இருவரும் நெடுந்தூரம் நடந்து, ஒரு கிராமப் பகுதிக்கு வந்தனர்.
அந்த ஊரில் இருந்த ஒரு கோயிலின் வாசலில் இருவரும் அமர்ந்தனர்.
கோயில் பூட்டப்பட்டிருந்தது.
"ஏன் அதற்குள் கோயிலைப் பூட்டி விட்டார்கள்? இன்னும் நண்பகல் நேரம் வரவில்லையே!" என்றான் வீரவர்மன்.
"அரசே! இந்தப் பகுதியில் கடும் பஞ்சம் நிலவுகிறது. அதனால், கோயிலுக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கும். அதனால், அர்ச்சகர் கோயிலைச் சீக்கிரமே பூட்டி விட்டு, வீட்டுக்குப் போய் விட்டாரோ என்னவோ!" என்றார் அமைச்சர்.
"பல நாடுகளை வென்று ஒரு குடையின் கீழ் கொண்டு வந்திருப்பவன் என்ற பெருமை எனக்கு இருந்து என்ன பயன்? பஞ்சத்தில் வாடும் மக்களின் துயரை என்னால் தீர்க்க முடியவில்லையே!" என்றான் வீரவர்மன், வருத்தத்துடன்
"அரசே! தங்களால் இயன்ற உதவிகளைத் தாங்கள் செய்துதான் வருகிறீர்கள். பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வரியை ரத்து செய்து விட்டீர்கள். அரண்மனை தானியக் கிடங்கிலிருந்து தானியங்களை வழங்கி வருகிறீர்கள். இயற்கையின் விளைவுகளுக்கு, ஓரளவுக்குத்தான் நிவாரணம் செய்ய முடியும்!"
அப்போது அங்கே கோயில் அர்ச்சகர் வர, அவரைத் தொடர்ந்து, கையில் பெரிய பாத்திரங்களைத் தூக்கிக் கொண்டு சிலர் வந்தனர். இன்னும் பலர் கோவிலை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அரசரும், அமைச்சரும் எழுந்து நின்றனர்.
அவர்களைப் பார்த்த அர்ச்சகர், "வாருங்கள்? வெளியூர்க்காரர்களா? அன்னதானம் நடக்கப் போகிறது. நீங்களும் கலந்து கொள்ளுங்கள்!" என்றார், கோயிலின் பூட்டைத் திறந்தபடியே.
"அன்னதானமா? இந்தப் பஞ்ச காலத்தில் யார் அன்னதானம் செய்கிறார்கள்?" என்றார் அமைச்சர், வியப்புடன்.
"இந்த ஊரில் உள்ள விவசாயிகள்தான். தினமும் ஒருவர் என்று முறை வைத்துக் கொண்டு, ஏழைகளுக்கு அன்னதானம் செய்கிறார்கள்" என்றார் அர்ச்சகர்.
"மழை பெய்யாததால், விளைச்சலே இல்லை என்றார்களே!"
"விளைச்சல் இல்லைதான். தங்களிடம் இருப்பில் உள்ள தானியங்களைக் கொண்டுதான் விவசாயிகள் இவ்வாறு அன்னதானம் செய்கிறார்கள். அத்துடன், மழை இல்லாதபோதும், உலர்நிலத்தில் விளையக் கூடிய தானியங்களைப் பயிர் செய்து, அவர்கள் விவசாயம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்!" என்றார் அர்ச்சகர்.
"நன்றி, ஐயா! நாங்கள் ஏற்கெனவே உணவு உண்டு விட்டோம். வருகிறோம்" என்று கூறி விட்டு, அமைச்சருடன் அங்கிருந்து கிளம்பினான் வீரவர்மன்.
சிறிது தூரம் வந்ததும், "அமைச்சரே! பல குடைகளின் கீழ் உள்ள நாடுகளை ஒரு குடைக்கீழ் ஆளும் என்னைப் போன்ற பல அரசர்களும், இந்த ஊரில் உள்ள ஒரு விவசாயியின் குடையின் கீழ்தான் வர வேண்டும்" என்றான் வீரவர்மன்.
குறள் 1034:
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.
உழுவதால் தானிய வளமும், அதனால் அருளும் உடைய உழவர்கள், பல அரசரின் குடை நிழல்களையும் தம் குடையின் கீழ் காண வல்லவர் ஆவர்.