திருக்குறள்
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 91
பெண் வழிச் சேறல்
901. ஜனவரி முதல் ஏப்ரல் வரை
ஜனவரி:"இந்த ப்ராஜக்ட் நம்ம கம்பெனிக்கு ரொம்ப முக்கியமானது. இதைத் திட்டமிட்டு, சரியான நேரத்தில, எந்த ஒரு தவறும் நடக்காம, பர்ஃபெக்டா செஞ்சு முடிக்கணும். நம்ம கம்பெனியில உங்களை விட சீனியரான எஞ்சினியர்கள் இருக்காங்க. ஆனா, எல்லாரையும் விட நீங்க ரொம்பப் பொறுப்பா, டெடிகேஷனோட வேலை செய்யறதை நான் கவனிச்சிருக்கேன். அதனாலதான், உங்களை ப்ராஜக்ட் மானேஜராப் போட்டிருக்கேன். நீங்க சிறப்பா செயல்படுவீங்கன்னு நம்பறேன்" என்றார் நிர்வாக இயக்குனர் ராமநாதன்.
"ரொம்ப நன்றி சார்! நீங்க என் மேல வச்சிருக்கற நம்பிக்கையைக் காப்பாத்துவேன்!" என்றார் ப்ராஜக்ட் மானேஜராக நியமிக்கப்பட்ட சுந்தரம்.
நாற்பத்தைந்து வயதான சுந்தரம் திருமணம் செய்து கொள்ளவில்லை. குடும்பப் பொறுப்பு இல்லாததால், அவரால் தன் நிறுவனப் பணிகளில் அதிக கவனம் செலுத்த முடிந்தது. அவர் ப்ராஜக்ட் மானேஜராக நியமிக்கப்பட்டதற்கு அதுதான் முக்கிய காரணம்.
மார்ச்:
"சுந்தரம்! உங்க மேல நம்பிக்கை வச்சு, இந்த ப்ராஜக்ட் மானேஜர் பொறுப்பை உங்களுக்குக் கொடுத்தேன். ஆரம்பத்தில நல்லாத்தான் செயல்பட்டுக்கிட்டிருந்தீங்க. ஆனா, கொஞ்ச நாளா, நீங்க உங்க வேலையில அதிகம் கவனம் செலுத்தாத மாதிரி தோணுது. சில நாள், நீங்க தாமதாமா வரீங்க. முக்கியமான நேரங்கள்ள நீங்க இருக்கறதில்லை. நீங்க எங்கே போயிருக்கீங்கன்னும் தெரியல. அதனால, சில வேலைகள் தாமதமாகி இருக்குன்னு ப்ராஜக்ட்ல பொறுப்பில இருக்கற சில பேர் எங்கிட்ட சொல்றாங்க. என்ன ஆச்சு உங்களுக்கு?" என்றார் ராமநாதன்.
"அப்படியெல்லாம் எதுவும் இல்ல சார். உடம்பு சரியில்லேன்னு ரெண்டு நாள் கொஞ்சம் தாமதமா வந்தேன். அதை யாரோ உங்ககிட்ட மிகைப்படுத்திச் சொல்லி இருக்காங்க. ப்ராஜக்ட் வேலைகளை நான் கண்காணிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். கால அட்டவணைப்படி எல்லாமே நடக்கும். ஐ வில் டேக் கேர்!" என்றார் சுந்தரம்.
"பாத்துக்கங்க, சுந்தரம்! மறுபடி இது மாதிரி புகார் வராம நடந்துக்கங்க!" என்றார் ராமநாதன், சற்றுக் கடுமையுடன்.
ஏப்ரல்:
"சுந்தரம்! உங்களை நான் எச்சரிக்கை செஞ்சு உங்களை நீங்க திருத்திக்க ஒரு வாய்ப்புக் கொடுத்தேன். ஆனா, உங்களோட பிரச்னை அதிகமாகிக்கிட்டேதான் இருக்கு. நானே ரெண்டு மூணு தடவை ப்ராஜக்ட் சைட்டுக்கு வந்து பார்த்தேன். நீங்க அப்ப அங்கே இல்லை. நீங்க ரொம்ப இர்ரெகுலர்னு எல்லாருமே சொல்றாங்க. நீங்க ப்ராஜக்ட்ல கவனம் செலுத்தாததால, ப்ராஜக்ட் கால அட்டவணையைத் தாண்டி தாமதாமாப் போய்க்கிட்டிருக்கு. இனிமேயும் உங்களை நம்பி இந்தப் பொறுப்பை ஒப்படைக்க முடியாது. அதனால, மூர்த்தியை ப்ராஜக்ட் மானேஜராப் போட்டிருக்கேன். நீங்க ஃபாக்டரியில உங்க பழைய வேலையைச் செய்யலாம். உங்களைத் திருத்திக்காம, தொடர்ந்து நீங்க இர்ரெகுலரா இருந்தா, உங்களை வேலையை விட்டே நீக்க வேண்டி இருக்கும். நீங்க போகலாம்!" என்றார் ராமநாதன், கடுமையான குரலில்.
ஃபிப்ரவரி:
ப்ராஜக்ட் விஷயமாக ஒரு விமானப் பயணம் மேற்கொண்டபோது, தன் அருகில் அமர்ந்திருந்த காஞ்சனா என்ற நடுத்தர வயதுப் பெண்ணுடன் சுந்தரத்துக்குப் பழக்கம் ஏற்பட்டது. காஞ்சனா திருமணம் ஆகாதவள் என்பதும், தனியாக வசித்து வந்தாள் என்பதும் தெரிந்தது.
பயணத்தின்போதே, இருவருக்குமிடையே ஒரு நெருக்கம் ஏற்பட்டதை இருவருமே உணர்ந்தனர்
தன் வீட்டுக்கு வரும்படி காஞ்சனா அழைத்ததை ஏற்று, ஊர் திரும்பியதும் அவள் வீட்டுக்குச் சென்றார் சுந்தரம்.
