அதிகாரம் 40 - கல்வி

திருக்குறள் 
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 40
கல்வி

391. அதிகப் பிரசங்கி!

"ஏம்ப்பா மெஷின் செட் அப் பண்றதுன்னா என்னன்னு தெரியுமா உனக்கு?" என்றான் ப்ரொடக்‌ஷன் எக்சிக்யூடிவ் சுதாகர்.

"தெரியும் சார்!" என்றான் மணி அமைதியாக.

"நீ இங்க ஒரு ட்ரெயினி. அது தெரியுமா உனக்கு?"

மணி பதில் சொல்லவில்லை.

"உனக்கு ஏதாவது தெரியலேன்னா எங்கிட்ட கேட்டுக்கணும். நீயா அதிகப் பிரசங்கித்தனமா எதுவும் செய்யக் கூடாது."

"நான் எதுவும் செய்யல சார். புது பேட்ச் போடறப்ப ஏன் மெஷினை மறுபடி செட் அப் பண்ணலேன்னு ஆபரேட்டர்கிட்ட கேட்டேன். அவ்வளவுதான்!" என்றான் மணி. 

"அதைத்தான் அதிகப் பிரசங்கித்தனம்னு சொன்னேன். உனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா எங்கிட்ட கேட்டுக்க. மெஷின் ஆபரேட்டர்கிட்ட போய்ப் பேசறதெல்லாம் வேண்டாம்."

மணி மௌனமாக அங்கிருந்து சென்றான்.

"என்ன நீலகண்டன்?" என்றார் ப்ரொடக்‌ஷன் மானேஜர் மூர்த்தி, தயக்கத்துடன் தன் முன் வந்து நின்ற மெஷின் ஆபரேட்டர் நீலகண்டனிடம்.

"சார்! ஒரு விஷயம். நீங்க தப்பா நினைச்சுக்கக் கூடாது!" என்றான் நீலகண்டன்.

"சொல்லு" என்றார் மூர்த்தி.

"புதுசா ஒரு இன்ஜினீயர் வந்திருக்கார் இல்ல?"

"ஆமாம் மணின்னு ஒரு பையன், ட்ரெயினியாப் போட்டிருக்கோம் அவனை. ஏன் அவன் ஏதாவது பிரச்னை பண்றானா?"

"அதெல்லாம் இல்லை சார். அவரு நேத்திக்கு எங்கிட்ட வந்து புது பேட்ச் போடறப்ப ஏன் மெஷினை செட் அப் பண்ணலேன்னு கேட்டாரு."

"ஏன் நீ செட் அப் பண்ணலியா?"  

"சார்! ப்ரொடக்‌ஷன் எக்சிக்யூடிவ் சொல்றபடிதானே சார் நான் செய்ய முடியும்? முன்னெல்லாம் ஒவ்வொரு பேட்ச்சுக்கும் மெஷின் செட் அப் பண்ணிக்கிட்டிருந்தோம். இந்த ப்ரொடக்‌ஷன் எக்சிக்யூடிவ் வந்தப்பறம், 'ஒவ்வொரு பேட்ச்சுக்கும் மெஷினை செட் அப் பண்ணினா டைம் வேஸ்ட் ஆகும். மாசத்துக்கு ஒரு தடவை செட் அப் பண்ணினா போதும்னு சொன்னாரு. அதனால அப்படித்தான் செஞ்சுக்கிட்டிருக்கோம்."

"சரி. இதை ஏன் எங்கிட்ட வந்து சொல்ற?"

"கொஞ்ச நாளா, குவாலிட்டி கன்ட்ரோல்லேந்து ரீவொர்க் பண்றதுக்காக வர பீஸ்களோட எண்ணிக்கை அதிகமா இருக்கு. ஒருவேளை மெஷின் செட் அப் பண்ணாததாலதான் இந்தப் பிரச்னையோன்னு எனக்கு ஒரு சந்தேகம். புது இன்ஜினியர் வந்து ஏன் செட் அப் பண்ணலேன்னு கேட்டதும் என் சந்தேகம் சரியாயிருக்குமோன்னு தோணிச்சு. ப்ரொடக்‌ஷன் எக்சிகியூடிவ்கிட்ட சொன்னா அவர் காதில போட்டுப்பாரான்னு தெரியல. அதான் உங்ககிட்ட வந்து சொன்னேன்" என்றான் நீலகண்டன்.

"சரி, போ. நான் பாத்துக்கறேன்" என்று நீலகண்டனை அனுப்பி வைத்தார் மூர்த்தி.

ப்ரொடக்‌ஷன் மானேஜர் அழைக்கிறார் என்றதும் சற்று பயந்து கொண்டேதான் அவர் அறைக்குச் சென்றான் மணி.

"நீ எந்த இன்ஜினியரிங் காலேஜ்ல படிச்சே?" என்றுதான் முதலில் கேட்டார் மூர்த்தி. 

மணி தான் படித்த கல்லூரியின் பெயரைச் சொன்னதும், "அது அவ்வளவு நல்ல காலேஜ் இல்லியே?" என்ற மூர்த்தி, சில வினாடிகள் கழித்து, "ஆனாலும் நீ நல்லாத்தான் படிச்சிருக்க போலருக்கு!" என்றார். 

"சார்!" என்றான் மணி எதுவும் புரியாமல். 

"ஒவ்வொரு தடவை புது பேட்ச் போடறப்பவும் மெஷினை செட் அப் பண்ணணும்னு நீ சொன்னது சரிதான். ஆனா உனக்கு இதை யார் சொன்னாங்க?"

"சார்! ப்ரொடக்‌ஷன் மேனுவல்ல போட்டிருக்கே சார்!"

"எனக்குத் தெரிஞ்சு நம்ப கம்பெனியில வேலைக்கு சேந்தவங்கள்ள, மேனுவலைப் படிச்ச ஒரே ஆளு நீதான்! நான் கூட மேனுவலை சரியாப் படிச்சதில்லை. நான் ப்ரொடக்‌ஷன் எக்சிக்யூடிவ்கிட்ட பேசறேன். நீ இதைக் குறிப்பிட்டுச் சொன்னதுக்கு உன்னைப் பாராட்டத்தான் கூப்பிட்டேன். வெல் டன்!" என்றார் மூர்த்தி.  

குறள் 391:
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

பொருள்:
கற்க வேண்டிய விஷயங்களைப் பிழையில்லாமல் கற்க வேண்டும். அதற்குப் பிறகு, தான் கற்ற கல்விக்கு ஏற்றபடி நடந்து கொள்ள வேண்டும்.

இந்தக் கதையின் காணோளி வடிவம் இதோ:


392. முதியவரின் கணக்கு

"இந்த சனியன் பிடிச்ச கணக்கு மண்டையில ஏறலேன்னுதான் ப்ளஸ் டூ-விலேயே கணக்குக்கு முழுக்குப் போட்டுட்டு காமர்ஸ் க்ரூப்புக்கு மாறினேன். இப்ப வேலைக்கு அப்ளை பண்ணினா, ஆப்டிட்யூட் டெஸ்ட்னு சொல்லி மறுபடி கணக்குப் பரீட்சை வைக்கறாங்க! இந்தக் கொடுமையை எங்கே போய்ச் சொல்ல?" என்று சலித்துக் கொண்டான் சதீஷ்.

"வேலைக்குப் போறதுக்கு மட்டும் இல்லடா, மேல்படிப்பு படிக்கக் கூட ஆப்டிட்யூட் டெஸ்ட்ல கணக்கு இருக்கு. வெளிநாட்டில படிக்கக் கூட ஸாட், ஜி ஆர் ஈ, ஜி மேட்ன்னு எல்லாத்திலேயும் கணக்குதான். ஏன் இதை யாரும் எதிர்க்கலேன்னு தெரியல!" என்றான் சுந்தர்.

"உங்களுக்கு கணக்கு பிரச்னைன்னா, எனக்கு இங்கிலீஷ் பிரச்னை. எல்லா ஆப்டிட்யுட் டெஸ்ட்லேயும் இங்கிலீஷ் இருக்கே! ஆங்கிலேயர்கிட்டேந்து விடுதலை வாங்கினாலும், இன்னும் நாம ஆங்கிலத்துக்கு அடிமையாத்தான் இருக்கோம்!" என்றான் மூர்த்தி.

கல்லூரி முடிந்து மின்சார ரயிலில் வந்து கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு முதியவர் சிரித்தபடியே, "ஏம்ப்பா, ஆப்டிட்யூட் டெஸ்ட்ல ஆங்கிலத்துக்கு பதிலா தமிழ் இருந்தா உனக்கு சுலபமா இருக்குமா?" என்றார்.

