தண்டபாணி அந்த அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தபோது அவருக்கு அறிமுகமானவர்தான் வேணுகோபால்.
அலுவலகத்தில் தண்டபாணிக்கு அடுத்த உயர் நிலையில் இருந்தவர் என்றபோதும், வேணுகோபால் தானே வந்து தண்டபாணியிடம் நட்புக் கொண்டார்.
தன்னை விட உயர்ந்த பதவியில் இருப்பவர் என்பதால், துவக்கத்தில் வேணுகோபாலிடம் பழகுவதில் தண்டபாணிக்குச் சற்றுத் தயக்கம் இருந்தது. எவ்வளவுதான் வேணுகோபால் இயல்பாகப் பழகினாலும், தண்டபாணியின் தயக்கம் நீங்கவில்லை.
ஒருநாள், எதிர்பாராத விதமாக, தண்டபாணியின் வீட்டுக்கு வந்து விட்டார் வேணுகோபால்.
"உங்களுக்கு எப்படி சார் என் விலாசம் தெரியும்?" என்றார் தண்டபாணி, வியப்புடன்.
"முதலில், என் பேர் சார் இல்லை, வேணுகோபால். என் நண்பர்கள் என்னை வேணுன்னுதானு கூப்பிடுவாங்க. நீங்களும் என்னை அப்படியே கூப்பிடலாம், தண்டபாணி! அதுக்காக உங்க பேரைச் சுருக்கி தண்டம்னு நான் கூப்பிட மாட்டேன்!" என்று வேணுகோபால் கூறியதும், தண்டபாணியும் அவருடன் சேர்ந்து சிரித்துத் தன் இறுக்கத்தைப் போக்கிக் கொண்டார்.
"நம்மோட வேலை செய்யறவங்க விலாசத்தைக் கண்டுபிடிக்கிறது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. அது எப்படின்னு கொஞ்ச நாள்ள நீங்களே தெரிஞ்சுப்பீங்க!" என்றார் வேணுகோபால்.
அதற்குப் பிறகு, முப்பது வருடங்களுக்கு மேல் அவர்கள் நட்பு தொடர்ந்தது.
வேணுகோபால் அதிகம் படிக்கும் பழக்கம் உடையவர். அவர் வீட்டில் நிறையப் புத்தகங்கள் இருக்கும்.
தண்டபாணிக்குப் புத்தகங்கள் படிப்பதிலோ, அல்லது கலை, இலக்கியம் போன்றவற்றிலோ ஆர்வம் இல்லை. அலுவலக வேலை முடிந்ததும், வீட்டில் சும்மாதான் உட்கார்ந்திருப்பார். குடும்ப உறுப்பினர்களிடம் பேசுவது, வீட்டு வேலைகளைச் செய்வது என்று தன் நேரத்தைச் செலவிடுவார்.
தண்டபாணிக்கு நண்பர்கள் அதிகம் இல்லை. நெருங்கிய நண்பர் என்றால் அது வேணுகோபால் ஒருவர்தான். அதுவும் அவரே இவரிடம் ஏற்படுத்திக் கொண்ட நட்பு!
"உனக்கும் எனக்கும் பொதுவான விஷயம் எதுவும் கிடையாது. எங்கிட்ட என்ன இருக்குன்னு என்னோட இவ்வளவு நட்பா இருக்க நீ?" என்று தண்டபாணி வேணுகோபாலிடம் சிலமுறை கேட்டிருக்கிறார். (நட்பு சற்று வளர்ந்ததும், அவர்கள் தங்களுக்குள் ஒருமையில் பேசிக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்!)
"பொதுவான விஷயம் இருக்கணும்னு அவசியம் இல்லையே! உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு. உன்னோட பேசிக்கிட்டிருந்தா, எனக்கு சந்தோஷமா இருக்கு. அது போதாதா?" என்பார் வேணுகோபால்.
