"என்ன புலவரே! நீண்ட காலமாக உங்களைக் காணமுடியவில்லையே" என்றார் அமைச்சர்.
"உங்களுக்குக் கண் இருக்கிறது. அதனால், என்னைக் காணமுடியவில்லை என்று உணர்கிறீர்கள். கண் இல்லாவிட்டால் இந்தப் பிரச்னையே இருக்காதே!" என்றார் புலவர்.
"உங்களின் பூடகப் பேச்சைப் புரிந்து கொள்ளும் புலமை எனக்கு இல்லை. ஆனால் பழைய மன்னர் மறைந்து அவர் புதல்வர் பதவியேற்ற பிறகு, உங்களைக் காணவில்லை என்பது மட்டும் உண்மைதானே!"
ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொண்ட புலவர், "உண்மைதான். மறைந்து போன மன்னரை நீங்கள் குறிப்பிட்டதும், என் கண்கள் தானாக மூடிக் கொள்கின்றன. கண்ணுக்குள் நீர் பெருகுகிறது. எப்படிப்பட்ட மனிதர் அவர்! கண்பார்வை இல்லாதவராக இருந்தும், கண்ணோட்டம் என்ற பண்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவராயிற்றே அவர்!" என்றார் புலவர்
"ஆனால் இப்போது அரசராக இருக்கும் அவருடைய புதல்வர், கண்ணோட்டம் என்ற குணம் அறவே இன்றி, இரக்கமில்லாதவராக நடந்து கொள்கிறார் என்கிறீர்களா?" என்றார் அமைச்சர், சிரித்தபடியே.
"ஐயோ! நான் எங்கே அப்படிச் சொன்னேன்?" என்றார் புலவர், பதட்டத்துடன்.
"பயப்படாதீர்கள். இங்கே நம் இருவரைத் தவிர வேறு யாரும் இல்லை. நாம் இருவரும் நண்பர்கள். நமக்குள் நெருக்கமாக, வெளிப்படையாகப் பேசிக் கொள்வதில் என்ன தவறு?
"அது சரிதான். ஆயினும், நீங்கள் அதிகாரம் உள்ள அமைச்சர். நான் ஒரு ஏழைப் புலவன். என்னால் எப்படி சுதந்திரமாகப் பேச முடியும்?"
"புலவர்களால் பூடகமாகப் பாடலில் பல கருத்துக்களைச் சொல்ல முடியுமே! பல புலவர்கள் அப்படிச் சொல்லி இருக்கிறார்களே!"
"அப்படிச் சொல்லி என்ன பயன்? மன்னர் தன் இயல்பை மாற்றிக் கொண்டு, கருணை உள்ளம் கொண்டவராக மாறி விடப் போகிறாரா என்ன? தந்தையின் நல்ல குணம் தனயனுக்கு இல்லாமல் போவது ஒன்றும் புதிதல்லவே? திருதராஷ்டிரர் கண்ணோட்டம் உள்ளவராகத்தான் இருந்தார். ஆனால் அவர் மகன் துரியோதனனிடம், கண்ணோட்டம் என்ற குணம் அறவே இல்லையே?"
"திருதராஷ்டிரர் கண்ணோட்டம் உள்ளவராக இருந்தார் என்றா சொல்கிறீர்கள்? துரியோதனன் பாண்டவர்களை அரக்கு மாளிகைக்குள் வைத்து எரித்துக் கொல்லத் திட்டமிட்டிருக்கிறான் என்று தெரிந்தும், பாண்டவர்களை ஏமாற்றி அங்கே அனுப்பியவர் அவர். கண்ணோட்டம் இருந்திருந்தால் அப்படிச் செய்திருப்பாரா அவர்?"
"அப்படியானால், துரியோதனனனை விட திருதராஷ்டரன் அதிகக் கண்ணோட்டம் கொண்டிருந்தார் என்று சொல்லலாமா?"
"அப்படி வேண்டுமானால் சொல்லலாம்!" என்றார் அமைச்சர்.
