மதுரை அலுவலகத்தின் கிளை நிர்வாகி, அவனை அங்கே பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
"இவர் குணா. ஸ்டோர்ஸ் இன்சார்ஜ்" என்றார் கிளை நிர்வாகி.
சோமு குணாவை அடையாளம் கண்டு கொண்டாலும், அறிமுகம் ஆனவன் போல் காட்டிக் கொள்ளாமல், மௌனமாகத் தலையசைத்தான்.
"என்ன சோமு, என்னைத் தெரியலியா? நாம ஒரே ஊர்தானே?" என்றான் குணா.
"தெரியுது!" என்றான் சோமு, சுருக்கமாக.
அறிமுகங்கள் முடிந்ததும், சோமு கிளை நிர்வாகியுடன் அவர் அறைக்குத் திரும்பினான்.
"குணா உங்க ஊரா?" என்றார் கிளை நிர்வாகி.
"ஆமாம். ரெண்டு பேரும் பக்கத்துப் பக்கத்து வீடுதான்!"
"அப்படின்னா, நெருக்கமா இருந்திருப்பீங்களே? சொல்ல முடியாது. பல சமயம், பக்கத்து வீட்டுக்காரங்களோட விரோதம்தான் இருக்கும்!" என்ற கிளை நிர்வாகி, தன் நகைச்சுவையைத் தானே ரசித்துச் சிரித்தார்.
"அப்படி இல்ல. அப்ப நாங்க நண்பர்களாத்தான் இருந்தோம்!" என்றான் சோமு, மெலிதான சிரிப்புடன்.
"குணா உங்ககிட்ட நெருக்கமானவராக் காட்டிக்கிட்டாரு. ஆனா, நீங்க கொஞ்சம் விலகி இருக்கற மாதிரி தெரிஞ்சது. அதான் கேட்டேன்!"
"நீங்க சொல்றது சரிதான். இப்ப நாங்க நெருக்கமா இல்ல. பத்து வருஷமா எங்களுக்குள்ள தொடர்பு இல்ல. இப்பதான் சந்திக்கிறோம்" என்றான் சோமு.
"அது சரி. ஒரு காலத்தில நெருக்கமா இருக்கறவங்க வேற ஒரு காலத்தில நெருக்கம் இல்லாம போறது சகஜம்தானே!" என்றார் கிளை நிர்வாகி.
சோமுவும், குணாவும் அடுத்தடுத்த வீடுகளில் இருந்தபோது, மிகவும் நெருக்கமாகத்தான் இருந்தனர். இருவருக்குமே திருமணமாகவில்லை. பெற்றோர்களுடன் வசித்து வந்தனர்.
சோமு உள்ளூரிலேயே ஒரு சிறு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். குணா வேலை தேடிக் கொண்டிருந்தான். வேலை நேரம் போக மற்ற நேரங்களில் எல்லாம் சோமு குணாவுடன்தான் இருப்பான்.
தங்கள் வாழ்க்கைக் கனவுகள், தங்களுக்கு வரப் போகும் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பது போல் பல விஷயங்களைப் பற்றி இருவரும் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருப்பார்கள்.
ஒருநாள், சோமு அலுவலகத்தில் இருந்தபோது, அவர்கள் பகுதியில் ஒரு ஜாதிக் கலவரம் வெடித்திருப்பதாகச் செய்தி வந்தது.
வீட்டில் தனியாக இருக்கும் பெற்றோர்கள் பற்றி சோமு கவலைப்பட்டாலும், பக்கத்து வீட்டில் குணா இருப்பதால், அவன் அவர்களைப் பார்த்துக் கொள்வான் என்ற ஆறுதலுடன் இருந்தான்.
அலுவலகத்தில் அனுமதி கேட்டுப் பெற்று சோமு வீட்டுக்கு விரைந்தபோது, அவன் வீடு இருந்த தெருவில் பல வீடுகள் சேதப்படுத்தப்பட்டிருந்தன.
