திருக்குறள்
பொருட்பால்
படையியல்
அதிகாரம் 90
பெரியாரைப் பிழையாமை
891. நட்பு நாடி வந்தவர்
விசாக நாட்டுக்குச் சொந்தமான மாருதத் தீவை, அசுவினி நாடு போர் செய்து கைப்பற்றிய பிறகு, இரு நாடுகளுக்குமிடையே பகை நிலவி வந்தது.இரண்டு தலைமுறைகளாக இருந்து வந்த பகையை முடிவுக்குக் கொண்டு வந்து, இரு நாடுகளுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில், விசாக நாட்டு மன்னர் வைகுந்தர், அசுவினி நாட்டுக்கு வந்திருந்தார்.
"வாருங்கள், வைகுந்தரே! பல ஆண்டுகளாக நமக்கிடையே இருந்த பகையை மறந்து, என்னுடன் நட்பு பாராட்டி இங்கே வந்திருக்கும் தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார் அசுவினி நாட்டு மன்னர் மகுடபதி.
இரண்டு நாட்கள் அசுவினி நாட்டில் தங்கிய பின், தன் நாட்டுக்குத் திரும்புகையில், மகுடபதியைத் தங்கள் நாட்டுக்கு வரும்படி அழைத்தார் வைகுந்தர்.
"கண்டிப்பாக வருகிறேன், வைகுந்தரே!" என்ற மகுடபதி, "உங்கள் தந்தை, பாட்டனார் இருவருமே மாருதத் தீவை மீட்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இருந்ததால், நம் இரு நாடுகளுக்கிடையே விரோதம் நீடித்தது. ஆனால், தங்களுக்கு அந்த நோக்கம் இல்லாததால், நம்மிடையே நல்லுறவு ஏற்பட்டுள்ளது!" என்றார் மகுடபதி.
வைகுந்தர் மௌனமாக இருந்தார்.
"தாங்கள் அறிவாற்றல் மிகுந்தவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால்தான், உங்கள் முன்னோர்களைப் போல் அல்லாமல், தாங்கள் இயலாத முயற்சிகளில் ஈடுபடாமல் இருக்கிறீர்கள். உங்கள் விவேகத்தைப் பாராட்டுகிறேன்!" என்றார் மகுடபதி, தொடர்ந்து.
வைகுந்தர் பதில் பேசாமல் கிளம்பினார்.
"அரசே! மாருத் தீவை விசாக நாட்டுப் படை கைப்பற்றி விட்டது. அத்துடன் மட்டுமல்ல. போரில் தோற்ற நம் வீரர்களை, அவர்கள் நம் எல்லை தாண்டியும் துரத்தி வந்து, நம் எல்லையில் உள்ள மலைப் பகுதியையும் ஆக்கிரமித்துக் கொண்டு விட்டனர்" என்றார் அமைச்சர்.
"இது எப்படி நடந்தது?" என்றார் மகுடபதி, அதிர்ச்சியுடனும், கோபத்துடனும்.
"அரசே! விசாக நாட்டு மன்னர் வைகுந்தரை அறிவாற்றல் மிகுந்தவர் என்று தாங்கள் குறிப்பிட்டீர்கள். அவர் போர் ஆற்றலும் மிகுந்தவர் என்றும் கேள்விப்படுகிறேன். நம்மிடம் நட்பு நாடி அவர் வந்தபோது, மாருதத் தீவைத் தன்னால் மீட்க முடியாது என்று அவர் உணர்ந்திருப்பதாகத் தாங்கள் கூறியது அவரைக் காயப்படுத்தி இருக்க வேண்டும். அதனால்தான், மாருதத் தீவை மீட்பதை ஒரு சவாலாக ஏற்றுத் தன்னால் முடியும் என்று காட்டி விட்டார் அவர். நாம் மாருதத் தீவை இழந்ததுடன், நம் எல்லைப் பகுதியையும் இழந்து விட்டோம். மலைப் பகுதியான அதை நாம் மீட்பதும் கடினம்!" என்றார் அமைச்சர்.
குறள் 891:
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.
"ஆர்டரை கன்ஃபர்ம் பண்ணிட்டாங்களா சார்?" என்றான் பொது மேலாளர் குமார்.
"அதுக்குத்தான் நம்மை வரச் சொல்லி இருக்காங்க. அவங்க எம்.டி அருணாசலத்தோட நமக்கு ரெண்டு மணிக்கு அப்பாயின்ட்மென்ட் இருக்கு. அப்ப ஆர்டரை நேரிலேயே கொடுக்கறதாச் சொல்லி இருக்காங்க!" என்றான் சிவசங்கர்.
"ரொம்ப அதிர்ச்சியாவும், ஏமாற்றமாவும் இருக்கு. ஆர்டர் இல்லைன்னு சொல்றதுக்காகவா நேர்ல வரச் சொன்னாங்க?" என்றான் சிவசங்கர், ஏமாற்றத்துடனும், ஆத்திரத்துடனும்.
"உங்ககிட்ட ஃபோன்ல பேசறப்ப, ஆர்டர் கொடுக்கறதா உறுதியாச் சொன்னாங்களா சார்?" என்றான் குமார்.
"ஆமாம். ஃபோன்ல பேசறப்ப அருணாசலம் அவ்வளவு உறுதியாச் சொன்னாரே! அதுக்குள்ள என்ன ஆச்சுன்னு தெரியல. நம்ம போட்டியாளர்களான ரத்னா என்டர்பிரைசஸ் ஏதோ இன்ஃப்ளூயன்ஸை யூஸ் பண்ணி, நமக்குக் கிடைக்க வேண்டிய ஆர்டரைக் கெடுத்துட்டாங்கன்னு நினைக்கறேன்."
"சார்! எனக்கு வேற ஒண்ணு தோணுது!" என்றான் குமார், சற்றுத் தயக்கத்துடன்
"சொல்லுங்க!"
"நம்மகிட்ட பெருமாள்னு ஒத்தர் வேலை பாத்தார் இல்ல?"
"ஆமாம். ஒரு வயசான ஆளு. யூஸ்லெஸ் ஃபெலோ! அவனைப் பத்தி என்ன இப்ப?"
