ஏழரை நாட்டுச் சனி!

"என்னங்க இது? ஒரு சின்ன வாக்குவாதம். அது நடந்து ஒரு மாசம் ஆச்சு. அதுக்காக எங்கிட்ட கோவிச்சுக்கிட்டு, இன்னும் எங்கிட்ட பேசாம இருக்கீங்களே!" என்றாள் பூங்கோதை.

"சண்டை போட்டா கோபம் இருக்கத்தான் செய்யும்!" என்றான் குமார்.

"அதுக்காக எங்கிட்ட பேசாமயே இருந்துடுவீங்களா? எத்தனை நாளுக்கு இப்படி இருப்பீங்க? ஆயுள் பூராவா?" என்றாள் பூங்கோதை கோபத்துடன்.

"நீ என் மனைவிங்கறதால உங்கிட்ட சமாதானம் ஆகி இப்ப பேசறேன். மத்தவங்கன்னா பேச மாட்டேன்!"

"இப்படி இருந்தீங்கன்னா, எல்லோரையும் விரோதிச்சுக்கிட்டு இருக்க வேண்டியதுதான். நமக்கு உதவி செய்ய யாரும் இருக்க மாட்டாங்க!"

"மத்தவங்க உதவி எனக்குத் தேவையில்லை!" என்றான் குமார் விறைப்புடன். 

"குமாருக்கு இப்ப ஏழரை நாட்டுச் சனி. அதான் எல்லோரோடயும் விரோதம், ஆஃபீஸ்ல, சொந்தக்காரங்ககிட்ட, அக்கம்பக்கத்திலன்னு எல்லார்கிட்டேயும் மனஸ்தாபம். பல பேரோட பேச்சு வார்த்தை கூட இல்ல!" என்றாள் குமாரின் தாய் கமலா.

'ஏன் அத்தை, உங்க பிள்ளை எல்லார்கிட்டேயும் சண்டை போட்டுக்கிட்டு அவங்களோட விரோதபாவத்தோட இருந்தா அதுக்கு சனி என்ன செய்யும்?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட பூங்கோதை, கணவனை மாற்றுவது எப்படி என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

"ஏழெட்டு வருஷம் கஷ்டப்பட்டப்பறம், இப்பதான் குமாருக்கு நல்லது நடக்க ஆரம்பிச்சிருக்கு. ஆஃபீஸ்ல புரொமோஷன் கிடைச்சிருக்கு. சொந்தக்காரங்க மனஸ்தாபத்தை மறந்துட்டு வந்து போறாங்க. அக்கம்பக்கத்தில கூட எல்லாரும் நட்பா இருக்காங்க!" என்றாள்  கமலா.

"உங்க பிள்ளை இப்ப ரொம்ப மாறிட்டாரு அத்தை. யாரோடயும் சண்டை போடறதில்ல. எப்பவாவது யார்கிட்டயாவது மனஸ்தாபம் வந்தாலும், அதை மனசில வச்சுக்காம அவங்களோட இனிமையாப் பழகறாரு. ஆஃபீஸ்ல யாரோடயும் சண்டை போடாம அனுசரிச்சுப் போனதாலதான் மேலதிகாரிகள்கிட்ட நல்ல உறவு ஏற்பட்டு, தனக்குப் பதவி உயர்வு கிடைச்சதா அவரே சொல்றாரு!" என்றாள் பூங்கோதை.

"ஒரு மனுஷனுக்கு நேரம் நல்லா இல்லாதப்ப அவனோட புத்தியும் சரியா இருக்காது. ஏழரை நாட்டுச் சனி ஆட்டி வச்சதாலதான் அவன் எல்லோரோடயும் சண்டை போட்டு விரோதத்தை வளர்த்துக்கிட்டான். இப்ப சனி விலகி நல்ல நேரம் வந்ததும், அவனோட சிந்தனையும் மாறிடுச்சு!" என்றாள் கமலா.

"அப்படின்னா இவ்வளவு வருஷமா அவரோட போராடி அவரைக் கொஞ்சம் கொஞ்சமா மாத்தினேனே, எனக்கு எந்தப் பங்கும் இல்லையா?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் பூங்கோதை.

அன்று இரவு மாமியார் கூறியதைக் கணவனிடம் கூறிய பூங்கோதை, "ஏழரை நாட்டுச் சனி இருந்தா நல்லது எதுவும் நடக்காதா? நீங்க என்னைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டதே உங்களுக்கு ஏழரை நாட்டுச் சனி இருந்தப்பதானே!"  என்றாள்.

"அப்படின்னா, என் வாழ்க்கையில வந்த ஏழரை நாட்டுச் சனி நீதான்!" என்றான் குமார் சிரித்தபடி.