"அமைச்சரே! உங்களுடன் பேசிக் கொண்டிருந்ததில், ஒரு பாடல் எழுத எனக்கு ஒரு யோசனை தோன்றி இருக்கிறது!" என்றார் புலவர், உற்சாகத்துடன்.
"மகிழ்ச்சி! ஆனால், நீங்கள் எழுதிய பாடலுக்கு மன்னர் பரிசளித்ததும், அதில் பாதியை எனக்குக் கொடுத்து விடுங்கள்!"
"பரிசு கொடுத்தால் சரி. கசையடிகள் கொடுத்தால்..?"
"அவற்றை நீங்களே முழுவதாகப் பெற்றுக் கொள்ளலாம். எனக்கு எந்த மறுப்பும் இல்லை! வேடிக்கை இருக்கட்டும். என்ன பாடல் எழுதப் போகிறீர்கள்? என்னிடம் சொல்லலாம் அல்லவா?"
"நிச்சயம். உங்கள் ஒப்புதலைப் பெற்ற பிறகுதானே, பாடலை அரசவையில் படிக்கப் போகிறேன்!"
"சரி. சொல்லுங்கள்!" என்றார் அமைச்சர்.
"நாம் திருதராஷ்டிரரையும், துரியோதனனையும் பற்றிப் பேசியதும், எனக்கு ஒரு யோசனை தோன்றியது. கண்ணோட்டம் என்பது கண்ணின் இயல்பு. ஒருவரின் துயரத்தைக் கண் பார்க்கும்போது, கண் இரக்க உணர்வை வெளிப்படுத்தும். இதுதான் இயல்பு. அதானல்தான், இரக்க குணத்துக்குக் கண்ணோட்டம் என்ற பெயரே வந்தது என்று நினைக்கிறேன். சரி. ஒருவருக்குக் கண் இருந்தால், கண்ணோட்டம் இருக்க வேண்டும். ஒருவரிடம் இரக்கம் இல்லாவிட்டால், அவரைக் கண் இல்லாதவர் என்று சொல்வோம். துன்பப்படும் ஒருவர் கடவுளைப் பார்த்து, 'கடவுளே! உனக்குக் கண் இல்லையா?' என்று கேட்பதில்லையா?
"ஆனால் நடைமுறை வாழ்க்கையில் இப்படியா இருக்கிறது? கண் பார்வை பெற்றிருந்த துரியோதனனை விடக் கண்பார்வை இல்லாத அவன் தந்தை திருதராஷ்டிரனிடம் கண்ணோட்டம் அதிகமாக இருந்தது. இது மகாபாரதக் கதை. ராமாயணத்தில் சிரவணகுமாரனின் கதை வருகிறது, கண் பார்வை இல்லாத தன் தாய் தந்தை இருவரையும் தன் தோளில் சுமந்து சென்று காப்பாற்றியவன் அவன். அவன் ஒருமுறை ஒரு குளத்திலிருந்து குடத்தில் தண்ணீர் மொள்ளும் சத்தத்தைத் தொலைவிலிருந்து கேட்ட தசரதச் சக்கரவர்த்தி, அந்தச் சத்தத்தை ஒரு யானை துதிக்கையால் நீரை அள்ளும் சத்தம் என்று நினைத்து, அம்பு விட்டு அவனைக் கொன்று விட்டார்.
"தன் தவறை உணர்ந்த தசரதர் சிரவணகுமாரனின் பெற்றோரிடம் தான் செய்த தவறைக் கூறி மன்னிப்புக் கேட்டபோது, முனிவரான அவன் தந்தை சந்தனு, கண்ணோட்டம் எனும் தன் குணத்தை ஒரு கணம் இழந்து, தசரதரும் தன்னைப் போல் மகனை இழந்த துயரத்தைப் பெற்று மாள வேண்டும் என்று சாபம் கொடுத்து விட்டார்.
