Wednesday, October 5, 2022

629. துளசிப் பிரசாதம்!

"'கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினும் கொடிது இளமையில் வறுமை' ன்னு ஔவையார் சொன்னது எவ்வளவு உண்மை!" என்றேன் நான்.

"அப்படியா?" என்றான் அழகேசன்.

"உனக்கென்ன தெரியும் வறுமையைப் பத்தி? நீ பணக்கார வீட்டுப் பிள்ளை. பன்னீர்ல குளிச்சுட்டு பால்சோறு சாப்பிடறவன்!"

"இல்லையே! நான் பச்சைத் தண்ணியிலதான் குளிக்கிறேன். உன்னை மாதிரியே சோறும் குழம்பும்தான் சாப்பிடறேன். உன் டிஃபன் பாக்ஸ்ல இருக்கற மாதிரி மிளகாப்பொடி தடவின இட்லிதான் என் டிஃபன் பாக்ஸ்லயும் இருக்கு!" என்றான் அழகேசன் சிரித்தபடி.

"நீ பேசுவடா! என்னை மாதிரி காசுக்குக் கஷ்டப்படற குடும்பத்தில பொறந்திருந்தாத்தானே உனக்கு வறுமையைப் பத்தித் தெரியும்?  காலணா, அரையணாவுக்குக் கூட என் அம்மாவும் அப்பாவும் சண்டை போட்டுப்பாங்க தெரியுமா?"

"எங்கப்பா அம்மா கூட  எத்தனையோ விஷயங்களுக்காகச் சண்டை போட்டுப்பாங்க!"

"எதுக்கு? காரை எடுத்துக்கிட்டு பீச்சுக்குப் போகறதா, இல்லை சினிமா டிராமாவுக்குப் போகறதாங்கறதுக்காகவா?" என்றேன் நான் ஆத்திரத்துடன்.

அழகேசன் கோபப்படவில்லை. என் நகைச்சுவையை ரசிப்பது போல் சிரித்து விட்டுப் போய் விட்டான்.

வாதத்தில் வென்று விட்டதாக நான் பெருமையாக உணர்ந்தாலும், அழகேசனிடம் நான் வீம்புக்காகப் பேசுவதாக எனக்குள் தோன்றிய எண்ணத்தை என்னால் உணர முடிந்தது.

அப்போது நாங்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தோம். பணம் என்பது வாழ்க்கையில் எப்போதுமே ஒரு பிரச்னையாக இருக்காது என்ற நிலையிலிருந்த குடும்பத்தில் பிறந்த அழகேசனுக்கும், தினசரி வாழ்க்கைக்காகப் போராடும் குடும்பத்தில் பிறந்த எனக்கும் எதனாலோ ஒரு நட்பு ஏற்பட்டு விட்டது.

ஆயினும் அழகேசனின் செல்வநிலையையும், என் வறிய நிலையையும் ஒப்பிட்டுப் பொறாமை கொண்டு அவனிடம்  என் பொறாமையை வெளிப்படுத்தும் விதத்தில் அவ்வப்போது பேசி என் ஆற்றாமையைத் தீர்த்துக் கொள்வேன் நான்.

அழகேசன் வசதிகளை அனுபவிக்கும் நிலையில் இருந்தாலும் அவன் அவற்றை அனுபவிப்பதில் அதிக ஈடுபாடில்லாமல் என் போன்ற நண்பர்களுடன் பழகுவதையே அதிகம் விரும்பினான் என்பது அப்போதே என் உள்மனதுக்குப் புரிந்திருக்க வேண்டும். ஆயினும் மேலோங்கி நின்ற என் பொறாமை அவ்வப்போது வெளிப்பட்டு வந்தது. 

ஆனால் அவன் என் பேச்சால் காயப்படாமல் என்னிடம் தொடர்ந்து காட்டிய அன்பு காலப்போக்கில் என் மனதையும் மாற்றி அவனிடம் இயல்பாகப் பழக வைத்து விட்டது.

காலம் என்பது ஒரு சமன் செய்யும் கருவி என்று சொல்வார்கள். எங்கள் இருவர் விஷயத்திலும் காலம் அதைத்தான் செய்தது.

படித்து, நல்ல வேலையில் சேர்ந்து, பணம் சம்பாதித்து நான் ஒரு வசதியான நிலைக்கு வந்து விட்டேன்.

ஆனால் அழகேசன் நிலை தலைகீழாக மாறி விட்டது. அவன் படிப்பை முடிக்குமுன்பே அவன் தந்தையின் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் அவர் எல்லாவற்றையும் இழந்து சாதாரண நிலைக்கு வந்து விட்டார்.

அழகேசனுக்கு நல்ல வேலை கிடைக்கவில்லை. குறைந்த சம்பளித்தில்  வேலை பார்த்துக் கொண்டு ஏதோ ஒரு வகையில் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தான்.

எனக்கும் அழகேசனுக்கும் இடையிலான நட்பு அப்படியேதான்இருந்தது.

அவன் வசதியாக இருந்தபோது அவனிடம் பொறாமையுடன் இருந்த குற்ற உணர்வு எனக்கு இருந்தாலும், எங்கள் நிலை மாறியபோதும், அவனுடன் தொடர்ந்து நட்புடன் இருப்பதில் எனக்கு ஒரு பெருமையும், திருப்தியும் இருந்தது.

வசதியாக வாழ்ந்து விட்டு இப்போது ஒரு சாதாரண நிலைக்கு வந்து விட்டது பற்றி வருத்தம் இல்லையா என்று ஒருமுறை அழகேசனிடம் நான் கேட்டேன்.

"எனக்கு அப்படி ஒண்ணும் தெரியல. நமக்கு எது கிடைக்குதோ அதை அப்படியே ஏத்துக்கறதுதான் என்னோட பழக்கம். தினமும் கோவிலுக்குப் போவேன்னு உனக்குத் தெரியுமே. கோவில்ல துளசி கொடுப்பாங்க. சில சமயம் துளசி புதுசா, பச்சையா இருக்கும், வாயில போட்டாலே விறுவிறுன்னு இருக்கும். சில நாள் துளசி  வாடி இருக்கும். கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் சாப்பிடணும். ஆனா பிரசாதம்னு நினைச்சு அதை அப்படியே ஏத்துக்கறோம் இல்ல, அது மாதிரிதான் வாழ்க்கையில நமக்கு நடக்கற விஷயங்களும். சின்ன வயசிலேயே என் அம்மா எனக்கு இதைச் சொல்லிப் புரிய வச்சிருக்காங்க. அதனாலதான் என்னால எல்லாத்தையும் இயல்பா எடுத்துக்க முடியுதுன்னு நினைக்கிறேன்!" என்றான் அழகேசன்.

இப்படிப்பட்ட மனப்பான்மை கொண்டவனிடம் ஒரு காலத்தில் பொறாமை கொண்டு இருந்திருக்கிறேனே என்பதை நினைத்து அவமானமாக உணர்ந்தேன்.

அரசியல் இயல்
அதிகாரம் 63
இடுக்கண் அழியாமை  (துன்பத்தால் அழிந்து போகாமல் இருத்தல்)

குறள் 629:
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.

பொருள்:
இன்பம் வந்த காலத்தில் அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவர் துன்பம் வந்த காலத்தில் அந்தத் துன்பத்தால் வருந்த மாட்டார்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...