அதிகாரம் 43 - அறிவுடைமை

 திருக்குறள்
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 43
அறிவுடைமை

421. நேரடி ஒளிபரப்பு 

 ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவில் ஒரு தொழிலைத் துவக்கிக் காலப்போக்கில் அதை விரிவுபடுத்தி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருந்த ஞானசேகரன், தன் 75ஆவது வயதில் தான் ஓய்வு பெறப் போவதாக அறிவித்தார்.

ஒரு முன்னணிப் பொருளாதாரச் செய்தித் தொலைக் காட்சி நிலையம் அவரைப் பேட்டி காண விரும்பியது. 

"என் பேட்டியை லைவ் ஆக ஒளிபரப்ப வேண்டும்" என்றார் ஞானசேகரன்.

"பேட்டிகளை நாங்கள் லைவ் ஆக ஒளிபரப்புவதில்லையே!" என்றார் அந்த நிலையத்தின் அதிகாரி.

"அப்படியானால் பேட்டி இல்லை!" என்றார் ஞானசேகரன்.

தன் மேலதிகாரிகளிடம் கலந்து பேசி விட்டுச் சொல்வதாகக் கூறினார் அவர். ஆனால் அந்த நிறுவனத்தின் தலைமை இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

லைவ் நியூஸ் என்ற தொலைக்காட்சி நிலையம் சமீபத்தில்தான் துவக்கப்பட்டு நடந்து கொண்டிருந்தது. ஞானசேகரன் ஒரு பெரிய தொலைக்காட்சி நிறுவனத்துக்கு லைவ் ஆகத்தான் பேட்டி கொடுப்பேன் என்று நிபந்தனை விதித்து அவர்கள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்ற விஷயம் வெளியே கசிய ஆரம்பித்திருந்தது.

லைவ் நியூஸின் தலைமை அதிகாரி குமார் தன் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளை அழைத்தார்.

"நாம் ஞானசேகரனைப் பேட்டி கண்டால் என்ன?" என்றார்.

"சார்! நம் பார்வையாளர்கள் அரசியல் செய்திகளை மட்டும்தான் பாப்பாங்க. இது மாதிரி பேட்டிகளை அவங்க பாக்க மாட்டாங்க" என்றார் ஒரு மூத்த அதிகாரி.

"அப்படின்னா நமக்கு புதுப் பார்வையாளர்கள் கிடைப்பாங்களே! அது நமக்கு நல்லதுதானே?" என்றார் இன்னொருவர். 

குமார் அவரை சுவாரசியத்துடன் பார்த்தார்.

"அவர் ஏன் லைவா ஒளிபரப்பணும்னு நிபந்தனை போடறாருன்னு தெரியல. யாரையாவது பத்தி அவதூறா ஏதாவது சொல்லிட்டா நமக்குப் பிரச்னை ஆயிடுமே!"

"அதுதான் எனக்குக் கவலையா இருக்கு!" என்றார் குமார்.

"சார். எனக்கு ஒரு யோசனை தோணுது!" என்றார் தலைமை ஆசிரியர் ரவி. 

ஞானசேகரனின் பேட்டி லைவ் நியூஸ் தொலைக்காட்சியில் லைவ் ஆக ஒளிபரப்பப்படும் என்ற செய்தி ஒரு நாள் முன்பு வெளியிடப்பட்டதும் பெரும் பரபரபரப்பு ஏற்பட்டது. பெரும்பாலும் அரசியல் செய்திகளையே வெளியிடும் லைவ் நியூஸில் ஒரு தொழில் அதிபரின் பேட்டி ஒளிபரப்பாகிறது, அதுவும் லைவ் ஆக என்ற விஷயம் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தி ஏராளமானோரை நிகழ்ச்சியைப் பார்க்க வைத்தது.

பேட்டி துவங்கி சிறிது நேரம் கழித்து ஞானசேகரன் ஓரு விஷயத்தைக் கூறினார்.

"நான் இந்த பேட்டி லைவ் ஆக ஒளிபரப்பப்பட வேண்டும் என்று விரும்பியதற்கு ஒரு காரணம் உண்டு. நான் தொழில் தொடங்கியதிலிருந்து இப்போது வரை நிறையப் போட்டிகளைச் சந்தித்திருக்கிறேன். நேர்மையான போட்டியாளர்கள் உண்டு, எல்லாவிதமான தந்திரங்களையும் கடைப்பிடிக்கும் போட்டியாளர்களும் உண்டு. 

"எத்தனையோ முறை என் நிறுவனம் போட்டியாளர்களால் அழியப் போவதாகப் பத்திரிகைகள் ஆரூடம் கூறி இருக்கின்றன. சில சமயம் அப்படிப்பட்ட நிலை ஏற்பட்டுப் பங்குச் சந்தையில் என் நிறுவனப் பங்குகள் வீழ்ச்சி அடைந்திருக்கின்றன. ஆனால் அவற்றையெல்லாம் எதிர்கொண்டு என் நிறுவனம் மீண்டு வந்திருக்கிறதென்றால் அதற்குக் காரணம்..."

ஞானசேகரன் சஸ்பென்ஸ் கொடுத்து நிறுத்த, பேட்டியை நடத்திக் கொண்டிருந்த தலைமை ஆசிரியர் ரவி, பார்வையாளர்கள் ஆகிய அனைவரும் அவர் சொல்லப் போவதைக் கேட்க ஆவலுடன் காத்திருந்தனர்.

"என் அறிவுத் திறமைதான்..." என்றார் ஞானமூர்த்தி சிரித்தபடி.

"சார்!" என்றார் ரவி, சற்று அதிர்ச்சியுடன்.

"இதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் பேட்டி லைவ் ஆக இருக்க வேண்டும் என்று சொன்னேன். அப்போதுதானே இதை நிறைய பேர் பார்த்து இந்தச் செய்தி அனைவருக்கும் போகும்?"

பேட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த குமார் சட்டென்று ஏமாற்றம் அடைந்தார். 'மனுஷன் தன்னைப் பற்றிப் பெருமை அடித்துக் கொள்ளத்தான் நேரடி ஒளிபரப்பு வேண்டுமென்று கேட்டாரா? ஏதோ பெரிதாகச் சொல்லப் போகிறார் என்று நினைத்து ஏமாந்து விட்டேனே!'

"சார்! உங்கள் அறிவுத் திறமை என்று நீங்கள் குறிப்பிட்டதைக் கொஞ்சம் விளக்க முடியுமா?" என்றார் ரவி, வேறு என்ன சொல்வதென்று தெரியாமல்.

"நிச்சயமாக. அதற்குத்தானே வந்திருக்கிறேன்? என் நண்பர்கள் சிலர் ஸ்டூடியோவுக்கு வெளியே அமர்ந்திருக்கிறார்கள். அவர்களைக் கொஞ்சம் உள்ளே அனுமதிக்க முடியுமா?" என்றார் ஞானசேகரன்.

"எதற்கு?" என்றார் ரவி குழப்பத்துடன்.

"அவர்கள் என்னுடன் பணிபுரிபவர்கள். ஒரு சிலர் ஓய்வு பெற்று விட்டார்கள், இன்னும் சிலர் இப்போது உயிருடன் இல்லை. நான் என் அறிவுத் திறமை என்று குறிப்பிட்டது அவர்களைத்தான்! நான் தொழில் துவங்கிய முதல் நாளிலிருந்தே அறிவாற்றல்தான் என் தொழிலுக்குச் சிறந்த பாதுகாப்பு என்பதை உணர்ந்து அறிவாற்றல் மிகுந்தவர்களை என்னுடன் வைத்துக் கொண்டேன். 

"என் தொழிலின் வளர்ச்சிக்கு உதவியதோடு மட்டுமின்றி, என் தொழிலை அழிக்க என் எதிரிகள் முயன்றபோது அவர்கள் முயற்சிகளை முறியடித்து ஒரு அரணாக நின்று என் தொழிலைக் காத்தவர்களும் அவர்கள்தான். நீங்கள் அனுமதித்தால் அவர்களை இந்த உலகுக்கு அறிமுகப் படுத்தி அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்வேன். நான் இந்தப் பேட்டி லைவ் ஆக இருக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததற்குக் காரணம் என் அறிவாக இருந்து என் நிறுவனத்தைக் காத்த அவர்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வரத்தான்."

"வித் ப்ளெஷர்!" என்றார் ரவி உற்சாகம் திரும்பியவராக.

"சார் ஞானசேகரனோட பேட்டியை நாம லைவா ஒளிபரப்பினது நமக்குப் பெரிய பூஸ்ட்.  நம்ப சானல் வியூவர்ஷிப் ரெண்டு மடங்கு ஆகி இருக்கு. நீங்க எடுத்த துணிச்சலான முடிவுதான் காரணம்!" என்றார் ரவி.

