"ஏன் திரும்பத் திரும்ப இப்படிச் செய்யறாரு?" என்றாள் செண்பகலட்சுமி, கவலையுடன்.
"நம்ம மேல உள்ள விரோதத்தினாலதான். நேரடியா நமக்கு எதிரா ஏதாவது செஞ்சா தப்பாயிடும். நம்ம மாடு அவன் வயல்ல போய் மேஞ்சுதுன்னு சொல்லி அதைப் பிடிச்சுக் கட்டினா, அவனைத் தப்பு சொல்ல முடியாது இல்ல? நான் அவங்கிட்ட போய்க் கெஞ்சித்தானே ஆகணும்? ஒவ்வொரு தடவையும் பயிர்களை மேஞ்சதுக்கு நஷ்ட ஈடுன்னு வேற இருநூறு ரூபா வாங்கிடறான்."
"நம்ம மாடு அங்கே போகாதபடி செய்ய முடியாதா?"
"எல்லாருமே மாட்டை வெளியிலதான் மேய விடுவாங்க. வயல் பக்கம் வந்தா, அங்கே இருக்கறவங்க விரட்டி விடுவாங்க. இவன் வேணும்னே மாட்டை விரட்டாம, வயல்ல ஓரமாக் கொஞ்சம் மேய விட்டு, அப்புறம் பிடிச்சுக் கட்டறான். என்ன செய்யறது?"
"நீங்களும் ஒவ்வொரு தடவையும் போய்ப் பேசித்தான் பாக்கறீங்க. அவர் தொடர்ந்து இப்படியே செஞ்சுக்கிட்டிருக்காரே! இப்ப என்ன செய்யப் போறீங்க?"
"என் நண்பன் சபாபதியை அழைச்சுக்கிட்டுப் போய், கந்தசாமிகிட்ட பேசலாம்னு பாக்கறேன், சபாபதி கொஞ்சம் தைரியமா அடிச்சுப் பேசுவான்!"
"அப்படியே செய்யுங்க. உங்களை மாதிரி பயந்த சுபாவம் உள்ள ஆளுங்களால கந்தசாமி மாதிரி முரட்டு ஆளுங்களை சமாளிக்க முடியாது!" என்றாள் செண்பகலட்சுமி.
ஒரு மணி நேரம் கழித்து மாதவன் திரும்பி வந்தபோது, அவன் முகம் சோர்வடைந்திருந்தது.
"என்ன ஆச்சு? மாட்டை விட்டுட்டாரா?" என்றாள் செண்பகலட்சுமி.
"விட்டுட்டான், ஐநூறு ரூபா வாங்கிக்கிட்டு!"
"என்னது ஐநூறு ரூபாயா? அக்கிரமமா இருக்கே! எப்பவும் இருநூறு ரூபாதானே கேப்பாரு? உங்க நண்பர் சபாபதியை அழைச்சுக்கிட்டுப் போகலியா நீங்க?" என்றாள் செண்பகலட்சுமி, குற்றம் சாட்டும் தொனியில்.
"அவனை அழைச்சுக்கிட்டுப் போனதாலதான் இப்படி ஆயிடுச்சு! கொஞ்சம் சாமர்த்தியமாப் பேசுவான்னு நினைச்சுத்தான் கூட்டிக்கிட்டுப் போனேன். ஆனா, அவன் முட்டாள்தனமாப் பேசி, கந்தசாமிக்குக் கோபத்தை உண்டாக்கிட்டான்!"
"அப்படி என்ன பேசினாரு?"
"'மாட்டை வெளியில மேய விட்டா, சில சமயம் வயல்ல இறங்கி மேயத்தான் செய்யும். நீ உன் வயலுக்குக் காவல் போடணும், இல்லேன்னா மின்சார வேலி போடணும், மாட்டைப் பிடிச்சுக் கட்டறது என்ன அயோக்கியத்தனம்?'னு கேட்டான்."
"இப்படியா பேசுவாரு ஒத்தரு? 'ஏதோ தப்பு நடந்து போச்சு, விட்டுடுங்க, இனிமே ஜாக்கிரதையா இருந்துக்கறோம்'னு சொன்னா பொருத்தமா இருந்திருக்கும்!"
"சபாபதியை அழைச்சுக்கிட்டுப் போனதுக்கு பதிலா, உன்னை அழைச்சுக்கிட்டுப் போயிருக்கலாம் போல இருக்கே!" என்றான் மாதவன், சிரித்தபடி.
"கேலி செய்யாதீங்க!"
"கேலி இல்ல. உண்மையாவே, சபாபதி இது மாதிரிதான் பேசி இருக்கணும். இப்படி முட்டாள்தனமா நடந்துப்பான்னு நான் எதிர்பாக்கல. எதிரி மோசமானவன்னு தெரியும், ஆனா, நண்பன் இப்படி முட்டாளா இருப்பான்னு தெரியாது. எதிரி மோசமானவன்னு தெரிஞ்சப்பறம், இனிமே நான்தான் ரொம்ப கவனமா இருக்கணும். இன்னொரு முறை இப்படி நடக்காம பாத்துக்கணும்!" என்றான் மாதவன்.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 82
தீ நட்பு
குறள் 816:
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்.
No comments:
Post a Comment