தன்னை அறியாமல் அவள் தன் மார்பில் கைவைத்தபோது, இதயம் வேகமாகத் துடிப்பதை உணர்ந்தாள். இதயம் வேகமாகத் துடித்துச் சிதறி விடுமோ என்று ஒரு கணம் தோன்றியது.
பள்ளிக்குச் சென்றிருந்த தன் மகனையும், மகளையும் பற்றிய நினைவு உடனே வந்தது. கணவனுக்கு விபத்து ஏற்பட்டிருக்கும் நிலையில், தன் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டிய கூடுதல் பொறுப்பு தனக்கு இருப்பதை உடனே உணர்ந்தவளாகத் தன் மனதைத் தேற்றிக் கொண்டாள்.
விபத்து என்னவோ நடந்து விட்டது. அடிபட்ட தன் கணவன் நன்கு குணமாக வேண்டுமென்று கடவுளிடம் வேண்டிக் கொண்டு, மருத்துவமனைக்கு விரைந்தாள்.
கல்பனா மருத்துவமனைக்குச் சென்றபோது, பதட்டத்தையும், கவலையையும் மீறி, அவளிடம் ஒரு நிதானம் இருப்பதை, மருத்துவமனையில் இருந்த ரத்தினத்தின் சக ஊழியர்கள் கவனித்தனர்.
மருத்துவமனையில் ரத்தினம் ஒரு மாதம் சிகிச்சை பெற்றான். விபத்து ரத்தினத்தின் கவனக்குறைவால் ஏற்பட்டதாகக் கூறிய அவனுடைய நிறுவனம், மருத்துவமனைக்கான செலவுகளை மட்டும் மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுக் கொள்ள முன்வந்தது.
ஒரு மாதம் கழித்து ரத்தினம் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டபோது, ரத்தினத்துக்கு ஒரு கால் ஊனமாகி இருந்தது.
ரத்தினம் தொடர்ந்து வேலை பார்க்க முடியாது என்ற நிலையில், அவனுடைய நிறுவனத்திலிருந்து நஷ்ட ஈடு என்று ஒரு சிறிய தொகை கொடுத்தார்கள். சட்டப்படி தாங்கள் ரத்தினத்துக்கு நஷ்ட ஈடு எதுவும் கொடுக்க வேண்டியதில்லை என்றும், கருணை அடிப்படையில் தாங்கள் அந்தத் தொகையை வழங்குவதாகவும் நிறுவனம் தெரிவித்தது.
மருத்துவமனையிலிருந்து ரத்தினம் வீட்டுக்கு வந்து இரண்டு தினங்களுக்குப் பிறகு, நிறுவனத்தின் தொழிற்சங்கத் தலைவர் அவர்கள் வீட்டுக்கு வந்தார்.
"கம்பெனியில நஷ்ட ஈடு கொடுக்கணும். ஆனா, கொடுக்க மாட்டேங்கறாங்க. உன் மனைவிக்கு வேணும்னா வேலை கொடுக்கறதா சொல்றாங்க. நாம லேபர் கமிஷன்ல முறையிட்டா, அவங்க நஷ்ட ஈடு வழங்க வாய்ப்பு இருக்கு" என்றார் தொழிற்சங்கத் தலைவர்.
"அப்படியே செஞ்சுடலாம்" என்றான் ரத்தினம்.
"அண்ணே! நாம லேபர் கமிஷனுக்குப் போய், அவங்க நஷ்ட ஈடு கொடுக்கலேன்னா அப்பவும் கம்பெனியில எனக்கு வேலை கொடுப்பாங்களா?" என்றாள் கல்பனா, தொழிற்சங்கத் தலைவரிடம்.
"அது எப்படிக் கொடுப்பாங்க? அவங்க மேல வழக்குப் போட்டப்பறம், அவங்க நம்மை எதிரியாத்தானே பார்ப்பாங்க?" என்றான் ரத்தினம், மனைவியைப் பார்த்து.
