ஒரு பிரபல வீட்டுப் பொருட்கள் விற்பனை நிலையத்தின் சர்வீஸ் பிரிவில் தொலைக்காட்சிப் பெட்டிகள் பழுது பார்க்கும் டெக்னீஷியனாக இருந்த நந்தகோபாலுக்கு திடீரென்று வேலை போய் விட்டது.
தொலைக்காட்சிப் பெட்டிகளைப் பழுது பார்ப்பது லாபகரமாக இல்லை என்பதால், அந்தச் சேவையை அந்த நிறுவனம் நிறுத்தி விட்டது. அதனால், அவனுக்கு அங்கே பணி இல்லை என்று கூறி விட்டனர்.
அவனோடு பணி புரிந்த அன்பு, சதீஷ் என்ற இன்னும் இரண்டு டெக்னீஷியன்களுக்கும் வேலை போய்விட்டது.
நந்தகோபாலுக்கு அது ஒரு பெரிய அடிதான். அது போன்ற வேலை ஒரு பெரிய நிறுவனத்தில் கிடைப்பது கடினம். சிறிய நிறுவனங்களில் வேலை கிடைக்கலாம். அங்கே சம்பளம் குறைவாக இருக்கும் என்பதுடன், வேலை நிரந்தரமாக இருக்கும் என்று சொல்ல முடியாது.
சதீஷ், அன்பு இருவருடனும் பேசினான் நந்தகோபால்.
"நாம மூணு பேரும் சேர்ந்து ஒரு எலக்ட்ரானிக்ஸ் சர்வீஸ் சென்டர் ஆரம்பிச்சா என்ன?" என்றான் நந்தகோபால்.
"என்ன விளையாடறியா? அதுக்கு முதலீடு வேண்டாமா?" என்றான் சதீஷ்.
"என் வீட்டு முன் அறையைப் பயன்படுத்திக்கலாம். ஜன்னல்ல ஒரு போர்டு வச்சுட்டா, தெருவில போறவங்களால பார்க்க முடியும். வாடகை வீடுதான். ஆனா வீட்டுக்காரர்கிட்ட பேசி, சம்மதம் வாங்கிடறேன்" என்றான் நந்தகோபால்.
"மத்த முதலீடெல்லாம்?" என்றான் அன்பு .
"நம்ம கடையில இருக்கற சில முக்கியமான உபகரணங்களை, நாம குறைஞ்ச விலைக்குக் கேட்டு வாங்கலாம். நிறைய ஸ்பேர்ஸ் வாங்கி வச்சிருக்காங்க. அதையெல்லாம் வெளியில விக்க முடியாது. நாம அதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா வாங்கிக்கறோம்னு சொன்னா, மானேஜர் ஒத்துப்பாரு. அதோட நம்ம கடையில டி வி மத்த பொருட்கள் வாங்கினவங்களோட அட்ரஸ், ஃபோன் நம்பர் எல்லாம் வாங்கி வச்சுக்கிட்டா, அவங்களை நாம தொடர்பு கொண்டு ஏதாவது பிரச்னைன்னா நம்மைக் கூப்பிடச் சொல்லலாம்."
"நான் வரலப்பா. நான் வேற ஏதாவது வேலை தேடிக்கறேன்" என்று ஒதுங்கிக் கொண்டான் சதீஷ்.
அன்பு மட்டும் சற்று யோசித்து விட்டு, "நந்து! என்னால முதலீடு எதுவும் செய்ய முடியாது. ஆனா, உன்னோட சேர்ந்து ஒர்க் பண்றேன். வருமானத்தைப் பொருத்து, எனக்கு எவ்வளவு கொடுக்க முடியுமோ கொடு. ஆனா, நல்ல வேலை ஏதாவது கிடைச்சா போயிடுவேன். நமக்கு சரியா வருமானம் வராட்டாலும், போயிடுவேன்!" என்றான்.
நந்தகோபால் தன் சர்வீஸ் மையத்தைத் துவங்கி இரண்டு மாதங்கள் ஆகி விட்டன.
முதல் மாதம் அதிகம் பிசினஸ் கிடைக்கவில்லை. ஆனால், இரண்டாம் மாதம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.
இன்னும் ஓரிரு மாதங்களில் தொடர்ச்சியாக நல்ல வருமானம் வர ஆரம்பித்து விடும் என்று நந்தகோபாலுக்கு நம்பிக்கை வந்தபோதுதான், அந்த இடி விழுந்தது.
கொரோனா காரணமாக ஏற்பட்ட ஊரடங்கு!
"அவ்வளவுதான்! இனிமே, நம்மால எழுந்திருக்கவே முடியாது!" என்றான் அன்பு, விரக்தியுடன்.
"பார்க்கலாம்!" என்றான் நந்தகோபால்.
