திருக்குறள்
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 81
பழைமை (நீண்டகால நட்பு)
801. பரணிதரனின் கோபம்!
"பரணிதரன் வீடு இதுதானே?""வாங்க, உக்காருங்க!" என்று வந்தவரை வரவேற்ற பாகீரதி, அவர் அமர்ந்ததும், "நீங்க?" என்றாள்.
"என் பேரு ஈஸ்வரமூர்த்தி" என்ற அவர், "என் பெண்ணோட கல்யாண விஷயமாப் பேச வந்தேன். நீங்க பரணிதரனோட அம்மாதானே?" என்றார்.
"ஆமாம். எங்களைப் பத்தி உங்களுக்கு யார் தகவல் சொன்னாங்க?" என்றாள் பாகீரதி, சற்று வியப்புடன்.
"என்னோட நண்பர் ஒத்தர் சொன்னாரு. அவருக்கு யார் சொன்னாங்கன்னு எனக்குத் தெரியல. உங்க பையனுக்குப் பெண் பாத்துக்கிட்டிருக்கீங்க இல்ல?"
"ம்..." என்றாள் பாகீரதி, தயக்கத்துடன்.
ஈஸ்வரமூர்த்தி தன் குடும்பம் பற்றிய விவரங்களையும், தன் பெண்ணைப் பற்றிய விவரங்களையும் தெரிவித்தார்.
"சரி. ஜாதகம் கொடுத்துட்டுப் போங்க. பாத்துட்டு சொல்றேன்" என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தாள் பாகீரதி.
பரணிதரன் வீட்டுக்கு வந்ததும், அவனிடம் விஷயத்தைச் சொன்ன பாகீரதி, "ஏண்டா, நான் கல்யாணத்தைப் பத்திப் பேசினப்ப எல்லாம் பதில் சொல்லாம தட்டிக் கழிச்சே! இப்ப யாரோ சொல்லி, ஒத்தர் வந்து ஜாதகம் கொடுத்துட்டுப் போறாரு. யார்கிட்டயாவது சொல்லி, உனக்குப் பெண் பார்க்கச் சொன்னியா என்ன?" என்றாள்.
"நான் யார்கிட்டேயும் சொல்லல. இதை யார் செஞ்சிருப்பாங்கன்னு எனக்குத் தெரியும். அந்த அதிகப் பிரசங்கி பாலுவாத்தான் இருக்கும். அவன் வரட்டும், பேசிக்கிறேன்!" என்று கோபத்துடன் கூறிய பரணிதரன், "அவர் ஜாதகம் கொடுத்ததும் நல்லதாப் போச்சு. ஜாதகம் பொருந்தலேன்னு இன்னிக்கே அவருக்கு ஒரு கார்டு எழுதிப் போட்டுடு" என்றான் தொடர்ந்து.
"உன் நண்பன் உன் மேல ரொம்பக் கோபமா இருக்காண்டா! அவன்கிட்ட கேக்காம நீ ஏன் பெண் வீட்டுக்காரங்களை இங்கே வரச் சொன்னே?" என்றாள் பாகீரதி, வீட்டுக்கு வந்த பாலுவிடம். பரணிதரன் அப்போது வீட்டில் இல்லை. வெளியே எங்கோ சென்றிருந்தான்.
"எனக்குப் பெண் பாக்கறதிலேந்து கல்யாண ஏற்பாடுகள் வரை என் கல்யாணத்தில அவன் எனக்கு நிறைய உதவி செஞ்சான். அதனாலதான், அவனுக்குப் பொருத்தமா ஒரு பெண் இருக்கறது தெரிஞ்சதும், உங்களை வந்து பாக்கச் சொன்னேன். இது தப்பா?" என்றான் பாலு.
"அப்படித்தான் பரணி நினைக்கிறான். கல்யாணத்தைப் பத்தி அவன் என்ன நினைக்கிறான்னு எனக்கே தெரியல. எப்ப கேட்டாலும், கொஞ்ச நாள் ஆகட்டும்னு சொல்லிக்கிட்டிருக்கான். அவன் மனசில என்ன இருக்குன்னு நானே குழம்பிக்கிட்டிருக்கேன். நீ அவனைக் கேக்காம ஒத்தரை வீட்டுக்கு அனுப்பினா?"
"அவன் ரொம்ப இன்டிபென்டன்ட் டைப்தான். அவன் விஷயத்தில அவனைக் கேக்காம நான் செஞ்சிருக்கக் கூடாது. கோவிச்சுக்கிட்டுக் கத்தினான்னா, பொறுமையாக் கேட்டுக்கறேன். நீங்க சொல்றதைப் பாத்தா, அவன் என் மேல ரொம்பக் கோபமா இருக்கற மாதிரி தெரியுது. என் முகத்திலேயே முழிக்காதேன்னு சொல்லிடப் போறானோன்னு பயமா இருக்கு!" என்றான் பாலு, சற்றுக் கவலையுடன்.
அப்போது வீட்டுக்குள் நுழைந்த பரணிதரன், நண்பனைப் பார்த்து விட்டு, அவனைத் தன் அறைக்குள் அழைத்துச் சென்றான்.
அடுத்த சில நிமிடங்களுக்கு, பரணிதரன் பாலுவிடம் வழக்கமாகப் பேசுவதைப் போல் பல விஷயங்களைப் பற்றி இயல்பாகப் பேசிக் கொண்டிருந்தான்.
காப்பியுடன் அறைக்குள் வந்த பாகீரதி, அவர்கள் பேசுவதைக் கேட்காமலேயே, "ஏதோ தெரியாம செஞ்சுட்டான், விடு!" என்றாள், மகனிடம்.
"தெரியாம செஞ்சுட்டானா? எதை?" என்ற பரணிதரன், உடனேயே, "ஓ, எனக்குப் பெண் பார்க்கிற முயற்சியிலே இறங்கினானே, அதைச் சொல்றியா? அம்மா! பாலுவும் நானும் சின்ன வயசிலேந்தே நண்பர்களா இருக்கோம். அதனால, அவன் உரிமை எடுத்துக்கிட்டு எங்கிட்ட சொல்லாமயே எனக்குப் பெண் பாக்கற வேலையில இறங்கி இருக்கான். முதல்ல எனக்குக் கொஞ்சம் கோபம் வந்தது உண்மைதான். ஆனா, ஒரு நண்பனா உரிமை எடுத்துக்கிட்டு அவன் எனக்கு ஒரு நல்லது செய்ய நினைச்சதுக்காக, அவனை நான் எப்படிக் கோபிச்சுக்க முடியும்? அந்தக் கோபம் அன்னிக்கே போயிடுச்சு. அந்த விஷயத்தை நான் மறந்து கூடப் போயிட்டேன்!" என்றான், சிரித்தபடி.
பிறகு, "அம்மா! நான் வேலை பாக்கற கம்பெனியோட நிலைமை சரியில்ல. அதனால, வேற வேலைக்கு முயற்சி செஞ்சுக்கிட்டிருக்கேன். எனக்கு வேற வேலை கிடைச்சப்பறம், நீயும் பாலுவும் சேர்ந்தே எனக்குப் பெண் தேடலாம்!" என்றான் பரணிதரன்.
குறள் 801:
பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.
"எங்க உறுப்பினர் ராமச்சந்திரன் உங்க பேரை சஜஸ்ட் பண்ணினப்ப, பிரபலம் இல்லாத ஒரு நபரைப் பேசச் சொல்றோமே என்று எனக்குக் கொஞ்சம் தயக்கம் இருந்தது. ஒரு பிரபலமான நிபுணரைக் கூப்பிட்டிருந்தா, அவர் கூட இவ்வளவு சுவாரசியமா புது விஷயங்களையெல்லாம் சொல்லி, ஆடியன்ஸை இந்த அளவுக்குக் கவர்ந்திருப்பாரான்னு தெரியல. உங்களுக்கு நன்றி சொல்றதோட, எங்க உறுப்பினர் ராமச்சந்திரனுக்கும் நாங்க நன்றி சொல்லணும்!" என்றார் நிகழ்ச்சியை நடத்திய அமைப்பின் தலைவர்.
அருகில் நின்ற ஶ்ரீகுமாரின் நண்பன் ராமச்சந்திரன், பெருமையுடன் தன் நண்பனைப் பார்த்துச் சிரித்தான்.
அரங்கத்தை விட்டு வெளியே வரும்போது, ஶ்ரீகுமாருடன் நடந்து வந்த ராமச்சந்திரன், "ரொம்பப் பிரமாதமாப் பேசிட்டடா! நீ நல்லாப் பேசுவேன்னு நினைச்சுத்தான் உன் பேரை சஜஸ்ட் பண்ணினேன். நான் எதிர்பார்த்தது வீண் போகல!" என்றான்.
"அது சரி. மனோதத்துவம் பத்திப் பேசறதுக்கு, என் பேரை ஏன் சஜஸ்ட் பண்ணினே? எனக்கும் மனோதத்துவத்துக்கும் என்ன சம்பந்தம்?" என்றான் ஶ்ரீகுமார்.