பூங்கோதை அவனைக் கோபத்துடன் பார்த்தாள்.

"கோபிச்சுக்கக் கூடாதுன்னு எனக்கு அறிவுறுத்தி என்னை மாத்தினவ நீதானே! இப்ப நீயே கோபிச்சுக்கிட்டா எப்படி? நீ என்னோட இயல்பை மாற்றின, நன்மை செய்யும் சனி!" என்றான் குமார்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 86
இகல்

குறள் 860:
இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு.

பொருள்: 
ஒருவனுக்கு இகலால் துன்பமானவை எல்லாம் உண்டாகும், அதற்கு மாறான நட்பால் நல்ல நீதியாகிய பெருமித நிலை உண்டாகும்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Tuesday, February 7, 2023

670. உறுதியாகத் தேடுவோம்!

பொது மேலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெறப் போகும் நிலையில், தன் இடத்துக்கு இன்னொருவரை நியமிப்பதில் நிறுவனத் தலைவருக்கு உதவும் விதத்தில் பொது மேலாளர் பதவிக்கு வந்த விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து பொருத்தமான நபர்களின் விண்ணப்பங்களைத் தெரிவு செய்து கொண்டிருந்தார் மாசிலாமணி.

"இவரைப் பாருங்க. நிறையப் படிச்சிருக்காரு. நிறைய அனுபவம் இருக்கு. இவர் பொருத்தமானவரா இருப்பாருன்னு நினைக்கிறேன்!" என்றார் மாசிலாமணி.

விண்ணப்பத்தை விரைவாகப் பார்த்த நிறுவனத் தலைவர் மாரிமுத்து, "சரி வரச் சொல்லுங்க. இன்டர்வியூ பண்றப்ப நீங்களும் இருக்கணும்!" என்றார்.

மாசிலாமணியால் தெரிவு செய்யப்பட்ட பரத்வாஜ் என்ற நபர் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டு, அவரை மாரிமுத்துவும், மாசிலாமணியும் இன்டர்வியூ செய்தனர்.

இன்டர்வியூ முடிந்து பரத்வாஜ் சென்றதும், "என்ன நினைக்கறீங்க?" என்றார் மாரிமுத்து.

"நீங்க நினைக்கறதைத்தான் நானும் நினைக்கிறேன்!" என்றார் மாசிலாமணி சிரித்தபடி.

"நான் என்ன நினைக்கறேங்கறதைச் சரியாப் புரிஞ்சு வச்சிருக்கறதாலதானே இத்தனை வருஷம் என் எண்ணங்களுக்கு ஏற்ற விதத்தில இந்த நிறுவனத்தைச் சிறப்பா நிர்வகிச்சிருக்கீங்க! நீங்க ஓய்வு பெறப் போறது எனக்கு ஒரு பெரிய இழப்புதான்" என்ற மாரிமுத்து, "சரி, சொல்லுங்க!" என்றார், தொடர்ந்து.

"பத்து வருஷம் ரெண்டு பெரிய நிறுவனங்களில வேலை செஞ்சிருக்காரு. அதுல நல்ல அனுபவம் கிடைச்சிருக்கு. நல்லாவும் செயல்பட்டிருக்காருன்னுதான் தோணுது. அதுவரைக்கும் சரிதான். அதுக்கப்பறம் வேலையை விட்டுட்டு பத்து வருஷம் சொந்தத் தொழில் செஞ்சிருக்காரு. அங்கேதான் பிரச்னை!"

"வேலையை விட்டுட்டு சொந்தத் தொழில் ஆரம்பிச்சது தப்புங்கறீங்களா?" என்றார் மாரிமுத்து சிரித்தபடி.

"நான் சொல்லப் போறது உங்களுக்குத் தெரியும்.உங்க மனிசிலேயும் அதுதான் இருக்கு!" என்றார் மாசிலாமணி சிரித்தபடி.

"சொல்லுங்க. நீங்க சொல்ற விதம்தான் நல்லா இருக்கும்!"

"பத்து வருஷத்தில அஞ்சு தொழில் செஞ்சிருக்காரு! ஒரு தொழிலை ஆரம்பிச்சு அது சரியா வரலேன்னு இன்னொண்ணு, இது மாதிரி அஞ்சு தடவை முயற்சி செஞ்சுட்டு அஞ்சாவது முயற்சியையும் கைவிட்டுட்டு இப்ப வேலைக்கு முயற்சி செய்யறாரு."

"ஒரு தொழில் சரியா வரலைன்னா அதை விட்டுட்டு இன்னொண்ணை முயற்சி செய்யறதில என்ன தப்பு?"