அதன் பிறகு, தினமும் அவள் வீட்டுக்குச் செல்வது என்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார் சுந்தரம். ஒருநாள் போகாவிட்டால் கூடக் காஞ்சனா கோபித்துக் கொள்வாள் என்பதால், அவள் அன்பை இழந்து விடுவோமோ என்ற பயத்தில், தன் அலுவலக வேலைகளைக் கூடப் புறக்கணித்து விட்டுக் காஞ்சனாவுடன் நேரம் செலவழிப்பதை அவரால் தவிர்க்க முடியவில்லை.
குறள் 901:
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
வேண்டாப் பொருளும் அது.
சில ஆண்டுகளுக்குள்ளேயே அவன் தொழில் பெரிதாக வளர்ந்து, அந்த ஊரின் குறிப்பிட்ட சில செல்வந்தர்களில் ஒருவனாக அவன் ஆகி விட்டான்.
மதுசூதனனுக்குப் பெண் கொடுக்கப் பல செல்வந்தர்கள் முன்வந்தனர். ஆனால், மதுசூதனன் தனக்குப் பிடித்த ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை மணந்து கொண்டான்.
அவனுடைய இந்தச் செயல் அவன் மீதான மதிப்பை மற்றவர்களிடையே உயர்த்தியது.
ஆயினும், மதுசூதனன் திருமணம் செய்து கொண்ட சில நாட்களிலேயே அவன் மீது மற்றவர்களுக்கு இருந்த மதிப்பு சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கி, விரைவிலேயே அவன் ஒரு கேலிப் பொருள் ஆனான்.
அதற்குக் காரணம், மதுசூதனன் தன் மனைவி மல்லிகாவுக்குக் கொடுத்த அளவுக்கதிகமான மதிப்பும் மரியாதையும்தான்.
தன் தொழில் விஷயங்களில் கூட, மதுசூதனன் எல்லா முடிவுகளையும் தன் மனைவியைக் கேட்டுத்தான் எடுக்கிறான் என்ற எண்ணம் பரவலாகப் பலர் மத்தியில் ஏற்பட்டது.
சில சமயம், மல்லிகாவே நிறுவனத்தின் மானேஜர் சுதாகருக்கு ஃபோன் செய்து சில உத்தரவுகளைப் பிறப்பித்தாள். அவளுடைய சில உத்தரவுகளை நிறைவேற்ற விரும்பாத சுதாகர், மதுசூதனனிடம் இது பற்றிப் பேசியபோது, மதுசூதனன், "மேடம் சொல்றபடி நடந்துக்கங்க!" என்று சொல்லி விட்டான்.
ஒருமுறை, ஒரு அலுவலக உதவியாளரைத் தேர்ந்தெடுக்க வந்திருந்த விண்ணப்பங்களைப் பரிசீலித்து, தகுதியானவர்களை இன்டர்வியூ செய்து, ஒருவரைத் தேர்ந்தெடுக்கும்படி சுதாகரிடம் கூறி இருந்தான் மதுசூதனன்.
ஐந்து பேரை இன்டர்வியூ செய்து ஒருவரைத் தேர்ந்தெடுத்த சுதாகர். வேலை நியமன உத்தரவு கொடுக்குமுன், மதுசூதனனின் அனுமதியைக் கேட்டான்.
"அதுதான் உங்களையே செலக்ட் பண்ணச் சொல்லிட்டேனே? என்னை ஏன் கேக்கறீங்க?" என்றான் மதுசூதனன்.
மதுசூதனனின் அறையிலிருந்து வெளியே வந்த சுதாகர், தான் தேர்ந்தெடுத்த நபருக்கு வேலை நியமன உத்தரவை டைப் செய்யும்படி டைப்பிஸ்டிடம் கூறினான்.
"சார்! இப்பதான் மேடம் ஃபோன் பண்ணினாங்க. வேற ஒத்தருக்கு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் டைப் பண்ணச் சொல்லி இருக்காங்க. அதைத்தான் அடிச்சுக்கிட்டிருக்கேன்" என்றாள் டைப்பிஸ்ட்.
சுதாகருக்கு அவமானமாகப் போய் விட்டது.
'நான் தேர்ந்தெடுத்த நபருக்கே வேலை நியமன உத்தரவு கொடுக்கச் சொல்லி இப்பதான் முதலாளி சொன்னார். அவருக்கே தெரியாம, அவர் மனைவி வேற ஒத்தரை நியமிச்சிருக்காங்க. இது எனக்கு அவமானம்னா, முதலாளிக்கு இன்னும் பெரிய அவமானம். ஆனா, அவர் அப்படி நினைக்க மாட்டாரே! இப்ப நான் போய்க் கேட்டா, மேடம் சொன்ன ஆளையே நிமிச்சுடுங்கன்னுதான் சொல்லப் போறாரு!' என்று நினைத்தபோது, சுதாகருக்கு மதுசூதனன் மேல் பரிதாபம் ஏற்பட்டது.
"எப்படி இருந்த நான் எப்படி ஆயிட்டேன்!' என்று ஒரு திரைப்படத்தில் வரும் வசனம்தான் அவன் நினைவுக்கு வந்தது.
"எங்களுக்கு ஆர்டர் கொடுத்ததுக்கு ரொம்ப சந்தோஷம் சார்!" என்றான் சுதாகர், அந்தப் பெரிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரிடம்.
"ஆர்டரை நீங்க ஏத்துக்கிட்டுக் கையெழுத்துப் போடணும்" என்றார் அவர்.
"அதுக்கென்ன இப்பவே கையெழுத்துப் போட்டுக் கொடுத்துடறேன்!" என்று பேனாவை எடுத்தான் மதுசூதனன்.
"இப்பவே போடறீங்களா? ஒருவேளை யார்கிட்டேயாவது கன்சல்ட் பண்ணிட்டு, அப்புறம் போடுவீங்களோன்னு நினைச்சேன்!" என்றார் அவர், சிரித்துக் கொண்டே.
அவர் கூறியதன் பொருள் புரிந்து, மதுசூனனின் முகம் அவமானத்தால் சிவந்தது.
குறள் 902:
பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்.
"அவசியம் அவரைப் பாக்கணுமா என்ன?" என்றாள் அவன் மனைவி கோகிலா.