"இல்லை மிஸ்டர் ரவி. ஞானசேகரனுக்கு இருந்த மாதிரி எனக்கும் நீங்கள்ளாம்  ஒரு அறிவா இருக்கறதுதான் காரணம். நான் ஒப்புக்காக இதைச் சொல்லல. லைவா ஒளிபரப்பினா அவரு யாரையாவது பத்தி அவதூறா ஏதாவது சொன்னா நமக்குப் பிரச்னை ஆயிடுமேன்னு நான் பயந்தப்ப, இப்ப இருக்கற தொழில் நுட்பத்தை வச்சு, பேட்டி ஒரு நிமிஷம் தாமதமா ஒளிபரப்பற மாதிரி செஞ்சுட்டா, அவர் ஏதாவது தப்பா சொன்னா உடனே பேட்டியை நிறுத்தி அது ஒளிபரப்பாகாம தடுத்துடலாம்னு நீங்க யோசனை சொன்னதாலதானே தைரியமா இதுக்கு சம்மதிச்சேன்?" என்றார் குமார்.  

குறள் 421:
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.

பொருள்:
அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும். பகைவர்களால் உள்ளே புகுந்து அழிக்க முடியாத அரண் ஆகும்.

422. கண் போன போக்கிலே!

"நாளைக்கு ஒரு இன்டர்வியூ இருக்கு. அதுக்குத் தயார் செய்யணும்!" என்றான் ஆதித்தன்.

"நீங்க என்ன புதுசாவா வேலைக்குப் போறீங்க? ஏற்கெனவே ஒரு நல்ல வேலையில இருக்கீங்க. இப்ப இன்னும் சிறப்பான வேலைக்கு முயற்சி பண்றீங்க. இதுக்குக் கூடவா தயார் செய்யணும்?" என்றாள் அவன் மனைவி ரேணுகா.

"பதுசா வேலைக்கு முயற்சி பண்றவங்ககிட்ட அவங்க படிச்ச படிப்பையும், பொது அறிவையும் தவிர அவங்களுக்கு வேற எதுவும் தெரிஞ்சுருக்கணும்னு எதிர்பார்க்க மாட்டாங்க. என்னை மாதிரி நிறைய அனுபவத்தோட ஒரு உயர்ந்த பதவிக்கு முயற்சி பண்றவங்ககிட்ட நிறைய எதிர்பார்ப்பாங்க. என்னோட நிறுவனம் ஈடுபட்டிருக்கிற தொழில் துறை சம்பந்தமா நிறையத் தெரியணும். நல்லவேளை இன்டர்நெட்னு ஒண்ணு இருக்கு. அதில நிறைய விஷயங்களுக்கும் இருக்கு!"

"மணி பத்து ஆயிடுச்சே! நாளைக்குக் காலையில பத்து மணிக்கு இன்டர்வியூ.. எவ்வளவு நேரம் இன்டர்நெட் பாக்கப்போறீங்க?"

"தெரியல. இன்டர்நெட் ஒரு வரம்தான். ஆனா அதில தேட ஆரம்பிச்சா முடிவில்லாம போய்க்கிட்டே இருக்கும். இது இன்டர்நெட்டோட சாபக்கேடு!. என்ன செய்யறது? ஒரு மணி ரெண்டு மணி கூட ஆகும். நீ போய்த் தூங்கு" என்று மனைவியை அனுப்பி விட்டு கூகிள் கதவைத் தட்டினான் ஆதித்தன்.

டுத்த நாள் இன்டர்வியூ முடிந்து வீட்டுக்கு வந்த ஆதித்தனிடம் "எப்படி இருந்தது இன்டர்வியூ?" என்றாள் ரேணுகா.

"நல்லாப் போகல!" என்றான் ஆதித்தன் ஏமாற்றத்துடன்.

"ராத்திரி அவ்வளவு நேரம் கண் முழிச்சு இன்டர்நெட்ல படிச்சு தயார் பண்ணிக்கிட்டுப் போனீங்களே, அது கை கொடுக்கலியா?" என்றாள் ரேணுகா.

சில விநாடிகள் மௌனமாக இருந்த ஆதித்தன், "இன்டர்நெட்ல என் நேரத்தை சரியாப் பயன்படுத்தி இருந்தா, இன்டர்வியூவில கேட்ட பல கேள்விகளுக்கு என்னால நல்லா பதில் சொல்லி இருக்க முடியும். வேலையும் எனக்குக் கிடைச்சிருக்கலாம்!" என்றான் ஆதித்தன்.

"நேரத்தை சரியா பயன்படுத்தலையா? அப்படின்னா அவ்வளவு நேரம் என்ன பாத்துக்கிட்டிருந்தீங்க?"

"இன்டர்நெட் பாத்துக்கிட்டிருந்தப்ப வீட்டிலிருந்தே தொழில் செஞ்சு பணம் சம்பாதிக்கலாம்னு ஒரு விளம்பரத்தைப் பாத்துட்டு அது என்னன்னு பாக்கலாம்னு கிளிக் பண்ணி அதைப் பத்திப் படிச்சுப் பாத்தேன். படிச்சப்பறம்தான் அது எனக்கு ஒத்து வரதுன்னு புரிஞ்சது. அப்புறம் அது மாதிரி இன்னும் சில விளம்பரங்கள் வந்தது. அதில சிலதெல்லாம் ரொம்ப கவர்ச்சியாத் தெரிஞ்சதால, அதையெல்லாம் படிக்க ஆரம்பிச்சேன். இதிலேயே ரெண்டு மணி நேரம் ஓடிடுச்சு. ஆனா எதுவுமே எனக்குப் பயன்படாததா இருந்தது. நேரத்தை வீணாக்கிட்டமேன்னு என் பேரிலேயே எரிச்சல் வந்தது. அப்புறம் படிக்க மூட் இல்ல. படுத்துத் தூங்கிட்டேன்."

"ஏங்க, நீங்க இவ்வளவு படிச்சவரு, அனுபவம் உள்ளவரு, விஷயம் தெரிஞ்சவரு. ஏன் இப்படிப் பண்ணினீங்க?"

"என்ன செய்யறது? மனசை அது போற போக்கில விட்டா அப்படித்தான். இது ஒரு பாடம்! விடு, வேற நல்ல சந்தர்ப்பம் வரும். பாக்கலாம்" என்றான் ஆதித்தன், வலுவில் வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன்.

"பாருங்க உங்களுக்கு ஏத்த மாதிரி டிவியில ஒரு பாட்டு போடறாங்க!" என்றாள் மனைவி சிரித்தபடி.

'கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போனபோக்கிலே மனிதன் போகலாமா'

என்ற பாடல் தொலைக்காட்சியில் ஒலித்தது.

"உங்களுக்காகவே கண்ணதாசன் எழுதின மாதிரி இல்ல?" என்றாள் ரேணுகா, கேலி ததும்பிய குரலில்.

"இல்லை"

"இல்லையா?"

"இல்லை! இதை எழுதினவர் கண்ணதாசன் இல்லை, வாலி!" என்றான் ஆதித்தன் சிரித்தபடி. 

குறள் 422:
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.

பொருள்:
மனம் போகும் வழியில் எல்லாம் அதைப் போக விடாமல், தீயவற்றிலிருந்து  விலக்கி, அதை நல்ல வழியில் நடத்துவதே அறிவு.

423. தொழிற்சாலை விரிவாக்கம்

சசி இண்டஸ்ட்ரீஸ் தொழிற்சாலை விரிவாக்கம் பெரிய அளவில் திட்டமிடப்பட்டு நடந்து கொண்டிருந்தது. 

ஒரு புகழ் பெற்ற தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தால் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு சசி இண்டஸ்ட்ரீஸின் உயர்மட்ட தொழில்நுட்பக் குழுவால் செயலாக்கம் செய்யப்பட்டு வந்தது.

விரிவாக்கத் தொழில்கூடத்துக்கான கட்டடங்கள் கட்டப்பட்டு இயந்திரங்கள் வாங்கப்பட்டு அவை நிறுவப்பட்டுக் கொண்டிருந்தன. இன்னும் சில வாரங்களில் பணிகள் முடிந்து தொழில்கூடம் உற்பத்தியைத் துவக்கத் தயாராகி விடும்.

நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி சசிசேகர் தலைமைப் பொறியாளர் சாமுவேலைத் தன்அறைக்கு அழைத்தார்.

"நாம இறுதிக் கட்டத்தில இருக்கோம். ஆனா ஒரு சின்ன மாறுதலுக்கான யோசனை வந்திருக்கு. மெஷின் லே-அவுட்ல ஒரு சின்ன மாறுதல் செஞ்சா ப்ரொடக்‌ஷன் லைன் இன்னும் ஸ்மூத்தா இருக்கும்னு ஒரு சஜஷன் வந்திருக்கு. அதை நீங்க பரிசீலிக்கணும்" என்றார் சசிசேகர்.

"நிச்சயமா சார்! யாரோட யோசனை சார் இது?" என்றார் சாமுவேல்.