பதில் சொல்ல மூர்த்தி சற்று தயங்கியபோது, சுந்தர் முதியவரைப் பார்த்து, "ஏன் சார்! எல்கேஜியிலேந்து இன்ஜினியரிங் வரை எத்தனையோ சப்ஜெக்ட் படிச்சு, எத்தனையோ பரீட்சை எழுதியாச்சு. மறுபடியும் இங்கிலீஷ்லேயும், கணக்கிலேயும் எதுக்கு சார் பரீட்சை?" என்றான்.

"எல்லாருக்கும் அடிப்படையாத் தெரிஞ்சிருக்க வேண்டிய விஷயங்கள் இரண்டு. ஒண்ணு மொழி. பேசிப் பழக, புரிஞ்சுக்க, விஷயங்களை சொல்ல, மொழி அறிவு வேணும். கொடுக்கல் வாங்கலுக்கு கணக்கு வேணும். படிப்பறிவு இல்லாம தெருவில காய்கறி விக்கறவங்க கூட, ஒரு கிலோவுக்கு இவ்வளவு விலைன்னு வச்சு அதிலேந்து கால் கிலோ, அரை கிலோவக்கு எவ்வளவுன்னு கணக்குப் பண்ணி, நாம கொடுக்கற நூறு ரூபாய் அம்பது ரூபாய்க்கு விலை போக மீதி எவ்வளவுன்னு மனசிலே கணக்குப் போட்டு மீதி சில்லறை கொடுக்கறாங்க. பேரம் பேசறப்ப, இந்த விலைக்கு எத்தனை லாபம் வரும் அல்லது நஷ்டம் வரும்னு கூட மனசில கணக்குப் போட்டுப்பாங்க!"

"அது சரி சார். எப்பவோ படிச்சதையெல்லாம் மறுபடி படிச்சு பரீட்சை எழுதச் சொல்றது கொடுமை இல்லையா?"

"எனக்குத் தெரிஞ்சவரை, ஆப்டிட்யூட் டெஸ்ட்ல கேக்கற விஷயங்கள் அடிப்படையா நாம எப்பவும் தெரிஞ்சு வச்சுக்க வேண்டிய விஷயங்கள்தான்- சராசரி, சதவீதம், காலம், தூரம், வடிவங்கள், கோணங்கள், பரப்பளவு, கொள்ளளவு மாதிரி. சில பரீட்சைகள்ள சில கடினமான தலைப்புக்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம். ஆனா, அடிப்படையில் ஆப்டிட்யூட் டெஸ்ட்ல கணித அறிவும், ஆங்கில அறிவும் சோதிக்கப்படறதுக்குக் காரணம், அவை உலக வாழ்க்கைக்குத் தேவைப்படுகிற விஷயங்கள் என்பதாலதான். இந்த ஆட்டிட்யூடை நீங்க உருவாக்கிக்கிட்டா, ஆப்டிட்யூட் டெஸ்ட்டை சுலபமா அணுக முடியும்!" என்றார் முதியவர்.

இவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த இன்னொருவர் சிரித்தபடியே, "ஸோ, ஆப்டிட்யூட்  இஸ் ஆல் அபௌட் ஆட்டிட்யூட்!" என்று முதியவர் சொன்னதை ஆங்கிலத்தில் சொல்லித் தன் ஆங்கிலப் புலமையை வெளிக்காட்டினார்.

சதீஷ் முதியவரை வியப்புடன் பார்த்து, "சார்! நீங்க ஆப்டிட்யூட் டெஸ்ட் எழுதி இருக்கீங்களா?" என்றான்.

"எழுதல. ஆனா என் பேரன் ஜி ஆர் இ பரீட்சைக்குத் தயார் பண்ணிக்கறப்ப அவனுக்குக் கொஞ்சம் உதவி செஞ்சேன்!" என்றார் பெரியவர் சிரித்தபடி.

"உதவி செஞ்சீங்களா? எப்படி?"

"எண்களைப் புரிஞ்சுக்கிட்டா கணக்கு சுலபமா இருக்கும், ஒரு வாக்கியத்திலேயோ, பாராவிலேயோ முக்கியமான வார்த்தைகள் எதுன்னு கண்டுபிடிக்க முடிஞ்சா, ஆங்கிலம் சுலபமா  இருக்கும்னு அவனுக்குப் புரிய வச்சேன்."

"எப்படி சார்?"

"உதாரணமா, ஒரு கணக்கு. 'ஒரு பண்ணையில பல மிருகங்கள் இருக்கு. அவற்றில் மூன்றில் ஒரு பங்கு மாடுகள், நாலில் ஒரு பங்கு' ஆடுகள் ன்னு கொடுத்திருந்தது. இன்னும் சில விவரங்கள் கொடுத்து மொத்த மிருகங்களின் எண்ணிக்கை எவ்வளவுன்னு கேட்டிருந்தாங்க. என் பேரன் x/3,  x/4ன்னு மண்டையை உடைச்சுக்கிட்டிருந்தான். மொத்த மிருகங்களோட எண்ணிக்கை 3, 4 ஆகிய ரெண்டாலயும் வகுபடணும், அதனால 12ஆல வகுபடணும்னு சொன்னேன். இதுதானே எல் சி எம் என்பதோட அடிப்படை? ஆன்ஸர் சாய்ஸ்ல, 12ஆல  வகுபடற எண்கள் ரெண்டுதான் இருந்தது. அந்த ரெண்டுல ஒண்ணுதான் விடைன்னு தெரிஞ்சப்புறம், எது சரியான விடைன்னு சில விநாடிகள்ள கண்டு பிடிச்சுட்டான். அவனுக்கு ஒரே உற்சாகம்."

"சார்! நீங்க என்ன படிச்சிருக்கீங்க?"

"நான் அதிகம் படிக்கல தம்பி. ஆனா திருக்குறள் மட்டும் ஓரளவு படிச்சிருக்கேன்" என்றார் பெரியவர்.

"ஏன் சார், திருக்குறள்ள எல்லாம் இருக்குங்கறாங்களே, ஆப்டிட்யூட் டெஸ்ட் பத்தி இருக்கா?" என்றான் மூர்த்தி, சற்றுக் கேலியாக.

"என் ஸ்டேஷன் வரப்போகுது. நான் இறங்கணும்" என்று எழுந்தார் முதியவர்.

"பேசிக்கிட்டே வந்ததிலேயே எந்த ஸ்டேஷன் போச்சுன்னே கவனிக்கலியே!" என்றான் சுந்தர்.

"நானும் கவனிக்கலை. நான் இந்த ஊருக்குப் புதுசு. நான் இறங்க வேண்டியது நான் ஏறின ஸ்டேஷனிலேந்து ஏழாவது ஸ்டேஷன்னு தெரியும். எண்ணிக்கிட்டே வந்தேன். ஆறு ஸ்டேஷன் தாண்டியாச்சு, வரப்போறது ஏழாவது. அடுத்தது சேட்பட்தானே சார்?" என்று பக்கத்தில் இருந்தவரிடம் கேட்டார் முதியவர். அவர் ஆமாம் என்று தலையாட்டினார்.

"பெரியவரை எப்படி மடக்கிட்டேன் பாத்தியா, நான் கேட்ட கேள்விக்கு அவர் கிட்ட பதில் இல்லை" என்று மூர்த்தி சதீஷிடம் மெதுவாகச் சொல்லிக் கொண்டிருந்தபோதே, கதவுக்கருகிலிருந்து முதியவர் சற்று உரத்த குரலில் சொன்னார். "தம்பி! ஆப்டிட்யூட் டெஸ்ட் பத்தி திருவள்ளுவர் சொல்லி இருக்கார். கல்வி அதிகாரத்தைப் பாரு!" என்றார். அவர் சொல்லி முடிப்பதற்கும் ரயில் நிற்பதற்கும் சரியாக இருந்தது.

'பெரியவர் பதில் சொல்றதைக் கூட ரயில் நிக்கற நேரத்தைக் கணக்குப் போட்டுத்தான் செஞ்சிருக்காரு' என்று மனதுக்குள் வியந்து கொண்டான் மூர்த்தி.

குறள் 392:
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு

பொருள்:
எண், எழுத்து என்று அழைக்கப்படும் இரு கலைகளும், இவ்வுலகில் வாழும் அனைவருக்கும் இரு கண்களைப் போல் இன்றியமையாதவை.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


393. கோவிலில் கேட்ட கதை

"சார் போஸ்ட்!" 

கடிதத்தை வீட்டுக்குள் போட்டு விட்டு சைக்கிளில் விரைந்து விட்டார் தபால்காரர்.

உள்ளிருந்து வந்த வெங்கடாசலம் கடிதத்தை எடுத்துப் பார்த்தார். இன்லாண்ட் கடிதம். அநேகமாக மகனிடமிருந்து வந்திருக்கலாம். 