"சின்ன வயசிலேந்தே எங்கிட்ட ரொம்ப அன்பா இருப்பாரு. அவர் கம்பெனியில அவரை அமெரிக்காவுக்கு அனுப்பினாங்க. அப்புறம் அவர் அங்கேயே செட்டில் ஆயிட்டாரு. அஞ்சாறு வருஷத்துக்கு ஒரு தடவை இந்தியாவுக்கு வருவாரு. அப்பல்லாம் நான் அவரைப் போய்ப் பாக்காம இருந்ததில்லை. நம்ம கல்யாணத்துக்கப்பறம் இப்பதான் வந்திருக்காரு. போய்ப் பாக்கலைன்னா நல்லா இருக்காது!"
"இவதான் என் பொண்டாட்டின்னு அவர்கிட்ட என்னைக் கொண்டு போய்க் காட்டணுமாக்கும்! சரி, வரேன். ஆனா, அவர் காலில எல்லாம் விழ மாட்டேன்!" என்றாள் கோகிலா.
குணாளனின் மாமா கஜேந்திரன், தன் உறவினர் ஒருவர் வீட்டில் தங்கி இருந்தார்.
குணாளனைப் பார்த்ததும், அவனை அன்புடன் தழுவிக் கொண்ட கஜேந்திரன், "உன் கல்யாணத்துக்கு வர முடியல. இந்தா, என்னோட கல்யாணப் பரிசு!" என்று ஒரு பார்சலை நீட்டினார்.
மாமாவின் காலில் விழுந்து வணங்கிப் பரிசை வாங்கிக் கொள்ளலாம் என்று குணாளன் நினைத்தான். பிறகு, தான் வணங்கும்போது கோகிலாவும் சேர்ந்து வணங்காவிட்டால் நன்றாக இருக்காது என்று நினைத்துப் பரிசை வாங்கிக் கொள்ளக் கையை நீட்டினான்.
"ரெண்டு பேரும் சேர்ந்து வாங்கிக்கங்கடா!" என்று கஜேந்திரன் சொன்னதும், குணாளன் கோகிலாவுக்கு ஜாடை காட்ட, அவள் அவன் அருகில் வந்து நிற்க, இருவரும் சேர்ந்து பரிசை வாங்கிக் கொண்டார்கள்.
கஜேந்திரன் குணாளனிடம் உற்சாகமாகப் பேசினார். ஆனால், குணாளன் தயங்கித் தயங்கித்தான் பேசினான். தான் மாமாவிடம் உற்சாகமாகப் பேசுவது மனைவிக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ என்று அவன் யோசிப்பதாகத் தோன்றியது.
கோகிலா எதுவும் பேசாமல், சற்றுத் தள்ளி அமர்ந்திருந்தாள். கஜேந்திரன் இடையிடையே அவளிடம் ஏதாவது கேட்டபோது, சில சமயம் தலையாட்டினாள், மற்ற சமயங்களில் மௌனமாக இருந்தாள்.
சற்று நேரம் சென்றதும், "என்னங்க கிளம்பலாமா?" என்றாள் கோகிலா.
"என்ன அவசரம்? இப்பதானே வந்திருக்கீங்க!" என்றார் கஜேந்திரன்.
குணாளன் மௌனமாக இருந்தான்.
"குணா! நான் இந்தியாவுக்கு வரும்போதெல்லாம், நான் வேற ஊர்களுக்குப் போறப்ப நீயும் என்னோட வருவியே! இந்தத் தடவையும் பத்து நாள் வெளியூர்ப் பயணம் வச்சிருக்கேன். நீயும் கோகிலாவும் என் கூட வாங்க. உனக்கு கவர்ன்மென்ட் வேலைதானே? லீவு கிடைக்கிறது கஷ்டமா இருக்காதே!" என்றார் கஜேந்திரன்.
குணாளன் கோகிலாவைப் பார்த்தான். அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
"இல்லை, மாமா! இப்ப ஆஃபீஸ்ல ஆடிட் நடக்கற சமயம். அதனால லீவு கிடைக்காது" என்ற குணசீலன், உடனேயே, "நாங்க கிளம்பறோம்!" என்றான்.
அவர்கள் இருவரும் கிளம்பிச் சென்றதும், "எங்கிட்ட ரொம்பப் பாசமா இருப்பான். ஜாலியாப் பேசுவான். கல்யாணம் ஆனதும் ஆளே மாறிட்டான்! எங்கிட்ட அரை மணி நேரம் உக்காந்து பேசக் கூட அவன் மனைவி அவனை அனுமதிக்கல போலருக்கு" என்றார் கஜேந்திரன், தன் உறவினரிடம், வருத்தத்துடன்.
குறள் 903:
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்
அதனால், படிப்பை முடித்து விட்டு வேலை தேடும்போதே, ஒரு நிறுவனத்தில் முன்னேறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளனவா என்று பார்த்துத்தான் வேலைக்கு விண்ணப்பம் போட்டு வந்தான் அவன்.
ஜெயராமனின் விருப்பத்துக்கு ஏற்ப, ஒரு நல்ல நிறுவனத்தில் அவனுக்கு வேலை கிடைத்தது.
வேலையில் சேர்ந்த மூன்று ஆண்டுகளுக்குள்ளேயே, அவனுடைய சிறப்பான செயல்பாடு காரணமாக, ஜெயராமனுக்குப் பதவி உயர்வு கிடைத்தது.
"வாழ்த்துக்கள், ஜெயராமன்! இவ்வளவு வேகமா முன்னுக்கு வரக் கூடியவங்க ரொம்ப சில பேர்தான் இருப்பாங்க. உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு!" என்றார் அவன் மேலதிகாரி.
அதற்குப் பிறகு, அவனுக்குத் திருமணம் ஆயிற்று.
ஜெயராமன் வேலையிலிருந்து ஓய்வு பெற்று, இரண்டு மாதங்கள் ஆகி விட்டன.
தன் பணிக்காலத்தை நினைத்துப் பார்த்தான் ஜெயராமன்.
உயர் பதவி வகிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் சுறுசுறுப்பாகத் துவங்கிய தன் ஆரம்ப நாட்களை நினைத்தபோது, எதையோ இழந்து விட்ட ஏக்கம் அவனைப் பற்றிக் கொண்டது.