"தப்பு இல்லை. ஒவ்வொரு தடவையும் அவருக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். ஆனா இது அவர் தன்னோட செயல்பாட்டில உறுதியா இல்லாம இருந்திருக்காருங்கற எண்ணத்தை ஏற்படுத்துதே! இந்த நிறுவனத்தை வழி நடத்தற உயர்ந்த பதவியை அவருக்குக் கொடுக்கலங்கற நம்பிக்கையை அவர் செல்பாடு ஏற்படுத்தலையே!"

"நீங்க சொல்ற மாதிரிதான் நானும் நினைக்கறேன். பேசாம உங்க ஓய்வு பெறுகிற முடிவைக் கைவிட்டுட்டு நீங்க வேலையில தொடருங்களேன்!" என்றார் மாரிமுத்து.

"அது எப்படி சார்? ஒத்தர் தன் செயல்பாட்டில உறுதியா இருக்கணும்னு இப்பதானே பேசிக்கிட்டோம்? அதனால புது ஜி எம்மைத் தேர்ந்தெடுக்கற நம் முயற்சியில தொடர்ந்து ஈடுபடுவோம்!" என்றார் மாசிலாமணி சிரித்தபடி.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 67
வினைத்திட்பம்

குறள் 670:
எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு.

பொருள்:
வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும், செய்யும் தொழிலில் உறுதி இல்லாதவரை உலகம் விரும்பிப் போற்றாது.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Monday, February 6, 2023

669. பட்ட அவமானம் போதாதா?

'கலியுக வள்ளல்' என்று அழைக்கப்பட்ட சுந்தரமூர்த்தியின் வீட்டிலிருந்து கண்ணன் ஏமாற்றத்துடன் வெளியே வந்த பிறகுதான் தமிழறிஞர் கந்தப்பனைப் பற்றித் தான் தயாரித்திருந்த தகவல் புத்தகத்தை சுந்தரமூர்த்தி வீட்டின் வரவேற்பறையிலிருந்த மேசை மீதே விட்டு விட்டு வந்தது நினைவுக்கு வந்தது.

அதை எடுத்து வர உள்ளே நுழைந்தபோது, "யாரோ ஒரு தமிழறிஞராம் அவர் எழுதின புத்தகங்களைப் பத்தி யாருக்குமே தெரியாதாம். அதையெல்லாம் வெளியிடப் போறேன், அதுக்குப் பணம் கொடுங்கன்னு கேட்டுக்கிட்டு வரான், பணம் சம்பாதிக்கறதுக்கு எப்படிப்பட்ட குறுக்கு வழியெல்லாம் யோசிக்கறாங்க பாரு!" என்று 'வள்ளல்' தன் மனைவியிடம் கூறிக் கொண்டிருந்தது கண்ணன் காதில் விழுந்தது.

கண்ணனைப் பார்த்ததும் சுந்தரமூர்த்தியின் முகம் சற்று மாறியது. "என்னப்பா! அதான் என்னால இதுக்கெல்லாம் பணம் கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டேனே! மறுபடி என்ன?' என்றார் அவர் எரிச்சலுடன்.

தான் பேசியதைக் கண்ணன் கேட்டு விட்டதால் ஏற்பட்ட தர்மசங்கடத்தை மறைக்கவே சுந்தரமூர்த்தி இப்படிக் கடுமையாகப் பேசுகிறார் என்பது கண்ணனுக்குப் புரிந்தது.

'தாக்குதல்தான் தற்காப்புக்குச் சிறந்த வழி (Offense is the best form of defense)' என்ற ஆங்கிலப் பழமொழியை உருவாக்கியவர் ஒரு மேதைதான் என்று நினைத்துக் கொண்டான் கண்ணன்.

"இல்லை சார். தகவல் புத்தகத்தை எடுத்துக்க மறந்துட்டேன். தொந்தரவுக்கு மன்னிச்சுக்கங்க!" என்று சிரித்துக் கொண்டே கூறி விட்டு அந்தப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு வெளியேறினான் கண்ணன்.

வெளியே வந்ததும், அவனுடன் வந்த அறிவழகன், "என்ன இப்படிப் பேசறாரு!" என்றான் கோபத்துடன்.

"விடு. ஒரு 'வள்ளலா' இருந்தும் தான் இந்த முயற்சிக்கு உதவலியேங்கற தன் குற்ற உணர்ச்சியை மறைச்சுக்கத்தான் இப்படிப் பேசறாரு!" என்றான் கண்ணன்.

