Friday, September 16, 2022

809. காட்பாடி சந்திப்பு!

ரயில் காட்பாடி ரயில் நிலையத்தில் வந்து நின்றபோது, ராமு எஸ் 3 கோச் நின்ற இடத்துக்கு விரைந்தான். 

அந்த கோச்சிலிருந்து இறங்குவோரும் ஏறுவோரும் அதிகமாக இருந்தனர். ஜன்னல்களுக்கு வெளியேயும் பலர் நின்று உள்ளே பார்த்துக் கொண்டிருந்தனர்.

கூட்டத்துக்குள் புகுந்த ராமு ஜன்னல் வழியே உள்ளே பார்த்தான். ரயில் நிற்கும் சில நிமிடங்களுக்குள் தன் சிறு வயது நண்பன் கோபியைப் பார்த்து இரண்டு வார்த்தைகள் பேசி விட வேண்டும்.

கோபியும் அவனும் சந்தித்து எவ்வளவோ வருடங்கள் ஆகி விட்டன. கோபிக்கு அஸ்ஸாமில் வேலை கிடைத்துப் போன பிறகு அவன் சொந்த ஊருக்கு வரவேயில்லை. இருவரும் கடிதங்கள் எழுதிக் கொண்டதோடு சரி. அது கூட நாளடைவில் குறைந்து பிறகு நின்றே போய் விட்டது.

தன் கடிதங்களுக்கு கோபியிடமிருந்து பதில் வராததும் ராமுவும் அவனுக்குக் கடிதம் எழுதுவதை நிறுத்திக் கொண்டான். தங்கள் சிறு வயது நட்பு முடிந்து விட்டதோ என்ற உணர்வு அவனுக்கு ஏக்கத்தையும் ஏமாற்றத்தையும் கொடுத்தது.

ஒரு சில வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு, ராமுவுக்கு கோபியிடமிருந்து திடீரென்று ஒரு கடிதம் வந்தது.

தான் ஒரு திருமணத்துக்காக சேலத்துக்கு வருவதாகவும், தன்னால் சென்னைக்கு வர முடியாது என்றும், காட்பாடி ரயில் நிலையத்தில் தன்னை வந்து சந்திக்க முடியுமா என்றும் கோபி எழுதி இருந்தான்.

வருவதாக கோபிக்கு பதில் எழுதிய பிறகுதான், கோபியின் சமீபத்திய புகைப்படத்தைக் கேட்டிருக்கலாமோ என்று ராமுவுக்குத் தோன்றியது. அவர்கள் சந்தித்துப் பத்து வருடங்களுக்கு மேல் ஆகி விட்ட நிலையில் இருவருமே தோற்றத்தில் பெருமளவு மாறி இருக்கலாம்!

ரயில் நிற்கும் சில நிமிடங்களுக்குள் கோபியின் முகத்தை அடையாளம் தெரியாமல் போய் விட்டால்...

தன் முதுகில் யாரோ  தட்டுவதை உணர்ந்து திரும்பிப் பார்த்தான் ராமு. 

கோபி!

உடல் முழுவதும் உற்சாகம் பாய்ந்தது ராமுவுக்கு.

"டேய் கோபி! எப்படிடா இருக்கே? எவ்வளவு வருஷம் ஆச்சு உன்னைப் பாத்து! ஒரே கூட்டமா இருக்கே, ரயில் கிளம்பறத்துக்குள்ள உன்னைப் பாக்க முடியுமான்னு பயந்துக்கிட்டே இருந்தேன். நல்லவேளை, நீயே இறங்கி வந்துட்ட. என்னை சுலபமா அடையாளம் கண்டு பிடிச்சுட்டியா?"

"எத்தனை வருஷம் ஆனா என்ன, என்னோட பெஸ்ட் ஃபிரண்டை என்னால அடையாளம் கண்டு பிடிக்க முடியாம போயிடுமா என்ன? அதோட, நீ ஒண்ணும் மாறல. அப்ப இருந்த மாதிரிதான் இருக்கே!" என்றான் கோபி.

"ஆனா நீ ரொம்ப மாறிட்ட. குண்டா வேற ஆயிட்ட. அஸ்ஸாம் யானை ரொம்ப பிரபலம். ஆனா இப்பதான் நேரில பாக்கறேன்!"

"டேய்!" என்று பெரிதாகச் சிரித்த கோபி, "இந்தக் கிண்டல் மட்டும் உங்கிட்ட அப்படியேதாண்டா இருக்கு!" என்றான்.

"உன்னோட அந்த வெடிச் சிரிப்பு மட்டும் மாறவே இல்லை. யானை சிரிச்சா இப்படித்தான் இருக்கும்னு நினைக்கிறேன்! உன் சிரிப்பு சத்தத்தைக் கேட்டுட்டு எத்தனை பேரு திரும்பி நம்மைப் பாக்கறாங்க பாரு!" என்றான் ராமு.

"ரயில் இன்னும் அஞ்சு நிமிஷம்தான் நிற்கும். உன்னோட சேந்து ஒரு காப்பி சாப்பிடக் கூட நேரமில்லை. ஆமாம், நீ எத்தனை மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பின?"

"நேத்து சாயந்திரமே கிளம்பி ராத்திரி இங்கே வந்து சேர்ந்தேன். ராத்திரி படுக்கை ஸ்டேஷன் பெஞ்ச்லதான்! இல்லாட்டா இந்த விடியக்கால நேரத்தில என்னால இங்கே எப்படி இருக்க முடியும்?"

