Sunday, September 18, 2022

810. போட்டியாளர்

"இந்த ஆர்டர் நமக்குக் கிடைச்சது பெரிய விஷயம் சார்! சாந்தி இண்டஸ்டிரீஸோட போட்டி போட்டு நாம ஜெயிச்சது சாதாரண விஷயம் இல்ல!" என்றார் ரமேஷ் இண்டஸ்டிரீஸின் பொது மேலாளர் ராமன்.

"ஆமாம். சாந்தி இண்டஸ்டிரீஸ் பெரிய நிறுவனம். தொழில்ல நாம அவங்களுக்குப் போட்டியா இருக்கறதில ஏற்கெனவே சாந்தகுமாருக்கு என் மேல கோபம். எங்கேயாவது என்னைச் சந்திச்சா ஒரு விரோதியைப் பாக்கற மாதிரிதான் பார்ப்பாரு. நான் வணக்கம் சொன்னாக் கூட பார்க்காத மாதிரி முகத்தைத் திருப்பிப்பாரு. இப்ப அவர் இன்னும் கோபமா இருப்பாரு!" என்றார் ரமேஷ் இண்டஸ்டிரீஸின் உரிமையாளரான ரமேஷ்.

"ஆனாஒரு பிரச்னை இருக்கே சார்!"

"ஆமாம். இவ்வளவு பெரிய ஆர்டரை நம்மால நிறைவேற்ற முடியாது. ஒரு பகுதியை வேற நிறுவனங்களைத் தயாரிக்கச் சொல்லணும். ஆர்டர்ல குறிப்பிட்டிருக்கிற ஸ்பெசிகேஷன்படி நல்ல தரத்தோட தயாரிக்கக் கூடிய ஒரு நிறுவனத்தைத் தேடணும். நான் சில பேர்கிட்ட பேசிப் பாக்கறேன். நீங்களும் முயற்சி பண்ணுங்க"

மூன்று நாட்களுக்குப் பிறகு ராமனைத் தன் அறைக்கு அழைத்த ரமேஷ், "நம் ஆர்டரில ஒரு பகுதியைத் தயாரிக்க ஒரு கம்பெனியோட பேசி முடிவு பண்ணிட்டேன். பிரச்னை தீர்ந்தது!" என்றார்.

"எந்த கம்பெனி சார்?" என்றார் ராமன் ஆவலுடனும் வியப்புடனும்.

"சாந்தி இண்டஸ்டிரீஸ்தான்!" என்றார் ரமேஷ் சிரித்துக் கொண்டே.

"இது சரியா வருமா சார்? அவங்க நம்மை விரோதிகளா நினைக்கிறாங்களே! நமக்குக் கெட்ட பேரு வாங்கிக் கொடுக்கணுங்கறதுக்காக வேணும்னே ஏதாவது தப்பா பண்ணிட்டாங்கன்னா?"

"அப்படியெல்லாம் நடக்காது. சாந்தகுமார்கிட்ட பேசிட்டேன். இந்த ஒத்துழைப்பு இந்த ஆர்டருக்கு மட்டும்தான். மத்தபடி நாம அவங்களோட போட்டி போட்டுக்கிட்டுத்தான் இருப்போம்!"

"அவங்களை எப்படி சார் நம்பறது?"

"ராமன்! நம்ம லைன்ல இருக்கிற சில கம்பெனிகளோட பேசிப் பார்த்தேன். அவங்களால நமக்கு வேண்டிய தரத்தில செஞ்சு கொடுக்க முடியுமன்னு எனக்கு நம்பிக்கை இல்ல. அப்புறம்தான் சாந்தி இண்டஸ்டிரீஸையே கேக்கலாம்னு தோணிச்சு  அவங்க நம்மை விரோதிகளாப் பார்த்தாலும் சாந்தகுமாரை நான் நம்பறதுக்கு ஒரு காரணம் இருக்கு!"

"என்ன சார் காரணம்?"

"இப்ப நீங்க இங்கே பத்து வருஷமா மானேஜரா இருக்கீங்க. நாம ரெண்டு பேரும் நண்பர்கள் மாதிரிதான் பழகறோம். நீங்க திடீர்னு ரிஸைன் பண்ணிட்டு நம்ம போட்டி கம்பெனி எதிலேயாவது போய் வேலைக்கு சேர்ந்தா..."

"என்ன சார் இது? நான் அப்படிச் செய்வேனா? நாம நண்பர்கள் மாதிரிதான் பழகறோம்னு நீங்களே சொன்னீங்களே!" என்றார் ராமன் சற்றுப் பதட்டத்துடன்.

"நீங்க அப்படிப் பண்ண மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும். ஆனா சாந்தகுமார் கிட்ட மானேஜரா இருந்தவர் அப்படி செஞ்சாரு!"

"அப்படியா? சரி. அதுக்கும் நீங்க சாந்தகுமாரை நம்பறதுக்கும் என்ன சம்பந்தம்?"

"இருங்க. கதையை நான் இன்னும் சொல்லி முடிக்கல. சாந்தகுமார்கிட்ட மானேஜரா இருந்த கணபதி அவரோட சிறு வயது நண்பர். சாந்தகுமார் கிட்ட வேலை செஞ்சுக்கிட்டிருந்தப்ப கூட அவர் சாந்தகுமாரை வாடா போடான்னுதான் கூப்பிடுவாரு. அவ்வளவு நெருக்கமா உரிமையாப் பழகிக்கிட்டிருந்தவர் அங்கேருந்து ரிஸைன் பண்ணிட்டு அதிக சம்பளம் கொடுக்கறாங்கங்கறதுக்காக ஒரு போட்டி கம்பெனிக்கு வேலைக்குப் போனாரு. அங்கே போனப்பறம் சாந்தகுமாரோட சில வாடிக்கையாளர்களைத் தன் புது கம்பெனிக்கு இழுக்கவும் முயற்சி செஞ்சாரு!"

"அடப்பாவி! நண்பனுக்கு இப்படி யாராவது துரோகம் செய்வாங்களா?" என்றார் ராமன்.

"ஆனா பிசினஸ் சரியில்லாததால அந்த கம்பெனியை கொஞ்ச நாள்ளேயே மூடிட்டாங்க. வேலை போனவுடனே கணபதி சாந்தகுமார்கிட்ட வந்து மன்னிப்புக் கேட்டாரு. சாந்தகுமார் அவர் செஞ்சதையெல்லாம் மறந்து அவரை மறுபடி வேலைக்கு சேத்துக்கிட்டாரு. தனக்கு துரோகம் செஞ்ச நண்பனையை விரோதியா நினைக்காம மறுபடி ஏத்துக்கிட்டவரு சாந்தகுமார். அதனாலதான் தொழில்முறையில நமக்குப் போட்டியாளர்னாலும் அவர் ஒரு நல்ல மனிதர்ங்கறதால அவரை நம்பி அவரோட உதவியைக் கேட்கலாம்னு நான் நினைச்சேன்!" என்றார் ரமேஷ்.

"உங்களோட முடிவு சரியானதுதான் சார்!" என்றார் ராமன்.

 பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 81
பழைமை (நீண்டகால நட்பு) 

குறள் 810:
விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.

பொருள்: 
பழைய நண்பர்கள் பிழையே செய்தாலும், அவருடன் பகை கொள்ளாது தம் நட்பை விடாதவர், பகைவராலும் விரும்பப்படுவர்.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...