"நீ என்ன சைகாலஜி படிச்சிருக்கியா என்ன? அவர் உன்னை அவமானப்படுத்திப் பேசினதுக்கு இப்படியெல்லாம் காரணம் கற்பிக்கற!" என்றான் அறிவழகன் வியப்புடன்.

"அடுத்தாப்பல யார் வீட்டுக்குப் போய் அவமானப்படப் போறோம்?" என்றான் அறிவழகன் தொடர்ந்து.

"பத்து பேர் இல்லைன்னு சொல்லி கதவைச் சாத்தினாலும் ஒத்தர் உதவி செய்ய மாட்டாரா? பார்க்கலாம்!" என்றான் கண்ணன்.

"கண்ணா! உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு. அதுவரைக்கும் நாம ஏழெட்டு பேரைப் பாத்துட்டோம். யாருமே உன்னோட இந்த ப்ராஜக்டுக்கு உதவத் தயாராயில்ல. எத்தனையோ அறிஞர்களோட நூல்களைத் தேடித் தேடிப் பதிப்பிக்கிற அரசாங்கம் கூட உன்னோட கோரிக்கைக்குச் செவி சாய்க்கல. ஆனா நீ விடாம இன்னும் முயற்சி பண்ணிக்கிட்டிருக்கியே! இப்படி கஷ்டப்படறது, அவமானப்படறது இதெல்லாம் உன்னைக் காயப்படுத்தலையா?"

நடந்து கொண்டிருந்த கண்ணன் சட்டென்று நின்றான். கண்களை மூடிக் கொண்டான்.

தான் சொன்னதைக் கேட்டு நண்பன் மனம் தளர்ந்த விட்டானோ என்ற அச்சம் அறிவழகனுக்கு ஏற்பட்டது.

கண்ணை மூடிக் கொண்டு ஒரு நிமிடம் மௌனமாக இருந்த கண்ணன் சட்டென்று கண்ணைத் திறந்து அறிவழகனைப் பார்த்தான்.

"அறிவு! எனக்கு மனசில ஒரு சிந்தனைதான் இருக்கு. என் முயற்சி வெற்றி அடைந்து அந்த அறிஞரோட ஆறு நூல்களையும் வெளியிட்டப்பறம் என் மனநிலை எப்படி இருக்கும்னு நினைச்சுப் பாக்கறேன். ஆகா! என்ன ஒரு இனம் தெரியாத மகிழ்ச்சி! என்ன ஒரு மனநிறைவு! இந்த உணர்வை நினைக்கும்போது நான் படற கஷ்டம், அவமானம் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டா தெரியல. நீ என்னோட வரது எனக்கு ஒரு பலமா இருக்கு. ஆனா உனக்கு இது கஷ்டமா இருந்தா..."

சட்டென்று அவனை இடைமறித்த அறிவழகன், "சேச்சே! உனக்கு இருக்கிற உணர்வில பத்தில ஒரு பங்காவது எனக்கு இருக்காதா? உன் முயற்சியில நான் எப்பவுமே துணையா இருப்பேன். நீ நிச்சயமா வெற்றி அடைஞ்சு, இப்ப நினைச்சுப் பாக்கற மகிழ்ச்சியையும், திருப்தியையும் உண்மையாகவே அனுபவிக்கத்தான் போற!" என்றான் கண்ணனின் கைகளைப் பற்றியபடி.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 67
வினைத்திட்பம்

குறள் 669:
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.

பொருள்:
(முடிவில்) இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும் போது துன்பம் மிக வந்த போதிலும் துணிவு மேற்கொண்டு செய்து முடிக்க வேண்டும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

668. தோல்வியில் ஒரு வெற்றி!

"தலைவர் அவசரப்பட்டு முடிவு எடுத்துட்டாருன்னு நினைக்கிறேன்!"

"இப்பதான் கட்சிக்குத் தலைவரா வந்திருக்காரு. அதனால நம்ம கெத்தைக் காட்டலாம்னு நினைக்கிறாரு போல இருக்கு. ஆனா கள எதார்த்தம் தெரியாம இருக்காரே!"

"ஆமாம். இடைத் தேர்தல்கள்ள ஆளும் கட்சிதான் ஜெயிக்கும். அதுவும் நாம இப்பதான் ஒரு பெரிய தோல்வியைச் சந்திச்சிருக்கோம். இந்த இடைத் தேர்தல்ல போட்டி போடாம தவிர்த்திருக்கலாம்"

"ஒருவேளை போட்டியிடற மாதிரி களத்தில இறங்கிட்டி, 'ஆளும் கட்சி பணம் கொடுத்து வெற்றி பெறப் பாக்குது, இதைத் தேர்தல் ஆணையம் கண்டுக்காம இருக்கு, அதனால நாங்க போட்டியிலேந்து விலகிக்கப் போறோம்'னு சொல்லிப் பின் வாங்கப் போறாரோ என்னவோ?"

