Sunday, November 26, 2023

1032. சந்தனுவின் தேர்வு

"இந்தக் கூட்டணியில நாமதான் ரெண்டாவது பெரிய கட்சி. நாம நல்ல இலாகாக்களைக் கேட்டு வாங்கிடணும்" என்றார் கட்சியின் பொதுச் செயலாளர் மனோஜ் குமார்.

"ஆமாம், தலைவரே! நம்ம கட்சிக்கு எவ்வளவு அமைச்சர் பதவி கொடுக்கப் போறாங்கன்னு தெரியல. ஆனா, உங்களுக்குத் துணை முதல்வர் பதவியையும், நிதி, உள்துறை, பொதுப்பணித் துறை மாதிரி ஒரு முக்கியமான துறையையும் நாம கேட்டு வாங்கிடணும்" என்றார் கட்சியின் துணைத் தலைவர் தாமோதர்.

"பார்க்கலாம்" என்றார் கட்சித் தலைவர் சந்தனு.

ந்தனு துணை முதல்வராக ஆக்கப்பட்டார். அவர் கட்சிக்கு நிதி, பொதுப்பணித் துறை, போக்குவரத்து, விவசாயம் ஆகிய துறைகள் வழங்கப்பட்டன. சந்தனு விவசாயத் துறையைத் தான் வைத்துக் கொண்டு, மற்ற துறைகளைத் தன் கட்சியைச் சேர்ந்த பிற அமைச்சர்களுக்கு வழங்கினார்.

"என்ன தலைவரே இது? முக்கியமான துறைகளை மத்தவங்களுக்குக் கொடுத்துட்டு, நீங்க விவசாயத் துறையை எடுத்துக்கிட்டிருக்கீங்க! துணை முதல்வர்னா, ஒரு சக்தி வாய்ந்த துறை உங்ககிட்ட இருக்க வேண்டாமா?" என்றார் தாமோதர். 

"இல்லையே! ரொம்ப முக்கியமான துறையைத்தானே நான் எடுத்துக்கிட்டிருக்கேன்!" என்றார் சந்தனு.

"என்ன சொல்றீங்க? விவசயத்துறை அமைச்சரா, உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கும்?"

"ஒரு வண்டி ஓட, சக்கரங்கள் மற்ற பாகங்கள் எல்லாம் வேணும். ஆனா, வண்டியில ரொம்ப முக்கியமான பாகம் அதோட அச்சாணிதான். அச்சாணி இல்லேன்னா, வண்டி ஓடாது. பல தொழில்கள் செய்யற மக்கள் இருக்காங்க. அவங்க எல்லாரையும் தாங்கிப் பிடிக்கறது விவசாயிகள்தான். அப்படிப்பட்ட விவசாயிகளுக்கு வேணுங்கறதை செஞ்சு கொடுத்து, விவசாயத்தை வளம் பெற வச்சு, அதன் மூலமா எல்லா மக்களுக்குமே நன்மை செய்யக் கூடிய வாய்ப்பு இந்தத் துறையிலதானே இருக்கு? அதனாலதான், விவசாயத் துறையை நான் தேர்ந்தெடுத்தேன்" என்றார் சந்தனு.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 104
உழவு

குறள் 1032:
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.

பொருள்: 
உழவுத் தொழிலைச் செய்ய முடியாமல், பிற தொழிலைச் செய்யச் செல்வோர் எல்லோரையும் உழவர்களே தாங்குவதால், அவர்களே இந்த உலகத்தவர்க்கு அச்சாணி ஆவர்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...