சிறிது காலத்தில் தன் நட்பு வேணுகோபாலுக்கு அலுத்து விடும், அவர் கொஞ்சம் கொஞ்சாமாகத் தன்னிடமிருந்து விலகிப் போய் விடுவார் என்று ஆரம்பத்தில் தண்டபாணி நினைத்தார்.
ஆனால் தண்டபாணி நினைத்ததற்கு மாறாக, வேணுகோபாலின் நட்பு இன்னும் நெருக்கமாகவும், ஆழமாகவும்தான் ஆகிக் கொண்டிருந்தது.
வாரத்துக்கு இரண்டு மூன்று முறையாவது, இருவரும் அலுவலகத்துக்கு வெளியே - இருவரில் ஒருவர் வீட்டிலோ, அல்லது வேறு இடத்திலோ - சந்தித்துப் பேசுவது என்ற வழக்கம் ஏற்பட்டது.
அலுவலக விஷயங்கள் பற்றிப் பேசுவதில்லை என்று இருவருக்குமிடையே ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் இருந்தது. எனவே, அதைத் தவிர்த்து, தங்கள் குடும்ப விஷயங்கள், உலக நடப்புக்கள் ஆகியவை பற்றிப் பேசிக் கொள்வார்கள்.
வேணுகோபால் தான் படித்த சுவையான விஷயங்களை தண்டபாணியிடம் பகிர்ந்து கொள்வார். தண்டபாணி அவற்றை கவனமாகக் கேட்டு ரசிப்பார்.
"நீ படிச்ச விஷயங்களை எங்கிட்ட சொல்லும்போது, எனக்குக் கேக்க நல்லாயிருக்கு. ஆனா, எனக்கென்னவோ புத்தகங்களைப் படிக்கிறதில ஆர்வம் இல்ல. நீ எப்படித்தான் இவ்வளவு புத்தகங்களைப் படிக்கிறியோ!" என்பார் தண்டபாணி.
தான் படித்தவற்றை வேணுகோபால் தண்டபாணியிடம் பகிர்ந்து கொள்ளும்போது, அவற்றைக் கேட்டு விட்டு தண்டபாணி சில சமயம் தன் கருத்துக்களைக் கூறுவார். சில சமயம் தண்டபாணியின் கருத்துக்களைக் கேட்டு வேணுகோபால் அவரை வியந்து பாராட்டுவார்.
"நான் புத்தகங்கள்ளப் படிச்சு விஷயங்களை உங்கிட்ட பகிர்ந்துக்கறேன். ஆனா, அதையெல்லாம் படிக்காமலேயே நீ சொல்ற கருத்துக்கள் ரொம்ப ஆச்சரியமா இருக்கு. உனக்கு மட்டும் படிக்கிற பழக்கம் இருந்திருந்தா, நீ ஒரு பெரிய ஸ்காலர் ஆகி இருப்பே!" என்பார் தண்டபாணி.
"அட நீ வேற! வீட்டைக் கட்டறதுதான் கஷ்டம். கட்டின வீட்டைப் பாத்துட்டு, இது நல்லா இருக்கு, இது நல்லா இல்ல, இது இப்படி இருந்திருக்கலாம்னு சொல்றதுக்குப் பெரிசா அறிவு வேணுமா என்ன?" என்பார் தண்டபாணி.
"அப்பா! வேணு மாமா இறந்துட்டாராம்!" என்றான் தண்டபாணியின் மகன்.
தண்டபாணி சிலை போல் அமர்ந்திருந்தார். அவர் கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வழிந்தது.
'கடவுளே! இப்படி ஒரு நண்பனை எனக்கு ஏன் கொடுத்தே? அவன் இல்லாம என் மீதி வாழ்நாளை எப்படிக் கழிக்கப் போறேன்?' என்று மௌனமாகப் புலம்பினார் தண்டபாணி.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 79
நட்பு
குறள் 783:
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.
No comments:
Post a Comment