Tuesday, April 26, 2022

785. நான் அனுப்புவது கடிதம் அல்ல , உள்ளம்!

அந்த ஆங்கில வார இதழில் "பேனா நண்பர்கள் தேவை" பகுதியில் ராமு தன் பெயரைக் கொடுத்தது ஒரு ஆர்வத்தில்தான்.  

ஆனால் அதற்கு இத்தனை பதில்கள் வரும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.

அடுத்த இரண்டு வாரங்களில் அவனுடன் பேனா நண்பராக இருக்க விரும்பி நூறுக்கும் மேற்பட்ட கடிதங்கள் வந்தன. கடிதம் எழுதியவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் தனக்கு ஏற்ற நண்பர்களாக இருக்க மாட்டார்கள் என்று கருதி சுமார் பத்து நபர்களுக்கு மட்டும் ராமு பதிலளித்தான்..

அந்த பத்து பேரில் ஏழு பேருடனான கடிதத் தொடர்பு இரண்டு மூன்று மாதங்களுக்குள் நின்று விட்டது. மீதமிருந்த மூவர் - டெல்லியைச் சேர்ந்த வீர் சிங், நாக்பூரைச் சேர்ந்த தாமோதரன், மற்றும் பெங்களூரைச் சேர்ந்த கவிதா.

அவர்களுக்குள் வீர் சிங்குடன் ராமு பல விஷயங்களைப் பற்றி விவாதிக்க வேண்டி இருந்தது. தீவிரமான கருத்து வேறுபாடுகளுக்கிடையேயும், இருவரும் நட்புடனேயே விவாதித்து வந்தனர்.

தாமோதரனுடன் பல ஒத்த கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் மகிழ்ச்சி ராமுவுக்கு ஏற்பட்டது.

ஆனால் கவிதா விஷயத்தில் அவன் அனுபவம் வேறு விதமாக இருந்தது

அவர்கள் இருவரும் பொது விஷயங்கள் பற்றி விவாதிப்பதில்லை. தங்கள் குடும்ப விஷயம் பற்றியும் எழுதுவதில்லை. கவிதாவுக்குத் திருமணம் ஆகவில்லை என்பது மட்டுமே அவனுக்குத் தெரியும்.

முதல் கடிதத்திலேயே, "எனக்கு பேனா நண்பர்கள் என்று யாரும் கிடையாது. நண்பர்கள் என்றே அதிகம் இல்லை. ஆனால் உங்கள் விவரங்களைப் பார்த்ததும் உங்களுடன் பேனா நட்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. உங்களுடன் பல விஷயங்களைப் பேசும் அளவுக்கு அறிவோ, ஆர்வமோ, படிப்போ எனக்குக் கிடையாது. என்னைச் சுற்றி நடப்பவைகளை கவனிப்பது மட்டுமே என் படிப்பு, பொழுதுபோக்கு எல்லாம். என் 'போரை' சகித்துக் கொள்ள முடியுமானால் பதில் போடுங்கள். எனக்குத் தமிழ் தெரியாது. உங்களுக்குக் கன்னடம் தெரிந்திருக்காது. எனக்கு ஆங்கிலம் சுமாராகத்தான் தெரியும்!" என்று எளிமையான ஆங்கிலத்தில் அவள் எழுதி இருந்தாள்.

கவிதாவின் கடிதத்தில்  இருந்த எளிமையும், வெளிப்படைத் தன்மையும் ராமுவுக்கு உடனடியாக ஒரு ஈர்ப்பை ஏற்டுத்தின.

"நீங்கள் 'போர்' அடிப்பவரா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் என்னைப் போன்ற 'போர்' இந்த உலகத்தில் இருக்க முடியாது என்பது என் நண்பர்களின் ஒருமித்த கருத்து. நாம் இருவரும் சேர்ந்து 'போர்' அடிப்போம். தமிழில் 'போர்' அடிப்பது என்றால் அறுக்கப்பட்ட கதிர்களைக் கம்பால் அடித்து தானியமணிகளை உதிரச் செய்வது என்று பொருள். நாம் இருவரும் சேர்ந்து 'போர'டித்தாலும் அதுபோல் நன்மை எதுவம் ஏற்படலாம்!" என்று பதில் எழுதினான் ராமு.