"எவ்வளவு கஷ்டம்டா உனக்கு! அதுவும் நீ தாம்பரத்திலேந்து ஏழெட்டு கிலோ மீட்டர் தள்ளி வேற இருக்கே. அப்ப நீ ரொம்ப முன்னாலேயே கிளம்பி இருப்பேன்னு நினைக்கிறேன். எப்ப சாப்பிட்ட?" என்றான் கோபி கரிசனத்துடன்.

"ராத்திரி ஸ்டேஷன்ல ஏன்ன கிடைச்சுதோ அதை சாப்பிட்டேன்! அதுக்கென்ன இப்ப? இன்னும் ஏழெட்டு மணி நேரத்தில வீட்டுக்குப் போய் சேர்ந்துட மாட்டேனா? அப்ப சாப்பிட்டுக்கறேன்!" என்ற ராமு, "பாத்தியா மறந்துட்டேன். மீனாட்சி உனக்குக் கொஞ்சம் சப்பாத்தி செஞ்சு கொடுத்திருக்கா. இந்தா!" என்று தன் பையிலிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து கோபியுடம் கொடுத்தான்.

"இவ்வளவு கஷ்டப்பட்டு என்னைப் பாக்க வந்திருக்க. உன் மனைவி பண்ணின அருமையான சப்பாத்தியைப் பைக்குள்ள வச்சுக்கிட்டு ராத்திரி ஸ்டேஷன்ல கிடைச்சதை சாப்பிட்டு வயத்தை நிரப்பிக்கிட்டிருக்க!" என்றான் கோபி. 

நீண்ட நாள் கழித்து நண்பனைப் பார்த்த மகிழ்ச்சியிலும், தன்னைப் பார்க்க நண்பன் எடுத்துக் கொண்ட சிரமத்தை நினைத்ததிலும் கோபிக்கு அழுகை வந்து விடும் போல் இருந்தது.

"பின்னே? நீ அஸ்ஸாம்லேந்து கிளம்பறத்துக்கு முன்னேயே சென்னைக்குப் பக்கத்தில இருக்கற தாம்பரத்துக்குப் பக்கத்தில இருக்கற முடிச்சூருக்குப் பக்கத்தில இருக்கற என் வீட்டிலேந்து கிளம்பி, இவ்வளவு பக்கத்தில இருக்கற இந்த காட்பாடிக்கு வந்திருக்கேனே, சும்மாவா? சப்பாத்தி கூட நேத்திக்கு செஞ்சதுதான். இப்ப எப்படி இருக்குமோ தெரியல, கஷ்டப்பட்டு கடிச்சுத் தின்னுடு!"

"நீ இவ்வளவு கஷ்டப்பட்டு வந்திருக்கறது எனக்கு நிஜமாவே ரொம்ப கஷ்டமா இருக்கு!" என்றான் கோபி உணர்ச்சியுடன்.

"அது இருக்கட்டும்.  நீ ஊரை விட்டுப் போய் பத்து வருஷத்துக்கு மேல இருக்கும் இல்ல?"

"பன்னண்டு வருஷம் ஆயிடுச்சு. 1968- ல போனேன்."

"அப்புறம் நீ ஏண்டா ஊர்ப்பக்கமே வரல? கல்யாணத்தையும் கல்கத்தால பண்ணிக்கிட்டு எங்களையெல்லாம் கல்யாணத்துக்குக் கூட வர முடியாம பண்ணிட்ட!"

"இங்கே எனக்கு யாருடா இருக்காங்க? என் மனைவியோட சொந்தக்காரங்களும் கல்கத்தா, டில்லின்னு வடக்கேதான் இருக்காங்க" என்று கோபி சொல்லிக் கொண்டிருக்கும்போதே ரயில் ஊதியது.

திடீரென்று உணர்ச்சி வசப்பட்டவனாக ராமுவின் கைகளைப் பிடித்துக் கொண்ட கோபி, "டேய் ராமு! ஊரில எனக்கு யாரும் இல்லேன்னு நினைச்சு நான் ஊர்ப்பக்கம் வராதது பெரிய தப்பு. நீ இருக்கியே! உனக்காக நான் ஊருக்கு வந்திருக்கணும். என்னைப் பாக்க நீ இவ்வளவு கஷ்டப்பட்டு வந்ததைப் பாத்தப்பறம்தான் எனக்கே இது உறைக்குது!" என்று கூறி விட்டு நகரத் தொடங்கி விட்ட ரயிலில் விரைந்து ஏறிக் கொண்டான்.

கோபியின் கண்களில் நீர் தளும்பி இருந்ததை ராமுவால் பார்க்க முடிந்தது.

"கண்டிப்பா வரணும். ஆனா நீ மட்டும் வந்தா, நோ என்ட்ரி! கல்கத்தா மேடத்தையும் உன் குழந்தைகளையும் அழைச்சுக்கிட்டு வந்தாதான் உன்னை என் வீட்டுக்குள்ள விடுவேன்!"

ரயில் வேகமெடுத்து விட்ட நிலையில் தான் கூறியது நண்பனுக்கு முழுதாகக் கேட்டிருக்குமா என்று யோசித்தபடியே கையசைத்தான் ராமு.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 81
பழைமை (நீண்டகால நட்பு) 

குறள் 809:
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு.

பொருள்: 
உரிமை கெடாமல் தொன்று தொட்டு வந்த உறவு உடையவரின் தொடர்பைக் கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும்.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...