"இதை நீ ஏன் இப்ப கேக்கற? 'எங்க சங்கத்தில இந்தத் தலைப்பில பேச உன் பேரைக் கொடுத்திருக்கேன், அவங்களும் ஒத்துக்கிட்டாங்க'ன்னு நான் உங்கிட்ட ஃபோன்ல சொன்னப்ப, நீ ஏன் இந்தக் கேள்வியைக் கேக்கல?"
"நீ என்னோட நண்பன். ஏதோ ஒரு நம்பிக்கையில, நீ இந்த ஏற்பாட்டைப் பண்ணிட்ட. உன்னோட கமிட்மென்ட்டை நான் காப்பாத்த வேண்டாமா? அதான் கேள்வி கேக்காம சரின்னுட்டேன். நீ இன்னும் என் கேள்விக்கு பதில் சொல்லவே இல்லையே!"
"என்னடா, மறந்துட்டியா? நீ பி.ஏ. சைகாலஜி படிச்சிருக்க! மனோதத்துவம் பத்திப் பேச உனக்கு வேற என்ன தகுதி வேணும்?"
'அட முட்டாளே! நீ கூடத்தான் பி.ஏ. லிடரேசர் படிச்சிருக்க. ஆங்கில இலக்கியத்தைப் பத்திப் பேசச் சொன்னா, நீ பேசுவியா?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட ஶ்ரீகுமார், "உண்மையாவே மறந்துதான் போச்சு! பிளஸ் டூ-ல குறைஞ்ச மார்க் வாங்கினதால, சயன்ஸ், காமர்ஸ் எதுவும் கிடைக்காம, பி.ஏ. சைகாலஜி படிச்சேன். ஆனா, இப்ப நான் செய்யற தொழில் கட்டிடம் கட்டறது. கட்டிடக் கலையைப் பத்திப் பேசச் சொன்னாலாவது, அனுபவ அடிப்படையில ஏதாவது பேசி இருப்பேன், எப்பவோ படிச்ச சைகாலஜி பத்தி இப்ப என்னால பேச முடியும்னு நினைச்சு, நீ என் பேரைக் கொடுத்ததுதான் எனக்கு ஆச்சரியமா இருக்கு!" என்றான் ஶ்ரீகுமார்.
"உன்னோட ஒரு ஸ்பெஷாலிடி எனக்குத் தெரியுமே! உனக்குக் கொஞ்சம் கூடத் தெரியாத ஒரு தலைப்பைக் கொடுத்தாக் கூட, அதைப் பத்திப் படிச்சுத் தயார் பண்ணி, ஒரு நிபுணர் பேசற அளவுக்கு உன்னால பேச முடியுமே! உன்னோட இந்தத் திறமையை நம்பித்தான், உங்கிட்ட கூட கேட்காம, உரிமை எடுத்துக்கிட்டு உன் பெயரைக் கொடுத்தேன். நான் செஞ்சது தப்பா? ஆனா, நீதான் நான் எதிர்பார்த்துக்கு மேலேயே பிரமாதமாப் பேசி, எல்லாரையும் பிரமிக்க வச்சுட்டியே!" என்றான் ராமச்சந்திரன்.
"தப்பு இல்லை. நீ எங்கிட்ட உரிமை எடுத்துக்கிட்டது எப்படித் தப்பாகும்?" என்ற ஶ்ரீகுமார், 'ஆனா, நீ சொன்னதுக்காக இதை ஒத்துக்கிட்டு, பகல் முழுக்க வேலை செஞ்சுட்டு, பத்து நாள் ராத்திரி ரொம்ப நேரம் கண் விழிச்சுப் பல புத்தகங்களைப் படிச்சு, என் பேச்சைத் தயார் பண்ண நான் பட்ட கஷ்டம் எனக்குத்தானே தெரியும்!' என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
குறள் 802:
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்.
"சாரி..." என்று மோகன் அழைப்பைத் துண்டிக்கப் போனபோது, "சார்! ஒரு நிமிஷம். உங்க நண்பர் பரத் இந்த வாரம் மீட்டிங்குக்கு உங்களை ஸ்பான்ஸர் பண்ணி இருக்காரு" என்றாள் பிரியா.
"ஸ்பான்ஸர் பண்றதுன்னா?"
"மிஸ்டர் பரத் எங்க திட்டத்தில சேர்ந்திருக்காரு. அவர் தனக்குக் கீழே உறுப்பினர்களை சேர்க்கறதுக்காக, சில ப்ராஸ்பெக்ட்ஸை இன்வைட் பண்ணணும். அதாவது, வர சனிக் கிழமை, ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல நடக்கிற டின்னர் மீட்டிங்குக்கு அவங்களை வரச் சொல்லணும். அவர் ப்ராஸ்பெக்ட்ஸோட பெயர்களையும், ஃபோன் நம்பர்களையும் கொடுத்தா போதும், நாங்களே அவங்களை இன்வைட் பண்ணுவோம். மீட்டிங்குக்கு வந்து, திட்டங்களோட விவரங்களைக் கேட்டுக்கிட்டு, உங்களுக்கு விருப்பம் இருந்தா, நீங்க இதில சேர்ந்துக்கலாம்!"
"பரத் எங்கிட்ட எதுவும் சொல்லியே!"
"சார்! சில பேர் தங்களோட நண்பர்களை நேரடியாக் கூப்பிடத் தயங்குவாங்க. அதனாலதான், நாங்களே இன்வைட் பண்றோம். மீட்டிங்குக்கு வந்து விவரங்களைத் தெரிஞ்சுக்கிட்டா, உங்களுக்கே இது எவ்வளவு நல்ல ஸ்கீம்னு தெரியும். மீட்டிங்குக்கு வந்தா, எங்க திட்டத்தில சேரணும்னு அவசியம் இல்ல, ஆனா நிறைய பேர், இது எவ்வளவு நல்ல திட்டம்னு தெரிஞ்சுக்கிட்டப்பறம், உற்சாகமா முன்வந்து சேந்துப்பாங்க. ஒருவேளை நீங்க இந்தத் திட்டத்தில சேர்ந்தா, அடுத்த வாரம் நீங்க கொடுக்கிற லிஸ்ட்படி, உங்க நண்பர்களை நாங்க இன்வைட் பண்ணுவோம். வீ ஆர் மேக்கிங் ஸ்பான்ஸரிங் ஸோ ஈஸி ஃபார் அவர் மெம்பர்ஸ்!" என்று முத்தாய்ப்பாகத் தன் ஆங்கிலப் புலமையை வெளிப்படுத்தினாள் பிரியா.
"யோசிச்சு சொல்றேன்!" என்றான் மோகன்.
வெள்ளிக்கிழமை இரவு, மோகனுக்கு ஃபோன் செய்த பரத், "மிக்மேக்கிலேந்து ஃபோன் பண்ணினாங்களா?" என்றான், தயக்கத்துடன்.
"பண்ணினாங்க. ஆனா, நீ எங்கிட்ட எதுவும் சொல்லலியே!" என்றான் மோகன்.
"உனக்கு இந்த நெட்வொர்க் மார்க்கெடிங் எல்லாம் பிடிக்குமான்னு எனக்குத் தெரியல. இந்த ஸ்கீம் எனக்கு ரொம்பப் பிடிச்சதால, நான் சேர்ந்துட்டேன். அஞ்சு ப்ராஸ்பெக்ட்ஸ் பேரு கொடுக்கணும்னு கேட்டாங்க. அவங்களே ஃபோன் பண்ணி, விவரம் சொல்லி இன்வைட் பண்றதாச் சொன்னாங்க. எனக்குத் தெரிஞ்சங்க அதிகம் பேர் கிடையாது. அதனால உன் பேரையும், இன்னும் நாலு நண்பர்கள் பேரையும் கொடுத்தேன்."
பரத்தின் பேச்சில், ஏதோ தவறு செய்து விட்டு, அதற்கு மன்னிப்புக் கேட்பது போன்ற தொனி ஒலித்தது.
"மீட்டிங்குக்கு வரேன். அங்கே பேசிக்கலாம்" என்றான் மோகன்.
ஒரு நட்சத்திர ஓட்டலில், கூட்டம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நடுத்தர வருமானம் உள்ள ஒரு நபர் கூட எப்படி அந்தத் திட்டத்தின் மூலம் ஒரு சில மாதங்களிலேயே ஆயிரக்கணக்கில் தொடர் வருமானம் பெற முடியும் என்று நிறுவனத்தின் சில அதிகாரிகள் விளக்கினார்கள்.
ஏற்கெனவே உறுப்பினர்களாக இருக்கும் சிலர், தங்களால் எப்படி விரைவிலேயே பெரும் தொகை ஈட்ட முடிந்தது என்று விளக்கினார்கள்.