வயதில் பெரிய ஒரு நபரை 'அவன்' 'இவன்' என்று மரியாதை இல்லாமல் பேசுகிறாரே என்று யோசித்தபடியே, "நான் இங்கே வேலைக்குச் சேரறதுக்குக் கொஞ்ச நாள் முன்னாடியே அவர் இங்கேந்து போயிட்டார். கடைசி மாசச் சம்பளம் வாங்கிட்டுப் போக, ஒருநாள் நம்ம ஆஃபீசுக்கு வந்திருந்தாரு. அப்பதான் அவர் இங்கே வேலை செஞ்சவர்னு யாரோ எங்கிட்ட சொன்னாங்க. அவர் இப்ப அருணா அண்ட் கருணாவில வேலை செய்யறாருன்னு நினைக்கறேன். அவரை அங்கே பாத்தேன். எங்கேயோ பாத்த மாதிரி இருக்கேன்னு நினைச்சேன். அஞ்சாறு வருஷம் முன்னால ஒரு தடவைதான் அவரைப் பாத்திருக்கேங்கறதால, அவர் யாருன்னு உடனே ஞாபகம் வரலை. இப்பதான் ஞாபகம் வருது" என்றான் குமார்.
"அவன் அங்கே வேலை செஞ்சா என்ன? அதுக்கும், நமக்கு ஆர்டர் கிடைக்காம போனதுக்கும் என்ன சம்பந்தம்?" என்றான் சிவசங்கர், எரிச்சலுடன்.
"இல்லை, சார். நாம அருணாசலத்தைப் பாக்கறதுக்காக அவர் அறைக்கு வெளியில காத்துக்கிட்டு இருந்தப்ப, பெருமாள் அருணாசலத்தோட அறைக்குப் போயிட்டு வந்தாரு. பத்து நிமிஷம் உள்ளே இருந்துட்டு வந்திருப்பாருன்னு நினைக்கறேன். வரும்போது, ஒரு மாதிரி சிரிச்சக்கிட்டே வந்தாரு. உங்க பக்கம் கூடத் திரும்பிப் பார்த்த மாதிரி இருந்தது. அப்ப அதை நான் பெரிசா நினைக்கல. ஆனா இப்ப நினைச்சுப் பாக்கறப்ப, அவர் உங்களைப் பத்தி அருணாசலத்துக்கிட்ட தப்பா ஏதாவது சொல்லி இருப்பாரோன்னு தோணிச்சு. நம்ம கம்பெனியில அவர் வேலை செய்யறப்ப, ஏதாவது பிரச்னை இருந்ததா, சார்?"
சிவசங்கருக்கு ஒரு கணம் உடலில் ஒரு பதட்டம் ஏற்பட்டது.
பெருமாள் தன் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது, அவர் வயதுக்குக் கூட மதிப்பளிக்காமல் அவரை ஒருமையில் பேசியதும், காரணமில்லாமல் அவர் மேல் ஏற்பட்ட வெறுப்பால் அவரை அதிகம் கடிந்து பேசியதும், மற்ற ஊழியர்கள் முன்னால் அவரை அவமானப்படுத்தியதும், அதனால் அவர் மனம் வெறுத்து வேலையை விட்டு விலகியதும் சிவசங்கரின் மனதில் வந்து போயின.
அதனால் என்ன? 'அருணா அண்ட் கருணா'வில் பெருமாள் ஒரு சாதாரண ஊழியராகத்தானே இருப்பார்? அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டு, தனக்கு ஆர்டர் கொடுக்கும் முடிவை அருணாசலம் மாற்றிக் கொண்டிருப்பாரா என்ன?
ஒருவேளை, பெருமாள் அருணாசலத்தின் நம்பிக்கையும், மதிப்பையும் பெற்றவராக இருந்து, பெருமாள் அருணாசலத்திடம் தன்னைப் பற்றித் தவறாக ஏதாவது கூறி, அதை அருணாசலம் நம்பி, தன்னுடன் வியாபாரத் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்திருப்பாரோ?
நிறுவனத்தின் உரிமையாளர் என்ற அகந்தையில் பெருமாளை ஒரு ஊழியர்தானே என்று நினைத்து மரியாதை இல்லாமல் பேசியது, அவமானப்படுத்தியது இவற்றின் விளைவாகத்தான் இந்தப் பெரிய ஆர்டரை இழந்து விட்டோமோ?
பெருமாளைத் தான் நடத்திய விதம் பற்றிய குற்ற உணர்ச்சி முதல் முறையாக சிவசங்கரின் மனதில் ஏற்பட்டது.
குறள் 892:
பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும்.
இதுதான் நிர்மல் குமார் பற்றிப் பொதுவாக அனைவருமே பேசிக் கொள்வது.
நிர்மல் குமார் அடியெடுத்து வைக்காத தொழில்துறைகளில் இருந்தவர்கள் 'நல்ல வேளை அவர் நம்ம தொழிலுக்கு வரலை!' என்று சற்று நிம்மதியுடன் இருந்தாலும், எப்போது அவர் தங்கள் தொழிலுக்குள் நுழைவாரோ என்ற அச்சத்துடனும் இருந்தனர்.
"இந்தத் தொழில்ல நான்தான் ஜாம்பவான். என்னை எந்தக் கொம்பனாலும் ஜெயிக்க முடியாது!" என்று பலரிடமும் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பரார் தணிகாசலம்.
"நீங்க செய்யறது ஒரு சின்னத் தொழில். இதுக்கு மார்க்கெட்டே ரொம்பக் கொஞ்சம். உங்களை மாதிரி ஒண்ணு ரெண்டு பேர்தான் இந்தத் தொழில்ல இருக்கீங்க. அந்த ஒண்ணு ரெண்டு பேரில, நீங்க முதல் ஆளா இருக்கலாம். அவ்வளவுதான். இந்தத் தொழிலைத் தேர்ந்தெடுத்து, யாரும் புதுசா உள்ளே வரப் போறதில்ல. அதனால, என்னை யாரும் ஜெயிக்க முடியாதுன்னு நீங்க சொல்லிக்கிட்டிருக்கலாம்!" என்று கேலி செய்தார் அவருடைய நண்பர் முத்துசாமி.
"நான் சும்மா சொல்லல, முத்துசாமி. நிர்மல் குமார் எல்லாத் தொழில்லேயும் இறங்கறாரே, என்னோட தொழில்ல இறங்கச் சொல்லுங்க பாக்கலாம்!"
"நிர்மல் குமார் பெரிய தொழில்கள்ளதான் இறங்குவாரு. உங்க தொழிலக்கு அவர் ஏன் வரப் போறாரு?"
