"உங்க நண்பர் சங்கர்தானே இங்கே பிராஞ்ச் மானேஜரா இருக்காரு? அவருக்கு நீங்க எவ்வளவோ உதவி செஞ்சிருக்கீங்களே! அவர் ரெகமண்ட் பண்ணினா, உங்க ஹெட் ஆஃபீஸ்ல ஒத்துக்க மாட்டாங்களா?" என்றாள் சாரதா.
"அவன் ரெகமண்ட் பண்ணி இருக்கான் ஆனாலும், ஹெட் ஆஃபீஸ்ல ஒத்துக்க மாட்டேன்னுட்டாங்க."
"அவன் ரெகமண்ட் பண்ணல!" என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தான் அவன் அலுவலக நண்பன் சேகர். அவன் உள்ளே நுழைந்தபோதே, அவர்கள் பேசியது அவனுக்குக் கேட்டிருக்க வேண்டும்.
"என்னடா சொல்ற?" என்றான் செல்வராகவன்.
"இப்பதான் ஹெட் ஆஃபீஸ்ல பர்ஸனல் டிபார்ட்மென்ட்ல இருக்கற என் நண்பன்கிட்ட பேசினேன். டிரான்ஸ்ஃபர் பாலிசியிலேந்து உன்னை மாதிரி ஒரு மூத்த அதிகாரிக்கு விலக்குக் கொடுத்தா, அதைச் சுட்டிக் காட்டி, டிரான்ஸ்ஃபர் ஆர்டர் வந்திருக்கற இன்னும் சில பேர் விலக்குக் கேட்பாங்க. அது நிறுவனத்துக்கு நல்லது இல்லைன்னு ஹெட் ஆஃபீசுக்கு எழுதி இருக்கான் உன்னோட அருமை நண்பன் சங்கர்!" என்றான் சேகர்.
"ஸ்ட்ராங்கா ரெகமெண்ட் பண்ணி இருக்கேன்னு சொன்னானே எங்கிட்ட?"
"மனிதாபிமானம் இல்லாம நடந்துக்கறவனுக்குப் பொய் சொல்றது ஒரு பெரிய விஷயமா?" என்றான் சேகர்
"என்னங்க உங்க நண்பர் இப்படிப் பண்ணிட்டாரு? நீங்க ரெண்டு பேரும் ஒண்ணாத்தான் வேலைக்குச் சேர்ந்தீங்க. வேலைக்குச் சேர்ந்த நாலஞ்சு வருஷத்தில அவருக்கு டிரான்ஸ்ஃபர் உத்தரவு வந்தப்ப, அவருக்கு ஏதோ குடும்பப் பிரச்னைங்கறதுக்காக, ஆஃபீஸ்ல சொல்லி, அவரோட டிரான்ஸ்ஃபரை நீங்க வாங்கிக்கிட்டுப் போனீங்க. நான் கூடக் கேட்டேன் என்னதான் நண்பர்னாலும், அதுக்காக இவ்வளவு பெரிய உதவி செய்வாங்களான்னு! அதுக்கு நீங்க, 'எப்படியும் ஒண்ணு ரெண்டு வருஷத்தில எனக்கும் டிரான்ஸ்ஃபர் வரும். என் நண்பனுக்கு உதவறத்துக்காகக் கொஞ்சம் முன்னாலேயே போறேன், அவ்வளவுதான்!'னு சொன்னீங்க. இன்னிக்கு அவர் உங்களை விட சீக்கிரம் புரொமோஷன் கிடைச்சு பிராஞ்ச் மானேஜர் ஆயிட்டாரு. அன்னிக்கு அவருக்கு அவ்வளவு பெரிய உதவி செஞ்ச உங்களுக்கு, உங்க கோரிக்கையை ஆதரிச்சு ஹெட் ஆஃபீசுக்கு எழுதற ஒரு சின்ன உதவியைச் செய்யக் கூட அவருக்கு மனசு வல்லை. இவரெல்லாம் ஒரு நண்பரா?" என்று கோபத்துடன் வெடித்தாள் சாரதா.
"அவனோட டிரான்ஸ்ஃபரை நீ உனக்கு மாத்திக்கிட்டியா? அது எனக்குத் தெரியாதே! அதைக் கூட நினைச்சுப் பாக்காத இவன் பக்கத்தில இருக்கறது கூட உனக்கு நல்லது இல்ல. நீ போற இடத்தில உன் அப்பாவுக்கு இன்னும் நல்லபடியாவே சிகிச்சை கிடைக்கும். கவலைப்படாதே!" என்றான் சேகர்.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 82
தீ நட்பு
குறள் 815:
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று.
No comments:
Post a Comment