ட்சித் தொண்டர்களிடையே நிலவிய இந்தப்  பேச்சுக்கள் கட்சித்தலைவர் துரைராசன் காதிலும் விழுந்தன.

"என்ன தலைவரே! அவசரப்பட்டு முடிவு எடுத்திட்டீங்க போல இருக்கு. நமக்கு டெபாசிட் கூடக் கிடைக்காதுன்னு தோணுது. பேசாம ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிப் போட்டியிலிருந்து  விலகிடலாம்!" என்றார் மூத்த தலைவர் தாமோதரன்.

"அவசரப்பட்டு முடிவெடுக்கலையே! உங்க எல்லாரையும் கலந்து ஆலோசிச்சுத்தானே முடிவெடுத்தேன்?" என்றார் துரைராசன்.

"போட்டி போட்டு பலத்தைக் காட்டலாம்னுதான் நினைச்சோம். ஆனா நம் நிலைமை இவ்வளவு மோசமா இருக்கும்னு எதிர்பாக்கலையே!" 

"நிலைமை மோசம்னு அதுக்குள்ள ஏன் முடிவு பண்றீங்க? நாம இன்னும் பிரசாரத்தையே ஆரம்பிக்கலையே! ஜெயிக்கறோமோ, தோக்கறோமோ, கடுமையா உழைச்சு ஒரு வலுவான போட்டியைக் கொடுக்கணும்!" என்றார் துரைராசன்.

தாமோதரன் நம்பிக்கை இல்லாமல் தலைவரைப் பார்த்தார்.

டுத்த பல நாட்களில் துரைராசன் தொகுதி முழுவதும் சுழன்று வந்தார். ஒவ்வொரு பகுதியிலும் கட்சிக்காரர்களைச் சந்தித்துப் பேசி, அவர்களுக்கு யோசனைகள் கூறி அவர்கள் கடுமையாக உழைக்கும் விதத்தில் உந்துதல் அளித்தார்.

அதிக நம்பிக்கையுடன் பிரசாரத்தைத் தொடங்கிய ஆளும் கட்சி துரைராசனின் சுறுசுறுப்பான, உற்சாகமான செயல்பாடுகளைப் பார்த்துக் கவலை கொண்டது.

ஆளும் கட்சித் தலைவர் தங்கள் கட்சி உறுப்பினர்களிடம் பேசும்போது, 'துரைராசன் இதுபோல் செயல்படுவதைப் பார்த்தால் நமக்கு வெற்றி அவ்வளவு எளிதாக இருக்காது என்று தோன்றுகிறது. எச்சரிக்கையாகப் பணியாற்றுங்கள்!" என்றார்.

ஆளும் கட்சி எளிதாக வெற்றி பெறும் என்று துவக்கத்தில் கணித்த ஊடகங்கள், துரைராசனின் கடின உழைப்பைப் பார்த்து, 'துரைராசன் ஒரு ஆச்சரியத்தை நிகழ்த்திக் காட்டுவாரா?' என்று எழுதவும் பேசவும் தொடங்கின.

தேர்தல் முடிந்து முடிவு அறிவிக்கப்பட்டன. ஆளும் கட்சி குறைந்த வாக்கு  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆனால் ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையில் துரைராசன் ஒரு சாதனையை நிகழ்த்தி விட்டார் என்ற கருத்துதான் நிலவியது.

"நாமதான் தோத்துட்டமே! எனக்கு எதுக்கு இவ்வளவு பெரிய மாலையைப் போடறீங்க?" என்றார் துரைராசன்.

"தலைவரே! எல்லாருமே நீங்க வெற்றி பெற்றதாகத்தான் கருதறாங்க. டெபாசிட் கூடக் கிடைக்காதுங்கற நிலைமையிலேந்து வெற்றிக்கு இவ்வளவு நெருக்கமா கட்சியைக் கொண்டு வந்துட்டீங்களே! உங்களோட தெளிவான முடிவும், உறுதியான செயல்பாடும்தான் இதுக்குக் காரணம்!" என்றார் தாமோதரன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 67
வினைத்திட்பம்

குறள் 668:
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்.

பொருள்:
மனக் குழப்பமின்றித் தெளிவாக முடிவு செய்யப்பட்ட ஒரு செயலைத் தளர்ச்சியும், தாமதமும் இடையே ஏற்படாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

859. நண்பன் சொன்ன காரணம்!