"நிச்சயமா என்னோடது இல்ல!" என்று சொல்லிச் சிரித்த சசிசேகர் அந்த யோசனையை விளக்கினார்.

"சரி சார்! என் டீம்ல இதைப் பத்தி விவாதிக்கறேன்" என்றார் சாமுவேல்.

அடுத்த நாள் சசிசேகரின் அறைக்கு வந்த சாமுவேல், "சார்! டீம்ல இதை டிஸ்கஸ் பண்ணினோம். அது சரியா வராதுன்னு நினைக்கிறோம். இப்ப இருக்கற லே-அவுட்தான் சார் பெஸ்ட்!" என்றார்.

"சரி!" என்றார் சசிசேகர்.

ரண்டு நாட்களுக்குப் பிறகு சசிசேகர் சாமுவேலை மீண்டும் தன் அறைக்கு அழைத்தார்.

"மிஸ்டர் சாமுவேல்! நான் உங்ககிட்ட சொன்ன சஜஷன் பத்தி நம்ப கன்சல்டன்ட்கிட்ட கேட்டேன். அவங்க இது ரொம்ப நல்ல யோசனைன்னு சொல்றாங்க. அந்த மாறுதல் ரொம்பவும் பயனுள்ளதா இருக்கும்னு சொன்னதோட எங்களுக்கு இது தோணாம போச்சேன்னு சொன்னாங்க! இந்த மாறுதலைப் பண்ணி புது லே-அவுட்டை அவங்க ரெண்டு மூணு நாள்ள அனுப்புவாங்க. அது வரையிலேயும் வெயிட் பண்ணுங்க!" என்றார்.

"சாரி சார்!" என்றார் சாமுவேல்.

"நீங்க சாரி சொல்ல வேண்டியது எங்கிட்ட இல்ல, நம்ப மெஷின் ஆபரேட்டர் குமாரசாமிகிட்டதான்!"

"என்ன சார் சொல்றீங்க?" என்றார் சாமுவேல்.

"ஆமாம், இந்த யோசனையைச் சொன்னது குமாரசாமிதான். உங்க டீம்ல இருக்கற ஒரு எஞ்சினியர்கிட்ட அவர் இதைச் சொல்ல முயற்சி செஞ்சருக்காரு. அவரு அதைக் காது கொடுத்துக் கேக்கவே இல்லையாம். அதனால அவரு எங்கிட்ட வந்து சொன்னாரு. ஒரு வேளை இது என்னோட யோசனைன்னு நான் உங்ககிட்ட சொல்லி இருந்தா நீங்க இதை ஏத்துக்கிட்டிருப்பீங்களோ என்னவோ!" என்று சொல்லிச் சிரித்தார் சசிசேகர். 

குறள் 423:
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

பொருள்:
எந்த விஷயத்தை யார் சொல்லக் கேட்டாலும் அந்த விஷயத்தின் உண்மைத் தன்மையைக் கண்டறிவதே அறிவாகும்.

424. மாணவன் எடுத்த வகுப்பு

"சார் நேத்திக்கு கிளாஸ்ல ஃப்ரீட்மனோட மானிடரி தியரி பத்தி சொன்னீங்க. அதில எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு. 

"இதில சில அம்சங்கள் பத்தி உங்ககிட்ட கொஞ்சம் விரிவா விளக்கம் பெறணும்னு நினைக்கறேன். வகுப்பில நான் என் சந்தேகங்களைக் கேட்டு அதை நீங்க விளக்கினா, மத்த மாணவர்கள் நான் அவங்க நேரத்தை வீணாக்கறதா நினைக்கலாம். அதனாலதான் உங்க கிட்ட தனியா இதைக் கேக்கலாம்னு நினைச்சேன். உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா..." என்றான் பச்சையப்பன்.

பேராசிரியர் டேவிட் அவனைக் கொஞ்சம் வியப்புடன் பார்த்து, "சொல்லு!" என்றார்.

அவன் தன் சந்தேகங்களைக் கேட்டதும், அவர் அவற்றை விளக்கினார்.

"எனக்காக அரை மணி நேரம் செலவழிச்சிருக்கீங்க. ரொம்ப நன்றி சார்!" என்றான் பச்சையப்பன்.

"மாணவர்களோட சந்தேகங்களைத் தீர்த்து வைக்கறது ஆசிரியர்களுக்கு எப்பவுமே ஒரு மன நிறைவான விஷயம்தான். ஆனா இதற்கான வாய்ப்பு அவங்களுக்கு அதிகம் கிடைக்கறதில்ல!" என்று சொல்லிச் சிரித்த டேவிட், "நீ சொன்ன மாதிரி இதை நீ வகுப்பில கேட்டு நான் இதை விளக்கி இருந்தா பல மாணவர்களுக்கு நாம வகுப்பு நேரத்தை வீணாக்கினதாத் தோணி இருக்கும்!" என்றார் தொடர்ந்து.

"ஆமாம் சார்! அதனாலதான் வகுப்புக்கு வெளியில உங்களைத் தொந்தரவு செய்ய வேண்டி இருந்தது."

"நான் சொன்ன மாதிரி, இது எனக்கு மன நிறைவைக் கொடுக்கற விஷயம். எனக்கும் ஒரு சந்தேகம் கேக்கணும் உங்கிட்ட! நீ கேட்ட சந்தேகங்கள் இந்த தியரியோட நுணுக்கமான விவரங்கள் பத்தி. உன் சிலபஸுக்கோ, பரீட்சைக்கோ இதெல்லாம் தேவையில்லை. உன் பாடப் புத்தகத்திலேயும் இதெல்லாம் இருக்காது. அதனாலதான் வகுப்பில இதையெல்லாம் தொட்டுக் காட்டினதோட நிறுத்திக்கிட்டேன். நீ ஏன் இந்த விஷயங்களைத் தெரிஞ்சுக்க விரும்பின?" என்றார் டேவிட்.

"சார்! இந்த தியரியை நீங்க விளக்கினது ரொம்ப சுவாரசியமா இருந்தது. அதனால இதை இன்னும் நுணுக்கமாத் தெரிஞ்சுக்கணும்னு விரும்பினேன். சிலபஸ்படி இந்த தியரியோட அவுட்லைன் மட்டும் தெரிஞ்சா போதும். அதனால வகுப்பில இதைப் பத்தி விவரமாக் கேக்கறது சரியா இருக்காதுன்னு நினைச்சேன். உங்ககிட்ட இதைப் பத்தி தனியாக் கேட்டதுக்கு அதுவும் ஒரு காரணம்" என்றான் பச்சையப்பன்.

அவனை மதிப்புடன் பார்த்த டேவிட், "சரி. நீ எனக்கு ஒரு உதவி செய்யணும்!" என்றார்.

"சொல்லுங்க சார்!" என்றான் பச்சையப்பன்.  

டுத்த நாள் வகுப்புக்கு வந்த டேவிட்,"போன வகுப்பில ஃப்ரீட்மனோட மானிடரி தியரி பத்தி விளக்கினேன். ஒரு மாணவன் அது பத்தி இன்னும் சில விவரங்கள் தெரிஞ்சுக்க விரும்பி எங்கிட்ட தனியா வந்து சில சந்தேகங்களைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டுப் போனான். நான் அவனுக்கு விளக்கிச் சொன்ன விஷயங்களை அவன் இப்ப வகுப்பில விளக்கிச் சொல்லுவான்" என்று சொல்லி விட்டு, பச்சையப்பனைப் பார்த்தார்.

பச்சையப்பன் சற்றுத் தயக்கத்துடன் எழுந்து முன்னே வந்து வகுப்பைப் பாரத்தபடி நின்றான். டேவிட் மாணவர்களின் இருக்கை ஒன்றில் அமர்ந்து கொண்டார்.

சில நிமிடங்கள் மேடைக் கூச்சத்தால் தடுமாறிய பிறகு தெளிவாகப் பேச ஆரம்பித்தான் பச்சையப்பன். 

பச்சையப்பன் விளக்கி முடித்ததும், அவனை இருக்கையில் அமரச் சொல்லி விட்டு டேவிட் எழுந்து வந்தார்.

"எந்த ஒரு விஷயத்தையும் நுணுக்கமாப் புரிஞ்சுக்கற மனப்பான்மையை நீங்க வளத்துக்கணும். மனப்பான்மையை முதல்ல வளத்துக்கிட்டா புரிஞ்சுக்கற திறமையும் தன்னால வளரும். அது போல நமக்குத் தெரிஞ்ச விஷயங்களை மத்தவங்களுக்குத் தெளிவா எடுத்துச் சொல்லணும். இந்தத் திறமைக்கும் முதல் தேவை மனப்பான்மைதான். 

