Friday, September 23, 2022

625. "சிக்" சீதாராமன்!

குருமூர்த்திக்கு ரத்தக் கொதிப்பு அதிகமாக இருந்ததால் இரண்டு மூன்று நாட்கள் மருத்துவமனையில் தங்கச் சிகிச்சை பெற வேண்டும் என்று அவருடைய மருத்துவரின் வலியுறுத்தலினால் அவர் அந்தத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அந்த மருத்துவமனையில் தனி அறை கிடைக்காததால் குருமூர்த்தி இரண்டு பேர் இருக்கும் அறையில் அனுமதிக்கப்பட  வேண்டி இருந்தது. அவருக்குப் பக்கத்துப் படுக்கையில் இருந்த சீதாராமனுடன் அறிமுகப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

"என்ன உடம்பு உங்களுக்கு?" என்றார் குருமூர்த்தி.

"இப்ப நெஞ்சில சளி இருக்கிற பிரச்னை!ம என்றார் சீதாராமன்

"இப்பன்னா?"

சீதாராமன் இலேசாகச் சிரித்தார்.

"எனக்கு அப்பப்ப ஏதாவது பிரச்னை வந்துக்கிட்டுத்தான் இருக்கும். அதனால அடிக்கடி மருத்துவமனையில வந்து படுத்துக்கிட்டுத்தான் இருப்பேன்!"

சொல்லி முடிக்கும்போதே அவருக்கு இருமல் வந்து பல விநாடிகள் தொடர்ந்து இரும்பினார்.

"மன்னிச்சுக்கங்க. உங்க கிட்ட பேச்சுக் கொடுத்து இருமலை வரவழைச்சுட்டேன்" என்றார குருமூர்த்தி குற்ற உணர்வுடன்.

"அதெல்லாம் ஒண்ணுமில்ல. அப்படிப் பாத்தா நான் வாழ்க்கை முழுக்க பேசாமதான் இருந்திருக்கணும். அப்புறம் எனக்கு வாழ்க்கையே இருந்திருக்காதே?"

"இன்ன வயசிலேந்தே இந்த பிரச்னை இருக்கா உங்களுக்கு?"

"பிறந்ததிலேந்தே இருக்கு. என் அப்பா அம்மா வசதி இல்லாதவங்கதான். ஆனா அவங்க சளைக்காம என்னை அடிக்கடி அரசாங்க மருத்துவமனைக்கு அழைச்சுக்கிட்டுப் போய் மருத்துவம் பாத்தாங்க. சரியாகும். அப்புறம் திரும்ப வரும். இருமல், சளி, காய்ச்சல்னு மாறி மாறி ஏதாவது ஒண்ணு வந்துக்கிட்டே இருக்கும்.அன்னிலேந்து இன்னி வரைக்கும் அப்படித்தான்!"

"ரொம்ப கஷ்டமா இருந்திருக்குமே!"

"ஆமாம். என்னைப் பள்ளிக் கூடத்துக்கு அனுப்பலாமான்னே கொஞ்சம் யோசிச்சாங்க. அப்புறம் தயக்கத்தோட அனுப்பினாங்க. பள்ளிக்கூடத்தில மத்த மாணவர்கள்கிட்டே இருந்து என்னைக் கொஞ்சம் தள்ளித்தான் உக்கார வைப்பாங்க. உடம்ப சரியில்லாம போறதால பல நாள் பள்ளிக்கூடம் போக முடியாது. ஆனா நான் கஷ்டப்பட்டு நல்லாப் படிச்சேன்.

"ஹை ஸ்கூல் போனதும் அங்கே இருந்த தலைமை ஆசிரியர் எங்கிட்ட ரொம்ப அக்கறை எடுத்துக்கிட்டு என்னை ஊக்குவிச்சாரு. எஸ் எஸ் எல் சி படிக்கறப்ப குறைஞ்சபட்ச அட்டெண்டன்ஸ் இல்லாட்டா பரீட்சை எழுத முடியாது. ஆனா அவரு எனக்கு நிறைய நாள் அட்டெண்டன்ஸ் போட்டு என்னைப் பரீட்சை எழுத வச்சாரு.

"அப்புறம் கல்லூரிப் படிப்பு. நிறைய மார்க் வாங்கினதால ஸ்காலர்ஷிப் கிடைச்சது. கல்லூரியில சில பேரு என்னே சிக் சீதாராமன்னு சொல்லுவாங்க. தாங்க படிச்ச ஆங்கிலத்தைப் பயன்படுத்தணுங்கற ஆர்வம்! நான் கல்லூரியில படிக்கறப்ப எங்கப்பா இறந்துட்டாரு. ஆனா எப்படியோ தொடர்ந்து படிச்சு பி காம் பட்டம் வாங்கிட்டேன்.

"வேலை கிடைச்சது. ஆனா அடிக்கடி லீவ் போட்டதால தொடர்ந்து வேலையில நீடிக்க முடியல. மூணு வேலை மாறினப்பறம் நாலாவதா ஒரு நிறுவனத்தில அக்கவுண்டண்ட்டா சேர்ந்தேன். அந்த முதலாளி என் நிலைமையைப் புரிஞ்சுக்கிட்டு எனக்கு நிறைய ஆதரவு கொடுத்தாரு. சம்பளத்தோட நிறைய லீவு கொடுத்தாரு.