கூட்டம் முடிந்ததும், உணவு அருந்திக் கொண்டே, பலரும் சிறு குழுக்களாக நின்று, திட்டம் பற்றிப் பேசிக் கொண்டனர்.
"என்ன நினைக்கிறே?" என்றான் பரத்.
மோகன் பதில் சொல்வதற்குள், அவர்களுடைய நண்பர்கள் சரவணன், முத்து இருவரும் அங்கே வந்தார்கள். "மோகன், நீ இந்த மீட்டிங்குக்கு வர மாட்டேன்னு நான் முத்துகிட்ட அடிச்சுச் சொன்னேன்! ஆனா நீ வந்திருக்கே. ஆச்சரியம்தான்!" என்றான்.
"இதில என்ன ஆச்சரியம்?" என்றான் மோகன்.
"உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா? நீ சிட்ஃபண்ட்ல கூட சேர மாட்டே! எம் எல் எம்-ல சேருவியா என்ன?"
"முட்டாள்தனமாப் பேசாதே! பரத்துக்கு என்னை எத்தனையோ வருஷமா தெரியும். எனக்கு இதில ஆர்வம் இல்லேன்னா, அவன் என்னை இந்த மீட்டிங்குக்குக் கூப்பிட்டிருக்கவே மாட்டானே!" என்றான் மோகன்.
"அப்படின்னா, நீ இதில சேரப் போறியா என்ன?" என்றான் சரவணன், வியப்புடன்.
"ஐயாயிரம் ரூபாய்தானே முதலீடு? ஐயாயிரம் ரூபாய்க்கு வேற ஏதாவது பிசினஸ் ஆரம்பிக்க முடியுமா என்ன? சேர்ந்து பாக்கறது. என்ன ஆயிடப் போகுது?" என்றான் மோகன்.
நம்ப முடியாத மகிழ்ச்சியுடன், பரத் மோகனைப் பார்த்தான்.
"உங்களுக்கு யார்கிட்டேயும் போய் எதையும் கேட்கப் பிடிக்காது. ஏதாவது ஒரு ஆஃபீசுக்குப் போயிருக்கறப்ப, அங்கே எதிலேயாவது கையெழுத்துப் போடணும்னா, பக்கத்தில இருக்கிறவர்கிட்ட ஒரு பேனா இரவல் கேட்கக் கூடத் தயங்குவீங்க. நீங்க எதுக்கு ஐயாயிரம் ரூபாய் கொடுத்து இதில சேர்ந்திருக்கீங்க? உங்களால யாரையாவது சேர்க்க முடியுமா? நீங்க யாரையும் கேக்கக் கூட மாட்டீங்களே?" என்றாள் மோகனின் மனைவி மல்லிகா.
"என்னைப் பத்தித் தெரியாம, பரத் என்னை இந்த மீட்டிங்குக்குக் கூப்பிட்டுட்டான்னு சரவணனும் மத்தவங்களும் சொன்னப்ப, பரத்துக்கு ஆதரவா இருக்கணும்னு தோணிச்சு. அதனால, எனக்கும் இந்த பிசினஸ்ல ஆர்வம் இருக்கிறதாக் காட்டிக்கிட்டு இதில சேர்ந்தேன். ஆனா, நான் இந்த பிசினஸைப் பண்ணப் போறதில்ல, யாரையும் இதில சேர்க்க முயற்சி செய்யப் போறதல்ல. கொஞ்ச நாள் கழிச்சு, என் நண்பர்கள்கிட்ட 'முயற்சி செஞ்சேன், ஆனா என்னால முடியலே'ன்னு சொல்லிடப் போறேன்! கம்பெனியில கொடுத்த பொருட்களோட மதிப்பு ஆயிரம் ரூபா இருக்கும். மீதித்தொகையை நஷ்டம்னு நினைச்சுக்க வேண்டியதுதான்" என்றான் மோகன்.
குறள் 803:
பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை.
வெங்கடேசன் தன் பேச்சை நிறுத்தி விட்டு, இலேசாகச் சிரித்தார். மற்றவர்களும் இலேசாகச் சிரித்தனர்.
"திருஷ்டி பட்டுடப் போகுது!" என்று ஒரு குரல் வந்தது.
வெங்கடேசன் குரல் வந்த திசையைப் பார்த்தார்.
பூங்காவனம்!
எதிர்மறையாகப் பேசுவது, குற்றம் கண்டுபிடிப்பது, மற்றவர்கள் மனம் புண்படும்படி எகத்தாளமாகப் பேசுவது போன்ற விஷயங்களுக்குப் பெயர் பெற்றவர் பூங்காவனம்.
'இவர் எப்படி இந்தக் கூட்டத்துக்கு வந்தார்? நான் இவரைக் கூப்பிடவே இல்லையே!' என்று நினைத்த வெங்கடேசன், தான் அழைத்தவர்களுள் ஒருவர்தான் அவரை அழைத்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.
இந்த ஆளை அழைத்து வந்த 'புத்திசாலி' யாராக இருக்கும் என்று யோசித்தார்.
யார் அழைத்திருப்பார்கள் என்று உடனே அவருக்குப் புரிந்து விட்டது.
சிலர் பூங்காவனத்தை அதிருப்தியுடன் பார்த்தனர்.
"ஒண்ணுமில்ல. நாளைக்கு நான் மெடிகல் செக்-அப்புக்குப் போறேன். நீங்க பாட்டுக்கு, நாம எல்லாரும் நல்ல உடல்நலத்தோட இருக்கறதா சொல்லிட்டீங்க. திருஷ்டி பட்டு, மெடிகல் செக்-அப்ல எனக்கு ஏதாவது உடல்நலக் கோளாறு இருக்கறதா சொல்லிடப் போறாங்களேங்கறதுக்காகத்தான் அப்படிச் சொன்னேன்!" என்றார் பூங்காவனம், தான் சொன்னதை மற்றவர்கள் நகைச்சுவையாக எடுத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்த்தது போல்.
ஆனால், யாரும் புன்னகை கூடச் செய்யவில்லை.
"இங்கே நாம மட்டும்தானே இருக்கோம்? திருஷ்டி ஏற்பட, வெளி ஆளுங்க யாராவது இருக்காங்களா என்ன?" என்றார் ஒருவர், பூங்காவனத்தைப் பார்த்து.
பிறகு, நற்பணி மன்றம் என்ற ஒரு அமைப்பைத் தொடங்கி, நலிந்த பிரிவினருக்குத் தாங்கள் எந்தெந்த வழிகளில் உதவி செய்யலாம் என்று பலரும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
பூங்காவனம் அவ்வப்போது குறுக்கிட்டுக் கேலியாக ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். அவர் கூறியவற்றை யாரும் ரசிக்கவில்லை.
தாம் அழைக்காத ஒரு நபர் இங்கே வந்து, அனைவரின் உற்சாகத்தையும் சிதைத்துக் கொண்டிருக்கிறாரே என்று வெங்கடேசன் வருத்தமும், குற்ற உணர்ச்சியும் அடைந்தார்.
"பூங்காவனம்! உங்களுக்கு இந்த நற்பணி மன்றத்தில ஆர்வம் இல்லேன்னு தெரியுது. நீங்க போயிடலாமே! ஆர்வம் உள்ளவங்க மட்டும் இதை நடத்திக்கறோம்!" என்றார் ஒருவர், சற்றுக் கடுமையாக.
"போறேன். ஆனா, என்னோட கருத்துக்களைச் சொல்ல விரும்பறேன். சொல்லலாமா?" என்றார் பூங்காவனம், வெங்கடேசனைப் பார்த்து.
"அதான் அப்பப்ப சொல்லிக்கிட்டே இருக்கீங்களே!" என்று ஒருவர் முணுமுணுத்தார்.
"சரி, சொல்லுங்க. சுருக்கமா சொல்லுங்க. நெகடிவா எதுவும் சொல்லாம இருக்கப் பாருங்க" என்றார் வெங்கடேசன்.
"நான் வெளிப்படையாப் பேசறவன். அதனால, பல பேருக்கு நான் பேசறது பிடிக்காது. இது மாதிரி நற்பணி மன்றம் அமைக்கறது, சமூக சேவை செய்யறேன்னு கிளம்பறது இது எல்லாமே வசதியா இருக்கறவங்க, தங்களோட குற்ற உணர்ச்சியைப் போக்கிக்கறதுக்காக செய்யற காரியங்கள்" என்று ஆரம்பித்தார் பூங்காவனம்.
ஒரு சிலர் கோபத்துடன் எழுந்து இதை ஆட்சேபித்தனர்.
"இதில குற்ற உணர்ச்சி எங்கே வந்தது?" என்றார் வெங்கடேசன்.
"சமூகத்தில மேல இருக்கறவங்க எல்லாருமே, பல பேரைக் கீழே தள்ளிட்டுத்தானே மேலே வந்திருக்கோம்! அந்தக் குற்ற உணர்ச்சி இருக்காதா?" என்றார் பூங்காவனம்.
