Monday, September 26, 2022

626. காந்திமதியின் கவலை!

காந்திமதி வைரவனைக் கைப்பிடித்தபோது அவன் ஒரு சிறிய நிறுவனத்தில் உதவியாளனாக இருந்தான்.

சுமாரான சம்பளம்தான். இந்தச் சம்பளத்தில் இருவர் வாழ்க்கை நடத்த முடியும். குழந்தைகள் பிறந்து விட்டால் எப்படிச் சமாளிப்பது என்று காந்திமதி கவலைப்பட்டாள்.

ஆனல் வைரவன் அது பற்றியெல்லாம் யோசித்தது போல் தெரியவில்லை.

 காந்திமதி தன் கவலையை வைரவனிடம் தெரிவித்தபோது, "இப்ப நாம ரெண்டு பேருதானே இருக்கோம்? வர வருமானம் நம்ம ரெண்டு பேருக்குப் போதும். எதிர்காலத்தில வரக் கூடிய பிரச்னைகளைப் பத்தி இப்பவே ஏன் நினைச்சுக் கவலைப்படணும்?" என்றான்.

அவர்களுக்குக் குழந்தைகள் பிறந்த சமயத்தில் வைரவனுக்குப் பதவி உயர்வு கிடைத்து அவன் சம்பளம் உயர்ந்திருந்தது. அதனால் அப்போதும் அவர்களுக்குப் பிரச்னை எழவில்லை.

வைரவனை அவன் முதலாளிக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டதால் நிறுவனத்தில் அவன் நிலையும் அவன் வருமானமும் உயர்ந்து கொண்டே வந்தன.

அவர்கள் மகனும், மகளும் கல்லூரியில் சேர்ந்தபோது வைரவனின் பொருளாதார நிலை நன்றாகவே உயர்ந்திருந்தது. அவர்கள் மகன் மகளின் கல்லூரி நண்பர்கள் "உனக்கென்ன நீ பணக்கார வீட்டுப் பிள்ளை!" என்று சொல்லும் அளவுக்கு!

வசதி பெருகும்போது அவர்கள் செலவும் பெருகிக் கொண்டே வந்தது. வீட்டுக்கு விலை உயர்ந்த வீட்டு உபயோகப் பொருட்கள், மகனுக்கு அதிக விலையில் பைக், மகளுக்கு ஸ்கூட்டர் என்று தாராளமாகச் செலவழித்தான் வைரவன்.

"இப்படி வர பணம் எல்லாத்தையும் செலவழிக்கிறீங்களே, நாளைக்கு நமக்குன்னு நாலு காசு சேர்த்து வைக்க வேண்டாமா?" என்றாள் காந்திமதி.

வைரவன் அது பற்றிக் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.

மகன் மகள் இருவரும் படித்து முடித்து நல்ல வேலைக்குப் போய் அவர்குக்குத் திருமணமும் ஆகி விட்டது. திருமணங்களுக்கும் நிறையச் செலவழித்தான் வைரவன்.

"படிச்சுப் படிச்சு சொன்னேன். நீங்க கேக்கல!" என்றாள் காந்திமதி.

"இப்ப என்ன ஆயிடுச்சு. நல்லாத்தானே இருக்கோம்?" என்றான் வைரவன்.

"நல்லா இருக்கோமா? எவ்வளவோ சம்பாதிச்சீங்க. ஆனா ஒரு வீடு கூட வாங்கல. பையனுக்கும், பெண்ணுக்கும் நிறைய செலவழிச்சீங்க. அவங்க ரெண்டு பேரும் இப்ப  எங்கேயோ தூரத்து ஊர்ல இருக்காங்க. அப்பா அம்மா எப்படி இருக்காங்கங்கற கவலை அவங்களுக்கு இல்ல. பையன் நமக்குப் பணம் எதுவும் அனுப்பறதில்ல. பொண்ணுக்கு அவ குடும்பத்தைப் பத்தி மட்டும்தான் நினைவிருக்கு. நீங்க ரிடயர் ஆயிட்டீங்க. உங்களுக்கு பென்ஷன் கிடையாது. உங்க பி எஃப் பணத்தை பாங்க்ல போட்டு அதில வர வட்டியில நாம வாழ வேண்டி இருக்கு. வீட்டு வாடகை, மற்ற செலவுகள் எல்லாம் அதிகமாகிக்கிட்டே இருக்கு. பாங்க்க்ல கொடுக்கற வட்டி குறைஞ்சுக்கிட்டே இருக்கு. இப்படியே போனா இந்தப் பணம் எத்தனை நாளைக்கு வரும்னே தெரியல!" என்று பொரிந்து தள்ளினாள் காந்திமதி.

"நமக்கு நிறைய வருமானம் இருந்தபோது நல்லா வாழ்ந்தோம். இப்ப வருமானம் இல்லேன்னா அதுக்கேத்தாப்பல வசதியைக் குறைச்சுப்போம். இனிமே வரக் கூடிய பிரச்னைகளைப் பத்தி இப்பவே ஏன் கவலைப்படணும்? " என்றான் வைரவன் அமைதியான குரலில்.

அரசியல் இயல்
அதிகாரம் 63
இடுக்கண் அழியாமை  (துன்பத்தால் அழிந்து போகாமல் இருத்தல்)

குறள் 626:
அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர்.

பொருள்:
செல்வம் வந்தபோது இதைப் பெற்றோமே என்று பற்றுக் கொண்டு காத்தறியாதவர் வறுமை வரும்போது இழந்தோமே என்று அல்லல்படுவரோ?

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...