"இது படிப்புக்கு மட்டும் இல்ல, எல்லா விஷயங்களுக்குமே வேணும். அதனால இது ஆசிரியர்களுக்கு மட்டும் இல்லாம, எல்லாருக்குமே இருக்க வேண்டிய திறமை. பச்சையப்பன்கிட்ட விஷயங்களை நுணுக்கமாப் புரிஞ்சுக்கணும்கற ஆர்வம் இருந்ததைப் பார்த்தேன். 

"அதே போல விஷயங்களைத் தெளிவா எடுத்துச் சொல்ற திறமையையும் வளத்துக்கணும்கறதை அவனுக்கும், அவன் முலமா உங்க எல்லாருக்கும் புரிய வைக்கத்தான் நேத்திக்கு எங்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கிட்ட விஷயங்களை வகுப்பில விளக்கச் சொல்லி அவன்கிட்ட சொன்னேன். 

"இது சுலபம் இல்லேன்னு எனக்குத் தெரியும். பச்சையப்பன்! உனக்கு இது நல்ல ஆரம்பம். இன்னும் நீ உன் திறமையை வளத்துக்க இன்றைய அனுபவம் உதவும். இனிமே மத்தவங்களுக்கும் இது மாதிரி வாய்ப்பகளைக் கொடுப்பேன்!" என்றார் டேவிட்.   

குறள் 424:
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.

பொருள்:
தான் சொல்பவற்றை மற்றவர்களுக்குப் பொருள் விளங்கும் வகையில் எடுத்துச் சொல்வதும், மற்றவர்கள் கூறுபவற்றின் நுட்பமான பொருளை அறிந்து உணர்வதும் அறிவாகும்.

425. வேணுவின் நண்பர்கள்

வேணு, கிரி இருவரும் ஒரே நேரத்தில்தான் அந்த நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தனர். 

அந்த நேரத்தில் பணியில் சேர்ந்த ஐம்பது பேருக்கும் சென்னையிலிருந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.

கான்ஃபரன்ஸ் அறையில் வகுப்பு, அலுவலகத்தின் பல பிரிவுகளிலும் நேரடியான வேலைப் பயிற்சி என்று இரண்டு வாரங்கள் பயிற்சி நடந்தது.

அனைவரும் இளைஞர்கள். பெரும்பாலோருக்கு அது முதல் வேலை. அனைவருக்கும் அந்த இரண்டு வாரங்கள் உற்சாகமாக இருந்தன.

வேணுவும், கிரியும் வகுப்பின்போது கான்ஃபரன்ஸ் அறையில் அருகருகில் அமர்ந்ததால் முதலிலிருந்தே நெருக்கமாகி விட்டனர். 

கிரி இயல்பிலேயே அனைவருடனும் சரளமாகப் பேசக் கூடியவன் என்பதால் அநேகமாக எல்லோருடனுமே நெருங்கிப் பழகினான். வேணு அவனுடைய அமைதியான இயல்புக்கு ஏற்ப ஒரு சிலரிடம் மட்டுமே நெருங்கிப் பழகினான்.

பயிற்சி முடிந்ததும், வேணு, கிரி உட்படப் பத்து பேர் தலைமை அலுவலகத்திலேயே பணி அமர்த்தப்பட்டனர். மற்றவர்கள் வெவ்வேறு கிளை அலுவலங்களில் பணி அமர்த்தப்பட்டனர்.

வேணு, கிரி இருவருமே சென்னையைச் சேர்ந்தவர்கள் இல்லை. இருவரும் ஒரே அறையை வாடகைக்கு எடுத்துக் கொண்டு தங்கினர்.

வார இறுதி நாட்களில் வேணு பெரும்பாலும் வெளியே சென்று விடுவான். 

"ஒவ்வொரு வாரமும் எங்க போற? உனக்கு அவ்வளவு நண்பர்கள் இருக்காங்களா?" என்றான் கிரி வியப்புடன்.

"நம்ம பாட்ச்சில ரெண்டு மூணு பேரோடதான் நான் பழகினேன். அதைத் தவிர நாம ஹெட் ஆஃபீஸ்ல டிரெயினிங்கில இருந்தப்ப ஒண்ணு ரெண்டு சீனியர்களோட பழக்கம் ஏற்பட்டுச்சு. அவங்களையெல்லாம் பாக்கத்தான் போறேன்" என்றான் வேணு.

"எங்க போவீங்க? சினிமாவுக்கா?"

"சில பேரோட சினிமாவுக்குப் போவேன். சில பேர் குடும்பத்தோட சென்னையிலேயே இருக்கறவங்க. அவங்க என்னை அவங்க வீட்டுக்குக் கூப்பிடுவாங்க. அங்கேயும் போவேன்" என்றான் வேணு.

"பரவாயில்லையே! இவ்வளவு சீக்கிரத்தில இவ்வளவு நெருக்கமான நண்பர்கள் உனக்குக் கிடைச்சிருக்காங்களே!" என்றான் கிரி.

"ஆமாம். நீதான் எல்லார்கிட்டயும் நல்லாப் பழகுவியே! உனக்கு நிறைய நண்பர்கள் இருப்பாங்களே!"

"நான் பழகற எல்லாரும் என் நண்பர்கள்னு சொல்ல முடியாது. எனக்கு நண்பர்கள் இருக்காங்க. ஆனா நான் அவங்களை நேர்ல சந்திக்கறது எப்பவாவதுதான். பெரும்பாலும் ஃபோன்ல பேசிக்கறதோட சரி."

சில மாதங்களுக்குப் பிறகு வேணு வார இறுதிகளில் வெளியே போவது குறைந்து விட்டது.

"ஏன் இப்பல்லாம் வீக் எண்ட்ல அதிகம் வெளியில போறதில்ல?" என்றான் கிரி.

"என்னவோ தெரியல. ஆரம்பத்தில இருந்த இன்ட்ரஸ்ட் இப்ப இல்ல. எனக்கும் இல்ல. அவங்களுக்கும் இல்ல. முதல்ல நெருங்கின நண்பர்களாத் தெரிஞ்ச சில பேர் இப்ப ஏதோ தெரிஞ்சவங்கங்கங்கற நிலைக்கு இறங்கி வந்துட்டதாத் தோணுது" என்றான் வேணு.

"நான் எப்படித் தெரியறேன்?" என்றான் கிரி சிரித்தபடி.

"நீ எப்பவுமே எனக்கு நெருக்கமானவன்தாண்டா! ஏன் இப்படிக் கேக்கற?" என்றான் வேணு, சற்று அதிர்ச்சியுடன்.

"சும்மா விளையாட்டுக்குத்தான் கேட்டேன். எனக்குத் தெரியாதா, நீ என்னைப் பத்தி என்ன நினைக்கறேன்னு?" என்றான் கிரி.

"ஆமாம், டிரெயினிங்போது நீ எல்லார்கிட்டயும் நல்லாப் பழகின. ஆனா உனக்கு நண்பர்கள் அதிகம் பேர் இருக்கற மாதிரி தெரியலியே?" என்றான் வேணு.

"நான் எல்லார்கிட்டயும் நல்லாப் பழகுவேன். ஆனா உன்னை மாதிரி சில பேர்கிட்ட மட்டும்தான் நட்பா இருப்பேன். எல்லாரையுமே ஓரளவுக்கு கவனிச்சு அவங்க எப்படிப்பட்டவங்கன்னு புரிஞ்சுக்கிட்டு அவங்களை எனக்குப் பிடிச்சிருந்தாத்தான் அவங்ககிட்ட நட்பா இருப்பேன். 

"நம்ம பாட்ச்ல எனக்கு அஞ்சாறு நண்பர்கள் இருக்காங்க. ரெண்டு மூணு பேர் சென்னையிலேயும், மத்தவங்க வேற ஊர்களிலேயும் இருக்காங்க. சென்னையில இருக்கறவங்களை சில சமயம் நேர்ல சந்திப்பேன். ஆனா எல்லார்கிட்டயும் அப்பப்ப ஃபோன்ல பேசிக்கிட்டுத்தான் இருப்பேன். 

"இப்ப கூட திருச்சியில இருக்கற நம்ம பாட்ச்மேட் கண்ணன் அவன் தங்கை கல்யாணத்துக்கு என்னை வரச் சொல்லி ஃபோன்ல கூப்பிட்டு பத்திரிகையும் அனுப்பி இருக்கான். அடுத்த வாரம் கல்யாணம். அதுக்குப் போகப் போறேன்!" என்றான் கிரி.

குறள் 425:
உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு.

பொருள்:
உயர்ந்தவர்களை நட்பாக்கிக் கொள்வது அறிவு. நட்பின் துவக்க நிலையில் அதிகம் மலர்வதும், பின்பு கூம்புவதும் இல்லாமல் இருப்பது அறிவுடைமை.

426. முருகப்பனின் பிடிவாதம்

"சார்! உலகம் மாறிக்கிட்டே வருது. நாமும் அதுக்குத் தகுந்தாப்பல மாறணும்!" என்றான் சேல்ஸ் மானேஜர் கார்த்திகேயன்.