"நிர்மல் குமார் பத்தி ஒரு விஷயம் சொல்றேன், கேட்டுக்கங்க. வலுவான போட்டி இருக்கற இடத்தில நிர்மல் குமார் இறங்க மாட்டாரு. எங்கே போட்டி இல்லையோ, அல்லது எங்கே ஒரு தொழில்ல ஈடுபட்டு இருக்கறவங்க பலவீனமா இருக்காங்களோ, அங்கேதான் நிர்மல் குமார் நுழைவார். ஒரு உதரரணம் சொல்லணும்னா, ஒரு அரசன் தன்னை விட பலமான அரசர்கள் பக்கமே போக மாட்டான், ஆனா, தன்னை விடச் சின்ன அரசர்களோட போர் செஞ்சு ஜெயிச்சுத் தன்னை ஒரு பெரிய வீரன் மாதிரி காட்டிப்பான். அப்படிப்பட்டவர்தான் நிர்மல் குமார்!" என்றார் தணிகாசலம், இகழ்ச்சி ததும்பும் குரலில்.
சற்றும் எதிர்பாராத விதமாக, அடுத்த சில மாதங்களிலேயே, நிர்மல் குமார் தணிகாசலம் ஈடுபட்டிருக்கும் தொழிலில் காலடி எடுத்து வைத்தார். அதற்குப் பிறகு, இரண்டே ஆண்டுகளில், தணிகாசலம் தன் தொழிலை இழுத்து மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.
"எதுக்குங்க இந்தச் சின்னத் தொழில்ல போய் முதலீடு செஞ்சிருக்கீங்க? நமக்கு முக்கியமான வேற தொழில்கள் நிறைய இருக்கே!" என்றார் தொழில் ஆலோசகர் சந்தோஷ்.
"செஞ்சிருக்க மாட்டேன். இந்தத் தொழில்ல ஈடுபட்டிருந்த தணிகாசலம்னு ஒரு ஆள், நான் பலவீனமான தொழிலதிபர்களோடதான் போட்டி போடுவேன், அவனை மாதிரி ஆட்களோடல்லாம் போட்டி போடவே பயப்படுவேன்னு யார்கிட்டயோ பேசிக்கிட்டிருந்திருக்கான். நம்ம ஆளு ஒத்தரு தற்செயலா அப்ப அங்கே இருந்ததால, அது அவர் காதில விழுந்திருக்கு. அவர் எங்கிட்ட வந்து இதைச் சொன்னதும், எனக்கு ரொம்பக் கோபம் வந்துடுச்சு. நான் எவ்வளவு கஷ்டப்பட்டு முன்னேறிக்கிட்டிருக்கேன்! என்னால எதுவும் முடியாதுன்னு ஒத்தன் பேசினா, கேட்டுக்கிட்டு சும்மா இருக்க முடியுமா? அதனாலதான், என்னோட மானேஜர்கள்ள ஒத்தரை அந்தத் தொழில்ல இறக்கினேன். இப்ப அந்தத் தணிகாசலம் காணாமலே போயிட்டான்!"
சொல்லி முடித்தபோது, நிர்மல் குமாரின் முகத்தில் கோபம் மறைந்து, சிரிப்புப் படர்ந்திருந்தது.
குறள் 893:
கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு.
தீர்மானம் கொண்டு வந்த உறுப்பினர் ஒரு சிறிய கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், எதிர்க்கட்சித் தலைவர் கூடத் துவக்கத்தில் அதை விமரிசனம் செய்து பேசினார்.
"ஆளும் கட்சிக்குப் பெரும்பான்மை இருக்கும் நிலையில், இந்தத் தீர்மானத்தை அவர்கள் முறியடித்து விடுவார்கள். அதை ஒரு செயற்கை வெற்றியாக அவர்கள் காட்டிக் கொள்ளத்தான் இது உதவும்!" என்றார் அவர்.
ஆயினும், ஆளும் கட்சியைச் சேர்ந்த 23 உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தததால், யாரும் எதிர்பாராத வகையில், நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்று, செங்கல்வராயன் பதவி இழந்தார்.
ஆளும் கட்சியைச் சேர்ந்த கதிரவன் என்ற சட்டமன்ற உறுப்பினர்தான், அதிருப்தியில் இருந்த 22 உறுப்பினர்களை ஒன்று திரட்டி, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வெற்றி பெறச் செய்தான் என்பது பிறகுதான் தெரிந்தது.
அரசியலில் நீண்ட அனுபவம் மிகுந்த செங்கல்வராயனை, அனுபவமில்லாத ஒரு இளைஞன் வீழ்த்தியது அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு முந்தைய இரவில், கதிரவன் எதிர்க்கட்சியினருடன் பேசிச் செய்து கொண்ட ரகசிய உடன்பாட்டின்படி, எதிர்க்கட்சிகள் சேர்ந்து கூட்டாக அமைக்கப் போகும் அரசில், கதிவனுக்குத் துணை முதல்வர் பதவி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதுவரை அமைச்சர் பதவி கூட வகிக்காத, முதல் முறையாகச் சட்டமன்ற உறுப்பினர் ஆகி இருந்த ஒருவருக்கு எடுத்த எடுப்பிலேயே துணை முதல்வர் பதவியா என்ற வியப்பு பலரிடமும் ஏற்பட்டது.
பதவி ஏற்பு விழாவில், முதலமைச்சர் பதவி ஏற்ற பிறகு, இரண்டாவதாகத் தான் அழைக்கப்படுவோம் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தான் கதிரவன்.
ஆனால், இரண்டாவதாக வேறொரு பெயர் அழைக்கப்பட்டது. இறுதி வரை, அவன் பெயர் அழைக்கப்படவில்லை.
பதவி ஏற்பு விழா முடிந்ததும், முதலமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்டவரிடம் சென்று, 'நியாயம்' கேட்டான் கதிரவன்.
அவர் சிரித்துக் கொண்டே, "சொந்தக் கட்சியோட அரசாங்கத்தையே திட்டம் போட்டுக் கவுத்தவன் நீ. உன்னை எப்படி அமைச்சரவையில சேத்துக்க முடியும்?" என்றார்.
"அப்படின்னா, எனக்குக் கொடுத்த வாக்குறுதி?"
"துரோகிகள் எல்லாம் வாக்குறுதி பத்திப் பேசக் கூடாது!" என்றார் முதலமைச்சர், சிரித்தபடியே.
