Tuesday, August 30, 2022

619. தானாக வந்த வாய்ப்பு

ஐந்து வருடங்களுக்கு முன் தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து 'இசைபட வாழ்தல்' என்ற இசைக்குழுவை பூபதி துவங்கினான்.

இசைக்குழுவைத் தொடங்கிய புதிதில் மிகவும் உற்சாகத்துடன் பல இசை அமைப்புகளுக்கும், இசையை வளர்ப்பதற்காகவே தங்களை அர்பணித்துக் கொண்டிருப்பதாகக் கூறிக் கொண்ட சங்கீத சபாக்களுக்கும் சென்று அவர்கள் வாய்ப்புக் கேட்டனர். ஆனால் யாரும் அவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்க முன்வரவில்லை.

பிறகு அவர்கள் தாங்களே செலவு செய்து இசை அரங்குகளை வாடகைக்கு எடுத்து இலவச இசை நிகழ்ச்சிகளை நடத்த ஆரம்பித்தனர். அந்த நிகழ்ச்சிகளுக்கு சங்கீத சபாக்கள், இசை வல்லுனர்கள், ஊடகத்துறையினர், திரை இசைக்கலைஞர்கள் என்று பலருக்கும் அழைப்பு விடுத்தனர்.

ஆனால் அவர்கள் அழைப்பை ஏற்று யாரும் அவர்கள் நிகழ்ச்சிக்கு வந்ததாகத் தெரியவில்லை.

இலவச நிகழ்ச்சி என்றாலும், அவர்களால் அதிகம் செலவு செய்து விளம்பரம் செய்ய முடியாததால் அவர்கள் நிகழ்ச்சிகளுக்குப் பார்வையாளர்கள் மிகவும் குறைவாகவே வந்தனர்.

இசை நிகழ்ச்சிகளுக்கு வந்தவர்கள் நிகழ்ச்சியை ரசித்துக் கைதட்டிப் பாராட்டியும், சிலர் நிகழ்ச்சி முடிந்ததும் மேடைக்கு வந்து அவர்களைப் பாராட்டியும் அவர்களை ஊக்குவித்தாலும் அவற்றால் பலன் ஏதும் ஏற்படவில்லை.

ஒருமுறை ஒரு சிறு பத்திரிகையில் அவர்கள் இசைக்குழுவைப் பாராட்டி ஒரு கட்டுரை வந்தது. அதை எத்தனை பேர் படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. கட்டுரையை எழுதியவர் ஃபோன் செய்து இவர்களுக்குத் தெரிவித்த பிறகுதான் இவர்களே தேடிப் பிடித்து அந்தப் பத்திரிகையை வாங்கிப் படித்தனர்!

ஆனால் அதிகம் பேர் படிக்காத அந்தப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இசைக்குழுவை ஆரம்பித்தபோது அவர்களுக்கு இருந்த உற்சாகமும், ஆர்வமும், இந்த ஐந்து ஆண்டுகளில் சிறிது சிறிதாகக் கரைந்து தங்கள் இசைக்குழுவைக் கலைத்து விட்டு வேறு எதிலாவது ஆர்வம் செலுத்தலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் எதிர்பாராத அந்த வாய்ப்பு வந்தது.

நகரின் புகழ் பெற்ற சங்கீத சபாக்களில் ஒன்றான, 'தேவகான சபா'வின் செயலாளரிடமிருந்து அவர்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. 

சமீபத்தில் நடந்த அவர்கள் இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்த அவர் அவர்களுடைய திறமையைப் புரிந்து கொண்டு அவர்களுக்குத் தங்கள் சபையில் வாய்ப்புக் கொடுக்க முன் வந்தார்.

அவர் தொலைபேசியில் பேசிய அடுத்த நாளே, நிகழ்ச்சியை உறுதி செய்து அந்த சபாவிலிருந்து ஒரு மின்னஞ்சல் செய்தி வந்தது. அந்தச் செய்தியில் நிகழ்ச்சி நடக்கும் தேதி, பிற விவரங்களுடன் இசை நிகழ்ச்சிக்காக அவர்களுக்கு அளிக்கப்படும் சன்மானமும் குறிப்பிடப்பட்டிருந்தது.