யாமினியைத் திருமணம் செய்து கொண்ட பின், அவன் வாழ்க்கையின் போக்கே மாறி விட்டது.
ஜெயராமன், தான் பணியாற்றிய நிறுவனத்தில் ஒரு பொறுப்பான பதவியில் இருந்ததால், மாலை வேளைகளில் அவன் சற்று அதிக நேரம் வேலை செய்ய வேண்டி இருந்தது.
"என்னங்க இது? என் அக்கா புருஷன் ஆறு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துடறாரு. உங்களுக்கு எட்டு ஒம்பதுன்னு ஆகுது!" என்றாள் யாமினி.
"உன் அக்கா புருஷன் ஒரு அரசாங்க ஊழியர். அவர் அஞ்சு மணிக்கெல்லாம் ஆஃபீசை விட்டுக் கிளம்பிடலாம். என்னால அப்படி முடியாது. நானும்தான் எட்டு மணிக்குள்ள வீட்டுக்கு வந்துடறேனே! சில நாளைக்குத்தான் ஒன்பது மணி ஆகுது" என்றான் ஜெயராமன்.
"அவ்வளவு கஷ்டப்பட்டெல்லாம் நீங்க உழைக்க வேண்டாம். ஆறு மணிக்கு வீட்டுக்கு வந்துடணும். அப்பதான், உங்களால வீட்டில எனக்குத் துணையா இருக்க முடியும். அந்த மாதிரி வேலையாப் பாருங்க!"
முதலில் ஜெயராமன் மனைவி கூறியதைப் பொருட்படுத்தாவிட்டாலும், அவள் தொடர்ந்து கொடுத்த அழுத்தத்தைத் தாங்க முடியாமல், தன் வேலையை விட்டு விட்டு, அதிகச் சுமை இல்லாத ஒரு வேலையைத் தேடிக் கொண்டான்.
வீட்டுக்குச் சீக்கிரம் வர முடிந்தது. ஆனால், வேலையில் சவால்களோ, முன்னேற வாய்ப்புகளோ இல்லை.
"உன்னோட திறமையை நீ வீண்டிச்சுக்கிட்டிருக்க!" என்று அவனுடைய நண்பர்கள் சிலர் கூறினர்.
அவன் முன்பு வேலை பார்த்த நிறுவனத்தின் மேலாளர் கூட அவனைத் திரும்ப வேலைக்கு வரும்படி அழைத்தார்.
ஆனால், மனைவியின் விருப்பத்தை மீறிச் செயல்பட ஜெயராமானால் முடியவில்லை.
முட்டாள்தனமாக நடந்து கொள்கிறோமோ என்ற சிந்தனை அடிக்கடி வந்தாலும், வேறு முடிவு எடுக்க முடியாமல், ஒரு சராசரி வேலையிலேயே வாழ்க்கையைக் கழித்து, இப்போது ஓய்வும் பெற்று விட்டான் ஜெயராமன்.
'ஏன் இப்படி நடந்து கொண்டேன்? 'வேலையில் முன்னேறி உயர் பதவிக்குப் போக வேண்டும். நிறையச் சாதிக்க வேண்டும் என்றெல்லாம் எனக்கு லட்சியம் இருக்கிறது. நீ சொல்கிறபடி நடக்க முடியாது' என்று மனைவியிடம் சொல்லி இருக்கலாமே! என்ன ஆகி இருக்கும்?'
"இங்கே கொஞ்சம் வரீங்களா?"
அடுத்த அறையிலிருந்து மனைவியின் குரல் கேட்டது.
உடல் அசதியால் சற்று நேரம் ஓய்வெடுக்கலாம் என்று படுத்துக் கொண்டிருந்த ஜெயராமன், விருட்டென்று எழுந்து, "இதோ வரேன்" என்றபடியே, மனைவி இருந்த அறைக்கு விரைந்தான்.
குறள் 904:
மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று.
தன்னை அவருடைய மாணவன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அவருக்கு அருகில் அமர்ந்து கொண்டான் சந்திரன்
அவர் மறுத்தும் கேளாமல், அவருக்கான பயணச் சீட்டையும் அவனே பணம் கொடுத்து வாங்கினான்.
பயணத்தின்போது பேசிக் கொண்டு வந்தபோது, இருவரும் தங்கள் குடும்பம் பற்றியும், வாழ்க்கை நிலை பற்றியும் தகவல் பரிமாறிக் கொண்டனர்.
தான் ஒரு நல்ல வேலையில் இருப்பதையும், தனக்கு இரண்டு வருடங்கள் முன்பு திருமணமானதையும், தன் மனைவியுடன் சென்னையில் வசிப்பதையும் சந்திரன் குறிப்பிட்டான்.
தான் திருச்சியில் வசிப்பது பற்றிக் குறிப்பிட்ட குழந்தைவேலு, தன் வாழ்க்கை பற்றி அதிகம் பேசாவிட்டாலும், அவர் வறுமை நிலையில் இருப்பதை சந்திரன் புரிந்து கொண்டான்.
ஒரு சிறந்த ஆசிரியராக இருந்து, தனக்குக் கல்வி அளித்த ஒரு நல்ல மனிதர் வறுமை நிலையில் இருப்பது சந்திரனுக்கு வருத்தமாக இருந்தது. அவரிடம் கல்வி பெற்ற தானும், தன்னைப் போன்ற பலரும் வாழ்க்கையில் முன்னேறி நல்ல நிலையில் இருக்கும்போது, அவர் வறுமையில் இருப்பது நியாயமற்றது என்ற சிந்தனையும் ஏற்பட்டது.
திருச்சியில் வசிக்கும் அவர் ஏதோ வேலையாகச் சென்னைக்குச் செல்வதாகச் சொன்னார்.
சந்திரன் தன் தொலைபேசி எண்ணை அவரிடம் கொடுத்து, அவருடைய வேலை முடிந்ததும், தன் வீட்டுக்கு வரும்படி அவரிடம் கூறினான்.
