அப்பா பெரும்பாலும் அம்மாவின் அருகில் அமர்ந்து கொண்டிருப்பார். பல சமயம், இருவரும் பேசிக் கொண்டிருப்பார்கள். அப்படி என்னதான் பேசுவார்களோ தெரியவில்லை!
நானும், சாருவும் வீட்டில் இருக்கும்போது, சில நிமிடங்களுக்கு மேல் பேச எங்களிடம் விஷயம் இருப்பதில்லை. அந்த இரண்டு மூன்று நிமிடங்களிலும், வீட்டு உபயோகப் பொருள் பழுதானது, ஏ சியின் குளிர்ச்சி போதாமல் இருப்பது, எங்கள் குழந்தைகளின் பள்ளிப் பிரச்னைகள் இவை பற்றித்தான் இருக்கும்.
இரண்டு மூன்று நிமிடங்களுக்கு மேல் பேசும் அளவுக்குப் பிரச்னைகள் இல்லை என்பது எங்கள் இருவருக்குமே ஆறுதலான விஷயம்!
"எப்படிம்மா இருக்கே?" என்றேன், அம்மாவிடம்.
அம்மா பலவீனமாகத் தலையை ஆட்டினார்.
"எப்பவும் மாதிரிதான், கொஞ்ச நேரம் அமைதியா, கொஞ்ச நேரம் வலியோடன்னு மாத்தி மாத்தி!" என்றார் அப்பா.
அப்பாவிடம் கண் ஜாடை காட்டி, அவரைத் தனியாக அழைத்தேன்.
அப்பா என்னைத் தொடர்ந்து என் அறைக்கு வந்தார்.
"ஏம்ப்பா, அம்மாவுக்கு உடம்பு முடியல. நீ பாட்டுக்கு அவங்க பக்கத்தில உக்காந்து பேசிக்கிட்டே இருக்கியே!" என்றேன் நான்.
"நான் அவ பக்கத்தில உக்காந்து பேசிக்கிட்டிருக்கறது, அவளுக்கு சந்தோஷமா இருக்கு. அவ வலியைக் கொஞ்சம் மறக்க உதவியா இருக்கு" என்றார் அப்பா.
"எப்படிப்பா, இவ்வளவு உடம்புப் பிரச்னைகளோட, அம்மா உங்கிட்ட சிரிச்சுப் பேசிக்கிட்டிருக்காங்க?" என்றேன் நான், வியப்புடன்.
"உன் அம்மா எப்பவுமே அப்படித்தான். ஏதாவது சின்ன பிரச்னை வந்தா கூட, நான் சுணுங்கிப் போயிடுவேன். உங்கம்மாதான் எனக்கு தைரியம் சொல்லுவா. வீட்டில யாருக்காவது உடம்பு சரியில்லேன்னா, நான் உடனே கவலைப்பட ஆரம்பிச்சுடுவேன். ஆனா உங்கம்மா, 'உடம்புன்னு ஒண்ணு இருந்தா, வியாதின்னு ஒண்ணு வரத்தான் செய்யும். டி வி, மிக்ஸி இதெல்லாம் ரிப்பேர் ஆகறதில்லையா? சில சமயம் சின்ன ரிப்பேரா இருக்கும், சில சமயம் பெரிய ரிப்பேரா இருக்கும், சில சமயம் ரிப்பேரே பண்ண முடியாது'ன்னு சொல்லிட்டுச் சிரிப்பா.
"எனக்கு வேலையில பிரச்னைகள், குடும்பப் பிரச்னைகள், பணப் பிரச்னைகள் வந்தாலும் அப்படித்தான் சொல்லுவா. 'தினமும் ஸ்கூட்டர்ல ஆஃபீஸ் போறீங்களே, நிக்காம நேரேயா போறீங்க? அங்கங்கே சிக்னல்ல நின்னுதானே போறீங்க! சில சமயம் டயர் பஞ்சர் ஆகுது, இல்ல ஸ்கூட்டர் நின்னு போயிடுச்சுன்னா, அதை எங்கேயாவது விட்டுட்டு பஸ்ல போறீங்க. இயல்பா நடக்கற விஷயங்களை நாம ஏத்துக்கணுங்க. இயல்பா விஷயங்கள் நடக்கலேன்னாதான் கவலைப்படணும்.' இது மாதிரி ஏதாவது சொல்லுவா.
"ஆரம்பத்தில எல்லாம், அவ சொல்றது எனக்கு எரிச்சலா இருக்கும். 'நீ வீட்டில உக்காந்துக்கிட்டு ரொம்ப சுலபமாப் பேசற, அனுபவிக்கிறவனுக்குத்தானே கஷ்டம் தெரியும்?'னு எரிச்சலோட பதில் சொல்லுவேன்.
"ஆனா போகப் போக, அவ சொன்னதோட உண்மை புரிஞ்சு, என்னை நானே மாத்திக்கிட்டேன். அப்புறம் பிரச்னைகளை சந்திக்கறது சுலபமா இருந்தது. உங்கம்மாவுக்கு இவ்வளவு உடல்நலப் பிரச்னைகள் இருக்கறப்பவும், அவளால சிரிச்சுக்கிட்டு இயல்பா இருக்க முடியுதுன்னா, அது கஷ்டங்கள் வரது இயல்பான விஷயங்கறதை அவ உணர்ந்து ஏத்துக்கற அவளோட இந்த மனப்பான்மையாலதான்!"
அம்மா என்னிடம் கூட இது போல் பலமுறை சொல்லி இருக்கிறார். ஆனால், நான் அவற்றைப் பொருட்படுத்தியதில்லை. இப்போது அப்பா சொன்ன பிறகுதான், அம்மா எனக்குப் புகட்ட விரும்பிய விஷயங்களின் முக்கியத்துவம் புரிய ஆரம்பித்தது.
"நான் அம்மாகிட்ட நிறையக் கத்துக்கணும்ப்பா. நானும் இனிமே கொஞ்ச நேரமாவது அம்மா பக்கத்தில உக்காந்துகிட்டு, அவங்ககிட்ட பேசி, அவங்க பேசறதையும் கேக்கறேன்!" என்றேன் நான்.
"சீக்கிரமா செய்ய ஆரம்பி. அதிக காலம் இல்லேன்னு நினைக்கிறேன்!" என்றார் அப்பா.
பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 63
இடுக்கண் அழியாமை (துன்பத்தால் அழிந்து போகாமல் இருத்தல்)
குறள் 627:
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்.
பொருள்:
துன்பம் என்பது உயிருக்கும் உடலுக்கும் இயல்பானதே என்பதை உணர்ந்த பெரியோர், துன்பம் வரும் போது அதனைத் துன்பமாகவே கருத மாட்டார்கள்.
No comments:
Post a Comment