"நான் அப்படி எல்லாம் மாற வேண்டிய அவசியம் இல்லை!" என்றார் நிர்வாக இயக்குனர் முருகப்பன்.

"சார்! அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க மாட்டேங்கற உங்க கொள்கை சரிதான். அதுல உறுதியா இருந்து இத்தனை வருஷமா உங்க நிறுவனத்தை வெற்றிகரமா நடத்திக்கிட்டு வரீங்க. ஆனா இப்ப லஞ்சம்கறது எல்லா இடத்திலேயும் பரவிடுச்சு. நம்ப தயாரிப்புகளை விநியோகிக்கற நிறுவனங்களோட உயர் அதிகாரிகள் கூட கமிஷன் கேக்கறாங்க. அவங்களுக்குக் கொடுக்கற கமிஷனை நாம விலையில ஏத்திக்கலாம். நமக்கு ஒரு பிரச்னையும் வராது."

"விநியோகஸ்தர்களுக்குத்தான் கமிஷன் கொடுக்கறமே!"

"சார்! உங்களுக்குத் தெரியாதது இல்ல. நான் சொல்றது பர்சேஸ் மானேஜர் மாதிரி அதிகாரிகள் கேக்கற கமிஷன், அதாவது லஞ்சம்! முதலாளிகளா இருக்கற விநியோகஸ்தர்கள் கூடக் கேக்கறாங்க. ஏன் சார் உங்களுக்குக் கொடுக்கற கமிஷனை உங்க பில்லிலேதானே கூட்டப் போறோம்னு கேட்டா, வருமான வரின்னு ஒண்ணு இருக்கே தெரியாதான்னு சிரிச்சுக்கிட்டே கேக்கறாங்க!"

"லஞ்சம் கொடுக்கக் கூடாதுன்னு நாம உறுதியா இருக்கறப்ப தனியார் நிறுவன அதிகாரிகளுக்கும், நிறுவன முதலாளிகளுக்கும் மட்டும் கொடுக்கலாமா?"

"சார்! ஒரு சேல்ஸ் மானேஜரா எனக்கு இது ஒரு பிரச்னையா இருக்கு. எங்கிட்ட வேலை செய்யற சேல்ஸ் ரெப்ரசன்டேடிவ்கள் எல்லாம், எல்லா நிறுவனங்களும் கமிஷன் கொடுக்கறப்ப, நாம மட்டும் கமிஷன் கொடுக்காம எப்படி ஆர்டர் வாங்க முடியும்னு கேக்கறாங்க. இப்பல்லாம் கடையில ஒரு சோப் வாங்கறவங்க கூட சோப் விலையில அம்பது பைசாவாவது தள்ளுபடி கிடைக்குமான்னு பாக்கறாங்க. கமிஷன் எதிர்பாக்கறதும் அப்படித்தான் சார்!" என்றான் கார்த்திகேயன்.

சற்று நேரம் யோசித்த முருகப்பன், "நீங்க சொல்றதில அர்த்தம் இருக்கு. இதைப் பத்தி யோசிக்கறேன்" என்றார்.

தன் பிடிவாத குணத்தைத் தளர்த்திக் கொண்டு தான் சொன்னதை யோசித்துப் பார்க்க முருகப்பன் ஒப்புக் கொண்டது கார்த்திகேயனுக்கு வியப்பு கலந்த மகிழ்ச்சியை அளித்தது.

ரு வாரம் கழித்து கார்த்திகேயனை அழைத்த முருகப்பன், "நீங்க சொன்னபடி, இப்ப மக்கள் கிட்ட கமிஷன், தள்ளுபடி எல்லாம் எதிர்பாக்கற மனநிலை வளர்ந்திருக்குங்கறது உண்மைதான். உலகத்துக்கு ஏற்ப நாம அனுசரிச்சுப் போக வேண்டியதுதான். ஆனா அதுக்காக நேர்மை, கொள்கை இதையெல்லாம் விடணும்னு அவசியமில்லை!" என்றார்.

"பின்னே எப்படிசார்?" என்றான் கார்த்திகேயன், ஏமாற்றத்துடன்.

"மக்கள் தள்ளுபடியை விரும்பறதைப் பயன்படுத்தி நாமே ஒரு டிஸ்கவுன்ட் ஸ்டோர் ஆரம்பிச்சுடலாம். நாம நேரடியா விக்கறதால நிறைய டிஸ்கவுன்ட் கொடுக்க முடியும். அதனால விற்பனையும் அதிகமா இருக்கும், வியாபாரமும் நேர்மையானதா இருக்கும். முதலீடு, செலவுகள் பத்தி எல்லாம் ஆடிட்டர்கிட்ட விவரமாப் பேசிட்டேன். முதல்ல கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் ரெண்டு வருஷத்தில இப்ப வர லாபம் வந்துடும்னு சொல்றாரு. சேஸ்ஸ் ரெப்ரசன்டேடிவ்களை நம்ம ஸ்டோர்லயே பயன்படுத்திக்கலாம். கமிஷன் இல்லாம நம்ம கிட்ட வாங்க விரும்பற விநியோகஸ்தர்களுக்கு மட்டும் விக்கலாம். சில வருஷங்கள்ள நிறைய ஸ்டோர்களைத் திறந்து நம்ம வியாபாரம் பெரிய அளவில வளர்வதற்குக் கூட வாய்ப்பு இருக்கு!" என்றார் முருகப்பன், உற்சாகத்துடன்.  

குறள் 426:
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு.

பொருள்:
உலகம் எவ்வாறு நடந்து கொள்கிறதோ, அதற்கேற்றாற்போல் உலகை ஒட்டி நடந்து கொள்வது அறிவுடைமை.

427. தோழிக்குத் தெரிந்தது...

பல வருடங்களாக கிராமத்தில் வசித்து வந்த தன் சிறு வயதுத் தோழி சந்திரா, தான் வசிக்கும் நகரத்துக்குக் குடி வந்தது அருணாவுக்கு மிகவும் உற்சாகமளித்தது.

நேரம் கிடைக்கும்பொதெல்லாம் தோழிகள் இருவரும் சந்தித்து அரட்டை அடிப்பது, கடைகள், கோவில்கள், சினிமா தியேட்டர்கள் போன்ற இடங்களுக்குச் சென்று வருவது என்று சேர்ந்து பொழுதைக் கழித்தனர்.

பல வருடங்கள் கிராமத்திலேயே வாழ்ந்து அதிகமாக வேறெங்கும் செல்லாமலே கிணற்றுத் தவளையாக இருந்து விட்ட சந்திராவுக்கு நகர வாழ்க்கையின் சிறப்புகளைக் காட்டுவதில் அருணா அதிக ஆர்வம் கொண்டிருந்தாள்.

ஷாப்பிங் மால் போன்ற புதிய நகர அதிசயங்களைப் பார்த்து சந்திரா மலைத்து நின்றபோது, 'இப்படி நகர வாசனையே இல்லாத கிராமத்துப் பெண்ணாக இருக்கிறளே இவள்!' என்று நினைத்தாள் அருணா.

ன்று சந்திராவை ஒரு நகைக்கடைக்கு அழைத்துச் சென்றாள் அருணா. அந்தக் கடையில் அருணா நகைச்சீட்டு போட்டு வந்தாள்.

அந்த மாத சீட்டுப் பணத்தைக் கட்டி விட்டுத் தோழிக்குக் கடையைச் சுற்றிக் காட்டி விட்டு வெளியே வந்தபோது, "கடை எப்படி இருக்கு?" என்றாள் அருணா, தோழியிடம்.

"நல்லாத்தான் இருக்கு" என்ற சந்திரா, "ஆமாம்! இதில சீட்டு போடறியே, அதனால உனக்கு என்ன லாபம்?" என்றாள்.

துவக்கத்தில் கொடுக்கப்படும் விலை மதிப்புள்ள பரிசு, சீட்டு முடிந்ததும் கட்டிய பணத்தை விடக் கூடுதலான தொகைக்கு (பாங்க்கில் ரெகரிங் டெபாசிட் போட்டால் கிடைக்கும் தொகையை விட அதிகம் என்று விளக்கினாள் அருணா), செய்கூலி, சேதாரம் இல்லாமல், சந்தை விலையை விடக் கணிசமான அளவு குறைந்த விலையில் நகை வாங்கிக் கொள்ளும் சலுகை போன்ற பலன்களை அருணா விளக்கினாள். 

"இதெல்லாம் அவங்களுக்கு எப்படிக் கட்டுப்படியாகும்?" என்றாள் சந்திரா.

"கட்டுப்படி ஆகறதாலதானே கொடுக்கறாங்க? இது மாதிரி சலுகைகள் எல்லாக் கடைகளிலேயுமே கொடுக்கறாங்க. ஆனா இவங்க அளவுக்கு வேற யாரும் சலுகைகள் கொடுக்கறதில்ல!" என்றாள் அருணா.

"அதனாலதான் கேக்கறேன்" என்றாள் சந்திரா.