சன்மானமாகக் குறிப்பிடப்பட்டிருந்த தொகையைப் பார்த்ததும் பூபதிக்கு மூச்சே நின்று விடும் போல் இருந்தது. மூன்று மணி நேர இசை நிகழ்ச்சிக்கு இவ்வளவு பெரிய தொகை கிடைக்கும் என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

"இவ்வளவு வருஷம் கழிச்சு இப்படி ஒரு அருமையான வாய்ப்பு வந்திருக்கு! இதை நாம்  சிறப்பா பயன்படுத்திக்கணும். இதை நாம சிறப்பா செஞ்சுட்டா நமக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்" என்றான் பூபதி.

"தேவகான சபாவில நம்ம நிகழ்ச்சி நடக்கிறதே நமக்கு நல்ல பப்ளிசிடிதான். எல்லோருக்கும் நம்மைப் பத்தித் தெரிஞ்சுடும்" என்றான் அவன் நண்பன் பாஸ்கர்.

"ரெண்டு மாசம் அவகாசம் இருக்கு. நல்லா ரிகர்சல் பண்ணி இதுவரைக்கும் நாம பண்ணாத அளவுக்குப் பிரமாதமா நம்ம நிகழ்ச்சியை நாம செய்யணும்" என்றான் பூபதி.

அடுத்த நாளே ரிகர்சலைத் தொடங்கி விட்டார்கள்.

நிகழ்ச்சி நடக்க வேண்டிய  நாளுக்கு ஒரு வாரம் முன்பு தேவகான சபாவிலிருந்து அவர்களுக்கு மின்னஞ்சலில் ஒரு செய்தி வந்தது. "எதிர்பாராத காரணங்களால்" அவர்கள் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருப்பதாக அந்தச் செய்தி அறிவித்தது.

பூபதி பாஸ்கரை அழைத்துக் கொண்டு தேவகான சபா அலுவலகத்துக்குச் சென்றான். அங்கே சபாவின் தலைவரைப் பார்க்கப் பலர் காத்திருந்தனர்.  செயலாளர் அவர் அறையில் இல்லை. ஒருவேளை தலைவரின் அறையில் இருப்பார் என்று அவர்கள் நினைத்தனர்.

வரிசையாக ஒவ்வொருவராகத் தலைவர் அறைக்குச் சென்று திரும்பினர். அனைவருமே ஓரிரு நிமிடங்கள்தான் உள்ளே இருந்தனர். வெளியே வந்தவர்கள் முகத்தில் மலர்ச்சி இல்லை.

பூபதியின் முறை வந்தபோது இருவரும் தலைவரின் அறைக்குச் சென்றனர்.

"இங்கே செயலாளரா இருந்தவரு சில நிதிமுறைகேடுகள்ள ஈடுபட்டிருக்காரு. அதனால அவரை சஸ்பெண்ட் பண்ணி இருக்கோம். அதோட அவர் ஏற்பாடு செஞ்ச எல்லா நிகழ்ச்சிகளையும் ரத்து பண்ணிட்டோம். போலீஸ்ல புகார் கொடுத்திருக்கோம். போலீஸ் விசாரணை முடிஞ்சப்பறம்தான் மறுபடி எங்க செயல்பாடுகளைத் தொடங்குவோம். அதுக்கு எத்தனை மாசம் ஆகும்னு தெரியாது. ஐ ஆம் சாரி!" என்றார் தலைவர்.

"சார்! நீங்க எங்களுக்கு ஈமெயில் மூலமா நிகழ்ச்சியை உறுதிப்படுத்தி இருக்கீங்க. இதுக்காக நாங்க ரெண்டு மாசமா ரொம்பவும் கஷ்டப்பட்டு ரிகர்சல் பண்ணி இருக்கோம். ஒவ்வொரு ரிகர்சலுக்கும் ஆர்ட்டிஸ்டுகளுக்குப் பணம் கொடுக்கணும். அவங்க தங்களோட இசைக்கருவிகளை எடுத்துக்கிட்டு வரதுக்காக டாக்சிக் கட்டணம் கொடுக்கணும். இதுக்காக எங்க பணமும், நேரமும் செலவாகி இருக்கு. இப்ப நீங்க எப்படி கான்சல் பண்ண முடியும்?" என்றன் பூபதி கோபத்துடன்.

