Tuesday, August 23, 2022

807. மீண்டும் சந்தித்தபோது....

ஒரு திருமண நிகழ்ச்சியில் மனைவியுடன் அமர்ந்திருந்த சுந்தரம், தனக்கு முன்னால் நான்கைந்து வரிசைகள் தள்ளி அமர்ந்திருந்த ஒரு நபரைப் பார்த்து விட்டு, "அட! செல்வராஜ் வந்திருக்கான் போல இருக்கே! பார்த்துப் பேசி விட்டு வந்துடறேன்!" என்றார்.

"இப்ப எதுக்குங்க? முகூர்த்தம் முடிஞ்சதும், தனியா எங்கேயாவது அழைச்சுக்கிட்டுப் போய்ப் பேசுங்க!" என்றாள் அவர் மனைவி, சற்றுப் பதட்டத்துடன்.

ஆனால், மனைவி சொன்னதைக் காதில் வாங்காதவர் போல், சுந்தரம் எழுந்து செல்வராஜ் அமர்ந்திருந்த இடத்துக்குச் சென்றார்.

சுந்தரமும், செல்வராஜும் கல்லூரியில் சேர்ந்து படித்ததுடன், ஒரே நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றியவர்கள். 

இருவரும் ஒரே நேரத்தில் ஒரே நிலையில் வேலைக்குச் சேர்ந்தாலும், சுந்தரம் வேகமாகப் பதவி உயர்வுகள் பெற்று, செல்வராஜை விட மூன்று படிகள் மேலே போய், டெபுடி ஜெனரல் மானேஜர் என்ற நிலைக்குச் சென்று விட்டார்.

தான் உயர்ந்த நிலைக்குச் சென்றபோதும், சுந்தரம் செல்வராஜிடம் எப்போதும் போலவே நட்பு பாராட்டி வந்தார்.

சுந்தரத்துக்கு ஜெனரல் மானேஜராகப் பதவி உயர்வு கிடைக்கப் போகிறது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிறுவனத்துக்கான மூலப் பொருட்கள் கொள்முதல் செய்யும் பொறுப்பிலிருந்த அவர், குறைந்த விலை கோட் செய்த நிறுவனத்திடம் பொருட்களை வாங்காமல், அதிக விலை கோட் செய்த நிறுவனத்திடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு, அவர்களிடமிருந்து அதிக விலைக்குப் பொருட்களை வாங்கி, நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படுத்தி விட்டார் என்று தலைமை அலுவலகத்துக்கு ஒரு புகார் சென்றது.

தலைமை அலுவலகம் அந்தப் புகாரை விசாரிக்க முடிவு செய்தது. அதற்குள் ஜெனரல் மானேஜர் பதவி காலியானதால், சுந்தரத்தின் மீது புகார் இருந்த நிலையில், சுந்தரத்தின் ஜூனியர் ஒருவரை ஜெனரல் மானேஜராக நியமித்து விட்டனர்.

விசாரணை முடிய ஆறு மாதங்கள் ஆகி விட்டன. குறைவாக கோட் செய்ததாக அளிக்கப்பட்ட கடிதம் போலி என்றும், அது போன்ற கோட் எதுவும் வரவில்லை என்றும், சுந்தரத்தின் மீது பழி சுமத்தி அவருடைய பதவி உயர்வைத் தடுப்பதற்காக, யாரோ வேண்டுமென்றே அவ்வாறு ஒரு போலிக் கடிதத்தைத் தயாரித்திருப்பதாகவும் விசாரணை முடிவில் தெரிந்தது. 

மேலும் விசாரணை செய்ததில், அந்தப் போலிக் கடிதத்தைத் தயாரித்து அனுப்பியது செல்வராஜ்தான் என்று தெரிந்தது. 

இந்த விஷயம் வெளியே தெரிந்ததும், செல்வராஜ் விடுமுறையில் சென்று விட்டார். சுந்தரம் செல்வராஜைச் சந்திக்க முயன்றபோது, அவர் தன் குடும்பத்துடன் வெளியூருக்குச் சென்று விட்டதாகத் தெரிந்தது.

அதற்குப் பிறகு. ஓரிரு மாதங்களில் சுந்தரம் பதவி ஓய்வு பெற்று விட்டார். உடல்நலக் குறைவைக் காரணம் காட்டித் தன் விடுப்பை நீடித்த செல்வராஜ், விடுப்பிலிருந்தபடியே பதவி ஓய்வு பெற்று விட்டதாக சுந்தரம் தெரிந்து கொண்டார்.

செல்வராஜ் போலிக் கடிதத்தைத் தயாரித்துத் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பியதை நிரூபிக்க முடியாது என்பதாலும், அவர் பதவி ஓய்வு பெறும் நேரம் என்பதாலும், நிறுவனம் செல்வராஜின் மீது நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை.

ஆனால், அதைச் செய்தவர் செல்வராஜ்தான் என்பது நிறுவனத்தில் அனைவருக்கும் சந்தேகமின்றித் தெரிந்தது.

ஓய்வுக்குப் பின், சுந்தரம் தன் சொந்த ஊரில் குடியேறி விட்டதால், அவரால் அதற்குப் பிறகு செல்வராஜைச் சந்திக்க முடியவில்லை. 

செல்வராஜிடம் பேசி விட்டு, சுந்தரம் திரும்பி வந்து தன் மனைவியின் அருகில் அமர்ந்ததும், "கல்யாண வீட்டில அவரோட சண்டை போடப் போறீங்களேன்னுதான், முகூர்த்தம் முடிஞ்சப்பறம் வெளியில போய்ப் பேசுங்கன்னு சொன்னேன். நீங்க என்னன்னா, அவரோட சிரிச்சுப் பேசிட்டு வரீங்க! ஏன் எனக்கு இப்படி ஒரு கெடுதல் பண்ணினேன்னு அவர்கிட்ட நீங்க கேக்கலியா?" என்றாள் அவர் மனைவி.

"அது எப்பவோ நடந்தது. தனக்குப் பதவி உயர்வி கிடைக்காதப்ப, எனக்கு மட்டும் வேகமா பதவி உயர்வு கிடைக்குதேங்கற ஆதங்கத்தில, ஆத்திரப்பட்டு ஏதோ செஞ்சுட்டான். அதுக்காக, அத்தனை வருஷமா அவன் என் நண்பனா இருந்தது இல்லேன்னு ஆயிடுமா? பழையபடி ஒரு நண்பனாத்தான் அவன்கிட்டபேசிட்டு வந்தேன்!" என்றார் சுந்தரம்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 81
பழைமை (நீண்டகால நட்பு) 

குறள் 807:
அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்.

பொருள்: 
தம் நண்பர் தமக்கு அழிவு தருவனவற்றையே செய்தாலும், நெடுங்காலமாக நட்பை உடையவர், நண்பர்மீது தாம் கொண்ட அன்பை விட்டு விடமாட்டார்.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...