"நீ கூட இதில சீட்டு சேரலாம்" என்றாள் அருணா.

"எனக்கு வேண்டாம்மா! நீ கூட இதில போடறது ரிஸ்க்குன்னுதான் எனக்குத் தோணுது!"

சந்திரா தனக்கு ஆலோசனை சொன்னது அருணாவுக்கு வியப்பாக இருந்தது. ஆனால் அவள் பதில் ஏதும் சொல்லவில்லை.

டுத்த மாதம் சீட்டுப்பணம் கட்ட அந்தக் கடைக்கு அருணா சென்றபோதும் சந்திரா அவளுடன் சென்றாள்.

வெளியே வந்ததும், "சீட்டுக் கட்டறதை நிறுத்திட்டு கட்டின பணத்தையோ, அதற்கு ஈடான நகையையோ கேட்டா கொடுப்பாங்களா?" என்றாள் சந்திரா.

"கொடுக்க மாட்டாங்க. ஏன் கேக்கறே?" என்றாள் அருணா வியப்புடன்.

"எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு. போன தடவை பாத்ததுக்கு இப்ப பல தட்டுகள் காலியா இருக்கு!"

"இருந்தா என்ன? அங்கே இருந்த நகையெல்லாம் வித்திருக்கும். வியாபாரம் நல்லா இருக்குன்னுதானே அர்த்தம்?"

"விற்பனை ஆயிடுச்சுன்னா அந்த இடத்தில புதுசா நகைகளை வாங்கி வைப்பாங்க. பொதுவா கடைகள்ள தட்டுகளைக் காலியா வைக்க மாட்டாங்க" என்றாள் சந்திரா.

அருணா பதில் சொல்லவில்லை.

இரண்டு மாதங்களில் அந்த நகைக்கடை மூடப்பட்டது. அருணாவைப் போல் நகைச்சீட்டு போட்டவர்கள் அனைவரும் தங்கள் பணத்தை இழந்தனர்.

அதிகம் விஷயம் தெரியாத கிராமத்துப் பெண் என்று தான் நினைத்த சந்திரா அறிவுள்ள பெண்ணாக இருந்திருக்கிறாள், விஷயம் தெரிந்தவளாகத் தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் தான் அந்த அளவுக்கு அறிவுள்ளவளாக நடந்து கொள்ளவில்லை என்ற கசப்பான உண்மையை அருணா உணர்ந்து கொண்டாள்.

குறள் 427:
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.

பொருள்:
அறிவுடையோர் நடக்கப் போவதை முன்பே அறிந்து கொள்வார்கள். அறிவு இல்லாதவர்கள் அவ்வாறு அறிய மாட்டார்கள்.

428. தேர்தல் "வியூகம்"

அந்தத் தொகுதியின் சட்டமன்றஉறுப்பினராக இருந்த சரவணகுமார் மாவோயிஸ்ட்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, தேர்தல் ஆணையம் அங்கே இடைத்தேர்தலை அறிவித்தது. 

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்துக்குள்ளேயே, அந்தத் தொகுதியில் தேர்தல் நடத்தக் கூடாதென்றும், அப்படி நடத்தினால் தேர்தல் நடைபெறுவதைத் தாங்கள் அனுமதிக்க முடியாதென்றும் மவோயிஸ்ட்களிடமிருந்து அறிவிப்பு வெளியாகியது.

கொல்லப்பட்ட சரவணகுமார் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர். தேர்தல் அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே ஆளும் கட்சி தன் வேட்பாளரை அறிவித்து விட்டது. 

மாவோயிஸ்ட்களின் அச்சுறுத்தலின் பின்னணியில் முக்கியமான எதிர்க்கட்சியைத் தவிர மற்ற கட்சிகள் எல்லாம் தாங்கள் தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று அறிவித்து விட்டன.

எதிர்க்கட்சித் தலைவர் சண்முகம் துணிச்சலுக்குப் பெயர் பெற்றவர். தன் ஐம்பது கால அரசியல் வாழ்க்கையில் பல்வேறு சவால்களையும், அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டவர். அவருக்கு "அஞ்சாநெஞ்சர்" என்றே ஒரு பட்டப் பெயர் உண்டு. அவர் என்ன செய்யப் போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் ஆளுங்கட்சித் தலைவரும் முதலமைச்சருமான பரணிகுமாரிடமிருந்து ஒரு அறிக்கை வெளியாகியது. 

"மாவோயிஸ்ட்களின் அச்சுறுத்தலால் தொகுதியில் ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. அது எங்கள் வசம் இருந்த தொகுதி. எதிர்க்கட்சித் தலைவர் அங்கே வேட்பாளரை நிறுத்தாமல் இருந்தால் எங்கள் கட்சி வேட்பாளர் போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்கப்படுவார். தேர்தலுக்கே அவசியம் இருக்காது. இதனால் மவோயிஸ்ட்களின் வன்முறை தடுக்கப்படும். மக்கள் நலனையும், அமைதி நிலவ வேண்டிய அவசியத்தையும் கருத்தில் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் ஒரு நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன்" என்று அந்த அறிக்கையில் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

பொதுவாக இது போன்ற அறிக்கைகளுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுக்கும் இயல்புள்ள எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து இரண்டு நாட்கள் எந்த பதிலும் வரவில்லை.

ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு எதிர்க் கட்சித் தலைவர் சண்முகம் முதலமைச்சரை அவர் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.

"என் வேண்டுகோள் மீது என்ன முடிவெடுத்திருக்கிறீர்கள்?" என்றார் முதலமைச்சர் பரணிகுமார்.

"உங்கள் அறிக்கையைப் பார்த்தேன். உங்கள் வேண்டுகோளை ஏற்கிறேன். நாங்கள் வேட்பாளரை நிறுத்தப் போவதில்லை!" என்றார் சண்முகம்.

"மிகவும் நன்றி. இதை நேரே சொல்லத்தான் என்னைப் பார்க்க வந்தீர்களா?" என்றார் பரணிகுமார் மகிழ்ச்சியுடன்.

"இல்லை. அதை நான் அறிக்கை மூலமே அறிவித்திருக்கலாம். நான் உங்களைப் பார்க்க வந்தது உங்களிடம் ஒரு வேண்டுகோள் விடுக்க!"

"சொல்லுங்கள்!" என்றார் பரணிகுமார், என்ன கேட்கப் போகிறாரோ என்ற எச்சரிக்கை உணர்வுடன்.

"உங்கள் கட்சி வேட்பாளரையும் நீங்கள் விலக்கிக் கொள்ள வேண்டும்!"

"எதற்கு? அப்புறம் தேர்தலே ரத்தாகி விடும். மாவோயிஸ்ட்கள் விரும்பியது நடக்கும். அதுவா நம் நோக்கம்?"

"சரி. உங்கள் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறார். அதற்குப் பிறகு, அவரை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்ற மாவோயிஸ்ட்கள் அனுமதிப்பார்களா? அவர் தொகுதிக்குப் போகும்போது அவரைக் கொலை செய்ய முயற்சி செய்ய மாட்டார்களா?"

"செய்வார்கள். அவருக்கு அரசாங்கம் அதிகப் பாதுகாப்பு கொடுக்கும்."

"உங்கள் பாதுகாப்பை மீறி அவர் கொல்லப்பட மாட்டார் என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா? சொல்ல வேண்டாம். உங்களுக்கு அந்த நம்பிக்கை இருக்கிறதா?"

"அதற்காக? மாவோயிஸ்ட்களின் மிரட்டலுக்கு பயந்து நாம் செயல்பட முடியாது!" என்றார் பரணிகுமார்.

"சில விஷயங்களுக்கு நாம் பயந்துதான் ஆக வேண்டும். உங்கள் அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக ஒரு தொலைபேசி வந்தால் உடனே அனைவரும் வெளியில் ஒட மாட்டீர்களா? பயப்பட வேண்டிய விஷயங்களுக்கு பயந்துதான் ஆக வேண்டும். இன்றைய சூழலில் மவோயிஸ்ட்களின் மிரட்டலை நாம் புறக்கணிக்க முடியாது. உங்கள் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரை மவோயிஸ்ட்கள் கொல்ல முயற்சிகள் செய்யும்போது பொது மக்கள் பலரும் கூட பாதிக்கப்படுவார்கள். அதையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். சிறிது காலத்துக்கு அந்தத் தொகுதிக்குச் சட்டமன்ற உறுப்பினர் இல்லாமல் இருப்பதுதான் நல்லது. மாவோயிஸ்ட்களை பேச்சு வார்த்தை மூலமோ, நேரடி மோதல் மூலமோ வழிக்குக் கொண்டு வரும் வரையில் அவர்கள் அச்சுறுத்தல்களை மதித்து நடப்பதுதான் நடைமுறைக்கு ஏற்ற வழி" என்றார் அஞ்சாநெஞ்சர் சண்முகம். 