வெங்கடாசலம் தன்னைக் கடிதத்தைப் பிரித்துப் படிக்கச் சொல்வார் என்று தபால்காரருக்குத் தெரியும். 

கார்டு என்றால் சீக்கிரம் படித்துச் சொல்லி விட்டுப் போய் விடலாம், இன்லாண்ட் கடிதத்தைப் படிக்க நேரம் ஆகும் என்றுதான் தான் வருவதற்குள் தபால்காரர் கடிதத்தை வீசி விட்டுப் போய் விட்டார் என்பது வெங்கடாசலத்துக்குப் புரிந்தது. 

இப்போது கடிதத்தைப் படித்துக் காட்ட, தெருவில் யாராவது வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டு நிற்க வேண்டும்!

ஒழுங்காகப் பள்ளிக்கூடம் போய் ஐந்தாம் வகுப்பு வரையாவது படித்திருந்தால் படிக்கத் தெரிந்திருக்கும்! 

வெங்கடாசலம் முதல் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது, ஆசிரியர் வெங்கடாசலத்தை அடித்து விட்டார் என்பதால் அவர் தந்தை கோபித்துக் கொண்டு வெங்கடாசலத்தின் படிப்பையே நிறுத்தி விட்டார்.

"உனக்கு எதுக்குடா படிப்பு? நமக்குத்தான் பத்துத் தலைமுறைக்கு உக்காந்து திங்கற அளவுக்கு சொத்து இருக்கே? வாத்திகிட்ட அடி வாங்கிக்கிட்டுப் படிக்கணும்னு உனக்குத் தலையெழுத்தா?" என்று அவர் அப்பா சொன்னது வெங்கடாசலத்துக்கு அப்போது புரியவில்லை. வளர்ந்த பிறகும் புரியவில்லை! வசதியாக இருந்தால் படிப்பு தேவையில்லையா என்ன?

அப்பாவால் நின்று போன படிப்பைத் தொடர வெங்கடாசலம் பிற்காலத்திலும் முயற்சி எதுவும் எடுக்கவில்லை. ஆனால் எதையும் படித்துப் புரிந்து கொள்ள மற்றவர் உதவியை எதிர்பார்க்க வேண்டிய சந்தர்ப்பங்களில், தான் படிக்கவில்லையே என்ற வருத்தம் வெங்கடாசலத்துக்கு ஏற்படும்.

ஒரு படித்த பெண்ணையாவது மணந்து கொண்டிருக்கலாம். ஆனால் கணவனை விட மனைவி அதிகம் படித்திருக்கக் கூடாது என்ற நடைமுறை வழக்கத்தின் அடிப்படையில் அவர் ஒரு படிக்காத பெண்ணைத்தான் மணந்து கொண்டார்.

ஒரு பையன் பிறந்து, அவன் பள்ளிக்குச் சென்று படிக்க ஆரம்பித்ததும்தான் வெங்கடாசலத்துக்குச் சற்று உதவியாக இருந்தது. இப்போது அவனும் படிப்பை முடித்து வெளியூரில் வேலைக்குப் போய் விட்டான். இப்போது அவனிடமிருந்து வரும் கடிதத்தைப் படிக்கக் கூட யாரையாவது எதிர்பார்க்க வேண்டிய நிலைமை!

கோவிலில் யாரோ ஒருவர் ராமாயணக் கதை சொல்கிறார்கள் என்று அதைக் கேட்கப் போனார் வெங்கடாசலம். கையில் ஒரு பேப்பர் கூட வைத்துக் கொள்ளாமல் பல ஸ்லோகங்கள், செய்யுள்களை மனப்பாடமாகச் சொல்லி அற்புதமாக உபன்யாசம் நிகழ்த்தினார் சொற்பொழிவாளர். 

அவர் சொற்பொழிவு சிறப்பாக இருந்தாலும் அவரிடம் ஏதோ ஒன்று உறுத்தலாகப் பட்டது வெங்கடாசலத்துக்கு. உபன்யாசம் முடிந்து அவரை ஒருவர் பாராட்டிப் பேசியபோதுதான் வெங்கடாசலத்துக்குத் தெரிய வந்தது. 

அவர் பார்வை இல்லாதவராம். அதுதான் இரவு நேரத்தில் கூடக் கருப்புக் கண்ணாடி அணிந்து கொண்டே பேசி இருக்கிறார்!

பிறவியிலேயே பார்வை இல்லாத அவர் முதலில் தன் தந்தையிடமும், பிறகு பல ஆசிரியர்களிடமும் செவி வழியாகப் பாடம் கேட்டே பல இலக்கியங்களையும் ஆன்மீக விஷயங்களையும் அறிந்து கொண்டார் என்று அவரைப் பற்றிப் பேசியவர் கூறியபோது வெங்கடாசலத்துக்குக் கண்ணில் நீர் வந்து விட்டது.

'கடவுளே! கண் இல்லாத ஒருத்தர் இத்தனை படிச்சிருக்காரு. நான் ரெண்டு கண் இருந்தும் குருடன் மாதிரி இருந்துட்டேனே!' என்று மௌனமாகப் புலம்பினார் வெங்கடாசலம்.   

குறள் 393:
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.

பொருள்:
கல்வியறிவு பெற்றவரே கண்ணுடையவர். மற்றவர்களுக்குக் கண்கள் இருந்தாலும், அவை முகத்தில் இரு புண்களைப் போன்றதுதான்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

394. ஒரு புதிய அனுபவம்! 

தணிகாசலத்துக்கு அந்த மாநாட்டுக்கு அழைப்பு வந்தபோது அவனுக்கு அது பற்றிப் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை. 

ஒரு கிராமத்துப் பள்ளியில் சரித்திர ஆசிரியராகப் பணி புரிந்து வந்த அவன் இதற்கு முன் சில பயிற்சிகள், மாநாடுகளுக்குப் போயிருக்கிறான். 

அவற்றிலெல்லாம், அரசு அதிகாரிகள் மற்றும் சில பெருந்தலைகள் வந்து மணிக்கணக்கில் பேசி விட்டுப் போவார்கள். மாநாடு எப்போது முடியும் என்று பொறுமையிழந்து காத்திருக்கும் அளவுக்கு அவை சலிப்பூட்டுபவையாகவும், அயர்ச்சியை உண்டாக்குபவையாகவும் இருக்கும்.

ஆனால் இந்த மாநாட்டை சற்று வித்தியாசமான முறையில் அமைத்திருந்தார் மாநாட்டை ஏற்பாடு செய்த மாவட்டக் கல்வி அதிகாரி. 

மாவட்டத்தின் பல பள்ளிகளிலிருந்து வந்திருந்த சரித்திர ஆசிரியர்கள் பாடங்கள், பாடம் நடத்தும் முறைகள், பாடம் நடத்துவதில் ஏற்படும் சவால்கள், மாணவர்களைப் பாடத்தில் ஆர்வம் கொள்ளச் செய்யும் வழிகள் என்று பல்வேறு நடைமுறைத் தலைப்புகளில் தங்களுக்குள் கலந்துரையாடல் செய்து, தங்கள் அனுபவங்கள், பிரச்னைகள் இவற்றைப் பகிர்ந்து கொண்டு, தீர்வுகளையும், ஆலோசனைகளையும் தங்களுக்குள் விவாதிக்கும் வகையில் அந்த மாநாட்டை அவர் வடிவமைத்திருந்தார்.

மாநாட்டின் துவக்கத்தில் மாநாட்டின் வழிமுறை பற்றிக் கல்வி அதிகாரி அரை மணி நேரம் விளக்கி விட்டு மாநாட்டில் பங்கு பெற்ற ஆசிரியர்களை 15 நபர்கள் கொண்ட குழுக்களாகப் பிரித்தார். 

ஒவ்வொரு குழுவும் என்னென்ன தலைப்புகளில் எவ்விதங்களில் விவாதங்கள், கலந்துரையாடல்கள், மாதிரி வகுப்புகள் போன்ற பல்வேறு அம்சங்களை, குறிப்பிடப்பட்ட கால அளவைப் பின்பற்றி, கொடுக்கப்பட்ட வழிகாட்டல்களின்படி நடத்த வேண்டும் என்பதை அவர் தன் துவக்க உரையில் விளக்கி இருந்தார்.

ன் குழு உறுப்பினர்களைப் பார்த்ததும் தணிகாசலத்துக்கு முதலில் சற்று பயம் ஏற்பட்டது. அவன் குழுவில் பெரும்பாலானோர் அவனை விட  புத்திசாலிகளாகவும், திறமை உள்ளவர்களாகவும், தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் இருப்பதாகத் தோன்றியது. 