"புரொமோஷன் லிஸ்ட்ல என் பேரு இல்லை. அந்த மானேஜர் என் மேல பழி தீத்துக்கிட்டான்!" என்றான் நடேசன், தன் நண்பனும், சக ஊழியனுமான பிரேமிடம்.

பிரேம் பதில் சொல்லவில்லை.

"நான் சொல்றது சரிதானே?"

"சரிதான். ஆனா..." என்று ஆரம்பித்த பிரேம், "அதைப் பத்தி இப்ப பேச வேண்டாம். நீ முதல்ல மனசை சமாதானப்படுத்திக்க. கம்பெனிகள்ள இப்படியெல்லாம் நடக்கறது சகஜம்தான்!" என்றான்..

சில நாட்கள் கழித்து, நடேசன் பிரேமிடம், "எனக்கு புரொமோஷன் கிடைக்காததுக்கு மானேஜர்தான் காரணம்னு நான் அன்னிக்கு சொன்னப்ப, நீ ஏதோ சொல்ல வந்தியே?" என்றான்.

"ஒண்ணுமில்ல. நீ சொன்னதுதான். மேனேஜருக்கு உன் மேல விரோதம்னுதானே நீ சொல்ற?"

"ஆமாம். இல்லேன்னு சொல்லப் போறியா?"

"இல்லேன்னு சொல்லல. ஆனா நீ அவர் மேல விரோதம் பாராட்டறியா, இல்லையா?"என்றன் பிரேம்.

நடேசன் யோசித்தான்.

"நான் கவனிச்சதை சொல்றேன். ரெண்டு மாசம் முன்னால மானேஜர் ஆஃபீஸ்ல எல்லாருக்கும் வேலைப் பொறுப்புகளை மாத்திக் கொடுத்தப்ப, உனக்கு முக்கியமில்லாத பொறுப்புகளை கொடுத்துட்டார்னு நீ அவர்கிட்ட சொன்னே இல்ல?"

"ஆமாம். அவரு அப்படித்தானே செஞ்சாரு?"

"இருக்கலாம். ஆனா நீ அப்படிச் சொன்னதுக்கு அவர் என்ன பதில் சொன்னாரு?"

"ரொடேஷன்ல எல்லாருக்கும் பொறுப்புக்கள் மாறி மாறித்தான் வரும். சில சமயம் முக்கியம் இல்லாத பொறுப்புக்களும்தான் வரும்னு சொன்னாரு."

"அதை ஏத்துக்கிட்டு நீ அந்த விஷயத்தை அதோட விட்டிருக்கலாம். மறுபடி ஆறு மாசம் கழிச்சு அடுத்த ரொடேஷன்ல உனக்கு நல்ல பொறுப்புக்கள் கிடைச்சிருக்கும். ஆனா அதுக்கப்பறம் நீ அவர்கிட்ட விரோத பாவமாகவே நடந்துக்கிட்ட. சில வேலைகள்ள சரியா ஒத்துழைப்புத் தராம அவருக்குக் கோபம் வரும்படி நடந்துக்கிட்ட!" என்றான் பிரேம்.

"ஏன், என்னோட எதிர்ப்பைக் காட்டக் கூடாதா?" என்றான் நடேசன் கோபத்துடன்.

"காட்டலாம். ஆனா அப்படிக் காட்டினா அதுக்கான விளைவுகளை சந்திக்கத் தயாரா இருக்கணும். அப்புறம் ஏன் அவர் உன்னைப் பழி தீர்த்துக்கிட்டார்னு சொல்ற? அவரு அப்படித்தான் செய்வார்னு நீ எதிர்பார்த்திருக்கணும் இல்ல?"

நடேசன் மௌனமாக இருந்தான்.

"ஆனா, இதுக்குக் காரணம் நீ இல்ல, உன்னோட நேரம்தான்!"

"என்னடா சொல்ற?" என்றான் நடேசன். 

"அஞ்சாறு வருஷம் முன்னால நாம ரெண்டு பேரும் மதுரை பிராஞ்ச்ல வேலை செஞ்சப்ப நடந்த விஷயம் ஞாபகம் இருக்கா?" என்றான் பிரேம்.

"நீ எதைச் சொல்ற?"

"அந்த பிராஞ்ச் மானேஜர் காரணமே இல்லாம உன் மேல வெறுப்பைக் காட்டினாரு. உனக்கு எவ்வளவோ தொல்லை கொடுத்தாரு. ஆனா நீ ஒரு வார்த்தை கூடப் பேசாம எல்லாத்தையும் பொறுத்துக்கிட்ட. ஞாபகம் இருக்கா?"

நண்பன் சொல்ல வந்ததைப் புரிந்து கொண்டவனாக நடேசன் தலையை ஆட்டினான்.

