பரமுவின் தந்தை சிவம் இறந்ததும், பலரும் வந்து அவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.""மன உறுதி உள்ளவர்."
"என்ன பிரச்னை வந்தாலும் தைரியமா எதிர்கொள்வார்."
"ரொம்ப நகைச்சுவை உணர்வு உள்ளவர்."
இது போன்று சிவத்தைப் பற்றிப் பல கருத்துக்கள் கூறப்பட்டன.
சிவம் இறந்து சில நாட்களுக்குப் பிறகு, பரமு தன் தாய் உமாவிடம் கேட்டான்.
"ஏம்மா, அப்பா ரொம்ப மன உறுதி உள்ளவர், எதுக்கும் கலங்க மாட்டார்னெல்லாம் பல பேர் சொல்றாங்களே, அதெல்லாம் உண்மையா, இல்ல, இறந்து போனவரைப் பத்தி ஒப்புக்காகச் சொல்ற உபசார வார்த்தைகளா?"
"ஏன் அப்படிக் கேக்கற? உனக்குத் தெரியாதா, உன் அப்பாவைப் பத்தி?" என்றாள் உமா.
"அப்பா பொதுவா சிரிச்சுப் பேசிக்கிட்டுத்தான் இருப்பாரு. ஆனா ஏதாவது பிரச்னை வந்தா, ரூமுக்குள்ள போய்க் கதவைத் தாழ்ப்பாள் போட்டுப்பாரு. அரைமணி நேரம் கழிச்சுத்தான் வருவாரு. அதனால, அப்பாவுக்குக் கஷ்டங்களைத் தாங்கற மனநிலையோ, பிரச்னைகளை எதிர்கொள்கிற மனநிலையோ கிடையாதுன்னுதான் நான் நினைச்சுக்கிட்டிருக்கேன்!"
"அது சரிதான். ஆனா, அரை மணி நேரம் கழிச்சு ரூம்லேந்து வெளியில வந்தப்பறம், அவரு எப்படி இருப்பாருன்னு கவனிச்சிருக்கியா?"
"அப்ப, தெளிவாயிடுவாரு. முகத்தில சிரிப்பு கூட இருக்கும்."
"அது எப்படின்னு யோசிச்சியா?"
"ரூம்ல போய் அழுதுட்டு வருவாருன்னு நினைக்கிறேன். மனம் விட்டு அழுததும், கொஞ்சம் தெளிவு வருமோ என்னவோ!"
"பரமு! நீ ரெசிடென்ஷியல் ஸ்கூல்ல படிச்சதால, வீட்டில அதிகமா இருந்ததில்ல. அதனால, உன் அப்பாவைப் பத்தி நீ அதிகமாத் தெரிஞ்சுக்கல. சரி, உன் அப்பா உன்னை எந்த மாதிரிப் புத்தகங்கள் எல்லாம் படிக்கச் சொல்லுவாரு?"
"நகைச்சுவைப் புத்தகங்களைப் படிக்கச் சொல்லுவாரு. ஆனா, அவர் சொன்ன பி ஜி வோட்ஹவுஸ், கல்கி, தேவன், அப்புசாமி கதைகள் இதெல்லாம் படிக்கறதில எனக்கு ஆர்வம் இல்ல. நான் கிரைம் திரில்லர்ஸ்தான் படிப்பேன். ஆனா, அப்பா என்னை வற்புறுத்தினது இல்ல. ஆமாம், இதை ஏன் இப்ப கேக்கற?"
"உன் அப்பா நகைச்சுவை உணர்வு உள்ளவர்னு இதிலேந்து உனக்குப் புரியலியா?"
"இருக்கலாம். ஆனா, அவரால கஷ்டங்களைத் தாங்க முடியலேங்கறது உண்மைதானே!" என்றான் பரமு.
"அவர் அந்த ரூமுக்குள்ள போய் என்ன செய்வார்னு உன்னால புரிஞ்சுக்க முடியலியா?"
"ஏதாவது படிப்பாரா? ஆனா, புத்தக அலமாரி முன்னறையிலதானே இருக்கு? அந்த ரும்ல ஒரு சின்ன மேஜையும் நாற்காலியும்தானே இருக்கு!"
வாசலில் ஏதோ குரல் கேட்டது.
"சரி. நீ போய் அந்த ரும்ல அந்த மேஜையோட இழுப்பறையில என்ன இருக்குன்னு பாத்துட்டு வா. பழைய பேப்பர் வாங்கறவர் வந்திருக்காரு. நான் போய் பழைய பேப்பரை எடுத்துக் கொடுத்துட்டு வந்துடறேன்" என்று கூறி விட்டு, முன்னறைக்குச் சென்றாள் உமா.
உமா திரும்பி வந்தபோது, பரமு ஒரு நீண்ட நோட்டுப் புத்தகத்தைப் பிரித்துப் படித்துக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் சிரிப்பு வழிந்து கொண்டிருந்தது.
"என்ன?" என்றாள் உமா.
"எல்லாம் ரொம்பப் பிரமாதமான நகைச்சுவை கார்ட்டூன்கள். பாத்தா சிரிப்பு வராம இருக்காது. எத்தனை தடவை பாத்தாலும், புதுசாப் பாக்கற மாதிரி சிரிப்பு வரும்னு நினைக்கிறேன். அப்பா இதை எல்லாம் பாக்கத்தான் இந்த ரூமுக்கு வருவாரா?" என்றான் பரமு.
"ஆமாம். மனசுக்கு வருத்தமா ஏதாவது நடந்தா, உங்கப்பா இங்கே வந்து உக்காந்து, இந்த கார்ட்டூன்களப் பாத்து சிரிச்சு, அரை மணி நேரத்தில தன் மூடை மாத்திப்பாரு, இதையெல்லாம் பார்த்து சிரிச்சுட்டு வந்தா, எந்தக் கஷ்டம் வந்தாலும் பூன்னு ஊதித் தள்ளிடலாங்கற மாதிரி ஒரு தைரியம் வரும்னு அவர் நிறைய தடவை எங்கிட்ட சொல்லி இருக்காரு."
"அம்மா, எப்பவும் போல, கத்திரிக்கோலால கட் பண்ணின பேப்பரையெல்லாம் எடுத்து வச்சுட்டேன். மீதி பேப்பர்களை மட்டும் எடை போடறேன்!" என்று வாயிற்புறத்திலிருந்து பழைய பேப்பர் வாங்குபவரின் குரல் கேட்டது.
"உன் அப்பா செஞ்ச வேலைதான் இது. ஞாயிற்றுக்கிழமை பேப்பர்ல வர எல்லா நகைச்சுவை கார்ட்டூன்களையும் கத்திரிக்கோலால வெட்டி, இது மாதிரி நோட்டில ஒட்டி வச்சுடுவாரு!" என்றாள் உமா சிரித்தபடி.
பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 63
இடுக்கண் அழியாமை (துன்பத்தால் அழிந்து போகாமல் இருத்தல்)
குறள் 621:
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்.
பொருள்:
துன்பம் வரும்போது (அதற்காகக் கலங்காமல்), நகுதல் வேண்டும், அந்தத் துன்பத்தைக் கடந்து மேலே செல்ல உதவுவது, அதைப் போன்று வேறு எதுவும் இல்லை.
No comments:
Post a Comment