"நீங்க ஒருவேளையாவது என் வீட்டில சாப்பிடணும் சார்! எப்ப வரீங்கன்னு ஃபோன் பண்ணுங்க. நீங்க தங்கி இருக்கிற இடத்தைச் சொன்னா, நானே வந்து உங்களை என் வீட்டுக்கு அழைச்சுக்கிட்டுப் போறேன்!" என்றான் சந்திரன்
"நீ எங்கிட்ட படிச்சு எவ்வளவோ வருஷம் ஆச்சு. எங்கிட்ட இவ்வளவு அன்பு காட்டறியே அப்பா?" என்றார் குழந்தைவேலு, நெகிழ்ச்சியுடன்.
தன் மனைவி வாணியிடம், தான் தன் ஆசிரியரைச் சந்தித்ததையும், அவரைத் தங்கள் வீட்டுக்குச் சாப்பிட வருமாறு அழைத்திருப்பதையும் கூறினான் சந்திரன்.
"நம்ம வீட்டில என்ன சமையக்காரியா இருக்கா? நீங்க பாட்டுக்கு யாரையாவது சாப்பிடக் கூப்பிட்டா, அவருக்கு சமைச்சுப் போடறது யாரு?" என்றாள் வாணி, எரிச்சலுடன்.
"ஒரு மரியாதைக்காகத்தான் கூப்பிட்டேன். வந்தாதான் வருவாரு!" என்று சமாளித்த சந்திரன், 'நல்லவேளை. அவருக்கு பஸ் டிக்கட் வாங்கியதை இவளிடம் சொல்லவில்லை!' என்று நினைத்துக் கொண்டான்.
இரண்டு நாட்கள் கழித்து, சந்திரன் வாணியிடம் தயங்கிக் கொண்டே, "வாணி! என் பள்ளி ஆசிரியர் குழந்தைவேலுவைப் பத்திச் சொன்னேன் இல்ல?அவர் ஃபோன் பண்ணினாரு" என்றான்.
"என்ன, சாப்பிட வராராமா?" என்றாள் வாணி, சலிப்பும், எரிச்சலும் மிகுந்த குரலில்.
"இல்லை. அவருக்கு வேற பிரச்னை. அவர் மனைவியோட நகைகளை அடகு வச்சுக் கடன் வாங்கி இருக்காரு. அதெல்லாம் ஏலம் போகிற நிலைமையில இருக்காம். ஒரு லட்ச ரூபாய் கட்டணுமாம். அதுக்குத்தான் அவரோட சொந்தக்காரங்ககிட்ட கடன் கேட்டுப் பாக்கலாம்னு சென்னைக்கு வந்திருக்காரு. ஆனா, அவருக்குப் பணம் கிடைக்கல" என்றான் சந்திரன்.
"அதுக்கு?"
"திருச்சிக்குப் பக்கத்தில அவருக்கு ஒரு வீட்டு மனை இருக்காம். அது அஞ்சாறு லட்சத்துக்குப் போகுமாம். அதை விக்கறதுக்குப் பாத்துக்கிட்டிருக்காரு. ஆனா, அதுக்குக் கொஞ்சம் டயம் ஆகுமாம். அதனால ஒரு லட்ச ரூபா கடனாக் கொடுத்தா, அஞ்சாறு மாசத்தில வட்டியோட திருப்பிக் கொடுத்துடறேன்னு சொல்றாரு. அவர் ரொம்ப நல்ல மனுஷன். சொன்னபடி நடந்துப்பாரு."
"எங்கிட்ட பணம் இல்லேன்னு சொல்லிட்டீங்க இல்ல?"
"இல்லை, வாணி. நம்மகிட்டதான் பணம் இருக்கே! ரெண்டு நாள் முன்னாலதான் ரெண்டு லட்ச ரூபாய்க்கு ஒரு ஃபிக்ஸட் டெபாஸிட் மெச்சூர் ஆச்சு! அந்தப் பணம் அக்கவுன்ட்லதான் இருக்கு. நீ சரின்னு சொன்னா, அவருக்கு ஒரு லட்ச ரூபா கொடுத்து உதவலாம்னு பாக்கறேன்" என்றபடியே, தயக்கத்துடன் மனைவியின் முகத்தைப் பார்த்தான் சந்திரன்.
"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். 'எங்கிட்ட பணம் இல்லே'ன்னு சொல்லிடுங்க!" என்று சொல்லி விட்டு, உள்ளே போய் விட்டாள் வாணி.
'வாணியை மீறி என் ஆசிரியருக்குப் பணம் கொடுத்து உதவ என்னால் முடியும்தான். ஆனாலும், நான் அப்படிச் செய்யு மாட்டேன் என்பதுதானே நிலை!'
தன்னால் உதவ முடியாது என்பதைத் தன் ஆசிரியருக்குத் தெரிவிக்க, அவருக்கு ஃபோன் செய்யப் போனான் சந்திரன்.
குறள் 905:
இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.
இருபத்திரண்டு வயதில் சொந்த மூலதனத்தில் சிறிய அளவில் ஒரு தொழிலைத் தொடங்கி, முப்பது வயதில் அதை ஒரு பெரிய நிறுவனமாக மாற்றிய அவன் சாதனை, தொழில்துறை வட்டாரங்களிலும், ஊடகங்களிலும் மட்டுமின்றி, சாதாரண மனிதர்களாலும் பேசப்பட்டது.
தொழிலை நல்ல நிலைக்குக் கொண்டு வந்த பிறகுதான் திருமணம் என்ற லட்சியம் கொண்டிருந்த ராமமூர்த்தி, தன் 30-ஆவது வயதில் விமலாவைத் திருமணம் செய்து கொண்டான்.
திருமணத்துக்குப் பிறகு, தன் நிறுவனத்தின் நிர்வாக அமைப்பில் சில மாறுதல்களைச் செய்தான் ராமமூர்த்தி. எந்த ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும், முடிவெடுக்கும் அதிகாரத்தைத் தன்னிடமே வைத்துக் கொண்டிருந்த ராமமூர்த்தி, சில விஷயங்களில் முடிவெடுக்கும் அதிகாரத்தை மூத்த அதிகாரிகளுக்கு அளித்தான்.