தன்னை இவர்கள் மதிப்பார்களா, இவர்கள் முன் தன்னால் பேச முடியுமா என்ற ஐயம் அவனுக்கு எழுந்தது. அதிலும் அவன் குழுவில் ஆங்கிலப் புலமை கொண்டவர்கள் இருந்தால் அவர்கள் தட்டுத் தடுமாறி ஆங்கிலம் பேசும் தன்னை அடியோடு மதிக்க மாட்டார்கள் என்று அவன் நினைத்தான்.

முதல் நாள் முற்பகலில் நடந்த விவாதத்தின்போது தணிகாசலம் சற்று ஒதுங்கியே இருந்தான். அவனைப் போன்று இன்னும் இரண்டு மூன்று பேரும் அதிகத் தயக்கம் காட்டினர். தான் பயந்தது போல்தான் நடக்கும் என்று அவனுக்குத் தோன்றியது.

மதிய உணவு இடைவேளையின்போது கூட தணிகாசலம் தன் குழு உறுப்பினர்களைத் தவிர்த்து விட்டு, மற்ற குழுக்களில் இருந்த அவனைப் போன்ற இயல்புடைய சிலரிடம் மட்டுமே பேசினான்.

ஆனால், பிற்பகலில் இறுக்கம் தளர்ந்து குழு உறுப்பினரிடையே சற்று நெருக்கம் ஏற்படத் துவங்கியது. தன்னை மதிக்க மாட்டார்கள் என்று அவனால் கருதப்பட்ட சிலர் அவனைப் பார்த்துப் புன்னகை செய்து அவனிடம் நட்பாகப் பழக ஆரம்பித்தனர். 

ஆயினும் ஓரிருவர் இன்னும் இறுக்கமாகவே இருந்ததாகத் தோன்றியது. அதுவும் குறிப்பாக, சற்று நவீனப் போக்கு கொண்டவள் போல் தோன்றிய சுதா என்ற பெண் அவன் பக்கமே திரும்பாமல் பேசிக் கொண்டிருந்தாள்.

பாடம் நடத்தும் உத்திகள் பற்றி ஒவ்வொருவராகப் பகிர்ந்து கொண்டபோது, தான் பேசியதை அனைவரும் கூர்ந்து கவனித்ததாகத் தணிகாசலத்துக்குத் தோன்றியது. சுதா கூட அவன் பேசுவதை கவனித்தாள். "கொஞ்சம் இரைஞ்சு பேசுங்க. காதில சரியா விழலை" என்று கூடச் சொன்னாள்.

அவன் பேசி முடித்ததும், சிலர் அவன் பாடம் நடத்தும் உத்திகளை வெளிப்படையாகப் பாராட்டினர்.

தன்னை மதிக்க மாட்டார் என்று அவன் நினைத்த இன்னொரு நபர், "அது சரி சார். உங்க முறைப்படி பாடம் நடத்தினா, பையன்களுக்குப் பாடம் கேக்க சுவாரசியமாத்தான் இருக்கும். ஆனா, பரீட்சை எழுத இல்ல அவங்களை நாம தயார் செய்ய வேண்டி இருக்கு? உங்க முறை அதுக்கு உதவுமா?" என்றார். 

அவர் கேள்வியை ஆமோதித்துப் பலரும் தலையாட்டினார்.

"சார்! பையன்களுக்கு சப்ஜெக்ட்ல ஆர்வம் வந்தா, அவங்க பாடத்தைப் படிப்பாங்க. பரீட்சை எழுதவும் தங்களைத் தயார் செஞ்சுப்பாங்க. நாமதான் கேள்விகள் எல்லாம் கொடுத்து பதில் எழுதப் பயிற்சி கொடுக்கறமே!" என்றான் தணிகாசலம்.

அன்றைய இறுதி நிகழ்ச்சியாக, வகுப்பறையில் தான் எப்படிப் பாடம் நடத்துகிறோம் என்பதை ஒவ்வொருவரும் பத்து நிமிடம் நடத்திக் காட்டினார். தணிகாசலம் பாடம் நடத்திய விதம் அனைவரின் பாராட்டையும் பெற்றது.

"நீங்க முதல்ல உங்க பாடம் நடத்தற முறையைச் சொன்னபோது அது சரியா வருமான்னு எனக்குச் சந்தேகம் இருந்தது. இப்ப நீங்க நடத்திக் காட்டினப்பறம்தான் உங்க முறை எனக்குப் புரிஞ்சது. நானும் இதைப் பின்பற்றிப் பார்க்கப் போறேன்" என்றாள் சுதா.

"தாங்க்ஸ் மேடம்" என்றான் தணிகாசலம், பொங்கி வந்த மகிழ்ச்சியுடனும், நன்றி உணர்வுடனும்.

"மேடம்லாம் வேண்டாம். நான் உங்களை விட வயசில சின்னவளாத்தான்  இருப்பேன். என்னைக் கிழவியா  ஆக்கிடாதீங்க!" என்று சுதா சொன்னதும் அனைவரும் சிரித்தனர்.

ரண்டாம் நாள் காலை அவர்கள் கூடியபோது, நெருங்கிய நண்பர்கள் கூடிப் பேசுவது போன்ற உணர்வுடன் இருந்தனர். முதல் நாள் இருந்த தயக்கம் போய், அன்றைய விவாதங்களில் அனைவரும் உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் கலந்து கொண்டனர். 

மாலை நிகழ்ச்சி முடிந்தபோது, அன்றைய நாள் மிக வேகமாக ஓடி விட்டது போல் தோன்றியது.

கல்வி அதிகாரியின் சுருக்கமான முடிவுரைக்குப் பிறகு அனைவரும் பிரியும் நேரம் வந்தது.

"இதுக்கு முன்னாடி சில மாநாடுகளுக்குப் போயிருக்கேன். ஆனா இந்த முறை இருந்த மாதிரி இவ்வளவு சந்தோஷமும் திருப்தியும் இருந்ததில்லை" என்றான் தணிகாசலம்.

"ஆமாம். இதுவரைக்கும் நாம கலந்துக்கிட்ட மாநாடுகளில, அதிகாரிகளோ, வேற பெரிய மனுஷங்களோ பேசறதை பொறுமையாக் கேட்டுக்கிட்டு எப்படா விடுதலை கிடைக்கும்னு உட்கார்ந்திருந்தோம். இப்ப நாம நம்ப சப்ஜெக்டைப் பத்திப் பேசி நிறைய விஷயங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கிட்டது ரொம்ப திருப்தியான அனுபவமா இருந்ததில ஆச்சரியமில்லையே!" என்றார் இன்னொருவர்.

"ரெண்டு நாள் இவ்வளவு சுவாரசியமா பல பயனுள்ள விஷயங்களைப்  பேசினதில நமக்குள்ள ஒரு நெருக்கம் வந்துடுச்சு. இப்ப உங்க எல்லாரையும் பிரியணும்னு நினைச்சா வருத்தமா இருக்கு" என்றாள் சுதா.

"நாம எல்லாரும் எல்லாரோட முகவரிகளையும் வாங்கி வச்சுப்போம். ஒவ்வொத்தரும் நம்ம முகவரியை ஒரு பேப்பர்ல எழுதி அதை வரிசையா எல்லாருக்கும் சர்க்குலேட் பண்ணுவோம். அதை மத்தவங்க எல்லாரும் எழுதிக்கட்டும். யார் வீட்டிலேயாவது ஃபோன் இருந்தா, அவங்க ஃபோன் நம்பரையும் எழுதுங்க. வாய்ப்புக் கிடைச்சா மறுபடி சந்திக்கலாம்" என்றான் தணிகாசலம்.

அனைவரும் அவன் சொன்னதை ஆமோதிப்பது போல் தங்கள் முகவரியை எழுத பேப்பர்களையும் பேனாக்களையும் எடுத்தனர்.

குறள் 394:
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்

பொருள்:
மகிழ்ச்சியுடன் ஒன்று கூடி, வருத்தத்துடன் பிரிதல் புலவர்களின் இயல்பான செயலாகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

395. ஆசிரியர்!

"அக்கவுன்டன்ட் சார்! முதலாளி உங்களைக் கூப்பிடறாரு" என்று பியூன் வந்து அழைத்ததும் சற்று பயத்துடனேயே முதலாளியின் அறைக்குச் சென்றார் சச்சிதானந்தம். அவர் முதலாளி மோதிலால் கோபத்துக்குப் பெயர் போனவர்.

அறைக்குள் சென்றதும், "உக்காருங்க சச்சிதானந்தம்!" என்றார் மோதிலால். 

சச்சிதானந்தத்துக்கு வியப்பும் கவலையும் ஒருங்கே ஏற்பட்டன. மோதிலால் தன் ஊழியர்களை உட்கார வைத்துப் பேசும் வழக்கம் கொண்டவர் அல்ல. 

'ஒருவேளை வேலையை விட்டு அனுப்பப் போகிறாரோ! அதற்குத்தான் உட்கார வைத்துப் பக்குவமாகப் பேசப் போகிறாரோ!'

