Thursday, September 29, 2022

628. கைவிட்டுப் போன வீடு!

கல்லூரிரியில் படிக்கும்போதே பரந்தாமனுக்கு அவன் நண்பர்கள் சாமியார் என்று பெயர் வைத்து விட்டார்கள்.

"ஏண்டா சிகரெட், தண்ணிதான் கிடையாது. சினிமாவுக்குக் கூடவா வர மாட்டே?" என்றான் அவன் நண்பன் அண்ணாமலை.

"போனவாரம்தானே போயிட்டு வந்தோம்?"

"நாங்கள்ளாம் சினிமாவுக்குப் போய் ஒரு வாரம் ஆயிடுச்சேன்னு நினைக்கிறோம். நீ என்னடான்னா ஒரு வாரம் முன்னாலதானே போயிட்டு வந்தோங்கற! கல்யாணமாவது பண்ணிப்பியா,  இல்லை, நிஜமாவே சாமியாராத்தான் இருக்கப் போறியா?"

கல்யாணம் செய்து கொண்டான்.

ஆரம்பத்தில் அவன் மனைவி சரசுவும் அவன் சாமியார் மாதிரி இருக்கிறானே என்று நினைத்தாள். ஆனால் காலப்போக்கில் தன் கணவன் வாழ்க்கையின் சுகங்களை அளவோடு ரசிப்பவன், அதிகம் ஆசைப்படாதவன் என்று புரிந்து கொண்டாள்.

ஆயினும், அவளுடைய தேவைகளையும், விருப்பங்களையும் பரந்தாமன் நிறைவேற்றி வந்ததால், சரசு மகிழ்ச்சியாகத்தான் இருந்தாள்.

"என்னங்க இந்த வீடு உங்க பூர்வீக சொத்து. இதை உங்களுக்கு இல்லேன்னு சொல்லிட்டாங்களே, இது அநியாயமா இல்ல?" என்றாள் சரசு.

"என்ன செய்யறது? என் அப்பாவுக்குப் பூர்வீகமா வந்ததுதான் இந்த வீடு. அப்பாவுக்கப்பறம் எனக்கு சொந்தமா இருந்தது. என் அப்பாவோட சித்தப்பா  வீடு தனக்குத்தான் சொந்தம்னு போட்ட கேஸ்ல எத்தனையோ வருஷம் கழிச்சு இப்ப அவருக்கு சாதகமா தீர்ப்பு வந்திருக்கு!" என்றான் பரந்தாமன்.

"இப்ப இந்த வீட்டை விட்டு நாம எங்க போறது? உங்க சம்பளத்தில வாடகை கொடுத்து கட்டுப்படியாகுமா? பிள்ளைங்க படிப்பு வேற இருக்கு!" என்றாள் சரசு கவலையுடன்.

"இத்தனை வருஷமா இந்த வீட்டை அனுபவிச்சோம். இப்ப இது நம்மோடது இல்லேன்னதும் விட்டுட்டுப் போக வேண்டியதுதான். என் வருமானத்துக்குள்ள வாடகை கொடுத்துக்கிட்டு வாழறது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். தாங்கிக்கத்தான் வேணும்!"

'உங்களால முடியும். என்னால முடியுமான்னு தெரியல'
 என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டள் சரசு.

அரசியல் இயல்
அதிகாரம் 63
இடுக்கண் அழியாமை  (துன்பத்தால் அழிந்து போகாமல் இருத்தல்)

குறள் 628:
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.

பொருள்:
இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிக் கொள்பவன் துன்பத்தினால் வருந்த மாட்டான்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...