"சார்! அங்கே இருநூறு குடிசைகள் இருக்கு. இருபது வருஷமா, அவங்க அங்கேதான் இருக்காங்க. இப்ப அவங்களைக் காலி பண்ணச் சொன்னா, அவங்க எங்கே போவாங்க?" என்றார் புருஷோத்தமன். அவர் அந்தப் பகுதியில் வசிக்கும் ஒரு குட்டித் தலைவர்.
"நீர்நிலைகள் மேல இருக்கிற எல்லாக் கட்டிடங்களையும், குடியிருப்புகளையும் உடனே அகற்றணுங்கறது அரசாங்கத்தோட உத்தரவு. நான் அரசாங்கத்தோட உத்தரவை நிறைவேற்ற வேண்டிய ஒரு அதிகாரி அவ்வளவுதான்!" என்றார் செல்வநாதன்.
"சரி சார். அவங்களுக்கு, பக்கத்திலேயே வேற இடம் கொடுக்கணும் இல்ல? இங்கேந்து 30, 40 கிலோமீட்டர் தள்ளி இடம் கொடுத்திருக்கீங்க. அவங்க அங்கே இருந்துக்கிட்டு, பிழைப்புக்காக தினம் அவ்வளவு தூரம் பயணம் செஞ்சு நகரத்துக்கு வர முடியுமா?"
"அரசாங்கத்துக்குச் சொந்தமான நிலம் எங்கே இருக்கோ, அங்கேதானே கொடுக்க முடியும்? உங்க கோரிக்கையை நான் அரசாங்கத்துக்கு அனுப்பி இருக்கேன். வேற இடம் இருக்கான்னு பாக்கறதா செகரட்டரி சொல்லி இருக்காரு. இன்னும் ஒரு வாரம் வெயிட் பண்ணுங்க. நல்ல முடிவு வரலாம்!"
"சார்! இருநூறு குடிசைகள்தானே? அவங்களை இங்கேயே இருக்க அனுமதிக்கச் சொல்லி நீங்க அரசாங்கத்துக்கிட்ட சிபாரிசு பண்ண முடியாதா, சார்?" என்றார் புருஷோத்தமன், கெஞ்சும் குரலில்.
"சாரி! ஒரு தப்பான விஷயத்தை என்னால பரிந்துரை செய்ய முடியாது. அப்படி நான் செஞ்சாலும், அரசாங்கத்தில ஒத்துக்க மாட்டாங்க!" என்றார் செல்வநாதன், உறுதியான குரலில்.
புருஷோத்தமன் வெளியே சென்றதும், அறையில் இருந்த துணை அதிகாரி, "ஏன் சார், வேற இடம் கொடுக்க முடியுமான்னு பாக்கறதா செகரட்டரி சொல்லி இருக்காரா என்ன?" என்றார், சந்தேகத்துடன்.
"இல்லை. ஆனா, எனக்கு வேற ஒரு யோசனை இருக்கு!" என்றார் செல்வநாதன், சிரித்துக் கொண்டே.
"சார்! எங்க கட்டிட அனுமதி விஷயம் இன்னும் முடியலியே!" என்றார் குபேர் இண்டஸ்டிரீஸின் தொடர்பு அதிகாரி.
"நீங்க முதல்ல கட்டிடத்தைக் கட்டிட்டு அப்புறம் அனுமதி கேக்கறீங்க. அது எப்படி நடக்கும்?" என்றார் செல்வநாதன்.
"சார்! ஒரு அவசரத் தேவைக்காகக் கட்டிட்டோம். கட்டிட பிளான் எல்லாம் விதிப்படிதான் இருக்கு. இது மாதிரி எவ்வளவோ கேஸ்ல, கட்டிடம் கட்டினதுக்கு அப்புறம், அரசாங்கத்தில அப்ரூவல் கொடுத்திருக்காங்களே!"
"அப்படியா? அது மாதிரி அப்ரூவல் கேட்டு வாங்க உங்களுக்கு உரிமை இருந்தா, நீதிமன்றத்துக்குப் போய் உத்தரவு வாங்கிக்கிட்டு வாங்க!" என்றார் செல்வநாதன்.
"இல்ல சார்! உரிமைன்னெல்லாம் நான் சொல்லல. இது ஒரு ரிக்வெஸ்ட்தான்" என்றார் தொடர்பு அதிகாரி, பதட்டத்துடன்.
"அப்ருவல் கொடுக்கறது அரசாங்கத்தோட விருப்பம். உங்களோட தொழிற்சாலைக் கட்டிடம், கட்டிட பிளான் எல்லாம் விதிப்படிதான் இருக்குன்னா, அப்ருவல் கொடுக்கச் சொல்லி நான் அரசாங்கத்துக்குப் பரிந்துரை செய்யலாம். ஆனா, அரசாங்கம்தான் முடிவெடுக்கணும்."
"நீங்க தயவு செஞ்சு பரந்துரை பண்ணி அனுப்புங்க சார்! நாங்க செகரேடரியட்ல ஃபாலோ அப் பண்ணிக்கறோம்!" என்றார் தொடர்பு அதிகாரி.
