Saturday, September 10, 2022

620. விரைவில் விலகிய சனி!

"வேலை போயிடுச்சு, வேற வேலை கிடைக்கல. அதுக்காக சும்மா இருக்க முடியுமா? ஏதாவது முயற்சி செஞ்சுதானே ஆகணும்?" என்றான் வேலு.

""முயற்சி செய்யறேன்னுட்டு புதுசு புதுசா ஏதோ தொழில் செய்யறேன்னு இருக்கற பணத்தையும் செலவழிச்சீங்கன்னா அப்புறம் நாம எல்லாரும் நடுத்தெருவுக்கு வர வேண்டியதுதான்!" என்றாள் அவன் மனைவி செல்வி கோபத்துடன்.

"இங்கே பாருடா! இப்ப உனக்கு ஏழரை நாட்டு சனி  நடக்குது. அதனாலதான் உனக்கு வேலை போச்சு. இப்ப நீ எந்த முயற்சி செஞ்சாலும் அது நஷ்டத்திலதான் முடியும். நேரம் சரியாகிற வரைக்கும் புது முயற்சி எதிலேயும் ஈடுபட வேண்டாம்னு ஜோசியர் சொல்லி இருக்காரு!" என்றாள் வேலுவின் தாய் கிருஷ்ணவேணி.

பெரியவர்கள் என்னபேசுகிறார்கள் என்று புரியாமல் அவர்கள் முகங்களை மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள் வேலுவின் மூன்று வயதுப் பெண் ராஜஶ்ரீ.

"ஏழரை நாட்டு சனி போகட்டும்னு அஞ்சாறு வருஷம் நான் சும்மா உக்காந்துக்கிட்டிருந்தா, அது முடிஞ்சு நல்ல காலம் வரப்ப நானே இருக்க மாட்டேம்மா!" என்றான் வேலு சிரித்துக் கொண்டே..

பிறகு மனைவியைப் பார்த்து, "செல்வி! உன்னோட கவலை எனக்குப் புரியுது. நான் உன்னோட நகைகளையோ, அம்மாவோட நகைகளையோ அடகு வைக்கவோ, விக்கவோ இல்ல. என்னோட சேமிப்பிலேந்து கொஞ்சம் எடுத்து முதலீடு செய்யறேன். ஆரம்பத்தில முதலீடு இல்லாத சில ஏஜன்சி எல்லாம் எடுத்துப் பாத்தேன். அதுல எல்லாம் அதிகம் வருமானம் வரலை. நல்ல கம்பெனயில ஏஜன்சி எடுத்தாத்தான் பிசினஸ் நல்லா வரும், வருமானமும் நிறைய வரும். அதுக்குக் கொஞ்சம் முதலீடு செஞ்சுத்தான் ஆகணும். அதைத்தான் நான் செய்யறேன்" என்றான் வேலு.

பிறகு, தன் தாயைப் பார்த்து, "அம்மா! நான் ஜோசியத்தைத் தப்புன்னு சொல்லல. ஜோசியர் சொல்றது சரின்னு வச்சுக்கிட்டாக் கூட, நமக்கு நேரம் சரியில்லாதபோது நாம எல்லாவிதத்திலேயும் முயற்சி செஞ்சு இன்னும் கடுமையா உழைக்கணும்னுதானேஅர்த்தம்? ஜோசியருக்கு ஏழரை நாட்டு சனி வந்தா, அப்ப தனக்கு வருமானம் வராதுன்னு நினைச்சு ஏழரை வருஷம் அவர் ஜோசியம் சொல்றதையே நிறுத்திடுவாரா என்ன?" என்றான் வேலு.

பிறகு ஒரு நிமிடம் கண்ணை மூடி யோசித்த பிறகு, "ஒரு ஆறு மாசத்துக்கு நீங்க ரெண்டு பேரும் என்னை எந்தக் கேள்வியும் கேக்காம என் இஷ்டத்துக்குச் செயல்பட விடுங்க. குடும்பத்துக்குத் தேவையானதை நான் செஞ்சுடறேன். ஒருவேளை என் முயற்சி வெற்றி அடையலேன்னா மேற்கொண்டு என்ன செய்யறதுன்னு நாம மூணு பேரும் சேர்ந்து முடிவு செய்யலாம்" என்றான் வேலு.

ழெட்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் செல்வி வேலுவிடம் கேட்டாள்.