குறள் 428:
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.

பொருள்:
அஞ்ச வேண்டிய விஷயங்களுக்கு அஞ்சாமல் இருப்பது அறியாமையாகும். அஞ்ச வேண்டிய விஷயங்களுக்கு அஞ்சுவது அறிவுடையோர் செயல்.

429. அவசரப்பட்டு எடுத்த முடிவு?

"50 வருஷமா இந்த ஊர்ல சாயப்பட்டறை நடத்திக்கிட்டிருக்கோம். நம்ப கழிவுகள் ஆத்தில கலக்கறதால ஆத்துத் தண்ணி கெட்டுப் போகுதுன்னு சொல்லி நம்ம பட்டறைகளை மூடச் சொல்றாங்க. இந்த வட்டாரத்தில நூறு பட்டறைகளுக்கு மேல இருக்கு. மொத்தம் ஐயாயிரம் பேருக்கு மேல வேலை செய்யறாங்க. பட்டறைகளை மூடினா ஐயாயிரம் குடும்பமும் நடுத்தெருவுக்குத்தான் வரும். நாம இதை எதிர்த்துப் போராடுவோம். யாரும் பயப்பட வேண்டியதில்லை."

சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பேசியதும் அனைவரும் கை தட்டினர்.

"சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு ஆணையத்திலேந்து நமக்கெல்லாம் நோட்டீஸ் வந்திருக்கே!" என்றார் ராஜாங்கம்.

"இது மாதிரி நோட்டீசுக்கெல்லாம் நாம பயப்பட வேண்டியதில்லை. பக்கத்து ஊர்ல ஒரு ரசாயனத் தொழிற்சாலையோட கழிவுகளால நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டிருக்குன்னு விவசாயிங்க 10 வருஷமாப் போராடிக்கிட்டிருக்காங்க. அவங்களையே இன்னும் மூட வைக்கலியே இந்த அரசாங்கம்!" என்றார் தலைவர்.

ரு வாரம் கழித்து ராஜாங்கம் தன் தொழிற்சாலை ஊழியர்களில் சீனியர்கள் சிலரைத் தன் அறைக்கு அழைத்தார்.

"நாளுக்கு நாள் சுற்றுச்சூழல் அமைப்புகள்கிட்டேந்து நமக்கு எதிர்ப்பு அதிகமாகிக்கிட்டே இருக்கு, இந்தத் தொழிலை ரொம்ப நாளைக்கு நம்மால நடத்த முடியாதுன்னு எனக்குத் தோணுது" என்று ராஜாங்கம் ஆரம்பித்ததுமே, "சார்! அப்படி நடக்க விடமாட்டோம்னு உங்க சங்கத்தில சொல்லி இருக்காங்களே! ஒத்தர் கூடத் தங்கள் பட்டறையை மூடறதா இல்லை" என்றார் ஊழியர்களில் ஒருவர்.

"ஆனா, நான் மூடப் போறேன்!" என்றார் ராஜாங்கம்.

"என்ன சார் இது?" என்றார் இன்னொரு ஊழியர் அதிர்ச்சியுடன்.

"நீங்க முதலாளி. நீங்க ஏதாவது தொழில் செஞ்சு பொழச்சுப்பீங்க. நாங்கள்ளாம் என்ன செய்யறது?" என்றார் மற்றொருவர், அழுது விடுவார் போன்ற தொனியுடன்.

"நீங்க சொல்றது சரிதான். நான் வேற தொழில் ஆரம்பிக்கத்தான் போறேன். ஆனா உங்க எல்லாருக்கும் அதில வேலை கொடுக்கப் போறேன்!" என்றார் ராஜாங்கம்.

"என்ன சார் சொல்றீங்க?"

"என்னோட திட்டத்தை சொல்றேன். இப்ப கையில இருக்கற ஆர்டர்களை மட்டும் முடிச்சுட்டு பட்டறையை மூடிடப் போறேன். இயந்திரங்களையெல்லாம் வித்துட்டு, தொழிற்சாலையை இடிச்சுட்டு வேற கட்டிடம் கட்டி ஒரு துணிக்கடை ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். நல்ல வேளையா இது என் சொந்த இடம். அதோட இது மெயின் ரோடில இருக்கு. பல இடங்களிலேந்தும் பல வகையான உடைகளை வாங்கிக் குறைஞ்ச லாபம் வச்சு வித்தா வியாபாரம் நல்லா நடக்கும்னு நினைக்கிறேன்.

"இங்கே 30 பேரு வேலை செய்யறீங்க. ஒத்தரை கூட நான் வேலையை விட்டு அனுப்பப் போறதில்ல. அத்தனை பேருக்கும் அதே சம்பளத்தில வேலை கொடுக்கப் போறேன். கடை ஆரம்பிக்க ரெண்டு மூணு மாசம் ஆகும். ஆனா எல்லாருக்கும் தொடர்ந்து சம்பளம் கிடைக்கும். வேற வேலைக்குப் போகணும்னு நினைக்ககறவங்க போகலாம்" என்றார் ராஜாங்கம்.

"அவ்வளவு பேருக்கும் கடையில வேலை இருக்குமா சார்? அதுவும் அது வேற விதமான வேலையா இருக்குமே சார்?"

"வேற விதமான வேலைதான். ஆனா அதுக்கு நீங்க தயாரா இருக்கணும். இப்ப சாயப்பட்டையில உடையெல்லாம் சாயமாக்கிக்கிட்டு வேலை செய்யறீங்க. உடையில அழுக்குப் படாத கடை வேலை யாருக்கும் கஷ்டமா இருக்காதுன்னு நினைக்கிறேன். முப்பது பேரில பத்து பேர் கடையில வேலை செய்வாங்க. அஞ்சாறு பேர் இருந்தாப் போதும். ஆனா எல்லாருக்கும் வேலை கொடுக்கணுமே, அதனால பத்து பேரைக் கடையில வைக்கலாம்னு நினைக்கிறேன். இப்ப ஆஃபீஸ்ல வேலை பாக்கற அஞ்சு பேரு அங்கேயும் ஆஃபீஸ் வேலை பாப்பாங்க. பல ஊர்களுக்குப் போய் துணிகளைப் பாத்து தரமாவும், விலை குறைவாகவும் இருக்கற துணிகளைப் பாத்து வாங்கணும். அது மாதிரி சின்ன ஊர்களில இருக்கள துணிக்கடைகளிலே நம்ம துணிகளை விக்கணும். இதுக்கெல்லாம் ஒரு அஞ்சு பேரு..."

"இன்னும் அஞ்சு பேரு இருக்காங்களே!"

"கவலைப் படாதீங்க. அவங்களுக்கு ஒரு திட்டம் வச்சிருக்கேன்" என்றர் ராஜாங்கம் சிரித்துக் கொண்டே. மாற்றத்தை ஏற்றுக் கொள்ளத் தயங்கும் ஐந்தாறு பேர் வேலையை விட்டுப் போய் விடுவார்கள் என்ற தன் எதிர்பார்ப்பை அவர் அவர்களிடம் சொல்லவில்லை.

"சார்! சொல்றேனேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க! நாம கொஞ்ச காலம் பொறுத்திருந்து பாக்கலாமே! சங்கத் தலைவர் சொல்ற மாதிரி, நாம இந்தத் தொழிலைத் தொடர்ந்து நடத்த அரசாங்கம் அனுமதிக்கலாம் இல்ல?" என்றார் வயதில் மூத்த ஒரு ஊழியர்.

"பொதுவாகவே, இப்ப சுற்றுச்சூழல் பாதிப்பு விஷயத்தில கடுமையா நடவடிக்கை எடுக்கற போக்கு இருக்கு. நடவடிக்கை எடுக்கறது சில மாதங்கள் தள்ளிப் போகலாம். ஆனா இந்தத் தொழிலை ரொம்ப நாளைக்கு நடத்த அனுமதிக்க மாட்டாங்க. வெள்ள அபாயம் இருக்கும்போது ஒரு பாதுகாப்பான இடத்துக்குப் போக நாம நம்மை முன்னமே தயார்ப்படுத்திக்கணும். வெள்ளம் வந்தப்பறம் நமக்கு நேரமும் இருக்காது, போறதுக்கு இடமும் இருக்காது" என்றார் ராஜாங்கம்.

மற்ற சாயப்பட்டறை உரிமையாளர்கள் கூட ராஜாங்கம் தேவையில்லாத பயத்தில் அவசரப்பட்டு முடிவு எடுத்து விட்டதாக நினைத்தார்கள். 

ராஜாங்கத்தின் சாயப்பட்டறை மூடப்பட்டு அவரது துணிக்கடை செயல்படத் தொடங்கிய ஓரிரு மாதங்களில் அரசின் உத்தரவால் எல்லா சாயப்பட்டறைகளும் நிரந்தரமாக மூடப்பட்டன. 