பலர் இதை ஆட்சேபித்துக் குரல் எழுப்பினர்.
அப்போது, வெங்கடேசனின் தண்பர் தாமோதரன் பூங்காவனத்தின் அருகில் வந்து, அவர் காதில் ஏதோ சொன்னார்.
பூங்காவனம் எதுவும் பேசாமல் எழுந்து வெளியே சென்றார்.
"எப்படி சார் அவரை வெளியில அனுப்பினீங்க? ரொம்ப நன்றி!" என்றார் ஒருவர், தாமோதரனைப் பார்த்து.
தாமோதரன் எதுவும் சொல்லவில்லை.
அதற்குப் பிறகு, ஒரு மணி நேரம் அனைவரும் உற்சாகமாக விவாதித்துச் சில முடிவுகளை எடுத்தனர்.
கூட்டம் முடிந்து, ஒவ்வொருவராகக் கிளம்பினர்.
அனைவரும் சென்றதும், தாமோதரன் வெங்கடேசனிடம் வந்து, "சாரிடா! பூங்காவனத்தைப் பத்தி சரியாத் தெரிஞ்சுக்காம அவரைக் கூப்பிட்டுட்டேன், எங்கிட்ட பேசும்போது பெரிய பரோபகாரி மாதிரி பேசுவாரு. அதைக் கேட்டு ஏமாந்துட்டேன். கூட்டத்தையே கெடுத்துட்டாரு!" என்றார்.
"அதுதான் நீயே அவர்கிட்ட பேசி, அவரை வெளியே அனுப்பிட்டியே. நீ செஞ்சது ரொம்ப நல்ல விஷயம்!" என்றார் வெங்கடேசன்.
"அவர் அப்பப்ப நெகடிவாப் பேசினப்ப, பல பேர் அதை ஆட்சேபிச்சாங்க. நீதான் இந்தக் கூட்டதைக் கூட்டி நடத்தினவன். நீ அவரைப் பேசக் கூடாதுன்னு சொல்லி இருக்கலாம், ஏன், அவரை வெளியே போகச் சொல்லி இருக்கலாம். ஆனா, கடைசி வரைக்கும் நீ அவரை எதுவுமே சொல்லலியே, ஏன்?"
"உனக்கு அவர்கிட்ட நல்ல பழக்கம் உண்டு. அதனால, நீதான் அவரைக் கூப்பிட்டிருப்பேன்னு எனக்குத் தெரியும். நீ என்னோட நண்பன். நீ உரிமையோட ஒத்தரை இந்த மீட்டிங்குக்கு அழைச்சுக்கிட்டு வந்திருக்க. நீ அவரை அழைச்சதை மதிச்சு, நான் அவருக்கு உரிய மதிப்புக் கொடுத்து நடத்த வேண்டாமா?" என்றார் வெங்கடேசன், சிரித்தபடி.
குறள் 804:
விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்.
"நான் உங்ககிட்ட ரிஜிஸ்டர் பண்ணிக்கவே இல்லையே! எப்படி எனக்கு கால் பண்றீங்க?" என்றான் தினேஷ், சற்று எரிச்சலுடன்.
"சாரி சார்! எங்ககிட்ட பதிவு பண்ணிக்காதவங்களை நாங்க கூப்பிட மாட்டோம், உங்க ரெஸ்யூமே எங்க வெப்சைட்ல அப்லோட் ஆகி இருக்கு. அதனாலதான் உங்களைக் கூப்பிட்டேன்."
"சாரி. யாரோ எனக்குத் தெரியாம அப்லோட் பண்ணி இருக்காங்க. அதை நான் எடுத்துடறேன். நீங்க தயவு செஞ்சு அதை எந்த கம்பெனிக்கும் அனுப்பாதீங்க."
"சாரி சார். ஏற்கெனவே சில கம்பெனிகளுக்கு அனுப்பிட்டோம். இனிமே வேணும்னா அனுப்பாம இருக்கோம்" என்று சொல்லி ஃபோனை வைத்தார் வர்மா.
'எனக்குத் தெரியாமல் யார் என் ரெஸ்யூமேயை அப்லோட் செய்திருப்பார்கள்?' என்று யோசித்தான் தினேஷ்.
அடுத்த இரண்டு நாட்களில், இரண்டு மூன்று நிறுவனங்களிலிருந்து தினேஷுக்குத் தொலைபேசி அழைப்புகள் வந்தன. அவனுக்கு வேலை அளிக்கத் தயாராக இருப்பதாகவும், நேரில் அவர்கள் அலுவலகத்துக்கு வந்தால் மற்ற விவரங்களைப் பேசிக் கொள்ளலாம் என்றும் கூறினர்.
தினேஷ் தனக்கு வேலை மாறும் உத்தேசம் இல்லை என்று சொல்லி, அவற்றை மறுத்து விட்டான்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, அலுவலக வேலை தொடர்பாகப் பொது மேலாளரைப் பார்க்கச் சென்றான் தினேஷ். அவரிடம் பேசி விட்டு அவன் கிளம்ப யத்தனித்தபோது, "என்ன தினேஷ், வேற வேலை தேடறீங்களா?" என்றார் பொது மேலாளர்.
தினேஷ் அதிர்ச்சியுடன், "இல்லை சார்! ஏன் கேக்கறீங்க?" என்றான்.
"உங்க ரெஸ்யூமே பல நிறுவனங்களுக்குப் போயிருக்கு போல இருக்கே!"
"இல்லை சார்! யாரோ ஒரு ஹெட் ஹன்ஃட்டர்கிட்ட என் ரெஸ்யூமே எப்படியோ போயிருக்கு. அவங்க அதை சில கம்பெனிகளுக்கு அனுப்பி இருக்காங்க. யாருக்கும் அனுப்பாதீங்கன்னு நான் அவங்ககிட்ட சொல்லிட்டேன். ரெண்டு மூணு கம்பெனிகள்ளேந்து எனக்கு கால் வந்தது. அவங்ககிட்டேயும் நான் வேற வேலைக்கு முயற்சி பண்ணலேன்னு சொல்லிட்டேன். நீங்க தப்பா எதுவும் நினைக்காதீங்க சார்!" என்றான் தினேஷ், பதட்டத்துடன்.
"இட் இஸ் ஓகே!" என்றார் பொது மேலாளர்.
"'யாரோ என் ரெஸ்யூமேயை ஒரு ஹெட் ஹன்ட்டரோட சைட்ல அப்லோட் பண்ணிட்டாங்க. அதனால பெரிய பிரச்னை ஆயிடுச்சு!" என்றான் தினேஷ், தன் நண்பன் முரளியிடம்.
"என்ன பிரச்னை?"
"அவங்க என் ரெஸ்யூமேயை சில கம்பெனிகளுக்கு அனுப்பி இருக்காங்க. அங்கேந்தெல்லாம் எனக்கு ஃபோன் வந்தது. என் கம்பெனி ஜெனரல் மானேஜருக்கு வேற இது தெரிஞ்சு போயிடுச்சு. அவர் என்னைக் கேட்டாரு. நான் வேற வேலைக்கு முயற்சி செய்யலேன்னு அவர்கிட்ட அழுத்தமா சொல்லி, அவரை கன்வின்ஸ் பண்ணி இருக்கேன்!" என்றான் சதீஷ்.
"ஏன், வேற நல்ல வேலை கிடைச்சா போக வேண்டியதுதானே?"
"என்னடா முட்டாள்தனமா பேசறே? இந்த ஃபீல்டிலேயே நம்பர் ஒன் கம்பெனி எங்களோடதுதான். இதை விட்டு யாராவது போவாங்களா? மத்த கம்பெனிகள்ளேந்து பல பேர் இங்கே ஒரு சின்ன வேலையாவது கிடைக்குமான்னு முயற்சி பண்ணிக்கிட்டிருக்காங்க!"
"பின்னே, வேலை ரொம்ப போர் அடிக்குது, பிரஷர் அதிகமா இருக்கு, வேற வேலை கிடைச்சா போயிடலாம் போல இருக்குன்னு எங்கிட்ட சொன்னியே?"
"எப்ப சொன்னேன்? எப்பவாவது ஒரு அலுப்பில அப்படிச் சொல்லி இருப்பேன். ஆமாம், ஏன் இப்படிக் கேக்கற?" என்றான் தினேஷ், சட்டென்று ஏதோ புரிந்தவனாக.
"சாரி. நான்தான் உன் ரெஸ்யூமேயை அப்லோட் பண்ணினேன். உனக்கு வேற வேலை கிடைச்சா சர்ப்ரைஸா இருக்கும்னு நினைச்சு, அப்படிப் பண்ணினேன். நான் அதிகம் படிக்காதவன். உன் வேலையோட முக்கியத்துவம், விவரங்கள் எல்லாம் தெரியாம அப்படி செஞ்சுட்டேன். உனக்கு பிரச்னையாகும்னு தெரியாது. என்னை மன்னிச்சுடு!" என்றான் முரளி.