"கொஞ்ச நாளா கவனிச்சுக்கிட்டு வரேன். நீங்க ரொம்ப சோர்வா இருக்கீங்க. லேட்டா வீட்டுக்கு வரீங்க. சரியா சாப்பிடறதில்ல, தூங்கறதில்ல. ஏதாவது யோசிச்சுக்கிட்டே இருக்கீங்க.  ரெண்டு நாள் முன்னாடி ஒரு லட்ச ரூபாய் ஃபிக்ஸட் டெபாசிட்டை கேன்ஸல் பண்ணி எடுத்திருக்கீங்க. எனக்கு ரொம்பக் கவலையா இருக்கு. என்ன நடக்குது? சொல்லுங்க. பெரிய அளவில நஷ்டம் வந்துடுச்சா? நீங்க சொன்ன ஆறு மாசம் தாண்டிடுச்சே?" 

ஒரு நிமிடம் மௌனமாக இருந்த வேலு, பிறகு "ரெண்டு மூணு நாள் கழிச்சு சொல்லலாம்னு பாத்தேன். நீ கேட்டதால இப்பவே சொல்றேன். முதல்ல ரெண்டு மூணு மாசம் கஷ்டமா இருந்தாலும் அதுக்கப்புறம் பிசினஸ் நல்லாப் போக ஆரம்பிச்சுடுச்சு. முத ல்ல கமிஷன் அடிப்படையிலதான் செயல்பட்டுக்கிட்டு வந்தேன். நான் நல்லா செயல்படறதால, இப்ப கம்பெனியில டெபாசிட் எதுவும் இல்லாம ஒரு மாசம் கடன்ல எனக்கு சரக்கு கொடுக்கறேன்னு சொல்றாங்க. சரக்குகளை வித்தப்பறம் பணம் கொடுத்தா போதும். லாபமும் அதிகம் வரும். ஆனா சரக்குகளை வைக்க கோடவுன் வேணுமே! அதுக்குத்தான் இடம் தேடிக்கிட்டிருந்தேன். வாடகை, அட்வான்ஸ் எல்லாமே அதிகமாக் கேக்கறாங்க. அதனாலதான் அலைஞ்சு திரிஞ்சு குறைஞ்ச வாடகையில ஒரு இடத்தைப் பிடிச்சேன். அட்வான்ஸ் ரெண்டு லட்சம் ரூபாய். இத்தனை நாளா கிடைச்ச லாபத்தில குடும்பச் செலவுக்குக் கொடுத்தது போக ஒரு லட்சம் ரூபா சேர்த்து வச்சிருந்தேன். மீதி ஒரு லட்ச ரூபாயுக்காகத்தான் ஃபிக்சட் டெபாசிட்டை கேன்ஸல் பண்ணி எடுத்தேன். இன்னும் ரெண்டு நாள்ள கோடவுனுக்கு சரக்கு வந்துடும். அதுக்கப்பறம் வியாபாரம் நல்லாப் போகும். வருமானமும் சீரா வரும்!" என்றான் வேலு பெருமிதத்துடன்.

"நம்பவே முடியலியே! நான் ஏதோ மோசமா நடந்திருக்கும்னு நினைச்சு பயந்துக்ககிட்டிருந்தப்ப, இப்படி எதிர்பாராத சந்தோஷமான சேதியைச் சொல்றீங்க!" என்றாள் செல்வி ஆனந்தத்துடன். 

"உங்க அம்மாகிட்ட இதைச் சொல்லணும். ரொம்ப கவலைப்பட்டுக்கிட்டிருந்தாங்க" என்றாள் தொடர்ந்து.

"ஆமாம். அவங்க ஜோசியர்கிட்ட போய்க் கேப்பாங்க. அவரு என் ஜாதகத்தைப் பாத்துட்டு சனிக்கு ஏதோ அவசர வேலை வந்ததால ஏழரை வருஷம் இருக்கறதுக்கு பதிலா ரெண்டரை வருஷத்திலேயே கிளம்பிப் போயிட்டாருன்னு சொன்னாலும் சொல்லுவாரு!" என்று சொல்லிச் சிரித்தான் வேலு.

அரசியல் இயல்
அதிகாரம் 62
ஆள்வினையுடைமை (விடாமுயற்சி)

குறள் 620:
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.

பொருள்:
மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவரால், விதியைக் கூட வெற்றி கொள்ள முடியும்.

      அறத்துப்பால்                           (                                  காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...