"என்னத்தைப் பாக்கறது? என்ன நம்பிக்கையில இருக்க நீ?" என்றான் அன்பு, சற்று எரிச்சலுடன்.
"அன்பு! இப்ப லாக்டவுன். வீட்டுக்குள்ளதான் அடைஞ்சு கிடப்பாங்க. டிவி அதிகம் பாப்பாங்க. அதனால, அதிகமான டிவிகளுக்கு சர்வீஸ் தேவைப்படும். ரிப்பேர் பண்ணாமப் போட்டு வச்சிருந்த டிவியைக் கூட வெளியே எடுத்து, ரிப்பேர் பண்ணி வச்சுப்பாங்க. லாக்டவுன்ல, பெரிய கடையெல்லாம் மூடி இருப்பாங்க. அதனால, நம்ம மாதிரி சின்ன ஆட்களுக்கு வாய்ப்பு நிறையக் கிடைக்கும்!" என்றான் நந்தகோபால்.
அன்பு அவனைச் சற்று வியப்புடன் பார்த்தான்.
நந்தகோபால் சொன்னபடியே, வாய்ப்புகள் வந்தன.
ஒரு சிறு பெட்டியில் உபகரணங்ளை எடுத்துக் கொண்டு போய், வீடுகளுக்கே சென்று, டிவிகளைப் பழுது பார்த்தார்கள்.
சில வாரங்களுக்குப் பிறகு, உதிரி பாகங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இவர்கள் வேலை பார்த்த கடையின் மேலாளருக்கு ஃபோன் செய்து கேட்டபோது, ஊரடங்கு காலத்தில் கடையைத் திறந்து உதிரி பாகங்களை எடுத்துக் கொடுக்க முடியாது என்று அவர் கண்டிப்பாகச் சொல்லி விட்டார்.
"மொத்தத்தையும் யார்கிட்டேயாவது வித்திருப்பேன். நீங்க கொஞ்சம் கொஞ்சமா வாங்கிக்கிறதாச் சொன்னீங்க. உங்க மேல பரிதாபப்பட்டு ஒத்துக்கிட்டேன். இப்ப லாக்டவுன்ல, உங்களுக்கும் விக்க முடியல, மொத்தமாகவும் விக்க முடியல. எல்லாம் உள்ளே மாட்டிக்கிட்டிருக்கு. நஷ்டமாயிடுச்சுன்னு முதலாளி என்னைத்தான் திட்டப் போறாரு!" என்றார் அவர்.
என்ன செய்வதென்று தெரியாமல் இரண்டு நாட்கள் தவித்தார்கள். டிவி பழுது பார்க்க வேண்டும் என்று கேட்டிருந்தவர்கள், ஃபோன் செய்து ஏன் தாமதமாகிறது என்று கேட்டனர்.
"சார்! லாக் டவுனால, ஸ்பேர்ஸ் கிடைக்கல. ரெண்டு நாள் டயம் கொடுங்க!" என்றான் நந்தகோபால்.
"ஏதோ சமாளிச்சிக்கிட்டிருக்கோம்னு பாத்தா, புதுசா புதுசா பிரச்னை வந்துக்கிட்டிருக்கே!" என்று அலுத்துக் கொண்டான் அன்பு.
தங்கள் பழைய கடை மேலாளருக்கு மீண்டும் ஃபோன் செய்தான் நந்தகோபால்.
"சார்! எங்க மேல நம்பிக்கை வச்சு, கடை சாவியைக் கொடுங்க. எங்களுக்கு வேணுங்கற ஸ்பேர்ஸை எடுத்துக்கிட்டு, அரை மணி நேரத்தில சாவியை உங்ககிட்ட திருப்பிக் கொடுத்துடறேன். நாங்க சொன்னபடி, எல்லா ஸ்பேர்ஸையும் அஞ்சாறு மாசத்தில வாங்கிக்கிட்டு, பணத்தைக் கொடுத்துடறோம். உங்களுக்கு நஷ்டம் எதுவும் வராது" என்றான் அன்பு.
சற்றுத் தயங்கிய மேலாளர், பிறகு "சரி!" என்றார்.
ஊரடங்கு ஏற்படுத்தப்பட்டு, ஆறு மாதங்கள் ஆகி விட்டன.
"பரவாயில்ல. லாக் டவுன்ல ஆறு மாசத்தை சமாளிச்சுட்டோம். இனிமே எல்லாம் சரியாயிடும்னு நினைக்கிறேன்!" என்றான் அன்பு.
ஒரு வீட்டிலிருந்து ஒரு டிவியைப் பழுது பார்க்கத் தங்கள் சர்வீஸ் மையத்துக்கு அன்பு எடுத்துச் சென்று கொண்டிருந்தபோது, அவனை ஒரு போலீஸ்காரர் வழிமறித்தார்.