"எனவே தந்தை-மகன் என்று எடுத்துக் கொண்டால், கண்பார்வை இல்லாத தந்தை திருதராஷ்டிரன், கண்பார்வை இருந்த மகன் துரியோதனனை விட அதிகக் கண்ணோட்டம் கொண்டவர். கண்பார்வை இருந்த சிரவணகுமாரன், கண்பார்வை இல்லாத தந்தை சந்தனுவை விட அதிகக் கண்ணோட்டம் கொண்டவன். நம் நாட்டிலோ, கண்பார்வை உள்ள இன்றைய மன்னரை விட, கண்பார்வை இல்லாத அவருடைய தந்தை அதிகக் கண்ணோட்டம் கொண்டவர். ஆயினும், கண்ணோட்டம் என்பது கண்வழி வருவது என்றுதான் கூறப்படுகிறது. இதுதான் என் கவிதை. எப்படி இருக்கிறது?"
"கவிதை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், இதை மன்னர் முன்னால் துணிவாகச் சொல்லப் போகிறீர்களா?" என்றார் அமைச்சர், வியப்புடன்.
"ஏன், உண்மையைத்தானே சொல்லப் போகிறேன்? அதுவும் மன்னரைப் பற்றி நான் எதுவும் குறைவாகச் சொல்லவில்லையே! அவரை விட அவர் தந்தை அதிகக் கண்ணோட்டம் உள்ளவர் என்றுதானே சொல்லப் போகிறேன்?" என்றார் புலவர்.
அமைச்சர் மௌனமாக இருந்தார்.
"புலவரே! கடைசியில் பொய் சொல்லிப் பரிசு வாங்கி விட்டீர்களே!"என்றார் அமைச்சர் புலவரிடம், சற்றே கோபத்துடன்.
"என்ன பொய் சொன்னேன்?"
"நீங்கள் என்னிடம் சொன்ன கவிதை வேறு, மன்னர் முன்னிலையில் படித்த கவிதை வேறு. நீங்கள் படித்த கவிதையில் மன்னர் அவர் தந்தை இருவரில், தந்தையை விட மகன் அதிகக் கண்ணோட்டம் கொண்டவர் என்று மாற்றிச் சொல்லி விட்டீர்களே!"
"அது மற்றவர்கள் புரிந்து கொண்ட பொருள். நான் சொன்ன பொருள் மகனை விடத் தந்தை அதிகக் கண்ணோடம் உள்ளவர் என்பதுதான்?" என்றார் புலவர். சிரித்தபடியே!
"அது எப்படி?" என்றார் அமைச்சர், வியப்புடன்.
"அமைச்சரே! நான் ஏன் தமிழில் கவிதை பாடாமல் சம்ஸ்கிருதத்தில் பாடினேன் என்று யோசித்தீர்களா?"
"எனக்கு அது சற்று வியப்பாகத்தான் இருந்தது. ஆனால், நீங்கள் தமிழ், வடமொழி இரண்டிலும் புலமை பெற்றவர் என்பதால், அதைப் பற்றி நான் பெரிதாக நினைக்கவில்லை."
"அமைச்சரே! சம்ஸ்கிருதத்தில் 'தாத' என்ற சொல்லுக்கு 'தந்தை' என்றும் பொருள் உண்டு, 'மகன்' என்றும் பொருள் உண்டு. நான் 'தாத' என்று தந்தையைத்தான் குறிப்பிட்டேன். ஆனால், அவையில் இருந்த வடமொழி அறிந்தவர்கள் மன்னருக்கு பயந்து, 'தாத' என்பதற்கு 'மகன்' என்று பொருள் கூறி, மகன் அதிகக் கண்ணோட்டம் உள்ளவர் என்று நான் கூறி இருப்பதாகப் பொருள் கூறி விட்டார்கள்!" என்றார் புலவர் புன்சிரிப்புடன்.
"நீங்கள் உண்மையாகவே இரட்டைமொழிப் புலவர்தான்!" என்றார் அமைச்சர்.
பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 58
கண்ணோட்டம் (இரக்கம், தயை, தாட்சண்யம்)
குறள் 577:
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்..