Saturday, October 1, 2022

817. ஒர்க்கிங் பார்ட்னர்


"தொழில்ல நிறைய விரோதிகள் இருக்கத்தான் செய்வாங்க. அது எதிர்பார்க்கக் கூடியதுதானே?" என்றான் கண்ணன்

"விரோதிகள் இருக்கலாம்தான். அதுக்காக உனக்கு இந்த ப்ராஜக்ட் கிடைக்கக் கூடாதுங்கறதுக்காக எல்லா குறுக்கு வழிகளையும் கையாள்றானே, இந்த ஆறுமுகம், அதை நினைச்சாத்தான் எனக்கு ஆத்திரம் வருது!" என்றான் முருகேசன்.

"நீ ஒர்க்கிங் பார்ட்னரா இருக்கற வரைக்கும் எனக்கு என்ன கவலை?" என்றான் கண்ணன் சிரித்தபடி.

"ஒரு ஒர்க்கிங் பார்ட்னரா இருந்தா மட்டும் நான் இதைப் பத்திக் கவலைப்பட மாட்டேன். உன்னோட நண்பனா இருக்கறதாலதான் நம் தொழில் விரோதிகள் பண்றதைப் பார்த்து எனக்குக் கோபம் வருது!"

"நாமதான் ரொம்ப குறைஞ்ச தொகை கோட் பண்ணி இருக்கோம்னு நினைக்கிறேன். பார்க்கலாம்!" என்றான் கண்ணன்.

னால் அந்த டெண்டர் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அவர்களுக்கு எதிராகக் குறுக்கு வழிகளைக் கையாள்வதாகக் குமரேசனால் குற்றம் சாட்டப்பட்ட ஆறுமுகத்தின் நிறுவனத்துக்கும் கிடைக்கவில்லை.. சாந்தி இண்டஸ்ட்ரீஸ் என்ற ஒரு சிறிய நிறுவனத்துக்குத்தான் கிடைத்தது.

"ஹலோ!" என்றான் கண்ணன்.

"என்ன கண்ணன், கோட்டை விட்டுட்டீங்க போல இருக்கே!"  என்றார் மறுமுனையில் பேசிய ஆறுமுகம்.

"நீங்களும்தானே!"

"நான் கோட் பண்ணினது ரொம்பப் பெரிய தொகைக்கு. ஆனா சாந்தி இண்டஸ்ட்ரீஸ் உங்களை விட ஆயிரம் ரூபா குறைச்சலா கோட் பண்ணி டெண்டர்ல ஜெயிச்சுட்டாங்களே! எப்படின்னு யோசிச்சீங்களா?" என்றார் ஆறுமுகம்.

"டெண்டர்ல இதெல்லாம் சகஜம்தானே?"

"எது? உங்களை விட ஆயிரம் ரூபா மட்டும் குறைச்சு கோட் பண்றதா?  கோட் ஆயிரங்கள்ள இருக்கணுங்கறதால இப்படி! அந்த கண்டிஷன் இல்லேன்னா சினிமாவில எல்லாம் வர மாதிரி, உங்களை விட ஒரு ரூபா குறைச்சு கோட் பண்ணி இருப்பாங்க!"

"நீங்க என்ன சொல்ல வரீங்க?"

"தொழில் முறையில நான் உங்களோட எதிரிதான். நான் உங்களோட நேரடியா மோதறவன். ஆனா உங்க கூடவே இருந்து ஒத்தன் உங்களுக்குக் குழி பறிச்சிருக்கானே, அது உங்களுக்குத் தெரியுமா?"

"குமரேசனையா சொல்றீங்க? அவன் என் நண்பன்!" என்றான் கண்ணன். சொல்லும்போதே அன்று கண்ணன் அலுவலகத்துக்கு வரவில்லை என்பதும், காலையிலிருந்தே அவன் தொலைபேசி ஸ்விட்ச் ஆஃப் செய்திருப்பதும் சற்று நேரமாகவே தன் அடிமனதில் உறுத்திக் கொண்டிருந்ததை அவன் உணர்ந்தான்.

"யோசிச்சுப் பாருங்க. சாந்தி இண்டஸ்ட்ரீஸ் சமீபத்திலதான் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம். அவங்களால எப்படி இந்த ப்ராஜக்டுக்கு கோட் பண்ண முடியும், அதுவும் உங்களை விட ஆயிரம் ரூபா குறைவா? சாந்தி இண்டஸ்ட்ரீஸ் குமரேசனோட உறவினரோட நிறுவனம்னு கேள்விப்பட்டேன். அவனே உண்மையான உரிமையாளராவும் இருக்கலாம். உங்ககிட்டேந்து அவன் போகறதுக்கு முன்னால உங்க கம்பெனியில அவன் பணமோசடி ஏதாவது செஞ்சிருக்கானான்னு செக் பண்ணுங்க. செஞ்சிருந்தா, தயங்காம போலீஸ் புகார் கொடுங்க. இவனை மாதிரி நண்பனா நடிச்சு ஏமாத்தறவனையெல்லாம் சும்மா விடக் கூடாது!" என்று சொல்லி ஃபோனை வைத்தார் ஆறுமுகம்.

கண்ணன் தன் மின்னஞ்சல் செய்திகளை அவசரமாகப் பார்த்தான். சொந்தக் காரணங்களுக்காகத் தான் விலகுவதாகக்  குமரேசனிடமிருந்து ஒரு மின்னஞ்சல் செய்தி சில நிமிடங்களுக்கு முன் வந்திருந்தது.

நட்பியல்
அதிகாரம் 82
தீ நட்பு

குறள் 817:
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.

பொருள்: 
சிரித்துப் பேசி நடிப்பவர்களின் நட்பைக் காட்டிலும் பகைவர்களால் ஏற்படும் துன்பம் பத்துக்கோடி மடங்கு நன்மையானது என்று கருதப்படும்.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...