"நான் கூட உங்கிட்ட கேட்டேன், ஏண்டா இவ்வளவு பொறுமையா இருக்கே, ஒண்ணு ரெண்டு தடவையாவது உன் எதிர்ப்பைப் பதிவு செய்யலாம் இல்லே?'ன்னு. அதுக்கு நீ என்ன சொன்னே? நான் சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் கேட்டிருக்கேன். அது கிடைக்கும் போல இருக்கு. இந்த சமயத்தில இவரை விரோதிச்சுக்கிட்டா இவரு காரியத்தையே கெடுத்துடுவாரு'ன்னு!"

"ஆமாம். அதுக்கும் என் நேரத்துக்கும் என்ன சம்பந்தம்?"

"அப்ப உன் நேரம் நல்லா இருந்தது. அதனால அந்த மானேஜர் உனக்கு எவ்வளவோ தொந்தரவு கொடுத்தும் ஒரு எதிர்ப்பு கூடத் தெரிவிக்காம பொறுமையா இருந்தே. டிரான்ஸ்ஃபர் கிடைச்சு இங்கே வந்தே. ரெண்டு வருஷம் கழிச்சு நானும் வந்தேன். ஆனா இப்ப உன் நேரம் நல்லா இல்லாததாலதான் ஒரு முக்கியமில்லாத விஷயத்துக்காக மானேஜர் மேல விரோதத்தை வளர்த்துக்கிட்டு உனக்கு வர வேண்டிய புரொமோஷன் வராம போயிடுச்சு. அதனால இது உன் தப்பு இல்லேன்னு நினைச்சுக்க. சீக்கிரமே உனக்கு இன்னொரு நல்ல வாய்ப்பு வரும். கவலைப்படாதே!" என்றான் பிரேம்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 86
இகல்

குறள் 859:
இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு.

பொருள்: 
ஒருவனுக்கு நன்மை வரும்போது காரணம் இருந்தாலும் மனவேறுபாடு கொள்ள மாட்டான். தனக்குத் தானே கேட்டை விளைவிக்க எண்ணுபவன், காரணம் இல்லாவிட்டாலும் மனவேறுபாடு கொள்ள எண்ணுவான்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Sunday, February 5, 2023

858. அழகேசனின் கோபம்

"ஏண்டா, பெரியப்பா வீட்டுக்குப் போக வேண்டாம்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்? ஏன் போனே?" என்றான் அழகேசன் கோபத்துடன்.

"இல்லை... அம்மாகிட்ட சொல்லிட்டுத்தான் போனேன்" என்றான் சங்கரன் சங்கடத்துடன்.

"ஏம்மா, அவரு நம்ம அப்பாவை அவமானப்படுத்தி இருக்காரு. அதனால அவரோட தொடர்பு வச்சுக்க வேண்டாம்னு நான் சொல்லிக்கிட்டிருக்கேன். நீ பாட்டுக்கு அவனை அவர் வீட்டுக்கு அனுப்பி இருக்க!" என்றான் அழகேசன் தன் தாய் மதுரத்திடம்.

"நான் அனுப்பலடா! பேரன் பிறந்த நாளைக்கு அவங்க நேரில வந்து கூப்பிட்டாங்க. நீ போக மாட்டேன்னுட்ட. அவன் போறேன்னான். நான் சரின்னேன். அவ்வளவுதான்!" என்றாள் மதுரம்.

"அதான் ஏன்னு கேக்கறேன்? நம்ம அப்பாவை அவமானப்படுத்தினவங்களோட நமக்கு என்ன உறவு வேண்டி இருக்கு?"

"டேய்! அது எப்பவோ நடந்தது. உங்க அப்பாவே அதைப் பெரிசா எடுத்துக்கல. 'ஏதோ கோபத்தில அப்படிப் பேசிட்டான். என் அண்ணன்தானே! பரவாயில்ல'ன்னு உங்க அப்பாவே எங்கிட்ட சொல்லி இருக்காரு. அந்த சம்பவம் நடந்து கொஞ்ச நாள்ள உங்க பெரியப்பா வேற ஊருக்குப் போயிட்டதால ரெண்டு பேருக்கும் அதிக தொடர்பு இல்ல. அந்தக் காலத்தில ஃபோன் எல்லாம் கிடையாது. உங்க அப்பா போயே அஞ்சு வருஷம் ஆச்சு. உங்க அப்பா காரியத்துக்கெல்லாம் உங்க பெரியப்பாவும், பெரியம்மாவும் வந்து இருந்துட்டுத்தான் போனாங்க. இப்ப அவங்க மறுபடி இந்த ஊருக்கு வந்துட்டாங்க. பேரன் பிறந்த நாளைக்கு நேரில வந்து கூப்பிட்டாங்க. நீதான் அவங்களைப் பாக்கக் கூட மாட்டேன்னு உள்ளேயே இருந்துட்ட. எதுக்கு அவங்களோட விரோதம் பாராட்டணும்?" என்றாள் மதுரம்.