குறள் 429:
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்

பொருள்:
வரப் போவதை முன்னமே அறிந்து தம்மைக் காத்துக் கொள்ள வல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும்படியாக வரக் கூடிய துன்பம் எதுவும் நேராது.

430. வீட்டுக்காரரின் யோசனை

வாடகைப் பணத்தைக் கொடுத்த பிறகு தயங்கி நின்ற அன்புவைப் பார்த்து, "என்ன?" என்றார் சிவானந்தம்.

"வீட்டைக் காலி பண்றேன் சார்" என்றான் அன்பு.

"ஏன்? கல்யாணம் ஆகப் போகுதா? வேற வீடு பாத்துக்கிட்டுப் போகப் போறியா?" என்றார் சிவானந்தம். 

"இல்லை சார்! வேலையை விட்டுட்டேன். வேற வேலை எப்ப கிடைக்கும்னு தெரியல. அதனால மாசாமாசம் வாடகையை சரியாக் கொடுக்க முடியுமான்னு தெரியல. அதனால வேற வேலை கிடைக்கிற வரை கொஞ்ச நாள் யாராவது நண்பர்களோட தங்கிக்கலாம்னு இருக்கேன்" என்றான் அன்பு, தயக்கத்துடன்.

"உள்ளே வா!" என்று அவனை உள்ளே அழைத்து சோஃபாவில் உட்காரச் சொன்ன சிவானந்தம், "உன்னைப் பத்தி எனக்கு அதிகமாத் தெரியாது. மாசாமாசம் முதல் வாரத்தில வாடகைப் பணத்தைக் கொடுத்துடுவ. அதனால எனக்கு உன் மேல நல்ல அபிப்பிராயம் உண்டு. அதனால என்னால ஏதாவது உதவி செய்ய முடியுமான்னு பாக்கறேன். ஏன் வேலையை விட்ட?" என்றார்.

"என் முலாளியோட கொஞ்சம் மனஸ்பாபம். அதான் வேலையை விட்டுட்டேன்" என்றான் அன்பு, சுருக்கமாக.

"நீ ஒரு கம்பெனியில மெஷின் ஆப்பரேட்டரா இருக்கறதா சொல்லி இருக்கே. உன் முதலாளியோட என்ன மனஸ்தாபம்? எங்கிட்ட சொல்லலாம்னா சொல்லு."

அன்பு ஒரு நிமிஷம் தயங்கி விட்டு, "ஒரு எஞ்சினியரிங் தொழிற்சாலையில நான் மெஷின் ஆப்பரேட்டரா இருந்தேன். பல தொழிற்சாலைகளுக்குப் பலவிதமான பாகங்கள் தயாரிக்க எங்களுக்கு ஆர்டர்கள் வரும். அதுக்கெல்லாம் நிறைய டூல்கள் டிசைன் பண்ணித் தயாரிச்சு அவற்றை வச்சுத்தான் அந்த பாகங்களைத் தயாரிக்கணும்.

"எங்க கம்பெனியில ஒரு எஞ்சினியர் இருந்தாரு. அவர்தான் டூல் எல்லாம் டிசைன் பண்ணுவார். அவர் வேலையை விட்டுப் போயிட்டார். அவர் டிசைன் பண்ணும்போது அவர் பக்கத்தில இருந்து பாத்து நானும் கொஞ்சம் கத்துக்கிட்டேன். அவரு போனப்பறம் நானே டிசைன் பண்ணிப் பாத்தேன். நல்லா வந்தது. என் முதலாளிக்கு ரொம்ப சந்தோஷம்.

"வேற எஞ்சினியரை வேலைக்கு எடுக்காம என்னையே டிசைன் பண்ணச் சொன்னாரு. ஆறு மாசம் பாத்துட்டு நான் தொடர்ந்து நல்லா செஞ்சா எனக்கு சம்பளம் அதிகமாக் கொடுக்கறேன்னாரு. ஆனா ஒரு வருஷம் ஆகியும் அவர் சொன்ன அளவுக்கு சம்பளம் கொடுக்கல. என் சம்பளத்தை ஒப்புக்குக் கொஞ்சம்தான் அதிகப்படுத்தினாரு. அதனாலதான் நான் வேலையை விட்டுட்டேன்."

"அவரு உன்னைப் போகாதேன்னு தடுக்கலியா?"

"போகாதேன்னு சொன்னாரு. ஆனா சம்பளம் அதிகமாக் கொடுக்க மாட்டேன்னுட்டாரு. 'நீ படிக்காதவன்தானே, என் கம்பெனியிலதானே வேலை கத்துக்கிட்ட? இப்ப நான் கொடுக்கறதே அதிகம்'னு சொல்லிட்டாரு."

ஒரு நிமிடம் யோசனை செய்த சிவானந்தம், "சரி. இப்ப எங்கே வேலை தேடப் போற?" என்றார்.

"இதே மாதிரி நிறைய கம்பெனி இருக்கே, அதில ஏதாவது ஒரு கம்பெனியில வேலை கிடைக்குமான்னு பாக்கணும்" என்றான் அன்பு.

"இது மாதிரி இன்னொரு கம்பெனிக்கு வேலைக்குப் போனா, அங்கேயும் இதே மாதிரிதான் நடக்கும். நான் ஒண்ணு சொல்றேன். அதை முயற்சி பண்ணிப் பாரு. இந்த டூல் டிசைன் பண்றதை ஒரு தொழில் மாதிரி செய். இந்தத் தேவை இருக்கற கம்பெனிகளுக்குப் போய் உன்னை ஒரு டூல் டிசைன் எக்ஸ்பர்ட்னு சொல்லி, குறிப்பிட்ட சில வேலைகளுக்கு டூல் டிசைன் பண்ற வாய்ப்பு கிடைக்குமான்னு பாரு. பல கம்பெனிகளுக்கு தனித் தனியான ஜாப்களுக்கு டூல் டிசைன் பண்ணி அதுக்கு ஒரு ரேட் சொல்லிப் பணம் வாங்கிக்க. உன்கிட்ட திறமை இருக்கறதால, உனக்கு நிச்சயமா வாய்ப்புகள் கிடைக்கும். கொஞ்ச நாள்ள உனக்குன்னு ஒரு பேர், இமேஜ் எல்லாம் கிடைச்சப்பறம் வருமானமும் நிறைய வரும். எந்த ஒரு கம்பெனியையும் நம்பி இருக்க வேண்டாம்" என்றார் சிவானந்தம்.

அன்பு தயங்கினான். 

"நீ சொன்னதிலேந்து உனக்கு இந்த வேலேயில ஒரு சிறப்பான அறிவு இருக்குன்னு எனக்குத் தோணுது. ஒரு மாசம் வேலை தேடாம இதை முயற்சி செஞ்சு பாரு. வீட்டை இப்ப நீ காலி செய்ய வேண்டாம். வாடகையைக் கூட நான் அப்புறம் வாங்கிக்கறேன். ஒரு மாசத்தில உனக்கு வாய்ப்பு எதுவும் வரலேன்னா அப்புறம் காலி பண்ணலாம்."

டுத்த மாதம் வாடகைப் பணம் கொடுப்பதற்காக சிவானந்ததைப் பார்க்க வந்த அன்பு, "சார்! நீங்க சொன்னபடி முயற்சி பண்ணினதில எனக்கு வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பிச்சிருக்கு. ரெண்டு மூணு வேலை செஞ்சு கொடுத்திலேயே, நான் வாங்கின சம்பளத்துக்கு அதிகமா சம்பாதிச்சுட்டேன். இன்னும் நிறைய வாய்ப்புகள் வரும்னு நம்பிக்கை இருக்கு, உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லணும்" என்றான்.

"நீ சொன்னதிலேந்து உனக்கு உன் தொழில்ல நல்ல அறிவு இருக்கன்னு நான் புரிஞ்சுக்கிட்டேன். இந்த மாதிரி அறிவு இருக்கறவங்களால நிச்சயமா சாதிக்க முடியும்கறது என்னோட நம்பிக்கை. அதனாலதான் உன்னை என்கரேஜ் பண்ணினேன். அது சரி. உன் பழைய முதலாளி எப்படி இருக்காரு? ஏதாவது தெரியுமா?" என்றார் சிவானந்தம்.

"அவரு எனக்கு ஃபோன் பண்ணி என்னை மறுபடி வந்து வேலையில சேரச் சொன்னாரு. நான் கேக்கற சம்பளத்தைக் கொடுக்கறேன்னு சொன்னாரு. ஆனா நான் இப்ப சம்பளத்துக்கு வேலை செய்யல, சொந்தமாத் தொழில் செய்யறேன், எனக்கு சில வாடிக்கையாளர்கள் இருக்காங்கன்னு சொன்னேன். அவரு கோவிச்சுக்கிட்டு ஃபோனை வச்சுட்டாரு!" என்றான் அன்பு, சிரித்தபடி. 

குறள் 430:
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.

பொருள்:
அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர். அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.
அறத்துப்பால்                                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...