"ஒரு பிரச்னையும் இல்ல. நீ எனக்கு நல்லது நினைச்சுதானே செஞ்சிருக்க? எதுக்கு மன்னிப்பெல்லாம்? ஆமாம். என் ரெஸ்யூமே உனக்கு எப்படிக் கிடைச்சது?"
"ஒருநாள் நான் உன் வீட்டுக்கு வந்தப்ப, உன் ரூம்ல மேஜை மேல உன் ரெஸ்யூமே ரெண்டு காப்பி இருந்தது. சும்மா படிச்சுப் பாக்கலாம்னுதான் ஒரு காப்பியை எடுத்து வச்சுக்கிட்டேன்."
"ஹார்ட் காப்பி இருக்கட்டுமேன்னு பிரின்ட் அவுட் எடுத்து வச்சேன். ரெண்டு எடுத்தேன். அப்புறம் பாத்தா, ஒண்ணுதான் இருந்தது. நீதான் அதை எடுத்துக்கிட்டுப் போனியா?" என்றான் தினேஷ், சிரித்துக் கொண்டே.
"என்னடா சிரிக்கறே? என் மேல ரொம்ப கோபப்படுவேன்னு நினைச்சேன்.
"உன் மேல நான் எப்படிடா கோபப்பட முடியும்? ஒரு நண்பனா நீ எங்கிட்ட உரிமை எடுத்துக்க முடியாதா என்ன?" என்றான் தினேஷ், முரளியின் முதுகில் தட்டியபடி.
குறள் 805:
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.
"உங்களை மாதிரி விஞ்ஞானிகளை கௌரவிக்கிறதில இந்த அரசாங்கம் எப்பவுமே முனைப்போட இருக்கு" என்றார் ஆளும் கட்சிப் பிரமுகர் குபேரன்.
அப்போது உள்ளே நுழைந்த நாகராஜன், சேதுவுடன் இன்னொருவர் இருப்பதைப் பார்த்ததும், "சாரி, நான் அப்புறம் வரேன்!" என்று திரும்ப எத்தனித்தார்.
"வா, வா! பரவாயில்ல. சார் ஒரு நல்ல சேதி சொல்லத்தான் வந்திருக்காரு. என்னை ராஜ்ய சபா உறுப்பினரா நியமிக்கப் போறாங்களாம். அதைச் சொல்லத்தான் வந்திருக்காரு. நீ வந்து உக்காரு!" என்றார் சேது.
"கங்கிராசுலேஷன்ஸ்!" என்று தான் நின்ற இடத்திலிருந்தே கையை உயர்த்தி வாழ்த்திய நாகராஜன், "எனக்கு ஒரு ஃபோன் வருது. பேசிட்டு வரேன்" என்று கூறி விட்டு அங்கிருந்து அகன்றார்.
"நாகராஜனை உங்களுக்குத் தெரியுமா?" என்றார் குபேரன், சற்றே அதிர்ச்சியுடன். அவர் முகத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருந்ததை சேது கவனித்தார்.
"அவர் என்னோட நீண்ட நாள் நண்பர். உங்களுக்கு நாகராஜனைத் தெரியுமா?" என்றார் சேது, வியப்புடன்.
"அவர் சமூக ஊடகங்கள்ள இந்த அரசாங்கத்துக்கு எதிரா பல கருத்துக்களை சொல்லிக்கிட்டு இருக்காரு. நாங்க அவரைக் கண்காணிச்சுக்கிட்டு இருக்கோம்."
"ஏன், ஜனநாயக நாட்டில கருத்து சுதந்திரம் இருக்கு இல்ல?"
"நாங்க அவரை ஒரு அர்பன் நக்சலைட்னு கிளாசிஃபை பண்ணி இருக்கோம். அவர் எப்ப வேணும்னா பயங்கரவாதத் தடைச் சட்டத்தில கைது செய்யப்படலாம்! நான் வெளிப்படையா சொல்லிடறேன். நாகராஜன் உங்க நண்பர்னு தெரிஞ்சா, அரசாங்கத்தில இந்த ராஜ்யசபா சீட்டை உங்களுக்குக் கொடுக்க மாட்டாங்க. அதோட இல்லாம, அவரோட நெருக்கமா இருக்கறதால, உங்களுக்கும் சில பிரச்னைகள் வரலாம். நீங்க உடனே அவரோட தொடர்பை முறிச்சுக்கங்க" என்றார் குபேரன்.
"இங்க பாருங்க, மிஸ்டர் குபேரன்! நாகராஜனோட கருத்துக்கள்ள எனக்கு உடன்பாடு இல்ல. சொல்லப் போனா, நாங்க பல விஷயங்கள்ள எதிர் எதிர்க் கருத்துக்கள் உள்ளவங்க. ஆனா, எங்க கருத்து வேறுபாடுகளை ஒரு எல்லைக்கு வெளியில நிறுத்தி, அவை எங்க நட்பை பாதிக்காம நாங்க பாத்துக்கிட்டிருக்கோம். நாகராஜனோட நட்பை முறிச்சுக்கிட்டாத்தான் எனக்கு இந்த ராஜ்யசபா சீட் கிடைக்கும்னா, அது எனக்குத் தேவையில்லை! அவரோட நட்பா இருக்கறதால எனக்கு வேற பிரச்னைகள் ஏற்படும்னாலும், அவற்றை நான் சந்திக்கத் தயாரா இருக்கேன். எங்க நட்புதான் எனக்கு முக்கியம்" என்றார் சேது, கடுமையான குலில்.
குபேரன் மௌனமாக எழுந்து வெளியேறினார்.
குறள் 806:
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.
"இப்ப எதுக்குங்க? முகூர்த்தம் முடிஞ்சதும், தனியா எங்கேயாவது அழைச்சுக்கிட்டுப் போய்ப் பேசுங்க!" என்றாள் அவர் மனைவி, சற்றுப் பதட்டத்துடன்.
ஆனால், மனைவி சொன்னதைக் காதில் வாங்காதவர் போல், சுந்தரம் எழுந்து செல்வராஜ் அமர்ந்திருந்த இடத்துக்குச் சென்றார்.
சுந்தரமும், செல்வராஜும் கல்லூரியில் சேர்ந்து படித்ததுடன், ஒரே நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றியவர்கள்.
இருவரும் ஒரே நேரத்தில் ஒரே நிலையில் வேலைக்குச் சேர்ந்தாலும், சுந்தரம் வேகமாகப் பதவி உயர்வுகள் பெற்று, செல்வராஜை விட மூன்று படிகள் மேலே போய், டெபுடி ஜெனரல் மானேஜர் என்ற நிலைக்குச் சென்று விட்டார்.
தான் உயர்ந்த நிலைக்குச் சென்றபோதும், சுந்தரம் செல்வராஜிடம் எப்போதும் போலவே நட்பு பாராட்டி வந்தார்.
சுந்தரத்துக்கு ஜெனரல் மானேஜராகப் பதவி உயர்வு கிடைக்கப் போகிறது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிறுவனத்துக்கான மூலப் பொருட்கள் கொள்முதல் செய்யும் பொறுப்பிலிருந்த அவர், குறைந்த விலை கோட் செய்த நிறுவனத்திடம் பொருட்களை வாங்காமல், அதிக விலை கோட் செய்த நிறுவனத்திடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு, அவர்களிடமிருந்து அதிக விலைக்குப் பொருட்களை வாங்கி, நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படுத்தி விட்டார் என்று தலைமை அலுவலகத்துக்கு ஒரு புகார் சென்றது.
தலைமை அலுவலகம் அந்தப் புகாரை விசாரிக்க முடிவு செய்தது. அதற்குள், ஜெனரல் மானேஜர் பதவி காலியானதால், சுந்தரத்தின் மீது புகார் இருந்த நிலையில், சுந்தரத்தின் ஜூனியர் ஒருவரை ஜெனரல் மானேஜராக நியமித்து விட்டனர்.
விசாரணை முடிய ஆறு மாதங்கள் ஆகி விட்டன. குறைவாக கோட் செய்ததாக அளிக்கப்பட்ட கடிதம் போலி என்றும், அது போன்ற கோட் எதுவும் வரவில்லை என்றும், சுந்தரத்தின் மீது பழி சுமத்தி அவருடைய பதவி உயர்வைத் தடுப்பதற்காக, யாரோ வேண்டுமென்றே அவ்வாறு ஒரு போலிக் கடிதத்தைத் தயாரித்திருப்பதாகவும் விசாரணை முடிவில் தெரிந்தது.
மேலும் விசாரணை செய்ததில், அந்தப் போலிக் கடிதத்தைத் தயாரித்து அனுப்பியது செல்வராஜ்தான் என்று தெரிந்தது.
இந்த விஷயம் வெளியே தெரிந்ததும், செல்வராஜ் விடுமுறையில் சென்று விட்டார். சுந்தரம் செல்வராஜைச் சந்திக்க முயன்றபோது, அவர் தன் குடும்பத்துடன் வெளியூருக்குச் சென்று விட்டதாகத் தெரிந்தது.