முன்பு, நாள் முழுவதும் அலுவலகத்தில் இருந்தவன், இப்போதெல்லாம் ஒரு நாளில் சில மணி நேரமே இருந்தான்.
திருமணமான புதிதில், மனைவியுடன் அதிக நேரம் இருப்பதற்காக அவன் செய்த ஏற்பாடு அது என்று நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் புரிந்து கொண்டனர்.
"சாரோட ரெண்டாவது திருமண ஆண்டு விழா முடிஞ்சு போச்சு. ஆனா, சார் இன்னும் தேன்நிலவிலேயே இருக்காரு!" என்றான் அந்த நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகளில் ஒருவனான சாமிநாதன்.
"இதைத் தேன்நிலவுன்னு சொல்ல முடியாது. வீட்டில மனைவிக்குப் பணிவிடைசெஞ்சுக்கிட்டிருக்காருன்னு நினைக்கிறேன்" என்றான் இன்னொரு நிர்வாகியான சிதம்பரம்.
"எப்படிச் சொல்றீங்க?"
"நாளுக்கு நாள், அவர் ஆஃபீஸ்ல இருக்கற நேரம் குறைஞ்சுக்கிட்டே போகுதே! போன வாரம், ஒரு முக்கியமான மீட்டீங்குக்கு என்னோட வரதா சொன்னாரு. காரை எடுத்துக்கிட்டு அவர் வீட்டுக்குப் போனேன். கிளம்பி வாசல் வரைக்கும் வந்துட்டாரு. அப்ப, உள்ளேந்து மேடம் கூப்பிட்டாங்க. உள்ளே போயிட்டு வந்தவர், எங்கிட்ட, 'நான் வரலை. நீங்க மட்டும் போயிட்டு வாங்க'ன்னு சொல்லிட்டாரு. அது ஒரு முக்கியமான மீட்டிங். 'உங்க எம்.டி வரலியா?'ன்னு கிளையன்ட் எங்கிட்ட கேட்டாரு. வரதா இருந்தாரு. கிளம்பற சமயத்தில அவருக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லிச் சமாளிச்சுட்டேன்!"
"தொழில்துறையில இவ்வளவு சாதிச்சவரு, மனைவி பேச்சை மீற முடியாம, இப்படி முக்கியமான விஷயங்களைக் கூடத் தவற விடறது, அவருக்கு இருக்கிற பெருமையையும் நல்ல பெயரையும் பாதிச்சுடும் போல இருக்கே!" என்றான் சாமிநாதன்.
குறள் 906:
இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர்.
"ரெண்டு பேரும் சம்பாதிக்கறாங்க. பணம் நிறைய இருக்கு. ஆனா, நமக்காகச் செலவழிக்க மருமகளுக்கு மனசில்ல. இவனும் அவ பேச்சைக் கேட்டுக்கிட்டு, நம்ம மேல அக்கறை இல்லாம இருக்கான். சமையல் உட்பட வீட்டு வேலை எல்லாம் நீ செய்யற. அதுக்கு சம்பளம், வீட்டு வாடகை இது ரெண்டுக்கும் நமக்கு ஏதாவது பணம் கொடுத்தா, நாம அதை வச்சு சமாளிக்கலாம். இன்னிக்கு அவன்கிட்ட கேக்கப் போறேன்!" என்றாள் அவள் கணவர் பசுபதி.
அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்த அவர்கள் மகள் மலர்விழி, "அப்பா! எனக்கு வேலை கிடைச்சுடுச்சு. இனிமே, நீங்க அண்ணன்கிட்ட பணம் எதிர்பார்க்க வேண்டாம். நானே உங்க செலவுகளை கவனிச்சுக்கறேன்!" என்றாள்.
"ரொம்ப சந்தோஷம்மா! நீ ரொம்ப கூச்ச சுபாவம் உள்ளவளாச்சே, நீ எப்படி வேலைக்குப் போகப் போறேன்னு பயந்துக்கிட்டிருந்தேன்!" என்றாள் சிவகாமி.
"ஒத்தர் இறந்து போனா, அவரோட பையன்தான் அவருக்குக் கொள்ளி வைக்கணும்பாங்க. ஆனா, எனக்கு நீதாம்மா கொள்ளி வைக்கணும். ராஜா வைக்கக் கூடாது. இதை நான் ஒரு உயிலாவே எழுதி வச்சுடறேன்!" என்றார் பசுபதி.
குறள் 907:
பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து.
"என்னங்க செய்யப் போறோம்? பையன் படிப்புக்காக சென்னைக்கு மாற்றல் கேட்டு வங்கிக்கிட்டு வந்ததில, லாரி வாடகை, ரயில் டிக்கட்னு நிறையப் பணம் செலவழிஞ்சதோட இல்லாம, வீட்டுக்கான வாடகை அட்வான்ஸ், மற்ற செலவுகள்னும் கையில இருந்த எல்லாப் பணமும் செலவழிஞ்சுடுச்சு. ஃபீஸ் கொஞ்சம் குறைவா இருந்திருந்தா சமாளிச்சுக் கட்டி இருக்கலாம். இங்கே ஃபீஸ் ரொம்ப அதிகமா இருக்கே! இப்ப என்ன செய்யறது? என் நகைகளை வேணும்னா அடகு வச்சுடலாமா?" என்றாள் ராஜுவின் மனைவி கல்யாணி.
"அதெல்லாம் வேண்டாம். இங்கேதான் என் நண்பன் ராம்குமார் இருக்கானே! கடந்த கலத்தில அவன் எனக்கு நிறைய உதவி செஞ்சிருக்கான். இப்பவும் செய்வான். அவனைக் கேட்டுப் பாக்கறேன்" என்ற ராஜு, ராம்குமாருக்கு ஃபோன் செய்தான்.
ஃபோன் பேசி முடித்ததும், "நான் சொல்லல? சாயந்திரம் அவன் வீட்டுக்கு வந்து பணத்தை வாங்கிக்கிட்டுப் போகச் சொல்றான்" என்றான் ராஜு, உற்சாகமாக.
அன்று இரவு வீட்டுக்குச் சோர்வுடன் வந்த கணவனைப் பார்த்து, "ஏங்க இவ்வளவு நேரம்? பணம் வாங்கிட்டு வர நேரமாயிடுச்சா?" என்றாள் கல்யாணி.