"எங்க கட்சியிலேந்து 22 பேரை அழைச்சுக்கிட்டு வந்தவன் நான்தான். நாங்க அத்தனை பேரும் உங்களுக்கு எதிரா ஓட்டுப் போடுவோம். அப்ப உங்க ஆட்சி எப்படி நீடிக்கும்னு பாக்கறேன்!" என்றான் கதிரவன், கோபத்துடன்.
ஆனால், அந்த 22 பேரில் சிலருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருந்ததாலும், மற்றவர்களுக்கு வேறு வகை நன்மைகள் வழங்கப்பட்டிருந்ததாலும், அவர்களில் ஒருவர் கூடக் கதிரவன் பேச்சைக் கேட்கத் தயாராக இல்லை.
தன் ஆட்சி கவிழ்ந்ததுமே, தன் கட்சியின் ஒரு முக்கியத் தலைவரை எதிர்க்கட்சித் தலைவரிடம் தூதாக அனுப்பிய செங்கல்வராயன், கட்சி மாறிய சட்டமன்ற உறுப்பிர்களில் யாருக்கு அமைச்சர் பதவி கொடுத்தாலும், கதிரவனுக்கு மட்டும் எந்தப் பதவியும் கொடுக்கக் கூடாது என்று அவரிடம் பேசி, அவரை ஒப்புக் கொள்ள வைத்து விட்டார் என்பது கதிரவனுக்குத் தெரியாது.
ஆனால், கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் தான் மட்டும் பதவி இழக்க நேரிடலாம் என்பதும், எதிர்காலத்தில், எந்தக் கட்சியிலும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு தனக்குக் கிடைக்காது என்பதும் கதிரவனுக்குத் தெரிந்தது.
குறள் 894:
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்.
தனக்கு விசுவாசமாக இருந்த வீரர்களைக் கொண்டு புரட்சியை முறியடித்த மன்னர் அதிவிரதன், புரட்சியில் ஈடுபட்டவர்களைப் பிடித்து தண்டனை வழங்குவதில் தீவிரம் காட்டினர்.
அகப்பட்டுக் கொண்டவர்களில் சிலருக்கு மரண தண்டனையும், வேறு சிலருக்கு சிறை தண்டனையும் வழங்கப்பட்டன.
மாறன் தப்பித்துத் தலைநகரத்தை விட்டுத் தொலைதூரம் ஓடி, அங்கே இருந்த தன் தந்தையின் நண்பர் காலபைரவர் வீட்டில் ஒளிந்து கொண்டான்.
ஓரிரு நாட்களுக்குப் பிறகு, "மாறா! நீ இங்கே நீண்ட நாள் இருப்பது ஆபத்து. மன்னரின் வீரர்கள் உன்னை எப்படியும் தேடிப் பிடித்து விடுவார்கள். நீ நம் நாட்டை விட்டு வெளியேறுவதுதான் நல்லது" என்றார் காலபைவர்.
"எங்கே செல்வது? நம் அண்டை நாட்டு மன்னர்கள் எல்லோரும் நம் மன்னரைக் கண்டு அஞ்சுகிறார்களே! நான் அங்கு சென்றால், அவர்களே என்னைப் பிடித்து, நம் மன்னரிடம் ஒப்படைத்து விடுவார்களே!" என்றான் மாறன்.
"மாண்டவ நாட்டுக்குச் சென்றால், நீ பிழைத்துக் கொள்ளலாம்."
"எப்படி? மாண்டவ நாடும் நமக்கு நட்பு நாடுதானே?"
"ராமரைப் பற்றி ஒன்று சொல்வார்கள். அவரிடம் யாராவது அடைக்கலம் புகுந்தால், அவர்களை அவர் நிச்சயம் காப்பாற்றி விடுவாராம். மாண்டவ நாட்டு அரசர் பெருவழுதியும் அப்படித்தான். அதனால், எப்படியாவது மாண்டவ நாட்டுக்குப் போய், மன்னரைப் பார்த்து, அவரிடம் அடைக்கலம் கேள். அவர் உனக்கு அடைக்கலம் கொடுத்து விட்டால், அதற்குப் பிறகு, நம் நாட்டு மன்னரிடம் நீ பயப்பட வேண்டாம்!" என்றார் காலபைரவர்.
காலபைரவரின் யோசனையை ஏற்றுப் பல இன்னல்களுக்கிடையே, எப்படியோ மாண்டவ நாட்டை அடைந்து விட்டான் மாறன்.
மாண்டவ நாட்டு மன்னர் பெருவழுதி எளிமையானவர் என்பதால், அரண்மனைக்குச் சென்று அவரைச் சந்திப்பதில் மாறனுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை.
மாறன் தன் நிலை பற்றி மன்னரிடம் விளக்கித் தனக்கு அடைக்கலம் கொடுக்கும்படி கேட்டான்.
"அடைக்கலம் என்று கேட்டு வந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரிப்பதுதான் என் கொள்கை. மனிதாபிமான அடிப்படையில் நான் இதைச் செய்து வருகிறேன். ஆனால்..." என்று இழுத்தார் பெருவழுதி.
பெருவழுதி என்ன சொல்லப் போகிறாரோ என்று பதட்டத்துடன் காத்திருந்தான் மாறன்.
"விசாக நாட்டு மன்னர் அதிவிரதரை என்னால் விரோதித்துக் கொள்ள முடியாது. அதனால், உன் விஷயத்தில் என் கொள்கைப்படி நான் செயல்பட முடியாது!",
"அரசே! என் மீது கருணை காட்டுங்கள்!" என்றான் மாறன், கெஞ்சும் குரலில்.
"நான் உன் மீது கருணை காட்டினால், அதிவிரதர் என் மீது கருணை காட்ட மாட்டார். உனக்கு நான் அடைக்கலம் கொடுத்தால், நான் அதிவிரதரின் கோபத்துக்கு ஆளாவேன். அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதைக் கணிக்க முடியாது. சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும். நானும் என் நாடும் பிழைத்திருந்தால்தான், நான் மற்றவர்களுக்குக் கருணை காட்டி உதவ முடியும். எனவே, நீ இங்கு வந்திருப்பதை நான் அதிவீரருக்குத் தெரிவிக்க வேண்டும். அதற்குப் பிறகு, அவர் உன்னைத் தன் நாட்டுக்கு அனுப்பி வைக்கும்படி கோரினால், அனுப்பி வைக்கத்தான் வேண்டும். அதுவரையில், உன்னை எங்கள் நாட்டுச் சிறையில் வைத்திருப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை!" என்ற பெருவழுதி, காவலர்களுக்குச் சைகை காட்ட, அவர்கள் மாறனை நெருங்கி வந்தனர்.