"சொல்லுங்க சார்!" என்றார் சச்சிதானந்தம் நின்று கொண்டே.

"அட! உக்காருங்க, சொல்றேன்."

சச்சிதானந்தம் சட்டென்று உட்கார்ந்து கொண்டார்.

"எனக்கு நீங்க அக்கவுன்ட்ஸ் டியூஷன் சொல்லிக் கொடுக்கணும்!" என்றார் மோதிலால்.

"என்ன சார் சொல்றீங்க?'  

"கவலைப் படாதீங்க. நான் அக்கவுட்ஸ் கத்துக்கிட்டு உங்களை வேலையை விட்டு அனுப்பிட மாட்டேன்! எனக்கு வியாபாரம் தெரியுமே தவிர அக்கவுன்ட்ஸ் எல்லாம் தெரியாது. எங்கப்பா காலத்திலெல்லாம் பற்று வரவுன்னு ஒரே நோட்டில ரெண்டு கட்டத்தில மொத்தக் கணக்கையும் எழுதிடுவாங்க. அதைத்தான் அவரு எனக்கு சொல்லிக் கொடுத்தாரு. இப்ப டெபிட்ங்கறாங்க, கிரெடிட்ங்கறாங்க. கேஷ் பேலன்ஸ் டெபிட்ல இருக்கணும்கறாங்க. கடன் வாங்கினா அதை கிரேடிட்ல வைக்கணும்கறாங்க! எனக்கு ஒண்ணும் புரியல. ஆடிட்டர் எங்கிட்ட பேசறப்ப அவரு சொல்றதுல பாதி எனக்குப் புரியறதில்ல. சும்மா தலையாட்டறேன்..."

"சார்! அக்கவுன்ட்ஸ் விவரங்களையெல்லாம் நான் பாத்துக்கறேனே சார்!"

"கரெக்ட்தான். உங்க மேல நம்பிக்கை இல்லாமயோ, உங்ககிட்ட குத்தம் கண்டுபிடிக்ககறத்துக்காகவோ நான் அக்கவுன்ட்ஸ் கத்துக்கணும்னு நினைக்கல. ஒரு ஆர்வத்தாலதான் கேட்கிறேன். காலையில எட்டு மணிக்கு என் வீட்டுக்கு வந்து ஒரு மணி நேரம் சொல்லிக் கொடுங்க. நீங்க வீட்டிலேந்து சீக்கிரம் கிளம்பறதால என் வீட்டிலேயே டிஃபன் சாப்பிட்டுடலாம். அப்படியே நேரா ஆஃபீசுக்குப் போயிடுங்க. என் வீட்டுக்கு வரத்துக்கும், அங்கேந்து ஆஃபீஸ் போறதுக்கும் ஆட்டோ சார்ஜ் கொடுத்துடறேன். அதைத் தவிர மாசம் ஐயாயிரம் ரூபா டியூஷன் ஃபீஸ் கொடுத்துடறேன். ஒரு ஆறு மாசம் சொல்லிக் கொடுத்தா போதும்னு நினைக்கறேன். புத்தகம் ஏதாவது வேணும்னா சொல்லுங்க. வாங்கிக் கொடுத்துடறேன். நீங்க அதை வச்சே சொல்லிக் கொடுக்கலாம்" என்றார் மோதிலால்.

டியூஷன் துவங்கி நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் டியூஷன் முடிந்து சச்சிதானந்தம் கிளம்பிப் போனதும் மோதிலாலின் மனைவி அவரிடம் கேட்டாள்.

"ஏங்க, அவர் உங்ககிட்ட வேலை செய்யறவரு. ஆனா அவரு வந்தா நீங்க உங்க உடம்பைத் தூக்க முடியாம தூக்கிக்கிட்டு எழுந்து நின்னு மரியாதை காட்டறீங்க. அவரு கிளம்பறப்ப வாசல் வரைக்கும் போய் அவரைக் கைகூப்பி வழி அனுப்பிட்டு வரீங்க. என்னதான் அவரு உங்களுக்கு டியூஷன் சொல்லிக் கொடுக்கறார்னாலும், அதுக்கு நீங்க பணம் கொடுக்கறீங்க. இங்கேயும் அவர் உங்ககிட்ட சம்பளம் வாங்கிக்கிட்டு வேலை செய்யறவருதான். அவருக்கு நீங்க இவ்வளவு மரியாதை கொடுக்கறது கொஞ்சம் அதிகப்படியா இருக்கு!"

"ஆபீஸ்ல அவர் எங்கிட்ட சம்பளம் வாங்கறவருதான். என் முன்னால நின்னுக்கிட்டுதான் பேசுவாரு. இங்கேயும் அவர் எங்கிட்ட சம்பளம் வாங்கினாலும் அவர் எனக்கு வித்தை சொல்லிக் கொடுக்கறாரு. ஒத்தர் கிட்ட கல்வி கற்கும்போது, கொடுக்கறவன் கிட்ட வாங்கறவன் பணிவா நின்னு வாங்கற மாதிரித்தான் வாங்கணும். அதுதான் முறை. நான் அதிகம் படிக்காட்டாலும் இந்த முறை எனக்குத் தெரியும். அதைத்தான் நான் பின்பற்றறேன்" என்றார் மோதிலால். 

குறள் 395:
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் 
கடையரே கல்லா தவர்.

பொருள்:
செல்வந்தர் முன் வறியவர் போல் கற்றவர் முன் பணிந்து நின்று கல்வி கற்பவரே உயர்ந்தவர். கல்லாதவர் தாழ்ந்தவராகக் கருதப்படுவார்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

396. வற்றிய கிணறு

"ஏண்டா, நாம ரெண்டு பேரும் எம் எஸ் சி படிச்சுட்டு பி ஹெச் டியும் வாங்கிட்டு, இந்த காலேஜுக்கு வேலைக்கு வந்திருக்கோம். ஒரு வழியா படிப்பு முடிஞ்சுதேன்னு ஹாய்யா இருக்கறதை விட்டுட்டு இன்னும் ஏன் எப்பவும் லைப்ரரிலேந்து பாட சம்பந்தமா ஏதாவது புத்தகம் எடுத்து வந்து படிச்சுக்கிட்டே இருக்கே? இந்த வயசில காதல் கதையோ, மர்மக்கதையோ படிச்சாலும் பொருத்தமா இருக்கும்!" என்றான் ரகுராம்.

ரவிகுமார் பதில் சொல்லாமல் சிரித்தான்.

"இன்னொரு பி ஹெச் டி பண்ணப் போறியா என்ன?"

"இல்ல. சும்மாதான் படிக்கறேன். நாம படிச்சதை இன்னும் கொஞ்சம் நல்லாத் தெரிஞ்சுக்கலாமேன்னுதான்" என்றான் ரவிகுமார். 

"கிழிஞ்சுது. அவனவன் ஒரு டிகிரி வாங்கிட்டாலே தன்னை எல்லாம் தெரிஞ்ச மேதைன்னு நினைச்சுக்கறான். நாம பி எஸ் சி, அப்புறம் எம் எஸ் சி அப்புறம் பி ஹெச் டின்னு நம்ப இளமையிலே ஏழெட்டு வருஷத்தைப் படிக்கறதிலேயே கழிச்சுட்டோம். இனிமேயாவது ஜாலியா இருக்க வேண்டாமா?"

"நான் ஒண்ணும் பரீட்சைக்குப் படிக்கிற மாதிரி படிக்கலியே! நாம கல்வி கற்பிக்கிற துறையில இருக்கோம். கொஞ்சமாவது படிச்சுக்கிட்டே இருந்தாதான் நாம படிச்சதை நிலை நிறுத்திக்க முடியும்னு நான் நினைக்கிறேன்" என்றான் ரவிகுமார். 

"என்னவோ போ!" என்றான் ரகுராம்.

குராம் வீட்டில் தண்ணீர்ப் பிரச்னை வந்து விட்டது. மழை பொய்த்ததால் ஏற்பட்ட தண்ணீர்ப் பற்றாக்குறையால் அரசாங்கம் வழங்கி வந்த குழாய்த் தண்ணீர் நின்று போய் விட்டது.

பல நாட்களாகப் பயன்படுத்தாமல் இருந்த கிணற்றைப் பயன்படுத்தலாம் என்று நினைத்தான் ரகுராம். பழைய தண்ணீரை இறைத்து விட்டுக் கிணற்று நீரைப்  பயன்படுத்தலாம் என்று நினைத்துக் கிணறு இறைப்பவர் ஒருவரை அழைத்தான்.

பழைய தண்ணீரை அவர் இறைத்ததும் கிணற்றில் புதிதாக நீர் ஊறவில்லை. கிணற்றுக்குள் இறங்கிப் பார்த்த அந்த மனிதர் மேலே வந்து, "ஏன் சார், கிணத்தை ரொம்ப நாளாப் பயன்படுத்தலியா?" என்றார்.