அதற்குப் பிறகு, ஓரிரு மாதங்களில் சுந்தரம் பதவி ஓய்வு பெற்று விட்டார். உடல்நலக் குறைவைக் காரணம் காட்டித் தன் விடுப்பை நீடித்த செல்வராஜ், விடுப்பிலிருந்தபடியே பதவி ஓய்வு பெற்று விட்டதாக சுந்தரம் தெரிந்து கொண்டார்.
செல்வராஜ் போலிக் கடிதத்தைத் தயாரித்துத் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பியதை நிரூபிக்க முடியாது என்பதாலும், அவர் பதவி ஓய்வு பெறும் நேரம் என்பதாலும், நிறுவனம் செல்வராஜின் மீது நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை.
ஆனால், அதைச் செய்தவர் செல்வராஜ்தான் என்பது நிறுவனத்தில் அனைவருக்கும் சந்தேகமின்றித் தெரிந்தது.
ஓய்வுக்குப் பின், சுந்தரம் தன் சொந்த ஊரில் குடியேறி விட்டதால், அவரால் அதற்குப் பிறகு செல்வராஜைச் சந்திக்க முடியவில்லை.
செல்வராஜிடம் பேசி விட்டு, சுந்தரம் திரும்பி வந்து தன் மனைவியின் அருகில் அமர்ந்ததும், "கல்யாண வீட்டில அவரோட சண்டை போடப் போறீங்களேன்னுதான், முகூர்த்தம் முடிஞ்சப்பறம் வெளியில போய்ப் பேசுங்கன்னு சொன்னேன். நீங்க என்னன்னா, அவரோட சிரிச்சுப் பேசிட்டு வரீங்க! ஏன் எனக்கு இப்படி ஒரு கெடுதல் பண்ணினேன்னு அவர்கிட்ட நீங்க கேக்கலியா?" என்றாள் அவர் மனைவி.
"அது எப்பவோ நடந்தது. தனக்குப் பதவி உயர்வி கிடைக்காதப்ப, எனக்கு மட்டும் வேகமா பதவி உயர்வு கிடைக்குதேங்கற ஆதங்கத்தில, ஆத்திரப்பட்டு ஏதோ செஞ்சுட்டான். அதுக்காக, அத்தனை வருஷமா அவன் என் நண்பனா இருந்தது இல்லேன்னு ஆயிடுமா? பழையபடி ஒரு நண்பனாத்தான் அவன்கிட்டபேசிட்டு வந்தேன்!" என்றார் சுந்தரம்.
குறள் 807:
அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்.
"அப்படி என்ன செய்யறான் அவன்?" என்றான் கிருஷ்ணன்.
"என்ன செய்யறானா? ஒத்தரைப் பத்தி இன்னொருத்தர்கிட்ட தப்பாப் பேசறதுதான் அவன் தொழில். அவன் செய்யறது இந்த ஆஃபீஸ்ல எல்லாருக்குமே தெரியுமே. உன்னைப் பத்திக் கூட தப்பாப் பேசறான்னா பாத்துக்கயேன்!" என்றார் சண்முகம்.
"அப்படியெல்லாம் இருக்காது சார். நானும் ரகுவும் எத்தனையோ வருஷமா நட்பா இருக்கோம். அவன் அப்படியெல்லாம் செய்யற ஆள் இல்ல. உங்ககிட்ட யாரோ தப்பா சொல்லி இருக்காங்க" என்றான் கிருஷ்ணன்.
"உன் நண்பன் மேல நீ ரொம்ப நம்பிக்கை வச்சிருக்கப்பா! உன்னோட நட்பைப் பாராட்டறேன். ஆனா, நான் சொல்றது உண்மைன்னு உனக்கு ஒரு நாள் தெரிய வரும்!" என்றார் சண்முகம்.
அந்த நாள் விரைவிலேயே வந்தது.
ஒருநாள், நிறுவனத்தின் பொது மேலாளர், கிருஷ்ணனைத் தன் அறைக்கு அழைத்தார்.
"கிருஷ்ணன்! உங்களைப் பத்தி எனக்குத் தெரியும். ஆனா, உங்க பேர்ல ஒரு புகார் வந்தபோது, அதை விசாரிக்காம இருக்க முடியாது. அதனால, அதை விசாரிச்சேன். அதில உண்மை இல்லேன்னு தெரிஞ்சுது. இதை உங்ககிட்ட சொல்லணும்னுதான் சொல்றேன்!" என்றார்.
"என்ன புகார் சார்?" என்றான் கிருஷ்ணன், அதிர்ச்சியுடன்.
"நீங்கதான் எல்லோரோட டிராவல் பில்களையும் ப்ராசஸ் பண்றீங்க, என்னோடது உட்பட! ஆனா, சில பேருக்கு நீங்க சலுகை காட்டி, அவங்க பில் அதிகமா இருந்தாலும் அதை பாஸ் பண்றதாகவும், வேற சிலரோட பில்லில நிறைய அயிட்டங்களை கட் பண்ணி, குறைவான தொகைக்கு பில்லை பாஸ் பண்றதாகவும் ஒரு புகார் வந்தது. நான் இதை விசாரிச்சதில, இதில உண்மை இல்லைன்னும், நீங்க விதிப்படிதான் செய்யறீங்கன்னும் தெரிஞ்சுது. டோன்ட் ஒர்ரி. இது உங்களுக்குத் தெரியணும்னுதான் உங்ககிட்ட சொன்னேன். ஒரு விதத்தில, இது உங்களுக்கு நல்லதுதான். நீங்க எவ்வளவு நேர்மையா, எந்த அளவுக்கு விதிகளைப் பின்பற்றி செயல்படறீங்கன்னு இப்ப தெரிஞ்சுடுச்சு இல்ல?" என்றார் பொது மேலாளர்.
கிருஷ்ணனுக்கு அதிர்ச்சி இன்னும் அடங்கவில்லை.
"நன்றி சார்! இது ரொம்ப அக்கிரமம். என்னைப் பத்தி இப்படி ஒரு புகார் கொடுத்திருப்பாங்கன்னு நம்பறதுக்கே எனக்கு கஷ்டமா இருக்கு. விதிப்படி நான் பில்லிலேந்து சில விஷயங்களைக் கழிச்சதால, என் மேல கோபப்பட்டுத்தான் இப்படி யாரோ செஞ்சிருக்காங்க" என்றான் கிருஷ்ணன், படபடப்புடன்.
"என்னோட பில்லில கூட எலிஜிபிலிடி இல்லாத தொகைகளை நீங்க கட் பண்ணி இருக்கீங்க!" என்றார் பொதுமேலாளர், சிரித்தபடி.
"சார்!"
"ஐ ஆம் நாட் கம்ப்ளைனிங்!" என்ற பொது மேலாளர், சற்றுத் தயங்கி விட்டு, "கிருஷ்ணன்! உங்க மேல வந்தது ஒரு அனானிமஸ் கம்ப்ளைன்ட்தான். ஆனா, புகார் கொடுத்தவர் அதை டைப் கூடப் பண்ணாம, கையால எழுதி அனுப்பி இருக்காரு. அந்தக் கையெழுத்தை வச்சு, புகார் கொடுத்தவர் யாருன்னு விஜிலன்ஸ் டிபார்ட்மென்ட்ல கண்டு பிடிச்சுட்டாங்க. புகார் கொடுத்தவர் உங்களுக்கு ரொம்ப நெருக்கமானவராமே! பொதுவா, புகார் கொடுத்தவங்க பேரை வெளியில சொல்லக் கூடாது. நீங்க நண்பரா நினைக்கிறவர் எப்படிப்பட்டவர்னு உங்களுக்குத் தெரியணும்னுதான் நான் இதைச் சொன்னேன்!"
"இவ்வளவு வருஷமா என் நெருக்கமான நண்பனா இருக்க. ஏண்டா இப்படிப் பண்ணின?" என்றான் கிருஷ்ணன்.
"இல்லை. நீ தப்பா..." என்று ஆரம்பித்தான் ரகு.
"போதும்டா! ஏற்கெனவே சில பேர் நீ என்னைப் பத்தி தப்பா பேசறதா எங்கிட்ட சொன்னப்ப, நான் அதை நம்பல. ஆனா, நீ உன் கைப்பட எழுதி என் மேல புகார் கொடுத்தது தெரிஞ்சப்பறம், நான் எப்படி நம்பாம இருக்க முடியும்? நீ ஏன் இப்படிச் செய்யறேன்னு எனக்குப் புரியல. உன்னை விட நான் மேலே போயிட்டேங்கற பொறாமையா? ஆனா, நான் உங்கிட்ட பழைய மாதிரிதானே நடந்துக்கறேன்?"
ரகு மௌனமாக இருந்தான்.