குறள் 895:
யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்.
பவித்ரனின் பெரியப்பாதான் அனுப்பி இருந்தார்.
நோட்டீஸை எடுத்துக் கொண்டு, தனக்குத் தெரிந்த ஒரு வக்கீலிடம் போனான் பவித்ரன்.
"சார்! என் பெரியப்பா சின்ன வயசிலே வேற ஒரு ஊர்ல போய் செட்டில் ஆயிட்டாரு. என் அப்பா, பெரியப்பா ரெண்டு பேருக்கும் சொந்தமான நிலத்தை, என் அப்பாதான் பார்த்துக்கிட்டிருந்தாரு. என் அப்பா காலத்துக்கப்புறம், நான்தான் நிலத்தைப் பார்த்துக்கிட்டிருந்தேன். அப்பப்ப அவருக்குப் பணம் அனுப்பிக்கிட்டுத்தான் இருந்தேன். நிலத்திலேந்து வந்த வருமானத்தில, அவரோட பங்கை சரியாக் கொடுக்கலேன்னு பல லட்ச ரூபாய் கேட்டு இப்ப நோட்டீஸ் அனுப்பி இருக்காரு!" என்றான் பவித்ரன்.
"அப்பப்ப பணம் அனுப்பினதா சொல்றீங்க. அப்படின்னா? எங்கிட்ட முழு உண்மையையும் சொன்னாதான், என்னால உங்களுக்கு உதவ முடியும்!"
"சார்! நிலத்தைப் பாத்துக்கிட்டது நான். அவர் வயசானவரு. வெளியூர்ல இருந்தாரு. ஊர் நிலவரம் அவருக்குத் தெரியாது. நிலத்தோட வருமானத்தில அவரோட பங்கா, கொஞ்சம் பணம்தான் கொடுத்துக்கிட்டிருந்தேன்!" என்றான் பவித்ரன், சற்றுத் தயக்கத்துடன்.
"சரி. ஒவ்வொரு வருஷமும் நிலத்திலிருந்து மொத்த வருமானம் எவ்வளவு வந்தது, செலவுகள் எவ்வளவு, நிலத்தைப் பார்த்துக்கிட்டதுக்காக நீங்க எவ்வளவு எடுத்துக்கிட்டீங்க, அவருக்கு எவ்வளவு கொடுத்தீங்க இதுக்கெல்லாம் கணக்கு எழுதி வச்சிருக்கீங்களா?" என்றார் வக்கீல்.
"இல்லை சார். பெரியப்பாதானேன்னு நினைச்சேன். அவர் கணக்குக் கேப்பார்னு தெரியாது!"
"நீங்க கொடுத்த பணம் அவருக்குச் சேர வேண்டிய பங்கை விடக் குறைவா இருக்குன்னு அவர் உங்களுக்குக் கடிதம் எழுதி இருக்காரா?"
"வருஷா வருஷம் எழுதிக்கிட்டுத்தான் இருப்பாரு. நான் அதுக்கெல்லாம் பதில் போடறதில்லை. அந்தக் கடிதங்களையெல்லாம் கிழிச்சுப் போட்டுடுவேன்!"
"உங்ககிட்ட எந்தக் கணக்கு வழக்கும் இல்லை. அவர் நீங்க அனுப்பின பணத்துக்கெல்லாம் கணக்கு வச்சிருப்பார்னு நினைக்கிறேன். ஏன்னா, அவரோட நோட்டீஸ்ல இந்தத் தொகையெல்லாம் குறிப்பிட்டிருக்காரு. அவர் எழுதின கடிதத்துக்கெல்லாம் காப்பி வச்சிருப்பாருன்னு நினைக்கறேன். உங்ககிட்ட கணக்கு வழக்கு இல்லாததால, சில வருஷங்கள் நிலத்திலேந்து வந்த வருமானம் குறைச்சலா இருந்தாலும், அதையெல்லாம் உங்களால நிரூபிக்க முடியாது. உங்க கேஸ் ரொம்ப வீக்கா இருக்கு. அவரைப் பாத்துப் பேசி, ஏதாவது காம்ப்ரமைஸ் பண்ணிக்கறதுதான் ஒரே வழி!" என்றார் வக்கீல்.
'அந்தக் கிழவன் எந்த காம்ப்ரமைஸுக்கும் வர மாட்டானே! சின்ன வயசில, நான் ஒரு தீ விபத்தில மாட்டிக்கிட்டு அதிசயமா உயிர் பிழைச்சுட்டேன்னு சொல்லுவாங்க. ஆனா, இப்ப இந்தக் கிழவன்கிட்டேந்து தப்பிக்க முடியாது போல இருக்கே! வெளியூர்ல இருந்துக்கிட்டு, இந்தக் கிழவனால என்ன செய்ய முடியும்னு நினைச்சது தப்பாப் போச்சே!' என்று நொந்து கொண்டான் பவித்ரன்.
குறள் 896:
எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.
திருமணம் ஆன புதிதில், பார்த்திபன் தன் மனைவி வாசுகியிடம் சொல்ல ஆரம்பித்த இந்த வாக்கியத்தைத் திருமணம் ஆகப் பல வருடங்கள் ஆன பிறகும் சொல்லி வந்தான்.
ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த வாசுகி, துவக்கத்தில் இதற்கு பதில் சொல்லாமல் இருந்தாள்.
ஆனால் சில வருடங்கள் கழித்து, வாசுகி பார்த்திபனுக்குப் பல விதங்களிலும் பதிலடி கொடுக்க ஆரம்பித்தாள்.
"அதுதான் ஏழைக் குடும்பம்னும் பாக்காம, கல்யாணத்துகு முன்னாலேயும் சரி, கல்யாணத்துக்கு அப்புறமும் சரி, வரதட்சணை, சீர்னு கறந்துட்டீங்களே! ஏழையா இருந்த எங்கப்பா, உங்களுக்கு சீர் செஞ்சே பரம ஏழையா ஆயிட்டாரு!"