"ஆமாம். குழாய்த் தண்ணியே எங்களுக்குப் போதும்கறதால கிணத்தைப் பயன்படுத்தல" என்றான் ரகுராமன்.

"அதான்! ஊத்தெல்லாம் அடைபட்டிருக்கு சார்! கிணத்துல தண்ணி எடுத்துக்கிட்டே இருந்தாதான் தண்ணி ஊறிக்கிட்டிருக்கும். நீங்க கிணத்தை அப்படியே போட்டு வச்சதால ஊத்தெல்லாம் மண் அடைச்சு மூடிப் போயிடுச்சு. மறுபடி கொஞ்சம் ஆழம் தோண்டி புது ஊத்துக்கள் திறந்தாதான் தண்ணி வரும்" என்றார் கிணறு இறைப்பவர்.  

ரகுராமுக்கு ஒரு கணம் ரவிகுமாரின் முகம் நினைவில் வந்து போயிற்று.

குறள் 396:
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் 
கற்றனைத் தூறும் அறிவு.

பொருள்:
கிணற்றில் நாம் தோண்டத் தோண்ட  நீர் ஊறும். நாம் கற்கக் கற்க நம் அறிவு வளரும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

397. பாரிசுக்குப் போ!

"என்ன அழகேசா, பாரிஸ்லேந்து எப்ப வந்த?" என்றார் கனகசபை.

"ரெண்டு நாள் ஆச்சு. ரெண்டு நாளும் தூங்கியே கழிச்சுட்டேன். இன்னிக்குத்தான் வெளியே வந்திருக்கேன்" என்றார் அழகேசன்.

"ஆமாம். ஜெட்லாக்னு சொல்லுவாங்களே! நான் திருப்பதியைத் தாண்டி எங்கேயும் போனதில்லை. சொல்லக் கேட்டிருக்கேன்! ஆமாம், பையன் எப்படி இருக்கான் பாரிஸ்ல?"

"அவனுக்கென்ன ஓகோன்னு இருக்கான்!" என்றார் அழகேசன் பெருமிதத்துடன். 

"ஆமாம். அவனுக்கு ஃபிரெஞ்ச் தெரியுமா?"

"தெரியாது. இப்பதான் கொஞ்ச கொஞ்சம் கத்துக்கறான்."

"அப்ப எப்படி சமாளிக்கறான்? அங்கெல்லாம் இங்கிலீஷ் அதிகம் பேச மாட்டாங்களே!" என்றார் கனகசபை.

"நீ பெரிய ஆளுதான் கனகசபை! திருப்பதி தாண்டிப் போனதில்லன்னு சொல்லிக்கிட்டு உலகம் முழுக்க எப்படின்னு தெரிஞ்சு வச்சிருக்கியே!" என்ற அழகேசன், தொடர்ந்து, "அவன் போனது கம்ப்யூட்டர் படிச்சுட்டுத்தானே? அதனால பாஷை தெரியாதது பெரிய பிரச்னை இல்லை" என்றார்.

"உங்க குடும்பத்தில இது ரொம்ப இயல்பு போலருக்கு. அந்தக் காலத்திலேயே உன் தம்பி அமெரிக்கா போய் அங்க செட்டில் ஆயிட்டானே!"

"ஆமாம். அவன் ஏதோ மோட்டார் மெக்கானிசம் படிச்சான். இங்க ஒரு கார் கம்பெனியில வேலை செஞ்சான். அவன் திறமையைப் பாத்துட்டு அவங்களே அவனை அமெரிக்காவுக்கு அனுப்பிச்சாங்க. அதுக்கப்பறம் அவன் அங்கேயே செட்டில் ஆயிட்டான். அவனுக்கும் அமெரிக்கா போறப்ப இங்கிலீஷ் சுத்தமாத் தெரியாது. அவன் தொழில் அறிவுதான் அவனை அமெரிக்காவுக்கு அழைச்சுக்கிட்டுப் போச்சு" என்ற அழகேசன், "இப்பதான் ஞாபகம் வருது. என் பையன் தன் நண்பர்கள் சில பேருக்கு சில பொருட்கள் கொடுத்து அனுப்பி இருக்கான். பேர் வாரியா, யார் யாருக்கு என்னென்ன பொருள்னு ஒரு பேப்பர்ல குறிச்சுக் கொடுத்திருக்கான். இதோ வரேன்" என்று உள்ளே சென்றார்.

சற்று நேரத்தில் கையில் ஒரு காகிதத்துடன் வந்த அழகேசன், அதை கனகசபையிடம் கொடுத்து, "என் பையன் இதைப் படிச்சு சொன்னான். ஆனா நான் சரியா ஞாபகம் வச்சுக்கறதுக்காக நீ ஒரு தடவை படிச்சு சொல்லிடு. நாளைக்கு அவன் நண்பர்கள் வந்தா பொருட்களை மாத்திக் கொடுக்காம சரியாக் கொடுக்கணும் இல்ல?" என்றார் சிரித்தபடி.

"என்ன அழகேசா! பள்ளிக்கூடப் படிப்பு அதிகம் இல்லாட்டாலும் தொழில் படிப்பு படிச்சுட்டு உன் தம்பி அமெரிக்கா போயிட்டான். உன் பையன் கம்ப்யூட்டர் படிப்பு படிச்சுட்டு பாரிஸ்ல வேலை செய்யறான். நீ இன்னும் எழுதப் படிக்கக் கூடத் தெரிஞ்சுக்காம இருக்கியே!" என்றார் கனகசபை சிரித்தபடி. 

குறள் 397:
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.

பொருள்:
கற்றவனுக்கு எந்த நாடும் எந்த ஊரும் தன் சொந்த ஊர் போல்தான் என்று இருக்கும்போது, ஒருவன் இறக்கும்வரை கல்லாமல் இருப்பது ஏன்?

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

398. படிக்காதவன்!

தான் படிக்கவில்லையே என்ற குறை அருளுக்கு எப்போதுமே உண்டு.  

மூன்று தலைமுறைக்கு முன் அவன் பரம்பரையில் வந்தவர்கள் படித்தவர்களாக மட்டுமின்றி அறிஞர்களாகவும் மதிக்கப்பட்டனர்.

ஆனால் அவன் தாத்தா ஏதோ ஒரு காரணத்தால் படிக்காமல் இருந்து விட்டார். அவர் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது அவர் தந்தை இறந்ததும் அவர் தன் படிப்பை நிறுத்தி விட்டார்.

பிறகு, தன் பதினைந்தாம் வயதிலேயே அவர் விவசாயத்தையும், வியாபாரத்தையும் கவனித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டார். 

வியாபாரம் பெருகிச் செல்வம் வளர்ந்ததால் தன் மகன்களையும் அவர் அதிகம் படிக்க வைக்காமல் சிறு வயதிலேயே அவர்களை வியாபாரத்தில் ஈடுபடுத்தி விட்டார். அதனால் அருளின் தந்தையும் ஐந்தாம் வகுப்பைத் தாண்டவில்லை!

'எழுதப் படிக்கவும், கூட்டிக் கழிக்கவும் தெரிந்தால் போதாதா, அதற்கு மேல் படிப்பு எதற்கு?' என்பதுதான் அருளின் தந்தையின் மனப்பான்மையாக இருந்ததால் அருளையும் அவர் அதிகம் படிக்க வைக்கவில்லை.

னால் தன் தந்தை, பாட்டனைப் போல் இல்லாமல், சற்று வளர்ந்ததுமே அருளுக்குக் கல்வியின் அருமை புரிந்தது. தான் படிக்கவில்லையே என்று வருந்திய அருள், நன்கு படித்தவர்கள் குடும்பத்திலிருந்து ஜெயாவைத் திருமணம் செய்து கொண்டான்.

ஜெயா அதிகம் படிக்கவில்லை என்றாலும், அவளுடைய இரு அண்ணன்களும் நன்கு படித்தவர்கள்.

"நான் படிக்காம இருந்துட்டேன். உன் அண்ணன்கள் நிறையப் படிச்சிருக்காங்க. அவங்களோட யோசனை எனக்கு உதவியா இருக்கும்னு நினைக்கிறேன்!" என்று திருமணமான புதிதில் அருள் ஜெயாவிடம் கூறியபோது ஜெயாவுக்குப் பெருமையாக இருந்தது.

ஆயினும், அருள் தான் ஜெயாவிடம் சொன்னபடி செய்யவில்லை!