"சொன்னா நம்ப மாட்டீங்க. அந்தக் காலத்தில ஃபோன்ங்கறது சில பெரிய பணக்காரங்க வீட்டிலதான் இருக்கும். ஆனா என் முதலாளி என் வீட்டில ஃபோன் வச்சுக் கொடுத்து நான் வீட்டில இருந்துக்கிட்டே ஆஃபீஸ்ல இருக்கறவங்களோட ஃபோன்ல பேசி வேலை செய்ய ஏற்பாடு செஞ்சாரு. ஒர்க் ஃப்ரம் ஹோம்ங்கற கான்ஸப்ட் வரதுக்கு முன்னாலேயே ஒர்க் ஃப்ரம் ஹோம் பண்ணினவன் நான் ஒருத்தனாத்தான் இருப்பேன்!"

சீதாராமன் சிரித்தார். எங்கே அவருக்கு இருமல் வந்து விடுமோ என்று பய;ந்து கொண்டே அவரைப் பார்த்தார் குருமூர்த்தி.

"உங்க குடும்பத்தில எத்தனை பேரு?" என்றார் குருமூர்த்தி தயக்கத்துடன்.

"புரியுது! எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சான்னு கேக்க வரீங்க! நான் கல்யாணம் வேண்டாம்னுதான் இருந்தேன். நான் இருந்த நிலைமையைச் சொல்லி யார்கிட்டேயும் பெண் கேக்க என் அம்மாவும் தயங்கினாங்க. ஆனா எங்களுக்குத் தெரிஞ்ச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் என்னைக் கல்யாணம் செஞ்சுக்க முன் வந்தா. உங்களை மாதிரி ஒத்தருக்குத்தான் கண்டிப்பா ஒரு துணை வேணும்னு அவ எங்கிட்ட சொன்னபோது எனக்கு அழுகை வந்துடுச்சு!"

சீதாராமனின் குரல் கம்மியது. அவர் அழுது, அது மீண்டும் இருமலைக் கிளப்பி விட்டு விடுமோ என்ற பயத்தில், குருமூர்த்தி, "எவ்வளவு பரந்த மனசு அவங்களுக்கு! அழாதீங்க. இது நினைச்சு நினைச்சு சந்தோஷப்பட வேண்டிய விஷயம் இல்லையா?"

"ஆமாம். ஆனா அவ இப்ப இல்லையே! ஒரு பையனைப் பெத்துக் கொடுத்துட்டு என்னை விட்டுப் போயிட்டாளே! அதை நினைச்சாதான் அழுகை வருது. என் மனைவிக்கு முன்னாலேயே என் அம்மாவும் போயிட்டாங்க. நானே உடம்பு சரியால்லாத ஆளா தனியா இருந்துக்கிட்டு என் பையனை வளர்த்து ஆளாக்க நான் பட்ட பாடு!"

"உங்க பையன் என்ன பண்றாரு?"

"டாட்டா குரூப்பில நல்ல வேலையில இருக்கான். லட்சக் கணக்கா சம்பாதிக்கறான். சின்ன வயசிலேந்து எனக்கு அரசாங்க மருத்துவமனைதான். என் பையன் வேலைக்குப் போனப்பறம்தான் தனியார் மருத்துவமனை!" என்று சிரித்தார் சீதாராமன்.

"கேக்கவே எனக்கு ரொம்ப திகைப்பா இருக்கு. சின்ன அசௌகரியங்களுக்கே ரொம்ப அப்செட் அகிற ஆளு நான். நீங்க இவ்வளவு கஷ்டங்களையும் தாங்கிக்கிட்டு சிரிச்சுக்கிட்டிருக்கீங்க!" என்றார் குருமூர்த்தி.

"வாழ்க்கையில எனக்குக் கஷ்டம் வரப்பல்லாம் வாழ்க்கையில எனக்குக் கிடைச்ச அதிர்ஷ்டங்களை நினைச்சு சந்தோஷப்படுவேன். என் பெற்றோர்களோட அன்பு, என் உடல்நிலையையும் மீறி என்னால நல்லாப் படிக்க முடிஞ்சது, எனக்கு உதவி செஞ்ச தலைமை ஆசிரியர், என் முதலாளி,  என்னைத் தேடி வந்த அதிர்ஷ்டம் மாதிரி வந்த என் மனைவி, என் மேல ரொம்ப அன்பும் அக்கறையுமா இருக்கற என் மகன்... வாழ்க்கையில இவ்வளவு அதிர்ஷ்டங்கள் இருக்கறப்ப, ஏன் கஷ்டங்களை நினைச்சு வருத்தப்படணும்?" என்றார் "சிக்" சீதாராமன் புன்சிரிப்புடன்.

"எந்த கஷ்டமும் உங்களை எதுவும் செய்யாது  சார்! நீங்க ரொம்ப ஆரோக்கியமா நீண்டநாள் சந்தோஷமா இருப்பீங்க. உங்களை சந்திச்சது வாழ்க்கையில எனக்குக் கிடைச்ச அதிர்ஷ்டம்!" என்றார் குருமூர்த்தி நெகிழ்ச்சியுடன்.

அப்போது அறைக்குள் வந்த குருமூர்த்தியின் மகன், "அப்பா! தனி அறை ஒண்ணு காலியாகி இருக்காம். அங்கே போயிடலாம்!" என்றான்.

"வேணாண்டா! நான் இங்கேயே இருக்கேன்!" என்றார் குருமூர்த்தி சீதாராமனைப் பார்த்துச் சிரித்தபடி.

அரசியல் இயல்
அதிகாரம் 63
இடுக்கண் அழியாமை  (துன்பத்தால் அழிந்து போகாமல் இருத்தல்)

குறள் 625:
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்.

பொருள்:
விடாமல் மேன் மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டு போகும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...