"நல்லா நடமாடிக்கிட்டிருந்தவருக்கு திடீர்னு ஹார்ட் அட்டாக் வந்து, அஞ்சாறு நாள் ஆஸ்பத்திரியில இருந்துட்டு, வீட்டுக்கு வந்திருக்காரு. ரெண்டு மூணு மாசம் பெட் ரெஸ்ட்ல இருக்கணும்னு டாக்டர் சொல்லி இருக்காரு" என்றான் பாஸ்கர்.
"இந்த சந்தர்ப்பத்திலேயா இப்படி நடக்கணும்?"
பாஸ்கர் சிரித்தபடியே, "நான் சஸ்பென்ஷன்ல இருந்ததாலதான் அப்பாவை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுக்கிட்டுப் போக முடிஞ்சது. இல்லேன்னா, கம்பெனியில லீவு, பர்மிஷன் எல்லாம் கேட்டு வாங்கறது கஷ்டமாத்தானே இருந்திருக்கும்!" என்றான்.
"உன்னால எப்படி எப்படி சிரிக்க முடியுதுன்னு தெரியல! தான் பண்ணின தப்பை மறைக்க, மானேஜர் உன்னை பலி வாங்கிட்டாருன்னு கம்பெனியில எல்லாருக்குமே தெரியும். எல்லாருமே உங்கிட்ட அனுதாபத்தோடயும், மானேஜர் மேல கோபமாவும்தான் இருக்காங்க" என்றான் சம்பத், தொடர்ந்து.
"பாக்கலாம். விசாரணையில உண்மை தெரியும். என் மேல தப்பு இல்லேன்னு தெரிஞ்சு, என்னை வேலையில சேத்துப்பாங்கன்னு நினைக்கிறேன். ஆனா, அதுக்கு ரெண்டு மூணு மாசம் ஆகலாம்."
"அதுவரையிலேயும் எப்படி சமாளிப்ப? அப்பாவோட மருத்துவச் செலவு வேற இருக்கு!"
"ஆமாம். என்ன செய்யறது? அப்பா ஒரு பார்ட் டைம் வேலைக்குப் போய், கொஞ்சம் சம்பாதிச்சுக்கிட்டிருந்தாரு. அந்த வருமானம் போனதோட, நான் சஸ்பென்ஷன்ல இருக்கறதால, எனக்குப் பாதி சம்பளம்தான் கொடுப்பாங்க. கடுமையானபண நெருக்கடிதான்!" என்றான் பாஸ்கர், இயல்பாக.
"யாரோட கஷ்டத்தையோ சொல்ற மாதிரி சொல்ற! எனக்கு இந்த மாதிரி கஷ்டமெல்லாம் வந்தா, ஆடிப் போயிருப்பேன். நீயானா, ரொம்ப அமைதியா இருக்க. சாரி. என்னால உனக்கு அதிகமா உதவி பண்ண முடியாது. ஏதாவது சின்னத் தொகைதான் கடனாக் கொடுக்க முடியும்" என்றான் சம்பத், சங்கடத்துடன்.
"நீ இப்படிச் சொன்னதே போதும்டா! இப்போதைக்கு சமாளிச்சுக்கிட்டிருக்கேன். கொஞ்ச நாள்ள எல்லாம் சரியாயிடும்னு நினைக்கிறேன்" என்றான் பாஸ்கர்.
"ஆஸ்பத்திரி செலவுக்கெல்லாம் என்ன செஞ்சே? மெடிகல் இன்ஷ்யூரன்ஸ் இருந்ததா?"
"அதெல்லாம் எதுவும் இல்ல. கம்பெனியோட மெடிகல் வெல்ஃபேர் ஸ்கீம்ல கொஞ்சம் பணம் வரலாம். இப்ப நான் சஸ்பென்ஷன்ல இருக்கறப்ப, அதுக்குக் கூட அப்ளை பண்ண முடியாது. மறுபடி வேலையில சேர்ந்தாதான், முடியும். என் மனைவிக்குக் கல்யாணத்தில போட்ட நகை கொஞ்சம் இருந்தது. நமக்கு உதவத்தான் அடகுக் கடைகள் நிறைய இருக்கே! அதனால சமாளிச்சேன். இதுவரையிலேயும் சமாளிச்சாச்சு. நாளைக்கு என்ன பண்ணப் போறேன்னு தெரியாது. ஆனா ஏதாவது வழி கிடைக்கும்னு நம்பிக்கை இருக்கு!" என்றான் பாஸ்கர்.
"எனக்கு இந்த மாதிரி கஷ்டம் வந்தா, எப்படி சமாளிப்பேன்னு நினைக்கவே பிரமிப்பா இருக்கு. நீ இப்படி எல்லாத்தையும் அமைதியா எதிர்கொள்றதைப் பாக்கறப்ப, உன்னைப் பாத்து இந்த குணத்தை நானும் கொஞ்சமாவது வளர்த்துக்கணும்னு நினைக்கிறேன்!" என்றான் சம்பத், நெகிழ்ச்சியுடன்.
பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 63
இடுக்கண் அழியாமை (துன்பத்தால் அழிந்து போகாமல் இருத்தல்)
குறள் 623:
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.
பொருள்:
வெள்ளம் போல் கரை கடந்த துன்பம் வந்தாலும், அறிவுடையவன், தன் மனத்தால் தளராமல் எண்ணிய அளவிலேயே, அத்துன்பம் அழியும்.
No comments:
Post a Comment