அவர்கள் பையனைப் பள்ளியில் சேர்க்கும் நேரம் வந்தபோது, அவனை ஜெயாவின் சகோதரர்கள் சிபாரிசு செய்த பள்ளியில் சேர்க்காமல் வேறொரு பள்ளியில் சேர்க்க முடிவு செய்தான் அருள்

"என் அண்ணன்களோட பையங்க அங்கேதான் படிக்கறாங்க. அது ரொம்ப நல்ல ஸ்கூல். அதிலேயே நம்ம பையனையும் சேத்துடுங்க!" என்றாள் ஜெயா.

"எனக்கென்னவோ அந்தப் பள்ளிக்கூடம் பிடிக்கல. அவங்க படிப்பு படிப்புன்னு பையன்களை ரொம்பக் கஷ்டப்படுத்துவங்களாமே!" என்றான் அருள்.

"அது நல்லதுதானே? அப்பதானே நம்ம பையன் நல்லாப் படிப்பான்?" என்றாள் ஜெயா.

"பையன்களை வாட்டி எடுக்கற பள்ளிக்கூடம் நம் பையனுக்கு வேண்டாம்! வேற ஒரு பள்ளிக்கூடம் இருக்கு. அதுவும் நல்ல பள்ளிக்கூடம்தான். ஆனா அவங்க பையன்களைப் போட்டுப் பிழிஞ்செடுக்க மாட்டாங்க!" என்று சொன்ன அருள், தன் பையனைத் தான் விரும்பிய பள்ளியில் சேர்த்தான். 

அதுபோல் தன் சேமிப்பை முதலீடு செய்யும் விஷயத்திலும் ஜெயாவின் சகோதரர்கள் பரிந்துரைத்த நிறுவனப் பங்குகளிலும், பத்திரங்களிலும் முதலீடு செய்யாமல் வங்கி வைப்புகளிலும், அரசாங்கப் பத்திரங்களிலும், வேறு சில நிறுவனங்களின் பங்குகளிலும் முதலீடு செய்தான் அருள். 

"என்னவோ என் அண்ணங்க கிட்ட ஆலோசனை கேட்டு நடக்கப் போறதா முன்ன சொன்னீங்க! இப்ப எந்த விஷயத்திலேயுமே அவங்க சொல்றதைக் கேக்காம உங்க இஷ்டத்துக்குப் பண்றீங்க. என்னவோ போங்க!" என்று குறைப்பட்டுக் கொண்டாள் ஜெயா. 

ருபது வருடங்கள் கடந்து விட்டன. அவர்கள் பையன் பள்ளி இறுதித் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று நல்ல கல்லூரியில் அவன் விரும்பிய படிப்பில் சேர்ந்து விட்டான்.

"நம்ம பையன் நல்ல காலேஜில சேந்துட்டான். உனக்குத் திருப்திதானே?" என்றான் அருள்.

"என் அண்ணங்க சொன்ன பள்ளிக்கூடத்தில் சேக்காம வேற ஒரு பள்ளிக்கூடத்தில நீங்க நம்ம பையனைச் சேத்ததும் நான் கூடக் கவலைப்பட்டேன். ஆனா நீங்க செஞ்சது சரியாத்தான் இருந்திருக்கு!" என்றாள் ஜெயா.

"ஏன், உன் அண்ணங்களோட பையங்களும் நல்லாப் படிச்சு  நல்ல காலேஜிலதான சேந்திருக்காங்க?" என்றான் அருள்.  

"ஆமாம். ஆனா நீங்க சொன்ன மாதிரி அவங்க ஸ்கூல்ல அவங்களைக் கசக்கிப் பிழிஞ்சுட்டாங்க. ஆனா நம்ம பையன் அது மாதிரியெல்லாம் கஷ்டப்படாம, நல்லா படிச்சு நல்ல மார்க் வாங்கிட்டானே!" என்ற ஜெயா, சற்றுத் தயங்கி விட்டு, "எங்க அண்ணங்க செஞ்ச முதலீடுகளை விட நீங்க செஞ்ச முதலீடுகள் அதிக லாபத்தைக் கொடுத்திருக்குன்னு எங்கிட்ட எங்க அண்ணங்க சொன்னாங்க!" என்றாள்.

"அப்படியா?" என்றான் அருள்.

"ஆமாம். அது எப்படிங்க? அதிகம் படிக்காதவரா இருந்தும் நீங்க எல்லாத்தையும் சரியா யோசிச்சு செஞ்சிருக்கீங்க?" 

"ஒரு வேளை போன ஜென்மத்தில் நான் நல்லாப் படிச்சிருக்கலாம். அதுதான் இந்த ஜென்மத்தில் எனக்கு உதவி இருக்கோ என்னவோ!" என்றான் அருள்.

ஜெயா மௌனமாக இருந்தாள்.

"சரி. உன்னால இதை ஒத்துக்க முடியலேன்னா இன்னொரு காரணம் சொல்றேன்!"

"என்ன அது?' 

"ஒத்தர் செய்யற நல்ல செயல் அவரோட ஏழு தலைமுறைக்குப் பயனுள்ளதா இருக்கும்னு சொல்லுவாங்க. மூணு தலைமுறைக்கு முன்னால என் தலைமுறையில எல்லாரும் படிச்சவங்களாத்தானே இருந்திருக்காங்க? அவங்களோட கல்வி அறிவுதான் எனக்கு உதவி செஞ்சிருக்கோ என்னவோ!" என்றான் அருள். 

குறள் 398:
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.

பொருள்:
ஒருவர் ஒரு பிறவியில் கற்ற கல்வி அவருக்கு ஏழு பிறவிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். ('ஒருவர் கற்ற கல்வி அவருக்குப் பின் வரும் ஏழு தலைமுறைகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும்' என்பது இந்தக் குறளுக்கு திரு மு.கருணாநிதியின் உரை)

399. ஆத்திச்சூடி

"தாத்தா! நீ சொல்லிக் கொடுத்த தமிழ் ரைம் சொல்லிக் காட்டட்டுமா?" என்றான் ரித்விக்.

"தமிழ் ரைமா? நான் எப்ப சொல்லிக் கொடுத்தேன்?" என்றார் பெரியசாமி.

"அதான் தாத்தா 'அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம்.'"

"ஓ, அதுவா? அது பேரு ரைம் இல்ல, ஆத்திச்சூடி!"

"அதான்! சொல்றேன். சரியா இருக்கான்னு பாரு" என்ற ரித்விக் ஆத்திச்சூடியின் 13 வரிகளையும் சொல்லி முடித்தான். 

"சரியாச் சொல்லிட்டியே! அடிக்கடி சொல்லிப் பாத்துக்க. அப்பதான் மறந்து போகாம இருக்கும்" என்றார் பெரியசாமி. 

சில நாட்களுக்குப் பிறகு, ரித்விக் தன் வகுப்புத் தோழன் ஒருவனையும், அவன் அம்மாவையும் வீட்டுக்கு அழைத்து வந்தான். நேரே பெரியசாமியிடம் வந்து, "தாத்தா! இவனும் என் கிளாஸ்தான் பேரு. அஸ்வின்" என்றான். 

"வாப்பா!" என்ற பெரியசாமி அஸ்வினின் அம்மாவைப் பார்த்தார். 

அவருக்குக் கைகூப்பி வணக்கம் தெரிவித்த அந்தப் பெண்மணி, "வணக்கம் அங்க்கிள்! நான் அஸ்வினோட அம்மா. ரித்விக் அழகா ஆத்திச்சூடி சொல்றதைப் பாத்து, அஸ்வின் தானும் கத்துக்கணும்னு ஆசைப்படறான். உங்களுக்கு நேரம் இருந்தா அவனுக்கும் சொல்லித் தரீங்களா?" என்றாள் 

"தாராளமா! நான் சும்மாதானே இருக்கேன்! தினம் 10 நிமிஷம் கத்துக்கிட்டாப் போதும். அஞ்சாறு நாள்ள முழுசாக் கத்துக்கலாம்" என்றார் பெரியசாமி.

"தாங்க்ஸ் அங்க்கிள்!" என்றாள் அவள். 

ரண்டு மூன்று நாட்கள் கழித்து அஸ்வினின் அம்மா இன்னும் மூன்று பெண்களுடன் வந்தாள்.

"அங்க்கிள்! அஸ்வின் ஆத்திச்சூடி கத்துக்கறது தெரிஞ்சதும், இன்னும் சில பெற்றோர்களும் தங்களோட குழந்தைகளும் ஆத்திச்சூடி கத்துக்கணும்னு ஆசைப்படறாங்க. மொத்தம் 10 குழந்தைங்க இருப்பாங்க. நீங்க அவங்களுக்கு தினம் அரை மணி நேரம் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் மாதிரி விஷயங்கள்ளாம் சொல்லிக் கொடுத்தா நல்லா இருக்கும். தப்பா நினைச்சுக்காதீங்க. இதை ஒரு டியூஷன் மாதிரி வச்சுக்கங்க. எல்லாருமே ஏதாவது ஃபீஸ் கொடுக்க விரும்பறாங்க!" என்றாள் அஸ்வினின் தாய்.