"பணம் கிடைக்கலை!" என்றான் ராஜு, ஏமாற்றத்துடன்.
"ஏன்? சாயந்திரம் வந்து வாங்கிக்கிட்டுப் போகச் சொல்லிச் சொன்னார், இல்ல?"
"சொன்னான். ஆனா, நான் போனப்ப, ராம்குமார் வீட்டில இல்ல. அவனோட மனைவிதான் இருந்தா. அவரால பணம் ஏற்பாடு பண்ண முடியலேன்னு சொல்லச் சொன்னார்னு சொல்லிட்டா. எனக்கென்னவோ, ராம்குமார் வீட்டுக்குள்ளேயே இருந்தான்னுதான் தோணிச்சு!"
"ஏன் அப்படிச் சொல்றீங்க?"
"அவங்க கல்யாணத்துக்கப்பறம், இப்பதான் முதல் தடவையா அவங்க வீட்டுக்குப் போறேன். இத்தனை நாளா, நாம வேற ஊர்லதானே இருந்தோம்? முதல் தடவையா வீட்டுக்கு வந்திருக்கற கணவனோட நண்பனை உள்ளே வாங்கன்னு கூடக் கூப்பிடாம, வாசலிலேயே நிறுத்திப் பேசி அனுப்பிட்டா. ஏதோ காரணத்தினால, அவனால எனக்கு உதவ முடியலேன்னு நினைக்கிறேன்!" என்றான் ராஜு.
"பரவாயில்ல விடுங்க. நாளைக்குக் காலையில என் நகைகளை அடகு வச்சுப் பணம் வாங்கிட்டு வந்துடுங்க" என்றாள் கல்யாணி.
சற்று நேரம் கழித்து, ராஜுவின் கைபேசி ஒலித்தது. ராஜு அறைக்குள் இருந்தான். சமையற்கட்டிலிருந்த கல்யாணிக்கு ராஜு பேசியது கேட்கவில்லை.
ராஜு பேசி முடித்து விட்டு, சமையற்கட்டுக்கு வந்தான்.
"பணம் கிடைச்சுடுச்சு!" என்றான் ராஜு, உற்சாகத்துடன்.
"உங்க நண்பர் ஃபோன் பண்ணிப் பணம் தரேன்னு சொல்லிட்டாரா?" என்றாள் கல்யாணி, வியப்புடன்
"ஆமாம். ஆனா பேசினது ராம்குமார் இல்ல, சுதாகர்னு இன்னொரு நண்பன். நான் சென்னைக்கு வந்தப்பறம், அவனை இன்னும் தொடர்பு கொள்ளவே இல்லை. இந்த காலேஜ் அட்மிஷன் எல்லாம் முடிஞ்சப்பறம் நிதானமா தொடர்பு கொள்ளலாம்னு நினைச்சேன். அதுக்குள்ள அவனே ஃபோன் பண்ணிட்டான். ராம்குமார் பணம் கொடுக்கறேன்னு சொல்லிட்டு ஏமாத்திட்டதைப் பத்தி அவன்கிட்ட சொன்னேன். அவன் 'என்னைக் கேட்டிருந்தா நான் கொடுத்திருப்பேனே'ன்னு சொல்லிட்டுப் பணத்தை உடனே என் பாங்க் அக்கவுன்ட்டுக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணிட்டான்!"
"அட, அவ்வளவு நல்லவரா? அப்ப, நீங்க அவர்கிட்டேயே கேட்டிருக்கலாமே?" என்றாள் கல்யாணி.
"ராம்குமார்தான் எனக்கு ரொம்ப நெருக்கம். அதோட, அவனுக்கு மத்தவங்களுக்கு உதவற குணம் உண்டு. அதனாலதான், அவன்கிட்ட கேட்டேன்."
"நீங்க உதவி செய்வார்னு நினைச்ச ராம்குமார் உதவி செய்யல. ஆனா, இன்னொருத்தர் உதவி செஞ்சிருக்காரு. நீங்க ராம்குமாரை சரியாப் புரிஞ்சுக்கலன்னு நினைக்கிறேன்" என்றாள் கல்யாணி.
"அப்படி இல்லை. அவன் இதுக்கு முன்னால எனக்கு உதவி இருக்கானே! சுதாகர் ஒரு விஷயம் சொன்னான். கல்யாணத்துக்கப்புறம் ராம்குமார் ரொம்ப மாறிட்டானாம். தன் மனைவியைக் கேக்காம எதுவும் செய்யறதில்லையாம். எனக்கு உதவி செய்யறதைக் கூட, அவன் மனைவிதான் தடுத்திருப்பான்னு சுதாகர் சொல்றான். அதனாலதான், ராம்குமார் என்னைப் பாக்க தைரியம் இல்லாம, வீட்டில இருந்துக்கிட்டே இல்லேன்னு சொல்லி இருக்கான். ராம்குமார் முன்னே எல்லாம் அறக்கடளைகளுக்கு நிறைய நன்கொடைகள் கொடுப்பான். இப்ப அதெல்லாம் கூட நின்னு போச்சாம். அவன் மனைவிதான் காரணம்னு சுதாகர் சொல்றான். ராம்குமார் இப்படி மாறுவான்னு நான் எதிர்பார்க்கவே இல்லை!" என்றான் ராஜு.
"அவரைப் பாத்து, நீங்களும் கொஞ்சமாவது மனைவி பேச்சைக் கேட்டு நடக்கக் கத்துக்கங்க!" என்றாள் கல்யாணி, சிரித்துக் கொண்டே.
குறள் 908:
நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர்.
சசிகாந்த்தை உள்ளே சென்று உட்காரச் சொல்லி விட்டுக் கை கால்களைக் கழுவிக் கொண்டு உள்ளே வந்தார் செல்வமணி.
"சும்மாதான் உங்களைப் பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன்" என்றான் சசிகாந்த்.
"இப்ப என்ன செஞ்சுக்கிட்டிருக்கே?" என்றார் செல்வமணி.