"பொதுவா, பிள்ளையோட அப்பா அம்மாதான் வரதட்சணை, சீர்னு கேப்பாங்க. ஆனா, உங்க அப்பா அம்மா அப்படி எதுவும் கேக்கல. நீங்கதான் சீர், செனத்தின்னு ஏகப்பட்டதைக் கேட்டு, எங்கப்பாவைக் கொடுமைப்படுத்தினீங்க. உங்களை மாதிரி உலகத்தில யாரும் இருக்க மாட்டாங்க!"
"நீங்க ஒண்ணும் பெரிய பணக்காரர் இல்ல. சுமாரான வசதி உள்ள குடும்பம்தான் உங்க குடும்பம். எங்கப்பா தன் வசதிக்கு மீறி, நீங்க கேட்ட சீரையெல்லாம் உங்களுக்கு செஞ்சிருக்காருன்னு நன்றியா இருங்க!"
ஆயினும், பார்த்திபன் வாசுகியின் தந்தையை இழித்துப் பேசுவதை நிறுத்தவில்லை.
"ஆஃபீஸ்ல எனக்குக் கொஞ்சம் பிரச்னை இருக்கு. என்னால இந்த வேலையில தொடர முடியாது. நான் ஒரு பிசினஸ் ஆரம்பிக்கலாம்னு நினைக்கறேன். முதலீடு செய்யப் பணம் வேணும். உங்கப்பாகிட்ட கேட்டுக் கொஞ்சம் பணம் வாங்கிக்கிட்டு வா. நான் தொழில் நடத்த அவர் பணம் கொடுக்கலேன்னா, அவரோட பொண்ணோட குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துடும்னு சொல்லி, அவருக்குப் பரிய வை!" என்று வாசுகியிடம் சொல்லி, அவள் அப்பாவிடமிருந்து பணம் வாங்கி வரச் சொன்னான் பார்த்திபன்.
வாசுகியின் தந்தை எப்படியோ கஷ்டப்பட்டுப் புரட்டிக் கொடுத்த பணத்தை முதலாக வைத்துப் பார்த்திபன் தொடங்கிய தொழில், விரைவிலேயே வேகமாக வளர்ந்து, அவன் பெரும் செல்வந்தனாகி விட்டான்.
அதற்குப் பிறகும், பார்த்திபன் வாசுகியின் தந்தையிடம் நன்றி பாரட்டவில்லை, என்பதுடன், அவரை இகழ்ந்து பேசுவதையும் நிறுத்தவில்லை.
"பொண்ணுக்குச் செய்ய வேண்டியது அவரோட கடமை. செஞ்சாரு! தொழில்ல வெற்றி பெற்றது என்னோட திறமை. உங்கப்பாவுக்கு இதில என்ன பங்கு இருக்கு?" என்றான் வாசுகியிடம்.
வாசுகியின் பெற்றோர் ஏழைகள் என்பதால், அவர்களைத் தன் வீட்டுக்கு வருவதைப் பார்த்திபன் அனுமதிக்கவில்லை. வாசுகிதான் எப்போதாவது போய் அவர்ளைப் பார்த்து விட்டு வருவாள்.
வாசுகியின் பெற்றோருக்குப் பொருளாதாரப் பிரச்னைகள் வந்தபோது, பார்த்திபன் அவர்களுக்கு உதவ மறுத்து விட்டான். "அவங்க அவங்க பிரச்னையை அவங்தான் பாத்துக்கணும்!" என்றான்.
"எங்கப்பா உங்களுக்கு எவ்வளவோ செஞ்சிருக்காரு. இன்னிக்கு நீங்க நல்ல நிலைமையில இருப்பதற்குக் காரணமே அவர்தான். அவர் விஷயத்தில நீங்க இவ்வளவு அநியாயமா நடந்துக்கிறீங்க. நீங்க நடந்துக்கறதைப் பார்த்து, அவர் ரொம்ப வருத்தப்படறாரு. வெளிப்படையாக் காட்டிக்காட்டாலும், அவர் மனசில நிச்சயமா உங்க மேல கோபம் இருக்கும். அந்தக் கோபத்தினால, நம்ம குடும்பத்துக்கு தப்பா எதுவும் நடந்துடக் கூடாதேன்னு எனக்கு பயமா இருக்கு!" என்றாள் வாசுகி.
பார்த்திபனின் அலுவலகத்திலிருந்து வாசுகிக்குத் தொலைபேசி வந்தது. "அம்மா! இன்னிக்கு திடீர்னு அரசாங்க அதிகாரிகள் நம்ம தொழிற்சாலைக்கு வந்து சோதனை போட்டாங்க. நாம தயாரிக்கற இரும்புப் பொருட்களை சில தீவிரவாதிகள் வாங்கி, ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படுத்தறாங்களாம். 'எங்ககிட்ட பொருள் வாங்கறவங்க அதை எதுக்குப் பயன்படுத்தறாங்கன்னு எனக்கு எப்படித் தெரியும்?'னு சார் கேட்டாரு. ஆனா, அதிகாரிங்க அதை ஒத்துக்காம, சாரைக் கைது செஞ்சுட்டாங்க" என்றார் தொலைபேசியில் பேசிய நிறுவன ஊழியர்.
"என்னது? கைது செஞ்சுட்டாங்களா?" என்றாள் வாசுகி, அதிர்ச்சியுடன்.
"ஆமாம்மா! அதுவும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில. ஜாமீன் கூடக் கிடைக்காதுன்னு சொல்றாங்க!"
குறள் 897:
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்.
"வேலை செஞ்சேன், சம்பளம் கொடுத்தாரு. அதோட சரியாப் போச்சு. இப்ப, என்னோட முன்னேற்றத்துக்காக, அவர் போட்டி கம்பெனியோட சேர்ந்து வேலை செய்யறேன். அதில என்ன தப்பு இருக்கு?" என்றான் மோகன்.
"தப்புதாண்டா! அவர் ரொம்ப நல்ல மனுஷன்னு நீயே சொல்லி இருக்கே. எனக்கு உடம்பு சரியில்லாம போனபோது, அவர் தானாவே உனக்கு லீவு கொடுத்து, எனக்கு மருத்துவச் செலவுக்காகப் பணமும் கொடுத்தாரு. என்னை ஆஸ்பத்திரியில வந்து பார்த்து, நலம் விசாரிச்சாரு. அவ்வளவு உயர்ந்த மனுஷன் அவரு! இப்படிப்பட்ட நல்ல மனுஷனுக்குக் கெடுதல் செய்ய நினைச்சா, அது உனக்கு நல்லதில்லடா!"