அதற்குப் பிறகு ஒரு மாதம் கழித்துத்தான் கவிதாவிடமிருந்து கடிதம் வந்தது. "நான் எப்போதாவதுதான் எழுதுவேன். நான் ஒரு சோம்பேறி. எழுதுவதற்கே எனக்கு சோம்பலாக இருக்கும். நம்மைப் போன்ற நடுத்தர வர்க்கத்தவர்கள் தொலைபேசி வைத்துக் கொள்ளும் காலம் எப்போது வரும் என்று தெரியவில்லை" என்று எழுதி இருந்தாள்.

கவிதாவிடமிருந்து கடிதத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பதே ராமுவுக்கு ஒரு மகிழ்ச்சியும், ஏக்கமும் கலந்த அனுபவமாக இருந்தது. அவளிடமிருந்து கடிதம் வந்ததும் அதற்கு உடனே பதில் எழுதி விட்டு அவள் பதில் வருவதற்காக தினமும் காத்திருப்பான்.

ராமு ஒருமுறை பெங்களூருக்குச் செல்ல வேண்டி இருந்தது. அப்போது அவளை நேரில் சந்திக்க முடியுமா என்று கேட்டு அவளுக்கு எழுதி இருந்தான். தனக்குத் திருமண ஏற்பாடுகள் நடப்பதால் அவன் அப்போது தன் வீட்டுக்கு வந்து தன்னைச் சந்திப்பது பொருத்தமாக இருக்காது என்று அவள் உடனே பதில் போட்டு விட்டாள்.

அதற்குப் பிறகு பல மாதங்கள் கவிதவிடமிருந்து கடிதமே வரவில்லை. ராமு எழுதிய இண்டு மூன்று கடிதங்களுக்கும் பதில் வரவில்லை. அவளுக்குத் திருமணம் நடந்திருக்குமோ, திருமணத்துக்குப் பிறகு ஒரு ஆணுடன் கடிதத் தொடர்பு வைத்துக் கொள்வது சரியாக இருக்காது என்பதால்தான் அவள் தனக்குக் கடிதம் எழுதவில்லையோ என்று அவன் குழம்பிக் கொண்டிருந்தான்.

இதற்கிடையில் ராமுவுக்குத் திருமணம் நிச்சயமாகியது. தன் திருமணப் பத்திரிகையைக் கவிதாவுக்கு அனுப்பி, அதனுடன் அனுப்பிய கடிதத்தில் தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணின் பெயரும் கவிதாதான் என்ற ஒற்றுமையைக் குறிப்பிட்டு அவளைத் தன் திருமணத்துக்கு வரும்படியும் அழைத்திருந்தான் அவன்.

திருமணத்தன்று கவிதாவிடமிருந்து ஒரு வாழ்த்துத் தந்தி மட்டும் வந்தது.  

திருமணமாகி சில நாட்களுக்குப் பிறகு தன் மனைவியிடம் தனக்குக் கவிதா என்ற பேனா நண்பர் இருப்பதைச் சொல்லி அவளுடைய கடிதங்களைக் காட்டினான்.

"நீங்க எழுதின கடிதங்களைப் படிச்சசாத்தானே நீங்க எப்படியெல்லாம் வழிஞ்சிருக்கீங்கன்னு தெரியும்?" என்று அவனைச் சீண்டிய அவன் மனைவி கவிதா சில கடிதங்களை மட்டும் படித்துப் பார்த்து விட்டு, "அவங்க சொன்ன மாதிரி நீங்க ரெண்டு பேரும் சரியான 'போர்'தான். சாலையில போற ஆடுமாடையெல்லாம் பத்தி எழுதி இருக்காங்க! இதில கொஞ்சம் கூட ரொமான்ஸுக்கு ஸ்கோப்பே இல்லையே, டார்லிங்!" என்றாள் சிரித்துக் கொண்டே.