"உங்களுக்குத்தான் தெரியுமே! சுலோசனாவோட அப்பா கம்பெனியைப் பாத்துக்கிட்டிருக்கேன்."
"பாத்துக்கிட்டிருக்கேன்னா, நீயா நிர்வாகம் பண்ற? அப்பப்ப அவங்க சொல்ற வேலையை செஞ்சுக்கிட்டிருக்க!"
சசிகாந்த் மௌனமாக இருந்தான்.
"கல்யாணத்துக்கு முன்னால, நல்ல வேலையில இருந்த. விடுமுறை நாட்கள்ள, சேவை நிறுவனங்களுக்குப் போய் ஏதாவது உதவி செஞ்சுக்கிட்டு வந்த. கல்யாணத்துக்கப்பறம், உன் மாமனார் உன்னை வேலையை விட்டுட்டு, அவர் கம்பெனியைப் பாத்துக்கச் சொன்னாரு. ஆனா, கம்பெனியில உனக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்கல. நீ வீட்டில இருந்துக்கிட்டுத் தனக்கு உதவி செய்யணும்னு உன் மனைவி விரும்பறா. அதனால, உனக்கு ஒரு உருப்படியான வேலை இல்லை. அப்பப்ப போய், ஏதோ வேலை செஞ்சுட்டு வரே. சம்பளமும் இல்லை. செலவுக்கு அப்பப்ப ஏதாவது கேட்டு வாங்கிக்கணும். சேவை நிறுவனங்களுக்குப் போறதையும் விட்டுட்ட. உன் மனைவிக்கு அதெல்லாம் பிடிக்கலேன்னு நினைக்கறேன். உன் சந்தோஷத்துக்காக நீ எதையுமே செய்யறதில்லேன்னு தோணுது" என்றார் செல்வமணி.
"அதெல்லாம் இருக்கட்டும்ப்பா. அம்மா போனப்பறம், நீங்க இப்படித் தனியா இருக்கறது எனக்குப் பிடிக்கல. எங்களோட வந்து இருந்துடுங்களேன்!" என்றான் சசிகாந்த்.
"கல்யாணத்துக்கப்பறம் நீ செஞ்சது பிடிக்காமதான் நானும், உன் அம்மாவும் எங்களோட இந்த வீட்டுக்கு வந்தோம். நீ சுதந்திரமா செயல்பட்டு, ஏதாவது வேலைக்குப் போய்ப் பழையபடி இருக்கறதுன்னா சொல்லு. அப்ப உன்னோட வந்து இருக்கேன்" என்றார் செல்வமணி.
"நான் வரேம்ப்பா!" என்று கிளம்பினான் சசிகாந்த்.
குறள் 909:
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல்.
"உனக்கு எதுக்குப் பிடிக்கணும்? நான்தானே அவரைப் போய்ப் பார்த்துட்டு வரேன்! உன்னையும் வரச் சொல்லிக் கேக்கலியே!" என்றான் விஸ்வா.
"கல்யாணத்துக்கு முன்னால நீங்க எப்படிவேணும்னா இருந்திருக்கலாம். ஆனா கல்யாணத்துக்கப்புறம், நீங்க மனைவியோட விருப்பத்தை மதிச்சு நடந்துக்கணும்!"
"என்னவோ கல்யாணத்துக்கு முன்னால நான் குடிச்சுக் கும்மாளம் போட்டுக்கிட்டிருந்த மாதிரி பேசற! என் பெரியப்பா தனியா இருக்காரு. அவரோட ரெண்டு பையன்களும் வெளிநாட்டில இருக்காங்க. அதனால, நான் அவரைப் போய்ப் பார்த்துட்டு வரேன். இதில, உனக்கு என்ன பிரச்னை?" என்றான் விஸ்வா, கோபத்துடன்.
"மனைவியோட விருப்பத்தை நீங்க மதிக்கலைங்கறதுதான் பிரச்னை!" என்றாள் பரிமளா.
"எதுக்கு ஒரு வாரம் வெளியூர் போகணும்னு சொல்றீங்க? ஆஃபீஸ் வேலையா?" என்றாள் பரிமளா.
"ஆஃபீஸ் வேலை இல்லை. ஆஃபீசுக்கு லீவு போட்டிருக்கேன். என் பெரியப்பா தன்னோட குலதெய்வம் கோவிலுக்குப் போகணும்னாரு. அவருக்குத் துணையா நானும் அவரோட போறேன்!" என்றான் விஸ்வா.
"ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள்னு சொல்லுவாங்க. அது மதிரி இருக்கு! நான் உள்ளூர்லேயே அவரைப் போய்ப் பார்க்காதீங்கன்னு சொல்லிக்கிட்டிருக்கேன். நீங்க அவரோட வெளியூருக்குப் போறேங்கறீங்க! நான் சொல்றதை ஒரு பொருட்டா மதிக்க மாட்டீங்களா?" என்றாள் பரிமளா, அதிர்ச்சியுடனும், கோபத்துடனும்.
"பரிமளா! உங்கிட்ட நான் அன்பா இருக்கேன். உன்னை எத்தனையோ இடங்களுக்கு அழைச்சுக்கிட்டுப் போயிருக்கேன். உன்னோட விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றிக்கிட்டுத்தான் இருக்கேன். ஆனா, நீ சொல்ற எல்லாத்துக்கும் நான் தலையாட்டணும்னு எதிர்பார்க்காதே! நீ சொல்ற தப்பான விஷயங்களையோ, நியாயமில்லாத விஷயங்களையோ என்னால செய்ய முடியாது. என் வேலையில லஞ்சம் வாங்கச் சொல்லி நீ சொன்னா, நான் வாங்குவேனா? அது மாதிரிதான். என் பெரியப்பாவுக்கு நான் ஆதரவா இருக்கறதைத் தடுக்கணும்னு நீ நினைச்சா, அதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்!" என்றான் விஸ்வா, உறுதியான குரலில்.
குறள் 910:
எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.
சிந்திக்கும் ஆற்றலும், நெஞ்சுறுதியும் உடையார்க்கு, எக்காலத்திலும் மனைவியின் ஏவலுக்கு இணங்கும் அறியாமை இல்லை.
No comments:
Post a Comment