"அப்படின்னா, அவங்களோட ஆஃபரை ஏத்துக்கிட்டு நான் வேலைக்குப் போறதுதானே நமக்கு நல்லது?" என்றாள் கல்பனா.
"என்ன பேசற, கல்பனா? நஷ்ட ஈடு கொடுக்க வேண்டியது கம்பெனியோட பொறுப்பு. அவங்க அதைத் தட்டிக் கழிச்சுட்டு, பிச்சை போடற மாதிரி உனக்கு வேலை கொடுக்கறதா சொல்றாங்க. அதை ஏத்துக்கணுங்கறியா?" என்றான் ரத்தினம் கோபமாக.
"ரத்தினம்! உன் மனைவி சொல்றது சரிதான்னு நினைக்கிறேன். விபத்துக்குக் காரணம் உன்னோட கவனக்குறைவுதான்னு கம்பெனியில சொன்னா, அப்படி இல்லேன்னு நாம நிரூபிக்கறது கஷ்டம். கம்பெனி உன்னோட மருத்துவமனைச் செலவை ஏத்துக்கிட்டு, நஷ்ட ஈடுன்னு ஒரு தொகையையும் கொடுத்திருக்கு. அதனால, லேபர் கமிஷன் கம்பெனிக்கு சாதகமாக் கூட முடிவு செய்யலாம். அதனால, உன் மனைவி சொல்றபடி கம்பெனி கொடுக்கற வேலையை அவங்க ஏத்துக்கட்டும்!"
"கல்பனா படிச்சிருக்கா. அவளுக்கு எங்கேயாவது நல்ல வேலை கிடைக்கும். கம்பெனி போடற பிச்சையை நாம ஏத்துக்கணுமா?" என்றான் ரத்தினம், பிடிவாதமாக
கல்பனாவிடமிருந்து ஒரு விம்மல் வெளிப்பட்டது.
"உங்களுக்கு விபத்து ஏற்பட்ட அடுத்த நாளிலேந்தே, குடும்பத்தைக் காப்பாத்தணுமேங்கற கவலையில, நிறைய இடத்தில வேலைக்கு முயற்சி செஞ்சேன். எங்கேயுமே வேலை கிடைக்கல. எல்லாருமே, நான் படிச்சு நிறைய வருஷம் ஆயிடுச்சு, படிப்பு மட்டும் போதாது, அனுபவமும் வேணும்னு சொன்னாங்க. இனிமே, வீட்டு வேலை அல்லது சமையல் வேலைக்குத்தான் முயற்சி செய்யணும்னு நினைச்சுக்கிட்டிருக்கப்ப, இப்படி ஒரு வாய்ப்பு வந்திருக்கு. இதையும் விட்டுடணுமா? லேபர் கமிஷன்ல உங்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்கலேன்னா, நாம என்ன செய்யறது? அப்படியே நஷ்ட ஈடு கொடுத்தாலும், அதை வச்சுக்கிட்டு, நம்ம மீதி வாழ்க்கையை ஓட்ட முடியுமா?"
விம்மலுக்கிடையே இதைச் சொல்லி முடித்ததும், கல்பனா அழுது கொண்டே உள்ளே சென்றாள்.
"ரத்தினம்! இவ்வளவு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டப்பவும், உன் மனைவி மனசு உடைஞ்சு போகாம, உங்க குடும்பத்தோட எதிர்காலத்தை நினைச்சுச் செயல்பட்டிருக்காங்க. இப்படிப்பட்ட ஒரு மனைவி கிடைக்க, நீ கொடுத்து வச்சிருக்கணும்!" என்றார் தொழிற்சங்கத் தலைவர்.
பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 63
இடுக்கண் அழியாமை (துன்பத்தால் அழிந்து போகாமல் இருத்தல்)
குறள் 623:
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.
பொருள்:
துன்பம் வரும்போது அதற்காக வருந்திக் கலங்காதவர், அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி, அதை வென்று விடுவார்.
No comments:
Post a Comment