தனக்குக் கிடைத்த பண்புள்ள, நல்ல இயல்புள்ள, நட்பான மனைவியைப் போல் கவிதாவுக்கும் ஒரு கணவன் கிடைக்க வேண்டும் என்று அப்போது நினைத்தான் ராமு.

சில மாதங்களுக்குப் பிறகு கவிதாவிடமிருந்து ஒரு திருமண அழைப்பு வந்தது. அத்துடன் இணைக்கப்பட்ட துண்டுக் காகிதத்தில் 'அங்கிருந்தே வாழ்த்துங்கள்!' என்ற ஒரு வரி மட்டும் இருந்தது.

கவிதாவின் திருமணத்துக்குத் தான் வருவதை அவள் விரும்பவில்லை என்பது ராமுவுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தாலும், அவளுடைய குடும்பத்தினர் பழமையான சிந்தனைகளைக் கொண்டவர்களாக இருக்கக் கூடும் என்று நினைத்துச் சமாதானமடைந்தான். 

திருமணத்துக்குப் பிறகு கவிதாவிடமிருந்து கடிதங்கள் வருவது மிகவும் குறைந்து விட்டது - ஆறேழு மாதங்களுக்கு ஒருமுறை என்று. அவற்றிலும் தன் கணவன் பற்றியோ, குடும்ப வாழ்க்கை பற்றியோ எதுவும் இல்லை. அவன் மனைவியைப் பற்றிய விசாரிப்புகளும் இல்லை. தான் பார்த்து ரசித்தவை, வியந்தவை, வருந்தியவை, கோபப்பட்டவை என்று தன் எண்ணங்களை மட்டுமே பகிர்ந்து கொண்ட கடிதங்களாகவே அவை இருந்தன. அத்தகைய தன் எண்ணங்களை இந்த உலகத்தில் அவனிடம் மட்டும்தான் தன்னால் பகிர்ந்து கொள்ள முடியும் என்ற அவள் உள்ளுணர்வும்  அந்தக் கடிதங்களில்  ஒளிந்திருந்ததாக அவனுக்குத் தோன்றியது.

"இந்தச் செய்தியைப் பாருங்க!" என்றாள் அவன் மனைவி கவிதா, அவனிடம் பத்திரிகையின் ஒரு பக்கத்தைப் பிரித்துக் காட்டியபடி.

இறப்புச் செய்திகளைத் தாங்கி வந்திருந்த அந்தப் பக்கத்தில் கவிதா விரல் வைத்துக் காட்டிய இடத்தில் கவிதா என்ற நபர் பெங்களூரில் இறந்து விட்டதாகச் செய்தி வெளியாகி இருந்தது. ராமு புகைப்படத்தைப் பார்த்தான். பத்து வருடங்களுக்கு முன் அவர்கள் பேனா நட்பு துவங்கிய சமயத்தில் அவள் அனுப்பியிருந்த புகைப்படம் மனதில் வந்து போனது. பத்தாண்டுகளின் மாற்றங்கள் பத்திரிகையில் வந்த புகைப்படத்தின் முகத்தில் பிரதிபலித்தாலும், அது அவள் - அவனுடைய சிநேகிதி கவிதாவின் முகம்தான் எனபதில் அவனுக்கு ஐயமில்லை.

என்ன ஆயிற்று கவிதாவுக்கு. வயது நாற்பதுக்குள்தானே இருக்கும்? என்ன உடம்பு?

தெரியவில்லை. 

அவன் கண்கள் ஓரத்தில் கண்ணீர்த் துளிகள் உற்பத்தியாகத் தொடங்கின. தொண்டையை ஏதோ அடைப்பது போல் இருந்தது.

"இவ்வளவு நல்ல சிநேகிதி கிடைச்சதுக்கு நீங்க ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணி இருக்கணும்!" என்றாள் அவன் மனைவி கவிதா, அவன் தோளில் கை வைத்து இலேசாக அழுத்தியபடி.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 79
நட்பு 

குறள் 785:
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்..

பொருள்: 
நட்பு நிலவுவதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை, ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுத்துவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்..
               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...