"என்னம்மா, பத்தாம் பசலித்தனமாப் பேசிக்கிட்டிருக்க? வாழ்க்கையில முன்னேறணும்னா, வர வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கணும். அவரோட போட்டி கம்பெனிக்காரங்க எங்கிட்ட வந்து உதவி கேட்டாங்க. நான் செய்யறேன். நான் வாங்கிக்கிட்டிருந்த சம்பளத்தைப் போல ரெண்டு மடங்கு வருமானம் இப்ப கிடைக்குது. எனக்கு ஏதாவது பிரச்னைன்னா, இந்த கம்பெனிக்காரங்க எனக்கு உதவுவாங்க. இந்த கம்பெனி வளர்ச்சி அடையறப்ப, சக்ரபாணிக்கு பாதிப்பு ஏற்படத்தான் செய்யும்! அதுக்கு நான் என்ன செய்ய முடியும்" என்று சொல்லி விவாதத்தை முடித்து விட்டான் மோகன்.
"வாங்கம்மா! என்ன விஷயம்? மோகன் நல்லா இருக்கானா?" என்றார் சக்ரபாணி, தன்னைப் பார்க்க வந்த காவேரியைப் பார்த்து.
"ஐயா! நீங்க ரொம்ப உயர்ந்த மனுஷர். மோகன் உங்களுக்கு எதிரா வேலை செய்யறான். ஆனா, நீங்க அவன் நல்லா இருக்கானான்னு கேக்கறீங்க!" என்றாள் காவேரி.
"மோகன் செய்யற விஷயங்கள் பத்தி எனக்குக் காதில விழுந்துக்கிட்டுத்தான் இருக்கு" என்றார் சக்ரபாணி, சுருக்கமாக.
"ஐயா! உங்களை மாதிரி ஒரு உயர்ந்த மனுஷருக்குக் கேடு நினைச்சா, அதனால அவனுக்கு என்ன கெடுதல் வந்து சேருமோன்னு எனக்கு பயமா இருக்கு. வெளியில போன பையன் வீட்டுக்கு நல்லபடியா வந்து சேரணுமேன்னு தினமும் கவலைப்பட்டுக்கிட்டு உக்காந்துக்கிட்டிருக்கேன். என்னிக்காவது அவன் வீட்டுக்குத் திரும்பி வர தாமதமானா, ஆக்சிடென்ட் ஏதாவது ஆகி இருக்குமோன்னு ஒரே படபடப்பா இருக்கு. அவன் வீட்டுக்குத் திரும்பினப்பறம்தான் பதட்டம் அடங்குது. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல. அதனாலதான், உங்களைப் பார்த்து என் மனசில இருக்கறதை சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்!" என்றாள் காவேரி. பேச்சின் முடிவில் அவளுக்கு அழுகை வந்து விட்டது.
"கவலைப்படாதீங்கம்மா. மோகன் நல்லா இருக்கணும்னுதான் நான் எப்பவும் நினைக்கறேன். உங்களுக்கும் இவ்வளவு நல்ல மனசு இருக்கு. அதனால, உங்க மனசுக்குக் கஷ்டம் வர மாதிரி எதுவும் நடக்காது, மோகனுக்கு எதுவும் ஆகாது. கவலைப்படாம போயிட்டு வாங்க. இருங்க. உங்களைக் காரில கொண்டு விடச் சொல்றேன்!" என்ற சக்ரபாணி, "டிரைவர்!" என்று தனது டிரைவரை அழைத்தார்.
குறள் 898:
குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மக்களின் வறுமையைப் போக்கும் விதத்தில் அமைய வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தவர் மகேஷ்குமார். அவருடைய கருத்துக்கள் உலக அளவில் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், ஆளும் கட்சியாக இருந்த தே.ஜ.க. அவருடைய கருத்துக்களைப் பொருட்படுத்தவில்லை.
மகேஷ்குமார் தங்கள் அரசின் பொருளாதார ஆலோசகராக இருப்பார் என்ற ம.தே.க.வின் அறிவிப்பு மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனால், தேர்தலில் ம.தே.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
மகேஷ்குமார், அரசின் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
ம.தே.க. ஆட்சி அமைந்து சுமார் ஒரு வருடம் கழித்துப் பிரதமரைச் சந்தித்தார் மகேஷ்குமார்.
"ரெண்டு மூணு மாசமா, உங்களைப் பாக்க நேரம் கேட்டுக்கிட்டிருக்கேன். இப்பதான் என்னைப் பார்க்க நேரம் கொடுத்திருக்கீங்க!" என்றார் மகேஷ்குமார், குற்றம் சாட்டும் தொனியில்.
"சொல்லுங்க!" என்றார் பிரதமர்.
"என்னோட பொருளாதாரக் கொள்கைகள் வறுமையில இருக்கறவங்களை மேம்படுத்தற நோக்கத்தைக் கொண்டவைன்னு உங்களுக்குத் தெரியும். நீங்க என்னைப் பொருளாதார ஆலோசகராக நியமிச்சப்ப, என்னோட ஆலோசனைகள்படி செயல்படுவீங்கன்னு எதிர்பார்த்தேன். ஆனா இந்த ஒரு வருஷமா, நீங்க கார்ப்பரேட்கள், ஏகபோக நிறுவனங்கள் மாதிரி பெரிய நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கைகளைத்தான் செயல்படுத்தறீங்க. அதனால, நாட்டில வறுமை அதிகமாத்தான் ஆகி இருக்கு."
"உங்களை ஆலோசகரா வச்சுக்கப் போறோம்னு நாங்க சொன்னது எங்களோட தேர்தல் வெற்றிக்காகத்தான். இதை நாங்க ஜூம்லான்னு சொல்லுவோம். அப்படிச் சொன்னதாலதான், கடுமையான போட்டியை சமாளிச்சு, எங்களால வெற்றி பெற முடிஞ்சுது. சொன்னபடியே, உங்களை ஆலோசகரா வச்சுக்கிட்டிருக்கோம். உங்க ஆலோசனைகளை நாங்க செயல்படுத்தாட்டா என்ன? உங்களுக்கு சம்பளம் வந்துக்கிட்டிருக்கு இல்ல?" என்றார் பிரதமர், சிரித்தபடி.