தலைவர் சிரித்தபடியே, "எந்தக் காரணமும் குறிப்பிடாம, நிகழ்ச்சி எப்ப வேணும்னா ரத்து செய்யப்படலாம், அதற்கு இழப்பீடு எதுவும் கிடையாதுன்னு ஒரு நிபந்தனை அந்த ஈமெயில்லே இருந்ததே, அதை நீங்க கவனிக்கலியா? சாரி! உங்க இழப்பு எங்களுக்குப் புரியுது. ஆனா எங்களால எதுவும் செய்ய முடியாது. எங்க வக்கீல்  யோசனைப்படிதான் இதை செஞ்சிருக்கோம்!" என்றார் தலைவர்.

"என்னடா இப்படி ஆயிடுச்சு? எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் நாம இவ்வளவு கஷடப்பட்டு ரிகர்சல் பண்ணினதில்ல. அத்தனை முயற்சியும் பலன் இல்லாம போயிடுச்சே!" என்றான் பாஸ்கர் ஆற்றாமையுடன்.

"என்ன செய்யறது? நம்ம அதிர்ஷ்டம் அப்படி இருக்கு! இதைத்தான் விதின்னு சொல்றாங்க போலருக்கு. நம்ம குழுவில யாருக்குமே தலையெழுத்து சரியில்ல போலருக்கு!" என்றான் பூபதி.

பூபதியின் கைபேசி ஒலித்தது.

"ஆமாம்.... சொல்லுங்க...ம்..ம்..அப்படியா? என்னிக்கு? நிச்சயமா! அது ஒரு பிரச்னை இல்லை சார். ரொம்ப நன்றி!"

"என்ன? தேவகான சபால வேற தேதியில நிகழ்ச்சியை வச்சுக்கலாங்கறாங்களா?" என்றான் பாஸ்கர் விளையாட்டாக.

"அது இல்ல. ஆனா அது மாதிரிதான்! இளைஞர் இலக்கிய மன்றத்தோட செயலாளர்தான் பேசினார். நாம தேவகான சபாவில இருந்தபோது அவரும் அங்கே இருந்திருக்காரு. அவங்க நிகழ்ச்சிக்காக தேவகான சபாவில ஹால் புக் பண்ணி கான்சல் ஆகி இருக்கு. அதுக்காக அவர் வந்திருக்காரு. இப்ப வேற ஹால் புக் பண்ணி இருக்காராம். அவங்க நிகழ்ச்சியோட முடிவில ஒரு மணி நேரம் இசை நிகழ்ச்சி நடத்த முடியுமான்னு கேக்கறாரு. அவங்களால ஒரு சின்னத் தொகைதான் கொடுக்க முடியுமாம். இதுவரைக்கும் நாம ரிகர்சலுக்கு செலவழிச்ச பணம் வந்துடும்னு நினைக்கிறேன். ஆனா அவங்க நிகழ்ச்சிக்கு நிறைய கூட்டம் வரும். அதனால நமக்கு நல்ல பப்ளிசிடி கிடைக்கும்னு சொல்றாரு. சரின்னு சொல்லிட்டேன்!" என்றான் பூபதி.

"பரவாயில்ல. பணம் கிடைக்காட்டாலும், நாம் பண்ணின ரிகர்சல் வீண் போகல. அவரு சொல்றபடி நமக்கு பப்ளிசிடி கிடைச்சு எதிர்காலத்தில நமக்கு உதவலாம்!" என்றான் பாஸ்கர்.

அரசியல் இயல்
அதிகாரம் 62
ஆள்வினையுடைமை (விடாமுயற்சி)

குறள் 619:
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

பொருள்:
விதியின் காரணத்தால் ஒரு செயலில் நமக்கு வெற்றி கிட்டாவிட்டாலும்,  உடலை வருத்திச் செயல்பட்டதற்கான கூலியை முயற்சி கிடைக்கச் செய்யும்..

      அறத்துப்பால்                           (                                  காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...