"ஆனா, ஒரு விஷயம் எனக்கு சந்தோஷமா இருக்கு. நீ எனக்கு எதிரா செயல்பட்டப்பறம் கூட, எனக்கு உன் மேல கோபம் வரல. நம் நண்பன் இப்படி செஞ்சுட்டானேன்னு வருத்தம் மட்டும்தான் இருக்கு. நீ எப்படி இருந்தாலும், உங்கிட்ட எனக்கு இருக்கிற நட்பு அப்படியேதான் இருக்குன்னு புரியறப்ப, எனக்கு என்னை நினைச்சே பெருமையா இருக்கு. யூ ஹேவ் மேட் மை டே! நன்றி!" என்றான் கிருஷ்ணன்.
குறள் 808:
கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்.
அந்த கோச்சிலிருந்து இறங்குவோரும் ஏறுவோரும் அதிகமாக இருந்தனர். ஜன்னல்களுக்கு வெளியேயும் பலர் நின்று உள்ளே பார்த்துக் கொண்டிருந்தனர்.
கூட்டத்துக்குள் புகுந்த ராமு, ஜன்னல் வழியே உள்ளே பார்த்தான். ரயில் நிற்கும் சில நிமிடங்களுக்குள், தன் சிறு வயது நண்பன் கோபியைப் பார்த்து இரண்டு வார்த்தைகள் பேசி விட வேண்டும்.
கோபியும் அவனும் சந்தித்து எவ்வளவோ வருடங்கள் ஆகி விட்டன. கோபிக்கு அஸ்ஸாமில் வேலை கிடைத்துப் போன பிறகு, அவன் சொந்த ஊருக்கு வரவேயில்லை. இருவரும் கடிதங்கள் எழுதிக் கொண்டதோடு சரி. அது கூட நாளடைவில் குறைந்து, பிறகு நின்றே போய் விட்டது.
தன் கடிதங்களுக்கு கோபியிடமிருந்து பதில் வருவது நின்று போனதும், ராமுவும் அவனுக்குக் கடிதம் எழுதுவதை நிறுத்திக் கொண்டான். தங்கள் சிறு வயது நட்பு முடிந்து விட்டதோ என்ற உணர்வு அவனுக்கு ஏக்கத்தையும், ஏமாற்றத்தையும் கொடுத்தது.
சில வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு, ராமுவுக்கு கோபியிடமிருந்து திடீரென்று ஒரு கடிதம் வந்தது.
தான் ஒரு திருமணத்துக்காக சேலத்துக்கு வருவதாகவும், தன்னால் சென்னைக்கு வர முடியாது என்றும், காட்பாடி ரயில் நிலையத்தில் தன்னை வந்து சந்திக்க முடியுமா என்றும் கோபி எழுதி இருந்தான்.
வருவதாக கோபிக்கு பதில் எழுதிய பிறகுதான், கோபியின் சமீபத்திய புகைப்படத்தைக் கேட்டிருக்கலாமோ என்று ராமுவுக்குத் தோன்றியது. அவர்கள் சந்தித்துப் பத்து வருடங்களுக்கு மேல் ஆகி விட்ட நிலையில், இருவருமே தோற்றத்தில் பெருமளவு மாறி இருக்கலாம்!
காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில் நிற்கும் சில நிமிடங்களுக்குள், கோபியின் முகத்தைத் தன்னால் அடையாளம் காண முடியாமல் போய் விட்டால்...
தன் முதுகில் யாரோ தட்டுவதை உணர்ந்து, திரும்பிப் பார்த்தான் ராமு.
கோபி!
உடல் முழுவதும் உற்சாகம் பாய்ந்தது ராமுவுக்கு.
"டேய் கோபி! எப்படிடா இருக்கே? எவ்வளவு வருஷம் ஆச்சு உன்னைப் பாத்து! ஒரே கூட்டமா இருக்கே, ரயில் கிளம்பறத்துக்குள்ள உன்னைப் பாக்க முடியுமான்னு பயந்துக்கிட்டே இருந்தேன். நல்லவேளை, நீயே இறங்கி வந்துட்ட. என்னை சுலபமா அடையாளம் கண்டு பிடிச்சுட்டியா?"
"எத்தனை வருஷம் ஆனா என்ன? என்னோட பெஸ்ட் ஃபிரண்டை என்னால அடையாளம் கண்டு பிடிக்க முடியாம போயிடுமா என்ன? அதோட, நீ ஒண்ணும் மாறல. அப்ப இருந்த மாதிரிதான் இருக்கே!" என்றான் கோபி.
"ஆனா, நீ ரொம்ப மாறிட்ட. குண்டா வேற ஆயிட்ட. அஸ்ஸாம் யானை ரொம்ப பிரபலம். ஆனா, இப்பதான் நேரில பாக்கறேன்!"
"டேய்!" என்று பெரிதாகச் சிரித்த கோபி, "இந்தக் கிண்டல் மட்டும் உங்கிட்ட அப்படியேதாண்டா இருக்கு!" என்றான்.
"உன்னோட அந்த வெடிச்சிரிப்பு மட்டும் மாறவே இல்லை. யானை சிரிச்சா இப்படித்தான் இருக்கும்னு நினைக்கிறேன்! உன் சிரிப்பு சத்தத்தைக் கேட்டுட்டு, எத்தனை பேரு திரும்பி நம்மைப் பாக்கறாங்க பாரு!" என்றான் ராமு.
"ரயில் இன்னும் அஞ்சு நிமிஷம்தான் நிற்கும். உன்னோட சேந்து ஒரு காப்பி சாப்பிடக் கூட நேரமில்லை. ஆமாம், நீ எத்தனை மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பின?"
"நேத்து சாயந்திரமே கிளம்பி ராத்திரி இங்கே வந்து சேர்ந்தேன். ராத்திரி படுக்கை ஸ்டேஷன் பெஞ்ச்லதான்! இல்லாட்டா, இந்த விடியக்கால நேரத்தில என்னால இங்கே எப்படி இருக்க முடியும்?"
"எவ்வளவு கஷ்டம்டா உனக்கு! அதுவும், நீ தாம்பரத்திலேந்து ஏழெட்டு கிலோ மீட்டர் தள்ளி வேற இருக்கே. நீ ரொம்ப முன்னாலேயே கிளம்பி இருப்பேன்னு நினைக்கிறேன். எப்ப சாப்பிட்ட?" என்றான் கோபி, கரிசனத்துடன்.
"ராத்திரி ஸ்டேஷன்ல என்ன கிடைச்சுதோ, அதை சாப்பிட்டேன்! அதுக்கென்ன இப்ப? இன்னும் ஏழெட்டு மணி நேரத்தில வீட்டுக்குப் போய் சேர்ந்துட மாட்டேனா? அப்ப சாப்பிட்டுக்கறேன்!" என்ற ராமு, "பாத்தியா, மறந்துட்டேன். மீனாட்சி உனக்குக் கொஞ்சம் சப்பாத்தி செஞ்சு கொடுத்திருக்கா. இந்தா!" என்று தன் பையிலிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து கோபியுடம் கொடுத்தான்.
"இவ்வளவு கஷ்டப்பட்டு என்னைப் பாக்க வந்திருக்க. உன் மனைவி பண்ணின அருமையான சப்பாத்தியைப் பைக்குள்ள வச்சுக்கிட்டு, ராத்திரி ஸ்டேஷன்ல கிடைச்சதை சாப்பிட்டு வயத்தை நிரப்பிக்கிட்டிருக்க!" என்றான் கோபி.
நீண்ட நாள் கழித்து நண்பனைப் பார்த்த மகிழ்ச்சியிலும், தன்னைப் பார்க்க நண்பன் எடுத்துக் கொண்ட சிரமத்தை நினைத்ததிலும், கோபிக்கு அழுகை வந்து விடும் போல் இருந்தது.
"பின்னே? நீ அஸ்ஸாம்லேந்து கிளம்பறத்துக்கு முன்னேயே, சென்னைக்குப் பக்கத்தில இருக்கற தாம்பரத்துக்குப் பக்கத்தில இருக்கற முடிச்சூருக்குப் பக்கத்தில இருக்கற என் வீட்டிலேந்து கிளம்பி, இவ்வளவு பக்கத்தில இருக்கற இந்த காட்பாடிக்கு வந்திருக்கேனே, சும்மாவா? சப்பாத்தி கூட நேத்திக்கு செஞ்சதுதான். இப்ப எப்படி இருக்குமோ தெரியல, கஷ்டப்பட்டுக் கடிச்சுத் தின்னுடு!"
"நீ இவ்வளவு கஷ்டப்பட்டு வந்திருக்கறது எனக்கு நிஜமாவே ரொம்ப கஷ்டமா இருக்கு!" என்றான் கோபி, உணர்ச்சியுடன்.
"அது இருக்கட்டும். நீ ஊரை விட்டுப் போய் பத்து வருஷத்துக்கு மேல இருக்கும் இல்ல?"
