Tuesday, September 20, 2022

812. புதிய வீட்டில் கிடைத்த நட்பு

அழைப்பு மணி அடித்ததும் கதவைத் திறந்து பார்த்தாள் லட்சுமி.

"வணக்கம். என் பேரு தயாளன். நான் மூணாவது மாடியில இருக்கேன். நீங்க இங்கே புதுசாக் குடி வந்திருக்கீங்க இல்ல?" என்றார் வெளியே நின்றவர்.

"ஆமாம். ரெண்டு நாள் முன்னாலதான் வந்தோம்."

"செகரட்டரி சொன்னாரு. சார் இல்லையா?"

"அவரு இன்னும் ஆஃபீஸ்லேந்து வரலையே. என்ன விஷயம்?" என்றாள் லட்சுமி.

"விஷயம் எதுவும் இல்ல. புதுசா வந்திருக்கறதால உங்களைப் பார்த்து அறிமுகப்படுத்திக்கிட்டு ஏதாவது உதவி வேணுமான்னு கேக்கத்தான் வந்தேன். சார் வந்தப்பறம் வந்து பாக்கறேன்" என்று சொல்லி விடைபெற்றார் தயாளன்.

பிறகு நாதன் வீட்டில் இருந்தபோது வந்து அவரைப் பார்த்துப் பேசி விட்டுப் போனார் தயாளன். அப்போது தன் மனைவியையும் அழைத்து வந்து லட்சுமிக்கு அறிமுகம் செய்து வைத்தார். 

சற்று நேரம் பேசி விட்டு இருவரும் கிளம்பினார்கள். கிளம்பும்போது, தயாளன், "செகரட்டரி கிட்ட உங்களை அறிமுகப்படுத்தி வைக்கறேன். ஏதாவது பிரச்னைன்னா அவர் கிட்டே சொன்னா தீர்த்து வைப்பார்" என்றார்.

"பரவாயில்ல. இப்ப வேண்டாம். ஏதாவது பிரச்னைன்னா, அவர்கிட்ட சொல்றேன்" என்றார் நாதன்.

சில நாட்கள் கழித்து, "புதுசா  இந்த அபார்ட்மென்ட்டுக்கு வந்தப்பறம் இங்கே நமக்குத் தெரிஞ்சவங்க யாரும் இல்லையேன்னு நினைச்சேன். நல்லவேளையா தயாளன் குடும்பத்தோட நட்பு நமக்குக் கிடைச்சது!" என்றாள் லட்சுமி..

"ஆமாம். பொதுவா அபார்ட்மென்ட்கள்ள யாரும் பக்கத்து அபார்ட்மென்ட்ல இருக்கறவங்க யாருன்னு தெரிஞ்சுக்கக் கூட முயற்சி செய்ய மாட்டாங்க. ஆனா தயாளன் தானே வந்து நம்மகிட்ட அறிமுகப்படுத்திக்கிட்டாரு. அப்புறம் அவர் மனைவியையும் அழைச்சுக்கிட்டு வந்து உங்கிட்ட அறிமுகப்படுத்தினாரு. எங்கிட்ட ரொம்ப நல்லாப் பழகறாரு. ரொம்ப ஃப்ரண்ட்லியான மனுஷன்!" என்றார் நாதன்.

"ஆமாம். அவர் மனைவியும் எங்கிட்ட நல்லாத்தான் பழகறாங்க" என்றள் லட்சுமி..

ரண்டு மூன்று வாரங்கள் கழித்து, ஒருநாள் "என்னங்க இப்பல்லாம் தயாளன் மனைவி இங்கே வரதில்ல. முன்னெல்லாம் அடிக்கடி வருவாங்க. நான் அவங்க வீட்டுக்குப் போயிருந்தேன். அப்பவும் அவங்க எங்கிட்ட சரியாப் பேசல. வேற ஏதோ வேலையில மும்முரமா இருக்காங்கன்னு நினைக்கிறேன்!" என்றாள் 

"இருக்கலாம்!" என்றார் நாதன்.

இரண்டு நாட்கள் கழித்து "தயாளன் மனைவி பத்தி நீ சொன்னப்ப, அவங்களுக்கு வேற வேலையோ, பிரச்னையோ இருக்கும்னு நினச்சேன். ஆனா இப்பதான் கவனிக்கிறேன். தயாளனும் எங்கிட்ட சரியாப் பேசறதில்ல. என்னைப் பாத்தாலும் பாக்காத மாதிரி போறாரு!"  என்றார் நாதன் தன் மனைவியிடம்.

"ஏன், உங்க மேல ஏதாவது கோபமா?"

"ஆமாம். கோபம்தான். இப்பதான் எனக்கே புரியுது!" என்றார் நாதன் சிரித்தபடி.

"எதுக்குக் கோபம்? நீங்க என்ன செஞ்சீங்க?"

"செய்யலேன்னுதான் கோபம்."

"என்ன செய்யல?"

"தயாளன் எங்கிட்ட அறிமுகப்படுத்திக்கிட்டு என்னோட பழகினதே நான் புளூமூன் டிவியில உயர்ந்த பதவியில இருக்கேங்கறதாலதான்னு இப்பதான் எனக்குப் புரியுது. எங்க டிவியில நடக்கற பாட்டுப் போட்டி நிகழ்ச்சியில கலந்துக்க அவரோட பெண்ணுக்கு ஒரு வாய்ப்பு வாங்கிக் கொடுக்க முடியுமான்னு நாலஞ்சு நாள் முன்னால எங்கிட்ட கேட்டாரு. அதுக்குன்னு ஒரு தேர்வுமுறை இருக்கு, அதன்படிதான் யாரையும் தேர்ந்தெடுப்பங்கன்னு சொன்னேன். நான் சொன்னதைப் புரிஞ்சுக்கிட்டு அதோட விட்டுடுவார்னு நினைச்சேன். ஆனா அதுக்கப்பறம் அவர் மனைவி உங்கிட்டேந்து ஒதுங்கிப் போனதையும், தயாளனும் எங்கிட்டேந்து விகிப் போறதையும் பாத்தப்பறம்தான் எனக்கு உண்மை புரிஞ்சுது" என்றார் நாதன்.

"இப்படிப்பட்ட ஆட்களோட சிநேகிதமே நமக்கு வேண்டாம். அவங்க விலகிப் போனதே ரொம்ப நல்லது!" என்றாள் லட்சுமி.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 82
தீ நட்பு

குறள் 812:
உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்.

பொருள்: 
தமக்கு பயன் உள்ள போது நட்பு செய்து பயன் இல்லாத போது நீங்கிவிடும் தகுதியில்லாதவரின் நட்பைப் பெற்றாலும் என்ன பயன், இழந்தாலும் என்ன பயன்?
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...