"அப்படின்னா, உங்க தேர்தல் வெற்றிக்காக என்னை நீங்க பயன்படுத்திக்கிட்டிருக்கீங்க. நீங்க செய்யறதெல்லாம் என்னோட ஆலோசனைப்படிதான் என்கிற தவறான எண்ணம் எல்லார் மனசிலேயும் உண்டாகி இருக்குமே! உங்க அரசியலுக்காக, என்னோட நல்ல பேரைக் கெடுத்துட்டீங்களே!" என்றார் மகேஷ்குமார், கோபத்துடன்.
"ராஜினாமான்னு ஒண்ணு இருக்கே, தெரியுமா?" என்றார் பிரதமர், சிரித்தபடி.
மகேஷ்குமார் கோபத்துடன் வெளியேறினார்.
அன்றே தன் பொருளாதார ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்த மகேஷ்குமார், தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே, ம.தே.க. தன்னைப் பயன்படுத்திக் கொண்டதையும், தன் யோசனைகள் எதையுமே அரசு செயல்படுத்தவில்லை என்பதையும், தான் ஏமாற்றப்பட்டிருப்பதால் தனக்கு ஏற்பட்டிருக்கும் கோபத்தையும் குறிப்பிட்டு, ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டார்.
ம.தே.க. அரசின் பொருளாதாரக் கொள்கைகளால் தங்கள் வாழ்க்கை இன்னும் கடினமாகி விட்டதாக சாதாரண மக்கள் வருந்திக் கொண்டிருந்த நிலையில், மகேஷ்குமாரின் ஆலோசனைகள் செயல்படுத்தப்பட்டு, வரும் காலத்தில் தங்களுக்குச் சில நன்மைகள் நடக்கும் என்று அவர்களுக்கு இருந்த மெலிதான நம்பிக்கை இழையையும், மகேஷ்குமாரின் ராஜினாமா அறுத்து விட்டது.
இன்னும் நான்கு ஆண்டுகள் இந்தக் கொடுமையான ஆட்சியில் வருந்த வேண்டி இருக்குமே என்ற கவலை மக்களைப் பீடித்தது.
ஆயினும், யாருமே எதிர்பாராத விதத்தில், ம.தே.க. கட்சியில் ஏற்பட்ட பிளவால், அவர்கள் ஆட்சி அடுத்த ஆறு மாதங்களில் கவிழ்ந்தது.
குறள் 899:
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.
தயாளன் கட்சிக்குள் நல்லசிவத்தை விட மூத்த தலைவர். ஆயினும், நல்லசிவம் மக்களிடையே அதிக செல்வாக்குப் பெற்றவர் என்பதால், தயாளனே முன்னின்று நல்லசிவத்தை முதல்வராக்கினார். அதனாலேயே, நல்லசிவம் இறுதிவரை தயாளனைப் பெரிதும் மதித்து வந்தார்.
நல்லசிவத்தின் மறைவுக்குப் பிறகு, அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. தயாளன்தான் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோது, ஒரு சட்டமன்ற உறுப்பினர் துரைராசனின் பெயரை முன்மொழிந்தார்.
கட்சியின் மூத்த உறுப்பினர்கள் துரைராசனைப் போட்டியிலிருந்து விலகும்படி கேட்டுக் கொண்டும் துரைராசன் விலக மறுத்ததால், வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பில் துரைராசன் வெற்றி பெற்று விட்டான்.
துரைராசன் முன்பே திட்டமிட்டுப் பல சட்டமன்ற உறுப்பினர்களிடம் தனித் தனியே பேசி, தனக்கு ஆதரவு திரட்டி இருக்கிறான் என்பது மூத்த தலைவர்களுக்கு அப்புறம்தான் புரிந்தது.
துரைராசன் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை தயாளன் இயல்பாக எடுத்துக் கொண்டு, துரைராசனுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
தன் அமைச்சரவையில் ஒரு அமைச்சராக இருக்கச் சொல்லி, ஒரு மரியாதைக்காகக் கூட, துரைராசன் தயாளனைக் கேட்கவில்லை.
தயாளன் ஒதுங்கி இருந்தார்.
அடுத்த சில மாதங்களில் கட்சியைத் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்ட துரைராசன், திடீரென்று ஒருநாள், எந்தவொரு முகாந்தரமும் இல்லாமல், தயாளனைக் கட்சியிலிருந்து நீக்கி விட்டான்.
துரைராசனுக்கு நெருக்கமாக இருந்த ஒரு மூத்த தலைவர், "தம்பி! தயாளன் மக்கள்கிட்ட செல்வாக்குப் பெற்றவர். அவருக்குக் கிடைக்க வேண்டிய முதல்வர் பதவி அவருக்குக் கிடைக்கலைங்கறதாலே, ஏற்கெனவே மக்களுக்கு அவர் மேல அனுதாபம் இருக்கு. ஆனா, அவர் அமைதியா ஒதுங்கி இருக்காரு. இது அவர் வளர்த்த கட்சி. கட்சியை விட்டு அவரை நீக்கினா, அவர் அதை எளிதா எடுத்துக்க மாட்டாரு. அவர் கோபம் என்ன விளைவுகளை ஏற்படுத்த முடியும்னு சொல்ல முடியாது. இது வேண்டாம்" என்று துரைராசனை எச்சரித்தார்.
ஆனால், துரைராசன் அதைச் செவிமடுக்கவில்லை.
தயாளனுக்கு வயதாகி விட்டதால், கட்சியிலிருந்து நீக்கப்பட்டதும், அவர் அரசியலிலிருந்து ஓய்வு பெற்று விடுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர்.
ஆனால், தயாளன் புதிதாக ஒரு கட்சியைத் துவங்கினார். மக்களிடையே அவருக்கு அனுதாபம் இருந்ததால், புதிதாகத் துவக்கப்பட்ட அவர் கட்சி மக்கள் ஆதரவு பெற்று வேகமாக வளர்ந்தது.
சில மாதங்கள் கழித்து நடந்த ஒரு இடைத் தேர்தலில், தயாளன் கட்சி பெரிய வெற்றி பெற்றதுடன், துரைராசனின் கட்சி மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டு, டெபாசிட் இழந்தது.
இதனால், ஆளும் கட்சிக்குள் ஒரு போராட்டம் வெடிக்க ஆரம்பித்தது. துரைராசன் பதவி விலக வேண்டும் என்று குரல்கள் எழுந்து வலுவடையத் தொடங்கின.
குறள் 900:
இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.
No comments:
Post a Comment