"எங்கேந்து டிவியைத் திருடிக்கிட்டுப் போற?" என்றார் அவர்.
"திருடிட்டுப் போகலை சார்! ரிப்பேர் பண்ண எடுத்துக்கிட்டுப் போறேன்1" என்றான் அன்பு.
"அது இன்னும் மோசம்! லாக்டவுன்ல கடையைத் திறந்து வச்சுக்கிட்டு, ரிப்பேர் பண்றியா? ஸ்டேஷனுக்கு வா!" என்று கூறி, அவனைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார் அவர்.
அன்பு ஃபோன் செய்த பிறகு, காவல் நிலையத்துக்கு வந்தான் நந்தகோபால்.
போலீஸ்காரரிடம் நந்தகோபால் தங்கள் நிலையை விளக்கிச் சொன்னான்.
"சார்! பொதுவா, வீடுகளுக்கே போய்த்தான் நாங்க ரிப்பேர் பண்ணுவோம். இந்த ஒரு தடவைதான், சர்வீஸ் சென்ட்டருக்கு எடுத்துக்கிட்டு வர வேண்டியதாயிடுச்சு. சர்வீஸ் சென்ட்டர்ங்கறது என்னோட வீடுதான். கதவை மூடிக்கிட்டு, உள்ளேதான் வேலை செய்வோம்."
"ஏம்ப்பா, ஒத்தன் ரோடில மாட்டிக்கிட்டான். இப்ப, நீயா வந்து வண்டியில ஏறி இருக்கே! ரெண்டு பேருமே, ஆறு மாசம் உள்ள போகப் போறீங்க. இன்ஸ்பெக்டர் வரட்டும்!" என்றார் போலீஸ்காரர்.
இன்ஸ்பெக்டர் வந்து விசாரித்தார்.
நந்தகோபால் சொன்னதைக் கேட்டு விட்டு, "லாக் டவுன் விதிகளைப் பின்பற்றித்தான் ஆகணும். இது மாதிரி டிவியை ஸ்கூட்டர்ல வச்சுக்கிட்டு, ரோட்டில அலையாதீங்க!" என்று சொல்லி, அவர்களை விட்டு விட்டார் இன்ஸ்பெக்டர்.
காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தபோது, "என்ன அன்பு? ஏதாவது பிரச்னை வந்தா, நீ ரொம்ப சோர்வடைஞ்சுடுவ. இன்னிக்கு ரொம்ப அமைதியா இருக்கியே!" என்றான் நந்தகோபால்.
"அதான் பாத்துக்கிட்டிருக்கேனே! எவ்வளவோ பிரச்னை வந்தது. ஆனா, நீ கலங்கல. பிரச்னைதான் உன்னைக் கண்டு பயந்து ஓடிக்கிட்டிருக்கு. அதனால, நானும் இனிமே பயப்படப் போறதில்ல!" என்றான் அன்பு.
அதற்குள் உள்ளிருந்து வேகமாக வந்த ஒரு போலீஸ்காரர், "இன்ஸ்பெக்டர் உங்களைக் கூப்பிடறாரு!" என்றார், நந்தகோபாலைப் பார்த்து.
"சொல்லி வாய் மூடல. அதுக்குள்ள இன்னொரு பிரச்னையா?" என்ற அன்பு, "நீ மட்டும் போய் என்னன்னு கேட்டுக்கிட்டு வா!" என்றான்.
சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்த நந்தகோபால், "இன்ஸ்பெக்டர் வீட்டிலேயே டிவி ரிப்பேரா இருக்காம். இந்த லாக்டவுன் சமயத்தில, ரிப்பேர் பண்ண ஆளே கிடைக்கலையாம். அதனால, அதை ரிப்பேர் பண்ணச் சொல்றாரு. அதோட வேற போலீஸ் அதிகாரிகளுக்கும் டிவி ரப்பேர் பண்ணணும்னா, நம்மை சிபாரிசு செய்யறேன்னு சொல்லி இருக்காரு" என்று சொல்லி நிறுத்தி விட்டு, அன்புவின் முகத்தில் இருந்த கேள்விக்குறியைப் பார்த்து விட்டு, "நம்ம ரிப்பேர் சார்ஜ் எவ்வளவோ, அதைக் கொடுத்துடறேன்னு சொன்னாரு!" என்றான் சிரித்தபடி.
பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 63
இடுக்கண் அழியாமை (துன்பத்தால் அழிந்து போகாமல் இருத்தல்)
குறள் 624:
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.
பொருள்:
தடைகள் உள்ள இடங்களிலும் வண்டியை இழுத்துச் செல்லும் காளையைப் போல், மனம் தளராமல் செல்ல வல்லவனுக்கு வந்த துன்பமே துன்பப்படும்.