"எப்படியோ போங்க! நான் சொன்னதைக் கேக்க மாட்டீங்க" என்றான் அழகேசன் கோபத்துடன்.

ருபது வருடங்கள் கடந்து விட்டன. அழகேசன், சங்கரன் இருவருக்குமே திருமணம் ஆகித் தனித் தனியே வசித்து வந்தனர். மதுரம் பெரும்பாலும் அழகேசன் வீட்டிலேயே வசித்து வந்தாள்.

"ஏம்மா! சங்கரன் நல்ல வசதியா இருக்கான். அவன் விடு பெரிசு. உனக்குத் தனி அறை, ஏசி எல்லாம் இருக்கும். அவனும் உன்னைக் கூப்பிட்டுக்கிட்டே இருக்கான். நீ என்னோட இந்தச் சின்ன வீட்டில இருந்துக்கிட்டு கொசுக்கடியில தூங்கிக்கிட்டு இருக்கே. நீ என்னோட இருக்கறது எனக்கு சந்தோஷம்தான். ஆனா நீ அங்கே இன்னும் வசதியா இருக்கலாமேன்னுதான் சொல்றேன்" என்றான் அழகேசன்.

"நீ சொல்றது எனக்குப் புரியுதுடா. நீ கஷ்டப்படறப்ப உன் கஷ்டத்தைப் பகிர்ந்துக்கணுமே தவிர, நான் மட்டும் வசதியா இருக்க எனக்கு எப்படி மனசு வரும்?" என்றாள் மதுரம்.

அழகேசன் மௌனமாக இருந்தான்.

"ஒரு விஷயம் சொல்றேன். யோசிச்சுப் பாரு. நீங்க ரெண்டு பேரும் ஒண்ணாத்தான் வளர்ந்தீங்க. உங்கப்பா உங்க ரெண்டு பேரையும்தான் படிக்க வச்சாரு. ரெண்டு பேரும் ஒரே சூழ்நிலை, ஒரே மாதிரி வசதிகளோட இருந்தும், சங்கரன் நல்லா முன்னுக்கு வந்துட்டான். ஆனா நீ கஷ்டப்பட்டுக்கிருக்கே. இது ஏன்னு யோசிச்சுப் பாத்தியா?" என்றள் மதுரம்.

"இதில யோசிக்கறதுக்கு என்ன இருக்கு? அதிர்ஷ்டங்கறது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்."

"இதுக்கு அதிர்ஷ்டம் மட்டும் காரணம் இல்லடா. உங்களோட இயல்பும்தான் காரணம். நீ எல்லோரோடயும் சண்டை போட்டுக்கிட்டு விரோத மனப்பான்மையோட நடந்துக்கற. அதனால உனக்கு மத்தவங்ககிட்டேந்து அதிகம் உதவி கிடைக்கல. யாருக்காவது உனக்கு உதவி செய்யக் கூடிய சந்தர்ப்பம் கிடைச்சாக் கூட, இவன்தான் நம்மகிட்ட விரோதமா இருக்கானே, இவனுக்கு ஏன் உதவி செய்யணும்னு நினைப்பாங்க. சங்கரன் விரோத மனப்பான்மை இல்லாம இருக்கான். எப்பவாவது மனஸ்தாபம் வந்தா அதை சீக்கிரமே மறந்துட்டு மனஸ்தாபம் ஏற்பட்டவங்களோட இயல்பாப் பழக ஆரம்பிச்சுடறான். அதனால அவனுக்கு நண்பர்கள், உதவி செய்யறவங்கன்னு நிறைய பேர் இருக்காங்க. அவன் முன்னுக்கு வந்ததுக்கு அதுவும் ஒரு காரணம்!"

மதுரம் தன் மகனின் முகத்தைப் பார்த்தாள். அவள் சொன்னதை அவன் ஏற்றுக் கொண்டானா என்பது அவளுக்குப் புரியவில்லை.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 86
இகல்

குறள் 858:
இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிகலூக்கின் ஊக்குமாம் கேடு.

பொருள்: 
மனத்தில் தோன்றும் மாறுபாட்டை எதிர்கொண்டு நீக்கிக் கொண்டால் நன்மையும், அதற்கு மாறாக அதனை மிகுதியாக ஊக்கப்படுத்தி வளர்த்துக் கொண்டால் தீமையும் விளையும்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...