"பன்னண்டு வருஷம் ஆயிடுச்சு. 1968- ல போனேன்."
"அப்புறம் நீ ஏண்டா ஊர்ப்பக்கமே வரல? கல்யாணத்தையும் கல்கத்தால பண்ணிக்கிட்டு, எங்களையெல்லாம் கல்யாணத்துக்குக் கூட வர முடியாம பண்ணிட்ட!"
"இங்கே எனக்கு யாருடா இருக்காங்க? என் மனைவியோட சொந்தக்காரங்களும் கல்கத்தா, டில்லின்னு வடக்கேதான் இருக்காங்க" என்று கோபி சொல்லிக் கொண்டிருந்தபோதே, ரயில் ஊதியது.
திடீரென்று உணர்ச்சி வசப்பட்டவனாக ராமுவின் கைகளைப் பிடித்துக் கொண்ட கோபி, "டேய் ராமு! ஊரில எனக்கு யாரும் இல்லேன்னு நினைச்சு நான் ஊர்ப்பக்கம் வராதது பெரிய தப்பு. நீ இருக்கியே! உனக்காக நான் ஊருக்கு வந்திருக்கணும். என்னைப் பாக்க நீ இவ்வளவு கஷ்டப்பட்டு வந்ததைப் பாத்தப்பறம்தான் எனக்கே இது உறைக்குது!" என்று கூறி விட்டு, நகரத் தொடங்கி விட்ட ரயிலில் விரைந்து ஏறிக் கொண்டான்.
கோபியின் கண்களில் நீர் தளும்பி இருந்ததை ராமுவால் பார்க்க முடிந்தது.
"கண்டிப்பா வரணும். ஆனா நீ மட்டும் வந்தா, நோ என்ட்ரி! கல்கத்தா மேடத்தையும், உன் குழந்தைகளையும் அழைச்சுக்கிட்டு வந்தாதான் உன்னை என் வீட்டுக்குள்ள விடுவேன்!"
ரயில் வேகமெடுத்து விட்ட நிலையில், தான் கூறியது நண்பனுக்கு முழுதாகக் கேட்டிருக்குமா என்று யோசித்தபடியே கையசைத்தான் ராமு.
குறள் 809:
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு.
"ஆமாம். சாந்தி இண்டஸ்டிரீஸ் பெரிய நிறுவனம். தொழில்ல நாம அவங்களுக்குப் போட்டியா இருக்கறதில, ஏற்கெனவே சாந்தகுமாருக்கு என் மேல கோபம். எங்கேயாவது என்னைச் சந்திச்சா, ஒரு விரோதியைப் பாக்கற மாதிரிதான் பாப்பாரு. நான் வணக்கம் சொன்னாக் கூட, பாக்காத மாதிரி முகத்தைத் திருப்பிப்பாரு. இப்ப, அவர் இன்னும் கோபமா இருப்பாரு!" என்றார் ரமேஷ் இண்டஸ்டிரீஸின் உரிமையாளரான ரமேஷ்.
"ஆனா, ஒரு பிரச்னை இருக்கே, சார்!"
"ஆமாம். இவ்வளவு பெரிய ஆர்டரை நம்மால நிறைவேற்ற முடியாது. ஒரு பகுதியை வேற நிறுவனங்களைத் தயாரிக்கச் சொல்லணும். ஆர்டர்ல குறிப்பிட்டிருக்கிற ஸ்பெசிகேஷன்படி நல்ல தரத்தோட தயாரிக்கக் கூடிய ஒரு நிறுவனத்தைத் தேடணும். நான் சில பேர்கிட்ட பேசிப் பாக்கறேன். நீங்களும் முயற்சி பண்ணுங்க"
மூன்று நாட்களுக்குப் பிறகு, பொது மேலாளர் ராமனைத் தன் அறைக்கு அழைத்த ரமேஷ், "நம் ஆர்டரில ஒரு பகுதியைத் தயாரிக்க, ஒரு கம்பெனியோட பேசி முடிவு பண்ணிட்டேன். பிரச்னை தீர்ந்தது!" என்றார்.
"எந்த கம்பெனி சார்?" என்றார் ராமன், ஆவலுடனும், வியப்புடனும்.
"சாந்தி இண்டஸ்டிரீஸ்தான்!" என்றார் ரமேஷ், சிரித்துக் கொண்டே.
"இது சரியா வருமா சார்? அவங்க நம்மை விரோதிகளா நினைக்கிறாங்களே! நமக்குக் கெட்ட பேர் வாங்கிக் கொடுக்கணுங்கறதுக்காக, வேணும்னே ஏதாவது தப்பாப் பண்ணிட்டாங்கன்னா?"
"அப்படியெல்லாம் நடக்காது. சாந்தகுமார்கிட்ட பேசிட்டேன். இந்த ஒத்துழைப்பு இந்த ஆர்டருக்கு மட்டும்தான். மத்தபடி, நாம அவங்களோட போட்டி போட்டுக்கிட்டுத்தான் இருப்போம்!"
"அவங்களை எப்படி சார் நம்பறது?"
"ராமன்! நம்ம லைன்ல இருக்கிற சில கம்பெனிகளோட பேசிப் பார்த்தேன். அவங்களால நமக்கு வேண்டிய தரத்தில செஞ்சு கொடுக்க முடியும்னு எனக்கு நம்பிக்கை இல்ல. அப்புறம்தான் சாந்தி இண்டஸ்டிரீஸையே கேக்கலாம்னு தோணிச்சு. அவங்க நம்மை விரோதிகளாப் பார்த்தாலும், சாந்தகுமாரை நான் நம்பறதுக்கு ஒரு காரணம் இருக்கு!"
"என்ன சார் காரணம்?"
"இப்ப, நீங்க இங்கே பத்து வருஷமா மானேஜரா இருக்கீங்க. நாம ரெண்டு பேரும் நண்பர்கள் மாதிரிதான் பழகறோம். நீங்க திடீர்னு ரிஸைன் பண்ணிட்டு, நம்ம போட்டி கம்பெனி எதிலேயாவது போய் வேலைக்கு சேர்ந்தா..."
"என்ன சார் இது? நான் அப்படிச் செய்வேனா? நாம நண்பர்கள் மாதிரிதான் பழகறோம்னு நீங்களே சொன்னீங்களே!" என்றார் ராமன், சற்றுப் பதட்டத்துடன்.
"நீங்க அப்படிப் பண்ண மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும். ஆனா, சாந்தகுமார்கிட்ட மானேஜரா இருந்தவர் அப்படி செஞ்சாரு!"
"அப்படியா? சரி. அதுக்கும் நீங்க சாந்தகுமாரை நம்பறதுக்கும் என்ன சம்பந்தம்?"
"இருங்க. கதையை நான் இன்னும் சொல்லி முடிக்கல. சாந்தகுமார்கிட்ட மானேஜரா இருந்த கணபதி அவரோட சிறு வயது நண்பர். சாந்தகுமார்கிட்ட வேலை செஞ்சுக்கிட்டிருந்தப்ப கூட, அவர் சாந்தகுமாரை வாடா போடான்னுதான் கூப்பிடுவாரு. அவ்வளவு நெருக்கமா, உரிமையாப் பழகிக்கிட்டிருந்தவர், அங்கேருந்து ரிஸைன் பண்ணிட்டு, அதிக சம்பளம் கொடுக்கறாங்கங்கறதுக்காக, ஒரு போட்டி கம்பெனிக்கு வேலைக்குப் போனாரு. அங்கே போனப்பறம், சாந்தகுமாரோட சில வாடிக்கையாளர்களைத் தன் புது கம்பெனிக்கு இழுக்கவும் முயற்சி செஞ்சாரு!"
"அடப்பாவி! நண்பனுக்கு இப்படி யாராவது துரோகம் செய்வாங்களா?" என்றார் ராமன்.
"ஆனா, பிசினஸ் சரியில்லாததால, அந்த கம்பெனியை கொஞ்ச நாள்ளேயே மூடிட்டாங்க. வேலை போனவுடனே, கணபதி சாந்தகுமார்கிட்ட வந்து மன்னிப்புக் கேட்டாரு. சாந்தகுமார் அவர் செஞ்சதையெல்லாம் மறந்து, அவரை மறுபடி வேலைக்கு சேத்துக்கிட்டாரு. தனக்கு துரோகம் செஞ்ச நண்பனையை விரோதியா நினைக்காம மறுபடி ஏத்துக்கிட்டவர் சாந்தகுமார். அதனாலதான் தொழில்முறையில நமக்குப் போட்டியாளர்னாலும், அவர் ஒரு நல்ல மனிதர்ங்கறதால அவரை நம்பி, அவரோட உதவியைக் கேட்கலாம்னு நான் நினைச்சேன்!" என்றார் ரமேஷ்.
"உங்களோட முடிவு சரியானதுதான் சார்!" என்றார் ராமன்.
குறள் 810:
விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.
No comments:
Post a Comment