Tuesday, April 19, 2022

569. கூட்டணிக் கணக்குகள்!

"ம.ந.க. கட்சித் தலைவர் உங்களைச் சந்திக்கணும்னு தூது அனுப்பிக்கிட்டே இருக்காரு" என்றார் விகாஸ்.

"இத்தனை வருஷமா நம்ம எதிரிகளோட சேந்துக்கிட்டு நமக்கு எதிரா எல்லா வேலையும் பண்ணிக்கிட்டிருந்தவரு, இப்ப அவங்களோட உறவு முறிஞ்சதும். நம்மகிட்ட வராரா? நான் அவரைச் சந்திக்கப் போறதில்ல!" என்றார் கட்சித் தலைவரும், அந்த நாட்டின் அதிபருமான சுரேந்தர்.

"அரசியல்ல இதெல்லாம் சகஜம்தானே?" என்றார் விகாஸ்.

"தேர்தலுக்கு இன்னும் ரெண்டு வருஷம் இருக்கே! இப்ப அவரால நமக்கு எந்தப் பயனும் இல்ல. இப்போதைக்கு அவருக்கு எந்த பதிலும் சொல்லாம நாம புறக்கணிப்போம். கொஞ்ச நாளைக்கு அவரைத் தவிக்க விடுவோம்!"

"தலைவரே! எதிர்க்கட்சித் தலைவர் பல கட்சிகளைச் சேத்துக்கிட்டு ஒரு பலமான கூட்டணியை அமைக்க முயற்சி செஞ்சுக்கிட்டிருக்காரு. நாமும் நம்மை பலப்படுத்திக்க வேண்டாமா?"

"நாம ஆட்சியில இருக்கோம். பலமா இருக்கோம். அவங்க பலவீனமா இருக்காங்க. அஞ்சாறு கட்சிகளோட கூட்டணி வச்சுக்கிட்டா, சில இடங்களிலாவது ஜெயிக்க முடியுமான்னு பாக்கறாங்க! பலம் இல்லாதவங்க செய்யறதை நாம எதுக்கு செய்யணும்?" என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சுரேந்தர்.

"தேர்தலுக்கு ரெண்டு மாசம்தான் இருக்கு. நிலைமை எப்படி இருக்கு?" என்றார் சுரேந்தர்.

"கருத்துக் கணிப்புகள் எல்லாம் கடுமையான போட்டி இருக்கும்னு சொல்லுது.  நம் உளவுத்துறையோட அறிக்கைப்படி. நமக்கு வெற்றி வாய்ப்பே இல்லை. ஊடகங்கள் நமக்கு பயந்துகிட்டு, நாம தோத்துடுவோம்னு சொல்லாம, கடுமையான போட்டின்னு கருத்துக் கணிப்பைக் கொஞ்சம் மாத்தி வெளியிட்டுக்கிட்டிருக்காங்க!" என்றார் விகாஸ், கவலையுடன்.

"கடுமையான போட்டின்னாலும், நாம ஜெயிச்சுடலாம். அதிகாரம் நம்ம கையிலதானே இருக்கு? எதுக்கும், நம்ம கூட்டணியை வலுப்படுத்திக்கலாம். ம.ந.க. கட்சி ரொம்ப நாளா நமக்கு தூது விட்டுக்கிட்டிருக்காங்களே! அவங்களுக்கு என்னைச் சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கொடுங்க. அவங்களை சேத்துக்கிட்டா, தராசு நம்ம பக்கம் சாஞ்சுடும்!" 

"சார்! ம.ந.க. கட்சியை நாம ரொம்ப நாளா புறக்கணிச்சதால, அவங்க விரக்தியில இருக்காங்க. நம்ம மேல கோபமாவும் இருக்காங்க. இதைப் பயன்படுத்திக்கிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் அவங்களை சமாதானப்படுத்தி, மறுபடியும் தங்களோட கூட்டணியில சேர்க்க முயற்சி செஞ்சுக்கிட்டிருக்காருன்னு தகவல் வருது. போன தேர்தல்ல கொடுத்தை விட ரெண்டு மூணு சீட் அதிகமாக் கொடுத்தா, ம.ந.க. அவங்களோட போயிடும்!"

"அப்படியா?" என்றார் சுரேந்தர், சற்றுக் கவலையுடன்.

"அதோட, ரொம்ப நாளா நம்மோட இருக்கற ம.வி.மு. கட்சி கூட எதிர் அணிக்குப் போக முயற்சி செஞ்சுக்கிட்டிருக்கு. கொஞ்ச நாளா அவங்க தலைவர் என் ஃபோனையே எடுக்கறதில்ல. அவரை நேரில பாக்கவும் முடியல!" என்றார் விகாஸ், சற்றுத் தயக்கத்துடன்.

"அப்படியா?" என்றார் சுரேந்தர், அதிர்ச்சியுடன். "ம.வி.மு. நமக்கு ரொம்ப பயனுள்ள கூட்டணிக் கட்சியாச்சே! நம்மோட ரொம்ப நாளா இருக்காங்க. அவங்க நம்மை விட்டுப் போனா, அது வாக்காளர் மத்தியில, நாம பலவீனம் அடைஞ்சுக்கிட்டு வர மாதிரி பிம்பத்தை உருவாக்கும். அதை நாம தடுத்தாகணும்."

"சார்! ம.வி.ம. தலைவருக்கு, நீங்க அவரை மதிக்கறதில்லன்னு ரொம்ப நாளா ஒரு குறை இருக்கு. அவரைக் கூப்பிட்டுப் பேசச் சொல்லி நான் பல தடவை உங்ககிட்ட சொல்லி இருக்கேன். அவரும் உங்களைச் சந்திக்க சில முறை முயற்சி செஞ்சாரு. ஆனா, அவரால உங்களைச் சந்திக்க முடியல. அதனால, அவரும் வருத்தத்தில இருந்துக்கிட்டிருக்காரு. அதைப் பயன்படுத்திக்கிட்டு, அவரையும் எதிர்க்கட்சித் தலைவர் வளைச்சுப் போட்டுட்டார்னு நினைக்கிறேன்."

"அப்படின்னா நாம ஜெயிக்கறது ரொம்ப கஷ்டம்தான்" என்றார் சுரேந்தர் கவலையுடன், நிலைமையை அப்போதுதான் புரிந்து கொண்டவராக.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 57
வெருவந்த செய்யாமை 
(மக்களுக்கு அச்சமூட்டும் செயல்களைச் செய்யாமை)

குறள் 569:
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.

பொருள்: 
முன்னமே தக்கவாறு அரண் செய்து கொள்ளாத அரசன், போர் வந்த காலத்தில் (தற்காப்பு இல்லாமல்) அஞ்சி விரைவில் அழிவான்.
               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...