"அனுப்பலாம். ஆனா, வேற சில விஷயங்கள் இருக்கு. அது பத்தியும் நாங்க எங்க பரிந்துரையில குறிப்பிடணுமே!"
"வேற என்ன சார் விஷயங்கள்?"
"உங்க தொழிலாளர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கறதுக்காக போரூர்ல உங்களுக்கு ஒரு இடம் அலாட் பண்ணினோம். ஆனா, நீங்க அந்த இடத்தைப் பயன்படுத்தல. அது இன்னும் காலியாத்தான் இருக்கு."
"கட்டுவோம் சார்! கொஞ்ச நாள் ஆகும்."
"இல்ல. உங்க தொழிலாளர்கள் வெவ்வேற இடங்கள்ளேந்து வராங்க. அவங்க போருர்ல குடியிருக்க விரும்பல. தொழிலளர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டாம், அதற்கு பதிலா, அவங்களுக்கு வீட்டு வாடகை அலவன்சும், வீட்டிலேந்து தொழிற்சாலைக்கு வந்து போகப் போக்குவரத்து அலவன்சும் கொடுக்கணும்னு உங்க யூனியன்ல கேட்டு, நிர்வாகமும் அதுக்கு ஒத்துக்கிட்டு, ஒப்பந்தம் கையெழுத்து ஆகி இருக்கு இல்ல?"
"ஆமாம் சார். ஆனா இது எப்படி..."
"அரசாங்கத்துக்கு எல்லாமே தெரியும் சார்! தொழிலாளர் இலாகாவுக்கு அந்த ஒப்பந்தத்தை நீங்க அனுப்பி இருக்கீங்களே!"
தொடர்பு அதிகாரி மௌனமாக இருந்தார்.
"அதனால, அந்த இடத்தை அரசாங்கத்துக்கு சரண்டர் பண்ணிடுங்க. உங்களுக்கு அதை ரொம்பக் குறைஞ்ச விலைக்குத்தான் கொடுத்தோம். அதே விலை கொடுத்து உங்ககிட்டேந்து வாங்கிப்போம். இப்ப நீங்க சரண்டர் பண்ணாட்டாலும், கொடுக்கப்பட்ட நோக்கத்துக்காக அதைப் பயன்படுத்தலைன்னு சொல்லி, அரசாங்கத்திலேந்து ஒரு உத்தரவு போட்டு, அதை நாங்க திரும்ப எடுத்துக்க முடியும். ஆனா, அதை இப்ப நீங்க சரண்டர் பண்ணினீங்கன்னா, உங்க அப்ரூவலுக்கு அது வலுவா இருக்கும்!" என்றார் செல்வநாதன்.
"எங்க எம்.டி.கிட்ட கேட்டு சொல்றேன் சார்!" என்று சொல்லி விட்டுக் கிளம்பினார் தொடர்பு அதிகாரி.
அவர் சென்றதும், "அந்த இடத்தைப் பத்தி அரசாங்கத்திலேந்து யாரும் கேக்கலியே சார்!" என்றார் உதவி அதிகாரி.
"வேற யாரும் அதைப்பத்தி யோசிச்சிருக்க மாட்டாங்க. நாமதானே அரசாங்கம்? நமக்கும் கடமை இருக்கே! நமக்கு மேல இருக்கறவங்க சொல்றதை செஞ்சா போதும்னு இருக்கறது சரியா? போரூர்ல இருக்கற குடிசைகளை அகற்றணும்னு மேலேருந்து சொன்னாங்க. நாம செய்யறோம். ஆனா குடிசைவாசிகளோட கஷ்டத்தைப் புரிஞ்சுக்கிட்டு, அவங்களுக்கு எப்படி உதவலாம்னு யோசிச்சப்ப, இந்த இடம் காலியா இருக்கறது கவனத்துக்கு வந்தது. குபேர் இண்டஸ்ட்ரிஸ் அதைப் பயன்படுத்தாம வச்சுக்கிட்டிருக்கிறதும் நியாயம் இல்லையே! அவங்களை அந்த இடத்தை சரண்டர் பண்ணச் சொல்லி வாங்கிட்டு, அந்த இடத்தை அந்தக் குடிசைவாசிகளுக்குக் கொடுக்கலான்னு நாம சொன்னா, அரசாங்கத்தில அதைக் கண்டிப்பா ஒத்துப்பாங்க. குடிசைவாசிகளுக்கு ஆதரவா செயல்படறதா சொல்லி, நல்ல பேரும் வாங்கிப்பாங்க! நம்மைப் பொருத்தவரை, நம்ம கடமையைச் சரியா செஞ்சோம், அதோட மனிதாபிமானத்தோடயும் நடந்துக்கிட்டோங்கற திருப்தி நமக்கு இருக்குமே!" என்றார் செல்வநாதன்.
"உங்ககிட்ட நான் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு சார்" என்றார் துணை அதிகாரி.
பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 58
கண்ணோட்டம் (இரக்கம், தயை, தாட்சண்யம்)
குறள் 578:
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு.
No comments:
Post a Comment