"உன் ரூம்மேட் யாரு?" என்றான் சபா.
"அவிநாஷ்!"
"ஓ! அவிநாஷா? ரொம்ப புத்திசாலியான மாணவன்னு கேள்விப்பட்டிருக்கேன். என் செக்ஷன் இல்ல, ஆனா, அவனைத்தான் எல்லாருக்குமே தெரியுமே! எங்கே அவன்? வெளியில போயிருக்கானா?"
"அவன் எப்பவுமே அறையில இருக்கறதில்ல. எப்பவுமே எங்கேயாவது வெளியில சுத்திக்கிட்டிருப்பான், என் ரூம்மேட்னுதான் பேரு. ஆனா, இன்னும் நான் அவனோட சரியாப் பேசினது கூட இல்ல. ஆள் அறையில இருந்தாத்தானே?"
"இப்பதானே எல்லாருமே காலேஜில சேர்ந்து ஹாஸ்டலுக்கு வந்திருக்கோம்! பழகிப் புரிஞ்சுக்கக் கொஞ்ச நாள் ஆகும். நானும் நீயும் சந்திச்சுப் பேசவே ஒரு மாசம் ஆகலியா?"
சற்று நேரம் சந்தோஷிடம் பேசி விட்டு சபா விடைபெற்றான்.
சில வாரங்களுக்குப் பிறகு, சந்தோஷின் அறைக்கு வந்த தனுஷ் என்ற மாணவன், "அவிநாஷ் இல்லையா?" என்றான்.
"இல்லையே! எங்கேயோ சினிமாவுக்குப் போகப் போறதா சொன்னான். உன்னோடதான் போயிருப்பான்னு நினைச்சேன்!" என்றான் சந்தோஷ்.
"அவன் சினிமாவுக்குப் போகப் போறதா எங்கிட்ட சொல்லவே இல்லையே!" என்றபடியே, ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றான் தனுஷ்.
அவிநாஷ் அறைக்கு வந்ததும், "நீ தனுஷோட சினிமாவுக்குப் போகலியா" என்றான் சந்தோஷ்.
"இல்ல. ஏன் கேக்கற?"
"அவன் உன்னைத் தேடிக்கிட்டு வந்தான். நீ சினிமாவுக்குப் போறதே அவனுக்குத் தெரியாதாமே!"
"அவன்கிட்ட சொல்லிட்டுத்தான் நான் சினிமாவுக்குப் போகணுமா என்ன?" என்றான் அவிநாஷ், அலட்சியமாக.
அவிநாஷுக்கு தனுஷுடன் ஏதோ பிணக்கு ஏற்பட்டிருக்கிறது போலும் என்று நினைத்துக் கொண்டான் சந்தோஷ்.
"உன் ரூம்மேட் அவிநாஷ் படிப்பில மட்டும்தான் புத்திசாலின்னு நினைச்சேன். எல்லாத்திலியுமே புத்திசாலியா இருப்பான் போல இருக்கே!" என்றான் சபா.
"ஏன் அப்படிச் சொல்ற?"
"யார் அவனுக்கு ஓட்டல், சினிமான்னு கணக்குப் பாக்காம செலவு பண்ணுவாங்களோ, அவங்ககிட்ட போய் ஒட்டிக்கறான். முதல்ல தனுஷோட சுத்திக்கிட்டிருந்தான். இப்ப தனுஷ் அவனுக்காகச் செலவழிக்கறதில்லேன்னதும், அவன் தனுஷைக் கண்டுக்கறதே இல்லை. இப்ப ரமேஷோட சுத்திக்கிட்டிருக்கான். ரமேஷ் பணக்கார வீட்டுப் பையன். நண்பர்களுக்காக செலவழிக்கறது கௌரவம்னு நினைச்சு, தாராளமா செலவு பண்ணுவான். அதான்!"
"நீ சொன்னப்பறம்தான் எனக்கு ஞாபகம் வருது. ஹாஸ்டலுக்கு வந்த புதிசில, அவனோட ஒரு சினிமாவுக்குப் போனேன். நான்தான் டிக்கட் வாங்கினேன். ஆனா, அப்புறம் அவனோட டிக்கட் பணத்தை அவன்கிட்ட கேட்டு வாங்கிட்டேன். அது அவனுக்குப் பிடிக்கலேன்னு அப்பவே தெரிஞ்சது. அதனாலதான், என்னோட ரூம்மேட்டா இருந்தாக் கூட அவன் எங்கிட்ட நெருங்கிப் பழகறதில்ல!" என்றான் சந்தோஷ்.
"ஆனா, இவ்வளவு புத்திசாலியா இருந்தும் அவிநாஷுக்கு ஒண்ணு புரியல. அவன் நோக்கத்தை எல்லாரும் சுலபமாப் புரிஞ்சுப்பாங்க. இப்பவே நிறைய பேர் அவனைப் பத்திக் கேலியாப் பேசறாங்க!"
"ஒத்தர்கிட்ட நமக்கு என்ன கிடைக்கும்னு எதிர்பார்த்து நட்பு வச்சுகறது ஒரு வியாபாரம்தான். என் ரூம்மேட்டா இருக்கற அவிநாஷ் எங்கிட்ட நெருக்கமா இல்லையேன்னு எனக்குக் கொஞ்சம் வருத்தம் இருந்தது. ஆனா, அவன் எப்படிப்பட்டவன்னு இப்ப தெரிஞ்சப்புறம், இப்படிப்பட்டவன் என் நண்பனா இல்லைங்கறது எனக்கு சந்தோஷமாவே இருக்கு!" என்றான் சந்தோஷ்.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 82
தீ நட்பு
குறள் 813:
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.
No comments:
Post a Comment