"அப்படி என்ன செய்யறான் அவன்?" என்றான் கிருஷ்ணன்.
"என்ன செய்யறானா? ஒத்தரைப் பத்தி இன்னொருத்தர்கிட்ட தப்பாப் பேசறதுதான் அவன் தொழில். அவன் செய்யறது இந்த ஆஃபீஸ்ல எல்லாருக்குமே தெரியுமே. உன்னைப் பத்திக் கூட தப்பாப் பேசறான்னா பாத்துக்கயேன்!" என்றார் சண்முகம்.
"அப்படியெல்லாம் இருக்காது சார். நானும் ரகுவும் எத்தனையோ வருஷமா நட்பா இருக்கோம். அவன் அப்படியெல்லாம் செய்யற ஆள் இல்ல. உங்ககிட்ட யாரோ தப்பா சொல்லி இருக்காங்க" என்றான் கிருஷ்ணன்.
"உன் நண்பன் மேல நீ ரொம்ப நம்பிக்கை வச்சிருக்கப்பா! உன்னோட நட்பைப் பாராட்டறேன். ஆனா, நான் சொல்றது உண்மைன்னு உனக்கு ஒரு நாள் தெரிய வரும்!" என்றார் சண்முகம்.
அந்த நாள் விரைவிலேயே வந்தது.
ஒருநாள், நிறுவனத்தின் பொது மேலாளர், கிருஷ்ணனைத் தன் அறைக்கு அழைத்தார்.
"கிருஷ்ணன்! உங்களைப் பத்தி எனக்குத் தெரியும். ஆனா, உங்க பேர்ல ஒரு புகார் வந்தபோது, அதை விசாரிக்காம இருக்க முடியாது. அதனால, அதை விசாரிச்சேன். அதில உண்மை இல்லேன்னு தெரிஞ்சுது. இதை உங்ககிட்ட சொல்லணும்னுதான் சொல்றேன்!" என்றார்.
"என்ன புகார் சார்?" என்றான் கிருஷ்ணன், அதிர்ச்சியுடன்.
"நீங்கதான் எல்லோரோட டிராவல் பில்களையும் ப்ராசஸ் பண்றீங்க, என்னோடது உட்பட! ஆனா, சில பேருக்கு நீங்க சலுகை காட்டி, அவங்க பில் அதிகமா இருந்தாலும் அதை பாஸ் பண்றதாகவும், வேற சிலரோட பில்லில நிறைய அயிட்டங்களை கட் பண்ணி, குறைவான தொகைக்கு பில்லை பாஸ் பண்றதாகவும் ஒரு புகார் வந்தது. நான் இதை விசாரிச்சதில, இதில உண்மை இல்லைன்னும், நீங்க விதிப்படிதான் செய்யறீங்கன்னும் தெரிஞ்சுது. டோன்ட் ஒர்ரி. இது உங்களுக்குத் தெரியணும்னுதான் உங்ககிட்ட சொன்னேன். ஒரு விதத்தில, இது உங்களுக்கு நல்லதுதான். நீங்க எவ்வளவு நேர்மையா, எந்த அளவுக்கு விதிகளைப் பின்பற்றி செயல்படறீங்கன்னு இப்ப தெரிஞ்சுடுச்சு இல்ல?" என்றார் பொது மேலாளர்.
கிருஷ்ணனுக்கு அதிர்ச்சி இன்னும் அடங்கவில்லை.
"நன்றி சார்! இது ரொம்ப அக்கிரமம். என்னைப் பத்தி இப்படி ஒரு புகார் கொடுத்திருப்பாங்கன்னு நம்பறதுக்கே எனக்கு கஷ்டமா இருக்கு. விதிப்படி நான் பில்லிலேந்து சில விஷயங்களைக் கழிச்சதால, என் மேல கோபப்பட்டுத்தான் இப்படி யாரோ செஞ்சிருக்காங்க" என்றான் கிருஷ்ணன், படபடப்புடன்.
"என்னோட பில்லில கூட எலிஜிபிலிடி இல்லாத தொகைகளை நீங்க கட் பண்ணி இருக்கீங்க!" என்றார் பொதுமேலாளர், சிரித்தபடி.
"சார்!"
"ஐ ஆம் நாட் கம்ப்ளைனிங்!" என்ற பொது மேலாளர், சற்றுத் தயங்கி விட்டு, "கிருஷ்ணன்! உங்க மேல வந்தது ஒரு அனானிமஸ் கம்ப்ளைன்ட்தான். ஆனா, புகார் கொடுத்தவர் அதை டைப் கூடப் பண்ணாம, கையால எழுதி அனுப்பி இருக்காரு. அந்தக் கையெழுத்தை வச்சு, புகார் கொடுத்தவர் யாருன்னு விஜிலன்ஸ் டிபார்ட்மென்ட்ல கண்டு பிடிச்சுட்டாங்க. புகார் கொடுத்தவர் உங்களுக்கு ரொம்ப நெருக்கமானவராமே! பொதுவா, புகார் கொடுத்தவங்க பேரை வெளியில சொல்லக் கூடாது. நீங்க நண்பரா நினைக்கிறவர் எப்படிப்பட்டவர்னு உங்களுக்குத் தெரியணும்னுதான் நான் இதைச் சொன்னேன்!"
"இவ்வளவு வருஷமா என் நெருக்கமான நண்பனா இருக்க. ஏண்டா இப்படிப் பண்ணின?" என்றான் கிருஷ்ணன்.
"இல்லை. நீ தப்பா..." என்று ஆரம்பித்தான் ரகு.
"போதும்டா! ஏற்கெனவே சில பேர் நீ என்னைப் பத்தி தப்பாப் பேசறதா எங்கிட்ட சொன்னப்ப, நான் அதை நம்பல. ஆனா, நீ உன் கைப்பட எழுதி என் மேல புகார் கொடுத்தது தெரிஞ்சப்பறம், நான் எப்படி நம்பாம இருக்க முடியும்? நீ ஏன் இப்படிச் செய்யறேன்னு எனக்குப் புரியல. உன்னை விட நான் மேலே போயிட்டேங்கற பொறாமையா? ஆனா, நான் உங்கிட்ட பழைய மாதிரிதானே நடந்துக்கறேன்?"
ரகு மௌனமாக இருந்தான்.
"ஆனா, ஒரு விஷயம் எனக்கு சந்தோஷமா இருக்கு. நீ எனக்கு எதிரா செயல்பட்டப்பறம் கூட, எனக்கு உன் மேல கோபம் வரல. நம் நண்பன் இப்படி செஞ்சுட்டானேன்னு வருத்தம் மட்டும்தான் இருக்கு. நீ எப்படி இருந்தாலும், உங்கிட்ட எனக்கு இருக்கிற நட்பு அப்படியேதான் இருக்குன்னு புரியறப்ப, எனக்கு என்னை நினைச்சே பெருமையா இருக்கு. யூ ஹேவ் மேட் மை டே! நன்றி!" என்றான் கிருஷ்ணன்.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 81
பழைமை (நீண்டகால நட்பு)
குறள் 808:
கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்.
No comments:
Post a Comment