"சாரிம்மா! நான் ஆசிரியர் இல்ல. நான் படிச்சதில எனக்கு ஞாபகம் இருக்கற விஷயங்களை என் பேரனுக்கு சொல்லிக் கொடுத்தேன். வேற யாருக்காவது ஆர்வம் இருந்தா சொல்லித் தரேன். இதுக்கு நான் ஃபீஸ் எதுவும் வாங்க மாட்டேன். எனக்குத் தெரிஞ்சதும் கொஞ்சம்தான்!" என்றார் பெரியசாமி.

'உங்களுக்குத் தெரிஞ்சதை சொல்லிக் கொடுங்க அங்க்கிள் அது போதும். ஏன்னா, இதெல்லாம் இவங்களுக்கு ஸ்கூல்ல சொல்லிக் கொடுக்கறதில்ல. எங்களுக்கும் இதெல்லாம் ஞாபகம் இல்ல. முன்ன படிச்சதெல்லாம் மறந்து போச்சு. என் பையன் சொல்றதைக் கேட்டுட்டு, நானே இதையெல்லாம் மறுபடி கத்துக்கறேன். இதையெல்லாம் மறுபடி கேக்கறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குன்னு என் வீட்டுக்காரர் கூட சொல்றாரு!" என்றாள் அஸ்வினின் அம்மா.

"சரிம்மா! ஆர்வம் இருக்கற குழந்தைகளை வரச் சொல்லுங்க. எனக்குத் தெரிஞ்சதை சொல்லித் தரேன்!" என்றார் பெரியசாமி. 

"என்னப்பா, லைப்ரரியிலேந்து கம்பராமாயணம், சிலப்பதிகாரம் எல்லாம் எடுத்துப் படிக்க ஆரம்பிச்சுட்டீங்க?" என்றான் பெரியசாமியின் மகன் வியப்புடன்.

"இந்தப் பையன்களுக்கு ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், நாலடியார், நன்னெறி எல்லாம் சொல்லிக் கொடுக்கறேன் இல்ல? இதையெல்லாம் கத்துக்கறதில பையங்க ரொம்ப சந்தோஷப்படறாங்க. அவங்க பெற்றோர்களும் இதையெல்லாம் மறுபடி கத்துக்கறோம்னு சொல்லி சந்தோஷப்படறாங்க. அதனால எனக்கும் இன்னும் பல விஷயங்களைப் படிச்சுத் தெரிஞ்சுக்கணும்னு ஆர்வம் வந்திருக்கு!" என்றார் பெரியசாமி.   

குறள் 399:
தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.

பொருள்:
தமக்கு இன்பம் அளிக்கும் கல்வி உலகத்தாருக்கும் இன்பம் அளிப்பதைக் கண்டு கற்றவர்கள் கல்வியின் மீது மேலும் விருப்பம் கொள்வார்கள்.

400. சொந்தத் தொழில் 

"25 வருஷம் வேலை செஞ்சாச்சு. சொந்தமா வீடு இருக்கு. ஓரளவுக்கு சேமிப்பு இருக்கு. வேலையை விட்டா, பி எஃப் பணம் கொஞ்சம் வரும். இப்ப ரிஸ்க் எடுக்காட்டா அப்புறம் எப்ப ரிஸ்க் எடுக்கறது?" என்றார் தனபால், மனைவியிடம். 

"ஏங்க, நல்லா படிச்சிருக்கீங்க. தொல்லை இல்லாத வேலை. கை நிறைய சம்பளம். வருஷா வருஷம் இன்க்ரிமென்ட். இன்னும் எட்டு வருஷம் சர்வீஸ் இருக்கு, அதுக்கப்பறம் கூட உங்களை உங்க கம்பெனியில வேலையில தொடரச் சொன்னாலும் தொடருவாங்க. இப்ப எதுக்கு வேலையை விட்டுட்டு சொந்தமாத் தொழில் ஆரம்பிக்கறேங்கறீங்க?" என்றாள் அவர் மனைவி அம்பிகா.

"சொந்தத் தொழில் செய்யணும்கறது என்னோட கனவு. நான் ஒண்ணும் சின்ன வயசிலேயே ரிஸ்க் எடுத்து சொந்தத் தொழில் ஆரம்பிக்கலையே! 25 வருஷம் வேலை  செஞ்சுட்டு, நம்ம பெண்ணைப்  படிக்க வச்சு, கல்யாணம் பண்ணிக் கொடுத்தப்புறம்தானே சொந்தத் தொழில் ஆரம்பிக்கறேன்? அதோட கொஞ்சம் பணமும் சேத்து வச்சிருக்கோம். என் கனவை நிறைவேத்த இதுதான் சரியான சமயம்."

"என்னவோ போங்க. நான் சொன்னா கேக்கவா போறீங்க?"

னபால் திட்டமிட்டபடியே வேலையை விட்டு விட்டு, கொஞ்சம் பணத்தை முதலீடு செய்து சிறிய அளவில் ஒரு சொந்தத் தொழிலை ஆரம்பித்தார். 

ஆறே மாதங்களில் தொழிலில் வளர்ச்சி ஏற்பட்டது. அதிக முதலீடு தேவைப்பட்டதால் வங்கிக் கடனுக்கு விண்ணப்பித்தார். அவர் வீட்டை அடமானம் வைத்தால் கடன் கொடுப்பதாக வங்கி கூறியது.

மனைவியின் எதிர்ப்பை மீறி வீட்டை அடகு வைத்துக் கடன் வாங்கினார் தனபால். 

"தொழில்தான் நல்லாப் போய்க்கிட்டிருக்கே! அப்புறம் ஏன் பயப்படணும்? அஞ்சு வருஷத்திலே கடனையெல்லாம் அடைச்சு வீட்டை மீட்டுடறேன்!" என்றார் தனபால்.

ஆனால் அவர் எதிர்பாராத விதமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தொழிலில் நலிவு ஏற்படத் தொடங்கியது. சில மாதங்களில் பிரச்னை பெரிதாகித் தொழிலையே மூடும் அளவுக்கு வந்து விட்டது. வங்கிக்கடன், வெளிக்கடன் என்று கடன்கள் பெருகிப் பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தின.

வேறு வழியின்றி, தனபால் தன் வீட்டை விற்று எல்லாக் கடன்களையும் அடைத்தார். சேமிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக முன்பே கரைந்து விட்டன. கடன்களையெல்லாம் அடைத்த பிறகு, கையில் ஒரு சில லட்சங்கள் கூட மிஞ்சவில்லை.  

ஒரு லட்ச ரூபாய் முன் பணம் கொடுத்து ஒரு வாடகை வீட்டுக்குக் குடிபோனார் தனபால். 

"ராஜா மாதிரி இருந்தீங்க. இப்ப வாடகை வீட்டுக்குக் குடிபோக வேண்டிய  அளவுக்கு ஆயிடுச்சே நம்ப நிலைமை! கையில இருக்கற காசு எவ்வளவு நாளைக்கு வரும்? எப்படி வாடகை கொடுக்கப் போறோம்? சாப்பாட்டுக்கு என்ன செய்யப் போறோம்?" என்று புலம்பினாள் அம்பிகா.

தனபால் எதுவும் பேசவில்லை.

அடுத்த சில நாட்களில் தனபால் இரண்டு மூன்று முறை வெளியே சென்று வந்தார். அவர் எங்கே போகிறார் என்று அம்பிகாவும் கேட்கவில்லை. அவரும் சொல்லவில்லை.

ரு வாரம் கழித்து தனபால் அம்பிகாவிடம் சொன்னார். "அம்பிகா! திங்கட்கிழமையிலேந்து நான் வேலைக்குப் போறேன்."

"அப்படியா? எங்கே?" என்றாள் அம்பிகா சற்று வியப்புடன்.

நிறுவனத்தின் பெயரைச் சொன்னார் தனபால்.

"எவ்வளவு சம்பளம்?"

"ஒரு லட்சம் ரூபாய்."

"பரவாயில்லையே! நம்ப சேமிப்பு, வீடு எல்லாம் நம்ம கையை விட்டுப் போனதும், எல்லாமே போயிடுச்சுன்னு நினைச்சேன்!" என்றாள் அம்பிகா. 

"நம்ப சொத்தெல்லாம் போனாலும், நான் படிச்ச படிப்பு நம்மளைக் காப்பாத்திடுச்சு!" என்றார் தனபால். 

குறள் 400:
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

பொருள்:
ஒருவருக்கு அழிவு இல்லாத செல்வம் கல்வி மட்டுமே. மற்ற செல்வங்கள் ஒருவருக்கு உண்மையான செல்வம் அல்ல.
அறத்துப்பால்                                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...