Monday, September 19, 2022

811. ரயில் பயணத்தில் ஏற்பட்ட நட்பு!

ஒரு ரயில் பயணத்தின்போது கணேசனுக்கு அறிமுகமானவன்தான் இந்திரன். 

கணேசனிடம் உடனே ஏற்பட்டு விட்ட பிடிப்பினால் அவனுடைய மொபைல் எண்ணை வாங்கிக் கொண்டான் சந்திரன்.

ரயில் பயணத்தில் சந்தித்து இரண்டு வாரங்களுக்குப்பிறகு கணேசனுக்கு ஃபோன் செய்தான் சந்திரன்.

"நான் சந்திரன் பேசறேன்!"

"சந்திரனா? எந்த சந்திரன்?" என்றான் கனேசன்.

"ஒரு சந்திரன்தானே உண்டு வானத்தில!" என்று சொல்லிச் சிரித்த சந்திரன், "என்ன கணேசன், அதுக்குள்ள மறந்துட்டீங்களா? ரயில்ல சந்திச்சோமே!" என்றான்.

"ஓ, நீங்களா? சட்டுனு தெரியல!"

சற்று நேரம் இருவரும் பொதுவாகப் பேசிக் கொண்டனர்.

இன்னும் சில முறை ஃபோனில் பேசிய பிறகு இருவருக்கும் இடையே ஒரு நெருக்கம் ஏற்பட்டது. 

ஓரிரு முறை நேரில் சந்தித்துப் பேசிய பிறகு ஒருமையில் பேசிக் கொள்ளும் அளவுக்கு இருவரும் நெருக்கமானார்கள்.

சந்திரன் தன் மனைவியுடன் கணேசன் வீட்டுக்கு ஒருமுறை வந்தான்.கிளம்பும்போது கணேசனையும் அவன் மனைவியையும் தன் வீட்டுக்கு வரும்படி அழைத்தான்.

சந்திரன் கிளம்பிச் சென்றதும், "ஒரு நாளைக்கு அவங்க வீட்டுக்குப் போயிட்டு வரலாம்!" என்றான் கணேசன்

"எதுக்கு?" என்றாள் அவன் மனைவி வந்தனா.

"கூப்பிட்டிருக்கான் இல்ல? அவங்க நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க. நாமும் போயிட்டு வரதுதானே மரியாதை?"

"எனக்கு அவங்க வீட்டுக்குப் போறதில ஆர்வம் இல்ல. நீங்க வேணும்னா போயிட்டு வாங்க!" என்றாள் வந்தனா.

"உனக்கு எதனாலேயோ சந்திரனைப் பிடிக்கலேன்னு நினைக்கிறேன்!"

"பிடிக்கிறது, பிடிக்கலேன்னு இல்ல. ஏதோ ரயில்ல பார்த்தோம், பேசினோம்.  அதுக்கப்பறம் அவரு உங்ககிட்ட நட்பு பாராட்டறாரு. உங்களுக்கே இதில அதிக ஆர்வம் இல்லேன்னு நினைக்கிறேன். அவரு  உங்க்கிட்ட நெருக்கமா இருக்கறதால நீங்களும் நெருக்கமா இருக்க முயற்சி செய்யற மாதிரிதான் எனக்குத் தோணுது!" என்றாள் வந்தனா.

ணேசன் பதில் பேசவில்லை. 

"சந்திரன் என் மேல கோவமா இருப்பான்னு நினைக்கிறேன்!" என்றான் கணேசன் வந்தனாவிடம்.

"ஏன், நாம அவர் வீட்டுக்குப் போகலேங்கறதாலயா?"

"அதில்ல. அவன் ஏதோ பிசினஸ் பண்ணப் போறானாம். அவன் வாடகை வீட்டில இருக்கறதால நம்ம வீட்டு அட்ரஸை பிசினஸ் அட்ரஸாப் பயன்படுத்திகலாமான்னு கேட்டான். 'அட்ரஸ் மட்டும்தான் இதுவா இருக்கும், ஆனா, நான் என் வீட்டில இருந்தபடியேதான் பிஸினஸ் பண்ணப் போறேன். உனக்கு எந்த பாதிப்பும் வராது' ன்னு சொன்னான். நான் அதுக்கு ஒத்துக்கல. நண்பனுக்காக இந்தச் சின்ன உதவி கூடச் செய்யலேன்னா நீ எல்லாம் என்ன நண்பன்?'னு கோபமாக் கேட்டுட்டுப் போயிட்டான்."

"நல்ல வேளை! நண்பன் கேக்கறான்னு ஒத்துக்காம இருந்தீங்களே!" என்றாள் வந்தனா.

"அவன் என் மேல கோபமா இருக்கறதுதான் எனக்கு வருத்தமா இருக்கு."

"அவர் உண்மையான நண்பரா இருந்தார்னா தான் கேட்ட உதவியைச் செய்யலேங்கறதுக்காக உங்க மேல கோபப்பட மாட்டாரு. இதுக்காக்க் கோவிச்சக்கிட்டு உங்க நட்பை முறிச்சுக்கிட்டாருன்னா அது உங்களுக்கு நல்லதுதான். எனக்கென்னவோ அவர் ஏதோ நன்மையை எதிர்பார்த்துத்தான் உங்களோட நட்பா இருந்திருக்காருன்னு தோணுது. உண்மையான நண்பரா இருந்தா மறுபடி அவரு இந்தக் கோபத்தை மறந்துட்டு உங்ககிட்ட நட்பாவே இருப்பாரு. பார்க்கலாம், அவர் என்ன செய்யறாருன்னு!" என்றாள் வந்தனா.

அதற்குப் பிறகு சந்திரன் கணேசனைத் தொடர்பு கொள்ளவில்லை.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 82
தீ நட்பு

குறள் 811:
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது.

பொருள்: 
அன்பு மிகுதியால் உருகுபவர்போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதை விடத் தேய்ந்து குறைவது நல்லது.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...