சோமுவின் வீட்டுக் கதவு உடைத்துத் திறக்கப்பட்டிருந்தது. சோமு பதைபதைப்புடன் வீட்டுக்குள் நுழைந்தான். வீட்டுக்குள் ஒரு மூலையில் அவன் பெற்றோர் நடுக்கத்துடன் அமர்ந்திருந்தனர். வீட்டில் பல பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன.
சோமுவைப் பார்த்ததும், அவன் பெற்றோர் பெரிதாக அழ ஆரம்பத்தினர்.
"அழாதீங்க. உங்களுக்கு ஒண்ணும் ஆகலையே!" என்றான் சோமு, தன் பெற்றோர்களின் கைகளைப் பிடித்துக் கொண்டு
"வயசானவங்கங்கறதால எங்களை ஒண்ணும் செய்யல. ஆனா, வீட்டில இருக்கற எல்லாத்தையும் அடிச்சு நொறுக்கிட்டாங்க. பக்கத்தில இருக்கற வீடுகளிலேந்தெல்லாம் நிறைய அலறல் சத்தம் கேட்டது. பல பேரை அடிச்சுக் காயப்படுத்தி இருப்பாங்க போல இருக்கு!" என்றார் அவன் அப்பா.
சோமு பதைபதைப்புடன் குணாவின் வீட்டுக்குச் சென்று பார்த்தான். அவன் வீட்டுக் கதவு பூட்டப்பட்டிருந்தது.
மாலைக்குள் அந்தப் பகுதியில் அமைதி திரும்பி இருந்தது.
இரவில் குணா மட்டும் வீடு திரும்பினான்.
"எங்கேடா போயிட்ட? கலவரத்தில உங்களுக்கெல்லாம் ஒண்ணும் ஆகலியே! உங்க அப்பா அம்மா எங்கே?" என்றான் சோமு.
"இல்ல. கலவரம் நடக்கப் போகுதுன்னு தெரிஞ்சதும், வீட்டைப் பூட்டிட்டு எங்கப்பா அம்மாவோட பக்கத்து ஊர்ல இருக்கற என் அத்தை வீட்டுக்குப் போயிட்டேன். அவங்க அங்கேதான் இருக்காங்க. ரெண்டு மூணு நாள் கழிச்சு அவங்களை அழைச்சுக்கிட்டு வரலாம்னு இருக்கேன்" என்றான் குணா.
"ஏண்டா, எங்கப்பா அம்மா வீட்டில தனியா இருந்தாங்களே, அவங்களையும் அழைச்சுக்கிட்டுப் போயிருக்கலாம் இல்ல? இல்ல, கலவரம் நடக்கப் போகுதுன்னு அவங்ககிட்ட சொல்லி இருந்தா, அவங்க வேற எங்கேயாவது போய்ப் பாதுகாப்பா இருந்திருப்பாங்க இல்ல?" என்றான் சோமு, கோபத்துடன்.
"இந்த மாதிரி சமயத்தில எல்லாம் நம்மைப் பாதுகாத்துக்கறதைப் பத்தித்தான் யோசிக்கத் தோணும்!" என்றான் குணா.
அதற்குப் பிறகு, சோமு குணாவுடன் பழகுவதை விட்டு விட்டான். சில மாதங்களில், அவனுக்கு டெல்லியில் வேலை கிடைத்து விட்டதால், பெற்றோரை அழைத்துக் கொண்டு அந்த ஊரை விட்டே போய் விட்டான்.
தற்செயலாக, குணாவும் அதே நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து, மதுரை நிறுவனத்தில் பணி புரிந்து வந்ததால், சோமு அவனே அங்கே சந்திக்க நேர்ந்திருக்கிறது!
"நீங்க சொல்றது சரிதான், சார். சில நட்புகள் விட்டுப் போனதைப் பத்தி, நாம வருத்தப்படறதே இல்லை!" என்றான் சோமு, கிளை நிர்வாகியிடம்.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 82
தீ நட்பு
குறள் 814:
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை.
No comments:
Post a Comment